இலக்கியம் நடந்து சென்ற பாதையில்தான் வாழ்க்கை இருக்கிறது

bala 02புதுச்சேரியில் பிறந்த ந.பாலபாஸ்கரன், சிறுவயதிலேயே பினாங்கு வந்து உயர்நிலைப் படிப்பை மலேசியாவில் முடித்தார். பின்னர் தமிழகத்தில் ஓராண்டு படித்துவிட்டு, 1963ல் கோலாலம்பூர் ரேடியோ மலாயாவில்  வேலைக்குச் சேர்ந்தார்.

மலாயாப் பல்கலைக்கழத்தில் பொருளியலில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து அதை முடிக்கவில்லை.பின்னர் மலாயாப் பல்கலையின் இந்திய இயல் புலத்தில் பி.ஏ.ஹானர்ஸ், எம்.ஏ கல்வியை முடித்தார். ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தலைப்பிலான இவரது முதுகலைப் பட்ட ஆய்வு, 1995ல் தமிழிலும், 2006ல்The Malaysian Tamil Short Stories 1930-1980: A Critical Study என்று ஆங்கிலத்திலும் நூலாக வெளிவந்தன. இந்த ஆய்வுகள் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஈடுபடுவோர்க்கு இன்றளவும் ஆதார நூல்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  V.R. Nathan: Community Servant Extraordinary என்ற ஆங்கில நூலிலும் இவரது முதன்மைப் பங்களிப்பு உள்ளது. சிங்கப்பூர்த் தென்கிழக்காசியக் கல்விக்கழகம் 2012ல் இந்த ஆய்வுப் புத்தகத்தை வெளியிட்டது. சமயத் துறை மேம்பாட்டில் ஒரு சமூகத் தொண்டரின் அயராத உழைப்பைப் பிரதிபலிக்கும் நூல் அது, ‘கோ. சாரங்கபாணியும் தமிழ்முரசும் இன்றைய பார்வை’ என்ற அண்மைய இவரது நூலும் ஆழமான ஆய்வில் விளைந்ததே.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த இவர், 1982 கடைசியில், சிங்கப்பூரில் குடியேறினார். சிங்கப்பூர்த் தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் மூத்த செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்து 2000ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பாலபாஸ்கரன், தொடர்ந்து சில ஆண்டுகளுக்குத் தொலைக்காட்சியின்  நடப்பு விவகார நிகழ்ச்சிகளுக்கு எழுதிக்கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் – மலேசியாவின் தமிழ் இலக்கியம், ஊடகத் துறை, சமூகம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் இவர், ஓய்வுபெற்ற பின்னர் முழுநேரமாக ஆய்வுப் பணியிலும் அவற்றை நூலாகப் பதிப்பிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டுக்கான கரிகாலச் சோழன் விருது இவரது ‘கோ. சாரங்கபாணியும் தமிழ்முரசும் இன்றைய பார்வை’ நூலுக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் வாழ்க்கை, இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்களேன்.

புதுச்சேரியில் என் பிறப்பு. சிறுவயதில் பினாங்கு வந்தேன். இளமை கழிந்தது தென் கெடாவின் கூலிம் நகரில். என் தந்தை அங்கே ஜவுளி வியாபாரம் செய்தவர். சுல்தான் பட்லிஷா பள்ளியில் மூன்றாம் படிவம் வரை படிப்பு. சுதந்திர மலாயாவின் தந்தை பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் பரிசளிப்பு தினத்துக்கு வந்து எனக்கு முதல் மாணவன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியைக் காண வந்த பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் நான், அப்துல் மாலிக், சான் விங் மூவரும் சேர்ந்து ஸோராப் ரஸ்டம் (Zohrab and Rustum) ஆங்கில நாடகத்தின் உச்சக் காட்சியைச் சுருக்கமாக நடித்துக் காட்டினோம். சீனியர் கல்வி புக்கிட் மெர்தாஜாம் ஹை ஸ்கூலில் முடிந்தது. அங்கும் சில பரிசுகள். வழங்கியவர் பினாங்கு முதல்வர் வாங் பவ் நீ.

இதற்குள் கூலிம் திராவிடர் கழகத்தால் ஈர்க்கப்பட்டு அதில் ஈடுபாடு காட்டினேன். கழகச் செயலாளர் கமருல் ஜமான் தீவிர திராவிடப் பற்றாளர். இங்கும் அங்கும் கொஞ்சம் மேடைப்பேச்சு. பேச்சுப் போட்டியில் பங்கேற்பு என உற்சாகமாகவே இயங்கினேன். கூலிம் கூட்டங்களுக்குத் தவறாது வந்து பேசும் கழகப் பிரமுகர் கா. ப. சாமியின் நட்பு கிடைத்தது. 1959ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருந்தலைவர்களில் ஒருவர் ஈ. வெ. கி. சம்பத் இங்கு வருவதாக இருந்தது. அவரை வரவேற்கும் அமைப்புக்குழுவுக்குச் செயலாளர் நான். ஆனால் சம்பத் வருகையை அரசாங்கம் தடைசெய்துவிட்டது. ஒரு முறை கூலிமுக்குப் பேச வந்த கோ. சாரங்கபாணியைக் கேள்விகள் தொடுத்து,மடக்கிக் கூச்சல் போட்டுப் பாதியிலேயே விரட்டிய கழகத்தினரில் விவரம் அறியாத நானும் ஒருவன்.

சீனியர் கேம்பிரிட்ஜ் முடிந்து செர்டாங் ஆங்கிலப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினேன். என் தாய்க்கு இந்த ஊர் உடல்நல ரீதியாக ஒத்துவரவில்லை. பிறகு ஊருக்குச் சென்று ஓராண்டு பயின்று Pre Universityஎனும் புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.அங்கு மாணவர் சங்கச் செயலாளராகிப் பரிசுகளும் வாங்கிக் கோலாலம்பூருக்குத் திரும்பிவிட்டேன்.

கோலாலம்பூரில் ரேடியோ மலாயாவில் வேலை. சில வருடங்கள் கழித்து வேலையை விட்டுவிட்டு மலாயாப் பல்கலைகழகப் பொருளியல் துறையில் சேர்ந்தேன். இரண்டாம் வருஷப் படிப்பின்போது 1969ல் மே கலவரம் மூண்டது. என் வாழ்க்கையை சுயபரிசீலனை செய்த காலம் அது. கடும் விரக்தி ஏற்பட்டது. படிப்பையே தற்காலிகமாகத் துறந்தேன். மனம்போன போக்கில் அலைந்தேன். திருமணம் நடந்தது. மறுபடியும் ஞானோதயம். பல்கலைக்கழகப் படிப்பு ஞாபகத்திற்கு வந்துகொண்டே இருந்தது. நண்பர்களின் இடித்துரையும் இணைந்தது. புது உற்சாகத்துடன் இந்திய இயல் துறையில் சேர்ந்துபி,ஏ. ஆனர்ஸ் முதல் வகுப்பு பெற்றேன். எம். ஏ வுக்காகச் சிறுகதை வளர்ச்சியில் ஆய்வு செய்தேன். சில ஆண்டு விரிவுரையாளராகப் பணியாற்றியபோது மீண்டும் சுயபரிசீலனை. சிங்கப்பூருக்குப் புறப்பட்டு விட்டேன்.

உங்கள் வானொலி அனுபவம் குறித்து சொல்லுங்களேன்?

bala 031963 ஜனவரி 9 புதன்கிழமை மாலை 4 மணிக்கு ரேடியோ மலாயாவில் சேர்ந்தேன். ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் பிற்பகல் அஞ்சலில் வேலை நியமனக் கடிதம் வந்தது. ஏற்கனவே அறிமுகமாகிய ரேடியோ மலாயா இந்தியப் பகுதித் தலைவர்  பாலாவிடம் சொல்வதற்குப் பச்சை வண்ண பெடரல் ஹவுஸ் (Federal House) கட்டடத்தின் ஐந்தாவது மாடிக்குப் போனேன். இனிமேல் தொடரப்போகும் மேல்நோக்கிய லிஃப்டுப் பயணமும் வேலைச் சிந்தனையும் சுகமாக இருந்தன. நான்கு மொழி வானொலி அலுவலகங்களும் ஐந்தாம் மாடியில் இருந்தன. உயரே ஆறாவது மாடியில் ஒலிபரப்பு, ஒலிப்பதிவுக் கூடங்கள். ஐந்தாம் மாடியின் ஒரு கோடியில்  நிர்வாகப் பிரிவு. அங்கே போய்க் கடிதத்தைக் கொடு என்றார் பாலா. சென்றேன். கட்டையான சிவப்பான இந்தியர் ஒருவர் விசாரித்தார். அலுவலகம் முடியும் நேரம். நாளை வருகிறேன் என்றேன். நாளைக்கு என்ன இன்றைக்கே சேர்ந்துவிடு, ஒரு நாள் சம்பளம் கூடக் கிடைக்கும் என்று அப்பொழுதே என்னை ஈர்த்துக்கொண்டார். ஒலிபரப்பு உதவியாளர் மூன்றாம் நிலை Broadcasting Assistant Grade III. சம்பளம் அலவன்ஸ் எல்லாம் சேர்ந்து சுமார் 250 வெள்ளி. இரண்டாம் மொழித் தேர்ச்சி இருப்பதால் ஊதியம் சற்று அதிகம்.

இப்படி ஒரு வேலையை ஜென்மத்திலும் நினைத்ததில்லை. பேச்சு, நடிப்பு, எழுத்து எல்லாம் இருந்தால்தான் வானொலியில் பேர் போடலாம். கொஞ்சம் எழுதத் தெரியும். மேடையில் பேசிய அனுபவம் உண்டு. வானொலியில் கவர்ச்சியாகப் பேச வருமா, செய்தி வாசிக்க முடியுமா என்ற தயக்கம் கொஞ்சம். வேலைக்காக ஒப்புக்கு இன்ட்டர்வ்யூ செய்தவர்கள் தாமஸ் மேத்தியூவும் ரெ.கார்த்திகேசுவும். இருவரும் அவரவர் பாணியில் இந்தியப் பகுதியின் இரு பெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த நேரம் அது. அவர்களை இரண்டு கண்ணின் மணிகளாகப் பார்த்துப் பரவசம் அடைந்தார் பாலா. கார்த்திகேசு அப்போதே ஏராளமான சிறுகதைகளை எழுதிக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்.

