அந்த விபத்து

a965548df4880ec035e663c9c6ae8f22சின்வுவா புத்தகக் கடைக்கு எதிரில், சாலைக்கு மறுபுறம் நடைபெற்றுக்கொண்டிருந்த சாலைப் பராமரிப்பு வேலையிடத்தில் விசுக்கென புகுந்த காற்றொன்று குப்பைகளைச் சுழற்றி வளைத்து அள்ளி எடுத்துக்கொண்டு போய் எங்கும் இறைக்கின்றது. அதன்  புழுதிப் படலம் அடங்கிக்கொண்டிருக்க, டெஸ்ஹெங் அவின்யுவிலிருந்த வானொலி பழுது பார்க்கும் கடையிலிருந்த வானொலியிலிருந்து நான்காவது ஒலிக்கூறு (beep) கேட்டதைத் தொடர்ந்து, இப்போது பிற்பகல் மணி ஐந்து என உணர்த்தியது.

இது புழுதிப் புயலடிக்கும் பருவ காலமல்ல என்றாலும் பருவகாலம் வெப்பமடையத் தொடங்கியிருந்தது. நடைபாதையில்  இளவேனில் கால இள நீல உடையணிந்த இளம் பெண்களிருக்க சைக்கிளோட்டிகள் குட்டை பழுப்பு நிற கோட்டுகள் அணிந்திருந்தனர். அது எல்லோரும் வேலை முடிந்து திரும்பும் மிக மோசமான சாலை நெரிசல் போலில்லாமலிருந்தாலும் முடிவில்லாத நிரை சைக்கிளோட்டிகளும் சாலை பாதசாரிகளும் சென்றுகொண்டிருந்தனர். ஆனாலும், அவர்களில் முன்கூட்டியே வேலை முடித்தவர்களும் விடுமுறையில் இருப்பவர்களும் இருந்ததால், சுறுசுறுப்பானவர்களும் மந்தமானவர்களும் ஒருசேர சாலையில் வந்து  போய்க்கொண்டிருந்தது தவிர்க்க முடியாதது.

நாளின் இந்தப் பொழுது எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும். பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி, சிலர் கைப்பிடி இரும்பை பிடித்து நின்றவாறு ஜன்னல் வழி பார்த்தபடி பயணித்தாலும், பேருந்தில் அதிக நெரிசல் இருக்காது.

கூடுதலாக,  மேலும் ஒரு சக்கரத்தில் குழந்தைக்கான, சிகப்பு நீல நிற நிழல் துணியுடன் கூடிய இணைப்பு வண்டி பொருத்தப்பட்ட ஒரு சைக்கிளில், சாலையின் மறுபக்கமிருந்து, ஒரு மனிதன் நீள் குறுக்காய் சாலையைக் கடக்கிறான். எதிர் திசையிலிருந்து ஒரு இரண்டடுக்கு மின்சார பேருந்து சற்று வேகமாகவும்,  அதிக வேகமில்லாமலும் வந்துகொண்டிருக்கிறது. அது சைக்கிளை முந்திச் செல்ல இருக்கும் அந்த மங்கிய பச்சை நிற சிறு மகிழுந்தின் வேகத்தை விடவும் மெதுவாகவே சென்றது. இரண்டில் எதுவொன்றும் நகரின் வேகக் கட்டுப்பாட்டை மீறவில்லை.

அந்த மனிதன், முதுகு வளைத்து பலம் கொண்டு மிதிக்க, அந்தச் சிறிய பச்சை நிற மகிழுந்து மறுபக்கத்தில் அவனைக் கடந்து சென்றது. இந்தப் பக்கம், பேருந்து அவனை நோக்கி விரைகிறது. அந்த மனிதன் தயங்கினாலும், பிரேக்கை அழுத்தாமல் குழந்தைக்கான இணைப்பு வண்டியுடன் அவசரமின்றி சாலையை நீள் குறுக்காய் தொடர்ந்து கடக்கிறான். பேருந்து, வேகத்தைக் குறைக்காமலே ஹாரனை மட்டும் ஒலிக்கச் செய்தது.

சுழற்காற்றின் புழுதி படிந்துவிட்டிருந்தபடியால் சாலையின் மத்தியிலிருந்த வெள்ளைக் கோட்டை அந்த மனிதன் கடக்கும் தருணம், அவனது பார்வையை எதுவும் மறைக்கவில்லை. கண்களைச் சிமிட்டாமல், அவன் நிமிர்ந்து பார்க்கிறான்; அவன் ஒரு இளஞன் அல்ல. சுமார் நாற்பது வயதிருக்கும். தலையிலிருந்த தொப்பி சற்றே பின் சரிந்திருந்ததால் தலை வழுக்கை விழுந்திருப்பது தெரிந்தது. அவனால்தன்னை நோக்கி வரும் பேருந்தை பார்க்கவும் அதன் ஹாரன் ஒலியைக் கேட்கவும் முடியும். அவன் மீண்டும் தயங்குவதுபோலவும், பிரேக்கை சற்றே அழுத்துவதுபோலவும் இருந்தாலும் சைக்கிள் குழந்தைக்கான இணைப்பு வண்டியுடன் தொடர்ந்து நீள் குறுக்காய் சாலையைத் தள்ளாடியபடி கடந்து செல்கிறது. இப்போது அந்தப் பேருந்து ஹாரனை இடைவிடாது ஒலித்தபடி நெருங்கி வருகிறது. ஆனாலும், அந்த சைக்கிள் முன்பு போலவே தொடர்ந்து செல்கிறது. இணைப்பு வண்டியின், நிழலினடியில் ரோஜா கன்னங்களோடு ஒரு மூன்றோ அல்லது நான்கு வயதோகூட நிறைந்திராத ஒரு குழந்தை உட்கார்ந்திருக்கிறது. திடுமென, அங்கே அழுந்தும் பிரேக்குகளின்  கிரீச்சிடல். ஹாரனின் ஓசை மேலும் மேலும் அதிகரிக்க,பேருந்து நெருங்கிக்கொண்டிருக்கிறது.

