தழலின் சமரசத்தில் தணிந்திருக்கும் காடு

PressFreedomமலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் ‘கறாரான இலக்கிய விமர்சனம்’, ‘தீவிர இலக்கியம்’ ஒரு எல்லைக்கு மேல் வளராமல் போனதற்கு இதுவரையில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் ‘இந்நாட்டில் எங்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லை,’ என்று எழும் குரல்களே அவற்றில் மேலதிகமானவை. இலக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக எழுத்து துறைகள், கலைத்துறைகள், ஊடகத்துறை என கருத்து வெளிபாட்டை முன்வைக்கும் எல்லா துறைகளிலிருந்தும் இதுபோன்ற குரல்கள் தமிழ்ச்சூழலில் எல்லாக் காலங்களிலும் எழுந்த வண்ணமே இருக்கிறது.

ஜூன் 2017 கூலிம் இலக்கிய முகாமில் எழுத்தாளர் ஜெயமோகன் முன்வைத்த இருகேள்விகளுக்கு மலேசிய எழுத்தாளர்கள் கோ. புண்ணியவான் மற்றும் சீ. முத்துசாமி கூறிய பதில்கள் இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தன. தமிழகத்தில் க.நா.சு., சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் படைப்பிலக்கியத்தின் மேல் வைத்த கறாரான விமர்சனம்போல் இங்கே நடைபெற்றதா? மலேசிய அரசாங்கத்தின் சட்டம் உங்களைச் சுதந்திரமாக எழுத அனுமதிக்கிறதா? என்ற கேள்விகளுக்கு ‘விமர்சன கலை இங்கே முன்னெடுக்கப்படவில்லை’ என்பதும் ‘எங்களுக்கு எழுத்துச் சுதந்திரம் இல்லை’ என்பதும் இருவரின் ஒத்த கருத்தாக இருந்தது.

உண்மையில் ஒவ்வொரு நாட்டிலும் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லைக்கோடிடும் எழுதப்பட்ட எழுதப்படாத சட்டங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் எல்லா நாடுகளிலும் இக்கட்டுப்பாடுகள் ஒன்றுபோல் இருப்பதில்லை. உதாரணமாக இந்தியாவில் பாலியல், இஸ்லாமிய சமயம், மாணவர்கள் நேரடியாக அரசியல் குறித்து பேச அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவு மலேசியாவில் பரந்த சுதந்திரம் இல்லை. மலேசியாவிலேயே பிரிட்டிஷ் ஆட்சி, ஜப்பானியர் ஆட்சி, சுதந்திர மலேசியா, வெவ்வேறு பிரதமர்களின் ஆட்சிகாலம் என ஒவ்வொரு காலகட்டத்திலும்  கருத்துச் சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள், அதன் கறார்தன்மை வெவ்வேறாக இருந்துள்ளதைக் காணலாம்.

மலேசியத் தமிழ் மூத்த எழுத்தாளர்கள் தொடர்ந்து வெளிபடித்திக் கொண்டிருக்கும் ‘சுதந்திரமின்மை’ என்பதன் சாரத்தைத் தேடிச் சென்றால், ‘கம்யூனிச பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் வரலாற்று சம்பவங்களோடு அவை பிணைக்கப்படிருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் சுமார் 25 ஆண்டுகள் உள்நாட்டில் கம்யூனிச அச்சுறுத்தல்கள் இருந்ததன் அடிப்படையில் அக்காலக்கட்ட போராட்ட முயற்சிகள், அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ‘கம்யூனிச பயங்கரவாதம்’ என அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டன. நாட்டில் நடக்கும் மனித உரிமை போராட்டங்கள் அனைத்தும் கம்யூனிச பின்னணியுடன் சேர்த்து முடக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக மலாய்க்காரர் அல்லாதவர்கள் அரசுக்கு எதிராக எவ்வித கருத்தை முன்வைத்தாலும் உடனடியாக கம்யூனிச தொடர்பாளர்கள் என பிரகடனப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் சாமானிய மக்களைப் போலவே எழுத்தாளர்களும் இதர கலைத்துறை சார்ந்தவர்களும் தங்களின்மேல் கம்யூனிச அடையாளம் பதிந்துவிடாமல் இருக்க இன உரிமை, தனி மனித உரிமை சார்ந்து பேசுவதை வெகுவாக தவிர்த்திருந்தது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் மிகச் சாதூரியமான திட்டமிடலின்வழி இந்நாட்டு மக்களின் மனதில் பதியப்பட்ட இந்த அச்ச உணர்வு இன்றைய சூழலில் இனவாதம் மதவாதம் குறித்து பேசுவதில் காணப்படும் ஒடுக்கப்பட்ட மனநிலையுடன் பொறுத்திப் பார்க்கக் கூடியதே. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புப் படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்புதல், பூமிபுத்ரா சழுகைகளுக்கு எதிராக கேள்வி எழுப்புதல், ஆளுங்கட்சியை விமர்சித்தல் போன்றவை இன்றைய சூழலில் அரசாங்கத்தையும் மாமன்னரையும் அவமதிப்பதாக கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுமளவுக்கு அச்சமூட்டும் அம்சங்களாகத் திகழ்கின்றன. பிரிட்டிஷ், ஜப்பானிய ஆட்சி காலத்தில் இருந்ததுபோல ‘எழுதினால் தலை துண்டிக்கப்படும்’, ‘பேசினால் நாடு கடத்தப்படும்’ என்றிருந்த சூழலெல்லாம் இப்போதிருக்கவில்லை என்றாலும் எதிர்வினையாற்றினால் பாதகம் விளையும் என்கிற அச்ச உணர்வு அனைவருக்குள்ளும் மிக ஆளமாக பதியப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

அவ்வகையில் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் குறித்து மலேசியாவின் இன்றைய நிலைபாடு, எந்த அளவு கடுமையான தடைகள் இருக்கின்றன, அத்தடைகளை மீறியவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள், இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும் மலாய் மொழியில் இலக்கியம் மற்றும் இதர கலை செயல்பாடுகளின் நிலை ஆகியவற்றை உதாரணங்களுடன் அணுகி பார்ப்பதன் மூலம் படைப்பு மற்றும் விமர்சன சுதந்திரம் குறித்து மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் முன்வைக்கும் அச்சத்தின் நியாயத்தைப் பரிசீலனை செய்து பார்க்க இக்கட்டுரை முனைந்துள்ளது.

