“தற்காலிக மன விலகல்கள் வரலாற்றுக்கு அவசியமற்றது.” – மா.செ.மாயதேவன்

மாய 011950களில் மலேசியாவில் ஏற்பட்ட புதிய இலக்கிய அலையில் உருவானவர் மா.செ.மாயதேவன். இரு நாராயணன்களும் நடத்திய கதை வகுப்பு, கு.அழகிரிசாமி உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’, கோ.சாரங்கபாணியின் தமிழர் திருநாள் என பல்வேறு கலை இலக்கிய முன்னெடுப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு, சிறிது சிறிதாகத் தன்னைச் செதுக்கிக்கொண்டவர். 85 வயதான அவரை நேர்காணலுக்காக தைப்பிங் நகரில் சந்தித்தோம். பலவற்றை அவர் மறந்துவிட்டிருந்தாலும் தொடர் உரையாடலில் சிலவற்றை நினைவிலிருந்து மீட்டுப்பகிர்ந்துகொண்டார்.

 

உங்கள் தொடக்ககால வாழ்க்கை பற்றி எளிய அறிமுகம் ஒன்றைக் கொடுங்கள்.

 மா.செ.மாயதேவன்: நான் பிறந்தது பொண்டோக் தஞ்சோங்கில் மெற்சிஸ்டன் எனும் தோட்டம். தைப்பிங் நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அன்று ஜன்னல் துறை தோட்டம் என்றும் சொல்வார்கள். ஜெனரல் தோட்டம் என்பதே மறுவி ஜன்னல் தோட்டம் என பேச்சு வழக்கில் உருவானது. இன்று பூங் லீ தோட்டம் என அழைக்கப்படுகிறது. முதல் மூன்று ஆண்டுகள் மெற்சிஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்தேன். அதன் பிறகு மசாலை தோட்டம் என அழைக்கப்பட்ட பக்கத்து தோட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளியில் நான்கு முதல் ஆறாம் ஆண்டு வரை பயின்றேன். தமிழ்க்கல்வியின் மேல் இருந்த ஆர்வத்தால் 22 கிலோ மீட்டர் பயணம் செய்து ஏழாம் வகுப்பை தைப்பிங் இந்து வாலிபர் சங்கத்தில் படித்தேன்.

நான் 1933ஆம் ஆண்டு என்பது தெரியும். தேதி, மாதம் எல்லாம் தெரியவில்லை. எவரும் குறிப்பெடுத்து வைக்கவில்லை. அப்பாவின் பெயர் மாகாளி. அம்மா செங்கம்மாள். பெற்றோர்களின் பெயரில் இருக்கும் முதல் எழுத்தை இணைத்து எம்.எஸ்.எம் என்ற பெயரில்தான் முதலில் எழுதினேன். நண்பர்கள் பலரும் அது குறித்துக் கிண்டலாகப் பேசவும் மா.செ.மாயதேவன் ஆகிவிட்டேன். எனக்கு மூத்தவர் முத்துசாமி. இரண்டாவது நான். மூன்றாவது நடராஜன். அடுத்து தாமோதரன். தங்கை லோகாம்பாள். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். மனைவியின் பெயர் காளியம்மாள். நல்ல தமிழ்ப் பெயராக மாற்றியமைத்து மணிச்செல்வி எனக் கூப்பிடுவேன்.  நான் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டேன். அதேபோல தமிழ் முறை திருமணத்தை சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நாடெங்கும் செய்து வைத்துள்ளேன்.

அன்றைய காலத்தில் உங்கள் துணைவியார் மதச் சடங்குகள் இல்லாத திருமண முறைக்குச் சம்மதித்தாரா?

