மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள் (பகுதி 2)

ம்ஆதி குமணன் மறைவுக்குப் பிறகே மலேசிய பத்திரிகைச் சூழலில் கணிசமான மாற்றங்கள் உருவாயின. அந்த மாற்றங்களை அறிவதன் மூலமே இன்றைய பத்திரிகைச் சூழலையும் அறியமுடியும்.

28 மார்ச் 2005-இல் ஆதி குமணன் மரணமுற்றார். இவரின் மரணத்திற்குப் பிறகு மலேசிய நண்பனில் நிர்வாகப் பிரச்சினை தலைதூக்கியது. Penerbitan Sahabat Malaysia-வின் கே.டி.என். உரிமத்தை சிக்கந்தர் பாட்ஷா வைத்திருந்தார். ஆதி குமணனும் டத்தோ சுப்பிரமணியமும் Eden Value எனும் நிறுவனத்தின் கீழ் இப்பத்திரிகையை நிர்வகித்து வந்தனர். ஆதி குமணனின் இறப்புக்குப் பிறகு ஏற்பட்ட சிக்கலில் மலேசிய நண்பனிலிருந்து பிரிந்து வந்த ஒரு பகுதியினரால் ‘மக்கள் ஓசை’ நடத்தப்பட்டது. மலேசிய நண்பன் முழுக்கவே சிக்கந்தர் பாட்ஷாவின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத்தின்கீழ் சீரமைக்கப்பட்ட ஆசிரியர் குழுவின் மூலம் இயங்கியது.

மக்கள் ஓசை (2005)

சிக்கந்தர் பாட்சாவுக்கும் டத்தோ சுப்ரமணியத்துக்கும்(2005) நடந்த பங்கு தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததன் காரணமாக மக்கள் ஓசை தினசரியாக்கப்பட்டது. இந்தப் பத்திரிகையின்  உரிமம் நயனம் பத்திரிகை ஆசிரியர் இராஜகுமாரன் பெயரில் இருந்தது.

தமிழ்க் குரல் (2006)

ஆதி குமணனின் மனைவி இந்திராவதி பாய் பெரு.அ.தமிழ்மணியுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ்க்குரல் (2006) என்ற புதிய தினசரி ஒன்றை நடத்தினார். இந்த நாளிதழ் ஏறக்குறைய 6 மாதங்களே தாக்குப்பிடித்தது. சில உட்பூசல்கள் காரணமாக நிர்வாகம் பிளவுபட ‘தமிழ்க்குரல்’ என்ற பெயரிலேயே இரு வெவ்வேறு பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழப்பம் சட்டச் சிக்கல்வரை சென்றது.

உதய சூரியன் (2007)

தாஜுடின் என்பவரின் முதலீட்டில் ‘உதய சூரியன்’ உதயமானது. இது தமிழ் நேசனுக்கான மாலைப் பத்திரிகையாக வெளியிடப்பட்டது. முறையான ஆசிரியர் குழு இல்லாததால் இந்த முயற்சி ஒரு மாதத்திற்குள் நின்றது. இக்காலக்கட்டத்தில் தமிழ் நேசனுக்கும் உதய சூரியனுக்கும்  பெரு.அ.தமிழ்மணி சில  மாதங்கள்  ஆசிரியராக  இருந்தார்.

தினக்குரல் ( 2012- 2015)

ஆதி குமணனின் மகன் அருண் குமார் தினக்குரல் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிகைக்கு மக்கள் ஓசையில் பணிபுரிந்த பி.ஆர்.ராஜன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இப்பத்திரிகையின் நிர்வாகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டு அரசியல் நோக்கம் கொண்ட முதலீட்டாளர்களின் கைகளில் சிக்கியது. டத்தோ ரமணாவிடமிருந்து (2013) பத்திரிகை கைமாறி டத்தோ சரவணனின் நம்பிக்கைக்குரியவரான ராஜாவின் (2014) கைக்குள் வந்தது. பிறகு, இப்பத்திரிககை முதலீட்டாளருக்கும் அருண் குமாருக்கும் ஏற்பட்ட விவகாரத்தால் நிறுத்தப்பட்டு ‘புதிய பார்வை’ என்ற பெயரில் அதே முதலீட்டாளர்களால் நடத்தப்பட்டது. 6 மாத காலத்தில் பணம் புரட்ட முடியாமல் மூடப்பட்டது. புதிய பார்வை தொடங்கிய காலத்தில் ஆசிரியர் பி.ஆர் ராஜன் நீக்கப்பட்டு பெரு.அ.தமிழ்மணி ஆசிரியராக நியமிக்கப்படார் (2015).

தினக்குரலிலிருந்து  நீக்கப்பட்ட  பி.ஆர்.ராஜன் மக்கள் பத்திரிகை என்ற அடைமொழியோடு தினத்தந்தி (2016) எனும் நாளிதழைத் தொடங்கினார். அதுவும் விரைவிலேயே மூடுவிழா கண்டது.

நம் நாடு ( 2012-2016 )

தொழிலதிபரும் பிரதமர் நஜீப்பின் தீவிர ஆதரவாளருமான கென்னத் ஈஸ்வரன் ‘நம் நாடு’ பத்திரிககையைத் தொடங்கினார். அரசாங்க ஆதரவுப் பத்திரிகையாக தொடங்கப்பட்டது இப்பத்திரிகை. தென்றல் ஆசிரியர் வித்தியாசாகர் ஆசிரியராகப் பணியாற்றினார். வித்யாசாகர் ஆதி குமணனின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் என்பதும் ஆதி குமணன் தலைமை ஏற்றிருந்த எழுத்தாளர் சங்கத்தில் துணைச்செயலாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் நஜீப்பின் ஆதரவு பத்திரிகை என்று கூறப்பட்ட நம் நாடு விற்பனையிலும் செய்தியிலும் சோபிக்காமல் போனது. மற்ற நாளிதழ்களை விட மலிவாக இப்பத்திரிகை விற்கப்பட்டாலும் வாசகர் ஆதரவு இல்லாததால் சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது.

தமிழ் மலர் ( 2014 )

மக்கள் ஓசையின் பங்குதாரரான டத்தோ சுப்பிரமணியம் நோய்வாய்பட்ட பிறகு அவருடைய மகன் சுந்தர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு நிர்வாகத்தில் உட்பூசல் வெடித்தது. விளைவாக இப்பத்திரிகையின் தலைமை நிர்வாகி பெரியசாமி நீக்கப்பட்டார். இவர்களுடன் பத்திரிகையில் பணம் போட்டவர்களில் ஓம்ஸ் தியாகராஜனும் சரஸ்வதி கந்தசாமியும் ஓரங்கட்டப்பட்டனர். பெரியசாமியும் சரஸ்வதி கந்தசாமியும் மலேசிய நண்பனில் ஆதி குமணன் ஆசிரியராக இருந்தபோது நிர்வாகப்பொறுப்பில் இருந்தவர்கள். ஆகவே ஓம்ஸ் தியாகராஜன் தமிழ் மலர் என்ற நாளிதழை பெரியசாமியை நிர்வாகியாக கொண்டு தொடங்கினார். 30-ஆம் திகதி நவம்பர் 1980-இல் அரசால் தடை செய்யப்பட்ட ‘தமிழ் மலர்’ என்ற நாளிதழ் பெயர் ஓம்ஸ் தியாகராஜனால் 2014-ல் மறுஉயிர் பெற்றது.

