“பெரும்மாற்றங்கள் நிகழ பிடிவாதமான கொள்கைகள் அவசியமாகவே உள்ளன” டாக்டர் ஜெயக்குமார்


ஜெயகுமார்காலஞ்சென்ற கிளந்தான் மாநில முதல்வர் நிக் அப்துல் அசிஸ் அவர்களுக்குப் பிறகு எளிமையான வாழ்க்கை மூலம் அரசியல் சூழலில் கவனத்தைப்பெற்றவர் டாக்டர் ஜெயகுமார். எளிய வீடு, வாகனம் என்பதோடு ஆண்டுதோறும் அவர் அறிவிக்கும் தனது சொத்துடமை பிரகடனம் மலேசிய அரசியல்வாதிகளில் யாரும் கடைப்பிடிக்காத கொள்கைகள். 2008 ஆம் ஆண்டு மலேசிய சோசலிசக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான டாக்டர் ஜெயகுமாரின் சமூக வாழ்வு இளவயதிலிருந்தே பல்வேறு வடிவங்களில் வளர்ந்துள்ளது. மலேசிய அரசியலில் பெரும் ஆளுமைகளில் ஒருவரான துன் சாமிவேலுவின் இரும்புக்கோட்டையாக வர்ணிக்கப்பட்ட சுங்கை சிப்புட் தொகுதியில் அவருடன் போட்டியிட்டு வென்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானவர். மலேசியாவில் சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஜெயகுமார் அவர்களை வல்லினத்துக்காக நேர்காணல் செய்ய அணுகியபோது வழக்கமாக தான் தங்கும் YMCA இயக்கத்தின் தங்கும் அறையிலிருந்து நடந்து வந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான்கு நட்சத்திர தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான அலவான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படுவது குறித்து கேட்டேன். அதுவும் மக்கள் பணம்தானே. நம் சொகுசுக்கு எதற்கு மக்கள் பணத்தை விரையம் செய்ய வேண்டும் எனக்கேட்டவர் பேட்டிக்கு ஆயத்தமானார்.

ம.நவீன்

 

கேள்வி: உங்களின் சிறுவதிலேயே எல்லாரும் எல்லாமும் சமம்தான் என்கிற சமத்துவத்தைப் பேசக்கூடிய மனநிலையில்தான் இருந்திருக்கின்றீர்கள் என வாசித்துள்ளேன். சிறு வயதில் அவ்வாறு இருப்பது சாத்தியம்தானா? அல்லது அது மிகைப்படுத்தப்பட்ட தகவலா? அப்படி அது உண்மையெனில் அது எப்படி உங்களுக்கு சிறுவயதில் சாத்தியமானது?

டாக்டர் ஜெயகுமார்: கிருத்துவ தேவாலயங்களில் ஞானஸ்நானம்செய்வார்கள். மூன்று மாத குழந்தையாக இருக்கும் போது இக்குழந்தையைக் கிருத்துவனாக வளர்க்கப் போவதாக பெற்றோர்கள் கொடுக்கும் வாக்குறுதி அது. அதன்பின்னர் தேவாலயங்களில் நடக்கும் வகுப்புகளில் கலந்துகொண்டு நாமே தேவாலயத்தில் உறுப்பினர் ஆவதாகக் கூற வேண்டும். எனக்கு பன்னிரெண்டு – பதிமூன்று வயதானபோது தேவாலயத்து வகுப்புகளுக்குச் செல்வேன். ஆனால் தேவாலயத்தில் உறுப்பினராக ஒப்புக்கொள்ளவில்லை. தேவாலயங்களைப் பொறுத்தவரை ஏசு கிருத்து மூலமே நம்மால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என நம்பிக்கை இருந்தது. ஃபாதர் அதையே வலியுறுத்தினார். என்னால் இக்கூற்றை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏனெனில் இதர மதங்களிலும் நல்லவர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமும் உலகம் நன்மையை அடைந்திருக்கும்.  அப்படியானால் அவர்கள் எங்குச் செல்வார்கள் என்ற கேள்வி பதின்மூன்றாவது வயதிலேயே வந்துவிட்டது. மத அடையாளங்களை வைத்து ஒருவனுக்கு நன்மை தீமை அவன் வாழ்வில் உருவாவதில்லை என உறுதியாக நம்பினேன்.

கேள்வி: தத்தம் மதங்களில் தீவிரம் காட்ட ஆரம்பிங்கும் அந்த வயதில் எப்படி உங்களால் இப்படிச் சிந்திக்க முடிந்தது?

டாக்டர் ஜெயகுமார்: என் அம்மாதான் தேவாலயத்தில் ஞாயிறு வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார். அவர் போதனைகள் கிருத்துவ மத கட்டமைப்புகளைச் சார்ந்திராமல் தனிநபர் சுதந்திரக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாய் இருக்கும். எனக்கு ஆங்கிள் ஜோன் எனும் உறவினர் இருந்தார். அவரும் பரந்த சிந்தனை கொண்டவர்தான். இவர்களின் நடவடிக்கைகள் என்னைப் பல வகையிலும் சிந்திக்கத் தூண்டின. அரேபியாவில் பிறக்கின்றவர்கள் இஸ்லாமியராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். தாய்லாந்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் புத்தமதத்தைத் தழுவுபவர்களாக இருப்பார்கள். இந்தியாவில் பிறந்தவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தை நோக்கிச் செல்வார்கள். பிறக்கும் நிலம் ஒருவரின் மத அடையாளத்தை உறுதிப்படுத்தும் சக்தியாக உள்ளது. எனவே பிறப்பை ஒரு காரணமாகக் கொண்டு இறைவன் மனிதனுக்கு நன்மை செய்வானா என்ன? அப்படி ஒரு குறிப்பிட்ட மதம் மட்டும் உயர்ந்தது என்றால் மற்றவர்களைத் தாழ்வாக மதிப்பிடுகிறோம் என்றுதானே அர்த்தம்! இதெல்லாம் என்னைச் சிந்திக்க வைத்தன. எனவே இன்றுவரை தேவாலயத்தில் நான் உறுப்பினராக ஆகவில்லை.

கேள்வி: உங்கள் குடும்பம் மற்றும் கல்வி பின்புலம் குறித்து சொல்லுங்கள்.

டாக்டர் ஜெயகுமார்: எங்கள் குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். தந்தை மருத்துவர். தாயார் ஆசிரியை. என் தாய்வழி தாத்தா இங்கு குமாஸ்தாவாக இருந்தார். அதே போல என் தந்தையின் அப்பாவும் குமாஸ்தாவாகத்தான் வேலை செய்தார். குடும்பத்தில் கல்வி இருந்தது. அதன் வழி தன்னம்பிக்கை மிக்க குழந்தைகளாகவே நாங்கள் வளர்ந்தோம்.

கேள்வி: நீங்கள் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போதும்  தோட்ட மக்களுக்குச் சேவை செய்துள்ளீர்கள். அங்குள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக வகுப்புகள் நடத்தியுள்ளீர்கள். மற்றவர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்கிற எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது? யாரும் உங்களுக்கு வழிகாட்டினார்களா?

டாக்டர் ஜெயகுமார்: வழிகாட்டியென்றால் எனது பெற்றோர் என்றுதான் சொல்லவேண்டும். நமக்கு கிடைக்கக்கூடியவற்றை மற்றவர்களுக்காக நாம் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. மக்கள் சேவையே மகேசன் சேவை என சொல்வார்களே அம்மாதிரியான சிந்தனையில்தான் என்னை அவர்கள் வளர்த்தார்கள். மலாயா பல்கலைக்கழகத்தில் அப்போது இந்திய மாணவர்களை இணைக்கும் சங்கம் ஒன்று இருந்தது. அவர்கள் அச்சங்கத்தின் வழி ஒவ்வொரு ஆண்டும் ஒரு திட்டத்தை மேற்கொள்வார்கள். மூன்று தோட்டங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஆறு மாணவர்களை அனுப்புவார்கள். மாணவர்கள் ஒரு மாத காலம் அங்குத் தங்கவேண்டும். நான் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அந்த திட்டத்தில்பங்குபெற்றேன். ஒரு மாதம் அங்கிருந்து என்னால் முடிந்ததைச் செய்தேன். ஆறுமாதத்திற்குப் பிறகும் தொடர்ந்து அதுபோல சென்றுவர ஆரம்பித்தோம். அங்குப் பாலர் பள்ளிகளைத் தொடங்கினோம். டியூசன் வகுப்புகளை ஆரம்பித்தோம். எங்களின் பட்டப்படிப்பு முடிந்ததும் கல்விக்குழுவை உருவாக்கி, தொடர்ந்து தோட்ட மக்களுக்குச் சேவையாற்றினோம். 1986 முதல் 1992 வரை அக்கல்விக்குழு இயங்கியது. பிறகு ‘அலைகள்’ எனும் இயக்கமாக நாங்களே மாறினோம்.

சமூகத்துடன் நெருங்கிச்சென்றபோதே இலவச வகுப்புகள் மட்டும் கல்வி வளர்ச்சிக்குப் போதுமானதில்லை எனத் தோன்றியது. பல பெற்றோர்களுக்குச் சம்பளம் குறைவாக இருந்தது. வீடு சிறியதாக இருந்தது. பள்ளிக்கூடங்களிலும் வசதிகள் குறைவு. அப்போதெல்லாம் இரவு ஒன்பது மணிக்கு தோட்ட நிர்வாகம் மின்சாரத்தையும் நிறுத்திவிடும். இந்தச் சிக்கல்களையெல்லாம் கவனிக்காமல் அங்குள்ளவர்களுக்கு இலவச வகுப்புகள் மட்டுமே கொடுத்துக்கொண்டிருப்பதால் பெரிய பயனை அது கொடுக்கப்போவதில்லை என்று காலம் சென்றே புரிந்தது. அங்குள்ள பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது. குறைந்த சம்பளத்தில் அவர்கள் தங்களுக்கும் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் என்னதான் செய்வார்கள்?

