“முகநூல் புகழை அதை விரும்புபவர்களே வைத்துக்கொள்ளட்டும்” – சு.வேணுகோபால்

003இணையம் வழி பெறப்பட்ட இந்த நேர்காணல் சு.வேணுகோபாலின் வாசகர் கேள்வி பதிலின் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. நான்கு மாதங்கள் தொடர்ந்து வல்லினம் வாசகர்களுக்கு அவர் வழங்கிய பதில்களைத் தொடர்ந்து இந்த நேர்காணல் அவர் ஆளுமை குறித்த விரிவான அறிமுகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நம்புகிறோம். நவீனத் தமிழ் இலக்கிய உலகில்  வலுவான படைப்புகள் மூலம் கவனம் பெற்றுள்ள இவரது சிந்தனைகளை இந்த தொடர் உரையாடல் வழி வெளிகொணர முடிந்ததில் வல்லினம் மகிழ்கிறது.

உங்கள் குடும்பம், பெற்றோர்கள், ஊர் பற்றி சொல்லுங்கள்.

சு.வேணுகோபால்: அம்மா, எங்கள் கிராமமான அம்மாபட்டியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர். மனக்கணக்கில் நல்ல ஞானம் உள்ளவர். எனக்கு கணக்கு வராது. அப்பா ஒன்றாம் வகுப்பிற்கு ஒருவாரம் சென்றாராம். பாடத்தை கவனிக்காமல் வகுப்பில் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆசிரியர் தலையில் பிரம்பால் அடித்திருக்கிறார். அன்று மதியத்திற்கு மேல் பள்ளிக்குச் செல்லவில்லை. மறுநாள் ஒன்றாம் வகுப்பின் அறையின் ஜன்னல் திறந்திருக்கிறது. அப்பாவைத் தலையில் தட்டிய ஆசிரியர் அந்த வகுப்புக்கு இரண்டாவது மணியோ, மூன்றாவது மணியோ வந்திருக்கிறார். அதுவரை ஜன்னலுக்கு வெளியே அப்பா எருக்கஞ்செடி மறைவில் அமர்ந்திருக்கிறார். ஆசிரியர் வகுப்பிற்கு வந்தபின் ஜன்னலுக்கு நேராக ஒரு தோதான இடத்தில் ஆசிரியர் நிற்கும்வரை காத்திருக்கிறார். அப்படி வந்ததும் அதுவரை சாணிகூடையோடு காத்திருந்த என் அப்பா சாணியை அள்ளி வீசியிருக்கிறார். முகத்திலும் கழுத்திலும் சப்பெனெ அப்பி வழிய வழிய எறிந்திருக்கிறார். பின் அப்பா பள்ளிக்கூடம் பக்கம் தலைவைத்து படுத்ததில்லை. இதைகூட அப்பா எங்களிடம் சொன்னதில்லை. அம்மாதான் அப்பா கல்வி கற்றமுறையை ஒரு நாள் சொல்லி சிரித்தார். ஆனால் அப்பா செய்தித்தாளை வாசிக்க முடிந்ததைப் பார்த்திருக்கிறேன்.

அம்மா நன்றாகப் படிக்கிற மாணவி. அம்மாவிற்குப் படிப்பில் இருந்த ஆர்வத்தைப் பார்த்து அவரது ஆசிரியர் மேல் வகுப்பிற்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார். தாத்தாதான் பெண்பிள்ளையைப் படிப்பிற்காக வெளியூருக்கெல்லாம் அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டாராம்.

என் இரு தாத்தாக்களின் குடும்பங்களும் விவசாயக் குடும்பம்தான். எனவே தாத்தா வழியாக பூர்வீகபூமி அப்பாவுக்கு வந்தது. அம்மா அப்பா இருவரும் கடுமையான உழைப்பாளிகள். அப்பா விடிந்தும் விடியாத பொழுதிலேயே கமலையில் மாடுகளைப்பூட்டி நீர் இறைக்க ஆரம்பித்துவிடுவார் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார் அம்மா. ஊரிலேயே முதல் கமலை ஒலி எங்கள் தோட்டத்திலிருந்துதான் கேட்குமாம். அப்பாவிற்குக் கிடைத்த பூர்வீக பூமியைவிட ஐந்து மடங்கு நிலத்தை அம்மாவும் அப்பாவும் உழைத்து சேர்த்தார்கள். ஓரளவு நான் பிறக்கும் முன்பே இது நிகழ்ந்துவிட்டது.

அம்மாவிற்கு பதினாறு வயதில் திருமணம். அப்பாவுக்கு வயது 19. அம்மாவிற்கு எட்டு குழந்கைள். முதல் மூன்று குழந்தைகள் இறந்துவிட்டன. இதில் மூன்றாவது ஒரு கரு கலைந்ததையும் சேர்த்துச் சொல்வார். இரண்டாவது குழந்தை இரண்டாண்டு இருந்திருக்கிறது. இறந்த அக்குழந்தையைப் புதைத்த சங்கம்புதர் வழி தோட்டத்திற்குப் போகும் போதெல்லாம் ‘இந்த இடம்தான்’ என்று சொல்லி அழுவார். அதற்கு அடுத்து பிறந்தவர்கள் நாங்கள் ஐந்துபேர். அதில் மூத்தவர் அக்கா. நான் கடைக்குட்டி. என் அக்காவிற்கும் எனக்கும் 14 வயது வித்தியாசம். மூன்று அண்ணன்கள். என் பாலபருவத்தில் விவசாயம் உச்சத்தில் இருந்தது. நான் வளரவளர விவசாயத்தின் சரிவைத்தான் காணமுடிந்தது. சரிவு என்று உணராமலே நேசித்து உழைத்தோம். சிறுவயதில் என்னைக் குளிக்கவைக்க பெரும்பாடாகிவிடும் என்று அம்மா சொல்லியிருக்கிறார். குளிக்க அழைத்தால் ஓடிவிடுவேனாம். வேலைநெருக்கடியில் சிக்கிய அன்றுதான் குளிக்க வைத்தார்களாம். இரண்டாம் வகுப்பு போகும்வரை முறையாக காலையில் குளித்தது கிடையாது என்பார். அப்பாவிற்கு இளைப்பு நோய் இருந்திருக்கிறது. தண்ணி அடித்தால் இளைப்பு நின்றுவிடும் என்று யாரோ சொல்ல குடிக்க ஆரம்பித்தார். அது பெருங்குடியில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. குடித்து விட்டு வரும் நாட்களில் சந்தோசப்பட்டவன் நான் ஒருவனாகத்தான் இருக்கும். அப்பாவின் பைஜாமா பாக்கட்டில் கையை விட்டால் சில்லறையாக இருக்கும். அப்படியே அள்ளிக்கொள்வேன். அப்பாவோ அம்மாவோ என்னை அடித்ததே இல்லை. யாரையும் அடித்து வளர்க்கவில்லை.

எங்கள் கிராமத்தில் இரண்டாவது ‘டிகிரி’ படித்த பெண் என் அக்கா. சொந்தபந்தங்களின் எதிர்ப்பை மீறி என் அக்காவை கல்லூரிக்குக் கொண்டு சேர்த்தார்கள். அரசு உயர்பதவியில் இருந்தவர்கள் அக்காவை பெண்கேட்டு வந்தபோதும், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவருக்கே மணம்முடித்துத் தந்தார். அக்காவிற்குத் திருமணம் ஆகும்போது என் வயது 11. ஐந்தாம் வகுப்புவரை அக்காதான் வீட்டில் பாடங்கள் கற்றுத்தந்தார். என் பெற்றோர் எல்லோரையும் படிக்கவைக்க ஆசைப்பட்டார்கள். நான் தவிர மற்றவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பி.யூ.சி., டிகிரி என்றளவில் கல்வியை முடித்துக்கொண்டார்கள். அண்ணன்கள் விவசாயம்தான் பார்க்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் படித்து மேலே வந்திருக்கிறார்கள்.

உங்கள் கல்வி பற்றி சொல்லுங்கள்

சு.வேணுகோபால்: ஐந்தாம் வகுப்புவரை உள்ளூரிலும், பத்தாம் வகுப்புவரை ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் (+2)மேல்நிலை வகுப்பை 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். எங்கள் ஊருக்கு பேருந்து வசதியில்லாததால் நடந்துசென்றுதான் அனைவரும் படித்தோம். பள்ளிக்குச் செல்லும் காலத்தில் இருபுறமும் விவசாயம் செழித்தோங்கி இருந்தது.

நான் இளங்கலை படிக்கும்போதே அண்ணன்கள் பாகத்தைப் பிரித்துக் கொண்டார்கள். கூட்டுக்குடும்பம் கலைந்தது. எனவே நான் படித்துக் கொண்டே விவசாயத்தையும் பார்க்கவேண்டிய சூழல் உருவானது. எம்.பில். படித்துவிட்டு எட்டாண்டுகள் முழுநேர விவசாயியாகவே வாழ்ந்தேன். அதில்பட்ட கடனை அடைக்க வேலைக்குச் சென்றேன்.

எனக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் முதலாமாண்டு பொறியியல் கல்லூரிக்குப் போகிறான். இளையவன் +2 படிக்கிறான். என் மனைவியின் குடும்பமும் விவசாயம்தான். அவருடன் பிறந்தவர்கள் விவசாயம் பார்க்கிறார்கள். என்னைவிட விவசாயத்தில் அதிகம் பாடுபட்டவர் என் மனைவி என்றும் சொல்லலாம். வேலையின் பொருட்டு கோவைக்கு வந்தேன். பருத்திவிளைந்த தோட்டமெல்லாம் வானம் பார்த்த பூமியாக ஊரில் கிடக்கிறது.

சு. வேணுகோபால் எழுத்தாளராவதற்கு முன் என்னவாக இருந்தார்?

சு.வேணுகோபால்: விவசாயவீட்டுப் பிள்ளையாக இருந்தேன். செம்மறிகிடாகுட்டிகள் வாங்கி வளர்ப்பதும் பசுக்களை மேய்ப்பதும் என் பிரியமான செயல்களாக இருந்தன. வியாபாரிகள் 40, 50 வளர்ப்பு குட்டிகளை கிராமத்திற்கு ஓட்டிவருவார்கள். வாங்க விரும்பும் பெண்கள், ஆண்கள் எந்த குட்டி நன்றாக வளரும் என்று தேர்ந்தெடுத்துத்தரும்படி அழைத்துச் சொல்வார்கள். கைகால் ஊக்கம், நெஞ்சு உரம், மூக்குவளைவு, முளைவிடும் கொம்பின் அம்சம், தோல்சன்னம், சுழி, பார்த்து இதை இதை வாங்குங்கள் என்பேன். வாங்குவார்கள். எங்களுக்கு நான்கு திசைகளிலும் தோட்டங்கள் இருந்ததால் மேய்ச்சல் தொழில்கூட காவல்காப்பதுபோல இரண்டற கலந்து இருந்தது. அறுவடைக் காலங்களில் நானும் என் மூத்த அண்ணனும் இரவுகாவலுக்குச் செல்வது வழக்கம். பனிக்காலங்களில் கம்பந்தாள்களையோ, ராகித்தாள்களையோ சிறுகுடில்போல செய்து உள்ளே படுத்துக்கொள்வோம். அண்ணன் பல விசயங்களைச் சொல்வார்.

அண்ணனுக்கு காங்கேயம் காளைகளை வைத்திருப்பதில் அளவற்ற பிரியம். காளைகள் வாங்க தாராபுரம், வெள்ளகோயில் பகுதிக்கு அண்ணனுடன் செல்வேன். அந்தக் காலத்தில் மாடுகளை ஓட்டிக் கொண்டுதான் வரவேண்டும். மேட்டடோர் வண்டிகள் இல்லாத காலம். அண்ணா விலைக்கு வாங்கிய மாடுகளை வத்தலக்குண்டு தாண்டி ஓட்டிக்கொண்டுவருவார். நான் அண்ணன் சொன்ன கிராமத்தில் இறங்கி எதிர்முகமாக நடப்பேன். பெரும்பாலும் நான் வருவதற்கு முன்னமே அண்ணன் மாடுகள் அருகில் படுத்திப்பது தெரியும். நான் போகும் தூரத்தைவிட அண்ணன் இரு மடங்கு தூரத்தை இரண்டுநாட்கள் அங்கங்கு தங்கி ஓட்டிக் கொண்டுவந்திருப்பார். அழுக்கு சட்டை, அழுக்கு வேட்டியைப் பார்க்க பாவமாக இருக்கும். அதே சமயம் அண்ணனையும் வாங்கிவந்திருக்கும் காங்கேயம் காளைகளைப் பார்த்ததும் மனம் குதூகலமடையும். அது விளக்க முடியாத மகிழ்ச்சி. அண்ணனை பேருந்தில் ஏற்றிவிட்டு மாடுகளை ஓட்டத்தொடங்குவேன். வழியெல்லாம் காளைகள் என்ன விலைக்கு வாங்கியது என்று கேட்பார்கள். அண்ணன் சொன்ன விலையைச் சொல்வேன். பெரும்பாலும் வாங்கிய விலையைவிட மூவாயிரம் அதிகம் இருக்கும். முன் இரவு ஒன்பது மணிக்கோ பத்து மணிக்கோ 45 கிலோமீட்டரை கடந்து எங்கள் ஊரை எட்டிவிடுவேன். எங்கள் தெருமுக்கில் திரும்பும்போது எங்கள் வீட்டுத்திண்ணையில் அனைவரும் விளக்கேற்றி காத்திருப்பார்கள். அந்தத் தருணம் கவித்துவமானது. எல்லோரும் எழுந்து முன்னோக்கி வருவார்கள்.. அண்ணா திண்ணையில் எழுந்துநின்றபடி புன்னகையோடு பார்ப்பார். நெருங்கி வந்ததும் அம்மா பிடிகயிற்றை வாங்குவார். நவீன் இதை எழுத எழுத எனக்குக் கண்ணீர் வருகிறது. எங்கள் வீட்டு நாய் என்மேல் எக்காளமிட்டு கன்னத்தில் முத்தங்களைத்தரும். நான் முதன்முதலாக அப்படி மாடுகளை ஓட்டிவந்தபோது என் வயது 15. இப்படி எத்தனையோ முறை அண்ணன் பாதிதூரம் கொண்டுவந்த மாடுகளை மீதி தூரம் நான் கொண்டு வந்து சேர்ப்பேன்.

இப்படித்தான் நான் எழுத்தாளராவதற்குமுன் விவசாயத் தொடர்புடைய பல இழைகளில் நீந்திக் கொண்டிருந்தேன். களைவெட்டுபவனாக, தண்ணீர் பாய்ச்சுபவனாக, தட்டை சுமப்பவனாக, பாரம் ஏற்றுபவனாக, மோட்டார் தூக்குபவனாக, இளம்காளைகளை வண்டியில் பழக்குபவனாக, ஒரு படையை கையில் வைத்திருப்பவனாக, சினிமா பார்ப்பவனாக, சுமாராகப் படிப்பவனாக…இருந்தேன்.

நீங்கள் கவிதை எழுதுவதுண்டா? கவிதை தொகுப்பு கொண்டுவரும் திட்டம் ஏதும் உண்டா?

சு.வேணுகோபால்: கல்லூரிக் காலங்களில் கவிதை எழுதினேன். எழுதிய கவிதைகளை ஒரு நீள நோட்டில் எழுதிவைத்துக் கொண்டுதான் வந்தேன் எங்கள் வீட்டில் என் தாய்மாமாவின் பையன் தங்கி படித்துக்கொண்டிருந்தான். என் +2 செய்முறை பயிற்சி நோட்டின் எழுதாத பக்கங்களை  அவன் எடுத்துப் பயன்படுத்திக் கொண்டான். என் கவிதை நோட்டின் இன்னும் எழுதாத பக்கங்களைப் பார்த்திருக்கிறான் அதனையும் பயிற்சி நோட்டாகப் பயன்படுத்திக்கொண்டான். மொத்தமாகக் கடைக்கு எடைக்குப் போடும்போது என் கவிதை நோட்டையும் போட்டுவிட்டான். அந்த நோட்டு கடைக்குப் பொட்டணம் கட்ட போய்விட்டதை அறியாமலே இரண்டாண்டுகள் பல இடத்தில் தேடினேன். கைக்குக் கிட்டவில்லை நல்லவேலை என் கைக்குக் சிக்காதவகையில் முன்பே தீர்த்துக்கட்டிவிட்டான்.

எங்கள் கல்லூரியில் சிவாஜி என்ற மூன்றாமாண்டு மாணவன் ‘கடைசி கடிதம்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டான். சாலமன் பாப்பையாதான் வெளியிட்டுப் பேசினார். ‘கடைசி கடிதம்’ என்பதற்கு பதிலாக ‘முதல் கடிதம்’ என்று புத்தகத்திற்குத் தலைப்பு வைத்திருக்கலாம் என்று பேசியது நினைவிருக்கிறது. அவரது காதல் தோல்வி-கவிதை நூலின் வழி பிரபலமாக மாணவர்களிடையே பேசப்பட்டது. முதலாமாண்டு மாணவன் நான். நானும் இறுதியாண்டில் அவரைப்போல கவிதை நூல் கொண்டுவரவேண்டும் என்று எழுதத்தொடங்கினேன். அது சாத்தியப்படவில்லை. காதல் தோல்வி அடைவது கவிஞனுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இருந்தது.

என் கவிதைகள் நிகழ்வை முன்னிருத்தியதாக எழுதப்பட்டவை. எனக்குள் ஒரு கவிஞனைவிட, புனைகதையாளன் திறமாக மேலோங்கி இருக்கிறான் என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் கண்டுகொண்டேன். முக்கியமான காரணம் எனக்கு வாய்த்த முரட்டு அனுபவம்; புனைகதையில் இருந்த வாசிப்பு. இரண்டும் என்னை இயல்பாக புனைகதைக்குள் கொண்டு செலுத்தியது. கண்ணதாசன் போல ஆக வேண்டும் என்றிருந்த கனவு நழுவிப் போய்விட்டது.

இப்போது கவிதைகள் எழுதுவதில்லை. ஆனால் நவீன கவிஞர்களின் நூல்களை அக்கறையோடு வாசித்தபடியே இருக்கிறேன். எனது ஆய்வு கவிதைக் குறித்ததுதான். அது தமிழினியில் நூலாக வரவிருக்கிறது.

கூடுதல் தகவலாக ஒன்று : +2 முடித்துவிட்டு அந்தவிடுமுறையில் ஒரு கதை எழுதினேன். எந்தவித படிப்பு வாசனையும் இல்லாமல் அந்த பயிற்சி நோட்டில் எழுதி மறைத்து வைத்திருந்தேன். அது ஒரு தலித் இளைஞனைப் பற்றிய கதை. தலித் இலக்கியம் பற்றி இங்கு பேச்சே இல்லாத காலம். இதை அப்படியே எவ்வித திருத்தமும் இல்லாமல் தேடிக் கண்டடைந்து பிரசுரிக்கவேண்டும் என்று விரும்பினேன். முக்கியமாக 17 வயதில் அதை எப்படி எழுதியிருக்கிறேன் என்பதற்காக.

ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்ட படைப்பாளிகளில் நீங்களும் ஒருவர். அவர் படைப்புகளோடு முரண்படுபவர்கள் கூட அவரது ஆளுமையில் கவரப்படுவதுண்டு. நீங்கள் பார்த்த ஜெயகாந்தன் பற்றி கூறுங்கள்.

சு.வேணுகோபால்: +2 முடித்து அமெரிக்கன் கல்லூரியில் சேருகிறேன். எங்களுக்கு நவீன இளக்கியம் எடுக்கவந்த பேராசிரியர் சாமுவேல் சுதானந்தய்யா ஜெயகாந்தனை இந்த ஆண்டு அழைத்துவரப்போகிறேன். ஒவ்வொருவரும் ஜெயகாந்தனின் ஐந்து நூல்களையாவது படித்திருக்கவேண்டும். நிறைய கேள்விகள் கேட்கவேண்டும் என்றார். எங்களை டேனியல்பூர் மெமோரியல் நூலகத்திற்கு அழைத்துச் சென்று ஜெயகாந்தன் நூல்களைத் தேடி எடுக்கச் சொன்னார். தேடினோம். இப்படித்தான் முதல் முதல் ஜெயகாந்தன் நூல்களை எடுத்துப்படிக்கத் தொடங்கினோம்.

