“உலகுக்கு நான் விட்டுச்செல்வது எனது நூல்களைத்தான்” – பி.கிருஷ்ணன்

IMG-20180426-WA0035சிங்கப்பூரின் முன்னோடி மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான  பி. கிருஷ்ணன் இலக்கியப் பணிக்காக சிங்கப்பூரின் உயரிய விருதான கலாசார பதக்கம் முதல், தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது எனப் பல விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1953ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆரம்பகால நிறுவனராகவும் துணைச் செயலாளராகவும் இருந்த இவர், 50களில் ‘முன்னேற்றம்’, ‘சிந்தனை’ மாத இதழ்களின் துணையாசிரியராகவும் செயல்பட்டவர். கதம்ப நாடகங்கள், இலக்கிய நாடகங்கள்,  தொடர் நாடகங்கள், நகைச் சுவை நாடகங்கள், மர்ம நாடகங்கள், மொழி பெயர்ப்பு நாடகங்கள் என வானொலியில் மிக அதிகமான நாடகங்களை எழுதித் தயாரித்தவரான திரு பி கிருஷ்ணன், சிறந்த நடிகராகவும் பாடகராவும் பெயர் பெற்றவர்.கம்பீரக் குரலாலும் அச்சர சுத்தமான தமிழாலும் அறிவார்ந்த படைப்புகளாலும் சிங்கப்பூர் தமிழ் வானொலிக்கு உயரூட்டியவர்களுள் ஒருவர் திரு பி.கிருஷ்ணன். வல்லினத்துக்காக அவரைச் சந்தித்தேன்.

 ம.நவீன்

உங்களது பாலிய வாழ்வை நினைவு கூற முடியுமா?

பி.கிருஷ்ணன்: என் பெயர் பி.கிருஷ்ணன். தந்தையின் பெயர் பெருமாள். தாயாரின் பெயர் செல்லம்மாள். இவர்களின் பெயர்தான் நினைவில் இருக்கிறது. மற்ற உடன் பிறப்புகள் உறவினர்களின் பெயர்கள் எனக்கு சரிவர நினைவில்லை. பிறந்தது ஜொகூர் மாநிலம். ஜொகூர் மாநிலத்தில் தொடக்கத்தில் இருந்த இடம் நினைவில் இல்லை. பிறகு பாண்டான் என்ற இடத்தில் வாழ்ந்தேன். இவ்விடம் ஜொகூரில் இருந்து பத்து அல்லது பதினைந்து கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கும். அங்கிருந்த இடங்கள், நிலங்கள் என என் நினைவில் இருக்கின்றன. அங்குள்ள பள்ளியில் நான் இரண்டு மொழிகளைப் படித்திருக்கிறேன். காலையில் தமிழ்மொழி வகுப்பு நடக்கும். மாலையில் தமிழ் கற்றுக்கொடுத்த ஆசிரியரே ஆங்கிலமும் கற்றுக்கொடுத்தார். மூன்றாம் வகுப்பு வரை மட்டும் படித்திருக்கிறேன். அதன் பிறகு படிப்பைத் தொடர்வதற்கான வசதி இல்லாமல் போயிற்று. 1942-ல் ஜப்பானிய ஆதிக்கம் இருந்தது. அப்போதுதான் அவர்கள் வந்திருந்த சமயம். ஆங்கில மொழி கற்பதெல்லாம் நின்றுப்போனது. தமிழ்மொழிப் பாடத்தைக் கூட நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தொடங்கினார்கள். ஜப்பானியர்களின் ஆதிக்கத்தின் போது அவர்கள் மொழியைப் படிப்பதற்கு ஊக்குவித்தார்கள். நான் ஜப்பான் மொழியில் கத்தகானா (தொடக்கநிலை) வரை படித்தேன்.

மற்ற நினைவுகளை எப்படித் தொலைத்தீர்கள்?

பி.கிருஷ்ணன்: எனது ஒன்பதாவது வயதில் பாண்டானில் இருந்தேன். ஒரு சமயம் சாலையைக் கடக்கும்போது விபத்துக்குள்ளானேன். சைக்கிள் மோதியது. கீழே விழுந்த என்னால் எழ முடியவில்லை. எழுந்தபோது என்னுடைய வலக்கால் வளைவதை உணர்ந்தேன். விபத்தில் எனக்கு நினைவு தப்பிப் போனது. யாரோ பாண்டானில் இருந்து ஜொகூர் பாருவில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் கொண்டுவந்து என்னைச் சேர்த்தார்கள்.

மருத்துவமனைக்கு எப்படிக் கொண்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. கால் முறிந்துவிட்ட வலிகூட எனக்குத் தெரியாத மயக்கத்தில் இருந்தேன். பெரிய மருத்துவமனையில் எனக்கு மருத்துவம் பார்த்தவர் ஒரு தமிழ் மருத்துவர். ஜப்பானிய ஆதிக்க காலத்தில் காயங்களுக்குச் சுற்றும் ‘பேண்டேஜ்’ கிடைக்காது. சாக்கைத்தான் காயங்களுக்கு மருந்து வைத்து கட்டுவார்கள். எனக்கும் அப்படித்தான் செய்தார்கள். அப்போது எனக்கு வயது பத்துதான். கட்டுப்போட்ட காலை தலையணைக்கு மேல் வைத்து அசைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அப்படி இருப்பது எனக்கு பெரிய தொல்லையாக இருந்தது. இளம் எலும்பு என்பதால் தலையணை மேல் வைத்திருந்த கால் வளைந்துவிட்டது. காலில் கட்டியிருந்த சாக்குத்துணியைப் பின்னர் வெட்டி எடுக்கும்போதுதான் கால் வளைந்திருப்பதைக் கண்டார்கள். இப்போதுகூட என்னால் இயல்பாக நடக்க முடியவில்லை. இடக்கால் உயரமாகவும் வலக்கால் உயரம் குறைந்தும் இருக்கும். அன்றைய காலகட்டத்தில் மருத்துவ வசதி முறையாக இல்லாததால் ஏற்பட்டதன் விளைவு இது. ஓராண்டுக்கு மேலாக இந்தச் சாக்குத்துணியைக் கட்டியிருந்தார்கள். சக்கர நாற்காலியில்தான் இயங்கிக்கொண்டிருந்தேன். அங்கு எனக்குப் போக்கிடமும் இல்லை பொழுது போக்கும் இல்லை.

எனது அப்பா இறந்தது தெரியும். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்று நினைவில்லை. ஜப்பானியரின் ஆதிக்கத்திற்கு முன்னமே அதாவது 1941-ம் ஆண்டுப் பகுதியில் அவர் இறந்துவிட்டார். மருத்துவமனையில் இருந்து என்னை அழைத்துப்போவதற்கு யாரும் இருக்கவில்லை. அனாதையைப்போல அங்கு இருந்தேன். கால் ஓரளவு சரியான பிறகு நான் தங்கியிருந்த மருத்துவமனைத் தளத்தைச் சுற்றிக்கொண்டிருப்பேன். அங்குள்ள மற்ற நோயாளிகள் என்னை அழைத்துப் பாடச் சொல்லுவார்கள். நானும் பாடிக்காட்டுவேன். அப்போது நான் பார்த்த படங்களில் நினைவில் இருப்பது ‘சிந்தாமணி’ என்கிற திரைப்படம். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படம். பிறகு மஹாலிங்கம் நடித்த ‘நந்தகுமார்’ என்கிற திரைப்படம். பாகவதர் போலவே நானும் பாடுவேன். சிந்தாமணி திரைப்படத்தில் அவர் பாடிய ‘மாயப் பிரபஞ்சத்தில்’ என்கிற பாட்டு இருக்கிறது. அந்தப் பாடல்களையெல்லாம் பாடச்சொல்லிக் கேட்பார்கள். நானும் பாடிக்காட்டுவேன். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக அந்த மருத்துவமனையிலேயே செல்லப்பிள்ளையாக இருந்தேன். அங்குத் தாதியாக இருந்த ஒருவர் அவர் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அவருக்கு ஒரு மகளும், மகளுக்கு இரண்டு ஆண் மக்களும் ஒரு பெண் ஒருவரும் இருந்தார்கள். அந்தத் தாதிக்கு ஒரு மகனும் இருந்தார். கணவருடன் குடும்பமாக அவர் வாழ்ந்துவந்தார்.

தொடர்ந்து அங்குதான் வளர்ந்தீர்களா?

பி.கிருஷ்ணன்: 1943-ம் ஆண்டில் அவரது வீட்டில் நான் இருந்தேன். ஜப்பானியர் காலத்தில் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள். அவர்கள் வெளியில் அவ்வளவாகத் தலைகாட்டமாட்டார்கள். அவர்களை ‘தீகா பிந்தாங்’ எனச் சொல்வார்கள். காட்டில்தான் இருப்பார்கள். அவர்கள் வெளியில் வரும்போது அவர்கள் கம்யூனிஸ்டா இல்லையா எனத் தெரியாது. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். ஜப்பானியர்களை வெறுத்தார்கள். ஜப்பானியர்கள் பெரும்பாலும் சீனர்களை வெறுத்து வந்தார்கள்.  அதனால், சீனர்கள் பலரைக் கனரக வாகனத்தில் ஏற்றி வந்து சுட்டுக் கொன்றார்கள். ஒரு சமயம் சீனர்களின் தலைகளை வெட்டி சாலையோரத்தில் நட்டுவைப்பதை நான் பார்த்திருக்கிறேன். தாதியின் வீட்டில் வளர்ந்த போதுதான் இதையெல்லாம் பார்த்தேன்.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக அந்த தாதியரின் வீட்டில் இருந்தேன். சிறிய வீடு என்பதாலும் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், வெளியில் சென்று வேலை செய்யவேண்டுமென அந்த தாதியிடம் உதவிக் கேட்டேன். அந்தத் தாதியரின் பெயர் மருதம்மாள். அவரின் மகள் பெயர் ஜெகதாம்பாள். எனக்கு செய்ய முடிந்த வேலையைத் தேடிக்கொடுப்பதாக அவர் சொன்னார்.

ஒருவகையில், நீங்கள் தனித்து இயங்க வேலையிடம்தான் வாய்ப்பை அமைத்துக்கொடுத்திருக்கும். எப்படி இருந்தது முதல் வேலை?