தாய் மொழி ( 2014 )

பி.பி.பி அரசியல் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ கே.வி.எஸ். தலைமையில் நடத்தப்பட்டு வரும் நாளிதழ் இது. ஆரம்பக் காலக்கட்டத்தில் ஒரு வெள்ளிக்கு விற்கப்பட்டது. சரியான ஆதரவு கிடைக்காததால் தற்போது மலேசியாவில் தேர்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசாங்கக் கொள்கைகளையும் தமிழ்ப்பள்ளிக்கைளைச் சார்ந்த செய்திகளையும் உள்ளடக்கமாக கொண்டே இப்பத்திரிகை வெளியிடப்படுகிறது. ஆயினும் இது இன்றைய நிலையில் பொதுமக்களுக்கான பிரச்சனைகளைப் பேசும் நாளிதழாக செயல்படாததோடு பரந்த வாசிப்புக்குச் செல்வதில் தோல்வி கண்டுள்ளது.

கொள்கைகளின் கால அளவு

பொதுவாகவே ஓர் இயக்கத்திலோ கட்சியிலோ மையமாக நின்று செயலாற்றும் சக்தி மறைந்தபின் பிளவுகள் ஏற்படுவதை காலம் முழுவதுமே பார்த்து வருகிறோம். அவ்வகையில் ஆதி குமணன் பலரையும் ஒன்று திரட்டி இயக்கும் சக்தியாக இருந்துள்ளார் என்பதை அவர் மறைவுக்குப்பின் உருவான பத்திரிகை முயற்சிகள் வழி காண முடிகிறது. முதலீட்டாளர்களையும் நிர்வாகக் குழுவினரையும் செய்தி ஆசிரியர் குழுமத்தையும் தனது ஆளுமையால் கட்டுப்படுத்தி இயக்கியுள்ளதை அவர் மறைவுக்குப் பின்பான பிளவுகளின்வழி காணமுடிகிறது. அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு செயல்பட மூன்று தரப்பினருமே தயாராக இருந்துள்ளனர். அவர் மரணம் இந்தக் கட்டமைப்பை தளரச் செய்ததோடு தொழில் முறை போட்டி, கட்சி சார்பான பிணக்குகள், தலைவர்களினால் உருபெற்றிருந்த வேறுபாடுகள், கொள்கை ரீதியான பிடிப்புகள், என அத்தனை கூறுகளும் தளர்ந்து மலேசியத் தமிழ் நாளிதழ் உலகத்தில் காணாத ஒரு மாற்றம் நடந்துகொண்டிருந்தது.

ஆதி குமணனுக்குப் பிறகு புதிய பத்திரிகைகளின் வரவு அதிகமானது. இந்தப் புதிய பத்திரிகைகளில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பலரும் ஆதியின் பாசறையிலிருந்து வந்தவர்கள் என்பதையும் அறியமுடிகிறது. எம்.ராஜன் (மக்கள் ஓசை), பெரியசாமி (மக்கள் ஓசை), அக்கினி(தமிழ்க்குரல்), வித்யாசகர்(நம் நாடு), பி.ஆர்.ராஜன் (தினக்குரல், தினத்தந்தி) ஆகியோர் வாழும் உதாரணங்கள். ஆதியின்கீழ் ஒரு கொள்கைப் பிடிப்போடு பணிப்புரிந்தவர்கள், அவர்களின் தலைமையின்கீழ் செயல்படுத்தும்/செயல்படுத்திய பத்திரிகைகளை அவ்வழியில் நடத்தினார்களா என்று அலசினால், ஆதியின் கொள்கை ஆதியின் காலத்தோடு மண்ணாகிவிட்டதை இவர்களின் காலத்தில் பிரசுரம் ஆகும் சாதி செய்திகளிலும், பணம் போடுபவர்களுக்கு வளைந்து கொடுப்பதிலும் காணமுடிகிறது. அணிகள் உருவாகி, அரசியல் நிலைப்பாடும் மாறியது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை எனும் கோட்பாடு ஆதிக்குப் பிறகு பத்திரிகை உலகத்திலும் தலைத்தூக்கியது. அச்சூழலுக்கு ஏற்ப ஆதியின் பாசறையில் இருந்து வந்தவர்களும் கொள்கைப்பிடிப்பையும் மாற்றிக் கொண்டனர்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி முதல் இளைய தமிழவேள் ஆதி குமணன் வரை தமிழ்ப் பத்திரிகைகள் எழுத்துக்களால் சமுதாயத்தில் கொண்டு வந்த சிந்தனை மாற்றங்கள் மறுக்க முடியாதவை. இவர்களின் எழுத்துக்கள் வாசகர்களின் மத்தியில் தாக்கங்களைக் கொண்டு வந்தன. முன்பே குறிப்பிட்டது போல கோ.சாரங்கபாணியின் பகுத்தறிவுச் சிந்தனை, தமிழ் நேசன் மூலம் வெளிபட்ட இலக்கியச் சிந்தனை, ஆதி குமணன் மூலம் முன்னெடுக்கப்பட்ட சமூகச் சிந்தனை என பலவும் இன்று என்னவாக மாறியுள்ளன என சிந்திக்க வேண்டியுள்ளது. ஆதி குமணனின் மரணத்துக்குப் பின் காளான்கள் போல உருவான நாளிதழ்களால் சமுதாயத்தில் எவ்விதமான எழுச்சியையும் உண்டாக்க முடியவில்லை. மாறாக அவை கட்சிக்குள் நிலவும் குழாயடி சண்டைகளைத் தலைப்புச் செய்தியாக்கி மக்களைக் கவரவே அதிகம் கவனமெடுத்துக் கொள்கின்றன.

செய்தியும் சாதியும்

செய்திசாமிவேலுவின் குடும்பப் பத்திரிகை எனக் கூறப்படும் தமிழ் நேசனில், அவர்களின் அரசியல் சார்ந்த செய்திகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது கண்கூடு. சாமிவேலு அதிகாரத்தில் இருந்த காலகடத்தில் இதுபோன்ற வேடிக்கைகள் அதிகமாகவே நடந்துள்ளன. சாதிக்காரர்களின் விளம்பரத்திற்கும் சாதி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் இப்பத்திரிக்கையில் அதிகமே இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மலேசிய முக்குலத்தோர் பேரவை சிறப்பு மலர்களில் மறவாமல் தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்யும் சாமிவேலுவின் சாதிய நிலைபாட்டினை ஆராய முற்பட்டால் தமிழ் நேசனின் போக்கில் ஆச்சரியம் ஏற்படாது. ஆனால், ஆதி குமணனின் பிம்பத்தில் பத்திரிகைகளை நடத்திகொண்டிருக்கும் மக்கள் ஓசை, தமிழ் மலர், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் ஆதி குமணன் மறுதலித்த சாதி சார்ந்த செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. 22.7.2016 முதல் 24.7.2016 வரை மலேசியாவில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டின் செய்திகளை இதற்கு நல்ல உதாரணமாகக் கூறலாம்.

