“மனைவியின் தாலியை அடகுவைத்து புராதனப் பொருட்கள் சேகரித்தேன்” பிரகாஷ்

01பினாங்கு இந்திய மரபியல் அருங்காட்சியகத்தின்  நிர்வாகி பிரகாஷ்,  ஜெகதீசன் – ராஜகுமாரி தம்பதியரின் இரண்டாவது மகன் . இவர் பிறந்து வளர்ந்தது பேராக் மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் நகரில். தந்தையார் முடித்திருத்தும் கடைகள் வைத்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த இவர் தன் சொந்த முயற்சியில் பினாங்கு தீவில் இந்திய மரபியல் அருங்காட்சியகம் ஒன்றை துவங்கியிருக்கிறார்.  பிரகாஷிற்கு அவரின் மனைவி புனிதா உற்ற துணையாக இருக்கிறார்.  பத்து ஆண்டுகளாக சிறுக சிறுக இவர்கள் சேர்த்த மலேசிய இந்தியர்கள் சார்ந்த புராதனப் பொருட்களை   அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்துள்ளார். பினாங்கு இந்து அறவாரியம் தன் கட்டிடத்தில் அருங்காட்சியகத்தை அமைத்து கொடுத்து உதவியுள்ளது. வரலாற்றை எப்பாடு பட்டாவது அடுத்த தலைமுறைக்கு விளக்கப்படுத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் திரு பிரகாஷுடனான நேர்காணல் இது.

பழைய பொருட்கள் சேகரிக்கும் பழக்கம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? அதன்  தொடக்கம் என்ன?

பிரகாஷ் : என் பெற்றோருக்குப் பழைய பொருட்களைச் சேமிக்கும் பழக்கம் இருந்தது. அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களைப் பாதுகாத்து வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன். சிதம்பரம் கப்பலில் பயணம் செய்த டிக்கெட், காலரா நோய் இல்லை என்பதற்கான அத்தாட்சி சான்றிதழ் (கப்பலில் வந்தவர்கள் புலாவ் ஜெரெஜாக்கில்  ஒரு வாரம் தங்கவைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுவார்கள். அவர்களுக்கு காலரா நோய் இல்லை என்பதற்காக  அத்தாட்சி சான்றிதழ் கிடைத்த பிறகே மலாயா பெருநிலத்திற்குள் நுழைய முடியும்)  போன்ற ஆவணங்களை அப்பா வைத்திருந்தார்.  நான் பிறந்தபோது பயன்படுத்திய கிண்ணம், அரைஞான் கயிறு, கொலுசு, பவுடர் புட்டி, முடி வெட்டப் பயன்படுத்திய கைமிஷின், நான் பள்ளியில் சேர்ந்தபோது கொடுக்கப்பட்ட முதல் கடிதம் போன்ற பொருட்களை அம்மா பாதுகாத்து வைத்திருந்து என்னிடம் கொடுத்தார். எனக்கு இவை பழைய பொருட்களின் மீது ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தியது. நான் விபரம் தெரிய ஆரம்பித்ததும் அப்பாவின் பாதுகாப்பில் இருந்த பொருட்களுக்கான தகவல்களைக் கேட்டறிந்து கொண்டேன்.  என் முதல் நோக்கம் அப்பா புழங்கிய பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

பிறகு நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நானே சில பொருட்களைச் சேகரிக்கத் துவங்கினேன். பொதுதொலைப்பேசி கார்ட்டுகள், பல ரகங்களில் சிறிய உலோக கார்கள் போன்ற பொருட்கள் என்னிடம் இருந்தன. நான் இங்கிலாந்தில் உயர்கல்வி கற்க சென்றபோது, வெளிநாட்டு நாணய சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினேன். மலேசியா வந்த பிறகும் எனது நாணய சேமிப்பு தொடர்ந்தது. முன்னூறுக்கும் மேம்பட்ட உலக நாணயங்கள் என்னிடம் இருந்தன.

திருமணத்திற்குப் பிறகு  என் மனைவி புனிதாவுக்கும் இந்தப் பழக்கம் பிடித்தமானதாகவே06 இருந்தது. அவர் அப்பாவும் இப்படியான பொழுதுபோக்கு உள்ளவர் என்பது காரணமாக இருக்கலாம். நாங்கள் இருவரும் இணைந்து துவங்கிய சேகரிப்பு  ‘டிபன் கேரியர்’ சேகரிப்பாகும். அது ஒரு சுவையான கதை. உண்மையில் எங்களுக்கு  தூக்குச்சட்டி சேகரிக்கும் திட்டம் எல்லாம் இல்லை.  புதிதாக வாங்கிய வீட்டில் சமையற்கட்டை மாற்றியமைத்தோம். முழுக்கவும் மரத்தலான அடுக்குகளைப் பொருத்தினோம். ஆகவே,  அதில் கொஞ்சம் மரபான பழைய அம்சங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபோது, மனைவி இரண்டு தூக்குச் சட்டிகளை வாங்கி வைக்கலாம் என்று ஆலோசனை கூறினார். எனக்கும் அது பிடித்திருந்ததால் பழைய பொருட்கள் விற்கும் கடைகளில் தேடி இரண்டு தூக்குச் சட்டிகளை வாங்கிவந்து வீட்டு சமையற்கட்டு அலமாரியில் அலங்காரத்திற்கு வைத்தோம். அது பார்க்க எடுப்பாக இருந்தது.

அதன், பின்னர் ஒருமுறை ஒரு தீபாவளி கண்காட்சியில், ஈப்போவிலிருந்து வந்திருந்த ஒரு இந்திய பழம்பொருள் வணிகர், பழைய பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தார். அங்கு தூக்குச் சட்டிகளும் சில இருந்தன. நான் அவற்றை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் நீங்கள் தூக்குச் சட்டிகளின் பின்புறம் ‘selamat angkat, selamat makan’ என்று பொரிக்கப்பட்ட தூக்குச்சட்டிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவை 1920-ஆம் ஆண்டுகளில் பாபா ஞோஞ்யாக்கள் பயன்படுத்தியவை என்று கூறினார். நான் அந்தத் தகவலை உள்வாங்கிக் கொண்டாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு வீட்டுக்கு வந்ததும் அன்று இரவு ஏதோ ஒரு உந்துதலில் வீட்டில் இருக்கும் தூக்குச்சட்டியைச் சோதித்த போது அதன் பின்னால் ‘selamat angkat, selamat makan’ என்ற சொற்கள் பொரிக்கப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகே தூக்குச்சட்டிகள் பற்றிய பல தேடல்களை செய்யத் தொடங்கியதோடு தீவிரமாக சேகரிக்கவும் முற்பட்டோம். அதன் தொடர்ச்சியாக வெற்றிலைப் பெட்டிகளையும் சேகரிக்கத் தொடங்கினோம்.

நீங்கள் எந்த துறையில் படித்தீர்கள்? உங்கள் மனைவி எங்கே வேலை செய்கிறார்?

பிரகாஷ் : நான் சுற்றுலா நிர்வாகத்துறையில் படித்துவிட்டு KDU College-ல் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். மனைவி அரசாங்க ஊழியர். தாதியாக பணியாற்றுகிறார். சுற்றுலாத்துறை கல்வி எனது பழம்பொருள் சேகரிப்புக்கு ஒத்து போவதாக இருக்கிறது. வரலாற்று அடிப்படையிலும்  சுற்றுலாத்துறை அடிப்படையிலும் பழம்பொருள் சேகரிப்பு இணைப்பு உள்ள துறைதான். ஆகவே என் கல்வியும் இந்த காட்சிக்கூடம் அமைக்க உதவியுள்ளது.

நீங்கள் பழம்பொருட்களை எப்படி சேகரிக்கிறீர்கள்? கடைகளில் வாங்குவீர்களா? அல்லது  தனி நபர்களிடம் வாங்குறீர்களா?