‘அலைகள்’ மூலம் நாங்கள் மாத சம்பளம் குறித்து பேச ஆரம்பித்தோம். வீடமைப்புத் திட்டங்கள் குறித்து பேச ஆரம்பித்தோம். ஒரு முறை தோட்டங்களில் பிரச்சாரம் ஒன்றை ஏற்பாடு செய்தோம். தோட்ட தொழிலாளிகளிடம் கையொப்பம் வாங்கி அரசாங்கத்திடம் சில புதியத் திட்டங்களைக் கொண்டு சேர்த்தோம். ஆனால் திட்டங்களை அமல்படுத்த நாடாளுமன்றத்துக்குச் செல்வதுதான் ஒரே வழியாக பின்னர் தெரிந்தது. எங்களுக்கு வேறு ஒரு களம் தேவைப்பட்டது. சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்துவது அதன் வழியேதான் சாத்தியம். அப்போதுதான் நாங்கள் அரசியலில் நுழைந்தோம். 1996-ல் தொடங்கியது அரசியல் பயணம்.  மக்களோடு மக்களாக இருந்து ‘அலைகள்’ செயல்பட்டாலும் அவர்களுக்கு நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்த அரசியல் பரிணாமம் தேவைப்பட்டது. அரசியல் பலம் தேவைப்பட்டது.

‘அலைகள்’ இயக்கத்தில் இருந்தவர்கள் அரசியல் கட்சியில் இணைந்ததால் அலைகள் அமைதியாகிவிட்டது.(சிரிக்கிறார்)

கேள்வி: டாக்டர், உங்களின் முதல் பணியிடத்தைக்கூட சரவாக்கில் வேண்டும் என விரும்பிக் கேட்டுள்ளீர்கள். அங்குள்ள  உட்புற வாழ் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே எந்த வசதியும் இல்லாத அவ்விடத்தை தேர்வு செய்துள்ளீர்கள். பணியிடத்தைப் பட்டணத்தில் கேட்டு சம்பாதிக்க நினைப்பவர்கள் மத்தியில் பூர்வக்குடிகளின் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து சேவை செய்ய சென்றுள்ளீர்கள். எது உங்களை இவ்வாறாக யோசிக்க வைத்தது. முன்னர் கேட்ட கேள்விதான். உங்களிடமிருந்து இன்னும் பதில் கிடைக்காததால் மீண்டும் கேட்கிறேன்?

20180426_124803டாக்டர் ஜெயகுமார்: என்னிடம் ஒரு பதில்தான் உள்ளது. என் பெற்றோர் ஓர் உதாரணமாக என் முன் வாழ்ந்தார்கள். அவர்களின் வளர்ப்பு முறை என்னை வழிநடத்தியது. எனது தந்தையார் கடைசி வரை அரசாங்க மருத்துவமனையில்தான் பணி செய்தார். என் குடும்ப உறுப்பினர்கள் எல்லாரையும் பார்த்தாலே இது தெரியும். பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லாதவர்கள். தனியார் கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க எண்ணவில்லை. பணக்கார்கள் ஏழை என்கிற பாகுபாடு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. மேலும் என் வாழ்வில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியவர் அங்கிள் ஜோன். அவர் கிருஸ்துவராக இருந்தாலும், குழந்தைகளுக்குப் பாகுபாடின்றி சேவை செய்துவந்தார்.

என் அம்மா எப்போதும் என் பாட்டியைப் பற்றிய கதை ஒன்றைச் சொல்லுவார். பாட்டி சுங்கைப்பட்டாணியில் வீட்டில் இருந்த சமயம், இளைஞன் ஒருவன் கையில் கத்தியுடன் வீட்டிற்குள்ளே நுழைந்துவிட்டான். காவல்துறையினர் தன்னை துரத்துவதாகவும் காப்பாற்றும்படியாகவும் கேட்டுள்ளான். என் பாட்டி, அரிசி கொட்டி வைக்கும் வாளியில் இளைஞனை ஒளித்து வைத்திருக்கின்றார். பின்னர் காவல் துறையினர் வீட்டிற்கு வந்து யாரும் இப்பக்கம் வந்ததைப் பார்த்தீர்களா? எனக் கேட்டிருக்கிறார்கள். பாட்டி இல்லை என்று சொல்லி, அந்த இளைஞனைக் காப்பாற்றிவிட்டார். அம்மாவைப்போலவே எனது மாமாவும் இச்சம்பவத்தை அடிக்கடி சொல்வார். இச்சம்பவத்தில் நான் புரிந்துகொள்வது உதவி செய்வதும் காப்பாற்றும் மனோபாவமும் மட்டுமல்ல. கூடுதலாக,  பாட்டியின் சிந்தனையைத்தான். இளைஞன் கையில் கத்தியுடன் வந்திருந்தாலும் காவல் துறையினரிடம் பாட்டி  அவனைக் காட்டிக்கொடுக்கவில்லை. வழக்கமான சிந்தனையில் போலிஸ் என்பவர் நல்லவர்கள்; ஆயுதம் வைத்திருப்பவர்கள் தீயவர்கள் இல்லையா? ஆனால் என் பாட்டி மாற்றி யோசிக்கிறார்.  அவன் தவறு செய்தவனாகவும் இருக்கலாம்; செய்யாதவனாகவும் இருக்கலாம். இப்போதைக்கு அந்த இளைஞனுக்குத் தேவை பாதுகாப்பு என முடிவு எடுக்கின்றார். இம்மாதிரி என் குடும்பத்தில் பல சம்பவங்கள் உண்டு. இவற்றையெல்லாம் கேட்டும் பார்த்தும் வளர்ந்த சூழல்கூட எனது மன அமைப்பிற்குக் காரணமாக இருக்கலாம்தான்.

அப்பாவின் அப்பாவான எனது தாத்தா பற்றியும் ஒரு சம்பவம் பகிரலாம்.  அவர் கிருஸ்துவ மெதடிஸ்ட் பிரிவில் இணைந்துவிட்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் எல்லாம் கெத்தலிக். என் தாத்தாவிற்கு கெத்தலிக் தேவாலயம் மீது கோபம் உண்டு. அக்காலத்தில் கெத்தலிக் தேவாலயத்தில் ஜாதி பிரிவினை இருந்திருகிறது. உயர்ந்த ஜாதியினர் முன் வரிசையிலும், தாழ்ந்த ஜாதியினர் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்பட்டார்கள். அப்போது தாத்தா இது குறித்து தேவாலயத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். பதில் கிடைக்காததால் கெத்தலிக்கில் இருந்து மெதடிஸ்ட்டுக்கு மாறிவிட்டார்.

அதேபோல இரண்டாம் உலகப் போரின்போது என் அப்பாவும் அவரது அண்ணனும் ஐ.என்.ஏவில் இணைந்து இயங்கினார்கள். இப்படி தனக்காக மட்டுமே வாழப்பழகாதவர்கள் என் குடும்பத்தினர். உண்மையில் நம் கண்முன் வாழ்பவர்கள்தான் நம் ஆளுமையை உருவாக்குகிறார்கள்

கேள்வி: உங்களின் மருத்துவ தொழிலிலும் சில புரட்சிகளைச் செய்துள்ளீர்கள். குறிப்பாகத் தெலுக் இந்தானின் போதைப்பித்தர்களுக்காக நீங்களே சொந்த முயற்சியில் சில சிகிச்சை முறைகளைச் செய்தபோது உங்களுக்கு எதிர்ப்பு வந்ததாகக் கேள்விப்பட்டேன். அது குறித்து கூறுங்கள்.

டாக்டர் ஜெயகுமார்: 1992இல் தெலுக் இந்தானில் எச்.ஐ.வி மறுவாழ்வு பிரிவு தொடங்கப்பட்டு நான் அதில் சிறப்பு மருத்துவராக இருந்தேன். இப்பிரச்சனைக்கு ஏன் மாற்று வழியை நாம் யோசிக்கக்கூடாதென்று சிலவற்றை செய்ய ஆரம்பித்தேன்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு அதற்கு மாற்றாக ‘codeine’ எனும் மருந்தை கொடுக்கத் தொடங்கினேன். முதல் வாரம் இம்மருந்தை அதிகமாகவே கொடுப்பேன். மூன்று மாத்திரைகள் நான்கு முறை. அடுத்ததாக முன்று மாத்திரைகள் மூன்று முறை. அதற்கு அடுத்த வாரம் இரண்டு மாத்திரைகள் மூன்று முறை. அதற்கு பிறகு நிறுத்திவிடுவேன். அப்படி மாத்திரைகளைப் பெற வேண்டும் என்றால் போதைப்பித்தர்கள் முதலில் கவுன்சலிங் வர வேண்டும் எனச் சொல்லிவிட்டேன். எச்.ஐ.வி பரவாமல் இருக்க ஊசியைப் பகிர்ந்து கொள்வதன் ஆபத்து குறித்து அந்த கவுன்சிலிங்கில் பேசி புரிய வைத்தோம். ஊசி குத்துவதைத் தவிர்க்க வைத்தோம். அதன் மூலம் மற்றவர்களுக்கு எச்.ஐ.வி பரவுவதை விளக்கினோம். மதியம் 4 தொடங்கி இரவு 8வரை வேலை நேரத்திற்கு பிறகு இந்தத் திட்டத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக அமுல்படுத்தினோம். பிறகு சிறுநீர் பரிசோதனையின் போது போதைப்பொருள் பயன்பாடு குறைந்துள்ளதாக தெரிந்தது. இந்த வட்டாரத்தில் உள்ள பல போதைப்பித்தர்கள் ‘codeine’ பயனர்களாக மாறிவிட்டார்கள். ஒரு போதைப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு இன்னொரு போதையைக் கொடுப்பது குறித்து அப்போது சர்ச்சையும் எழுந்தது. போதைக்கு அடிமையானவர்களுக்கு அவர்களின் போதைக்கு மாற்றாக பக்கவிளைவு குறைவாக உள்ள போதை மாத்திரைகளை கொடுத்து அவர்களைப் போதையில் இருந்து மீண்டு கொண்டு வந்தோம். நான் அங்கிருந்து வந்த பிறகு அந்தத் திட்டம் செயல்படாமல் போனது. மாநில அளவில் பயன்படுத்தும் ‘codeine’ மாத்திரைகளைவிட ஒரு சிறுவட்டாரத்தில் அதன் பயன்பாடு அதிகம் இருந்ததால் சுகாதார அமைச்சிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன.   வலி நிவாரணியாகத்தானே இதனை பயன்படுத்த வேண்டும், அதனை எப்படி போதைக்காகப் பயன்படுத்த விடலாம்? என்பது மாதிரியான கேள்விகள் எழுந்தன. ஆனால் காலம் கடந்து அரசாங்கமே போதைப்பித்தர்களின் மறுவாழ்விற்கு ‘methadone’ (வலி நிவாரணி) மாத்திரைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

கேள்வி: நீங்கள் ஈப்போவிற்கு வந்த பிறகுதான் அரசாங்க மருத்துவ பணியில் இருந்து உங்களை விலக்கிக்கொண்டீர்கள். அதற்கு அரசியல் நெருக்கடி ஒரு காரணம். சாமிவேலு உட்பட பலரும் இதற்கான காரணங்களாக இருந்திருக்கிறார்கள். அந்த நெருக்கடிகள் குறித்து சொல்லுங்கள்?

