நாடோடியின் பாடல்: எல்லாநாளும் கார்த்திகை தொகுப்பை முன்வைத்து.


mqdefault
“நான் மீடியாவாய்ஸ்ல எழுதிட்டிருந்த தொடர நிறுத்திட்டேன் அய்யனார்”

“ஏன் பவா?”

“எழுதனுமேன்னு கமிட்மெண்டோட எழுத பிடிக்கல. மறுபடியும் எப்ப தோணுதோ அப்ப எழுதிக்கலாம்”

இதுதான் பவா. தன்னை ஒருபோதும் எழுத்தைச் செய்பவனாக மாற்றிக் கொள்ள விரும்பாத கலைஞன். எந்த ஒன்றிலும் ஆத்மார்த்தமாக மட்டுமே ஈடுபடவிரும்பும் எளிய மனம்தான் பவாவினுடையது. ஏன் அதிகம் எழுதுவதில்லை? என்கிற வழக்கமான நுண்ணுணர்வற்ற கேள்விக்கு பவாவின் பதில் மிகவும் சுவாரசியமானது,

நான் ஏன் எழுதவேண்டும்?

ஆனால் ஒன்றை மட்டும் எல்லோரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எழுதும் காலம்தான் எழுத்தாளருக்கு மிகவும் கொண்டாட்டமானது. அதிலும் எழுத்தைப் பிறருக்காகச் செய்யாமல் ஆழ்ந்த நேசத்தோடும் தனக்கே தனக்கான நெகிழ்வோடும் எழுதுபவர்களுக்கு எழுதும் காலத்தின் மகிழ்வை எளிதில் வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. பவா இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த நாளிலிருந்து முடிக்கும்வரை எழுத்தின் வசீகரப் பிடிக்குத் தன்னைத் தந்திருந்தார். இதை நேரில் பார்த்தும்,கட்டுரைகளின் சில பகுதிகளைப் படிக்கும்போதும் உணர்ந்தும் கொண்டேன். இது கலைஞர்களுக்கே உரித்தான சந்தோஷம். காலையில் எழுந்து கழிவறை செல்வதுபோல எழுத்தைப் பாவிப்பவர்களுக்கு, எழுத்துப் போலிகளுக்கு, எழுத்தைப் பண்டமாய் மாற்றுபவர்களுக்கு வாழ்வில் ஒருபோதும் கிட்டிடாத உண்மையின் தரிசனம். பவா அந்த தரிசனத்தின் உச்சத்திற்கு தன்னைத் தந்துவிட்டிருந்தார்.

பவாவின் எழுத்தை விமர்சகச் சட்டத்திற்குள் வைத்துக் கூறுபோட்டு இது இந்தவகை என நிறுவுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசங்களற்ற நாடோடியின் பாடல் எந்த ராகத்தில் இருந்தால்தான் என்ன? என்ன மொழியில் இருந்தால்தான் என்ன? அந்தக் குரலின் வசீகரம் அல்லவா நம்மை அடித்துப் போடுகிறது! அந்தக் குரலின் எளிமையல்லவா நம்மை அசைத்துப் பார்க்கிறது! அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் அந்த சாரீரமல்லவா நம்மை கரைய வைக்கிறது! பவா வின் எழுத்து அத்தகையதுதான். பவாவின் எழுத்தை நாடோடியின் பாடலுக்கு நிகராகத்தான் பார்க்கிறேன்.

இந்தத் தொகுப்பில் தமிழின் பல பிரபலங்கள் குறித்த பகிர்வு இருக்கிறது. சமூகத்தால் அடையாளங் காணப்பபட்ட பிரபல கலைஞர்களிலிருந்து பிரபலமல்லாத கலைஞர்கள் வரைக்குமாய் ஏராளமான மனிதர்களைப் பற்றிய முழுமையான பார்வை இருக்கிறது. ஆனால் அவர்களை வெற்றி தோல்வி எனப் பிரித்துப் பார்க்காமல், இருமையில் நிறுத்தாமல் கலைஞர்களாய் மட்டுமே அடையாளங் கண்டு பதிவு செய்திருப்பதுதான் இத்தொகுப்பின் மிகச் சிறந்த அம்சம். பவா மனிதர்களை அப்படித்தான் பார்க்கிறார். ஒரு சாமான்யனின் மனம் பவாவின் எழுத்து முழுவதும் தொடர்ந்து இயங்கியபடியே இருக்கிறது.