நான் சேர்ந்தபோது (ஆர். பாலகிருஷ்ணன்)பாலாதான் தலைவர். அவர் மலாயாப் பல்கலையின் தொடக்க காலப் பட்டதாரி. முகம்மது ஹனீப் நிகழ்ச்சி நிர்வாகி. மேத்தியூ, கேசு, கமலா, துளசி, புவனேஸ்வரி, தேவதாஸ், கிருஷ்ணன், எஸ். சி. நாகசாமி பாகவதர் (திரைப்பாடகர் எஸ். சி. கிருஷ்ணனின் அண்ணன்), கட்டைக் கவிஞர் கா. பெருமாள் ஆகியோர் இருந்தனர். எஸ். ஆர். எம். பழனியப்பன் (டாக்டர் ராம சுப்பையாவின் சகோதரர்) விளம்பரப் பிரிவுக்குச் சென்றுவிட்டார்.

நான் வந்த சில மாதங்களில் கா. பெருமாள் சிங்கப்பூர் வானொலிக்கு மாறிவிட்டார். சிங்கப்பூரிலிருந்து பைரோஜி நாராயணன் (நடிகர் ரவிச்சந்திரனின் அண்ணன்) இங்கு வந்து கொடிகட்டிப் பறந்தார். மைதீ அசன்கனி வானொலியில் நிரந்தரமாகச்  சேர்ந்து செய்திக்குக் கனிச்சுவை ஊட்டினார். கார்த்திகேசுவின் அண்ணன் பாடகர் ரெ. சண்முகமும் இணைந்தார். முறையான கல்விச் சான்றிதழ் இல்லாத திறமையான கலைஞர்கள் நிரந்தரப் பணியில் சேரும் அரிய வாய்ப்பை பாலா உருவாக்கிக் கொடுத்து அவர்கள் மனதில் இடம்பிடித்தார்.

புதிய வேலைக்குக் குரல், தயாரிப்புப் பயிற்சி என்று எதுவும் கிடையாது. தூக்கிக் குளத்தில் போட்டுவிட்டார்கள். நீந்திக் கரையேறு என்பதுதான் இதன் அர்த்தம்.

அறிவிப்பு, செய்தி வாசிப்பு, மொழிபெயர்ப்பு, நடிப்பு, நேரடி வருணனை, நிகழ்ச்சித் தயாரிப்பு, கலப்படம், வானொலி விழா என்று, பாடுவதைத் தவிர, எல்லாவற்றிலும் கைவரிசை காட்டினேன்.

ஆறு வருஷந்தான் என் வானொலி வாசம். பல யுகங்களைக் கழித்த மாதிரி ஒரு விசித்திர அனுபவம். 1963ல் மலேசியா உதயமானதும், 1965ல் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்ததும். 1967 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்து அண்ணாதுரை முதல்வர் ஆனதும் அந்த வானொலி வாசத்தில்தான் நடைபெற்றன.

அக்காலக்கட்டத்தில் நீங்கள் வளர்ந்த மலேசியா, சிங்கப்பூர் எப்படி இருந்தது?

வானொலி வாழ்க்கை நான் சற்றும் நினைத்துப் பார்க்காதது. ஆனால், மே கலவரம் நாட்டைத் திருப்பிப் போட்டுவிட்டது. மனதளவில் என்னை அது மிகவும் பாதித்தது. இதற்குக் காரணம் மலாய்க்காரர் அல்லாதவரின் துடுக்குத்தனமான போக்கு என்பதே நான் நேரில் கண்ட அனுபவம். எல்லாவற்றையும் எட்டிப் பிடித்துவிட்ட மாதிரி நடந்துகொண்டார்கள். தேர்தலில் சிலாங்கூர் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சிகள் சேர்ந்து சரிசமமான இடங்களை வென்றன. அவ்வளவுதான். காரணமில்லாத அந்தக் கற்பனையான எழுச்சியைத் தட்டி அடக்கி வைக்க சரியான தலைவன் அப்போது இல்லை என்பதே என் கணிப்பு. அன்றைய பிரமுகர் வி.டேவிட் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக்கொண்டார் என்று நினைக்கிறேன். ஊரடங்குச் சட்டம் கடுமையாக அனுசரிக்கப்பட்டது. வெளி நடமாட்டம் இல்லை. கோலாலம்பூர் ஆற்றில் சில பிணங்கள் மிதந்து போனதைப் பார்த்தேன். அந்த நேரத்தில் எதிர்த்தரப்புத் தலைவர்கள் சரியான கண்ணோட்டத்தில் செயல்பட்டிருந்தால் மலேசியாவின் அரசியல் போக்கே மாறியிருக்கும்.

பிரிக்பில்ட்சில் நான் தங்கியிருந்த அறையிலிருந்து எட்டிப் பார்த்தபோது கீழேயிருந்து சரவா ரேஞ்சர்ஸ் படைவீரர் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி ரவை அறை சுவரில் பாய்ந்து நைந்துபோனது. ரொம்ப நாளாக அதை ஞாபகச் சின்னமாக வைத்திருந்தோம். மே மாதக் கலவரத்துக்குச் சற்று முன்புதான் தொலைக்காட்சியில் ‘நாடும் நடப்பும்’ என்ற நடப்பு விவகார நிகழ்ச்சி முதல் தடவையாக முற்றும் தமிழில் அரங்கேறியது. நான்தான் நிகழ்ச்சிப் படைப்பாளர். தயாரிப்பாளர் தாமஸ் மேத்தியூ.  நிகழ்ச்சித் தலைப்பு தமிழ் எழுத்திலேயே மிக அழகாக இருக்கும். பிறகுதான் தமிழே தொலைக்காட்சியிலிருந்து அந்நியமானது. நாடும் நடப்பும் போய், பூபாலனுக்குப் புகழ் சேர்த்த’தும்புவான் மிங்கு’ என்று மறுபிறவி எடுத்தது.

சிங்கப்பூரைத் தமிழர்கள் அதிகம் விரும்பினார்கள் என்றே தெரிகிறது. குறிப்பாக, ஜப்பானியர் ஆதிக்கம் முடிந்த பிறகு இந்தியர்கள் அதிக அளவில் சிங்கப்பூருக்குக் குடியேறினார்கள்.

ஆய்வுத் துறையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது, குறிப்பாக இலக்கியம் , இதழியல் குறித்து?

தனியாக ஆர்வம் என்று எதுவும் இல்லை. ஒரு விஷயத்தைப் பற்றிக் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே என்னுடைய இயல்பு. அதைத் தேடிப்போகிறேன். அதுவே ஆய்வாக மாறிவிடுகிறது. அதை ஆய்வு என்பதைவிடத் தேடல், புரிதல் என்பதே பொருத்தம். டாக்டர் ராம சுப்பையா 1969ல் தமிழ் மலேசியானா பட்டியல் போட்டார் அல்லவா? அது என் தேடலுக்கு உந்துதல் கொடுத்தது. நம் இலக்கிய உதயத்தை 1887க்குக் கொண்டு சென்றது அது. அவ்வளவு பழைமையானது மலாயா இலக்கியம் என்பதே எனக்குப் புதுமையாக இருந்தது. பல பத்திரிகைகளின் பெயர்களும் அதில் இடம்பெற்றன. கதை, நாவல் என்று விழுந்து விழுந்து படித்தேனே தவிர கதை எழுதவேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதில்லை. வரலாறு சார்ந்த கட்டுரை எழுதுவதில் ஒரு நாட்டம் இருந்தது. புதிய விஷயங்களைத் தோண்டிப் பார்க்க வேண்டும் என்ற தணியாத மோகம் பிறந்தது. ரேடியோ மலாயாவில் வேலை செய்தபோது நான் சந்தித்த பலரும் 1940க்கு முன்பு மலேசிய இலக்கியம் என எதுவுமே பெரிதாய்க் கிடையாது என்ற தோரணையில்தான் பேசுவார்கள். தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களும் துணையாசிரியர்களும் பெரும்பாலும் முருகு சுப்பிரமணியன், தி. செல்வகணபதி, எம். துரைராஜ், சுப நாராயணன் போன்ற தமிழ்நாட்டு வரவுகள். அவர்களுக்குப் பழைய இலக்கியம் பற்றித் தெரியாது. சி. வீ. குப்புசாமி மட்டும் ஏதாவது சொல்வார். கார்த்திகேசு, சந்திரகாந்தம் போன்றவர்களும் வரலாற்றுச் சங்கதிகள் பற்றிப் பேசமாட்டார்கள்.