டாக்டர் ஜெயகுமார்: ஈப்போவிற்கு வந்த பின்னர் அலைகளில் மிகத்தீவிரமாக இயங்கினேன். தோட்டத்தில் இருந்து வெளியேறியப்பின் பல இந்தியர்கள் புறம்போக்கு நிலங்களில் வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒவ்வொரு தேர்தலின்போது மட்டும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம் போன்ற சில வசதிகள் கிடைக்கும். ஆனால் ஈப்போவில் பல இடங்களில் மேம்பாட்டு திட்டங்களைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பலரையும் அவ்வப்போது அப்புறப்படுத்தினார்கள். அப்படி ஒரு சம்பவம் ‘கம்போங் சிக்கிடி’யில் நடந்தது. அங்குள்ள நூறு பேரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் சென்றோம். காவல் துறையினர் எங்கள் அனைவரையும் கைது செய்துவிட்டார்கள். நூறு பேரையும் கைது செய்துவிட்டதால், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு வந்தார்கள். கைது செய்து விட்ட நூறு பேரின் வீட்டில் இருந்து இரண்டு பேரோ மூன்று பேரோ வந்தால் என்ன ஆவது? அதனால் எஃப்.ஆர்.யூவரவேண்டியதாகிவிட்டது. ஊடகத்துறையினரும் வந்துவிட்டார்கள். இந்த அழுத்தத்தால் 260 குடும்பங்களுக்கு வீடு கிடைத்தது. தொடர்ந்து இவ்வாறு பிரச்சனைகளை எதிர்நோக்கும் குரலற்றவர்களின் குரல்களாக நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம். அதன் வழி பிரச்சனைகளுக்குத் தீர்வும் பிறந்தது. இது அரசாங்கத்திற்கும் ம.இ.காவிற்கும் பிடிக்காமல் போனது.

விளைவு! என்னை பணியிட மாற்றம் செய்யப்பார்த்தார்கள். அதற்கு முன்பாக எனது பணியிட மேலாளர் என்னை அழைத்து எனக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதாகவும் வெளியூர் சென்று படிக்க விருப்பம் உள்ளதா? என்றும் விசாரித்தார். அது ஆச்சரியம்தான். அப்போது நான் ஒரு நிபுணத்துவ மருத்துவர். விரும்பி எழுதி விண்ணப்பித்தவர்களுக்கே உதவித்தொகையுடன் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில வாய்ப்புக் கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு வாசல் தேடி வந்தது. அலைகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி அது. எப்போதுமே ஓர் இயக்கம் வலுவாகும்போது அதன் கட்டமைப்பைக் குழைப்பதன் மூலம் பலவீனப்படுத்துவது அதிகாரத்தின் வழமைகளில் ஒன்று. நான் இருக்கும் நிலை எனக்கு போதுமானதாக இருப்பதாக என் மேலாளரிடம் கூறிவிட்டேன். பிறகு எனக்குப் பணி உயர்வு கொடுத்து பகாங்கிற்கு செல்லச் சொன்னார்கள். தொடர்ந்து பல மேலதிகாரிகள் என்னை அழைத்து இனி நான் பேராக்கில் இருக்கக் கூடாது என்றும் நான் விரும்பும் மாநிலத்திற்கு அனுப்பவதாகவும் பேசினார்கள். நான் எதற்கும் உடன்படாததால் என்னை சரவாக்கிற்கு அனுப்ப முடிவு செய்து என்னுடைய அனைத்து கோப்புகளையும் அங்கு அனுப்பிவிட்டார்கள். சம்பளத்தையும் பிடித்துக்கொண்டார்கள். சரவாக் சென்று வேலை செய்ய ஆரம்பித்தால் மட்டுமே சம்பளத்தை வாங்கிக்கொள்ள முடியும் என்றார்கள். அப்போது தேர்தல் காலகட்டமாக இருந்தது. வேலையை விடுவதென்றும் தேர்தலில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்தேன். எதிர்த்தரப்பினர்தானே நாம் ஏந்தவேண்டிய ஆயுதத்தை முடிவு செய்கிறார்கள்.

கேள்வி: அச்சமயத்தில் துன் சாமிவேலு பெரிய சக்தியாக இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக எப்படி மாறினீர்கள்?

டாக்டர் ஜெயகுமார்: அப்போது பெந்தோங்கிலிருந்தேன். அங்குள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுவந்தோம். ‘கம்பொங் சிக்கிடி’ எல்லாம் அங்குள்ளதுதான். அங்கு எங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எங்கள் நோக்கத்தையும் தேவையையும் மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள். ஜனநாயக செயல் கட்சி (DAP) அங்குப் போட்டியிட்டதால் மும்முனைப் போட்டி வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கி சுங்கை சிப்புட்டில் நின்றோம். அதுதான் சாமிவேலு போட்டியிடும் தொகுதி. அவரை யாராலும் வெல்ல முடியாது என நம்பப்பட்ட தொகுதி.

கேள்வி: சுங்கை சிப்பூட்டில் இடம் கிடைத்ததும் அங்கு வெற்றி பெற முடியும் என உங்களுக்கு நம்பிக்கை இருந்ததா? அல்லது முயன்றுதான் பார்க்கலாம் என எண்ணினீர்களா?

டாக்டர் ஜெயகுமார்: அப்படியில்லை. அந்தச் சமயத்தில்தான் நாங்கள் கட்சி ஆரம்பித்திருந்தோம். கட்சியின் பெயர் வெளியில் தெரிய பெரிய சக்திகளுடன் மோதுவது ஒரு உத்தி. அதனால் அதை நேர்மறையாகவே எடுத்துக்கொண்டோம். அப்போதுதான் ஒன்றைக் கண்டுப்பிடித்தோம். ம.இ.காவின் உறுப்பினர்களில் இரண்டாயிரம் பேராவது அந்தத் தொகுதியில் தங்கள் பெயர்களை வாக்காளர்களாகப் பதிந்திருந்தனர். ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் ஆழமாகச் செயல்பட வேண்டும் என நினைப்பவன் நான். எனவே இதுகுறித்து ஆய்வில் இறங்கினேன். அங்குள்ள பல வீடுகளுக்கு ஓட்டு விபரங்கள் குறித்து கடிதங்கள் வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளவர்கள் பெயர் புதிதாக இருப்பதாகவும் சிலர் எங்களிடம் கூறினார்கள். பிறகு கணினியின் உதவியுடன் வீட்டு முகவரிகளைச் சரிப்பார்க்கும் போது ஒவ்வொரு வீட்டிலும் பத்துப் பதினாறு பேர் ஓட்டுக்குப் பதிந்திருப்பதாகத் தெரிந்தது. அதுவும் வேறு வேறு இனங்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என மூவினங்களின் பெயர்களும் ஒரு வீட்டு முகவரிக்குக் கீழ் இருந்தது. ஏதோ ஒரு தரப்பு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இவ்வாறு சூழ்ச்சிகளைச் செய்வதைக் கண்டுபிடித்தோம். 1999 தேர்தலில் தோல்விகண்டோம். தேர்தலுக்குப் பின் இந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்தோம். வழக்கு தோல்விகண்டது. ஆனால் இந்தச் சம்பவம் அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுத்தது.

கேள்வி: உங்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தவண்ணம் இருந்துள்ளது. அதில் ஒன்று வெளி நாடுகளுக்குச் செல்வதும் அங்கு மேற்படிப்பை இலவசமாக படிப்பதும் அடங்கும். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடும் போது வாழ்க்கை சிக்கலாகிவிடுகிறது. உங்களைச் சுற்றி உள்ளவர்கள் எப்படி உங்களைப் பார்த்தார்கள்? உங்கள் செயல்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தார்களா? அப்போது உங்களுக்கு திருமணமும் ஆகியிருந்தது. எப்படிச் சமாளித்தீர்கள்?

டாக்டர் ஜெயகுமார்: குடும்பத்தினர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். திருமணத்துக்கு முன்பே தோட்டங்களுக்குச் செல்லும்பொழுது எனது மனைவியும் உடன் வந்துள்ளார். கல்விக்குழு ஆரம்பிக்கும் போது உடன் இருந்துள்ளார். சரவாக்கில் காப்பிட் எனும் பகுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளேன். படகில் செல்லக்கூடிய ஒதுக்குப்புற பகுதி அது. ஈப்போவிற்குத் திரும்ப வந்து மருத்துவராக வேலை செய்தபோது புறம்போக்கு நிலத்தில் அமைந்திருந்த வீட்டில் தங்கினேன்.  அங்குக் குழாய் தண்ணீர் வசதி இல்லை. கிணற்று நீர்தான். என் மனைவி எல்லா இடத்திலும் என்னை வந்து பார்த்திருக்கிறார். தெளிவாக அவர் என்னைப்பற்றியும் என் சிந்தனைப் பற்றியும் தெரிந்துகொண்டார். அவரும் என்னையொத்த சிந்தனை கொண்டிருந்ததால் சிக்கல் இல்லாமல் இருந்தது.