சைக்கிளின் முன் சக்கரம், நீள் குறுக்காய் பேருந்தை நோக்கி மெதுவாய் செல்ல, ஹாரன் சத்தம் அதிகரித்தபடி பிரேக்கின் கிரீச்சிடும் ஓசை அலறலாக மாறியது. பேருந்து வேகத்தைக் குறைத்திருந்தாலும், அதன் முகப்பு முன்னகர்ந்து, ஒரு சுவரைப்போல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. பேருந்தும் சைக்கிளும் மோதவிருக்கும் தருணத்தில், சாலையின் இந்தப் பக்கமிருக்கும் நடைபாதையில் ஒரு பெண்மணி அலறத் தொடங்குகிறாள்.

பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் அசைவின்றி ஒருசேர பார்க்கிறார்கள். சைக்கிளின் முன் சக்கரம்,பேருந்தின் முகப்பை கடந்துவிட, அந்த மனிதன் சைக்கிளின் கால்மிதியை வேகமாக மிதிக்கத் தொடங்குகிறான் – ஒருவேளை அவன் கடந்துவிடுவான் – ஆனால், அவன் கைநீட்டி குழந்தை இணைப்பு வண்டியின் சிவப்பு நீல நிழல் துணியை கீழிறக்குவதுபோல் தொட முயல்கிறான். அவன் கை நிழல் துணியைத் தொட, அந்த வண்டி ஒத்தை சக்கரத்தில் குதித்தபடி பறந்து போகிறது. அவன் கால்கள் சிக்கிவிட, கைகளை மேல் தூக்கியபடி, பின்னால் சரிந்து சைக்கிளிலிருந்து விழுகிறான். ஹாரன்களின் அலறலும் பிரேக்குகளின் கிரீச்சிடலும் பெண்களின் கூக்குரலும் கலந்துவிட்ட அந்த களேபரத்தில், பார்வையாளர்கள் மூச்சிழுத்து சுதாரிக்கும் முன்பே, பேருந்தின் சக்கரத்தினடியில் சிக்கி, அந்த மனிதன் நசுங்குகிறான். அவன் ஓட்டி வந்த சைக்கிள், முற்றிலும் சிதைந்த நிலையில் பத்தடி தூரத்தில் சாலையோரம் தூக்கி வீசப்படுகிறது.

சாலையின் இரு பக்கமிருந்த பாதசாரிகளும் அதிர்ந்து நிற்க, சைக்கிளோட்டிகள் வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டிருக்கின்றனர். எங்கும் அமைதி நிறைந்திருக்க, வானொலி பழுது பார்க்கும் கடை வானொலியிலிருந்து வரும் மென்மையான பாடலை மட்டுமே கேட்க முடிந்தது :

நீ நினைவுகொண்டிருப்பாய்
பனிப் படலத்தில்,அந்த உடைந்த பாலத்தினடியில் நமது சந்திப்பை…

அது அநேகமாக டெங் லிஜுங்குக்குப் பிறகான ஒரு ஹாங்காங் பாடகரின் பாடல் பதிவாக இருக்கலாம். முன் சக்கரங்கள் ரத்த வெள்ளத்தில் குளித்திருக்க, அந்தப் பேருந்து நிலைகொண்டது. பேருந்தின் முகப்பிலிருந்து திரும்ப ரத்தம் அந்த உடலின் மேல் சொட்டுகிறது. அந்த உடலை முதலில் அணுகியவன் பேருந்தின் கதவைத் திறந்துகொண்டு கீழே குதித்த அதன் வாகனமோட்டிதான். பிறகுதான் சாலையின் இரு மறுங்கிலுமிருந்த மக்களும் ஓடிவர, மற்றவர்கள் சாக்கடையில் குப்புற கவிழ்ந்து கிடந்த குழந்தை வண்டியை சூழ்ந்து நிற்கின்றனர். ஒரு நடு வயதுப் பெண்மணி அந்தக் குழந்தையை வண்டியிலிருந்து எடுத்து குலுக்கிச் சோதித்தாள்.

“அது இறந்துவிட்டதா?”
“ இறந்துவிட்டது!”
“அது இறந்துவிட்டதா?”

