எங் கதெ: ஆணின் அகவெளி

02“என்னெ மாரியே ஒரு பொம்பள பொலம்புனா கற்புக்கரசி, கண்ணகி, உத்தமி, பத்தினின்னு பட்டம் கொடுப்பாங்க. ஆம்பள பொலம்புனா பொட்டப் பயம்பாங்க. பொழக்க தெரியாதவன்னு சொல்லுவாங்க”, இப்படியாக சமூகத்தின் பார்வையில் பொழக்க தெரியாதவனாகவும் நமது பொதுப்புத்திக்குப் பொட்டப் பயலாகவும் தெரிகிற விநாயகம் என்ற ஆண்மகனின் பத்து வருடத்துக் கதைதான் எங் கதெ. ஓர் ஆணின் கதை என்பது ஆணின் கதையாக மட்டுமே இருந்துவிட முடியுமா? முடியும். ஆனால் அவனைத் தனது விருப்பத்திற்கேற்ப ஆட்டிப் படைக்கும் பெண் ஒருத்தி இல்லாவிட்டால் அது வெறும் கதையாகவே எஞ்சிவிடும். வாழ்க்கையாக மாறாது. ஒரு கதையை வாழ்க்கையாகவும் ஒரு வாழ்க்கையைக் கதையாகவும் மாற்றும் வித்தையில் வல்லவர் எழுத்தாளர் இமையம்.

முப்பத்து மூன்று வயது வரையிலும் பெண் வாசனையே அறியாத விநாயகத்தின் வாழ்வில் சூழல்காற்று  போல் வருகிறாள் கமலா. மூன்று தங்கைகளுடன் வீட்டுக்கு ஒரே ஆண்பிள்ளையாக பிறந்து வேலை வெட்டி இல்லாமல் பொழுதைக் கழிக்கும் தனது வாழ்விற்குள் நுழையும் கமலாவிடம் அவன் தன்னை முற்றாகத் தாரை வார்ப்பதை “ஒரு பார்வயில, ஒரு வாத்தயில, ஒரு சிரிப்பில, அவ என்னெத் தன்னோட நாய்க்குட்டியா மாத்தி, தன்னோட கால நக்க வச்சா. நானும் நக்கியிருக்கேன்” என்ற வரிகளின் வழியாக எழுத்தாளர் சொல்லிச் செல்கிறார். காதலும் காமமும் கண்ணிமைக்கும் நொடியில் உள் நுழைந்து உயிரை வேரோடு அறுக்கும் வீரியமுடையவை என்பதை எங் கதெயின் ஒவ்வொரு வரியும் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.

இருபத்தியெட்டு வயதில் கணவனை ஒரு விபத்தில் பறிகொடுத்து விட்டு இரண்டு பெண் பிள்ளைகளுடன் கிளார்க் வேலைக்காக விநாயகத்தின் ஊருக்கு வரும் கமலா அவனிடம் எதைத் தேடினாள்? எதைக் கண்டடைந்தாள்? இறந்து போன கணவன் மீதான காதலை மனதில் சுமந்து கொண்டு விநாயகத்தை தனது உடல் தேவைக்காகப்  பயன்படுத்திக் கொண்டாளா? எல்லாமும் அவளே என்று இருந்த விநாயகத்தின் மீது அவளுக்கு இம்மியளவும் காதல் வரவில்லையா? அதனால்தான் விநாயகத்தை விடுத்து வயதான சி.இ.ஓ உடன் அவளால் உறவு கொள்ள முடிந்ததா? பொருளாதாரத் தன்னிறைவும் சுயமாக வாழும் துணிச்சலும் நிறைந்த கமலா ஆண்களைச்  சார்ந்து வாழ வேண்டிய தேவை என்ன? பாலியல் தேவை ஒன்றுதான் அவளுக்குப் பிரதானமாக இருந்ததா? இப்படி பல கேள்விகளை இக்கதை வாசகர் மனதில் எழுப்புகிறது.