கேள்வி: சிலருக்கு தங்களின் போராட்டம் எதை நோக்கியது என்கிற தெளிவான வரையறை இருக்கும். அதன் ஊடே தங்களின் லட்சியத்தை நோக்கி போவார்கள். சிலருக்குச் செயல்படும் போதுதான் அவர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்கிற புரிதல் இருக்கும். நீங்கள் உங்களுக்கான நோக்கம் இதுதான் என புரிந்தும் தெரிந்தும் போராட்டங்களில் ஈடுபட்டீர்களா? அல்லது தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க முன்னெடுக்க உங்களுக்கான பாதையை நீங்கள் வகுத்துக் கொண்டீர்களா?

டாக்டர் ஜெயகுமார்: இரண்டாவதுதான். செயல்பட ஆரம்பித்த பிறகுதான் சமூதாய அமைப்பு, பொருளாதாரம் குறித்த தெளிவு கிடைத்தது. ஆனால் மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதல் தொடக்கத்திலேயே இருந்தது.

கேள்வி: உங்கள் சமகால வாழ்க்கையைப் பார்க்கும் போதும் நீங்கள் எளிமையாக வாழ்கின்றீர்கள். உங்கள் வீடாக இருக்கட்டும் நீங்கள் பயன்படுத்தும் வாகனமாக இருக்கட்டும் எதுவுமே சராசரியாக நாங்கள் பார்க்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பகட்டுடன் இல்லை. சோசியலிச சித்தாந்தங்கள்தான் உங்களை வழிநடத்துகிறதா? எங்கிருந்து இந்தத் தத்துவத்தைப் பெற்றீர்கள்?

டாக்டர் ஜெயகுமார்: நாம் என்ன விதமாக உடை அணிகின்றோம். என்ன வகை கைக்கடிகாரம் பயன்படுத்துகின்றோம் என்பதை வைத்துதான் மக்கள் நம்மை கணிக்கின்றார்கள். ஆனால் இதை எல்லாம் விட ஒருவன் சிந்திக்கும் விதம்தானே முக்கியம். அதை வைத்துதானே அம்மனிதனை நாம் கணிக்கவேண்டும். படிவம் 6 முடிந்த பிறகு நான் அமெரிக்காவுக்கு liberal arts பயிலச் சென்றேன். அப்போது மருத்துவராகும் எண்ணம் எனக்கு இல்லை. கல்வி உதவித்தொகை மூலம் அங்கு சென்றேன். இரண்டாண்டுகள் அங்கு இருந்தேன். அதன் பிறகே மருத்துவராக வேண்டும் என மலேசியா வந்தேன்.

இரண்டாண்டுகள் அமெரிக்காவில் இருந்த சமயத்தில் பொருளாதாரம் அதை ஒட்டி சமூகம் இயங்கும் விதம் குறித்து ஆழமாகத் தெரிந்துக்கொண்டேன். கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இருந்தார். அவரின் வகுப்புகள் என்னை அதிகம் ஈர்த்தது. மலேசியாவில் நான் பார்த்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், முதலாளித்துவ ஆதிக்கம் எல்லாம் அவர் கொடுக்கும் விளக்கங்கள் வழி என்னால் ஒப்பிட்டு இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பணம் எப்படி பயன்படுத்தப்படுகிறது? எவ்வாறு அதனை சேமிக்கின்றார்கள்? பங்குச் சந்தை எப்படி இயங்குகின்றது? போன்ற கல்வி அறிவை அவர் எனக்குக் கொடுத்தார். ஒரு மார்க்ஸிஸ்டான அவர் நான்கு வகுப்புகள்தான் நடத்தினார். நான்கிலும் நான் தவறாமல் கலந்துக்கொண்டேன். மார்க்சியம் முதற்கொண்டு பல அடிப்படைத் திறப்புகளை அவர் எனக்கு ஏற்படுத்தினார். மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே எனக்கு இருந்தது. ஆனால் அந்த விரிவுரையாளர் அதற்கேற்ற கல்வியைக் கொடுத்தார். சமூகத்தை எப்படி ஆய்வுக்கண்ணுடன் பார்க்க வேண்டும் என்ற அறிவைத் திறந்துவிட்டார். சமூகச்சிக்கலை உள்வாங்க உணர்வு மட்டும் போதாது ஒரு சமூகத்தின்  உள் அடுக்குகளைப் புரிந்துகொள்ளும் பார்வையும் தேவை என அமெரிக்கக் கல்வி எனக்குச் சொல்லிக்கொடுத்தது.

கேள்வி: மலேசியாவில் சோலியலிசக் கட்சியை ஆரம்பிக்கும் போது உங்களுக்கு அதை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததா? ஏனெனில் இது இஸ்லாமிய நாடு. அதற்கான சாத்தியங்கள் குறைவு. அதேபோல துன் சாமிவேலுவைத் தேர்தலில் வெல்வதும் சாத்தியமற்றதே. இப்படி எந்தச் சாத்தியமும் இல்லாத ஆயுதத்தைக் கொண்டு வெல்ல முடியாத சக்தியை வென்றுள்ளீர்கள். நினைத்துப்பார்த்தால் இதெல்லாம் ஆச்சரியமாக உள்ளது.

டாக்டர் ஜெயகுமார்: கட்சி நியாயமாக செயல்பட்டால் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். இஸ்லாமிய மதத்திற்கும் சோசியலிசத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. கிருஸ்துவத்திற்கும் சோசியலிசத்துக்கும் ஒற்றுமைகள் உள்ளன. முதலாளித்துவம் கருமியாக இருக்கவேண்டும்; பணத்தை மிச்சப்படுத்த வேண்டும்; லாபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறது. ஆனால் மதம் என்ன சொல்கிறது என பாருங்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களை நேசிக்க வேண்டும். மதம் சொல்லும் கோட்பாடுகளின் அடிப்படைகளைப் பார்த்தால் அவை சோசியலிசத்தில் இருக்கிறது. நாம் நமது கட்சியை முன்னிறுத்த வேண்டியதில்லை. நமது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். கட்சி தானாக அடையாளம் காணப்படும்.

கேள்வி: பொதுவாக இங்கு மார்க்சியம் என்றாலே இறை மறுப்பு என சொல்லப்படுகின்றது. ‘இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்’ என தேசியக்கோட்பாடு கொண்டுள்ள நாட்டில், இறை மறுப்பு பேச முடியாத ஒரு நாட்டில் இப்படியான சித்தாந்தத்தைக் கொண்டு வருவதில் சிக்கல் இருக்காதா?

டாக்டர் ஜெயகுமார்: இந்த நேர்காணலில் விரிவாகச் சொல்வது சிக்கல் என்றாலும் சுருக்கமாக விளக்குகிறேன். மார்க்ஸியம் ஒரு பொருளாதார கோட்பாடு. மார்க்ஸ் 15 புத்தகங்களை எழுதியிருக்கின்றார். காலகாலமாக நகர்ந்து செல்லும் சமூகத்தில் ஊடுறுவியுள்ள பொருளாதாரத்தை ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். இதை ஒரு அறிவுத்துறைக்கான கருவி எனலாம். சமூதாயத்தைத் தெரிந்துகொள்வதற்கு அது ஒரு உபகரணமாக இருக்கிறது. சோசியலிசம் ஓர் அரசியல் முன்னெடுப்பு. ஒரு நாடு தன்னிடமிருக்கும் சொத்தை எப்படிப் பகிர்ந்து கொள்வது? நியாயமான சம்பளத்தை எப்படிக் கொடுப்பது? சுருங்கச்சொன்னால் அரசாங்கத்தை நிர்வகிப்பதன் மூலம் சமூகத்தை எப்படி வழிநடத்துவது? என வழிகளைக் காண்பிக்கிறது. கம்யூனிஸம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது. அவ்வகையில் அது மலேசியாவுக்கென தனித்த அடையாளத்துடன் செயல்படும். மற்றபடி இறை மறுப்பெல்லாம் கட்டாயம் இல்லை. கம்யூனிஸம் எதையும் கட்டாயப்படுத்தாது. இங்குப் பொதுவாக உள்ள பயம் மாவோயிசம் சார்ந்தது. அவர்கள் வன்முறையை அதிகம் பயன்படுத்தினார்கள். கியூபாவில் அதுதான் நடந்தது. இப்போது நாம் ஆயுதம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களாட்சியில் தேர்தல் நடக்கிறது.

கேள்வி: ஆனால் நீங்கள் சொல்லகூடிய இந்த விபரங்கள் எல்லாமே சாதாரண மக்களிடம் சென்று சேரும் என நினைக்கின்றீர்களா? மக்களுக்கு இன்னமும் சோசியலிசம் கம்யூனிசம் என சொல்லும் போது பயம் இருக்கத்தானே செய்கிறது? இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மலேசியாவில் சோசியலிஸ புரட்சிக்காக ஆயுதமேந்தி போராடியவர்களை மலேசியர்கள் இன்னமும் மறக்கவில்லையே.

