சக்கரம் சுழலும்

Suzhalum sakkaram_2BWடான்ஶ்ரீ என்னைச் சந்திக்க குவாலா கிராய்க்கு வரும்படி அழைத்திருந்தார். அவருடைய தனி எலிகப்டரில் வந்து அன்றே திரும்பிவிடலாம் என்றார். நான் அதை அன்போடு மறுத்து நானே காரில் புறப்பட்டு வருவதாகச் சொன்னேன். அவர் தயங்கி, வேண்டுமானால் காரும் டிரைவரும் ஏற்பாடு செய்வதாக வற்புறுத்தியபோதும் நான் தனியாகவே புறப்பட்டு வருவதாகச் சொன்னேன். அவர் தயக்கத்தோடு சம்மதித்தார். பிற்பகல் இரண்டு மணிக்குக் கூட்டம் இருப்பதால் அதற்கு முன்னமே பிற்பகல் உணவுக்கு வந்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

தனியாக வண்டி ஓட்டி நீண்ட நாட்கள் ஆகின்றன. அதுவும் சூர்யோதயத்திற்கு முன்னமே பயணம் செய்வது எனக்கு மிக உகந்தது.

காலை நான்கு மணிக்குப் புறப்பட்டேன். உலகம் ஆழ்ந்த அமைதியில் அமிழ்ந்திருந்தது. பனிப்படலம் கவிழ்ந்திருந்தது. காற்றும் உறங்குவது போல ஒரு காட்சிப்பிழை. அண்மையில்தான் மொரோக்கோ நாட்டுக்குச் சென்று திரும்பியிருந்தேன். தலைநகர் காசா பிளாங்காவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மறக்காசுக்குப் பயணம். மேற்கு சகாராவில் பாலைநிலத்தை ஒட்டிய நெடுஞ்சாலை. இருபுறமும் மணற்பரப்பும் குன்றுகளும் வறண்ட பாறைகளுமே பின் சென்றன. தூரந்தூரமாய் தென்படும் பயிர்களும் சூரியனின் ஒளிசேர்க்கையின்றி காய்ந்த நாணல் போல தோன்றின. அவை கோதுமை பயிர்கள் என்று டிரைவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

நான் மருத நிலத்தில் பிறந்தவன். பரந்த வெளியும் பசுமையான ரப்பர் மரக்காடுகளும் அதன் ஊடே ஓடும் கண்மாய்கரையுமாய் மழையும் ஈர மண்ணுமாய் செழித்த நிலத்தைச் சேர்ந்தவன். மேற்கே நெய்தல், கிழக்கே முல்லையும் குறிஞ்சியும். நிலத்தில் பாம்பைப் போல ஊர்ந்து, வெளியில் ஒரு பறவைப் போலவும் அலைந்து திரிந்தவன். சிறிது நேரத்திலேயே இந்தப் பாலை மிகுந்த சோர்வைத் தந்தது. அதனாலேயே இந்தப் பயணத்தை இப்படி அமைத்துக் கொண்டேன். இங்கிருந்து மெந்தகாப், குவாங்மூசா இறுதியாகக் குவால கிராய்.

காரில் சந்தூர் இசை கவிழ்ந்தது. 75 முதல் 100 தந்திகளைக் கொண்ட சந்தூர் இசைக்கருவி ஓர் இசைகுழுவைப் போல் சுரங்களை எழுப்பவல்லது. அதன் கமகங்கள் தென்றலாகவும் சிற்றலைகளாகவும் வீசிப்பரவும். இதோ… இப்போது மழைச்சாரல் போல் தூவிக்கொண்டிருந்தது.

டான்ஶ்ரீ கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறவர். அவருடைய உழைப்பாலும் திறமையாலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் பிற இடங்களிலும் தேவைக்கேற்ப வீட்டுமனைகள் அலுவலகக் கட்டிடங்கள் என்று தன்னுடைய தொழிலை விரிவுப்படுத்திக் கொண்டிருந்தார். அவரின் வளர்ச்சி ஆளுங்கட்சியின் கவனத்துக்கு வர, அவருடையப் பிறப்பிடமான கோலா சிராய் பாராளுமன்ற தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது. அரசியலில் அவருக்கு அதிக நாட்டம் இல்லை. சூழ்நிலையைக் கருதியே அதை ஏற்றுக் கொண்டார். அதிலும் ஒரு தவணைக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போயிற்று.

