தே-ஓ கோசோங்

தே-ஓ கோசோங் படம்நேற்றிரவு படுக்கப்போகும்போது இருந்த தலைவலி இன்று காலையில் எழுந்திருக்கும்போதும் தொடர்ந்தது. இரவில் மூன்று-நான்கு முறை எழுந்து சிறுநீர் கழிக்கச்சென்றதில் சரியான உறக்கமில்லை. உறக்கத்தில் மூழ்கத்தொடங்கும் வேளையில் அல்லது உறக்கம் பிடித்த சிலநிமிடங்களில் மீண்டும் உந்துதல் தோன்ற எழுந்து கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே படுக்கையிலிருந்து எழும்போதே உறக்கச்சடவும் உடன் சேர்ந்துகொண்டது. வலப்புறப் பாதவிரல் நுனிகளில் லேசான எரிச்சல். உடல் முழுவதும் அடித்துப் போட்டது போல் வலி. கைவிரல்நுனி முதல் கால்விரல்களின் நுனிவரை தொடர்ந்த வலி. வலியென்று சொல்வதைவிட அனைத்துத் தசைகளும் களைத்துவிட்டதுபோல் ஓர் அசதி. உலகநன்மைக்காக நானூறுபேரோடு சண்டையிடும் தெலுங்குப்படக் கதாநாயகன்களுக்குக் கூட இவ்வளவு உடல் வலி இருந்திருக்காது. அப்படியொரு வலி! ஆனால், இதுவொன்றும் எனக்குப் புதிதில்லை. கடந்த நான்கு வருடங்களாக அனுபவித்து வரும் ஒன்றுதான். இதற்குக் காரணம் சர்க்கரை வியாதி. தமிழில் சொல்வது கௌரவக்குறைச்சல் என்றால் டைப் 2 டயாபடிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொள்ளலாம். எப்படிச் சொன்னாலும் அதுதரும் விளைவுகள் மாறப்போவதில்லை.

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது உங்கள் உடற்செயல்பாடுகளில் எதையுமே கவனித்திருக்கமாட்டீர்கள். உடல்குறித்த பிரக்ஞை பொதுவாக அச்சமயங்களில் இருப்பதில்லை. மூச்சுவிடும் விதமோ, அல்லது உண்ட உணவு எவ்வாறு செரிமானம் ஆகிறது அல்லது உயரமான படிக்கட்டுகளில் கால்தசைகள் எவ்வாறு உங்களை மேலேற்றிவிடுகிறது என்றோ நீங்கள் கவனித்துக் கொண்டிருப்பதில்லை. மனிதனின் மனம் முழுக்கமுழுக்க அவனுக்கு வெளியே உள்ளவற்றைத்தான் கவனிக்கிறது. ஆனால் உடல் நோய்வாய்ப்பட்டால் மட்டுமே மனம் உள்நோக்கித் திரும்பி, உடல்குறித்துச் சிந்திக்கத்தொடங்குகிறது. இதுநாள் வரையில் கவனிக்காமல் இருந்த விஷயங்களைக் கவனிக்கிறது. அப்போதுதான் மனத்துக்கு உடல் குறித்த கவலை வருகிறது. ஏனெனில் உடல் இல்லையென்றால் மனம் இல்லை. ஆக தனதிருப்பைக் காப்பாற்றிக்கொள்ளும் விதமாகவே மனம் பல்வேறு செயல்பாடுகளில் இறங்குகிறது. மீண்டும் உடலைச் செப்பனிடத் தேவையான காரியங்களில் விருப்பம் கொள்கிறது. மனம், தான் இன்பமாக இருக்கவேண்டி உடலைப் பயன்படுத்துகிறது என்றுதான் சொல்லவேண்டும். உண்மையில் மாமாக் கடையில் உட்கார்ந்து அகாலவேளையில் ஒரு மீகோரெங்கைச் சுவைப்பது உடலின் தேவையா மனத்தின் தேவையா? இன்பங்களைத் துய்ப்பது மனமா, உடலா? மனம்தானே? ஆனால் அதனால் உண்டாகும் விளைவுகளை அனுபவிப்பதென்னவோ உடல்தான். எனவேதான் உடல் நோய்வாய்ப்பட்டதும் மனம் குற்றவுணர்சியினால் உடல் குறித்து அக்கறை கொள்கிறது என்று கொள்ளலாம். அதுசமயம் விரக்தியுற்று இதுபோல (அரதப்பழசான) தத்துவ விசாரத்தில்கூட இறங்கிவிடுகிறது.