எங்கும் அடங்கிய குரலில் பேச்சு. நிறம் வடிய, கண்கள் இறுக மூடி, அந்தக் குழந்தையின் நீல நரம்புகள் மென்மையான தோலில் தெரிய, நிறம் வடிந்து, கண்கள் இறுக மூடிக் கிடந்தது. ஆனால்,வெளிக் காயம் இருப்பதற்கான, எந்த அறிகுறியும் தென்படவில்லை.

“அவனை தப்பிக்க விடாதீர்கள்!”
“சீக்கிரம்,போலீசை அழையுங்கள்!”
“எதையும் நகர்த்த வேண்டாம்! அங்கே போக வேண்டாம்! அத்தனையையும் அது இருப்பது போலவே விட்டு விடுங்கள்!”

பல அடுக்குகளாலான ஒரு கூட்டம் பேருந்தின் முன்புறத்தை சூழுகிறது. அதில் ஒருவருக்கு மட்டுமே அந்தச் சிதைந்த சைக்கிளை தூக்கிப் பார்க்கும் ஆர்வம் இருந்தது. அவன் அதைக் கீழே வைக்கும்போது, அதன் மணி ஒலிக்கிறது.

“நான் தெளிவாகவே ஹாரனை ஒலித்து, பிரேக்கையும் போட்டேன்! எல்லோரும் பார்த்தார்கள்: அவன் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தோடே பேருந்தை நோக்கி வந்தான் – என்னை எப்படி குறை சொல்லலாம்?” விளக்கம் சொல்ல முயலும் பேருந்து ஓட்டுனரின் கரகரத்த குரல். ஆனால் எவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

“நீங்கள் எல்லோருமே சாட்சிகளாக இருக்க முடியும், நீங்கள் எல்லோருமே அதை பார்த்தீர்கள்!”

“ஒதுங்கி செல்லுங்கள்! ஒதுங்கி செல்லுங்கள் – ஒதுங்கி  செல்லுக, நீங்கள் அனைவரும்!” பெரிய தொப்பி அணிந்த ஒரு போலீஸ்காரர், கூட்டத்திலிருந்து வெளிப்படுகிறார்.

“குழந்தையின் உயிரை காப்பாற்ற நாம் விரைந்து செயல்பட வேண்டும்!சீக்கிரம் ஒரு காரை நிறுத்தி குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு போங்கள்!” ஒரு மனிதனின் குரல்.

காப்பிநிற மேலங்கி அணிந்த ஒரு இளைஞன், ஒரு கையை ஆட்டியபடி, சாலையின் நடுக் கோட்டை நோக்கி ஓடுகிறான். ஒரு சிறிய டொயோத்தா கார் ஹாரனை இடைவிடாது ஒலித்தபடி, சாலையை அடைத்து நின்ற பாதசாரிகளின் ஊடாய் கடக்க முயன்றது. அடுத்து வந்த ஒரு 130 மாடல் இலகுரக லாரி நின்றுவிடுகிறது. விபத்துக்குள்ளான அந்தப் பேருந்தின் சாளரத்துக்குள், பெண் நடத்துனருடன் பயணிகள் சச்சரவிடுகிறார்கள். இன்னுமொரு பேருந்து அதன் பின்னால் வந்து நிற்கிறது. முன்னாலிருக்கும் பேருந்தின் கதவு திறந்துகொள்ள, பயணிகள் விரைந்து வெளியேறி, அப்போதுதான் வந்திருந்த பேருந்தின் வழியை மறித்துக்கொள்கிறார்கள். உரத்தக் குரல்கள் கேட்கின்றன.

என்னால் இதை மறக்கவே முடியாது,முடியாது…

வானொலியின் பாடல் அந்த களேபரத்தில் மூழ்கிப்போகிறது.
இரத்தம் இன்னும் சொட்டிக் கொண்டிருக்கிறது.காற்றில் அதன் வாடை.

“வா…..” இறுதியில்,குழந்தையின் அடங்கிய வீறிடல்,வெடித்து வருகிறது.

“அது நல்ல அறிகுறி!”

“அது உயிருடனிருக்கிறது!”

எங்கும் மகிழ்ச்சியின் பெருமூச்சுக்கள். குழந்தையின் வீறிடல் சத்தம் பெரிதாக அதிகரிக்க மக்களும் சகஜ நிலைக்கு மீண்டு வந்திருந்தனர்: அது என்னவோ அவர்கள் விடுவிக்கப்பட்டதுபோல. பிறகு அவர்கள் அனைவரும் அந்த உடலை சூழ்ந்திருக்கும் கூட்டத்தோடு சேர்ந்துகொள்ள ஓடினார்கள்.

சைரன்களின் அலறல். ஒரு போலீஸ் வாகனம் அதன் கூரையில் நீல விளக்கொளி உமிழ்ந்தபடி வந்து சேர்ந்தது. நான்கு போலீஸ்காரர்களில் இருவர் கையில் தடியோடு விரைந்து இறங்க, கூட்டம் உடனே பின்வாங்கியது.

போக்குவரத்து நிலைகுத்திவிட, சாலையின் இரு முனைகளிலும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. குரல்களின் இடத்தை ஹாரன்களின் ஒலி பிடித்துவிட்டிருந்தது. ஒரு போலீஸ்காரர் சாலையின் நடுவுக்குச் சென்று, வெள்ளை கையுறை அணிந்த தனது கையை அசைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார்.