எல்லாருக்கும் தெரிந்த விஷயம் ஜப்பானியர் ஆதிக்கம். ஜப்பான்காரக் காலத்து கஷ்டங்களைச் சொல்வார்கள். அவை இன்னமும் மக்களின் மனத்தில் பசுமையாக இருந்தன.’தமிழ் நேசன்’ வந்து கொண்டிருந்தது. அது 1924ல் வெளியானது என்றுகூட எனக்குbala 05 அப்போது தெரியாது. எனவே ‘தமிழ் மலேசியானா’ பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள் எல்லாருக்குமே ஒரு புதிய திறப்பைக் காட்டியது. ராம சுப்பையாவும் அகாலமாக 1969ல் 39 வயதில் கார் விபத்தில் காலமானார். தனிநாயகம் அடிகள் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அடிகளார் இந்நாட்டுத் தமிழ் இலக்கியம் பற்றி ஆழ்ந்த பார்வை கொண்டிருக்கவில்லை. ராம சுப்பையா மட்டும் தொடர்ந்து நீடித்திருந்தால் மலேசியத் தமிழிலக்கியம் சரியான பாதையில் போயிருக்கும். செஜாரா மெலாயு என்ற பழைய இலக்கிய வரலாற்றை மலாக்கா மன்னர்கள் வரலாறு என்று அவர் மொழிபெயர்த்துப் பல்கலை இந்திய இயல் துறையின் சார்பில் வெளியிட்டது ஒரு முக்கிய நிகழ்வு.  பல்கலை மாணவர் வி. ராமச்சந்திரன் என்பவர் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முழுமையான வரலாற்றை முதுகலை ஆய்வுக்கு எழுத முயன்று விட்டுவிட்டார். டாக்டர் தண்டாயுதம்கூட சிறுகதை, நாவல், இதழியல் பற்றி மேலோட்டமாகச் சில கட்டுரைகளையே எழுத முடிந்தது.  விரிவுரையாளர் ந. லோகநாயகி சில கட்டுரைகள் படைத்தார். பல்கலை மாணவர்களும் பொருத்தமான மேற்பார்வையாளர் கிடைப்பாரா என்பதைத்தான் முதலில் கவனிப்பார்கள். இலங்கையைப் போல நம் தமிழ்ப் பத்திரிகைகள் நிறைய ஆய்வுக்கட்டுரைகளை வாங்கிப் போட்டிருக்க வேண்டும். இன்றைக்கும் அந்த சூனியம் நீடிக்கிறது.

பழைய தமிழ் இலக்கியம்தான் நமக்கு அறிமுகமான ஒன்று. அவற்றை எல்லாம் வாங்கி இயன்றவரை படித்தேன். வானொலி நிகழ்ச்சிகளுக்கு நன்றாகப் பயன்படுத்திக்கொண்டேன். இலக்கியமயமாக எழுதுவதுதான் உயர்வு என்ற சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். அதுதான் அன்றைய கவர்ச்சி. இலக்கிய நாடகங்கள் எழுதினேன். பைரோஜி நாராயணன் எங்களுடன் வானொலியில் வேலை செய்தபோது ‘கதை வகுப்பு’ பற்றிச் சொல்வார். அவரும் சுப நாராயணனும் சேர்ந்துதான் கதை வகுப்பு நடத்தினர். நான் கேட்ட பிறகு ‘கதை வகுப்பு’ பற்றி ஒரு நினைவுக் கட்டுரை எழுதி வானொலியில் பேசினார். வேறு யாரும் வானொலியில் ஆய்வு பற்றி மூச்சு விடுவதில்லை. காரர்த்திகேசு வேலை செய்தபோதுகூட ஆராய்ச்சி பற்றி எதுவும் பேசமாட்டார்.  கதை வகுப்பு என்ற சொற்கள் மட்டும் அனைவருக்கும் தெரிந்த ஒரு தொடராக ஆகிவிட்டது. அயலக எழுத்தாளர்கள்கூட அதைப்பற்றித் தொட்டுப் பேசுவதுண்டு. கதை வகுப்பு பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை என்பதை நான் விளக்கியிருக்கிறேன். செய்ய நினைத்தது ஒன்று செய்தது வேறொன்று என்பதே அதற்குக் காரணம்.

முதுகலைப் பட்டத்திற்காக நீங்கள் மலேசியச் சிறுகதைகள் பற்றிய ஆய்வுசெய்யத் தொடங்கியபோது, அதற்கான அடிப்படைத் தரவுகளையும் மற்ற தகவல்களையும் எவ்வாறு திரட்டினீர்கள்? ஏனெனில் அவை கிடைப்பதுதான் இங்குள்ள பெரிய சவால். பல்கலைக்கழகங்கள், அமைப்புகளிடம் தகவல்கள், ஆவணங்களின் சேமிப்பு இல்லை. தனிப்பட்ட மனிதர்கள் வைத்திருந்தால்தான் உண்டு. அல்லது பிரிட்டிஷ் நூலகம் போன்றவற்றை நாட வேண்டும். அதற்கு பெரும் செலவாகும். எப்படிச் சமாளித்தீர்கள்?

நம் எழுத்தாளர்கள் என் ஆய்வில் ஆரம்பத்திலிருந்தே அக்கறை கொண்டார்கள். எழுத்தாளர்கள் என்று பார்க்கும்போது பெரும்பாலோர் அடிப்படையில் சிறுகதை எழுதியவர்களே. தங்களிடம் இருந்த நூல்கள், எழுதிய கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைக் கொடுத்தார்கள். தகவல் திரட்டும் வகையில்தான் முன்னோடி முயற்சியாகப் பல்கலையில் சிறுகதைக் கருத்தரங்கு நடத்துவதற்கு அப்போதைய இந்தியப் பகுதித் தலைவர் ச.சிங்காரவேலு முன்வந்தார். இரண்டு நாள் கருத்தரங்கு 1978 ஏப்ரல் மாதம் நடைபெற்றது. டாக்டர் தண்டாயுதம், ரெ. கார்த்திகேசு, சி. வடிவேல், இராம வீரசிங்கம், வி. பூபாலன் ஆகியோருடன் நானும் கட்டுரைகள் படைத்தேன். தமிழ் எழுத்தாளர்கள் பலர் முதன்முறையகாப் பல்கலை வளாகத்திற்குள் அடியெடுத்து வைத்தனர். அப்படி ஒரு கருத்தரங்கு அதற்குமுன் நடந்ததில்லை. திரட்டிய சிறுகதை நூல்களைக் காட்சிக்கு வைத்தோம். அதுவே புதுமையாக இருந்தது. பல புதிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிச்சத்துக்கு வந்தன. பைரோஜி நாராயணன், சா.ஆ.அன்பானந்தன், மு.அப்துல் லத்தீப், சி.வடிவேல் போன்றவர்கள் தாராளமாக உதவி செய்தார்கள். மா.ராமையாவின் இலக்கிய வரலாறு புத்தகம் வெளியாகி இருந்தது. அவர் 1950க்கு முன்பு உருப்படியாக எதுவும் கிடையாது என்ற சிந்தனையில் ஊறிப்போனவர். நான் பயன்படுத்திய சுமார் 70 சிறுகதை நூல்களின் பட்டியலை என் ஆங்கில ஆய்வு நூலில் பின் இணைப்பாகக் கொடுத்திருக்கிறேன்.

என் மேற்பார்வையாளர் டாக்டர் தண்டாயுதம். அவர் டாக்டர் மு. வ அவர்களின் சீடர். பிரிட்டிஷ் நூலகத்துக்குத்தான் நாம் முதலில் காவடி தூக்கவேண்டும் என்ற சங்கதி அவருக்குத் தெரியவில்லை. வேறு யாரும் எனக்குத் தெளிவாகச் சொல்லவும் இல்லை. ராம சுப்பையா இருந்திருந்தால் கதையே வேறு. அவரும் மாணவர்கள் சிலரும் பினாங்கிலிருந்து சிங்கப்பூர் வரை பயணம் புரிந்து பலரைச் சந்தித்துப் புத்தகங்கள், பத்திரிகைகள் திரட்டி வந்தனர். அதன் விளைவுதான் தமிழ் மலேசியானா பட்டியல்.

தமிழ் மலேசியானாவில் இடம்பெற்ற பல நூல்கள், பத்திரிகைகள் எல்லாம் நாலா பக்கமும் சிதறிப் போய்விட்டன. பாடுபட்டுத் தேடிய செல்வம் பறிபோனது. ஆனால ராம சுப்பையா சிலவற்றை நுண்படம் எடுத்துப் பல்கலைக்கழக நூலகத்தில் வைத்திருந்தார். பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து சில பத்திரிகைகளின் நுண்படச் சுருள் பிரதிகளைக் கொண்டு வந்து இங்கு வைத்தார். பல்கலைக்கழகத்தில் அப்படி ஒரு பத்திரிகைப் பட்டியல் உள்ளது என்பது இன்றைய ஆசாமிகள் யாருக்குமே தெரியாது. தெரிந்திருந்தால் அவற்றைப் பயன்படுத்தி இருப்பார்களே!

பல்கலையில் அப்போது எல்லாம் Card Index தான். கணினி கிடையாது. அவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் உருவி வரிசையாகப் பார்த்துத் தீருவது என்ற வைராக்கியத்தில் நான் ஒவ்வொரு பெட்டியாக இழுத்துக் கார்டுகளைப் பார்த்து வந்தபோதுதான் பழைய பத்திரிகைகளின் குறிப்பு திடீரென்று தென்பட்டது. புதையல் கிடைத்த மாதிரி இருந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. என் ஆராய்ச்சிக் காலத்தில் நான் அடைந்த உச்சக்கட்ட சந்தோஷ உணர்வு இதுதான். இந்து நேசன், உலக நேசன் இருந்தன. இரண்டும் 1887க்கு உரியவை. இவை முழுமையாக இல்லை. அதோடு 1930களில் வெளியான சுமார் இருபது பத்திரிகைகள் இருந்தன. அவை ஓரளவுக்கு முழுமையாக இருந்தன.

பின்னர் சிங்கப்பூர் நூலகத்துக்கு வந்து சிங்கை நேசன், தமிழ் முரசு பத்திரிகைகளைப் பார்த்தேன். பிரிட்டிஷ் நூலகத்துக்கு நான் போகவில்லை. இந்த அளவில் இதுவே போதும் என்று முடிவு செய்துவிட்டேன். போகவேண்டும் என்றால் உதவித்தொகை வாங்கிப் போய் வரலாம். போக வேண்டிய அவசியம் குறைந்துவிட்டது.