பிரகாஷ் : ஆரம்பத்தில் எனக்கு போதுமான தொடர்புகள் இல்லை. ஆகவே பழைய பொருட்கள் விற்கும் கடைகளில்தான் பொருட்களை வாங்கினேன்.  அப்படிக் கடைகளில் அலையும் போது வெற்றிலைப் பெட்டிகள் தொடர்பான நிறைய தகவல்கள் கிடைத்தன. மனைவியும் அதுபற்றி கூறினார். கூடவே வீட்டிலும் நான் தாத்தா, அப்பத்தா என்று பலரும் வைத்திருந்த வெற்றிலைப் பெட்டிகளைப் பற்றி சிந்திக்கும் போது, பழைய பொருட்கள் சேகரிப்பு என்பதை பொதுவானதாக செய்யாமல், மலேசிய இந்தியர்களோடு தொடர்புடைய வரலாற்றுத் தேடலாக முன்னெடுக்கும் எண்ணம் வந்தது.

ஆனால், தூக்குச்சட்டி சீனர்களுடையது இல்லையா? 

பிரகாஷ் : அப்படித்தான் பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் தொடக்கத்தில் தூக்குச்சட்டி சீன கலாச்சாரம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அது பற்றிய ஆய்வுகளைச் செய்யும் போது தூக்குச்சட்டி இந்தியர்களோடு தொடர்புடைய ஒரு பொருள் என்பது தெரிந்தது.

தூக்குச் சட்டிகள்  பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் ஆசிய மக்களுக்காகக் குறிப்பாக அலுவலகப் பணியாளர்களுக்காகத் தயாரித்த ஒரு பொருள். அதிலும் அவை அதிகம் புலங்கியது இந்தியாவில்தான். அங்குதான் அதிகமான அலுவலக ஊழியர்களும் அதிகாரிகளும் பணியாற்றினர். பெரும்பாலும் காலை மதிய உணவுகளை அவர்கள் வீட்டில் இருந்தே கொண்டுசென்றனர். அவர்களுக்கு தூக்குச் சட்டிகளின் தேவை அதிகம் இருந்தது. செலோவாக்கியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில்தான் அவை அதிகம் தயாரிக்கப்பட்டன. ‘எனாமல்’ எனப்படும் கண்ணாடி அரைவையும் உலோகமும் கலந்த கலவையில் அவை தயாரிக்கப்பட்டன. பிறகு அவை செம்பு வெண்கலம் போன்ற உலோகங்களிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.

தென்னிந்தியாவிலிருந்து இங்குவந்து ஆங்கில அரசு அதிகாரிகளாக பணியாற்றிய இந்தியர்களும் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் செல்வதுதான் வழக்கம். தமிழர்கள்தான் ஒரு வேளை சாப்பாட்டில் சோறு, குழம்பு, மேல்கறி, துவையல் என்று கலவையாக சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தனர். சில வகை தூக்குச்சட்டிகளில் பக்கதில் ஒரு குழாய் போன்ற அமைப்பு இருக்கிறது. அவை இப்போது கிடைப்பது அரிது. தூக்குச் சட்டியில் அந்த குழாய் ஏன் இருக்கிறது என்று பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பலர் அது சீனர்கள் ‘சோப் ஸ்திக்’ குச்சிகளை வைக்க பயன்படும் என்று நினைக்கிறனர். ஆனால் குச்சி வைக்க அவ்வளவு பெரிய ஆழமான குழாய் தேவை இல்லை. உண்மையில் அந்தக் குழாய்ப் பகுதி, வாழை இலையை சுருட்டி வைக்க பயன்பட்டுள்ளது. வீட்டில் இருந்து  தூக்குச் சட்டியில் உணவு கொண்டு செல்லும் போது ஒரு துண்டு வாழை இலையையும் அதில் செறுகி கொண்டு செல்ல வசதியாக தூக்குச் சட்டிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன என்பது இன்று பலருக்கும் நம்பமுடியாத தகவலாக இருக்கிறது. ஆகவே அலுவலகர்கள், உயர் அதிகாரிகள், கடைவியாபாரிகள் போன்ற மேல் மட்ட இந்தியர்கள்தான் முதன் முதலில் தூக்குச் சட்டிகளைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

மலேசியாவில் இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்திய தூக்குச் சட்டி மெல்ல சீனர்களிடமும் மலாய்காரர்களிடமும் சென்றது. ‘பீங்கான்’ களில் நம்மவர்கள் உணவு உண்ண விருப்பம் காட்டாததால் அது சீனர்களுக்கு ஏற்றதாக மாறியது.  தூக்குச் சட்டிகள் சீன பண்பாட்டு குறியீடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. அதன் வெளிப்புறத்தில் இருக்கும் அழகிய ஓவியங்கள்  பீனீக்ஸ் பறவை, கொக்லியா மலர்கள் என்ற அடிப்படைகளைக் கொண்டிருந்தன.  சீன மேன்மக்களும், பாபா-ஞோஞ்யா பரம்பரையினரும் தூக்குச் சட்டிகளில் உணவு எடுத்துச் செல்வதை மிகவும் பெருமையாக கருதினர். இன்றுவரை அது தொடர்வதை நாம் பார்க்கலாம்.  சீனர்களும் பாபா-ஞோஞ்யா வழிவந்தவர்களும் பல மரபுகளைத் தூக்குச்சட்டியில் வைத்திருந்தனர். உதாரணமாக, வீட்டில் இருந்து வேலையாளிடம் தூக்குச்சட்டியில் உணவைக் கொடுத்தனுப்பும்போது ஒரு பட்டுக் கைக்குட்டையையும் அந்த அடுக்கின் மீது வைத்து மனைவி அனுப்புவாள். பணியிடத்தில், அந்த உணவை உண்ணும் கணவன் அந்தக் கைக்குட்டையில் வாய்துடைத்து பின் கைக்குட்டையைத் தூக்குச்சட்டியின் மீது தொங்க விட்டு அனுப்பினால் அந்த உணவைக் கணவன் சுவைத்து உண்டான் என்பது பொருள். மாறாக கைக்குட்டையை வைக்காவிட்டால் அந்தச் சமையல் சுவைக்கவில்லை என்றோ கணவனுக்குப் பிடிக்கவில்லை என்றோ பொருள்.

இப்போதும் பொருட்களைக் கடைகளில்தான் வாங்குகிறீர்களா?  தனிநபர்கள் முன்வந்து  கொடுப்பது உண்டா?

பிரகாஷ் : முன்பு சொன்னதுபோல், தொடக்கத்தில் கடைகளில் வாங்கினேன். பிறகு இதில் இடைத்தரகர்கள் இருப்பது தெரிந்தது. அப்படியான சிலரிடம் தொடர்புகொண்டு குறிப்பிட்ட பொருட்களைக் கேட்டு வாங்கினேன். சீன மலாய்பாரம்பரிய பொருட்கள் போன்று இந்தியர்களின் பொருட்கள் எளிதில் கிடைக்காது. இடைத்தரகர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து பொருட்களைச் சேகரிப்பதால் அவர்களிடம் இந்தியர் தொடர்பான பொருட்களை குறிப்பிட்டு கேட்டு வாங்க முடிந்தது.

இவர்களிடம் பொருட்களைப் பணம் கொடுத்து வாங்கும்போது அதன் மதிப்பை எப்படி முடிவு செய்கிறீர்கள்?

பிரகாஷ் : பழமையான பொருட்களுக்கு உறுதியான மதிப்பு வரையறை இருப்பதில்லை. பொருளின் வயது, அதன் இப்போதைய நிலை, அரியதன்மை போன்ற கூறுகளின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  விலையை விற்பவர்தான் முடிவு செய்வார். நான் அதிகம் பேரம்பேசுவது கிடையாது.  நான் தேடச்சொல்லும் பொருட்களைத்தான் அவர்கள் கொண்டுவருகிறார்கள். ஆகவே, அதை அதிகம் பேரம் இல்லாமல் சொல்லும் விலைக்கு வாங்கிக் கொள்வேன். இல்லையென்றால் பொருள் வேறு இடத்திற்கு போய்விடலாம். அல்லது பிறகு நான் அவர்களின் உதவியை நாடுவதில் சிரமம் வரும்.

நான் பத்து ஆண்டுகளாக என் வருமானத்தையும் என் மனைவியின் வருமானத்தையும் இப்படிதான் செலவழித்து இருக்கிறேன். திருமணம் ஆகி பத்து ஆண்டுகளாக எங்களுகென்று எந்தச் சேமிப்பையும் வைத்துக் கொண்டதில்லை.  ஆனால் பல லட்சம் வெள்ளி பெருமானம் உள்ள  பழம்பொருட்களை வாங்கி பாதுகாத்து வருகிறோம்.

