“அடையாளத் தேடலில் பல நேர்மறையான அம்சங்களும் சாத்தியமே.” – கே.எஸ்.மணியம்

ks maniam

90களில் கே.எஸ்.மணியம் அவர்களிடம் எடுக்கப்பட்ட இந்த நேர்காணல்  அவரது புனைவுலகம் மட்டுமல்லாது கருத்துலகையும் வாசகனின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூக, அரசியல் அவதானிப்புகளை அவரது சொற்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக உள்ளது. தமிழ் வாசகர்களுக்காக மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த நேர்காணல் வழி அவரது புனைவுலகை மேலும் ஆழமாக உணர முடியும் என்பது உறுதி.

மணியம், உங்கள் முதல் நாவலான ‘தி ரிடர்ன்’, கலாச்சாரப் போராட்டம் மற்றும் கலாச்சார அடையாளம்  எனும் பார்வைக்கு உட்பட்டு அதிகமும் விவாதிக்கப்பட்டது. அந்நாவலின் நாயகன் எதை நோக்கி திரும்பிச் செல்வதாக நீங்கள் அவதானிக்கிறீர்கள்?

கே.எஸ்.மணியம்: ரவியின் கண்ணோட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் அவன் தனது கலாச்சாரத்திற்குத் திரும்புவதான சாயல் தெரியும். மற்ற அனைத்து வழிகளையும் முயற்சித்து பார்த்து, அவனது தந்தையும் பாட்டியும் மீண்டும் மீண்டும் தங்களது பண்டைய கலாச்சாரத்திற்குத் திரும்பியவர்கள். பாட்டி எனும் கதாபாத்திரம் உண்மையில் கலாச்சாரம் என்பதன் அடையாளக் குறியீடு. மற்ற எல்லா கதாப்பாத்திரங்களும் வந்து நனைந்து செல்லும் குளமாக அவள் இருக்கிறாள் – அவர்கள் எப்போதும் அவளிடம்தான் திரும்பி வந்து சேர்கிறார்கள். இதுவும் ஒரு வகை திரும்புதல்தான் – கலாச்சாரத்தை நோக்கி திரும்புதல் – இந்த கலாச்சாரத்திடமிருந்து விலகி சென்று பிரிட்டிஷ் கலாச்சாரத்துள் மூழ்கிவிடும் வேலையைத்தான் நாவலின் கதாநாயகன் செய்தான். இருந்தும், இறுதியில் திரும்பி வர வேண்டியிருந்தது. அவனது தந்தையும் அப்படியே. அவர் பல்வேறு கலாச்சாரங்களைப் பரிசோதனை செய்த போதிலும், திரும்ப வேண்டியிருந்தது. அதனால்தான் இந்நாவலின் உச்சப் பகுதியில் நடராஜரின் சிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வந்து போகிறது.

ஒருவர் தன் அசல் கலாச்சாரத்தை நோக்கி செல்வது பயனற்ற செயலா? தவிர்க்க முடியாததா? அல்லது கதாநாயகத் தன்மையிலானதா? நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கே.எஸ்.மணியம்: அப்பாவின் நிலைமையில் அவர் மேற்கொண்ட முயற்சி சற்றே துயர்மிகுந்தது. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதில் அவருக்கிருக்கும் வரம்புகளை அவர் காண்கிறார், ஆனால் பதிலுக்கு அவர் பகுத்தறிவின்மை என்பதிலிருந்து பகுத்தறி அற்ற தன்மைக்குச் செல்லல் எனும் எல்லைமீறலைச் செய்கிறார். தனது அடையாளத்தை மீண்டும் பெற கடும் முயற்சி செய்கிறார், ஆனால் இன்னொரு விதத்தில் பார்த்தால் இதுவே அவரது குணாதிசியத்தில் இருக்கும் ஒரு குறைபாடாக அமைகிறது.