2017ஆம் ஆண்டு நிலவரப்படி மலேசியாவில் தகவல் அணுகல், கருத்துரிமை சுதந்திரத்தின் நிலை

world press freedom indexசெய்தியாளர்களின் சுதந்திரத்தை முன்னிலைப்படுத்தும் Reporters Without Borders (RSF)  எனும் அரசு சாரா இயக்கம் 2017ஆம் ஆண்டு நடத்திய ‘உலகளாவிய பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில்’ (World Press Freedom Index) மலேசியா 180ல் 144வது இடத்தைப் பிடித்து ‘Bad’ எனும் வரையறைக்குள் இடம்பெற்றுள்ளது. ஊடக சுதந்திரம், ஊடகச் சூழல் மற்றும் சுய தணிக்கை, சட்டபூர்வ கட்டமைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செய்தி, புதிய தகவல்களின் உற்பத்தியை ஆதரித்தல் ஆகிய அம்சங்களை வழங்குவதில் ஒரு நாடு அந்நாட்டு செய்தியாளர்களுக்கு வழங்கும் சுதந்திரத்தின் எல்லையை இக்குறியீடு விளக்குகிறது.

அடுத்து, 2017ஆம் ஆண்டு Freedom House நடத்திய  ஜனநாயகத்தன்மை, அரசியல் சுதந்திரம், மனித உரிமை காக்கும் நாடுகளின் அட்டவணையில் ‘ஓரளவு சுதந்திரம்’ (Partly Freedom) என்ற தர வரிசையில் மலேசியா இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஓரளவு சுதந்திரம்’ (Partly Freedom)  என்பதை அரசியல் உரிமை, சிவில் உரிமைகள் கோறுவதில் இந்நாட்டு மக்களுக்கு சில இடங்களில் கடும் கட்டுப்பாடுகளும் சில இடங்களில் தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளதாக புரிந்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து, Covenant on Civil and Political Rights (ICCPR) எனும் ‘நாட்டு மக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் உரித்தான நம்பிக்கை உடம்படிக்கை’யின் Article 19, தகவல்களை அணுகுவதிலும் கருத்துகளை வெளிப்படுத்துவதிலும் தனிமனிதர்களுக்கு இருக்கும் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் தருகிறது. இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடாத நாடுகளின் வரிசையில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது. ஆக, மலேசியர்களுக்கு தகவல்களை அணுக, கருத்துகள் கூற வரையறைக்கு உட்பட்ட சுதந்திரம் மட்டுமே இருப்பது இவ்விடம் தெளிவு.

அதேவேளை, மனித உரிமைகளைக் காப்பதற்காக குறிப்பாக கருத்துச் சுதந்திரத்தை காப்பதற்காக, காமன்வெல்த் தலைவர்கள் கூட்டம் வெளியிட்ட அறிக்கையில் அதன் உறுப்பிய நாடான மலேசியா மனித உரிமை, கருத்து சுதந்திரத்தைக் காப்பதாக உறுதிபடுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது. சீனா, அரபு நாடுகளைப் போல் கடும் இறும்புக் கரம் கொண்டு பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் முடக்கப்படாவிட்டாலும் மலேசியாவில் மதத் தீவிரவாதம், இஸ்லாமியம் பற்றிய எதிர்மறை தகவல்களைப் பரப்புதல், பாலியல், அமானுஷங்கள் (Fantacy), அரசியல் போன்ற அம்சங்களில் அழுத்தமான கெடுபிடிகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மலேசியாவில் அச்சுப் பதிப்பு சூழலில் பேச்சுரிமை, கருத்து சுதந்திரத்திற்கான சட்டம்

மலேசியாவில் 1971 தொடங்கி ஜனவரி 2017 வரை 1,680 அச்சு பதிப்புகள் தடை உத்தரவுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. மலேசியா கருத்து சுதந்திரத்துக்கு தெளிவான வரையரைகளை வடிவமைத்து வைத்துள்ள நாடாகும். அவ்வகையில், அச்சு இயந்திரம் மற்றும் பதிப்பு சட்டம் 1984  [அக்தா 301] மலேசியர்களின் பதிப்பு மற்றும் எழுத்துசார் பேச்சுரிமைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் வடிவமைக்கப்பட்டிருக்கும் எல்லைக்கோடாகும்.

ஒலி, ஒளி, எழுத்து என அனைத்து வழியிலும் நடைபெறக்கூடிய கருத்துப் பதிவை, பரிமாற்றத்தை, எதிர்வினையைக் கடுப்படுத்த இச்சட்டம் வழிவகுக்கிறது. நிருபர், படைப்பாளர், பதிப்பாளர், அச்சகம், இறக்குமதியாளர், விற்பனையாளர் மற்றும் விநியோகிப்பாளர், நூலகம், நூல் சேகரிப்பாளர், வாசகர் என தனிமனிதர் தொடங்கி இயக்கம், நிறுவனம் என அனைத்து தரப்பினரும் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சங்கள் அனைத்தும் இச்சட்ட பிரிவினுள் வட்டமிட்டிருக்கின்றன.

அச்சு இயந்திரம் மற்றும் பதிப்பு சட்டம் 1984  [அக்தா 301]

அச்சு இயந்திர சட்டம் 1948 மற்றும் பதிப்புகள் இறக்குமதி கட்டுப்பாடு சட்டம் 1958 ஆகிய இரு சட்டங்களைத் தள்ளுபடி செய்து  புதிதாய் உருவாக்கப்பட்டதுதான் அச்சு இயந்திரம் மற்றும் பதிப்பு சட்டம் 1984 [அக்தா 301]. பதிப்புத் துறை டிஜிட்டல் மயமாகத் தொடங்கியதைக் கருத்தில் கொண்டு 2012ஆம் ஆண்டு இச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது. இன்று நாம் பயன்படுத்தும் சட்டம் நவம்பர் 1, 2012ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டதாகும். இச்சட்டம் அச்சு இயந்திர பயன்பாடு, அச்சடித்தல் (உற்பத்தி செய்தல்), இறக்குமதி, மீள்பிரசுரம் (மறு உற்பத்தி), பதிப்பு, விநியோகம் மற்றும் இதனுடன் தொடர்புடைய இதர அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தும் சட்டவரைவாகும்.

அச்சு இயந்திரம் மற்றும் பதிப்பு சட்டம் 1984 [அக்தா 301],  5 பகுதிகளுக்குள் 27 பிரிவுகளையும் 2 அட்டவணைகளையும் கொண்டது. அந்த ஐந்து பகுதிகள் முறையே (1)தொடக்கம்; (2)அச்சு இயந்திர உரிமம்; (3)செய்தித்தாள் பதிப்பு உரிமம்; (4)விரும்பத்தகாத வெளியீடுகளின் கட்டுப்பாடு; மற்றும் (5)பலதரபட்டவை ஆகியவனவாகும். இதில், நான்காவது பகுதியான ‘விரும்பத்தகாத வெளியீடுகளின் கட்டுப்பாடு’-[பிரிவு 7(1)] எனும் பகுதியே இச்சட்ட வரைவு முழுமைக்கும் உயிர்நாடியாக இருக்கிறது.