ஒரு போலீஸ்காரர், பின்னாலிருக்கும் பேருந்து நடத்துனரான பெண்மணியை வரும்படி உத்தரவிடுகிறார். முதலில் அவள் பல நொண்டி சாக்குகளை சொல்ல முயற்சித்து, பின் அரை மனதுடன் அந்த நடுத்தர பெண்மணியிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, 130 இலகுரக டிரக்குக்குள் ஏறினாள். ஒரு வெள்ளை கையுறை சைகை காட்டியது. அந்தக் குழந்தையின் அழுகையையும் வீறிடலையும் சுமந்துக்கொண்டு அந்த டிரக் புறப்பட்டுச் சென்றது.

தடியுடனிருந்த போலீஸ்காரர்கள் அவர்களை நோக்கி சத்தம்போட, வேடிக்கை பார்த்தவர்கள் பின்னகர்ந்து,சதுர வட்டத்தில் சிதைந்த சைக்கிளை சூழ்ந்து நிற்கின்றனர்.

பேருந்து ஓட்டுநருக்கு என்ன நிகழ்கிறதென்று சாலையின் இந்தப்புறமிருந்து பார்க்க முடிகிறது. அவன்  வியர்வையை தன் தொப்பியால் துடைத்துக்கொண்டிருந்தான். ஒரு போலீஸ்காரன் அவனை விசாரித்துக்கொண்டிருக்கிறான். அவன் தன் ஓட்டுநர் உரிமத்தை எடுக்க, அதை போலீஸ்காரன் பிடுங்கிக்கொள்கிறான். அவன் உடனே ஆட்சேபிக்கிறான்.

“நீ ஏன் சாக்குபோக்குச் சொல்கிறாய்? நீ அந்த மனிதன் மேல் வாகனத்தை செலுத்தி இருந்தால், அது அவன்மேல் வாகனத்தை செலுத்தியதுதான்!” சைக்கிளை தள்ளிச் சென்ற ஒரு இளைஞன் கூச்சலிட்டான்.

நீள கையுரை அணிந்திருந்த நடத்துனர் பெண்மணி, பேருந்திலிருந்து வெளிவந்து, அந்த இளஞனைக் கண்டிக்கிறாள். “அந்த மனிதன் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றான். ஹாரன் அடிக்கப்பட்டு பிரேக்கும் போடப்பட்டது. ஆனால், அவன் வழிவிடவில்லை. தானாகவே பேருந்தின் கீழ் போனான்.”

“அந்த மனிதன் சாலையின் நடுவில் ஒரு குழந்தையுடன் இருந்தான். பட்டப்பகல். எனவே ஓட்டுநர் கட்டாயம் அவனை பார்த்திருக்க வேண்டும்!” யாரோ ஒருவர் கூட்டத்திலிருந்து கோபமாய் குரல் கொடுக்கிறார்.

“இவனைப் போன்ற ஓட்டுநர்களுக்கு ஒருவன் மேல் வாகனத்தை ஏற்றுவது என்பது பொருட்படுத்தத்தக்க விசயமே அல்ல? இவனது உயிரைக் கொண்டு ஈடுசெய்யப்போவதில்லை.” பகடியுடன் சொல்லப்பட்டது.

“என்ன ஒரு சோகம்! அந்தக் குழந்தை இல்லாமலிருந்திருந்தால், அவன் எப்பொழுதோ சாலையைக் கடந்திருப்பான்!”

“ஏதேனும் நம்பிக்கை இருக்கிறதா?”desmore-street-accident-oil-on-hardboard-1959-221-9-x-91-5cm

“மூளை வெளி வந்துவிட்டது?”

“ எனக்கு கேட்டது… அந்த ‘ப்ளோப்’  -“

“உனக்கு கேட்டதா?”

“ஆமாம்,’ப்ளோப்’ “

“இந்தப் பேச்சை நிறுத்துங்கள்!”

“வாழ்க்கை அப்படித்தான், ஒரு மனிதன் திடுமென சாக முடியும்…”

“அவன் அழுகிறான்.”

“யார்?”

“அந்த ஓட்டுநர்.”

அந்த ஓட்டுநர், முதுகு வளைந்து, தலை கவிழ்ந்து உட்கார்ந்து, கண்களைத் தன் தொப்பியால் மறைத்திருக்கிறான்.

“அவன் அதை வேண்டுமென்றே செய்யவில்லை….”

“அவனோடு ஒரு குழந்தை இருந்தது. குழந்தைக்கு என்ன ஆனது?குழந்தைக்கு என்ன ஆனது?” அப்போதுதான் அங்கே வந்து சேர்ந்திருந்த ஒருவன் கேட்டான்.

“அந்த குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அது பெரிய அதிர்ஸ்டசாலி.”

“அதிர்ஸ்டவசமாக அந்த குழந்தைக் காப்பாற்றப்பட்டது.”

“அந்த மனிதன் கொல்லப்பட்டான்!”

“அவர்கள் என்ன தந்தையும் மகளுமா?”