மா.செ.மாயதேவன்: ஆர்.பி.எஸ் மணியம் என்பவர் நாடகக் குழு ஒன்றை வைத்திருந்தார். அது கலைமகள் நாடகக் குழு. ஆர்.பி.எஸ் மணியம் என் மனைவியின் மாமா. என் மனைவி அந்த நாடகக் குழுவில் பாடகியாக இருந்தார். ஆர்.பி.எஸ் மணியம் தோட்டங்களில் நாடகம் போடும்போது நான் சென்று சொற்பொழிவாற்றுவேன். வாழ்கையைக் குறித்தும் வாழும் முறை குறித்தும், சிக்கனமாக இருப்பது குறித்தும் தமிழ்ப் பெயர்கள் வைப்பது குறித்தும் பேசுவேன். ஆர்.பி.எஸ் நாடகக் குழு நடத்தும் புராண நாடகமாக இருந்தாலும் சமூக நாடகமாக இருந்தாலும் எனது சொற்பொழிவு உண்டு. சொற்பொழிவுக்குப் பின்பே நாடகம் நடக்கும். இவ்வாறு பொதுநிகழ்ச்சியில் அறிமுகமானவர் பின்னர் என் மனைவியானார். எனவே அவருக்கு என் எண்ணமும் இலக்கும் புரிந்திருந்தது.

தைப்பிங் நகரத்துக்கு எப்போது வந்தீர்கள்?

மா.செ.மாயதேவன்: 1957-இல் தைப்பிங் நகரத்திற்கு வந்தேன். அப்போது தமிழர்கள் பெரும்பாலும் கூலி வேலைதான் அதிகமாகச் செய்தார்கள். அந்தச் சமயத்தில் தமிழர்களின்  ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. பார்க்கப்போனால் தைப்பிங் நகரின் இத்தனை முன்னேற்றத்திற்கு நம் தமிழ் மக்கள்தான் காரணம். அவர்கள்தான் எல்லா தொழிலிலும் ஈடுபட்டார்கள். தொழில் முன்னேற்றத்துக்கு அவர்கள் ஆர்வம் செலுத்தவில்லை.

பல இடங்களில் ஈய லம்பங்கள் இருந்தன. தீபகற்ப மலேசியாவின் முதல் ஈயச் சுரங்கம் 1844இல் தைப்பிங்கில் இருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். அப்போது ஈயம் எடுக்கும் வேலையிலும் தமிழர்கள்தான் அதிகம் ஈடுபட்டிருந்தார்கள். நான் இங்கு குடியேறிய காலத்தில் தைப்பிங்கைவிட கமுந்திங்கில் அதிகம் ஈயம் எடுக்கப்பட்டது. ஈயம் எடுக்கும் இயந்திரம் பெரிய கப்பல்போல இருக்கும். கால ஓட்டத்தில்தான்  ரப்பர் வந்தது. ரப்பர் தோட்டங்கள் பெருகியதும் தமிழர்கள் அங்கு குடிபெயர்ந்தனர்.

1950களில் நடந்த கதை வகுப்பு பற்றி வாசித்துள்ளேன். நீங்கள் அதில் நேரடியாகப் பங்குபெற்றவர். அதன் வழி எழுத்தாளர் ஆனவர். அதுபற்றி நினைவுகூர முடியுமா?

மா.செ.மாயதேவன்: தமிழ் நேசனில் 1950களில் கதை வகுப்பு நடைபெற்றது.மாய 02 சுப.நாராயணனும் பைரோஜி நாராயணனும்தான் இவ்வகுப்பை நடத்தினார்கள். சுப.நாராயணன் மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல கவிஞரும் ஆவார். பல நூல்களை அவர் எழுதியிருக்கின்றார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் இவ்வகுப்பு நடந்ததென நினைக்கிறேன். கதை வகுப்பு எனச் சொன்னால், சிறுகதை ஒன்றை எழுதி அனுப்ப வேண்டும். சுப.நாராயணன் அதனைத் திருத்தம் செய்து பின்னர் பத்திரிகையில் வெளியிடுவார். அதன் தரம் குறித்துக் கூறுவார். எழுதக்கூடிய ஆரம்ப எழுத்தாளர்கள் பலரையும் அவர் ஊக்குவிப்பதைப் பார்த்துள்ளேன். கதைகளில் எப்படி மாற்றங்களைச் செய்யவேண்டும் என்ற விபரங்களை பத்திரிகையில் எழுதுவார். பலர்  இதில் கலந்துகொண்டார்கள். என் நினைவில் சிலர் மட்டுமே இப்போது இருக்கிறார்கள்.