இப்போது நண்பர்கள் மூலமும் முன்பு பொருட்களை விற்றவர்கள் மூலமும் நிறைய புதிய அறிமுகங்கள் கிடைக்கின்றன. ஒரு வீட்டில் பழம்பொருட்கள் இருப்பதை அறிந்து அங்கு சென்று பொருள் சேகரிக்கும் போது அந்த வீட்டுக்காரர்கள் மூலமும் புதிய தொடர்புகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறேன். ஆகவே இப்போது இடைத்தரகர்களின் பணி குறைந்துவிட்டது.

அதிகமாக பினாங்கு, தைப்பிங் போன்ற பழமையான நகரங்களில் பொருட்கள் கிடைக்கின்றன. தவிர மலாக்கா, நெகிரி செம்பிலான், தெலுக் இந்தான், போன்ற இடங்களுக்கும் பொருட்கள் தேடிச் செல்கிறேன்.

தானே முன்வந்து பொருட்களைக் கொடுப்பவர்கள் இருக்கிறார்களா?

02பிரகாஷ் : என் அனுபவத்தில் அப்படி இல்லை. அவர்களிடம் பழைய பொருட்கள் இருப்பதை எப்படியாவது அறிந்து அவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பொருள் பற்றி கேட்கும்போது தான் அதன் சிறப்பை மக்கள் உணர்கிறார்கள். அதுவரை பாதுகாப்பற்று கிடக்கும் பொருளை நாம் கேட்டாலும் கொடுக்க தயங்குவர். தங்கள் மூதாதையரின் ஞாபகமாக இருப்பதாகவோ அல்லது வேறு ஏதோ ஒன்றை  கூறி கொடுக்காதவர்களும் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் நான் பலமுறை அவர்கள் வீட்டுக்குச் சென்று நட்பை ஏற்படுத்தி நம்பிக்கையைப் பெற்று பின் அந்தப் பொருளை வாங்கியதும் உண்டு.  சிலர் கடைசிவரை மசியாமலும் இருந்துள்ளனர். ஆனால், அவர்களால் அந்தப் பொருளை எவ்வளவு காலத்துக்குப் பாதுகாக்க முடியும் என்பது அவர்களுக்கே புரியாத புதிர்தான். வீடு மாறும் நிலை வந்தால் பெரும்பாலும் பொருட்களைக் கைவிடவேண்டி வருகிறது. இப்போது இருக்கும் தலைமுறையின் மறைவுக்குப் பிறகு நிலைமை என்ன ஆகும் என்பதும் புதிர்தான். ஆகவே அவர்கள் நேசிக்கும் பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் கொடுத்துவிடுவதே சிறப்பு என்பதை நான் எடுத்துச் சொல்வதுண்டு. மேலும் அவர்களின் பொருளுக்கான பணத்தையும் கொடுத்துவிட்டுதான் நான் எடுத்துக் கொள்கிறேன்.  முன்பு தனிமனிதனாக சென்றதால் மக்களுக்குத் தயக்கம் இருந்தது. இப்போது ஒரு அருங்காட்சியகத்தின் சார்பாக முயல்வதால்  மக்களே சுயமாக முன்வந்து பொருட்களைக் கொடுக்கும் நிலை வந்துள்ளது. சற்று முன்கூட ஓர் அம்மையார், கேமரன் மலையில் வாழ்பவர், தங்கள் பழைய வீட்டில் அறை நிறைய சாமான்கள் இருப்பதாக கூறினார். தேவையானதை  அருங்காட்சியகத்துக்குக் கொடுக்க அவர் ஆயத்தமாக இருக்கிறார்.  அதுபோல யாரும் தங்கள் கைவசம் இருக்கு அரிய பழம்பொருட்களை அருங்காட்சியகத்தில் வைக்க விரும்பினாலும், அவர் பெயரிலேயே வைக்கலாம்.  சிக்கல் இல்லை.

சற்றுமுன் சில ஓலைச்சுவடிகளைக் கூட காட்சிக்கூடத்தில் வைத்திருப்பதைப் பார்த்தேன். இன்றைய நிலையில் ஓலைச்சுவடி, ஆவணங்கள், படங்கள் போன்ற பொருட்களின் போலிகள் சுலபத்தில் செய்யப்படுகின்றன. பழம்பொருட்களை வாங்கும்போது

நீங்கள் அதன் அசல்தன்மையை எப்படி முடிவு செய்கிறீர்கள்?

பிரகாஷ் : நான் பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் அனுபவத்தின் அடிப்படியிலும்தான் பொருட்களின் அசல்தன்மையை முடிவு செய்கிறேன்.  எனக்கு பொருட்களைத் தேடித்தரும்  பழம்பொருள் வியாபாரி தேர்ந்த அனுபவசாலி என்பதோடு முழுநேரமாக இந்தத் தொழிலில் இருக்கிறார். அப்படி பட்டவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். காரணம் அது அவர்களின் தொழிலை பாதிக்கும். நான் அவரின் வழிகாட்டுதலின் படி செய்வதால் பிரச்சனைகள் இல்லை. அடுத்து, நீங்கள் பார்த்த ஓலைச்சுவடி என் தந்தையுடையது.  அவர் பெயர் ஜெகதீசன் ரத்தினம். இப்போது  அவருக்கு 76 வயதாகிறது. அவர்  ஊரிலிருந்து மலாயா வரும்போது  சில ஓலைச்சுவடிகளைத் தன்னுடன்  கொண்டுவந்தார். நான் அவற்றை பாதுகாத்து வைத்துள்ளேன். மற்றபடி மற்ற பொருட்களை அதன் தரம், விலை, வேலைப்பாடு நுணுக்கம் போன்ற கூறுகளின் அடிப்படையில் அசல்தன்மையைக் கண்டுபிடித்து விடலாம்.

இந்த கட்டிடத்திற்கு இப்போது வாடகை கட்டுகிறீர்களா? இதற்கு முன் வேறு யாரும்  முன்வந்து உதவியிருக்கிறார்களா?

பிரகாஷ் : இல்லை. இந்த இடத்தை இந்து  அறப்பணி வாரியம் இலவசமாகவே ஒதுக்கி கொடுத்துள்ளது. இப்போது நீங்கள் பார்த்த இந்தக் கூடம் முன்பு பேரா.ராமசாமியின் அலுவலக அறையாக இருந்தது. ஆனால் அவர் இந்த அலுவலகத்தை அதிகம் பயன்படுத்தாததால் எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார். அதோடு முழுமையாக சீர்படுத்தி மரப்பேழைகள், மின்விளக்குகள், கம்பளம் போன்ற அலங்காரங்களையும் இந்து அறப்பணி வாரியமே செய்து கொடுத்தது. நான் சொன்ன வடிவத்திற்கு ஏற்ப அவர்கள் அருங்காட்சியகத்தை அமைத்து கொடுத்தார்கள். நான் பொருட்களை மட்டும் கொண்டுவந்து வைத்தேன்.  இப்போது முன் கூடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அறையையும் இணைக்கும் திட்டம் உள்ளது. ஆகவே, வீட்டில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேம்பட்ட பொருட்களையும் இனி சிறுக சிறுக இங்கே வைக்க முடியும்.

இதற்கு முன் நான் 2009 முதல் பலரிடமும் உதவி கேட்டுள்ளேன். தனி நபர்கள் சிலரும் நண்பர்களும் உதவியிருக்கிறார்கள். அதில் குறிப்பிடவேண்டியவர் மக்கள் ஓசை நிருபர் நண்பர் முருகையன். அவர் தொடக்க காலம் முதல் எனது எல்லா பிரச்சனைகளுடனும் உடன் இருப்பவர்.

மற்றபடி அரசு சார்ந்த அரசியல் தலைவர்கள் பலரையும் நான் உதவி கேட்டு அணுகியதுண்டு. ஆனால், உதவிகள் கிடைத்ததில்லை. இப்போது பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்திய உயர்மட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்துள்ளேன். எல்லாரும் முதலில் நம்பிக்கையாக பேசி அனுப்புவார்கள். பிறகு பலமுறை அலையவிட்டு இறுதியில் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.  பத்து ஆண்டுகள் இப்படியே முடிந்துவிட்டது.