கட்டுமானப் பொறியியல் படித்த எனக்கு அவருடைய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டபோதுதான் அவருடன் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் அந்நியோன்ய நட்பாக ஆயிற்று. இப்போதும்கூட தன் பகுதியில் வாழும் மக்களுக்காக அவர்களுடைய வருமானத்துக்குத் தக்கவாறு தன் சொந்த நிலத்திலேயே வீட்டுமனைகள் கட்டுவதற்குத்தான் என்னை அழைத்திருந்தார்.

வானம் லேசாக வெளிறியது. பறவைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வெளிப்பட்டன. காலையின் முதல் இயக்கமே பறவைகள்தான்.

சங்தூர் இசை கொஞ்சம் விரைவு கொண்டது. இதில் எழும் இசையே ஒரு பெண்ணுடனான சல்லாபம்போல்  இருக்கும். வண்டிக்குள் ஒரு மோன உலகம் உருவாக்கிக் கொண்டிருந்தது. வயல்களுக்குள்ளே ஊடுருவிய சாலை சமவெளியில் படர்ந்தது. சாலையில் வாகனங்கள் தென்பட்டன. இருபக்கமும் நெல் அறுவடை முடிந்து வயல்பரப்பு இடையிடையே தென்னையும் கமுகும் இன்ன பிற மரங்களும் கலங்களாய் வெளிபட்டன. எருமை மாடுகள் மூக்கணாங்கயிற்றோடு முகம் நிமிர்த்தி பார்த்தன. குவா மூசாங்கை நெருங்கிக்கொண்டிருந்தேன். எங்காவது கடைத் தெரு தென்பட்டால் தே தாரே அருந்தி பசியாறிவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்து போகலாம் என்று சாலையின் இருபக்கமும் பார்த்துக் கொண்டே வந்தேன். கொஞ்ச தூரம் வந்ததும் மக்கள் நடமாட்டம் மிகுந்திருந்தது. இடதுபுறத்தில் வரிசைக் கடைகள் இருந்தன. காரை மெதுவாக ஓட்டிக் கொண்டே கடைப்பக்கம் திரும்ப வழியைத் தேடிக்கொண்டே வந்தேன். சில அடி தூரத்தில் திரும்ப வழியைக் கண்டதும் மெதுவாக்கினேன்.

அப்போதுதான் எதிரே வலப்புறத்தில் வேகமாக மோட்டார் பைக்கை ஓட்டி வந்தவன் திடீரென வலப்புறம் திரும்ப, எத்தனித்து வந்த வேகத்தில் என் காரின் முன்னே சறுக்கி மோட்டார் பைக்கோடு எகிறி எனக்கு இடப்புறமாய் சாலையில் விழுந்தான். விழுந்தவன் ஒரு பொடியன். விழுந்த வேகத்திலேயே எழுந்து வண்டியை நிமிர்த்தி ஓடத் துவங்கினான். கடைத் தெருவில் இருந்து பார்க்கிறவர்களுக்கு என் கார் மோதித்தள்ளிதான் அவன் தூக்கியெறியப்பட்டதுபோல தோன்றியிருக்க வேண்டும்.

கூச்சலிட்டுக் கொண்டு என் காரை நோக்கி ஓடி வந்தார்கள். நான் சுதாரிக்கும் முன்னே காரை சூழ்ந்து கொண்டார்கள். சிலர் ஆவேசக் குரல் எழுப்ப சிலர் கைகளில் தடியும் கத்தியும் ஏந்தியிருப்பதை அப்போதுதான் அவதானித்தேன். காரை விட்டு இறங்கலாமா, என்னுடைய விளக்கத்தைக் கேட்கிற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்களா என யோசித்தபடியே காரின் கதவைத் திறந்து ஒரு காலை எடுத்து வைக்கவும், ஆவேசப்பட்ட மனிதர்கள் கைகளில் கத்தியோடும் கம்போடும் சற்று நிதானிக்கவும் சூழல் சற்றே மெதுவாக சுழன்றது.

