“விரிந்த வாழ்வின் விசித்திர அனுபவங்களே எனக்கான கதைகள்” – கே.ராஜகோபால்

01குறும்படங்களுக்கான போட்டி அறிவிப்பொன்றில்தான் கே.ராஜகோபால் எனும் இயக்குனரை முதன்முறையாக அறிந்தேன். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரைப்பற்றி அறிந்துகொள்ள மேலும் தேடியபோது நிறைய குறும்படங்களையும் ஒரு திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் என்றும் அறிந்தேன். அத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த நொடியில் அவர் எத்தனை முக்கிய படைப்பாளி என்பதை உணர முடிந்தது. அப்படம் “மஞ்சள் பறவை” (A Yellow Bird) சென்ற வருடம் கான்ஸ் படவிழாவில் திரையிடப்பட்டு சிறந்த திரைக்கதைக்காக விமர்சகர்களால் பாராட்டு பெற்றது என்ற செய்தி அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமளித்தது. விழாவில் அவரின் குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. மிக எளிய கதை. பிரிட்டிஷ் அரசு நாட்டிற்கு சுதந்திரமளித்து நிலத்தில் இருந்து வெளியேறும்போது தனக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்குப் பிரிட்டிஷ் குடியுரிமை அளித்து அழைத்துப்போவதாக சொல்கிறது. அவ்வரசிலேயே வேலை செய்த ஒருவர் தன் மகனிடம் நாமும் அவர்களுடனே சென்றுவிடலாம் என்று சொல்கிறார். அவரின் மருமகள் தாய்நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டில் இரண்டாம்தர குடிமக்களாக வாழ விருப்பம் இல்லை என்று எதிர்ப்பதுதான் கதை. சிங்கப்பூர் சுதந்திரமடைந்து ஐம்பதாண்டுகளை கடந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படம் அது. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அதன் காட்சிகள். அந்த நொடியிலிருந்து சிங்கப்பூரைத் தாய்நாடாகக் கொண்ட அவரை முக்கியமான படைப்பாளியாக வரித்துக் கொண்டது மனது. இந்தியப்படங்களையும் அமெரிக்கத் திரைப்படங்களையும் பார்த்து வந்த நேரத்தில் சிங்கப்பூரிலும் தரமான படங்கள் உருவாகிறது என்பது பெரும் ஆச்சரியமளித்தது. அவ்வாச்சரியத்தின் நீட்சி இந்த நேர்காணலை உருவாக்கித் தந்தது.

உங்கள் பால்யகாலம் எப்படி இருந்தது? எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள்.

கே.ராஜகோபால்: அப்பா ராணுவ அதிகாரி. குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். என் சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். படிக்க வைத்தது எல்லாம் அம்மாதான். அம்மாவுக்கு கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. நிறைய வாசிப்பார். இசைஞானம் உள்ள அவர் நன்றாகப் பாடுவதோடு சினிமாவும் பார்ப்பார். எங்களுக்கு அவர் வழியாக வாசிக்கும் பழக்கம் உண்டானது. சிறுவயதிலேயே அப்பாவை இழந்தாலும் நான் இன்றளவும் அவரை நினைத்துப் பார்த்துக் கலங்கும் ஒரு நிகழ்வு உண்டு. அப்போது அப்பாவிடம் “சினிமாவுக்கு கூட்டிட்டுப் போங்க,” என்று அழுது அடம்பிடித்திருந்தேன். தொடர்ந்த நச்சரிப்பின் காரணமாக ஒருகட்டத்தில் என்னை அழைத்துச் செல்ல சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனையோடு அழைத்துச் சென்றார். சினிமாவுக்கு போனதைப்பற்றி தம்பிகளோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது என்பதே நிபந்தனை. ‘மூன்றாம் பிறை’ என்ற கமலஹாசன் படம். எனக்கு மட்டும் சீட்டு எடுத்து உள்ளே அனுப்பினார். படம் முடியும்வரை வெளியே எனக்காகக் காத்திருந்தார். “ஏன் நீங்களும் வந்திருக்கலாமே!” என்று கேட்டபோது அவரிடம் ஒருவருக்கான காசு மட்டுமே இருந்ததாகவும் தம்பிகளிடம் சொன்னால் அவர்களும் அடம் பிடிப்பார்கள், அதனால்தான் யாரிடமும் சொல்லவேண்டாம் என மறுத்த உண்மையைச் சொன்னபோது மனம் வலித்தது. இப்படி அப்பாவின் நினைவுகள் ஏராளம் உள்ளன.