பவாவின் எழுத்து வாசிப்பவர்களை தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதை சற்றே இடம்பெயர வைக்கிறது. எழுத்தின்  வழியே பவா காட்சிப்படுத்தும் உலகில் தன்னை மொத்தமாய் தொலைப்பதும் எல்லா மனங்களுக்கும் நிகழ்வதுதான். இலக்கியம், திரைப்படம், ஓவியம், புகைப்படம் என எல்லாத் துறைகளிலும் மிளிர்ந்த/மிளிரும் கலைஞர்களுடனான தன் அனுபவத்தை சாதாரணனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். எல்லோராலும் அறியப்பட்டவர்களின் இன்னுமொரு அறியாதப் பக்கம் பவாவின் எழுத்து வழியே , வாழ்வு வழியே பதிவாகியிருக்கிறது.

 “எந்த மனித மனமும் தட்டையானதல்ல. அது முரண்பாடுகளால் ஆனது. எந்த மனிதனையும் முழுக்கப் புரிந்து கொண்ட சகமனிதனோ, உறவுகளோ நிச்சயம் இல்லை”

இப்படி ஒரு எழுத்தை எதிரிகளற்ற, துவேஷங்களற்ற, போட்டிகளற்ற, பவா மட்டும்தான் எழுத முடியும் மேலும் அவர் கண் வழியாய் நாம் காணும் சித்திரங்கள் அபூர்வமானவை. பிரபஞ்சன் குறித்த கட்டுரையில் பவா எழுதியிருந்த வரிகள் என்னைத் தூங்கவிடாமல் அலைக்கழித்தன.

“இப்பூமி பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லெளகீக வாழ்வின் முன் இப்படித்தான் உள்ளடங்கிபோய்விடுகிறது. மூன்றாந்தர மனிதர்களின் வெற்றி பெருமிதத்திற்கு முன் ஒரு படைப்பாளி ஒடுங்கிப் போவது இந்த புள்ளியில்தான்”

“ஒரே மனிதன் ஒட்டுமொத்த மானுட பசிக்கான துயரத்தைப் பாடிக்கொண்டே தன் சொந்த பசிக்காகவும் ரொட்டிகளை தேடவேண்டியிருந்தது”

எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு ‘பிழைக்க’ வழி தெரியாத ஒட்டுமொத்த எழுத்தாளர்களுக்கான ஆறுதலாகவும் இவ்வரிகள் இருந்தன.

படைப்பாளிகளுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டிய கர்வத்தை ஜெயகாந்தனின் கட்டுரை வழியாய் ஒரு சம்பவத்தின் மூலமாய் பவா நினைவு கூர்கிறார்.

இன்னொரு நாற்காலி ஜெ.கே.வின் நெருங்கிய நண்பரும், அப்போதைய பாண்டிச்சேரி சபாநாயகருமான கண்ணனுக்கு. மேடையில் நின்று ஒரு நாற்காலியை எடுக்கச் சொல்கிறார். கண்ணனைப்பார்த்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டுகிறார். கண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி அதை நோக்கி போகிறார்.” இந்த வரிகளைப் படிக்கும்போது மேலிட்ட கர்வம் ஒரு படைப்பாளிக்கே உரியது.

சமீபத்தில் இறந்துபோன தன்னுடைய நண்பன் ராஜவேலின் மரணத்தை பவாவின் வார்த்தைகளில் காட்சியாய் காணும்போது துக்கம் மேலிட்டது. தன்னுடைய நண்பன் இறந்துபோன துக்கத்தை தாங்கமுடியாது வார்த்தைகளில் கொட்டித்தீர்ப்பது என்பது வேறு. ஆனால் பவா தன் நண்பனின் மரணத்தில் அவன் தந்தையின் துக்கத்தைப்பார்த்து பரிதவிக்கிறார். மகனை சாகக்கொடுத்து வாழநேரிடும் தகப்பன்களின் ஒட்டுமொத்த துக்கத்தை வார்த்தைகளாய் கடத்துகிறார்.

“ஒரு புது வேட்டி போர்த்தி, கால் விரல்களைச் சேர்த்துக் கட்டி, பன்னீர் தெளித்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, இவை அனைத்தையும் தனியாய் அசாத்திய மவுனத்தோடுசெய்தவர் ராஜவேலுவின் அப்பா.

எங்கள் நாலைந்து பேரின் மூச்சுக்காற்றை உட்கொண்டு அவ்வறை சுவாசித்துக்கொண்டிருந்தது. நான் வயதான அந்தத் தகப்பனையேபார்த்துக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டோ அவரிடம் உறைந்த அந்நேர மவுனம், என்னைபயமுறுத்தியது. எல்லாம் முடிந்து, தன் மகனின் காலடியில் நின்று, படுத்துறங்கும்மகனை ஆசைதீர பார்வையால், முழுமையாய் பருகினார்.