என் கைக்கு கிடைத்த முதல் நூல் ‘சக்கரங்கள் நிற்பதில்லை’ கிட்டத்தட்ட அவரின் கடைசிகால சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று. அதற்கு அடுத்து ‘புகை நடுவிலே’ என்றொரு தொகுப்பு வந்திருந்தாலும் அவர் சிறுகதைத் துறையில் கோலோச்சிய காலத்தின் கடைசி தொகுப்பு. தொகுப்பின் முன்னுரையில் ஒரு இலக்கியசர்ச்சை பற்றி எழுதியிருந்தார். தனது எழுத்தாற்றல் வற்றிவிட்டதாக விகடன் கருதியதாகவும் அதற்கு மாறாக வற்றாத தன் இலக்கிய ஆற்றலைக் காட்ட குமுதத்தில் எழுதியதாகவும் அதற்கு பதில் சொல்லும் தலைப்புதான் ‘சக்கரங்கள் நிற்பதில்லை’ என்று எழுதியிருப்பதாக நினைவு. அந்தக் கதைகளைப் படித்துவிட்டு ஜெயகாந்தனின் சக்கரம் ஒரு போதும் நிற்கக்கூடாது இன்னும் அவர் நிறைய எழுத வேண்டும் என்று என் இளமனது சொல்லியது. இதுதான்  என் முதல் வாசிப்பு அனுபவம். பின்பு ஒரு நாளுக்கு ஒன்று என்றோ, வாரத்திற்கு ஒன்று என்றோ ஜெயகாந்தன் நூல்களை எடுத்துவந்து இரவெல்லாம் படித்தேன். மறுநாள் தேர்வு இருக்கும். இரவு மூன்று மணிவரை படித்து முடிக்கும்போது உடம்பு சூடேறிப்போகும். பின் குளித்துவிட்டு தேர்விற்கு படித்ததெல்லாம் உண்டு. இப்படியொரு வாசிப்பு பழக்கம் திடுக்கென பற்றிக்கொண்டது. கதைகளைப் படிக்க படிக்க ஜெயகாந்தனை மிஞ்ச ஆள் இல்லை என்று விமர்சனமற்ற வாசகமனம் கொண்டாடியது.

ஜெயகாந்தன் வருவதற்கு முன்பே அவரது எழுத்துமட்டும் அல்லாமல் அவரது ஒன்பதுvenugopal1 திரைப் படங்களை கல்லுரியிலேயே பார்த்தோம். தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான பாதையிலிருந்து விலகி தன்னியல்போடு மெல்ல நகரும் திரைப்படங்கள். நான் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். உண்மையில் ஜெயகாந்தனின் சிறுகதைகள், குறுநாவல்கள் பிடித்திருந்தன. அவரது படங்கள் போர் அடித்தன. படம் பார்த்த ஆசிரியர்கள், வெளியிலிருந்து வந்த வாசகர்கள் சில காட்சிகளை சிலாகித்துப் பேசினார்கள். எனக்கு வினோதமாக இருந்தது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திற்கு ஜெயகாந்தன் எழுதிய ‘எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்’ பாடலையும் சிலாகித்தார்கள். சகலகலா வல்லவன் என்ற மதிப்புகூட உண்டாகியது. என்றாலும் சில அம்சங்கள் பிடித்திருந்தன. ‘உன்னைப்போல் ஒருவன்’ நாவலை வாசித்திருந்ததால் காட்சியாக்கியிருக்கும் விதமும் திரைக்கதை நகர்வும் நெருக்கத்தைத்தந்தது. ‘அக்கினி பிரவேசம்’ கதையைவிட சி.நே.சி.ம. படத்தில் காட்சியாக்கியிருந்தவிதம் பிடித்திருந்தது. ‘புதுச் செருப்பு கடிக்கும்’ படத்தில் ஒரு காட்சி. அதில் சாரதா கதாநாயகி. கதாநாயகன் தையல்கடைக்கு வருகிறான். சாரதா பேசிக்கொண்டே கத்தரித்து கீழே விழுந்த துணியைக் கையில் எடுக்கிறார். நாயகியின் மார்பகங்கள் கேமராவில் தெரிய உடனே ஜே.கே. கேமராவிற்கு நேராகக் குனிந்து எடுக்கவேண்டாம். பக்கவாட்டில் திரும்பி எடுக்கச் சொல்லி காட்சியை எடுத்திருக்கிறார். இதை ஜே.கே. எப்படி ஒரு திரைக்கலைஞனாக ஆனஸ்ட்டுடன் நடந்துகொண்டார் என்று எடிட்டர் லெனின் சொன்னார். அதுமட்டுமல்ல கதைப்படி நாயகி பணத்தேவையின் பொருட்டு பாலியல் உறவு வைத்திருப்பவள் என்ற குறிப்பும் கதையில் உண்டு. எனவே ஜெயகாந்தன் வருவதற்கு முன்பே அவர்மீது ஒரு பிம்பம் உருவானது. அதுவும் நடக்கவிருக்கும் கருத்தரங்கம் அரைநாளோ, ஒரு நாளோ அல்ல மூன்று நாட்கள். அதில் அவரின் தர்பார் எப்படி இருக்கும் என்று மற்ற மாணவர்களைப்போல நானும் எதிர்பார்த்திருந்தேன்.

ஜெயகாந்தன் கல்லூரியின் முதன்மை அரங்கின் (Main Hall) மாடிக்கு வந்தார். ஐந்தடிக்குச் சற்று கூடுதலான உயரம். மாநிறம், பூப்போட்ட அரைக்கை சட்டை. முறுக்கிவிடப்பட்ட மீசை. தோளைத்தொடும் முடி. ஆறடி உயர முள்ளவரையும் இறுமாந்து பார்க்கிற பார்வை. செம்மாந்த அச்சமற்ற நடையில் அரங்கின் கிழக்குப் பக்கம் வருகிறார். அரங்கின் பக்கவாட்டில் மேடையும் வட்ட வடிவில் இருக்கைகளும் போடப்பட்டிருக்கின்றன. அவரோடு வந்தவர்கள் சற்று தள்ளி நின்றுகொண்டார்கள். அரங்கிற்கு ஏற்கெனவே வந்திருந்த வாசகர்கள் அவரைச் சூழ்ந்து நிற்கிறார்கள். ஒருவர் பவ்வியமாக ஒரு கேள்வி கேட்கிறார். தலையை சிலுப்பி நெஞ்சை நிமிர்த்தி பதில் அளிக்கும் தோரணை, செருக்கின் உச்சமாக இருந்தது. பதில் வெளிப்பட்ட முறையியல்தான் கோபம் இருந்ததே தவிர முகத்தில் இறுமாப்பு மிளிர்ந்தது. அவரது பேச்சிலே சட்டென வெளிப்படும் கூரான பக்கவாட்டு பல்வரிசையைத்தான் கவனித்தேன். அவரது பேச்சிற்கு அவரது பல்வரிசை கூடுதல் செருக்கை அளிப்பதாகத் தோன்றியது. அவர் நிமிர்ந்து நின்று பதில் அளிக்கும் எகத்தாளம்; கேட்பவர்களின் கேள்விகளை பதில்களால் நொறுக்கி தூளாக்கும் தன்மை, தோளுரசும் முடியை சிலிர்ப்பி குதிங்கால் எகிறி குதிக்க உறுமலோடு கூடிய பதில்கள் எல்லாமே நெருங்கவிடாது சற்று தூரத்தில் நிறுத்திவிடும் பயகவர்ச்சியைக் கொண்டிருந்தது.

என் ஆசிரிரியர்கள் யாரும் பக்கத்தில் நெருங்காமல் தள்ளி ஒதுங்கி நின்றிருந்தார்கள். மதுரை நகரில் உள்ள கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் அவரது வாசகர்களும் வந்திருந்தார்கள். நான் ஒரு ராணியைக் காதலிக்கிற எளியவன் போல மறைந்து மறைந்து நின்று கவனித்தேன். ஒருவர், ‘மற்றவர்கள் போலவே நீங்களும் மாத நாவல் எழுதினீர்களே!’  என்றதும் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று பார். பொழுது போக்குகிறவனிடம் போய் இதை கேள்’ என்றார். வந்ததுமே களைகட்டியது.

மேடை ஏறிய ஜெயகாந்தன் அவர்களே, இவர்களே என்று மேடை வழமைகளையெல்லாம் தூக்கிஎறிந்துவிட்டு ‘மெய்யாலுமே சொல்கிறேன். ‘நான் எழுதுவதைத்தான் பத்திரிக்கைகள் வெளியிடமுடியுமே தவிர அவர்கள் விரும்புவதை ஒருபோதும் நான் எழுதியதில்லை. சத்தியத்தை இலக்கியமாக்குகிறவன் நான்’ என்று எடுத்தவுடனே மேலெடுத்தார். ஜெயகாந்தன் வந்ததும் அவருடன் உரையாடியவர்களுக்கு மேலதிமாக பதில் அளிக்கும்விதமாகவும், தன் இலக்கிய பார்வை குறித்தும் பிசிரில்லாமல் முழங்கினார். குறிப்பெடுத்து வராத, அந்த நேரத்தில் பொங்கிவரும் பேச்சாக இருந்தது. இவ்வகையான பேச்சே ஒரு புதுசான வீச்சை கொண்டிருக்கும். அன்று நிகழ்ந்ததும் அதுதான்.

பாரதியின் தேசிய பாடல்களுக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டுமானால் அதற்கு ஜெயகாந்தனைத்தான் சொல்லமுடியும். ஜெயகாந்தன் அந்த கம்பீரத்தை வடிவமைத்துக் கொண்டவர் என்பதை பின்னாளில் உணரமுடிந்தது. தன் கோவத்தை வெளியிடும் போதெல்லாம் சிறு சிறு ஆங்கிலத் தொடர்களால் அள்ளி வீசினார். ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் தன் வசப்படுத்தினார். ஜே.கே.யின் பேச்சை அன்று தொட்டு பலமுறை கேட்டிருக்கிறேன். உண்மையில் தமிழ்ப் பேச்சாளர்களிலேயே அவர் உயர்ரகமான மேடைப் பேச்சாளி என்பேன். மேடைப்பேச்சுக்குரிய அத்தனை நல்லம்சங்களும் கூடி உருவானது அவரது பேச்சு.

பின் கலந்துரையாடல் துவங்கியது. ஒரு அம்மையார் “நீங்கள் ஏன் முன்புபோல அதிகம் எழுதுவதில்லை” என்று கேட்டார். “என்னை யாரும் எழுது என்று கட்டளை இடமுடியாது. நான் எழுதியவற்றையெல்லாம் நீ படித்துவிட்டாயா? எழுதியிருப்பவற்றை முதலில் முழுமையாய் படி.” என்று போட்டார். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் “கோகிலா என்ன செய்துவிட்டாள்?” குறுநாவலை சிலாகித்துப் பேசிவிட்டு கணவன் மனைவிக்குள் ஏற்படும் முரண்பற்றி கேட்டார். “அப்படி என்னதான் செய்துவிட்டாள் கோகிலா?” வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து பிரித்து  திருப்பி வீசினார். பெண்கள் சார்பாக அவர் பேச பேச பெண்கள் பக்கமிருந்து கைத்தட்டல்கள் அரங்க சுவர்களை முட்டி வெளியே பறந்தன. ஆண்களை துரோகிபோல சித்தரிக்கலாமா என்று ஒருவர் கேட்டார். “ஆம். துரோகிககள்தான்” என்று மூக்கை உடைத்தார். இதற்கு இன்னும் பலமான கைத்தட்டல்கள் பெண்கள் பக்கமிருந்து வந்தன. ஆண்கள் பக்கம் ஒருவித கசப்பு உருவானது. அதைப் பற்றியெல்லாம் அவர் அலட்டிக்கொள்ளவில்லை.

ஒருவர் ‘உன்னைப்போல் ஒருவன்’ நாவலில் வரும் மாணிக்கம் பற்றி ஒரு சந்தேகம் கேட்டார். “போய் முன்னுரையைப் படி” என்றார். சினிமாவுக்குப் போன சித்தாளு பற்றி ஒரு கேள்விவந்தது. அதில் வரும் வாத்தியார் எம்.ஜி.ஆர். தானே உங்களுக்கு மிரட்டல் வரவில்லையா என்றார். “வாத்தியார் எம்.ஜி.ஆர் தான் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியும். நான் யாருக்கும் பயப்படுகிறவன் இல்லை என்பது அந்த ராமச்சந்திரனுக்குத் தெரியும்” என்றார்.

பின்னால் நான் கண்டுகொண்டது. ஒரு வாசகனின் கேள்விக்கு நேரான-எளிய பதிலை சொல்லியிருக்க முடியும். ஆனால் ஜே.கே. கேள்வி கேட்பவனை சிதறடித்தார். “முட்டாள்தனமான கேள்வியை நீ முன்வைக்கிறாயே” என்று திருப்பி அடிப்பதாகவே இருந்தது. எனவே கேள்விகேட்க பயந்தார்கள். பதிலைவிட எப்படி அவமானப்படுத்துவாரோ என்று கேட்க நினைத்தவர்கள் பலர் பதுங்கினார்கள். வெளியில் இருந்து வந்திருந்த மூத்த முற்போக்கு இலக்கியவாசகர் ‘காற்று வெளியினிலே’ நாவலில் கதாநாயகியை குதிரைவண்டியில் அழைத்துச் செல்லும் திரைப்பட தரகன் தொடையில் கைவைப்பதாக எழுதியிருப்பதை ஆபாசம் என்று படுவேகமாகக் கேட்டார். ‘ஆபாச மனிதர்களை நான் இனம் காட்டினால் நீ என் எழுத்தை ஆபாசம் என்கிறாய். உன் கேள்விதான் ஆபாசம்” என்றார். ‘அக்னிபிரவேசம்’ குறித்து தண்ணீர் தெளித்தால் பாவம் போய்விடுமா என்றார் ஒருவர். ‘சேற்றிலே மூழ்குபவனுக்கு கைகொடுத்து மேலேற்ற நான் நினைத்தால் நீ சேற்றிலேயே வீழ்ந்துகிடக்கிறேன் என்கிறாய்’ என்றார். முதல்வர், ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரையும் பதில்களால் பந்தாடினார்.

இரண்டு இரண்டரை மணிநேரம் கழித்து மேடையைவிட்டு இறங்கியதும் சிகரெட்டைப் பற்றவைத்தார். பேராசிரியர்கள்முன் புகையை ஊதியபடி பேசினார். அமெரிக்கன் கல்லூரி என்பது பெரிய கல்லூரி. 100 ஆண்டுகள் பழமையுள்ள கல்லூரி. பெரியார், அண்ணா, காமராசர் போன்றோர் மேடை ஏறிய அரங்கு. வளாகத்திற்குள் புகைபிடிக்க அனுமதியில்லை. ஒளிந்து சிலவேளை நடந்திருக்கலாம். ஜெயகாந்தன் அந்த அரங்கில் திருவிழாவாகத் திரண்டிருக்கும் கூட்டத்தின் நடுவில், ஆசிரியர்கள் மத்தியில் அவர் சிகரெட் பிடித்த விதம் அஞ்சாமையையும் நீங்கள் எல்லாம் என் முன் அற்ப பதர்கள் என்பது போலவும் இருந்தது. ஐநூறு அறுநூறு பேர் இருந்திருக்கலாம். அவர்கள் மத்தியில் ஒரு ஜாம்பாவானாக நின்றார். எழுத்தாளனுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்த்தை தன் பேச்சாலும் எழுத்தாலும் நடை உடைபாவனைகளாலும் உருவாக்கி இருந்தார். அவரது அலட்சியபாவம் கூடுதல் கம்பீரத்தை அளித்தது. ஓர் எழுத்தாளனுக்கு இவ்வளவு பெரிய மதிப்பா? என்பதை ஆச்சரியத்தோடும் பார்த்தேன். அவர் உருவாக்கியிருந்த எழுத்தாளனுக்கே உரிய கவர்ச்சி என்னை வசீகரித்தது. இதே போல ஒரு நாள் எழுத்தாளனாக நானும் உருவாவேன் என்று மனதில் விதையை ஊன்றினேன். அதற்கு இன்றிலிருந்து சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. மேடையில் பேசும்போது கஞ்சா என்பது மனித இதயத்திற்கு நல்ல மருந்து என்று வேறு சொல்லியிருந்தார். அதனால் எப்படியேனும் கஞ்சா புகைக்கவேண்டும் என்றும் அப்போது தீர்மானித்தேன்.

மதிய உணவிற்குப் பின் சற்றுத் தாமதமாக வந்தார். அவர் தாமதமாக வந்தாலும் ஜே.கே. குறித்து ஆய்வாளர்கள் கட்டுரைகள் படித்துக்கொண்டிருந்தனர். தேநீர் இடைவேளை வந்தது. ஜெயகாந்தன் ஒரு இலக்கியவாசகரைப் பார்த்து ஓங்கிய குரலில் “உனக்கு இலக்கியம் தெரியுமா?” கத்தினார். நாங்கள் அந்த இடத்திற்கு ஓடினோம். பெருங்கூட்டம் சூழ்கிறது. ஒரு இலக்கிய நண்பர் “அடித்தட்டு மக்களை எழுதிக் கொண்டிருந்த நீங்கள் முற்போக்கு சிந்தனையிலிருந்து விலகி மேட்டிமை சமூகத்தை எழுதி இலக்கியப் பாதையிலிருந்து விலகிவிட்டீர்கள்” என்று கேட்டிருக்கிறார். “மக்களைப் பாட வந்தவனுக்கு முற்போக்கு ஏது பிற்போக்கு ஏது? அந்த சமூகத்தில் உள்ள பிற்போக்கைக் களையத்தானே எழுதினேன் என்பது உனக்குத் தெரியவில்லையா?” என்று உடம்பை உலுக்கி முடிக்கற்றை விசுக்கென தோளில் விசிற நெஞ்சை நிமிர்த்தி கர்ஜித்தார். இரண்டு அணிகளைச் சமாதானம் செய்ய முயன்றார்கள். முற்போக்கு நண்பர்கள் சிலர் “உங்கள் பயணம் தோல்வியை நோக்கிப் போகிறது” என்று வெளியேறினர். அங்கிருந்தவர்களில் பலர் ஜே.கே. காலை அமர்வில் நன்றாகத்தானே இருந்தார் என்றனர். ஒருவர் மதியத்திற்குப் பின் செமத்தியாக கஞ்சா போட்டு வந்திருக்கிறார் என்றார். ஜே.கே. எங்குச் சென்றாலும் அவரது ரசிகர்கள் இணைந்து கொள்வது இயல்பு. சென்னையிலிருந்தே இரண்டு மூன்று நண்பர்கள் வந்திருந்தனர். மதுரை நண்பர்களும் இணைந்தனர். பெரும்பாலும் அவர்கள் வேட்டி உடுத்தியிருந்தனர். அவர்களை ராஜ மயக்கம் தழுவி தூக்கிப் பறக்க எத்தனித்தபடியே இருந்தது. அவர்கள் எப்போதும் பேசாமல் ஜே. கே.விற்கு சற்றுத் தள்ளி நின்று கொண்டு மட்டும்தான் இருந்தனர்.  ஜே.கே.முகத்தில் அந்தச் சொக்கு இல்லை. பற்களை நெமிறியபடி இலக்கிய சமர்தான் செய்தார்.

ஒருவாறு அன்றைய ஆட்டம் முடிந்து ஜே.கே.யை அறைக்கு அழைத்துச்செல்ல சுதானந்தா ஐயா கிளம்பினார். நாங்கள் ஒருவித இலக்கிய மயக்கத்தில் கப்சிப்பென்று ஒற்றை நோட்டுகளை வைத்துக்கொண்டு நின்றிருந்தோம். “எப்படி நம்ம ஆளு” புன்சிரிப்போடு எங்களைப் பார்த்து கண்ணடித்தார். சிலசமயம் எங்கள் வகுப்பில் ஜே.கே.யின் பதில்களைச் சொட்டான் போட்டுச் சொல்லி “எப்படி அடிச்சான் பாத்தியா. அவன்பெரிய ஆளுடா” என்று மனம் பூரிப்பில் பொங்க பின்னாளில் சுட்டிக்காட்டி பாடம் நடத்துவார்.