பி.கிருஷ்ணன்: தாதி ஜொகூர் பாருவில் வேலை இருப்பதாகத் தெரியப்படுத்தினார்.  அங்கு சிரஞ்சீவி ஸ்டோர் என்ற கடை இருந்தது. ‘ஜாலான் ஆஃபூக்’ முனையில் அக்கடை இருந்தது. அங்கிருந்து பக்கத்தில் பி.கோவிந்தசாமிபிள்ளைக்கு ஒரு கடை இருந்தது. சின்னையா பிள்ளை என்பவருக்கு ஒரு கடை இருந்தது. நான் வேலைக்குச் சேர்ந்த கடை சிரஞ்சீவி ஸ்டோர். மூன்று நான்கு பேர் இணைந்து நடத்திய மளிகைக் கடை அது. கடைக்கார்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். குறித்த நேரத்தில் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். குறித்த நேரத்தில் எழ வேண்டும். வழிபாடு செய்ய வேண்டும். இருப்பதில் நான் மட்டுமே இளம் வயது பையன் என்பதால் அதிகம் கவனிக்கப்பட்டேன். பக்கத்தில் இரண்டு திரையரங்குகள் இருந்தன. ஒன்று “பிராட் வே’ இன்னொன்று ‘கெப்பிட்டல்’. அந்த கெப்பிட்டல் திரையரங்குகள் அருகில்தான் புகைவண்டி நிலையம் இருந்தது. இப்போதும் அவை அங்கிருக்கின்றனவா எனத் தெரியவில்லை. எனக்கு ஆங்கிலப்படம் பார்ப்பதில் விருப்பம் அதிகம். அப்போது ‘ப்ளாஷ் கார்டன் ட்ரிப் டு மார்ஸ்’ என்கிற படத்தை விளம்பரப்படுத்தியிருந்தார்கள். தொலைக்காட்சி தொடராக வந்திருந்த படம் இது. ஆர்வத்தின் பேரில் ஒரு முறை திரையரங்கம் செல்லத் தயாரானேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திரையரங்கம் சென்றேன்.

திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திரும்பும்போது கடையைப் பூட்டிவிட்டார்கள். பல முறை கதவைத் தட்டியபிறகே திறந்தார்கள். அன்றைய தினம் எனக்குத் தண்டனையும் கொடுத்தார்கள். வெங்காயங்களை ஓர் இடத்தில் கொட்டி, அதனை ஒவ்வொன்றாக எடுத்து அவர்கள் சொல்லும் இடத்தில் வைத்துத் திரும்ப வேண்டும். இப்படி வெங்காயங்களை தனித்தனியே வைத்த பிறகு மீண்டும் எடுத்து கும்பலாக ஒரே இடத்தில் வைக்க வேண்டும். குறைந்தது இரண்டு மூன்று மணிநேரமாவது இதனைச் செய்திருப்பேன். இது என் சுதந்தரம் குறித்த கேள்விகளை உருவாக்கியது. சில திங்கள்வரை அங்கு இருந்தேன். பத்து வயது, பன்னிரண்டு வயதில் இப்படிச் செய்யவைத்தது கொடுமைதான். தொடர்ந்து கனமான மூட்டைகளைத் தூக்க வைத்ததால் சிரமத்துக்குள்ளானேன்.

அங்கு ஆறுமுகம்பிள்ளை என்பவர் கணக்குப்பிள்ளையாக இருந்தார். நல்லவர். படிக்கவேண்டிய வயதில் அங்கு வந்து மூட்டைதூக்குவதை அடிக்கடிச் சுட்டிக்காட்டிச் சொல்வார்.

சிங்கப்பூரில் ஓ.ராமசாமி நாடார் எனும் பெரிய கம்பெனி இருந்தது. அந்தக் கம்பெனிக்கு ஆறுமுகம்பிள்ளை கணக்குப்பிள்ளையாக மாறிச்சென்றார். என்னையும் அங்கு வருமாறு தொலைபேசியில் கூறினார். ஆனால், சிரஞ்சீவி ஸ்டோர் கடைக்காரர்கள் என்னை அனுமதிக்கவில்லை. நிலைமையை ஆறுமுகம்பிள்ளையிடம் சொன்னேன். பிறகு எப்படியோ என்னையும் விட்டுவிட்டார்கள். 1947-ல் சிங்கப்பூருக்கு வந்தேன். அது ராமசாமி நாடார் கம்பெனியின் ஜவுளிக்கடை.

சுவாரசியமான இடமாற்றம்தான்.

 பி.கிருஷ்ணன்: அந்த ஜவுளிக்கடையில் கொஞ்ச நாட்கள் இருந்தேன். ஆனால், எனக்கு அந்த வேலை ஒத்துவரவில்லை. மளிகைக்கடை அனுபவம் இருப்பதால் புடவையை அளப்பது போன்ற வேலைகளைச் செய்ய இயலவில்லை. ஆகவே, எனக்கு ஏதாவது மளிகைக்கடையில் வேலை வாங்கிக் கொடுக்கச்சொல்லிக் கேட்டேன். ஓ.ராமசாமி நாடார் கம்பெனி சிராங்கூன் சாலை, கேம்பல் லேன் சந்திப்பில்தான் இருந்தது. அங்கிருந்து நேராகப் போனால் டன்லப் ஸ்ட்ரீட் வரும். டன்லப் ஸ்ட்ரீட் முனையில் ஒரு மளிகைக்கடையும் பக்கத்தில் ஒரு ஜவுளிக்கடையும் இருந்தன. பரசுராம் பிள்ளை என்பவர்தான் இரண்டு கடைகளையும் நடத்தினார். அவர் வழக்கமான மளிகை வியாபாரிகள் போல் வேட்டிக் கட்டிக்கொண்டு இல்லாமல் நீளக் காற்சட்டை அணிந்திருப்பார்.

மளிகைக்கடையைவிட ஜவுளிக்கடையில்தான் அவர் அதிகம் இருப்பார். அங்கும் வேலை செய்பவர்களில் நான் சிறுவனாக இருந்ததால் என்னை அதிகம் வேலை வாங்கினார்கள். ஜொகூர் பாரு கடையில் நான் செய்தது போலவே, காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து பூஜைக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விளக்கேற்றுவது, கடையினைப் பெருக்கிச் சுத்தம் செய்வது போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வந்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள உணவு விடுதிகளுக்குப் பருப்பு, அரிசி போன்றவற்றை எங்கள் கடைகளில் வாங்க ஆரம்பித்தார்கள். மூன்று சக்கர வண்டியில் அந்த மூட்டைகளை ஏற்றி கடைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும். எவர் உதவியும் இல்லாமல் நான் அதனைச் செய்திருக்கிறேன். ஆனந்த பவன், நித்தியானந்த பவன் போன்ற உணவகங்களுக்கு இந்த மூன்று சக்கர வண்டியில்தான் பொருட்களை கொண்டு செல்வேன். பருப்பு, அரிசியைவிட உப்பு மூட்டைதான் அதிக எடை கொண்டிருக்கும். சொல்லபோனால் 300 பவுண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும். அப்போது எனக்குப் பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும். வண்டியில் இருக்கும் மூட்டைகளையும் எளிதாகத் தூக்கிவிட முடியாது. குனிந்து கையில் இருக்கும் ஊக்கு போன்ற இரும்புக் கொக்கியை அதில் குத்திப் பின்னர் மூட்டையை தோளில் சுமந்து கடைகளுக்குச் செல்லவேண்டும். செங்குத்தானப் படிகளில் ஏறித்தான் பொருட்களைத் தூக்கிச் செல்ல வேண்டும்.

1947-இல் இருந்து 1952 கடைசி வரை அந்தக் கடையில் வேலை செய்தேன். அச்சமயம் நான் நிறையப் படித்துக்கொண்டேன். கடையில் ஒழுங்குதான் மிகவும் முக்கியம். நேர்மையும் இன்றியமையாதது. இவை இரண்டும்தான் அங்கு நான் படித்துகொண்ட பாடங்கள். அங்கிருந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக உழைத்திருக்கிறேன். அதனால், அங்குள்ளவர்களுக்கு என்னைப் பிடித்திருந்தது. தொடக்கத்தில் எனக்குப் பதினைந்து வெள்ளியை மாதச் சம்பளமாகக் கொடுத்தார்கள். உடை, உணவு போன்றவை அவர்கள் பொறுப்பு. ஒவ்வொரு தீபாவளிக்கும் அவர்களே எங்களுக்கு வேட்டி, சட்டைகள் கொடுப்பார்கள்.

கடைச் சிப்பந்தியாக அயராது உழைத்த நீங்கள், வாசிப்பில் எப்படி ஈடுபட்டீர்கள்?

பி.கிருஷ்ணன்: ‘அவுலியா முகம்மது’ என்பவர் எனக்கு அங்குப் பழக்கமானார். அவர் எனக்கு முன்னமே பல ஆண்டுகளாக அங்கு வேலை செய்பவர்.  அவருக்குப் பல விடயங்கள் தெரியும். புலவர்கள் சிலரின் வரலாறுகளையெல்லாம்கூட அவர் தெரிந்து வைத்திருந்தார்.

பிற்பகல் இரண்டு மணிக்குச் சிறிது ஓய்வு கிடைக்கும். காலையில் வரும் வாடிக்கையாளர்கள் போல மாலையில் அதிகம் வர மாட்டார்கள். அத்தகைய ஓய்வு நேரத்தில் அவர் பல கதைகள் சொல்லியிருக்கின்றார். ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘அறுபது தலை வாங்கிய அற்புதவல்லி’ போன்ற கதைகளை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். கதைகளுக்கு இடையில் வாடிக்கையாளர்கள் வந்துவிட்டால், கதையை நிறுத்தி வாடிக்கையாளர்களைக் கவனித்தப் பிறகு கதையைத் தொடர்வார்.

அந்தக் கதைகளைக் கேட்பதில் எனக்கு அதிக விருப்பம். சில வேளைகளில் புலவர்களின் கதைகளைச் சொல்லுவார். 1950-இல் தமிழ் முரசில் சிறுகதைப் போட்டியை நடத்தினார்கள். நானும் எழுதி அனுப்பியிருக்கின்றேன். என் கதைகளுக்குப் பதினான்கு, பதினைந்து புள்ளிகள் கிடைக்கும். பெயர் பட்டியலில் என் பெயரும் பிரசுரமாவது மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தவேளையில்தான் ‘அவுலியா முகம்மது’ எனக்கு ஒரு புலவர் குறித்த வரலாற்றைச் சொன்னார். அந்தப் புலவர் பெயர், அந்தகக்கவி வீரராகவ முதலியார். பிறவியிலேயே பார்வையற்றவர். பின்னாளில் அவர்தம் தனிப்பாடல்கள் திரட்டை நான் வாங்கிப் படித்தேன். அவர் பாண்டிய மன்னனுக்கு ஒரு சீட்டுக்கவி எழுதியிருக்கின்றார். பாண்டிய மன்னனிடம் தனக்குக் குதிரை வேண்டுமென அவர் கேட்டிருக்கின்றார். பார்வையற்றவர்க்கெல்லாம் குதிரை வேண்டுமா என்று அந்த புலவர் மனத்தை மன்னன் நோகச்செய்துவிட்டார். சினங்கொண்ட கவிஞர் சீட்டுக்கவி மூலம் அறம் பாடினார். இந்தக் கதை என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. பின்னாளில் தமிழ் முரசில் ஏதோ ஒரு தலைப்பைக் கொடுத்து எழுத்தாளர் குறித்து எழுத சொல்லியிருந்தார்கள். எழுத்தாளனின் வலிமையைச் சொல்வதற்கு அந்தக் கவிஞரின் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி கட்டுரை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்பியிருந்தேன். அப்போது அ.முருகையன் என்பவர் துணை ஆசிரியராக இருந்தார். நான் எழுதிய பாடல்வரிகளில் இருந்த பிழைகளைத் திருத்தி பிரசுரம் செய்திருந்தார். இவ்வாறாக அவுலியா முகம்மதுவிடம் இருந்து நான் நிறையவே கற்றுக்கொண்டேன்.