இக்காலக்கட்டத்தில்தானே கு.அழகிரிசாமியும் மலேசியா வருகிறார். அவர் வருகை மலேசிய இலக்கியப் போக்கை மாற்றி அமைத்ததல்லவா?

மா.செ.மாயதேவன்: ஆம். 1952இல் அவர் மலேசியா வந்தார். ஐந்து ஆண்டுகள் அவர் தமிழ் நேசனில் பணியாற்றினார். அவரும் தன் பங்குக்கு ‘இலக்கிய வட்டம்’ ஒன்றை உருவாக்கி எங்களை வழிநடத்தினார். நிறைய பேர் அதில் பங்குகொண்டு பலனடைந்தார்கள். சிலர் எழுதினார்கள். அவரைச் சந்திப்பதற்காக நானும் அன்பரசன் என்பவரும் நேரடியாக தமிழ் நேசன் அலுவலகத்திற்குச் சென்றோம். எங்களைக் கண்டவுடன் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பல எழுத்தாளர்கள் அவரை சந்திப்பதில்லை என்றார். நல்ல ஈர்ப்பான தோற்றம் அவருக்கு.

இந்நாட்டு எழுத்தாளார்களுக்கு இன்னமும் சரியாக கலைவடிவில் எழுத வரவில்லை. அவர்களுக்குப் பயிற்சி வேண்டும் என்றார். பெரும் எழுத்தாளரான கு.அழகிரிசாமிக்கு தமிழகத்தில் இருந்து வந்த சில நாட்களில் இங்குள்ள படைப்புகள் மேல் ஒவ்வாமை இருந்தாலும் அக்காலத்தில் இம்மக்களின் கல்விச்சூழல், வாழ்வியல் நிலை ஆகியவற்றை புரிந்துகொண்டபோது உள்ளூர் எழுத்தாளர்களையும் அணுசரித்து இலக்கிய வட்டத்தின் மூலம் இந்நாட்டு இலக்கியத்தை முன்னெடுக்கத் தொடங்கினார். அவர் மூலம் அதிகமானோர் எழுதினார்கள். அவரும் அனுப்பப்பட்ட படைப்புகளைத் திருத்தம் செய்து வெளியிட்டார். அவர் இந்நாட்டு எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என சொல்ல வேண்டும். என்னுடன் மா.இராமையா, செ.குணசேகர், சி.அன்பரசன் என பலரும் எழுதினர்.

கு.அழகிரிசாமி உருவாக்கிய இலக்கிய வட்டத்துக்கும் சுப.நாராயணன் உருவாக்கிய ரசனை வகுப்புக்கும் ஏதும் தொடர்பு உண்டா?

மா.செ.மாயதேவன்: சு.ப.நாராயணன் அவர்கள் ‘ரசனை வகுப்பு’ நடத்தினார். அதே காலகட்டத்தில் கு.அழகிரிசாமி அவர்கள் ‘இலக்கிய வட்டம்’ நடத்தினார்.  இந்த இரண்டு முயற்சிகளிலும் அதிகமான எழுத்தாளர்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் இவர்கள் இருவரும் மற்றவர் நடத்திய சந்திப்புகளுக்குப் போனதாக நினைவில்லை.  இந்த நாட்டின் இலக்கியம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல இவ்விரு எழுத்தாளர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. அவர்கள் இருவருக்கும் தற்காலிகமாக எவ்வாறான மன விலகல்கள் இருந்தன என்பது வரலாற்றுக்கு அவசியமற்றது.