கதைக்களத்தின் அடுத்து வருவது உண்மையில் ஒரு வகைமாதிரிதான் – எல்லாவற்றையும் திருப்திபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதுபோல் தெரிந்தாலும் அது வெறும் வெளித்தோற்றம்தான். இந்த நாவலின் கட்டமைப்பு ஒரு வகை புதிர் தன்மையிலானது. நேரடியாக ஒன்றை எழுதுவதைவிட செங்குத்தாக எழுதிப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். என்னுடைய பெரும்பாலான படைப்புகளில் இதன் பிரதிபலிப்பைக் காணலாம். மறைமுகமாக,  ஆக்கப்பூர்வமாக, எளிதில் கணிக்க முடியாததைக் கடந்து மேலோட்டமான பார்வை, ஆழமான கண்ணோட்டம் என இவ்விரண்டையும் அடையாளம் காண்கிறேன். இப்படிதான்  நேரோட்ட கருத்தாக்கத்தை In A Far Country நாவலில் செய்து பார்த்திருக்கிறேன். ஒரு காலாச்சாரத்தினுள் மரபான வழியிலேயே அதிக நேரம் யோசித்துக் கொண்டிருக்காமல் அதுவரை பெற்றிருந்த அனுபவங்களைக் கொண்டு அந்தக் கலாச்சாரத்தை வேறு ஏதாவது ஒன்றுடன் (ஒரு புதிய நாடு அல்லது நிலம்) இணைக்க அல்லது அதிலிருந்து சிலவற்றை ஏற்க  முயலலாம். வெங்காயத்தின் தோலை உறிப்பது போலதான் எழுதுவதும் – ஒரு  மையம் நோக்கி நகர்வது. நீங்கள் எத்தனை அடுக்கு தோலை உறித்தாலும் அதன் இதயத்தை (மையம்) போய் சேர முடியாது, காரணம் இதயம் என்பதே இன்னுமொரு அடுக்குதான்.

மலேசியாவின் தற்போதைய சமூக மற்றும் அரசியல் அமைப்புமுறை குறித்து உங்கள் கருத்து என்ன?

கே.எஸ்.மணியம்: மலேசியாவின் அரசியல் அமைப்பு இப்போது மலாய் சித்தாந்தத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. காலனித்துவ ஆட்சியின்போது அவர்கள் மற்றவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டதை, சமநிலைப்படுத்தி சரிசெய்ய நினைப்பது தர்க்க ரீதியாக சரிதானே. பிரிட்டிஷ் காலணித்துவத்தின்போது மலாய்க்காரர்கள் பின்னடைவைச் சந்தித்ததாக நம்பப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் சீன மற்றும் இந்திய மலேசியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் கருதப்பட்டது. இது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமே. ஆனால் தற்போது, சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி இப்போதுவரை முழு நாட்டையும் மலாய் சமூகமே ஆட்சிபுரிந்து வருகிறது. இது ஒருவகை இராஜதந்திரத்துடன்தான் நடக்கிறது. இதில் சீனர்களுக்கு நான்கு அல்லது ஐந்து எனும் சற்றே பெரிய எண்ணிக்கையில் அமைச்சர் பதவிகளும், இந்தியர்களுக்கு ஒரு முழு அமைச்சர் மற்றும் இரண்டு துணை அமைச்சர் எனும் அடிப்படையில் ஒரு கணக்கு இருக்கிறது. முற்றிலும் தந்திரமான இந்த ஏற்பாட்டின்வழி மலாய்க்காரர் அல்லாதவர்கள் அரசியல், ஆட்சியதிகாரத்தில் ஏதும் செய்துவிடக்கூடாது என்பது நோக்கமாக இருக்கிறது. மலாய்க்காரர் அல்லாதவர்கள், குடியேறிகளாக இந்நாட்டிற்கு வந்தவர்கள் எனும் காரணத்தால் பொருளியல் அடிப்படையில் தங்களை வழுபடுத்திக்கொள்ள முயன்ற அளவு ஆளுமை செலுத்தக்கூடிய அரசியல் தலைவர்களாக வளர்வதில் கவனம் செலுத்தவில்லை.  தற்போது நடப்பில் இருக்கும் இந்த அரசியல் அமைப்புமுறையானது இவ்விரு சமூகங்களின் நடவடிக்கைகள், லட்சியங்கள், வளர்ச்சிகளின்மீது தொடக்கத்திலிருந்தே பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் கவனிக்கப்படாமல் விட்டுவிடப்படுகின்றன. காரணம் ஒரு பெரிய சமூகம் அதன் மதிப்புகள் மற்றும் சமூக கட்டமைப்பு என பலவற்றை மற்ற சமூகங்களின்மீது கடத்த முயற்சிப்பதுதான்.