“கண்ணீருல பொம்பள கண்ணீரு, ஆம்பள கண்ணீருன்னு இருக்கா? வலியில பொம்பள வலி, ஆம்பள வலின்னு இருக்கா?”. இந்த ஒற்றை வரியில் எங் கதெயின் ஒட்டு மொத்த சாராம்சமும் அடங்கிவிடுகிறது. தமிழ் இலக்கியச் சூழலில் கவிதைகளுக்குப் பாடுபொருளாகவும் கதைகளுக்குப் பேசு பொருளாகவும் அதிக அளவில் விளங்கும் பெண்ணின் துயரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஓர் ஆணின்  மனவேதனைகளை மையப்படுத்தி எழுதியதோடு மட்டுமல்லாமல் அவனது பெருங்காதலை, அடங்கா காமத்தை, தகாத உறவாக இருப்பினும் பெண் தனது உடைமை என்ற வலுலான எண்ணத்தை, வலி வன்முறையாக மாறும் அவலத்தை, மன்னிக்கும் நிதர்சனத்தைப் பூச்சுகளற்ற, பாசாங்கற்ற சொற்களால் நமக்கு கடத்தும் இமையம் பாராட்டுக்குரியவர்.

கமலாவின் கழுத்தை அறுப்பதற்கான வாய்ப்பு சரியாக அமைந்த கணத்தில் தனது மனசை மாற்றிக் கொண்டு “நீ யார்கூட வேணுமின்னாலும் இரு. எப்பிடின்னாலும் இரு. ஆனா உசுரோட இரு. இதான் என் ஆச” என்று சொல்லிவிட்டு அவளை விட்டு மொத்தமாக விலகிச் செல்லும் விநாயகம் அந்த நொடியில் தன் கனவுலகில் இருந்து முற்றாக விலகுகிறான். கமலாவைக் கொன்றுவிட்டால் தான் போலீஸிடம் மாட்டிக்கொள்வோம், தனது பெற்றோரும் சகோதரிகளும் கோர்ட்க்கும் ஜெயிலுக்கும் அலைவார்கள் என்ற விநாயகத்தின் சுயநலமான காரணங்களை விட கமலாவை மன்னிப்பதென்பது அவளோடு தான் வாழ்ந்த கனவுலகிலிருந்து மீண்டு நிஜ வாழ்க்கைக்கு வந்துவிட்ட விநாயகத்தின் யதார்த்தமான முடிவு.

விநாயகத்தின் கிராமத்தில் அவனைப் போன்றே முரணான உறவு கொண்டிருந்த பாவாடimayam_2494415f என்பவரது கதையும் சொல்லப்பட்டுள்ளது. தனது அண்ணியோடு முரணான உறவு கொண்டுள்ள பாவாட முதுமையில் பரதேசியாக காலத்தைக் கழிக்கிறார். பிறழ் உறவு கொண்ட விநாயகத்திற்கும் இறுதி காலத்தில் பாவாடக்கு நேர்ந்த கதிதான் என்று நம்பும் கிராம மக்களிடமிருந்து முரண்பட்டுச் சிந்திக்கத் தொடங்கும் வாசக மனம் ‘சமூகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டு வாழும் பலருக்கு பாவாடயை விட அவலமான முதுமையும் மரணமும் வாய்ப்பது ஏன்?’ என்ற கேள்வியை எழுப்பிக் கொள்வதோடு தகாத உறவுகள் பெரும்பாலும் கொலைகளில் முடியும் சூழலில் கமலாவை மன்னிக்கும் விநாயகத்திற்கு பாவாடயின் நிலை ஒருபோதும் வராது என்று ஆறுதலும் கொள்கிறது.