பிறகு ஒருமுறை பேரா. ராமசாமி என் வீட்டிற்கு வந்து என் சேகரிப்பில் உள்ள பொருட்களைப் பார்த்தார். இதை இப்படியே விடக்கூடாது. முறையாக பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி அவரே முயற்சியில் இறங்கினார். இப்போது இது கைகூடியுள்ளது.

நீங்கள் பெரும் பொருளைச் செலவளித்துதான் இந்தச் சேகரிப்பைச் செய்துள்ளீர்கள். ஆகவே, இனி வரும் காலங்களில் பொருளாதார அடிப்படையில் திட்டம் ஏதும் உள்ளதா? உதாரணமாக இந்த அருங்காட்சியகத்திற்கு நுழைவுக் கட்டணம் விதிக்கும் எண்ணம் உண்டா?

பிரகாஷ் : தொடக்கத்தில்,  நான் இந்து அறப்பணி வாரியத்துடன் பேசியதில் இத்திட்டம் இரண்டு பக்க நன்மையை முன்வைத்ததாக இருந்தது. நான் என் சேகரிப்பில் இருக்கும் பொருட்களை மக்களுக்கு காட்டவேண்டும் என்று நினைத்தேன். அறப்பணி வாரியத்திற்கு  சில அரசியல் முன்னெடுப்புகள் இருந்ததால் இத்திட்டம் அவர்களுக்கும் அவசியமானதாக இருந்தது. ஆகவே இது இப்போது இலவசமாகவே செயல்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் இத்திட்டம் எப்படி மாறும் என்று இப்போது சொல்ல முடியாது. ஒருவேளை இந்து அறப்பணி வாரியம் இந்த அருங்காட்சியகத்திற்கு நுழைவு கட்டணம் வைத்தால் நான் அதில் குறிப்பிட்ட பங்கைக் கேட்பேன். அது எனக்காக அல்ல. இது போன்ற அருங்காட்சியகம் தொடர்ந்து வளர நிச்சயமாக நிதி தேவை. புதிய பொருட்கள் சேகரிக்கவும் விரிவு படுத்தவும் கண்டிப்பாக பணம் தேவை. அதற்கு யாரிடமும் நிதி கேட்பதை விட, அரசு மானியங்களுக்காகக் காத்துக் கிடப்பதை விட, நுழைவு கட்டணம் விதிப்பது சரியானது என்றே நினைக்கிறேன். ஆனால் இது இந்து அறப்பணி வாரியத்தின் முடிவைப் பொருத்தது.

பத்து ஆண்டுகளாக இந்தச் சேகரிப்புகளை வீட்டில் வைத்துக் கொண்டு போதுமான உதவிகள் இன்றி எப்படி சமாளித்தீர்கள்?

பிரகாஷ் : மிகக் கடுமையான மன அழுத்தம் இருந்தது. என் அம்மா கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அவர் இறப்புக்குப் பின் நான் இந்த முயற்சியில் இருந்து முற்றாக விலக முடிவு செய்துவிட்டேன். ஒரு நபரிடம் எல்லா பொருட்களையும் விற்றுவிட பேரம் கூட பேசிவிட்டேன். என் அம்மா உயிருடன் இருந்த நாட்களில் அவருக்கு எனது இந்த சேகரிப்பு முயற்சிகளில் விருப்பம் இல்லை. இவை வீண்வேலை என்றே அவர் நினைத்தார். நானும்  மனைவியும் சம்பாதிக்கும் எல்லா வருமானத்தையும் இதில் இழப்பது அவருக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. என்னிடம் பலமுறை அறிவுரைகள் சொல்லியிருக்கிறார்.  ஆகவே அம்மாவின் இறப்புக்குப் பின் சிரமங்களுக்கு இடையில் இதை தொடரும் எண்ணம் இல்லாமல் போனது.  அந்த நேரத்தில்தான் அண்ணன் திரு. மகாலிங்கத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலமாக திரு ராமாவை சந்தித்தேன். அவர் எனது தேவைகளைக் கேட்டறிந்து பேராசிரியரின் உதவியுடன் இதை முடித்துக் கொடுத்தார்.

மலேசியாவில் இது போன்று பழம் பொருள் சேகரிக்கும் வேறு யாரையும் நீங்கள் தொடர்பு கொள்வதுண்டா?

பிரகாஷ் : மலேசியாவில் பலர் பழம்பொருள் சேகரிப்பாளர்களாக உள்ளனர். ஆனால் இந்தியர்களின் பொருட்களை மட்டும் சேகரிப்பவர்கள் இன்று யாரும் இல்லை. எனக்குத் தெரிந்து  முன்பு மலாக்காவில் மணி இருந்தார். அவர் எனக்கு நல்ல பழக்கம்தான். பெரிய சேகரிப்பாளர்தான். மலேசியா மட்டும் இல்லாமல், இந்தோனேசியா, சிங்கபூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் அவர் சேகரிப்புகள் வைத்திருந்தார்.  பழம்பொருள் சேகரிப்பில் உள்ள சில நுணுக்கங்களை அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மலாயா பல்கலைக்கழகத்தில் கூட இரண்டுமுறை கண்காட்சி செய்திருக்கிறார். அப்போதே அவர் பலராலும் நிரந்தர இடம் பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருந்தார். பல கனவுகளுடன் வாழ்ந்த அவர்,  என்னிடம் பலமுறை புலப்பியுள்ளார். நானும் மலாக்கா பாரம்பரிய சுற்றுலா நகரம் என்பதால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்ப்பிகை கூறியுள்ளேன்.

ஆனால் அவர் மறைந்த பின்னர் அவர் சேகரிப்பில் இருந்த பொருட்களை பாதுகாக்க முடியவில்லை. நான் இந்த அருங்காட்சியகம் தொடங்க திட்டம் போட்டதும் அவரின் குடும்பத்தாரிடம் அவரது நினைவாக ஒருபொருளையாவது இங்கு காட்சிக்கு வைக்க விரும்புவதாக தெரிவித்தேன். ஏதாவது ஒரு அரிய பொருளை கொடுத்து உதவுமாறு கேட்டேன். ஆனால், அவரது குடும்பத்தார் அதற்கு இனங்கவில்லை. வேறு யாரிடமோ மொத்தமாக எல்லா பொருட்களையும் ஒப்படைக்கும் முடிவில் அவரது மகன்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  மலேசியாவில் மிக நீண்டகாலமாக பழம்பொருட்களை சேகரித்து வந்த திரு. மணியின் நினைவாக ஒரு பொருளைக் கூட என்னால் இங்கு வைக்க முடியாமல் போனது எனக்கு இன்றும் வேதனையாகத்தான் இருக்கிறது. இன்று அவை  என்ன ஆனது என்று தெரியவில்லை.

பழம்பொருள் சேகரிப்பில் நீங்கள் மலேசிய கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பதாக அறிந்தேன். அது பற்றி கூறுங்களேன்.

மலேசிய கின்னஸ் சாதனையில் நான் இடம்பெற காரணம் என்னிடம் இருந்த இருநூறு05 தூக்குச்சட்டிகள்தாம். நான் அந்த தூக்குச் சட்டிகளை முன்பே சேகரித்து வைத்திருந்தேன். பிறகு, பினாங்கு அருங்காட்சியகத்துடன் இணைந்து தூக்குச் சட்டி கண்காட்சி ஒன்றை ஆறு மாதங்களுக்கு நடத்தினேன். அந்த சமயத்தில்தான் மலேசிய கின்னஸ் சாதனையில் இடம்பெற முடிந்தது. இப்போது மீண்டும் ஒரு சாதனை செய்ய திட்டம் உள்ளது. என்னிடம் இருக்கும் ஆயிரத்து ஐநூறுக்கும் மேம்பட்ட பொருட்களை வைத்து அதிகமான இந்திய மரபு பொருட்களைச் சேகரித்த சாதனையை செய்ய முடியும். அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளாக உங்கள் முயற்சிகளுக்குத் துணையாக உங்கள் மனைவி இருந்து வருகிறார். வருமானம் ஏதும் இல்லாமல், பெரும் பொருட்செலவை மட்டுமே தந்த இத்துறையில் நீங்கள் ஈடுபட அவர் எப்படி அனுமதித்தார்?