மாடியிலிருந்து கூட்டம் ஜே.கே.யைப் பின் தொடர்ந்து இறங்கியது. வெளியே இரட்டு பரவத் தொடங்கிவிட்டது. மாடி அரங்கு டியூப்லைட் வெளிச்சத்தால் மட்டும் நிரம்பி இருப்பது தெரிந்தது. மரங்கள் எல்லாம் மெல்லத் தூங்கத் தொடங்கிவிட்டன. சேப்பலில் இருந்து சிறிது நேரத்தில் இசை வரலாம். ஜே.கே.யின் விசுவாசி ஒருவர் “இந்த முற்போக்கு பயல்களுக்கு வறட்டு பிடிவாதம் போகாது போல” என்றார். ஜே.கே. கனிந்தமுகத்துடன் திரும்பி, “அல்ல. அவர்கள் என் மீதுள்ள காதலால் அப்படி பேசுகிறார்கள்” என்றார். அறிவார்த்தம் என்பது என்ன என்பதை இப்படியான சந்தர்ப்பங்களில்தான் நான் கற்றுக்கொண்டேன். மேடையில் நுழைகிற ஜெயகாந்தன் வேறு மேடையை விட்டு இறங்குகிற ஜெயகாந்தன் வேறு என்பதை நான் சில சந்தர்ப்பங்களிலேயே கண்டுகொண்டேன்.

மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளிதழ்களில் ஜெயகாந்தனின் இலக்கிய திருவிழாகோலம்தான் நிறைந்திருந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாததுபோல நடந்துகொண்டார். முகஸ்துதி போற்றுவோரை வாயடைக்கச் செய்திருக்கிறார். இதேபோல இவரது நூல்களை முனைவர் பட்டம் செய்கிற ஆய்வுமாணவர்கள் மீது பெரிய மதிப்பேதும் ஜே.கே.க்கு இருந்ததில்லை. ‘இவர்களுக்கு இலக்கிய நுகர்ச்சியோ, வாழ்க்கை பற்றிய புரிதலோ இல்லை’ என்று சொன்னார். ‘சம்பள உயர்விற்குத்தான்’ என்று தெரிந்திருப்பார் போல. மறுநாள் எங்களுக்கு ஒரு கதையை எப்படி வாசிக்க வேண்டும் என்று அவரது ஒரு சிறிய கதையை வாசித்தார். எறும்பு கதை என்று நினைக்கிறேன். அவை தங்களுக்குள் எப்படி பேசிக்கொள்கின்றன; எதிர்க்கின்றன; மாற்றுவழி தேடுகின்றன; தன்னைப் பற்றி என்ன நினைக்கின்றன- என்பதை மாறி மாறி அனுபவித்து அதனதன் உணர்வு நிலையிலிருந்து பேசினார். கர்ஜனை இல்லை; உறுமல் இல்லை; கோபம் இல்லை. சாந்தமாக நின்று பாத்திரங்களின் பயணங்களுக்கு ஏற்ப பல்வேறு பாவங்களில் அவற்றின் குரல்களாக வாசித்தார். நீங்கள் ஏன் படங்களில் – உங்கள் படங்களில் நடிக்கவில்லை என்று கேட்டோம். அவருக்கு நடிக்க ஆசை இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். “நான் அரிதாரத்தைப் பூசிக்கொள்ளக்கூடாது என்பதை துவக்கத்திலேயே தீர்மானம் செய்துவிட்டேன்” என்று பதில் அளித்தார். கேள்வி பதில் நேரத்தில் மீண்டும் ஆவேசம் எழுந்தாடியது.

போர்க்களத்தில் தனி ஒருவன் வாள்வீசி எதிரிபடையையே துரத்தி அடிப்பதுபோல அவரது பதில்களும், திடீரென எழுந்து பொழியும் பொழிவுகளும் இருந்தன. நான் சில கேள்விகள் கேட்க நினைத்திருந்தேன். கேட்டவில்லை. கேள்வி கேட்பதாலே நீ இலக்கியவாதியாகிவிடமுடியாது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. கேள்வி கேட்கும் வாசகர்களைத் தன் வயப்படுத்தி ஒரு இலக்கியப் படையையே உருவாக்கி இருக்கலாம். அவர் தன்னை நாடி வரும் வாசகர்களைப் பொது வெளியில் விரட்டி விரட்டி அடித்தார். அது ஒரு அந்தஸ்த்தை கொடுத்தது. ஆனாலும் அவருக்கு ஒரு பலத்த வாசகர் கூட்டம் பின்தொடர்ந்தது ஆச்சர்யம்தான்.

அடுத்தடுத்து அவரது பேச்சை கேட்க நேர்ந்த எனக்கு ஒன்று தோன்றியது. இவர் ஏன் சமூக அக்கறை கொண்ட புதிய இளைஞர் கூட்டத்தை காமராஜருக்குப் பின்னால் கட்டி எழுப்பியிருக்கக்கூடாது என்று நினைத்திருக்கிறேன். இது பற்றி தமிழின் முக்கியமான மூத்த வாசகராகிய லிங்கம் அவர்களிடம் சொன்னபோது அவரும் அப்படியே நினைத்ததாகச் சொன்னார். ஜே.கே.க்குப் பின்னால் திரண்டுவர தயாராக இருந்த இளைஞர் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் கைகழுவி விட்டவர் என்று ஒரு உருவகம் தோன்றுவதுண்டு. என்றாலும் எம்.ஜி.ஆர் என்ற கவர்ச்சியின் முன் எதுவுமே எடுபடாது என்ற காலத்தை உணர்ந்தாரோ என்னவோ. மற்றொன்று 1967- சட்டமன்றத் தேர்தலில் காமராஜருக்கு பின்நின்று தீவிரமாக உழைத்தும் பலனில்லாமல் போய்விட்ட நிதர்சனம் அரசியல் அக்கறையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நேர்ந்திருக்கலாம்.

அவரது பேச்சால் கவரப்பட்ட பெண்கள் ஆட்டோகிராப் வாங்குவதற்கு மொய்த்தார்கள். நாங்களும் ஒரு நோட்டை வைத்துக்கொண்டிருந்தோம். ஒரு புகழ்பெற்ற நடிகனிடம் கையெழுத்து வாங்குவதுபோல சாடிவிழுந்தார்கள். நான் என் நோட்டில் ‘ஜெயகாந்தப் பூவை இன்றுதான் கண்டேன்’ என்று அவரது செறுக்கிற்கு சம்பந்தமில்லாது முந்தின நாள் எழுதிய ஆறுவரி கவிதையின் கீழ் கையெழுத்து வாங்க நினைத்து நின்றேன். இப்படி ஏறிவிழுந்து வாங்க எனக்குக் கூச்சமாக இருந்தது. நண்பர்கள் கூட்டத்திலிருந்து விலகி நுழைந்து கையெழுத்து வாங்க வெட்கமாகவும் இருந்தது. பேசாமல் ஒதுங்கி நின்றுபார்த்தேன். ஜெயகாந்தன் எனக்குக் கையெழுத்துப்போடும் காலம் ஒன்றும் வரும் என்று புதிய எண்ணம் ஒன்று உதித்தது.

அவ்வாறு நிகழ்ந்ததா?

சு.வேணுகோபால்: கோவையில் பணியாற்றிக் கொண்டிருந்த என்னை சுதா ஐயா அமெரிக்கன் கல்லூரிக்கு பணியாற்ற அழைத்தார். நேர்முகத்தேர்வில் சிறப்பாகவே செய்தேன். பணிவாய்ப்பினை நல்கினார். நான் அவரின் முக்கியமான மாணவர்களில் ஒருவனாகக் கருதப்பட்டேன். இந்த சமயத்திலும் (2005) சுதா ஐயா அமெரிக்கன் கல்லூரிக்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தார். இருபதாண்டுகளுக்கு முன் அவரைச் சூழ்ந்திருந்த ரசிகர்பட்டாளம் இல்லை. கஞ்சா விரும்பும் நண்பர்கள்கூட இல்லை. அது பற்றிய எந்த எதிர்பார்ப்பும் அவருக்கு இல்லை. டை அடிக்கும் பழகத்தை விட்டிருந்தார். நரைத்த முடி, முட்டி கறுத்த முழங்கை பக்கம் சுருக்கம் விழுந்திருந்தது. கன்னத்தின் மினுமினுப்பு முற்றாக மறைந்து முகம் கருத்துப்போய் இருந்தது. பெரிய லென்ஸ் கண்ணாடிக்குள் இமைகளின் கருக்கம் தெரிந்தது. சட்டையை டக்கின் செய்திருந்தாலும் ரத்தம் சுண்டிப்போன வயோதிகம் அவர்மேல் வந்து அமர்ந்துவிட்டது எனக்குப் பெரிய துக்கத்தை அளித்தது. கம்பீரமாக நடக்க முயற்சித்தார். சிங்கம் தளர்ந்துவிட்டது என்பதை அவரின் நடைகாட்டியது.

அன்று ஆன்மீகம் குறித்து பேசினார். ஆன்மீகம் என்பதை எல்லையற்ற அன்பாகப் பாவித்து பல்வேறு கோணங்களில் பேசினார். அமைதியான நல்ல உரையாக இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் ஜெயகாந்தனைப் பிடிக்காது என்று சொல்லியும் விமர்சித்தும் வந்த பேராசிரியர் ஹரண் அன்று ஜே.கே.யை சிலாகித்துப் பேசினார்.

கலந்துரையடல் எப்போதும் போல மாணவர்களுக்குத் தனியாக அசிரியர்களுக்குத் தனியாக நடந்தது. அன்று மாலை வேறொரு ஜெயகாந்தனாக உரையாடலில் தென்பட்டார். ஒருவர் உறவு சிக்கல் குறித்து ஒரு கேள்வியைக் கேட்டார். அப்பாவைப் புரிந்துகொள்ள முடியாத மகனைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறேன் தெரியுமா? என்றார். கூட்டம் அமைதியாக ஜே.கே.யைப் பார்த்தது. யாரேனும் சொல்ல முடியுமா என்றார். ஒருவரும் பேசவில்லை. நான் மெல்ல எழுந்து, ‘அந்தரங்கம் புனிதமானது’ என்றேன். மனிதர்கள் எண்ணங்கள் மாறுமா என்று கேட்டார் ஒருவர். மாறும் என்றவர் “ஒன்றின் தொடர்ச்சியாக இரண்டுகதைகளை வெவ்வேறு காலகட்டத்தில் எழுதியிருக்கிறேன். தெரியுமா?” என்றார். அமைதியாக இருந்தனர். நான் “யுகசந்தி” என்றேன். இப்படி நான்கைந்து கேள்விகளுக்கு சரியான பதிலை யாரும் சொல்லாதபோது சொல்லியபடி இருந்தேன். சுதா ஐயாவிற்கு அன்று கொள்ள பெருமை. தன் மாணவர் ஜே.கே.யை எப்படிப்படித்திருக்கிறான் என்பதிலும், ஜே.கே.க்கு இப்படி ஒரு வாசகன் கல்லூரியில் இருக்கிறான் என்பதிலும். அன்று, ஜே.கேயின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கேட்டார்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சொன்னார்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.கே.யிடம் சில கேள்விகளைக் கேட்கலாம் என்று கொஞ்சம் முன் சென்று அமர்ந்தேன். “உங்கள் கதைகளில் புற உலகம் கூடிவருவதில்லையே” என்றேன். “காக்காய் கரைகிறது. நாய் குறுக்காக ஓடியது” என்று எழுதுவதெல்லாம் கதைக்குத் தேவையில்லை” என்றார். அதாவது நான் சொல்லவரும் விசயத்திற்கு தேவையில்லை என்ற பொருளில். புறஉலகம் என்பது எவ்வளவு அர்த்தப்பூர்வமானது. அதை அத்தோடு விட்டுவிட்டேன். உங்கள் கதைகளைத் தங்கள் கதைபோல சிலர் (மணிரத்தினம்) திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள் இதற்கு நீங்கள் எதிர்ப்பு காட்டியது போலவும் தெரியவில்லை என்றேன். “இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்” என்றார். வாசகனின் கேள்விக்கு உரிய நேரான பதில்களைச் சொல்லக்கூடாது என்பதில் எப்போதும்போல கவனமாக இருந்தார். இப்படி திருப்பியடிக்கும் பதில்களை ரொம்ப முன்பு சொன்னபோது கவர்ச்சியாக இருந்தது. தைத்தட்டல்களைப் பெற்றுத்தந்தது. பெரிய ஆள் நான் என்ற அந்தஸ்த்தை தந்தது. இதைக் காலம் பூராவும் ‘மெயின்டன்’ பண்ணுவதிலேயே தன்னைக் கட்டமைத்திருந்தார். நான் உங்களைப் போல ஒரு படைப்பாளியாக உருவெடுத்திருக்கிறேன் என்று ஒருபோதும் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதே இல்லை. அப்படி காட்டுவதிலும் எனக்குவிருப்பம் தோன்றவில்லை.

அன்றைய தினம் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலும், பேச்சுக்களை ஒழுங்குபடுத்துவதிலும் ஓடிக்கொண்டிருந்தேன். மாலையில்தான் அவரோடு அமர்ந்து பேசினேன். சுதா ஐயா கூட்டம் முடிந்த தருவாயில் என்னை ஜே.கே.யிடம் ‘என் மாணவன்’ என்று அறிமுகப்படுத்தினார். “தெரியுமே” என்றவர் “என்னை நன்றாகவே படித்திருக்கிறான்” என்றார். ஆட்டோகிராப் வாங்காமல் விலகி நின்ற அந்த விடலைப் பருவத்து எண்ணம் அந்த நொடியில் ஈடேறியதாக இருந்தது.

அறைக்குச் செல்லும்போது இப்படிச்சொன்னார். “நான் எங்கே இலக்கியம் படைத்தேன். ஜீவிப்பதற்காகத்தானே எழுத்தைக் கையில் எடுத்தேன். ஆர அமர இலக்கியம் செய்ய எங்கே வாய்த்தது வாழ்க்கை” இப்படி ஒரு பதிலை அன்று சொன்னார். பின் அவரது மரணம் வரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. புதிதாக சந்திக்கும் இலக்கிய நண்பர்கள் அவரிடம் வழக்கமாக கேட்கும் ஒரு கேள்வி இது. “நீங்கள் படைப்பாளியாக வந்ததற்கு வருத்தப்பட்டது உண்டா?” அவர் சொல்ல நான் பார்த்தது கேட்டது தலையை உலுப்பி “இல்லை” என்பதுதான். அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் ‘எழுத்தாளனாகவே பிறப்பேன்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

ஜெயகாந்தன் வீட்டுமொட்டைமாடியில் கூடும் இலக்கிய சபைக்குச் செல்ல வேண்டும் அங்கு நடக்கும் தர்பாரைப் பார்க்கவேண்டும். என்று நினைத்திருக்கிறேன். குக்கிராமத்தில் இருந்து கொண்டு எடுத்தேறி சென்னை சென்று திரும்புவது எனக்கு முடியாமல் இருந்தது. சென்னையில் ஓராண்டு இருந்தபோதும் பணிநெருக்கடியால் சந்திக்க முடியாமல் போய்விட்டது.

002ஜெயகாந்தன் எந்த பின்புலமும் இல்லாமலே வளர்ந்த ஒரு இலக்கிய ஆளுமை. ஆனால் க.நா.சு; சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி போல தமிழ் இலக்கியச் சூழலுக்கு பங்களிப்பு செய்தவர் அல்ல. தன்னை மட்டுமே பேசினார். குறைந்தபட்சம் அறுபதுகளின் பிற்பகுதியில் எழுதவந்த நல்ல எழுத்தாளர்களைப் பற்றி, அவர்களது இலக்கியப் பங்களிப்பைப்பற்றி ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. இராஜேந்திரச் சோழன், பா.செயப்பிரகாசம் போன்ற இளைஞர்கள் எடுத்த உடனே எவ்வளவு வீச்சுள்ள கதைகளைத் தந்தனர். அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டுகொண்டதில்லை. பிற்காலத்தில் அந்த இலக்கியபொறி இவர்களிடம் ஒளிமங்கியது என்பது வேறு விசயம். வண்ணதாசன் தமிழ் பண்பாடு உருவாக்கியிருந்த மென் உணர்வின் உலகிற்குள் அழைத்துச் சென்றார். எதையுமே ஜெயகாந்தன் பொருட்படுத்தியது இல்லை.

உண்மையில் அவர் அவருக்குப் பின் எழுதவந்த தீவிர இலக்கியவாதிகளை கண்டுகொள்ளமாட்டேன் என்ற அடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உலவினார். தற்போது நவீனத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்கிறது என்ற கேள்வியை முன்வைக்கும் போதெல்லாம் ‘நல்ல எழுத்தாளனே இல்லை’ என்ற அபத்தமான பதலையே சொன்னார். ஜே.கே. இறப்பதற்கு இரண்டாண்டிற்கு முன்வந்த பேட்டியெல்லாம் அபத்தத்தின் உச்சம்.

அவரது எழுத்தின் தீவிரத்தன்மை எழுதுபதுகளின் இறுதிவரை இருந்தது. இந்தக் காலகட்டத்தில் அவரது கதைகளைவிட மிகச்சிறந்த கதைகளை எழுதி நிரூபித்த இளம் எழுத்தாளர்கள் தோன்றிவிட்டார்கள். இந்த புதிய தலைமுறை பற்றியெல்லாம் அவர் கண்டுகொண்டதில்லை. தனக்கான பிம்பத்தைக் காப்பாற்றுவதிலேதான் அவரது செயல்பாடுகள் இருந்தன. என்றாலும் அவர் ஒரு இலக்கிய ஆளுமை. வாழ்வின் பல்வேறு பிரச்சனைப்பாடுகளைத் தன் கதைகளின் வழி பெரிய விவாதக்களமாக ஆக்கியவர் அவர். வாழ்க்கைக்கு செழுமையைத்தர முனைந்தவர். மாற்றங்கள் துவங்கத் தொடங்கிய காலத்தில் அதற்குக் கூடுதல் அழுத்தத்தைத் தந்து மேலெடுத்தவர். வாழ்க்கையைப் புதுசாகப் பார்க்கும் திறன் பெற்றவர். எதையும் பண்பாட்டு தளத்தில் வைத்து பேசியவர். அந்த அம்சங்கள் அவர் காலத்திய முற்போக்காளர்களுக்கு வாய்க்கவில்லை. ஜெயகாந்தனுக்கு வாய்த்தது. ஆனால் அவர் அதனை கலைநுட்பங்களோடு உண்டாக்கியதில்லை. அதை காதுகொடுத்து கேட்டதில்லை. தன்னைச் சுற்றி நிகழ்ந்த சாதனைகளைக்  கண்டுகொள்ளாத வறட்டுவாதி அவர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அப்பால் அவர் ஒரு எழுத்தாளனுக்குரிய கம்பீரத்தோடு உலவியவர். தன் செயல்பாட்டால் எழுத்தாளனுக்குரிய அந்தஸ்த்தை உருவாக்கிக் காட்டியவர். எழுத்தை நம்பி வாழமுடியும் என்று நிரூபித்தவர். அந்த வகையில் அவர் ஒரு ஆளுமை.

சுந்தர ராமசாமியின் பள்ளியைச் சேர்ந்த நீங்கள் அவர் இலக்கிய அழகியலோடு உடன்பட்டீர்களா? முரண்பாடான கருத்துக்களை அவருடன் உரையாடிய அனுபவம் உண்டா?