வாசிக்கும் பழக்கத்திலிருந்து உங்களுக்கு குறும்படங்கள் / சினிமா மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது? எப்போது முதல் குறும்படம் எடுத்தீர்கள்?

coverகே.ராஜகோபால்: அடூரின் படங்கள் தொடர்ச்சியாக பார்த்தது, மலையாளப்படங்கள் பார்த்தது, நாடகப்பிண்ணனி இதெல்லாம் சினிமா பக்கம் என்னைக் கொண்டு வந்தது. சிங்கப்பூர் அரசு குறும்படங்களுக்கான போட்டி அறிவித்தபோதுதான் நான்  குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். இப்போது கிடைக்கும் வசதிகள், வாய்ப்புகள் அந்தக் காலகட்டத்தில் இல்லாதிருந்தது முழுக்க முழுக்க சுயம்புவாக என்னை உருவாக்கியது. ஆர்வம் நிறைய இருந்தது. அந்த ஆர்வத்தில் நான் எடுத்த குறும்படம் விருது பெற்றது என்னை தொடர்ந்து இயங்க வைத்தது. பிறகு நிறைய குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். தொடர்ச்சியாக விருது கிடைத்துக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் விருதுகள் சலித்துவிட்டன. முழுப்படம் எடுக்கும் நம்பிக்கை எனக்குள் வந்த பிறகுதான் ‘மஞ்சள் பறவை’ எடுத்தேன்.

சிங்கப்பூரில் குறும்படங்களின் நிலை என்ன? அதற்கான வர்த்தக வாய்ப்புகள் உள்ளதா? முழுநீளப் படங்கள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளதா?

கே.ராஜகோபால்: இப்போதும் நிறைய குறும்படங்கள் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதுதான் முழுநீளப் படத்துக்கான முதல் படியாக நான் நினைக்கிறேன். இந்திய பட உலகம் போல பெரிய இயக்குனரிடம் பயிற்சி பெற்று பிறகு தனியாக படம் இயக்கும் முறை இங்கில்லை. ஒருவன் சினிமாவில் நுழைய ஆர்வமிருந்தால் குறும்படங்களில் இருந்துதான் தொடங்கியாக வேண்டிய சூழல் இங்கு உள்ளது. என் முதல் குறும்படம் இயக்கும்போது என் வயது முப்பது. அக்காலகட்டத்தில் திரைத்துறை என்ற ஒன்று இங்கில்லை. குறைவான மக்கள்தொகை கொண்ட சிறிய நாடு. அப்போது எனக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது. குறும்படத்திற்கான போட்டி ஒன்றை அரசு அறிவித்தது. அக்காலகட்டத்தில் அந்தத் துறைக்கான படிப்புகள் எதுவுமே இங்குப் பயிற்றுவிக்கப்படவில்லை. ஆர்வமிருப்பவர்கள், வசதியுள்ளவர்கள் வெளிநாடு சென்று பயின்றார்கள். என் அனுபவம் வேறு மாதிரி அமைந்தது. முதல் குறும்படம் இயக்க ஆரம்பிக்கும் முன்பு பத்து வருட காலம் மேடை நாடகங்கள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தேன். நடிப்பு, இயக்கம், வசனங்கள், திரைக்கதை போன்ற நுணுக்கமான விஷயங்கள் இயல்பாகவே எனக்குப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. அனைத்துமே ஆங்கில நாடகங்கள். நாடக இயக்குனர்களின் தொடர்ச்சியான அண்மையும் நட்பும் எனக்கு பெரும் உதவியாக இருந்தது. கூடவே இலக்கிய வாசிப்பு கதைகள் சொல்லும் முறையை வடிவமைக்க உதவியது. என் முதல் குறும்படத்தை கச்சிதமாக முடிக்க இந்த முன் அனுபவங்கள் இல்லாமலிருந்தால் அக்குறும்படம் சிறப்பான நிலையை அடைந்திருக்காது. அப்போது இருந்ததை விட இப்போது சூழல் மாறியிருப்பதாக உணர்கிறேன். நிறைய இளம் படைப்பாளிகள் சிறப்பான கதைகளோடு வருகிறார்கள். உலக அளவில் பேசப்படும் திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளில் இருந்து உலக சினிமாக்கள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக உணர்கிறேன். இயக்குனர்களுக்குப் பொருத்தமான தயாரிப்பாளர்கள் கிடைத்தால் இந்த நிலை மாறி நிறைய திரைப்படங்கள் உருவாகும் என்று நினைக்கிறேன்.

