பூங்காவில்

002“நான் நீண்ட காலமாக பூங்காவில் உலவியதில்லை. அதற்கென நேரம் ஒதுக்கவோ அல்லது அதில் ஆர்வமோ எனக்கில்லை.”

“எல்லோருக்கும் அதே நிலைதான். வேலை முடிந்ததும் மக்கள் வீட்டிற்கு விரைகிறார்கள். வாழ்க்கையே அவசரகதியில் உள்ளது.”

“சிறுவனாக இருந்தபோது, இங்கே வந்து இந்த புல்லில் விழுந்து புரள நான் உண்மையிலேயே விருப்பு கொண்டிருந்தேன்.”

“நான் எனது தாய் தந்தையரோடு வந்ததுண்டு.”

“மற்ற குழந்தைகளும் இருக்கும் தருணம் எனக்கு விருப்பமானதாக இருக்கும்.”

“குறிப்பாக நீயும் அங்கே இருக்கும்போது.”

“எனக்கு நினைவிருக்கிறது.”

“அப்போது நீ இரு சிறு சடை போட்டிருப்பாய்.”

“அப்போதெல்லாம் நீ எப்போதும் டங்கிரீஸ் (dungarees) அணிந்திருப்பாய். மேலும் நீ மிகுந்த திமிர் பிடித்தவனாக இருந்தாய்.”

“நட்பு உணர்வு அற்றும் மண்டை கனத்தோடும் இருந்தாய்.”

“உண்மையாகவா?”

“ஆமாம்,எவரும் உண்னை பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.”

“எனக்கு நினைவில்லை. ஆனால், உன்னோடு விளையாடுவதில் எனக்கு விருப்பம் இருந்தது. ஒரு ரப்பர் பந்தை உதைத்து உன்னோடு விளையாடியதுண்டு.”

“நான்சென்ஸ், நீ ஒரு ரப்பர் பந்தை எப்பவும் உதைத்ததே இல்லை! நீ அப்போது சிறிய வெள்ளைநிற சப்பாத்துக்களை அணிந்திருப்பாய். அவை அழுக்காகிவிடும் என்கிற பயம் உனக்கிருந்தது.”

“ஆமாம். சிறு வயதில் வெள்ளை நிற சப்பாத்துக்கள் அணிவதில் எனக்கு மிகுந்த விருப்பு இருந்தது.”

“நீ ஒரு இளவரசிபோல் இருப்பாய்.”

“நிச்சயமாக – சப்பாத்து அணிந்த இளவரசி.”

“பிறகு உங்கள் குடும்பம் வேறு இடத்திற்கு மாற்றலாகிச் சென்றுவிட்டது.”

“அது சரிதான்.”

“முதலில் நீ அடிக்கடி ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து போய்க்கொண்டிருந்தாய். பிறகு அது குறைந்துபோனது.”

“நான் வளர்ந்துவிட்டிருந்தேன்.”

“என் அம்மா உண்மையில் உன் மேல் அன்பு கொண்டிருந்தாள்.”

”தெரியும்.”

“எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் இல்லை.”

“எல்லோரும் நாம் இருவரும் ஒத்த தோற்றத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்; மூத்த சகோதரி, இளைய சகோதரன் போல.”

“நாம் இருவரும் ஒரே வயதுடையவர்கள், நான் இரண்டு மாதங்கள் மூத்தவன் என்பதை மறந்துவிடாதே.”

“ஆனால், நான்தான் மூத்தவள்போல் தோன்றினேன்; எப்போதும் ஒரு கையளவு கூடுதல் உயரத்தில், உனது மூத்த சகோதரி போல.”

“அப்போது பெண்கள் விரைவாக உயரமானார்கள். சரி, அது போதும், வேறேதாவது பேசுவோம்.”

“வேறெதைப்பற்றி பேசலாம்?”

மரங்களுக்கடியிலிருந்த பாதையின் இரு மறுங்கிலும், கத்தரிக்கப்பட்ட ஜப்பனீஸ் சைப்ரஸ் வளர்ந்திருந்தது. அதன் பின்னாலிருந்த சரிவில், கையில் சிவப்பு கைப்பையுடன் வந்த ஒரு பெண், கற்பெஞ்சில் உட்கார்ந்தாள்.

“நாமும் சிறிது நேரம் உட்காருவோம்.”0022

“சரி.”

“சூரியன் அஸ்தமிக்கப்போகிறது.”