சு.வேணுகோபால்: வடிவம் சார்ந்தும் பார்வை சார்ந்தும் அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன். நிகழ்வுசார்ந்த சம்பவங்களின் நம்பகத்தன்மை என்பது வேறு. படைப்பு உருவாக்கும் நம்பகத்தன்மை வேறு என்பது குறித்து தன் கட்டுரைகளில் பேசியிருக்கிறார். என்னிடம் இது குறித்து நேரிலும் பேசியிருக்கிறார். தான் கண்ட கேட்ட வாழ்க்கையை அப்படியே பதிவு செய்வதல்ல படைப்பு. அதன் வழி மானிடத்துக்கங்களின் வேர்மூலங்களை, விசித்திரங்களை, உன்னதங்களைக் கண்டு சொல்வதுதான் படைப்பு என்ற விதமாய் படைப்பு உருவாக்கும் உலகை உதாரணங்களோடு பேசியிருக்கிறார். மானிட சாரத்தைத் தன் எழுத்தின் வழிக் கண்டடைந்து சொல்பவனை மேலான படைப்பாளியாகக் கருதினார். இலக்கியம் குறித்த இந்த அடிப்படையான அழகியல் எனக்கு எப்போதும் உடன்பாடான ஒன்றே. உண்மைக்கும் நேர்மைக்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் இடமில்லாமல் போகும் (அன்னியத்தன்மை) நவீன வாழ்வின் மீது அதிககவனம் அவருக்கு இருந்தது. ஆனால் பண்பாட்டு மரபை சுமையெனக் கருதினார். அதற்கு நவீன வாழ்க்கையில் அர்த்தமில்லை என்றார். உதாரணமாக ட்ராக்டர் வந்தபின் உழவுமாடுகளுக்கு மதிப்பில்லை. அதை ஏன் சும்மா கட்டிவைத்து செலவு செய்யவேண்டும் என்பார். உண்மைதான். நவீனவாழ்வில் முட்டாள்தனமானதும்தான். ஆனால் அவன் இதயம் பணத்தால் மட்டுமே ஆனதில்லையே. பண்பாட்டு மரபு உருவாக்கியிருக்கும் அழகியலின் பேரெழில்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார். அல்லது அதனை முக்கியமானதாக சு.ரா.கருதவில்லை. இதை அவரது வாழ்க்கையுடனான தொடர்பாகவும் பார்க்கிறேன். கோட்டையத்திலிருந்து சு.ரா.வின் குடும்பம் நாகர்கோயிலுக்குப் புலம்பெயர்கிறது. அப்போது சு.ரா.வின் வயது 17. தமிழ்ப்பண்பாட்டு உறவு அவருக்குப் பாலியத்தில் கிட்டாமல் போகிறது. மண்ணோடு ஒரு ஒட்டுதல் அமையவில்லை. இந்த பிரதேச நண்பர்கள் இல்லை. எனவே துண்டிக்கப்பட்ட பாலியம். இளம் வயதில் ஏற்படும் இந்த உறவை முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே ஒரு விலகல் தன்மை ஏற்பட்டது இயல்பானதே. இது அவரது நவீனத்துவ அழகியலுக்குப் பொருந்தி போயிருக்கலாம்.

நம் வாழ்க்கை உறவுகளில், பண்பாட்டு இழைகளில் அரசியலில் நவீன அறிவியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை நவீனத்து அழகியல் கவனப்படுத்தியது. ஒரு எழுத்தாளனாக இந்த மாற்றங்களை ஏற்கிறேன். அதே சமயம் இனக்குழுமக்களின் உலகம் விநோதமானது.அவர்களது வாழ்க்கை முறை வித்தியாசமானது. அவரது அழகியல் வேறுவகையானது. பின் நவீனத்துவ சிந்தனை இவற்றிற்கு அங்கீகாரம் அளித்தது. சு.ரா. இந்த அழகியலோடு உள் நுழைந்து வராமல் வெளியிலேயே நின்றார் “கோவேறு கழுதைகள்” என்ற யதார்த்த நாவலை அவரால் வரவேற்க முடிந்தது. ‘விஷ்ணுபுரம்’ நாவலை அவரால் ஏற்கமுடியவில்லை. எனவே சுநதரராமசாமியின் இலக்கிய அழகியலுடன் உடன்படவும் வேறுபடவுமான மாணவனாக வளர்ந்தேன்.

சுந்தரராமசாமியுடன் தொடர்பு ஏற்பட்டவுடனே அதிதீவிரமான, முரண்பாடான கருத்துக்களை நான் முன்வைத்து விவாதித்ததில்லை. எனக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது கல்லூரி மாணவனாக இருந்த இளம்பருவம் 23 வயது. இந்த தொடர்பு நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மெல்ல மெல்லத்தான் விவாதத்திற்கு வந்தேன்.

ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அது ஏன் உங்களைக் கவரவில்லை என்று கேட்டேன். ‘அது நாவல் அல்ல ஒரு டாக்குமெண்டரி’ என்றார். உண்மையில் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அபத்தத்தின் உச்சங்களையும் கண்ணீரின் மகத்துவத்தையும் சாகசத்தின் எத்தனிப்பையும், காமத்தின் நானா விநோதங்களையும் நினைவுகளின் கொந்தளிப்புகளையும் எதேச்சையின் திகைப்புகளையும், புலம்பெயர்ந்தோரின் மனோலயங்களையும், அபூர்வமாக மரபு செல்வம் உண்டாக்கும் மகத்தான தருணங்களையும் மிக அலட்சிய பாவத்துடன் வெளிப்படுத்திய பிரமாதமான நாவல் அது. எனக்கு இப்படியெல்லாம் அன்று எடுத்துரைத்து விவாதிக்கத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அந்நாவல் மரபின் செழுமையைக் கொண்டு நவீனவாழ்வை பகடி செய்தவிதம் தமிழ்ச்சூழலுக்கே புதுமையானது என்பது. இது பற்றி அவரிடம் எனக்குத் தெரிந்தவிதத்தில சொன்னேன். சு.ரா. நேற்றைய வாழ்க்கையை இன்றில் தேடுவது சரியானது அல்ல என்றார். அதற்கு மேல் அன்று அடுத்த கேள்வியைக் கேட்டு விவாதிக்கவில்லை. அந்த வயதில் தொடர்ந்து கேள்வி கேட்பது அவரது கண்ணியத்திற்கு இழுக்கு என்று நினைத்தேன்.

இதேபோல தி.ஜானகிராமன் குறித்து அவரோடு பேசி இருக்கிறேன். ‘உங்களுக்கு தி.ஜானகிராமன் பிடிக்குமா’ என்றார். “ரொம்ப பிடிக்கும்” என்றேன். படித்தவற்றைக் கேட்டார் சொன்னேன். ‘மோகமுள்’ பற்றி பேச்சு வந்தது. சு.ரா.சொன்னார் “நான் ஜானகிராமனை சந்திக்கப் போயிருந்தேன். அவரின் உரையாடலில் வெளிப்பட்ட மொழி ஏமாற்றத்தைத் தந்தது. அவர் இன்றைய மொழியில் தான் பேசினார். மோகமுள் நேற்றைய பிராமண பாஷையை முன்வைக்கிறது.” என்றார். “சார். ஒரு நாவல் எழுதும்போது தன் தாத்தா பாட்டி அம்மா விடமிருந்து பெற்ற அந்த ஆதிமொழி தன் மனக்கிடங்களிலிருந்து மேலெழுந்து வரத்தானே செய்யும். அப்படி மொழியை உயிர்பெற வைப்பது சரிதானே” என்றேன். சற்று அமைதியாக இருந்துவிட்டு ‘கதைகள் படித்திருக்கேளா’ என்றார். பேச்சு ‘சிலிர்பு,’ ‘தவம்’ கதையைத் தொட்டு வேறுபக்கம் போய்விட்டது.

பாரதிதாசன் குறித்து ‘தமிழில் அவர் பெரிய கவி’ என்றார். “நான் இல்லை சார். எடுப்பான உரைவீச்சை யாப்பு வடிவத்தில் சொன்னவர்” என்றேன். உண்மையில் அவருக்கும் அதுதான் மதிப்பீடு. பின் ஏன் அப்படிக் கேட்டார் என்பது பிற்பாடு விளங்கிக்கொள்ள முடிந்தது. தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் பாரதிதாசனை உயர்ந்த கவியாக மதிப்பிடுவார்கள் என்ற பொதுவான அபிப்பிராயத்தில் நானும் அவ்விதமே சொல்வேன் என்று அப்படிக் கேட்டார் என்று நினைக்கிறேன். பாரதிதாசனை கவிஞர் வரிசையில் இரண்டொரு இடத்தில் பெயரளவில் குறிப்பிட்டிருக்கிராறே தவிர பெரிய கவியாளுமை என்று படைப்பை முன்வைத்து எழுதியது கிடையாது.

நாகர்கோயிலுக்கு அருகில் வருடம் ஒருமுறை இலக்கிய முகாம் ஒன்றை நடத்துவார்கள். அங்குச் சென்றிருக்கிறேன். அரங்கு நிகழ்வு முடிந்தபின் மாலை நேரத்தில் நானும் சு.ரா.வும் அந்த கிறித்துவ ஆசிரம வளாகத்தின் ஒரு சிமெண்ட் மேடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் ஆ.மாதவனின் கடைத்தெரு கதைகளுக்கு சு.ரா. எழுதியிருக்கும் சிறந்த முன்னுரை குறித்து பேசினேன். கோணங்கி குறித்து ஏதும் குறிப்பிடவில்லையே என்றேன். அப்போது நூல் எனக்குக் கிடைக்கவில்லை என்றார். “என் கதைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்” என்றார். “உங்கள் கதைகளைவிட உங்கள் கட்டுரைகள் மிக கனமாகவும் படைப்பெழுச்சியைத் தரும்விதமாகவும் இருக்கின்றன.” என்றேன். பிடித்தமான சில கதைகளைச் சொல்லி பின் கட்டுரைகள் குறித்து நான் சொல்லியிருக்கலாம். வேறு பக்கம் பார்த்துக்கொண்டு இருந்த சு.ரா. “நாம் சற்று நடப்போமா” என்றார். “சரி” என்று எழுந்தேன். எங்களுக்குப் பின்னால் ஜெயமோகன் இளம் இலக்கிய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

ராஜம்கிருஷ்ணன், எம்.வி.வெங்கட்ராம், கிருஷ்ணன் நம்பி, நீல.பத்மநாபன், கி.ராஜநாராயணன், ஜீவா குறித்தெல்லாம் என்னுடன் பேசியிருக்கிறார். அவர் வீட்டில் இருந்தபோது ‘அம்பை நாளை இங்கொரு இலக்கிய நிகழ்விற்கு வருகிறார் இருந்து பார்த்து விட்டுச் செல்கிறீர்களா’ என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அவரின் இலக்கிய அழகியலோடு உடன்பாடும் முரண்பாடும் கொண்ட மாணவன் நான். ஜெயகாந்தனுக்கு நேர் எதிரான இலக்கிய ஆளுமை அவர். இலக்கியம் குறித்து விரிவாக பேசுவார். தமிழ்ச்சூழலில் உயர்ந்த இலக்கியம் வரவேண்டும் என்று ஓயாமல் சொல்வார். என்னைப் போன்றோர் பேசுவதை கவனமாகக் கேட்பார். பழகுவதற்கு மிக எளிமையானவர். அதே சமயம் நவீன தமிழ் இலக்கியத்தின் தனித்த ஆளுமையும் கூட.

நிமிடத்திற்கு ஒரு தரம் முகநூலில் பதிவிடுவதும் சர்ச்சைகளில் இணைந்து பரபரப்பாவதுமாக எழுத்தாளர்கள் பலர் முனைப்புடன் இருக்கையில் தங்கள் செயல்பாடுகள் மிக அமைதியானதாக உள்ளது. என்றாவது இந்தப் பெரும் அலைகளில் நாம் காணாமல் போய்விடுவோம் எனும் பதற்றம் வந்ததுண்டா?

சு.வேணுகோபால்:  ஒருபோதும் இல்லை. முகநூல் முகநூல் என்கிறார்களே அதில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டேன். நான் பணியாற்றும் கல்லூரி முதல்வரின் நிர்பந்தத்தினால் சென்ற மாதம் முகநூலுக்கு வந்தேன். வாட்சப், முகநூல் வழி மாணவர்களுக்கு உடனுக்குடன் தகவலைத் தரவும் பெறவும் அடுத்தடுத்த பணித்திட்டங்களை உடனுக்குடன் பெறவும்-செய்யவும் இந்த ஊடகவெளிக்குள் வரநேர்ந்துள்ளது. வெளிபேச்சு உருவாக்கி இருந்த பிரமிப்பு கலந்த மயக்கம் இரண்டு மூன்று நாட்களிலேயே கலைந்துவிட்டது. பின் மூன்றே நாட்களில் என் புகைப்படத்தை மறைந்தேன்.

முகநூலில் தொடர்ந்து பதிவிடுவதால் நம் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கும், இலக்கியம் செய்ய முடியாது. இலக்கியம் குறித்த நிகழ்வுகளை சிறு சிறு சர்ச்சைகளை அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம். எனக்குக் கடந்த ஒரு மாதமாக ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. என்றைக்கு இந்த முகநூலிலிருந்து வெளியேறுவது என்பதுதான். இந்த அலையில் விளையாடத் தொடங்கினால் பெரிய காரியங்கள் செய்யமுடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. வந்த காரியத்தை செய்யாமலே காணாமல் போய்விடுவேன். முகநூல் புகழ் எனக்கு வேண்டாம். அதை விரும்புபவர்களே வைத்துக்கொள்ளட்டும். ஆனால் தகவல்களைப் பெறவும் அனுப்பவும் வசதியாக இருக்கிறது. என் தேர்வு சார்ந்து முகநூலில் இயங்கமுடியாது. நம் படைப்புதான் காலங்காலமாக பேசப்படவேண்டும். இன்றைய பதிவுகளினால் பரபரப்பாக்கிக்கொள்ள விரும்பவில்லை. எவ்வளவோ தகவல்கள் வருகின்றன. சில நல்ல தகவல்களுக்காக விலகி நின்று பார்க்கலாம்.

எழுத்தாளனாக இருப்பது ஓர் அந்தஸ்து என நினைக்கிறீர்களா? வேறுவிதமாகக் கேட்பதென்றால் கலைஞனை சக மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாகக் கருதுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சு.வேணுகோபால்: எழுத்தாளனுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து இருப்பதாக என் இளம்வயதில் நம்பியதால்தான் எழுத்துத்துறை மீது பெரும்காதல் கொண்டேன். அது பொய் என்பதை விரைவிலேயே உணர்ந்துகொண்டேன். இவர் நல்ல நாவல் ஒன்றை தந்திருக்கிறார் என்று என்னை மற்றவர்களிடம் மூத்தவர்கள் அறிமுகம் செய்யும்போது அவர், அப்படியா என்று கேட்டதற்காக முணுமுணுத்துக்கொண்டு கடந்து போயுள்ளனர். இவர் நாவல் எழுதி முதல் பரிசு பெற்று அமெரிக்காவிற்குச் சென்று வந்துள்ளார் என்று அறிமுகப்படுத்தும் தருணங்களில் ஓடிவந்து கையைக் குலுக்கியுள்ளனர். அமெரிக்கா சென்றதைத்தான் அந்தஸ்த்தாக நினைக்கிறார்கள். என் நாவலின் இலக்கிய பெருமதிக்காக அல்ல என்பதை சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டேன். அதிக வாசகர்களைச் சென்று சேரும் வெகுஜன இதழ்களில் எழுதுவதால் எழுத்தாளனுக்கு ஒரு அந்தஸ்த்து வரவே செய்கிறது. எழுத்தின் வழியாக பணம் சம்பாதிக்க முடிகிற எழுத்தாளனுக்கு ஒரு அந்தஸ்த்தை மக்கள் தருகிறார்கள்.

உண்மையில் தமிழ் எழுத்தாளனாக இருப்பது ஒரு அவமானம். சீரழிந்த தமிழ்ச் சமூகத்தில் அவனுக்கு எந்த மதிப்பும் கிடையாது. தனக்கு ஒரு அந்தஸ்த்து இருப்பதாக நம்புவதும் பேதமை. விதி கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் தமிழ் எழுத்தாளனாக பிறப்பது மட்டும் ஒரு துரதிஸ்டம்தான். பின் ஏன் அவர் தொடர்ந்து எழுத்தாளனாக இயங்க வேண்டும்?

கலைஞன் சக மனிதர்களைக் காட்டிலும் எந்தவிதத்திலும் உயர்ந்தவன் கிடையாது. அப்படி நினைத்தாலே மிகச்சிறந்த கதைகளை எழுதமுடியாது. எழுத்தாளனைவிட எல்லாவிதத்திலும் உயர்ந்த மனிதர்களை அறிந்தபடியேதான் இருக்கிறான். மோசமான எழுத்தாளன் மிகச்சிறந்த படைப்பை தந்துவிடமுடியும். எனவே அவனைவிட அவனது படைப்பு மேலானதாக இருக்கிறது. அந்தஸ்து என்பதை சமூகம் தருகிறது. ஒரு எழுத்தாளனின் இடையறாத எழுத்து பங்களிப்பிற்காக சமூகம் கொண்டாடுகிறது. புதுமைப்பித்தன் வறுமையில் ரத்தம் கக்கித்தானே செத்தான். பாரதி ஒரு வாய் சோற்றுக்கு அழைந்து திரிந்துதானே வீழ்ந்தான். எழுத்தாளனுக்கு அவன் வாழ்கிற காலத்தில் சிறிதளவு நன்மதிப்பு அங்காங்கு கிடைத்திருக்கலாம். கூடைபின்னுபவன் கலைநேர்த்தியோடு முடைந்து தரத்தான் செய்கிறான். கட்டிலுக்குக் கயிறு போடுகிறவன் விண்ணென அதிரும்படி பின்னலிலே தன் கைவண்ணத்தை கொட்டிவைத்து விடுகிறான். எழுத்தாளனும் தன் படைப்புகள் வழி இதுபோன்ற ஒரு செயலைத்தான் செய்கிறான்.

ஆனால் சாதாரண மனிதனைக்காட்டிலும் ஆயிரம் மடங்கு எழுத்தாளனுக்கு பொறுப்பிருப்பதாகக் கருதுகிறேன். தன் எழுத்தின் வழி இந்த சமூகத்தை அறவழியில் ஆற்றுபடுத்தியபடியே இருக்கிறான். தாஸ்தாவேஸ்கி செய்ததை டால்ஸ்டாய் செய்ததை ப.சிங்காரம் செய்ததை இளங்கோ செய்ததை. செல்மா லேகர்லெவ் செய்ததை. புதுமைப்பித்தன் செய்ததை கம்பன் செய்ததை- போல நானும் ஒன்றை செய்துவிட்டுப் போகிறேன். இது அந்தஸ்து கிடையாது. பிறந்ததன் பயன். என்ன பிக்கல்பிடுங்கல்களுக்கு ஆளானாலும் விவசாயி பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதுபோல ஒரு செயல்பாடு. அவனுக்கு வேறு செய்யத்தெரியாது. இந்தக் காரியத்திற்காக இளங்கோவடிகளை இந்தச் சமூகம் கொண்டாடுகிறது. எனவே நான் காரியமாற்ற மட்டுமே வந்திருக்கிறேன். இகழ்ந்தாலும் இதை செய்ய வேண்டுமென்பதே என் அவா.

சுந்தர ராமசாமி, மார்க்சிய பின்புளம் கொண்ட பேராசிரியர்களின் நட்பு, ஜெயமோகனின் நெருக்கம், தமிழினி வசந்தகுமாரின் அருகாமை என பல்வேறு ஆளுமை கொண்டவர்கள் மத்தியில் பயணிக்கிறீர்கள். குறிப்பிட்ட ஒருவரின் ஆளுமை உங்களை பாதித்துள்ளதா? உங்களின் அசலான ஆளுமையைத் தக்கவைத்துள்ளீர்களா?

சு.வேணுகோபால்:  மேலான இலக்கியம் எது என்பது குறித்த புரிதலை இவர்களின் வழி எடுத்துக்கொண்டிருக்கிறேன். பாதிப்பு என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இவர்களின் படைப்பாக்கம் குறித்த சிந்தனைகளால் ஊக்கம் பெற்றிருக்கிறேன். ஒவ்வொருவரிடமிருந்தும் படைப்பிற்கான நல்லம்சங்கள் எனக்குள் வந்தடைந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

முற்போக்கு எழுத்துக்கள் மீது தூய கலை இலக்கியவாதிகள் கடுமையான விமர்சனம் வைத்தபோதெல்லாம் படைப்புக்கலையின் சாரங்களையெல்லாம் உள்வாங்கிக்கொண்ட முற்போக்குக் கதைகளை ஏன் படைக்கக்கூடாது என்று நினைத்திருக்கிறேன். ஞானியின் சமூகவியல் பார்வையையும் சுந்தர ராமசாமியின் கலைப்பார்வையையும் உறிஞ்சிக்கொண்டே ஒரு படைப்பியக்கம் உருவாவது நல்லது என்று நினைத்திருக்கிறேன். நம் முற்போக்காளர்கள் இந்த இடத்திற்கு நகரவில்லை. ஒவ்வாமையாகவே பார்த்தார்கள். இன்றும் பார்க்கிறார்கள்.