‘‘மகனே’’ என ஓங்காரித்து வந்தஅக்குரலொலி, அங்கிருந்த எங்கள் எல்லோரையும் அசைத்தது. அதன் பிறகான பத்துப்பதினைந்து நிமிடமும் அவர் தன் மொழியற்ற குரலால், வெவ்வேறு உடல் மொழியால், தன்பிரிவாற்றிய அந்நிமிடம் என் வாழ்வில் வேறெப்போதும் காணக்கூடாதது. பிள்ளைகளைபறிகொடுத்துவிட்டு சவங்களாக அப்பாக்கள் வாழும் வாழ்வெதற்கு?”

இந்த வார்த்தைகள் உருவாக்கிய காட்சியின் தாக்கத்தை ஒரு இளந்தகப்பனாய் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒட்டுமொத்த மனிதமனதின் நேர்மையான சாட்சியம்தான் பவாவின் எழுத்து.

கந்தர்வனின் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை பாரதி படத்தின் துவக்கக்காட்சியை நினைவூட்டியது. ஞானராஜசேகரனின் பாரதி திரைப்படம் எனக்குப் பிடித்தபடங்களுள் ஒன்று. அத்திரைப்படமும் பாரதியின் மரணத்திலிருந்துதான் துவங்கும். பவாவின் கந்தர்வன் கட்டுரையும் அவரது மரணத்திலிருந்துதான் துவங்குகிறது. கந்தர்வனின் படைப்புலகை இப்படி எழுதுகிறார்

“மனிதனின் மென் உணர்வுகளைத் தன் படைப்புப் பக்கங்களெங்கும் படிய வைத்துக்கொண்டேயிருந்தவர் கந்தர்வன். கவர்மெண்ட் ஆபீஸ்களின் பழுப்பேறிய கோப்புகளுக்கிடையேகிடந்த இந்த மகத்தான மனிதர்களை அள்ளிக் கொண்டுவந்து நம் முன் நிறுத்தினார்கந்தர்வன்”

கந்தர்வன் என்கிற படைப்பாளியின் ஒட்டுமொத்த எழுத்து சாராம்சத்தை இப்படி இரண்டே வரிகளில் அதன் உன்னதம் குறையாது பதிவுசெய்வதை முக்கியமானதாகப்பார்க்கிறேன். பவாவால் இது சாத்தியப்பட்டிருக்கிறது.

ஒரு படைப்பாளியைக் குறித்து பதிவு செய்வதென்பது மிகவும் சவாலான விஷயம். பதிவு செய்பவரின் கண்களைப்போலவே அப்படைப்பாளியைப் பிறர் அணுகுவது கிடையாது. படைப்பும் படைப்பாளியும் நேர்கோட்டில் பயணிப்பவை அல்ல. ஆனால் எல்லாப்படைப்பாளிக்கும் எல்லாபடைப்பிற்கும் ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஒரு படைப்பாளியைக் குறித்தப் பதிவு என்பது அந்த ஆன்மாவை நெருங்கினால்கூட எனக்குப் போதுமானது. இம்மாதிரியான ஒரு மனநிலையில் பவாவின் தொகுப்பை வாசித்தவுடன் முழுமையாக நிறைவடைந்தேன். எல்லாப் படைப்பாளிகளின் ஆன்மாவையும் பவா மிகஇலகுவாகத் தொட்டிருக்கிறார். அவர்களை அப்படியே எழுத்தாக மாற்றியிருக்கிறார். இக்கட்டுரைத் தொகுப்பை வரலாற்று ஆவணமாகக்கூட மதிப்பிட முடியும்.

மேலும் இத்தொகுப்பில் பதிவாகியிருக்கும் மனிதர்கள் கலவையானவர்கள். தமிழ்ச்சினிமாவை மாற்றியமைத்த பாலுமகேந்திரா பாரதிராஜாக்களிலிருந்து நவீனத்திரைமொழியின் உச்சங்கள்தொடும் மிஷ்கின் வரைக்குமாய். சிறுபத்திரிக்கை கவிஞன் கைலாஷ்சிவனிலிருந்து எழுத்துப் பேராளுமை ஜெயகாந்தன் வரைக்குமாய் சமூகம் நிர்மாணித்திருக்கும் ‘தகுதி’ ‘அடையாளங்கள்’ குறித்தகவலை ஏதுமற்று படைப்பையும் படைப்பாளியின் கலைமனதையும் மட்டுமே முன்நிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இடையே சாமான்ய மனிதர்களின் அசாதரணமான வாழ்வையும் தரிசிக்கமுடியும். இம்மாதிரியான ஒருகலவையை பவாவால் மட்டும்தான் உருவாக்கமுடியும். ஒரு நீர்வண்ண ஓவியம் பல்வேறு வண்ணங்களைக்கொண்டு குழைத்துக் குழைத்து உருவாவதுபோல இத்தொகுப்பு உருவாகி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...