மஞ்சள் பறவை (A Yellow Bird) படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது வீடற்ற மனிதனின் கதையைப்போல உள்ளது. உலகம் முழுவதுமே வீடற்ற மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். சமீபத்தில் Richard Gare நடித்த Time out of mind படம்கூட அதுபோன்ற ஒன்றுதான். உங்களின் படம் எதைக்குறித்து பேசுகிறது?

கே.ராஜகோபால்: ஒரு மனிதன் தன்னுடைய சொந்த நாட்டிலேயே அகதி போல வாழ நேரும்03 கதையைத்தான் ‘மஞ்சள் பறவை’ பேசுகிறது. நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் என தோல் நிறத்தை வைத்து சிலர் கேட்பார்கள். இதே கேள்வி ஒரு சீனரை நோக்கி நீளாதது ஏன்? இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் பெரும்பாலானோர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாக இருப்பார்கள். ஏன் இந்தக்கேள்வி நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கிறது என்ற ஐயம் எனக்கு உண்டு. மஞ்சள் பறவை திரைப்படத்தில், ஒரு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற ஒருவனை சமூகம் ஒதுக்குகிறது. ஒதுக்கப்படும் மனிதன் என்னவாகிறான் என்பதைக் குறித்து படம் பேசுகிறது. இந்தக் கதையின் இன்ஸ்ப்ரேஷன்  ப்ரெஞ்ச் எழுத்தாளர் ஆல்பர் காம்யூ எழுதிய ‘Stranger’. நான் அதில் ஈர்க்கப்பட்டேன். அந்தக் கதையேகூட தஸ்தாயேஸ்கி எழுதிய ‘குற்றமும் தண்டனையும்’ படைப்பின் தாக்கத்தில் இருந்து உருவானது. ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில்கூட அதற்கு முன்பே வந்த ரஷ்ய படைப்பான ‘The Notes from the Underground’இன் பாதிப்பு இருக்கும். இதைல்லாம் வாசிக்கும்போது நான் கண்டடைந்தது எது என யோசித்தேன். மொத்த வாசிப்பும் ஒரு பெரும் கேள்வியாக என் முன் வந்து நின்றது.

What is Morality?

உங்களுக்கு நேர்மையாகப்படும் விஷயத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். எனக்கு நேர்மையாகப்படும் விஷயத்தில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். இதில் நான் சொல்வதுதான் சரி என்பது போல செயல்பட ஆரம்பிக்கும்போதுதான் சமூகத்தில் பிளவுகள் உண்டாகின்றன. ஒருகோணத்தில் பார்த்தால் ‘மஞ்சள் பறவை’ குற்றத்தையும் அதைத் தொடர்ந்த தண்டனையைப் பற்றியும் பேசுகிறது.

இலக்கிய வாசிப்புள்ள நீங்கள் உங்கள் குறும்படங்களுக்கான கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து பெறுகிறீர்களா அல்லது நீங்களே உருவாக்குகிறீர்களா?