என் பேராசிரியர் தி.சு.நடராசன், க.கைலாசபதி வழிவந்தவர். சமூகச்சிக்கல்களை ஆராய்கிற படைப்புகளுக்கு முக்கியத்துவம் தந்தவர். அவர் தி.ஜானகிராமன் கலைநோக்கம் குறித்து மிகச் சிறந்த ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ‘பெண்களை மிகப்பரிவுடன் பார்த்த படைப்பாளி’ என்கிறார். முற்போக்கு முகாமில் ராஜம் கிருஷ்ணனை மிக முக்கியமான படைப்பாளியாக முன்வைப்பதுண்டு. அந்த முற்போக்கு இயக்கத்தில் இருக்கிற தி.சு.நடராசன் என்னிடம் சொன்னார். ‘பட்டாசு தொழிற்சாலை, தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைசெய்பவர்களைப் பற்றி ராஜம் கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். தீக்குச்சி அடுக்கும் பையன்களின் ஆள்காட்டிவிரல்கள் எல்லாம் கருத்து காய்கட்டிப்போவதை அவரால் எழுதமுடியவில்லை. சின்ன சின்ன விசயத்திலும் கவனம் கொள்ளாத எழுத்து படைப்பாகாது’ என்று என்னிடம் சொன்னார். விசயத்தை அனுபவமாக்கித்தரவேண்டும் என்பதை தி.சு. நடராசனிடமிருந்து பெறலாமே.

படைப்பில் தற்செயலாக உருவாகிவிடும் கவித்துவ தெறிப்பை, சித்திரத்தை, எக்களிப்பை ஜெயமோகனிடமும் வசந்தகுமாரிடமும்தான் கற்றேன். (வெங்கட்சாமிநாதன் இம்மாதிரி இடங்களை வெகுவாக கண்டடைந்து சொல்லி இருக்கிறார்). கொஞ்சம் இதைமாற்றிச் சொல்லலாம். கவித்துவம் குறித்து இவர்களின் உரையாடல்களைக் கேட்கும் முன்பே என் படைப்பில் இயல்புடன் கூடவந்திருக்கும் இடங்களை வசந்தகுமார் எடுத்து எனக்கே சொல்லி இருக்கிறார். இது பற்றிய மேலதிகமான பார்வையை இவர்கள் உண்டாக்கினர். ஜெயமோகனின் ‘நாவல்’ நூல், நாவல்குறித்த பெரிய திறப்பை ஏற்படுத்தியது. ஞானி சமூகவியல் தளத்தில் நின்று பார்வையை விசாலமாக்கினார்.

இவர்களின் கலைநோக்கு எனக்கு ஆக்கத்தைத் தந்திருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன். வசந்தகுமார் சொல்லுவார் “வேணு ஜானகிராமன் பாதிப்பின் சின்ன தடயம் கூட  உன் படைப்பில் இல்லையே” என்பார். எனக்கு இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. எனவே இந்த பாதிப்பை இலக்கிய உணர்வு என்று கொண்டால் சரியாக இருக்குமா? எனக்கான உலகிலிருந்து என் இயல்பிற்கு உகந்தபடி என் எழுத்து உருவாகிவருகிறது. அது என் அசலான ஆளுமையை வடிவமைக்கிறது என்று சொல்லலாம்.

ஒரு நாள் இரவு விக்டர் க்யூகோ பற்றியும் சேக்ஸ்பியர் பற்றியும் வசந்தகுமார் அண்ணன் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று பாதியில் நிறுத்திவிட்டு “வேணு நீ எவனையும் படிக்க வேண்டாம். நீ பாட்டுக்கு எழுது. எழுதுறத மட்டும் பாரு. இவன்கள படிக்காமலே இவன்க சொல்லாதத உன் உலகத்திலிருந்து சொல்லமுடியும். இந்த அல்ற சில்ற வேலையெல்லாம் பாக்காத. அதில் எந்த புரோஜனமும் இல்ல” என்றார். என் அசல்தன்மையைக் கண்டுகொண்டு சொன்னவர் வசந்தகுமார். ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். கணையாழியில் நன்றாக எழுதும் புதியவர்கள் பத்துபேரை குறிப்பிட்டு “இதில் சு. வேணுகோபால் தனித்துவமானவர்” என்று அடையாளப்படுத்தினார். இவர்கள் மதிக்கின்ற அளவு நான் அதிகம் எழுதவில்லையே என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது.

தமிழில் இன்று நீங்கள் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்கள் யார்? ஏன்?

சு.வேணுகோபால்: கவிஞர்களில் அழகுநிலா, குணாகந்தசாமி, இசை, ஆசை, சபரிநாதன், தேன்மொழிசதாசிவம், சம்யுக்தா மாயா, கார்த்திக் நேத்ரா, கண்ணகன், தென்றல், போகன் சங்கர், கீதா சுகுமாரன், கார்த்திக் திலகன், த. அகிலன், தமிழ்நதி, லதா, யாழினி போன்றோர்களின் கவிதைகளை அவ்வப்போது படிக்கிறேன். இன்றும் சில பெயர்கள் இருக்கின்றன. உடனடியாக நினைவிற்கு வரவில்லை.

கண்ணகன் தமிழ்மொழி கொண்டிருக்கும் மரபின் செழுமையை அளவோடும் அர்த்தத்தோடும் பயன்படுத்தி புதிய அனுபவத்தைத் தருகிறார். அழகுநிலா தன் குட்டி குட்டி கவிதைகள் வழி வாழ்வின் சில கோலங்களை எளிய தத்துவசாயல் கொண்டதாகக் காட்டுகிறார். கார்த்திக் திலகன் மரணம் குறித்து எழுதியிருக்கும் கவிதைகள் என்னை மிகுந்த பதட்டத்திற்குள்ளாக்கின. அன்பின் வலியை மௌனமான துயரின்வழி மிக எளிதாகச் சொல்லிவிட முடிகிறது. இப்படி ஒவ்வொருவரிடமும் வித்தியாசமான அனுபவத்தைப் பெறமுடிகிறது.

புனைகதையாளர்களில், கார்த்திகை பாண்டியன், சுனில் கிருஷ்ணன், ஜீவ கரிகாலன், தூரன்குணா, பா.திருச்செந்தாழை, காலபைரவன், அசதா, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், என். ஸ்ரீராம், குமார் அம்பாயிரம், ஜி.காரல்மார்க்ஸ், சிவக்குமார் கிருஷ்ணமூர்த்தி, சுரேந்திரக்குமார், ஹரண் பிரசன்னா, ராஜகோபால் இவர்களின் கதைகளைச் சிதறலாகப் படித்திருக்கிறேன். முன்னோடிகள் எழுதா இன்றைய வாழ்க்கையை நம் முன்வைக்கின்றனர். என்.ஸ்ரீராமிற்கு சொல்ல நிறைய இருக்கிறது. இந்த காட்சிஊடகத்திற்கு தரும் முக்கியத்துவத்தைச் சற்றே குறைத்து எழுத்திற்குத் தந்தால் அவனால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். அவன் ஒரு எல்லைவரைக்கும் புனைகதையை நன்றாக கொண்டுவந்துவிடுகிறான். அதில் அவன் மேலதிகமாக சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எம்.கே. குமார் என்றொருவர் ‘அலுமனுயப் பறவை’ என்றொரு நல்ல கதையை எழுதியிருக்கிறான். அவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ராஜகோபால் தன் ‘கன்னிப்படையில்’ கதையில் சீரழிக்கப்பட்ட தன் மகளின் கண்ணியத்தை நிலைநாட்ட ஏழை தந்தை கொண்ட துயரார்ந்தஅறச்சீற்றத்தை மனம் துடிக்க கொண்டுவந்திருக்கிறார்.

இதில் இன்னும் சிலரை வேறொரு இடத்தில் குறிப்பிட்டிப்பதால் இங்கு விடுகிறேன்.

தமிழ் இலக்கியம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என தமிழகத்தைத் தாண்டி எழுதப்படுகிறது. ஆனால் தமிழகத்து படைப்பாளிகள் மட்டும் தமிழ் இலக்கியம் படைப்பதாய் தொடர்ந்து பார்க்கப்படுகிறது. ஜெயமோகன் உள்ளிட்ட வெகுசிலரே மொத்த தமிழ் இலக்கியச் சூழலையும் கவனத்தில் எடுக்கின்றனர். உங்களுக்குப் பிற நாட்டு தமிழ் இலக்கியங்கள் அறிமுகம் உண்டா?

சு.வேணுகோபால்: உண்டு. தமிழகத்தைத் தாண்டி வெளிதேசங்களில் எழுதும் முக்கியமான தமிழ்ப் படைப்பாளிகள் குறித்து தமிழகச்சூழலில் அதிக கவனம் இல்லை என்பது உண்மைதான். இதை உடைத்துவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். நாம் ஒருவருக்கொருவர் உறவுகொள்ள முடியாது இருந்தது ஒரு காரணம். நம்படைப்புகளை பொதுதளத்தில் வைத்து படிக்கவும் விவாதிக்கவும் ஒரு பொது வெளியை சரியானமுறையில் உண்டாக்கவில்லை. மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் அரசு சார்பாக எவ்வளவோ மாநாடுகள் நடந்தன. அதில் மிக முக்கியமான படைப்பாளிகளை ஒருங்கிணைக்கவில்லை. இப்படியான மரபை நாம் உண்டாக்கவில்லை. இதையெல்லாம் மீறி குறைந்தபட்சமேனும் முப்பது நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கியங்களைத் தமிழக வாசகர்கள் படித்துக்கொண்டுதான் வருகிறார்கள். கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எண்பதுகளின் இறுதியில் பரவலாகப் படிக்கப்பட்டது. தமிழகக் கல்விப்புலங்களில் க.கைலாசபதி, க.சிவத்தம்பி வேலுப்பிள்ளை, எம்.ஏ.நுஃமான் போன்றோரின் ஆய்வு நூல்களுக்குத் தனித்த வரவேற்பும் மதிப்பும் இருந்தது. போர்ச்சூழல் உருவாக்கிய கொந்தளிப்பான படைப்பியக்கத்திற்கு இங்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.

எண்பதுகளுக்கு முன் க.நா.சு., வெங்கட்சாமிநாதன் போன்றோர் முக்கியமான இலக்கிய சிபாரிசுகாரர்களாக இருந்தார்கள். அவர்கள் உலகளாவிய தமிழ்ப் படைப்பாளிகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. அங்கு எழுதப்படுபவை இலக்கியபூர்வமானவை இல்லை என்ற பொதுக்கருத்தும் நிலவியது. அவர்கள் சுட்டிக் காட்டியதற்கு ஒரு வரவேற்பு இருந்தது. பிரமிள், சுந்தர ராமசாமி போன்றோர் படைப்பாளிகள் குறித்து மிகக் குறைவாகத்தான் தொட்டார்கள். எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் இருவரும் இங்கு இவர்களால் நன்றாக விவாதிக்கப்பட்டார்கள். இருவரது படைப்புகள் முற்போக்குக்கு எதிர் நிலையில் நற்போக்கு இலக்கியம் என்று பேசப்பட்டதால் இங்கு தூய கலை இலக்கியவாதிகளால் வரவேற்கப்பட்டது. மார்க்சியர்கள்தான் ஈழத்து படைப்புகளை அதிகம் பேசினார்கள். ஆனால் இவர்களின் சிபாரிசுகளை கல்விப்புலம் சார்ந்த வாசகர்கள் ஏற்றார்கள். இலக்கியதளத்தில் இருந்த வாசகர்கள் பொருட்படுத்தவில்லை. செ.கணேசலிங்கம். கே.டேனியல், போன்றோர்கள் இங்கு அதிகம் பேசப்பட்டவர்கள். உமாவரதராஜனின் ‘உள்மனயாத்திரை’ இலக்கியவாதிகள் வரவேற்றார்கள். இம்மாதிரியான இலக்கிய உறவு மலேசிய, சிங்கப்பூர் இலக்கியங்களுக்கு ஏற்படவில்லை.

புரிகிறதோ புரியவில்லையோ எம்.ஏ.நுஃமான் தொகுத்த ‘பதினோரு ஈழத்து கவிஞர்கள்’, சித்திரலேகா தொகுத்த ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்புகளைப் படித்தேன். தொடர்ந்து கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ தேவகாந்தனின் ‘விதி’, ‘சொல்லவல்லாயோ’ ‘எழுதாதசரித்திரங்கள்’ போன்ற நூல்களை அந்த சமயத்திலேயே படித்தேன். ‘கனவுச்சிறை’ தமிழ்நாட்டிலிருந்து சிறுசிறு நூல்களாக வந்தபோது கோவையில் ஞானியும் நானும் முன்னிற்று ஒரு விமர்சனகூட்டத்தை நடத்தினோம்.

‘தாமரைச்செல்வி’ குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு எழுத்தாளர். விடுதலைப் புலிகள் குழுவில் இருந்த மலைமகள் எழுத்து எனக்குப் பிடித்தது. ஆனால் அவரது தொழில் எழுத்தாக இல்லை. வீராங்கனையாக வாழ்வதில் இருந்தது. போரில் இறந்துவிட்டார்என்று நினைக்கிறேன்.

தனிப்பட்டமுறையில் தமிழ்வாசகனாக மு.தளையசிங்கத்தின் ‘புதுயுகம் பிறக்கிறது’ ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ ‘தனி வீடு’ எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’ என சிலவற்றை படிக்க முடிந்தது. எஸ்.பொ.வின் ‘மாயினி’ சற்று பின்னால் வந்த நாவல். அதற்கு ஞானியோடு சேர்ந்து விழா எடுத்தோம். ஈழத்தில் பதிப்பிக்கப்படும் நூல்கள் தமிழகத்திற்கு வந்து சேர்வதிலும் முறையாக வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் வாசக பாலமோ பதிப்பக உறவுகளோ அதிகம் இல்லை. வாசந்தி ஈழத்து சிறப்பிதழ் ஒன்றை இந்தியா டுடேயில் கொண்டுவந்தார். பேசப்பட்டது. பாவைசந்திரன் சிங்கபூர், மலேசிய சிறப்பிதழ் ஒன்றை புதிய பார்வை இதழ்வழி கொண்டுவந்தார். அவ்வளவாகப் பேசப்படவில்லை. எஸ்.பெ. தமிழகத்திற்கு வந்து மித்ர பதிப்பகத்தைத் தோற்றுவித்தபோது சில நூல்கள் தமிழகச் சூழலுக்கு நேரடியாக வந்தது. ‘பனையும் நெருப்பும்’ ‘ஒரு கூடை கொழுந்து’ போன்ற தொகுப்பு நூல்களுக்கு வரவேற்பும் விவாதங்களும் உண்டாகின. ஏதோ ஒரு வழியில் மாத்தளை சோமு, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், செ.யோகநாதன் போன்றோர் படைப்புகள் தமிழக வாசகர்களுக்கு வந்தன.

1990 களுக்குப்பின் ஈழத்து எழுத்துமுறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி முதலியோரின் எழுத்துக்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு உண்டாயிற்று. இவர்கள் குறித்து நானும் எழுதியிருக்கிறேன். ஓரளவு ஈழத்து எழுத்துக்கள் தமிழகச் சூழலில் ஓரளவு விவாதிக்கப்பட்டன. ஆனால் அது முழுமையான வடிவில் தமிழ் உறவில் நிகழவில்லை. சிறுசிறு நண்பர்கள் வட்டங்கள் சார்ந்து நிகழ்ந்தன. இந்த அளவிற்குக்கூட மலேசிய சிங்கப்பூர் இலக்கியம் இங்கு விவாதிக்கப்படவில்லை. ஈழத்து இலக்கியங்களுக்குத் தந்த முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இத்தேச தமிழ் இலக்கியங்களுக்குத் தரப்படவில்லை. மலேசிய நவீன இலக்கியத்தின் பெருந்தொகை நூல்கள் தொண்ணூறுகளில் வந்தன. இங்கு அவை வாசிக்கப்படவில்லை. இவர்களின் எழுத்துக்கள் கலைநேர்த்தியோடு வெளிப்படவில்லை என்ற விமர்சனம் தமிழகச் சூழலில் உண்டு. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி N.G.M கல்லூரிக்கு வந்த மலேசிய பேராசிரியர் ஒருவரிடம் இது குறித்து ஒரு விவாதத்தை முன்வைத்தேன். மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தை விமர்சனபூர்வமாக அணுகி சிறந்த தொகுப்பொன்றை தேர்ந்துகொண்டு வந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அப்படியான முயற்சி நடைபெறவில்லை என்றார். விமர்சனத்தைவிட எழுதியதையும் எழுதப்படுவதையும் முக்கியத்துவப்படுத்துவதாகச் சொன்னார்.

இது ஒரு நல்ல தருணம் என்று நினைக்கிறேன். மலேசிய சிங்கப்பூர் இலக்கியங்களை விமர்சனப்பூர்வமாக அணுகி தொகுத்து விவாதத்தை உண்டாக்க வேண்டும். ஒரு வாசகனாக சா. கந்தசாமி தொகுத்த ‘அயலகத் தமிழ் இலக்கியம்’, சை.பீர்முகம்மது தொகுத்த ‘வேரும் வாழ்வும்’ தொகுப்புகளைப் படித்திருக்கிறேன். இத்தொகுப்புகளில் நா.கோவிந்தசாமியின் ‘மதிப்பீடுகள்,’ பாகு. சண்முகத்தின் ‘ஐந்தடியில் ஓர் உலகம்’ சீ.முத்துச்சாமியின் ‘இரைகள்’, மா. சண்முக சிவாவின், ‘வீடும் விழுதுகளும்’ கதைகள் மலேசிய வாழ்வை கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னதாக நினைவு, ரெ. காத்திகேசுவின் சில கதைகள் பொருட்படுத்தத்தக்கனவையாக இருந்தன. இங்கு நான் குறிப்பிடும் எழுத்தாளர்களைவிட மிகச்சிறந்த படைப்பாளிகள் இருந்திருக்கலாம். ஒரு சிலரின் அபூர்வமான படைப்புகள் வந்திருக்கலாம். அவ்விதமான ஆக்கங்கள் எங்களுக்கு வந்து சேரவில்ல. அதற்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம். ‘நினைவுச்சின்னம்’ ‘சயாம் மரணரயில்’ நாவல்கள் தமிழ் நாட்டிலும் பதிப்பிக்கப்பெற்றதால் எளிமையாகக் கிடைத்தன.

தற்போது எழுதும் இளைஞர்களில் தேவராஜன், இந்திரஜித், எம்.கே.குமார் சித்துராஜ் பொன்ராஜ் இவர்களின் இரண்டுமூன்று கதைகள் படித்ததின்வழி பொருட்படுத்தத் தக்கவர்களாக இருக்கிறார்கள். நவீனின் இரு தொகுப்புகளைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. மலேசிய தமிழ் இலக்கியத்தின் அசலான புதிய குரலாக இருக்கிறது. வாழ்க்கையை விலகி நின்று பார்க்கவும், கசப்பான உண்மைகளை சஞ்சலம் இல்லாமல் சொல்லும் குணத்தை இயல்பிலேயே பெற்றிருக்கிறார். மௌனம் என்பது மௌனம் அல்ல என்பதைப் புரிந்த கலைஞனாக இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மலேசிய சிங்கப்பூர் படைப்புகள் தமிழகச்சூழலில் பொருட்படுத்தி பேசப்படவில்லை. நான் தனிப்பட்ட முறையில் சில தொகுப்பு நூல்களின் வழி மலேசிய சிங்கப்பூர் கதைகளைப் படித்தேன். தவிர தீவிரமாக மலேசிய தமிழர்களின் தமிழ் இலக்கியப் பங்களிப்பு என்ன என்று அறிய திட்டமிட்டுப் படிக்கவில்லை. முக்கியமாக அப்படியான எண்ணத்திற்கு நல்ல நூல்கள் வந்து சேரவில்லை. பதிப்பகச் சூழலும் காரணமாக இருக்கலாம். முதலில் நாம் மனம் திறந்து பேச வேண்டும். அதற்கு ஒரு நல்ல சூழல் உருவாகி வருகிறது என்று நினைக்கிறேன். முக்கியமாக மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழக பதிப்பகங்கள் வழி வருவது நல்லது. இதை ஒரு புதிய மரபாக உண்டாக்க வேண்டும். அப்படி வரும்போது இன்னும் கூடுதலான விவாதத்தை உண்டாக்கும். ஈழத்து படைப்புகள் பெரும்பாலும் தமிழகப் பதிப்பகங்கள் வழி வருகின்றன. அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்ற எழுத்தாளர்களை தமிழக வாசகர்கள் கொண்டாடுகிறார்கள். முக்கியமான மலேசிய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழக நிலப்பரப்பிலும் கொண்டாடும்படி நாம் கொண்டு சேர்க்கவேண்டும். சத்தியத்தைத் ஏற்றிருக்கும் படைப்புகள் நிச்சயம் கொண்டாடப்படும். எனக்கு நேரம் வாய்க்குமானால் இன்றைய மலேசிய இலக்கியம் பெற்றிருக்கும் பெருமதியை படித்தறிந்து சொல்ல முயல்கிறேன். காலத்தை மாற்ற முயல்வோம்.