கோ.சாரங்கபாணி அக்காலத்தில் உருவாக்கியது பெரிய அலை அல்லாவா? அவருடன் பழகிய நீங்கள் அவ்வனுபவத்தை நினைவுகூர இயலுமா?

மா.செ.மாயதேவன்: கோ.சாரங்கபாணி அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தார். 1934இல் ‘தமிழ் முரசு’ பத்திரிகையைத் தொடங்கினார். முதலில் வார இதழாக வந்த அது பின்னர் நாளிதழானது. அவர் 1950களில் தமிழர் திருநாளைத் தொடங்கி, போட்டிகள் மூலம் கலை, இலக்கியங்களை வளர்த்தார். இந்த நாட்டின் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர்கள் ஒற்றுமைக்கும் ஊன்றுகோலாக எல்லோரும் தை திங்கள் முதல் நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று தமிழ் முரசு பத்திரிகையில் எழுதி, பிரச்சாரம் செய்தார். இந்த நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு,  தமிழர்களின் ஒற்றுமைக்கு, சரியான வழியாக தமிழர் திருநாளை கொண்டாட்டங்களை நாடு முழுவதும் நடத்தினார். பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி என இளம் தலைமுறையினரை ஊக்குவித்து தமிழை வளர்த்தார். அவர் முழக்கங்களின் பயனாக பல ஊர்களில் தமிழர் திருநாள் தை திங்கள் முதல் நாளில் கொண்டாடப்பட்டது. பல ஊர்களிலே நேர வசதி, இட வசதி காரணமாக பல்வேறு திகதிகளில் கால ஓட்டத்தில் மாற்றிக்கொண்டார்கள். ஆனால் தைப்பிங்கைப் பொறுத்தவரை நாங்கள் கோ.சாரங்கபாணியிடம் மதிப்பு வைத்திருப்பதை தை முதல் நாளில் தமிழர் திருநாளை கொண்டாடுவதன் வழி நிரூபித்திக்கொண்டிருக்கிறோம்.

கோ.சாரங்கபாணி ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற நிலைப்பாட்டையும் எளிய மக்கள் மத்தியில் உருவாக்கினார்கள். தமிழ்க் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும். தாய்மொழியைப் படிக்க வேண்டும். அதன்பிறகே பிற மொழிகளைப் படிக்கவேண்டும் என்று அக்கறையுடன் செயல்பட்டார். அவர் செய்த மற்றுமொரு பணி, மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு போதனா மொழியாக இடம்பெறச் செய்ததைச் சொல்லலாம். மலாயாவில் முதன்முதலாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது அதில் சமஸ்கிருத மொழியைப் பாட மொழியாக வைக்கவேண்டும் என பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி பரிந்துரை செய்தார். ஆனால் கோ.சா இந்தப் பரிந்துரையை மிகத் தீவிரமாக எதிர்த்தார். பல்கலைக்கழகத்தில் தமிழயே வைக்கவேண்டும் என்று போராடினார். மேலும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நூல்நிலையம் வேண்டும் என்று வேண்டுகோளையும் விடுத்து அங்கு தமிழ் நூலகம் உருவாகவும் வித்திட்டார். நாங்களும் தைப்பிங்கில் இருந்து பல புத்தகங்களை அவர் முயற்சி வெற்றிபெற அனுப்பி வைத்தோம்.

நாளிதழை ஒரு பெரும் சமூக மாற்றத்திற்கு எப்படிப் பயன்படுத்துவது என தமிழ் முரசு நாளிதழில் கோ.சாரங்கபாணி எழுதிய தலையங்கள் வழி அறியலாம். சிந்தனையால் எழுந்த அவர் எழுத்தின் வல்லமையால் மலேசியத் தமிழர்கள் அடைந்த நன்மைகள் ஏராளம்.