கேள்வி ஞானமன்றி நூல் வாசிப்பு என்பது எப்படித் தொடங்கியது?

பி.கிருஷ்ணன்: நான் வேலை செய்த எஸ்.ராசுப்பிள்ளை கடையின் முதலாளி தமிழகத்தில் இருந்து சில வார இதழ்களைத் தருவித்துப் படிப்பார். அதில் ஒன்று கல்கி. அந்த 1950களில் ‘பொன்னியின் செல்வன்’, அதில் தொடராக வந்தது. நான் படித்திருந்தது மூன்றாம் வகுப்புவரை என்றாலும் அவர் படித்து வைத்த இதழ்களைச் சிறிது சிறிதாகப் படிக்கத் தொடங்கினேன். அந்த கதைகளையெல்லாம் படித்த பிறகு தமிழ் முரசில் ஏதாவது எழுத தோன்றியது. அப்போது நேயர் அபிப்பிராயம் எனும் பகுதி இடம்பெற்று வந்தது. ஒவ்வொரு ஞாயிறும் பலரது கருத்துகளும் கட்டுரைகளும் வெளிவந்துகொண்டிருந்தன. முதலாளியின் மகன் சண்முகமும், அந்தக் கடையில் இருந்தார். அவர் ஆங்கில இதழ்களைப் படிப்பவர். அவர் படித்து வைத்த ஆங்கில இதழ்களையும் அவ்வப்போது புரட்டிப் பார்ப்பேன். எனது சொந்த முயற்சியினால் தமிழையும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டேன்.

1951-ல் திராவிடக்கழகம் நூல் நிலையம் ஒன்றை வைத்திருந்தது. கிள்ளான் சாலையில்தான் அந்த நூல் நிலையம் இருந்தது. பல அரிய வகை நூல்கள் அங்கு இருந்தன.  அந்த இடத்திலேயே ஒரு புத்தகக்கடையும் இருந்தது. அதை நடத்தி வந்தவர் நடராசன். அந்தக் கடையின் பெயர் தமிழ்நாடு புத்தக நிலையம். அக்காலத்தில் பதினைந்து வெள்ளிதான் எனக்குச் சம்பளமாக இருந்தாலும் அவர் கடைகளில் புத்தகங்களைத் தவறாமல் வாங்கி வந்தேன். ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் திராவிடக்கழக நூல் நிலையத்தில் என்னைப் பார்க்கலாம். புத்தகங்களை வாசிக்கவே நான் அங்கு இருப்பேன். நிறைய வாசிக்கவும் செய்தேன். எல்லாவகை நூல்களையும் வாசித்திருகிறேன். இவ்வாசிப்பின் வழி என் தமிழ்மொழி அறிவை வளர்த்துக்கொண்டேன். கலைமகள் புத்தகநிலையம், திருவள்ளுவர் புத்தக நிலையம் போன்ற கடைகளிலும் நூல்களை வாங்குவேன்.

தேசிய நூல்நிலையம் அப்போது ஸ்டாம்ஃபோர்ட் சாலையில் இருந்தது. அங்கும் நான் சென்று ஆங்கில நூல்களைப் பார்ப்பதுண்டு. மாப்பஸான், ஆண்டன் செக்காவ் போன்றவர்களின் கதைகள் புரியாவிட்டாலும் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பேன். இச்சமயத்தில் சிற்சில சிறிய கட்டுரைகள் எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புவேன். அவை பிரசுரமாகியுள்ளன. 1951-இல் எனக்கு ஓரளவேனும் மொழி அறிவு ஏற்பட்டது என்று சொல்லலாம்.

நீங்கள் புதுமைப்பித்தனின் தீவிர வாசகர் என அறிவேன். எப்படி அவரைச் சென்று அடைந்தீர்கள்?

பி.கிருஷ்ணன்: நான் வாங்கிப் படித்த நூல்களில் என்னை அதிகம் கவர்ந்தவை புதுமைப்பித்தன் நூல்கள். வை.மு கோதைநாயகி அம்மாள், ஜே.ஆர். ரங்கராஜு இன்னும் பலரின் கதைகளைப் படித்த பின்னர் புதுமைப்பித்தனின் கதைகளைப் படிக்கும்போது புதிய கோணத்தில் அக்கதைகள் சொல்லப்பட்டிருப்பதாய்த் தோன்றியது. அவரின் நடை என்னைக் கவர்ந்தது. வழக்கமாகப் பலரும் எழுதி வந்த கதைகள் போல் அல்லாமல் வாழ்வின் உண்மைகளை அவர் எழுதியிருந்தார். மிக நாசுக்காகவே சில சொற்களைப் புதுமைப்பித்தன் பயன்படுத்துவார். எனவே, அவரின் எல்லாப் படைப்புகளையும் நான் படிக்கத் தொடங்கினேன். அவர் மொழிபெயர்த்த மாப்பஸான், செக்காவ், கார்கி போன்றவர்களின் கதைகளையும் படித்தேன். மேரி ஷெல்லியின் ‘பிரங்கன்ஸ்னடன்’ கதையைப் பிரேத மனிதன் என்று மொழிபெயர்த்திருந்தார் அவர்.

வாசகராக இருந்த நீங்கள் எவ்விதம் எழுத்தாளராக மாறினீர்கள்?

பி.கிருஷ்ணன்: சிங்கப்பூரில் எழுத்தாளர் ஒருவர் புதுமைப்பித்தன் மீதுள்ள வெறுப்பின் காரணமாக, புதுமைப்பித்தன் ‘இலக்கிய மேதையா?’ என்ற கட்டுரையைத் தமிழ் முரசில் எழுதியிருந்தார். புதுமைப்பித்தனை ஆபாச எழுத்தாளராக சித்திரிப்பதாய் அமைந்த கட்டுரை அது. அதனைப் படித்தப்பின் என்னால் அக்கூற்றை ஒப்புக்கொள்ள முடியவில்லை. பதில் கட்டுரை எழுதினேன். எட்டு மாதங்கள்வரை அந்தச் சர்ச்சை நீடித்தது. என் நண்பர்கள் உட்பட பலரும் எழுதினார்கள். மா.ஜெகதீசன், எம்.கே.துரைசிங்கம், பா.சண்முகம், ரா.வெற்றிவேல், போன்ற நண்பர்கள் என் சார்பாகவே எழுதினார்கள். தமிழ் முரசில், எட்டு மாதங்கள் இந்தச் சர்ச்சை நீடித்தது. அண்மையில் டாக்டர் லட்சுமி, ‘புதுமைப்பித்தன் இலக்கிய சர்ச்சை’ என்ற தலைப்பில் தொகுப்பு ஒன்றை எழுதியிருந்தார்கள். அதில் என்னைக் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். என் கட்டுரை ஒன்றும் அத்தொகுப்பில் வந்திருக்கிறது.

எதிர்வினையின் வழி எழுத்தாளராவது நல்ல தொடக்கம்தான். ஆங்கில இலக்கிய வாசிப்பு எவ்வாறு ஏற்பட்டது?

1970sபி.கிருஷ்ணன்: கடைகளில் இருந்து எழுதிக்கொண்டிருந்தாலும், இன்னும் எத்தனை நாள்தான் கடையிலேயே ஒரு வேலையாளாக இருப்பது என்கிற எண்ணம் ஏற்பட்டது. என் ஆங்கில மொழி அறிவு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. கடைகளில் இருந்தால் முன்னேற முடியாது என முடிவு செய்து கடை முதலாளியிடம் கூறினேன். முதலில் சம்மதம் கிடைக்கவில்லை. சிறுவனான என்னை அதிகம் வேலை வாங்கலாம். இனி அதற்கு சாத்தியம் இல்லை என்பதுகூட காரணமாக இருக்கலாம். பதினைந்து வெள்ளிக்கு வேலையில் சேர்ந்து முப்பது வெள்ளி சம்பளத்தில் வேலையை விட்டு விலகினேன். அப்போது முப்பது வெள்ளி பெரிய சம்பளம்தான். மனமின்றியே என்னை அனுப்பினார்.

1952 கடைசியில் கடை வேலையை விட்டு விலகினேன். அதுவரை, தமிழ் முரசில் கட்டுரைகள் மட்டுமே எழுதியிருந்தேன். சிறுகதைகளை எழுதவில்லை. வேலையை விடுவதற்கான முதல் நோக்கம் என் படிப்பைத் தொடர்வதுதான்.  தமிழ் படிப்பதோடு ஆங்கிலம் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் வந்தது. ஓர் இஸ்லாமியரின் கடை அல்பர்ட் ஸ்திரீட்டில் இருந்தது. அங்கு தங்கினேன். அவுலியா முகம்மதுதான் எனக்கு அதற்கு ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அந்தக் கடையில்தான் நான் வாடகைக்குக் குடியிருந்தேன்.

பிரிட்டி‌‌ஷ் இராணுவத் தளங்கள் ஒன்றில் எனக்கு வேலை கிடைத்தது. அல்பர்ட் ஸ்திரீட்டில் பிரிட்டிஷ் இராணுவத் தளங்களுள் ஒன்று, டி.சி.ஆர்.இ என்று சொல்வார்கள். அங்குத் தொழில்நுட்பத் துணையாளாய் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு வேலை செய்துகொண்டே பத்திரிகைகளுக்கும் எழுதி வந்தேன். இன்னும் ஆங்கிலம் படிக்கத் தொடங்கவில்லை. அப்போதுதான் எனக்கு எழுத்தாள நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள்.

தமிழ் முரசில் எழுத்தாளர் பேரவை என்ற பக்கம் வரும். எழுத்தாளர்களின் பெயர் முகவரி அதில் வரும். அதிலிருந்து நண்பர்களைக் கண்டுக்கொண்டேன். அதில் ஒருவர்தான் பா.சண்முகம். அவரின் புனைபெயர் குகன். அவரும் படிப்பைத் தொடர விரும்பினார். நாங்கள் இருவரும் ஆங்கிலம் படிக்கத் தயாரானோம். இப்போது நியூட்டனுக்கு பக்கத்தில் மோங்ஸ்ஹில் என்கிற இடம் இருக்கிறது. அங்கு ‘’ஆங்கிலோ மலேய் ஈவனிங் ஸ்கூல்’ இருந்தது. ஏற்கனவே ஆங்கிலம் படித்த அனுபவம் எனக்கு இருந்ததால், ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆரம்பித்தேன். அங்கு படித்துக்கொண்டே நூல்நிலையங்களுக்குச் சென்று வந்தேன். கட்டுரைகளையும் நிறுத்தாது எழுதிக்கொண்டிருந்தேன். பரிசுகளும் கிடைத்தன.

