ஊதா நிற தேவதைகள்

pc31982-இல், எழுத்தாளர் எலிஸ் வால்கர்  எழுதிய ‘The Colour Purple’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம்,  இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் 1985-இல் வெளிவந்தது. இந்நாவலை எழுதிய எலிஸ் வால்கர்  நாவலுக்கான PULIZER விருது பெற்ற முதல் ஆப்பிரிக்கர்-அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. Jaws, Indiana Jones, Jurassic Park போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-இன் எட்டாவது படமான COLOR PURPLE சிறந்தப் படத்துக்கான  ஆஸ்கார் அகாடமி விருதைப் பெற்றது.

அமெரிக்கா, ஜோர்ஜியா புற நகரில், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பக்  காலக்கட்டத்தில் படத்தின் கதை தொடங்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகள் கால ஓட்டத்தின் ஊடே கதையைக் கொண்டு செல்கிறார் இயக்குனர்.

ஒடுக்கப்பட்ட கறுப்பினச் சமூகத்தைச் சேர்ந்த சீலி என்பவளின் 40 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லும் கதைதான் கலர் பேர்பல் (Color Purple).

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள் சீலி. படிப்பறிவற்றவளான அவள் தகப்பனால் உறவுக்கு வற்புறுத்தப்படுகிறாள். கர்ப்பமாகிவிடும் சீலீக்கு இரு குழந்தைகள் பிறக்கின்றன. அவளுடைய தகப்பன் அந்தக் குழந்தையை எடுத்து விற்று விடுகிறான். பிறகு கொடுமைக்காரனான எல்பேர்ட்டுக்குச்  சீலி திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அதன்  பிறகு அவளுடைய வாழ்க்கை நாளுக்கு நாள் கொடுமையானதாகிக்கொண்டே செல்கிறது. அவளது கணவன், சீலியிடமிருந்து அவள் அதிகமாக நேசிக்கும் தங்கையைப் பிரித்து விடுகிறான். தங்கை உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற சந்தேகங்களோடு காலத்தைக் கடத்துகிறாள் சிலீ. ஒருசமயம் தங்கை ஆப்ரிக்காவில் இருக்கிறாள் என்று தெரிய வந்த பிறகு அவளோடு இணையும் அந்த நாளை எண்ணி நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். 14 வயது முதல் 40 வயதுவரையிலான சீலியாவின் கால ஓட்டத்தைப் படமாக்கியிருக்கும் இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பெர்க், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் கல்வியின்றி வளரும் பெண்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் சிக்கல்களையும் குடும்ப வன்முறைகளையும் இப்படத்தின் கதாபாத்திரங்கள் வாயிலாக நமக்குக் காட்டுகிறார்.

அப்பா எனும் ஆண்

சீலி அப்பாவை “பா” என்றுதான் அழைப்பாள். தன்னால் கற்பமான மகள் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல் கவனித்துக் கொண்டிருக்கிறான் சீலீயின் தந்தை. அவளிடமிருந்து பிள்ளையை எடுத்துக் கொண்டு செல்லும்பொழுது  “கடவுளைத் தவிர நீ யாரிடமும் இதைச் சொல்லாதே. சொன்னால் உன் தாயைக் கொன்றுவிடுவேன்!”  என்று எச்சரிக்கிறான். சீலி அன்று முதல்  கடவுளுக்குக்  கடிதம் எழுதத் தொடங்குகிறாள்.

அவள் தன் கதையைச் சொல்லத் தொடங்குவதற்கு முன் “அன்புள்ள கடவுளுக்கு” என்றுpc8 சொல்லி கதையை ஆரம்பிக்கிறாள். தம்முடைய தந்தை தம்மிடம் நல்ல வார்த்தைகளையே பேசியதில்லை என்பதை அவள் கடிதத்தில் குறிப்பிடுகிறாள். தம்மை செக்ஸ் சேவகியாகவும் பிள்ளைகளைப் பெற்று கொடுக்கும் இயந்திரமாகவும்  பயன்டுத்துவதை சொல்கிறாள். “நீ  அசிங்கமானவள். சிரிக்காதே.  சிரித்தால் அசிங்கமாக இருக்கிறது. உன் அம்மா எனக்குச் செய்யாததை நீ செய்யப்போகிறாய்” போன்ற தந்தை பேசிய தகாத வார்த்தைகள்  சீலீயின் கடிதத்தின் வாயிலாகச் சொல்லப்படுகிறது. அவளைப் பெண்பார்க்க வந்த ஆடவனிடம் சீலியின் உருவ அமைப்பைக் கேவலப்படுத்தி அப்பா பேசிய சொற்களை அசைபோட்டபடி இருக்கிறாள்.  “சீலீ அழகானவள் இல்லை என்றாலும் வேலை செய்வாள். நீ எதை செய்யச் சொன்னாலும் செய்வாள். ஆனால் அவள் இரண்டு முறை கெட்டுப் போயிருக்கிறாள். அவள் தூய்மையானவள் கிடையாது” என்று  சந்தையில் மாட்டை விலைபேசுவதுபோல் பேசியதை நினைக்கிறாள்.