“ஆமாம், அழகாயிருக்கிறது.”

“எனக்கு இது போன்ற செயற்கையழகு பிடித்தமில்லை.”

“பூங்காவிற்கு செல்ல விரும்புவதாக நீ சொல்லவில்லை?”

“அது நான் சிறுவனாக இருந்தபோது சொன்னது. நான் மலைப்பிரதேசத்தில் வாழ்ந்திருக்கிறேன். மரம் வெட்டுபவனாக ஏழு வருடங்கள் பழமைக் காடுகளில் வாழ்ந்திருக்கிறேன்.”

“அதில் சமாளித்து வாழ முடிந்திருக்கிறது உன்னால்.”

“காடுகள் உண்மையில் பிரமிப்பூட்டுபவை.”
அந்த உடையணிந்திருந்த பெண், கற்பெஞ்சிலிருந்து எழுந்து, கச்சிதமாக நறுக்கப்பட்டிருந்த ஜப்பானிய சைப்பிரஸ் செடிகளுக்கு அப்பால், நிழல் படர்ந்த அந்தப் பாதையின்  முடிவில், பார்வையை நிறுத்தியிருந்தாள். அத்திசையிலிருந்து சிலர் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக, நெற்றிப்பொட்டைத் தொடும் முடிகொண்ட உயரமான ஒரு இளைஞன். மர உச்ச்சிகளுக்கும் சுவர்களுக்கும் அப்பால், வானம் அஸ்தமனத்தின் பிரகாச சிவப்பும் பழுப்பு நிறமும் முயங்க,அலையடிக்கும் மேகம் தலைக்கு மேல் விரவிப் படர்கிறது.

“நான் இது போன்ற அழகான சூரிய அஸ்தமனத்தை நீண்ட காலமாக பார்த்ததில்லை.வானம் தீப்பிடித்ததுபோல் இருக்கிறது.”

“எது போல?”

“இது ஒரு காட்டுத்தீபோல்….”

“மேலும் சொல்”

“காடு தீப்பிடித்துக்கொண்டால், வானம் இப்படித்தான் இருக்கும். தீ விரைந்து வஞ்சினத்துடன் பரவும். மரங்களை வெட்டிச் சாய்க்க நேரமிருக்காது. திகிலூட்டும். காற்றில் பறக்கும் விழுந்த மரங்களைப் பார்க்க, தூரத்தில் அவை தீயில் மிதக்கும் சிறு துரும்புகள்போலத் தோன்றும். நிலைகுலைந்த சிறுத்தைகள் காட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து, ஆற்றுக்குள் பாயும். அவை நேராக உன்னை நோக்கி நீந்தி வரும்__________”

“சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்காதா?”

“அவை அது பற்றி நினைப்பதை கடந்துவிட்டிருக்கும்.”

“அவற்றை துப்பாக்கியால் எதிர்கொள்ளமாட்டார்களா?”

“அவர்களும் திகிலடைந்து, ஆற்றங்கரையில் நின்று வெறுமனே தீயைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.”

“ஏதும் செய்வதற்கில்லையா?”

“மலை அருவிகளால் அதனை தடுத்து நிறுத்த இயலாது. அடுத்த பக்கமுள்ள மரங்கள் கருகி வெடித்து திடுமென பற்றிக்கொள்ளும். அதனைச் சூழ்ந்து சில மைல்களுக்கு புகையும் சூடும் மிகுந்து மூச்சுத்திணறல் ஏற்படும். உன்னால் செய்ய முடிந்ததெல்லாம், காற்று திசை மாறக் காத்திருப்பதும் அல்லது தீ ஆற்றை அடைந்து, தன்னிலை அழிந்து, அணைந்துபோவதும்தான்.”

அந்த இளம்பெண், மீண்டும் கற்பெஞ்சில் உட்கார்ந்தாள்; அவளது சிவப்பு கைப்பை பக்கமே இருக்கிறது.

“அந்தக் காலங்களில் உனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சிலவற்றை மேலும் கொஞ்சம் சொல்.”

“அதில் சொல்வதற்கு அதிகம் ஒன்றுமில்லை.”

“அதெப்படி சொல்ல மேலும் ஏதும் இல்லாமல் இருக்க முடியும்? சொன்னவரை மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது.”

“ஆனால், அதை இப்போது பேசுவதால் ஏதும் பலனில்லை. இத்தனை ஆண்டுகளாய் நீ என்ன செய்துகொண்டிருந்தாய் என்பதைச் சொல்.”