எத்தகைய போட்டிகள் அவை?

பி.கிருஷ்ணன்: 1953 சமயத்தில் பல போட்டிகளில் எனக்கு பரிசுகள் கிடைத்தன. கோலாலும்பூரில் இருந்த தமிழ்க்கலாமன்றம் என்ற இயக்கம் ஆண்டுதோறும் கட்டுரை போட்டி நடத்தினார்கள். ஓர் ஆண்டில் ‘பாரதியாரும் தமிழும்’ என்ற தலைப்பில் போட்டியை வைத்திருந்தார்கள். நானும் கலந்துகொண்டேன். அதில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. ஒரு கிண்ணமும் திருக்குறள், ஐந்திலக்கணம் போன்ற நூல்களையும் பரிசுகளையும் என் பழைய கடை முகவரிக்கு அனுப்பி வைத்தார்கள். அடிக்கடி நான் அந்தக் கடைக்குச் சென்று வந்ததால் பரிசினை அவர்கள் என்னிடம் எடுத்துக்கொடுத்தார்கள்.

1953-இல் தமிழ் முரசு, அகில மலாயா தமிழர் திருநாள் கட்டுரைப் போட்டி நடத்திற்று. கோ.சாரங்கபாணி தமிழர் திருநாளைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் நான் கலந்துகொண்டேன். அதில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. கவிதையில் என் நண்பர் கவிஞர் முகிலனுக்கு முதல் பரிசு கிடைத்தது. கட்டுரைக்குரிய முதல் பரிசு போன்டோக் தஞ்ஜோங், தைப்பிங் என்னும் முகவரியைச் சேர்ந்த ம.செ.மாயதேவனுக்குக் கிடைத்தது.  இப்படியே பாரதியார் பிறந்தநாள் விழா, பாரதிதாசன் பிறந்தநாள் விழா போன்ற பல போட்டிகளுக்குக் கட்டுரைகள் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். சிறுகதைகளை அதுவரையில் நான் எழுதியதில்லை.

இலக்கிய நண்பர்கள் கிடைத்தார்கள் எனச்சொன்னீர்கள். அக்காலத்தில் உங்களுக்கு அவர்களுடனான உறவு எப்படி இருந்தது?

பி.கிருஷ்ணன்: 1954-இல் என் எழுத்தாளர் நண்பர்களுள் ஒருவர் ரா.நாகையன். அவர் முடித்திருத்தும் நிலையம் வைத்திருந்தார். ரேஸ்கோர்ஸ் சாலை, ரங்கூன் சாலை முனையில் வாகனங்களுக்குரிய சக்கரங்கள் விற்கும் கடைக்கு பக்கத்தில் அவர் கடை இருந்தது. அவர் கடைக்குப் பக்கத்தில் வடநாட்டுக்காரர் ஒருவர் நேநீர் கடையை வைத்திருந்தார். உணவுகளும் இருக்கும்.

அந்தக் கடையில்தான் நானும் என் நண்பர்களும் கூடி இலக்கியச் சர்ச்சைகளைச் செய்வோம். அப்படியான சர்ச்சையில் ஈடுபட்டிருந்த ஒரு சமயத்தில்தான் எழுத்தாளர்களுக்குத் தனியாய் ஒரு கழகம் வேண்டும் என்று பேசி முடிவு செய்தோம். பிறகு நாங்கள் பத்து பேர் சேர்ந்து 1953-இல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தை நிறுவினோம்.  அதில் நான் துணைச்செயலாளராகவும், அண்மையில் காலமான ச.கிருஷ்ணமூர்த்தி என்பவர் செயலாளராகவும், ரெ.வெற்றிவேல் தலைவராகவும் பணியாற்றினோம். அக்கழகம் ஓராண்டு மட்டுமே இருந்தது. அதன் பிறகு செயல்படவில்லை.

எழுத்துத்துறைக்கென நீங்கள் புதுமைதாசன் என்னும் புனைபெயரை வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். இந்தப் புனைபெயருக்கு ஏதேனும் காரணம் உண்டா?

பி.கிருஷ்ணன்:  நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என் இயற்பெயரிலேயே எழுதினேன். அதற்கு முன்னரே நான் சொ.விருத்தாசலம் என்னும் புதுமைப்பித்தன் படைப்புகள் சிலவற்றை வாங்கிப் படித்திருக்கின்றேன். அவருடைய எழுத்துநடை பிற எழுத்தாளர்களினின்றும் மாறுபட்டிருந்தது. அதனுடன், சமூகத்தின்பால் அவருக்கிருந்த அக்கறையின் வெளிப்பாடு, அவருடைய கூரிய சிந்தனை, அங்கதச்சுவை, எள்ளல், குத்தல் முதலிய யாவும் என்னைக் கவர்ந்தன. எம்.ஏ பட்டதாரியான அவர் மாப்பஸான், மேரி ‌ஷெல்லி போன்றோர் எழுதிய படைப்புகளையெல்லாம் மொழிபெயர்த்துள்ளார். அவருடைய மொழிபெயர்ப்புகள் உலகத்துச்சிறுகதைகள் என்னும் பெயரில் வெளிவந்திருக்கின்றது. அவர், ஆங்கிலத்தில் எழுதிய பெரும் படைப்பாளர்களது படைப்புகளை மிகுதியாய் படித்தமையால், அவருடைய எழுத்துக்கள் வேறாகவே இருந்தன. புதுமைப்பித்தன் தம் 48ஆம் வயதில் இறந்தபின்னர் அவருடைய மேதைத்தன்மை குறித்துப் பலரும் எழுதினர். அதுவரை வெளிவராத அவர்தம் வேறு பல நூல்களும் வெளிவரத் தொடங்கின. அவையனைத்தையும் நான் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். பின்னர் 1988ஆம் ஆண்டில், ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தன் படைப்புகளையெல்லாம் ஒரே தொகுப்பில் கொண்டு வந்தனர். 95 படைப்புகளைக்கொண்ட அந்த புதுமைப்பித்தன் படைப்புகள் என்னும் தொகுப்புக்கு த.ஜெயகாந்தன் அணிந்துரை எழுதியிருந்தார். நான் அந்தத் தொகுப்பையும் வாங்கிப் படித்தேன். அவையனைத்தும் என்னைப் பெரிதும் ஈர்க்கவே, அவர் மீதிருந்த பற்றால் நான் புதுமைதாசன் என்னும் புனைபெயரை வைத்துக்கொண்டேன். புதுமையின்மீது பித்தம் கொண்டிருந்ததால் அவர் புதுமைப்பித்தன் என்று வைத்துக்கொண்டார். நான் அவர் படைப்புகளுக்குத் தாசனாகி அவர் புனைபெயரின் முதல் பகுதியை எடுத்துக்கொண்டு புதுமைதாசன் ஆனேன்.

வானொலி தொடர்பு குறித்துக் கூறுங்கள்

பி.கிருஷ்ணன்: 1954-இல் எனக்கு ரா.நாகையனின் தொடர்பு கிடைத்தது. அந்தக் கடையிலேயே ஆறுமுகம் என்பவர் குடியிருந்தார். பாலு பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் தமிழகத்து ஓவியர்களிடம் ஓவியம் பயின்றவர். சிங்கப்பூர் வானொலியில் பள்ளிகள் ஒலிபரப்புப் பிரிவு ஒன்று இருந்தது. மாணவர்களுக்குரிய சில நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதற்குரிய ஓவியங்களை இவர் வரைந்து கொடுப்பார். அந்த ஒலிபரப்புப் பிரிவில் D.V.T.ராஜ் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஆறுமுகத்தின் நண்பர். அங்கு அடிக்கடி வருவார். நானும் அங்கு இருப்பதால், ஆறுமுகத்தில் மூலம் அவர் அறிமுகம் கிடைத்தது. வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அவரின் முயற்சியால் நானும் சில நாடகங்களில் நடிக்கலானேன். பிறகு ராஜ், என்னை வானொலிக்கு எழுதச்சொல்லி ஊக்குவித்தார். சிறுசிறு நாடகங்களை எழுத ஆரம்பித்தேன்.

இச்சமயத்தில் ரா.நாகையன் என்னிடம் ஒரு சிறுகதையைக் கொடுத்து அதனை முழு நீள மேடை நாடகமாக மாற்றிக்கொடுக்குமாறு கூறினார். அப்போதெல்லாம் நான் பிரிட்டிஷ் இராணுவத் தளத்தில் கொதிகலன் பகுதியில் துணையாளாக வேலை செய்துகொண்டிருந்தேன். அந்நாடகத்திற்கு நான் கொடுத்த தலைப்பு ‘இன்பம் எங்கே?’. அதனை முழு நீள நாடகமாக நான் எழுதினேன். அது 1954-இல் எழுதப்பெற்று, 1955-இல்தான் அரங்கேறியது.

வானொலி வாய்ப்பு தற்செயலாக அமைந்த அற்புதமான வாய்ப்பு இல்லையா?

பி.கிருஷ்ணன்: 1936 ஜூன் முதல் நாளில்தான் சிங்கப்பூர் வானொலி முறையாகத் தொடங்கியது. 1951-ம் ஆண்டில் பள்ளிகள் ஒலிபரப்புப் பிரிவை வானொலியில் ஆரம்பித்தார்கள். ஆங்கிலம் தமிழ் மலாய் சீன மொழி போன்ற நான்கு மொழிகளுக்குரிய பிரிவுகளுக்கும் இவ்வொலிபரப்பைச் செய்தார்கள். மிகுதியான பள்ளிகள் மலாயாவில்தான் இருந்தன. அப்போது, தோட்டப் பகுதிகளையும் சேர்த்து ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தன. சிங்கப்பூரில் ஏறத்தாழ பதின்மூன்று தமிழ்ப்பள்ளிகள்வரைதான் இருந்தன. குறிப்பாக நாகம்மைய்யார் தமிழ்ப்பள்ளி, கலைமகள் தமிழ்ப்பள்ளி, பாரதிதாசன் தமிழ்ப்பள்ளி போன்றவை.

இந்தப் பள்ளிகளுக்காகச் சிங்கப்பூர் வானொலி, பள்ளிகள் ஒலிபரப்புப் பகுதியைத் தொடங்கிற்று. மாணவர்களுக்காகச் சிறு சிறு நாடகங்களையும் மற்ற நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பி வந்தார்கள்.  அங்குதான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. திரு ராஜ் என்னை அந்தப் பகுதிக்குச் சிறு சிறு நாடகங்களை எழுதச்சொன்னார். சங்க இலக்கியங்கள் படித்த அனுபவம் இருப்பதால், குமண வள்ளல், பெருந்தலைச் சாத்தனார் போன்றவர்களின் வரலாறுகளை குறுநாடகங்களாக எழுதினேன்.

வானொலி நிலையத்திலும் எழுத்தாளராகவே அறியப்பட்டுள்ளீர்கள். அறிவிப்பாளராக உருமாற்றம் அடைந்தது பற்றி சொல்லுங்கள்.

