ஒரு தருணத்தில்

GXI_3அவன் தனிமையில் முதுகை கடலுக்குக்  காட்டியபடி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான். கடுமையான காற்று. வானம் மிகப் பிரகாசமாக, மேகத்தின் தடயம் ஏதுமின்றி இருக்கிறது. கடல் நீரில் பிரதிபலிக்கும் மினுங்கும் சூரிய ஒளியில், அவனது முகம் தெளிவாகத் தெரியவில்லை.

கிரீச்சிடும் துருவேறிய ஈரமான பெரிய இரும்புக் கதவுகள். எங்கோ அவற்றின் மேற்பகுதியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தத் தடித்த கனத்த கதவுகள் இரு பக்கமும் மெல்லத் திறக்க, நடுவிலிருந்த இடைவெளி அதிகரிக்கிறது. போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலியைக் கேட்க முடிகிறது. கதவின் இடைவெளியூடாய், சூரியனை மறைக்கும் உயரமான கட்டிடங்கள். ஒரு போலீஸ் வாகனத்தின் பின்னால் இன்னொரு போலீஸ் வாகனம். இடைவிடாத சைரன் அலறலுடன்.

அந்த இருண்ட நடைவழியில் ஒரு பெண்ணின் பின்புறம். விளக்கைப் போடாமல், அவள் ஒரு மேலங்கியை அணிந்துகொண்டு, தயங்கி, பின், கையைக்  கதவுப் பிடியில் வைக்கிறாள். கதவை மெல்லத் திறந்து,வெளியே போகிறாள். பிடி  மெல்ல சுழன்று, கதவு மூடிக்கொள்ள, ஓசையிடுகிறது.

சூரிய வெப்பம் அவனுக்கு அயர்ச்சியைத் தருகிறது. புத்தகத்தை மூடி வைத்து, நாற்காலியில் சரிந்து பின்னால் சாய்ந்து, கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொள்கிறான்; அந்த இரண்டு வட்ட கண்ணாடிகள், சூரியக்கதிர்களிடமிருந்து அவனது கண்களைப் பாதுகாக்கின்றன. பின், தனது முகத்தை ஒரு விளிம்புகள் அகன்ற கறுப்பு தொப்பியால் மறைத்துக்கொள்ள, கடலலைகளின் கூச்சலைத் தவிர வேறெதையும் அவன் கேட்கவில்லை.

கடலலைகள், கடற்கரை நோக்கி விரைகின்றன. ஆனால், அது பின்னடைவதற்குள் அதனை கடற்கரைமணல், நீண்ட ஓசையுடன் உறிஞ்சிக்கொள்ள, மீந்தது மஞ்சல் நுரை மட்டுமே.

கீழே தொங்கும் அவனது கைகள், அரிக்கத் தொடங்குகின்றன. எறும்புகள் – முதலில் ஒன்று, பின் ஒன்றன் பின் ஒன்று என அவனது கைகளில் ஏறுகின்றன.

தீக்கனலுக்கு முன்பு, இரு ஆண்களுடன் உடலுறவு கொண்டபோது உற்சாகமாக இருந்ததென, அவள் சொல்கிறாள். அவள் படுக்கையின் குறுக்குவாக்கில், தலையை ஒரு பக்கம் சாய்த்து, கண்கள் மூடி, வட்ட வடிவ வெளிச்சத்திற்கு வெளியே படுத்திருக்கிறாள். வெளிச்சம், அவள் நீண்ட தலைமுடி மேலும், தரையிலிருக்கும் அவளது உள்ளாடை மேலும் காலுறை மீதும் விழுகிறது.

கடற்பெருக்கு அதிகரிப்பதை அவன் உணர்கிறான். கடல்நீர் நாற்காலியின் கால்களிடையே விரைந்து, சுழன்று, பின்வாங்குகிறது. அழகும் துயரும் கொண்ட பழைய பாடலொன்று காற்றை நிறைக்கிறது. மரண நிகழ்வில் ஒரு ஏழை விவசாயப் பெண்ணின் ஒப்பாரிபோல் இருக்கிறது. எனினும் ஒரு வாத்தியத்தின் கேவல் போன்றும் இருக்கிறது.

அவள் தன் கனுக்காலை அசைத்து காலணியை உதறி, புதிய காலணியை அணிய குனிகிறாள். வழிநடையின் ஓரத்தில், கதவருகே, கழற்றிவிடப்பட்ட, அடிப்பாகம் தேய்ந்துபோன சப்பாத்து ஒன்று கிடக்கிறது.

கறுப்பு வெள்ளை படம் கொண்ட ஒரு விளம்பர பதாகை. நீளமான பாவாடையைத் தூக்கி தனது அழகிய கால்களைக் காட்டும், ஒரு பெண்ணின் கீழ்ப் பகுதி. அவள் தனது பாத விரல்களில் நின்றிருக்கிறாள். இது காலணிகளுக்கான மேலும் ஒரு விளம்பரம். விரைவு ரயில் நிலைய பிளாட்பாரத்தின் சுவரொன்றில் ஒட்டப்பட்ட விளம்பரம். ஒரு முதிய பெண், கையில் ஒரு காலி பையுடன் நின்றிருக்கிறாள். பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ஒரு நடுவயது மனிதர் நாளிதழ் படித்துக்கொண்டிருக்கிறார். ரயில் வருகிறது. சில கதவுகள் திறக்கின்றன. சில திறக்கவில்லை. இறங்குபவர்கள், வெளியேற விரைகிறார்கள். எவரும் அந்த விளம்பரத்தைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. முதுகு திரும்பியிருக்க, அவன் மட்டுமே இப்போது அந்தப் பிளாட்பாரத்தில் மீந்திருக்கிறான். பயணிகள் வந்து இறங்கத் தொடங்க, அந்த முதுகும் விடைபெறுகிறது.

சாய்வு நாற்காலியின் கால்கள், தழுவிச் செல்லும் நீரில் மூழ்கியிருக்க, கடல் நீர் உயர்ந்துகொண்டிருக்கிறது. அந்தத் துயர கீதம் இன்னும் இசைக்கப்படுகிறது. ஆனால், இப்போது அது ஒருவகையில் நீர்த்து, ரீட் குழாய் (reed pipe) ஓசைபோலிருக்கிறது.

அவள், தன் எடையில் இரு மடங்கு உள்ள ஆணோடு உடலுறவுகொள்ள வேண்டுமென்கிறாள். இருளில், கண்கள் அகலத் திறந்திருக்க, அவள் படுக்கையில் கிடக்கிறாள். அவன் திறந்த மார்போடு,மேசை முன் அமர்ந்திருக்கிறான். திரும்பிப் பார்க்காமலேயே, உன்னால் அதைச் சமாளிக்க முடியுமா என்று கேட்கிறான். அதற்கு அவள், தன் மூச்சுத் திணறும் வரை கீழே அழுந்தி கிடப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறாள். சொன்ன பின் சிரிக்கிறாள்.

அந்த இசையின் ஓசை மேலும் மேலும் அதிகரிக்கிறது. ஆனாலும் தேய்ந்தும் போகிறது. அது சன்னலின் காகிதத் திரைச்சீலையைக் காற்று கிழித்துப்போவதுபோல் இருக்கிறது. இசை மேலும் தேய்கிறது. எனினும் காதைக் கொஞ்சமாய் காயப்படுத்துகிறது. கடல் நீர், சாய்வு நாற்காலியின் அமரும் இடத்தைத் தொட, நாற்காலி அசைகிறது.

அவன் வாயில் சிகரெட்டுடன், கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிறான். கம்ப்யூட்டரில் ஒரு நீள வாக்கியம் தோன்றுகிறது. – ‘எது’ புரிந்துகொள்ளப்படாதது, ‘எது’ என்பது புரிந்துகொள்ளப்படுவது அல்லது புரிந்துக்கொள்ளப்படாதது அல்லது புரிந்துகொள்ளப்பட்டது  எனக் கருதுவதும் புரிந்துக்கொள்ளப்படாததே. ‘எது’ புரிந்துகொள்ளப்பட்டது, ‘எது’ புரிந்துக்கொள்ளப்படாதது, ‘எது’ என்பது ‘எது’. ‘இல்லை’ என்பது ‘இல்லை’. எனவே, புரிந்துகொள்ளப்படாதது, புரிந்துகொள்ள விரும்பாதது அல்லது எதற்காக ‘எது’ புரிந்துகொள்ளப்பட வேண்டுமென்பதை புரிந்துகொள்ளாமல் இருப்பது, அல்லது ‘எது’ புரிந்துக்கொள்ளப்பட இயலுமா என்பது. ‘எது’ என்பது உண்மையிலேயே புரிந்துகொள்ளப்படவில்லையா, அல்லது அதை புரிந்துகொள்ளும் விதமாக அது சமர்பிக்கப்படவில்லையா என்பது புரியவில்லை. அல்லது புரிந்துகொண்டும் புரியாத பாவனை. அல்லது, புரிந்துகொள்ள முயல மறுப்பது. அல்லது, புரிந்துகொள்ள முயல்வது போன்ற பாவனை. திட்டமிட்டே புரிந்துகொள்ளாமல் இருப்பது. அல்லது, புரிந்துகொள்ள முயன்று தோற்பது. எனவே, அது புரிந்துகொள்ளப்படாமல் இருந்தால் என்ன? அது புரியாத பட்சத்தில், எதற்கு அதை புரிந்துகொள்ள இத்தனை பாடு –

வெள்ளை நிற மூக்குடைய ஒரு கோமாளி, சர்க்கஸில் துருத்தி (accordion) இசைத்துக்கொண்டிருக்கிறான் – விரித்தும் சுருக்கியும், விரித்திழுத்து, சுருக்கி, சுருக்கி. அவன், அக்கோர்டியனை முழுமையாய் இழுத்து விரித்தெடுத்து, அதிர வைத்து, ஒலிப்பெட்டி உடைய, இசை உடனடி நின்றுவிடுகிறது.

காற்றில், காற்றின் ஒலி, கூச்சலிடும் கடலலைகள், பிரகாச சூரியக் கதிர்கள் மட்டுமே. சிகரெட் நுனியிலுள்ள சாம்பல் உதிரும் நிலையில். அதை சாம்பல் தட்டில் உதிர்த்துவிட்டு, அவன் முழுமையடையாத வாக்கியத்தை, ஒவ்வொரு சொல்லாக அழித்தான்.

ஒரு ஜோடி கைகள், ஒரு அடுக்கு மாஜோங் காய்களைக் கலைத்தடுக்கியது. ஒன்றை எடுத்து, உணர்கிறது. அது ஒரு ‘நடு’, அடுத்து,ஒரு ‘வளர்’, ஒரு ‘வெள்ளை’. இவை அனைத்தும், ஒரு வரிசையில் அடுக்கப்படுகிறது – ‘நடு’, ‘வளர்’, ‘வெள்ளை’. அடுத்து எடுக்க வேண்டியது,’வளர்’,’நடு’,’வெள்ளை’,’வளர்’.’நடு’,’வெள்ளை’,’கிழக்கு’,’வளர்’,’நடு’,’காற்று’, ‘வடக்கு’, ‘கிழக்கு’, ‘தெற்கு’, ‘காற்று’, ‘மேற்கு’, ‘மூங்கில் எண்.2’ – அவன் அந்தக் காய்களை நகர்த்திவிட்டு, அவற்றை மீண்டும் கலைக்கிறான்.