இந்த ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதா, சமூகத்தில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

கே.எஸ்கே.எஸ்.மணியம்: இதற்குமுன் நாம் பார்த்த வன்முறை சம்பவங்கள் நிகழாது என்றாலும்கூட இந்த ஏற்றத்தாழ்வு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றே நினைக்கிறேன். வன்முறை எதற்கும் உதவாது என்று மக்கள் புரிந்துகொண்டனர். இந்நாட்டில் 45 விழுக்காட்டு மக்கள் குடியேறிகள், கிளர்ந்தெழுவதால் அவர்கள்தான் பலிகடா ஆவார்கள் என்பதைத் தாண்டி வேறெதும் நடக்காது என்பதை அவர்களே அறிவார்கள். மலாய்க்காரர் அல்லாதவர்களை மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொண்டிருக்கும் இந்நாட்டு ராணுவம், ஊடகம் என அனைத்தும் ஆட்சியாளர்கள் கையில். இதன் விளைவாக, தேவையான உள்கட்டமைப்பு எதுவும் இல்லாத நிலையில் இந்நாட்டு பிற இனக்குழுக்கள் கட்டுடைத்து விடுதலை பெறுவது கடினம். சில மலாய் ஆட்சியாளர்கள் – உதாரணமாக மகாதீர் போன்றவர்களின் இருப்பு மலாய் சமூகத்தினருக்குப் பட்டுப்புழுக்களின் கூடுபோல இருக்கின்றது; அனைத்தையும் மலாய்த்தன்மையாக்க நினைக்கிறது. இவ்வாறு எதிலும் கலக்காது தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் இச்சமூகத்தின் போக்கு இந்நாட்டையும் அதற்குட்பட்ட குறுகலான தோற்றத்துக்குக் கொண்டு செல்லும் என்கிற கவலை எனக்குள் ஏற்படுத்துவதுண்டு. இந்த புவியியல் எல்லைகளைக் கடந்து நமது பார்வை விசாலமாக வேண்டும், இந்த சரிபாதி சர்வாதிகார நிலைப்பாட்டைத் தடுக்க முயற்சிக்கும் ஒன்றிரண்டு அரசியல்வாதிகளும் இருக்கவே செய்கின்றனர்.

இன்று மலேசியாவில் ஆங்கில மொழி எழுத்தாளரின் செயல்பாடுகள் என்ன? இவர்களின் எதிர்காலம் என்ன?

கே.எஸ்.மணியம்: 1940கள் தொடங்கி 1970கள் வரை மலேசியாவில் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களுக்கு நல்ல அடையாளம் இருந்தது. சமூகத்திலும் அரசியலிலும் எழுத்தாளர்களின் செல்வாக்கும், நுரைத்தல், பொங்குதல், அலசுதல் என அவர்களது புழங்கும்வெளி செழிப்புடன் இருந்தது. அப்போதைய எழுத்தாளர்கள் காலனித்துவ அனுபவத்திலிருந்துதான் எழுந்து வந்தார்கள் என்பதால், W.H Auden, Eliot, John Osborne போன்ற காலனித்துவ எழுத்தாளர்களைத் தங்களுக்கான உதாரணங்களாக கொண்டிருந்தனர். கவிதைகளின் சந்தம், நோக்குநிலை ஆகியவற்றுக்குப் பிரிட்டிஷை உதாரணம் கொண்டனர். ஆனால் பின்னாட்களில் தங்கள் சூழலோடு அந்த எழுத்து பாணி பொறுந்தாததையும் கண்டறிந்தனர். சிலவகை தாவரங்களை நீங்கள் மலேசியாவில் வளர்க்க முடியாது. அதுபோல் அவர்களது நான்குவரி வசனக்கவிதையும் உங்கள் எழுத்துக்குள் கொண்டுவர முடியாது.