25.7.2016 திகதியிட்ட தமிழ் நேசன், மலேசிய நண்பன் மற்றும் மக்கள் ஓசை நாளிதழ்களில் இந்த சாதிய மாநாடு குறித்த செய்தி விரிவாகவே இடம்பெற்றுள்ளது. மலேசிய நண்பன் மற்றும் தமிழ் நேசன் ஆகிய நாளிதழ்கள் இந்தச் செய்தியை பிரதமரின் உரையாகப் பிரசுரித்திருந்த பட்சத்தில் ஆதி குமணன் இருந்தபோது சாதி விளம்பரங்களையும் அதன் அடையாளங்களையும் மறுத்த மக்கள் ஓசையின் முதல்பக்க செய்தியாக இந்தச் சாதி மாநாட்டு செய்தி ‘கோலாலம்பூரில் கொங்கு தமிழ் மாநாடு’ என்ற தலைப்பில் வெளிவந்தது. மேலும், ஆதியின் இதயக்குரல் எனக்கூறிக்கொண்டு வெளிவந்த தினக்குரல் ‘மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றத்தின் பேராளர்களுடன் கலந்துரையாடல்’ (3.05.2015) போன்ற சாதிய அறிவிப்புச் செய்திகளை வெளியிட்டது. ஆதி.குமணனின் கொள்கையில் வளர்ந்தவர்களின் இதுபோன்ற வியாபார உக்திகள் அவர்கள் கொண்ட கொள்கைப் பிடிப்பை கேள்விக்கு உட்படுத்துகிறது.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, மலேசிய நண்பனில் ஆதி குமணனுடன் சக பயணிகளாக இருந்த பெரியசாமியும் சரஸ்வதி கந்தசாமியும் பொறுப்பாளர்களாக இருக்கும் தமிழ் மலர் நாளிதழ், ‘வன்னியர்’ எனும் சாதியின் பாசறையாகவே மாற்றியுள்ளது. முன்பு மலேசிய நண்பன் ஞாயிறு மலரில், ஆதி குமணனின் கேள்வி பதில்கள் ‘ஞானபீடம்’ எனும் பெயரில் இடம்பெற்று வந்தன. அவர் அந்தக் கேள்வி பதில்களின் வழி சாதி எதிர்ப்பு உட்பட பல்வேறு சமூக சீர்திருத்த கருத்துகளை எழுதி வந்தார்.  இன்று தமிழ் மலரில் அதேபோன்று ‘ஞானபீடம்’  பகுதியையும்  ஆதி குமணனின்  புகைப்படத்தையும் பிரசுரித்தாலும் அதன் முதலீட்டாளர் ஓம்ஸ் தியாகராஜன் மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத் தலவராக ஆனதையும் அவரது பிறந்தநாளுக்கு நாடு முடுவதும் உள்ள வன்னியர் சங்கங்கள் அனுப்பிய வாழ்த்துகளால் பக்கங்களை வண்ணத்தில் நிறைத்ததையும் ஒப்பிட்டு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ‘ஞானபீடம்’ எனும் கேள்வி – பதில் பகுதியில் எவ்வளவு தொகை கொடுத்தாலும் சாதி அடையாளங்கள் தன் குழுமத்தில் உள்ள எந்தப் பத்திரிகைகளிலும் (மலேசிய நண்பன், மக்கள் ஓசை, இதயம்) வெளிவராது என பிரச்சாரம் செய்தவரின் மரணம் நிகழ்ந்த ஒரு மாமாங்கத்திற்குள்ளாக அத்தனை கொள்கைகளும் கரைந்து போயுள்ளன.
பணமும் பகுத்தறிவும்

ஆதி குமணன் மலேசிய நண்பன் மூலமாக முன்னெடுத்த மற்றுமொரு விடயம்செய்தி 02 பகுத்தறிவுவாதம். க.கலியபெருமாள் மூலம் ‘பக்தியும் பகுத்தறிவும்’ என்ற கேள்வி பதிலால் சிந்திக்கும் போக்கை எளிய மக்களிடம் அவர் ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், அவர் பாசறையில் உருவான பி.ஆர்.இராஜன் மாற்று சிகிச்சை விளம்பரங்கள் என்ற பெயரில் (எ.கா: துன்பப்படவா மனிதப் பிறவி, 3.05.2015) பேயோட்டும் மாந்திரீகச் செய்திகளை வலியுறுத்தி பொதுமக்களின் நம்பிக்கைகளில் புகுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டதுதான் முரண்நகை. அதுமட்டுமல்லாமல் ‘டத்தோ ஶ்ரீ குருஜி வழங்கிய யோக சக்தி மாபெரும் ஆற்றலைக் கொண்டது’ (தினக்குரல், 24.05.2015, ஞாயிறு பதிப்பு) எனும் தலைப்பில் வந்த செய்திகள், பொருளியல் சிக்கல் ஏற்படும்போது உண்டாகும் சவாலினால் பத்திரிகையை வழிநடத்தும் ஆசிரியரின் கொள்கையும் தளர்வடைவதை காட்டுகிறது. பி.ஆர்.ராஜனின் கீழ் இயங்கிய  தினக்குரல் பத்திரிகை புதிய பார்வையாக மாறி தினத்தந்தியாகப் மறுபிறப்பெடுத்து குறுகிய காலத்திலேயே மண்ணுக்குள் புதைந்தது. இந்த மூன்று பத்திரிகைகளிலும் ‘மாற்றுவழி சிகிச்சை’ மையத்தின் விளம்பரம் செய்தி வடிவில் மக்களைச் சென்று சேர்ந்தது. பி.ஆர்.ராஜன் இருக்கும் பத்திரிகையில் எல்லாம் பேய் ஓட்டும் நிறுவனம் தனது விளம்பரத்தைச் செய்தியாகப் பிரசுரிப்பது தற்செயலானதல்ல என எந்த எளிய வாசகனும் அறிய முடியும்

புரட்சியும் புளுகும்

பி.ஆர்.ராஜன்உண்மையில் சமகால பத்திரிகையின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் மிகச்சிறந்த உதாரணமாக தினக்குரலைக் குறிப்பிடலாம். ‘சுடும் உண்மைகள்’ எனும் தலைப்பில் அதன் ஆசிரியர் பி.ஆர்.இராஜன் அரசு இலாக்காக்களில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளில் தமிழர்கள் எண்ணிக்கையைப் பிரசுரித்து மக்கள் மத்தியில் தன்னை ஒரு போராளியாக முன்வைக்க விரும்பினார். அதற்கேற்பவே செய்திகளையும் வடிவமைத்தார். தினக்குரல் தொடங்கிய ஆரம்பக்  காலத்தில்  மக்கள் நீதி கட்சியின் செய்திகளுக்கு ‘எ.கா: பெர்மாத்தாங் பாவ் வெற்றி அன்வார் இப்ராஹிமின் வெற்றி’ தலையங்கம் – 9.05.2015)  ஆதரவளித்த தினக்குரலின் ஆசிரியர் பி.ஆர்.ராஜன், காலஓட்டத்தில் பத்திரிகை உரிமையாளரின் அரசியலே தனது நிலைப்பாடு என மாறி டாக்டர் சுப்ரமணியத்திற்கும் பழனிவேலுவுக்கும் ஆதரவை சமயத்துக்கு ஏற்றதுபோல மாற்றி மாற்றி பிரசுரித்ததன் மூலம்  தனக்குத் தனித்த கொள்கைப் பிடிப்பில்லை என நிரூபிக்க முயன்றார். தன் நிலைபாடுகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருந்த காரணத்தால் பி.ஆர். ராஜனை ஆசிரியராக கொண்டு இயங்கிய எல்லா நாளிதழ்களும் மிக விரைவாக தோல்வியத் தழுவின.

