கா.பாக்கியம் முத்து: புனித பிம்பங்களின் முன் மண்டியிடும் பெண்ணியம்

interview-dவடக்கில் இருந்து மிகத் தீவிரமாக எழுதியதோடல்லாமல் இலக்கிய இயக்கங்களிலும் அதிக கவனம் செலுத்தியவர் க.பாக்கியம் முத்து. பெண்ணியக் கருத்துக்களை கதைகளில் மட்டும் முன்வைக்காமல் கலந்துரையாடல்களிலும் பேச்சுகளிலும் துணிச்சலாக முன்வைத்து அவ்வப்போது பல தரப்பு விமர்சனங்களை எதிர்கொண்டவர் இவர். தன் படைப்புகள் பற்றி இவர் “என்னுடைய கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தே எழுதப்பட்டது. பெண்களின் அவலநிலை என் கதைக் கருவின் முக்கிய களம். பெரும்பாலும் பெண்களைப் பற்றிய உண்மையான சம்பவங்களே என் கதைகளின் பின்புலம். பெண்களின் உடல், மனவலிகளே என் கதைகளின் வெளிப்பாடு. அவ்வாறான கற்பின் விலை முதல் சம்மாரம் (2003) வரையிலான பல கதைகள் கடும் விமர்சனத்திற்குள்ளாயின என்பது அக்கதைகளுக்கான வெற்றியே” என்று தன்கதைகளின் தன்மையை வெளிப்படையாக கூறும் இவரும் 70களில் எழுதவந்தவர்.

இவரது முரண்பாடுகள் சிறுகதைத் தொகுப்பு (1979) பத்துச் சிறுகதைகளை உள்ளடக்கிய தரமான பதிப்பாக வந்துள்ளது.  முன்னர் நாளிதழ்களில் வந்த கதைகளை இத்தொகுப்புத் தாங்கியுள்ளது. இவற்றில் பல கதைகள் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்று சிறப்பு சேர்த்துள்ளன.

க.பாக்கியத்தின் மொழி நடையும் கதை சொல்லும் முறையும் முன்னைய படைப்பாளிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அடர்த்தியான மொழியை இவர் கதை சொல்லப் பயன்படுத்துகிறார். காற்புள்ளிகளை வைத்து வாக்கியங்களை முடியவிடாமல் நீட்டிக் கொண்டுபோய் ஒரு உச்சத்தில் நிறுத்தும் இவரது உரைநடை ஆரம்பகட்ட வாசகனுக்கு மருட்டலானது. சொற்களை மிக கவனமாகத் தொடரா விட்டால் கதையின் போக்கு புரியாமல் போய்விடக்கூடும்.

அதேபோல் சம்பவங்களைத் தாவித் தாவிக் கடக்கும் உத்தியையும் எல்லாக் கதைகளிலும் இவர் பயன்படுத்துகிறார். பல நிகழ்வுகள் ஒரு சில சொற்களால் மட்டுமே காட்சிப்படுத்தப்படுகின்றன. கதை நிகழ்வுகளை முன்னும் பின்னுமாகக் களைத்துப் போட்டு சில முயற்சிகளை செய்திருக்கிறார். ‘மன விகாரங்கள்’, ‘இதுகளும் ஒரு ஜென்மங்கள்’ போன்ற கதைகள் இந்த உத்திமுறையில் சொல்லப்பட்டவை. வாசகன் தன் கற்பனையில் முழுக் காட்சியையும் விரித்து பார்த்துக்கொள்ளும் பொருட்டு தன் கதைகளில் இடைவெளிகள் வைத்து எழுதியிருப்பது சிறப்பு. ‘மன விகாரங்கள்’ ‘இதுகளும் ஒரு ஜென்மங்கள்” போன்ற கதைகள் அதன் கூறல் மொழியாலும் உத்தி முறையாலும் அன்றைய வாசகருக்கு மட்டுமல்ல இன்றைய வாசிப்புக்கும் சவலாகத்தான் இருக்கும். ஆயினும் கருத்தியல் அடிப்படையில் அவரது கதைகள் மிகவும் பலகீனமாக இருப்பதைக் குறிப்பிடவேண்டியுள்ளது.