“எனக்கொரு கதை சொல்லு!” அவன் திரும்புகிறான். மேசை விளக்கு வெளிச்சம் அவன் தலையின் பின் பகுதியில். இருளில், படுக்கையில் மீன் போல சுருண்டிருக்கும் அவளது நிர்வாண உடலைப் பார்க்கிறான்.

அலைகளில் ஒளி பிரதிபலிக்க, காலியான நாற்காலி ஒன்று அமைதியாக நீரில் மிதக்கிறது. கடற்பெருக்கின் ஓசை கேட்கவில்லை. ஒரு ஒற்றை நீள ஒலிக்கூறு மட்டும் உயிர்ப்பின்றி தொடர்ந்து காற்றில் அதிர்கிறது.

தேம்பியும் ஓலமிட்டும் ஒரு சிறுவன் சுவற்றில் சாய்ந்திருக்கிறான். ஆனால், ஓசை எழவில்லை. அந்தக் கற்சுவரை இளவேனில்கால கொடிகள்  மூடியிருக்க, அதன் பாதி தூரம் வரை, வெயில் படர்ந்திருக்கிறது.

கத்தரித்து பராமரிக்கப்பட்ட பசும் புற்தரையில், தோள் வார்ப்பட்டை கொண்ட காற்சடையும், காலர்பட்டன் பூட்டப்படாத வெள்ளைநிற சட்டையும் அணிந்த ஒரு வயதானவர், ஒரு நீள கயிற்றை இழுத்துச் செல்கிறார். கடினமாக இருக்கிறது. ஆனால், அவர் பதற்றமோ அவசரமோ இன்றி இருக்கிறார்.

அவன், தெருவில் பொருட்களை விளம்பரம் செய்யும் ஒரு கண்ணாடி முன்பு நிற்க நேரிட அதனுள்ளிருப்பது என்னவென்று வாசிப்பதில் ஆழ்ந்துவிடுகிறான். தெருவில் ஓரிருவர் மட்டுமே இருக்க, அது ஓரளவு அமைதியாகவே இருக்கிறது.

அவள், தெருவின் முனையில் இருக்கிறாள். ஆனால், வாகனங்களின் வரிசை முடிவில்லாதுDSTryEeXkAAD-D- நகர்ந்தபடி உள்ளது. சிவப்பு விளக்கு மாற்றத்திற்கு காத்திருக்கும் பொறுமை இல்லாமல், அவள் சாலையின் குறுக்காய் பின்னிப் போகத் தொடங்குகிறாள். இன்னொரு வாகனம் அவளருகே கடந்து போக, அவள் சட்டென நின்று, சாலையின் மத்தியிலுள்ள வெள்ளைக் கோட்டுக்கு பின்வாங்குகிறாள். அவள் வாகனங்கள் வரும் திசையைக்  கவனித்தபடி, ஒரு சிறு வாகனம் அவளைக் கடக்க, ஓடி சாலையைக் கடக்கிறாள். நடைவழியில், சில அடிகள் முன்னகர்ந்து, யோசனையுடன் சில கணங்கள் நின்று, கதவில் சில எண்களை அழுத்த, ஒலி எழும்புகிறது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்கிறாள். கதவு மெல்ல மூடிக்கொள்வதற்கு முன்பு, அவள் திரும்புகிறாள். ஆனால், அந்த மேகமூட்டமான நாளில், அவளது முகத்தை தெளிவாகப் பார்க்க சிரமமாக உள்ளது.

நீரில் நாற்காலி இல்லை – நுரை மட்டுமே.

விளம்பரக் கண்ணாடியின் மேல் சாரல். அவன் விலகிச் செல்கிறான். வீடுகளுக்கான விளம்பரங்கள் நிறைந்துள்ளன. வீடுகளின் விலைகள் இணைக்கப்பட்டுள்ளன. சில படங்களுடனும் இருந்தன. பெரும்பாலும் நாட்டிலுள்ள தனியார் குடியிருப்புக்கள். சில வீடுகள் வாடகைக்கு. மலிவான வாடகைக்கான வீடுகளின் மேல், ‘வாடகைக்கு விடப்பட்டுவிட்டது’ என்ற வாசகம் சிகப்பு வண்ணத்தில் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.

இன்னொரு மனிதன் கயிற்றை இழுக்க வருகிறான். அவன், கழுத்துப்பட்டை அணிந்து, மிக கவனத்துடன் உடையணிந்திருக்கிறான். அந்தத் தோள் வார்ப்பட்டை காற்சட்டை அணிந்த முதியவரைப் பார்த்து வணக்கம் சொல்கிறான். கயிற்றை எடுத்தபடி, பேசியும் சிரித்தும், மெல்ல அந்த வேலையில் ஈடுபடுகிறான். அருகில் எங்கோ ஓர் ஓசை எழ, அந்த இரண்டாம் மனிதன் திட்டுகிறான்.

ஒரு காலி மினரல் வாட்டர் பாட்டில், கடலலைகளில் மேலும் கீழும் ஆடியபடி மிதக்கிறது. இத்தனை பொழுதும் சூரிய ஒளி பிரமாதமாக இருக்கிறது. வானம் நம்பமுடியாதபடி தூய்மையாக உள்ளது. அது அதீத தூய்மையுடனும், மிகுந்த பிரகாசத்துடனும், மிகுந்த வெறுமையுடனும், கடலலைகள் சூரிய ஒளி பட்டு மினுங்கியும் இருப்பதனால், அந்தக் காலி பிளாஸ்டிக் பாட்டில் தூரமாய் நகர்ந்து சென்று, திடுமென இளங்கருமை நிறமாகி, ஒரு நீர்ப்பறவை போலவோ அல்லது வேறேதனுமொரு மிதக்கும் பொருளாகவோ தோன்றுகிறது.

ஏதோவொரு பிடிபடாத தருணத்தில், அந்த அறுபட்டு நீண்டு சென்றுகொண்டிருந்த ஒலி நின்றுவிட்டிருந்தது. காற்றில் அடித்துச்செல்லப்படும் ஒரு மென்நூலிழை போல, தடயமேதுமின்றி மறைந்துபோகிறது.

“ஒரு ஜோடி அன்னங்கள் இந்தக் கடற்கரைக்கு வந்தன. அதில் ஒன்றை மட்டுமே பிறகு காணமுடிந்தது. இன்னொன்று ஒரு பரிசுப்பொருளுக்காக கொல்லப்பட்டிருக்கலாம். பிறகு மீந்திருந்த அந்த அன்னமும் பறந்துபோனது. “அது நிச்சயமாக, ஒரு ஆண் கேட்க வேண்டுவதற்கான, பெண்ணின் குரல். அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, தூர மிதந்து செல்லும் அந்தப் பொருள் அசலான ஒரு நீர்ப்பறவைப்போலவே தோன்றுகிறது.

கண்ணாடி அணிந்த ஒரு மனிதன், அந்த இருவரும் கயிறிழுப்பதைப் பார்க்க வருகிறான். கண்ணாடி அணிந்தபடி, அவர்களைக் கூர்ந்து நோக்குகிறான். கண்ணாடியைக் கழற்றி துடைத்து அணிந்துகொள்கிறான். ஆனால், கூடுதலாக எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. தெளிவாகப் பார்க்க முடியவில்லையா அல்லது பார்க்கிறான் ஆனால் தெளிவாகப் பார்க்கவில்லையா என்பதை அவனால் சொல்ல முடியவில்லை. என்றாலும், தெளிவாகப் பார்க்கிறோமா இல்லையா என்பது குறித்து அலட்டிக்கொண்டிருக்காமல், கண்ணாடியை தன் சட்டைப் பைக்குள் செருகி வைத்து, கயிறிழுக்கும் அந்த மனிதர்களோடு அவனும் இணைந்துகொள்கிறான்.

அவன், பிரதான சாலைக்குச் செல்லும், சதுரக்கற்கள் பதித்த ஒரு வெறிச்சிட்ட தெருவின் நடுவில் நின்றுகொண்டிருக்கிறான். அதன் இரு பக்கமும், பழைய கல் கட்டிடங்கள். கீழ்த்தளத்தில் இருக்கும் கடைகளின் கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன அல்லது அந்த இடங்களில் இரும்புக் கிராதிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவன் நிமிர்ந்து பார்க்கிறான். இரு பக்கமும், மேல்மாடி சன்னல்களின் திரைச்சீலைகள் இழுத்துவிடப்பட்டுள்ளன. ஒரு நேரான நீண்ட துண்டு பச்சை – நீல வானத்தை தவிர மற்ற எல்லாமும் மந்தமாக இருக்கின்றன. சாலையும் வானமும் சந்திக்கும் அந்த இடத்தில்,அது ஒரு கடல் என்று நினைக்காமல் இருப்பது கடினமாக உள்ளது.

கடற்புறாக்கள், சப்தமிட்டு குரலெழுப்பியபடி, வானத்தில் வட்டமடிக்கின்றன. அவை உணவைத் தேடி அப்படி சப்தமிடுகின்றனவா அல்லது அது சந்தோசத்தின்  குரலா என்பது தெரியவில்லை. காரணம், அவை மனிதர்களுக்குப் புரியாத ஒரு மொழியில் பேசுகின்றன. ஆனால், அது புரிகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை. எது முக்கியமெனில், இந்தத் தீவின் நீல வானத்தில், அவை விரும்பியபடி பறந்து திரிந்து கூச்சலிடலாம்.

இரு பக்க வீடுகளாலும் செதுக்கப்பட்ட நீண்ட தெளிவான நீல வானத்தை எதிர்கொள்ள, அவனது பின்புற காட்சி நிழலுரு கொள்கிறது. அவனது கழுத்துப்பட்டை அசையத் தொடங்குகிறது.அந்த உயிர்ப்பற்ற தெருவில், அது ஒன்றே அசையும் பொருளாக இருக்கிறது. அவள், தனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்கிறாள்! அவள் குரல் எரிச்சலுற்றிருக்கிறது. அவன், தனக்கு என்ன செய்வதென்று தெரியுமென்றும் ஆனால் முடியவில்லை என்கிறான் உணர்ச்சியற்ற குரலில். இருளில், படுக்கையில் கால்களை நீட்டி, பாதங்களை ஒன்றோடொன்றுடன் மோதுகிறாள். அவன் மேசை விளக்கின் பக்கம் உட்கார்ந்து, தட்டச்சு செய்கிறான். திரையில் தோன்றுகின்றன;

?  ! # – & (  %   @  = ‘  $   %   *    #    +   =   #  @

பின்னாலிருந்து, அசையும் பொருளாக பார்க்க முடிந்தது, அவனது கழுத்துப்பட்டை மட்டுமே. முன்புறம்சென்று பார்க்க, அது, கோட் ஸ்டாண்டில் தொங்கும் ஒரு ஜாக்கட்டின் முகமற்ற தலை என்பதைக் காண்கிறான். அதன் கங்குகளும் காற்றில் அசைகின்றன. அந்த கோட் ஸ்டாண்ட் வழிநடையில் நிற்கிறது.தெருவில் யாருமில்லை.வாகனங்கள் ஏதுமில்லை. எல்லா கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கிரீச்சிட்டபடி, ஒரு கடற்புறா கீழிறங்கி, நீரில் மூழ்குகிறது. எனினும், பெரும்பாலான கடற்புறாக்கள் சும்மாவேனும் அங்கே உட்கார்ந்திருக்கின்றன, அலைகளில் மிதந்தபடி. தூரத்தில், வெள்ளை நுரைகள் கோடுகளாக விரைகின்றன .அலைகளின் ஓசை உள்ளடங்கிய தொனியில், மெல்ல கடத்தப்படுகிறது. அநேகமாக, பெருக்கின் விசையைவிட, குறைவான வேகத்தில் அது பயணிக்க வேண்டும்.