இப்படி வாழ்க்கை முழுவதும் துன்புறுத்திய அவளுடைய தந்தை இறக்கிறார். அந்த இறப்புக்குச் சென்றிருந்த சீலி, தந்தை மறுமணம் செய்து கொண்ட இளம் பெண்ணை சர்ச்சில் இறுதி மரியாதைச் சடங்கில்  சந்திக்கிறாள். “எப்படி இறந்தார் ?” என்று அவளிடம் சீலி கேட்கிறாள். அதற்கு அப்பெண் “என் மேலே படுத்திருக்கும் போது” என்று சொன்ன பதிலைக் கேட்டுக் கொண்டே மௌனமாக அவ்விடத்தை விட்டுச் செல்கிறாள் சீலி. இவ்வளவு நாள் தந்தை என்று எண்ணிக் கொண்டிருந்தவர் இறந்துவிட்ட தம்முடைய தாயின் இரண்டாவது கணவர் என்று சீலிக்குத் தெரிய வந்த பிறகு சீலிக்கு ஒரு அமைதி பிறக்கிறது. இரத்தச் சம்பந்தம் இல்லாத என்  தந்தைக்கும் எனக்கும் பிறந்த என் பிள்ளைகள் என் உடன் பிறப்புகள் அல்ல என்று சொல்லி அவள் மகிழ்ச்சி அடைகிறாள்.  தனது சொந்த தந்தையே தனக்கு பிறந்த பிள்ளைகளுக்கும் தந்தை என்ற அவமானத்தின் அழுத்தத்திலிருந்து சீலிக்கு  விடுதலை கிடைக்கிறது.

கணவனும் காமமும்

பெண் கேட்கச் சென்ற எல்பேர்ட், சீலியின் தங்கை நீத்தியைத்தான் முதலில் பெண் கேட்கிறான். ஆனால் அதற்கு அவளுடைய தந்தை சம்மதிக்காததால் சீலியை  வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறான். சீலி  எல்பர்ட்டுக்கு பெயரளவில் மட்டுமே மனைவியாகிறாள். மற்றபடி அவள் அவனுக்கு ஒரு பொருள் மட்டுமே. அவனுடைய பெருவிரலிலிருந்து படுக்கையறை வரைக்கும் சீலி ஓர் அடிமைச் சேவகியாகவே பயன்படுத்தப்படுகிறாள்.  அவள் செய்து கொடுக்கும் கடமைகளை அங்கீகரிக்காத மிருகமாக எல்பேர்ட்  நடந்து கொள்கிறான்.

இறந்து விட்ட முதல் மனைவிக்குப் பிறந்த 4 பிள்ளைகளைப்  பராமரிக்கவும், கூட்டிப் பெருக்கவும்  அவனுக்கு மனைவி என்ற பெயரில் ஒரு வேலைக்காரியாக சீலி இருக்கிறாள். வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளில் எல்பேட்ரின் ஆண் மகன் சீலியின்  மேல் கல்லை  எறிந்து காயப்படுத்துகிறான். அந்தக் காயம் அவளை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்ற விசாரணை இல்லை. ஆனால் அன்றிரவு  சீலியுடன் உடலுறவு கொள்கிறான். தன்னை எல்பேர்ட் கழிவுகளைப் போக்கும் கழிப்பறையாக பயன்படுத்துகிறான் என்பதாக உணர்கிறாள் சீலி. அவன் ஒவ்வொருமுறையும் தன் மேல் படுத்திருக்கும் போது சீலி உணர்வற்ற பொருளாகவே அங்கே கிடப்பதாக கடிதத்தில் பதிவு செய்கிறாள். இதை அவள்  ஷகி  எவெர்லி என்ற பெண்ணிடம் சொல்லவும் செய்கிறாள்.