முரண்பாடுகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்து கதைகளில் ஆறு கதைகள் பெண்களின் அகப்போராட்டங்களையும் நவீன வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் கருவாக கொண்டு எழுதப்பட்டவை. மூன்று கதைகள் மலேசிய எழுத்தாளர்கள் தவறாமல் எழுதும் மாணவர் கல்வி நலன், தமிழ்ப் பள்ளி, ஆசிரியர்கள் ஆகிய கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நன்னெறிக் கதைகள். ‘வேனல்’ என்கிற கதை எந்த வகையிலும் சேர்த்துகொள்ள முடியாதது. ‘முரண்பாடு’ என்கிற தலைப்புக் கதையும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் புரிந்துணர்வு அற்ற நிலையையும் பின்னர் உண்டாகும் இணக்கத்தையும் காட்டும் சாதாரண புனைவே.

க.பாக்கியம் முத்து தன் சிறுகதைகளை நீண்ட விவாதங்களாக அல்லது இருதரப்பு வாதங்களை முன்னெடுக்கும் முறையில் கொண்டு செல்கிறார். நல்ல மொழி ஆற்றலுடன் எழுதும் க.பாக்கியம் மிகத் தட்டையான கருத்துகளையே உணர்ச்சிபூர்வமாக தன் கதாமாந்தர்களின் வழி உரையாடுகிறார். ‘வேனல்’ சிறுகதையில் மனைவியைப் பிரிந்து வாழும் (அவள் வேறு ஆணுடன் சென்று விடுகிறாள்) கணவன் தன் மகளுக்கு வரன் தேடுவதில் சந்திக்கும் பிரச்னையை “நான் மட்டும் ஒழுக்கமுள்ளவனாகவோ, ஏகபத்தினி விரதனாகவோ இருந்து பயனில்லையோ? என் குடும்ப மானத்தைக் காக்கவோ, என் பிள்ளைகளின் வாழ்வுக்கு உத்தரவாதமாகவோ அது அமைய முடியாதோ? “என்று புலம்புகிறான்.

‘பூ நாகம்’ கதையில் பரிசம் போட்ட பிறகு (வருங்கால) கணவனுடன் பெண்கள் வெளியே செல்வது சரியா தவறா என்கிற பட்டிமன்றக் கருத்தை தன் கதாமாந்தர்கள் வழி விரிவாக அலசுகிறார். முடிவாக அது மிகவும் ஆபத்தானது என்று தீர்பு வழங்குகிறார்.

அடுத்து, ‘ஒரு பெண் வேலைக்குப் போகிறாள்” என்ற கதையில் வேலையிடத்தில் பெண்கள் ‘சோசியலாக’ (க.பாக்கியம் பரவலாக பயன்படுத்தும் சொல்) பழகுவதால் ஏற்படும் ஆபத்துகளை வாதிக்கிறார். ஆணாதிக்க மனம் பெண்களை வெளியில் சகஜமாக பழகச்சொல்வது சுயநலத்திற்காகவே அன்றி வேறில்லை என்றும் முடிக்கிறார். அதாவது பெண்கள் வெளியில் செல்லவேண்டும் என்று கூறுவதும் பிறருடன் பழகவேண்டும் என்று கூறுவதும் ஆணாதிக்கச் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் வலை என்று முடிவு செய்கிறார்.

70களில் மலேசியப் பெண்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. கல்வி வாய்ப்பு, தோட்டவேலை இழப்பும் அதன் பின் நேர்ந்த புலம்பெயர்வு, தொழிற்பேட்டைகளில் வேலை செய்யும் புதிய அனுபவம், புதிய முறை உடையணிதலும் (காற்சட்டை) ஒப்பனைமுறைகளும், பொருளாதார சுயசார்பு, வாகனம் ஓட்டும் துணிவு, சுகாதாரத் தெளிவு, பிற இன மக்களோடு கலந்து பழகும் நிலை, அரசியலில் இந்தியப் பெண்கள், என்று பல விடயங்களை நாம் இங்கு பட்டியலிடலாம். நாட்டில் நன்கு அறியப்பட்ட ஒரு பெண்ணிய எழுத்தாளரிடம் இருந்து மேற்கண்ட மாற்றங்களில் விவாதங்கள் ஏதும் முன்வைக்கப்படாதது ஏமாற்றமே.