கே.ராஜகோபால்: இளம்பருவத்தில் நாடகத்துறையில் இயங்கினேன் என்று சொன்னேன் அல்லவா? அக்காலகட்டத்தில் எனக்கு நிறைய குடும்பப் பொறுப்புகள் வந்து சேர்ந்தது. அப்பா இறந்த சமயம் அது. முழுநேரமும் இயங்கிக்கொண்டிருந்த நாடகத்துறையில் பிறகு பகுதி நேரமாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒத்திகைகள் எல்லாம் காலைவேளையில் நடக்கும். இரவு முழுக்க வேலை செய்து பிறகு பகலில் நாடக வேலைகளில் ஈடுபடுவது முடியாத காரியமாகப் பட்டது. குடும்ப சூழல் வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம். அப்போது நாடக உலகை முற்றிலுமாக தவிர்த்து பகுதி நேரப்பணிகளில் ஈடுபட்டேன். பெரும்பாலும் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள். உணவகங்கள், கடைகள், போன்ற இடங்களில் பணிபுரியும்போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. நாடக உலகில் கூட கிடைக்காத நிறைய கதைகள் அங்குதான் கிடைத்தன. நிஜ மனிதர்களின் கதையைப்போல சுவாரசியமான ஒன்றைக் கற்பனையில் உருவாக்குவது கடினம்.

வீராசாமி சாலையில் ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலை. இரவு வேலை முடிந்ததும் அங்கேயே தங்கி விடுவேன். அங்கே பலதரப்பட்ட எளிய மனிதர்கள் நிறைய பேரை சந்திக்க முடிந்தது. அடுத்த வேளை உணவுக்கு காசில்லாதவர், உறங்க வீடில்லாதவர், தொழில் செய்யும் பெண்கள், அவர்களை நிர்வகிக்கும் ஆண்கள், இங்கிருந்து ஐரோப்பாவிற்கு அகதியுரிமை கோரச் செல்பவர்கள், இந்திய வியாபாரிகள், இப்படி நிறைய மனிதர்கள் என் வாழ்வில் வந்தார்கள். இலங்கையைச் சேர்ந்த ஓர் இளைஞரிடம் பேசிக்கொண்டிருந்ததில் இலங்கைப் போர்ச்சூழல், அகதிநிலை கோரிச்செல்வதன் பிரச்சினைகள், சொந்தபந்தம் இழந்த பின்பான வலிகள் என இரவு ரணமாகிப்போனது. அவர்களின் பேச்சுமொழி வித்தியாசமானது அழகிய உச்சரிப்புகள் கொண்டது.

கடை மூடியபிறகு இரவு நேரத்தில் சிலர் நடைபாதை ஓரங்களில் தூங்குவார்கள். அவர்களை முதலாளி அறியாதவண்ணம் உள்ளே வந்து ஓய்வெடுக்கச் சொல்லி அதிகாலையில் வெளியேற்றி விடுவேன். முதலாளி இதுபோன்ற விஷயங்களை அனுமதிப்பதில்லை. அப்படி உள்ளே தங்கவைக்கப்படும் ஆட்களோடு உரையாடுவேன். நடைபாதையில் உறங்குபவர்களின் பொருட்கள் பெரும்பாலும் களவு போகும். பெருச்சாளிகள் கடிக்கும். ஒருநாள் ஒரு பெண்ணை சில முரடர்கள் துரத்தி வந்தார்கள். அப்பெண்ணை நான் முன்பே அறிவேன். அவளை வைத்து தொழில் செய்யும் ஆட்கள்தான் அவர்கள். அந்தப் பெண் ஓடிவந்து உணவகத்தின் கதவுகளைத் தட்டினாள். அன்று அவளை உணவகத்தில் ஒளித்து வைத்துக் காப்பாற்றினேன். பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட தன் கதையை அன்று இரவு சொன்னாள். அதுபோன்ற ஒரு சம்பவத்தை என் வாழ்நாளில் நான் சந்தித்திருக்கவில்லை. அன்றிரவே அச்சம்பவத்தை ஒரு கதையாக எழுதினேன். அரிய அனுபவங்களை இப்படிக் கதையாக என்  நாட்குறிப்பில் எழுதத் தொடங்கினேன். ஒருகட்டத்தில் நிறைய கதைகள் என்னிடமிருந்தன. அதெல்லாமே என் அனுபவங்களிலிருந்து பெற்றவை. அப்பெண்ணை சந்தித்ததை அடிப்படையாகக் கொண்டு . ‘I cant Sleep tonight’ என்ற என் முதல் குறும்படத்தை இயக்கினேன். அதற்கு நான் எதிர்பார்க்காத பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இப்படி வாழ்க்கையில் நான் கண்ட அனுபவங்களின் வழியாக கதைகள் உருவாக்குவதைத்தான் விரும்புகிறேன். சிலசமயங்கள் இலக்கிய வாசிப்பு அதற்கு உதவும் ஆனால் கதைகளை என் வாழ்விலிருந்தான் எடுக்கிறேன்.

