சு.வேணுகோபால்: கூழாங்கற்களின் நாயகன்

su_venugopalanதொண்ணூறுகளுக்குப் பிறகான காலகட்டத்தில் பொதுவாக நவீன இலக்கியப் படைப்பின் வடிவம்,வெளிப்பாட்டு முறை சார்ந்து ஒரு தவறான புரிதல் சூழலில் உண்டாயிற்று. மொழியை அதன் இயல்புத்தன்மையினின்றும் வல்லந்தமாக திருகியும், செயற்கையான பூடகத்தன்மையை அதற்களித்தும் வெளிவரும் படைப்புகளே மிக நல்ல இலக்கியப் படைப்புகள் என்ற ஒரு தோற்றப்பிழை உண்டானது. பின்நவீனத்துவப் படைப்பை உருவாக்குவதாக எண்ணிக்கொண்டு நேர்க்கோடற்ற துண்டாடப்பட்ட விவரணையை போலியாகப் புகுத்தியும்,கதையின் ஆன்மாவைக் கெடுத்தும்,வாசகனை பயமுறுத்தும் தோரணையில் சொற்களால் முள்வேலியை அமைத்தும், படைப்புக்குள் வாசகனைப் புகவொட்டாமல் வெளிவந்த படைப்புகளும் இலக்கிய அந்தஸ்தை ஏங்கி நின்றன. ஒரு படைப்பு இயல்பாகவே எந்த வடிவத்தைக் கோரி நிற்கிறதோ அந்த வடிவத்திற்குள் அதைப் புனையாமல்,செயற்கையாக சிதறடிக்கப்பட்ட வடிவத்திற்குள் அதைப் பொதிந்து, படைப்புக்கும் நியாயம் செய்யாமல்,படைப்பிலக்கியத்திற்கும் வலு சேர்க்காமல் அந்தரத்தில் தொங்கி நின்ற படைப்புகள் ஏராளம். (நான் சாடுவது பின்நவீனப் போர்வையைப் போர்த்துக் கொண்ட போலிகளையேயன்றி அசல் பின் நவீனப் படைப்புகளை அன்று).

இந்தச் சூழலில்தான்சு.வேணுகோபாலின் இலக்கியப் பிரவேசம் நிகழ்கிறது. சு.வேணுகோபாலின் முதன்மையான சாதனையாக நான் எண்ணுவது நவீன இலக்கியம் என்பதன் வரையறைகள் மேற்சொன்ன சட்டகங்களுக்குள்தான் இருக்க வேண்டும் என்ற பொதுவான புரிதலை தன் யதார்த்தவாத எழுத்தால் சிதறடித்ததுதான். யதார்த்தவாதம் இன்னும் காலாவதியாகவில்லை. அது அதன் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்தத் தயாராகிவிட்டது என்பதை நாம் சு.வேணுகோபாலின் கதையுலகில் நுழைகையில் கண்டுகொள்ளலாம். நீரைப் போலத்தான் சிறுகதையும். கோரும் கொள்கலனிற்கேற்ற வடிவை எடுப்பவை அவை. இலக்கியத்தின் சீர்மை என்பது அது வெளிப்படும் வடிவைத்தாண்டி அது மெய்நிகர் வாழ்வனுபவத்தை நுட்பமாக வழங்கும் வல்லமையில்தான் உள்ளது என்பதை சு.வேணுகோபாலின் படைப்புகள் உணர்த்திச் செல்கின்றன.

ஜெயமோகனின் வெண்முரசு வரிசை நாவலான கிராதத்தில் ஒரு காட்சி வரும். மகாபாரதத்தில் அர்ச்சுனன் திசை தேவர்களையெல்லாம் வென்று அவர்களிடம் அரிய ஆயுதங்களைப் பரிசாக பெற்று வருவான். கடைசியில்,சிவனிடம் பாசுபதம் வாங்கும் காட்சி ஒன்றுண்டு. அதில் சிவகணமாக வரும் பெரியவர் ஒருவர், ஒரு சிறிய கூழாங்கல்லை அவனுக்குத் தருவார். அதைக் கைகளில் வாங்கிய அர்ச்சுனன் ஒன்றும் புரியாமல் நோக்கும்போது அவர் சொல்வார். “இதுவே பாசுபதம்”. வலியதொரு ஆயுதத்தை எதிர்பார்த்திருந்த அர்ச்சுனன் ஒரு கூழாங்கல்லை பாசுபதமாக எண்ணியிருக்கவேயில்லை. அரியவை எல்லாம்அடைதற்கரியவை என்பது எளியமானுடரின் எண்ணம். உண்மையில் அரியவை அடைவதற்கரியவை அல்ல, நாம் காண மறந்தவை அல்லது காட்சி வட்டத்திற்குள் வராதவையே அரியவை என்னும் புரிதலை அக்காட்சி வாசகரிடம் தோற்றுவிக்கும்.

நவீன இலக்கியம் என்றாலே இறுகிய கட்டமைப்பும், அணுகுவதற்குச் சிரமமான மொழியும், கற்பனையில் விரிப்பதற்குக் கடினமான படிமங்களும் நிறைந்தது என்ற நினைக்கவேண்டியதில்லை. எளிய கூழாங்கல் ஒன்று பாசுபதமாக ஆவதுபோலத்தான், எளிய மொழியும், யதார்த்தவாத சித்தரிப்புமே அரிய இலக்கியமாக ஆகும் என்ற உண்மையை சு.வேணுகோபால் எடுத்து வருகிறார். அவர் வஜ்ராயுதங்களின், பீரங்கிகளின் நாயகன் அல்ல. அவர் கூழாங்கற்களின் நாயகன். வெறும் கூழாங்கற்களல்ல, பாசுபதத்தைத் தரிசிக்கச் செய்யும் கூழாங்கற்களின் நாயகன்.