பி.கிருஷ்ணன்: ந.பழனிவேலு என்னும் எழுத்தாளர் பொதுப் பிரிவில் துணைத் தலைவராய் பணியாற்றி வந்தார். பூச்செண்டு என்கிற இலக்கிய நிகழ்ச்சியை அவர் தயாரித்து வந்தார். அதில் என்னை நடிக்க அழைத்திருந்தார். அந்த நாடகத்தில் நான் நடித்தேன். பள்ளி ஒலிபரப்பு பகுதியில் நான் நடித்த நாடகங்களைக் கேட்டுவிட்டு திரு.இராமையா என்பவர் அவரது நாடகங்களில் என்னை நடிக்கச் சொன்னார். அவ்வாறு நடிக்கும் பொழுது வில்லன் கதாபாத்திரம்தான் கொடுத்தார்கள். எனது குரலும் சிரிப்பும் அதற்கு ஏற்றாற்போல இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அந்தக் கால வில்லன் நடிகர் பி.எஸ்.வீராப்பாவின் சிரிப்பைப் போலவே நான் சிரிப்பேன்.

வாழ்க்கையோ வாழ்க்கை என்னும் தொடருக்காக இராமையாவின் வேண்டுகோளின் பேரில் நான் பல நகைச்சுவை நாடகங்கள் எழுதினேன்.

1956ஆம் ஆண்டில் என் திருமண ஏற்பாடுகளின்போது சிங்கப்பூர் அமைதியாகத்தான் இருந்தது. அப்போதுதான் சீன மிடில் ஸ்கூல் மாணவர்களுடைய கலகம் ஆரம்பித்தது. ஹோக்லி பஸ் தகராறு எனச் சொல்லுவார்கள். அதற்கு சார்பாக மாணவர்கள் நடந்துகொண்டார்கள். அதன்பொருட்டு ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தினார்கள். என்னுடைய திருமணத்தின் போதும், பத்து மணிக்குப் பிறகு வெளியில் செல்லக்கூடாது. நான் அல்பர்ட் ஸ்திரீட்டில் தங்கியிருந்தேன். என்னால் வெளியே வர இயலாத சூழல். நான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் அக்காவின் கணவர், பத்து மணிக்கு முன்னதாகவே வந்து என்னை அழைத்துச்சென்றார். சிறிது காலதாமதம் ஆகியிருந்தாலும் எனக்குத் திருமணம் அன்று நடந்திருக்காது. இதன் பிறகும் வானொலிக்குத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். ஆங்கிலோ மலாய் இரவுப் பள்ளியில் படித்துகொண்டிருந்தேன். தொடர்ந்து படிக்க முடியாமல் இடைவெளி விட்டுவிட்டுப் படித்தேன். நான் பணியாற்றிய இராணுவ மையத்திலிருந்து வானொலிக்கு செல்வேன். அதன்பின்னர் இரவுப் பள்ளிக்குச் செல்வதற்கான நேரம் கிடைக்கவில்லை.

1961-ஆம் ஆண்டுவரை நான் வானொலியில் பகுதி நேர கலைஞனாக இருந்தேன். அப்போது வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். நான் முயன்றேன் கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து மீண்டும் அவ்வாறு அறிவிப்புச் செய்தார்கள். இம்முறை முயன்றதும் எனக்கு வேலை கிடைத்தது. டிசம்பர் 1961-ம் ஆண்டு நான் அறிவிப்பாளர் பணியைத் தொடங்கவேண்டும் என்றார்கள்.

ஆனால், நான் வேலை செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ் இராணுவ தளத்தில் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக வேலை நிறுத்தக் கடிதம் கொடுக்க வேண்டும். ஆகவே, ஜனவரி முதல் நாள் அறிவிப்பாளர் பணியைத் தொடங்குவதாக சொல்லியிருந்தேன். ஜனவரி முதல் நாள் 1962-இல் இருந்து வானொலி பொதுப்பிரிவில் முழு நேர ஒளிபரப்பாளனாய்ச் சேர்ந்தேன்.

எப்படி இருந்தது அவ்வனுபவம்?

பி.கிருஷ்ணன்: 1962-இல் ஜனவரி திங்கள் முதல் நாளில் இருந்து பொதுப்பிரிவில் அறிவிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினேன். ‘Broadcasting Assistant Grade 3’ என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.  மூன்றாம் நிலை அறிவிப்பாளர் என்று பொருள்கொள்ளலாம். அப்போது எனக்குச் சாதாரண நிகழ்ச்சிகளைத்தான் கொடுத்திருந்தார்கள். இந்த சமயத்தில், சிங்கப்பூரில் ஏ.எஸ்.முகமட் காசிம் அண்ட் கம்பெனி என்ற நிறுவனம் இருந்தது. ஊட்டச்சத்து சம்பந்தமான பானங்களைத் தயாரிக்கும் நிறுவனம். அதன் சின்னம் யானை. ‘டோனிக் ச்சாப் காஜா’ எனச் சொல்லுவார்கள். சிங்கப்பூர் வானொலியில் அவர்களின் பொருட்களை நாடகங்கள் மூலமாக விளம்பரம் செய்ய எண்ணினார்கள். அதன் பொருட்டு வானொலியில் பதினைந்து நிமிட தொடர் நாடகம் தேவையென்று கூறினார்கள். அதனடிப்படையில், எழுதப்பெற்ற ‘தரம் குறையாத் தங்கம்’, ‘கண்ணே கமலா’ போன்ற நாடகங்கள் ஒளியேறின.

பின்னர் துப்பறியும் நாடகங்கள் நேயர்களை அதிகம் கவரும் என்றெண்ணி அவ்வகை நாடகங்களை ஒலிபரப்பினார்கள். ஒரு தொடர் பதினைந்து நிமிடத்திற்கு இருக்க வேண்டும். ஆறு வாரங்களுக்குக் கொலை செய்தது யாரென தெரியக்கூடாது. ஆறாவது வார இறுதியில் கொலை செய்தது யாரென கேள்வி கேட்கப்படும். அதற்கான பதில் ஏழாம் பகுதில் சொல்லப்படும். அதற்கு சரியான பதில் கொடுக்கும் மூவருக்கு பரிசுகள் உண்டு. நான் வானொலிப்பணிக்கு சேர்ந்த சமயத்தில்தான் துப்பறியும் நாடகத்தைத் தொடங்கினார்கள். அத்தொடரை நிலையத்தார்தான் எழுத வேண்டும். ஏனெனில், வெளியார் எழுதினால் அதற்குப் பணம் கொடுக்கவேண்டும். நிலையத்தார் எழுதினால் அதற்குத் தனியாகப் பணம் கொடுக்கவேண்டிய சூழல் இல்லை. குறிப்பிட்ட தொகையில் நிகழ்ச்சி தயாரிக்க வேண்டிய சூழலே இதற்குக் காரணம்.

பி.பொன்னையா அப்போது தலைவராக இருந்தார். ந.பழநிவேலு, ஈ.எஸ்.ஜே சந்திரன், ஜீ.ஆர்.மணி, எம்.கே.நாராயணன், சுந்தரம் சிலரே நாடகம் எழுதுகின்றவர்களாக நிலையத்தில் இருந்தார்கள். மர்ம நாடகம் எழுதவேண்டிய சூழலில் தலைவர் என்னையும் எழுதச் சொன்னார். அதுவரையில் நகைச்சுவை நாடகங்கள் எழுதிப்பழகிய எனக்கு மர்ம நாடகம் எழுதிய அனுபவம் இல்லை. ‘வினை வைத்த வினை’ என்ற தலைப்பில் முதல் மர்ம நாடகத்தை எழுதினேன். ஐந்து தொடர்களை நான் வானொலிக்கு எழுதினேன். பின்னாளில் அவை நூலாக வந்தன. ‘வினை வைத்த வினை’ நாடகத்தின் தலைப்பை ‘மரண வலை’ என்று நூலாக்கினேன்.

நான் நகைச்சுவைத் தொடர் எழுதத் தொடங்கியது ஒரு தற்செயல் நிகழ்வு. 1962-ஆம் ஆண்டு, ‘துப்பறியும் துரை’ என்ற தொடரை பைரோஜி எஸ்.நாராயணன் எழுதினார். அத்தொடரை எழுதிக்கொண்டிருந்த சமயம் கோலாலம்பூர் வானொலியின் வேலை செய்வதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதனால் அவர் தொடர் நாடகத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் போகும்படியான சூழல் அமைந்துவிட்டது. அப்போது தலைவராக இருந்த திரு.பொன்னைய்யா என்னை அழைத்துப் பேசினார். விடுபட்ட துப்பறியும் நாடகத்தைத் தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்படி விடுபட்டதைத் தொடர்ந்து எழுதுவதைவிடப் புதிதாக ஒரு நாடகத்தை எழுதுகிறேன் என்று அவரிடம் கூறினேன். அதன்படி ‘மாடிவீட்டு மங்களம்’ என்ற தொடர் நாடகத்தை எழுதினேன். அதுதான் என் முதல் நகைச்சுவைத் தொடர் நாடகம். அது நெடுந்தொடராக அமைந்தது. அந்நாடகம் புகழ்பெற்றது. அதன் கதாபாத்திரங்களை இன்னமும் பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள்.  அந்நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, தொடர்ந்து அவ்வகை நகைச்சுவை நாடகங்களை எழுதச் சொல்லிவிட்டார்கள். உண்மையில் நாடகங்களைவிட சிறுகதைகள் எழுதுவதில்தான் எனக்கு விருப்பம் அதிகம். இருந்தும் நேயர்கள் விரும்புகின்றார்கள் என்பதால், தொடர்ந்து தொழிலுக்காக நகைச்சுவைத் தொடர் நாடகங்களை எழுதும்படியானது. ‘மாடி வீட்டு மங்களம்’ நாடகத்திற்கு பிறகு ‘தரகர் தணிகாச்சலம்’ என்ற இன்னொரு நெடுந்தொடரை எழுதினேன். மூன்றாவது தொடர் ‘அடுக்குவீட்டு அண்ணாசாமி’. 1969-ஆம் ஆண்டு அத்தொடரைத் எழுதினேன். அது 52 வாரங்களாக ஒலிபரப்பானது. அந்நாடகம் பெரும் புகழ் பெற்றது. பலமுறை மறுஒலிபரப்பும் ஆனது. அதோடு மறுஒலிப்பதிவு செய்தும் ஒலியேற்றினார்கள். அதன் பிறகு ‘நல்ல வீடு’’, ‘பச்சிலை பச்சையப்பா’, ‘ஐடியா ஐயாகண்ணு’ எனப் பல தொடர் நாடகங்களை நான் எழுதினேன்.

அவ்வாறாயின் உங்களை வானொலியிலும் ஒர் எழுத்தாளராகவே அடையாளப்படுத்தினார்கள் எனச் சொல்லலாமா?

பி.கிருஷ்ணன்: இல்லை. வானொலிக்கு இதர நிகழ்ச்சிகளையும் தயாரிக்க வேண்டியwt Jeyakanthan பொறுப்பு இருந்தது. இசைத்தொகுப்புகளையும் தயார் செய்ய வேண்டும். அவற்றுக்கு யார் பாடலைப் பாடியிருந்தார்கள்? யார் இசையமைத்திருந்தார்கள்? என்ன திரைப்படம்? போன்ற குறிப்புகளை எழுத வேண்டும். இப்போது வெறுமனே பேசுவது போல அல்லாமல், அப்போது எல்லாவற்றையும் எழுதி வைக்க வேண்டும். இசைத்தட்டு தொகுப்பு நிகழ்ச்சிகள் மட்டும் மொத்தம் பதினேழு நிகழ்ச்சிகள் எனக்கு இருந்தன. அவற்றுடன், எனக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளையும் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன் விளையாட்டு குறித்த எந்த நிகழ்ச்சியையும் நான் செய்தது இல்லை. 1963-இல் மலேசியா உருவாகிய பின்னர், ‘பெஸ்தா சுக்கான்’ என்ற விளையாட்டு நிகழ்ச்சி பல மாதங்கள் தொடர்ந்து நடந்தது. எனக்கு முன்பு விளையாட்டு நிகழ்ச்சியைச் செய்தவர் ஈ.எஸ்.ஜே. சந்திரன். தொடக்கத்தில் பள்ளிகள் ஒலிபரப்புப் பிரிவில்தான் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். அதன் பிறகு பொதுப்பிரிவுக்கு மாறி வந்தார்.

1951-ஆம் ஆண்டில் இருந்து 1964-ஆம் ஆண்டுவரை பள்ளிகள் ஒலிபரப்பு பிரிவு இயங்கி வந்தது. 1963-இல் மலேசியா உருவானப் பிறகு, பள்ளிகள் ஒலிபரப்புப் பிரிவு கோலாலம்பூருக்கு மாறிச் சென்றது. அங்கு ஏறத்தாழ ஐந்நூறு பள்ளிகள் இருந்தன என்பதே முக்கிய காரணம். இதனால் பள்ளிகள் ஒலிபரப்பு பிரிவில் பணியாற்றிய அனைவரும் பொதுப்பிரிவிற்கு மாற்றலாகி வந்தனர். அப்படி மாறி வந்தவர்களுள் ஒருவர்தான் ஈ.எஸ்.ஜே.சந்திரன். அங்கு அவர்தான் விளையாட்டு நிகழ்ச்சிகளைச் செய்து வந்தார். பெஸ்தா சுக்கான் நிகழ்ச்சியைப் பதிவு செய்து ஒலிபரப்ப ஒருவரால் இயலாது. இன்னொருவரும் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது என்னைத் தேர்வு செய்தார்கள். நேரடி வர்ணனைகளை நான் செய்தது இல்லை.  அதனால், அதற்குரிய நூல்களைப் படித்தேன், ஆலோசனைகளையும் பெற்றேன். என்னுடைய வர்ணனைகள் பொது மக்களுக்கு பிடித்திருந்தது. 1965-இல் மலேசியாவில் தென்கிழக்காசிய தீபகற்ப விளையாட்டு விழா நடந்தது. அதன் பிறகு அது தென்கிழக்காசிய விளையாட்டுகள் எனப் பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள்.

மூன்றாவது தென்கிழக்காசிய தீபகற்ப விளையாட்டு என்ற பெயரில் கோலாலும்பூரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அதனை கோலாலம்பூருக்குச் சென்று நானும் ஈ.எஸ்.ஜே.சந்திரனும்தான் நேரடி வர்ணனைகள் செய்தோம். சிங்கப்பூர் வானொலியில் ஒளிபரப்பாயிற்று. அதுதான் எனக்கு முதல் பெரிய விளையாட்டு நிகழ்ச்சியாக அமைந்தது. பின்னர் ஈ.எஸ்.ஜே.சந்திரன் தொலைக்காட்சி பிரிவுக்கு மாற்றலாகிவிட்டார். விளையாட்டு நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து செய்தேன். தென்கிழக்காசிய தீபகற்ப விளையாட்டுகள், தென்கிழக்காசிய விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள் எனப் பெரிய நிகழ்ச்சிகளையெல்லாம் செய்தேன். இதற்காக, நான் கோலாலம்பூர், பேங்காக், தெஹரான், மணிலா, இந்தோனேசியா, போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.

நான் செய்த நேரடி வர்ணனை நிகழ்ச்சிகளுள், விளையாட்டு நிகழ்ச்சிகளுடன், சிங்கப்பூர் தேசிய நாள் வர்ணனை, சிங்கப்பூர் கிராண்ட் ஃப்ரி என்னும் கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்குரிய பந்தயங்கள் போன்றவையும் அடங்கும். இவற்றை நான் பல ஆண்டுகளாகச் செய்து வந்தேன்.

வானொயில் பணியாற்றும்போது பல நேர்காணல்களைச் செய்திருக்கிறேன். இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் பலர் அதில் கலந்து கொண்டார்கள். 1968 கோலாலம்பூரில் தமிழ் மாநாடு நடந்தது. அதற்கு டாக்டர்.மு.வரதராசன், கி.வா.ஜகன்நாதன் போன்றோர் வந்திருந்தார்கள். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சிங்கப்பூருக்கு அவர்கள் வந்தார்கள். அவர்களை நான் வானொலிக்காக நேர்காணல் செய்தேன். பிறகு 1971-ஆம் ஆண்டில் இந்தியாவிற்குச் சென்று அங்குள்ள வானொலி பற்றியும் தயாரிப்புப் பணிகள் பற்றியும் தெரிந்துகொள்வதற்காகக் கொழும்புத் திட்டத்தின்கீழ் நான் புதுடில்லி, சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி ஆகியவற்றின் வானொலி நிலையங்களுக்குச் சென்றேன். வானொலிப் பயிற்சிகள் முடிந்தப் பின்னர், நான் இரண்டு வார விடுமுறையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர் மு.வ. அவரை நேரடியாகச் சந்திக்கச் சென்றேன். அதே போல கி.வ.ஜகந்நாதனையும் சந்தித்தேன். அகில இந்திய வானொலியின் சென்னைக் கிளைக்குப் பின்புறம்தான் அவரது கலைமகள் அச்சகம் இருந்தது. அந்த அச்சகம் இருந்தது முண்டக்கண்ணி மாரியம்மன் தெரு. அதோடு பேராசிரியர் கைலாசபதியையும் சந்தித்திருக்கிறேன். ஒப்பிலக்கியத்தில் அறிஞர். அவரையும் நான் நேர்காணல் செய்திருக்கிறேன். தமிழக இதழில் அந்த நேர்காணலைப் பிரசுரித்திருக்கிறார்கள்.

1971ஆம் ஆண்டில் சென்னை வானொலி நிலையத்தில் அகிலனுடன் நான் இருந்தேன். அவர் நான் எழுத்தாளர்கள் பலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். பின்னர் அகிலனை நான் மீண்டும் 1975-இல் சிங்கப்பூரில் சந்தித்தேன். சென்னை வானொலியில் ஜெயகாந்தனும் எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது அவர் ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம் என்னும் தொடரை எழுதிக்கொண்டிருந்தார்.

அந்தவேளையில்தான் புதுக்கவிதை சர்ச்சை எழுந்திருந்தது. அது குறித்த கேள்விகளையும் நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவரும் தகுந்த பதில்களைக் கொடுத்திருந்தார். 1963-இல் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் வானொலி நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அதே ஆண்டில் சிவாஜி கணேசனும் வந்திருந்தார்.  1975-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் கலைநிகழ்ச்சி படைத்தார்.  அவருடன் ஜெயலலிதாவும் வந்திருந்தார். பெரும்பாலும் இலக்கியத் துறை சார்ந்தவர்களைத்தான் நான் நேர்காணல் செய்திருக்கிறேன்.

தொடர்ந்து எனக்கு அவ்வபோது பதவி உயர்வுகளும் கிடைத்தன. அறிவிப்பாளனாகச் சேர்ந்து துணைத்தயாரிப்பாளர், தயாரிப்பாளர் பிறகு மூத்த தயாரிப்பாளர், நிர்வாகத் தயாரிப்பாளர், மூத்த நிர்வாகத் தயாரிப்பாளர் ஆகிய பொறுப்புகளை ஏற்று, இந்தியப் பகுதியின் துணைத்தலைவர் ஆனேன். 1981-ஆம் ஆண்டு தலைவராக இருந்த முருகையன் பதவி ஓய்வுப்பெற்றுச் சென்றதால் எம்.கே.நாராயணன் தலைவரானார். அவருக்கு அடுத்து துணைத்தலைவராக என்னை நியமித்தார்கள். 1992-ஆம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்தேன். அவ்வாண்டு இறுதியில் பணி ஓய்வு பெற்றேன்.

வானொலிப் பணி உங்களுக்கு எளிதாக இருந்ததா? எவ்வகையான சவால்களை எதிர்க்கொண்டீர்கள்?

பி.கிருஷ்ணன்: சவால் என்றால் சிங்கப்பூர் கிராண்ட் ஃப்ரி மோட்டார் பந்தயத்தைச் சொல்லலாம். இப்போட்டிகள் தொடங்கி முடிகின்ற இடத்தில் வர்ணனையாளராய் நான் இருப்பேன். ஒன்று இரண்டு மோட்டார் வாகனத்தின் சத்தமே நமக்குத் தொல்லையாக இருக்கும்போது முப்பதுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார்களின் சத்தத்தையும் மீறி என் குரல் பலத்து ஒலிக்கும் என்ற காரணத்திற்காக என்னை அவ்விடத்தில் நிறுத்தியிருந்தார்கள். அது எனக்குப் பெரிய அனுபவமாக இருந்தது. 1962-ஆம் ஆண்டிலிருந்து, 1973-ஆம் ஆண்டு பந்தயத்தை நிறுத்தும் வரையில் நான் அந்தப் பணியைச் செய்து வந்தேன்.

Asian games Teheran 74 Cசவால்மிக்க அந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையில் நான் எழுதிய நகைச்சுவை நாடகங்களையும் சொல்லவேண்டும். வழக்கமான அரை மணி நேர நாடகங்களை நாம் எழுதிவிடலாம். ஆனால் தொடர் நாடகங்களை எழுதுவது சிரமமானது. தொடர்ந்து எழுதித்தான் ஆகவேண்டும். எப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டாலும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். மற்றவர் யாரும் அதனை தொடரவும் முடியாது. இந்தச் சிக்கல் எனது நாடகமான ‘அடுக்குவீட்டு அண்ணாசாமிக்கு’ ஏற்பட்டது.  இதனை நான் தொடங்கியது 1969-ஆம் ஆண்டு. ஓராண்டுக்கு எழுதினேன். குறிப்பாக இருபதாம் பகுதியை எழுதும்போது, எனது மூன்று வயதுப் பெண் குழந்தைக்கு உதட்டில் புண் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதித்தோம். பொதுமருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரிவில் அனுமதித்தார்கள். மகள், அழுகையை நிறுத்தாமல் இருந்தாள். நானும் மனைவியும் அங்குதான் இருந்தோம். இருபதாவது பகுதியை எழுதித்தான் ஆகவேண்டும், அங்கிருந்த நீள் நாற்காலியில் அமர்ந்து எழுதினேன். அது நகைச்சுவை நாடகம் எழுதுவதற்கான மனநிலை இல்லையென்றாலும் நான் அப்போது இருந்த மனநிலையிலும் நகைச்சுவையாக எழுதினேன். பின் அதனைக் கொண்டுசென்று தட்டச்சு செய்கின்றவரிடம் கொடுத்து தட்டச்சு செய்ய சொல்லி நடிகர்களுக்கு அழைத்து ஒலிப்பதிவுக்கு வரவேண்டிய நாட்களைச் சொல்லி, அதனை ஒலிப்பதிவு செய்து ஒலியேற்றினேன்.