டாக்டர் ஜெயகுமார்: இல்லை. இன்று அப்படியான பயம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.20180426_124746 சுங்கை சிப்புட்டில் இன்றும் மக்கள் காட்டுப்பெருமாள் குறித்து பேசுவார்கள். அவர் ஒரு கம்யூனிஸ்ட். முந்தைய தலைமுறை மக்கள் பலரும் அவரை சிலாகித்துப் பேசுவதை நீங்கள் கேட்கலாம். அவரால்தான் தங்களின் பிரச்சனைகள் குறைந்ததாகவும் கங்காணிகளின் தொல்லைகள் குறைந்ததாகவும் சொல்லி அவரை ஒரு கதாநாயகன் போல வர்ணிப்பார்கள். இத்தனைக்கும் அவர் சிலரை கொலை செய்திருப்பதும் அவர்களுக்குத் தெரியும். மோசமான கங்காணிகளுக்கு எச்சரிக்கை கொடுத்து அதனை அவர்கள் பொருட்படுத்தாததால் கொன்றுவிட்டார் என சொல்வார்கள். காட்டுப்பெருமாள் அவ்வப்போது தீம்பாருக்கு வருவாராம், அங்கிருப்பவர்களை அழைத்து பேசுவாராம். சமுதாயம் குறித்தும் மக்கள் மாறவேண்டிய நிலை குறித்தும் பேசுவாராம். ஆனால் காவல் துறையினரிடமிருந்து தலைமறைவாக இருந்தார். அவர் குறித்து மேலும் தெரிந்துகொண்டு அவர் வாழ்வை ஆராய்ந்து ‘காட்டுப்பெருமாள்’ எனும் புத்தகமாக வெளியிட்டோம். அவரது வாழ்க்கையை ஆவணமாக்குவது அவசியமாகப்பட்டது. சுங்கை சிப்புட்டில் உள்ள வயதானவர்களுக்குக் கம்யூனிஸ்டுகள் மீது எந்த அச்சமும் இல்லை. ஆனால் அப்படியான ஒரு பிம்பத்தை சிலர் உருவாக்க முயல்கிறார்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்த அந்த காலத்தில் தேர்தல் என்ற முறை இல்லை. எனவே அப்போதைய மலேசிய கம்யூனிஸம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தது. இன்று நாட்டின் சூழல் வேறு. எனவே மக்கள் இந்த கால வேற்றுமையை அறிந்தே வைத்திருப்பார்கள்.

கேள்வி: இருந்தும் தேர்தலில் நிற்க கொடியில் பயன்படுத்தப்படும் கைமுட்டி சின்னம் தடையாக இருக்கிறதுதானே?

டாக்டர் ஜெயகுமார்: அப்படித்தான் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அம்னோ கொடி சின்னத்தில் கிரீஸ் கத்தி இருக்கிறது. இதையெல்லாம் ஒரு காரணமாக சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களோடு மக்களாக களம் இறங்கினால்தான் உண்மை விபரங்களை நாம் பெற முடியும். சுங்கை சிப்புட்டில் இருக்கும் பல சீன குடும்பங்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உதவிகள் செய்திருக்கிறார்கள். சீனர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உதவக்கூடாது என்றே ‘நியூ வில்லேஜ்’ உருவாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். மக்களுக்கு கம்யூனிஸ்டுகள் மீது விருப்பம் இல்லாவிட்டால் அந்தத் திட்டம் தேவையில்லை அல்லவா?

கேள்வி: நீங்கள் சொல்வது சரியென்றாலும், அவர்கள் முந்தைய தலைமுறையினர். ஆனால் இன்றைய தலைமுறைக்கு இந்த வரலாறுகள் தெரியுமா?

டாக்டர் ஜெயகுமார்: வரலாறு தெரிந்திருக்காது என சொல்வதற்கில்லை. பெற்றோர்களே சொல்லியிருக்கக்கூடும். நமக்கு பிறகு என்னுடைய ஜீன்ஸ் (மரபணு) அடுத்த தலைமுறைக்கு இருக்கிறதுதானே? பி.எஸ்.எம் கட்சியை பார்க்கும் போது மக்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் நாங்கள் செய்யக்கூடிய எங்கள் செயல்களைப் பார்க்கின்றார்கள். ஆக அவர்களுக்கு பயம் இல்லை. நேர்மறை அல்லது எதிர்மறை என்ற எந்த வரலாற்றுத்தடயமும் சமகால முன்னெடுப்புகள் மூலமே மீட்சி பெறவும் அழிவை நோக்கிச்செல்லவும் தனது பாதையை வகுத்துக்கொள்கிறது.

கேள்வி: சரி, உங்கள் கட்சி அரசியல் செயல்பாட்டுக்கு வருவோம். முதல் முறை சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டபோது தோல்வி கண்டீர்கள். இரண்டாவது முறையும் நீங்கள் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பொழுது மருத்துவ தொழிலை விட்டதற்காக வருந்தினீர்களா?

டாக்டர் ஜெயகுமார்: நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அதற்குண்டான சிக்கல் பிரச்சனைகள் இருக்கத்தானே செய்யும்! எனவே எனக்கு வெற்றி தோல்வி குறித்தெல்லாம் கவலை இல்லை. காரணம் நான் தத்துவத்தின் அடிப்படையில் எனது பொதுவாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்; உணர்ச்சிவயப்பட்டு அல்ல.

கேள்வி: முன்றாவது முறை தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த வெற்றிக்கு நீங்கள் செய்துக்கொண்டிருந்த சேவை காரணமா அல்லது ஹிண்ட்ராப் போன்ற மக்கள் எழுச்சியால் சாமிவேலுவின் ஆளுமையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமா?

டாக்டர் ஜெயகுமார்: இரண்டுமேதான். ஹிண்ட்ராப் அதில் முக்கியமான பங்களிப்பைச் செய்தது. சாமிவேலு ஹிண்ட்ராப் போராட்டத்தை மறுத்தது அவருக்கு பெரும் எதிர்ப்பை உண்டு செய்தது.  சீனர்களுக்கும் ஹிண்ட்ராப் போராட்டம் ஒரு விழிப்பைக் கொடுத்தது. இந்தியர்களைப் போல நாமும் ஏன் போராடக்கூடாது என்கிற சிந்தனையை ஏற்படுத்தியது. 2008-ல் ஹிண்ட்ராப் அலை ஒரு புறம் இருக்க தோல்வி அடைந்தாலும் இரண்டு தவணைகளில் நாங்கள் மக்களுக்காகச் செய்திருந்த பணிகளும் காரணம்தான்.

கேள்வி: ஹிண்ட்ராப் குறித்து உங்கள் பார்வை என்ன?

டாக்டர் ஜெயகுமார்: ஹிண்ட்ராப் மக்களுக்கான சிக்கல்களை முன்னெடுத்தது. மக்களுக்காக உதவும் நோக்கில் வந்தார்கள். ஆனால் ம.இ.கா அப்படியில்லை. தங்களுக்கு முதலில் என்ன கிடைக்கும் என்பதற்கு முன்னுரிமை கொடுத்தார்கள். ஹிண்ட்ராப் எனக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியர்களின் சிக்கலை மட்டும் பார்த்தார்கள். ஏழை வர்க்கம் ஒன்று சேர்ந்தால்தான் அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இனரீதியான போராட்டம் வெற்றி பெறாது. ஹிண்ட்ராப்பின் நோக்கம் சரியாக இருந்தது. ஆனால் அவர்கள் சூழலைக் கையாள எடுத்துக்கொண்ட இன அரசியல் சரியானதாக இல்லை. சுங்கை சிப்புட்டில் வந்து பாருங்கள். மலாய்க்காரர்களும் எவ்வளவு வரிய நிலையில் வாடுகிறார்கள் என அறிய முடியும்.

பி.எஸ்.எம் இனரீதியான போராட்டத்தை விரும்புவதில்லை. ஹிண்ட்ராபிற்கு மரியாதை கொடுக்கின்றோம். அவர்களின் உணர்வுகளை மதிக்கின்றோம். ஆனால் அவர்கள் கையாண்ட முறை பிரச்சனைக்குத் தீர்வாகாது எனவும் சொல்லிக்கொள்கிறோம். இந்தியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் ஒன்றிணைந்து வர்க்க ரீதியிலான ஒற்றுமையை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. வர்க்க அரசியல்தான் இங்குத் தேவை.

உதாரணமாக கெட்கோ பிரச்சனையைப் பாருங்கள். பி.எஸ்.எம் இச்சிக்கலைக் கையாளும் முன்பாக ஹிண்ட்ராப் சென்றார்கள். அவர்கள் கையாண்ட வழிமுறைகளால் மலாய்க்காரர்கள் பிரிந்துவிட்டார்கள். இப்போது இரண்டு அணிகளாக இருக்கின்றார்கள். இந்தியர்களின் கோரிக்கை வேறாக இருக்கிறது. மலாய்க்காரர்களின் கோரிக்கை வேறாக இருக்கிறது. பிரச்சனையில் அம்னோவைக் குற்றம்சாட்டி அவர்களைத் திட்டிக்கொண்டிருக்கும் போது மலாய்க்காரர்களின் பார்வையில் நாம் அவர்களுக்கு எதிரானவர்களாக தெரிவோம். இந்நாட்டில் இனரீதியான போராட்டம் வன்முறைக்கும் மனக்கசப்புகளுக்குமே வித்திடும். அது பெரும் மக்கள் சக்தியாக திரளாது.

கேள்வி: இனரீதியான போராட்டம் கூடாது என்கிறீர்கள். பி.எஸ்.எம் கட்சியை வெளியில் இருந்து பார்க்கும் போது இது தமிழர்கள் கட்சியாக தோற்றம் கொடுக்கிறது. உங்கள் வேட்பாளர்கள் பலரும் இந்தியர்கள் இல்லையா?

டாக்டர் ஜெயகுமார்: நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அலைகள் குழுவை தோட்டத்தில் இருந்து தொடங்கினோம். அதில் இந்தியர்கள் அதிகம் அங்கம் வகித்தனர். பின்னர் அது கட்சியாகப் பரிணாமித்தபோதும் அவர்களே முன்வந்து செயலாற்றினர். ஆனால் இப்போது மலாய்க்காரர்கள் அதிகம் கட்சியில் சேர்கிறார்கள். சீனர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பி.எஸ்.எம் கட்சி குறித்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக பரவிக்கொண்டிருக்கிறது. இளைய சமூகம் ஆர்வமாகக் கட்சியில் சேர்கிறார்கள்.

கேள்வி: சுங்கை சிப்புட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் வந்த பிறகு என்னென்ன மாற்றங்களை நீங்கள் கொண்டு வந்தீர்கள்.