அலைகளின் உறுமல் சப்தம் கேட்கும் தருணத்தில், கடற்புறாக்கள் நீரிலிருந்து மேலெழுந்து, அதன் கழுத்து நீண்டிருக்க, இறக்கையடித்து பறப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒரு, பச்சை வரிக்கோடுகள் கொண்ட சிகப்பு ஆப்பிள், மெழுகு பூசியதுபோன்று, பளபளக்கிறது. மெதுவாக, துல்லிதமாக அது சுழல்கிறது, தன்னை சோதிக்கும் பெண்ணின் மென்மையான கைகளில். பின், அது கீழே வைக்கப்படுகிறது.

மேசையில், வெண்ணிற மேசை விரிப்புக்கு மேல், கிளாஸ்களில் ரத்தச் சிகப்பு வைன். கத்திகள், கரண்டிகளின் மென்மையான ஒலிகள். வைன் கிளாஸ்களுக்குப் பின்னால், கோட்டும் கழுத்துப்பட்டையும் அணிந்த, அருவமானது போன்ற ஒரு மனிதனும்,வெற்றுத் தோள்களுடனும் கழுத்துடனும் நெக்லஸ் அணிந்த அதே போன்ற அருவமான பெண்மணியும் இருக்கிறார்கள். அந்த மனிதன் ஏதோ சொல்கிறான். ஆனால், அது இன்னதென்று பிடிபடவில்லை. அவன் நெகிழ்ந்தும் மகிழ்வுடனும் இருக்கிறான்.

அந்தப் பெண், மீண்டும் கையிலிருக்கும் ஆப்பிளை உருட்டுகிறாள். மெல்ல, மேசையில் நடக்கும் உரையாடலைக் கேட்க முடிகிறது. “உற்சாகம்… பார்பரா… மிகுந்த சுவாரஸ்யம்… உனக்கு மேலும் கொஞ்சம் கடி உணவு… லிலி, நீ போதிய அளவு உண்ணவில்லை… நன்றி… உண்மையில் வேடிக்கையானது… அவன் என்ன சொன்னான்… மன்னிக்கவும்… கோடை… புராதன பொருட்களின் விற்பனையாளர்… கொஞ்சம் திறனுள்ளது… ஹாங்காங் சென்றிருந்தேன்… யுத்தம் புரியவில்லை… ஓரினச்சேர்க்கை… குறிப்பிட்டத்தக்க நெகிழ்வுண்டு… ஆமாம்… அழகு… தலைப்புச்செய்திகள்… கால் மஸ்சாஜ் செய்வதில் திறன்… நீராவிக்குளியல்… அவனைப்போன்றதொரு நிதானமில்லை… ஏன்… சொல்லாமலிருப்பது நல்லது… சொல்ல முயற்சி செய்… நேற்று பிற்பகல்… அவளுக்கு கிறுக்கு பிடித்துவிட்டது… இனிமேலும் பயன்படுத்த முடியாது… வீட்டிலிருக்கும் எனது பூனைக்குட்டி… அதீத வலி… ஒருவேளை அது உண்மைதான்… அரசாங்கம்… என்ன துணைப் பெயர்… பலவகை ஸ்டௌட் பீர்கள்… கண்டுபிடி… ஒரு முரட்டு முட்டாள்.”

புத்தர் சிலையிலுள்ள, அந்தப் பிரகாசமான சிகப்பு நீள அங்கி தங்கக் கோடுகள் வரையப்பட்டு, கருணையும் நற்பேறும் இலங்கும் ‘ஸ்வாஸ்டிக்கா’ முத்திரையால் அலங்கரிக்கப்பட்டு, தன் பல மடிப்புக்கள் கொண்ட தாடையுடன், பெரிய வட்டமான வயிற்றை கைகளில் ஏந்தி, அவர் பாதுகாப்பாக அமைதியுடன், கருங்கல் மேடையில், சுவற்றிலிருக்கும் நறுமண எரியூட்டிக்கு அப்பால், உட்கார்ந்திருக்கிறார். நிறைவுடனும் மகிழ்வுடனும், உதடுகள் பிரிய நீளும் முடிவில்லா சிரிப்புடன். ஆனாலும், ஒருவர் சற்றே கூர்ந்து நோக்கினால், அவர் கொட்டாவி விடுவதுபோலவும், மீண்டும் நோக்க, அவரது குறுகிய கண்கள், அவர் தூங்குவது போலவும், மேலும் துழாவ, திகிலூட்டும் வெறித்த நோக்கு போலவும் இருக்கிறது.

அவன், ஒரு மதுபானக் கடைக்குள் சென்று, ஒரு உயரமான நாற்காலியில் உட்காருகிறான். பணியாள், இரண்டு பெரிய கிளாஸ் பியரைக் கொண்டு வந்து, அவன் முன் வைக்கிறான். கடைக்குள் சிலர் இருந்தாலும் கூட்டம் என்று சொல்ல முடியாது. அந்தப் பிரகாசமான நீல வெளிச்சத்தில் அவர்களின் முகங்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவர்கள் குடித்தபடி தனித்திருக்கிறார்கள். சிறு மேடையின் வெளிச்சத்தில், ஒரு பியானோ இருக்கிறது. ஒரு கறுப்பின பெண் அதை மீட்டுகிறாள். அது ஒரு துயரமிக்க ஜேஜ்-புளூ (jazz blue). முதுமையில் சொறித்தவளை போன்று அசிங்கமாகவும் இருந்தவள், பியானோவின் கட்டைகளை பரிவுடனும் பிரியமுடனும் தன் காதலனை வருடுவது போன்று தொடுகிறாள். அவளருகிலிருக்கும் அந்தக் கறுப்பின ஆண், அவளைப் போன்று மோசமாக முதுமை அடைந்திருக்கவில்லை. அவன், ஒரு வாக்கியமோ, அரை வாக்கியமோ ஒலிபெருக்கியில் பாடியபடி, சில டிரம்களையும் இசைக்கிறான்.

எரியும் நெருப்பில், மரத்துண்டுகள் அமைதியாக வெடிப்புறுகின்றன. நெருக்கத்தில், அடுப்பின் மேலிருந்து குழாய் வழி ஈர்க்கப்படும் காற்றின் ஒலியைக் கேட்க முடிகிறது. துப்புரவாக இருக்கும் கரும்பளிங்கு அடுப்பு இருக்குமிடம்வரை நீண்டுச் செல்கிறது கம்பள விரிப்பு.

இத்தருணத்தில் நான்காவது மனிதன் வருகிறான். அவன் பதனிடப்பட்ட தோலங்கி அணிந்திருக்கிறான். ஒரு சொல்லில்லாமல், அவனும் இணைந்துகொண்டு கயிற்றை இழுக்கத் தொடங்குகிறான். கயிறு தளர்வற்று இழுக்கப்படுகிறது. அவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள், ஒரு கையின் பின் இன்னொரு கை, விடாமுயற்சியுடன். ஆனாலும், அது கடினமானதாகவும் இருக்கிறது.

“சீனன் ஒருவன்…”அந்தக் கறுப்பின முதிய மனிதன்  ஆங்கிலத்தில், அவனைப் பார்க்காமலேயே  பாடுகிறான். அந்தக் கறுப்பின முதிய பெண்ணும், பியானோவின் மேல் கவிந்து, போதையில் தள்ளாடியபடி, பியானோவின் கட்டைகளில் தன் விரல்களை விரைவாய் ஓட்டி, அவனைப் பார்க்காமலேயே, பாடலில் முழுமையாய் ஆழ்ந்திருக்கிறாள். அவன் எதையும் கண்டுகொள்ளாமல், குடித்துக்கொண்டிருக்கிறான். அந்த அடர்ந்த நீல வெளிச்சத்தில், எவரும் எவரையும் கண்டுகொள்ளாமல், தலையாட்டும் பொம்மைகளைப் போல், அந்த இசையில் மயங்கிக் கிடக்கிறார்கள்.

அந்தக் குதிரை மயிரடர்ந்த தன் கால் குளம்புகளைத் தூக்குகிறது.”உலகெங்கும் சுற்றி திரிந்து…” அந்த முதிய கறுப்பின மனிதன் பாடுகிறான்.

அந்தக் கறுப்பின முதிய பெண்ணின் கைகள், பியானோ கட்டைகளின் மேல் விரைந்து இறங்குகின்றன. குதிரையின் குளம்படியில், பூமி பூம் என்று அதிர்ந்து குலுங்க,”உலகெங்கும் சுற்றி… உலகெங்கும் சுற்றி…” அந்த முதியவர் பாடியவாறு டிரம் வாசிக்க, அவர்கள் இசைக்கேற்ப தலையாட்டுகிறார்கள்.

அவர்கள் கைமாற்றி, பசுமைப்புற்தரையில் சப்பாத்துக்குள் பாதங்களை முனைப்புடன் உந்தி கயிற்றை இழுக்க,கயிறு முன் செல்கிறது.

அலைகள், கடற்சுவரை மோத, நீர்த்துளிகள் மேலெழுந்து சிதறுகின்றன. கடற்சுவருக்குக் கீழிருக்கும் அலைகள் விரைந்து முன்நகர, கடற்கரையை அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. சூரிய ஒளி அதே அடர்ந்த பிரகாசத்துடன் உள்ளது. ஆனால், வானமும் கடலும் மிகு நீலம் கொண்டுள்ளன.

இறுதியாக கயிற்றின் ஒரு முனை தென்படுகிறது. அடர் சிகப்பு நிற வர்ணம் பூசப்பட்ட ஒரு மீன் தூண்டில் முள்ளில், ஒரு இறந்த பெரிய மீன். அது பசும்புற்தரைக்கு இழுத்துச் செல்லப்படுகிறது. முள்ளில் இருந்த அந்த மீன், காற்றுக்காகப் போராடுவதுபோல், வாய் பிளந்துள்ளது. அந்த மீனின் அகலத் திறந்த கண்கள் தன் மினுமினுப்பை இழந்து, நிலைகுலைந்த பார்வையுடன் உள்ளன.

கடல்நீர், கடற்சுவருக்கு மறுபக்கம் இறங்கி ஒழுகிச்செல்கிறது. வானம் கருநீலம் கொள்கிறது.
மினுங்கும் சிறகுகளும், நடுங்கும் உணர்க்கொம்புகளும் கொண்ட ஒரு பெரிய கரப்பான்பூச்சி, பால் வண்ண கம்பளத்தில் ஓடி, முறுக்கிய ரோம இழைகளுக்கு மேல் நகர்ந்து போகிறது. தொங்கும் விளக்கின், ஒரு வட்டமான ஒளி, செதுக்கப்பட்ட ஓர் அழகான மரக்குதிரையின் பின்பகுதியில் விழுகிறது: அதன் மினுங்கும் தொடை, பின்னங் கால்கள், அதன் குளம்புகளில் அணிந்திருக்கும் சிறிய சிகப்பு உலோக லாட சப்பாத்துக்கள்.