அவரது துவக்ககாலக் கதைகளின் வடிவம் மரபான யதார்த்தவாத கதைகளின் சுருக்கி செறிவூட்டப்பட்ட வடிவத்திற்கு எதிராக எல்லா திசையிலும் பெருகியோடுவது. அது குழாய்களின் வழி வெளிவரும் கட்டுப்படுத்தப்பட்ட நீர் அல்ல, மாறாக, திசை போதமற்று கட்டற்றுப் பாய்ந்துவரும் பெருவெள்ளம். இப்படி கட்டற்றுப் பெருகும் நீள்கதைகள் வாசகனின் பொறுமையுடன் விளையாடாமல் அவனையும் அந்தப் பிரவாகத்தில் புகுத்தி இழுத்தோடுகின்றன. ஒருவகையில் குறுநாவல்களின் வடிவத்தை சிறுகதைக்குள் போட்டுப் பார்த்து புதுவகை கதை வடிவத்தை அறிமுகப்படுத்த யத்தனிக்கிறாரோ என்ற எண்ணத்தையும் அவரது அக்கதைகள் ஏற்படுத்தின. ஒரு நீண்ட பயணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுதான் வாசகன் இவரது கதைக்குள் நுழைய முடியும். இதையே அவரது பலமாகவும் பலவீனமாகவும் கருதலாம். எழுத்தாளன் என்பவன் உண்மையில் ஒரு கதைசொல்லி என்ற கோணத்தில் நோக்கினால் இவர் கதைகளில் உள்ள விரிவு என்ற அம்சத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதே என் எண்ணம். கள்ளர் மடம், பெண்டிழந்தான் சுழி, வாடிவாசல்  போன்ற கதைகளில் சி.சு.செல்லப்பா கைக்கொண்ட விரிவைத்தான் வேணுகோபாலும் வேறு வகையில் கையாள்கிறார் எனத் தோன்றுகிறது.கண்ணிகள், கூந்தப்பனை, திசையெல்லாம் நெருஞ்சி, இழைகள் போன்ற கதைகளின் விரிவம்சத்தை அவ்வகையில் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அவற்றை குறுநாவல்கள் என்ற வடிவத்தில் பார்க்காமல் சிறுகதை என்ற வடிவிலேயேஏற்றுக்கொள்ளலாம் என்றுதான் எண்ணுகிறேன்.

சு. வேணுகோபாலின் மற்றொரு சிறப்பம்சம் அவர் எழுத்தாளராகி வந்த விவசாயி என்பதே. போகிறபோக்கில் கதைக்குள் அவர் வாரியிறைக்கிற விவசாயமும், விவசாய வாழ்வு சார்ந்த குறிப்புகளும் மலைக்கவைக்கின்றன. உதாரணத்திற்கு: “எருக்கலஞ்செடி பால் பட்ட பின்புதான் புது பண்ணறுவாளை மற்ற அறுப்புக்கு பயன்படுத்துவது. எருக்கலம்பால் பட்டால் பற்கள் உதிராது என்ற நம்பிக்கை (நித்திய கண்டம்). “கொழுத்தாடை கணுக்களை பின் தொடுப்பாக வைக்காமல் ஜோடி கருணைகள் வைத்த இடைவெளியில் போட்டு மிதித்துவிட்டுப் பின் நகர்ந்தார் (உருமால் கட்டு), “சோளத்தட்டைகள் காஞ்சாரி நோய் விழுந்து தீப்புகையில் மூழ்கியதைக் கண்கொண்டு காண முடியவில்லை (உற்பத்தி).

உண்மையில் இவரை விவசாய வாழ்வை எழுதும் எழுத்தாளர் என்பதைக் காட்டிலும் எழுத்துலகில் பிரவேசித்த விவசாயி என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். விவசாயத்தில் புழங்கி, மண்ணோடு யுத்தம் செய்து, அதன் சகல மாட்சிமைகளிலும் வீழ்ச்சிகளிலும் கட்டிப் புரண்டு அலையடிக்கும் ஒரு விவசாயியால்தான் அசல் விவசாயியை அவனது பாடுகளை இலக்கியத்திற்குள் பிரதிபலிக்க முடியும். வேறு எந்த எழுத்தாளருக்கும் கிட்டாத பாக்கியம் வேணுகோபாலுக்கு கிட்டியிருக்கிறது இவ்விஷயத்தில்.விவசாயம் சார்ந்த வாழ்வின் மேன்மைகளை, அதன் வீழ்ச்சிகளை, நுண்ணிய தரவுகளோடும், உட்குறிப்புகலோடும் அசலாகப் பதிவு செய்யும் இந்த நேர்த்தியில் இவருக்கு முன் நாஞ்சில் நாடனையும் இவருக்குப் பின் என். ஸ்ரீராமை மட்டுமே என் வாசிப்பனுபவத்தில் சுட்டிக் காட்ட இயலும்.

வேணுகோபால் கதைகளில் உலவவிடும் அவரது மண்ணின் மனிதர்கள் எனக்கும் மிக நெருங்கியவர்கள். அவர்களின் வாழ்வை நானும் அணுகியறிந்திருக்கிறேன். அவரது ஊரான போடி அம்மாபட்டியில் இருந்து இருபது கிலோமீட்டர்களுக்குள்தான் என் ஊரான சின்னமனூர். அவ்வகையில் அவரது கதைகளினின்றும் மேலெழும் மண்ணின் வாசத்தை என்னால் விருப்பமாக நுகர இயல்கிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களான சு.வேணுகோபால், பாஸ்கர் சக்தி, எஸ். செந்தில்குமார்,நந்தன் ஸ்ரீதர் போன்றவர்களின் எழுத்தில்தான் என்னுடைய ஊரின் பெயரை முதன்முதலில் அச்சில் பார்த்து மகிழ்ந்தேன். முன்னத்தி ஏர்களான சி.சு. செல்லப்பா, பி.எஸ். ராமையா போன்றவர்களின் தொடர்ச்சியாக இவர்கள் தேனி மண்ணின் மைந்தர்களின் நிரையை அலங்கரிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சு.வேணுகோபால் தன்னுடைய விவசாயம் சார்ந்த கதைகளில் காட்டும் வறட்சியின் சித்திரமும், விவசாய வாழ்வின் வீழ்ச்சியும் சாதாரணமாக கருதத்தக்கவை அன்று. தேனி மாவட்டத்தை சேர்ந்தவனாதலால் என்னால் இதைத் தெளிவாகவே சொல்ல இயலும். ஏனெனில், தமிழகத்தின் பிற மாவட்டங்களை விடவும் இப்பகுதி வளமான பூமி. மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகாமையினால் கிடைக்கும் நல்ல மழை,கர்னல் பென்னிகுக்கின் தயவால் கிடைத்த முல்லைப் பெரியாற்றுப் பாசனம், பொதுவாகவே மிதமான தட்பவெப்பம் போன்ற காரணிகளால், இது விவசாயம் செழித்த பகுதி. விவசாயிகள் என்றாலே பொதுவாக நம் மனதில் எழும் வறிய சித்திரம் தேனி மாவட்டத்திற்குப் பொருந்தாது. மாவட்டத்தின் சில ஊர்களின் விவசாயிகள் பெரும் செல்வந்தர்கள். குறிப்பாக, எரசக்க நாயக்கனூர், ஆனைமலையான்பட்டி, உத்தமபாளையம், வாய்க்கால்பட்டி துவங்கி கம்பம் வரையிலுள்ள வாழை விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் நல்ல வசதிவாய்ப்புள்ளவர்கள்.இஞ்சினியரிங், சட்டம் என படித்திருந்தாலும் விவசாயிகளாகவே தொடர்பவர்கள் நிறைய பேர் இப்பகுதியில் உள்ளனர். மழை வளத்திலும் நில வளத்திலும் தேனி மாவட்டத்தை கன்னியாகுமரி மாவட்டத்தோடுதான் ஒப்பிட இயலும். ஆனால், காலத்தின் குரூர நகங்கள் இப்பகுதியையும் விட்டுவைக்கவில்லை. இந்த வளமான பூமியும் வறட்சியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாவதன் சித்திரத்தை சு.வேணுகோபால் கதைகளில் வாசிக்கையில் அதன் உண்மையில் தீவிரமும் அணுகிவரும் பெருந்துயரத்தின் வாதையும் மனதைத் தவிக்க விடுகின்றன.