புயலிலே ஒரு தோணி போன்ற புலம்பெயர் வாழ்வைச் சொல்லும் முயற்சிகள் தமிழ் நாவல்களில் தொடராதற்கு என்ன காரணம்?

சு.வேணுகோபால்: ப. சிங்காரத்திற்கு இருந்த அடர்த்தியான அனுபவமும் அதை இலக்கியமாக்கும் கலைஉணர்வும் பலபேரிடம் இல்லை. தமிழ்ப்பண்பாட்டை உள்வாங்கிய மிகச்சிறந்த காதல்கதை சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ என்பேன். அந்நாவலில் வரும் அத்தனை மாந்தர்களும் அவரவர்கள் நிலையில் வெளிப்படையாக நிற்கிறார்கள். செல்லையாவை விட வில்லனாகத் தோன்றுகிற மரகதத்தின் தகப்பனார் வானாயீனா (வைரமுத்துப்பிள்ளை)தான் மிகச் சிறந்த பாத்திரம். இதற்கு அனுபவம் மட்டும் போதாது. இரண்டாயிரம் ஆண்டு மரபின் சாரத்தைப் புரிந்துகொண்டவர்களாலே எழுதமுடியும். ப.சிங்காரத்திற்கு வாய்த்திருக்கிறது. இயல்பிலேயே இலக்கிய உணர்ச்சிகொண்ட உள்ளம் அவரது. புலம்பெயர்ந்தோருக்கு இதெல்லாம் கூடிவந்தால்தான் இலக்கியம் படைக்க முடியும்.

புலம் பெயர்ந்தர்களுக்கெல்லாம் இலக்கிய கனவு இருக்குமா என்று சொல்வதிற்கில்லை. அவர்களது எதிர்பார்ப்பு வேறானவை. வாழ்க்கையின் விநோதங்களை உற்று உணரும் மனம் கொண்டவர்களால் மட்டுமே இலக்கியச் சுடரை ஏற்றமுடியும். வரலாற்றின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட புலபெயர்ந்த மனிதர்களால் எழுதியிருக்கமுடியும். ஆனால் அவர்களுக்கு இலக்கிய வாசிப்பு உணர்வு சிறிதளவேனும் இருந்திருக்க வேண்டும். இந்த இணைவு புலப்பெயர்ந்தவர்களிடம் இல்லாமல் போயிருக்கலாம்.

வாழ்வை தலைகீழாகப் புரட்டிப்போட்ட போர்ச்சூழல் தந்த பேரனுபவம் சிங்காரத்திற்கு வாய்த்தது. மட்டுமல்லாமல் சூழலையும் மனிதர்களின் விசித்திர வெளிப்பாடுகளையும் இளைஞர்களின் மகத்தான எழுச்சி வீழ்ச்சிகளையும் பெருவிருப்போடு அறியும் மனம் அவருக்கு இருந்தது. இதற்கெல்லாம் மேலாக ப.சிங்காரத்தை நினைக்கும் போதெல்லாம் படைப்பு மனம் என்பது ஒரு மனவார்ப்பு என்றே நினைக்கத் தோன்றுகிறது. சரஸ்வதி நாக்கில் எழுதிவிட்டாள் என்பார்களே அது போலத்தான்.

பெருஞ் செல்வந்தரான தாகூருக்கு செல்வத்தின் மீது பிடிப்பில்லை. அவரது அந்தராத்மா இலக்கியத்தின் மீதே நேசம் கொண்டிருந்தது. டால்ஸ்டாய் பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர். நிலங்களைப் பராமரித்து சொகுசாக வாழ்ந்திருக்க முடியும். அவரது இலக்கியகனவு தெருவிற்குத் துரத்தியது. இது ஒரு கிறுக்குத்தனமான செயல்பாடுதான். இலக்கியத்தைத்தான் அவரது மனம் தேர்வுசெய்தது. இலக்கியம் சோறு போடாது என்று தெரிந்திருந்தும் புதுமைப்பித்தன் அதன் கவர்ச்சியாலே போய்ச் சேர்ந்தார். மற்றொன்று புலம் பெயர்த்தவர்களுக்கு இலக்கிய வழிகாட்டிகள் இருந்தால் ஓரளவு சாத்தியப்பட்டிருக்கும். ஆனால் மகத்தான இலக்கியமாக உருவாவதற்கு படைப்பாளியின் தனித்தன்மைதான் பங்காற்றுகிறது.

சிறுகதை, நாவல் போன்ற புனைவுகளில் கருத்து பிரச்சாரத்திற்கு முன்னுரிமை கொடுத்த காலம் ஒன்று இருந்தது. அவை சிறந்த இலக்கியங்களாக இன்றும் ஒரு தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இன்றைய சூழலில் இலக்கியப்படைப்புகளில் கருத்துப்பிரச்சாரம் முற்றாகத் தவிர்க்கப்படுகிறது. இது ரசனை மாற்றமா? அல்லது இலக்கிய வளர்ச்சியா?

சு.வேணுகோபால்: ஒரு சமூகப்பிரச்சனையை அப்படியே நாவல் வடிவிலோ சிறுகதை வடிவிலோ தருவதல்ல இலக்கியம் என்ற புரிதல் ஏற்பட்டிருந்தாலும் முற்போக்கு நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் ஒருவர் சமூக மோதலை முன்வைத்து எழுதிய எழுத்துக்களை மாவட்டம் தோறும் இலக்கிய கூட்டங்களை ஏற்படுத்தி உடனுக்குடன் கொண்டாடிவிடுகிறார்கள். அதன் இலக்கிய பெருமதிப்பைப் பற்றி அக்கறையுடன் பேசுவதைத் தவிர்க்கிறார்கள். உதாரணமாக எடப்பாடி அரசின் அரசியல்-ஜனநாயக கூத்துக்களை தொகுத்து ஒருவர் எழுதினால் உடனடியாக பாராட்டுவார்கள். நேரடி விமர்சனம் ஒரு இலக்கியத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. இலக்கியம் என்பது கால்பக்கத்தைமட்டும் பார்ப்தல்ல முழுமையையும் பார்ப்பது. நாவலாசிரியன் தனக்குள் மிகக்கூடுதலான உழைப்பைச் செலுத்துகிறான். சேலம் எட்டுவழிச் சாலை பிரச்சனையை வைத்து என்னால் பத்தே நாட்களில் 500 பக்க நாவலை எழுதிவிட முடியும். முற்போக்கு நண்பர்கள் எழுதுவதைக்காட்டிலும் பலமடங்கு நுட்பத்துடனும், பலத்துடனும். ஆனால் அப்படி செய்யமாட்டேன். இங்கு என்ன நடக்கிறது என்றால் அதை இலக்கிய சன்ஸ்யூமர் போல அவசர அவசரமாக முந்தி செய்துவிட வேண்டும் என்று எழுதுகிறார்கள். பிரச்சனைகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. அதை இலக்கியத்தின் போர்வையில் எழுதி என்னை இலக்கியவாதி என்று சொல் என அடம் பிடிக்கிறார்கள். அதே முற்போக்கு தளத்தில் சிறப்பாக எழுதிய எழுதும் எழுத்தாளர்களை முன்னுதாரணமாகக் கொள்வதில்லை. தமிழ்ச்செல்வன் தொடர்ந்து எழுதவில்லை என்றாலும் அவருடைய கதைகள், கி.ரா ; பூமணி கதைகள். உதயசங்கர் எளிய ஆசைகள் சிதறுண்டுபோவதை நன்றாக எழுதியிருக்கிறார். பவா. செல்லத்துரை ஒரு தொகுப்பு கொண்டு வந்திருந்தாலும் இலக்கியத்தின் புதிய முகமாகவும் புதிய அழகியலாகவும் இருக்கிறது. சு.வெங்கடேசன் இயக்கத்தின் தலைமையை ஏற்று நடத்தினாலும் ‘ காவல் கோட்டம்’ நாவல்வழி ஆட்சிமாற்றங்கள் தமிழ்ச்சமூகத்தை எவ்வாறெல்லாம் பாதித்து உருமாற்றியது, இழப்புகளை சந்தித்தது : எதிர்ப்புகளை எதிர்கொண்டது இனக்குழுத் தன்மை கொண்டிருந்த வாழ்வியல் முறை சீரழிந்தது என்பதை பிரச்சாரம் இல்லாமல் செய்திருக்கிறார். என் மீது மிகப் பிரியம் கொண்டிருந்த கந்தர்வன், ‘டேய் யப்பா, என் கவிதைகள் போராடுவதற்கான பிரச்சாரத்தை கொண்டிருப்பவை. அது அப்படித்தான் கண்டுக்காத. என் கதைகள் இலக்கியப்பூர்வமானவை’ என்று சொன்னார். எது இலக்கியம் எது இலக்கியம் இல்லை என்பதில் கந்தர்வன் தான் எழுதியவற்றை முன்வைத்தே பேசியுள்ளார். முற்போக்கு நற்போக்கு பிற்போக்கு எல்லாவற்றிகும் அப்பால் அவரது கதைகள் தரமானவை. பா. செயபிரகாசம், இராஜேந்திரச்சோழன் சமூக முன்னேற்றத்தை முன்னெடுப்பது தான் இலக்கியத்தின் பணி என்று பின்னாளில் இயங்கியவர்கள். இவர்களின் தொடக்ககால கதைகள் வாழ்வின் தகிப்பை மிக உக்கிரமாக வெளிப்படுத்தியவை. எழுபதுகளில் எழுதவந்த புதிய இளைஞர்களில் இவர்களின் கதைகளே உயர்ந்து நின்றன. இன்று அக்கதைகளாலேயே இவர்கள் திரும்பத்திரும்ப நினைவு கூறப்படுகிறார்கள். ‘ ‘புற்றில் உறையும் பாம்புகள்’ எழுதிய இராஜேந்திரச்சோழன் ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ எழுதிய பா.செயப்பிரகாசம் என்று அடையாளப்படுத்தப்பட்டு காலத்தை எதிர்த்து நிற்கிறார்கள். இந்தவகையில் மிக நல்ல படைப்புகளைத் தந்த முற்போக்கு நண்பர்கள் இன்னும் ஏழெட்டுப்பேர்கள் இருக்கிறார்கள்.கலை கலை என்று பேசுபவர்களை விட அசாத்தியமான சில கதைகளை இவர்கள் தந்திருக்கிறார்கள். இந்தக் கலையாற்றலைக் கொண்டு அவர்களை வீழ்த்துங்கள் என்றுதான் சொல்கிறேன்.

ஆனால் ஓரளவு இளம் தலைமுறையினரின் எழுத்துக்களில் பிரச்சாரம் இல்லை. பிரச்சனையை இலக்கிய அனுபவமாக மாற்றித்தரும் திறன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதை இலக்கிய வளர்ச்சி என்பதைவிட ரசனையில் ஏற்பட்ட மாற்றம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இது இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றுகிறது. என்ன வகை விமர்சனங்கள், கருத்து மோதல்கள் இருந்தாலும் முன்பு கைலாசபதி, சிவத்தம்பி, நா.வானமாமலை, ஞானி என்கிற தலைமை இருந்தது. இன்று வழிகாட்டுதல் இல்லாத தலைமை இருப்பது போல வெற்றிடம் தோன்றுகிறது. எழுதிக்கொண்டிருந்த முற்போக்கு முன்னோடிகள் சற்று தயங்கி நிற்கிறர்களோ என்று தோன்றவும் செய்கிறது. முற்போக்கு இலக்கிய வாதிகள் இருக்கிறார்கள். நூல்களுக்கு அங்கீகாரம் கொடுத்து அறிமுகம் செய்பவர்களாக இருக்கிறார்கள். ஜெயமோகன் போன்ற ஒரு இலக்கிய ஆளுமை இல்லை. அப்படி ஒரு தலைமையை ஏற்கிற முற்போக்கு ஆளுமை வேண்டும். புதிய இலக்கியப் போக்கு அதிலிருந்து உருவாகலாம். தமிழ்ச்செல்வன்கூட புத்தக விமர்சகராக நின்றுவிட்டார். மேலான இலக்கியக் சூழல் இவ்விதமே உருவாகும். பிரச்சாரத் தன்மை மங்கியதற்கு இனியொரு காரணமும் இருக்கிறது. முற்போக்கு வட்டத்தில் இயங்கியவர்கள் தங்கள் படைப்புகள் பிற பதிப்பகங்களின் வழி வெளிவர விரும்பினர். இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வாக மாறியது. பிரச்சாரக் குரல் அமுங்கியதற்கு இதுவும் ஒரு காரணம்.

இலக்கியம் என்பதே ஒருவகை முற்போக்குத்தான். நாம் கொள்கை சார்ந்து நம்மவர் மற்றவர் என்ற பிரித்துப் பார்த்தோம். பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்ச்செல்வன் அழைத்திருந்த த.மு.எ.க.ச. மாநில இலக்கிய மாநாட்டில் “முற்போக்குவாதிகள் காமம் குறித்து எழுத வேண்டும்” என்றேன். மற்றொரு முற்போக்கு இலக்கிய மாநாட்டில் மேலாண்மை பொன்னுச்சாமி என்னிடம் பிரியத்தோடு வந்து “வேணு மூன்று கதைகளில் காமத்தைத்தொட்டு எழுதியிருக்கிறேன். விகடனில் வந்த கதையைப் படித்திருக்கிறீர்களா” என்றார். “படிக்கவில்லை. தோழர், படிக்கிறேன், நீங்கள் எல்லாவற்றையும் சகஜமாகவும் அக்கறையோடும் எழுதுங்கள் தோழர்” என்றேன். இப்படியாக முற்போக்கு வட்டத்தில் மாற்றங்களும் நிகழ்ந்தன.

அன்று (தமிழ்ச்செல்வன் அழைத்த கூட்டத்தில்) முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைக் குறிப்பிட்டு நீங்கள் பேசவில்லை. வேறுவகையானவைகளைத்தான் முழுக்க முழுக்கப் பேசினீர்கள் என்று நண்பர்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். “நான் கேட்கிறேன் முற்போக்குத் தளத்தில் நின்று எழுதும் முக்கியமான எழுத்தாளரான ச. தமிழ்ச்செல்வனை முழுமையாக எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? நான் முழுமையாகப் படித்திருக்கிறேன். இங்கு கட்டுரை  வாசித்த ஆதவன் தீட்சண்யாவின் “நமப்பு” கதையை எத்தனைபேர் படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். நண்பர்கள் அமைதியானார்கள். முற்போக்கு நண்பர்கள் நீங்கள் படைக்கும் படைப்புகளை நாளை தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டும் என்பதற்காககத்தான் மற்றவர்கள் எவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்தேன். நம் படைப்புகளை நாமே பேசிக்கொள்வதற்கல்ல. மற்றவர்களை உலுக்கி எடுக்க வேண்டும் நண்பர்களே என்றேன். கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்த தமிழ்ச்செல்வன் நம் எழுத்துக்களை ஆழமாக்கிக் கொள்ளத்தான் தோழர் வேணுவை அழைத்தோம் என்றார்.

தேனீ சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” நாவல் நமது இலக்கியப் பரப்பில் இல்லாத ஒன்றுமட்டுமல்ல. தரமான நாவல் என்று எழுதியிருக்கிறேன். எனது நண்பர் ம.காமுத்துரையின் “நாளைக்குச் செத்துப்போவேன்” கதையைப் படித்து விட்டுத் தொலைபேசியில் அழைத்துச் சிறந்த கதை தோழரே என்றேன். அவர் நம்பவில்லை. நான் கிண்டல் பண்ணுவதாக ஐயம் கொண்டு “நிஜமா சொல்றீங்களா தோழரே” என்றார். நிஜமாகத்தான் என்றேன். விமர்சகர் மணிமாறன், ஷாஜஹான், உதயசங்கர், லட்சுமணப் பெருமாள், கிருஷி எனப் பலர் மீது நட்பும் மதிப்பும் உண்டு. இவர்களின் எழுத்துக்கள் முற்போக்குத் தளத்தில் அமைதி கூடியவை. உள்ளிருந்தும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

பல முன்னணி எழுத்தாளர்களும் புதிய படைப்பாளர்களும் திரைப்படத்துறையோடு தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். பொருளீட்ட இலக்கியத்தைவிட திரைப்படத்துறை சாதகமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உங்களுக்கு சினிமாவில் பணியாற்றும் வாய்ப்புகள் வந்துள்ளதா? அல்லது உங்கள் படைப்புகள் திரைப்படங்களாகி உள்ளனவா?

சு.வேணுகோபால்: பலமுறை வந்தது. நான்தான் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 1997-98-ல் கல்கியில் நிருபராக பணியாற்றிய காலத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் புதிய பார்வை இதழின் ஆசியைராக இருந்த பாவைசந்திரனைச் சந்திப்பேன். நீண்டநேரம் பேசிக்கொண்டிருப்போம். அவருடன் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அவர் சுஜாதாவின் ‘கொலை உதிர்காலம்’ நாவலை டி.வி. தொடராக எடுத்திருந்தார். எதிர்பார்த்த அளவு வரும்படியை தரவில்லை. இதுபற்றி என்னிடம் சொன்னவர் நல்ல படம் ஒன்றை எடுக்கலாம். நண்பர்கள் இருக்கிறார்கள். எந்த தமிழ்நாவலை படமாக எடுத்தால் சரியாக இருக்கும் என்றார். அன்று தங்கர்பச்சான் வந்திருந்தார். நான் சட்டென “நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல் மிகச்சரியான தேர்வாக இருக்கும்” என்றேன். “ஆமாம்” என்று சந்தோசம் பொங்க சிரித்தார். தங்கர்பச்சான். “அந்த நாவலை நான் படம் எடுக்க திரைக்கதையாக ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறேன்” என்றார். அந்த சந்திப்பில் வேறுபல நாவல்களைப் பற்றி உரையாடினோம். இந்த உரையாடல் தங்கர்பச்சானுக்குப் பிடித்திருந்தது. என்னை அவரது அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார். பணி நெருக்கடியால் போகமுடியவில்லை. பின் சென்னையைவிட்டு கிராமத்திற்கு விவசாயம் செய்ய போய்விட்டேன். பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவல் வெளியீட்டு விழாவில் பேச சென்னை வந்தேன். தங்கர்பச்சானும் பேச வந்திருந்தார். நாவல்குறித்து பேசினோம். நிகழ்ச்சிக்குப் பின் “வேணு என்னுடன் சேர்ந்து பணியாற்ற வாருங்கள். நல்ல எதிர்கலம் உண்டு என்று முகவரி தந்தார். நானும் சரி என்றேன்.” விவசாய வேலையிலிருந்து என்னால் விடுவித்துக்கொண்டு வரமுடியவில்லை. அதன்பின் ‘அழகி’ படம் வந்தது.

இதேபோல பாலுமகேந்திரா என்னை உதவியளாராக வைத்துக்கொள்ள விரும்பினார். கல்கியில் இருந்தேன். வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் அவரின் அழைப்பின் பேரில் போயிருக்கிறேன். இந்தத் தொடர்பு ரெவித்தம்பியால் ஏற்பட்டது. ராமன் அப்துல்லா படம் தோல்விக்குப்பின் ஒரு வெற்றிப்படத்தைத் தரவேண்டும் என்று நினைத்தார். ஒன்லைன் கதையைச் சொல்லி நீங்கள் எழுதவேண்டும் என்றார். அதை கொஞ்சம் வளர்த்தெடுத்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர்களைத் தேடினார். அவ்வப்போது சந்தித்து கதை குறித்துத் தொடர்ந்து உறையாடினோம். அவர் தொலைபேசியில் ஏறிவரும் தயாரிப்பாளர்களோடும், இறங்கிச் செல்லும் தயாரிப்பாளர்களோடும் தொடர்ந்து பேசினார். என்னால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவரது அலுவலகம் சென்று பார்க்க முடிவதாக வேலை இருந்தது. ஒரு கட்டத்தில் பாலுமகேந்தரா சிறுகதைகள் தொலைகாட்சி வழியாக குறும்படமாக்கலாம் என்று முயன்றார். படமாக்க உகந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் தீவிரமாக மூழ்கினார். நானும் சில கதைகளை நகல் எடுத்துத் தந்தேன். கிட்டத்தட்ட இந்த திட்டம் வெற்றியடையும் போல இருந்தது. முழுநேரமாக என்னுடன் பணியாற்றுங்கள் என்றார். சரியான தேர்வாக இருந்தது. கல்கியை விட்டு ஊருக்கு வந்தேன். என் திருமணம் தொடர்பாக வீட்டினர் மூழ்கினர். சினிமாவிற்குப் போகிறேன் என்று சொல்லக் கூச்சம். விவசாயத்தைக் கையில் எடுத்தேன். பாலுமகேந்திராவிடம் சொல்லாமல் கொள்ளாமல் நின்றுகொண்டேன். ஒன்பது மாத இடைவெளியில் சன் தொலைக்காட்சிகளில் பாலுமகேந்திரா கதை நேரம் தொடரப்போகும் விளம்பரம் வந்தது. தொடங்கியபின் போய் நிற்பது முறையாகாது என்று விவசாயத்திலேயே மூழ்கிவிட்டேன்.