1930களின் பத்திரிகைகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலுமே சிறுகதைகள்இடம்பெற்றன. சிறுகதைகள் எழுதப்பட ஆரம்பித்து, அவை குவிந்த நேரம் அதுதான். எல்லாவற்றையும் படித்தேன். குறிப்புகள் எடுத்தேன். இது சிறுகதையின் வரலாற்றுப் போக்கை நன்றாக அறிந்துகொள்ள உதவியது.

சிறுகதை ஆய்வு என்று தொடங்கியபோது என்ன தலைப்பில் செய்வது என்று ஒரு குழப்பம். சிறுகதை எங்கே தொடங்கியது எப்படி போனது என்றே தெரியாது. வெளியான சிறுகதைத் தொகுப்புகள் மட்டும் சிறியதும் பெரியதுமாக எழுபது. இவற்றில் சுமார் 600 கதைகள் இருந்தன. 1946 முதல் 1979 வரை வந்தவை இவை.

பத்திரிகைகளிலும் நிறைய கதைகள் வந்துகொண்டிருந்தன. அப்போது பத்திரிகையின் அடையாளமே சிறுகதைதான். சிறுகதை எழுத்தாளர்கள்தாம் புகழ்பெற்ற எழுத்தாளர்களாக அறியப்பட்டார்கள். எப்படி வரையறுப்பது என்பது ஒரு சிக்கலாக இருந்தது. தண்டாயுதத்தால் சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை. தயங்கினார். என் அயலக மேற்பார்வையாளர் முற்போக்குச் சிந்தனையாளர் டாக்டர் கைலாசபதி. அவர் கோலாலம்பூரில் பிறந்து இளமைக் கல்வியை இங்கேயே முடித்துக் கொண்டு உயர்கல்விக்காக இலங்கை சென்றவர். அப்போதே அவர் தமிழ் நேசனில் ஒரு கட்டுரை எழுதியிருப்பதைக் கண்டேன். என்னுடய ஆய்வை அவரும் பார்த்துத் தீர்ப்பளிக்க வேண்டும். அவர் அவ்வப்போது நம் பல்கலைக்கழகத்துக்கு வருவார். அவரை இரண்டு முறை சந்தித்து இங்குள்ள சிறுகதை நிலவரத்தை எடுத்துச் சொன்னேன். பத்திரிகைக் கதைகளைச் சேர்க்க வேண்டியதில்லை. தொகுப்புகளில் உள்ள கதைகளே போதும். அவற்றை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டு எழுதிவிடு என்றார். ஒரு தீர்க்கமான முடிவு கிடைத்தது. தண்டாயுதமும் ஏற்றுக்கொண்டார்.

1930களின் கதைகள் தரத்தில் குறைந்தவை என்பதில் சந்தேகமில்லை. எல்லாரும் புதிதாகக் கதை எழுதவந்தவர்கள். பெரும்பாலும் ஆர்வத்தில் துள்ளிய இளைஞர். பெயரைப் பத்திரிகையில் பார்த்து ஆனந்தம் அடையும் கட்டம் அப்போதுதான் அரும்பியது. ஆனால் அதில்தான் நம் கதைகளின் வரலாறு இருக்கிறது. எப்படி எழுதுகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க எதை எதையெல்லாம் தொட்டு எழுதுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினேன். நம் வரலாறு அதில்தான் அடங்கியுள்ளது. கதைகள் தோன்றிய விதமும் இடம்பெற்ற பத்திரிகைகளின் பின்னணியும் அவற்றை நடத்திய ஆசிரியர்களின் போக்கும் சுவையாக இருந்தன. அந்தக் கதைகளைப் படித்தபிறகு ஆர்வம் கரைபுரண்டு ஓடியது. ஒரு நீண்ட கட்டுரை எழுதி முடித்தேன். விரிவான அடிக்குறிப்பு போட்டேன். ஒவ்வொரு பத்திரிகையும் எப்போது உதயமானது, எவ்வளவு காலம் நீடித்தது என்ற தேதியைக் குறிப்பிட்டேன். பலவற்றையும் முதன்முறையாக ஆய்வுலகில் சொல்வதால் அதிக கவனம் எடுத்துக்கொண்டு செய்தேன்.

உங்கள் ஆய்வுக்குத் துணையாக இருந்த ஆளுமை யாரையேனும் நினைவுகூர முடியுமா?

எழுத்தாளர் சி.வீ. குப்புசாமி இங்குப் பிறந்தவர். தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளியில் படித்து ஆங்கிலப் பள்ளிக்கு மாறி அந்தக் காலத்திலேயே சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். ரயில்வே துறையில் பணியாற்ற பயிற்சி பெற்றவர். பழைய இலக்கியச் சூழலில் வாழ்ந்தவர். பக்கா முற்போக்குவாதி. பெரியார் ராமசாமியின் பக்தர். சாரங்கபாணியைப் போல. கோ. சாரங்கபாணியுடன் நெருங்கிய தோழமை கொண்டவர்சீர்திருத்தத் திருமணம் புரிந்து கொண்ட குப்புசாமி. சில சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.  தமிழ் முரசிலும் அவர் ஒரு கட்டத்தில் துணையாசிரியராக இருந்திருக்கிறார். பிறகு மலேசியத் தகவல் இலாக்காப் பத்திரிகைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். ஜப்பான்காரன் காலத்தில் சிங்கப்பூரில் வந்த இரண்டு மூன்று தமிழ் இதழ்களுக்கு அவர் ஆசிரியர். அவற்றில் நிறைய கதைகளைப் போட்டார் அவர். அந்தப் பத்திரிகைகளைத் தொகுத்தும் வைத்திருந்தார். அவரைப் பற்றி யாரோ ஜப்பானியரிடம் புகார் சொல்ல ஜப்பானியர் அவரை இழுத்துக்கொண்டு போய் அடித்துப் பலவகையாகச் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தினர். அந்தத் துயரங்களையே ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள்என்று ஒரு சிறு நூலாகப் பின்னர் எழுதினார். அந்த 42 பக்க நூல் 1946ல் சிங்கப்பூரில்தான் அச்சாகி வெளியிடப்பட்டது. இன்னொரு அபத்தம் என்னவென்றால், வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு அந்த ஆட்சியும் குப்புசாமியைப் பிடித்துச் சிறையில் போட்டு அவஸ்தைப்படுத்தியது. அதனால் அவர் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. நேதாஜிக்கு ஆதரவாக இருந்த முக்கிய இந்தியப் புள்ளிகள் கைதாகினர். அவர்களில் குப்புசாமியும் ஒருவர். கோ. சாரங்கபாணியும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுப் பின்னர் விடுதலையானார்.

சி. வீ. குப்புசாமி காலமான பிறகு சா. ஆ. அன்பானந்தனுடன் ஒருநாள் நானும் தண்டாயுதமும் அவருடைய வீட்டுக்குப்போய் பழைய பத்திரிகைகள் சிலவற்றைக் கொண்டு வந்தோம். அதிலிருந்த குடிஅரசு, மணிக்கொடி தொகுப்புகளைத் தண்டாயுதம் எடுத்துக்கொண்டார். என்னுடைய ஜப்பானியர் காலத் தமிழ்ச் சிறுகதைகள் கட்டுரை குப்புசாமி தயவினால் உருவானதுதான். இந்தக் கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் எழுதி Department Seminar-ல் வாசித்தேன்.பல்கலைத் தமிழ்ஒளி ஆய்வு மலரில் அது இடம்பெற்றது. பிறகு தமிழில் அசலாக ஒரு கட்டுரை எழுதினேன். ஆகவே 1930 முதல் 1945  வரை நம் சிறுகதை வரலாற்றைத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்தும் இரண்டு கட்டுரைகளும் தயார். 100 பக்கத்துக்கு நூலாகப் போடலாம் என்று யோசித்து சில பக்கம் அடித்துச் சோதித்துப் பார்த்தேன். ஆய்வில் தீவிர கவனம் போகவே அதை முடிப்பதில் இறங்கி இதைத் தள்ளிப் போட்டுவிட்டேன். மடத்தனமான முடிவு இது. பிறகு 1995ல்தான் இந்த இரண்டு கட்டுரைகளும் சேர்ந்து மலேசியத் தமிழ்ச் சிறுகதைஎன்ற நூலாக வந்தது.

இந்த நூலில் ஆதாரங்களைத் துல்லியமாகக் கொடுத்தேன். இதுவரை வேறு எங்கும் காண முடியாத பல பத்திரிகைகளின் விவரங்கள் என்னுடைய இந்த நூலில் மட்டுமே உண்டு. சிறுகதை வரலாறு, பத்திரிகை வரலாறு இரண்டுக்கும் உதவும் வகையில், சமூக வரலாற்றையும் இணைத்துக் கொண்டு எழுதப்பட்ட அடிப்படைஆதார நூல் இது. மலேசியத் தமிழ்ப் பத்திரிகை வரலாறு எழுதுபவர்களுக்கும் இந்த நூல் ஒரு சுரங்கம். இருபதுக்கும் அதிகமான பத்திரிகைகளின் விவரங்களை இதில் காணலாம்.

என் முதுகலை ஆய்வு ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டது. ஆங்கில ஆய்வு நூல் 2006ல் அச்சில் வந்தது. Malaysian Tamil Short Stories 1930–1980 : A Critical Study என்பது தலைப்பு. தண்டாயுதம் அப்போது இல்லை. காலமாகிவிட்டார்.

தமிழில், மலேசியாவின், சிங்கப்பூரின் முதல் சிறுகதை குறித்த உங்களது தீர்க்கமான முடிவு என்ன? எந்த அடிப்படையில் இதனை முன்வைக்கிறீர்கள்?

இதில் புதிதாக சொல்வதற்கு எதுவுமில்லை. மகுதூம் சாயபு எழுதியது சிறுகதையே இல்லை. சிங்கப்பூர் தேசிய நூலகக் கருத்தரங்கில் வாசித்த என் கட்டுரையில் இது குறித்து விரிவாக எழுதிவிட்டேன். 1880களில் தமிழ்நாட்டில்கூடச் சிறுகதைகள் முனைப்பாக வரவில்லை. 1876ல் தமிழின் முதல் நாவலாகக் கருதப்படும் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம்வெளியானது.