மா.இராமையாவையும் உங்களையும் இரட்டையர்கள் என்பார்கள். அக்காலத்தில் நீங்கள் இருவரும்தான் பிரபலமான எழுத்தாளர்களாக இருந்துள்ளீர்கள். அவரைப் பற்றி நினைவுகூர முடியுமா?

மா.செ.மாயதேவன்: கதை வகுப்பு காலத்தில் எனக்கும் இராமையாவிற்கும் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி கடிதம் வாயிலாக அவர் என்னைத் தொடர்புகொள்வார். தைப்பிங்கிற்கும் பலமுறை அவர் வந்திருக்கின்றார். நீங்கள் சொல்வது உண்மைதான். எங்களை இரட்டையர் என்றுதான் சொல்வார்கள். அவர் தமிழகம் வரை சென்று எழுத்து சம்பந்தமாகப் பயிற்சி பெற்று வந்த எழுத்தாளர். மா.இராமையா அப்போது மூவாரில் இருந்தார். தற்போது தங்காக்கில் இருப்பதாக நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் எழுத்து வகையில் மட்டுமல்லாது நேரடியான அறிமுகமும் நட்பும்  இருந்தது.

இந்த நாட்டைப் பொறுத்தவரை சிறந்த எழுத்தாளராக மா.இராமையா இருக்கின்றார். நிறைய நூல்களை எழுதியிருக்கின்றார். நானும் அவரும் சேர்ந்தும் புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். 1953-இல் முதன்முதலாக ஒரு சிறுகதைத் தொகுப்பை இந்நாட்டில் வெளியிட்டது நானும் மா.இராமையாவும்தான். ‘இரத்ததானம்’ எனும் அந்த நூல் ஈப்போவில்தான் அச்சிடப்பட்டது. வேறெங்கும் அப்போது அச்சகம் இல்லை. அந்த காலத்தில் நானும் அவரும்தான் மலேசியவில் பிரபலமாக இருந்தோம். எங்களுக்குப் பிறகுதான் நிறைய எழுத்தாளர்கள் வந்தார்கள். அப்போது மா.இராமையா தபால்நிலையத்தில் வேலை செய்துவந்தார்.

ந்நாட்டில் இலக்கிய இதழ் நடத்துவதில் நீங்கள் ஒரு முன்னோடி. எப்படி திருமுகம் எனும் இதழ் உருவானது?

மா.செ.மாயதேவன்: 1953 அல்லது 1954 என நினைக்கிறேன். அப்போது போன்டோக் தஞ்சோங்கில் இருந்தேன். அங்கு ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்சர்’ அலுவலகம் இருந்தது. நான் அங்குதான் பணியாற்றினேன். நாலு தோட்டங்களுக்கும் தொலைபேசி அழைப்புகள் இங்குதான் வரும். அழைப்புகளில் வரும் தகவல்களைச் சேகரித்து மக்களுக்குத் தெரிவிப்பது, வரும் அழைப்புகளை தோட்டங்களுக்கு ஏற்றவாறு விசைகளைத் தட்டிவிட்டு தொடர்புபடுத்துவது என் வேலை. அழைப்புகள் அங்கிருந்து வெவ்வேறு தோட்டங்களுக்கு செல்லும். கவனமான வேலை என்பதால் எனக்கான சாப்பாடும் அலுவலகத்துக்கு வந்துவிடும். எனவே இருபத்து நான்கு மணி நேரமும் அங்குதான் இருப்பேன். அப்போது அங்கு எனக்கு எழுதக்கூடிய வாய்ப்பும் படிக்கக்கூடிய வாய்ப்பும் இருந்தது. அப்போதுதான் ‘திருமுகம்’ என்ற இலக்கிய பத்திரிகையை கையெழுத்துப் பிரதிகளாக வெளியிட்டோம்.