ஷகி  எவெர்லி படத்தைக் கணவனின் படுக்கை அறையில்தான் சீலி முதலில் காண்கிறாள். ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து கடிதம் வருவதை ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறான் கணவன். அவள் தன் கணவனது காதலி என்று பின்னால் சீலிக்குத்  தெரியவருகிறது. அவள் பெயர் ஷகி  எவெர்லி. அந்தக் கிராமத்தில் இருக்கும் சர்ச்சு பாதிரியாரின் மகள். சர்ச்சில் தெய்வப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தவள் வெளியூருக்குச் சென்று ஆண்களை மகிழ்விக்கும் புலன் மகிழ்வூட்டும் பாடகியாக மாறி மீண்டும் ஊருக்கு வருகிறாள். அவளை எல்பேர்ட் தன்னுடைய வீட்டில் தங்க வைக்கிறான். அவளுடன் நெருக்கமாக பழகுகிறாள் சீலி. அப்போதுதான் தன்னுடைய கணவன் தன்னோடு உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அவளுடைய மன நிலை எப்படி இருக்கும் என்பதை ஷக்கியிடம்  தெரிவிக்கிறாள் .

“உடலுறவின் போது பெரும்பாலும் நான் அங்கு இல்லாதவாரு நினைத்துக் கொள்வேன். அவனுக்கு அந்த வித்தியாசம் தெரியாது. எனக்கு எப்படி இருந்தது? என்று கூட எல்பேர்ட் என்னைக் கேட்டதில்லை. என் மேல் ஏறி அவனுடைய வேலையைச் செய்வான்.” என்கிறாள். சீலி அந்த வீட்டில் பேச்சுரிமை இல்லாமலும் வாழப் பழகிக்கொள்கிறாள்.

pc10ஒரு காட்சியில் சீலியா தன் கணவனின் முதல் மனைவிக்குப் பிறந்த பெண் பிள்ளைக்குத் தலையைச்  சீவிக் கொண்டிருகிறாள். அவனுடைய மனைவி இறந்தது  முதல் கவனிக்கப்படாத அப்பிள்ளையின் தலைமுடி சிக்கு பிடித்து சீவ முடியாமல் இருந்தது. சீவ சிக்கெடுக்க முடியாத முடியை வெட்டிவிடலாம் என்று சீலியா கணவனிடம் கூறும்போது அப்படி செய்வது அதிர்ஷ்டம் கிடையாது என்கிறான். சீவுவதற்கு கடினமாக இருக்கிறது என்று பதில் பேசிய மனைவியை  இரத்தம் வர அறைகிறான். தன்னுடைய ஆணாதிக்கப் போக்கினால் சீலிக்கு அவன் மேல் ஒரு பயத்தை ஏற்படுத்தி, அவளுடைய தன்னம்பிக்கையைப் பறிக்கிறான். அவள் எதற்கும் இலாயக்கற்றவள் என்று அவளையே நம்பவைக்கிறான். கணவனின் பெயரைக் கூட அவள் அறிந்திருக்கவில்லை.. அதுவரைக்கும் மிஸ்டர் என்றே அழைக்கப்பட்ட அவனின் பெயர் எல்பெர்ட் என்று காலம் கடந்துதான் அறிகிறாள் சீலி. பழகிவிட்ட அடிமை குணமும், கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையும், தொடர்ந்து அனுபவித்து வரும் தொல்லைகள், அன்றாட வாழ்கையின் ஒரு பகுதியாக பழகிவிடுகிறது. ஆனால் அந்தப்பழக்கத்திலிருந்தும் அவள் மீள நினைக்கிறாள்.