செய்தியும் சேறும்

ம.இ.கா எனும் கட்சியின் உட்பூசல்களை மட்டுமே சமுதாயப் பிரச்சனையாகக் காட்டும்  போக்கு தமிழ்ப் பத்திரிகைகளில் மலிந்து காணப்படுகிறது. கட்சி சார்புடைய பத்திரிகைகள் கட்சியில் நடக்கும் உட்பூசல்களை முன் பக்கங்களில் போட்டு சமுதாயத்தின் முக்கிய செய்தியாகக் காட்ட முனைகின்றன. சாமிவேலு ம.இ.காவின் தேசியத் தலைவராக இருந்த காலக்கட்டம் தொடங்கி டத்தோ சுப்ரமணியம், கு.பத்மநாபன், கோவிந்தராஜூ, எம். ஜி.பண்டிதன், ஜி.பழனிவேல், டாக்டர் சுப்ரா வரையிலான ம.இ.கா சார்ந்த சர்ச்சைகளை சமுதாயத்தில் முக்கியம் வாய்ந்த செய்திகளாக இன்றும் பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. ம.இ.கா அரசியலை எழுதுவது அல்லது ம.இ.கா தலைவர்களைப் பாராட்டுவது என ஒருப்பக்கமும்; தனி மனிதனின் புகழ்ச்சி  கொண்ட அறிக்கைகளுக்கு செய்தியென முக்கியத்துவம் தருவது மறுபக்கமும் என பத்திரிகைகள் பயணம் தொடர்கிறது.(எ.கா: டத்தோ சோதிநாதன் ஒரு தன்மானச்சிங்கம் – மக்கள் ஓசை, 20.07.2016)

மேலும், சிண்டு முடித்துவிடும் நோக்கத்தில் சர்ச்சைகளைக் கிளப்பி அதன்மூலம் பத்திரிகையின் விற்பனையைப் பெருக்கி விடும் அற்பமானச சிந்தனையையும் தமிழ் நாளிதழ்களில் காண முடிகிறது. தான் கொண்டுள்ள கட்சி விசுவாசத்திற்காக ஜி.பழனிவேலுவின் மனைவியை விமர்சிக்கும் அளவுக்குத் தமிழ் நாளிதழ்கள் தரம் தாழ்ந்துள்ளதை அண்மையில் வந்த பத்திரிக்கை செய்திகள் காட்டுகின்றன. “எ.கா: என் கணவர் ரொம்ப பிசி (தலைப்புச் செய்தி தினக்குரல்,25.05.2015), “ ம.இ.காவுக்கு கனகமா?( தினக்குரல், 26.05.2015), கனகம் யார்? (தினக்குரல் 26.05.2015), “என் கணவருக்கு நேரம் இல்லை” (தினக்குரல், 26.5.2015) போன்ற கட்சி அரசியலுக்குச் சற்றும் சம்பந்தமற்ற செய்திகளை முன்பக்கத் தலைப்புச் செய்தியாக்கிய கீழ்மையை  புதிய தலைமுறை நாளிதழ் ஆசிரியர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

அவலமும் சுயவிளம்பரமும்

சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கும் களமாகத் தமிழ் பத்திரிகைகள் செயல்படுவதை வரிசையாய் பல உதாரணங்கள் வழி காணமுடியும்.

வல்லினத்தில் வெளியான எழுத்தாளர் தயாஜியின்  சிறுகதை ஒன்றினை காரணம் காட்டி வல்லினத்தையே ஒழித்துக்கட்டும் முடிவில் இறங்கியது தினக்குரல் (2013). வல்லினத்தின் கருத்துநிலைகளை ஒட்டிய எவ்வித விளக்கங்களுக்கும் இடம்தராமல், சாடுவதை மட்டுமே குறியாக வைத்து செயல்பட்டது அப்பத்திரிகை. விளைவாக, வல்லினம் குழுவினரின் முகநூல் பதிவுகளைக்கூட முகப்பில் போடும் மலினமான நிலைக்கு அது சென்றது. மலேசிய நண்பனும் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதலை மை ஸ்கில் அறவாரியத்தின் நிறுவனர் பசுபதியின் மேல் நடத்தியது குறிப்பிடத்தக்கது (பசுபதியின் மீது நிந்தனைச் சட்டம் பாய வேண்டும், மலேசிய நண்பன் தலைப்புச் செய்தி, 30.08.2016).  தமிழ் நேசனும் டத்தோ கீதாஞ்சலியின் இதுபோன்ற தாக்குதல்களை உபயோகித்தது (“ஓயமாட்டோம்” 27.11.2016).

இதுபோன்ற செய்திகளை அப்பத்திரிகைகள் தனிப்பட்ட காழ்ப்பு, அரசியல் நிலைப்பாடு, முன் விரோதங்கள் போன்றவற்றால் கட்டமைக்கின்றன. இச்செய்திகளால் சமுதாயத்திற்கு எவ்விதத்திலும் பலனில்லை என்பதோடு குறிப்பிட்ட தரப்பினரைத் திருப்திப்படுத்தவும் வேண்டாதவர்களை ஒழித்துக் கட்டவும் தங்கள் பத்திரிகை பலத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மறுபுறம், தங்களுக்கு வேண்டப்பட்டவரை  உயரத்தில் உட்காரவைக்கவும் அவர்களை மிகப்பெரிய ஆளுமைகளாகவும் தொண்டர்களாகவும் காட்டிக் கொள்ளவும் தமிழ் நாளிதழ்களைப் பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையாகி விட்டது.