வினோத சம்பாஷணை என்று தலைப்பிட்டு மகுதூம் சாயபு மொத்தம் ஐந்து உரையாடல்களை எழுதினார். இந்த உரையாடலால் என்ன நன்மை என்று ‘சம்பாஷணைப் பிரியர்’ என்ற புனைபெயரில் ஒருவர் சிங்கை நேசனில் கேள்வி கேட்டிருந்தார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சாயபுவே இந்தப் பெயரில் கேள்விகேட்டு விளக்கம் எழுதியிருப்பார் என்பதைப் புரிந்துகொள்வது சிரமம் அன்று. அவர் பதில் பின்வருமாறு அமைந்தது,

‘சம்பாஷணைப் பிரியரே, இங்கிலீசிலே அநேகnovelsநூதனக் கட்டுரைகள் பார்த்திருக்கிறீர்களா? அவை பல விஷயங்களையுட்பொதிந்து, பற்பல பாஷை நடையிலே எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை வாசித்து வருகையில், இங்கிலீஷ் நடை நன்றாகக் கற்றுக்கொள்ளலாம். தமிழிலேயும் அப்படிக் கட்டுக்கதைகள் இருந்தும், சிங்கப்பூர்த் தமிழைப் பிறதேசத்தார் அறியும் பொருட்டே, ஒரு சம்பாஷணையாக எழுதத் தொடங்கினோம். சிங்கப்பூரிலே பேசப்படும் தமிழில் மலாய், சீனம், இந்தி முதலிய பாஷைச் சொற்கள் அதிகம் கலந்து வருவதால், மேற்படி சம்பாஷணைகளை நன்றாய்க் கவனித்து வருகிறவர்கள், மிக வெகுவிலே, சிங்கப்பூர்த் தமிழை விளங்கிக் கொள்வார்கள். இந்த சம்பாஷணைகள் அடங்கிய புஸ்தகத்திற்கு A Novel in Singapore Tamil  என்று பெயர் வைத்திருக்கிறோம். குசினிக்காரன் முதல் பக்கிரிக்குட்டி ஈறாகிய பெயர்கள் எல்லாம் வீண் பெயர்கள், ‘imaginary names’. என்கிறார் சாயபு. ஐந்து சம்பாஷணைகள் எழுதிய சாயபு நான்காவது சம்பாஷணைக்கு மட்டுமே A Novel in Singapore Tamil என்று பெயர் கொடுத்தார்.

அப்படி ஒரு புத்தகம் வரவில்லை. புத்தகம் போடலாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கிறார். ‘தமிழிலேயும் அப்படிக் கட்டுக்கதைகள் இருந்தும்’ என்று சாயபு சொல்வதால் அதைத்தானே தமிழின் முதல் சிறுகதையாகக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு சாயபு பிற்காலத்தில் எழுதியதை எப்படி முதல் சிறுகதையாக ஏற்க முடியும்? சிறுகதை என்ற சொல் பிரயோகமே இதில் வரவில்லை. நா.கோவிந்தசாமி தானாகவே சிறுகதை என்ற சொல்லைக்கொண்டு வந்து நுழைத்துக் குழப்பிவிட்டார். சிங்கப்பூர்த் தமிழைப் புரிந்துகொள்ள சாயபு எழுதியதைச் சிறுகதையாக ஏற்றுக் கொள்கிறார் நா.கோ. இது மிகவும் விந்தையாகத்தான் உள்ளது. நம் முதல் சிறுகதை எந்த ஆண்டில் வந்தால் என்ன? கற்காலத்தில் வந்தது என்றால் அதன் மதிப்பு கூடிவிடுமா? தற்காலத்தில் வந்தது என்றால் குறைந்துவிடுமா?

நா.கோவிந்தசாமி இன்னும் பல படிகள் மேலே போய், எட்கர் ஆலன் போ, பிராண்டர் மேத்தியூஸ் போன்றோரின் சிறுகதை இலக்கணத்தைப்  பெற்று மிகச் சிறப்பாகச் சிங்கப்பூர்த் தமிழில் இது எழுதப்பட்டுள்ளது என்று சொல்கிறார். இது மிகவும் அதிக பிரசங்கித்தனமானது. அந்த இலக்கணத்தின் கூறுகளை சாயபு எப்படி காட்டியிருக்கிறார் என்று நா.கோ கண்டிப்பாக விளக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் சகட்டு மேனிக்கு எதையோ அடித்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.இது ஓர் இலக்கிய அநீதி.

உங்கள் பார்வையில் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியம் எப்படி உள்ளது?

bala 06பலவிதமான இடையூறுகளுக்கிடையில் இலக்கியப் படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பத்திரிகைகள், பருவ இதழ்கள் மூலம் முன்பு இலக்கியம் பெருகியது. இப்போது புதிய கணினி ஊடகம் தரமான இலக்கியப் படைப்புகளை வளர்க்காவிட்டாலும் இலக்கிய ரசனையை ஓரளவு வளர்க்கிறது என்று சொல்லலாம். பத்திரிகைகளில் இலக்கியத்துக்கு முன்புபோல இடமில்லை. இலக்கியத்துக்காக இதழ்களும் வருவதில்லை. இது ஒரு பெரிய குறை. ஏழை எழுத்தாளர்கள் காசு பணமின்றிக் கஷ்டப்பட்டு சஞ்சிகைகளை நடத்திய காலம் அன்று. இன்று எழுத்தாளர்களிடம் பணம் தாராளமாகப் புழங்கினாலும் படைப்புகளுக்கு முதன்மை தரும் சஞ்சிகைகள் அதிகம் வரக்காணோம். புத்தக வெளியீடு அதிகமாகியுள்ளது. எழுதத் துடிப்பவர்கள் எப்படியும் எதையாவது எழுதிக் கொண்டுதான் இருப்பார்கள், இருக்கிறார்கள்.

இலக்கியத்தின் ஒரு கூறான நல்ல ஆராய்ச்சிகளுக்குத்தான் பஞ்சம். மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு எல்லாவிடங்களிலும்  இலக்கிய முயற்சிகள் காத்திரமாக இல்லை என்பது பெரிய குறை. கணினித் தமிழ் வந்து உரைநடைப் பாணியை மாற்றிவிட்டது. ஜெயமோகன் இதற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு. அவருடைய புனைகதையின் நடை சுவையான செய்திக் கட்டுரை போலவே இருப்பதாக நான் பல சமயம் உணர்ந்ததுண்டு.உழைப்புக்கும் ஒழுக்கத்துக்கும் திறமைக்கும் எங்கும் மதிப்பில்லை என்றாகிவிட்டது. அரசியல்தான் பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா (தமிழ்நாடு) மூன்று நாடுகளிலும் மூன்று விதமான அரசியல். மூன்று நாட்டுத் தமிழர்களும் இப்போது மூன்று மாதிரியாக இருக்கிறார்கள். எது எப்படியாவது போகட்டும். கல்வித்துறை எப்படி இருக்கிறது என்பதே நமது முதல் கவலை. கல்வித்தரம் அதளபாதாளத்துக்குப் போய்விட்டது. இது மிக மிகப் பரிதாபமான வீழ்ச்சி. அக்கறை கொண்டவர்கள் இதைப் பேசிப் பேசி அலுத்துவிட்டார்கள். தமிழ்நாடு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். இல்லாமல் போய்விட்டது. ஆராய்ச்சி போலித்தனமாக இருக்கிறது. கஷ்டம் இல்லாமல் பட்டம் வாங்கிப் பேராசிரியர் பதவியில் அமர்ந்து நன்றாக சம்பாதிக்கிறார்கள். நல்ல பென்ஷன் வாங்கி அனுபவிக்கிறார்கள். போகட்டும்.

தொடர்ந்து ஆர்வத்துடன் ஆய்வுகளை மேற்கொள்ள உங்களுக்கு உந்துதலாக இருப்பது எது? எங்கிருந்து எப்படி இந்த ஆதாரங்களையும் தரவுகளையும் தேடிப்பிடிக்கிறீர்கள்? தற்போது நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் ஆய்வுகள் பற்றி கூறுங்கள்?

பிறந்து வளர்ந்தபோது உந்துதல் இருந்தது. வளர்ந்து முடியும் கட்டத்திலும் உந்துதல் நீடிக்கிறது என்பதே என் வாழ்க்கை. இருநூறு ஆண்டுகளாகப் போகிறது இந்த வட்டாரத்திற்குத் தமிழர்கள் வந்து. அவர்களின் வாழ்வுப் பாதை வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு வித்தியாசமான தடம். அதை இதுவரை யாரும் சரியாக ஆதாரபூர்வமாக உண்மையாக எடுத்துச் சொல்லவில்லையே என்ற ஏக்கமும் ஏமாற்றமும் என்னிடம் எப்போதும் உண்டு. நமக்கு அறிவு போதாது. உழைப்புப் போதாது. உண்மையை உணர்ந்துகொள்ளத் துடிக்கும் வெறி போதாது. நம் வரலாற்றை நாம் உதாசீனப்படுத்தி வருகிறோம். இன்னும் இந்த வாழ்வைப் பதிந்து வைக்கவில்லையென்றால் வேறு யார் இனிமேல் வந்து செய்யப்போகிறார்கள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.

இலக்கியம் நடந்து சென்ற பாதையில்தான் என் பார்வை இப்போதைக்குப் படிந்திருக்கிறது. இது ஒரு தடம். இதற்கும் மேலாகப் பல தடங்கள இருக்கின்றன. சமூக வாழ்வு, பொருளாதாரப் போக்கு, கல்வி வளர்ச்சி, சமய உணர்வு, அரசியல் எழுச்சி, சமூகத் தலைவர்களின் பரம்பரை, மற்ற இன உறவு, தமிழ்நாட்டு நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்பு என்று பல தடங்களிலும் நம் வாழ்வைப் பார்க்க வேண்டும். உப்புச் சப்பற்ற வேலையல்ல இது பொறுப்புமிக்கது. ஆசையோடும் ஆர்வத்தோடும் தேடினால் எல்லையற்ற  ஒரு சுகம், திருப்தி கிடைக்கும்.