“அலைதல்… உலகமெங்கும்! அலைதல்… எங்கும்… உலகம்…! அந்தச் சுருக்கம் கண்ட முதிய கறுத்த கைகளுக்கு எதிர்வினையாக, பியானோவின் கட்டைகள் பாடுகின்றன. அந்த மனிதன் இசைக்குத் தலையாட்டுகிறான். அவன் முன்பு இரண்டு காலி பியர் கிளாஸ்கள் இருக்கின்றன. கையில் பாதி காலியான ஒரு கிளாஸ். ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவனுக்கு பக்கமுள்ள உயர்ந்த நாற்காலியில், பிட்டம் ஒரு இறுக்கமான  தோல் குட்டைப் பாவாடைக்குள்ளிருக்க, உட்கார்ந்திருக்கிறாள். அது குதிரையின் தொடை போல பளபளக்கிறது.

கடல்நீர், கடற்சுவரைத் தாண்டி கரும் சாட்டின்(satin)போல, வழிகிறது. சுவரின் கீழே, விரவிச் செல்லும் கடல்நீரில், ஒரு செத்த மீன் கிடக்கிறது. அங்கே நிசப்தம். கடற்பெருக்கும் காற்றும் திடுமென நின்றுவிட, காலம் உறைந்துவிட்டது போலிருக்கிறது. கடல் மட்டும், நீண்டு விரியும் கரும் சாட்டின்போல நகர்ந்துபோகிறது. ஆனாலும் ஒழுகவில்லை. ஒருவேளை, அது நகரவில்லை. ஆனால், அது நகருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நகருவது போன்ற ஒரு உணர்வை அளித்து, ஒரு காட்சி பிம்பமாக உணர வைக்கிறது.

மின்சார அடுப்புக்கு மேலே தப்பித்து ஓடும் கரப்பான் பூச்சியை, அவனது கை நசுக்குகிறது. அதை அப்புறப்படுத்தாமல், நீர்க்குழாயைத் திறந்து கொட்டும் குழாய் நீரைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

“மரிஜுவானா வேண்டுமா?” குரல், மூச்சுக்காற்று என்று எண்ணும் அளவுக்கு, மிகத் தணிவாக உள்ளது. காரணம், இசை மிகச் சத்தமாக உள்ளது. சுருக்கம் விழுந்த கரிய கைகள், பியானோ கட்டைகளில் விரைய, அது பாடலின் சொற்களை, மென்மையாக மீளச் சொல்வதுபோல் உள்ளது. ஆனால், அந்தக் கறுப்பின மனிதன் இப்போது பாடவில்லை. தலை கவிழ்ந்து, உடல் அசைந்தாட, டிரம் வாசித்துக்கொண்டிருக்கிறான்.

ஆங்கிலேயப் பெண்மணியின் சதைப்பிடிப்புக் கொண்ட காதுமடல்களில் தொங்கும் உலோக அணி, மெல்ல அசைந்தாடுகிறது.

கரப்பான பூச்சிகள், நீர்க்குழாய்க்கு மேலிருக்கும் கல்மேடையிலும், இரும்புச்சட்டி மூடி மேலும், வானொலியின் தோலுறை மேலும், அலமாரி மேலும், சமையலறை கதவையொட்டியும் மேய்கின்றன. அவன் ஒரு ரப்பர் உறையை கையில் மாட்டுகிறான்.

அங்கே, நீல நரம்புகள் கொண்ட ஒரு பெரிய கை, அந்தப் பெண்ணின்,கருமைநிற தோல் குட்டைப்பாவாடைக்கு அடியிலிருக்கும் அவளது தொடையின் மேலிருக்கிறது. அது யாருக்குச் சொந்தம், அவன் எங்கே? அந்த முதிய கறுப்பின மனிதன் இன்னமும் டிரம் வாசிக்கிறானா, பியானோ இன்னமும் இசைக்கப்படுகிறதா? அந்த நீளும் ஒலிக்கூறு எங்கிருந்து வருகிறது? எதுவாயினும்,எல்லாமும் அசைந்தாடுகின்றன.

ஒரு மீன், அதன் நிலைகுத்திய, குளிர்ந்த வெண்கருமைக் கண்,வட்ட வடிவில் உயிர்ப்பற்று, உற்று நோக்கியபடி.

ஒரு ஜோடி கூரிய இடுக்கி, ஒரு பல்லைப் பிடுங்குகிறது, ரத்தம் இன்னமும் அதன் வேர்களில் தொத்திக்கொண்டிருக்கிறது, அவன் அதை முகர்கிறான் – அது சற்று நாறுகிறது – கையை வீசி அதை தூர எறிகிறான்.

ஜனங்கள் மலையேறுகிறார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை முந்த முண்டியடித்து முயல்கிறார்கள். அது மலையேறும் போட்டியாக தோன்றுகிறது. ஆண்களும் பெண்களுமாய், சிலர் அரைகாற்சட்டை அணிந்தும், சிலர் முதுகுச்சுமைப் பையுடனும். முதியோரும் இளையோரும். சிலர் கைத்தடியுடன், சிலர் சிறு குழந்தைகளுடன். ஆண்களும் பெண்களும் ஜோடியாக கைகோர்த்துக்கொண்டு. எனவே அது ஒரு போட்டியாகத் தோன்றவில்லை. அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். அது ஒரு விடுமுறை ஒன்றுகூடலா அல்லது அவர்கள் அனைவரும் ஒரு நகரைச் சேர்ந்தவர்களா? ஆண்கள், பெண்கள், முதியோர் இளையோர். அது என்ன ஒரு புதுமையான உடற்பயிற்சியா?

கரப்பான்பூச்சிகள் எங்கும் மேய்கின்றன. கரப்பான்பூச்சிகள் அப்பிய கையுறையுடன்  குனிந்து, அவன் அவற்றை பதட்டத்துடன் தட்டிவிடுகிறான்.

இரண்டு பாதங்கள், கூர்கொண்ட தோல் சப்பாத்துக்குள்ளிருந்து, காற்றில் அசைகின்றன. மேடையில், வெண்மூக்கு கோமாளி ஒருவன், காற்று ஓசையின்றி ஒழுகிச்செல்லும் ஒரு அக்கோர்டியனின் இசைக்கேற்ப, தன் கைகளால் நடக்கிறான்.

அனைவருக்கும் மூச்சிரைக்கிறது. நெற்றிப் பரப்பிலிருந்து வியர்வை. அவர்கள் அனைவரும் ஒரேவகை நீர் பாட்டிலை எடுக்க, ஒவ்வொன்றாக, அவர்களின் அகன்ற சுழிக்கும் முகங்கள், நிறைவின் ஒத்த புன்னகையை விளைக்கின்றன.

ஒரு ஊன்றுகம்பின் முனையில்,தொப்பி ஒன்று, ஓசையின்றி சுழல்கிறது.

காற்று ஓய்வெடுத்திருக்க,சூரிய ஒளி அற்புதமாய் உள்ளது. வானம் நீலம் கொண்டுள்ளது. கடற்புறாக்கள் கிரீச்சிடுகின்றன.

ஜனங்கள், மலைச்சரிவில், நிரையில் அணிவகுத்துச்செல்கிறார்கள். தலைமை ஏற்று செல்பவன் பிடித்திருக்கும் கிழிந்த கொடி கடும் காற்றில் அலையடிக்கிறது. அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டிருந்தனர். ஆனாலும், அந்தக் கிழிந்த கொடியின் படபடப்பை இன்னும் கேட்க முடிகிறது.

கடல் பெருகி விரிந்து, கம்பீரமாகவும் கொந்தளிப்புடனும் கதவுக்கு அப்பாலிருக்கும் கற்படிகள் வரை செல்கிறது.

தரை கரப்பான் பூச்சிகளால் அடர்ந்துள்ளது. அவன் விரைப்புடன் நின்று தலை குனிந்து சூழ நோக்குகிறான். ஏமாற்றத்துடன் சரணடைகிறான். இறந்த கரப்பான் பூச்சிகள் நிறைந்த கையுறையைக் கழற்றுகிறான்.

ஓசையின்றி, கடல்நீர் வாசற்படியைக் கடந்து அறைக்குள் வழிகிறது. கரப்பான்பூச்சிகள் தப்பிக்க ஓடி சுவரில் ஏறுகின்றன. விரைய இயலாதவை நீரின் சுழற்சியில் சிக்கி, அதனுடன் சேர்ந்து மிதந்தோ, அல்லது மல்லாந்து கிடந்து செத்ததுபோலவோ நடிக்கின்றன. அவனால், குனிந்து அவற்றைப் பார்ப்பதை தவிர்க்க இயலவில்லை. கையுறையுடன் அவற்றைத் தொடுகிறான். பின், அதைக் கழற்றி நீரில் வீசி நிமிர்கிறான். அதன் பிறகு, அவற்றை அவன் கண்டுகொள்ளவில்லை.மேஜையின் கால்களும்,நாற்காலியின் கால்களும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. நீரில் கிடக்கும் கரப்பான்பூச்சிகள் சில அதில் ஏற முயல்கின்றன.

காங்கிரீட் அடிக்கூரையின் பெரும்பகுதி ஈரமாக உள்ளது. நீர்த்துளிகள் அதிலிருந்து விழத்தொடங்குகின்றன.

நிலவறையில், தூக்கி எறியப்பட வேண்டிய நிலையிலிருந்த ஒரு பழைய மெத்தையில் ஒருவர் மல்லாக்கப் படுத்திருக்கிறார். அவரது முகத்தை ஒரு கருந்தொப்பி மூடியிருக்க, அவரது உடலை ஒரு வெண்மெத்தை விரிப்பு மூடியிருக்கிறது. அந்த மெத்தை நான்கு காங்கிரீட் ஈரச் சுவர்களுக்கு மத்தியில் இருக்கிறது. அந்ததுணி விரிப்பின் மேல் நீர்த்துளிகள் சொட்ட, ஓசையெழும்பி, அதன் ஒரு பகுதி மெல்ல ஈரமாகிறது.

அவரது வயிற்றுத் தொப்பை மேல் உறிஞ்சும் மருத்துவ மூங்கில் குப்பிகள். அடி வயிற்றுக்குக் கீழுள்ள பகுதியைத் துணிவிரிப்பு மூடியிருக்கிறது.

தொப்பி அணிந்திருக்கும் ஒரு செருப்பு தைப்பவன், மரநாற்காலியில் உட்கார்ந்து, தன் பற்களுக்கிடையில் இருக்கும் ஆணியை எடுத்து, முட்டிகளுக்கிடையிலிருக்கும் தூக்குச் சப்பாத்தின் தூக்கலான பகுதியில், வைத்து அழுத்துகிறான். சுத்தியலால் அடிக்க, ஒரே அடியில் ஆணி உள்ளே செல்கிறது.

அந்தக் கலங்கிய கருமை கடல் நீர், கற்படிகளில், ஒவ்வொரு படியாக, ஓசையின்றி, வழிந்திறங்குகிறது.