இவற்றுக்கெல்லாம் மேலாக, தமிழ்ப் பத்திரிகையை நடத்துபவர்கள் பத்திரிகைச் செய்திகளில் தங்களை முன்னிறுத்தும் வேலையை மிக லாவகமாகச் செய்கின்றனர். இனப்பிரச்சனை, மொழிப் பிரச்சனை போன்ற சிக்கல்களுக்கு பதிலை சொல்லுபவர்கள் போல் முன் வந்து தங்களை முன்னிறுத்துகின்றனர். இவர்களின் புகைப்படங்கள் நாளிதழில் அடிக்கடி வருவதை காணலாம். அதுவே அரசியலின் முதல் நாற்காலியில் அமர அவர்களுக்கான உபாயம். உதாரணமாக தமிழ் நேசனில் வேள்பாரியைச் சொல்லலாம். சமுதாயப் பிரச்சினைக்கு குரல் கொடுப்பதாக பத்திரிகையில் அறிக்கைவிடும் பாணியில் செய்திகள் வேள்பாரியின் முகத்தோடு வரும், (ஓயமாட்டோம்,27.11.2016) பிரதமருக்கு எதிராக வீண் பழி (22.07.2016), ஆழமான அடித்தளம் மீஃபா ( 22.07.2016), அமெரிக்க நீதித் துறையின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் (20.6.2017) போன்ற தமிழ் நேசன் செய்திகள் வேள்பாரியின் முகத்துக்கு முக்கியத்துவம் தருபவை. எவ்வித ஆழமான சிந்தனையும் இல்லாத வெற்றறிக்கைகளை வெளியிட்டு அதிகாரத் தரப்புக்கு தன் ஆதரவை தெரிவிப்பதோடு தன்னையும் அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்களாக காட்டிக்கொள்ளும் விளம்பரங்களாகவே இச்செய்திகள் அமைகின்றன. இது ன்று தாய் மொழிப் பத்திரிகையில் டான் ஶ்ரீ கேவியெஸ், மக்கள் ஓசையில் டத்தோ சி.சுந்தர், தமிழ் மலரில் ஓம்ஸ் தியாகராஜன் ஆகியோர்களின் முகங்களை அவரவர் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன. நாளிதழ் என்பது மெல்ல அவரவர் இல்லத்து ஆல்பமாக மாறி வரும் அவலத்தை சமகால பத்திரிகைச்சூழலில் காண முடிகிறது.

சமூகமும் தமிழகமும்

தமிழ்ப் பத்திரிகைகளின் முன்பக்கச் செய்திகளில் காணப்படும் வியாபார உத்திகள் அதன் தரத்தையும் சமூக அக்கறையையும் நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றன.  எடுத்துக்காட்டாக, உலகப் புகழ் பெற்ற போராளி பிடல் காஸ்ட்ரோ இறந்த செய்திக்கு பத்திரிகையின் முன் பக்கங்கள் முக்கியத்துவம் தராத பட்சத்தில் கபாலி டீசருக்கு முக்கியத்துவம் தந்திருப்பதைக் குறிப்பிடலாம் (மக்கள் ஓசை முன்பக்கம், கபாலி 10.07.2016.), (கரும்பு தேசத்தின் கம்பீரம் சாய்ந்தது, பிடல் காஸ்ட்ரோ. மக்கள் ஓசை 27.11.2016.பக்கம்16). மலேசியத் தமிழ் தினசரிகள், கட்சி செய்திகளையும், தமிழ்ச் சினிமா கவர்ச்சியையும் நம்பித்தான் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன. மேலும், வெளிநாட்டுச் செய்திகள் என்றாலே தமிழகச் செய்திகள் மட்டுமே என்ற புரிதலில் முன்பக்கமும், உள்ளே இரண்டு பக்கங்களும் ஒதுக்கப்படுகின்றன. தமிழ்ப் பத்திரிகைகளுக்குத் தெரிந்த உலக வரைபடம் தமிழ் நாடு மட்டுமே. மலேசியத் தமிழ்ப் பத்திரிகையை வாங்கிப் படிப்பதில்,  மலேசியத் தமிழர்களைவிட இங்கு பணிபுரியும் தமிழகத் தமிழர்கள் அதிகம் என்பது பத்திரிகை முதலாளிகளின் கணிப்பு. ஆயினும் இது எந்த அளவிற்கு நம்பகமானது என்பதை நாளிதழ் நிர்வாகிகள் ஆதாரபூர்வமாக நிரூபணம் செய்ததில்லை.

இளைஞர்கள் புறக்கணிப்பும் நாளிதழ்களின் அருவருப்பும்

இளைஞர்கள் தமிழ் தினசரிகளை நீங்கி நெடுநாட்களாகிவிட்டன. ஆனால் எந்தப் பத்திரிகையும் இதை அறிந்ததாகத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளின் மேல் ஏற்பட்டுள்ள பெரும் அவநம்பிக்கை பத்திரிகைகளின் மேலும் விழ அதன் பொறுப்பற்ற தன்மையே காரணமாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் தமிழ் நாளிதழ்களை புறக்கணிக்கும் காரணங்களை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.

வடிவமைப்பு

நிபுணத்துவம் அற்ற வடிவமைப்பும் பொருத்தமற்ற வண்ணங்களை தேர்வு செய்வதும் நாளிதழ்களின் தரத்தைக் குறைக்கின்றன. நாளிதழ்களுக்கு இருக்க வேண்டிய நிபுணத்துவமான வடிவமைப்புக்கும் ஜனரஞ்சக இதழ்களுக்கு இருக்கவேண்டிய வண்ணமயமான வடிவமைப்புக்கும் வேறுபாடு தெரியாத நிலையில் நாளிதழ்கள் செயல்படுகின்றன. இது இக்கால படித்த இளைஞர்களின் ரசனைக்குப் பொருந்தாத வடிவமைப்புப் பாணியாகும்

ம.இ.காவை மையமிடும் போக்கு

தமிழ் நாளிதழ்கள் கடந்த முப்பது ஆண்டுகளாகவே ம.இ.கா என்னும் அரசியல் கட்சியின் சாதனைகளையும் அடிபிடிகளையும் அவதூறுகளையும் செய்தியாக்குவதை மட்டுமே தங்கள் முக்கிய பணியாக செய்து கொண்டுள்ளன. ஆயினும் கடந்த பத்து ஆண்டுகால தேசிய அரசியலில் ம.இ.காவின் இடம் மிகவும் குறுகிவிட்ட நிலையில் பல இளைஞர்கள் மாற்று கட்சி அரசியலில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாளிதழ்கள் தங்கள் ‘மரபை’ விட்டுக் கொடுக்காமல் ம.இ.கா வை மட்டுமே மையமிட்டு செய்திகள் போடுவதும் அதிலும் அக்கட்சியின் பூசல்களை தேசிய பிர்சனையாக பாவனை கொடுப்பதும் இளையோரிடையே கூடுதல் வெறுப்பையே ஏற்படுத்துகிறது.

வட்டாரச் செய்திகள்

தமிழ் நாளிதழ்களில் வட்டாரச் செய்திகள் குறைந்தே காணப்படுகின்றன. குறைவான நிருபர்களையும் அவர்களுக்குக் குறைவான வசதிகளையும் செய்துக்கொடுக்கும் தமிழ்ப்பத்திரிகைகளால் புதிய செய்திகளைத் திரட்ட முடிவதில்லை. புலனத்தகவல்களையும் முகநூல் தகவல்களையும் நகல் எடுத்து பக்கங்களை நிரப்பிக் கொள்ளும் நாளிதழ்கள் நிருபர்களுக்குப் போதிய மரியாதை கொடுப்பதில்லை. ஆங்கில பத்திரிகைகளில் ஒரு நிருபர் பெரும் கமிஷனைக்கூட சம்பளமாகப் பெறமுடியாத தமிழ் நாளிதழ் நிருபர்கள் பலர் கடனாளிகளாகி அரசியல்வாதிகளின் தயவை நாடி இருப்பதால் அவர்களின் காலைச் சுற்றியே வந்து செய்திகளைப் பிரசுரிக்கின்றனர். தமிழ் தினசரிகளைப் பொறுத்தவரை வட்டாரச் செய்தி என்பது உள்ளூர் அரசியல் பிரமுகரின் முகத்தைப் படம் பிடித்துப் போடுவதாகவே மாறிவிட்டது. மிகவும் குறைவான அல்லது ஏற்கனவே மின்னூடங்களில் வந்த தகவல்களை வட்டார செய்தியாக்கி போடுவதால் இளைஞர்கள் நாளிதழ்களின் பக்கம் வருவது குறைந்துவிட்டது.