இவரது மொத்தக் கதைகளையும் வாசிக்கும் ஒருவன் உண்மையில் கதைகளையும் தாண்டி விவசாயம் குறித்த தகவலறிவையும் நிரம்பப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அடைகிறான். புனைவுகளின் வழியே விவசாயத்தை அறிந்து கொள்ளும் அளப்பரிய வாய்ப்பை சு.வேணுகோபால் வாசகனுக்கு அளிக்கிறார் (முற்றிலும் நகர்மயமாகிவிட்ட வாழ்வை மேற்கொள்ளும் தற்கால வாசகனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்புதான். அன்றி வேறெவ்வகையில் அவன் விவசாயம் குறித்து இத்தனை செய்திகளை அறிய முடியும்?).

வேணுகோபால் கலைஞனாக மிளிர்வது விவசாயம் சார்ந்த கதைகளை எழுதுவதனால் மட்டுமல்ல. விவசாய வாழ்வின் மகத்துவங்களையும் அதே சமயம் அதன் குரூரமான பக்கங்களையும் கலாபூர்வமாக அம்பலப்படுத்துவதால் அவர் கலைஞனாகிறார். மண்ணில் புரளும் ஒரு கலைஞனுக்கு மண் அளிக்கும் பெருவாய்ப்பு அது. விவசாய உலகத்திற்கு வெளியில் இருப்பவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக விவசாயம் என்பது உண்மையில் அப்பழுக்கற்ற துறையல்ல, அதனுள்ளும் பெருகிவரும் நச்சரவங்களின் தடத்தைக் காட்டித்தருதல், நிலப்பிரபுத்துவ மனநிலைகளில் நாறி நொதித்துப் போன சித்திரத்தை அளித்தல், சாதி ஏற்றத்தாழ்வுகள், ஆணாதிக்க மனநிலை, முக்கியமாக விவசாயக் கூலிகளாக பணிபுரியும் பெண்களின் அல்லல்கள், அவர்கள் எதிர்கொள்ளும் நுண்ணிய தீண்டாமைகள் மற்றும் குரூரமான பாலியல் தொல்லைகள், இவையாவும் இவரது கதைகளின் பேசுபொருளாகின்றன.முக்கியமாக பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களை ஏந்திவரும் இவரது பல கதைகள் பக்கங்களை கனக்கக் செய்கின்றன. “நித்திய கண்டம்” என்ற இவரது கதையில் திருமணமான ஒரு விவசாய கூலிப் பெண் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் விவசாய வாழ்வின் சீழ்கட்டிய ஒரு பாகத்தை அப்படியே பிய்த்துப் போடுகிறது. அதிகாலையில் கொடூரமான மாதவிடாய் வலியோடு வேலைக்கு கிளம்புகிறாள் ருக்மணி. கையாலாகாத கணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் மகளுக்கு தோடு எடுத்துப் போட வழியில்லை. புல்லறுக்க சரியான பண்ணறுவாள் கூட இல்லை. புள்ளிக்காரன் (விவசாய கங்காணி) விசிலடிக்கவும் எல்லாரும் கூட்டமாக ஓடுகிறார்கள். மூணு மைல் நடந்து வந்த களைப்பு. இடுப்பு வலியும் சேர்ந்து கொள்கிறது. இளைப்பாறக்கூட விடவில்லை. புள்ளிக்காரன் உடனடியாக வேலை செய்யச் சொல்கிறான். நெல் அறுப்பு வேலை துவங்குகிறது. மொட்டை அரிவாளோடு ருக்மணி போராடுகிறாள். “அறுவாளப் பதியப் போடு.. பதியப் போடு” என்று தொணதொணக்கிறான் புள்ளிக்காரன். ருக்மணியொடு அறுப்பு வேலை பார்க்கும் வேறு சில பெண்கள் உண்டு. அவர்கள் அவனை அனுசரித்துப் போகத் தெரிந்தவர்கள். அவர்கள் வேலையில் பிழையிருந்தாலும் அவன் கண்டுகொள்வதில்லை. அவனுக்கு இணங்காத ருக்மணியை நோட்டம் பார்த்துக் கொண்டு நொள்ள நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறான். நெல் அறுப்பு வேலை சாதாரணமானதில்லை. பெரும் சூட்டைக் கிளப்பிவிடும். மூன்று மாதக் கருவைக் கூட அந்த வெக்கை கலைத்து விடும். அப்படிக் கருக்கலைந்த பெண்கள் பலரிருக்கிறார்கள். ருக்மணியால் அந்த வெக்கையைத் தாள முடியவில்லை. முதுகு முழுதும் வியர்வை ஆறாகப் பெருகுகிறது. மாதவிடாய் வலியால் வெகு நேரம் குனிந்து அறுக்க முடியவில்லை. ரோதனையாக இருக்கிறது. தன் தோழி கௌரியிடம் தன் வேதனையைச் சொல்லி புள்ளிக்காரனிடம் தன்னை வேறு எளிதான வேலைக்கு அனுப்பச் சொல்கிறாள். அவளும் சென்று அவனிடம் சொல்கிறாள். அவன் மசியவேயில்லை. சுடுசொல் சொல்லி அவளை மீண்டும் அதே வேலைக்குத் துரத்திவிடுகிறான். அவளுக்கு வலி அதிகமாகிறது. தீட்டுத்துணி தொடைகளை அறுக்கிறது. அறுப்பு களத்திலிருந்து புல் கட்டுகளை தலையில் சுமந்து நடக்கையில் ரவுக்கையில் கீழ்ப்பட்டி மேலேறிக் கொள்கிறது. தலையில் புல்கட்டுகளை சுமந்து வேகமாக நடக்கையில் இதனை சரிசெய்ய முடியாது. வலியோடு அவள் நடக்க,விலகிய அவளது மாராப்பை குறுக்கு வரப்பில் நின்று கொண்டு புள்ளிக்காரன் பார்த்துக் கொண்டிருக்கிறான். புல்கட்டு சுமந்து நடக்கும் பெண்களின் இடுப்பசைவை நோட்டம் விட்டுக் கொண்டே ஏவிக் கொண்டிருக்கிறான். நெல் அறுத்தபின் சூடடிக்க பெரும் கற்களைக் கொண்டுவந்து போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்கள் எடுத்துக் கொடுக்க, நெல்கட்டை கதிரடி சாட்டையால் சுழற்றி  கல்லில் ரெண்டு போடு போட்டு எறிகிறார்கள். சுப்பையாவுக்கு நெல்கட்டுகளை ருக்மணி எடுத்துக் கொடுக்க அவன் கல்லில் அடிக்கிறான். புள்ளிக்காரன் சுப்பையாவுக்கு கண்ணைக் காட்டிவிட்டு திரும்பிக் கொள்கிறான். அதுவரை ஒழுங்காக அடித்துக் கொண்டிருந்த சுப்பையா குனிந்து கொண்டிருந்த ருக்மணியின் மார்புக்குள் நெல்மணிகள் தெறிக்கும்படி ஏதுவாக அடிக்கிறான். நெல்மணிகள் ரவிக்கைக்குள் வேகமாகச் செல்வதால் அவளுக்கு நவநவவென்று அரிப்பெடுக்கிறது. “ஒதறாம அடி சுப்பையா” என்று கெஞ்சினாலும் அவன் கேட்பதாக இல்லை. புள்ளிக்காரன் கண்டுங்காணாமலும் இருப்பது போல நடித்தவாறு இதை ரசித்துக் கொண்டேயிருக்கிறான். இப்படியாக ஒரு முழு நாள் வேலைக்குப் பிறகு கிடைத்த ஆறு படி நெல்லைக் கூலியாக வாங்கிக் கொண்டு ருக்மணி மறைவாகச் சென்று தொடைகளைத் தொட்டுப் பார்க்கிறாள். தொடைகள் புண்ணாகிப் போயிருக்கிறது. தூசி விரல்களால் தொடவும் மேலும் காந்துகிறது. துயரம் பொங்கும் நெஞ்சுடன் நான்கு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறாள். பக்கத்தூருக்கு நெல்லறுக்க அதிகாலை நான்கு மணிக்கே சென்று விடுகிறார்கள். விடியட்டும் என்று சற்று நேரம் படுத்துக் கிடக்கையில் திடீரென்று பின்புறத்தில் கையை வைத்து யாரோ தடவுவதுபோலிருக்கவும் விசுக்கென எழுந்து பார்க்கிறாள். உடனே கண்ணில் பட்டது புள்ளிக்காரன் தான். அவனை முறைத்துப் பார்த்துவிட்டு அகன்று செல்கிறாள் ருக்மணி. இப்போது அந்தக் காட்சியை நினைவில் அசை போடும் ருக்மணி அவனை அப்படி முறைத்துப் பார்த்திருக்கக் கூடாதோ என்று எண்ணுவதுடன் கதை முடிகிறது.