டாக்டர் ஜெயகுமார்: சுங்கை சிப்புட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து முக்கியமான பிரச்சனைகளை நாம் கையில் எடுத்திருந்தோம்.  நிறைய மலாய்க்காரர்கள் அலுவலகம் வந்தார்கள். பெரும்பாலும் மின்சார கட்டணம் நீர் கட்டணம் கட்ட முடியாமல் இருந்தார்கள். அதற்காக உதவி கேட்டார்கள். பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியவில்லை, அதற்கு உதவி கேட்டார்கள். இதுபற்றி நாங்கள் ஆய்வு செய்தோம். விடை கிடைத்தது. உண்மையில் அவர்களுக்குச் சம்பளம் போதவில்லை. பத்து பதினைந்து கம்பங்களுக்குச் சென்று 130க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆய்வுகள் செய்யும் பொழுது 45 சதவிதம் குடும்ப வருமானம் மாதத்துக்கு 1200.00க்கும் குறைவாக இருந்தது. 15 சதவிகித குடும்பங்களில் மட்டும்தான் குடும்ப வருமானம் மாதத்துக்கு 2000க்கும் அதிகமாக இருந்தது. மீதம் உள்ளவர்கள் 1200 முதல் 2000க்குள் மாத குடும்ப வருமானத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இன்றைய காலக்கட்டத்தில் இது ஏற்புடையதாக இல்லை. இதற்கு கள ஆய்வுகள் செய்து, கட்சியில் இது பற்றி பேசி நாடு தழுவிய நிலையில் இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணங்கள் என்ன என்று ஆய்வறிக்கை செய்துள்ளோம். அங்குள்ள பல்வேறு இனத்தைச் சார்ந்த அரசு சாரா இயக்கங்களிடம் கலந்தாலோசித்துள்ளோம். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

இன்னொரு சிக்கல் வீடு. சுங்கை சிப்புட்டில் ஏழை மக்களுக்கு வீடு இல்லை. புறம்போக்கு நிலங்களில் அமைந்த எட்டு குடியிருப்புகள் சுங்கை சிப்புட்டில் உண்டு. அதனை கணக்கில் எடுத்து மனு கொடுத்திருக்கின்றோம். அவர்களுக்கான குடியிருப்பை ஏற்பாடு செய்ய முயன்று வருகிறோம். மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளையே என் தொகுதியில் செய்து வருகிறேன்.

கேள்வி: இதற்கு தீர்வுகளாக ஏதும் கிடைத்திருக்கிறதா?

டாக்டர் ஜெயகுமார்: அதனை எதிர்ப்பார்க்க முடியாது. முதலாளித்துவ அமைப்பில் ஊழல் அரசாங்கத்தை வைத்துக்கொண்டு தீர்வுகளை எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் சுங்கை சிப்புட்டில் மூன்று வட்டாரத்தில் நமக்கு நிலம் கிடைத்திருக்கிறது. இதுகூட கிடைத்ததின் பின் புலத்தை பார்க்க வேண்டும். மக்கள் குடியிருந்த ஒரு புறம்போக்கு நிலத்தில் ரயில் தண்டவாளத் திட்டம் வந்தது. அங்கு நாம் வேலையை நடக்க விடாமல் மறியல் செய்தோம்.  அதன் பிறகுதான் இவர்களுக்கு நிலம் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து மக்களை வெளியேற்றினார்கள். அதன் பிறகே அவர்களும் வேலைகளை தொடர்ந்தார்கள். இன்னொரு தோட்டமும் அப்படித்தான். நாங்கள் போராட்டம் நடத்தியதால் தனியார் தோட்ட நிறுவனங்கள் எங்கள் மேல் வழக்குத்தொடுத்து வென்றனர். பின்னர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மாநில அரசாங்கம் நிலம் கொடுக்க முன்வந்தது. பெரும் பண முதலீட்டிலான வேலைகளை எங்கள் போராட்டங்கள் வழி தாமதப்படுத்தும்போது தீர்வு கிடைக்கிறது. ஆனால் எதிர்த்தரப்பும் நாங்கள் அடங்கும் வரை காத்திருக்கத் தயாராக இருந்தால் தீர்வு கிடைப்பதில் தாமதம் உருவாகும். அதுவரை மக்களின் அசௌகரியங்களை யாரும் கண்டுக்கொள்ளப்போவதில்லை.

கேள்வி: அரசு உங்கள் திட்டங்களைக் கேட்கத் தயாராக இருக்கிறதா?

டாக்டர் ஜெயகுமார்: நாம் யோசனைகளைக் கொடுத்தால் கூட அதை எடுத்து செய்யும் போது நம்மால்தான் செய்கிறார்கள் என சொல்லிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சமீபத்தில் குறைந்த சம்பளம் குறித்து நாம் பேசிக்கொண்டிருந்தோம். இப்போது அது அமலுக்கு வந்துவிட்டது. கண்டிப்பாக அதன் மூலத்தை அவர்கள் சொல்லிக்கொள்ளமாட்டார்கள். ‘Employment insurance scheme’ குறித்தும் பேசினோம்.  அமுல்படுத்தியுள்ளார்கள். ஆனால் இதன் மூலத்தையும் அவர்கள் சொல்லமாட்டார்கள். நாம் பேசிய பல பிரச்சனைகளுக்கு ஒன்றின் பின் ஒன்றாக தீர்வுகள் கிடைக்கின்றன. ஆனால் அது நாம் பேசியதாலா அல்லது அரசாங்கமே செய்கிறதா என்று தெரியவில்லை. இப்படி சமீபத்தில் வறுமைக்கோடு குறித்து பேசினோம். குடும்ப வருமானம்750.00 மட்டுமே இருந்தால் எப்படி வாழ முடியும் என நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். இது எப்படி இன்றைய சூழலுக்கு போதுமானதாக இருக்கும் என கேள்வி எழுப்பியிருந்தேன். இப்போது பிரிம் பணத்தை 3000 வெள்ளிக்கு குறைவாக சம்பளம் எடுப்பவர்களுக்கு கொடுக்கிறார்கள். வறுமை கோட்டிற்கு அரசாங்கம் கொடுத்திருந்த வரையறை மாறியுள்ளது. இந்த மாற்றம் எங்களால் ஏற்பட்டதா அல்லது வேறு யாரும் பேசியுள்ளார்களா! என தெரியவில்லை. ஆனால் மாற்றம் நடக்கிறது.

ஒன்று நிச்சயம். நாங்கள் இருக்கும் வரை சுங்கை சிப்புட்டில் மக்களை வெளியேற்றுவது நடக்காது. எந்த வீட்டையும் இடிக்க மாட்டார்கள்.

கேள்வி: மாநில அரசாங்கம் உங்களுக்கு உதவுகின்றதா?

டாக்டர் ஜெயகுமார்: மாநில அரசு எங்களுக்கு உதவுவதன் மூலம் எங்கள் செயல்பாடுகள் மேலும் துடிப்புடன் இருக்கும். இதனால் எங்களுக்குத்தான் மக்களின் ஆதரவு கிடைக்கும் என எண்ணுகிறது. ஒவ்வொரு பாரிசான் எம்.பிக்கும் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் ரிங்கிட் கிடைக்கிறது. அது மக்களுக்குப் பயன்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு அப்படியேதும் கிடைப்பதில்லை. இதற்கு வழக்கறிஞர் அம்பிகாவை வைத்து நாம் வழக்கு தொடுத்தோம். ஆனால் நாங்கள் தோற்றுவிட்டோம். ஆனால் எங்களுக்கு அந்தப் பணம் கிடைத்ததெனில் சரியான முறையில் திட்டமிட்டு யாருக்கு எவ்வளவு தொகை எனக் கொடுத்திருப்போம். அதை வெளிப்படையாக அறிவித்திருப்போம்.

இப்படி செய்வதன் மூலமாக பாரிசான் எம்.பிக்களுக்குக் கிடைக்கும் பணத்தை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியை மக்கள் மனதில் எழ வைக்கும். அரசாங்கமும் அந்தந்த வட்டார மக்களுக்காக ஒதுக்குகின்றேன் என சொல்லும் பணத்தை மக்களின் தேவையைக் கேட்டு பயன்படுத்த முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம் அனைத்து எம்.பிகளுக்கும் ஏற்படும். பிறகு, அந்தந்த வட்டாரத்தில் தேவையானதை மக்களிடம் கேட்டு செய்ய வேண்டி வரும். மக்களிடம் அதற்கான உரிமையைக் கொடுக்க வேண்டி வரும். கடைசியில் அவர்களுக்குத் தேவை என்ன என்பதை அவர்கள் மூலம் கேட்டு சரி செய்ய வேண்டும். இதை அவர்கள் விரும்புவார்களா?

எல்லாமே ரகசியமாகச் செய்ய வேண்டியதில்லை. ஆயுதங்கள் வாங்குவது ரகசியமாக இருக்க வேண்டியதுதான். ஆனால் மக்களுக்குப் பாதை வேண்டுமா பள்ளிக்கூடம் வேண்டுமா என்பதையும் எதனை முதலில் சரி செய்யவேண்டும் என்பதையும் அவர்களிடமே கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

நாம் இப்படி வெளிப்படையாகச் செய்வதை மற்றவர்கள் செய்யமாட்டார்கள். அதே சமயம், இவ்வளவு பணத்தைப் பெற்றுக்கொள்ளும் பாரிசான் எம்.பிகள் என்ன செய்கிறார்கள்? என்கிற கேள்வி மக்களிடையே எழும். நமது சோசலிசக் கட்சியைப் பொறுத்தவரை கேள்வி கேட்கும் மக்களை உருவாக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம். தங்களுக்கான உரிமையை மக்களே அறிந்திருக்கும்படி செய்ய வேண்டும். அரசாங்கம் எங்களுக்கு உரிய பணத்தினைக் கொடுத்தால்தான் இவை சாத்தியமாகும், அதனால்தானோ என்னவோ எங்கள் விண்ணப்பங்களை நிராகரிக்கிறார்கள்.