பத்திகள்

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் சமகால அரசியல், பொருளாதாரச் சிக்கல் குறித்து தங்கள் சிந்தனையைப் பகிரும் இடமாக நாளிதழ்கள் செயல்படுவதில்லை.  தமிழ் நாளிதழ்களைப் பொறுத்தவரை அதன் உரிமையாளர்களே புத்திஜீவிகள். அவர்கள் எது குறித்தும் கருத்துச் சொல்வர். அதுவும் முதல் பக்கத்தில் முகத்துடன் வரும். எந்த மாற்றுச் சிந்தனைக்கும் விவாதத்திற்கும் இடமில்லாத நாளிதழ்களாக தமிழ் தினசரிகள் மாறிவிட்டன. அறிவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மூலமாக பத்திகளைப் பெறுவதில் ஆங்கிலம் மற்றும் மலாய் பத்திரிகைகளை தமிழ் நாளிதழ்கள் முன்னுதாரணம் கொள்ள வேண்டும்.

கல்வி மற்றும் தொழில்

சமகாலக் கல்வி அல்லது தொழில் வாய்ப்புகள் குறித்து தமிழ் அல்லாத பிறமொழி நாளிதழ்கள் காட்டும் அக்கறை ஆச்சரியமானது. அடுத்த தலைமுறை மீது தாங்கள் கவனம் வைத்துள்ளதாக இந்த நாளிதழ்கள் காட்டும் முனைப்பு இளைஞர்களைக் கவரக்கூடியது. முதல் பக்கத்தில் அதிமுக – திமுக அல்லது பாரிசான் – பி.கெ.ஆர் என கட்சி அரசியலை முன்வைத்து பிழைப்பு நடத்தும் நாளிதழ்களின் தேவை இளைஞர்கள் மத்தியில் குறைவு. அவர்கள் நாளிதழ்களில் தங்கள் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் பொருளாதாரத்தில் உயர்வதற்கான வழிகளையுமே தேடுகின்றனர் என்பதை பத்திகைகள் உணரவேண்டும்.

கேளிக்கை

கேளிக்கை என்பது தமிழ் நாளிதழ்களைப் பொறுத்தவரை சினிமாச் செய்திகள் மட்டுமே. சினிமாவின் மூலம் வாசகர்களை இழுத்த காலகட்டம் முடிந்துவிட்டது. மீன் பிடித்தல் முதல் வாகனப் பராமரிப்பு வரை இளைஞர்களின் சமகால ஆர்வத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட நாளிதழ்கள் இன்னும் பிற இனத்தின் மத்தியில் கோலோச்சியே வருகின்றன. இன்றும் நாளிதழ்களில் விளையாட்டுச் செய்திகளை வாசிக்க மட்டுமே அதை வாங்கும் வாசகர் கூட்டம் ஒன்று உள்ளது என்பதை நாம் அறிவோம். தமிழ் நாளிதழ்களில் ஞாயிறு பதிப்புகளில் வரும் சமையல் குறிப்புகளும் கோலம் போடும் வழிகாட்டிகளும், தோட்டக்கலை,  நாட்டு வைத்திய துணுக்குகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளன. அதிலும் இன்று அவை இணைய அகப்பக்கங்களில் இருந்து நகல் எடுக்கப்பட்டவை என்பது நாளிதழ்களின் மெத்தனப் போக்கையே காட்டுகின்றது.

சிந்தனையாளர்கள் உருவாக்கம்

ஆங்கிலப் பத்திரிகைகள் இளம் தலைமுறையை சிந்தனையாளர்களாக உருவாக்க செய்யும் நூல் அறிமுகம், கேளிச்சித்திரம், குறுக்கெழுத்து போன்ற விளையாட்டுகள் தினந்தோரும் இடம்பெறுகின்றன. மாணவர்களின் கற்பனை ஆற்றல் வளரவும் புதியனவற்றைத் தேடிச்செல்லவும் ஆங்கில, மலாய் நாளிதழ்கள் வாசல்களாக உள்ளன. தமிழ் நாளிதழ்கள் அரசாங்கத் தேர்வுகளை மையப்படுத்தி மாணவர் பக்கங்களை உருவாக்குதற்கு மட்டுமே மெனக்கெடுன்றன.

சீன நாளிதழ்கள் –ஓர் ஒப்பீடு

மலேசிய தமிழ் நாளிதழ்களின் குறைநிறைகள் குறித்து நாம் விவாதிக்கும் தருணத்தில் இதே நாட்டில் வெளிவரும் பிறமொழி நாளேடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் முக்கியம். இதில் ஆங்கில நாளிதழ்களும் மலாய் நாளேடுகளும் பரந்த வாசகப் பரப்பையும்  பெரிய முதலீடுகளையும் கொண்ட நாளேடுகளாகும். ஆகவே அவற்றின் செய்தி தரம் குறித்த மதிப்பீடு வேறாக இருக்கலாம். ஆனால் தமிழ் நாளேடுகளின் அதே கால கட்டத்தில் இந்நாட்டில் வெளிவரும் மற்றொரு தாய்மொழி நாளிதழான சீனப் பத்திரிகைகள் குறித்து நாம் அறிந்திருப்பது அவசியம், அவற்றின் செய்தித் தரம், உள்ளீடு, ஊடக அறம் போன்ற கூறுகளை தமிழ் நாளேடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமது நிலை தெளிவாகப் புலப்படும்

சீன நாட்டு மக்களின் மலேசிய குடியேற்றத்தில் இருந்து ஆரம்பமாகிறது சீனப் பத்திரிகை வரலாறு.  இந்தோனேசியா போன்று மலேசியாவில் சீன நாளிதழ்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை. ஆகவே புருணய் நாடு வரையிலும் பரவிவிட்ட சீன நாளிதழ்கள் இணையதளத் தகவல் தொழில் நுட்பத்திலும் வெற்றி அடைந்து வருகின்றன. 1. Nanyang Siang Pau  2.Sin ChewJit Poh, 3.Guang Ming Daily, 4.China Press,5.Kwong Wah Yit Poh,6.Oriental Daily News, 7.Overseas Chinese Daily News, 8.See Hua Daily News, 8.United Daily ஆகிய நாளிதழ்கள் மலேசியாவில்  வெளிவரும் சீனப் பத்திரிக்கைகைகளாகும் . இவைகளில் Kwong Wah Yit Poh (1910),Nanyang Siang Pau(1923),Sin Chew Jit Poh(1929),Overseas Chinese Daily News(1932),ChinaPress (1946) ஆகியவைகள் காலம் கடந்து நிற்கின்றன. நாட்டின் இரண்டாவது பெரிய சீன  சமூகமான தியோங்ஹுவா சமூகத்தின் பெருக்கத்திற்கு சீனப் பத்திரிகை முக்கிய பங்காற்றி உள்ளது. NANYAANG என்பதே புதிய வாழ்க்கையைத் தேடுதல் என்று பொருள்படுகிறது.( Jurnal Pengajian Media Malaysia Vol 13,No 2, 2011, பக்கம் 111-133)