வாழ்வு விரிவானது. அதில் கதையை எப்படி முடிவு செய்கிறீர்கள்? எப்படி அது உங்கள் கவனத்துக்கு வருகிறது?

கே.ராஜகோபால்: என் தாத்தா மூன்றாவது வரைக்கும்தான் படித்தார். ஆனால் பிரிட்டிஷ்காரர்களே வியக்கும் அளவுக்கு ஆங்கிலம் பேசுவார். வெள்ளைக்காரர்களோடு வேலை செய்து வெள்ளைக்காரராகவே வாழ்ந்தவர் அவர். சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலேயப்படைகள் இங்கிருந்து போகும்போது எங்களுக்கும் சேர்த்து பிரிட்டிஷ் பாஸ்போர்ட் கொடுத்தார்கள். அப்போது என் அம்மா போக மறுத்துவிட்டார். சொந்தநாடு இருக்கும்போது நாம் ஏன் அங்கு சென்று இரண்டாம் தரக் குடிமக்களாக வாழவேண்டும் என தாத்தாவை எதிர்த்து என் அம்மா கேள்விகேட்டார். இதைப் பிண்ணனியாக வைத்து நான் இயக்கியதுதான் ‘7 letters’. வாழ்வு விரிவானதுதான்; அதன் விசித்திரமான அனுபவங்கள்தான் எனக்கான கதை.

‘மஞ்சள் பறவை’யில் சீமா பிஸ்வாஸ் எப்படி வந்தார். இந்தியர்கள் கண்ணியமாக மதிக்கும் நடிகை சிங்கப்பூர் படத்திற்கு வந்த பிண்ணனி சொல்லுங்கள்.

கே.ராஜகோபால்: கான் படவிழாவிற்கு நந்திதா தாஸ், சீமா பிஸ்வாஸ் ஆகியோர் வந்திருந்தனர். ‘மஞ்சள் பறவை’ படத்தின் திரைக்கதை கான் படவிழாவில் தேர்வாகி இருந்தது. எனக்கும் அவருக்குமான பொதுவான நண்பர் மூலம் தொடர்புகொண்டு இந்தப் படத்திற்குள் வந்தார். வாழ்வில் நான் சந்தித்த மிக மிக எளிமையான நடிகை சீமா. படத்திற்காக விஷயங்களை அவர் கவனித்த விதம் பிரமிக்க வைத்தது. கார் வேண்டாம் என்று மறுத்து பேருந்தில் வந்தார். அவருக்கான உடைகளை அவரே மார்க்கெட் சென்று வாங்கிக்கொண்டார். பெரிய ஹோட்டல்களில் தங்க மறுத்து சாதாரண ஹோட்டல்களில் தங்கினார். மிகப்பெரிய நடிகை எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் புதிய விஷயங்களைக் கற்று நடித்தது பிரமிப்பான விஷயம். படத்தில் அவருக்கு வசனமே அதிகம் இல்லை. எல்லாமே முகப்பிரதிபலிப்புதான். அவ்வளவு துல்லியமாக இருந்தது அவரின் நடிப்பு. ஏன் அவர் சிறந்தவராக பேசப்படுகிறார் என்பதற்கான பதில் அவருடன் பழகிய நாட்களில் அறிந்துகொண்டேன்.

உங்களைக் கவர்ந்த படைப்பாளிகள், படைப்புகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா?