கேள்வி: இப்போது ஆளும் அரசாங்கம் கொடுக்கவில்லை என்கின்றீர்கள். ஒருவேளை எதிர்கட்சி ஆட்சிக்கு வந்தால் இது சாத்தியமாகும் என நினைக்கின்றீர்களா?

டாக்டர் ஜெயகுமார்: பினாங்கு மாநிலத்தில் எதிர்க்கட்சிதான் ஆட்சி செய்கிறது. அம்னோவிடம் கொடுத்து அம்னோ பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தந்த தொகுதிகளுக்கு கொடுத்தாகவேண்டும். அங்குத் தேர்தலில் வெற்றி கண்டவர்கள் யாராக இருந்தாலும், கொடுக்கப்படும் பணம் மக்களுக்காகத்தானே பயன்படுகின்றது.

கேள்வி: இப்படியான சூழலில் அரசாங்கத்திடமிருந்து அல்லாமல், இதர அரசு சாரா இயக்கங்களில் இருந்து உங்களுக்கு பண உதவி வருகிறதா? அதை மக்களுக்கு பயன்படுத்துகின்றீர்களா?

டாக்டர் ஜெயகுமார்: எனக்கு தெரிந்த நண்பர்களிடம் பண உதவி கேட்பேன். அவர்களும் கொடுப்பார்கள். பி.எஸ்.எம்மிடம் இன்னொரு திட்டமும் உண்டு. அது என்னவெனில் மக்கள் கட்டும் வரிப்பணத்தில் இருந்து மக்களுக்குத் தேவையான உதவி வரவேண்டும். ஆனால் இப்போது நடப்பது வியாபாரமாக இருக்கிறது. சில தரப்புகள் ஆளும் கட்சிக்கும் பண உதவி செய்கிறார்கள். அதே சமயம் எதிர்க்கட்சிகளுக்கும் பண உதவி செய்கிறார்கள். இதனால் இரு தரப்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும் முதலாளிகளுக்கு சிக்கல் இல்லை. இது எப்படி ஜனநாயகம் ஆகும். அரசியல்வாதிகள் மக்களுக்குத்தான் பயப்படவேண்டும். இங்கு அரசியல்வாதிகள் பண உதவி செய்யும் வியாபாரிகளுக்குப் பயப்படுகின்றார்கள். இது ஜனநாயகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பெருத்த வியாபாரிகள் கையில் கொடுக்கிறது.

கேள்வி: இம்முறை நடக்கவுள்ள தேர்தலில் நீங்கள் உங்கள் சொந்த கட்சி சின்னத்தில்தான் போட்டி இடுகின்றீர்கள். கடந்த முறை பி.கே.ஆர் சின்னத்தில் போட்டியிட்டீர்கள். உங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி சாத்தியமா? அதுவும் 17 இடங்களில் உங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்றீர்கள்.

டாக்டர் ஜெயகுமார்: நமக்கும் பி.கே.ஆர் கட்சிக்கும் சில கருத்து முரண்கள் எற்பட்டுள்ளன. 2011-ம் ஆண்டிலேயே நாம் அவர்களுடன் சேர்ந்து பாரிசான் கட்சியை எதிர்ப்பதாக சொல்லிவிட்டோம். ஆட்சியில் பி.கே.ஆர் இருப்பார்கள் பி.எஸ்.எம் அவர்களுக்கு உதவி செய்யும் என்பதில் தெளிவாக இருந்தோம்.  அதன் பிறகு பி.கே.ஆர் கட்சி உடைந்து ‘பாக்காதான் ஹராப்பான்’ உதயமானது. ஆனால் பி.எஸ்.எம்மை அவர்கள் அழைக்கவில்லை.

கேள்வி: ஒருவேளை பாக்காத்தான் ஹராப்பான் உங்களை அழைத்திருந்தால் நீங்கள் இணைந்திருப்பீர்களா? ஏனெனின் ஒரு காலக்கட்டத்தில் யாரை எதிர்த்தீர்களோ அவர்களே இந்த கட்சியில் இருக்கிறார்கள்? மகாதீரைச் சொல்கிறேன்.

20180426_124835டாக்டர் ஜெயகுமார்: பாக்காத்தான் ஹராப்பான் ஆரம்பிக்கும் போது மகாதீர் அதில் இல்லை. ஒருவேளை அவர்கள் அழைத்திருந்தால் நாம் அவர்களுடன் நட்பாக செயல்பட்டிருக்கலாம். அவர்கள் செய்யும் சில காரியங்கள் நமக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் கூட பாரிசான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அவர்களோடு இணைந்து செயலாற்ற நாங்கள் தயாராக இருந்திருப்போம். ஆனால் இப்போது, சுங்கை சிப்புட் நாற்காலி மட்டும் எனக்குக் கொடுப்பார்களாம். அதற்கு அவர்கள் சின்னத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். மற்ற இடங்களில் நாங்கள் நிற்கக்கூடாது என்கிறார்கள். அதனை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் ஒரு இடம் என, கேமரன் மலையில், பகாங்கில், சிலாங்கூரில், கிளந்தானின் என குறைந்தது ஐந்தாறு இடமாவது எங்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் மக்களிடையே நாமும் நமது திட்டங்களும் சென்று சேர முடியும். ஆனால் கொடுக்கவில்லை.

கேள்வி: ஒருவேளை அவர்களுக்கு நீங்கள் பி.எஸ்.எம் கைமுட்டிச் சின்னத்தைப் பயன்படுத்துவதில் ஏதும் சிக்கல் இருக்க வாய்ப்பு உள்ளதா?

டாக்டர் ஜெயகுமார்: இருக்கலாம். அவர்களுக்கு அதில் பயம் இருக்கலாம். நமக்கு கூடுதல் வாய்ப்பைக் கொடுப்பதால் நாம் பெரிய கட்சியாக வளர்ந்துவிடுவோம் என்கிற பயமும் இருக்கலாம். மேலும் சொத்துப்பிரகடனம் என்பதை நாம்தான் ஆரம்பித்தோம். அதன் பிறகு அவர்கள் இவ்வாண்டுதான் அதனை ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் பி.எஸ்.எம் கட்சியில் பலரும் களத்தில் இறங்கி வேலை செய்கின்றார்கள். காவல்துறையினரை எதிர்க்கின்றார்கள். நில அபகரிப்பில் ஈடுபடும் தரப்புகளிடம் சண்டையிடுகின்றார்கள். சமயங்களில் அவர்கள் கைதும் ஆகிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும் இளைஞர்களுக்கு இக்கட்சியின் மீது இவை நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. மக்கள் சக்தியின் மீது உண்டாகும் நம்பிக்கை அது. இவை எல்லாமே பி.எஸ்.எம் மீது பயம் ஏற்படக்கூடிய காரணிகள்தான். கூடுதலாக நாற்காலிகள் கொடுத்து மென்மேலும் எங்களை வலுவாக்க அவர்கள் விரும்பவில்லை. நாம் இம்முறை பதினேழு இடங்களில் பி.எஸ்.எம் கட்சி சின்னத்தில் நிற்கின்றோம். ஒருவேளை ஏழு இடங்களாவது எங்கள் கட்சிக்குக் கொடுத்தால் மக்கள் கூட்டணி சின்னத்தில் நிற்க யோசிக்கலாம்.

கேள்வி: சோசலிசக் கட்சியில் உள்ள சில இளைஞர்கள் நீங்கள் சொல்வதுபோல சமுதாயத்துக்காகப் போராட தயாராக இருந்தாலும் பெரும்பாலான இளைஞர்களுக்குச் சமூக சிந்தனை இருப்பதில்லைதானே?

டாக்டர் ஜெயகுமார்: இளைஞர்களை நாம் குறை சொல்லக்கூடாது. திட்டமிட்டே இதுபோன்றதொரு சூழலை உருவாக்கி அதில் இளைஞர்களைச் சிக்கவைத்துள்ளது இன்றைய அரசியல், பொருளியல் சூழல். நான் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் மேற்கல்வி கற்பதற்கான அதிக கடனோ அதற்கான வட்டியோ செலுத்தவேண்டியதில்லை. மலாயா பல்கலைக்கழகத்தில் குறைந்த தொகையில்தான் மருத்துவம் படித்து முடித்தேன். குறைவாகத்தான் செலவு செய்திருந்தேன். திரும்பக் கடனையோ வட்டியையோ செலுத்தவேண்டிய சுமை எனக்கு ஏற்படவில்லை. அந்தச் சமயத்தில் வீடுகளை நாம் வாங்க முடிந்தது. அதிக விலை இல்லை.

இப்போது வீடுகள் வாங்கும்படியான விலையில் இல்லை. சொல்லப்போனால் தற்போது பாதுகாப்பற்றத்தன்மையை நாம் நம் இளைஞர்களுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளோம். பட்டதாரிகளிடம் கூட கடன்களைத் திரும்பக் கட்ட முடியாது, வீடு வாங்க முடியாது தவிக்கின்றனர். திருமணம், குடும்பம் போன்றவற்றில் பாதுகாப்பின்மை பயம் வந்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடைசி காலத்தில் யார் பாதுகாப்பில் இருப்பது என்கிற பயம் தொற்றிக்கொண்டுவிட்டது. இந்தக் கட்டமைப்புதான் இளைஞர்களைத் தாங்கள் – தங்கள் குடும்பம் என சுருக்குகிறது.  மலேசியாவில் குறிப்பிட்ட வயதானப்பின் ‘ஓல்ட் ஏஜ் பென்ஷன்’ போல முதியவர்களுக்கு அவர்களின் சுமையைக் குறைக்க சிறு தொகையாவது கொடுக்க வேண்டும்.  அது அவர்களின் அச்சத்தைக் குறைத்துவிடும். அரசாங்க மருத்துவமனை தரமானதாகவும் விலை குறைவாகவும் இருக்க வேண்டும். நாம் அதிக பணம் சேமித்து வைக்கவும் அவசியம் இல்லை. பணம் பணம் என தேடி அலைய வேண்டியதில்லை. நமக்கு என்ன நோய் வந்தாலும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்கின்ற நம்பிக்கை இருக்கும். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றால் நீண்ட நேரம் வரிசையில் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் எதும் நடக்காது என்கிற எண்ணத்தில் மக்கள் இருக்கிறார்கள். எனவே ‘மெடிக்கல் கார்ட்’ வாங்குகிறார்கள். அதற்கு மாதந்தோறும் பணம் கட்டுகிறார்கள். இப்படி எதிர்க்காலத்திற்குப் பயந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பற்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எப்படி மற்றவர்களைப்பற்றி யோசிக்க முடியும்? நாடு அதன் கட்டமைப்புமே நம்மை இப்படி மாற்றிவிடுகிறது.