Wong Phui Nam, Edwin Thumboo போன்ற மிக நுண்மையான கவிஞர்கள் சிலர் இந்த மொழி வரம்புகளிலிருந்து விலகி சென்று ஒரு செயற்கை மொழியை உருவாக்க முயற்சித்தார்கள். ‘Engmalchin’ எனும் மலாய், சீன சொற்களின் சேர்க்கையாக. ஆனால் இதில் இந்தியர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டதுதான் சற்றே பொருத்தமற்றதாக இருந்தது. இறுதியாக, இதுவெல்லாம் ஒருவகை ஏய்ப்பு வேலை என்று உணர்ந்தவர்களாக ‘எழுத்தாளன்’ எனும் தன்மைக்குள் நுழைய முடிவு செய்தார்கள். வேறு நாடு, வேறு உணவு முறை, வேறு கலாச்சாரங்களிலிருந்து வந்திருந்த இவர்கள் ஆங்கிலத்தில் வினையாற்றும்போது முன்சொன்ன அனைத்தும் அம்மொழியினுள் இணைந்து அம்மொழியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதனால்தான் மலேசியாவில் எழுதப்படும் வசன கவிதைகளுக்கும் பிரிட்டிஷ் வசன கவிதைகளுக்கும் பெரும் வித்தியாசம் தெரிகிறது. குறைந்த பட்சம் இன்றைய மலேசிய ஆங்கில இலக்கியம் இப்போது நாம் காணும் வளர்ச்சியை இப்படியாகத்தான் அடைந்தது.

மலேசிய சமூகத்தில் மற்றும் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை மறுபரிசீலனைச் செய்வதற்காக  ஆங்கிலவழி எழுத்தாளர்கள் தன்னிச்சையாக வாசிப்புக்குள் இறங்கினார்கள். ஆனால் மிக முரண்பாடான விதத்தில் எழுபதுகளின் காலப்பகுதியில்தான் இச்செயல்பாடுகள் நாடகங்களாக  வெளிவந்ததது. Patrick Yeoh எழுதிய The Need to Be நாடகம் சீனர்களின் தற்போதைய இடம், எதிர்காலம் குறித்து பேசியது. இதே கருப்பொருளில் எழுதிய மற்றுமொரு எழுத்தாளர் Edward Darall. எழுபதுகளில் ஆங்கில இலக்கியம் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றதோடு பெரிய அளவில் கவனத்தையும் ஈர்த்தது. காரணம் இந்த எழுத்தாளர்கள் கையாண்ட விடயங்கள் எல்லாரிடமும் அப்போது குடிகொண்டிருந்த பொதுவான பதற்றம்; அடுத்தது அதைச் சொன்ன விதம் – சத்தமில்லாமலும் ஒப்பீட்டளவில் மிக வெளிப்படையாகவும் இருந்தன அக்கால படைப்புகள். Lee Kok Liang என்ற எழுத்தாளர் இதே விடயத்தை வாழ்விலிருந்து வெளிசென்று பரிசீலித்தார். பின்னர் 1975ல் அவர் எழுதிய Fernando’s Scorpion Orchid கதை ஒரு கலாச்சாரம் இன்னொரு கலாச்சாரத்தோடு இணக்கமாக முயற்சிக்கும் போது ஏற்படும் தடைகள், பாரபட்சங்கள், அபிலாஷைகள் குறித்து இருந்தது. இதுபோன்ற படைப்புகளைக் கொண்டுதான் உள்ளூர் சிக்கல்களைக் கதையாக்கினர். 1981ல் நான் The Return மற்றும் பல கதைகளை எழுதியிருந்தேன். எங்கள் மத்தியில் குறைந்தது இரண்டு தலைமுறை எழுத்தாளர்கள் அதே உற்சாகத்துடனும் படைப்பூக்கத்துடனும் எழுதிக் கொண்டிருந்தனர்.