“அவன் எதற்கு மேலும் ஒரு வண்டியை சைக்கிளோடு இணைக்க வேண்டும்? ஒரு மனிதன் தனியாய் சைக்கிளில் பயணித்து,விபத்தில் சிக்காமல் இருப்பதே பெரிய காரியம்.”

“வீட்டுக்கு கூட்டிப் போக. அவன் அப்போதுதான் அந்தக் குழந்தையை பாலர் பள்ளியிலிருந்து அழைத்து வந்திருக்கிறான்.”

“பாலர் பள்ளிகள் மிக மோசம். அவை ஒரு முழு நாளும் அங்கே குழந்தைகளை அங்கே விட்டு வைத்திருக்க அனுமதிப்பதில்லை.”

“அப்படி ஒரு பள்ளி கிடைத்தால் நீங்கள் அதிர்ஸ்டசாலி.”

“அங்கே பார்க்க என்ன இருக்கிறது? இனிமேல் நீ பார்க்காமல் சாலையைக் கடந்தால்…” ஒரு பெரிய கை, கூட்டத்திற்குள் நுழைய முயலும் ஒரு குழந்தையை இழுத்துப் போகிறது.
அந்த ஹாங்காங் பாடகர் பாடுவதை நிறுத்தியிருந்தார். மக்கள் அந்த வானொலி பழுது பார்க்கும் கடை வாசலில் குழுமியிருந்தனர்.

சுழலும் சிவப்பு விளக்குகள். ஆம்புலன்ஸ் வண்டி வந்து சேர்ந்திருந்தது. வெள்ளை உடை அணிந்த மருத்துவ உதவியாளர்கள், பிணத்தை ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கொண்டு செல்ல, கடை வாசல்களில் நின்ற மக்கள், கால்விரல் நுனிகளில் நின்றனர். அருகிலிருந்த ஒரு சிறு உணவகத்திலிருந்து ஒரு தடித்த சமையற்காரனும் வேடிக்கை பார்க்க வந்து நின்றான்.

“என்ன நடந்தது? விபத்து ஏதும் நடந்ததா? யாரேனும் இறந்தார்களா?”

“அப்பனும் மகனும். அதில் ஒருவர் இறந்துவிட்டார்.”

“இறந்தது யார்?”

“அந்த வயதானவர்!”

“அந்த மகன்?”

“அவனுக்கு ஒன்றுமில்லை.”

“அதிர்ச்சியாக உள்ளது. அவன் ஏன் தந்தையை இழுத்து காப்பாற்றவில்லை?”

“அந்த தந்தைதான் மகனை தள்ளிவிட்டு ஆபத்திலிருந்து காப்பாற்றினார்!”

“ஒவ்வொரு தலைமுறையும் மோசமாகிக்கொண்டிருக்கிறது. அந்த மகனை வளர்ப்பதில் அவன் தன் காலத்தை வீணாக்கியிருக்கிறான்!”

“என்ன நடந்தது என்று தெரியாவிட்டால், கதை ஜோடிக்காதே!”

“யார் கதை ஜோடிப்பது?”

“நான் உன்னோடு வாதம் செய்ய முயலவில்லை.”

“அந்தக் குழந்தை தூக்கிச் செல்லப்பட்டது.”

“அங்கு ஒரு குழந்தையும் இருந்ததா?”
மற்றவர்களும் வந்துவிட்டிருந்தார்கள்.

“இடித்து தள்ளாமல் இருக்கிறாயா?”

“நான் இடித்து தள்ளினேனா?”

“அங்கே பார்க்க என்ன இருக்கிறது ? நகருங்கள். எல்லோரும் நகருங்கள்!”
கூட்டத்தின் வெளி வட்டத்தில், மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிவப்பு கைப் பட்டை அணிந்த போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் வந்துவிட்டிருந்தனர். அவர்கள் போலீசாரைவிட முரடர்களாக இருந்தார்கள்.

போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட அந்த ஓட்டுநர் திரும்பி போராட முயல, வாகனத்தின் கதவு ஓசையுடன் சாத்தப்படுகிறது.மக்கள் கலைந்து நடக்கத் தொடங்க, மற்றவர்கள் தங்கள் சைக்கிளில் ஏறி புறப்பட்டுச் செல்கின்றனர். வேடிக்கை பார்ப்பவர்கள் குறைய, மக்கள் மேலும் வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். அந்த இரண்டாவது பேருந்து, நீண்ட வரிசை கார்கள், வேன்கள், ஜீப்புகள், பெரிய கார்கள் பின்தொடர, மெல்ல சாலையின் இந்தப் பக்கம் சாக்கடையில் கிழிந்து கிடந்த சிவப்பு நீல நிழல் துணி கொண்ட குழந்தை வண்டியைக் கடந்து போனது.