விரும்பத்தகாத வெளியீடுகளின் கட்டுப்பாடு-[பிரிவு 7(1)], அடிப்படையான ஏழு முக்கிய அம்சங்களை முன்னிலைப் படுத்துகின்றது. ஒரு அச்சுப் பிரதியின் உள்ளடக்கத்தில் எவையெல்லாம் இருக்கக் கூடாதெனும் அம்சங்களை இப்பகுதியே விளக்குகிறது. இவையே தகவல் அணுகல், கருத்து சுதந்திரத்தின் எல்லைக்கோடாவும் இருந்து செயல்படுகின்றன. அவை முறையே;

  1. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல்;
  2. ஒழுக்கப் பண்புகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல்;
  3. பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல்;
  4. பொது மக்களின் சிந்தனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சாத்தியம் கொண்டிருத்தல்;
  5. எவ்வித சட்டத்தை எதிர்க்கும் அல்லது எதிர்க்கும் சாத்தியம் கொண்டிருத்தல்;
  6. பொது நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல்;
  7. நாட்டின் நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல்

ஆகியவையாகும். இவை ஏழும் ‘விரும்பத் தகாத’ வை என்று இச்சட்டம் விளக்குகிறது. அடுத்து, வெளியீடுகள் எனும்போது புத்தகங்களுடன் சேர்த்து இதழ்கள், கேலிச்சித்திரங்கள், புகைப்படங்கள், அறிக்கைகள், குறிப்புகள், உரை, ஒலி, இசை ஆகிய வடிவங்களைக் குறிக்கின்றன.

தொடக்கத்தில் நிருபர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், பதிப்பகம் எனும் தரப்புக்கானவை freedom of speechஎன்று ஒற்றைப் பார்வையில் அணுகப்பட்ட இச்சட்டம், மார்ச் 2016ல் சித்தி நோர் அய்ஷா (Siti Noor Aishah) எனும் 29 வயது பல்கலைக்கழக மாணவிக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறை தண்டனையிலிருந்து எல்லா தரப்பினரையும் கதிகலங்க வைத்தது எனலாம். இஸ்லாமிய பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட 12 நூல்களை வைத்திருந்ததால் இம்மாணவி கைது செய்யப்பட்டார். இம்மாணவிக்கு பயங்கரவாத கும்பலுடம் தொடர்பிருப்பதற்கான எவ்வித சாட்சியமும் கடைசிவரை முன்வைக்கப்படவே இல்லை. ஆனால் ‘நாட்டின் நலனுக்கு குந்தகம் விளைவிக்க சாத்தியம் உள்ள’ [ஏழாவது அம்சம்] நூல்களை வைத்திருந்தார் எனும் ஒற்றைக் காரணமே அவரை தண்டிக்கப் போதுமானதாக இருந்தது.

அக்தா 301ன் இயங்குதலம்

அக்தா 301ஐ அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டில் வெளிவரும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பதிப்புகள் அனைத்தையும் உள்துறை அமைச்சின்கீழ் இயங்கும் வெளியீடுகள் மற்றும் குர்ஆன் உரை கட்டுப்பாடு பிரிவு (Publishing and Quran Text Control Section), பரிசீலனைக்கு உட்படுத்த கடமைப்பட்டுள்ளது. அச்சு இயந்திரங்களுக்கான உரிமம், பதிப்புரிமம், குர்ஆன் உரை பதிப்பு உரிமம், குர்ஆன் உரை அங்கீகரிப்பு சான்றிதழ் ஆகியவற்றை தரும் அமலாக்க துறையாக இது செயல்படுகிறது. இஸ்லாமியம் தொடர்பான பதிப்புகளைத் தணிக்கை செய்வதில் உள்துறை அமைச்சுடன் இணைந்து JAKIM எனப்படும் இஸ்லாமிய மேம்பாடு துறையும் செயல்படுகிறது. ஆனால், அதன் அதிகார வட்டம் இஸ்லாம் தொடர்பான பதிப்புகளைத் தணிக்கைக்கு உட்படுத்த, தடை விதிக்க உள்துறை அமைச்சுக்கு ‘ஒப்புதல் வழங்கும்’ அளவிலேயே நின்று விடுகின்றது. சமயங்களில் இத்துறையின் இதர கிளை அமைப்புகள் அதிகார எல்லையை மீறி செயல்படுவதும் உண்டு. சான்றாக, நிக் ரைனாவுக்கு (Nik Raina Nik Abdul Aziz) இழைக்கப்பட்ட அநீதியைக் கூறலாம்.

JAKIM எனும் இஸ்லாமிய மேம்பாடு துறையின்கீழ் இயங்கும் JAWI எனப்படும் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய மத அலுவலகத்தினர் 30 மே 2012ல் Borders Bookstore என்ற புத்தகக் கடையினுள் அத்துமீறி நுழைந்து இர்ஷாட் மாஞ்சி (Irsyad Manji) என்ற நுல்லாசிரியரின் Alla, Kebebesan & Cinta என்ற நூலை பரிமுதல் செய்தனர். இதில் அப்புத்தகக் கடையின் கிடங்கு மேலாளராகப் பணியாற்றிய நிக் ரைனா என்பவர் அப்புத்தகம் விற்பனைக்குச் செல்ல காரணமாக இருந்தார் என்று JAWI தரப்பினரால் வழக்குத் தொடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் நீதிமன்ற வாசலில் நிற்க நேர்ந்தது. JAWIயின் இந்நடவடிக்கை சட்டப்படி குற்றம் என்று அறிவித்த நீதிபதி இதுவரை இந்நூலுக்கு உள்துறை அமைச்சிடமிருந்து தடை உத்தரவு பிரப்பிக்கப்படவில்லை என்றும் தனது தீர்ப்பில் அறிவித்திருந்ததன் பின்னரே நிக் ரைனா இதிலிருந்து விடுபட்டார்.

தடை உத்தரவு பட்டியல் (Prohibition Order List)

புத்தகத் தடையில் (1)அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டவை (Banned); (2)கட்டுப்படுத்தப்பட்டவை (Restricted) எனும் இருவேறு பிரிவுகள் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முதல் வகைக்கு உள்துறை அமைச்சு Banned சான்றிதழ்  வழங்குவதோடு நாளிதழ் அறிவிப்புகளையும் வெளியிடும். இரண்டாம் வகைக்கு தடை சான்றிதழ்கள் ஏதுமின்றி நாளிதழ் அறிவிப்புகள் மட்டுமே வெளியாகும். வணிக சந்தையில் இவ்விரு வகையான நூல்களையும் விற்பனைக்கு வைக்க தடை இருக்கிறது. ஆனால் நூலகங்கள், ஆய்வகங்களில் முதல் வகைக்கு நிரந்தர தடையும் இரண்டாம் வகை நூல்களை அணுக அனுமதியும் இருக்கின்றன. நகல் எடுத்தல், இரவல் பெறுதல் போன்ற வசதிகள் ஏதுமின்றி நிபந்தனைகளுக்கு உட்பட்ட பயன்பாட்டுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. உள்துறை அமைச்சின் பட்டியலைத் தவிர்த்து சில தனிநபர் அல்லது குழுக்களின் ஆட்சேபனையின் காரணமாகவும் சில நூலகங்கள் தனிப்பட்ட முறையில் நூல்களை ‘கட்டுப்படுத்தப்பட்டவை’ என்று வரையறுப்பதுண்டு. இது அவ்வந்த நூலகம், ஆய்வகத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.