செங்குத்தான கற்பாறையின் உச்சியிலிருக்கும் பாழடைந்த காவல் அரணை, அவன் நிமிர்ந்து பார்த்து, நிழலிருக்கும் உடைந்த கற்படிகளில் ஏறிச்செல்கிறான். காவல் அரணில் விழும் சூரிய ஒளியில், அதன் ஒவ்வொரு கல்லின் வடிவமும் குறிப்பிடும்படியான தனித்துவம் பெற்றுள்ளன.

அவன் அந்தக் காவல் அரணின் சுவற்றிலிருந்த இருண்ட வாசலின் வழி, உள்ளே நுழைகிறான். திடுமென, இரும்பு உளி ஒன்றை அறைந்து, கற்பாறைக்குள் இறக்கும் ஒலி கேட்கிறது. அவன் அசையாமல் நின்றுவிட, அந்த ஒலியும் நின்றுவிடுகிறது. அவன் நடக்கத் தொடங்கியதும், அந்த ஒலி அவனது காலடிகளைத் தொடர்கிறது. அவன் நின்றுவிட, அந்த ஒலி மீண்டும் நின்றுவிடுகிறது. அவன் வேண்டுமென்றே பாதங்களால் தரையைத் தட்டுகிறான். அந்த இரும்பு உளியின் ஒலி உரசும் உலோகங்களின் கூச்சலாகிறது. இறுதியாக, அவன் விரைந்து ஓடத் தொடங்க, அந்த ஒலி காணாமலாகிறது.

e2e9d9b35a93e9bf6bdae53f024a8adb--drouot-gazetteஅது நீண்ட இருண்ட சுரங்கப்பாதை. அவன் மெதுவாக தடுமாறியபடி முன்னே செல்கிறான். மறுமுனையில் ஓர் ஒளிக்கீற்று தோன்ற வெளியேறும் வழி தெரிகிறது-ஒரு கதவு. வெளியே சூரிய ஒளி அதி பிரகாசத்துடனிருக்கிறது. உளியின் ஒலி தெளிவாகக் கேட்கிறது. கதவை நோக்கி கவனமாக நகர்ந்து, நிழலில் மறைந்து நின்றபடி, பார்க்கிறான். யாரோ ஒருவர், சில பாறைகளை சுத்தியலால் அடிக்கிறார். அவன் முன்னால் நகர்ந்து, அவரது பின்புறம் நின்றுவிடுகிறான். அந்த மனிதர் திரும்புகிறார். வரண்ட ஆழமான சுருக்கங்கள் படர்ந்த குழி விழுந்த, மஞ்சளும் வெயிலுக்கு சற்று கறுத்தும்போன, முதிய முகம். இடைவெளிவிட்ட அவரது முன்பற்கள் புகையிலைக்கறை படிந்துள்ளன. அவர் ஒரு முதிய மலைக்கிராமத்தான். சூரிய ஒளியில் கண்கள் இடுங்க, வெறுமையுடன், பார்வை வேறெங்கோ உற்று நோக்குகிறது. கடலின் மெலிதான ஒலி தொடங்கிய வேகத்தில் நின்றுவிடுகிறது.

அந்தக் கலங்கலான கருமைக் கடல் நீர், மேலே, இடது பக்கமிருக்கும் படிக்கட்டுகளிலிருந்து ஓசையின்றி விரைந்து வருகிறது. படிக்கட்டுக்களுக்கு மேலிருக்கும் பாதி திறந்திருக்கும் கதவுகளுக்கு வெளியிலிருந்து சிறிது வெளிச்சம் வருகிறது. பிரதிபலிக்கும் அந்த ஒளியில் நீரின் விரைவு சற்று வேகம் கொண்டுள்ளது தெரிகிறது.

அவன் சைக்கிளை மிதிக்கிறான். அதன் சக்கரங்கள் மிதமான வேகத்தில் சுழல்கின்றன. ஒரு நேரான பிரதான கிராமச் சாலையில், ஒரு பழமையான, அகன்ற ஹாண்டில்பார் கொண்ட சைக்கிளை மிதித்துச் செல்கிறான். தூரத்தில், வலதுபுறச் சரிவில், ஒரு நிரையில் நால்வர், முதுகு வளைந்து, எதையோ சிரமத்துடன் இழுத்துச் செல்லும், அகண்ட புல்வெளி. அவர்கள் எதை இழுத்துச் செல்கிறார்கள் என்பது தெளிவாகவில்லை. ஆனால், அது மிகுந்த எடை கொண்டதாக, ஒரு மரப்படகு போன்று தோன்றுகிறது. ஒருவேளை, அது ஒரு பிணப்பெட்டியாகவும் இருக்கலாம். அது கடக்கும் வழியில் புற்தரையில் தடயத்தைப் பதித்துச் செல்கிறது. அவர்களின் ஒவ்வொரு அடியும் மெதுவாகவும் பிரயத்தனமிக்கதாகவும் உள்ளது. காற்றில் அலைகிறது ஒரு பெண்ணின் ஓலம், ஒரு பாடலைப் போல, ஒரு மரண வீட்டில், கிராமத்துச் சீனப்பெண்ணொருத்தியின் ஒப்பாரி போல.

சைக்கிளின் ஹாண்டில்பாரிலிருந்த மணியில் பிரதிபலித்த சூரிய ஒளி, அவனது கண்களில் பட்டு, கண்கள் கூசுகின்றன. அந்த அழுகையொலி மேலும் மேலும், கூலித் தொழிலாளர்களின் பாடல்களைப் போலவோ அல்லது அவர்கள் சுமையை இழுக்க எழும் கூட்டொலி போலவோ தோன்றுகிறது. சைக்கிளின் சக்கரங்கள், அந்த நேரான தார்ச் சாலையில் நகர்ந்து போகின்றன.
இளநீல வெண்கல முகத்துடன், நான்கு மெலிந்த மனிதர்கள், திறந்த மார்புடன், முதுகுப்புறம் வியர்க்க, அகண்ட துணி இடைவாரும், நார்ச்சப்பாத்தும் அணிந்திருக்கின்றனர். அவன் இறுக்கமுடன் இருப்பதாகத் தோன்றும் கயிற்றைப் பார்க்க, அது திடுமென பெரிய ஓசையுடன் அறுபடுகிறது.

ஒரு சிறு வாகனம் சைக்கிளை முந்திக்கொண்டு விரைந்து போகிறது. அவன் பின்னால் பார்க்க வேண்டி தலையைத் திருப்ப, புல்வெளிக்கு இடது பக்கம், நேர் மேலிருந்த சூரியன், அவனது கண்களைக் கூசச்செய்கிறது. சூழ எவரும் இல்லை. அதில் தொக்கி நிற்கும் ஓசை, பூச்சிகளின் ரீங்கரிப்பாகவோ அல்லது அவனது காதில் எழும் இரைச்சலாகவோ தோன்றுகிறது.

நிலவறையில், கலங்கிய நீரில் மெத்தை நனைந்துள்ளது. அந்த வெள்ளைத்துணி விரிப்பும் முழுமையும் நனைந்துள்ளது. முகத்தை தொப்பியால் மறைத்திருக்கும் அந்த மனிதன் அசைவற்று பிணம்போல் இருக்க, மேலிருந்து சொட்டும் நீரில் எழும் அந்த நீர்க்குமிழ்களின் வெடிப்புச் சத்தமும் அங்கிருக்கிறது.

சைக்கிளை அருகே நிறுத்தி வைத்து, மரநிழலில் ஒருக்களித்துப் படுத்து, அந்த கைவிடப்பட்ட ஆப்பிள் தோட்டத்தைப் பார்க்கிறான். இங்கும் அங்குமாக கிளைகளில் பறிக்கப்படுவதிலிருந்து தப்பித்த சில சிகப்பு ஆப்பிள்கள். அருகில் எங்கோ ஓர் ஓடையின் சலசலப்பு.

வெறுங்காலுடனிருந்த ஒரு பெண், முன்னால் இருக்கும் ஆப்பிள் மரங்களுக்கடியில் தென்படுகிறாள். அவள், தனது சக்திக்கு மீறிய ஒரு வாளி தண்ணீரைச் சுமந்திருக்கிறாள். ஊதாச் சிகப்பு மேலாடையும், கால் முட்டிக்கு கீழ் வரை சுருட்டிவிடப்பட்ட, பூக்களின் படங்கள் பொதிந்த நீலநிற காற்சட்டையும் அணிந்திருக்கிறாள். இரண்டு நீள சடையுடன், அவளது சிறிய முகத்தில், அந்த இரண்டு ஒளிமிக்க கருமைக் கண்கள் பெரிதாக பொருத்தமற்று உள்ளன. தொடர்ந்து நடப்பதா இல்லையா என்ற குழப்பத்துடன், நகர யத்தனிக்கிறாள். திடுமென சுற்றிலும் தனிமைச்சூழ்கிறது.

ஒரு சிறிய மரம் காற்றில் பறக்கிறது. குப்பைகள் கிளர்ந்தெழ, மேகத்திறல் போன்ற அடர்ந்த கரும்புகையும் தூசுகளும் திடுமென வானில் விரிகின்றன. தலைக்கு மேல்விமானங்கள் பறக்க மெசின்-கன்களின் மூர்க்கத்தாக்குதலும், வெடிகுண்டுகளின் வெடிச்சத்தமும் தொடர, குழந்தைகளின் அழுகுரலும், பெண்களின் ஓலமும் கேட்கிறது.

சில சிறுவர்கள், ஒரு இரும்பு மண் வெட்டியைச்சுற்றி உட்கார்ந்துகொண்டு, அது காலால் அழுத்தப்பட்டு மண்ணுக்குள் செல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தோண்டி எடுத்த மண், மண்வெட்டி கொண்டு சிறு சிறு துண்டுகளாக உடைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டு அடித்து உடைக்கப்படுகிறது. அதன் மேல், ஒரு பெரிய பையன் குனிந்து ஒரு மெசின்கன் துப்பாக்கிக் குண்டை எடுக்கிறான். அதை தன் சட்டையில் உரசித் தேய்த்து, காற்சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டு, மண்வெட்டியோடு தோண்டுவதற்காக அடுத்த குழிக்குச் செல்கிறான். அவனைச் சுற்றியிருந்த சிறுவர்களில் ஒருவன், வரிசையில் இருக்கும் குழிகளைப் பார்த்தபடி தலையாட்டுகிறான்.

அந்தக் கலங்கிய கருமை நீர், எல்லா கற்படிகளிலும், நிறுத்த இயலாதவாறு கீழாக சலசலத்து வழிந்தோடுகிறது.

ஒரு தீக்குச்சி அந்த இருளில் உரசப்பட, ஒரு பழைய மங்கிய மஞ்சள் புகைப்படம் ஒளிகொள்கிறது. அது நன்கு உடுத்திய ஓர் இளைஞன், ஓர் இளம் வயது பெண், ஒரு மூன்று அல்லது நான்கு வயது பையனோடு இருக்கும் படம். அவர்களின் தோள்கள் நெருங்கி அழுந்த, பெரியவர்கள் இருவரின் முகத்திலும் பாவனைப் புன்னகை. தன் பெற்றோருக்கிடையே இருக்கும் அந்தச் சிறுவனின் கண்கள் வட்டவடிவமாக உள்ளது. முகத்தில் ஆச்சர்யம். புகைப்படத்தின் விளிம்பிலிருந்து தீ அவனது பெற்றோரை நோக்கி நகர்கிறது. புகைப்படம் சுருங்கி சுருளத் தொடங்குகிறது. பின் – வூஸ்! – முழுப் படமும் தீயில். பெற்றோர் தீயில் எரிந்துகொண்டிருக்க, சிறுவன் கருகிவிட்டிருக்கிறான்.