“நானா?”

“ஆமாம், நீதான்.”00222

“எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்.”

“என்ன வயது?”

“ஆறு.”

“அவள் உன்னைப் போலவே இருப்பாளா?”

“எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்.”

“நீ சிறுமியாய் இருந்தபோது இருந்தது போலவே இருக்கிறாளா? வெள்ளை சப்பாத்து அணிகிறாளா?”

“இல்லை. வள் தோல் சப்பாத்து அணியவே விரும்புகிறாள். அவளது அப்பா அடுத்தடுத்து வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.”

“நீ அதிர்ஸ்டசாலி. அவர் ஒரு நல்ல மனிதர்போல் தெரிகிறார்.”

“அவர் என்னிடம் அன்பாகவே இருக்கிறார். ஆனால், நான் அதிர்ஸ்டசாலியா  இல்லையா என்பது தெரியவில்லை.”

“ உன்னுடைய வேலையும் நல்ல வேலைதானே?”

“என் வயதுள்ள மற்றவர்கள் செய்யும் வேலையோடு ஒப்பிட எனது வேலை பரவாயில்லைதான். ஆபீசில் உட்கார்ந்து போன் கால்களுக்கு பதிலளிப்பதும், பத்திரங்களை எனது மேலதிகாரிக்கு கொண்டு சேர்ப்பதுமே வேலை.

“நீ ஒரு செயலாளரா?”

“பத்திரங்களைக் கவனித்துக்கொள்வது என் வேலை.”

“அது நம்பிக்கைக்குரிய வேலை. அவர்கள் உன்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அது காட்டுகிறது.”

“ஒரு உடல் உழைப்புத் தொழிலாளியாக இருப்பதைவிட இது மேல். நீயும் கடினமான காலத்தைக் கடந்து வந்தவன்தானே? நீ பல்கலைக்கழகம் சென்றுள்ளாய். எனவே ஏதேனும் நிபுணத்துவ வேலை செய்வாய் என நினைக்கிறேன்.”

“ஆமாம். ஆனால், அது எனது சுய முயற்சியால்.”

சூரிய அஸ்தமனத்தின் நிறங்கள் மறைந்துவிட்டிருந்தன. வானம் இப்போது கருஞ்சிவப்பில் இருந்தது. ஆனால், தொடுவானத்தில், மரங்களின் உச்சிக்கு மேலே, ஒரு கறுமை மேகத்தின் விளிம்பில் ஆரஞ்சு மஞ்சள் பிரகாசம். பூங்காவின் சரிவில் இருள் கவிய, அந்தப் பெண் கற்பெஞ்சில் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறாள். அவள், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து, பின் எழுந்து நிற்பதுபோல் இருக்கிறது. அவள் கையில் கைப்பையைப் பிடித்திருக்கிறாள். அதைக் கீழே வைக்க முடிவெடுத்தவாறு, சைப்ரஸ் செடிகளுக்கு அப்பால் தெரிந்த பாதையைப் பார்த்தபடி இருக்கிறாள். அநேகமாய், மேகங்களுக்குப் பின்னாலிருக்கும் நிலவைக் கவனித்துவிட்டு, திரும்பி, தரையைப் பார்த்தபடி, மேலும் கீழும் நடக்கிறாள்.

“அவள் யாருக்காகவோ காத்திருக்கிறாள்.”

“ஒருவருக்கு காத்திருப்பது என்பது பெரிய அவஸ்தை. இப்போதெல்லாம் இளைஞர்கள்தான் உறுதிசெய்தபடி சந்திப்புகளுக்கு வருவதில்லை.”

“நகரத்தில், மிக அதிகமான எண்ணிக்கையில் இளம்பெண்கள்  இருக்கிறார்களா?”

“இளம் ஆண்களுக்கும் குறைச்சலில்லை. ஆனால், கண்ணியமான இளைஞர்கள் மிகவும் குறைவு.”

“ஆனால், இந்த இளம்பெண் மிக அழகாக இருக்கிறாள்.”

“ஒரு பெண் காதலில் முதலில் விழுந்தால், அது துரதிர்ஸ்டமே.”

“அவன் வருவானா?”

“யாருக்குத் தெரியும்? காத்திருப்பதென்பது, உண்மையில் ஒருவரை பித்து பிடிக்கச்  செய்துவிடும்.”