ஒவ்வொரு நல்ல படைப்பும் வாசிக்கையில் மற்றொரு படைப்பை நினைவூட்டும் என்பதற்கு எங் கதெயும் விதிவிலக்கல்ல. எங் கதெயை வாசிக்கையில் தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ இணையாக மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. “நான் தோளுல தூக்கிச் சொமந்த சாமி. மனசுல கும்பிட்ட சாமி. கமலா சாமி” என்று விநாயகம் எண்ணுமிடத்தில் அலங்காரத்தம்மாவை அம்பாளாக ஆராதித்த தண்டபாணி நினைவில் நிழலாடுகிறார். விநாயகம் கமலாவின் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் “வாங்க அங்கிள்!” என்று சொல்லிவிட்டு தங்களது அறைக்குள் நுழைந்து கொள்ளும் கமலாவின் பெண் பிள்ளைகள் இருவரும் சிவசு வரும் போது “வாங்கோ! உட்காருங்கோ!” என்று சொல்லிவிட்டு தங்களது அறைக்குள் முடங்கி கொள்ளும் காவேரியையும் வேம்புவையும் கண் முன் கொண்டு வருகிறார்கள்.

கமலாவுடன் விநாயகத்திற்கு இருக்கும் உறவை அறிந்தாலும் அவனது தாயும் மூன்று சகோதரிகளும் அவனைத் தூற்றாமல் தங்களது அதீத அன்பாலும் அரவணைப்பாலும் அவனைக் குற்ற உணர்வுக்கு ஆட்படுத்துகிறார்கள். தங்களது தாயோடு தகாத உறவில் இருப்பவன் விநாயகம் என்பதை அறிந்தாலும் கமலாவின் மகள்கள் இருவரும் அவனை வெறுக்காமல் ஆனால் அதேசமயம் அன்பும் செலுத்தாத மனநிலையோடு அவனை எதிர்கொள்கிறார்கள். இந்தப் பெண் கதாபாத்திரங்களின் பார்வையில் கமலா-விநாயகம் உறவை வாசகன் ஆராயத் தொடங்கினால் எங் கதெ பல கதைகளாக கிளை விரித்து பரவக் கூடிய வாய்ப்புண்டு.

பொதுவாகவே அதிகமாகப் பேசக்கூடிய பெண்களுக்கு மத்தியில் நாவலில் கமலாவின் அடர் மௌனம் பெரும் புதிராக உள்ளது. விநாயகம் நூறு வார்த்தைகள் பேசினால் நறுக்குத் தெறித்தது போல் ஓரிரு வார்த்தைகளில் மட்டும் பதில் சொல்வதன் வழியாகவும் அவர்கள் இருவருக்குமிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளில் அறவே பேசாமல் இருப்பதன் வழியாகவும் அவனை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறாள். மௌனமாய் இருப்பதுதான் கமலாவின் இயல்பான குணமென்றால் ஏழு பக்க அளவு கால் லிஸ்ட் வரும் அளவிற்கு சி.இ.ஓ க்குப் போன் போட்டுப் பேச முடிந்த கமலா யார்? ஓர் ஆணாக விநாயகத்தின் எதிர்பார்ப்புகளையும் அகங்காரத்தையும் குத்திக் கிழித்து அவனைத் தோற்கடிக்க கமலா அவனுக்காகப் பிரத்யோகமாகப் பயன்படுத்திய ஆயுதம்தான் மெளனம்.

எங் கதெ விநாயகத்தின் கதை மட்டுமல்ல, கமலாவின் கதையும்தான் என்பது என் வாசக மனதுக்குப் புரிந்தாலும் கமலாவின் நோக்கில் இக்கதையை விரித்தெடுக்க எனக்கு விருப்பமில்லை. காலங்காலமாக பல்வேறு விதமான பாவனைகளின் வழியாக ஆணை வைத்து பெண் விளையாடும் முடிவிலா விளையாட்டைத்தான் கமலாவும் எங் கதெயில் ஆடுகிறாள். அவளது விளையாட்டுக்கு “சி.இ.ஓ. லூசாவட்டுமின்னுதான் மெசேஜ் போட்டேன்” என்ற வரியே சாட்சியாகிறது. ஜெயிக்க வைப்பதுபோல ஜெயிக்க வைத்து தான் வென்றுவிட்டேன் என்ற இறுமாப்பில் இருக்கையில் அவனைத் தனது காதலாலும் காமத்தாலும் துரோகத்தாலும் கீழே வீழ்த்தி அவனை ஒன்றுமில்லாமல் செய்யும் பெரும் நாடகத்தை பேரானந்தத்துடன் நடத்தும் பெண்களின் பிரதிநிதியாக இருக்கும் கமலாவும் தனது நாடகத்தை எங் கதெயில் கச்சிதமாக அரங்கேற்றுகிறாள்.