என்னை முன்னோடி என்கிறீர்கள். எனக்கு முன்னோடி சுப.சிதம்பரம். சுப.நாராயணனின் தம்பி அவர். ‘தமிழ்க் கடல்’ என்ற தலைப்பில் இலக்கிய இதழ் ஒன்றை கையெழுத்திலேயே எழுதி, பிரதி எடுத்து எல்லோருக்கும் அனுப்புவார். சின்னச் சின்ன கட்டுரைகள், கவிதைகள் அதில் வரும். அதைப் பார்த்த பின்னர், அந்த வழியை பின்பற்ற வேண்டும் எனத் தோன்றியது. அப்படி உருவானதுதான் ‘திருமுகம்’. அந்தக் காலத்தின் அதன் விலை முப்பது காசு. முப்பது, முப்பத்து ஆறு பக்கங்கள் கையெழுத்திலேயே எழுதி, பிரதி எடுத்து முகப்பில் மட்டும் வண்ணத்தாள் வைத்திருப்போம். உள்ளே சாதாரண தாள்கள் இருக்கும். கவிதைகள், கட்டுரைகள், விமர்சனம் என அந்தப் பத்திரிகையில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடியாகப் பல தோட்டங்களுக்குச் சென்று திருமுகத்தை விநியோகம் செய்வோம். ஒவ்வொரு இதழிலும் ஓர் ஆளுமையின் படத்தை முகப்பில் வைத்து திருமுகம் வெளிவரும். கோ.சாரங்கபாணி, துன் வீ.தி.சம்பந்தன், போன்றோரின் படங்களைத் தாங்கி வந்த இதழ்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன.

எனக்குப் புதிய எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும் என ஆசை இருந்தது. எனவே திருமுகம் வழி சிறுகதைக்குப் பரிசாக ஐம்பது வெள்ளி என அறிவித்து வெளியிட்டோம். ஏறக்குறைய ஓராண்டு இந்தக் கையெழுத்து பிரதியை நடத்தினோம். தொடர்ந்து வெளியிடுவதில்  உண்டான சிரமத்தினால் கையெழுத்துப் பிரதியை நிறுத்திவிட்டோம். ஆனால் திருமுகம் அச்சுப் பிரதி வருவதற்கு அது ஓர் தூண்டுகோலக அமைந்தது. அச்சு இதழாக முதலில் முன்னூறு பிரதிகளை வெளியிட்டோம். பின்னர் ஐநூறு பிரதிகளாக அது உயர்ந்தது.

தைப்பிங் நகரில் இருக்கும் திருமுகம் அச்சகம் மலேசியா முழுவதும் தமிழர்களுக்கு அறிமுகம். உங்களுக்கு அச்சகத்துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

மாய 03மா.செ.மாயதேவன்: இதழியலில் ஏற்பட்ட ஆர்வம் கால ஓட்டத்தில் வளர்ந்து என் அண்ணனுடன் பேசி அச்சகம் ஒன்று ஆம்பிக்கலாம் என முடிவெடுத்து நான்கு சீனர்களுடன் இணைந்து 40 கோத்தா சாலையில் திருமுகம் அச்சகத்தை ஆரம்பித்தோம். 1957-இல் என நினைக்கின்றேன். இரண்டாயிரம் வெள்ளியை எனது சிறிய பங்காகச் செலுத்தினேன். மற்றவர்கள் எல்லாம் நான்காயிரம் வெள்ளி வரை செலுத்தினார்கள். அப்போது கனிணி எல்லாம் இல்லை. எழுத்துகளை தனியாக எடுத்து கோர்க்க வேண்டும். நிறைய தமிழ் எழுத்துகளை தமிழகத்தில் இருந்து வரவழைத்தோம். பல்வேறு அளவுகளில் அந்த எழுத்துகள் இருக்கும். பினாங்கில் கணபதி அச்சகம் என இருந்தது. அவர்களிடம் சில எழுத்துகளை வாங்கினோம். எல்லாம் அச்சு கோர்ப்பதுதான். கடை முழுக்கவும் தமிழ் எழுத்துகள், சீன எழுத்துகள், ஆங்கில எழுத்துகள் இருக்கும்.