இப்போது கவலை என்னவென்றால் எங்களை யார் கடந்து செல்வார் என்பதுதான். சில ஆக்கப்பூர்வமான படைப்புகளைக் கொடுக்கும் எழுத்தாளர்களாக, உதாரணமாக அமெரிக்கா சென்றுவிட்ட Shirley Lim, ‘Caught in the Middle’ எழுதிய Thor Kah Hoong மற்றும் சில நல்ல கதைகளை எழுதிய Karim Raslan போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்களைத் தவிர்த்து வேறு சிலர் சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள், இரு காரணங்களுக்காக; ஒன்று உடனடி பணம் இன்னொன்று உடனடி வெளிச்சம் அல்லது புகழ்.  இந்த வெற்றிக்குப் பின் பெரும்பாலானவர்கள் எழுத்தைத் தொடர்வதில்லை. காரணம் அவர்களுக்கு இலக்கியம் குறித்த தெளிவிருப்பதில்லை அல்லது இலக்கிய சாதனை படைத்துவிட்டதாக போலியான உணர்வுக்கு இரையாகிவிடுகிறார்கள். இதில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் பெரிதாய் அவசரம் ஒன்றும் இல்லையென்றாலும் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் மலேசியக் கல்விச் சூழலில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதும் இந்நாட்டு எழுத்தாளர்கள் அந்நியர்கள் இல்லை  என உணரவைக்க முடியும்.  இதுவே வெற்றிக்கான பயணமாகவும் ஒரு இலக்கியப் பிரதியைச் சரியாகக் கொண்டு சேர்ப்பதாகவும் இருக்க முடியும்.

மலேசியர்கள், சிங்கப்பூரர்கள் பற்றி மட்டும்தான் நான் இவ்வளவு நாளும் பேசி வந்திருக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் எழுதும் மற்றவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம், அவர்கள் ஆங்கிலத்தில் எழுதும் எல்லோருடனும் போட்டியிட வேண்டும் என்பதுதான். இப்போது அவர்கள் இருக்கும் வெளி பாதுகாப்பற்றது, ஆனால் அதுவே ஆரோக்கியமானது. இதில் தேரினால் மட்டும்தான் வெளியில் பரவலாக அறியப்பட முடியும். இந்த ஓட்டத்தில் உலக அரங்கில் பலவேறு எழுத்தாளர்களுடன் ஈடுகொடுத்தால்தான் பலவிதமான வாசகர் பரப்பைச் சென்றடைவதை உறுதிபடுத்த முடியும்; தொடர்ந்து நிலைக்கவும் முடியும். அல்லது அதைவிட கொஞ்சம் குறைச்சலாகப் பார்த்தாலும் மற்ற மொழி எழுத்தாளர்களையாவது சென்றடைய முடியும். உலக இலக்கிய அரங்கில் மலேசியாவின் வரைபடத்தைப் பதித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மலேசிய ஆங்கில எழுத்தாளர்களே.

நீங்கள் நிறைய சிறுகதைகளை எழுதியுள்ளீர்கள். பின்னோக்கிப் பார்த்தால் இதில் எது அதிக மதிப்புடையது என சொல்வீர்கள்?