கடை வாசல்களில் நின்று கொண்டிருந்த மக்களில் பலரும் கடைகளுக்குள்ளோ, அல்லது அங்கிருந்தோ அகன்று விட்டிருக்க நீண்ட வரிசை வாகனங்களும் கடந்து சென்றுவிட்டிருந்தன. சாலையின் நடுவே சிறு கூட்டமாக மாறிவிட்டிருந்தவர்கள் மத்தியில் இரு போலீஸ்காரர்கள் அளவையினால் அளந்துகொண்டிருக்க, ஒருவர் அதனை ஒரு சிறு குறிப்பு புத்தகத்தில் குறித்துக்கொண்டிருந்தார். பேருந்தின் சக்கரங்களுக்கடியில் ரத்தம் உறையத் தொடங்கி கறுமை கொண்டிருந்தது. கதவுகள் திறந்து கிடந்த அந்தப் பேருந்தில், ஒரு சாளரத்தின் அருகில் உட்கார்ந்திருந்த பெண் நடத்துநர் சாலையின் இந்தப் பக்கத்தை வெறித்தபடி இருந்தார்.

சாலையின் மறுபக்கம் வந்துகொண்டிருக்கும் ஒரு பேருந்திலிருக்கும் முகங்கள், சாளரத்தின் வழி வெளியில் பார்த்தபடி இருக்க, சிலர் தலையை வெளியே நீட்டிக்கொண்டிருந்தனர். மக்களுக்கு வேலை முடிந்துவிட்டிருந்தது: உச்ச போக்குவரத்து நெருக்கடி  நேரம். பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் அதிகரித்திருந்தனர். ஆனால், போலீசாரும் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகளும் போட்ட சத்தம், மக்கள் சாலையின் நடுவுக்குச் செல்வதை தடுத்தது.

“விபத்து ஏதும் நடந்ததா?”

“யாரும் கொல்லப்பட்டார்களா?”

“நிச்சயம் இருக்கும்; அந்த ரத்தத்தை பாருங்கள்.”

“முந்தாநாள் ஜியன்காங் சாலையில் ஒரு விபத்து நடந்தது. பதினாறு வயது பையன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் – ஆனால் அவர்களால் அவனை காப்பாற்ற முடியவில்லை – அவன் ஒரே மகனென்று சொன்னார்கள்.”

“இப்பொழுதெல்லாம் யாருடைய குடும்பம் ஒரே மகன் இல்லாமல் இருக்கிறது?”

“அந்த பெற்றோர் எப்படி சமாளிப்பார்கள்?”

“போக்குவரத்து மேலாண்மை மேம்படுத்தப்படவில்லையென்றால், இன்னும் அதிகமான விபத்துக்கள் நடக்கும்!”

“இதைவிடவும் குறைய வாய்ப்பில்லை.”

“ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து என் ஜிமிங் வீடு வரும்வரை நான் பதட்டத்தில் இருப்பேன்…”

“மகன் என்பதால் உங்கள் நிலைமை பரவாயில்லை – பெண் பிள்ளைகளானால் பெற்றோருக்கு கூடுதல் பதட்டம்.”

“பார், பார், அவர்கள் படம் பிடிக்கிறார்கள்.”

“பிடித்தாலென்ன?அது உதவப்போவதில்லை.”

“அவன் வேண்டுமென்றே அந்த மனிதன் மேல் பேருந்தை ஏற்றினானா?”

“யாருக்கு தெரியும்?”

“அந்தக் குழந்தை வண்டி இணைக்கப்பட்டிருக்காது. இல்லையெனில் அதுவும் நிச்சயமாக மோதப்பட்டிருக்கும்.”

“நான் இந்த வழியாய் போய்க்கொண்டிருந்தேன்.”

“சிலர் மிக ஆக்ரோசமாக ,வெறி பிடித்ததுபோல் வண்டி ஓட்டுகிறார்கள். நாம் ஒதுங்கிக்கொள்ளாவிட்டால், அவர்கள் நமக்கு வழி விடமாட்டார்கள்!”

“சிலர் தங்கள் ஏமாற்றங்களை மக்களை கொன்று சரிசெய்துகொள்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பலியாகலாம்.”

“இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது கடினம். இதெல்லாம் விதியால் நிர்ணயிக்கப்படுகிறது. எனது பழைய கிராமத்தில் ஒரு தச்சன் இருந்தான். அவன் வேலையில் கெட்டிக்காரனாக இருந்தான். ஆனால், குடிப்பதில் விருப்பமுடையவனாக இருந்தான். ஒருமுறை அவன் ஒருவருக்காக ஒரு வீடு கட்டிக்கொண்டிருந்தான். இரவில், நன்கு குடித்துவிட்டு வீடு திரும்பும்போது, காலிடறி விழுந்து, கல்லில் மோதி மண்டை பிளந்துகொண்டது…”

“ஏதோ சில காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக எனது கண்ணிமை துடித்துக்கொண்டிருக்கிறது.”

“எந்த ஒன்று?”

“நடக்கும்போது, நீ உன் எண்ணங்களில் எப்போதும் ஆழ்ந்துவிடக் கூடாது. சில தடவைகள் நான் கவனித்துள்ளேன்…”

“எதுவும் நடந்ததில்லை.”

“எதுவும் நடந்திருந்தால், அது காலம் கடந்ததாக இருந்திருக்கும். அதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது.”

“நிறுத்து! அவர்கள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்…”
அந்தக் காதலர்கள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் கைகளை இறுகப் பற்றியபடி,கடந்து சென்றனர்.