கே.ராஜகோபால்: பிரிட்டிஷ் இயக்குனர் மைக் லி  (Mike Leigh) டர்க்கிஷ் இயக்குனர் நூரி செலன் (Nuri Bilge Ceylan) க்ரீஸ் இயக்குனர் யர்கெஸ் லந்திமஸ் (Yorgos Lanthimos) இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அவர்களோடு இணைத்துப் பார்க்கும்போது நான் இன்னும் ஒன்றுமே செய்துவிடவில்லை என்று தோன்றும். அவர்களின் சிந்தனைத் தளமே வேறு. என்னை ஓர் இயக்குனர் என்று சொல்லிக்கொள்வதில் கூச்சமடையச் செய்யும் படைப்பாளிகள் அவர்கள். க்ரீஸ் நாட்டின் லேண்ஸ்கேப் இன் தி மிஸ்ட் (Landscape in the mist) போன்ற படம், டெரன்ஸ் மாலிக் (Terrence Malick)படங்கள் என நிறையவே என்னை பிரமிக்க வைத்தத் திரைப்படங்கள்  இருக்கிறது. அதைப்பற்றிப் பேசவேண்டும் என்றால் ஒருநாள் கூட போதாது.

இந்தியப் படங்கள் பார்ப்பவர் எனில். உங்களுக்குப் பிடித்த இயக்குனர் யார்?

கே.ராஜகோபால்: அடூர் கோபாலகிருஷ்ணன் படம் பார்த்தபோது எனக்குள் பல புதிய திறப்புகள் உண்டானது. அவரையே என் ஆதர்சமாக எடுத்துக்கொண்டேன். முதலில் அவர் படத்தை நான் லண்டனில் படிக்கும்போது அங்குள்ள அமைப்பு ஒன்றின் விழாவில் பார்த்தேன். அந்தப்படத்தை பரிந்துரைத்தது எனது அம்மா. அவர் இந்தியா சென்றிருந்தபோது அங்கே பார்த்திருக்கிறார். என்னுடைய ரசனைக்கு ஏற்றதுபோன்ற படம் எனக் கண்டிப்பாக பார்க்கச் சொன்னார். அப்படிப் பார்த்த படம்தான் ‘எலிப் பத்தாயம்’. அத்திரைப்படம் என்னை இத்துறை நோக்கி இழுத்தது. அதை நோக்கியே என் கனவுகள் நீண்டன. நான் உருவாக்கிய குறும்படமான ‘I Cant Sleep Tonight’ 1995  குறும்பட விழாவில் நடுவராக இருந்த அடூர் கோபாலகிருஷ்ணன் மூலம் தேர்வு பெற்று விருதும் கிடைத்தது. அவர் கைகளாலேயே விருது வாங்கியது மறக்க முடியாத அனுபவம். நாம் ஆதர்சமாக நினைக்கும் ஒருவரின் கைகளால் விருது பெறுவதைவிட வேறு என்ன பெரிய அங்கீகாரம் கிடைத்துவிடப் போகிறது. அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். உங்களோடு பணிபுரிய விருப்பம் எனச் சொன்னேன். “எதையும் எதிர்ப்பார்க்காம என்கூட ஐந்து வருடம் ட்ராவல் பண்ணனும்… முடிஞ்சா என்கூட வரலாம்” என சொன்னார். அந்தச் சமயத்தில் என்னால் போக முடியவில்லை. நிறைய குடும்பப் பொறுப்புகள் இருந்தன. விடமுடியாத சூழ்நிலை. ஒருவேளை அன்று அவரோடு ஐந்து வருடங்கள் செலவிட்டிருந்தால் என் வாழ்க்கை வேறு திசையில் பயணித்திருக்கும்.

தமிழ்த்திரையில் மிகப் பிடித்த படைப்பாளிகளாக பாலச்சந்தர், ருத்ரய்யா, ஆர்.சி.சக்தி, பாலுமகேந்திரா ஆகியோரைச் சொல்வேன். பிற்பாடு மணிரத்னம் வந்தார். அவரின் திரைமொழி மிகவும் ஈர்த்தது. ஆனால் இப்போதைய மணிரத்னத்தின் படங்கள் பார்க்கவே முடியாததாக இருக்கிறது.