இன்று நகர்ப்புறங்களில் பணியிடத்தில் பெண்களுக்குக்கான பாதுகாப்பு அதிகரித்து விட்டிருக்கிறது. பாலியல் தொல்லைகள் முற்றிலும் குறைந்து விட்டது என்று சொல்ல முடியாதென்றாலும் அதற்கெதிரான குறைந்தபட்ச நடவடிக்கைகள் எடுப்பதற்கான உத்தரவாதம் நகர்ப்புறங்களில் உள்ளது. ஆனால் இன்றளவும் கிராமங்களில் விவசாய கூலிக்குச் செல்லும் பெண்கள் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டபடியேதான் வாழவேண்டியிருக்கிறது. அதற்கெதிரான அமைப்பு பலமோ, ஆள் பலமோ இல்லாமல் இன்றும் ஏதேதோ ஊர்களில் பெண்கள் இந்த வக்கிரங்களைச் சகித்துக் கொண்டபடியே செல்வது தொடர்ந்துகொண்டிருப்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. வேணுகோபாலின் இந்தக் கதையின் முடிவுதான் கலங்க வைக்கிறது. தன்மதிப்புடன் வாழ விரும்பும் ஒரு பெண் கடைசியில் அப்படியிருப்பதற்காக தன்னையே நொந்துகொள்ளும் ஒரு சித்திரம் கதையில் காட்டப்படுகிறது. மீண்டும் மீண்டும், கைவிடப்பட்ட பெண்கள் சென்று விழும் பிரம்மாண்டமான மலக்குழி அது. ருக்மணியும் அக்குழிக்குள்தான் அடுத்து விழப்போகிறாள் என்ற பதைபதைப்பை வழங்கியபடி கதை முடிகிறது.

venugopal1

சு.வேணுகோபால்

விவசாயத்தில் ஆத்மார்த்தமாக ஈடுபடும் ஆண்களின் வாதையையும் சு. வேணுகோபாலின் கதைகள் காட்டாமலில்லை. “கண்ணிகள்” என்ற கதை படிக்கும் யாவரையும் துயருறச் செய்யும். உரம் வைப்பதற்கு கடன் வாங்கி, கடனை அடைக்க முடியாமல், கந்து வட்டிக்காரர்களிடம் அடியுதை பெற்று வீங்கிப் போன முகத்துடன் வரும் விவசாயி அவரது துயரத்தில் இருந்து தன்னை விடுவிக்கும் கரம் ஒன்றைக் கண்டுகொள்கிறார். அவர் வாங்கிய கடனை முழுதும் அடைத்து அவரது கௌரவத்தை மீட்டுக் கொடுக்க ஒரு அமைப்பு முன்வருகிறது. ஆனால், அதற்கு அவர் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். வேறென்ன.. அவர் மதம் மாற வேண்டும்.. விடாக்கண்டனிடம் இருந்து தப்பித்து கொடாக்கண்டனிடம் மாட்டிக் கொண்ட கதைதான். மீட்பு என்பது வெறுமனே காகிதங்களிலும், சர்சு சுவர்களிலும் தென்படும் வார்த்தையாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், அதன் அர்த்தத்ததை ஒரு நிராதரவான விவசாயி நிஜ வாழ்வில் சந்திக்க நேர்கிற தருணம் எவ்வளவு குரூரமானதாக இருக்கிறது.

இளந்தாரி விவசாயிகள் எதிர்கொள்ள நேர்கிற இன்னொரு துயரம் உண்டு. இதை வேறு எந்த எழுத்தாளரும் இவ்வளவு அழுத்தமாக தங்கள் கதைகளில் பதிவு செய்து நான் வாசித்ததில்லை. சு.வேணுகோபால் இந்தத் துயரத்தையும் தன் கதைகளில் பதிவு செய்கிறார். விவசாயிக்கு இக்காலத்தில் எவரும் பெண் கொடுப்பதில்லை. கம்ப்யூட்டர் இஞ்சினியர்கள், அரசு வேலைக்காரர்கள், வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் நிரையில் விவசாயி பின் தங்கிவிடுகிறான். மண்ணையும் மழையையும் நம்பி பாடுபடும் விவசாயிக்கு எவரும் பெண்தர முன்வருவதில்லை. இந்தப் பிரச்சனையைப் பேசுகிறது “பெண் தேடிய படலம்” கதை. இது வெறுமனே வேடிக்கையாக வாசித்துக் கடந்துபோக முடியாத கதை. இதில் வரும் விவசாயி படிக்காதவனில்லை. எம்.எஸ்.ஸி பட்டதாரி. ஆனாலும், விவசாயத்தின் மீதுள்ள விருப்பத்தால் வேலைக்குச் செல்லாமல் விவசாயியாகவே இருந்துவிடுகிறான். சமூகத்தின் விதிகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. பாதுகாப்பு தருகிற மிலிட்டரிகாரர்கள், போலீஸ்காரர்கள், உயிர்வாழ உணவளிக்கும் விவசாயிகள், இவர்களுக்கெல்லாம் பெண்தருவதற்கு சமூகத்திடம் இருக்கும் தயக்கம் புரியாத ஒரு புதிர்.இனிவரும் காலங்களில் கிராமப்புறங்களில் இப்பிரச்சினையும் தலையானதாக இருக்கும் என்பதை இக்கதை ஒரு எச்சரிக்கையாகவே சொல்லிச் செல்கிறது.

