அரூப முதலையின் கால் தடங்கள்

10picதமிழில், வேறெந்த இலக்கிய வடிவையும்விட உயரிய இடத்தை சிறுகதைகள் அடைந்திருக்கின்றன எனலாம். நூற்றாண்டு கால தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் பேசப்படாத பொருளோ, சோதிக்கப்படாத வடிவமோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு முக்கியமான பரிச்சார்த்த முயற்சிகள் பலவும் இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிறுகதைகளில் அழுந்தத் தடம் பதித்த முன்னோடிகள் பலரும் இயங்கிய களத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே, அதீத பொறுப்பையும், அவர்களைக்காட்டிலும் நாம் புதிதாக என்ன செய்துவிட முடியும் என்பதான அச்சத்தையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. இவற்றை மீறித்தான் இன்று எழுத வருபவர்கள் எழுத வேண்டியிருக்கிறது. படைப்பும் பிரசுரமும் ‘டிஜிட்டலாகி’விட்ட இந்தக் காலத்தில் சரியான வாசகர்களிடம் ஓர் எழுத்தாளன் தன்னைக் கொண்டு சேர்ப்பதே அவன் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலெனப் படுகிறது. நூற்றுக்கணக்கான கதைகள் அச்சு, இணையம் என்று பல்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் வெளிவரும் போது, நல்லதோர் ஆக்கம் அதற்குரிய கவனத்தைப் பெறாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே இன்று எழுதுபவர்கள் தரமான படைப்புகளை, தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதன் மூலம் மட்டுமே அவர்கள் உரிய கவனத்தையும், அங்கீகாரத்தையும் பெறவியலும், அதற்காக இன்றைய எழுத்துக்காரர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அப்படியான உழைப்பும் திறமையும் ஒருங்கே கூடிவரும் இன்றைய இளம் படைப்பாளிகளில் குறிப்பிடத் தகுந்தவராக நவீன் தென்படுகிறார்.

போயாக் – நவீனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுதப்பட்டவை. இவ்வற்றுள் பலவற்றை அவை வெளியான நேரத்திலேயே வாசித்திருக்கிறேன். இப்போது தொகுப்பாக மீண்டும் வாசிக்கும்போது, அவை, வேறோரு தளத்தில் கவிந்து இன்னும் புதிய பரிமாணங்களை விரித்துச் செல்கின்றன. அதன் வழியே, நவீனின்படைப்புலகைப் பற்றிய கோட்டுச்சித்திரம் ஒன்றையும் உருவாக்கிக் கொள்ளத் தோதாகிறது.

நவீனச் சிறுகதைகளில் கதை, துலக்கமாக அல்லாமல், உள்ளோட்டமாக பொதிந்திருக்கும். அசோகமித்திரனின் கதைகள் அப்படியானவை. ஆங்காங்கே இடப்பட்டிருக்கும் தீற்றல்களை ஒன்று சேர்த்துப் பார்க்கும் கூர்மையுள்ள ஒரு வாசகன், அற்புதமான சித்திரம் ஒன்று திரண்டு வருவதைக் காணலாம். வரிகளுக்கிடையே வாசிப்பதற்கும் அவற்றில் இடமிருக்கும். அவ்வாறில்லாமல் நவீனின் கதைகள் வெளிப்படையானவை. தொடக்கமும், முடிவும், முடிச்சும், சிக்கலும், தீர்வும் கொண்டு தன்னளவில் நிறைவு பெற்ற கதைகள். ஆனாலும் அவற்றில் வெளிப்படையாகத் தெரியும் கதைக்கு இடையே மெல்லியதாக ஊடோடும் ‘கதை’ ஒன்றும் இருக்கும். இப்படியாக உள்ளோடும் மற்றொரு கதையின் வழியே எழுத்தாளன் தன் புனைவின் சாத்தியங்களைத் திறக்கிறான்.

இத்தொகுப்பின் முதல் கதை, மசாஜ் நிலையங்களைத் தேடித்திரியும் இரண்டு இளைஞர்களைப் பற்றியது. விதவிதமான மசாஜ் நிலைய அனுபவங்களை, ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு வருகிறார். அவ்வாறு அடுத்தடுத்து வரும் போது, எங்கே சோகம் கவியும் கதை ஒன்று வந்துவிடுமோ என்றெண்ணி வாசிக்கும் போதே அப்படியான ஒன்று வந்தமைகிறது. போரின் பொருட்டு தப்பி வந்த இலங்கைப்பெண், உணர்ச்சி ததும்ப தன் கதையைப் பேசுகிறாள். அவள் இலங்கை அகதி என்று சொல்லும் போதே மிச்சத்தை ஒரு தமிழ் வாசகன் இட்டு நிரப்பிக் கொள்வான். ஆனாலும் இக்கதையில், அவள் தன் கதையைப்பற்றிப் பேசுகிறாள். சுயபச்சாதாபம் கொள்கிறாள். வாசிப்பவனின் அனுதாபத்தையும் கோருகிறாள்.

ஒரு முறை இளையராஜாவைப் பற்றிய தன்னுடைய கட்டுரையில் இயக்குனர் பாலுமகேந்திரா, “எனது படங்களில் வரும் பிரக்ஞைப்பூர்வமான மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர்” என்று கூறியிருப்பார். நல்ல இசைக்கு, இசைக்கப்படும் இடங்களை விட எந்தவிடத்தில் இசைக்காமல் விட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நல்லதொரு சிறுகதைக்கும் இது பொருந்தும். பேச வேண்டிய இடங்களைவிட பேசாமல் விடும் இடங்களில்தான் சிறுகதை தன்னை நிறுவிக் கொள்கிறது.

அப்படியாக, நுட்பமாக கோடிட்டு உணர்த்த வேண்டிய இடத்தை உணர்வுக் குவியலாக்கிக் கதையை முடித்திருப்பது இக்கதையை பலவீனமாக்குகிறது.

மேலும்,  விலைமாதர்களை முன் வைத்து தமிழில் திரும்பத் திரும்ப எழுதப்பட்ட அதே களம்.  இதே இடத்தில் ஜி.நாகராஜனின் “டெர்லின் சர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்” என்ற கதை நினைவுக்கு வருகிறது. அதில் ஓரிடத்தில்கூட தான் வந்து சேர்ந்த பாலியல் தொழில் குறித்த சலிப்போ வெறுப்போ அவளிடம் இருக்காது. மற்றவர்களைப் போல தமக்கு அமையாத வாழ்வு பற்றிய தவிப்பும், ஏக்கமும் இருக்கும். அதுவும் கூட அக்கதையில் பூடகமாகவே சொல்லப்பட்டிருக்கும்.

ஜி. நாகராஜன் போன்ற ஜாம்பவான்களுடன் ஓர் இளம் எழுத்தாளரின் கதையை ஒப்பிடுவது எப்படி முறையாகும் என்று எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். ஆனால் ஆசான்களுடன் ஒப்பிடாமல் அவர்களோடு போட்டி போடாமல், தேவைப்பட்டால் முரண்பட்டு முட்டிக் கொள்ளாமல் எப்படி முன்னேறுவது? என்ற பதிலையும் கூறி சமாதானமடைகிறேன்.

இத்தொகுப்பின் சிறந்த கதையென்று ‘ஜமால்’ சிறுகதையைக் கூறுவேன். கதை, மொழி, சூழல், நுட்பம், உத்தி, கலை என அனைத்தும் திரண்டு வந்த ஒரு கதையாக இது இருக்கிறது. ஓரிடத்தில் புதிதாக வேலைக்குச் சேருபவர்களிடத்தே அங்கு ஏற்கனவே தடம் பதித்து இருக்கும் முன்னவர்களுக்கு எப்போதும் ஒரு சிறு வெறுப்பும், மெல்லிய உதாசீனமும் இருக்கும். வேலை பார்க்கும் இடம் என்றில்லை. நண்பர்க்குழாம் ஒன்றில் புதிதாக ஒருவர் இணையும் போதுகூட அங்கிருக்கும் வேறு யாராவது ஒருவருடன் ஒட்டவியலாமல் வெறுப்பும் விலகலும் பரவுவதுண்டு. ஆனால், பழகப் பழக அவர்களே மற்றவர்களை விட அதிகம் நட்பு பாராட்டிக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கலாம். இப்படியான ஒரு பகையை, பின் அதுவே திரிந்து நட்பாக மாறும் தருணத்தை, சின்னச் சின்ன சம்பவங்களாகக் கோர்த்து அழகாக கதையாக்கியுள்ளார். அதன் ஊடே, கதை சொல்லிக்கும் அவன் அம்மாவுக்கும் இடையில் இருக்கும் பாசமும் அன்பும் மிகையில்லாமல் இயல்பாக சொல்லப்பட்டிருக்கும். அதிலும் கதை சொல்லியின் அப்பாவுக்கும் சித்திக்கும் இடையில் இருக்கும் தவறான தொடர்பை ஓரிரு வரிகளில் நுட்பமாக சித்தரிக்குமிடத்தில் நவீன் சிறப்பான கதைசொல்லியாக மிளிர்கிறார்.

முதலில் வெறுப்பை உமிழும் படியாக சித்தரிக்கப்படும் ஜமாலின் ஒரு பக்கத்தை மட்டும் காட்டி இருமைக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவனின் மறுபக்கத்தையும் உணர்த்தி இங்கு, எதுவுமே கறுப்புமில்லை வெள்ளையுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் இடத்தில் அம்மாவின் நினைவைக் கொண்டு வந்து நிறுத்தி கதையை முடிக்கிறார். அதே போல கதையில் வரும் அவ்விரு வங்காளதேசிகளுக்கிடையே புகையும் பகைமையை ஆங்காங்கே ஒரு சில வார்த்தைகளில் தீட்டியிருப்பார். வாசகன் நிரப்பிக் கொள்ள ஆங்கோர்  கிளைக்கதையே விரியும்.

முந்தைய “மசாஜ்” பற்றிய கதையிலும்கூட அப்பா பற்றிய  நினைவுக்குறிப்பைச் சொல்லி, அதைக் கதையின் முடிவில் கொண்டு வந்து இணைத்திருப்பார். ஜமால் கதையில் இதே உத்தியை அம்மாவுக்குப் பயன் படுத்தியிருப்பார். முன்னதில் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றும் அதே உத்திதான் பின்னதில் கதையுடன் அழகாகப் பொருந்திப்போகிறது.

தீண்டாமையைப் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் அவலங்கள் குறித்தும் பேசும் முக்கியமான கதை வண்டி. தன் குழந்தைக்கு நேரும் ஒவ்வொரு அவமானத்திற்கும் வீரய்யன் சிறு பரிசொன்றைக் கொடுத்து சமாதானப்படுத்துவதாக வரும் இடம் மனதை கனத்துப் போகச் செய்கிறது. தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து படிப்பு, பொருளாதாரம் போன்றவற்றின் வழியே மேலே வந்தவர்களில் பலர், பின்பு எந்தக் காலத்திலும் பழைய நிலையை நினைவுகூரக்கூட விரும்புவதில்லை. அவர்கள் சந்தித்த வலி அத்தகையது.  அதே நேரத்தில் அவர்களிடத்தே அது குறித்து மெல்லிய குற்ற உணர்ச்சியும் கூடி வருவதைக் காணலாம். அந்த வலியையும், விலக்கத்தையும் அதன் பொருட்டெழும் குற்ற உணர்வையும் மிகச்சரியாக பிரதிபலிக்கும் பாத்திர அமைப்பு மரியதாஸூனுடையது.

இதில், ராமச்சந்திரன் மரியதாஸாக மாறிய கதை நுட்பமாக இரு கதைகளாக இணைத்துச் சொல்லப்பட்டிருக்கும். இரண்டாவது கதையில் மாட்டுவண்டி என்று வரும் போதே வாசகமனம் முதல் கதையுடன் சென்றதை முடிச்சுட்டுக் கொள்கிறது. எம்.ஜி.ஆர் சுடப்பட்டதுக்கும் இறந்ததுக்குமான கால இடைவெளியில் கதை நகர்கிறது. கதைநெடுக அவரும் ஒரு கதாப்பாத்திரமாகவே வருகிறார். எளிய மக்கள் அவரை ஒரு காப்பானாகவே தரித்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் கடைசியில் ராமச்சந்திரன்களைவிட தேவகுமாரன் ஒருவரே அவர்களை கரைசேர்க்கிறார்.

வழக்கமான தன் பாணி கதைகளிலிருந்து விலகி, மாறுபட்ட தளத்தில் எழுத முனையும் பெரும்பாலானோர் சென்று சேருமிடமாக இந்திய மரபில் தோய்ந்த நம்பிக்கைகள் சார்ந்த கதைகளே இருக்கின்றன. அந்நம்பிக்கைகள் எப்போதும் நமக்கு அள்ளக் குறையாத ஆச்சர்யங்களைத் தருகின்றன.  இன்றும் கூட மேற்கத்திய நாட்டினரிடம் இந்தியா போன்ற கிழக்கத்திய நாடுகளை மாயதந்திரங்களால் கட்டுண்டு இருக்கும் ஒரு ஆச்சர்யக் கூடாகவே பார்க்கும் போக்கு இருக்கிறது. போர்ஹேஸின் மணல் புத்தகம் கதையில் கூட அவரும் அதில் வரும் மாயப்புத்தகத்தை ராஜஸ்தானிலிருக்கும் பைக்கானர் என்னுமிடத்தில் இருந்தே பெற்றதாகவே எழுதியிருப்பார்.

அதன் நீட்சியாக, புனைவுகளில் ‘நாகம்’ போல கற்பனைக்கு ஏற்றபடி விஸ்தீரணம் கொள்ளும் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லலாம். காமம், வன்மம் என அனைத்தின் உருவகமாகவும் புனைந்து கொள்ளும் சுதந்திரத்தை, நாகம் ஒரு படைப்பாளிக்குத் தருகிறது. கதைக்குள் கதை என்று விரியும் மீபுனைவு, மாய யதார்த்தமாக மாறிப் புனையும் சாத்தியம் ஆகியவற்றை நாகம் அளிக்கிறது. ஜெயமோகனும் ‘நாகம்’ என்னும் தலைப்பிலேயே ஒரு கதை எழுதியிருக்கிறார். ஜீ.முருகன் தன் ‘பாம்பு’ கதையில் சாதியென்னும் வன்மத்தை பாம்பாக உருவகப்படுத்திப் புனைந்திருப்பார். நாஞ்சில் நாடன் தன்னுடைய ‘பாம்பு’ என்னும் சிறுகதையில் பாம்புகளை முன்வைத்து பகடி செய்திருப்பார். வண்ண நிலவனின் பாம்பும் பிடாரனும் தமிழின் முக்கியமான சிறுகதைகளுள் ஒன்று. இந்த வார ஆனந்த விகடனில் கூட “பாம்பு” என்ற ஜான் சுந்தரின் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படியாக இந்த ஒரு நூற்றாண்டு கால தமிழ்ச்சிறுகதை வரலாற்றில், புற்றைவிட புனைவுகளில் அதிகமாக பாம்புகள் உலவியிருக்கின்றன. ஆனால் இதுவரையிலான கதைகளையும் மீறி தனித்துவமான கதையாக இதை மிளிரச் செய்வதை நூலிழையில் தவறவிட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

இதே வகைமையில் அமைந்த மற்றொரு கதை பேச்சி. இக்கதையில் கதையை முன் பின்னாகக் கலைத்துப் போடும் கூறுமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார். அதுவே இக்கதையை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. யட்சி கதைகளும் ஒரு எழுத்தாளனுக்கு மாபெரும் புனைவு வெளிக்கான தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன. அதை, இக்கதையில் திறம்பட செய்திருக்கிறார். முந்தைய கதைகளைப் போலவே இக்கதையிலும் ‘பாதத்தை’ முன்வைத்து ஓர் இணைப்பு இருக்கிறது. அது இங்கு அழகாகப் பொருந்தி கதையை வேறு நிலைக்கு உயர்த்துகிறது.

ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் ஏழ்மையைப் பின்னணியாகக் கொண்டு, குழந்தைகளின் உலகத்தில் சொல்லப்படும் அற்புதமான கதையாக “வெள்ளைப் பாப்பாத்தி” படைத்திருக்கிறார். கதை நடக்கும் களம் மலேசியாவாக இருந்தாலும் வாசிப்பவர் தன் பால்ய கால நினைவுகளுடன் அப்படியே தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. வெள்ளைப் பாப்பாத்திக் கதையை, அக்குழந்தையின் தாயினுடைய பார்வையில் பார்க்கும் ஒருவருக்கு கதை முற்றிலும் வேறொன்றாகவும் பரிமாணிக்கிறது. இக்கதை பள்ளிக் கல்வி முறையில் இருக்கும் சிக்கலை கோடிட்டுக் காட்டவும் செய்கிறது. மாற்றுச் சிந்தனைகளை மழுங்கடிக்கும் கல்விமுறையைக் கேள்வி கேட்கிறது. அதை, பிரச்சார நெடி துளியும் இல்லாமல் செய்திருப்பதில்தான் நவீனின் கலைமனம் வெளிப்படுகிறது.

இப்படியாக, வெள்ளைப் பாப்பாத்தி, வண்டி, ஜமால் என்று கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் தன்னுடைய அரசியலை மிக மிக நுட்பமாக முன்வைக்கிறார். அந்த அரூப அரசியல் முதலையின் கால் தடத்தை, சிறிய மெனக்கெடலுடன் ஒரு வாசகன் தேடிக் கண்டடையும் இடத்தில் இத்தொகுப்பிலிருக்கும் கதைகளின் முக்கியத்துவத்தை அவன் உணர்வான்.

நவீன், ஒரு கதையை லீனியராகச் சொல்லிக் கொண்டே வந்து நினைவுக்குறிப்பொன்றின் வழியே மற்றொரு கதையைக் கூறி, கதையின் முடிவில் இரண்டு கதைகளையும் ஒரு பொதுவான புள்ளியில் இணைக்கிறார். இந்த உத்தியை மசாஜ், ஜமால், வண்டி, யாக்கை என்று இத்தொகுப்பிலிருக்கும் அநேக கதைகளில் திரும்பத் திரும்பச் செய்திருக்கிறார். ஆனாலும் அவரின் வசீகரமான மொழியும் நடையும், அவர் சமைக்கும் புனைவுலகும், அதனோடு ஊடுபாவாகச் உறுத்தலின்றி சொல்லப்படும் அரசியலும் இப்படியான சின்னச் சின்னக் குறைகளை வாசகக் கண்ணுக்குப் புலப்படாமல் செய்துவிடுகின்றன.

நவீன், தன் மண் சார்ந்த பிரச்சனைகளையும் அங்குள்ள மனிதர்களையும், அவர்களின் இருப்பையும் அதன் பொருட்டெழும் அக-புறச் சிக்கல்களையும் முன்வைத்து எழுதிய கதைகள் அவரது மிகப்பெரிய பலம். ஜமாலும், வெள்ளைப் பாப்பாத்தியும் தமிழ்ச்சிறுகதையுலகில் நீண்ட காலம் பேசப்படுவார்கள்; கூடவே நவீனும்.

1 கருத்து for “அரூப முதலையின் கால் தடங்கள்

  1. October 17, 2018 at 9:26 pm

    நவினின் போயாக் சிறுகதை தொகுப்பினைப் பற்றி கார்த்திக் பாலசுப்ரமணியம் சிறப்பாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இதில் ஏறக்குறைய பல கதைகளை முன்பே படித்திருந்ததால், விமர்சனப் பார்வையோடு எளிதில் ஒன்றிப்போக முடிகிறது. எனினும், அவற்றை ஒரு தொகுப்பாக காணும் போது, மீண்டும் அவற்றைப் படிக்க வேண்டும் என்ற ஓர் உந்துதலை ஏற்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...