ஒருசமயம் சீலி கணவனை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறாள். அப்போது அதனை எதிர்க்கும் எல்பெர்ட் அவளின் இயலாமையைச் சுட்டிக் காட்டி அவளுடைய தன்னம்பிக்கையை உடைக்கப்பார்கிறான். “உனக்கு எந்தத் திறமைகளும் இல்லை, அழகற்றவள், நகைக்கக்கூடிய உருவம் கொண்டவள், பயந்தாங்கொள்ளி” என்று திரும்பச் திரும்பச் சொல்லி அவளை அவமானப்படுத்துகிறான். பேசிக்கொண்டிருந்த எல்பெர்ட்டின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் துணிவு முதன்முதலாக சீலிக்குப் பிறக்கிறது. அவனை ஒரு இறந்த குதிரையின் மலத்தின் தன்மைக்கு ஒப்பிட்டு பேசுகிறாள்; பின்னர் ஷகியுடன் வெளியேறுகிறாள்.

ஷகி எனும் தேவதை

அவளிடம் இந்தத் தன்னம்பிக்கை உருவாக ஷகி என்ற பெண்ணே காரணமாக இருக்கிறாள். எல்பெர்ட்டின் காதலியான அவளது கவர்ச்சியான உருவத்திலும், தன்னம்பிக்கையான பேச்சிலும் கவரப்படுகிறாள் சீலி. ஷ கி , சீலியின் கட்டுப்பட்ட சிந்தனைப் போக்கை உடைக்கிறாள். தன்னை இந்த உலகத்திலிருந்து அந்நியமாக்கி வைத்திருக்கும் சீலியின் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிகிறாள். சிரிக்கும் பொழுது வாயைக் மூடிக் கொண்டு சிரிக்கும் சீலியைக் கண்ணாடி முன் நிற்க வைத்து வாய்விட்டு சிரிக்க வைக்கிறாள். இவ்வளவு நாள் தன்னை அழகற்றவள் என்று சொல்லிக் கொண்டிருந்த ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் தன்னுடைய சிரிப்பு அழகானது என்று சொல்வதைக் கேட்டு மலர்கிறாள் சீலி. அது வரையிலும் உணர்வுப்பூர்வமாக யாருடனும் உடலுறவு வைக்காத காரணத்தினால் அவளை  “வேர்ஜின்” என்று குறிப்பிட்டு புதுமையானவளாக மாற்றுகிறாள்.

“மற்ற எல்லாவற்றையும் விட கடவுள்  இரசனையை நேசிக்கிறார்” என்று சீலியிடம்  ஷகி ஒரு காட்சியில் கூறுவாள். “அனைத்து  உயிர்களும் தங்களை நேசிப்பதை எதிர்பார்க்கிறது. கடவுளும் அதையே எதிர்பார்க்கிறார்” என்று ஷகி சீலியிடம் கூறும்பொழுது  கடவுளின் இருத்தலைப் பழங்கால நம்பிக்கையிலிருந்து வேறொரு வெளிக்குக்  கொண்டுச் சென்று பார்க்கிறாள் சீலி.

நீத்தியும் சோபியாவும்

சீலிக்குப் பிரசவம் பார்க்கிறாள் தங்கை நீத்தி. அந்த அளவுக்கு அக்காளின் நலனில் அக்கறைக் காட்டும் பெண்ணாக நீத்தி கதாபாத்திரம் உயிரோட்டமாக காட்டப்படுகிறது. உலகத்தில் அன்பு காட்டும் ஒரே உயிராக நித்தியைச் சீலி எண்ணுகிறாள். அவர்கள் இருவரும் ஆடிப்பாடி ஓடி விளையாடும் காட்சிகளில் அவர்களின் அன்பின் உச்சமான தருணங்கள்.

ஊதா பூக்கள் நிறைந்த மலர்ப் பூங்காவில் இரு சகோதரிகள்  ஓடி ஆடி விளையாடுகிறார்கள்.  இந்த வக்கிரமான உலகில் யாரும் நமக்கு ஆதரவு இல்லை. நீயும் நானும்தான் இருக்கிறோம். ஆகையால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது எனும் உடன்படிக்கையாக இப்பாடல் அமைவதாக இயக்குனர்  உணர்த்துகிறார்.

You and me, Us never partpc6
Makidada
You and me, Us have one heart
Makidada
Ain’t no ocean, ain’t no sea
Makidada
Keep my sista way from me
Makidada

என்று பாடி, தங்கள் கைகளை ஒருவருக்கு ஒருவர் எதிர் புரமாகத் தட்டிக் கொண்டு விளையாடும் விளையாட்டைப் பல முறை காட்சிப்படுத்தி  இருக்கிறார்  இயக்குனர்.  திருமணத்திற்குப் பின் பிரிந்த அக்காள் சீலி, தங்கியிருக்கும் வீட்டிற்குச் செல்லும் நீத்தி, அங்கேயும் இப்பாடலைப்பாடிக்கொண்டு விளையாடுகிறார்கள்.