விவசாய நிலங்கள் யாவும் தொழிற்சாலையாக மாறி மெல்ல மெல்ல நிலம் தன் வளத்தையெல்லாம் இழந்து நஞ்சேறிப் போகும் இன்றைய யதார்த்தத்தையும் வேணுகோபால் காட்டிச் செல்கிறார். அவரது “உற்பத்தி” என்ற கதையில் மெல்ல மெல்ல இந்த நஞ்சு, நிலத்தில் இருந்து மனிதன் மீது பற்றிப் படர்ந்தேறும் சித்திரம் காட்டப்படுகிறது. மழை பொய்த்து, விவசாயம் பொய்த்து, விவசாயக் கூலிகள் யாவரும் தொழிற்சாலைக் கூலிகளாக இடம்பெயர்வது இப்போதெல்லாம் சாதாரணக் காட்சியாகிவிட்டது. இனிவரும் காலங்களில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சூழலியல் சார்ந்த பாதிப்புகளால் அரசாங்கமே அதிரப் போகிறது. அண்மையில் தூத்துகுடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டினால் 13 பேர் கொல்லப்பட்டதையும் அதைத் தொடர்ந்த பதற்றம் இன்றளவும் தணியாமல் இருப்பதையும் நினைவு கூரலாம். இதுபோன்ற சூழலியல் பாதிப்புகளையெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னரே சு.வேணுகோபால் “உற்பத்தி” கதையின் மூலம் வெளிப்படுத்தி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். ஆயினும், தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது அலறுவதுதான் தமிழகத்தின் யதார்த்தமாகிவிட்ட தற்காலச் சூழலில்,இக்கதைக்கு போதிய கவனம் கிடைக்கவில்லை என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. மறதியும், சுயநலமும் மலிந்து விட்ட தற்காலத் தமிழகத்தில் ஒரு பாதிப்பு நிகழ்வதற்கு முன் அதை நினைவறுத்தி எச்சரிக்கும் படைப்புகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் காட்டிலும் அது நிகழந்தபின் அதன் இழப்புகளைச் சொல்லும் படைப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு ஒப்புநோக்க மிக அதிகம். விவசாயத்தின் வீழ்ச்சியை,பெருங்கொண்ட விவசாயிகளெல்லாம் வறுமையின் பிடியில் சிக்கி கூலி வேலைக்குச் செல்வதும், நகருக்கு கட்டிட வேலைக்குச் செல்வதும் அன்றாட யதார்த்தமாகிவிட்டது. வேணுகோபாலின் “உருமால் கட்டு” என்ற கதையில் நடப்பதும் இதுதான். ஆனாலும், பெரும் விவசாயிகளையெல்லாம் தினக்கூலிகளாக கதைகளிலே வாசிப்பதுக்கூட கஷ்டமாக இருக்கிறது. எத்தனையோ படைப்பாளிகள் இதுகுறித்து எழுதியிருந்தாலும்  மு.சுயம்புலிங்கத்தையும், சு.வேணுகோபாலையுமே இவ்விஷயத்தை ஆழ எழுதிய படைப்பாளிகளாக நான் கருதுகிறேன்.

விவசாயம் அல்லாத கதைகளில் சு.வேணுகோபால் மிளிர்வது தலித் உலகைச் சித்தரிக்கும் கதைகளில். “பட்டம்மா”,“இழைகள்”,“திசையெல்லாம் நெருஞ்சி” போன்ற கதைகள் காட்டும் தலித் உலகம், அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொள்ளும் தீண்டாமைக் கொடுமைகள் யாவும் அந்த உலகிற்கு அறிமுகமாகாத நகர்ப்புற வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டுபவை.

“இழைகள்” கதையில் ஒரு படித்த, அரசு வேலையில் இருக்கும் ஆசிரியர் எதிர்கொள்ளும் தீண்டாமைக் கொடுமைகளும் அவமானங்களும் நம்பமுடியாதவை. எதேச்சையாக அவர் கைகொடுக்க கைநீட்டும்போதும் மறுபக்கம் இருப்பவர் கண்டுகொள்ளாமல் வணக்கம் வைக்கும் காட்சியெல்லாம் ஒரு ஆசிரியருக்கா இந்த நிலை என மனம் குமுற வைப்பது. இழைகள் கதை முழுக்க அவர் காட்டும் தீண்டாமைக் கொடுமைகள் எல்லாம் இப்போது வாசிக்கையில் ஜெயமோகனின் வணங்கான், நூறு நாற்காலிகள் கதைகளுக்கெல்லாம் மிக முன்னரே வேணுகோபால் இவற்றை எழுதிவிட்டாரே என நினைக்கச் செய்கிறது.

“திசையெல்லாம் நெருஞ்சி” (இந்த தலைப்பே கவித்துவமானது. மேலும் பிரமிளின் கவிதை வரி “வழிதொறும் நிழல்வெளிக் கண்ணிகள், திசை தடுமாற்றும் ஆயிரம் வடுக்கள்” நினைவூட்டுவதும்கூட) கதையில் ஒரு சவரத் தொழிலாளி சந்திக்கும் அவமானங்கள், தான் செய்யாத குற்றத்திற்கு பணத்தையும், மானத்தையும் இழந்து சந்தி சிரிக்கும்படி ஆவதன் துயர சித்திரம் மிக யதார்த்தமாக காட்டப்பட்டிருக்கிறது. இக்கதையில் எந்த இடத்திலும் ஆசிரியன் உள்நுழைந்து தன்னுடைய ஆவேசத்தை முழங்கவில்லை.அப்படிச் செய்திருந்தால் இதுவும் வழக்கமான முற்போக்குக் கதைகளின் நிரையில் மறைந்திருக்கும். மாறாக இவர் அந்த சவரத் தொழிலாளி பழநியாகவே வாசிப்பவனை மாற்றிவிடுகிறார். அவனது தோள்களுக்குப் பின்னரே வாசகன் கதை முழுதும் பயணிக்கிறான். கதையின் உச்சம் என்பது பழநி அவனது தந்தையின் வாக்கை நினைவுகூர்ந்து அம்பட்டையன் குழியைப் பார்க்கச் செல்வதுதான். இக்கட்டான சூழலில் அம்பட்டையன் குழியைப் பார்க்கச் சொல்கிறார் பழநியின் அப்பா. வாழ்வின் உச்சகட்ட சிக்கலில் மாட்டியிருக்கும் பழநி அந்த அம்பட்டையன் குழியைப் பார்க்கிறான்.விதவிதமான மயிர்க்குப்பைகளும், எருக்குப்பைகளும் குழியெங்கும் நிறைந்திருக்கின்றன. அது அவனுக்கு வாழ்வைக் குறித்த ஏதோ ஒரு நுண்ணிய தரிசனத்தை அளிக்கிறது. எதுவும் பெரிதில்லை, முடிவில் எல்லாமும் மயிர்க்குப்பைகள்தான். அதற்குப் பிறகுதான் கதையின் முடிவில் அவன் மல்லையாவின் தீவனப் படப்புக்கு நெருப்பு வைக்கிறான்.