அடக்குமுறை அதிகம் இருக்கக்கூடிய, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நாடுகளிலிருந்து தரமான உலக சினிமாக்கள் வருகின்றன. சர்வ சுதந்திரமும், பொருளாதார வசதியும் படைத்த சிங்கப்பூரிலிருந்து அப்படிப்பட்ட படங்களை எதிர்பார்க்கலாமா?

கே.ராஜகோபால்: ‘மஞ்சள் பறவை’ திரைப்படம் ப்ரொஜக்டர் தியேட்டரில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது.  திரையிட்ட பின் பார்வையாளர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் நிறைய சிங்கப்பூரர்கள் கேள்வி கேட்டார்கள். “படத்தில்  பாலியல் தொழில் செய்யப்படும் இடங்களாக எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் குறித்து சிலர் அதிர்ச்சியடைந்தனர். படத்தில் வருவது போன்ற சூழ்நிலை எல்லாம் சிங்கப்பூர்ல இருப்பதுபோல இல்லையே,” என்றார்கள். நான் பதில் சொல்ல வரும் முன்பே வேறு ஒரு  சுற்றுலாப்பயணி எழுந்து சொன்னார். “சிங்கப்பூரில் நான் கடந்த மூன்று மாதமாக இருக்கிறேன். நான் இந்தப் படத்தில் சொல்ல வரும் விஷயங்களை நேரில் பார்த்திருக்கிறேன். எப்படி இங்கேயே வாழ்கிற நீங்கள் கவனிக்காமல் விட்டீர்கள்?” என்றார். சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கிற மனிதர்களைப் போலவே அவர்களைப் புறக்கணிக்கிற சமூகமும் இங்குதான் இருக்கிறது. திரையில் பார்க்கும்போது ‘இப்படிப்பட்ட உலகம் ஒன்று இருக்கிறதா’ என அதிர்ச்சியடைகிறார்கள். அதை பேசவும்/மறுக்கவும் செய்கிறார்கள். நம்பிக்கையளிக்கும் இளம் படைப்பாளி Boo Junfeng இயக்கிய அப்ரெண்டிஸ் (Apprentice) எனும் சிங்கப்பூர் படமும் முக்கியமான படைப்புதான். விரைவில் ஓய்வுபெற இருக்கிற தூக்கிலிடும் அதிகாரிக்கும் (Hangman) அவருக்கு உதவியாக வந்து சேரும் இளம் அதிகாரிக்கும் இடையிலான நட்பைப் பேசும் அப்ரெண்டிஸ் இறுதியில் ஆச்சரியமான முடிவோடு படம் நிறைவடைகிறது. உங்களால் கதையை ஒருபோதும் யூகிக்க முடியாதவாறு கதைகளை உருவாக்குகிறார்கள். இளம் இயக்குனர்கள் இவ்வகை அழுத்தமான கதைக்களன்களை தொட்டுப் படங்கள் எடுப்பது மகிழ்ச்சியளிக்கும் முயற்சிகள்தான்.  தூக்கிலிடுபவரின் பின்னணியில் ‘நிழல் குத்து’ எனும் படத்தை அடூர் கோபாலகிருஷ்ணன் 20 வருடங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார்.  இந்தியா, இந்தோனீசியா போன்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இங்கே படங்கள்  தயாரிக்கப்படுவது மிக மிக குறைவுதான். வரும் காலங்களில் நிறைய படங்கள் உருவாகும் சூழ்நிலை வரும் என்று நினைக்கிறேன்.

பொழுதுபோக்கு தவிர்த்து சினிமாவில் வேறு என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்.