திருமணத்திற்குப் பின் அக்காவிடமிருந்து பிரிந்த நீத்தி, அப்பாவால் காம தொல்லைகளுக்கு ஆளாகிறாள். அதனால் அவரை  விட்டு வந்து அக்கா தங்கியிருக்கும் வீட்டில் தங்குகிறாள்.  சர்ச்சில்  ஏற்பட்ட சந்திப்பில்  நீத்திமேல் ஏற்கனவே  ஒரு கண் வைத்திருந்த சீலியின் கணவன் எல்பர்ட்  இவளை  நேரம் பார்த்து அனுபவிக்கும் பொருட்டு அவளைத்  தங்க அனுமதிக்கிறான்.

இங்கே  தங்கியிருந்த வேளை, அவள் அக்காள் படும் கஷ்டங்களைப்  பார்க்கிறாள். அடங்காத எல்பெர்ட்டின் பிள்ளைகள் கொடுக்கும் தொல்லைகள், இதைச் செய் அதைச் செய் என்று எல்பேர்ட் போடும் ஆணைகள் நீத்திக்கு எரிச்சலை ஊட்டுகிறது. எதையும் எதிர்க்காமல் அடிமைபோல இருக்கும் அக்காளைக் கேள்வி கேட்கிறாள். யாரையுமே எதிர்த்துப் பேசத் தெரியாத அபலையாக வாழ்ந்து கொண்டிருந்த சீலியால் “எனக்கு எதிர்க்கத் தெரியாது; ஆனால் எப்படி உயிரோடு இருப்பது என்பது எனக்குத் தெரியும்” என்று மட்டுமே பதில் கூற முடிகிறது.

பெண்களுக்கான கல்வி அவர்களை உலகம் தெரிந்தவர்களாக மாற்றும் என்றும் ஆணாதிக்கச் சிந்தனையைக்  கல்வியின் பலம் கொண்டு எதிர்க்க முடியும் என்பதை சீலியாவுக்கு தங்கை நீத்தி உணர்த்துகிறாள். அவளுக்கு அடிப்படைக் கல்வியைச் சொல்லித் தருகிறாள். அவள் சமைக்கும் அறைகளில் உள்ள பொருட்களுக்குப் பெயர்களை எழுதி ஒட்டி வாசிக்கச் செய்கிறாள். கதை புத்தகத்தை வாசித்துக் காட்டுகிறாள். இப்படியெல்லாம் அக்காவுக்கு உதவியாக இருந்த நீத்தியை நேரம் பார்த்து தனிமையாகச் சந்திக்கிறான் எல்பேர்ட். அவளை வன்புணர்வுக்கு உட்படுத்தும் முயற்சியில் தோல்வி காண்கிறான். காமத்திற்கு உடன்படாத நீத்தியை தன்  வீட்டிலிருந்து விரட்டி அடிக்கிறான் சீலீயின் கணவன் எல்பேர்ட்.    அப்போதும், தாங்கள் வழக்கமாக விளையாடும் விளையாட்டை தூரத்தில் நின்று கொண்டு  இருவரும் சைகையில் மௌனமாக விளையாடுகின்றனர். உடலால்  மட்டுமே எங்களை பிரிக்க முடியும் என்று நீத்தி  அழுதுகொண்டே எல்பெர்ட்டிடம் சொல்லிக்கொண்டே மறைகிறாள்.

தன்னிடமிருந்து வாழ்க்கையைப் பறித்துக் கொண்ட கணவனிடம் அவள் கோபப்படவில்லை. ஆனால் உயிரைவிட நேசிக்கும் தங்கையின் கடிதங்களை அவன் மறைத்து வைத்ததை அவள் அனுபவித்த வலிகளைவிட கொடுமையானதாக உணர்கிறாள். சிறு வயது முதல் இப்போது வரைக்கும் எழுதிய கடிதங்களை வாசிக்கிறாள். அதன் வழியாக அவளின் தங்கை கடந்து வந்த வாழ்க்கையின் காட்சிகளைப் பார்க்கிறாள். தன் பிள்ளைகளும் தங்கையிடம் இருப்பதைத் தெரிந்து கொள்கிறாள். எப்பொழுதும் கணவனுக்கு சவரம் செய்யும் அவளது கைகள் இம்முறை அவனது கழுத்தை அறுத்துவிடவேண்டும் என்ற வன்மத்தைக் கொடுக்கிறது.