கே.எஸ்.மணியம்: நான் எழுதிய கதைகளில் பெரும்பாலானவை தொகுக்கப்பட்டுவிட்டன, அல்லது தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  Plot, The Aborting, Parablames and Other Stories ஆகிய தொகுப்புகளில் வந்த கதைகள் 1976-1980க்கு உட்பட்ட காலப்பகுதியில் நான் எழுதியவை. எழுத்தாளர்கள் பெரும்பாலும் தங்கள் தொடக்கக்கால எழுத்துகளைக் குறைசொல்ல மாட்டார்கள், ஆனால் சில சமயம் உள்ளுக்குள் கொஞ்சமாய் சங்கடம் இருக்கும். இப்படி நானே பல கதைகளை வாசித்து பரிசீலித்திருக்கிறேன். உதாரணமாக “The Plot”, இக்கதையில் Conradianனின் கதை சொல்லும் உத்தியைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், இப்படி பல கதைச்சொல்லிகளைக் கதை சொல்லலுக்காக பார்த்தபோது அவர்களின் கலாச்சாரத்தை வேறொரு கோணத்திலிருந்து அவதானிக்க முடிந்தது. “The Pelanduk” மலேசிய மான் எனும் இக்கதை இந்திய புராணத்தையும் மலேசிய இந்தியர்களின் சமகாலச் சூழலையும் இணைத்து பொருள் மீதான பேராசை, ஆடம்பர வாழ்க்கை மீதிருக்கும் கவர்ச்சியை முற்றிலும் தவிர்த்தோ, அல்லது ஏற்றோ வாழ முடியாது எனக் காட்டியிருப்பேன். இதில் மாரிசனைக் கதைக்குள் கொண்டுவந்து ‘பலியிடுதல்’ குறித்தும் பேசியிருப்பேன். குறிப்பாக, இந்தக் கதைக்கு மதிப்பளிக்கிறேன் என்று சொல்வதைவிட என் படைப்புகளில் ஒரு கோடிட்டு வரைந்து செல்ல முயற்சி செய்கிறேன் என்று சொல்லலாம். “The Loved Flaw”, “Mala” இவ்விரு கதைகளும் எனக்குப் பிடித்தமானது. இவை இரண்டும் பெண்களைப் பற்றியும் ஒரு கட்டுப்பாட்டு சூழ்நிலையில் எவ்வாறு பெண்கள் தன் சுயத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதான கதைகள். “The Loved Flaw” கதை–இந்திய சமூகத்தில் ஒருவர் இரண்டு திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் கதாப்பாத்திரம் ஒன்று தன் சகோதரியின் கணவனுடன் உறவு கொள்கிறாள். இந்த இருப்பை அவள் எப்படி சமூகத்துக்குள் கொண்டு சென்று செல்லுபடியாக்கப் போகிறாள்? நிழல்களாய் இருந்த இந்த பெண்ணுருக்களை வெளியில் கொண்டுவந்து இந்த சமூகத்தில், ஆண்களை மையமாகக் கொண்டு அதிலிருந்து நெறிமுறைகளை வகுக்கும் இச்சமூகத்தில் அப்பெண்களுக்கு என்ன மாதிரியான சக்தி இருக்கிறது என்பதை நிறுவியிருக்கிறேன்.  “The Loved Flaw” வரும் பெண்ணுக்கு இருக்கும் விடுதலைகூட “Mala” கதையில் வரும் பெண்ணுக்கு இல்லை. அவள் இந்தப் பொருள்முதல்வாத உலகில் சிக்கிக் கொள்கிறாள்.

இந்த சமுதாயத்தில் குறிப்பாக பெண்கள் ஒடுக்கப்படுவதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

கே.எஸ்.மணியம்: இதுவும்கூட என் எழுத்துகளை வழிநடத்தும் அம்சமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லை வரை எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களை எதிர்கொள்கிறார்கள், ஒருவேளை நீங்கள் ஒடுக்கப்பட நேர்ந்தால் நீங்கள்தான் அவர்களுக்கான கருப்பொருள். என்னைச் சுற்றிப் பார்த்துவிட்டு கேட்டுக் கொள்கிறேன்: ‘என்னிடம் இருக்கும் ஏதேனும் சிறு ஆற்றல் யாருக்குத் தேவைப்படுகிறது?’ என்று. எழுத்தாளர்களுக்கு அடுத்தவர் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கும் குணமும் மனிதாபிமான உள்ளுணர்வும் இருக்க வேண்டும்.

உங்கள் சமீபத்திய கதைகள் என்னென்ன?

கே.எஸ்.மணியம்: புதிய கதைகளின் தொகுப்பாக நான் அடுத்து கொண்டுவரவிருக்கும் நூல் A Hundred Years Afterks-maniam and Other Stories. இதில் பலவகையானவற்றை செய்துபார்த்துள்ளேன். புத்தகத்தின் தலைப்பாகி இருக்கும் கதை எனக்கு மிகவும் பிடித்தமானது. இது வெறும் பெண் பாலினம் குறித்த கதையாக மட்டுமில்லாமல் பணி ஓய்வு பெற்ற ஒரு விரிவுரையாளர் தனது மனிதத்தை வெளிப்படுத்த முடியாதென உணருவதையும், அதுவே அவர் வாழ்வு நெடுக வியாபித்திருப்பதையும் பல அழிவுகளுக்குக் காரணமாகியிருப்பதையும் அவன் காண்பதான கதை. இப்போது அவர் நிரந்தரமாக ஏதாவது ஒரு மையத்திற்கு போகவேண்டும் என்பதையும்  உணர்கிறார். அவரால் தன்னை ஒரு அகண்ட வெளியிலிருந்து பார்க்க முடியுமா? அவர் யார்? அவர் படைப்பின் மூலத்திலிருந்து வந்த ஒரு துகல், ஆம் அதுதான் என்றால் அவர் ஏன் அதைக் கவனிக்கத் தவறினார். “A Hundred Years After” எனும் தலைப்பு “Gooseberries” எனும் செக்கோவிய கதையோடு தொடர்புடையது. கதையின் ஒரு பகுதி எப்படி ஒரு நெல்லிக்காய் சின்னம் தேசிய மயம் அல்லது நாட்டுப்பற்றுக்கான அடையாளமாக மாறுகிறது, பின் எப்படி சிந்தனைக்கு அப்பாற்பட்ட சூழ்ச்சிக்குள் மக்களை அடைத்துவிடுகிறது என்று பேசுகிறது.