வேணுகோபாலின் எழுத்தைப் பற்றிச் சொல்கையில் பாலியல் குறித்தும் பேசுவது அவசியமாகிறது. தி.ஜானகிராமனின் பாதிப்பில் எழுத வந்தவர் வேணுகோபால். ஆனாலும், அவரது கதைகளிலும், வெளிப்பாட்டு முறையிலும் தி.ஜாவின் பாதிப்பு வெளிப்படையாகத் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், தி.ஜாவின் சில அடையாளங்கள் தென்படுகின்றன. உதாரணத்திற்கு, தி.ஜா பயன்படுத்தும் சில சொற்கள் அவருக்கேயுரிய சொற்கள். “நிகுநிகு”என்ற வார்த்தையை தி.ஜாவின் படைப்புகளில் காணலாம். அது வேறு எந்த எழுத்தாளரும் பயன்படுத்தாத சொல். அதுபோலவே வேணுகோபாலும், மனசு “குல்லிட்டது”,“குமுகுமுத்தது” போன்ற சொற்களைப் பயன்படுத்தும்போது அது தி.ஜாவை நினைவுறுத்துகிறது. தி.ஜாவின் கதாபாத்திரங்கள் காமத்திற்கும் மோகத்திற்கும் ஒழுக்கநியதிகளுக்கும் இடையில் அல்லாடுவது போலவே சு.வேணுகோபாலின் ஆல்பர்ட்டும் (ரட்சணியம்) அல்லல்படுகிறான்.

சு.வேணுகோபாலின் “பூமிக்குள் ஓடுகிறது நதி” என்ற கதை தமிழிலக்கியத்திற்குள் ஒரு மகத்தான கலைஞனின் வருகையை உறுதி செய்கிறது. தி.ஜா கதைகளில் வருவது போலவே,உள்ளார்ந்த ஒரு மென்மையான காதல் கதை. தோல்வியடைந்ததும் கூட. ஆயினும், பல வருடங்களுக்குப் பின் அந்த காதலின் உச்சம் ஒரு செருகளத்தின் சூழலில் நிகழ்கிறது.விருமாண்டியும் சுப்பம்மாவும் இளமையில் ஒருவரை ஒருவர் காதலித்தவர்கள். சுப்பம்மா தாழ்ந்த குலத்துப் பெண் என்பதால் அவர்களின் காதலை பெற்றவர்கள் ஏற்கவில்லை. இருவரும் வெவ்வேறு திசையில் பிரிந்துவிட்டார்கள். விருமாண்டி பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை மணந்துகொண்டு வெளியூருக்கு சென்றுவிடுகிறார். ஆசிரியர் வேலை. சுப்பம்மா தன் சாதியைச் சேர்ந்த மாரிமுத்துவை மணந்து கொண்டு உள்ளூரிலேயே வசிக்கிறாள். ஆண்டுகள் பல கழிந்து விருமாண்டி பேரக் குழந்தை எடுத்து தாத்தாவாகிவிடுகிறார். ஊரில் விருமாண்டியின் சாதியினருக்கும் சுப்பம்மாவின் சாதியினருக்கும் இடையில் கலாட்டா ஏற்பட்டு சாதிச் சண்டையாக மாறும் சூழ்நிலையில் மீண்டும் விருமாண்டியும் சுப்பம்மாவும் சந்திக்கிறார்கள். விருமாண்டி தன் சாதியினரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனாலும் யாரும் அவர் சொல்லை மதிக்கவேயில்லை. சுப்பம்மாவின் சாதியில் அவளது கணவனான மாரிமுத்துதான் சாதிச் சண்டையில் தலைவனாக முன்னிற்கிறான்.

அந்த ஊரில் தலைமுறை தலைமுறையாக ஒரு வழக்கம் இருக்கிறது.விருமாண்டியின் சாதியில் குழந்தை பிறந்தவுடன் சுப்பம்மா சாதியினர்தான் குழந்தைக்கு அவர்களின் செலவில் தொட்டில் கட்டி பாலாடை சங்கு வாங்கித் தருவது. அதற்கு ஒரு கதையும் இக்கதைக்குள் சொல்லப்படுகிறது. ஆனாலும், மாறிவிட்ட காலத்தில், மாறிவிட்ட மனிதர்களுக்கிடையில் அந்த வழக்கத்தை இப்போது எவரும் தொடர்வது இல்லை. தாழ்ந்த சாதியிடம் தொட்டிலும் சங்கும் வாங்கி தங்கள் குழந்தைக்குப் போடவேண்டியதில்லை என்ற நம்பிக்கை பெருகிவிட்டது. ஆனாலும் சிலர் இன்னும் தாழ்ந்த சாதியினர் வசிக்கும் தெருக்களுக்குச் சென்று பிறரறியாமல் தொட்டிலும் சங்கும் வாங்கி வருவதும் தொடரத்தான் செய்கிறது.

பாதையில் தனியாக விருமாண்டியும் சுப்பம்மாளும் சந்திக்க நேர்கிறது. இருவருக்கும் வயது நாற்பதுக்குள்தான். சுப்பம்மா தன்னுடைய முப்பத்தேழாவது வயதில் ஐந்தாவது பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள்.

கண்கள் கலங்க சுப்பம்மா கேட்கிறாள் “என்ன எப்பயாவது நினப்பீங்களா?” அதற்கு அவர், “நினைக்காமலிருக்க முடியுமா” என்கிறார். “எல்லாம் முடிஞ்சு போச்சு” என்கிறாள் அவள். தன் பேரக்குழந்தைக்கு தொட்டில் சங்கு கட்ட பணம் தருகிறார். வறுமைப்பட்டிருந்தாலும் வீம்பாக பணத்தை வாங்க மறுக்கிறாள்.“கடவுள் நெனச்சிருந்தா நான் வாத்தியார் பொண்டாட்டியாகியிருப்பேன். கடவுள் நெனக்கல” கண்கலங்கியபடி விலகிச் செல்கிறாள்.