ஒரு நகைச்சுவைப்படத்தில் சார்லி விநோதமான பழக்கம் உள்ளவராக நடித்திருப்பார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவார். அதாவது கடைசிக்கவளம் வாய்க்குள் போகும்முன்னரே சாப்பிடும் தட்டுக்கு முன்னால் அமர்ந்தநிலையில் தூங்கிவிடுவது. நகைச்சுவைக்காகக் காட்சிப்படுத்தப் பட்டிருந்தாலும் அது சர்க்கரைநோயின் அறிகுறிதான். சாப்பிட்டதும் உங்கள் ரத்தத்தில் குளுகோஸ்சின் அளவு அதிகரித்து உங்களைத் தூக்கத்தில் தள்ளும். ‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு’ என்பது பழமொழி. உண்டமயக்கம் என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் வருவதுதான். எப்போதும் இறைத்தொண்டிலேயே மனத்தை வைத்திருக்கும் தொண்டர்களைப் போலவே சாமானியர்களான நாமும் இருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். என்ன நமக்கு உண்டமயக்கம் சற்று அதிகநேரம் நீடிக்கிறது. அவ்வளவுதான்.

இன்றைய தேதியில் இந்தச் சர்க்கரை வியாதி என்பது இல்லாத நாடோ ஊரோ இல்லை, ‘எங்கும் நிறை பரப்ரம்மமாய்’ பரவிவிட்டது. 2015-இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட 415 மில்லியன் மக்கள் இதனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2040-இல் இந்த எண்ணிக்கை 642 மில்லியனாக உயரும் என்கிறார்கள். அக்கணக்கெடுப்பின்படி 542,000  குழந்தைகள் முதலாம் வகை சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், இரண்டாம் வகை சர்க்கரை வியாதியினரின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 40 வயதைக்கடந்தவர்கள் 59 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுபவர்கள். அந்தவகையில் நாம் தனியில்லை, நமக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது என்று ஆறுதல் அடையலாம். 400 மில்லியன் மானிட சமுத்திரம் நானென்று கூவலாம்

இதில் சில கவலைதரும் விஷயங்களும் உண்டு. சராசரியாக இரண்டிலொருவர் (46%) தனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பதையே அறியாதவர்கள் என்கிறது அக்கணிப்பு. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 75% பேர் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உடையவர்கள். இவர்கள்தான் சர்க்கரை நோய்க்கான மருந்துச்சந்தையின் பெரும் வாடிக்கையாளர்கள். உலகளவில் 673 பில்லியன் அமெரிக்க டாலர்கள் புழங்குகிற சந்தையிது. சர்க்கரை நோயுள்ள ஒருவர் தனது வருமானத்தில் குறைந்தபட்சமாக 12% அதற்காகச் செலவழிக்கிறார். 2015-இல் மட்டும் ஐந்து மில்லியன் இறப்புகள் இந்நோயினால் ஏற்பட்டுள்ளது. சராசரியாக ஆறு விநாடிகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்தச் சர்க்கரை நோயைத் தனியொரு நோய் என்று கருதிவிட முடியாது.

 

 • உடல்எடை குறைதல் அல்லது அதிகரித்தல்.
 • உடல்சோர்வு மற்றும் வலி
 • நிரந்தரமான பசியுணர்வு
 • நாவறட்சி, தாகம்
 • மலச்சிக்கல்
 • மயக்கம்
 • தசைகளின் இயங்குதன்மை பாதிப்பு
 • சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் பாதிப்பு
 • கண் நரம்புகள் பாதிப்பு

என உபதொந்தரவுகள் அதிகம். சரியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். அப்படிக் கவனித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினால் இதன் மாத்திரைகள் தரும் பக்கவிளைவுகளின் பட்டியல் தனி:

 • ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைதல்
 • வயிற்றின் செயல்பாடுகள் மந்தமாதல்
 • தோல் அரிப்பு, பாதிப்பு
 • உடல் எடை அதிகரித்தல்
 • அயர்ச்சி
 • தலைசுற்றல்
 • நாக்கில் உலோகச்சுவை உணர்தல்
 • வயிற்றில் வாயுத் தொந்தரவு
 • வயிறு வீக்கம்
 • பேதி
 • ரத்தசோகை
 • கை, கால், கணுக்கால்களில் வீக்கம்
 • சிறுநீரக பாதிப்பு
 • கல்லீரல் பாதிப்பு

என சாதாரணத் தலைவலியிருந்து மலட்டுத்தன்மை வரை அப்பட்டியல் நீள்கிறது. மருந்தைச் சாப்பிட்டாலும் பாதிப்பு, சாப்பிடாவிட்டாலும் பாதிப்பு. எதைத் தேர்வு செய்ய? உயிர் வேண்டுமென்றால் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். பக்கவிளைவுகளை அனுபவித்தபடி வாழ்ந்தாக வேண்டும்.