பொதுவாக, க.பாக்கியம் முத்து, பெண்ணியச் சிறுகதைகளை முன்னுரிமை கொடுத்து எழுதுபவர் என்னும் கருத்து உள்ளது. அவரே “என்னுடைய கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தே எழுதப்பட்டது. பெண்களின் அவலநிலை என் கதைக் கருவின் முக்கியக் களம்” என்று உறுதிபடுத்துகிறார். ஆயினும் அவர் முன்வைக்கும் பெண்ணியம், தடுமாற்றங்களும் நவீனத்துவத்துக்கு எதிரான போக்கும் கொண்டதாக இருக்கிறது.

‘இதுகளும் ஒரு ஜென்மங்கள்’ (இவ்வளவு இலக்கணப் பிழையோடு தலைப்பு வைப்பதன் காரணம் தெரியவில்லை) என்ற சிறுகதையில் பெண் ஒருத்தி எதிர்நோக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை நாடகபாணியில் காட்டினாலும் அந்தப் போராட்டங்களுக்கு இன்னொரு பெண்ணே முழுப் பொறுப்பாகிறாள். இக்கதையில் பெண்ணியச் சிந்தனை ஏதும் இல்லை. ஒரு பெண் இன்னொரு பெண்ணால் அனுபவிக்கும் துன்பங்களே உள்ளன.  இந்தச் சிக்கலை உணராத படைப்பாளி கதை முடிவில் “தூ… இதுகளும் ஒரு ஜென்மங்கள்!” என்ற வசையைப் பொதுவாக வைப்பது பொருந்தாமல் போகிறது.

‘அக்கினி வேள்வியில்’ தன் கணவன் கள்ள உறவு வைத்திருப்பது தெரிந்ததும் அவனோடு வாழப் பிடிக்காமல் மனைவி பிரிந்து செல்கிறாள். இதே கருவில் பாவை எழுதிய ‘தொடராத நிழல்’ என்ற சிறுகதையில் அதன் நாயகி ஆற்றும் எதிர்வினைக்கும் க.பாக்கியத்தின் நாயகி ஆற்றும் எதிர்வினைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பாவையின் சிறுகதையில் நாயகி குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். ஆனால் க.பாகியத்தின் நாயகி “அந்தப் பொருளை” (பாக்கியம் தாலியை அப்படித்தான் பூடகமாகக் குறிப்பிடுகிறார்) கழற்றி கணவனின் காலடியில் வைத்து விட்டு குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

“மன விகாரங்கள்” கதையிலும் மனத்தினுள் கணவனுக்கு அளிக்கின்ற மதிப்பின் அளவுதானே அவன் கட்டிய மஞ்சள் கயிற்றுக்கும்” என்று கூறப்படுகிறது.

தாலியைக் கழற்றி போட்டுவிட்டு போவது இந்து சம்பிரதாயத்தில் மிக அதிர்ச்சியான சம்பவம் என்பது கணவனின் “அகல்யா, என்ன காரியம் செஞ்சுட்ட” என்னும் அலறலின் வழி உறுதிபடுத்தப்படுகிறது. க.பாக்கியம் தாலி என்னும் புனித பிம்மத்தை உடைப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறார். ஆனால் அதை வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாக கூறுவது நகைப்பைத் தருகிறது. மேலும் அந்தத் தாலியைப் பவ்யமாக கணவனின் காலடியில் வைப்பது என்பது தாலியின் மேல் ஏற்றப்பட்டிருக்கும் புனிதத்தில் இருந்து விடுபடாத  மனோநிலையின் வெளிப்பாடு. ஒரு பெண்ணியப் படைப்பாளி தாலியின் மகிமைக்கு முன் மண்டியிடுவதையே இது காட்டுகிறது.