கேள்வி: இரண்டு முறை சுங்கை சிப்புட்டில் நீங்கள் வெற்றிப்பெற்று சேவை செய்துள்ளீர்கள். இந்த தடவை மும்முனைப்போட்டி ஏற்பட்டாலும் உங்களுக்கு அது சாதகமாக இருக்கும் என நினைக்கின்றீர்களா?

டாக்டர் ஜெயகுமார்: இல்லை. மும்முனை போட்டி வந்தால் சாதகமாக இருக்காது. கடந்த தேர்தலில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஓட்டுகள் பெரும்பான்மையில் மட்டுமே வென்றோம். எங்களுடைய சேவைகளை பல முறை மக்கள் பார்த்திருக்கிறார்கள்தான். ஆனால் பாக்காத்தான் வந்தால் ஓட்டின் எண்ணிக்கை உடைந்துவிடும். அது தேசியமுன்னணிக்குச் சாதகமாக இருக்கும்.

கேள்வி: என்னதான் சேவை செய்தாலும் கட்சியும் பணமும்தான் வெற்றி பெறும் என நினைகின்றீர்களா?

டாக்டர் ஜெயகுமார்: இல்லை. அப்படி சொல்லவில்லை. ஆனால் அதிக கட்சிகள் போட்டியிட்டால் மக்கள் குழப்பம் அடைவார்கள்.  ஓட்டு பிரியும். அது எங்களுக்கும் மக்கள் கூட்டணிக்கும்தான் இழப்பு. ஆனால் தேசிய முன்னணி ஓட்டு அவ்வாறு பிரியாது அல்லவா! கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியிடம் இருந்த அரசியல் சீர்த்திருத்தம் என்ற கொள்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அவர்களும் பண அரசியலுக்குள் நுழைந்துவிட்டார்கள்.

கேள்வி: சமகால கட்சி அரசியலில் அதற்கேற்ற சானக்கியத்தனம் இல்லாமல் கொள்கையை மையமாக வைத்து இயங்குவது சரியென நினைக்கிறீர்களா?

டாக்டர் ஜெயகுமார்: அப்படித்தான் இருக்க வேண்டும். அரசியலுக்குப் பணம்தேவைப்படுகின்றது. எல்லா கட்சிகளுக்கும் பணம் தேவைப்படுகின்றது. அலுவலகம் திறப்பதற்கு, பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க, மக்களுடனான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய, போக்குவரத்திற்கு என எல்லாம் நமக்கு பணம் தேவை. சமூதாயத்திடமிருந்து பணம் வரவில்லையெனில் நாம் எங்கிருந்து பணத்தைபெறுவது? ஒன்று பணக்காரர்களிடம் பணம் கேட்கலாம். ஆனால் பணம் கொடுத்துவிட்டு பணக்காரர்கள் ஏதாவது எதிர்ப்பார்ப்பார்கள். அதனை நாம் அவர்களுக்குச் செய்தாகவேண்டும். ஏனெனில் அவர்கள் நமக்கு உதவியிருக்கிறார்கள். நாம் ஆளுங்கட்சி அரசாங்கத்தில் இருந்தால் சிலருக்குச் சாதகமானவற்றைச் செய்து அங்கிருந்து சிலவழிகளில் பணத்தை எடுக்கலாம். ஆனால் அங்கிருந்துதான் லஞ்சமும் ஊழலும் ஆரம்பமாகின்றது.

என்னிடம் மாற்றுத்திட்டங்கள் உள்ளன. தேர்தலுக்கு ஓட்டுப்போடுவதுபோல ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கட்சிக்கு மக்கள் சார்பில் பத்துரிங்கிட் கொடுக்க வேண்டும். 15மில்லியன் ஓட்டுரிமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் 10 ரிங்கிட் கொடுப்பதன் மூலம் நூற்று ஐம்பது மில்லியன், அதாவது 15 கோடிவெள்ளி அத்தனை கட்சிக்கும் பகிர்ந்துபோகும். இது அரசாங்கம் மூலம் கொடுப்பதல்ல; மக்கள் கொடுக்கின்றார்கள். இதனை நாம் தொடங்கினால் கட்சியைக் கணக்குக்காட்டச்சொல்லி கேட்கலாம். அப்போது தனியார்களிடம் இருந்து பணம் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது. அப்படியானால் மக்களின் பணத்தில் இருந்து கட்சிகள் செயல்படுகின்றன. 15 கோடி ரிங்கிட் பெரிய தொகை இல்லைதான். ஆனாலும் இது தெளிவான அமைப்பாக மாறும்.

இப்போது தேர்தலுக்கு எனக்கும் பணம் தேவை. நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். சிலர் தருகிறார்கள். ஆனால் ரகசியமாகத் தருகிறார்கள். ரசீதுகள் வேண்டாம் என்கிறார்கள். எதிர்க்கட்சிக்குப் பணம் கொடுப்பதை ஆளும் அரசாங்கம் கண்டறிந்து விடக்கூடாது என்பதில் பயம் கொள்கிறார்கள். ஒருவேளை பத்துபேர் ஆயிரம் வெள்ளிகொடுத்து, நான் கட்சியில் ஏழாயிரம் வெள்ளியை மட்டும் கணக்குக்காட்டிவிட்டு, மூவாயிரத்தை நான் வைத்துக்கொண்டால் யாருக்குத் தெரியும்? பணஉதவியை இப்படித்திருட்டுத்தனமாகச் செய்வதால் இது நடப்பதற்குச் சாத்தியங்கள் உண்டு. எல்லாமே வெளிப்படையாக இருக்க வேண்டும். மக்கள் மூலமாக நிதி கிடைக்கும் பொழுது கட்சியின் திட்டங்களின் மீதும் வெளிப்படைதன்மை மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அப்போது மக்களிடமிருந்து அதிக நிதி கட்சிகளுக்குக் கிடைக்கும். இதற்குதான் நாம் போராட வேண்டியுள்ளது. அடிப்படையான பெரும்மாற்றங்கள் நிகழ பிடிவாதமான கொள்கைகள் அவசியமாகவே உள்ளன.

கேள்வி : எதிர்க்காலத்திட்டங்கள் என்ன? கட்சியின் மூலம் அதை எப்படி அமுல்படுத்த நினைக்கிறீர்கள்?

டாக்டர் ஜெயகுமார்: அரசியலில் புதிய கலாச்சாரம் உருவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மக்களே தங்கள் பிரச்னைகளைக் களைய, தங்கள் உரிமைகள் என்னவென்று அறியும் சூழல் உருவாக வேண்டும். தலைவன் என்பவன் தனித்து இயங்கும் கதாநாயகன் அல்ல. அவன் சாமானியன். அவன் மக்களுடன்தான் இயங்குவான். அவர்களில் இருந்தே அவன் உருவாகுவான் என தொடர்ந்து அவர்களுக்கு உணர்த்தவேண்டியுள்ளது. ஆனால் இந்தச் சிந்தனையை உருவாக்க எங்களிடம் இப்போது ஆள் பலம் இல்லை. இளைஞர்கள் எங்களுடன் இணைவதால் மட்டுமே இந்தக் கனவு அடுத்தப்பத்து ஆண்டுகளில் சாத்தியமாகும். இப்போது எங்களுடன் உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து சிந்தனை மூலம் மேம்படுத்துகிறோம். இப்படித்தான் அடுத்தக்கட்ட ஆளுமை மிக்க தலைவர்களை உருவாக்க முடியும்.

அனுமதியின்றி இந்த நேர்காணலை மறுபிரசுரம் செய்தால் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

2 கருத்துகள் for ““பெரும்மாற்றங்கள் நிகழ பிடிவாதமான கொள்கைகள் அவசியமாகவே உள்ளன” டாக்டர் ஜெயக்குமார்

 1. Kaveri
  May 7, 2018 at 9:03 pm

  அருமையான வெளிப்படையான உண்மையான நேர்காணல். தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது. அரசியல் சிந்தனை முதிர்ச்சியை ஏற்படுத்தும்.

 2. புனிதவதி அர்ஜுனன்
  May 13, 2018 at 12:58 am

  இதுவரை இம்மாதிரியான நேர்காணலை நான் படித்ததில்லை.எளிமையான மருத்துவர் எழுச்சிமிக்கக்கருத்துக்கள் ,நம் நாட்டில் இவ்வளவு எளிமையாக அரசியல்வாதி இருப்பார்களா! என ஆச்சிரியம் ஏற்பட்டது .ஏழ்மையில் வாடினால் ஞானம் பிறக்கும் என்பார்கள் , வசதியில் வாழ்ந்திருந்தாலும் பெற்றோர் வளர்ப்பினால் தங்கமாக மின்னுகிறார் மருத்துவர் ஜெயக்குமார். இவ்வரிய நேர்க்காணலைத்தந்த நவின் அவர்களுக்கு நன்றி, மருத்துவரின் தந்தைக்கு உயரிய வணக்கங்கள் சாதியால் ஒரு மனிதனைச்சிறுமைப்படுத்துவது பாவம் என்பதனை வெளிப்படையாக எதிர்த்ததற்கு,நெல்சல் மண்டேலா . மகாத்மா காந்தி ,
  ஹாங் சாங் சூ சி அம்மையாரைப்பற்றிப்படிக்கும்போது நம் நாட்டின் இவரகளைப்போல இல்லையே என்று நினைக்கும்போது நம் நாட்டிலும் இவர்களைப்போன்று இருக்கிறார்கள் என்பதை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி

  \

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...