உள்துறை அமைச்சின் அதிகாரப்புர்வ வலைதளத்தில் காணப்படும் தடை உத்தரவுக்கு உட்பட்ட வெளியீடுகளின் பட்டியல் முழுமையானதல்ல. உள்துறை அமைச்சு அவ்வப்போது நாளிதழ்களில் வெளியிடும் தடைசெய்யப்பட்ட நூல்களின்/இதழ்களின் பட்டியல் இந்த இணையப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள படுவதில்லை.  நூலகங்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள் என அனைத்து தரப்பும் நாளிதழ்களில் வெளியாகும் பட்டியலையும் மேற்கோள் செய்ய வேண்டிய சூழல் இன்றளவும் நீடித்த வண்ணமே உள்ளது. தொடக்கத்தில் இது பெரிதுபடுத்தப்படாவிட்டாலும் நிக் ரைனாவுக்கு நடந்த சம்பவம் இப்பட்டியல் முழுமைபடுத்தப்பட்டிருப்பதன் தேவையை உணர வைத்தது.

நிக் ரைனா எதிர்கொண்ட சிக்கலில் JAWIக்குக் கடையைச் சோதனையிடவும் புத்தகங்களைப் பறிமுதல் செய்யவும் உரிமை இல்லை என்பது ஒருபுறம் இருக்க, நிக் ரைனா கைது செய்யப்பட்ட நாளுக்கு (30 மே 2012) முன்தினம்தான் இந்நூல் உள்துறை அமைச்சின் ‘தடை உத்தரவு’ பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எப்போது இப்பட்டியலில் புதிய தலைப்புகள் சேர்க்கப்படுகின்றன என்பதையும் புதிய பட்டியல் எப்போதிலிருந்து நடைமுறைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெளிவான விளக்கங்கள் இல்லாத சூழலில் தடை நடவடிக்கைகள் கண்மூடித்தனமாக நடைபெறுவது குறித்து எல்லா தரப்பிலிருந்தும் அதிருப்தி குரல் எழும்பியிருந்தது. ஒருவேளை நிக் ரைனா குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் மூவாயிரம் ரிங்கிட் அபராதம், ஈராண்டு சிறையுடன் க்ரிமினல் குற்றவாளி என்ற தண்டனையுடன் வாழ்நாளைக் கழிக்க நேர்ந்திருக்கும். நூலாசியர், பதிப்பகத்தார், வியாபாரி என்ற எந்த வகைக்குள்ளும் வராத சாதாரண தொழிலாளி பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இச்சம்பவம் வர்ணிக்கப்பட்டது.

நிலை இப்படியிருக்க, சித்தி நோர் அய்ஷா வைத்திருந்ததாக சொல்லப்பட்ட 12 புத்தகங்களும் இன்று வரையிலும்கூட  ஊள்துறை அமைச்சின் தடை உத்தரவு பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால், இச்சம்பவத்தையொட்டி 24 நவம்பர் 2016ல் உள்துறை அமைச்சு மலாய் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘தடைவிதிக்கப்பட்ட நூல்களை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் எப்போதும் ஆபத்தானது என்பதால் ஆய்வு தேவைக்காக இருந்தாலும்கூட முறையான அனுமதி பெற்றே அவற்றை பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தது. இதை எதிர்த்து பல கண்டன குரல்கள் எழுந்தும் தடை உத்தரவு பட்டியல் முழுமைபெறமலேயே இன்றும் இருப்பது கண்கூடு.

உள்நாட்டு புத்தகங்களுக்குத் தடை உத்தரவு

இந்நாட்டில் பதிப்பிக்கப்படும் அனைத்து நூல்களும் உள்துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்டு உள்ளடக்கம் சார்ந்து பரிசீலிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் புகார்களின் அடிப்படையிலேயே புத்தகங்களுக்குத் தடை உத்தரவு பிரப்பிக்கப்படுகிறது. மேலும், இஸ்லாம் தொடர்பான பதிப்புகளைத் தணிக்கைக்கு உட்படுத்த, தடை விதிக்க உள்துறை அமைச்சுக்கு ஒப்புதல் வழங்கும் பொறுப்பில் JAKIM அமைப்பு இருப்பதுபோல் இந்நாட்டில் உள்ள மற்ற சமயங்கள் தொடர்பான நூல்களை பரிசீலிக்க எவ்வித அமைப்பும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

இந்நாட்டு எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பெரும்பாலும் சர்வதேச புத்தக தர எண்ணுக்கு (ISBN) விண்ணப்பிக்கும்போது தங்களுடைய நூல்கள் தடைவிதிக்கப்படலாம் என்று உள்ளூர தயங்குகின்றனர். உண்மையில் ISBN பதிவுக்கும் உள்துறை அமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் ISBN பதிவின்போது நூலின் முகப்பு அட்டையும், பதிப்புரிமை பக்கமும், பிறகு நூல் அச்சானவுடன் ஐந்து பிரதிகளும் பெற்றுக்கொள்ளப்படுகிறது. ஒருவேளை முகப்பு அட்டையில் அக்தா 301கீழ் தொடர்புடைய பகுதிகள் ஏதும் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் பின்னாளில் அந்நூல் உள்துறை அமைச்சின் பரிசீலனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு தடை உத்தரவு வர வாய்ப்புள்ளது.

அன்றி உள்நாட்டில் பதிப்பிக்கப்படும் தமிழ் நூல்களுக்கு தனிநபர் புகார்களைத் தவிர வேறெந்த காரணத்தினாலும் தடை உத்தரவு பிரப்பிக்கப்பட வாய்ப்பே இல்லை. இன்றளவும் அப்படியான சம்பவங்கள் ஒரு முறைகூட நிகழ்ந்ததும் இல்லை. சான்றாக, 1971லிருந்து இன்றுவரை தடை உத்தரவு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 25 நூல்களைக் குறிப்பிடலாம்.