என் மனைவியின் பெயர் புனிதா. அவருக்கும்  அடிப்படையில் பழம்பொருள்களில் நாட்டம் இருந்தது. பழம்பொருள் அழகில் ஈர்ப்பு இருந்தது. அது அவரின் அப்பாவின் வழி வந்ததாக இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட சேகரிப்புகள் அவரிடம் இல்லை. ஆகவே எனக்கு அவர் ஆதரவாக இருந்தார். பல நெருக்கடியான நேரங்களிலும் அவர் பின்வாங்காமல் எனக்கு ஆதரவாகவே இருந்தார். என் அம்மாவின் இறப்பிற்கு பிறகு நான் மிகவும் சோர்ந்து இந்த வேலையே வேண்டாமோ என்று நினைத்திருந்த போது கூட அவர் ஊக்கம் குன்றாமலே இருந்தார். நான் என் சேகரிப்பு பொருட்களை விற்க அவர் சம்மதம் கொடுக்க தயங்கினார்.

2014-ஆம் ஆண்டு எங்கள் வாழ்க்கையின் மிக நெருக்கடியான நிலை ஏற்பட்டது. எங்கள் மொத்த சேமிப்பையும் பழம்பொருள் சேகரிப்பில் போட்டுவிட்டு தடுமாறிக் கொண்டிருந்தோம். எங்கள் திருமணத்தில் என் மனைவிக்கு இரண்டு வீட்டார் சார்பாகவும் போட்ட நகைகள் நூற்று ஐம்பது பவுன். எங்கள் பொருளாதார சிக்கலினால் தாலி உட்பட அவ்வளவு நகையையும் அடகு வைக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.  பழம் பொருள் சேகரிப்பில் சில நேரங்களில் ஒரே நேரத்தில் அதிகமான பொருட்கள் திடீர் என்று நமக்கு கிடைக்கும்.  நீண்ட நாட்களாக நாம் தேடிய பொருட்களாக அவை இருக்கலாம். பல பேரிடம் சொல்லிவைத்தவையாக இருக்கலாம். ஆகவே, அந்த நேரத்தில் வாங்க தயங்கினால் பிறகு எப்போதுமே கிடைக்காது. உதாரணத்திற்கு மலாக்கா செட்டிகள் பயன்படுத்திய வெற்றிலைப் பேழை ஒன்றும் பினாங்கு செட்டியார்கள் வீட்டு பொருள் ஒன்றும் ஒரே நேரத்தில் இரண்டு மூலங்களில் இருந்து வந்தால் நாம் அவற்றை எப்பாடு பட்டும் வாங்கியே தீர வேண்டும். எதாவது ஒன்றை தவிர்த்தால் அந்த பொருள் உடனே வேறு நபர்களால் வாங்கப்பட்டு விடும். பிறகு நமக்கு அந்த பொருள் கிடைக்காது.

ஒரு பொருளின் விலை ஐநூறு ரிங்கிட் என்று கணக்கு வைத்தால் ஒரே நேரத்தில் பத்து பொருள் கிடைக்குமென்றால், நாம் உடனடியாக ஐயாயிரம் ரிங்கிட் செலவு செய்தாக வேண்டும். நாங்களும் இப்படியான சிக்கலில்தான் மாட்டியிருந்தோம். போதாதற்கு ஒரு நண்பருக்கு ஜாமின் கையெழுத்துப் போட்டு அதற்காகவும் நான் வங்கிக்குக் கடன் கட்டவேண்டிய சிக்கலில் மாட்டியிருந்தேன்.

நான் வாடிக்கையாக பழைய பொருட்களை வாங்கும் தரகரிடம் ஒரு லட்சம் வெள்ளிவரை கடன் இருந்தது. அவர் நல்ல மனிதர்தான். அவர் எனக்குப் பெரிய நெருக்கடிகள் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் நான் குற்ற உணர்வில் வீட்டுக்குள்ளேயே சில நாட்கள் பதுங்கிக் கிடந்ததும் உண்டு. வீட்டுக் கதவை யாராவது தட்டினாலே கடன் கொடுத்தவர் யாரும் தேடி வந்துவிட்டார்களோ என்று பயந்து கிடந்தேன்.

அப்போது நானும் மனைவியும் சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலையில்தான் இருந்தோம். எங்கள் நிலை வெளியில் யாருக்கும் தெரியாது. நல்ல சம்பளம் பெரும் வேலையில் இருவரும் இருப்பதனால் எங்கள் உண்மை நிலையை அவர்கள் நாங்களே சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். சம்பள தேதிக்கு முந்தைய நாட்களை ஓட்ட பெரும் அவதியாக இருக்கும். ஐம்பது காசு மட்டுமே கையில் இருந்த நிலைகூட இருந்தது. செயற்கையாக ஒரு விபத்தில் அடிபட்டு காப்புறுதி பணம் பெறலாமா என்று கூட நான் யோசித்தது உண்டு. மக்கள் ஓசை நிருபர் முருகையா மட்டுமே அப்போது எங்களுக்கு உதவியாக இருந்தார்.  அப்போதெல்லாம் என் மனைவி கொஞ்சமும் சலித்துக் கொள்ளாமல், எப்படியும் சமாளித்துவிடலாம் என்று நம்பிக்கையோடு இருப்பார். அவர் மருத்துவமனையில் தாதியாக இருக்கிறார்.  செலவைக் குறைக்க பல நாட்கள் தாதிகளுக்கான ஓய்வு அறையிலேயே ஏதாவது எளிமையாக சாப்பிட்டுக் கொண்டு வாழ்க்கையைச் சிரித்த முகத்துடன் ஓட்டினார்.

தீபாவளிக்கு, பெற்றோரைப் பார்க்கக் கூட போகமுடியாத நிலை. இறுதியில் வேறு வழிதெரியாமல் என் அம்மாவிடம் நிலைமையைச் சொன்னதும் அவர் செய்த பண உதவியில் மீண்டு வர முடிந்தது.  அவ்வளவு சிரமங்களிலும் என் மனைவி எனக்கு ஆதரவாகத் தான் இருந்திருக்கிறார். இப்போது பழகிப் போய்விட்டது. இந்த துறையின் நுணுக்கங்களும் தெரிந்து கொண்டேன். ஆகவே முன்பு போன்ற சிக்கல்கள் இல்லை.

பழம்பொருட்கள் மதிப்பானவை என்பதால் நீங்கள் ஏன் அவற்றை விற்று உங்கள் பண நெருக்கடிகளைச் சமாளிக்கவில்லை?

பிரகாஷ் : நான் வாங்கி விற்கும் வேலைகளைச் செய்ததே இல்லை. காரணம் எனது நோக்கம் அரிய பொருட்களைச் சேகரித்து வைப்பதுதான். அதை வியாபாரமாக்குவது அல்ல. ஒரு பொருளை வாங்க இன்னொரு பொருளை விற்பது சுலபம்தான். ஆனால் அப்படி செய்தால் சேகரிப்பு இல்லாமல் போய்விடும்.  நான் தேடிய ஒரு அரிய பொருளைத்தான் நான் வாங்குகிறேன். பிறகு எப்படி அதை விற்க முடியும். இதுவரை நான் வாங்கிய எந்த பொருளையும் விற்றது கிடையாது.  அப்படி விற்க ஆரம்பித்துவிட்டால் பணம் சேர்க்கும் ஆசைதான் அதிகம் ஏற்படும். பழம்பொருள் சேகரிப்பு என்பது இல்லாமல் போய்விடும்.  என் மனைவிக்கும் அதில் விருப்பம் இல்லை.

வாழ்க்கையின் பல நெருக்கடிகளைச் சந்திக்கும் துணிவு இப்போது உங்களுக்கு வந்திருப்பது தெளிவாகிறது. ஆயினும் உங்களால் மறக்க முடியாத அனுபவம் ஏதும் உண்டா?