இதில் பல்வேறு மருத்துவமுறைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சித்த மருத்துவம்,தே-ஓ கோசோங் படம்.1jpg ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி என. எனக்கு ஒரு சித்த மருத்துவர் கூறியது, சர்க்கரை நோய்க்காக ஆரம்பத்திலேயே சித்த மருத்துவத்தில் நுழைந்தால் சரி, ஆறுமாதத்திற்கு மேலாக அலோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டு விட்டீர்கள் என்றால் சித்த மருத்துவம் சரிப்பட்டு வராது என்றார். மேலும் மலேசியாவில் சித்த மருந்துகளுக்கு அனுமதி இல்லை. உணவுப் பட்டியலில் உள்ள சில மருந்துகள் இங்கே கிடைக்கும். வெகு சொற்பமான மூலிகைகள் இங்கே கிடைக்கும், ஆனால் அவை எந்நோய்க்கும் முழுமையாக உதவாது என்றார் ஊரிலிருந்து வந்த ஒரு சித்த மருத்துவர். எனவே சித்தா, ஆயுர்வேதா போன்ற மாற்று மருத்துவ முறைகள் எதுவுமே மலேசியாவில் சரிப்பட்டு வருமென்று எனக்குத் தோன்றவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து.

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்கவென்று பல்வேறு விதமான உணவுமுறைகள் குறித்த பரிந்துரைகளும் உள்ளன. இணையமெங்கும் விரவிக்கிடக்கிற இவ்வுணவுப் பரிந்துரைகளை நீங்கள் கவனித்திருக்கலாம்.

 • பேலியோ டயட்
 • வாரியர் டயட் (வாரியார் அல்ல)
 • க்ரீன் டயட்
 • ரா டயட்
 • எலக்ட்ரிக் டயட்
 • வீகன் டயட்
 • மெடிட்டரேனியன் டயட்
 • ஏழுநாள் டயட் முறை

என்றெல்லாம் இருக்கிறது.  இந்த உணவுமுறைகள் அத்தனைக்கும் ஒரே தாத்பர்யம்தான்.  உணவில் மாவுச்சத்தைக் குறைப்பது. இவற்றைக் கடைபிடித்தால் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை என்பார்கள். அது உண்மையாக இருந்தால் ஏன் இத்தனை கோடிப்பேர் இன்னும் நோயோடு திரிகிறார்கள். மாவுச்சத்து குறைந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும், அவ்வளவுதான். ஆனால் ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்க பச்சைக்கீரையை மென்று கொண்டிருக்க முடியுமா? மூன்று வேளையைத் தாண்டியதுமே மண்டையில் கொம்பு  முளைக்கிறாற்போல உணர்வு. ஓரமாக உட்கார்ந்து அசைபோட வேண்டும் போலிருக்கும். அல்லது வாழ்நாள் முழுக்க மூன்று வேளையும் நெய்யில் வறுத்த பாதாம், முட்டை, இறைச்சிகள் அல்லது பழங்கள் மட்டுமே தின்ன முடியுமா என்ன? அவ்வளவு காசு இருந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன்? இவையெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள்.

சொல்லப்போனால் எந்தவொரு உணவுமுறைக்கு நீங்கள் மாறினாலும் சரி, சில மாதங்கள் வேண்டுமானால் அதைக் கடைபிடிக்கலாம். அதுவே சிரமம். பணம் என்பதையும் தாண்டிப் பல நடைமுறை விஷயங்கள் அதற்கு இடையூறாக வரும். உதாரணமாக நீங்கள் ஒரு உணவுமுறையைக் கடைபிடிக்கத் தொடங்கி சில நாட்கள்தான் ஆகியிருக்கும், அப்போது பார்த்து உறவுக்காரர் ஒருவர் தன்னுடைய குழந்தைக்குப் பிறந்தநாள் கொண்டாடுவார். அதுவும் அவர் மனைவி வழியில் உறவுக்காரராக இருந்து தொலைப்பார். போகவேண்டும், போனால் சாப்பிட வேண்டும். ‘உண்டு கெட்டது வயிறு’ என்று நீங்கள் கூறினால் ‘உண்ணாமல் கெட்டது உறவு’ என்று மனைவி இடித்துரைப்பார். வேறுவழியில்லை. உங்கள் டயட் அன்றோடு காணாமல் போய்விடும். எங்கள் குடும்பத்தையே எடுத்துக் கொள்வோமே. பிறந்தநாள்கள் மட்டுமே வருடத்தில் பதினாலு கொண்டாட்டங்கள். தீபாவளி, பொங்கல், தைப்பூசம், புது வருடம், தமிழ்ப்புத்தாண்டு, திருமணநாள், உறவினர் வீட்டு வைபவங்கள் என மற்ற கொண்டாட்டங்கள் தனி. எங்கே போனாலும் விருந்தில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டியுள்ளது. இதில் என்ன டயட் செய்ய முடியும்?