எண் நூல் நூலாசிரியர்/

மொழிபெயர்ப்பு

பதிப்பகம்
1 ஆண் பெண் இருட்டறை வாழ்க்கை தமிழ்வாணன் மணிமேகலை பிரசுரம்
2 ஆண்மை குறைவும் பெண்மை குறைவும் தமிழ்வாணன் மணிமேகலை பிரசுரம்
3 செக்ஸ் பயிற்சி தமிழ்வாணன் மணிமேகலை பிரசுரம்
4 குமுதம் 12-12-2007
5 ஆனந்த விகடன் Dis 12, 2007
6 மார்ச் 8 கா. ஆறுமுகம் செம்பருத்தி பதிப்பகம்
7 யார் முஸ்லீம்? சத்தியமே ஜெயம்
8 குடும்ப செக்ஸ் கதைகள் ப்ரியா வர்மா பதிப்பகம்
9 ஒரு கன்னியின் கற்பனை ப்ரியா வர்மா பதிப்பகம்
10 காம சூத்திரம் – ஆதிசங்கர்ர் மதன் Golden Publication
11 காம சாஸ்திரம் சங்கராச்சாரியார் குடும்ப நூலகம்
12 மல்-குரான் மெய்ப்பொருள் ரிப்ராஹிம் பட்சா
13 சோலிக்குள் என்ன இருக்கு சுபா & சித்ரா மணியோசை மார்க்கட்டிங்
14 மார்க்ஸிய நாத்தீகம் M.V. சுந்தரம் New Century Book House Ptd. Ltd.,
15 ஹாவா-ஹாவா வீணை Trading
16 விநோத சிரிப்பு (கூஜாதி கூஜா) வீணை Trading
17 திரைசித்ரா K.T. Singh
18 ரஷ்ய புரட்சி வரலாறு V.P. சித்தம் தமிழ்ப் புத்தகாலயம்
19 சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் R.தனாலன் பிரேமா பிரசுரம்
20 ஒரு இரவு முழுவதும் மன்மதன் Sri Ram Publisher
21 காதல் வாழ்க்கை M. Babu, Ellis Publications
22 Comedy Drama சந்திரன் பாபு & குழுவினர்
23 Musical Comedy Drama சந்திரன் பாபு
24 Tamil Comedy சந்திரன் பாபு & அஞ்சலி
25 ஈழத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான நன்றி

மதம், பாலியல், அமானுஷங்கள், அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த 25 நூல்கள் (ஒன்றைத் தவிர) வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். இதை முழுமையான பட்டியல் என்றும் சொல்லிவிட முடியாது. இந்நாட்டில் நடைபெற்ற மே 13 இனக்கலவரம் குறித்தும், இண்ட்ராப் பேரணி குறித்தும் பதிப்பிக்கப்பட்ட நூல்கள், ஈளப்போரில் புலிகளுக்கு ஆதரவு குரல் கொடுத்து உருவாக்கப்பட்ட நூல்கள் தடை உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஆங்காங்கு கூறப்படுகின்றன. ஆனால் அதற்கான சான்றுகள் ஏதுமில்லை. அவ்வகையில் மார்ச் 8 கம்போங் மேடான் இனக்கலவரம் குறித்து வழக்கறிஞர் கா. ஆறுமுகம் எழுதிய ‘மார்ச் 8’ எனும் நூல் ஒன்றே உள்நாட்டில் தமிழ்மொழியில் வெளிவந்து தடை உத்தரவுக்கு உட்படுத்தப்பட்ட முதல் நூலாகும். இந்நூல், வன்முறையால் பாதிக்கப்பட்ட பத்துபேரின் அனுபவங்கள், கலவரம் தொடர்பான ஆவணங்கள், கல ஆய்வுத் தகவல்களின் தொகுப்பாக வெளிவந்தது. முறையான ISBN பதிவுப்பெற்று பதிப்பிக்கப்பட்ட இந்நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த பின்னரே தடைஉத்தரவை எதிர்கொண்டது. புகார்களின்வழி அல்லாமல் தொடர்ச்சியான நூல் அறிமுக, வெளியீட்டுக் கூட்டங்கள் ஆங்காங்கு நடைபெற்றது இந்நூல் உள்துறை அமைச்சால் ‘தேர்ந்தெடுத்து ஆராயப்பட்டு’ தடைசெய்யப்பட காரணமாகியது. இலக்கிய வகையைச் சாராமல் புள்ளிவிபரங்கள், நேர்காணல்கள் என ஆய்வு ரீதியாக உருவாக்கப்பட்ட இந்நூல் இனப்பாகுபாட்டையும் அரசாங்கச் சாடல்களையும் கொண்டுருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதுபோலவே நேரடியாக அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து, தமிழர்களிடையே தனிமனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விழைந்த ‘செம்பருத்தி’ இதழின் உரிமம் (Publishing Permits) புதுப்பிக்க தடைவிதிக்கப்பட்டது. தவிர, மதப்பழிப்பு செய்ததற்காக ‘மக்கள் ஓசை’ நாளிதழும்; ஒரே பெயரில் இரு வெவ்வேறு பத்திரிகைகள் வந்ததால் ‘தமிழ்க்குரல்’ நாளிதழும் தற்காலிக தடைக்கு உட்படுத்தப்பட்டது. இம்மூன்று இதழ்களும் புகார்களின் அடிப்படையில் தடை/இடைகால தடைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆனால், மலாய்மொழி, ஆங்கில மொழி சூழலில் இப்படியான சம்பவங்கள் நடப்பதுண்டு. உதாரணமாக, சந்தையில் தொடர்ந்து பத்தாண்டுகள் தங்குதடையின்றி விற்பனையான Malaysia and The Club of Doom: The Collapse of The Islamic Countries எனும் நூல் சட்டென ஒரு நாள் உள்துறை அமைச்சால் தடைவிதிக்கப்பட்டது. நூலாசிரியரின் கூற்றுப்படி அந்நூல் இஸ்லாமிய நாடுகளின் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த கருத்துகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், உள்துறை அமைச்சு இந்நூலுடன் சேர்த்து மேலும் நான்கு நூல்களுக்கும் தடை உத்தரவு பிரப்பித்திருந்தது. அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராகவும் நாட்டின் அமைதிக்கும் சுபீட்சத்துக்கும் ஊறு விளைவிக்கக்கூடியவை என்றும் வகைப்படுத்தப் பட்டிருந்தன.

அடுத்து, தடை உத்தரவு பட்டியலில் இலக்கியம் சார்ந்த நூல்களும் கணிசமான அளவில் இருப்பதைக் காண முடியும். ஆனால் அவை குறிப்பிட்ட எழுத்தாளர், எழுத்தாளர்களின் அரசியல் பின்புலம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் தடைவிதிக்கப்பட்டிருப்பது கண்கூடு. Karen Armstrong, John Esposito, Khalil Gibran, Salman Rushdie போன்ற எழுத்தாளர்கள் ஒரு பக்கமும் மதத்தீவிரவாதம் மிக்க நாடாக சித்தரிக்கப்படும் இஸ்ரேல் நாட்டு பதிப்பு நூல்கள், கம்யூனிச சித்தாந்தம் சார்ந்த நூல்கள் மறுபக்கமும் மிக நீண்ட காலமாகவே இந்நாட்டில் நிரந்தரத் தடை செய்யப்பட்டுள்ளன.