தரவுகளுக்குப் பஞ்சமேயில்லை. தேசிய ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள் இப்போது வளமான தகவல்களைச் சேர்த்து வைத்துள்ளன. இணையத்தின் மூலமாகவே ஏராளமான தகவல்களைப் பெறலாம். அல்லது எது எங்கிருக்கிறது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம். நமக்கு லண்டன் நூல்நிலையங்கள்தான் சொர்க்கம். முயன்றால் எவ்வளவோ கிடைக்கும். உ.வே.சாமிநாதையர் மாதிரி இந்தக் காலத்தில் யாரும் சிரமப்பட வேண்டியதில்லை. வெள்ளைக்காரன் நிர்வாகம் எழுதி எழுதியே கை தேய்ந்துபோன ஒரு அரசாங்கம். 1880களில்தான் தட்டச்சுப்பொறி தோன்றியது. அதற்குமுன் கையால் நீட்டி நீட்டி எழுதப்பட்ட கோப்புகளைப் படித்துப் புரிந்துகொள்வது வெள்ளையர் அல்லாத மற்றவர்க்குச் சிரமமாகவே இருந்திருக்கும். நானே அத்தகைய சில ஆவணங்களைக் கண்டு படிக்கமுடியாமல் திணறிப் போனேன்.

இப்போது பல கோப்புகளுக்குப் பொருளடக்கம், குறுக்குத் தேடல் (index, cross reference)  போன்ற வசதிகள் உள்ளன. இன்றைய நூலக அதிகாரிகளும் பணியாளர்களும் ஆய்வாளர்க்கு வழிகாட்டுவதில் திறமையானவர்கள். பயிற்சி பெற்றவர்கள். பல்கலைக் கழகம் என்றால் ஒரு நல்ல மேற்பார்வையாளர் கிடைக்க வேண்டும். ஆராய்ச்சி செய்யும் மாணவர்க்குத் தயங்காமல் சுயநலமின்றி உதவ வேண்டும். அதுதான் முக்கியம்.

இப்போது என் பாணி, ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு ஆதாரம் தேடி அதற்குக் கட்டுரையோ நூலோ எழுதுவதில்லை. வேலையில் இருந்தபோதே விஷயங்களைப் படித்தும் நூலகம் சென்றும் தகவல் திரட்டி அப்படியே வைத்திருக்கிறேன். அவற்றில் எல்லாவிதமான சங்கதிகளும் உண்டு. புத்தகம் என்று வரும்போது தேவையான தகவல்களை ஒன்று சேர்த்து மேலும் ஆய்வு செய்து எழுதி முடிக்கிறேன். உதாரணமாகப் பத்திரிகை பற்றித் தகவல் சேகரிக்க வேண்டும் என்றால் யார் அதற்கான தகவலை மட்டும் தனியாக எழுதி வைப்பர். பழைய பத்திரிகைகளைப் படிக்கும்போது எல்லாவித தகவல்களும்தான் கிடைக்கும். சுவையானவற்றைக் குறிப்பு எடுத்துக்கொள்வேன். பிறகு தொகுத்துக்கொள்வேன்.

முதலில் என் நாட்டம் தமிழ்ப் பத்திரிகை வரலாறு. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஆங்கில, மலாய், சீனப் பத்திரிகைகளின் வரலாறு அற்புதமாக இருக்கிறது. தமிழ்தான் நோஞ்சான். சவலை. எஞ்சியுள்ள அந்த ஓட்டையை அடைக்க வேண்டும் என்பதற்காகவும் இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். இந்த ஆண்டில் Tamil Journalsim in Singapore and Malaysia 1875-1941: Filling up the Gap என்ற நூல் வந்துவிடும்.

1875இல் சிங்கப்பூரில் சிங்கை வர்த்தமானி என்ற பத்திரிகை வந்தது. அதுதான் தொடக்கம். பினாங்கில் 1883ல் வித்தியா விசாரிணி  என்ற பத்திரிகை வந்தது. மலேசியாவுக்கு அதுதான் தொடக்கம். உண்மையில் பார்த்தால் சிங்கப்பூர், மலாக்கா, பினாங்கு மூன்றும் Straits Settlements என்ற அமைப்பிலேயே1946 வரை ஒன்றாகச் சேர்த்திருந்தன. பிறகுதான் மலாயா, மலேசியா உதயமாகின. 1941 எல்லை என்பது ஜப்பானியர் வரவை ஒட்டிய வருஷம். இந்தக் காலக்கட்டத்தில் நான் அறிந்தவரை சிங்கப்பூரில் ஐம்பதும் மலாயாவில் அறுபதுமாகத் தமிழ் ஏடுகள் வந்துள்ளன. இவற்றுள் இன்றும் நீடிக்கும் பத்திரிகைகள் தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகிய இரண்டு மட்டுமே என்பதை அறிவோம்.  1924ல் உதயமான தமிழ் நேசன் இன்னும் ஏழாண்டில் நூற்றாண்டை எட்டப் போகிறது. 1935ல் தோன்றிய தமிழ் முரசு இன்னும் பதினெட்டு ஆண்டில் நூறாண்டை எட்டும். இந்த இரண்டு நிகழ்வுகளையும் சமூக நிகழ்வுகளாகப் பிரமாதமாய் கொண்டாடவேண்டும்.

எல்லா இதழ்களும் கிடைத்துவிடவில்லை. சிலவற்றுக்குத் தலைப்பு மட்டுமே தெரிகிறது. சில இதழ்களின் சில பிரதிகள் மட்டுமே இங்குக் கிடைக்கின்றன. மீதி பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் பத்திரிகைகளின் தலைப்பு, இவற்றின் ஆசிரியர்கள், பத்திரிகை தோன்றிய இடம், காலம், சூழல் என்ற பல கோணங்களில பார்த்தால் இது ஒரு சுவையான ஆய்வு மட்டுமன்று. நம்மை நாமே தெரிந்துகொள்ள உதவும் ஒரு வழி.

இந்த ஆண்டில் வரவேண்டிய மற்றொரு புத்தகம். சிங்கப்பூர், மலேசியா தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளும் அவற்றில் சம்பந்தப்பட்ட சில முக்கிய ஆளுமைகளும் பற்றியது இந்த நூல். சிங்கப்பூர் மலேசியா தமிழ் இலக்கியத் தடம்: சில திருப்பம்  என இதற்குத் தலைப்பு தந்துள்ளேன். மேலும் சிங்கப்பூர் மலேசியா: தமிழ் இலக்கியத் தோற்றம் எனும் மற்றொரு நூலும் தயாராக உள்ளது. நம் தமிழ் இலக்கியத்தின் தோற்றத்தை ஆராயும் நூல் இது. பத்திரிகை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் என்று ஐந்து வடிவங்களின் ஆதி முதல் படைப்பை ஆராய்ந்து அப்படியே ஒரு சுருக்கமான வரலாற்றை வரைவது இதன் நோக்கம். சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு 2019ல் வருகிறது. அந்த நேரத்தில சில நெடுங் கட்டுரைகள் அடங்கிய ஒரு நூலை வெளியிடத் திட்டமிடுகிறேன். இன்னும் முழுமையான தலைப்பை யோசிக்கவில்லை.புதிய சிங்கப்பூரின் பழைய சரிதம், சிங்கப்பூரின் முக்கியப் பிரமுகர்கள், ஜப்பானியர் காலத் துயரம் இவற்றில் இடம்பெறும். பிரமுகர்கள் பற்றிய கட்டுரையை இனிமேல்தான் எழுதவேண்டும். மற்ற இரண்டு கட்டுரைகள் தயார். இன்னும் ஓரிரு கட்டுரைகள் சேர்க்கவேண்டும்.

சிங்கப்பூர், மலேசியாவில் தமிழில் ஆய்வுத்துறையின் நிலை பற்றிக் கூறுங்கள்.

தற்போதைய நிலவரம் என்னவென்று நிச்சயமாக எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதற்குச் சரியான ஊடகம் இல்லை. ஆய்வுத்துறையில் மட்டுமல்ல பொதுவாகத் தமிழில் என்ன புத்தகங்கள் வெளியாகின்றன, இங்கே என்ன வருகின்றன என்பதையும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இது ஒரு முக்கியமான பிரச்னை. இதை எப்படி தீர்ப்பது? பத்திரிகைகள்தான் உதவ வேண்டும்.

தமிழில் ஆய்வு என்பது தமிழ் ஆதாரங்களை மட்டுமே தேடிப்பிடித்துச் செய்தால் அரைகுறையாகத்தான் இருக்கும் என்பது என் சொந்த அனுபவம். நாம் செய்யும் ஆய்வு பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களையும் தேடிப் பிடிக்க வேண்டும். இப்போது மலாய் மொழியையும் கண்டிப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும். நான் தமிழ் ஆதாரங்களை மட்டுமே நம்பி என் முதுகலை ஆய்வைச் செய்திருந்தால் அது வலுவாக இருந்திருக்காது. உலுத்துப் போயிருக்கும்.