எனவே, இந்த டயட் முறைகள் எல்லாம் நீண்டநாளைக்கு ஒத்துவராது. என்னைக் கேட்பீர்களேயானால், அனுபவசாலி என்ற முறையில் சிலது சொல்வேன். எடுத்துக் கொள்வதும் விடுவதும் உங்கள் விருப்பம்.  பின்வருபவை நான் கடைபிடிக்கும் உபாயங்கள்:

 • பொதுவாக உணவில் முடிந்த அளவு மாவுச்சத்தைக் (அரிசி, கிழங்குவகைகள்) குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை அதிகப்படுத்துங்கள். பழங்கள் சாப்பிடலாம். உங்கள் உடலைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவரின் உடலுக்கும் ஒத்துவரும், ஒத்துவராத உணவுகள் மாறுபடும். உணவுகளைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் Low GI, High GI, simple sugar, Complex sugar இதெல்லாம் என்னவென்று கேட்டாவது தெரிந்துகொள்ளுங்கள்.
 • தவறான உணவுகள், உணவுப் பழக்கங்களில் இருந்து விடுபடுங்கள். உதாரணமாக எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள். துரித உணவுகள், குப்பை உணவுகள், டப்பாவில் அடைத்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
 • முக்கியமாக, பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள். பொழுதைப் போக்கவோ, நாக்கு ருசிக்காகவோ கண்டநேரத்தில் கண்டதைச் சாப்பிடாதீர்கள். முடிந்த அளவு வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். வீட்டில் செய்து சாப்பிடும்போது நமக்குத் தேவையானபடி ஆரோக்கியமாகச் சமைக்கலாம்.  தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.
 • சர்க்கரை நோயாளிகளுக்கு உடலுக்குத் தேவையான விட்டமின்கள் முதலான சத்துகள் சிறுநீரில் வெளியேறும் என்கிறார்கள். எனவே சரிவிகித உணவு என்பதுதான் சரியான உணவுமுறை. உங்கள் மருத்துவர் மற்றும் உணவுமுறை வல்லுநர் (Dietitian) அறிவுரைக்கும் மருந்துகள், உணவு முறையைப் பின்பற்றுங்கள். இணையத்தில் பார்த்து ஏதேனும் மருந்துகளை அல்லது உணவுமுறையை நீங்களாக முயற்சி செய்தால் உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகம். மேலும்  இணையத்தில் எழுதுபவர் மருத்துவராகவே இருந்தாலும் அவர் நீங்கள் தொடர்ந்து ஆலோசித்துவரும் மருத்துவர் போல தனிப்பட்ட முறையில் உங்கள் உடல்நிலையை அறிந்தவரல்ல. ஜோதிடத்தில் பொதுப்பலன் என்று பத்திரிக்கைகளில் வருவது போலத்தான் இது. பொதுவாக எழுதப்படுவது. அவர்களுக்குப் பெயர் கிடைக்கும். நம்முடைய கஷ்டம் தீருமா என்பது கேள்விக்குறிதான்.
 • வாழ்க்கைமுறையை சுறுசுறுப்பாக மாற்றிக்கொள்ளுங்கள், குறைந்த தூரத்திற்கு வாகனத்தை எதிர்பார்ப்பது, முதல் மாடிக்குச்செல்ல லிஃப்டுக்குக் காத்திருப்பது போன்றவற்றை விடுங்கள். வாகனத்தில் சென்றாலும் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகிலேயே வண்டியை நிறுத்தாமல் சற்றுத் தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து செல்லுங்கள். இரண்டு மாடிக்கு மேலிருந்தால் மட்டுமே லிஃப்ட்டை உபயோகிப்பது என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்நோய் வருவதற்கு உடலுழைப்பு குறைவதும் ஒரு காரணம்.
 • தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், நடப்பது நல்லது. இயன்றால் ஏதேனும் ஒரு உடலுழைப்புத் தேவைப்படும் விளையாட்டை விளையாடலாம். அல்லது தோட்ட வேலைகள் செய்யலாம். வீட்டைச் சுத்தம் செய்யலாம். துணிகளைக் கையால் துவைத்து, அலசி, காயவைத்து இஸ்திரி செய்யுங்கள். சிறந்த உடற்பயிற்சி. மனைவியுடன் உறவும் மேம்படும்.
 • எந்நேரமும் இந்நோய் குறித்துச் சிந்தித்துக்கொண்டு கவலைப்படாதீர்கள்.உண்மையைச் சொன்னால் இதை ஆங்கிலத்தில் ஒரு நிலை (Condition) என்றுதான் குறிக்கிறார்கள். நோய் என்று அல்ல. இன்சுலின் சரியாகச் சுரக்காத அல்லது ஏற்றுக்கொள்ளப்படாத நிலை. எனவே இணையத்தில் எழுதப்பட்டுள்ள நோய்கள், அதன் அறிகுறிகள், மருந்துகள், உணவுமுறைகள் குறித்து ஆளாளுக்கு ஒன்று எழுதி வைத்திருப்பார்கள். அது எதையுமே வாசிக்காதீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேளுங்கள். இல்லையென்றால் நிம்மதி போய்விடும்.
 • அதிகமான கோபம், கவலை வேண்டாம். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ளப் பழகுங்கள்.  நீங்கள் கவலைப்படுவதால் வாழ்க்கையில் எதுவும் மாறப்போவதில்லை. சகமனிதர்களின் தவறுகளை மன்னித்து விடுங்கள். சுமக்காதீர்கள், மறந்துவிடுங்கள். ஒருவிஷயம் உங்களைக் கவலைக்குள்ளாக்குகிறது,  கோபப்படுத்துகிறது, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்றால் அதிலிருந்து விலகியிருங்கள். (கணவன்/மனைவியைச் சொல்லவில்லை). உதாரணமாக தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் நாடகங்களைப் பார்க்காதீர்கள். அதை நிறுத்தியபின் பலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. நம்புங்கள், பொய் சொல்லவில்லை.
 • Last but not least. இது என் அனுபவப்பாடம்; சகதர்மிணியாகப்பட்டவர் ஏதாவது சொல்கிறார் என்றால் மறுவார்த்தை பேசாமல் உடனே ஒப்புக்கொண்டு விடுங்கள். எதிர்வாதம் செய்யாதீர்கள். எப்படியும் அரைமணிநேரம் கழித்து அவர் சொல்வதைத்தான் செய்யப்போகிறீர்கள். பிறகெதற்கு வாக்குவாதம். சுகர் தாறுமாறாகக் கூடுகிறது (இருவருக்குமே). கவனித்துவிட்டேன்.