எதிர்வினைகள்

மலேசியாவில் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் குறித்தும் பலரும் தங்களது அதிருப்தி குரல்களை எழுப்பி வந்தாலும் அவை பல தருணங்களில் இடதுசாரி கட்சிகளின் வாக்கு பிரச்சாரத்துக்கு ஊறுகாயாக மாறி நோக்கத்தை அடையாமல் அமிழ்ந்துபோவதை காணலாம். ஆயினும், மலேசியாவில் பத்திரிக்கை சுதந்திரத்தைக் காக்க முனையும் CIJ [Centre for Independent Journalism] அமைப்பு மற்றும் SIS போன்ற இதர அரசு சாரா அமைப்புகள், வழக்கறிஞர் கா.ஆறுமுகம், Faizal Tehrani, கேலிச்சித்திர கலைஞர் Zunar போன்றோரின் தனிநபர் முயற்சிகளும் சில சமயங்களில் வெற்றியை அல்லது குறைந்தபட்சம் பொது மக்களிடையே கருத்து சுதந்திரம் குறித்த சிந்தனைக்கு வித்திட்டிருக்கின்றது எனலாம்.

உதாரணமாக, வழக்கறிஞர் கா. ஆறுமுகம் ‘மார்ச் 8’ நூல் தடைக்கு எதிராக மேற்கொண்ட நீதிமன்ற முறையீட்டு சட்ட நடவடிக்கைகள் தமிழர்களிடையே பெரும் கவனம் பெற்றது. கேலிச்சித்திர கலைஞர் Zunar நூல்கள் பரிமுதல் செய்யப்பட்டபோதும், அல்ட்ராமேன் (Ultraman) நகைச்சுவை நூல் தடை செய்யப்பட்டபோதும் கருத்து சுதந்திரம் குறித்து மலேசியாவில் பட்டித்தொட்டி எங்கும் குரல் எழத் தொடங்கியது. சமூக வலைத்தளங்களில் இன, மொழி பாகுபாடின்றி எதிர்ப்புக்குரல்கள் கிண்டலாகவும், வன்மமாகவும் வரத் தொடங்கின.  இம்மாதிரியான சூழல்களில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உள்துறை அமைச்சு ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்று சட்ட ரீதியாக வெற்றிபெறும்போது இழப்பீடு தருவதும் அவ்வப்போது நடந்த வண்ணமே உள்ளது.

இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்குத் தடை உத்தரவு

உள்நாட்டு புத்தகங்களைப் போலவே, வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் நூல்களும் அக்தா 301ன் சட்ட வரையறை கொண்டு பரிசீலிக்கப்படுகின்றன. மலேசியா-இங்கிலாந்து வணிக உடன்படிக்கையின்படி மிகப் பெரும்பான்மையான புத்தகங்கள் இங்கிலாந்திருந்து தருவிக்கப்பட்டு சிங்கப்பூரை கிடங்காகப் பயன்படுத்தி ஜொகூர்பாரு சுங்கதுறையைக் கடந்துதான் நாட்டுக்குள் நுழைகின்றன. இச்சுங்க துறையில் அமர்த்தப்பட்டிருக்கும் உள்துறை அமைச்சின் ஊழியர்களே எந்தெந்த நூல்கள் மலேசியாவிற்குள் வரலாம் என்பதை முடிவு செய்பவர்களாக இருக்கின்றனர். தினம் தினம் பலநூறு புத்தகங்கள் நாட்டுக்குள் நுழைய வேண்டிய சூழலில் சுங்கதுறையினர் ஒவ்வொரு நூலாக வாசித்துப் பார்த்து பிரித்தெடுக்க முடியாத நிலையில், பின்னாளில் வாசகர்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில் சந்தைக்கு சென்ற பின்னும் பல நூல்கள் தடை உத்தரவுக்கு உட்படுத்தப்படுவதுண்டு.   இவர்கள் பறிமுதல் செய்யும் அல்லது மலேசியாவிற்குள் நுழைய பொறுத்தமற்றதாகவும் குறிப்பிடும் நூல் தலைப்பை சம்பந்தப்பட்ட விநியோகிப்பாளர்களுக்குக் கொடுக்கின்றனர். பின்னாளில் இவர்களே தங்களிடம் வணிகத் தொடர்புள்ள புத்தகக் கடைகளுக்கு இப்பட்டியலை வழங்குகிறார்கள்.

இருப்பினும், தடை விதிக்கப்பட்டதாய் கூறப்படும் புத்தகங்கள் சில நேரங்களில் இங்குள்ள புத்தகக் கடைகளில் நாம் பார்க்க நேரிடுவதுண்டு. இதற்கு இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒன்று, அப்புத்தகம் தடை செய்யப்படுவதற்கு முன்பு தருவிக்கப்பட்டதாக இருக்கும்; இரண்டு, ஜொகூர்பாரு அல்லாமல் இதர சுங்கத் துறை நுழைவாயில்களின் வாயிலாக நாட்டிற்குள் நுழைந்திருக்கும். இவை அல்லாமல் வேறு சில காரணங்களினாலும் தடைவிதிக்கப்படும் நூல்கள் நாட்டிற்குள் நுழைவதுண்டு.

  • ஒரு புத்தகத்தின் இரு வெவ்வேறு ISBNகள் இருக்க, ஒரு ISBN மட்டும் தடைசெய்யப்பட்டிருத்தல் (தடித்த அட்டை; இலேசான அட்டை என இரு விதமாக அச்சடிக்கப்பட்ட நூல் இருவேறு ISBNகள் கொண்டிருக்கும்);
  • ஒன்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளைக் கொண்ட புத்தகங்கள்;
  • மொழிபெயர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட புத்தகங்கள்.

சட்ட நடவடிக்கைகள்

தடைவிதிக்கப்பட்டவையாக பட்டியலிடப்பட்டிருக்கும் புத்தகங்களை அச்சிடுதல், இறக்குமதி செய்தல், தயாரித்தல், மறுஉருவாக்கம் செய்தல், வெளியிடுதல், விற்றல், பரப்புதல், விநியோகம் செய்தல் ஆகிய செயல்பாடுகள் ‘அச்சு இயந்திரம் மற்றும் பதிப்பு சட்டம் 1984’ [அக்தா 301] –பிரிவு 8(2)க்கு கீழ் சட்டப்படி குற்றமாகிறது. குற்றவாளி என நிறுபிக்கப்பட்டால், மூன்று வருடங்களுக்கு மேல் சிறை; அல்லது RM 20,000 அல்லது அதற்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம். இதுதான் உட்சபட்ச தண்டனையாகவும். அதுவே அரசாங்க ஊழியராக இருக்கும் பட்சத்தில் மாநிலம் கடந்து பள்ளி மாற்றப்படுதல், பதவி குறைப்பு செய்தல் போன்றவை அதிகபட்ச தண்டனையாகின்றன.