இவ்வாய்வைச் செய்யும்போது நான் கண்ட ஒரு சுவையான தகவல்கள் பல உள்ளன. சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு இந்தியர் கோலாலம்பூரில் 1897ஆம் ஆண்டு இறுதிவாக்கில் ஒரு சீனப் பத்திரிகை நடத்தியுள்ளார். கோலாலம்பூரில் சீனர்களே சீனப் பத்திரிகை நடத்தவில்லை. தமிழர் நடத்தினார். இந்தத் தகவலை தமிழர் யாரும் சொன்னதில்லை. Chen Mong Hock எனும் சீன நங்கை ஆரம்ப கால சிங்கப்பூர் சீனப் பத்திரிகைகள் பற்றி மேற்கொண்ட முதுகலை ஆய்வு 1967ல் புத்தகமாக வந்தபோது நான் கண்ட தகவல் இது. என் முதுகலை ஆய்வில் இத்தகவலைச் சேர்த்துக்கொண்டேன்.

இந்தத் தகவலை முதலில் என் ஆய்வு மேற்பார்வையாளர், அவரே சொந்தமாகக்bala கண்டுபிடித்ததுபோல அடிக்குறிப்புப் போட்டுக் கட்டுரை எழுதினார். அவர் காலமாகிவிட்டார். அந்தக் கட்டுரையைப் பார்த்து மற்றொருவர் பிறகு தானே சொந்தமாகக் கண்டுபிடித்ததுபோல தன் கட்டுரையில் சேர்த்துக்கொண்டு, ஒரு படி மேலே போய், சீனப் பத்திரிகை நடத்தியவர் ஒரு தமிழ் முஸ்லிம் ஆசாமி என்று கூடுதலாக ஒரு தகவல் சேர்த்துக்கொண்டார். ஆனால் Indian man என்றுதான் சீன நங்கை சொல்லியிருக்கிறார். நிச்சயமாக நம் ஆட்கள் சீன ஆய்வேட்டைப் படித்தார்களா என்பது சந்தேகமே. 1897இல் கோலாலம்பூரில் தமிழ்க் கூலிகள் இருந்தார்கள். தமிழ் முஸ்லிம்கள் இன்னும் அங்குக் கணிசமாகப் போகவில்லை அப்போது. இதுதான் நம் ஆய்வின்  அவலட்சணம்.

இதேபோல, சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் முதலில் பிராஸ் பாஸா நன்னீர் ஓடைக்குப் பக்கத்தில் 1823 இறுதி வாக்கில் அல்லது 1824 ஆரம்பத்தில் எழுப்பப்பட்டது. அதன்பிறகுதான் 1827ல் அது சவுத் பிரிட்ஜ் ரோடுக்கு மாறியது. தண்டனை அனுபவிக்க இங்கு அனுப்பிவைக்கப்பட்ட கைதிகள் அதைக் கட்டிக் கொடுத்தார்கள்.

மேலும் ஒன்று சொல்கிறேன். கோலாலம்பூர் ஹை ஸ்ட்ரீட் மகா மாரியம்மன் கோவிலின் முதல் கும்பாபிஷேகம் 1891 ஏப்ரல் 16இல் நடந்தேறியது. ஈராயிரம் இந்தியர் அப்போது கோலாலம்பூரில் இருந்தனர். அன்றைய பிரமுகர்கள் கா. தம்புசாமிப் பிள்ளை, துரைசாமிப் பிள்ளை போன்றோர் கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகமும் நடத்தி வைத்தனர். அக்கோவில் தொடர்பான ஆண்டு மலர்களிலும் மற்ற கட்டுரைகளிலும் இதுவரை யாரும் சரியான தேதியைக் குறிபிப்பிட்டதில்லை. பத்துமலைக் குகையில் தமிழர்கள் 1880களில் முருக வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதை அப்புறப்படுத்த அரசாங்கம் வழக்குப் போட்டுத் தோற்றுப்போனது. அதன் விளைவாகவே அங்குப் பிறகு தைப்பூசம் முதல் தடவையாக 1892ல் கொண்டாடப்பட்டு நிரந்தரமானது. ஆபத்தான செம்மண் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினர் பக்தர்கள்.

காடு மலை மண்டிக்கிடந்த சிலாங்கூரைத் துப்புரவு செய்யத் தமிழர்தான் வந்தார்கள். தமிழ்க் கூலிகளைக் கொண்டுவர தம்புசாமிப் பிள்ளையைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது அரசாங்கம்.

குதிரைப் பந்தயப் பிரியர் தம்புசாமி சிங்கப்பூர் பந்தயத்துக்குப் போனபோது மாரடைப்பு ஏற்பட்டுத் திடீரென்று 1902இல் காலமானார். அவருடைய உடலை அங்கேயே அடக்கம் செய்ய யோசிக்கப்பட்டது. ஏனென்றால் அப்போது சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் சாலைத் தொடர்பு கிடையாது. கடல் வழியாகத்தான் வரவேண்டும். அரசாங்கமே கப்பல் கொடுத்து அவருடைய உடலை கண்ணியமாகக் கொண்டு வந்து சேர்த்தது. அதற்கு மறு ஆண்டில் தம்புசாமிப் பிள்ளையின் மூத்த மகன் பரிமணத்தின் திருமணம். பவுன் 12 வெள்ளி 50 காசு விற்ற அந்நேரத்தில் இருபதாயிரம் வெள்ளி செலவில் கல்யாணம் கோலாலம்பூரில் வாண வேடிக்கைகளுடன் தடபுடலாக நடந்தது.

இதைப்போல ஏராளமான செய்திகள் இந்தியரைப் பற்றி அரசாங்க ஆவணங்கள், பத்திரிகைகள், ஆய்வு நூல்கள் ஆகியவற்றில் ஒளிந்து கிடக்கின்றன. தேடிக் கொண்டு வாருங்கள். இன்றைய வாழ்வின் தொடர்ச்சிக்கு அவைதான் சாட்சி.

சிங்கப்பூர், மலேசியா தொடர்பான ஆய்வுகளில் கவனத்தில் கொள்ளத்தக்கவை எவை? ஆய்வு செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களாக எவற்றை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

சமூகத்தின் எல்லா அங்கங்களும் தழுவிய ஆய்வுகள் தேவை. அரசியல் வழியாக இடம்பெற்ற இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்ற பிரமுகர்கள், பிரபலமான பத்திரிகை ஆசிரியர்கள், சிங்கப்பூர் இந்து சங்கம், இலங்கையர் சங்கம், இந்தியர் சங்கம், தமிழர் சீர்திருத்த சங்கம், ஆதிதிராவிடர் சங்கம் போன்ற அமைப்புகளின் தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றை வரைதல் மிகவும் அவசியம். இந்தப் பகுதிக்கு வந்துபோன இந்திய இலங்கைப் பிரமுகர்களையும் பட்டியல் போடலாம். சுவையாக இருக்கும். அதில் வரலாறும் தொனிக்கும்.
உங்களை எல்லாரும் சர்ச்சைக்குரியவர் என்றும் தலைக்கனமானவர் என்றும் கூறுகிறார்கள், உங்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சிரிப்புத்தான் வருகிறது. ரேடியோ மலாயாவில் பெரும் பேருடனும் புகழுடனும் கொடிகட்டிப் பறந்தவன் நான் என்பது எல்லாருக்கும் தெரியும். அது தொழில். அவ்வளவுதான். என்னை இளிச்சவாயன், பிழைக்கத் தெரியாதவன் என்றுதான் எல்லாரும் சொன்னதுண்டு. யாருக்கும் பணிந்து நடப்பது என் சுபாவம் அல்ல. அந்த பிம்பத்தை மற்றவர்கள் எப்படியும் கற்பனை செய்துகொள்ளலாம். அவ்வளவுதான்.

இலக்கிய ஆய்வு, விமர்சனங்கள் இங்கு வளராததற்கு என்ன காரணம்?

நிறைய எழுதவேண்டும். அதற்கு நிறையப் படிக்க வேண்டும். காத்திரமாக எழுதவேண்டுமானால் காத்திரமான வாசிப்பு வேண்டும். எழுதுவதை நோட்டமிட காத்திரமான விமர்சகர் வேண்டும். விமர்சனம் இல்லாத எழுத்து எப்படி வளரும்? விமர்சனத்தை வெளியிட இங்கு என்ன சாதனம் இருக்கிறது? பத்திரிகை, சஞ்சிகை போன்ற சாதனம் அவசியம். அதை வளர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் மாதம் ஒரு பத்து வெள்ளியைப் புத்தகத்துக்கும் சஞ்சிகைக்கும் ஒதுக்க முடியாதா? நிச்சயம் முடியும். நம் சஞ்சிகைகளுக்கு ஒழுங்கான விநியோக வசதி இல்லாமல் இருப்பதே அவை தோற்றுப் போவதற்கு முக்கியக் காரணம். மேலும் ஒரு சஞ்சிகை குறிப்பிட்ட தேதியில் கண்டிப்பாக வந்தே தீரவேண்டும். எப்போதும் எப்படியும் வரும் என்றால் வாசகனைக் கவர முடியாது.

விமர்சனத்தை ஊக்குவிக்க வேண்டும். வாசகர் வட்டம் போன்ற அமைப்புகள் விமர்சனங்களை மாதந்தோறும் வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். அடக்கமானவர்கள் ஒதுங்கியே நிற்பார்கள். அவர்களின் ஆற்றலை எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அப்படிப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எதற்கெடுத்தாலும் குழு மனப்பான்மை ஓங்கி நிற்கிறது. அமைப்புகள் சுதந்தரமாக நடப்பதில்லை. தேர்தல் முறை ஒழுங்காக இல்லை. இணைய வெளியில் தடி எடுத்தவன் எல்லாம் தம்பிரான் என்று கோலோச்சிப் பாய்கிறார்கள். இணையம், எழுத்தைப் போலியாக்கி விட்டது. எழுத்தின் ஆன்மாவை உணர முடியவில்லை. சாசுவதமான உண்மையும் நேர்மையும் எப்போதுமே புறத்தில்தான் நிற்கும். இதைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. சிறுசிறு குழுவாக இயக்கமாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருந்தால் போதும். விளைவு தாமதமாகவேனும் வந்து சேரும்.