முடிவாக, இன்று இருக்கும் வாழ்க்கை முறைதான் இம்மாதிரியான நோய்களுக்குக் காரணம் என்பதே மருத்துவர்களின் கருத்து. அதுதவிர, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுச்சக்கைகள், பூச்சிக்கொல்லிகள், செயற்கை வேதி உரங்கள் ஆகியவை கூடக் காரணமாக இருக்கலாம். அல்லது மற்றொரு ‘வாட்சாப் கருத்தாக்கமான’ இலுமினாட்டிகளின் சதி (!!!?), அவர்களே நோயை உருவாக்குகிறார்கள், பிறகு அதைச் சரிப்படுத்தும் மருந்தைக் கொடுக்காமல் கட்டுப்படுத்தும் மருந்தை மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உண்மை என்று கூட நம்பிக்கொள்ளுங்கள். இதுகுறித்தெல்லாம் நாம் செய்வதற்கு அதிகம் இல்லை. நடைமுறையில் நமக்குத் தேவையான அனைத்தையும் பூச்சிக்கொல்லிகள், உரமின்றி நாமே பயிர் செய்து சாப்பிட முடியாது. ஆர்கானிக் என்று சொல்லப்படும் பெரும்பாலானவை பெயரில் மட்டுமே ஆர்கானிக். எனவே இந்த ஒவ்வாத விஷயங்களைச் சாப்பிட்டுக்கொண்டே நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள நீங்கள்தான் முயற்சி செய்யவேண்டும். சற்று முனைப்பான பார்வையும் கொஞ்சம் சரியான வாசிப்பும் நிச்சயமாக உதவும்.

1 கருத்து for “தே-ஓ கோசோங்

 1. ப.மணிஜெகதீசன்
  March 18, 2018 at 2:27 pm

  நல்ல கட்டுரை. இனிப்பும் அவர் நண்பர் கொதிப்பும் பண்ணுகிற அலிச்சாட்டியம் சொல்லி மாலாது, நண்பரே.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...