பிரகாஷ் : நிறையவே உண்டு. ஆனாலும் வினோதமான அனுபவங்கள் சிலவும் ஏற்பட்டு எங்கள் மன உளைச்சலை அதிகப்படுத்தின. நான் பழம்பொருட்கள் பலவற்றை வாங்கி என் வீட்டின் அறையில் வைத்திருந்தேன். அவற்றில் மரத்தால் செய்யப்பட்ட பொருட்களும் இருந்தன. ஒரு முறை ஏதோ காரணமாக அவற்றை எடுத்துப் பார்த்தபோது,  அதிர்ச்சியில் உரைந்து போனேன். படங்களின் சட்டகங்கள் எல்லாம் கரையான் அரித்து உலுத்துக் கொட்டின.  பிறகு கவனித்துப் பார்த்த போதுதான் வீடே கரையான் தாக்குதலுக்கு இழக்காகியிருப்பது தெரிந்தது. பல சேகரிப்பு பொருட்கள் பாதிக்கப்பட்டன. ஆதிகாலத்தில் ஓலைச்சுவடிகளை கரையான் அரித்து அழிந்ததாக நாம் நூல்களில் வாசித்திருப்போம். அப்படியான கரையான் தாக்குதலை நான் நேரடியாக அனுபவித்தோம்.  பிறகு, சில ஆயிரங்களைச் செலவு செய்து கரையான்களை அழித்து சேகரிக்கப்பட்ட பொருட்களையும் வீட்டையும் பாதுகாத்தோம்.

அடுத்து சில மாதங்களில் மூட்டைப்பூச்சி தாக்குதல் தொடங்கியது. பழைய பொருட்களோடு எங்கள் உடல் நலனிலும் பாதிப்புகள் வந்தன. அதற்கும் பணம் செலவு செய்து மீண்டு வந்தோம்.

உங்கள் சேகரிப்புகள் மலேசியாவை மட்டுமே அடிப்படையாக கொண்டவையாஅல்லது அயல்நாட்டுபொருட்களையும் உள்ளனவா?

எண்பது விழுக்காட்டுப் பொருட்கள் மலேசியாவைச் சார்ந்த பொருட்கள்தான். ஆனால் சில பொருட்களுக்காக சிங்கப்பூர் தமிழ்நாடு என்று சென்று தேடியது உண்டு. இணையம் வழியும் பொருட்களை வாங்குகிறேன். இந்தோனேசியாவில் வாழ்ந்த இந்தியர்களின் நிழல் படங்கள் என்னிடம் உள்ளன. வேறு சில பொருட்களைத் தமிழ்நாட்டுக்குச் சென்று வாங்கியது உண்டு. உதாரணமாக கோரைப்பாய் என்பது நமக்கு சொல்வழிதான் தெரிகிறது. இங்கு அதைப் பார்த்தவர்கள் குறைவு. அது மக்கி போகும் பொருள் என்பதால் மலேசியாவில் கிடைக்கவில்லை. நான் தமிழ்நாட்டுக்குச் சென்றுதான் கோரைப்பாய்களைக் கொண்டு வந்தேன்.

நீங்கள் தமிழர்கள் மரபான பொருட்களில் எல்லா வகை பொருட்களையும் சேகரிக்கிறீர்களா ? சேகரிப்பில் இல்லாத பொருட்கள் உள்ளனவா?

நான், தமிழர்கள் ஆடைகளை சேகரிக்கவில்லை. அதே போல் இசைக்கருவிகளையும் சேகரிக்கவில்லை. இப்போது உங்களோடு பேசிய பிறகு தற்காப்பு கலை சார்ந்த பொருட்களையும் சேகரிக்கவில்லை என்பதை உணர்கிறேன். சிலம்பக் கழி, மான்கொம்பு போன்ற ஆயுதங்களை சேகரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அவை ஆர்வமூட்டும் பொருட்களாகதான் இருக்கும்.

அயல் நாடுகளில் இருந்து பொருட்கள் கொண்டுவருவதில் சட்டசிக்கல் உள்ளதா? 

உள்ளது. தமிழகத்தில் இருந்தே முன்பு போல பொருட்களைச் சுலபமாக கொண்டுவர முடிவதில்லை. மோடி பிரதமரான பின்னர் சுங்கத்துறை கெடுபிடிகள் அதிகம். உள்நாட்டு பாரம்பரியப் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்பு காரணமாக அனுமதி கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆனால், குடும்ப சொத்து என்பதை உறுதி படுத்தினால் இங்கு கொண்டுவர முடியும். எடுத்துக்காட்டாக, அம்மா தமிழகத்தில் திருமணம் செய்தவர். அவருக்கு வந்த சீர்கள் இன்னும் கிராமத்தில் உள்ளன. அவற்றை கடிதம் எழுதி அனுமதி பெற்று இங்கு கொண்டுவரலாம்.

உங்களிடம் சேமிப்பில் உள்ள பொருட்களை எப்படி பதிவு செய்து வைத்துள்ளீர்கள்?

இதுவரை அப்படி ஒன்றும் செய்யவில்லை. வீட்டில் சேகரிப்பாக மட்டுமே அவை இருந்தன. ஆனால், இனி முறையான குறிப்புகளை எழுதிவைக்கவேண்டிய நிர்பந்தம் உள்ளது. அருங்காட்சியகத்தில் பொருட்களை வைப்பதற்கு சில முறைகள் உள்ளன. நூல்நிலையத்தில் நூல்களை கெத்தலோக் முறையில் பதிவு செய்து வைத்திருப்பது போல முறையான பதிவு இருப்பது அவசியம்.

இனிமேல் பொதுமக்கள் உங்களீடம் தாங்கள் வைத்திருக்கும் பழம் பொருளைக் கொடுக்க நினைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

04இப்போது நாங்கள் ஒரு சிறப்பு பாரம் வெளியிட்டு இருக்கிறோம். அதைப் பெற்று எங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம். அடிப்படையில் இந்தியர்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பொருட்களாக இருக்கவேண்டும் அல்லது மலேசிய தமிழர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய பொருட்களாக இருக்க வேண்டும்.  ஆனால் ஏற்கனவே இங்கு இருக்கும் பொருட்களையே கொண்டு வந்தால் ஏற்க முடியாது. உதாரணமாக அதிகமானவர்கள், அம்மிக்கல், ஆட்டுக்கல், போன்றவற்றை கொண்டு வருகிறார்கள். அவை என்னிடம் பத்துக்கும் கூடுதலாக இருக்கின்றன. ஆகவே அவற்றை ஏற்க முடியாது.

அடுத்ததாக, மக்களிடம் பாரம்பரிய வாழ்க்கை சார்ந்த கதைகளை சேகரிக்க திட்டம் இருக்கிறது. முன்பு, தூக்குச் சட்டி கண்காட்சியைப் பினாங்கு அருங்காட்சியகத்தில் நடத்தியபோது, ஒரு கதையாடல் நிகழ்ச்சியை நடத்தினோம்.  தூக்குச் சட்டியைப் பயன்படுத்தி அனுபவம் பெற்ற மூத்த தலைமுறை பல்லின பெண்களை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர்களிடம் தூக்குச்சட்டி தொடர்பான பல சொந்தக் கதைகளைக் கேட்டறிந்தோம். அவற்றை பினாங்கு அருங்காட்சியகம் ஒலி/ஒளி பதிவு செய்து பாதுகாத்து வைத்துள்ளது. தூக்குச் சட்டியை மையமாக வைத்து அவர்கள் சொன்ன சொந்த வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக முந்தைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளையும் சடங்குகளையும் எழுத்தில் இல்லாத பல வரலாற்றுச் சம்பவங்களையும் மீட்டெடுக்க முடிந்தது.  நான் எனது மாஸ்டர் பட்டபடிப்பிற்கு அந்தப் பதிவுகளையே பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெற்றேன்.  ஆகவே, மக்கள் பொருட்களாக கொடுக்க முடியாவிட்டாலும், கதைகளாகவும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அவையும் மதிப்பு மிக்க பொக்கிஷங்கள்தாம். அப்படியான நிகழ்சிகள் நடத்த திட்டம் உள்ளது.

சற்று முன் உங்கள் மாணவி ஒருத்தி அருங்காட்சியகத்தில் உதவியாளராக இருப்பதைப் பார்த்தேன். உங்கள்பணியிட நிர்வாகம் நீங்கள் இதுபோன்ற கூடுதல் வேலைகளில் ஈடுபடுவதைப் பற்றி என்ன நினைக்கிறது?