“அதிர்ஸ்டவசமாக, நாம் அந்த வயதைக் கடந்துவிட்டோம். நீ யாருக்காகவும் காத்திருந்திருக்கிறாயா?”

“அவர்தான் என்னை முதலில் அணுகினார். நீ எவரையும் காத்திருக்க வைத்திருக்கிறாயா?”

“நான் எந்தச் சந்திப்புக்கும் செல்லத் தவறியதில்லை.”

“உனக்கு பெண் நண்பர் உண்டா?”

“இருப்பதுபோல்தான்.”

“பிறகு,ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?”

“அநேகமாக செய்துகொள்ளலாம்.”

“நீ உண்மையில் அவளை நேசிக்கிறாயா?”

“நான் அவள் மேல் இரக்கம் கொண்டுள்ளேன்.”

“இரக்கப்படுவது காதல் அல்ல. நீ அவளைக் காதலிக்காவிட்டால், தொடர்ந்து அவளை ஏமாற்ற வேண்டாம்.”

“நான் என்னை மட்டுமே ஏமாற்றிக்கொண்டுள்ளேன்.”

“அது அடுத்தவரையும் ஏமாற்றுவதுதான்.”

“வேறேதேனும் பேசலாம்.”

“சரி.”

அந்த இளம்பெண் உட்காருகிறாள். அவள் மீண்டும் திடுமென எழுந்து, பாதையில் பார்வையை நிறுத்துகிறாள்.தொடுவானத்தில்,மங்கிய சிவப்பின் கடைசிச் சிதறல் தென்படவில்லை.அவள் மீண்டும் உட்காருகிறாள். ஆனால்,பிறர் தன்னை கவனிப்பதை உணர்ந்தவள்போல்,தலை குனிந்து, முட்டிப் பகுதியிலிருக்கும் பாவாடையை திருகிக்கொண்டிருந்தாள்.

“அவன் வருவானா?”

“எனக்குத் தெரியவில்லை.”

“இது நடக்கக் கூடாது.”

“நடக்கக் கூடாதது நிறையவே உண்டு.”

“உன்னுடைய பெண்நண்பி அழகானவளா?”

“அவள் கவலைக்குரியவள்”

“அப்படி பேசாதே! அவளைக் காதலிக்காவிட்டால், அவளை ஏமாற்றாதே. உனக்காக, நீ உண்மையில் நேசிக்கக்கூடிய, அழகான இளம்பெண் ஒருத்தியைத் தேடிக்கொள்.”

“அழகாய் இருப்பவள் என்னை விரும்ப வேண்டும் என்பதில்லை.”

“ஏன்?”

“காரணம், எனக்கு ஒரு நல்ல தகப்பன் இல்லை.”

“அப்படிப் பேசாதே. எனக்கு கேட்கப் பிடிக்கவில்லை.”

“சரி,கேட்க வேண்டாம். நாம் புறப்படலாம் என நினைக்கிறேன்.”

“நீ எனது வீட்டிற்கு வருகிறாயா?”

“நான் உனது மகளுக்கு பரிசு கொண்டுவர வேண்டும். அது உனக்கான எனது ஆசீர்வாதமாகவும் இருக்கும்.”

“அப்படிப் பேசாதே.”

“அதில் என்ன தவறு?”

“நீ எப்போதும் என்னைப் புண்படுத்துகிறாய்.”

“அது எனது நோக்கமாக இருந்ததில்லை.”

“ உனது சந்தோஷமே எனது விருப்பம்.”

“நான் அதைக் கேட்க விரும்பவில்லை.”

“அப்படியானால், நீ சந்தோஷமாக இல்லையா?”

“நான் அது குறித்துப் பேச விரும்பவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த ஒருமுறை சந்திப்பதே கடினமானதாக இருந்துள்ளது.எனவே, அதுபோன்ற மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம்.”

“ மிகச் சரி. நாம் வேறு விஷயங்கள் பற்றிப் பேசுவோம்.”
அந்த இளம்பெண் திடுமென எழுந்து நிற்கிறாள். யாரோ ஒருவர் அந்தப் பாதை வழி விரைந்து வருகிறார்.

“ஆமாம், அவன் வந்துவிட்டான்.”

அவன் ஒரு இளைஞன். அவன் நடையின் வேகம் குறையாமல்,தொடர்ந்து நடந்து செல்கிறான். அந்த இளம்பெண் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக்கொள்கிறாள்.