அந்த நாடகத்தில் ஒரு பங்கேற்பாளனாக இருந்து தான் அடைந்த துன்பங்களை, வலிகளை, அவமானங்களை, அவஸ்தைகளை விநாயகம் விவரிக்கையில் ஆண்களின் அகவெளியைப் பற்றிய புரிதல் வாசகருக்குக் கிடைக்கிறது. எங்கே கமலாவைக் கொன்றுவிடப் போகிறானோ என்ற பதைபதைப்போடு இருக்கையில் அந்த நாடகத்தின் பார்வையாளனாக தன்னை மாற்றிக்கொண்டு தன்னைப் பற்றிய சுய பார்வையோடும்  வாழ்வைப் பற்றிய தத்துவப் பார்வையோடும் விநாயகம் எடுக்கும் இறுதி முடிவால் அவன் பெறும் விடுதலை அவனைப் போன்ற ஆண்களுக்கு ஒரு பாடமாக மாறிப் போவதோடு மட்டுமல்லாமல் அந்த முடிவாலேயே எங் கதெ எல்லோருக்குமான கதையாக மாறி வெற்றி பெறுகிறது.

தனது எளிய மொழியால் எளிய மக்களின் கதையைப் பேசும் வலிய படைப்பாளர் இமையம் அவர்கள் இயல் விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியை  அளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

4 comments for “எங் கதெ: ஆணின் அகவெளி

  1. Majitha Burvin
    March 9, 2019 at 11:50 pm

    அருமையான விமர்சனம் வாழ்த்துகள் தோழி…

  2. Majitha Burvin
    March 10, 2019 at 11:48 am

    அன்பின் வழியது உயிர் நிலை….
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
    நோம் என் நெஞ்சே…
    இப்படி இலக்கியங்கள் அன்பைக் கொண்டாடுகிறது. இமையமும் அன்பைக் கொண்டாடுகிறார். எப்படியென்னாறால் ‘நான் எறங்குன ஆத்துக்கு மறுகரை இல்ல’ கமலா என்ற காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிய விநாயகத்திற்கு கரையேறவே முடியவில்லை. அதுதான் அன்பின் நீட்சி…
    கமலாவின் மீதான காதலுக்கான சாட்சி…

  3. April 4, 2019 at 11:18 pm

    சமிபத்தில் தான் இந்த புத்தகம் படித்தேன் அற்புதமான புத்தகம்

  4. December 20, 2021 at 11:42 pm

    சிறப்பான விமர்சனம். நன்றி. என்னுடைய கருத்தாக, கிராமத்தில் Living together வாழ்க்கை. அதில் எழும் சிக்கல்கள் தான் கதை. சம காலத்தில் திருமணம் செய்து கொண்ட வாழ்க்கையிலேயே தம்பதிகளிடையே புரிதல்கள், பொருளாதாரம், செக்ஸ் என ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் எழும் பொழுது, கல்யாணம் முடிக்காமல் வாழ்வது என்பது தெரிந்தே இன்னும் ஆயிரம் பிரச்சனைகளை இழுத்துப் போட்டுக்கொள்வது தான்!