பிரகாஷ் : எனது பணியிட நிர்வாகம் நான் இயங்க முழு சுதந்திரம் தருகிறது. என் வேலை நேரம் காலை எட்டு முதல் மாலை ஐந்துவரை. ஆனால், இந்த அருங்காட்சியகம் அமைக்கும் பொருட்டு நான் சில நேரங்களில் சீக்கிரம் வெளியேறுவதற்கு அனுமதி கொடுக்கிறது. கல்லூரியில் செய்யவேண்டிய அடிப்படை வேலைகளுக்குப் பாதிப்பு இல்லாதவரை யாருக்கும் சிக்கல் இல்லை. அதோடு KDU சுற்றுலாத்துறை விரிவுரையாளர் ஒருத்தர் தேசிய அளவில் வரலாற்றுச் சுற்றுலா தொடர்பான ஒரு பணியில் ஈடுபட்டிருப்பது அவர்களுக்கும் மதிப்பை கூட்டியே கொடுக்கிறது. ஆகவே கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது.

இப்போதைக்கு நானும் என் மனைவியும் இந்த இடத்தை பராமரிக்கவும் பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுக்கவும் முயல்கிறோம். உதவிக்கு அவ்வப்போது எனது மாணவ மாணவிகள் வந்து போவார்கள். அவர்கள் தங்கள் கல்லூரி வேலைகளை இங்கு வந்து இருந்தபடி செய்து கொள்வார்கள்.

இப்போது வைக்கப்பட்டுள்ள பொருட்களை எப்படி பராமரிக்கிறீர்கள்? அதற்கென்று சிறப்பான வழிகள் ஏது உண்டா?

பிரகாஷ் : சாதாரண பராமரிப்புதான். தூசு துடைப்பது, வேக்கியும் செய்வது போன்றவை. நானே செய்துவிடுவேன். என்னைப் பொருத்தவரை, பார்வையாளர்கள் பழம்பொருட்களின் தன்மையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள அவற்றை தொட்டுத் தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன். அதற்கேற்ப பல பொருட்களை வருகையாளர்கள் தொட்டுப் பார்க்க ஏதுவாகவே வைத்துள்ளேன். சில நுட்பமான பொருட்களை மட்டும் கண்ணாடி பேழைகளில் கைப்படாமல் வைத்துள்ளோம்

உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

பிரகாஷ் : முதலில் பொருட்களைப் பார்வைக்கு வைக்க ஒரு இடம் தேடி அலைந்தேன். அதிலேயே பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இனி அந்தப் பிரச்சனை இல்லை. இப்போதைக்கு இந்த அருங்காட்சியகத்தை மேலும் செம்மைப்படுத்த வேண்டும். இங்கு வைக்கப்பட்டுள்ள இன்னும் வைக்கப்படாத எல்லா பொருட்களுக்கும் வரலாற்றுக் குறிப்புகளை எழுதவேண்டும். பிறகு மலேசிய இந்தியர் வருகை தொடர்பான ஒரு காலவரிசையை இங்கு வரையவேண்டும் என்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். நான், பெ.நா. மு. முத்துபபழனியப்பன் 1923-ல் எழுதிய ‘மலாயாவின் தோற்றம்’ என்ற நூலை வாசித்துள்ளேன். அதில் தொடக்க காலத்தில் மலாயா வந்த இந்தியர்களில் நல்ல நிலையில் இருந்த தமிழர்களின் பதிவும் மலாயாவின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் தெளிவாக உள்ளது. தோட்ட தொழிலாளர்களின் உடல் உழைப்போடு வணிகர்களாகவும் அதிகாரிகளாகவும் பணியாற்றிய இந்தியர்களும் மலாயாவில் வாழ்ந்துள்ளனர்.  அவர்கள் இந்நாட்டின் நிர்வாகம், பொருளாதாரம் போன்ற துறைகளில் பங்காற்றிய மூத்தவர்கள்.  அதே போல, பா.சந்திரகாந்தம் எழுதிய ‘200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்’, ஜானகிராமன் மாணிக்கம் எழுதிய ‘மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை’ போன்ற நூல்களையும் அடிப்படையாக வைத்து காலவரிசையை உருவாக்கலாம். ஆகவே மலேசியாவுக்கு பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் உடல் உழைப்பு தொழிலாளிகளாக கொண்டுவரப்பட்ட மக்களோடு சொந்தமாக  வணிகம் செய்ய வந்த இந்தியர்களின் வரலாற்றையும் சேர்த்து காலவரிசையை முறையாக பதிவு செய்து வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதை ஒரு வரைபடமாக அருங்காட்சியக சுவரில் வரைந்து வைக்க திட்டமிட்டுள்ளேன்.

பழம்பொருள் வரலாற்று நினைவுகள் போன்ற விடயங்கள் மூத்த தலைமுறையைச் சுலபத்தில் கவர்ந்துவிடும் என்பது இயல்பே. காரணம் அதில் அவர்களின் வாழ்க்கைத் தடம் பதிவாகி இருக்கும். ஆனால், இன்றைய நவீன இளையோருக்கு கணினியும் இணையமும் வளர்த்த Y தலைமுறை இளைஞர்களுக்கு எந்த அளவுக்கு ஏர்ப்பு உள்ளதாக இருக்கிறது? 

பிரகாஷ் : இளைஞர்கள் வருகிறார்கள். பெற்றோருடன் வரும் இளைஞர்கள் பலர். ஆனால் அவர்களில் எத்தனை பேர் இங்குள்ள பொருட்களில் இருந்து தகவல்களை உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.

நான் இங்கு பொருட்களை அடுக்கியப் பின் நேர அளவு தொடர்பான சில முன்னோட்டங்களைச் செய்தேன்.  அதன்படி, ஒரு நபர் முதல் பொருளில் இருந்து கடைசி பொருள்வரை பொருமையாக நின்று பார்க்கவும் குறிப்புகளை வாசிக்கவும் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் தேவைப்படும். ஆனால் இங்கு வரும் நம்மின இளைஞர்கள், பத்து நிமிடத்தில் பொருட்களைப் பார்த்து முடித்து விட்டு வெளியேறி விடுகின்றனர். அடுக்கப்பட்டுள்ள எண் வரிசைப்படியும் வருவது இல்லை. முன் பகுதியில் சில பொருட்களைப் பார்த்ததோடு நேராக பின் பகுதியில் உள்ள பொருட்களை மேலோட்டமாக பார்த்து விட்டுச் செல்கிறார்கள். அப்படி என்றால், அவர்கள் இங்குள்ள வரலாற்று பொருட்களின் பின்னணியை முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை என்றுதான் பொருள். சில தம்படங்கள் பிடித்துக் கொண்டதோடு அவர்கள் முடித்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் தேடல் குறைவாகவே உள்ளது.

ஆனால், ஒத்த வயதுடைய  சீன இளைஞர்களும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் என்னிடம் கேள்விகள் கேட்டு துழைத்தெடுத்து விடுகிறார்கள்.  ஒரு மணி நேரம் இங்கே செலவிட்டு தகவல்களைப் பெறுகிறார்கள்.  சிலர் தாங்கள் படித்த தகவல்களோடு ஒப்பிட்டு சரிசெய்து கொள்கிறார்கள். அது சிலநேரங்களில் எனக்கும் கூடுதல் தகவலாக இருக்கிறது. உண்மையில், இங்கு வரும் பார்வையாளர்கள் என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன்.  அதிகமான பொருட்களை இன்றைய இளைஞர்கள் பார்த்தே இருக்க மாட்டார்கள். ஆகவே அவை பற்றிய தகவல்களைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

இங்கு அடுக்கப்பட்டுள்ள பொருட்களை இந்தியர் மரபு சார்ந்தவை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.அதை யாரும்மறுத்ததோ விவாதித்ததோ உண்டா?