கணேஷ் பாபு

கணேஷ் பாபு

ஊரில் சாதிச்சண்டை வலுக்கிறது. சுப்பம்மாள் கணவன் மாரிமுத்துவை வெட்டுவதற்காக விருமாண்டியின் ஜாதியினர் தேடிக்கொண்டிருக்கின்றனர். அர்த்த ராத்திரியில் விருமாண்டி தன் வீட்டுக்குள் நுழையும்போது அவரது மனைவி, சுப்பம்மாள் வந்திருப்பதாகச் சொல்கிறாள். சுப்பம்மாள் தன் சாதியினருக்கும் கணவனுக்கும் தெரியாமல் விருமாண்டி வீட்டு மாட்டுக் கொட்டிலில் பதுங்கியிருக்கிறாள், விருமாண்டியின் பேரக் குழந்தைக்கு தொட்டில் கட்டுவதற்காக. அந்த கும்மிருட்டில் அவள் தொட்டிலையும், பால் சங்கையும் தந்துவிட்டு அவரது குடியை வாழ்த்திவிட்டு சட்டென விசும்புகிறாள். விருமாண்டியின் மகள் “அழுவாதீங்கம்மா” என்கிறாள். உடனே சுப்பம்மாள் ஊரில் நிலவும் சாதிச்சண்டைக்காக வருத்தப்பட்டு அழுவதுபோல காட்டிக் கொண்டு, குழந்தையை வாங்கி மறைவுக்கு கொண்டு போகிறாள். குழந்தையைத் திரும்ப வாங்கும்போது பால்நுரை உதடுகளில் படிந்திருந்தது. “நல்ல பொழுதா விடிஞ்சா ஒரு பாலாடை பாலூத்த காலையில வர்றேன்” என்றபடி பின்வாசல் வழியாக கண்ணை கசக்கிக்கொண்டு வெளியேறுகிறாள். கூடவே செல்லும் விருமாண்டி, அவளுக்கு டார்ச் லைட்டைத் தருகிறார். “பேட்டரி வேண்டாம், நீங்க போங்க, யாரும் தப்பா நெனப்பாங்க” என்றபடி இருளுக்குள் நடந்து மறைகிறாள், என்பதுடன் கதை முடிகிறது.ஒருபக்கம் மூத்த தலைமுறை கொலைவெறியுடன் அடித்துக் கொண்டாலும், சத்தமில்லாமல் அடுத்த தலைமுறை அதே மூத்த தலைமுறை வெறுக்கும் சாதியினுடைய அன்பின் பாலைப் பருகியபடி உலகில் கால்வைக்கிறது. அதே சமயம் அன்பை வழங்கிய சாதியினள் வெளிச்சத்திற்காக டார்ச் லைட்டும் இல்லாமல் இருளில் மறைகிறாள். யதார்த்தமும் கவித்துவமும் சந்திக்கும் புள்ளியில் கச்சிதமாக கதை முடிகிறது. கதையின் தலைப்பை மறுபடியும் வாசித்துப் பார்த்தேன், “பூமிக்குள் ஓடுகிறது நதி”. இதைவிடவும் இக்கதைக்கு சிறப்பான தலைப்பு வேறென்ன இருக்க முடியும்?

சு.வேணுகோபாலின் “கூந்தப்பனை” என்ற கதை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதை. இன்றளவும் இந்தக் கதையும், இக்கதை கையாளக்கூடிய கூந்தப்பனை என்ற படிமமும் இலக்கிய வாசகர்களை வியப்பிலாழ்த்துகின்றன. ஒரேஇரவில் எழுதப்பட்ட இந்த நெடுங்கதை தமிழ்நவீன இலக்கியப்பரப்பில்தன் சுவடு மறையாமல் என்றென்றும் இருக்கும் வல்லமையைப் பெற்றுவிட்டதுஎனலாம்.

ஆண்மை இழந்தவனின் கதையைச் சொல்லிச் செல்லும் வேகத்தில், முடிவில் அவன் கொள்ளும் மனமலர்ச்சியை இயற்கையின் விந்தையான ஒரு படிமத்தோடு இணைக்கும் லாவகத்தில் தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லியாக மலர்கிறார் வேணுகோபால்.

ஊரின் பேரழகன் சதீஸ். அபரிமிதமான உடல் வல்லமையும் கொண்டவன். வருடந்தோறும் ஊரில் நடக்கும் ஸ்லோ சைக்கிள் ரேஸில் அவனை மிஞ்ச வேறு ஆள் கிடையாது. கிணற்று நீச்சலிலும் ஆளை வெல்வது அரிது. பெண்களின் ஏக்கப் பார்வைகள் சூழ, ஊரில் வலம்வரும் சதீஷ், பக்கத்து ஊர்ப் பெண் லதாவைமணம் செய்த பிறகான இரவுகளில், தான் ஆண்மையற்றவன் என்பதைக் கண்டுகொள்கிறான். ஒரு பெண்ணைத் தன் வாழ்நாளில் திருப்தி செய்யும் பாக்கியம் தனக்கில்லை என்று தெளிவாய் உணர்ந்து கொண்டவனாய், தனக்கும் தன் மனைவிக்கும் மீட்சி தேடி அலைகிறான்.

திருமணத்திற்குப் பிறகான ஆரம்ப இரவுகளில் காமத்திற்கு ஏங்கும் மனைவியை சந்தோசப்படுத்த முடியாத அலைக்கழிப்பு கொடுக்கும் அச்சத்தின் காரணமாய் இரவுகளில் வீட்டுக்கு வருவதற்கு பயப்படும் சதீஷ் பின்பு ஒரு நாள் மனைவியிடம்தன்னுடைய உடற்குறையை ஒத்துக்கொள்கிறான். ஆனால், அவனை நேசிக்கும் மனைவி லதா அந்தக் குறையை பெரிதுபடுத்தாமல், அவனை ஏற்றுகொள்கிறாள். ஒரு கட்டத்தில், காமம் தங்களுக்கு தேவையில்லை என்று முடிவெடுத்து “லட்சிய தம்பதிகளாக” வாழத் துவங்குகிறார்கள். ஆனாலும், இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. உயிரியல் யதார்த்தம் கண்களில் அறைய,சதீஷ் ஒரு உண்மையை உணர்ந்துகொள்கிறான். மனைவியைக்காமத்தால் அன்றி பிற வழிகளில் நெருங்கவே முடியாது. இதுவே யதார்த்தம். மற்ற காரணங்கள் எல்லாம், மனிதர்கள் தாமாகவே சொல்லிக் கொள்ளும் லட்சிய போதனைகள் என்று.