“இது அவள் எதிர்பார்த்து காத்திருக்கும் அவனல்ல. வாழ்க்கை பெரும்பொழுது அவ்வாறுதான். அபத்தமானது.”

“அவள் அழுகிறாள்.”

“யார்?”

அந்த இளம்பெண் உட்காருகிறாள். உயர்த்திய கைகளில், முகம் புதைந்திருக்கிறது போலிருக்கிறது. ஆனால், தெளிவாகப் பார்க்க முடியவில்லை. பறவைகள் கீச்சிடுகின்றன.

“எனவே, இங்கே, இன்னமும் பறவைகள் இருக்கின்றன.”

“காடுகளில் மட்டுமே பறவைகள் இருக்க வேண்டுமென்பதில்லை.”

“ம்… இங்கே இன்னமும் சிட்டுக்குருவிகள் இருக்கின்றன.”

“நீ சற்று ஆணவம் பிடித்தவனாக ஆகிவிட்டிருக்கிறாய்.”

“நான் அதைக்கொண்டுதான் என்னை தக்கவைத்துக்கொண்டிருக்கிறேன். அந்தக் கொஞ்சம் ஆணவம் இல்லாமலிருந்தால், நான் இன்று இங்கு இருக்கப்போவதில்லை.”

“அனைத்திலும் குற்றங்குறை காணாதே. நீ மட்டுமே துன்புற்றவனல்ல. அனைவருமே கிராமப்புறங்களுக்கு வேலை செய்ய அனுப்பப்பட்டவர்கள்தான். கிராமப்புறங்களுக்கு அனுப்பப்பட்ட, அங்கு சொந்தங்களோ நண்பர்களோ அற்ற  இளம்பெண்களின் நிலைமை இன்னும் மோசம் என்பதை நீ உணர வேண்டும். நான் அவரைத் திருமணம் செய்ததற்குக் காரணம் எனக்கு வேறு வழி இல்லை என்பதால்தான். அவருடைய பெற்றோர்தான் நான் மீண்டும் நகரத்திற்கு மாற்றலாகிவர உதவினர்.”

“நான் உன் மேல் பலி சொல்லவில்லை.”

“எவருக்கும் எவர் மேலும் பலி போட உரிமையில்லை.”
தெருவிளக்குகள் எரியத் தொடங்கி, மரங்களின் இலைகளினூடே மெல்லிய மஞ்சல் ஒளியை பரவச்செய்திருந்தது. இரவு வானம் மென்கருமையில் தனித்துவமற்றிருந்தது. நகரத்து வானில் விண்மீன்களும்கூட தெளிவாகத் தென்படாமல்,மரங்களிடையே ஒளிர்ந்த தெருவிளக்குகளின் வெளிச்சத்தை மேலும் பிரகாசமாய்க் காட்டின.

“நாம் போகலாம் என நினைக்கிறேன்.”

“ஆம், நாம் இங்கே வந்திருக்கக் கூடாது.”

“பார்ப்பவர்கள் நம்மை காதலர்கள் என்று எண்ணுவார்கள்.உனது கணவருக்குத் தெரிந்தால், அவர் தவறாகப் புரிந்துகொள்ளமாட்டார். அப்படித்தானா?”

“அவர் அப்படிப்பட்ட மனிதர் இல்லை.”

“அப்போ, அவர் மிக நல்ல மனிதர்.”

“நீ வந்து எங்கள் வீட்டில் தங்களாம்.”

“அவர் என்னை அழைத்தால் மட்டுமே.”

“நான் அழைப்பதும் அதுவும் ஒன்றுதானே?”

“உன் விலாசம் தெரியாதது பெரிய துரதிர்ஸ்டம்தான். இல்லையெனில் நான் நேராக உன் வீடு வந்து உன்னை அங்கேயே சந்தித்திருப்பேன்.”

“நீ அந்த அநாவசிய விஷயங்களுக்குள் எல்லாம் போகவேண்டியதில்லை.”

“இதுபோல நாம் ஒருவரை ஒருவர்  குத்திக்கொண்டிருக்க வேண்டாம்.”

“நீதான், ஒன்றைச்  சொல்லி அதில் வேறொரு அர்த்தம் வரும்படி செய்கிறாய்.”

“சரி, பேச்சை மாற்றுவோம்.”

“சரி.”