சில சமயங்களில் நகைச்சுவை நாடகத்தை எழுதவே முடியாதபடி வேலைப்பளு இருக்கும். வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் செய்தி வாசிக்க வேண்டும், செய்திச்சுருள், பதினேழு இசை தொகுப்பு நிகழ்ச்சிகள் போன்று பல நிகழ்ச்சிகள் இருக்கும். காலையில் வேலைக்கு வரும்போது வீட்டில் பிள்ளைகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். இரவு வீடு திரும்பும்போதும் பிள்ளைகள் தூங்கியிருப்பார்கள்.

இதுபோன்ற நேரங்களில், தட்டச்சு செய்கின்றவர்களிடம் போய் நின்று, நான் வாய்மொழியாகச் சொல்லச்சொல்ல அவர்கள் தட்டச்சு செய்யும்படியும் நடந்திருக்கின்றது. கதாப்பாத்திரத்தின் பெயரைச் சொல்லி, அவர்களின் வசனத்தை நான் சொல்லவும் அவர்கள் தட்டச்சு செய்வார்கள். இதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள் எனக்கு. சவாலான அனுபவங்கள் கால ஓட்டத்தில் இவ்வாறான நினைவுகளாகத் தங்கி விடுகின்றன.

இதழியல் துறையிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் தொடங்கிய முயற்சியா அது?

பி.கிருஷ்ணன்: இல்லை. 1954-1955-இல் சிங்கப்பூரில் எனது எழுத்தாள நண்பர்களான ரெ.வெற்றிவேல், கவிஞர் முகிலன் ஆகியோர் திங்கள் இதழைத் தொடங்கினார்கள். ரெ.வெற்றிவேல், முன்னேற்றம் என்னும் மாத இதழைத் தொடங்கினார். முன்னேற்றம் என்ற பெயரில் கோ.சாரங்கபாணி ஏற்கெனவே ஒரு பத்திரிகையை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இது வேறு. இவ்விதழ் 1954, 1955 ஆண்டுகளில் வெளிவந்தது. எனக்கு துணையாசிரியராகப் பொறுப்பு கொடுத்தார். பத்திரிகையில் ‘அனலும் அம்பும்’ என்கிற கேள்வி பதில் பகுதி இருந்தது. அதற்கு நான் பொறுப்பாளராக இருந்து வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் எழுதினேன்.

பின்னர் ‘சிந்தனை’ என்னும் முழுமையான இலக்கிய இதழை முகிலன் தொடங்கினார். அதிலும் எனக்குத் துணையாசிரியர் பொறுப்புக் கொடுத்து, வருகின்ற கட்டுரைகளை வாசித்துத் திருந்தும்படி செய்தார்.  இரண்டு பத்திரிகைகளில் ‘முன்னேற்றம்’ பத்திரிகை மட்டுமே அதிக நாள்கள் தொடர்ந்து வெளிவந்தது. துணையாசிரியர் என்கிற முறையில் இவ்விரண்டு பத்திரிகைகளிலும் நான் பணியாற்றியிருக்கிறேன்.

பல்வேறு பணிகளில் உங்களை ஈடுபடுத்தியிருக்கின்றீர்கள். ஆனால் ஒரு இலக்கியவாதியாக உங்கள் படைப்புகளைத் தொகுப்பதில் – வெளியிடுவதில் ஏற்ற சூழல் அப்போது இருந்ததா?

பி.கிருஷ்ணன்: வானொலியில் 1962-இல் முழுநேர பணியாளராக சேர்ந்து 1992 ஆண்டு ஓய்வுAkilan visit 1975 b பெற்றேன். இந்த முப்பது ஆண்டுகளில் என் நூல்களை வெளியிடுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஏனெனில் அக்காலத்தில் வானொலியில் பணியாற்றியவர்கள் வெளி நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூடாது. வெளி பத்திரிகைகளுக்கு எழுதக்கூடாது என்கிற நிபந்தனை இருந்தது. நானும் வானொலிக்கு மட்டும் அதிகம் எழுதினேன். பின்னர் அந்த நிபந்தனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டது. 1990-ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் 25வது ஆண்டு நிறைவு விழாவில் 25 நூல்களை வெளியிடத் திட்டமிட்டார்கள். அதில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் என நான் எழுதியிருந்த நாடகங்களுள் எட்டு நாடகங்களைத் திருத்தி எழுதித் தொகுத்துக் கொடுத்திருந்தேன். அதுதான் இலக்கிய காட்சிகள். இருபத்து ஐந்து புத்தகங்களை இரண்டு திங்களுக்குள் நூல்களாக்கவேண்டிய சூழலில் மிகவும் அவசரமாக பதிப்பகங்கள் பணியைச் செய்தன. என்னுடைய நூல் அதிகப் பிழைகளுடன் வெளிவந்தது. மற்ற நூல்களைப்போல அல்லாமல், என் நாடகங்கள் அனைத்தும் இலக்கிய நாடகங்கள். பாக்கள் எல்லாம் மரபு சார்ந்தவையாக இருந்தன. எண்சீர் விருத்தமா, ஆசிரியப்பாவா, வெண்பாவா, என்பன எப்படி அச்சாக்க வேண்டும் என்பதுகூட அவர்களுக்கு தெரியவில்லை. எல்லாவற்றையும் உரைநடைபோல் அச்சேற்றிவிட்டார்கள். படிக்கவே முடியாதபடி அவை வெளிவந்தன. அதன் பிறகு நூல் வெளியிடுவதற்குரிய எண்ணமே எனக்கு இல்லாமல் போயிற்று.

1992-ஆம் ஆண்டு இறுதியில் பதவி ஓய்வு பெற்ற மறு ஆண்டு, என் கதைகளை நூலாக்குவதற்கான ஆர்வத்தைக் கொடுத்து ஒத்துழைக்கவும் தயாராக இருப்பதாகக் கூறினார் திரு.கோவிந்தசாமி. அவர் நாடகங்கள் பலவற்றை நான் தயாரித்து வானொலியில் ஒலிபரப்பியிருந்தேன். ஏற்கனவே எழுதிய கதைகளுடன் இன்னும் சில கதைகளை எழுதிச் சேர்க்கும்படி முன்மொழிந்தார். பழைய கதைகளில் எட்டு கதைகளுடன் இரண்டு புதிய கதைகளையும் எழுதிச் சேர்த்து அவரிடம் கொடுத்தேன். தமிழகத்தில் அகிலன் கண்ணன் பொறுப்பாளராக இருக்கும் ‘தமிழ் புத்தகாலயம்’ பதிப்பகத்தில் அச்சுக்குக் கொடுத்தார். காகிதங்கள் தரமானவையாக இல்லாமல் அவர்கள் பதிப்பித்திருந்தார்கள். அதனால் கோவிந்தசாமியின் ‘ஓர்கிட்’ பதிப்பகம் மூலம் பதிப்பித்தோம். அந்நூலுக்கு சிங்கப்பூர் புத்தக மேம்பட்டு மன்றம் பாராட்டு விருது கொடுத்தது.

அதன் பிறகு, நான் கதைகளை எழுதவில்லை. அப்போது கோவிந்தசாமி, எனக்குப் பெரும் புகழினைக் கொடுத்த ‘மெக்பெத்’, ‘அடுக்குவீட்டு அண்ணாசாமி’ ஆகிய நாடகங்களை நூலாக்கம் செய்து வெளியிடலாம் எனக்கேட்டு வாங்கிக்கொண்டார். ‘மெக்பெத்’ நாடக நூல் வெளிவந்த பிறகு தமிழகத்தில் இருந்து பாராட்டுகள் வந்தன. அடுத்ததாக ‘அடுக்குவீட்டு அண்ணாசாமி’ நாடகம் கோவிந்தசாமிக்குத் தொடர்புடைய கணியன் பதிப்பகத்தின் மூலம் இரண்டு தொகுப்புகளாக வந்தன. இதுவரை 16 நூல்களை எழுதியிருக்கின்றேன். 5 மர்ம துப்பறியும் நாடகங்கள். மற்றவை இலக்கிய நாடகங்கள் சிறுகதை தொகுப்பு போன்றவை. அவற்றுடன் நான் எழுதி, பாகவதராகவும் பாடி நடித்த நவீன கதாகாலட்சேபத் தொகுப்பும் நூலாக வெளிவந்தது. நான் அதிகமாக எழுதியவை நாடகத் தொகுப்புகளே.

1961-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சிங்கப்பூர் வானொலியின் ஒரு பிரிவாக ‘சுவாரா சிங்கப்பூரா’ என்னும் பிரிவு நான்கு மொழிகளிலும் இயங்கி வந்தது. வெளிநாடுகளுக்குரிய ஒலிபரப்புப் பிரிவு. அது தொடங்கிய பிறகு திரு.இராமையா, திரு.ஹமிட் ஜங் ஆகியோரை அந்தப் பிரிவுக்கு அனுப்பினார்கள். திரு.இராமையா ஷேக்ஸ்பியரின் இரண்டு நாடகங்களை மொழிபெயர்த்து அனுப்பச் சொல்லியிருந்தார். நான் ‘ஒதெல்லோ’, நாடகத்தையும் ‘மெக்பெத்’ நாடகத்தையும் மொழிபெயர்த்து அனுப்பினேன். அவற்றுக்குப் பெரும் பாராட்டுகளும் கிடைத்தன.

1996-இல் ‘மெக்பெத்’ நாடகத்தை முழுமையாகத் திரும்ப எழுதினேன். பிறகு ‘சருகு’, ‘விலங்குப்பண்ணை’ போன்றவற்றை எழுதினேன். 16 நூல்களை எழுதிய பின் இப்போது வேறு சில ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முழுமையாகத் தமிழில் எழுத எண்ணியிருக்கிறேன். குறிப்பாக ‘ஒதெல்லோ’ நாடகத்தை முழுமையாக எழுதுகிறேன். அடுத்து ‘டெம்பஸ்ட்’ நாடகத்தை சூறாவளி என்ற பெயரில் எழுதுவேன். அதன்பின்னர் ‌ஷேக்ஸ்பியரின் வேறு சில நாடகங்களையும் மொழிபெயர்க்க எண்ணியிருக்கிறேன்.