சுயத்தை அடையாளம் காணுதல் என்பது இந்த வாழ்க்கைக்கு முக்கியமானது என்று நினைக்கிறேன், காரணம் இந்த வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட அனைத்துமே ஊகங்களாலானதுதான். இறப்புக்குப் பின் என்ன நிகழும் என்பதை அறுதியிட்டு கூற வழியில்லை. ‘இப்போது நமக்கிருக்கும் நேரம் மற்றும் இடைவெளியில் நாமே நம்மை மறுப்பிறப்பு செய்துக்கொள்வோம்’ எனும் என் பார்வைக்கும் இதுதான் வழு சேர்க்கிறது. நமக்கு இன்னொரு வாழ்வும் அதற்கான வாழ்வோட்டமும் இருக்கலாம், ஆனால் இன்னொரு பிறப்பின்மீது அதீத நம்பிக்கையும் பற்றுதலும் வைப்பது அறிவார்த்தமானதாக எனக்கு தோன்றவில்லை. எனவே இந்தக் கதையானது ஒரு பெரிய பிரபஞ்சத்தை ஆராய முயற்சிக்கிறது, அதில் நான் என் பழைய இலக்கிய நுட்பங்களைக் கையாள்வதையும் தவிர்த்திருக்கிறேன்.

இதே கருப்பொருளுடன் தொடர்புடைய இன்னொரு கதை Arriving. அதுவும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ‘நீ எப்போதும் எங்கும் சென்றடைய முடியாது’ என ஒரு கிண்டல் மொழியில் சொல்லியிருப்பேன். இந்த கதையானது, தங்களது இலக்கை அடைந்துவிட்டதாக நம்பும் மக்களைப் பற்றிய பல காட்சிகளாக வருவது, ஆனால் இறுதியில் அவர்கள் எங்கும் போய்விடாமல் அங்கேயே இருப்பதையும் கண்டறிவதாக கதை முடியும். யாருமே சென்றடைவதில்லை; யாரும் எங்கும் நிலையாக இருப்பதும் இல்லை. இந்த நகர்ச்சியில் இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் என அனைவரையும் உள்ளடக்கியிருக்கிறேன். அடைவை வந்தடையாதவனாக, எப்போதும் வந்து கொண்டிருப்பவனாக இக்கதையின் கதாநாயகனைக் காட்டியிருப்பேன்.

In A Far Country நாவலிலும் இதுபோன்ற உள்ளீடுகளைத்தான் கையாண்டிருக்கிறீர்களா?