பூங்காவில் இருள் சூழ்ந்துவிட்டது. அந்த இளம்பெண்ணைக் காணவில்லை. விளக்கு வெளிச்சத்தில், வெண்மை போப்லார் மரங்களின் இலைகள் ஒளிர்கின்றன.தென்றல் வருவதன் மெல்லிய அறிகுறியில்,போப்லார் மரங்களின் இலைகள் நடுங்கி,மினுங்குகின்றன.

“அவள் இன்னமும் போகவில்லை. இல்லை போய்விட்டாளா?”

“இல்லை, அவள் ஒரு மரத்தின் மேல் சாய்ந்திருக்கிறாள்.”
ஒரு பெரிய மரம், அந்தக் காலியான கற்பெஞ்சிலிருந்து சற்றுத் தள்ளி நிற்கிறது.யாரோ, அதன் மேல்  சாய்ந்தபடி நிற்கிறார்.

“அவள் என்ன செய்கிறாள்?”

“அழுகிறாள்.”

“இது, அதற்குத் தகுதியானதில்லை.”

“ஏன் இல்லை?”

“அவனுக்காக அழுவது பிரயோஜனமில்லை. அவள் காதலுக்கு ஏற்ற தகுதியான, அவளை நேசிக்கக்கூடிய ஒரு நல்ல மனிதனை கண்டடைவதில் அவளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. அவள் உடனே புறப்பட வேண்டும்.”

“ஆனால், அவள் இன்னமும் நம்பிக்கையோடிருக்கிறாள்.”

“வாழ்க்கையின் பாதை அகன்றது. அதில் அவளுக்கான பாதையை அவள் கண்டடைவாள்.”
“உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதே; ஒரு பெண் எப்படி உணர்கிறாள் என்பது உனக்குப் புரியாது. ஒரு பெண்ணை புண்படுத்துவது என்பது ஒரு ஆணுக்கு மிகச் சுலபம்.பெண் எப்போதும் பலகீனமானவள்.”

“அவள் பலகீனமானவள் என்று தெரிந்தால்,ஏன் அவள் பலமுள்ளவளாக ஆவதற்கு முயலக்கூடாது?”

“கேட்பதற்கு சுகமான வார்த்தைகள்.”

“கவலைப்படுவதற்கான விஷயங்களைத் தேடிக்கொண்டிருக்கக்கூடாது. வாழ்வில் கவலைக்கொள்வதற்கு போதுமான விஷயங்கள் உள்ளன.ஒருவர் தான் எதிர்கொள்வதை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.”

“எதிர்கொண்டு ஏற்க வேண்டிய நிலையில் வாழ்வில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.”

“நான் சொல்வது, மனிதர்கள் தாங்கள் செய்ய வேண்டியதை மட்டும் செய்தால் போதும்.”

“அது எதுவுமே சொல்லாததற்கு சமம்.”

“சரிதான். நான் உன்னை பார்க்க வந்திருக்கக்கூடாது.”

“அதுவும் எதுவும் சொல்லாமையே.”

“சரி, நாம் போகலாம். நான் உனக்கு இரவு உணவு வாங்கித் தருகிறேன்.”

“நான் சாப்பிட விரும்பவில்லை.நம்மால் வேறேதாவது பற்றி பேச முடியாதா?”

“எதைப் பற்றி?”

“உன்னைப் பற்றி பேசு.”

“அடுத்த தலைமுறை பற்றி பேசுவோம். உன் மகளின் பெயர் என்ன?”

“நான் ஒரு மகனைப் பெற விரும்பினேன்.”

“ஒரு மகளைப் பெறுவதும் அதுபோன்ற ஒன்றுதானே.”

“இல்லை. ஒரு மகனாக இருந்தால், அவன் வளர்ந்த பின் அதிகமும் துன்பப்பட வேண்டி இராது.”

“எதிர்கால சந்ததிகளுக்கு அந்த அளவு துன்பப்பட வேண்டி இருக்காது. காரணம், நாம் அவர்களுக்காக துன்பப்பட்டுவிட்டோம்.”

“அவள் அழுகிறாள்.”

தலைக்கு மேலே, இலைகள் காற்றுக்கு சலசலக்கின்றன. ஆனாலும், அந்த அழுகையின் ஒலி தெளிவாகக் கேட்கிறது. அது அந்த காலி கற்பெஞ்சும் மரமும் உள்ள திசையிலிருந்து வருகிறது.

“நாம் சென்று அவளை ஆற்றுபடுத்த வேண்டும்.”

“அது உதவாது.”

“ஆனாலும், நாம் முயன்று பார்க்க வேண்டும்.”

“அப்படியானால், நீ போ.”

“இது மாதிரி சூழலில் ஒரு பெண் செல்வதே பொருத்தமானதாக இருக்கும்.”

“அவளுக்கு அந்த வகை ஆறுதல் தேவைப்படாது.”

“எனக்குப் புரியவில்லை.”

“உனக்கு எதுவும் புரிவதில்லை.”

“அதுவே சிறந்தது. புரிந்தால், அதுவே சுமையாகிவிடும்.”

“பிறகு ஏன் பிறரை ஆற்றுப்படுத்த விரும்புகிறாய்? ஏன் நீ உன்னை மட்டுமே ஆற்றுப்படுத்திக்கொள்ளக் கூடாது?”

“என்ன சொல்கிறாய்?”

“உனக்கு பிறரின் உணர்ச்சிகள் புரிவதில்லை. உணர்ச்சிகள் ஒரு சுமை என்றால், அதை புரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது.”

“சரி, புறப்படுவோம்.”

“என் வீட்டுக்கு வருகிறாயா?”

“அதற்குத் தேவை ஏதுமில்லை.”

“நாம் என்ன இப்படியே விடைபெறப்போகிறோமா? நான் உன்னை நாளை இரவு உணவுக்கு என் வீட்டுக்கு வரும்படி அழைத்திருக்கிறேன். அவரும் அப்போது அங்கே இருப்பார்.”

“நான் நாளை உன் வீட்டுக்கு வராமலிருந்தால், மிக நல்லதென நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”

“அது முற்றிலும் உன்னைப் பொருத்தது.”
இருளில், அழுகையொலி மிகத் துல்லிதமாகக் கேட்கிறது. இடையிடையே, அமுங்கிய கேவல், மாலைக் காற்றில் நடுங்கும் இலைகளின் ஓசையோடு கலக்கிறது.

“எனக்கு திருமணமானால் உனக்கு ஒரு கடிதம் போடுகிறேன்.”

“நீ எதுவும் எழுதாமல் இருப்பதே நல்லது.”

“பின்னாளில், நான் இந்த வழியே வேலை நிமித்தமாக கடககும்போது, ஒருவேளை, நான் உன்னை வந்து சந்திப்பேன்.”

“நீ வராமல் இருப்பதே நல்லது.”

“ஆமாம், அதுவொரு தவறுதான்.”

“நீ எந்தத் தவற்றைக் குறிப்பிடுகிறாய்?”

“நான் உன்னை மீண்டும் பார்க்க வந்திருக்கக் கூடாது.”

“இல்லை.நீ வந்ததில் தவறில்லை!”

“குறை நம் இருவரிலுமே இல்லை. அந்தக் காலக் கட்டத்தின் தவறுகளே குறைக்குரியவை. ஆனால், அவை யாவுமே கடந்த காலத்தில் உள்ளன. நாம் அவற்றை மறக்க கற்க வேண்டும்.”

“ஆனால், எல்லாவற்றையும்  மறப்பது என்பது கடினமாகவே உள்ளது.”

“ஒருவேளை காலம் மேலும் நகர்ந்தால்…”

“நீ புறப்படுவது நல்லது.”

“நீ பஸ் ஏறுவதை நான் பார்க்க வேண்டாமா?”
அவர்கள் இருவரும் எழுந்து நிற்கின்றனர். மென்கருமை மரத்தண்டின் பின்னாலிருந்து, கண்களுக்குப் புலப்படாத கற்பெஞ்சின் அருகிலிருந்து, அடக்க இயலாத கேவல். ஆனால் அந்தப் பெண் தென்படவில்லை.

“நாம் அவளை  வீட்டிற்குச் செல்லும்படி வற்புறத்துவது நல்லதென நினைக்கிறாயா?”
வெள்ளை போப்லார்  மரத்தின்,அந்த மென்மையான புதிய பசுமை இலைகள், தெருவிளக்கின் ஒளிச்சுடரில், பிரகாசிக்கின்றன.

மூலம்: In The Park – GAO XINGJIAN (Winner of the nobel prize for literature)

3 comments for “பூங்காவில்

  1. Kumar A
    January 3, 2019 at 8:44 pm

    சீ.முத்துசாமி அவர்களின் மொழிப்பெயர்ப்பை ஒன்று விடாமல் தொடர்ந்து வாசிக்கிறேன். ஒவ்வொரு இதழிலும் அவர் மொழிப்பெயர்ப்பின் தரம் உயர்ந்து போகிறது. ஒரு தொகுப்பாக வந்தால் நன்றாக இருக்கும். ஆலோசனை மட்டுமே.

  2. அஜஸ்தியன்
    January 4, 2019 at 9:24 pm

    சீ.முத்துசாமி மூலமாக எனக்கு GAO XINGJIAN அறிமுகமானார். விளைவு , கடகடவென அவரது ஆக்கங்களை நேரடியாகவே தேடி ஆங்கிலத்தில் வாசித்துவிட்டேன். தெரிந்தது, சீ.முத்துசாமியின் மொழிப்பெயர்ப்பு ஆங்கிலத்தில் நான் வாசித்த உணர்வுடன் பொருந்தி போகிறது. இனி, சீ.முத்துசாமியின் ஆக்கங்களை தேடி வாசிக்கிறேன்.

  3. ஸ்ரீவிஜி
    February 12, 2019 at 5:26 pm

    இந்தக் கதையை எப்படிப்புரிந்து கொள்வதென்று எனக்குச் சரியாக விளங்கவில்லை.

    பழைய நண்பர்கள் சந்திக்கின்றார்கள், பேசிக்கொள்கிறார்கள். பேச்சுகளின் இடையே அவர்களை அறியாமலேயே அவர்கள் ஏற்கனவே ஒருவரை ஒருவர் காதலித்திருப்பது வெளிப்படுகிறது. அவ்வினிய வேளையில் பூங்காவில் ஒரு பெண் தனிமையில் யாருக்காகவோ காத்திருக்கின்றாள், அது காதலனாக இருக்குமென்று இவர்கள் யூகிக்கின்றார்கள். இறுதிவரை அவள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்ற ஆள் (காதலன்) அங்கு வரவில்லை, விசும்புகிறாள் கேவுகிறாள், காத்திருப்பின் வலியை உணர்த்துகிறது கதை.

    பெண் பலகீனமானவள் என்பதையும் சொல்லுகிறது. காதலன் சரியான நேரத்திற்கு வராமல் போனதால் காதலி மனமுடைந்து வேறொருவனை மணக்கநேர்ந்த சூழலை இந்த இருவரின் மணவுணர்வோடு சம்பந்தப்படுத்தி உணர்த்துகிற கதையா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

    காடு எரிகிறது, விலங்குகளின் பாடு எதையோ உணர்த்துவதை பூடகமாகச் சொல்லிச்செல்கிறது கதை.

    நோபல் பரிசு வாங்கியவர் எழுதிய கதை என்பதால், மீண்டும் ஒருமுறை வாசித்துப்பார்த்தேன். மிக நுண்ணிய பெண் சார்ந்த உணர்வுகளைச் சொல்லுகிற கதையாகவும் இது அமைகிறது, மீள் வாசிப்பில். ஆண் அனைத்தையும் மிக சுலபமாக கடந்துசெல்பவனாக இருப்பதைப்போன்றும் உள்ளது!. ஆணாதிக்கக் கதைபோல் இருப்பினும் பெண்ணே ஆணுக்கு முன்னுரிமை கொடுத்துப்பேசுவதைப்போலவும் பெண்ணே அனைத்திற்கும் காரகர்த்தா ஆவதைப்போலவும் எழுதியிருக்கிறார்.

    இருந்தபோதிலும், இதுபோன்ற கதைகள் தமிழ் எழுத்துச்சூழலில் இன்னும் அதிகமாக இன்னும் நுணுக்கமாக பெண் ஆண் உணர்வுகளைச் சொல்லுப்படியான கதைகள் நிறையவே உள்ளன என்பதனை இந்தக் கதை வாசிப்பின் இறுதியில் புரிந்துகொள்ள முடிகிறது. அவைகளை வைத்துப்பார்க்கின்றபோது நம் எழுத்தாளர்கள் பலருக்கு நோபல் பரிசு இன்னும் வழங்கப்படவில்லையோ என்றும் சிந்திக்கத்தோன்றுகிறது.

    இவ்வேளையில் சீ.முத்துசாமி அவர்களுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகள்.

Leave a Reply to ஸ்ரீவிஜி Cancel reply