மேலும், ‘ஒரு பெண் வேலைக்குப் போகிறாள்’ எனும் கதை, சேலை மேல் முள் பட்டாலும் முள் மேல் சேலை பட்டாலும் சேலைக்குதான் ஆபத்து என்னும் பாமர மக்களின் கருத்தை சாரமாக வைத்துள்ள கதை. ஆண்களுடன் ‘சோசியலாக’ பழகும் பெண்கள் ஏமாற்றப்படுவார்கள் என்னும் அறிவுரையை ஒரு புனைவாக எழுதியிருக்கிறார் க.பாக்கியம்.    “ஒரு ஆண் சம உரிமைன்னும் சோசியல்னும் பேசறதும் செயல்ல காட்டுறதும் வெளி உலகத்தில்தானே தவிர குடும்பத்துக்குள்ள இல்ல… வெளி உலகத்தில் அப்படி ஒரு நிலமைய உருவாக்கினாதானே விரும்பற பெண்ணுங்ககிட்ட எல்லாம் சுலபமா பழகலாம். வேண்டாங்கிறப்போ சோசியல் தானேன்னு சுலபமா ஒதுக்கிடலாம். இந்தக் காலத்து நாகரீகம் எதுல கொண்டுபோய் விட்டுடுச்சின்னு பெண்கள் புரிஞ்சி நடந்துக்கணும்” என்று தொடரும் உரையாடல் க.பாக்கியம் முத்து பெண்ணுரிமையின் மேல் கொண்டிருக்கும் அவநம்பிக்கையையும் நாகரீகம் என்பதற்கு எதிரான மனநிலையையும் காட்டுகின்றன.

ந.மகேஸ்வரி போலவே க.பாக்கியத்துக்கும் நாகரீகம் என்ற சொல் மிகுந்த அச்சத்தைக் கொடுக்கிறது. நாகரீகம் பெண்களின் வாழ்வை நாசமாக்கி விடும் என்று அஞ்சுகிறார். ஆயினும் ந.மகேஸ்வரியைப் போன்றும், பாவையைப் போன்றும் இவர் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் தரப்பாகச் செயல்படவில்லை.

அடுத்து, புனைவுகளில் தீவிர தேடலையும் அலசலையும் முன்வைத்து எழுதும் முறை வரவேற்கத்தக்கது என்பதால் “மன விகாரங்கள்” சிறுகதை நல்ல படைப்பு முயற்சியாக திகழ்கிறது. இக்கதையில் இயல்பான உரையாடல் மொழியும் மனவோட்ட உரையாடல் மொழியும் இக்கதைக்கு வலு சேர்க்கின்றன. விகாரங்களின் விவரிப்புகளும் பெண்ணின் மன ஏக்கங்களும் ஏமாற்றங்களும் சிறப்பாகப் புனையப்பட்டுள்ளன. கணவனின் போக்கிற்குப் போதுமான காரணம் தெரியாவிட்டாலும் கணவனின் அலட்சியத்தையும் அத்துமீறல்களையும் சகித்துக்கொண்டே தன்நிலை குறித்த அகத்தேடலில் அந்த மனைவி ஆழ்ந்து போவது சிறப்பு பெறுகிறது.

மேலும் தன் மனதுக்கு ஒத்து போகாத; சுயநலமும் திமிரும் உள்ள ஒருவனோடு ஒரு பெண்ணை சகித்துக்கொண்டு வாழச் செய்வது எது என்ற கேள்வி இக்கதையை அடுத்த கட்ட உரையாடலுக்கு நகர்த்துகிறது. சமூகம் காலங்காலமாக கட்டமைத்து வைத்துள்ள அதிகார அடுக்குகளுக்குள் இக்கதையை பொருத்திப் பார்ப்பது விரிவான பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும்.

இறுதியாக, க.பாக்கியத்தின் புனைவுகளை நவீனப் பெண்களுக்கான பெண்ணியப் படைப்புகளாக ஏற்கமுடியாது. மாறாக, அவை நவீன மனப்பாங்கோடு வாழ நினைக்கும் பெண்களுக்கு முன் வைக்கப்படும் எச்சரிக்கைகள் மட்டுமே. அவர் படைப்புகளில் பெண்களின் மனக்குமுறலும் கண்ணீரும் நிரம்பி இருந்தாலும் அதை கடந்து செல்லும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. நவீன சிந்தனைகளைக் கைப்பிடியாகக் கொண்டு துன்பவாழ்வை கடக்க நினைக்கும் பெண்களுக்கும் நாகரீகம் ஆபத்தானது என்னும் எச்சரிக்கையை மட்டுமே அவர் தருகிறார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...