முடிவாக

இஸ்லாமிய மதம், பாலியல், அரசியல், அமானுஷம்  சார்ந்து நேரடியாக பதிவு செய்பவர்கள்;  ஆய்வு சான்றுகள் மற்றும் புள்ளிவிபரங்களைக் கொண்டு கட்டுரை அல்லது ஆய்வு நூல்கள் எழுதுபவர்கள்; பத்திரிகையாளர்கள், நேர்காணல்வழி கருத்தை நேரடியாக வெளிபடுத்துபவர்களின் பதிப்புகளே இதுகாறும் பரவலாக தடை உத்தரவுக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளதை இக்கட்டுரை சுட்டிக்காட்ட முனைந்துள்ளது. அதேவேளை, சில இலக்கிய பிரதிகள் நாடு, எழுத்தாளரின் அரசியல் பின்புலம் சார்ந்து தடை விதிக்கப்படுவதையும் மேற்சில உதாரணங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது. அவ்வகையில் இலக்கியத்தின் நுணுக்கங்களை அறிந்தவர்கள் இச்சட்ட வரையறைகளைப் பார்த்து அஞ்ச வேண்டியதில்லை என்பதே நிதர்சனம். காரணம் இலக்கியம் ஒன்றை நேரடியா சொல்வதல்ல. அல்லது, கருத்துகளை முன்வைத்து படைக்கும் பிரச்சார பாணியிலான படைப்பாளிகளுக்கு வேண்டுமானால் இச்சட்டங்கள் அச்சத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால், இவ்வகை எதிலும் சாராத தமிழ் இலக்கியவாதிகள் தங்களது ஆக்கத்தை சமரசமின்றி முன்வைக்க அச்சப்படுவது முரண்நகையே. சற்றே கூர்ந்து கவனித்தால் செறிவான கூறுமுறையிலும் கலையம்சத்தினூடும் இத்தடை உத்தரவுகளை மீறி எழுதிக்கொண்டிருக்கும் பல எழுத்தாளர்களையும் அவர்களது நூல்களைப் பதிப்பிக்கும் உள்நாட்டு பதிப்பாளர்களையும் இந்நாட்டிலேயே நாம் காண முடியும். சான்றாக, கே.எஸ்.மணியம் இந்நாட்டில் 80கள் தொட்டே இனப்பாகுபாட்டு அரசியல், நாட்டின் கல்விமுறை, மூடநம்பிக்கைகள், ஓரினசேர்க்கை, தனிமனித உரிமை, ஆதிக்க சமூகம் உண்டாக்கும் அடையாள நெருக்கடி, பெண்களின் ஆளுமை அடக்குமுறை என அதிகாரவர்கத்துக்கு எதிராக ஆங்கிலத்தில் எழுதிவருபவர். அவர் அரசாங்கப் பணியில் இருந்த காலகட்டத்தில் இந்நூல்கள் பதிப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தோட்டப்புற வாழ்வின் கசடுகள், மனித மனத்தின் வன்மங்கள், இனப்பாகுபாட்டு அரசியல் பேசிய அவரது ‘தி ரிட்டன்’ நாவல் இந்நாட்டு படிவம் ஐந்து அரசாங்க தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பாட நூலாகவும் இருந்துள்ளது.

கோ.புண்ணியவான், சீ.முத்துசாமி போன்ற இன்னும் பல மூத்த எழுத்தாளர்கள் முன்வைக்கும் அச்ச உணர்வை தேர்ந்த கூறுமுறையாலும் கலைநுட்பத்தாலும் எதிர்கொள்ள முடியும் எனும் அடிப்படையில் ஒருபோதும் இக்காரணங்களை ஏற்கவியலாது என்பதை இவ்விடம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். அடுத்து, படைப்பில் கலைநுட்பம் குறித்து பேசுமிடங்களில் ‘தமிழகத்திலிருந்து பிழைக்க வந்தவர்கள் உருவாக்கி வளர்த்த இலக்கிய முயற்சி’, ‘கல்வி கற்கும் சூழல் இல்லாத நிலையில் மொழியை நிலைநாட்ட உருபெற்ற இலக்கிய முயற்சி’, ‘வாசிப்புக்கான புத்தகங்கள் கிடைப்பதில்லை’ போன்ற வாதங்கள் மேலெழுவது இங்கு வாடிக்கை. ஆனால் அண்மைய 30 ஆண்டுகளுக்குள்ளாக இந்நாட்டில் உருபெற்று செழித்திருக்கும் இணைய வளர்ச்சி, நிலையான தமிழ்க் கல்வி, புத்தக விற்பனை முறைகள், தமிழக இலக்கியவாதிகளின் வருகை ஆகியவற்றுக்குப் பின்னும் இக்காரணங்கள் கூறப்படுவதைப் புறந்தள்ளி விடலாம். காரணம் இவற்றுக்குப் பின்னணியில் இருப்பது படைப்பாளர்கள், விமர்சகர்களின் சுய தணிக்கை நிலைபாடு மட்டும்தான்.

இந்நாட்டில் தமிழர்களுக்குப் பெரிதாய் எவ்வித சிக்கலும் இதுவரை நிகழாததைப் போல பாவனை காட்டும் இலக்கிய முயற்சிகளுக்கும் ஒழுக்க இலக்கிய முன்னெடுப்புகளுக்கும் பின்னாளிருந்து செயல்படும் படைப்பாளர்களின் பொருளாதார, அடையாளம் சார்ந்த தகிப்புகள் குறித்து இதுவரையிலும் இங்கு கள்ள மெளனம் காக்கப்பட்டு வருவதை மறுத்துவிட முடியாது. அதிகாரவர்க்க, வெகுஜன தேவையைப் பூர்த்தி செய்ய, தடையின்றி புத்தகங்களை விற்றுத் தீர்க்க, நன்கொடையாளர்கள் அரசியல்வாதிகளின் தலைமையில் நூல் வெளியீட்டை நடத்தி முடிக்க, ஒழுக்கவாதி என அடையாளப்படுத்தப்பட எழுத்தாளர்கள் தங்களுக்குள்ளாகவே போட்டுக்கொள்ளும் சுயத்தணிக்கையாக இதை புரிந்து கொள்ளலாம்.

