தையும் பொய்யும்

முன்னோட்டம்

தமிழ் அறிவுச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சைகளில் ஒன்று23-tamil-new-year300 தமிழ்ப்புத்தாண்டு தொடர்பானது.  சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சமூகம் வழங்கிய பழக்கத்துக்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும்  முயற்சியில்,  முடிவே இல்லாத வாதங்கள் தொடர்கின்றன. தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்ற உலக பரந்துரை மாநாடு 2001-ல் கோலாலம்பூரில்  சில அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அரசு 2008-ல் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், 2012-ல் அதிமுக அரசு அச்சட்டத்தை நீக்கி சித்திரையையே மீண்டும் தமிழ்ப்புத்தாண்டாக்கியது.  இந்த  அரசியல் விளையாட்டுகளுக்கு அப்பால், பொதுமக்களின் மனம் சித்திரையையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று செயல்படுவதைக் கண்கூடாகக் காணமுடிகின்றது. ஆகவே, இருதரப்பு வாதங்களில் எது சரியானது என்று முடிவுசெய்து சொல்லும் அதிகாரத்தை இக்கட்டுரையின் வழி கையில் எடுப்பது என் நோக்கம் அல்ல. ஆனால், தை முதல் நாளான பொங்கல் விழாவைத் தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் பல ஆண்டுகால முயற்சிக்கு ஆதரவு சேர்க்கும் பொருட்டு வலிந்து செய்யப்படும் வரலாற்றுப் பிழைகளையும் திரிபுகளையும் மட்டுமே சுட்ட விழைகிறேன். தரவுகளையும் ஆதாரங்களையும் சார்ந்து, தீர ஆராய்ந்தபின் கிடைக்கப்பெறும் இறுதி கண்டடைவுகளை ஒளிவு மறைவின்றி முன்வைப்பதே அறிவுத்தேடலின் அடிப்படை விதி. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.

குறுங்குழு பிரிவினைகள்

ட்சமகால தமிழர் பண்பாட்டு சூழலைக் கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் தெளிவாக தெரிவது அதன் அடிப்படை கூறுகளில் தொடர்ந்துகொண்டிருக்கும் சர்ச்சைகள்தான். கருத்தியல் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் தரப்புகளை வரித்துக்கொண்டு நிகழ்த்தப்படும் சர்ச்சைகள் தமிழர் வாழ்வியலில் பிரிவினைகளையும் குழப்பங்களையும் நிலையானவையாக்கி விட்டிருக்கின்றன. சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என எல்லா நிகழ்வுகளும் இருதரப்பு கருத்தாக்கங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு முனகிக் கொண்டிருக்கின்றன. வடக்கு×தெற்கு, தமிழர்×பிராமணர், திராவிடர்×ஆரியர், தமிழர்×வடுகர் எனக் கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்ச்சூழலில் தொடர்ந்து கொண்டிருக்கும் தரப்புகளின் போராட்டங்களால் சாமானியத் தமிழர் வாழ்வியலில் சந்தேகங்கள் குவிந்து கிடக்கின்றன.

தமிழை மீட்டெடுத்து அதன் பழைமை சிறப்புகளுடன் முன்னிறுத்தும் அடிப்படைப் போராட்டத்துடன் பல்வேறு அரசியல் மாற்றங்களும் சமூகவிரோத போக்குகளும் மக்களின் புரிதல்களுக்கு எதிராக இருந்ததால் அவை தொடர்ந்து சர்ச்சையாக நீடிக்கின்றன. பெரும்பாலும் சர்ச்சைகளை முன்னின்று நடத்திக் கொண்டிருப்போர் தமிழின் அறிவுச்சூழலோடு தங்களைப் பிணைத்துக் கொண்டிருப்போர்தான். சாமானிய மக்கள் எப்போதும் பார்வையாளர்கள்தான். அவர்கள் சரி பிழை என்ற முடிவுகளுக்குள் போவதில்லை. கடந்த காலங்களில் சமூகம் ஏற்றுக் கொண்டனவற்றை பின்பற்றுபவர்களாகவும் காலச்சூழலுக்கு ஏற்ப நிகழும் தன்னிச்சையான மாற்றங்கள் வாழ்வியலுடன் பொருந்தும்போது இணைத்துக்கொள்பவர்களாகவும் உள்ளனர். இவ்வாறு சமூகம் ஏற்றுக் கொண்டவை வழிவழி வந்தவையாக மட்டுமல்லாமல் அரசியல் அதிகாரம் ஒன்றை சட்டமாக்கி அதை தொடர்ந்து நிகழ வைப்பதின் வழியும் சமூகம் ஒரு மாற்றத்தை சுவீகரித்துக்கொள்வதை வரலாற்றில் காண முடிகிறது.

இதன் அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டு குறித்த விவாதங்களைக் கவனிக்கும் போது, தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் தரப்பு, சித்திரைப் புத்தாண்டு (சாலிவாகனன் ஆண்டு) ஆரிய கூறுகளைக் கொண்டது என்று கூறுகின்றது. ஆரியர் தமிழர் மீது செலுத்திய ஆதிக்கத்தின் நீட்சியே சித்திரைப் புத்தாண்டின் அடிப்படை என்பது அவர்கள் தரப்பு. இதற்கான சான்றுகளாக, ஆண்டுகளின் பெயர்கள், ஆண்டுகளின் தோற்றம் பற்றிய புராண கதை போன்றவற்றை முன் வைக்கின்றனர். ஆகவே வைதீக சார்பற்ற பொங்கல் விழாவைத் தமிழ்ப்புத்தாண்டாக முன்னெடுக்கும் முயற்சி திமுக அரசால் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை இந்துமதத் தாக்கம் அற்ற, தமிழர்களின் மரபு வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய விழா என்று தெளிந்த திராவிட அரசியல் கட்சிகள் பொங்கலை முதன்மைபடுத்தி பரப்புரைகள் செய்தன. திராவிட கட்சிகளின் கொள்கைகளுக்கு ஏற்ற கூறுகளைப் பொங்கல் கொண்டிருந்ததால் அப்பண்டிகையை அக்கட்சிகள் ஏற்றுக் கொண்டன. ஆனால், தொடக்க காலத்தில், பொங்கல் பண்டிகையைத் தனித்து சிறப்பிக்கும் ஆரம்பக்கட்ட முயற்சிகளை எடுத்தவர்கள் தமிழிய சிந்தனையாளர்கள்தான். மறைமலையடிகள், திரு.விக, தொ.பொ.மீனாட்சி சுந்தரம் போன்றவர்கள் பொங்கல் பண்டிகையைத் தனித்தமிழ் இயக்கத்தின் ