சு.வேணுகோபால் பதில்கள்

உங்களின் தமிழ்ச்சிறுகதை பெருவெளி நூலுக்கு கே.என் செந்திலின் விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 

பூவேந்தன்

அன்புடன் பூவேந்தனுக்கு,

  1. அறத்திற்குப் புறம்பான திட்டமிட்ட வக்கிற நாடகங்களை காலம் பொசுக்கி விடும்.
  2. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை

தங்களின் ஆன்மிகம் என்ன? மத நம்பிக்கை உண்டா உங்களுக்கு?

விஸ்வநாதன், சிங்கை

அன்புடன் விஸ்வநாதனுக்கு,

ஆன்மீகம் என்பதை பிரபஞ்சம் தழுவியதாக நினைக்கிறேன். பெருங்காருண்யத்தை ஆன்மீகமாகப் பார்க்கிறேன். ஆன்மீகத்திற்கு சாதி கிடையாது; மதம் கிடையாது ; ஏற்றத்தாழ்வு கிடையாது; மொழி கிடையாது; நிறம் கிடையாது; யோகா கிடையாது; இன்னபிற கட்டுக் கதைகளும் கிடையாது. அதற்கு மிகச் சரியான சொல்லும் கிடையாது. என்றாலும் அதை ஒரு உன்னத நிலை என்று உணர முடிகிறது. மேகக் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று கூடிக்கலந்து வானமெங்கும் வியாபித்து கருத்து கருக்கூடி வாடிய பயிர்கள் மீது பொழியும் நிதானமான மழையைப் போன்றது.

இவ்விடத்தில் வங்காரி மாத்தை நினைவிற்கு வருகிறார். கென்ய தேசத்தின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து கால்நடை மருத்துவராக படித்து உயர்ந்தவர். கருப்பின தேசத்தில் படிப்பதற்கு வாய்ப்பில்லாத, தடைகள் நிறைந்த பெண் சமூகத்திலிருந்து முதன் முதலாக படித்து முன்னேறியவர். பணியின் பொருட்டு நைரோபி பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். இயற்கை சூழ்ந்த தன் அழகிய கிராமம் அவரின் நினைவுகளில் ததும்பியபடியே இருக்கிறது. பெரும் பேராசிரியர். பணியின் வழி நல்ல செல்வத்தையும் ஈட்டியவர். இந்த சொகுசு அவரைத் தீண்டவே இல்லை. பணி நிறைவு பெற்றவுடன் திரும்ப தன் கிராமத்திற்கு ஓடோடி வருகிறார். எங்கும் வறுமை பிடுங்கித் தின்கிறது. நோய் நொடிகளில் வீழ்ந்துகிடக்கின்றனர் மக்கள். பெண்கள் மேலும் ஒடுங்கிப்போகின்றனர். அவர் பார்த்த காடுகள் இல்லை. செடி கொடிகள் இல்லை. 30 ஆண்டுகளில் தன் தேசமே நாசமாகிக் கிடப்பதையும் பார்க்கிறார். இந்த பேரழிவிற்கு அடிப்படைக் காரணம் இயற்கையை  நாம் தொலைத்ததுதான் என்று உணர்கிறார். மீண்டும் எழில் கொஞ்சும் தேசமாக உருவாக்கிவிட மனதிலே துடிக்கிறார். அமைதியாக, மிக அமைதியாக வறுமை சூழலில் சிக்கியிருந்த தம் பெண்களை மெல்ல மெல்ல ஒன்றிணைத்து தேசமெங்கும் விதைகளை ஊன்றத் தொடங்குகிறார். அவரை கேலி பேசுகின்றனர். தரிசாகிப் போன நிலங்களில் ஒரு பேராசிரியர் விதைகளை ஊன்றுவதை கோமாளித்தனமாக நினைக்கின்றனர் பெத்தம் பெரியவர்கள். தொடர்ந்து கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகிறார். அப்படியான சமயத்தில் அவருள் ஒரு அற்புதமான கதை கவித்துவ படிமம் கொள்கிறது. சொல்கிறார்,

ஒரு பெருங்காடு தீப்பற்றி எரிகிறது. ஒரு புறமிருந்து தீக்கு நாசமாகிக்கொண்டு வருகிறது காடு. தீக்கு பயந்து யானைகளும், மான்களும், எருதுகளும், சிங்கங்களும் தப்பித்து ஓடிவந்து ஒரு ஓடையோரம் நிற்கின்றன. தீயின் நாக்குகள் வான்நோக்கி எழுந்து கோரத்தாண்டவமாடுவதை பதைபதைப்புடன் பார்க்கின்றன. காட்டின் மேனி வழியே தீ பாய்ந்தோடியும் வருகிறது. ஒரு சின்ன சிட்டுக் குருவி, தன் சிறு அலகால் ஓடை பக்கம் இருந்து ஒரு துளி மிடரை உறிஞ்சி வேகவேகமாக பறந்து வந்து பரவி வரும் தீசுவாலை மீது ஊற்றிவிட்டுத் திரும்ப வருகிறது. குருவி ஊற்றிய நீரையெல்லாம் உண்டு தீ இன்னும் வேகமாகப் பரவுகிறது. சிட்டுக் குருவி திரும்பத் திரும்ப துளி நீரை கொண்டு சென்று ஊற்றுகிறது. குருவியைவிட பல ஆயிரம் மடங்கு நீரை உறிஞ்சி ஊற்றி தீயை அணைக்கும் வல்லமையுடைய யானைகளும், மற்ற விலங்குகளும் “நீ செய்வது முட்டாள்தனமாக இருக்கிறது. காட்டுத்தீ எரிந்துகொண்டு வரும் பெரு நெருப்பில் நீ ஊற்றும் சிறு சிறு துளிகளால் ஒன்றும் ஆகப்போவதில்லை” என்கின்றன. குருவி, “என்னால் இயன்றதை செய்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியதும் அதுவே” என்று சொல்லியபடி நீரைக் கொண்டுவர விருட்டென பறந்து சென்றது.

தன் செயல்பாட்டைக் கண்டு விமர்சித்தவர்களைப் பார்த்து வங்காரி மாத்தை சொன்ன குட்டி கதை இது. சீரழிந்து கிடக்கும் தன் பூர்வீக பூமியைக் கண்டதும் மீண்டும் இயற்கையின் செழுமையை உண்டாக்கவேண்டும் என்று தோன்றிய மனவெழுச்சியும் முதல் விதையை ஊன்றத் தொடங்கிய அந்த கணத்தையும் ஒரு ஆன்மீக எழுச்சி என்று நம்புகிறேன். யேசு, காந்தி, வள்ளலார் போன்றோரின் செயல்பாட்டின் மூல ஊற்றை ஆன்மீகம் என்று சொல்லலாம் என நினைக்கிறேன்.

எனக்கு மிகச் சின்ன வயதில் சிறு தெய்வங்கள் மீது பயங்கலந்த நம்பிக்கை இருந்தது. அதன் தனிமை கவர்ச்சிகரமான அச்சத்தைத் தந்தது. குலதெய்வத்தின் மீது தனித்த நேசம் இருந்தது. அருள் இறங்காமலே சாமியாக ஆடியிருக்கிறேன். 14, 15 வயதிலிருந்து கடவுள் என்ற ஒன்று இல்லை என்று புலப்படத் தொடங்கியது. அது வருததமாகவும் இருந்தது. அதே சமயம் சமூகம் உண்டாக்கி வைத்திருக்கும் மாபெரும் பண்பாட்டு இழைகளின் வழியேதான் நானும் உருவாகி வந்திருக்கிறேன் என்ற தெளிவும் தெரியத் தொடங்கியது. இந்த பண்பாட்டிற்குள் மதத்தின் பங்கும் இருக்கிறது. பெரும் சிக்கலும் உள்ளாகி இருக்கிறது. மக்களை ஒன்றிணைக்கவும் செய்திருக்கிறது. பிரிக்கவும் செய்திருக்கிறது. மானுட வரலாற்றில் மதத்தின் செயல்பாடு என்னென்ன விழைவுகளை உண்டாக்கி வந்திருக்கிறது என்றுதான் பார்க்கத் தோன்றுகிறது. மத நம்பிக்கையில் பெரிய ஆர்வம் இல்லை. என் அம்மா என் நெற்றியில் பூசும் போது அழித்ததில்லை. சில சமயம் காலடி மண்ணை எடுத்துப் பூசி விடுவார் (வயது 83) என் இரு குழந்தைகளுக்கு என் குல தெய்வத்தின் முன்தான் முடி இறக்கினேன். என் அம்மா செய்வதையோ, பெரியவர்கள் செய்வதையோ கடவுள் பெயரால் அவர்கள் தரும் வாழ்த்தாக நினைக்கிறேன். மதமாக நினைக்கவில்லை. அந்த தெய்வத்தின் மீது சிறு வயதில் உண்டான பிரியம் கூட மங்கிக்கொண்டு வருகிறது. பி.ஜே.பி. சொல்லும் மதக் கருத்தியல் மீது கிஞ்சித்தும் நம்பிக்கை கிடையாது. பெரியாரைப் படித்தது போலவே ஒரு படைப்பாளியாக மதத்தின் உள்ளுறைகளை கற்கவேண்டும் என்று இருக்கிறேன்.

நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு ஆச்சாரிய ஹிருதயம் என்ற உரை நூல் இருக்கிறது. வடகலை தென்கலை பிரிவின் தாத்பரியத்தை விளங்கிக்கொள்ள அது ஒரு அடிப்படையான நூல். அதனுள்ளே ஒரு சமூக வரலாறு புதைந்திருக்கிறது. இது குறித்து நான் ஆய்வு செய்யலாம். மக்களின் மத நம்பிக்கை சார்ந்த உலகை கையில் எடுக்கும்போது வெளிப்பார்வையில் என்னை மத நம்பிக்கை உள்ளவனாக பார்க்கத் தோன்றும். ஒரு படைப்பாளியின் பயணம் என்பது வேறு. ஒரு நாத்திகனின் பயணம் என்பது வேறு. உங்கள் கேள்விக்கு நேரடியாக மூன்று சொற்களில் எனக்கு மத நம்பிக்கை இல்லை என்று சொல்லி விடலாம். அப்படி நாத்திகவாதியைப் போல  எளிமையாக சொல்லிவிடக் கூடாது என்பதாலே இது பற்றி இவ்விதம் எழுதுகிறேன். மூவாயிரம் ஆண்டுகளாக மனித வரலாற்றோடு மதம் பின்னிப் பிணைந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து அறிவியலின் வளர்ச்சி பல தெளிவுகளைத் தந்து கொண்டிருக்கிறது. படைப்பாளி மதத்திற்கு எதிராகவோ – சார்பாகவோ நிற்கமாட்டான். அவன் அதனுள் உண்மையை நாடிச் செல்லும் கலைஞன் என்பதை மறந்துவிடக் கூடாது. பொய்மைகளைப் போட்டுடைப்பான். உண்மைகளை எடுத்துரைப்பான். தாஸ்தாவேஸ்கி, பேர்லாகர்குவிஸ்ட், டால்ஸ்டாய் போன்ற பெரும்படைப்பாளிகள் கிறித்துவ மத நம்பிக்கைகளைத் தங்கள் படைப்புகளின் வழி பரிசீலித்திருக்கிறார்கள். சல்மான் ருஷ்டி இசுலாமிய மத நம்பிக்கைகள் மீது தனது பார்வையை வைத்திருக்கிறார். இவர்கள் புதிய விளக்கங்களையும் புதிய ஒளியையும் கொடுத்திருக்கிறார்கள்.

கடவுள் இல்லை என்று தெரிந்த பின்பும் நான் கடவுளின் பக்கமே நிற்பேன் என்றார் தாஸ்தாவேஸ்கி. நவீன ஐரோப்பிய கிறித்துவம் ரஸ்யாவில் நுழைவதைத் தடுத்து நிறுத்தவே தன் ஆற்றலைப் படைப்பின் வழி செலவிட்டார். ரஸ்யாவிற்கென்று இருக்கும் ஆதி கிறித்துவத்தை மீட்டி எடுக்க விரும்பினார். கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளின் பக்கம் நிற்கமாட்டேன் என்று யாரேனும் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இப்போது சொல்லுங்கள் விஸ்வநாதன் நான் ஒரு தீர்க்கமான பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம் என்றால், எடப்பாடி அரசு நடத்திய கொடூரக் கொலைகளை கடவுள் பார்த்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்.

அனைவரும் பெரும் நாவல் முயற்சிகள் செய்கின்றனர். நீங்கள் அவ்வாறு ஏதும் முயன்றுள்ளீர்களா?

அதியன்

அன்புடன் அதியனுக்கு,

16 ஆண்டுகளுக்கு முன் 800 பக்கங்களில் பெரு நாவல் ஒன்றை ஒரே மூச்சில் எழுதினேன். கைப்பிரதியாக வசந்தகுமார் அண்ணனிடம் இருக்கிறது. இன்னும் 1000 பக்கம் எழுத வேண்டியது இருந்தது. பேனாவை மூடிவைத்துவிட்டு குடும்பபாட்டிற்காக ஓடத் தொடங்கினேன். அந்த ஓட்டத்தை நிறுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஒரு முழு நேர எழுத்தாளனாக வாழ நேர்ந்திருந்தால் 16 ஆண்டுகளுக்கு முன்னமே அந்த நாவல் தமிழினி வெளியீடாக வந்திருக்கும். இப்போது அதன் மீது தூசி படிந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது சிறிய அளவில்தான் செய்ய முடிகிறது. \

முற்றும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...