ஊதிக்கொண்டிருக்க, அந்த சோப்பு நுரைத்துளி வளர்ந்துகொண்டிருக்கிறது. அதன் வழவழப்பான மேற்பாகம் விரைவுடன் விரிய, சூரிய ஒளி பட்டு, அதன் வண்ணங்கள் மேலும் ஒளிர்கின்றன. கூடுதல் வண்ணங்கள், கூடுதல் பிரகாசத்துடன், இதற்குமேலும் பெரிதாக முடியாத நிலையில், அது பட்டென மௌனமாய் உடைகிறது. அதை ஊதிக்கொண்டிருக்கும் சிறுவனின் முகம் ஆச்சர்யத்தில் ஒளிர்கிறது.

கருமை நீரிலிருக்கும் அந்த மெத்தை மெல்ல மிதக்கத் தொடங்குகிறது. அது சற்றே ஒருக்களித்து, தள்ளாடி பின்னடைந்து, சிலமுறைகள் அசைந்து, ஒவ்வொருமுறையும் மேலும் நிலைகொண்டு, இறுதியில் நீரில் மிதக்கிறது.

எங்கும் நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. அவன் நிமிர்ந்து, கூரை முனையிலிருந்து கீழிறங்கும் மழை நீரைப் பார்க்கிறான். வெளியே தரையில் சில கைவிடப்பட்ட இரும்புக் கலப்பைகளும், விவசாய இயந்திரத்தின் பகுதிகளும் உள்ளன. இரண்டு நாய்கள், வாயை அகலத் திறந்து, அவனை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. அவன் தானியக் களஞ்சியத்துக்குள் பின்வாங்குகிறான். உயர்ந்துள்ள அதன் கூரை முகடுவரை தீவனம் அடுக்கப்பட்டுள்ளது. அந்த இருண்ட தானியக் களஞ்சியத்தின் நடுவே இருக்கும் ஒரு நீண்ட இருக்கையைச் சுற்றிலும் இளம் பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் முகத்தின் வெவ்வேறு இடங்களில் மாவு ஒட்டிக்கொண்டிருக்கிறது – கண் இமைகள், மூக்கு, புருவங்கள், கன்னங்கள், உதடுகள், காதுகள். தலைகள் கவிழ்ந்து, துக்கத்தில் தோய்ந்து, மாவைப் பிசைந்து உருட்டியபடி, பாடுகிறார்கள். நீண்ட சடை கொண்ட ஒரு இளம்பெண் தன் முன்னே ஒரு எண்ணை விளக்கை வைத்திருக்கிறாள். அவள், ஆடியில் தெரியும் பின்னாலிருக்கும் தன் தோழியைப் பார்க்கிறாள். அவள், இவளது சடையைப் பிரித்து, இவளுக்காக தலைமுடியைச் சீவுகிறாள். தானறியாமலே, அவன் ஆடியின் பக்கம் நின்றுகொண்டு, கத்தரிக்கோள் அவளது நீள முடியைக் கட்டையாக கத்தரிப்பதைப் பார்க்கிறான். திடுமென, நாய்களின் குரைப்பைக் கேட்க முடிகிறது.

மழைக்காலம். ஒரு கிராமத்து வெறிச்சிட்ட தெரு, மழை பெய்யும் ஓசையைக்கூட கேட்க இயலாத, அடர்ந்த தனிமைக்குள்ளிருக்கிறது. கற்சுவருக்கு மேலே, ஒரு வரிசை, பழைய, இறுக மூடப்பட்ட மரப்பலகைச் சன்னல்கள். இரும்புப் பட்டைகளால் திடப்படுத்தப்பட்ட ஒரு மரக்கதவு, கற்சுவற்றில் பதிக்கப்பட்டு, ஒரு ஆள் உயரத்தில், கற்பாதையின் மேல் நிற்கிறது. திருமணமானதை எண்ணி அழும் ஒரு பெண்ணின் துயரப் பாடலொன்று, கதவிடுக்குகளின் வழி மெல்ல கசிகிறது. எவரேனும் அந்தக் கதவை நெருங்க, எல்லாமும் மேலும் மேலும் மங்கலாகிறது.

கைகள், ஒரு கனமான கதவைத் தள்ளி திறக்கிறது. உள்ளே ஒரு தேவாலயம். வரிசையான காலி இருக்கைகள், கற்தரையில் எதிரொலிக்கும் காலடியோசைகளினிடையே பின்னடைகின்றன. சுவற்றில் மீந்த பழங்கால சுவரோவியங்கள். மங்கி, அதன் நிறங்கள் அழுக்கடைந்து கருமையாகி சிதைவுற்று, எந்தவொரு சீடரின் முகமும் அடையாளம் காண இயலாமல்.

வட்ட கூழாங்கற்கள் கொண்ட, விரைந்தோடும் ஒரு மலை நீரோடை. அவன் திரும்பிப் பார்க்கிறான். எதிர்ப்புறம், மலைச்சரிவில், சாரல் மழையில், நடுவாய் ஒரு கற்பாதை ஓடும் ஒரு கிராமம். அதில், பிரதான மணிக்கோபுரம் கொண்ட ஒரு தேவாலயம். மழை கனத்துப் பெய்கிறது.

அவன் தொப்புர நனைந்து, தலையின் பின்புறம் நீர் வழிந்தோட, அந்த கிராமத்துச் சாலையில் நடக்கிறான். ஒரு கார் கடந்து செல்ல கை காட்டுகிறான். கடந்துபோன கார் நிற்கிறது. அவன் விரைந்து ஓடி நிற்க, ஒரு கதவு திறக்கிறது.

ஒரு பெண் காரோட்டி. காரின் கண்ணாடியில் அவளது முகம் தெரிகிறது. அவளது கண்களின்0022 ஓரத்தில் சுருக்கங்கள். அவள் ஏதோ கேட்க அவன் பதில் சொல்கிறான். அவள் அவனைப் பார்க்கத் திரும்புகிறாள். அவளுக்கு தனது அழகு சாதனங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரிந்திருக்கிறது. அவள் மீண்டும் அவனிடம் எதையோ கேட்க அவன் மீண்டும் பதிலளிக்கிறான். அவள் பார்வையை வேறெங்கோ திருப்புகிறாள். ஆனால், முகப்புக் கண்ணாடியில் தெரிகிறது அவளது உதட்டோர புன்னகை. காரின் சன்னல்கள் நீரைச்சொட்டிக்கொண்டிருக்கின்றன.

அந்தக் கலங்கிய கடல் நீர் கதவுக்குப் பின்னாலிருக்கும் படிகளைக் கடந்து உள்ளே நுழைகிறது. வெளிச்சத்தில் அது விரைந்திறங்கும் கரும் சாட்டினைப்போல் தோன்றியது.

அவன் குனிந்து பார்க்க, அங்கே ஒரு நீள மேஜையில் அம்மணமாய் இருக்கும் ஆண்களும் பெண்களும். அவர்கள் இணைகளாக ஒன்றிணைந்து மேலும் கீழும் அசைந்து, முடிவில்லாது சுழல்கிறார்கள். பால்வண்ண மாவும் நீரும் துளிகளாக, மழைநீர் விழ எழும் ஓசை போன்ற ஓசையுடன், மேஜை மேலும் அவர்கள் மேலும் விழுகிறது. சுற்றிலும் வைக்கோல் கட்டுக்கள். அது ஒரு தானியக் களஞ்சியம் போலிருக்கிறது. ஆனாலும் இடையிடையே சீற்றொலி கேட்கிறது. அதுவொரு குதிரை லாயம்போலிருக்கிறது.

அவன் ஒரு பழைய வட்ட மேஜையின் முன் உட்கார்ந்திருக்கிறான். இரண்டு கைகளையும் அதன் மரப்பரப்பு மேல் வைத்திருக்கிறான். அவர்களில் ஒருவன் பாதிவரை சிகப்பு வைன் நிரம்பிய ஒரு கிளாஸை திருப்புகிறான். தொங்கும் விளக்கொன்றின் மஞ்சள் ஒளி அவனது கைகளில் மட்டும் விழுகிறது. அந்த வட்ட ஒளிக்குள் மெருகிடப்பட்ட ஒரு கற்பந்து, அந்த மேஜையில் நிழல் பரப்புகிறது. அவன், வைன் கிளாசை பிடித்திருக்கும் கையை, வட்ட ஒளியிலிருந்து அகற்றுகிறான். அவனது மறுகை, அந்தக் கற்பந்தை, அதன் நிழல் நீளும்படியான ஓரிடத்திற்கு நகர்த்துகிறது. இசை உடனே தொடங்குகிறது. அது ஜேஸ் புளூஸ் (jazz blues) போல் தோன்றுகிறது – அதிர்வுடனும் கட்டுப்பாடுடனும், இடைவெளிவிட்டு, வேகத்துடனும் ஆனாலும் பலவீனத்துடனும், தூரமிருப்பது போல தோன்றினாலும் அருகிருக்கிறது. இறுதியில் அது திடுமென நின்றும்விடுகிறது என்றாலும் அது அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது… அவன் எழுந்து, வட்ட ஒளியிலிருக்கும் அந்தக் கற்பந்தின் முடிவிலா கோணங்களின், நிழலின் சாத்தியப்பாட்டையும் கவனித்தபடி மேஜையைச் சுற்றி வருகிறான்.

வெள்ளைத் திரைச்சீலைக்குப் பக்கமிருக்கும் ஒரு சுவர் விளக்கின் ஒளியில், கருமை உதடும், வெளுத்த தோலும், தலைக்கு மேல் சுருட்டி வைக்கப்பட்ட கருமை முடியுடன், கீழ் நோக்கும் கண்களுடன், உதடுகள் சிறிது பிரிய, அநேகமாய் தூங்குவதுபோல், ஒரு பெண்ணின் ஓவியம். நெருங்கிப் பார்க்க, ஒரு கண் மூடியிருப்பது போலவும் மற்றொன்று திறந்திருப்பதுபோலவும் தோன்ற, எவரும் ஓரடி பின்னகர்ந்து பார்க்க, ஒரு கண் இன்னொரு கண்ணைவிட மேலேறி இருப்பதாகத் தோன்றும் விதமாக. மேல் நோக்கி ஒரு கோணத்திலிருந்து பார்க்க, ஒருவர், அதன் கீழுதடு தடித்தும் சதைப்பிடிப்புடனும் இருப்பதைக் காண முடியும். இன்னொரு பார்வையில் அதுவொரு பறவையின் அகலத் திறந்த வாய் போன்று தோன்றும். தலைகீழ் பார்வைக்கு, அதன் நாக்கு துருத்திக்கொண்டிருப்பதாகத் தோன்றும். வெளிச்சத்திற்கு வெளியே, கன்னம் முழுக்க கத்திக்குத்து: தீய நோக்கு கொண்ட ஒரு மந்திரவாதி. விளக்கு அணைய தொடரும் ஒரு சத்தம்.

சலசலப்புச் சத்தம். நீர் கற்படிகளில் ஒழுகிச் செல்கிறது. அவ்வப்போது, சில தடவைகள், ஒரு மங்கிய விளக்கொளி பளிச்சிடுகிறது.