சி.மு 04

GAO XINGJIAN

படம் பிடித்தவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டிருந்தனர். ஒரு போலீஸ்காரன் மண்ணை  அள்ளி ரத்தத் திட்டில் கொட்டினான். காற்று முற்றிலும் அடங்கிவிட்டிருக்க, இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. பேருந்தின் சாளரத்தின் பக்கம் உட்கார்ந்திருந்த பெண் நடத்துனர், விளக்கை போட்டு, அன்றைய வசூலை எண்ணிக்கொண்டிருக்கிறாள். ஒரு போலீஸ்காரன் நசுங்கிய அந்த சைக்கிளை தோளில் சுமந்து, போலீஸ் வாகனத்துக்கு கொண்டு போக, சிவப்பு கைப்பட்டை அணிந்த இருவர், சாக்கடையிலிருந்து அந்தக் குழந்தை வண்டியை எடுத்தனர். அந்த இரண்டையும் வண்டிக்குள் ஏற்றிக்கொண்டு, ஒன்றாக புறப்பட்டுச் சென்றனர்.

இரவு உணவுக்கான நேரம். அந்தப் பேருந்து பெண் நடத்துநர், கதவினருலில் நின்று, அமைதியின்றி சுற்றிலும் பார்த்தவாறு, பேருந்து நிறுவனம் அனுப்பிவைக்கப்போகும் மாற்று ஓட்டுநருக்காக காத்திருக்கிறாள். ஏதோவொரு காரணத்திற்காக நடு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தக் காலியான பேருந்தை, வழியில் செல்வோர்  அவ்வப்போது நோட்டமிட்டபடி செல்கின்றனர். இருள் சூழ்ந்திருக்க, பார்க்க முடியாமல் ஆகிவிட்டிருந்த மண் மூடி மறைந்திருந்த அந்த ரத்தத் திட்டை யாரும் கவனிக்கவில்லை.

சிறுபொழுதில், தெருவிளக்குகள் எரியத் தொடங்கின. ஒன்றுமே நடந்திராததுபோல், வாகனங்கள் மீண்டும் முடிவற்று விரையத் தொடங்கின. நடுநிசி நெருங்க ஆள் நடமாட்டம் என்பது இல்லாமலாகியிருந்தது. ‘உங்கள் பாதுகாப்புக்கும் பிறரின் பாதுகாப்புக்கும் தயவுசெய்து சாலை விதிகளை கடைபிடியுங்கள்’ என்கிற பதாகை தாங்கிய இரும்பு கிராதியின் பக்கம் நின்று சாலை சமிக்ஞையொலியைச் சிந்தும், சற்றே தொலைவில் இருந்த முச்சந்தி முனையிலிருந்து, சாலை சுத்திகரிப்பு வாகனமொன்று, அவ்வழியே வந்தது. அந்த விபத்து நடந்த இடத்தில் நின்று, நீர் பாய்ச்சி, எஞ்சியிருந்த ரத்தத் துளிகளையும் சுத்தமாக அகற்றியது.

அந்தச் சாலைச் சுத்திகரிப்பாளர்களுக்கு,சில மணி நேரங்களுக்கு  முன்பு அங்கொரு விபத்து நடந்தது என்பதோ, அந்த துரதிர்ஸ்ட மனிதன், அந்த இடத்தில்தான் உயிர் விட்டான் என்பதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பலியான அவன் யார்? சில லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரில், அவனது குடும்பத்தாரும் மேலும் சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவனை அறிந்திருப்பர். அவன் அடையாளப் பத்திரங்கள் எதுவும் உடன் வைத்திருக்காவிட்டால், அவர்களும்கூட இந்த விபத்து குறித்து இன்னும் அறிந்திருக்கமாட்டார்கள். அந்த மனிதன் ஒருவேளை அந்தக் குழந்தையின் தந்தையாக இருக்கலாம். அந்தக் குழந்தை அமைதியடைந்த பின் ஒருவேளை தன் தகப்பன் பெயரைச் சொல்லலாம்.

அப்படி அந்தக் குழந்தை அவனுடையதாக இருப்பின், அவனுக்கு நிச்சயமாக மனைவி இருப்பாள். அவன் அவள் செய்திருக்க வேண்டிய வேலையைச் செய்தான் என்பதால் அவன் ஒரு நல்ல தகப்பனாகவும் நல்ல கணவனாகவும் இருந்துள்ளான். காரணம், அவன் நிச்சயமாக அந்தக் குழந்தையை மிகவும் நேசித்துள்ளான். அநேகமாக அவன் மனைவியையும் நேசித்துள்ளான். ஆனால், அவன் மனைவி அவனை நேசித்தாளா?