    நாயகன், நாயகி இருவரும் விட்டேத்திகளாக தான் இருக்கிறார்கள். நாயகிக்கு வேலை இருக்கிறது. விதவை திருமணம் செய்தால், அரசு வேலை கூட போய்விடலாம். அவள் ஓரளவு பொருளாதார பின்புலம் உள்ளவள் தான். அவளின் இயல்புக்கு வேறு ஒரு வேலை கூட தேடிக்கொண்டிருக்கலாம் நாயகன் அவளிடம் மயங்கி கிடக்கிறான். கல்யாணம் முடித்துக்கொள்ளலாம். வேலைக்கு போகச் சொல்லியிருந்தால் அவனும் கூட போயிருப்பான். சமூக ஒழுங்கு என்று மட்டும் இல்லாமல், இருவருக்குள்ளும் ஒரு கமிட்மெண்ட் வருவதற்காகவது திருமணம் செய்திருக்கலாம். செய்யவில்லை.
    ஒரு சண்டையின் பொழுது, ” என்னை திருமணம் செய்துகொள்.நான் வேலையை விட்டுவிடுகிறேன். வேலைக்கு போய் எனக்கு சோறு போடு” என நாயகி கோபமாய் சொல்வாள். அவன் அதை சட்டை செய்யமாட்டான். நாயகியை விட நாயகன் இன்னும் விட்டேத்தியான ஆள்.

    ஒரு திருடன் கூட தன் நிலைக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு தான் வாழ்வான். இல்லையெனில் அவன் குற்ற உணர்வே அவனை கொன்றுவிடும். நாயகன் நாவலின் முழுமைக்கும் தன்னைத்தானே அவ்வளவு தாழ்த்திக்கொள்கிறான். அவனின் இருப்புக்கு அவன் ஏதோ நியாயம் கற்பித்துக்கொண்டு தான் வாழமுடியும். ஆசிரியர் முடிவு செய்து படிக்கும் வாசகனை அவனை வெறுத்து ஒதுக்கும்படி செய்திருக்கிறார்.

    நாயகன் வேலைக்கு செல்வதில்லை. தமிழகத்தின் இப்போதைய டிரெண்ட் என்னவென்றால், இப்படி வெட்டியாக சுற்றுகிறவர்கள் எல்லாம் குடிகாரர்களாக, குடிநோயாளிகளாக மாறியிருப்பார்கள். நாயகன் மண்டையில் தாறுமாறாக யோசிக்க கூடிய ஆள். குடியும் சேர்ந்திருந்தால், அந்த உறவு எப்பொழுதோ முறிந்துபோயிருக்கும். இதெல்லாம் நம் கற்பனை. அதனால் ஒதுக்கி வைத்துவிடுவோம்.

    நாயகின் பின்புலம் கிராம பொருளாதாரத்தில் இருந்தவன் தான். ஆகையால், நிலவுடமை பண்பாட்டில் தான் வாழ்கிறான். பெண்ணை உடைமை பொருளாக தான் பார்ப்பான். கதைப்படியே அப்படித்தான் பல முறை சிந்திக்கிறான். அந்த திசையில் தான் கதையின் இறுதி பக்கங்களில் ஒரு முடிவை நோக்கி நகர்கிறான். ஆகையால் இறுதி டிவிஸ்ட் முடிவு எடுப்பதெல்லாம் ஆசிரியரின் ஆசையாக இருக்கும். அவன் என்ன நோக்கத்தில் போனானோ அதை செய்வதற்கு தான் 100% சாத்தியம்.

    கிராமத்துப் பின்னணியில் நாயகனின் குடும்பத்திற்கு தெரிந்தும் பல ஆண்டுகளாக இந்த உறவை விட்டுவைக்கிறார்கள் என்பது சாத்தியமில்லாத ஒன்று. பையனை ஒன்றும் சொல்லாமல் வீடேறி பெண்ணை மிரட்டுவார்கள். சில வருடங்களுக்கு பிறகு மூன்று தங்கைகளும் நாயகி வீட்டுக்கு போய் ஒரு கலாட்டா செய்வார்கள். அது எப்போதோ நடந்திருக்கும்.

Leave a Reply to Majitha Burvin Cancel reply