அரசாங்கக் கொள்கைகளை எதிர்த்தோ அல்லது தனி மனிதப் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து, சீனப் பள்ளிகளுக்காகப் போராடும் போக்கையோ சீனப் பத்திரிகைகள் கொண்டிருக்கவில்லை. பண்பாட்டைக் காக்கும் நடவடிக்கையில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கலுக்கும் அது போராடியதில்லை. மாறாக, சீனர்களின் பண்பாட்டையும் அவர்களின் அடையாளத்தையும் காக்கும் பொறுப்பையே சீனப் பத்திரிகைகள் இதுவரையிலும் செய்து வருகின்றன. (Jurnal Pengajian Media Malaysia Vol 13,No 2, 2011, பக்கம் 111-133)

எடுத்துக்காட்டாக, நாட்டின் துணைப்பிரதமராக இருந்த டத்தோ ஸ்ரீ அன்வார், சீனப் பள்ளிகளில் சீன மொழி தெரியாத சீனர்களைத் தலைமை ஆசிரியராகவும், அல்லது துணைத் தலைமை ஆசிரியராகவும் நியமிக்கலாம் எனும் திட்டத்தைக் கையில் எடுத்தபோது அதனை வன்மையாகவும் வெளிப்படையாகவும் எதிர்த்து எழுதியது சீனப் பத்திரிகை. தங்களின் மொழி அடையாளங்களை அழிக்கும் சதியாக அவர்கள்  அத்திட்டத்தைச் சாடினர். மேலும் உயர்கல்விக் கூடங்களில் வாய்ப்புகளை அதிகரிக்கும் பொருட்டு மெர்டேக்கா பல்கலைக்கழகம் வேண்டும் என்று குரல் கொடுத்தனர். மலாக்காவில் உள்ள புக்கிட் சீனா சமாதி இடத்தை மேம்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் அரசாங்க திட்டத்தை எதிர்த்ததும் சீனப் பத்திரிகைகள் போர் தொடுத்தனர்

சீனப் பத்திரிகைகளுக்குப் பொருளாதார பலம் எந்த அரசியல் சார்பிலிருந்தும் வரவில்லை. அவற்றுக்கு சீனர்களின் அடையாளத்தைக் காக்கும் உணர்வுள்ள தொழில் அதிபர்களின் முதலீடே உயிர்நாடி.

மலேசியாவில் சீன நாளிதழ்களின் போக்கு, பிற இனப் பத்திரிகைகள்  அவர்களைக் கண்காணிக்கும் அளவிற்குத் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்து வருகிறது.  அரசாங்கத்தின் கொள்கைகளை மக்களுக்குக் கொண்டு செல்வதிலும், மக்களின் எண்ணங்களை அரசாங்கத்திடம் தெரிவிப்பதிலும் அவர்களின் செய்திகள் முக்கியத்துவம் தருகின்றன. உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள், மாநிலச் செய்திகள் என்ற வகையில் தகவல் நிறைந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். மக்களுக்குத் தெரிய வேண்டிய செய்திகளை அவர்களுக்கு வழங்குவதில்  ஒளிவு மறைவு கொண்டிருக்கவில்லை.இருப்பினும் பல்லின மக்கள் வாழும் மலேசிய நாட்டில் சொல்ல வேண்டிய தகவல்களைச் சொல்லும் பொழுது வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகச் செயல்படுகின்றன.  நீண்ட காலமாக சீன நாளிதழ்கள் மாலைப் பதிப்பையும் வெளியிட்டு வருகின்றன. ஆகவே நடந்த சம்பவங்களின் செய்திளை  உடனுக்குடன்  மக்களுக்கு கொண்டு செல்வதில் சீனப் பத்திரிகைகள் முன்னனி வகிக்கின்றன.

முன் பக்கச் செய்திகளில்,  குறிப்பாகத்  தலைப்புச் செய்திகளில் நடப்பு விவகாரங்கள் பேசப்படுகின்றன. இந்த நடப்பு விவகாரங்கள் பத்திரிகைக்குப் பத்திரிகை வேறுபடுகின்றன.

மேலும் சீனப் பத்திரிகைகையில் வெளிவரும் தலையங்கமும்,  நடப்பு விவகாரம் குறித்து பத்தியாளர்கள் எழுதும் கருத்துக்களும் பிற மொழிப் பத்திரிகையில் ( உதுசான் மலேசியா) மொழி பெயர்த்து பிரசுரம் செய்து வருகிறார்கள். சீன வாசகர்களின் மத்தியில் உள்ள அரசியல்,பொருளாதாரம் குறித்த எண்ணங்களை சீனப் பத்திரிகைகள் எப்படி கையாள்கிறார்கள்? அவர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்? அவர்கள் எதைக்  குறித்து அதிகமாகப் பேசுகிறார்கள்? அரசாங்கத்தின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் பார்வைகள் யாவை? என்பதனை அறிந்து கொள்ள உதுசான் போன்ற நாளிதழ்கள் இதற்கென்றே ஓர் அங்கதிற்கு இடத்தை ஒதுக்குகின்றனர். (உதுசான் மலேசியா Isu Isu Akhbar Cina).

உதாரணமாக, ‘ஏன்  இப்போது மகாதீர் அவ்வளவு முக்கியம்?’ என்ற தலைப்பில்,  மார்ச் மாதம் 11,2017-இல்,Oriental Daily News நாளிதழில் 45ஆவது பக்கத்தில் டாக்டர் ஹியூ குவான் ஹியூ (Dr. Hew Kuan Yew ) எழுதிய  பத்திகட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரையை உதுசான் மலேசியா மொழிப் பெயர்த்து மார்ச் 16,2017-இல் பிரசுரம் செய்து விமர்சனமும் செய்திருந்தது. 13ஆவது பொதுத் தேர்தலில் நடந்த அரசியல் சுனாமிக்குப் பிறகு சீனப் பத்திரிகைகளில் வெளிவரும் கருத்துக்கள் அதிகமாகக் கண்காணிக்கபடுக்கப்பட்டு வருகின்றன. சீனச் சமுதாயத்தின் சிந்தனை மாற்றங்களுக்கு அவர்களின் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் பங்கு வகிக்கின்றன.