தங்கையின் மூலம் மனம் விழிப்படைந்த சீலி, சோபியா மூலம் விடுதலை உணர்ச்சியை அடைகிறாள். எல்பேடின் மகன் ஹார்போ காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்தான் சோபியா. இவள் ஒரு கலகக்காரி. பெண்ணைக் கேவலப்படுத்தும் யாரையும் சும்மா விடமாட்டாள். சீலிக்கு சோபியா மருமகள் முறை. இவள் எல்பர்டையே எதிர்த்துப் பேசுகிறாள்.

பெண்ணுக்கு சுயமரியாதை உண்டு என்பதை தமது எதிர்க்கும் போக்கின் மூலம் சீலியாவுக்கு உணர்த்துகிறார்கள்.  ஒரு காட்சியில் சோபியா சீலியாவிடம் இப்படி கூறுகிறாள் “ஆண்கள் குடும்பத்தில் வாழும் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. நான் என் கணவன் ஹார்போவைக் காதலிக்கிறேன். ஆனால் அவன் என்னை கை நீட்டி அடிப்பதற்கு முன் அவனை கொன்று விடுவேன் என்கிறாள். அன்புக்கும் காதலுக்கும் முன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது என்ற அவளது பேச்சு சிலியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது.

பழகிவிட்டப் பிணி

பெண்களை பாண்டமாக பார்க்கும் குணம் எல்பேர்ட் குடும்பத்திற்கு வழிவழியாக வந்த குணம். எல்பெர்ட்டின் தந்தை செய்ததை எல்பேர்ட் கடைபிடித்ததைப்போல் எல்பெர்ட்டின் மகனும் அந்த ஆதிக்கத்தை தன் மனைவியின் மேல் செலுத்தப்பார்க்கிறான். ஆனால் சோபியாவின் எதிர்ப்பு குணம் அதற்கு வழிவிடவில்லை. தகப்பன் – மகன் உரையாடலில் எல்பேர்ட் மனைவியைச்  சின்ன பிள்ளைகளுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறான். மனைவி என்பவள் சின்ன குழந்தை மாதிரி. நம் கையை அவர்கள் முன் ஓங்க வேண்டும். அடிப்பதை விட சிறந்தது ஒன்றும் இல்லை என்கிறான். பல வருடங்களாக ஒரு அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தைப் பிரதிநிதிக்கும் எல்பேர்ட் வசதி படைத்தவனாக தம்மை உயர்திக் கொண்டாலும் அவனுடைய சிந்தனை  அந்த அடிமைப்படுத்தப்பட்ட கொடுமையிலிருந்து விடுபடவில்லை. அவன் அனுபவித்தக் கொடுமைகளை, அவனுடைய மனைவி பிள்ளைகளிடம் வெளிப்படுத்தி மகிழ்ச்சிக் காண்கிறான். நாகரீகம் அடைந்த வேறொரு நிலப்பரப்பில் வாழும் நமக்கு இது இயல்பற்றதாக தோன்றலாம். ஆனால் நாம் குற்றமாக கருதும் நடவடிக்கைகள் இன்னொரு சமூகத்துக்குக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமாக மாறியுள்ளது. ஒரே உலகில் வெவ்வேறு காலங்கள் படிந்திருப்பதை உணரமுடிகிறது.

ஆனால் இந்தப் பாசிப்பிடித்த வழக்கங்களை அந்தச் சமூகத்தில் உருவாகும் சிலரே உடைத்துத் தளர்த்துகிறார்கள். ஷகி, நீந்தி, சோபியா என்ற மூன்று பெண்கள் சீலி எனும் அடிமை குணம் உள்ள பெண்ணுக்குள் கல்வி, தன்னம்பிக்கை, எதிர்ப்புணர்வு ஆகியவற்றை விதைந்து அவளையும் ஒரு நிலத்தில் சுதந்திரமாக வாழும் ஜீவனாக உருமாற்றும் இந்தத் திரைப்படம் ரசிகனுக்கு அற்புதமான அனுபவம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...