கே.எஸ்.மணியம்: மலேசியாவில் எழுத்தாளர்களை வகுப்புவாத எழுத்தாளர்கள், இனப்பற்றுகொண்ட குறுகிய பார்வையுடைய எழுத்தாளர்கள் என குற்றம்சாட்டுவது வழக்கமாகியுள்ளது. இந்தியர்கள் அவர்களது பூர்வீகம் தொட்டும், சீனர்கள் அவர்கள் பூர்வீகம் தொட்டும் எழுதுவதாக சொல்கிறது அந்தக் குற்றச்சாட்டுகள். என் தொடக்கக்கட்ட எழுத்துகளில் நான் இதுபோன்ற விடயங்களைத் திட்டமிட்டு செய்யவில்லை. அதேசமயம், நமக்கு நன்கு அறிமுகமான ஒன்றைப் பற்றிதானே நம்மால் நன்றாக எழுத முடியும். இதன் காரணமாக, என் தொடக்கக்கால எழுத்துகள் இந்தியர்களின் சிக்கல்கள் தொட்டு இருந்தன. இக்கலாச்சாரத்தோடு பொருந்திபோக முடியுமா, அல்லது பொருந்த முடியாதா என்ற வகையான எழுத்துகள். ஆனால் எழுத்துக்குள் இன்னும் ஆழமாக செல்லச் செல்ல என் எழுத்தின் ஆளுமை தன்னைத் தானே நிறுவிக்கொள்ள ஆரம்பித்தது, என்னை இந்தக் குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் கொண்டு வர முடியாது என்று எனக்குக் காட்டியது. பரந்த எல்லைகள், உலகின் பெரிய காட்சிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்தேன். In A Far Country நாவலில் தென்னிந்தியத் தமிழர்களின் சாயலில் இதன் முதன்மை கதாபாத்திரம் வந்திருப்பதும் மேற்சொன்ன பரந்துபட்ட பார்வை உருவாகிய காலமும் ஒரே சமயம் நிகழ்ந்தவை. இந்தக் கதாபாத்திரம் தனக்கும் சீனர், மலாய்க்காரர்களுக்கும் இடையேயான உறவையும் தன் நாட்டுக்குமான தொடர்பையும் பரிசீலிக்கிறது. பொருள்சார் உலகிற்கும் தன் அக உலகிற்கும் ஏற்படும் ஊடாட்டத்தைக் அக/புற நிலைகளில் ஊடுருவி ஒரு கேள்வியை முன் வைக்கிறது. தன் அக உலகை புற உலகிற்கு கொண்டுவர எவ்வளவு தூரம் ஒருவன் பயணித்திருக்கிறான் எனும் கேள்வியை முன்வைக்கிறது. இதற்கு சாதகமான பதில் இல்லை. உண்மையில் அவன் Sense of belonging என்பதை அடையவேயில்லை. கடைசியில், தன்னைச் சுற்றி காயம் சேர்த்திருக்கிற அந்தச் சிந்தனையை அவிழ்த்து பிரிக்கிறான். அதேசமயம், அடையாளத் தேடலில் பல நேர்மறையான அம்சங்களும் சாத்தியமே.

இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

கே.எஸ்.மணியம்: In A Far Countryயில் இருக்கும் என் சிந்தனைகளை மேலும் விரிவாக்கியிருக்கிறேன். The Skin Trilogy எனும் தலைப்பில் மூன்று நாடகத் தொகுதிகளை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்த நாடகங்கள் In A Far Country தனக்காக வடிவமைத்துக் கொண்ட எல்லைகளைக் கடந்து பயணிக்கிறது. மிக அண்மையில் எழுதிய நாடகம்,  நனவின்/ விழிப்பு நிலையின் மிகப்பெரிய பகுதியைத் தொடுகிறது. ஒரு குறிப்பிட்ட, வரம்புக்குட்பட்ட கண்ணோடத்தில் அல்லது பார்வையில் மட்டும் கட்டுண்டு கிடக்க ஏன் நாம் அனுமதிக்கிறோம் என்று எப்போதும் ஆச்சரியப்பட்டுப் போவேன். இந்நாடகங்களும் விழிப்புணர்வு பற்றி நமக்கிருக்கும் அதிகபடியான நம்பிக்கை அல்லது பற்று; உளவியல் சார்ந்து நமது தெளிவு; மறைமுகமாய் விஷமங்களைக் கக்கும் “பேராற்றல்மிக்க சக்தி வாய்ந்த—அதைவிட – இருந்தாலும்” போன்ற கலாச்சார அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வதில் ஆண், பெண், சமூகத்தின் கடந்தகால எண்ணங்கள் என பலவற்றைக் கேள்வி எழுப்புகிறது. இவை மேலும், வெவ்வேறு கலாச்சார வெளிகளிலிருந்து வந்திருக்கும் மனிதர்களின் புதிய பழக்க வழக்கங்கள், தொடர்பாடல்கள் முறை ஆகியவற்றையும் ஆராய்கின்றது.

மூலம் : Bernard Wilson, (1993-1994). An Interview With K.S. Maniam. World Literature Written In English. 33.2 & 34. 

3 கருத்துகள் for ““அடையாளத் தேடலில் பல நேர்மறையான அம்சங்களும் சாத்தியமே.” – கே.எஸ்.மணியம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...