பின் விவசாயம் எழுத்து என்ற நிலையில் மட்டும் இருந்தேன். சிறுகதைகள் எழுதினேன். தமிழினி வசந்தகுமார் என் வீட்டிற்கு வந்தார். எழுதியவற்றை நூல்களாகக்கொண்டு வருகிறேன் என்றார். சினிமா உலகமும் இலக்கிய உலகமும் தெரிந்த மனிதர். எந்த மயக்கங்களும் கொள்ளாமல் எழுத்தை மட்டும் கவனி. உன்னால் வேறு ஒரு எல்லையை அடைய முடியும் என்றார். சினிமாக்காரர்கள் என் தொலைபேசி எண்ணை கேட்டால் தரவேண்டாம் என்று வசந்தகுமார் அண்ணனிடம் சொன்னேன். அவரும் கேட்டு வருபவரிடம் கறாராக தர மறுத்துவிட்டார். என்னைத் தடுத்தாட்கொண்டவர் அவர். ஆனால் இன்னின்னார் முகவரி கேட்டு வந்தார்கள். தான் மறுத்து விட்டதையும் சொல்வார்.

இதையும் மீறி எப்படியே என் தொலைபேசி எண்ணைப் பெற்றுத் தொடர்பு கொண்டார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என் குருநாவலை படமெடுக்க விரும்புவதாகவும் அதை திரைக்கதை வடிவமாக நூல் வந்தபோதே செய்து வைத்திருப்பதாகவும் சொன்னார். அவரது படங்கள் மீது எனக்கு நன் மதிப்பு உண்டு. அக்கதை குறித்து தொடர்ந்து தொலைபேசியிலேயே பேசினோம். இளையராஜாவிற்கு மிக பிடித்திருப்பதாகவும் அவர் இசை அமைக்கிறார் என்றும் சொன்னார். ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள மகேந்திரன் கோவை வருவதாகச் சொன்னார். பத்திரிகையாளர் சந்திப்பில் இளையராஜா இசையமைக்க உங்கள் குறுநாவலை படமாக்க இருப்பதை அறிவிக்க அனுமதி கொடுங்கள் என்றார். அனுமதியும் கொடுத்தேன். மகேந்திரன் அவர்களும் மிக உற்சாகமாகப் பேசினார். பத்திரிகையாளர் சந்திப்பிற்கு இரண்டு நாள் முன் வேணு உங்கள் கதையை நான் படமாக்குவேன். கொஞ்சம் பொருத்திருங்கள். அக்கதையை யாருக்கும் தர வேண்டாம். கொஞ்சம் கமர்சியலாக வேறு கதை கேட்கிறார்கள். வேறு ஒரு கதையைத் தந்திருக்கிறேன். மீண்டும் நாம் இணைவோம் என்றார். சரி என்றேன். அவரால் அந்தக் கமர்சியல் கதையையும் படமாக்க முடியாமல் போய்விட்டது என்பது பின்பு தெரிந்தது.

ஓவியர் ட்ராஸ்கி மருது அண்ணனுக்கு என் கதைகளின் மீது மதிப்பு இருக்கிறது. அவர் மீது அன்பும் மரியாதையும் எப்போதும் உண்டு. கவிதாபாரதி என்னுடன் தொடர்பு கொண்டு மருது அண்ணன் குழுவில் நாங்கள் இருக்கிறோம். அண்ணன் உங்கள் கதையை இளைஞர்கள் குழுவுடன் சேர்ந்து படமாக்க விரும்புகிறார். நீங்கள் இணைய வேண்டும் என்றார். அற்புதமான மனிதர் மருது அண்ணன். ஓவியக் கலைஞர். முன்பே அவருடன் எளிய விதத்திலான பழக்கம் இருந்ததால் செய்வோம் என்றேன். மருது அண்ணன் மகிழ்ச்சியோடு பேசினார். தொடர்ந்து உரையாடினோம். கோவைக்கு அண்ணன் வந்தபோது உரையாடினேன். எனக்கு அவரது சிறப்பான ஓவியம் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அந்த அழகிய சொத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். மருது அண்ணன் தன் நண்பர்களைக் கொண்டு திரைப்படமாக்க விரும்புகிறார்.

இதெல்லாம் இலக்கியத்தோடு உறவுடைய சக கலைஞர்களின் தனிப்பட்ட விருப்பம். கைக்கூடுவது என்பது தயாரிப்பாளர்கள் அமைவதைப் பொறுத்துத்தான்.

இதைபோல சில சினிமாக்காரர்கள் அணுகியுள்ளனர். பார்ப்போம் என்று சொல்லி விலகிவந்துவிடுகிறேன். நண்பர்கள் திட்டுகின்றனர். நீ இந்த வாய்ப்புகளைத் தவற விட்டிருக்கக் கூடாது. உனக்கு இலக்கியம் படைக்க ஒரு அமைதியான சூழலும் பணமும் கிடைப்பதை தொடர்ந்து கெடுத்துக் கொள்கிறாய் என்று அறிவுறுத்தவே செய்கின்றனர். ஏனோ அப்படி விலகி வந்து விடுகிறேன். என் வங்கிகணக்கில் பணம் போட முன்வந்த இயக்குநர்கள் உண்டு. நான் பதட்டத்தோடு பின்வாங்கியதுண்டு.

சில நண்பர்கள் குறிப்பிட்ட சில கதைகளைக் குறும்படமாக எடுக்க கேட்கும்போதெல்லாம் மறுத்திருக்கிறேன். அதை எப்படி எடுப்பாய் என்று கேட்பேன்? அதை அவர்கள் சொல்லும்போது நான் விரித்த உலகைக் கொண்டுவர முடியாது என்று தெரிந்து விடுகிறது.

நான் முழுமனதோடு இசைவு தெரிவித்தது பாலுமகேந்திரா, மகேந்திரன், மருது அண்ணன் மூவரிடம் தான்.

ஒரு இலக்கிய பிரதியை வாசித்துவிட்டு அது எனக்கு புரியவில்லை என்று கூறும் வாசகனுக்கு உங்கள் ஆலோசனை என்ன? அல்லது இந்த நிலைக்கு காரணம் படைப்பாளியா? வாசகனா?

சு.வேணுகோபால்: யதார்த்த கதைகளை வாசித்து பழக்கப்பட்ட ஒரு மனதிற்கு நவீனத்துவத்தை ஏற்ற படைப்புகள் சிரமமாகத் தோன்றும். இதில் தேர்ந்தவர்களுக்கு மேஜிக்கல் ரியலிசக் கதைகள் சிரமத்தைத்தரும். அதேபோல உருவகக் கதைகள் புரிந்து கொள்வதில் தடைகள் இருக்கும்.

பல்வேறு வகை மாதிரிகளைப் படிக்காத வாசகனுக்கு எளியவிதத்தில் சொல்கிற புனைவுகள்தான் பிடிக்கும். ஒருமுறைக்கு இருமுறை கருத்தூன்றி படித்தால் விளங்கிக்கொள்ள முடியும். நல்ல படைப்பாளியின் படைப்புகளுக்கு இரண்டுமுறைக்கு நான்குமுறைகூட படிப்பேன் என்ற ஆசை வேண்டும். சுந்தரராமசாமி 70பதுகளில் எழுதிய கதைகள் படிப்பதற்கு சிரமமாக இருக்கின்றன என்று கடிதம் எழுதினேன் அவர் எவ்வித பதட்டமும் இல்லாமல் ஒரு அமைதியான சூழலில் பொறுமையாக மறுபடி வாசியுங்கள் “நிச்சயம் புரியும்” என்று கடிதம் எழுதியிருந்தார். அக்கதைகளை திரும்ப நிதானமாகப் படித்து இக்கதைகள் இவை பற்றிதானே பேசுன்றன. வாழ்வின் சிக்கலை, சிடுக்கை இப்படியொரு கோணத்தில் தானே அணுகுகின்றன. எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர் என்று ஒரு கடிதம் எழுதினேன். சுந்தர ராமசாமி வெகு உற்சாகத்தோடு மிகக்குறைந்த காலத்திலேயே வாசிப்பில் மேலெழுந்து வந்துவிட்டீர்கள். இதுதான் என்று கடிதம் எழுதியிருந்தார். மௌனியின் கதைகள் முதல்வாசிப்பில் சிரமத்தைத் தரும். அவர் தம் கதையுலகிற்குள் ஒரு வித அத்வைத தன்மையை முன்னிருத்துகிறார் என்று கண்டதும் புரிந்துகொள்ளத் தொடங்கிவிடுகிறது. ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ வந்தபோது பலர் புரியவில்லை என்று கட்டுரைகளை அந்தக் காலத்தில் எழுதியிருப்பதை பின்பு படித்திருக்கிறேன். நான் வாசித்தபோது எனக்கு ஒரு சிரமமும் ஏற்படுத்தவில்லை. என்னை அந்நாவல் வசீகரிக்கவும் செய்தது. ‘விஷ்ணுபுரம்’ நம் தமிழ்நாவல் பாணியிலிருந்து முற்றிலும் வேறானது. சமண பௌத்த வைணவ மதத்தின் தத்துவார்த்த சிந்தனையிலிருந்து எழுந்து நிற்பது. இப்படியான நாவல்களை வாசித்து வந்ததல்ல நம் மனம். எனவே அது பலருக்கு வாசித்து புரிவதில் தடையாக இருந்தது. அந்த நாவலினுள்ளும் இயல்பாக என்னால் உள் நுழைந்து செல்லமுடிந்தது. பொதுவாக தீவிரவாசகர்களுக்கு வாசிப்பு பெரிய சிக்கலாக இருப்பதில்லை. சிற்றிதழ் வாசிப்பிலிருந்து உருவாகி வராத, ஜனரங்க எழுத்து வாசிப்பிலிருந்து வந்த பொதுவாசகர்களுக்கு சிரமத்தைத் தருவதாக இக்கிறது. தீவிர எழுத்தை படிப்படியாக வாசித்து அதை இயல்பாக்கிக் கொள்வதுதான் ஒரே வழி.

எழுத்தாளன் ஒரு நாவலையோ சிறுகதையோ எழுதும்போது வாசகனை நினைத்து எழுதுவதில்லை. தெரிந்தும் தெரியாமலும், பல்வேறு சமூகக் காரணிகளோடு பின்னியிருக்கும் சிக்கல்களைத் தன் படைப்பில் அதே பின்னலோடு கொண்டு வர முயற்சிக்கிறான். இந்தப் பல்வேறு இழைகளைத் தாண்டி அதனுள்ளே புனைந்திருக்கும் முரணை கண்டடைகிறான். இதில் படைப்பாளியின் அனுபவம், வாசிப்பு, மனம், சூழல், பண்பாடு என எத்தனையோ பிரிக்க முடியாத அம்சத்திலிருந்துதான் படைப்பை உருவாக்குகிறான். எனவே வாசகன் படித்தவுடனேயே புரிந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது சரியானதாகாது. எளியவிதத்தில் எழுது என்று சொல்வது அபத்தம். வாசிப்பின் மீது தீவிரம் கொண்டவர்கள் புரியவில்லை என்று சொல்வதில்லை. முயன்று படைப்பின் குரலைக் கேட்டு விடுகின்றனர். இந்தப் புரிதல் விவகாரம் வாசகனின் போதாமையிலிருந்தே உருவாகிறது. படைப்பாளியின் கனவெல்லாம் வாசகனுக்குப் புரிய வைக்கவேண்டும். என்பதிலல்ல தொழிற்படுவது. அது கலையாற்றலோடு சிறப்பாக வெளிப்பட வேண்டும் என்ற விழிப்பில் இருப்பது. அந்தப் புதிய உலகத்தை வாசகன் தன் கற்பனையாலும், அனுபவத்தாலும் அதன் ரகசியங்களைக் கண்டடைகிறான்.

தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களுக்கு நிறைந்த பங்குண்டு. ஆனால் இன்றைய காலச் சூழலில் சிற்றிதழ்கள் தேவையில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. உங்கள் அனுபவத்தில் சிற்றிதழின் பங்கு என்ன?

சு.வேணுகோபால்:  இன்று இடைநிலை இதழ்கள் நல்ல  படைப்புகளை வெளியிடும் நிலைக்கு வந்துவிட்டன. இந்த நிலையை உருவாக்கியது தமிழின் 60,70 ஆண்டுகால சிற்றிதழ்களின் மகத்தான பங்களிப்பினாலே இயல்வதாகி இருக்கிறது. இடைநிலை இதழ்களின் ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் முன்வைக்கும் கருத்திற்கு நிலைப்பாட்டிற்கு எதிரான நியாயமான மாற்றுக் கருத்தை வைத்தால் வெளியிடுமா? வெளியிடாது. இடைநிலை இதழ்களும் தங்களுக்கான குழுவை வைத்துக்கொண்டுதான் இயங்குகின்றன. எவ்வித இலக்கியத் தகுதியும் இல்லாத படைப்புகளை வெளியிடவும் செய்கின்றன. மாற்றானின் படைப்புத்திறனைக் கண்டு அஞ்சுகின்றன.ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடிக்கின்றன. தமிழகச் சூழலில் ஜால்ராக்களுக்கும், நட்பு  வட்டத்திற்கும் அவை இடமளித்தபடிதான் இருக்கின்றன. படைப்பாளியின் முக்கியத்துவம் தரும் காலம் உருவாகும் வரை சிற்றிதழ் தனது பங்கை ஆற்றவே செய்யும். ஒரு சமயம் சிற்றிதழ்கள் நின்று கூட போகலாம். திரும்ப அது எழுச்சிகொண்டு மலரவே செய்யும். உண்மையை சத்தியத்தை வெளியிட மறுதளிக்கிறபோது சிற்றிதழ்கள்தான் வழியாக இருக்கிறது. இன்று முகநூலில், வலைப் பக்கங்களில் எழுத சாத்தியமாகி இருக்கிறது. இது ஒரு வசதிதான். தீவிர படைப்பாளிகள் இதழ் வடிவில் தங்கள் ஆக்கங்களைத் தர விரும்புவோருக்கு சிற்றிதழ் இடைநிலை இதழ்களைவிட சிறந்ததாகத்தான் இருக்கின்றன. ஆனால் இந்த சிற்றிதழ்களைச் சரியான கால இடைவெளியில் கொண்டுவர முடியாமல் போவதால் அதன்மீது இருந்த கவர்ச்சி குறைந்திருக்கிறது. இடைநிலை இதழ்கள் அதன் சில அம்சங்களைக் கைப்பற்றி உள்ளதால் அதன் வீச்சை குறைத்துள்ளன. ஆனால் அது தாங்கி நிற்கும் விசயகனம் மகத்தானது.

கோவை ஞானி நடத்திய ‘நிகழ்’ இதழ்வழிதான் நக்சல்பாரியின் எழுச்சியையும்004 வீழ்ச்சியையும் தெரிந்துகொண்டேன். இதை ஒரு இடைநிலை இதழ்வெளியிடுமா? மார்க்சியத்தின் போதாமையையும், மார்க்சியத்தை வளப்படுத்தவேண்டும் என்ற அக்கறையையும் தாங்கிய கட்டுரைகளை ‘நிகழ்’ வெளியிட்டது. ரஸ்யாவில் கம்யூனிச ஆட்சி வீழ்ந்தபோது மார்க்சிய மெய்யியல் என்பது வேறு;  ஆட்சி, அதிகாரம் என்பது வேறு என்பதை தொண்ணூறுகளில் விவாதத்திற்கு உள்ளாக்கி ஒரு தெளிவை உண்டாக்கியது.

கோணங்கி கல்குதிரை வழியே ‘உலகச் சிறுகதைகள்’, ‘தாஸ்தாவேவ்ஸ்கி’ ‘கார்சியா மார்க்யூஸ்’ என்ற சிறப்பிதழ்களைக் கொண்டு வந்தார். கோணங்கியின் கல்குதிரை தமிழ்ச் சூழலக்கு அளித்திருக்கும் பங்களிப்பை ஒரு இடைநிலை இதழ்களும் செய்யவில்லை. கலைச்சுவடு சிறப்பிதழ் சதத் ஹசன்மண்டோவை சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தியது.

குதிரை வீரன் பயணம், மீட்சி, சதுரம், புதுயுகம் பிறக்கிறது, பன்முகம், வேர்கள், காலாண்டு கலைச்சுவடு, லயம்,கோடாங்கி, நிறப்பிரிகை, பறை, சொல்புதிது, கனவு என எத்தனை இதழ்களை என்னை வளப்படுத்தியிருக்கின்றன.

உலக இலக்கியவளத்தை இனம் காட்டி இனம்காட்டி தமிழ் இலக்கிய வளத்தை வளர்த்த சிற்றிதழ்களின் பங்களிப்பு மகத்தானது. என் கண்முன் நிகழ்ந்த, ஒரு சாகசக்கனவை அந்தச் சிற்றிதழ்கள் ஏந்தியிருக்கின்றன. காலச்சுவடில் வந்த எஸ்.என். நாகராஜனின் பேட்டி  இன்றளவும் என்னால் மறக்கமுடியாததாக இருக்கிறது. அதேபோல உலகத்தத்துவங்களை சிற்றிதழ்கள்தான் உரையாடலுக்கு எடுத்துக்கொண்டு வந்தன. தலித்தியம் பெண்ணியம் போன்ற கோட்பாடுகளை தமிழ்ச்சூழலில்விவாதத்திற்கு உட்படுததியதால் இலக்கிய தளத்தில் அவை பெரும்போக்கை உருவெடுத்தன. இடைநிலை இதழ்கள் சிற்றிதழின் சில தன்மைகளை அள்ளிக் கொண்டன. பெரும் பத்திரிக்கைகளும் இடைநிலை இதழ்களை கொண்டுவரும் நிலையை சிற்றிதழின் வரலாற்றுச் சாதனை உருவாக்கியுள்ளது.

இன்று நூல்வடிவில் கிடைக்கும் பல மேற்கத்திய சிறுகதைகள் பல சிற்றிதழ்களில் வந்தவைதான். என் ஆய்வின் பொருட்டு சிற்றிதழ்களைத் தேடிய காலத்தில் பல மகத்தான கதைகளை நான் பிறக்கும் முன்பே மொழிபெயர்த்துத் தந்திருக்கின்றன. எழுத்து இதழில் சி.சு. செல்லப்பா மொழிபெயர்த்த ஹெமிங்வேயின் ‘தோற்காதவன்’ படித்து மிகுந்த மன எழுச்சிக்கு உள்ளானேன். செல்லப்பா எழுத்து இதழில் அவ்வப்போது மொழிபெயர்த்த சிறுகதைகளை பத்தாண்டுகளுக்கு முன் தளவாய்சுந்தரம் நூலாககொண்டு வந்திருக்கிறார். ‘கசடதபற’ இதழில்தான் தருமுசிவராமு போர்ஹேயின் ‘வட்டச்சிதைவுகள்’ கதையை வெகுசாகத்தோடு மொழிபெயர்த்திருந்ததைப் படித்தேன். இதற்கு முன்னமே க.நா.சு. இதே கதையை ‘பாபிலோனில் லாட்டரி’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்தில் சி. மோகன் மொழிபெயர்த்தார். ‘மேலும்’ இதழில் ராஜ்கௌதமன் எழுதிய தலித்பற்றிய கட்டுரை சிறப்பான ஒன்று. அதற்கு முன்னமே தமிழவன் ‘படிகள்’ இதழில் தலித் இலக்கியத்தின் தேவை குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.