கால ஓட்டத்தில் சீன நண்பர்களுக்கு இத்தொழிலில் ஆதாயம் இல்லை எனத் தோன்றியிருக்க வேண்டும். ஆக நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்கள். எங்களுக்கு இந்தத் தொழில் தெரிந்ததாலும் செய்வதில் விருப்பம் இருந்ததாலும், நாங்களே அதற்கான தொகையைக் கொடுத்து வாங்கிக்கொண்டோம். கணினி வந்த பிறகுதான் வேலை சுலபமானது. அதிகமாக ஆட்கள் தேவைப்படவில்லை. எல்லாவற்றையும் கணினி மூலமாகச் செய்யத்தொடங்கினோம். கணினி பயன்பாடு வந்த பிறகு இத்தொழில் இன்னும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் மாறிவிட்டது.

 

அச்சகம் தொடங்கியதும் உங்கள் இலக்கிய முயற்சி இன்னும் விரிவாக நடந்ததா?

மா.செ.மாயதேவன்: நிச்சயமாக. படைப்புகளைப் பதிப்பிக்கும் சிக்கல் எனக்கு ஏற்படவில்லை. 1953இல் நானும் மா.இராமையாவும் இணைந்து வெளியிட்ட ‘இரத்த தானம்’ எனும் தொகுப்புக்குப் பிறகு 1958இல் ‘நீர்ச்சுழல்’ எனும் நாவலை இணைந்து எழுதினோம். அதே ஆண்டில் ‘மலேசியத் தமிழர் நாகரீகமும் கலையும்’ எனும் தலைப்பில் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்து வெளியிட்டேன். அக்காலகட்டத்தில் புதுமைப்பித்தன் எழுதிய ‘விபரீத ஆசை’ எனும் சிறுகதை ஆபாசமானது என ஒரு சர்ச்சை எழுந்தது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் நானும் பல நூல்களைப் படித்து அதற்கு எதிர்வினையாற்றினேன். அக்கதை விரசமல்ல என என்னைப்போலவே கட்டுரைகள் எல்லாம் பலர் எழுதினார்கள். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து ‘இலக்கியத்தில் புதுமைப்பித்தன்’ எனும் நூலை1961-இல்,  70 காசுக்கு விற்பனை செய்தோம்.

அதேபோல 1962-இல் ‘சபலம்’ எனும் சிறுகதை நூலை வெளியிட்டோம். அதில் நான், மா.இராமையா, சுப.மருதப்பன், ஏ.கமலநாதன், பெரி.முத்தைய்யா, கவிஞர் கிருஷ்ணதாசன் என பலரும் இணைந்திருந்தோம். 1965-இல் ‘மூங்கில் பாலம்’ எனும்  மா.இராமையாவின் நெடுங்கதையை வெளியிட்டோம். அதன்பிறகு சில இலவச வெளியீடுகள் செய்துள்ளேன். தொடர்ந்து மொழி, சமூக அக்கறையுடன் நடக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தரும் வகையில் திருமுகம் பதிப்பகம் வழி பதிப்பு செய்து வெளியீடும் செய்து கொடுத்துள்ளோம்.

உங்கள் காலத்தில் மொழிக்கும் இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளீர்கள். இவற்றை அங்கீகரிக்கும் வகையில் எவ்வாறான விருதுகள் கிடைத்துள்ளன?