அவனை அவள் நேசித்திருந்தால், பாலர் பள்ளியிலிருந்து அந்தக் குழந்தையை அவள்தானே அழைத்துச் சென்றிருக்க வேண்டும்? அவன் ஏன் அழைத்துச் சென்றான்? ஒருவேளை, அவனது வாழ்வு துயரம் மிக்கதாக இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் அவன் ஏன் நிலைகுலைந்தவனாக கவனம் சிதறி இருந்தான். அதுவொரு சுயத்தோல்வியாக இருக்கலாம்: அவன் எப்போதுமே முடிவெடுக்க இயலாதவனா? அநேகமாக, ஏதோவொன்று அவனை தொந்தரவு செய்தபடி இருந்திருக்கிறது. தீர்வுகான இயலாத ஒன்று. இந்த மிகப் பெரிய அவலத்தையும் கடக்க இயலாதபடி அவனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

அவன் குழந்தையைப் பாலர் பள்ளியிலிருந்து கூட்டி வரும்போது சற்று வேகமாகவோ அல்லது மெதுவாகவோ சைக்கிளை மிதித்திருந்தாலோ, பாலர் பள்ளியில் அந்தப் பெண்மணி அவன் குழந்தை குறித்து அவனுடன் சற்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்திருந்தாலோ, அல்லது வரும் வழியில் ஒரு நண்பன் நிறுத்தி பேசிக்கொண்டிருந்திருந்தாலோ அல்லது அவன் சற்று முந்தியோ பிந்தியோ கிளம்பியிருந்தாலோ இந்தக் கோரத்தை தவிர்த்திருக்கலாம்.

அது நடப்பதற்கு முன் அவனுக்கு ஏதும் உள்ளுணர்வில் சமிக்ஞைகள் தென்படவில்லையா? இந்த விபத்தை எதிர்கொண்ட தருணத்தில் அவன் என்ன நினைத்துக் கொண்டிருந்தான்? அநேகமாக, அது குறித்து எண்ணிப் பார்க்க அவனுக்கு அவகாசம் இருந்திருக்காது. அவன் எதிர்கொள்ளப்போகும் அந்த கொடூரத் தருணத்தை புரிந்துகொள்ள அவகாசம் இருந்திருக்காது. கோடியில் ஒருவனாக, ஒரு மணல் பருக்கைபோல இருந்தாலும், இறப்பதற்கு முன், அவன் நிச்சயமாக அந்தக் குழந்தையை நினைத்திருப்பான். ஒருவேளை அது அவன் குழந்தையாக இருப்பின், அதற்காக அவன் தன்னை பலி கொடுத்தது ஒரு தியாகச் செயலல்லவா? அநேகமாக, அது முற்றிலும் ஒரு தியாகச் செயலாக இல்லாமல், ஒரு தன்னியல்புச் செயலாகவும் இருக்கலாம் – ஒரு தந்தையாக இருப்பதன் தன்னியல்பு. மக்கள், தாயின் தன்னியல்பு குறித்து மட்டுமே பேசுகின்றனர். ஆனால், அவர்களில் பிறந்த பச்சிளங் குழந்தையை கைவிட்டுச் செல்வோர் உண்டு.

நான் தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், வாழ்க்கை என்பது தத்துவம் அல்ல, வாழ்க்கை குறித்த அறிதலிலிருந்து தத்துவத்தைப் பெறலாம் என்றாலும்.

சாலை விபத்துக்கள், நாளிதழ்களுக்கு ஒரு பேசுபொருளாகலாம். இலக்கியத்திற்கான கச்சாப் பொருளாகி, கற்பனையால் வளர்த்தெடுக்கப்பட்டு நெகிழ வைக்கும் ஒரு  விவரிப்பும் ஆகலாம். அப்போது அது ஒரு படைப்பாகிவிடும். ஆனால், இங்கே விவரிக்கப்பட்டிருப்பது, அந்த ஒரு சாலை விபத்தின் செயல்பாட்டுத் தொகுப்பு (process)மட்டுமே. டெஸ்ஹெங் அவன்யுவின் மத்தியப் பகுதியில், வானொலி பழுது பார்க்கும் கடையின் முன்பு, ஐந்து மணிக்கு நடந்த ஒரு விபத்து.

மூலம் : GAO XINGJIAN (Winner of the nobel prize for literature)
மொழிப்பெயர்ப்பு : சீ.முத்துசாமி

2 comments for “அந்த விபத்து

  1. சீனிவாசன்
    August 14, 2018 at 11:27 pm

    சீ.முத்துசாமி அவர்களுக்கு மொழிப்பெயர்ப்பு இத்தனை பிரமாதமாய் வரும் என இந்தக் கதையை வாசித்த போது அறிந்தேன். இந்தக் கதையை ஆங்கிலத்தில் வாசித்துள்ள அடிப்படையில் அற்புதமான மொழிநடையில் செதுக்கியுள்ளார். எழுவாய் பயனிலையில் கொஞ்சம் கவனம் வைக்கலாம். அவருக்கு வாழ்த்துகள்.

  2. அறிவழகன் கிருட்டிணர்
    August 14, 2018 at 11:29 pm

    நிகழ்காலம் எவ்வளவு அர்த்தமற்றது என சொல்லப்பட்ட கதைதான். தமிழில் இதற்கு முன் அசோகமித்திரன் முதல் எஸ்.ரா வரை தொட்ட இடம்தான். ஆனாலும் சீ.முத்துசாமி மொழியில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. அவர் தொடர்ந்து மொழிப்பெயர்ப்பு பணியினை தொடர வேண்டும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...