Suzhalum sakkaram_1BWஒரு காட்சியை நான்கு கோணங்களில் படம் பிடித்து ஒரு சட்டகத்தில் நிலைக்குத்தியதுபோல் இருந்தது. இறங்கவா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே எனக்குப் பின்னால் வந்து நின்ற காரிலிருந்து இறங்கி வந்தவர் என்னருகில் வந்து நின்றார். மக்கள் அவரை நோக்கி என் மீதான கண்டனங்களை இனத்துவேஷத்துடன் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அவர்களை கை உயர்த்தி அமைதிப்படுத்திய வண்ணமே என்னையும் ஓர் அரண்போல் காத்துக்கொண்டு, “எங்க போறீங்க?” என்று கேட்டார். நான் காரை விட்டு இறங்கி கார் அருகிலேயே நின்று கொண்டு கோலாலம்பூரிலிருந்து வருகிறேன் என்றும் டான்ஶ்ரீயைப் பார்க்க குவாலா கிராய் போய்க் கொண்டிருப்பதையும் பதற்றத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “நீங்கள் ஷா ஆலாமிலிருந்து வருகிறீர்களா?” என்று கேட்டபோது நான் ஆச்சரியத்தோடு தலையசைத்தேன். என் விளக்கம் எதையும் கேட்காமல் கூடியிருந்த மக்களை அன்போடு கலைந்துபோகச் சொன்னார். முணுமுணுத்தபடியே அவர்களும் கலைந்து போனார்கள். அவர் என்னிடம் திரும்பி, “தயவு செய்து என் காரை பின்தொடர்ந்து வாருங்கள். என் வீடு பக்கத்தில்தான் இருக்கிறது” என்றார்.

அது நல்லதாகவே பட்டது. அவர் வண்டியை நான் பின்தொடர்ந்தேன்.

சந்தூர் இசை என் இதயத்துடிப்பை பிரதிபளிப்பது போல், சுரங்களை வடித்திறைத்தது.

வானம் வெளுத்துவிட்டது. அவிழும் அந்தக் காலையை இரசிக்க முடியாமல் மனம் அல்லாடியது. இந்த மனிதன் யாராயிருந்தாலும் இந்தச் சமயத்தில் வரவில்லை எனில் என்னவாகியிருக்கும் என  என் நிலைமையை யோசித்தபடியே வண்டியை ஓட்டினேன்.

வயல்பரப்பின் நடுவே சிறிதும் பெரிதும் அல்லாமல் கச்சிதமாகக் கட்டப்படிருந்த வீட்டின் முன்னால் நிறுத்தினார். நான் அருகே சென்று வண்டியை நிறுத்தி இறங்கினேன். அன்போடு வீட்டிற்குள் அழைத்துச் சென்று உட்காரச் சொன்னார். உள்ளே சென்று கருங்காப்பியைக் கொண்டு வந்து கொடுத்து அருந்துமாறு கேட்டுக் கொண்டார். நான் உணர்வுகளின் குழப்பத்தில் இருந்தேன்.

“ஐயா என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களை எனக்குத் தெரியும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களுடைய முகத்தை நான் மறந்ததே இல்லை. ஏனெனில், உங்களை எப்போதும் என் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறேன். அது மட்டுமல்ல, இப்போது நடந்த விபத்தைப் போல் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவுதான் சேர்ந்தே வரும்.”

நான் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருந்தேன். என்ன கேட்பது என்றும் தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.

அவர் பேசத் தொடங்கினார். “ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஷா ஆலாமில் உள்ள மாரா கல்லூரியில் விவசாயம் படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் பக்கத்து கிராமங்களில் வாழ்கிற நெல் விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் என் படிப்பு பயன்பட வேண்டும் என்றுதான் விவசாயம் படித்தேன். அப்போது நான் கல்லூரிக்குப் போகிற வழியில் என்னுடைய மோட்டார் பைக் ஒரு விபத்தில் சிக்கி பெரும் காயங்களுடன் கிள்ளான் பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தள்ளுப்படுக்கையில் கிடந்தேன். அப்போது நீங்கள் அங்கே இருந்தீர்கள். கை கால்களில் அடிபட்டு, பற்கள் உடைந்து வாயிலும் உடம்பிலும் ரத்தத்தோடு படுத்திருந்தேன்.”