கே.ராஜகோபால்: நல்ல சினிமா நம்மை சிந்திக்க வைக்கிறது. சொந்த வாழ்வின் அனுபவத்துடன் அது  எளிதாகத் தொடர்புப்படுத்திக்கொள்கிறது. எல்லாப்படங்களும் பொழுதுபோக்குப் படங்கள் அல்ல. வாழ்வைப் பேசும் படங்கள் நீண்டகாலம் நீடித்து இருக்கும். பலரால் பல சமயங்களில் நினைவுகொள்ளப்படுவதாக ஒரு படம் இருக்கவேண்டும். பொழுதுபோக்கு மட்டுமே சினிமா என்று சொல்ல முடியாது.

ஆம்னிஃப்லிம் (Omni Film)எனப்படும் ஐந்தாறு குறும்படங்கள் இணைந்து ஒரு படம் தயாரிப்பது போல. எதிர்காலத்தில் ஒரே கதையை முழுப்படமாக இயக்கும் எண்ணம் இருக்கிறதா?

கே.ராஜகோபால்: Flame, 7 Letter போன்ற படங்கள் எல்லாம் ஆம்னிபிலிம் எனப்படும் படங்கள்தான். இடையில் ஒரு பத்து வருடம் படம் எடுப்பதையே விட்டுவிட்டேன். ‘மஞ்சள் பறவை’ யாரும் தொடத்தயங்கும் ஒரு கரு. அதில் சொல்ல வேண்டிய விஷயங்களை எந்தச் சமரசமுமில்லாமல் சொல்லவேண்டுமென நினைத்தேன். படம் நிறைய பேரை அதிர்ச்சியடைய வைத்தது. படம் தயாரிப்பதற்கான பொருளாதார வசதிகள் இருந்தால் இன்னும் நிறைய நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது. நண்பர்களிடம் கொஞ்சம், அரசு உதவி என்றுதான் மஞ்சள் பறவையே உருவானது.

கலைஞர்களுக்கு அரசியல் பார்வை அவசியமா? அவர்களின் படைப்புகளில் அவை வெளிப்பட வேண்டுமா?

கே.ராஜகோபால்: எல்லாமே அரசியல்தான். அரசியல் இல்லாத விஷயங்களே இருக்கமுடியாது. அரசியலில் நீங்களும்  ஒரு அங்கம்தான். ஏழையானாலும், பணக்காரன் ஆனாலும் அரசியல் பங்கெடுக்காத ஆள் இருக்கமுடியாது. நாம் அறியாமலேயே ஒவ்வொரு நாளும் அரசியல் செய்துகொண்டுதானே இருக்கிறோம்.

எல்லா இயக்குனருக்குள்ளும் ஒரு கனவு சினிமா இருக்கும் ‘இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும்’ என்று அப்படி நீங்கள் எடுக்கும் சினிமா எப்படி இருக்கும்?

கே.ராஜகோபால்: சின்ன விஷயங்களின் கடவுள் (God of Small Things) புக்கர் பரிசு வாங்கிய நாவல். அருந்ததி ராய் எழுதியது. முழுக்க கேரளப்பிண்ணனியில் உருவான நாவல். அது எனக்கு மிகுந்த சுவாரசியத்தை அளித்த நாவல். மனதளவில் கேரளம் எனக்கு மிகவும் பிடித்த இடம். அதை படமாக செய்ய வேண்டும் என ஒரு கனவு இருந்ததுண்டு. ஜும்பா லஹரி (Jhumba Lahiri) படைப்பான நேம் சேக் (The Namesake) போன்ற நாவல்களை படமாக எடுக்க வேண்டும் என்ற கனவும் உண்டு.

புதிதாக படம் எடுக்க வருபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

கே.ராஜகோபால்: உங்களுக்கு கனவு இருந்தால் கண்டிப்பாக அதை அடைந்தே தீருவீர்கள். நான் முதல் படம் எடுக்கும்போது எனக்கு முப்பது வயது. பதினெட்டு இருபது வயதில் இருந்த ஆசை ஒரு கட்டத்தில் வெளிவந்தது போல அவரவர் விரும்பும் விஷயம் ஒருநாள் நடந்தே தீரும். அதைநோக்கிய விடாமுயற்சிதான் தேவை. முன்னேறுபவன் ஜெயித்தே ஆவான்.

நேர்காணல் : உமா கதிர் / பாண்டித்துரை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...