அப்படி சில அனுபவங்கள் உண்டு. ஒரு சீனப்பெண் இங்குள்ள மணி வேலைப்பாடுகளைப் பார்த்துவிட்டு, இவை நிச்சயமாக சீனர்களின் மரபில் இருந்து வந்தது என்று வாதிட்டார். அவர் கூற்றுப்படி பாபா-ஞோஞ்யாக்களும் அவர்களின் பரம்பரையினரும்தான் தையல் அலங்காரங்களைச் செய்வர் என்றும் இந்தியர்களிடம் அந்த கலை இல்லை என்றும் கூறினார். ஆனால், நான் அந்த வேலைப்பாட்டில் உள்ள வடிவங்கள் குறித்து அவருக்கு விளக்கினேன். பெரானாக்கான் வேலைப்பாடுகளில் ஃபினிக்ஸ் பறவைதான் முக்கியத்துவம் பெரும் இருக்கும். ஃபியோனியா பூக்கள் இருக்கும். ஆனால் நான் வைத்திருந்த மணி அலங்காரத்தில் அன்னப்பறவை இருந்தது. தாமரை மலரும் வரையப்பட்டிருந்தது. அதைக் குறிப்பிட்டு அவரிடம் அவை இந்தியர் மரபான குறியீடுகள் என விளக்கினேன். அவர் சமாதானம் அடைந்தார்.

இன்னொரு நாள், நான் இல்லாத சமயம் ஒரு இந்தியர் துக்குச்சட்டிகள் சிலவற்றைப் பார்த்துவிட்டு ‘சீனர் பொருட்களை ஏன் இங்கே வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டு வாதம் செய்திருக்கிறார். அப்போது மகாலிங்கம் அண்ணன் இருந்துள்ளார். அவர் சில விளக்கங்களைக் கொடுத்தும் அந்த நபர் சமாதானம் ஆகாமலே போயிருக்கிறார். எனது வருத்தம், அவரைப் போன்றவர்கள் இது போன்ற தவறான தகவல்களையே தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்து விட்டுப் போவார்கள் என்பதுதான்.  வரலாற்றுத் தெளிவு இல்லாமல் இருப்பதும் தவறான புரிதல்களைப் பரப்புவதும் நம் மரபை நாமே தொலைக்கச் செய்துவிடும்.

மூத்த தலைமுறையினர் இதுபோன்ற தகவல்களைத் தங்கள் பழைய நினைவாக மட்டுமே வைத்துக் கொள்ளாமல், பிள்ளைகளுக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும். அப்படிதான் வாய்வழி வரலாறு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.

பொதுவாக மக்கள் ஆதரவு எப்படி உள்ளது? உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ன?

பிரகாஷ் : மக்கள் ஆதரவு சிறப்பாக உள்ளது. எல்லா இனத்தவர்களும் வருகின்றனர்.  இன்று காலையில் கூட கதவு திறக்கும் முன்னே ஒரு சுற்றுப்பயணிகள் குழு வந்து காத்திருந்தது. இந்து அறப்பணி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு கொடுத்து ஆதரிக்கிறது. திரு.ராமா தினமும் விசாரித்து நிலவரங்களை அறிந்து கொள்கிறார்.  கடந்த வாரம் பினாங்கு அருங்காட்சியகத்தின்  இயக்குனர் புவான் சுராய்னி வந்திருந்து சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார். இந்தியர் மரபு அருங்காட்சியகத்திற்கென்று ஒரு சின்னம் தயாரிக்கச் சொன்னார். அதையே விளம்பரங்களுக்குப் பயன்படுத்தலாம் என்றார்.  இப்போது தேர்தல் பரபரப்பில் பலரும் உள்ளதால் அடுத்த கட்ட கூட்டங்கள் போடவில்லை. தேர்தல் முடிந்து பல விடயங்களைக் கலந்து பேசி முடிவுகள் செய்ய வேண்டும். இந்த அருங்காட்சியகத்தை அடிப்படையாக வைத்தே பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டம் உள்ளது. இனிமேல்தான் தொடங்க வேண்டும்.

அவற்றுக்கு முன்னதாக, வரலாற்று ஆர்வம் கொண்ட கற்றோரைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும். அவர்களின் வழிகாட்டுதல் மிக முக்கியம். வரலாற்று ஆர்வம் உடையவர்களால்தான் புது திட்டங்களை சொல்ல முடியும். அருங்காட்சியகம் தொடர்ந்து வளர அவர்களின் முன்னெடுப்புகள் அவசியம். இல்லையென்றால் கால ஓட்டத்தில் பழம்பொருட்களை வைத்திருக்கும் கூடமாக மாறிவிடும்.

வருகையாளர்களை அதிகம் எதிர்பார்க்கிறோம். பார்வையாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை இங்கு அழைத்து வரலாம். முன்கூட்டியே எனக்கு தெரிவித்தால் நான் அவர்களுக்கு விளக்கம் கொடுக்க நேரம் ஒதுக்கிக் கொள்வேன்.  இப்போதைக்கு புதன் மற்றும் சனி ஞாயிறுகளில் அருங்காட்சியகம் திறந்திருக்கும். ஆனால் மற்ற நாட்களில் வர விரும்பினாலும் நான் ஏற்பாடு செய்து தருவேன். குறிப்பாக பள்ளி கல்விச்சுற்றுலாவுக்குப் பினாங்குக்கு வரும் குழுவினர் என்னை தொடர்புக் கொள்ளலாம்.

பிரகாஷ் : 01114404040.

நேர்காணல் / புகைப்படங்கள்

அ.பாண்டியன்

 

8 கருத்துகள் for ““மனைவியின் தாலியை அடகுவைத்து புராதனப் பொருட்கள் சேகரித்தேன்” பிரகாஷ்

 1. P. Santha
  June 2, 2018 at 7:08 pm

  புதிய தகவல் , மிகவும் பயனாக இருந்தது, நன்றி. விரைவில் சென்று பார்க்க ஆர்வம் கொண்டுள்ளேன்.

 2. Magesvary
  June 3, 2018 at 5:01 pm

  Nandru

 3. இராவணன்
  June 6, 2018 at 4:25 pm

  ஓர் அற்புதமான பணியைப் பற்றிய தகவலுக்கு நன்றி. வெகு விரைவில் செல்ல வேண்டும்.

 4. June 13, 2018 at 2:34 pm

  தகவல் நிறைந்த நேர் காணல். சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்றை தொகுக்கும் போது பெருமளவில் உதவும். பாராட்டுகள்

 5. அண்டனூர் சுரா
  June 27, 2018 at 4:56 pm

  தூக்குச்சட்டி உட்பட பழம்பொருட்களை சேகரிக்கும் தங்களை எவ்வளவு பாராட்டினாலும தகும்.

 6. குருசாமிமயில்வாகனன்
  July 27, 2018 at 12:56 pm

  பா. சந்திரகாந்தம் அவர்களைத் தொடர்புகொள்ளவேண்டும். உதவி செய்யவும். gmayil64@gmail.com. 9488525882 சிவகங்கை – தமிழ்நாடு. குருசாமிமயில்வாகனன்.

  • வல்லினம்
   July 29, 2018 at 11:17 am

   அவர் இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன

 7. Ka.Murugaiyan
  April 6, 2019 at 9:40 pm

  ,பிரகாஷ் புனிதா வாழ்விணையரை நன்கு அறிவேன் அவர்களின் அரிய முயற்சிகளையும் அறிவேன் பிரகாசின்ஆர்வமும் அதற்கு ஏற்ற மனை நல்லாளான அவரது துணைவியாரின் ஒத்துழைப்பும் மெச்சுதற்குரியது.இருவரும் இணைந்து செயற்கரியப் பெரும் பணியைச் செய்துள்ளனர் அவர்களை என்றென்றும் மலேசியத் தமிழர் ஏற்றிப் போற்றுவர்.

  இன்று அவர்களின் அரும்பணியை உணர்ந்து பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பினாங்கு இந்தியர் மரபியல் அருங்காட்சியகம் அமையவும் செயல்படவும் இடமளித்துள்ளது பாராட்டுதலுக்கு உரியது.

  01.05.2018 திறப்பு விழா கண்ட் இக்காட்சியகம் தற்போது மேலும் விரிவாக்கம் கண்டு 14.04.2019 சித்திரைப் புத்தாண்டின் போது இந்திய தூதராலும் பினாங்கு முதல்வராலும் திறப்பு விழா காணவுள்ளது..

  அத்தகைய பெருமை மிகு அருங்காட்சியகத்தைப் பற்றிய தங்களின் பதிவு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துகள் இன்னும் அதிகமான அன்பர்கள் இவ்விடத்திற்கு வருகை மேற்கொள்ள தங்களின் படைப்புகள் உதவும். நன்றி
  -*க.முருகையன், பாரிட் புந்தார் பேரா*

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...