‌ஷேக்ஸ்பியரின் மேல் அப்படி என்ன ஈடுபாடு?

பி.கிருஷ்ணன்: ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மொழிப்பெயர்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு வந்தது இரவு பள்ளியில் படித்ததில் இருந்ததுதான். முன்னர் சொன்னது போல, ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து சந்தர்ப்பச் சூழ்நிலையால் விட்டுவிட்டுப் படிப்பைத் தொடர்ந்தேன். 1962-இல் வானொலியில் முழுநேர பணியில் சேர்ந்த பிறகு, 1967-ஆம் ஆண்டு வரை அப்படித்தான் விட்டுவிட்டு படித்து வந்தேன்.1967-ஆம் ஆண்டில் சீனியர் கேம்ரிட்ஜ் தேர்வை நான் எழுதினேன். அதற்காக ஆங்கில நூல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை அதிகம் படித்தேன்.  தமிழை எவ்வாறு சொந்த முயற்சியில் கற்றுக்கொண்டேனோ அதே போலத்தான் எனது ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டேன்.

இரவுப் பள்ளியில் படிக்கும்போது இலக்கிய பாடத்தையும் நான் தேர்ந்தெடுத்துப் படித்தேன். இரண்டு ஆண்டுகளாகப் படிக்க வேண்டும். முதலாம் ஆண்டில் ‌ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகத்தை வைத்திருப்பார்கள், இரண்டாம் ஆண்டு, துன்பியலை வைத்திருப்பார்கள். அப்போதுதான் ‘மேக்பெத்’-ஐ நான் படித்தேன். ஆசிரியர், மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து நாடகத்துக் கதாபாத்திரத்தைப் பேசி நடித்துக்காட்ட வேண்டும் என்றார். எனக்கு அவ்வாறு ஷேக்ஸ்பியரின் செய்யுள் வரிகளைப் பேசி நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

அப்போது ஆர்ச்சர்ட் சாலையில் பெவிலியன் என்ற திரையரங்கம் இருந்தது. ஆங்கிலேயர்களுக்குரிய திரையரங்கம் என்றும் சொல்லும்படியாக அதிகம் ஆங்கிலேயர்கள்தான் வருவார்கள். அங்குதான் ஆங்கில உயர்தர நாடகங்களைக் காட்டுவார்கள். அவற்றுள் லாரன்ஸ் ஒலிவியர், ஓர்சன் வெல்ஸ் போன்றோர் நடித்த ஷேக்ஸ்பியரின் ஹெம்லெட், மெக்பெத் நாடகம் முதலிய பல நாடகங்களை நான் அங்கு கண்டுகளித்திருக்கிறேன்.  பள்ளியில் எனக்கும் அவ்வாறு கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கும் வாய்ப்பு வந்தபோது நான் பார்த்த தேர்ந்த நடிகர்கள் போலவே பேசி நடித்தேன்.

ஷேக்ஸ்பியர் 37 நாடகங்கள் எழுதியிருக்கிறார்.  சொனென்ட் எனச் சொல்லப்படும் பதினான்கு வரி பாக்களையும் அவர் இயற்றியிருக்கிறார். அவற்றுள், மெக்பெத், ஹெம்லெட், மன்னன் லியர், ஒதெல்லோ என்னும் நான்கையும் மிகச்சிறந்த துன்பியல் நாடகங்கள் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.

‘சுவாரா சிங்கப்பூருக்கு’ ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதும்போது, ஷேக்ஸ்பியர் மீதிருந்த ஆர்வத்தின் பெயரிலேயே அதனை ஒப்புக்கொண்டேன். ஆனாலும் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டேன். ஏனெனில், அவர் படைப்புகள் நானூறு ஆண்டுகள் பழமையானவை. அவை அக்காலக் கடுமையான மொழி நடையில் எழுதப்பெற்றவை. அதனுடன், அவை உரைநடையாக இல்லாமல் பாக்களாகப் புனையப்பெற்றிருந்தன.

பாக்களை வைத்துக்கொண்டு தமிழில் மொழியாக்கம் எனக்கு மிகவும் சிரமமாகவே இருந்தது. அறிஞர்கள் இன்னமும் அவர் படைப்புகளில் திருத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவற்றிலும் பல குழப்பங்கள் இருக்கவே செய்கின்றன. அதிலும் சிலர் தவறுகளைச் செய்துவிடுகிறார்கள். கதாபாத்திரப் பெயர்களில்கூட வெவ்வேறான ஒலியமைப்பில் மாற்றங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால், மெக்பெத் நாடகத்தில் டாக்டர் ‘செட்டன்’ என வரும். ஆனால், இன்னொரு பதிப்பகத்தில் ‘செய்ட்டன்’ என்று இருக்கும்.

மூன்று பதிப்பகங்களின் வெவ்வேறு வெளியீடுகளை வாங்கி அவர் மெக்பெத் நாடகத்தைப் படித்தேன். குறிப்புகளும், வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்த விளக்கங்களும் உதவியாக இருந்தன.  என்னுடைய மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு மாதிரி அல்லாமல், ஷேக்ஸ்பியர் ஒரு தமிழராக இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பாரோ அப்படித்தான் மெக்பெத் நாடகத்தை எழுதினேன். ஷேக்பியரின் மற்ற முக்கியமான நாடகங்களான ஹெம்லெட், மன்னன் லியர், ஒதெல்லோ என்னும் மூன்றுடன் இன்னும் சில நாடகங்களையும் மொழியாக்கம் செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். இதுவரை ஒன்றுதான் சாத்தியமாகியுள்ளது. இன்னும் மீதமிருப்பது ஒத்தெல்லோ, ஆம்லட், கிங் லியர்.

பெரும் உழைப்பை இலக்கியத்துக்காகச் செலுத்தியுள்ளீர்கள். இன்று உங்கள் வாழ்வை திரும்பிப்பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

பி.கிருஷ்ணன்:  சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய விருதான கலாசாரப் பதக்க விருது, தென்கிழகாசிய விருது, தமிழவேள் விருது எனப் பல விருதுகள் கிடைத்துள்ளன. நான் விருதுகளுக்காக யாரையும் அணுகியதில்லை. அவற்றை எதிர்பார்த்ததும் இல்லை. வருவது வரட்டும் என்பதே என் எண்ணம். ஆனாலும், விருதுகள் என்பது எழுத்தாளனுக்கு உணவு போன்றது. அது இருந்தால் இன்னும் ஊக்கமாக எழுத முடியும். விருதுகள் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம். அது இன்றியமையாதது. நான் என் மனநிறைவுக்காக எழுதுகின்றேன். செய்வனவற்றை மிகச்சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நான் ஒவ்வொன்றையும் செய்து வருகிறேன் இன்றளவும். இதைத்தான் நான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். அதனை என்னால் தொடர முடியும் என நம்புகிறேன். என் 86 வயதிலும் கையெழுத்தில்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் என் மனநிறைவுக்காகவே.

இப்போது எனக்கு 86 வயது. இந்த வயதிலும் என்னால் எழுத முடிகிறது. சோர்வுற்றிராமல் எதையாவது எழுதவேண்டும் என இருக்கிறேன். என்னுடைய இந்த மனப்போக்கு தொடர்ந்து இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இன்னும் சாதனைகள் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தைவிட ஷேக்ஸ்பியரின் எஞ்சியுள்ள மற்ற மூன்று முக்கிய நாடகங்களை மொழிபெயர்த்து நூல்களாக்கிவிட்டால் எனக்கு முழு மனநிறைவு கிடைக்கும். என் வாழ்வில் நான் பல சிரமங்களை எதிர்கொண்டவன். அநாதைபோல இருந்தவன். என் சொந்த முயற்சியில் தமிழையும் ஆங்கிலத்தையும் கற்று, தமிழ் சார்ந்த வானொலியில் 31 ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றேன். இன்னமும் தமிழ் எழுத்தாளனாக இருந்து எழுதுதல் எனக்கு மனநிறைவைத் தருகிறது. எதையாவது செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் எதையும் செய்யவேண்டியிருக்கின்றது. சோர்ந்திருந்தால் மூளை துருப்பிடித்துவிடலாம். உண்மையான உழைப்பை எனக்கு கற்றுக் கொடுத்தது நான் வாழ்ந்த கடைநிலை வாழ்க்கைதான். என்னுடைய தொடக்கக்காலத்தில் நான் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையை நான் இன்னமும் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறேன். பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகிறேன். மிகவும் தேவையென்று இருந்தால் மட்டுமே வாடகைக் காரில் பயணம் செய்வேன்.

1956-இல் எனக்குத் திருமணம் நடந்தது. எழுத்தும் பேச்சும்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தன. இதனைப் புரிந்துகொண்ட மனைவி கிடைத்ததால்தான் என்னால் 16 நூல்களை எழுத முடிந்தது. இன்னமும் எழுத முடிகிறது. என் பிள்ளைகள் என்னைப்போல தமிழ் இலக்கியத்துறையில் ஆர்வமுடையவர்கள் அல்லர். அவர்களுக்கு எல்லாமே ஆங்கிலம்தான். எனக்கு பிறகு என் பிள்ளைகள் இலக்கியத்துறையைப் பின்பற்றி வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடன் முடிவடைகிறது என் இலக்கியப்பயணம்.  நான் எழுதிய நூல்களே நான் விட்டுச் செல்லும் சொத்துக்கள். என் நூல்கள் மூலமாக நான் என்ன செய்தேன் என மற்றவர்கள் புரிந்துகொண்டால் அதுவே எனக்கு மனநிறைவை அளிப்பதாய் அமையும்.

நேர்காணல் : ம.நவீன்

 

எழுத்து : தயாஜி

 

2 comments for ““உலகுக்கு நான் விட்டுச்செல்வது எனது நூல்களைத்தான்” – பி.கிருஷ்ணன்

  1. S. S. SARMA
    April 28, 2018 at 12:44 pm

    அடிமனதைத் தொடுகின்றது எழுத்துத் தகைமையாளர் திரு.பி.கிருஷ்ணனின் வாழ்க்கைக் கதை. அவருடைய அடிநாள் இளம் பிராய வாழ்க்கை, ஜப்பான் காலத்திய அநுபவம் அப்படியே எனது வாழ்க்கையுடன் ஒட்டி இருக்கிறது! அவரை விட இரு அகவை கூடுதல் எனக்கு ….இருவரும் பகிர்வதற்கு அளப்பரியன உள்ளன. ம.நவீன், தயாஜியின் பேட்டியும் தொகுப்பும் காலத்தை வென்று நிற்கும் படைப்புகள். வாழ்த்துகள். -சிங்கப்பூர் சர்மா 28-4-2018

  2. May 3, 2018 at 12:55 pm

    நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த நேர்காணல் உதவியது. படிக்கவே சிரமமான காலகட்டங்களில் வளர்ந்து, மெல்ல மெல்ல தன்னை வளர்த்து உயர்ந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...