அந்தக் காட்சி என் நினைவில் விரியத் தொடங்கியது. என் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி கிள்ளான் மருத்துவமனையில் சேர்ர்த்திருப்பதாகத் தகவல் வந்ததும் மருத்துவமனைக்கு ஓடினேன். அவன் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தெரிந்து கொண்டு அந்தப் பக்கம் போகும்போதுதான் இந்தப் பையனை பார்த்தேன். மனம் பொறுக்க மாட்டாமல் அருகே சென்று விசாரித்தேன். பேசுவதற்கும் சிரமப்பட்டுதான் மாரா கல்லூரியில் படிப்பதாகவும் காலையில் விபத்து ஏற்பட்டதாகவும் மயங்கிய நிலையில் இருந்த தன்னை யாரோ இங்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும் சொன்னான். “எங்கே தங்கியிருக்கிறாய்?” என்று கேட்டேன். மாரா மாணவர் விடுதியில் தங்கியிருப்பதாகச் சொன்னான். விடுதியில் உள்ள உன் நண்பர்களுக்குத் தெரியுமா? என்று கேட்டேன்.

“தெரியாது,” என்றான்.

பரவலாகக் கைத்தொலைபேசி இல்லாத காலம் அது. என்னிடம் இருந்தது. விடுதியின் தொலைபேசியில் அழைத்து அவனுடைய நண்பர்களுக்குச் செய்தியைச் சொன்னேன்.

பின்னர் என் அண்ணன் மகனை பார்க்கப் போனபோதெல்லாம் பக்கத்துக் கட்டிலில் இருந்த இவனையும் பார்த்து விசாரித்துவிட்டு வந்திருக்கிறேன். அவனைப் பார்க்க வந்த நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்தியதும் அவர்கள் எனக்கு மரியாதையோடு நன்றி சொன்னதும் நினைவில் திரையிட்டன.

“ இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை நினைவில் வைத்திருக்கிறீர்களே, ஆச்சரியம்தான். இன்று இந்த சூழலில் நீங்கள் வராவிட்டால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும்” என்று உணர்ச்சிவயப்பட்டேன்.

“இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அடிப்படையில் நல்ல மனிதர்கள். அரசியலும் மதமும் இவர்களை உருமாற்றியிருக்கின்றன. இந்தப்பகுதியில் வாழ்கிற பெரும்பாலோருக்கு என்னைத் தெரியும். விவசாயத்தில் அவர்களுக்கு நான் செய்துவரும் உதவிகளுக்காக என்மேல் மரியாதையும் உண்டு”

அவர் கொடுத்த கருங்காப்பியும் இனிய சொற்களும் எனக்கு இதமாய் இருந்தன.

“இந்தச் சம்பவமே ஒரு சங்கிலித்தொடரோ என்று தோன்றுகிறது” என்றார். நான் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தேன்.

வெளியில் வந்து வண்டியை கோலா கொராயை நோக்கி செலுத்தினேன். இன்னும் இரண்டு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்துவிடலாம். மரங்கள் பனியில் நனைந்து புதுப்பெண்ணைப்போல காட்சியளித்தன. மீண்டும் பழைய சம்பங்கள் நினைவில் ஓடின. விபத்தில் சிக்கிய அண்ணன் மகனை கிள்ளான் மருத்துவமனையில் பார்க்கச் சென்ற அவசரத்தில் நான் மோதிய மோட்டார் சைக்கிளின் பேரிரைச்சலின் நினைவு வரும்போது சந்தோர் இசை அதன் உச்சத்தை தொட்டு, அதன் உச்சஸ்தாயில் நட்சத்திரங்கள் போல பொரிந்தன.

2 comments for “சக்கரம் சுழலும்

  1. December 10, 2017 at 11:36 am

    கதை அருமை, தான் அவசரத்தில் ஏற்படுத்திய விபத்து அவருடையதா ? விபத்து ஏற்படுத்தி விட்டு அவசரத்தில் சென்று விட்டாரா ? அல்லது மருத்துவமனையில் அவரே சேர்த்தாரா ?

  2. Muniandy Raj
    December 10, 2017 at 12:22 pm

    மிகவும் அருமையான கதையைப் படித்து திருப்தி. முடிவு மனதை வருடுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...