சிற்றிதழ்களின் பங்களிப்பு குறித்து தனியாக பெரும் நூல் எழுதும் அளவு செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. சிற்றிதழ்களின் இயக்கம் மட்டும் இல்லாது போயிருந்தால் மூன்றாம்தர நான்காம்தர எழுத்துக்களையெல்லாம் மகத்தான படைப்புகள்  என்று இன்று கொண்டாடிக் கொண்டிருப்போம். அதனை துவக்ககாலத்திலேயே மணிக்கொடி இதழ் வீழ்த்தியது. மொழிபெயர்ப்பிற்கு அது கொடுத்திருக்கும் இடம்தான் பிற்கால சிற்றிதழ்களின் முகமாக மாறியது. ‘எழுத்து’ இதழ் இல்லை என்றால் ‘புதிய கவிதை’ வடிவம் தோன்றியிருக்கும் என்பது சந்தேகம்தான். சிற்றிதழின் தேவையைச் சூழல் உண்டாக்கும்.

அமானுஷ பேய்க்கதைகள், மர்மகதைகள், போன்றவைகளை பலரும் விரும்பி வாசித்தாலும், அவற்றை இலக்கிய படைப்புகளாக ஏன் ஏற்றுக்கொள்ளவதில்லை?

சு.வேணுகோபால்: உலகம் முழுக்க அனுமானுஷ பேய்க்கதைகள் இலக்கியத் தகுதிபெற்று கொண்டாடப்பட்டிருக்கின்றன வாசிங்டன் இர்விங் என்பவர் பேய்மாப்பிள்ளை என்றொரு கதை எழுதியிருக்கிறார். மர்மம் நிறைந்த மனிதரின் நடமாட்டத்தை மனதில் கிலிதொற்ற சாதித்திருக்கிறார். மர்மமான விதத்தில் இறந்துபோன தன் தகப்பனாரை தாஸ்தாவேஸ்கி தன் படைப்பிற்குள் கொண்டுவந்திருக்கிறார். ‘அதே கண்கள்’ படக்கதையின் மூலம் இதிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

அமானுஷத் தன்மையை புதுமைப்பித்தன் ‘காஞ்சனை’, ‘பிரம்மராட்ஷஸ்’ ‘மனக்குகை ஓவியங்கள்’ ‘கட்டில் பேசுகிறது’ ‘வேதாளம் சொன்ன கதை’ போன்ற பல கதைகளில் கையாண்டு புதிய அனுபவத்தை- நம் அடிமனதில் உறைந்திருக்கும் பயத்தை, சித்தரியல் தன்மையை- நம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறார். க.நா.சு. பிரமிள் போன்றவர்கள் இக்கதைகளை இலக்கியச் சாதகைளாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

பிரபஞ்சன் ‘அமானுடன்’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். அவர் எளிய மனிதர்களின் வாழ்க்கையைத்தான் அதிகம் எழுதினார். அவர் எழுதிய கதைகளில் சாமியாடியாகவும், குறிசொல்லியாகவும் இருக்கிற பூசாரியைப் பற்றி எழுதிய அக்கதைதான் அவர் எழுதியதில் தனிச்சிறப்பான கதை. ஆனால் அந்த கதையில் அமானுஷத்தை ஏமாற்றுத்தனத்திற்கான மூலதனம் என்ற குறிப்பை வைத்துவிட்டார்.

ஜெயமோகன் ‘யட்சி’ யைப் பற்றி இரண்டு மூன்று கதைகளில் எழுதியிருக்கிறார். ‘காடு’ நாவலில் வரும் யட்சி வரப்போகும் வனத்தின் அழிவைத்தான் கற்பனையாக முன்வைக்கிறது. இவ்வகைக் கதைகள் ஏதோ ஒருவிதத்தில் நம் வாழ்வின் சிக்கல்களை, புதிர்களை அறியமுயல்கிறபோது இலக்கியத்தன்மையைப் பெறுகின்றன. நவீனத்துவபோக்கை விரும்பி ஏற்றவர்கள் இவ்விதமான வகை மாதிரிக்குள் நுழைந்து செல்லவில்லை.

ஒரு கதை. இரவு நேரத்தில் காட்டு வழியே ஒருவர் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்கிறார். பாதி வழியில் ஒருவர் திடீரென வந்து ஏறிக் கொள்கிறார். இக்காட்டிற்குள் நடக்கும் கொலைகளைப் பற்றிச் சொல்கிறார். ஒரு  எல்லை நெருங்க அவர் இறங்கிக் கொள்கிறார். நீங்கள் யார் என வண்டியோட்டிக் கேட்கிறான். நான் கொலை செய்யப்பட்டு பேயாக உலவுபவன் என்றார். இந்தக் கதையை எங்கு படித்தேன். எந்தத் தொகுப்பில் படித்தேன் என்று தெரியவில்லை. அச்சத்தை அளித்தபடி அக்கதையில் மனித மனத்தின் அடிப்படையை பேசியிருக்கிறார். லா.ச.ரா. இந்த அமானுஷ, மர்மத் தன்மையை ஏற்று எழுதிய ‘காயத்திரி’, ‘ஜனனி’ ‘பஞ்சபூதக் கதைகள்’ சிறப்பானவை.

மணிக்கொடி காலத்திலிருந்து இந்த மர்மக்கதைகள் இலக்கியத்தகைமையோடு எழுதப்பட்டு வந்திருக்கின்றன. வெற்றுபய உணர்ச்சியை மட்டும் மூலதனமாகக் கொண்டு எழுதிய ஜனரஞ்சகக் கொலைக் கதைகள் பெருகிக் கிடக்கின்றன. சிறந்த இலக்கியவாதிகளால் எழுதப்பட்ட அமானுஷ, மர்மக் கதைகளும் நல்ல இலக்கியப் படைப்புகளாக தடம்பதிந்துள்ளன. அவர்கள் இவ்வகைக் கதைகளைக் குறைவாகவே எழுதியுள்ளனர். ‘நுண்வெளி கிரகணங்கள்’ நாவலில் ஒரு அத்தியாயம் முழுக்க குடும்பத்தின் அசாதாரண சூழ்நிலையைப் பேய்ப் பிடித்த சிறுவனின் உலகத்திலிருந்தே சொல்லி இருக்கிறேன். மனிதர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை ஆராயும் இவ்வகை கதைகளும் இலக்கியத் தகுதியைப் பெறுகின்றன. எழுத்தாளன் எந்த நோக்கத்தில் எழுதுகிறான் என்பதிலேயே தகுதி தீர்மானிக்கப்படுகிறது.

இன்று இலக்கிய விமர்சனம் என்பதே ஒரு சண்டைக்கான தொடக்கமாக பாவிக்கப்படுகின்றது. விமர்சனங்களால் மனம் புன்படுவதாக பல எழுத்தாளர்கள் கருதுகின்றனர். உங்கள் படைப்புகள் விமர்சிக்கப்பட்டுள்ளனவா? இலக்கிய விமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சு.வேணுகோபால்: ஒரு இளம் படைப்பாளி மதிக்கத்தக்க இலக்கிய முன்னோடியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புவது இயற்கையானது. இயல்பானதும் கூட. ஆனால் இதை மூத்தபடைப்பாளி செய்தே ஆகவேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. இங்கு படைப்பாளிகளே விமர்சனத்தையும் கையில் எடுக்கவேண்டிய சூழல். புதுமைப்பித்தன்தான் இதை தீவிரமாகத் தொடங்கி வைத்தார். இலக்கியம் தெரிந்த படைப்பாளி அல்லாத வாசகரோ, கல்விப் புலத்தைச் சேர்ந்தவர்களோ செம்மையான முறையில் உருவாக்கி பாதை சமைக்கவில்லை. சிறிய அளவில் அங்கங்கே நிகழ்ந்து தொடராமல் போய்விட்டன.

எழுதப்பட்ட அளவிலும், எழுதுகிற நிலையிலும் இரண்டு நிலைகள்தான் இருக்கின்றன. குறைவாகவேணும் படைப்பின் இலக்கியத் தகுதியை காணுகின்ற விமர்சகர்கள். மற்றொரு நிலையில் தன் அடையாளத்திற்காக விமர்சனத்தை காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறவர்கள். இவர்கள் தன்னை அங்கீகரிக்காத இவனை இலக்கியத்திற்குப் புறம்பான முறையில் தாக்குவது என்பதை ஒரு உத்தியாகக் கையாளுகின்றனர். இதில் முழுக்க முழுக்க அவனது மன அவஸ்தைதான் இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் பல்லிளிக்கிறது. இலக்கிய வரலாற்றில் இதுவெல்லாம் காணாமல் போய்விடும். ஜெயகாந்தன் தனக்குப் பின் எழுதவந்த எத்தனை இளம் படைப்பாளிகளை இனம் கண்டு வளர்த்தெடுத்தார்? செய்திருக்கலாம். அவர் செய்யவில்லை. அதனால் அவர் ஒரு முக்கியமான ஆளுமை இல்லை என்று சொல்லமுடியுமா? ஜெயகாந்தனை வசைபாடிய விமர்சகர்களால் ஜெயகாந்தனை இல்லாது ஆக்கிவிட முடிந்ததா? இந்த ஞானம் விமர்சிப்பவர்களுக்கு இருக்கவேண்டும்.

தமிழ்ச்சூழலில் இலக்கிய விமர்சனத்தை கையில் எடுத்த க.நா.சு. போன்றவர்கள் இலக்கிய ரசனை என்ற அளவில்தான் சில நல்ல படைப்புகளை அடையாளப்படுத்தினார்கள். தரமற்றவற்றை ஒதுக்கினார்கள். இதனால் இவர்களைத் தாக்கி எழுதியவற்றையெல்லாம். இலக்கியத் தரமுள்ளவை என்று கொள்ளமுடியாது.

தனக்கு வாய்ப்பளிக்கும் குழுவிற்கு அடிவருடியாக இருப்பவன் என்ன செய்கிறான் என்றால் அந்த குழுவில் உள்ள எழுத்தாளன் விமர்சனத்திற்கு உள்ளாகும்போது விமர்சித்தவனைத் தாக்கி சில்லறை சகாயங்களைப் பெற்றுக் கொள்பவனாக இருக்கிறான். சமீபத்தில் அ.முத்துலிங்கம் இந்து நாளிதழில் சுந்தர ராமசாமியுனுடன் ஏற்பட்ட உறவில் விமர்சனம் குறித்து “விமர்சனம் முக்கியம்தான். அதே சமயம் விமர்சிப்பவனின் முதல் வரியிலேயே அவனது லட்சணம் தெரிந்துவிடும். காழ்ப்புணர்விற்கெல்லாம் படைப்பாளி முக்கியத்துவம் தராமல் எழுதவேண்டும்” என்று சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.

என் “நுண்வெளிக்கிரகணங்கள்” நாவல் வந்தபோது எயிட்ஸ்பூமியான அமெரிக்காவிற்குக் குமுதம் நாடு கடத்துகிறது. திரும்பிவரும்போது எயிட்ஸ் பெற்றுவந்து சாகட்டும் என்பதாக ஒரு சிற்றிதழ் எழுதியது. அந்த நாவல் கைப்பிரதியாகத்தான் இருக்கிறது. புத்தகமாகவோ தொடராகவோ வெளிவரவில்லை. அந்நாவலில் என்ன விதமான உலகம் பேசப்படுகிறது என்பது கூட அந்த சிறுபத்திரிக்கையாளருக்குத் தெரியாது. ஆனால் இப்படி எழுதியது என் முதல் படைப்பிற்கு வந்த முதல் விமர்சனம் இது. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சிற்றிதழ் பாலருந்தி வளர்ந்தவன் என்பது அந்த சிற்றிதழாளருக்குத் தெரியாது. நுண்வெளிகிரகணங்கள் நாவல் வெளிவந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து வண்ணநிலவனிடம் உங்களுக்குப் பிடித்த நாவல்கள் சிலவற்றைச் சொல்லுங்கள் என்று கேட்ட கேள்விக்கு நுண்வெளிகிரகணங்கள் நாவலைக் குறிப்பிடுகிறார். இப்போது பலர் குறிப்பிடுகின்றனர். ‘விஷ்ணுபுரம்’, ‘நுண்வெளிக் கிரகணங்கள்’ இரண்டுதான் தமிழ் நாவல் வரலாற்றிலே எனக்குப் பிடித்தவை என்று ஒரு வாசகர் இந்து காமதேனு இதழில் குறிப்பிடுகிறார்.

நான்காண்டுகளுக்கு முன் பெருமாள் முருகன் நாவல்குறித்து உலகத் தமிழ்பண்பாட்டு மையக் கருத்தரங்கில் வாசிக்கும்படி கட்டுரை கேட்டார்கள். ‘ஏறுவெயில்’ நாவல் குறித்து வாசித்தேன். அந்த கருத்தரங்கிற்கு வந்திருக் வேண்டிய முருகன் வரவில்லை. என் கட்டுரையில் சொல்லப்பட்டற்றவற்றை அறிந்துகொள்ள முருகன் விரும்பி சு.துரையிடம் கேட்டிருக்கிறார். கட்டுரையில் நாவலின் பலம் பலவீனம் பற்றி வெளிப்படையாகவும் பெருமாள் முருகனின் இலக்கிய குணத்தையும் வெளிப்படையாக எழுதியிருந்தேன் என்பது துரைக்குத் தெரியும். இதை எப்படி கொடுப்பது? முருகன் வருத்தப்படுவார் என்று தயங்கி இருக்கிறார். முருகன் மறுபடி விரும்பி கேட்க அவர் தன் கைப்பிரதியைத் தந்திருக்கிறார். வருத்தத்தைத் தருமே என்ற சங்கடம் துரைக்கு. படித்துவிட்டு முருகன் சு.வேணுகோபால் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவேண்டுமானால் அவை நேர்மையானவை. உடனடி பதில் என்னிடம் இல்லை. அதே சமயம் படைப்பாக்கத்தின் அக்கறையின் பாற்பட்டவை என்ற விதமாய் அவர் தொலைபேசியில் துரையிடம் பேசியபின்தான் தனக்கு நிம்மதி ஏற்பட்டதாக என்னிடம் கூறினார் துரை.

இலக்கியத்திறன் அற்றவன் உடனடி அங்கீகாரத்திற்காக முக்கியமான எழுத்தாளனைத் தாக்கி எழுதினால் பிரபலமாகிவிடலாம் என்ற வித்தையைக் கைக்கொள்கிறான். அவன் வாங்கிய அடியை பிறர்மீது பிரயோகிக்கிற வக்கிரத்தை எழுத்தாளர்கள் காலால் எற்றிவிட்டு செல்லுங்கள் என்றுதான் சொல்வேன். அந்த நேர சலசலப்பு பின் உண்மையின் முன் கேலிக்குரியதாக மாறும். இதை முன்முடிவற்று அணுகும் வாசகன் கண்டடைவான்.

ஒரு படைப்பாளியின் நிறைகுறைகளை இலக்கிய தகுதியை பொறுப்புடனும் எந்த உள்நோக்கும் இல்லாமலும் எழுதும் எழுத்தாளனுக்கு; விமர்சகனுக்கு தனித்த மதிப்பு உண்டு. அவ்விதம் எழுதப்பட்டதுதான் என்பதை வெளியில் சொல்ல தயங்கினாலும் உள்ளம் சொல்லும். அதுதான் தேர்ந்தவிமர்சனம். இலக்கியத்தைப் போன்றே இலக்கிய விமர்சனமும் ஒரு கலை. அந்தக் கலை இங்கு வளரவே இல்லை. மதிக்கத்தக்க எழுத்தாளர்கள் நேரிய விமர்சனத்தைத் தாங்கிக் கொள்பவர்களாகவும் இல்லை. தலைசிறந்த விமர்சகன் ஒரு படைப்பை எப்போது கொண்டாடுகிறான்? சகல திசைகளிலும் கலையின் ஒளிவெள்ளத்தில் பாய்ந்து ஓடியபடியே மானிடப் புதிர்களை, உன்னத எழுச்சிகளை, தீமையின் நடமாட்டங்களை எல்லாம் பொங்கப் பொங்கச் சொல்வதைத்தான் ஆகச் சிறந்த படைப்பு என்கிறான்.

ஒரு பிரச்சனையைப் பற்றி செய்தித்தாள்களில் வந்தனவற்றை யெல்லாம் வாரிப்போட்டு நாவல் என்ற பெயரில் வெளியிடுகிறவன் என்னை ஏன் பாராட்டவில்லை என்று கேட்கிறான். அப்புறம் விமர்சகன் முன்வைத்த நுண்ணுர்வு, நுட்பம், ஆழம், கலையெழுச்சி மயிரு மத்தாங்காய் என்பனவெல்லாம் பொய் என்று கூறியபடி தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு உலா வருகிறான். நீ கலைநேர்த்தியோடு எழுது என்றால், நான் எழுதியது மகத்தான படைப்பு கொண்டாடு என்று அடம் பிடிக்கிறான். மகத்தான குப்பை என்று சொன்னால் கோபம் வருகிறது.

விமர்சனம் ஒரு படைப்பாளியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சூழலையே வளப்படுத்துகிறது. தரமான ஒரு விமர்சன நூலை மகத்தான படைப்பிற்கு நிகராகவே நான் கருதுகிறேன். ஒரு சிறந்த படைப்பாளி சிறந்த விமர்சகனாக இருக்கும்போது அவனால் அங்கீகரிக்கப்படாதவர்கள் அவனது செயல்பாடுகளை, அவனது படைப்புகளைத் தாக்குவதைத் தொழிலாகக் கொள்கின்றார். விமர்சகனாகவும் படைப்பாளியாகவும் இருக்கிறவன் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தீவிரமாக இயங்குவதை மட்டுமே சத்திய நோக்காகக் கொண்டு செயல்பட்டால் தமிழ்ச்சூழலில் நல்ல விமர்சன மரபு தோன்றி நிலைபெறும்.

9 கருத்துகள் for ““முகநூல் புகழை அதை விரும்புபவர்களே வைத்துக்கொள்ளட்டும்” – சு.வேணுகோபால்

 1. எம்.கே.குமார்
  August 10, 2018 at 12:39 pm

  என்னுடைய சிறுகதை (அலுமினியப்பவைகள்) ஒன்றைப்பற்றியும் தாங்கள் குறிப்பிட்டது மிகுந்த உற்சகத்தியும் மகிழ்ச்சியையும் தருகிறது, மிக்க நன்றி மூத்தவரே.

 2. M.Murugan
  August 11, 2018 at 7:08 pm

  உள்ளபடியே மிகவும் அற்புதமான பதிவு.
  நன்றி.

 3. M. Sunthari
  August 12, 2018 at 2:23 am

  Mika sirantha padaippu. Thanggal sevai thodarathum.

 4. S. Kaniamudhu
  August 12, 2018 at 2:46 am

  மிகவும் விரிவான கருத்தூன்றி வாசிக்க வேண்டிய கேள்விகளும் பதில்களும்.

 5. August 12, 2018 at 9:56 pm

  பாவனையற்ற தெளிவான உரையாடலை வழங்கியிருக்கிறார் வேணுகோபால்.ஜெயகாந்தனைப்பற்றிய நினைவுகளின் பகிர்வு ஜெயகாந்த்தனின் மறு பக்கத்தைக் காட்டிச் செல்கிறார். தொடக்கத்தில் அவர் காட்டிய கம்பீரம் பின்னாளில் தொய்வடைந்ததைச் சொல்லும்போது அனுபவம் அவரை அப்படி ஆக்கிவிட்டிருக்கிறது என்று சொல்லத் தோணுகிறது.வேணுகோபாலின் இந்த நேர்காணல் மிக ஆழமானது இலக்கிய அம்சம் கொண்டது.மிக நீண்ட ஆனால் சுவை
  குன்றா பேட்டி இது.

 6. Arangasamy
  August 16, 2018 at 4:54 pm

  எம் கே குமாரை சிங்கப்பூரில் சந்தித்தீர்கள் , அவர் ஒரு ‘ஆபீசர்’ தோற்றத்தில் இருந்ததால் நினைவிருந்திருக்காது வேணு அண்ணா 🙂

 7. kothandaraman thiagarajan
  August 21, 2018 at 5:17 pm

  sirappana padivu.nandri.

 8. ப.மணிஜெகதீசன்
  September 2, 2018 at 8:11 pm

  Captivating interview. Profound and sincere answers by the writer. I had a wonderful time reading this lengthy, quality i/view. Tq

 9. December 2, 2018 at 1:38 am

  Great interview! Great writer! Great Tamil!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...