பேச்சுரிமை, கருத்து சுதந்திரத்திற்கு கிஞ்சிற்றும் சம்பந்தமில்லாதது இலக்கிய விமர்சனத் துறை. காரணம் இது இலக்கியப் பிரதியை, எழுத்தாளரின் படைப்பாளுமையை வட்டமிட்டு உருபெறுவது. அவ்வகையில், இந்நாட்டில் கறார் இலக்கிய விமர்சனம் மேலெழாமல் போனதற்கு சட்ட விதிகளை நோக்கி கைநீட்டுவது இல்லாத பகையாளியைக் கண்டு ஓடும் செயலுக்கொப்பானது. நூல் விமர்சனம் எனும்பேரில் படைப்பின் தொடக்கம், கருப்பொருள், நடை, கதைமாந்தர்கள் என படைப்பை கூறுபோட்டு பிரேத பரிசோதனை செய்வதும் இறுதியில் பாராட்டு மழை பொழிந்து, தட்டிக்கொடுத்து இலக்கியம் வளர்ப்பதாய் சொல்லும் குரல்களும் இங்கு ஏராளம். கறார் விமர்சனங்களை முன்வைத்தால் அடுத்தமுறை வாய்ப்பு வராது, அதிகார முனைகளை நோக்கி எதிர்வினையாற்றினால் அனுகூலங்கள் கிடைக்காமல் போகும் என்பதால்தான் இந்நாட்டில் விமர்சன போக்கு வளரவேயில்லை என்று உறுதிபட கூற இடமுண்டு. சான்றாக, தீவிர இலக்கிய விமர்சகர்கள் தீவிரவாதிகளைப்போல் முற்றாக ஒதுக்கி வைக்கப்படுவதும் தட்டிக்கொடுத்து இலக்கியம் வளர்ப்பதாகக் கூறும் விமர்சகர்கள் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதுவது, நூல் வெளியீட்டில் விமர்சன கட்டுரை வாசிப்பது, புதிய எழுத்தாளர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கும் இலக்கியப் பட்டறைகள் நடத்துவது, பொது ஊடகங்களில் தொடர்ந்து கவனப்படுத்தப்படுவது ஆகியவற்றை கூறலாம்.

அடுத்து, பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் எல்லைமீறப்படுவதாகக் கருதப்படும் தருணங்களில் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படுதல், சில ஆயிரம் ரிங்கிட்டுக்களுக்குள்ளான அபராதம், அதிக பட்சம் ஓரிரு ஆண்டுகள் சிறை ஆகியவைதான் தண்டனையெனில் இவை பொருளாதாரம், அடையாளம் சார்ந்த இழப்புகள் எனும் வரையறைக்கு உட்பட்டவை. இவ்விடம் பாரதியார், கூகி வாங் தியாங்கோ போன்றவர்களின் வாழ்வை நினைவுக்கோறுவதும் பொறுந்தும்.  அல்லது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கை இளங்கோவன் மற்றுமொரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ளலாம். மலேசியாவைவிட மிக அதிகமான கெடுபிடுகளைக் கொண்டிருக்கும் நாடு சிங்கப்பூர் என்பதை நாம் அறிவோம். அந்நாட்டு அரசாங்க உயர்பதவியில் இருந்த காலகட்டத்தில்தான் சிங்கை இளங்கோவனின் ‘தலாக்’ மேடை நாடகம் அறங்கேறி அவரது வேலையும் பறிபோனது. இவ்வாறு நடக்கும் என்ற முழுபிரக்ஞையுடனேயே அவர் இந்நாடகத்தை அரங்கேற்றியதுடன் தொடர்ந்து காத்திரம் குன்றாமல் இயங்கியதையும் மலேசிய, சிங்கை எழுத்தாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தன்னைச் சுற்றியுள்ள கட்டுகளை உடைத்தெறிய முடியாமல் வேறென்ன பெரிதாய் மானுட விடுதலை குறித்து ஒரு படைப்பாளன் பேசிவிட முடியும் என்கிற இலட்சியவாத பார்வையும் இவ்விடம் முன்வைக்கப்பட வேண்டியதே.

தடைகள் அதற்கு எதிரான அதிருப்தி, எதிர்ப்பு குரல்களுக்கு மத்தியில்தான் இதில் நேரடியாக சிக்கல்களை எதிர்கொண்ட Faizal Tehrani, Zunar போன்ற இன்னும் பலர் தொடர்ந்து கலைத்துறையில் காத்திரமாக இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். மலேசியாவை காட்டிலும் கடுமையான கெடுபிடிகளைக் கொண்ட நாடுகளிலிருந்து தீவிர இலக்கியங்கள் உருவாகி வருவதையும் நாம் பார்க்கிறோம்.  தடைவிதிக்கப்பட்ட புத்தகங்களை விற்பதற்காகவே தனியாக இணையத் தளங்களும் புத்தகக் கடைகளும் உற்சாகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. Independent Journalist, Freelance Journalist என்று பத்திரிகையாளர்களும் தங்களுக்கான தளத்தை நிறுவி அதில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். மறுநிலையில், எந்தவொரு தடைகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்காத மலேசியத் தமிழ் இலக்கிய, விமர்சன சூழலில் மட்டும் எப்போதும் ‘இந்நாட்டில் எங்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லை,’ என்ற குரல் எழுந்துகொண்டே இருக்கிறது.

மலேசியாவில் தீவிர இலக்கிய நகர்ச்சியில் உண்டாகியிருக்கும் தொய்வுக்கும் கறாரான இலக்கிய விமர்சனம் நடைபெறாததற்கும் இதுவரை சுட்டிக்காட்டி கொண்டிருக்கும் வெளிக்காராணங்களை ஒதுக்கிவிட்டு, தமிழ் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் தங்களுக்குள் நுழைந்து மீள்பரிசோதனை செய்து பார்ப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.

‘லௌகீக வாழ்வின் உரசல்களிலும் நெரிசல்களிலும் தளர்ந்துபோனாலும், எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.’

– சிங்கை இளங்கோவன்

துணைநூல் பட்டியல்

  1. Malaysia: 18 Books banned for disrupting peace and harmony. (10th July 2006). Retrieved 8th November 2017 from https://www.article19.org/data/files/pdfs/press/malaysia-18-books-banned.pdf
  2. Reporter without Borders. (2017). Retrieved 8th November 2017 from https://rsf.org/en/ranking/2017
  3. Senarai Perintah Larangan. (Julai 2017). Retrieved 8th November 2017 from http://epq.kdn.gov.my/e-pq/index.php?mod=public
  4. Table of country scores. (2017). Retrieved 8th November 2017 from https://freedomhouse.org/report/fiw-2017-table-country-scores.
  5. 5 Books Banned by the Home Ministry because they… “Disrupt the Public Order”?. (23rd August 2016). Retrieved 8th November 2017 from https://cilisos.my/banned-books-home-ministry-malaysia/

நேர்காணல்

  1. கா. ஆறுமுகம். (7th November 2017).

3 comments for “தழலின் சமரசத்தில் தணிந்திருக்கும் காடு

  1. MOHAN BABU
    December 4, 2017 at 3:04 pm

    Nice Article

  2. Govindan
    December 8, 2017 at 2:27 pm

    நல்லதொரு முயற்சி. தெளிவான பார்வை. கோவையான படைப்பு. நன்றி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...