இங்கு தமிழ் முதல் மொழியாக இல்லாததும், தமிழில் ஆழமான ஆய்வுகளின் தேவை குறித்து எவரும் அதிகம் அக்கறைப்படாமல் இருப்பதும் பெரிய அளவில் தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல், வரலாறு, மொழி, இலக்கியம், போராட்டங்கள், மேம்பாடுகள், நாட்டு நிர்மாணத்தில் அவர்களின் பங்களிப்பு போன்றவை குறித்த ஆய்வுகள் ஆழமாக முன்னெடுக்கப்படாது இருப்பதற்கான காரணமாக இருக்கலாமா?

தமிழ் முதல் மொழியாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. தமிழை  முதல் மொழியாகக்கொண்ட பல்கலைக்கழகங்களில் கூட ஆய்வின் லட்சணம் இப்படித்தானே இருக்கிறது. ஆய்வுக்கு இரண்டு அடிப்படை தகுதிகள் தேவை.

முதலாவது ஆய்வாளரின் கடுமையான உழைப்பு. பலதரப்பட்ட தரவுகளைத்தேடிப் பிடிக்க வேண்டும். இதில் சோர்வுக்கும் சோம்பேறித்தனத்துக்கும் இடம் இல்லை. இரண்டாவது ஆய்வாளரின் நேர்மை. ஆய்வைத் தன் இஷ்டத்துக்குத் திரித்துக்கொள்ளக்கூடாது. தனக்குப் பிடிக்காத ஒருவரின் ஆய்வைக் கண்டு கொள்வதில்லை என்ற உதாசீனப்போக்குக்கூடாது. மூல ஆய்வாளருக்கு மரியாதை தரவேண்டும். நீ ஒருவரை மதிக்காவிட்டால் மற்றொருவர் உன்னை எப்படி மதிப்பார்?

நீங்கள் சொல்லும் ஆய்வுகள் எல்லாம் இங்கு யாருக்கும் தேவையில்லை, அவசியமில்லை என்ற போக்கு வந்துவிட்டது. சில ஆய்வுகள் மேல் நிலையிலேயே தங்கிவிடும். சமூகத்தின் பரந்துபட்ட பார்வைக்கு இறங்கி வராது. நமக்கு ஒரு அவசியத் தேவை இருக்கிறது. மேல்நிலை ஆய்வுகளின் சாரத்தை எல்லாம் சாதாரண மக்களுக்கு எளிமையான வழியில் சுருக்கமாகவும் சுவையாகவும் கொண்டுசெல்ல தமிழ்ப் பத்திரிகைகள், இதழ்கள் முன்வரவேண்டும். அதை நாம் எப்போதுமே செய்வது கிடையாது. இதழ்களின் ஆசிரியர்கள் மற்ற நாடுகளில் உள்ளதைப்போன்று நல்ல கல்விமான்களாகவும் சமூக அக்கறை கொண்டவர்களாகவும் இருத்தல் அவசியம். இலங்கைப் பத்திரிகைகள் முன்பு இவ்வாறு செயல்பட்டன.

ஆய்வு என்பது ஏதோ பெரிய விஷயம், அது யாருக்கோ போய்ச் சேர வேண்டியது என்ற சிந்தனையை உதறிவிடுங்கள். பொதுமக்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்ததையும் எழுதியதையும் பேசியதையும்தானே வகைப்படுத்தி ஆய்வு என்று முலாம் பூசி பட்டம் வாங்கிக்கொள்கிறோம். இதை அவர்களுக்கே திரும்ப சொல்வதில் என்ன தயக்கம்? இதுதான் நம் வரலாறு. இந்த வரலற்றின் துளிகளைப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்களும் சமூக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பது நல்லது.

தமிழரைவிட, இந்தியரைவிட, வெள்ளைக்காரர் சிலர் நம்மைப்பற்றி ஆழமாக எழுதி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதைப்போன்று நாம் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் வந்திருக்கும் ஆய்வுகளைத் தமிழில் எளிமையாக எழுதிப் புத்தகமாக, கட்டுரையாகப் போடவேண்டும்.

இங்கு வந்திருக்கும் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்துப் பார்த்துச் சரித்திரச் செய்திகளைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளியிட்டு நம் மூதாதையர் செய்ததைத் தெரிந்து கொள்ளவேண்டும். வாழ்க்கை, பல இன உறவு, சமூகம், அரசியல், கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம் அடங்கிய எல்லாத் துறைகளிலும் நம் பார்வை பரவவேண்டும்.

இன்று நாம் இருக்கும் வாழ்வுநிலைக்குக் கடந்த கால நிகழ்வுகளே காரணம். அவற்றைத் தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். வரலாறு என்பது வாழ்வின் சாரந்தான். இதைச் சொல்லிக்கொடுக்க நமக்குப் பள்ளிகள் இல்லை.

மலேசியாவில் தமிழ் தொடக்கப் பள்ளி உண்டு. உயர்நிலைப் பள்ளி இல்லை. பல்கலைக்கழக கல்வி உண்டு.  சிங்கப்பூரில் தமிழ் ஏ நிலை வரை ஒரு பாடம். பல்கலைகழக நிலையில் தமிழ்ப் பட்டம் பெற வாய்ப்புண்டு. மொழி நிலைத்திருக்கிறது அவ்வளவுதான்.

நேர்காணல் : ம.நவீன்

4 comments for “இலக்கியம் நடந்து சென்ற பாதையில்தான் வாழ்க்கை இருக்கிறது

  1. யாழினி முனுசாமி
    January 5, 2018 at 3:03 pm

    சிறப்பு ….

  2. January 7, 2018 at 6:19 pm

    கிடைத்தற்கரிய விவரணைகள். பாவனையான இலக்கிய பிம்பங்களை உடைத்தெறியும் நேர்காணல்.

  3. Raj Sathya
    January 7, 2018 at 9:51 pm

    I salute you sir, Mr.Baskaran.Thanks Navin for the interview.

  4. syed peer mohamed (சை.பீர்முகம்மது)
    January 23, 2018 at 5:53 pm

    இந்த நேர்காணல் மிகச் சிறப்பாக பல வரலாற்று செய்திகளை முன் வைக்கிறது.malaysian tamil short stories 1930 -1980 :A critcal study. நான் இந்த நூலைக் கண்டு அதிர்ந்து போனேன்.இதுவரை சொல்லப்பட்டுவந்த
    பலவற்றை ஆதாரபூர்வமாக உடைத்தெறிந்த ஆய்வு நூல். நல்ல வேளையாக இது தமிழில் வராமல் ஆங்கிலத்தில் வந்துள்ளது.தமிழில் வந்திருந்தால் துடைக்கும் தாளாகவே பயன் பட்டிருக்கும். மலேசிய சிறுகதைகள் குறித்த ஆய்வுக்கு இந்நூலே மூலாதாரம். எந்தவித குழுமனப்பான்மையின்றி, வெறுப்பு விருப்பின்றி ஆய்வுசெய்துள்ளார்.
    இதே போல் முரசு நெடுமாறனின் “மலேசிய இலக்கியம் ” என்ற ஆய்வு நூலை சென்னை தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழில் வந்ததால் யார் பார்வைக்கும் போகாமலே உள்ளது. இதன் ஆங்கில நூல் பதிப்பிற்கு இங்கேயும் சிங்கையிலும் பாலபாஸ்கரனின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சரிபட்டு வரவில்லை. பிறகு தமிழ் நாட்டு காலச்சுவடு பதிப்பகத்தில் அப்பொழுது
    பொறுப்பாளராக இருந்த அரவிந்தனிடம்
    பேசி அங்கேயே அச்சுக்குக் கொடுத்தோம். அரவிந்தன் இப்பொழுது
    தமிழ் இந்துவில் ஆசிரியராக இருக்கிறார். பாலபாஸ்கரனின் எதிர்பார்ப்புப் போலவே நூல் வெளிவந்தது. பரவலான விற்பனைக்கு நூல் போகவில்லை.நான் இங்கே ஒரு வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினேன். பாஸ்கரன் மறுத்து விட்டார்.
    மலேசிய தமிழ்ச் சிறுகதைகள் என்ற என் நீண்ட கட்டுரை தமிழ்மணி வெளியிட்ட நூலுக்கு பாஸ்கரனின் நூலே பேருதவியாக அமைந்தது.அதை இன்னும் 1980க்குப் பிறகான வரலாற்று
    நிகழ்வுகளைச் சேர்த்து நூலாக எழுதும்
    எண்ணமுள்ளது. 1958லிருந்து நான் கடந்த 60 ஆண்டுகளாக நேரிடையாக மலேசிய சிறுகதைத் துறையில் இருப்பதால் இதை செய்ய முடியுமென்று நம்புகிறேன்.பாலபாஸ்கரன் சொல்வது போல் ஆதாரங்களைப்பெறுவது சுலபமானதல்ல. வேரும் வாழ்வும் 50 ஆண்டுகள் கதைகளை (1950-2000) தொகுப்பின் வலி இன்னும் உள்ளது.
    ஏறக்குறைய 5 ஆண்டுகளின் உழைப்பு
    அதில் அடக்கம். ஆய்வும் தொகுப்பும் சாதாரணமானதல்ல. நேரம், பொறுமை
    ஆர்வம் அதி முக்கியம். M.A.பட்டத்துக்காக
    பாஸ்கரனின் ஆய்வு எனக்கு அது Phd
    அளவுக்கான ஆய்வு போலவே படுகிறது.
    கடுமையான உழைப்பும் நேரமும் செலழித்துள்ளார் .அதைவிட உண்மையாக இருந்துள்ளார்.எதையும் மேம்போக்காகப் பார்க்கும் நமது சமுகச்சூழலில் இப்படியான அரிய முயற்சிகளை வல்லினம் இந்த நேர்காணல் மூலம் வெளிக் கொண்டுவந்தது பாராட்டுக்குறியது.

Leave a Reply to syed peer mohamed (சை.பீர்முகம்மது) Cancel reply