சீனப் பத்திரிகைகள்  செய்திகளை வெளியிடுவதில் தைரியமானவர்கள். நாட்டின் பொருளாதாரம் குறித்த செய்திகளில் மக்களுக்கு நடப்பு நிலவரத்தை மறைக்காமல் சொல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.அரசியல் செய்தியாக இருந்தால் தலைமைத்துவத்தின் இயலாமையைச் சுட்டிக்காட்டும் கட்டுரைகளைப் பிரசுரிப்பதில் தயக்கம் காட்டமாட்டார்கள். உரிமையைக் கேட்பதிலும் அவர்களின் செய்தி பலமாகத்தான் நிற்கிறது. (CHANG WANG, Nanyang Siangpau, கருத்து அங்கம், 29 ஏப்ரல் 2017,) (சீன நாட்டு வரவு அதிர்ச்சியைக் கொண்டுவந்துள்ளது,ODN பக்கம்  46, கட்டுரையாளர் Cheah See Kian).
.
ஒரு செய்தியில் மற்றோரு தரப்பினரின் கருத்துக்களையும் சேகரித்துச் சொல்வதில் பத்திரிகையின் தர்மமாகக் கருதுகிறார்கள். காதால்கேட்கும் செய்திகளை அதன் உண்மைத்தன்மையை அறியாமல் சீனப் பத்திரிகைகள் பிரசுரம் செய்வதில்லை. மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவலைக் கொண்டு சேர்ப்பதுதான் சீனப் பத்திரிகைகளின் முக்கிய நோக்கமாகும்.

ஆகவே நாம் தமிழ் நாளிதழ்களை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்த சீனப் பத்திரிகையின் பல்வேறு கூறுகளை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்  என்பதே நிதர்சனம்.

நிறைவாக

n_pg25tamilசெய்திகளையும் தகவல்களையும் துரிதமாகப் பெற இணையமும் தொலைத்தொடர்பு வசதியும் பெருகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். வழக்கமான அரசியல் சலசலப்புகளையும் திரைப்பட கவர்ச்சியையும் மூலதனமாக்கி நாளிதழ் நடத்த முடியாது. அதேபோல் மொழி உணர்வு, இன உணர்வு சமய எழுச்சி என்ற பரப்புரைகளை முன்னிருத்தியும் நாளிதழ்களை நடத்தி கொண்டிருக்க முடியாது. மாறாக Y தலைமுறை இளைஞர்கள் தமிழ் நாளிதழ்களை நாடி வர என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்று திட்டமிடுவதே நாளிதழ் நிர்வாகிகளின் தலையாய பணியாக இருக்க முடியும்

இன்று தமிழ் நாளிதழ்கள் அதன் வடிவமைப்பு முதல் செய்திகளின் தரம் முதல் பல்வேறு நிலைகளிலும் மிகவும் பின் தங்கி இருப்பதைத் தெளிவாக உணர்த்த வேண்டியுள்ளது. அதேப் போல் தமிழ் தாளிதழ்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள கையாலும் கட்சி அரசியல் சார்புகளும், தமிழ் மொழி, தமிழ் இன உணர்ச்சி சார்ந்த கொந்தளிப்புகளும் இளைஞர்களுக்கு உண்மையிலேயே பயன் அளிக்கக்கூடியவையா என்றும் ஆராய வேண்டும். கட்சி தலைவர்களின் ஊதுகுழலாய் இருப்பதே நாளிதழ்களின் முக்கிய பணி என்ற தோற்றத்தை அறிவார்ந்த இளைய சமூகம் கண்டிப்பாக புறக்கணிக்கவே செய்யும்.

முன்பே குறிப்பிட்டது போல் ஆதி குமணனுக்குப் பின்னான நாளிதழ் ஆசிரியர்கள் எந்த ஒரு கொள்கையிலும் வழுவான பிடிமானம் இல்லாமல்தான் தங்கள் பணியைச் செய்து வருகின்றனர். ஆயினும் தங்களை முன்னிருத்த திராவிட கருத்துகளைப் பேசுவதும், சாதி மறுப்பு, சமய புரட்சி என்று எழுதுவதும் மிகவும் போலியான செயல்பாடுகளாகவே அமைகின்றன. மலேசியாவில் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திய சூழல் இன்று இல்லை. இனம், சமயம், மொழி போன்ற பல்வேறு நிலைகளிலும் இன்றைய இளைஞர்களின் கருத்துகள் வெகுவாக மாறியுள்ளன. தங்களை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அதே வேலை அறிவார்ந்த சமூகமாக தங்களை நிறுவிக் கொள்ளவே அவர்கள் முயல்கிறார்கள். ஆகவே மலேசிய தமிழ் இளைய தலைமுறைய அறிவார்ந்த சமூகமாக முன்னகர்த்த நாளிதழ்கள் பொருத்தமான திட்டமிடலில் இறங்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக இளைஞர்கள் வரை அவர்களைக் கவரக் கூடிய, அவசியமான அறிவு துறைகளைப் பற்றிய அறிமுகங்களை நாளிதழ்கள் வழக்க வேண்டும். இன்று தமிழ் நாளிதழ்களில் வெளிவரும் மாணவர் பகுதிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை யாவரும் அறிவர். கோ.சாரங்ககபாணி காலத்திய மாணவர் நடவடிக்கைகளையும் கட்டுரைகளையும் இன்னும் எத்தனை ஆண்டுக்கு தொடர முடியும்? மாணவர்களும் இளைஞர்களும் பள்ளியில் பெறும் தகவல்களைத் தாண்டி கூடுதல் அறிவுதுறைகளையும் கலை இலக்கிய ஆர்வத்தையும் தூண்டக் கூடியனவாக நாளிதழ்களின் மாணவர் பக்கம் இருக்க வேண்டும்.

இளைஞர்களைக் கவரும் பல்வேறு துறைகள் இன்று உள்ளன. அவை மனமகிழ் தொடர்பானதாகவும் அறிவுத்துறை சார்ந்ததாகவும் இருக்கலாம். குறிப்பாக நாளிதழ்களில் பல்துறை ஆளுமைகளைக் கொண்டு துறைசார்ந்த பத்திகளையும் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் வெளியிடுவது மிக அவசியம். இணையத்திலும் புலனத்திலும் வரும் தகவல்களை நகல் எடுத்து நாளிதழில் போட்டு இடத்தை நிரப்பாமல் புதிய படைப்புகளை கொடுக்க முயலவேண்டும். வாசகர்களை படைப்பாளர்களாக்குவதோடு தரமான படைப்புகளைத் துறைசார்ந்த ஆளுமைகளிடம் இருந்து பெற்று வெளியிட வேண்டும்.

சுருங்கச் சொல்வதானால், திராவிட அரசியல், பகுத்தறிவு உரையாடல்கள் ஆதி குமணன் காலத்துடன் தன் ஆயுளை முடித்துக்கொண்டன. இன்றைய தலைமுறைக்கு ஏற்ப சிந்திக்கும் ஆளுமைகள் இல்லாத தமிழ்ப் பத்திரிகைகள் திராவிட அரசியலை, பகுத்தறிவுவாதத்தை மையமிட முடியாமலும் சமகால அரசியல், பொருளியல், சமூகவியல் பார்வையில் புதிய போக்குகளை உருவாக்கும் திரணி இல்லாமலும் இருக்கின்ற குப்பைகளை சேகரித்து கோலாஜ் ஓவியங்களை உருவாக்கி வருகின்றனர். இந்த ஓவியம் காலத்தால் புறக்கணிப்பட்டுவிட்டதை அவர்கள் உணரும் நாளில் தரமான ஒரு நாளிதழ் இனித் தோன்றலாம்.

முற்றும்

 

கட்டுரையின் முதல் பகுதி

மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள்-1

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...