திரை ஓசையுடன் திறக்கிறது. ஒரு பெண்ணின் திறந்த பின்புறம், அவர்கள் முன் தோன்றுகிறது. அவள் ஜன்னலைத் திறக்க, இளங்கருமை நிறத்தில் மேற்கூரைகள் விரிந்து கிடக்கின்றன. சற்றுத் தள்ளி, ஒன்றை அடுத்து மற்றொன்று என, வரிசையாக, பழைய கட்டிடங்களின் முகப்பு மாடங்கள் முடிவிலாது செல்கிறது. அடர் நீல வானம் அபூர்வமாக தெளிவாக உள்ளது. அது காலைப் பொழுதாகவோ அல்லது அந்திப் பொழுதாகவோ இருக்கலாம். அந்தப் பெண் திரும்பி, சோர்வுடன் ஜன்னலின் வெளிப்புற இரும்புச் சட்டகத்தில் சாய்கிறாள். அவளது முகமும் உடலும் இருளில் இருக்க, கண்கள் மட்டும் பூனையின் கண்களைப்போல் மினுக்கம் கொண்டுள்ளன. அவளது கைமூட்டிலிருக்கும் ஒரு வளையலும் மெலிதாய் மினுக்குகிறது. விரைந்து கடக்கும் ஒரு கார், தன்னுடன் கடலலைகளின் இரைச்சலையும் கொண்டு வருகிறது.

கடற்புறாக்கள் கடலை வட்டமடிக்கின்றன. எதையோ கண்டுவிட்டதுபோல் கிரீச்சிட்டபடி, கடலலைகளின் ஏற்ற இறக்கங்களைத் தொடர்கின்றன.

காய்ந்த புற்கள் ஓசையின்றி காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. அவன் மலைச்சரிவில் நடந்து, ஒரு இடிந்த சுவருக்குப் பின்னால், தனக்காகக் காத்திருக்கும் சில இளையோரை நோக்கிப் போகிறான். அவர்களில் ஒருவன் முற்றிய கிட்டத்துப் பார்வைக்கான தடித்த கண்ணாடி அணிந்திருக்க, அவனது கண்கள் மீனின் கண்களைப்போலிருக்கின்றன. இன்னொரு, கட்டை முடியுடனும் கருத்த நிறத்துடனும் இருந்த ஓர் இளவயதுப் பெண், பூசணி விதைகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் அதன் தோலைத் துப்ப, அது காற்றில் மிதந்து புற்களிடையே விழுகிறது. அவன் வருவதைப் பார்த்து, ஒரு சொல்லுமில்லாமல், அவர்கள் ஒன்றாக மலைச்சரிவில் இறங்குகிறார்கள். கீழே ஒரு கொத்து வீடுகளும், ஒரு மணிக்கூண்டும், ஒரு பந்துவிளையாட்டுத் திடலும் இருக்கிறது.

கடல்நீர் நிறைந்த நிலவறையில், கலங்கிய நீரில் ஊறிய மெத்தை மெல்ல மிதக்கிறது. கடந்து செல்லும் வாகனங்களின் இரைச்சல், காற்றின் ஒலிபோலிருக்கிறது.

அந்த இளைஞர்கள், தூண்களால் துண்டிக்கப்பட்டு மிகப் பிரகாசமாய் தோன்றும் கதிரொளியின் பகுதிகளிருக்கும் நீண்ட நடைவழிக்குள் செல்கின்றனர். அதுவொரு கதவுகளும் ஜன்னல்களும் அகலத் திறந்திருக்கும் யாருமில்லா வகுப்பறை. மேஜைகளும் நாற்காலிகளும் நிறைந்து, அவற்றின் நடுவே அவர்கள் ஒவ்வொன்றாய்க் கடக்கும் காலடியோசை.

அந்த வழிநடையின் இறுதியில் ஓர் அறை. கதவு சாத்தப்பட்டு, அதில் ஓர் அறிவிப்பு. அவர்கள் நின்று, ஏதும் எழுதப்படாத அந்த அறிவிப்பைப் பார்க்கின்றனர். அவர்கள் தயங்கி, ஏதோ கலந்துரையாடுவது போலிருந்த பிறகு, கதவு தட்டப்படுகிறது. அது ஓசையின்றி உடனே திறக்கிறது. உள்ளே, ஆசிரியர்கள் மாணவர்களைப்போல் மேஜைகளில் உட்கார்ந்து, சுறுசுறுப்புடன் வீட்டுப் பாடங்களைத் திருத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்களில் ஒருவரை அணுகலாமா என இவர்கள் யோசித்துக்கொண்டிருக்கையில், ஓர் இளம் ஆசிரியர் இவர்களுக்குப் பின்னால் தோன்றுகிறார். அந்தக் காலத்தில் இருந்ததுபோல் அவள் இளமையாக இருக்கிறாள். முகம் சோகையுடனும் மெழுகில் வார்த்ததுபோன்றும் இருக்கிறது. சோர்வு முகமெங்கும் தெரிகிறது: அவளது கண்கள் உப்பியும், கருமை நிழலுடனும் இருக்கிறது. அவள், அவர்களை தலைமையாசிரியரிடம் அழைத்துச்செல்வதாகக் கூறி, படிப்பு முடித்துச் சென்று நீண்ட காலத்திற்குப் பின்னும், தாங்கள் படித்த பழைய பள்ளியை அவர்கள் காண வந்ததற்கு தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள். அவள், தனக்கு அந்த வகுப்பு நினைவிருப்பதாகக் கூறுகிறாள்: அப்போது அவர்கள் குறும்புத்தனம் மிகுந்த சிறுவர்களாக இருந்தனர். அவள் பேசுவதும் நகையாடுவதும், ஒரு தாளில் வரையப்பட்ட அவளது உருவத்திலிருந்து வருவது போலிருக்கிறது. ஒரு காலத்தில், அதே மேஜைகளில் நடந்த கடும் போராட்டம் அவள் நினைவிலிருக்கிறது. யாரோ ஒருவர் மேஜையைத் தட்ட, மற்றவர்கள் யோசனையின்றி அதனைத் தொடர, எல்லா மேஜைகளும் தடதடக்கின்றன. அக்குலில் செருகிய பாடப்புத்தகங்களுடன், அவள் மேடை மேலேறி நின்று பார்க்க, அவளது வட்டக் கண்கள் வகுப்பறையைச் சுழன்றுவர, அக்கூட்டத்தின் தலைவன் கண்களில் சிக்கவில்லை. குழப்பத்துடன் அவள் தன் பாடப்புத்தகங்களைத் தரையில் வீசி, அழுதுகொண்டு வெளியேறுகிறாள். அனைவரும் பதட்டத்துடனிருக்க, திடுமென அங்கே அமைதி. எவரும் சத்தம் போடவில்லை.

நடைவழியிலிருந்த மருத்துவ கிளினிக்கின் கதவில் ஒரு சிகப்புநிறச் சிலுவை. அவள் ஜன்னலைச் சுட்டுகிறாள். அந்த இருண்ட சிறு அறையில் பிரயோசனமற்றவையும் சில வாத்தியக்கருவிகளும் குவிக்கப்பட்டுள்ளன. எல்லாமும் தூசு மண்டி. அந்த இடத்தில்தான், வீட்டுப்பாடத்தை ஒப்படைக்காத மாணவர்கள், பள்ளி முடிந்து, தண்டனை அனுபவிக்க தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது அவனுக்குத் தெரியும். அந்த ஜன்னலைக் கடக்கும் எவரும், கத்திக் காயங்களின் வடுக்களுடனும், மை கறைகளுடனும், பென்சில் கிறுக்கல்கடனும் இருக்கும் அந்தப் பரிதாபத்திற்குரிய மேஜையைக் காண முடியும்.

அவன் அந்த மேஜையை சிறிது நேரம் வெறித்து நிற்கிறான். அவன் பார்க்குமிடத்திலிருந்து, தெளிவாக எழுகிறது, ஒன்றின் மேல் ஒன்றாக, சிறுகத்தியால் செதுக்கப்பட்ட, பென்சில் சித்திரங்களாக, சிறிய மனிதர்கள், வளைவான வீடுகள், சில சீன எழுத்துக்களும். சில எழுத்துக்களில் மையிடப்பட்டுள்ளது. மை சுரண்டி எடுக்க இயலாத எழுத்துக்கள், மீண்டும் செதுக்கப்பட்டு, பென்சில் கூரால் நிரப்பப்பட்டுள்ளன. அவை கலைந்து கிடக்கும் சித்திரங்களானாலும், மாய உலகொன்றை கோத்துவிடுகின்றன.

நீர் சொட்டும் ஓசை. கடல்நீர் நிறைந்த நிலவறைக்குள் சொட்டுகிறது. மெத்தை மேலும் சொட்டி, துணிவிரிப்பின் மேலும் சொட்டி அதனை ஈரப்படுத்துகிறது. அந்த மைகருமை கடல்நீர் தொடர்ந்து உயருகிறது, ஓசையின்றி. அந்த மிதக்கும் மெத்தை ஒரு நீரூறிய சுவற்றில் மோதி, எம்பி திசை மாறுகிறது.

அடர் சிவந்த நிறமும், பெரிய குரல்வளையும் கரகரத்தக் குரலும் கொண்ட தலைமையாசிரியர், பள்ளியின் வரலாற்றை அவர்களுக்குக் கூறுகிறார். அவரது தணிந்த குரல், நீள மர இருக்கைகள் கொண்ட அந்த மண்டபத்துள், அதன் பெரிய அடிக்கூரையில் எதிரொலிக்கிறது. மணி ஒலிக்கத் தொடங்க, அந்த சிட்டுக்குருவிகள் மிரண்டு பறந்துபோகின்றன.

அந்த அடிக்கூரைக்குக் கீழே, சில தாவோயிஸ்ட் சாமியார்கள், நீள இளங்கருமை பருத்தியாடை அணிந்து, தலை முடியை மேலே முடிந்து கொண்டையிட்டும், தலைக் கவிழ்ந்தும், கைகளைத் தங்கள் முன்னால் பிணைத்தபடி, ஒரு பிணப்பெட்டியைச் சூழ்ந்து மந்திரங்கள் ஓதிக்கொண்டிருக்கிறார்கள்.

பிணப்பெட்டியின் மூடி திறந்திருக்க, தலைக்குத் துணி சுற்றப்பட்ட அந்தப் பிணம் தானேதான் என்பதாக அவன் அனுமானிக்கிறான். குழப்பத்துடன், எதைத் தேடுகிறோம் என்கிற தெளிவில்லாமலே, திரும்பி, சூழ நோக்குகிறான். அவனுக்குப் பின்னால் இரண்டு பெரிய கதவுகள் பாதி திறந்த நிலையிலிருப்பதைப் பார்க்கிறான். வெளியில், வெயிலில், கற்படிக்கட்டுக்களில், அதன் சாயம் உரிந்துவரும் ஒரு மரவாளி. மரவாளியின் முன்பு, கற்படிக்கட்டில் ஒரு பல்லி ஊர்ந்து செல்கிறது.