தன்னை நம்பி வந்த பெண்ணை இனிமேலும் ஏமாற்றக் கூடாது என்றெண்ணி, பஞ்சு மில்லில் தன்னுடன் வேலை செய்யும் உயிர் நண்பன் பாலுவிடம் தன்னுடைய பிரச்சினையை எடுத்துச் சொல்லி,ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவியைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லிக் கெஞ்சுகிறான். பாலுவும், லதாவும் காட்டிய ஆரம்ப எதிர்ப்பைச் சமாளித்துநீண்ட கால வற்புறுத்தலுக்குப் பின் இருவரையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறான் சதீஷ் (இது எப்படி சாத்தியம்? லாஜிக்கலாக இல்லையே என்ற கேள்வியை இலக்கிய வாசகன் கேட்க மாட்டான். வாழ்வும் அதன் புதிர்மிகுந்த பாதைகளும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்கும்போது வாழ்வைப் பிரதிபலிக்கும் இலக்கியம் மட்டும் எப்படி தர்க்கத்திற்கு உட்பட்டு இருக்க இயலும்?) திருமணத்திற்கு பின் தங்களுடன்தான் அவன் தங்கவேண்டும் என்று லதா சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.

அருகிலிருக்கும் கோயிலில், நண்பன் பாலுவுக்கு தன் மனைவி லதாவைத் திருமணம் செய்து வைக்கிறான். அதன் பிறகான நாட்களில் சதீஷ் சந்திக்கும் கேலியும், அவமானங்களும்அவனை சொந்த ஊரில் இருந்தே விரட்டுகின்றன. மூன்றுபேரும் ஒன்றாய்த் தங்கும் சிறிய வீட்டில், பாலுவும் லதாவும் சிறிய தட்டி போட்டு தங்கள் அறையை அமைத்துக் கொள்கிறார்கள். சதீஷ், தட்டிக்கு வெளியே படுத்துக் கொள்கிறான். லதாவும்பாலுவும் இரவுகளில் கொள்ளும் நெருக்கத்தின் காம முயக்கங்கள் சதீஷின் தூக்கத்தை ஊடுருவுகின்றன. ஒரு கட்டத்தில் லதாவும் பாலுவும் அன்னியோன்ய தம்பதிகளாகி விட, சதீஷ் அவர்களுக்கு தேவையற்ற பாரமாய் இருப்பது போன்ற ஒரு சூழல் உண்டாகிவிடுகிறது.மனைவி லதாவே ஒரு தருணத்தில்சதீஷை அவமானப்படுத்தி விடுகிறாள். இதற்கு நடுவே சமூகம் சதீஷை ஒரு அற்ப ஜீவியைப் போல நடத்தும் கொடுமைகளும் அவன் சந்திக்கும் நூதனமான மற்றும் வெளிப்படையான அவமானங்கள்(பொண்டாட்டியைக் கூட்டிக் கொடுத்த பொண்டுகன்..) யாவும்சேர்ந்து கொள்ள ஊரை விட்டே அவன் வெளியேறிச் சென்று விடுகிறான்.

தேனியின் வளமான சூழலை விட்டு, திருநெல்வேலிமணல் தேரிக்கு வருகிறான். தெரிந்தவர் யார் முகத்திலும் பட்டு விடக் கூடாது என்ற சங்கல்பம் துரத்த,தனித்து நிற்கும் பனைகளின் பூமிக்கு வரும் சதீஷ் காலத்தின் காலடியில் தனிமையில் புதைந்திருக்கும் ஒரு “கூந்தப்பனை” மரத்தைப் பார்க்கிறான்.

அந்த வறண்ட பூமியில் வேலை தேடி அலையும் சதீசுக்கு, முடிவில் ஒரு வேலை கிடைக்கிறது. அங்கேயே கடைசி வரை வாழ்வது என்று தீர்மானித்துக்கொண்டு புதிய வாழ்வைத் துவங்குகிறான். வேலைக்குப் போகும் வழியில் நீரற்று வறண்டு காய்ந்திருக்கும் தென்னை மரங்கள் அவனுக்கு தாங்க முடியாத வேதனையைத் தருகிறது. தன் தந்தையின் இழப்பை விடவும் துயரத்தைத் தருகின்றன காய்ந்து இற்றுப் போன தென்னைகள். நீண்ட நாட்களுக்குப் பின், வறண்ட பூமியில் ஒரு பாறைப் பள்ளத்தில் அபூர்வமான நீருற்றைக் கண்டு கொள்கிறான். அந்த நீருற்றில் இருந்து தினமும் தண்ணீர் மொண்டு காய்ந்த தென்னைகளுக்கு ஊற்றுகிறான்என்பதோடு கதை முடிகிறது.

நுட்பமான வாசகர்களுக்கு இந்தக் கதை அளிக்கும் வியப்புகள் எண்ணித் தீராதது. இயற்கையின் ஆச்சர்யம் “கூந்தப்பனை”. கூந்தப்பனைமரங்கள் ஆணும் பெண்ணும் கலந்தவை. வாழ்வில் ஒரு முறைதான் இம்மரங்கள் பூ பூக்கும். குறைந்தது முப்பது முதல் எழுபது வருடங்கள் ஆகும் பூ பூப்பதற்கு. அந்தப் பூக்களின் வாசம் நெடுந்தூரம் வீசக்கூடியது. இந்தக் கதையின் நாயகனும் ஒரு வகையில் கூந்தப்பனை மரம் போன்றவன்தான். இல்லாதஆண்மைக்காக ஏங்கிப் பரிதவிக்கும் அவன், முடிவில் தன்னுள் நிறைந்திருக்கும் தாய்மையின் பிரவாகத்தை உணர்கிறான். வறண்ட நிலத்தில் அவன் காணும் நீருற்று அவனுள் நிறைந்திருக்கும் தாய்மையை உணர்த்துகிறது. அந்த நீரை மொண்டு அவன் தென்னை மரங்களைப் போஷிப்பதுஅத்தாய்மையை வெளிக்கொண்டு வருகிறது. கூந்தப்பனை பூப்பது போல. ஆண்மையைத் தேடும் ஒருவன் கடைசியில் தாய்மையைக் கண்டு கொள்ளும் கதைதான் “கூந்தப்பனை”.

கூந்தப்பனை கதையில் சதீஸில் வெளிப்படும் தாய்மை உணர்வை பின் தொடர்ந்து சென்றால், கிட்டத்தட்ட இதே தாய்மையுணர்வு “புத்துயிர்ப்பு” கதை நாயகனிடத்திலும்,“பால்கனிகள்” கதையின் அந்த அரவாணியிடத்திலும் வெளிப்படுவதைக் காணலாம். மண் தந்த கலைஞன் சு.வேணுகோபாலின் படைப்புகளை ஆழ்ந்து வாசிக்க வாசிக்க ஒரு கட்டத்தில் அதே மண் வாசகனையும் தழுவ கைநீட்டுவதை அவன் உணரத் துவங்குவதே சு.வேணுகோபாலின் கலைவெற்றிக்கு சாட்சியாக அமைகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...