மா.செ.மாயதேவன்: பி.பி.டி, பி.ஜெ.கே என இரு அரசாங்க விருதுகள் கிடைத்துள்ளன. தவத்திரு சித்திரமுத்து எனக்கு ‘தமிழ்ச் சீலர்’ என்கிற பட்டத்தைக் கொடுத்தார். அதுதான் பரவலாக அறியப்படுகிறது. மலேசிய இந்து சங்கத்தைத் தைப்பிங்கில் முதலில் நாம்தான் தொடங்கினோம். பல ஆண்டுகளாக இந்து சங்கத்தை தொடர்ந்து நடத்தி வந்ததால் சங்கபூசன் என்கிற விருதும் கிடைத்துள்ளது. எழுத்தாளர் சங்கம் என் எழுத்துப்பணியை அங்கீகரித்து சா.அ.அன்பானந்தன் விருதை வழங்கியது. விருதுகளையெல்லாம்விட என் இன்றைய வாழ்க்கை எனக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

\நான்கு பிள்ளைகள் எனக்கு. மணிவண்ணன், மணிமாறன், மணிச்செல்வன், மகள் கற்பகவள்ளி. மகள் ஈப்போவில் மருத்துவராக இருக்கின்றார். இந்தத் தொழிலை மணிவண்ணனும் மணிமாறனும் பார்த்துக்கொள்கிறார்கள். அன்பான பேரப்பிள்ளைகள். நிறைவாக இருக்கிறேன்.

நேர்காணல் : ம.நவீன்

எழுத்து : தயாஜி

 

1 comment for ““தற்காலிக மன விலகல்கள் வரலாற்றுக்கு அவசியமற்றது.” – மா.செ.மாயதேவன்

  1. June 9, 2018 at 5:21 pm

    போற்றப்பட வேண்டிய படைப்பாளி, சரியான நேரத்தில்தான் பெருமை செய்துள்ளீர்கள். முன்னோடிகளை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பது, வரலாற்றை அதன் உண்மைத்தன்மை மாறாமல் புதுப்பித்துக் கொண்டே இருப்பது போன்று.
    நான் மாயத்தேவன் அவர்களை தைப்பிங்கில் இருக்கும் அவரது அலுவலகத்தில், எனது (ஆர்டிஎம் தொலைக்காட்சியின்) ஆவணப் படத்திற்காக சந்தித்து நிறையவே பேசியுள்ளேன், பதிவு செய்துள்ளேன்… இன்னமும் தனது சமகால படைப்பாளிகளை நண்பர்களாக தொடர்பில் கொண்டிருப்பவர். சற்றே நினைவுப்படுத்தினால் போதும், கேள்விகளுக்கு தொடர்புடைய நிறைய வரலாற்று சம்பவங்களை அடுக்கடுக்காக கூறும் வல்லமை கொண்டவர். குறிப்பாக கப்பல் பயணத்தின் வழி அன்றைக்கு வந்திறங்கிய தென்னிந்திய தொழிலாளர்களின் வருகையும் இருப்பும் – ஜப்பானிய வீரர்களின் நடமாட்டம் மிகுந்திருந்த தோட்ட வாழ்க்கையின் சுவாரசிய சம்பவங்கள் – பால்மரக்காடுகளின் அதிகாலைகளில் அன்றைய பெண்கள் சந்தித்த அவலநிலை – தமிழ் பத்திரிகைகள் சந்தித்த சட்டப் பிரச்சனைகளும் சமுதாயப் பிரச்சனைகளும் – நிலம் மாறினாலும் நிறம் மாறாத சாதிப்பிரச்சனைகள் – பிரிட்டிஷ் மலாயாவுக்கும் சுதந்திர மலேசியாவுக்கும் இடையே சுரண்டப்பட்ட இந்தியர்களின் உழைப்பும் பொருளாதாரமும்… இப்படி நிறைய.
    கலை இலக்கியத் துறைகளில் தாம் கடந்துவந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நினைக்கும் இதுபோன்ற முன்னோடிகளுக்கு ஊடகமாய் திகழ்ந்து, அவர்களை மறு அறிமுகம் செய்துவைக்கும் வல்லினத்திற்கு வாழ்த்துகள்.
    ஜெயகிருஷ்ணன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...