அவன் அந்த மண்டபத்தைவிட்டு வெளியேறுகிறான். ஒருவேளை அது முன்பு ஒரு கோயிலாக இருந்து பின்பு பள்ளி மண்டபமாக உருமாற்றப்பட்டிருக்கலாம். அல்லது அது உண்மையில் ஒரு கோயில் மண்டபம். கூரை மூடிய அந்த நடைபாதையின் நிழலில் நிற்கிறது, சில பகுதிகள் இல்லாமலான, ஒரு கற்தகடு. அது, மி டி’யின்,”வைல்ட் கிராஸ்” (wild-grass) எனும் சித்திரமொழி போலத் தோன்றுகிறது. ஆனால், அதிலுள்ள செதுக்கல், சராசரி மொழியில் இப்படி இருக்கிறது: “கிரேட் சொங் அரச பரம்பரைவழிவந்த யுவான்யூ ஆட்சியில், டிங்-மௌ ஆண்டில், மெங் சுன் என்பவரால் எழுதப்பட்டது.” பிற்காலத்தில், அந்தச் சித்திரமொழியின் பிரதானப் பகுதி மீண்டும் செதுக்கலுக்குட்பட, தற்போது அது முற்றிலும் மறைந்து முழுமையும் படிக்க முடியாமலாகிவிட்டிருக்கிறது.

அவன் அங்கிருந்து வெளியேறுகிறான். அரைக்கை பனியனும், அரைக்கால் சட்டையும் அணிந்த ஒரு சிறுவன், புத்தம் புதிய டிங்லன் வகை சிறுவர் சைக்கிளை ஓட்டி கடந்துச் செல்கிறான். அவன் அந்தச் சிறுவனிடம் ஏதோ கேட்கிறான். சிறுவன் சைக்கிளை நிறுத்தி, ஒரு காலை புல்லில் ஊன்றி நின்று, முன்னால் சுட்டிக்காட்டிவிட்டு, விரைந்து போகிறான்.

தொடர்ந்து நடந்து, கச்சிதமாக கத்தரித்து பராமரிக்கப்படும் ஒரு புல்வெளியைக் கடக்கிறான். புல்வெளியைக் கடக்க, களைக்கொடிகளிடையே ஒரு சைக்கிளின் பளபளக்கும் ஹாண்டில்பார். அதைக் காண நெருங்க, சாக்கடையில் கிடக்கிறது, களைக்கொடிகள் மூடி, டிங்லான் சைக்கிளின் ஒரு சட்டகம்.

அவன் விரைந்து அந்தக் குன்றில் ஏறுகிறான். ஓடத் தொடங்கி, வேகமாக மேலும் வேகமாக, மூச்சிரைக்க ஓடுகிறான். ஆனால், மனசுள், தான், தனது இளமைக்காலத்து சிறுவனைத் தொடர்வதாக உணர்கிறான். குன்றின் முகட்டில், அதிக உயரமில்லாத, சிறிய இலைகள் காற்றில் நடுங்கும் ஒரு புளிப்பு பேரிச்சம்பழ மரம் நிற்கிறது.

அந்தச் சிறுவன், குன்றின் மறுபக்கமிருந்து அவனை நோக்கி ஓடி வருகிறான். புளிச்ச பேரிச்சபழ மரத்தின் முன் வந்து நின்று, சுற்றுமுற்றும் குழப்பத்துடன் பார்த்த பிறகு, ஏதோ கண்டுவிட்டதுபோல், அவன் வேறெங்கோ ஓடுகிறான். மலைமுகட்டுக்கு அருகே ஒரு சிறு காடு. அங்கே, இரு மரங்களுக்கு இடையே ஒரு வெள்ளை மெத்தை விரிப்பு காய்ந்துகொண்டிருக்கிறது. அதன் பின்னால் ஏதோ அசைவதுபோலிருக்க, சிறுவன் பாய்ந்தோடி மெத்தை விரிப்பைமுட்டி மோதுகிறான். அது அவனைச் சுற்றிக்கொண்டுவிட, அதிலிருந்து விடுபட முடியாமலாகிறான்.

மலைக்காற்று அந்த மெத்தை விரிப்போடு விளையாடிக்கொண்டிருக்கிறது. மூச்சுத்திணற,பெரும் சிரமத்துடன் அந்தச் சிறுவன் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளியேற,மேலும் ஒரு மெத்தை விரிப்பு இரு மரங்களுக்கிடையே தொங்கி, காற்றில் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.

அந்தச் சிறுவன் அதைச் சிறிதுநேரம் உற்று நோக்கி, பின் அமைதியாக நடந்து அதை அடைகிறான். அந்த விரிப்பின் பின் பக்கம் ஒரு மனிதனின் உருவம் இருப்பதுபோல் தோன்றுகிறது. இந்த முறை, அந்தச் சிறுவன் விரிப்பின் ஒரு முனையைக் கவனமாகவும் மென்மையாகவும் தூக்குகிறான். அங்கே ஒன்றுமில்லை. ஆனால், அருகே இன்னொரு விரிப்பு இரு மரங்களுக்கிடையே தொங்குகிறது. சிறுவன், தனது பின்புறம் பார்க்கிறான்.

சூழ எங்கும், தூரமாயும், நெருங்கியும், விரிப்புக்கள் காற்றில் சுழல்கின்றன. ஒரு விரிப்பின்முன்பு நின்று, ஒரு பெண்ணின் கால்களைப் பார்க்கிறான். அவளது விறைத்த முலைக் காம்புகளைக் கொண்ட எழுந்தமையும் வெள்ளை மார்பை சோதிக்க மூச்சடங்கி முற்படுகிறான். பிறகு, விரிப்புக்களை சற்றே விலக்க, அந்தச் சிறுவன், வெள்ளைத் திரைச்சீலைகளுக்கு மத்தியில் கண்களில்பீதியுடன் நிற்பதை, முகத்துக்கு நேரே எதிர்கொள்கிறான். அங்கே ஓர் உரத்த அலறல், சுவொன (suona)வின் ஒலி. முகத்தைக் கைகளால் மூடிக்கொள்கிறான்.

வெள்ளைநிற ஜோடனைக் காகிதங்களால் மூடப்பட்டிருக்கும் பிணப்பெட்டியின் முன்பிருந்து தவழ்ந்து, அலறி ஓலமிட்டு ஓடுகிறான் சிறுவன். இந்த மௌன அழுகையை எதிரொலிக்கிறது, நீண்டு செல்லும் ‘சௌனாவின்’ அலறல். சிறுவனின் ஓசையும், சௌனாவின் ஓசையும் நின்றுவிட, திறந்திருக்கும் பிணப்பெட்டியைச் சூழ மீந்திருக்கிறது, வெள்ளைத் திரைச்சீலைகளும், ஜோடனைக் காகிதங்களும் மட்டுமே காற்றில் மிதந்தபடி.

அந்த இருண்மைக் கடல் தொடர்ந்து உயருகிறது. ஈர மெத்தையின் ஒரு பகுதியே நீரில் மிதக்கிறது. அவனது முகத்திலிருக்கும் கருப்புத் தொப்பி, அறையின் அடிக்கூரையை மேலும் மேலும் நெருங்கிச் செல்கிறது.

அவன், நீளமான ஜோடனைக் காகிதங்களால் மூடப்பட்ட, அந்தப் பிணப்பெட்டியிலிருந்து எம்பி வெளியே குதித்து, உடலைச் சுற்றிய பிண ஆடையை கூடவே இழுத்துக்கொண்டு, ஜோடனைக் காகிதங்கள் எங்கும் தொங்கும் இந்த மலைப்பகுதியை விட்டு தட்டுத்தடுமாறி தள்ளாடியபடி, பள்ளத்தாக்கிலுள்ள பச்சை ஏரிக்கு ஓடுகிறான். நீரில் குதித்து உள்ளே நீந்திச்செல்ல, களைக்கொடிகளுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறான். தூரத்தே, வட்டமாய் அலை சுழல்கிறது.அவன் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறானா, அல்லது ஏரியின் நடுப்பகுதிக்கு நீந்திச்சென்றுகொண்டிருக்கிறானா என்பதைச் சொல்வது கடினமாக உள்ளது.

நீரில் மூழ்கிக்கொண்டிருப்பவன் போல் திணறலோசையோடு கொப்பளித்துக்கொண்டும், அடைபட்ட நீருக்கடி பைப்பிலிருந்து வெளியேறும் குமிழ்கள் போன்ற குமிழ்களை உமிழ்ந்துகொண்டும், கடல் நீர் அடிக்கூரையை அடைகிறது.

அந்த நீர்ச் சுரங்கம் வளர்ந்து, இறுதியாக ஒளிவிடும் கடலலைகள் கொண்ட துறைமுகமொன்றில்வெளிப்படுகிறது. தூரத்தே, கடலும் வானமும் ஒரே நிறத்தில் இருக்கின்றன.

மிதக்கும் மென்கருமை பொருளொன்று அலைகளில் மேலும் கீழுமாய் தள்ளாடுகிறது. உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் நீர்ப்பெருக்கில் பார்க்க முடிகிறது, மூழ்கப்போகும் ஒரு மெத்தையில் அம்மணமாய் படுத்திருக்கும் ஒரு மனிதனை.

கடல், திடுமென நிமிர்ந்து நிற்கிறது. கடலலைகளின் மேல், கவிழப்போகும் நிலையிலிருக்கும் அந்த மெத்தையில், கழுத்தைச் சுற்றி ஒரு தோலாலான கழுத்துப் பட்டை மட்டும் அணிந்திருக்கும் ஒரு அம்மண மனிதன், தன் முகத்திலிருக்கும் கருப்புத் தொப்பியை ஒரு கையாலும், கருப்புக் கண்ணாடியை மறுகையாலும் அகற்றிக்கொண்டிருக்கிறான்.

எழுந்த அலைகள் சரிந்து விழும் ஒரு தருணத்தில், அவனது முகத்திலிருக்கும் அந்த இறந்த மீன் கண்களையும், உறைந்துவிட்ட புரிபடாத புன்னகையையும் பார்க்க முடிகிறது.

ஜன்னல் வழி பார்க்க, சூரியனை எதிர்கொண்டு, தூரத்தில், வெறிச்சோடிய அந்தக் கடற்கரையில், சாய்வுநாற்காலி ஒன்றில், முதுகை கடலுக்குக் காட்டியபடி, துண்டு போர்த்தி, ஒரு மனிதன் உட்கார்ந்திருப்பதுபோல் இருக்கிறது. ஒரு கையால், அவன் தன் முகத்திலிருக்கும் தொப்பியை அகற்றிவிட்டு, மறுகையால், மணலில் கிடக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்குகிறான்.

மூலம்: In an instant – GAO XINGJIAN (Winner of the nobel prize for literature)

2 comments for “ஒரு தருணத்தில்

  1. Kumar A
    March 3, 2019 at 8:04 pm

    தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. இப்போதுதான் தொடங்கியவர் போல விடாமல் செயல்படும் உங்கள் உத்வேகம் தொடரட்டும். சிறுகதை எனக்கு புரியவில்லை. நான் கட்டுரைகளை அதிகம் வாசிப்பது காரணமாக இருக்கலாம். மீண்டும் வாசிப்பேன்

  2. amilan
    March 5, 2019 at 10:28 pm

    Si.muthusamy sir. naan ungal vasagan aaki vidden. ungal sirukataikal vallinam wen site il padittu muditen. you are super. ungal moli peyarpukal ungal katai polave purinjikka siramamaga iruntalum moli sirapaka ullatu

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...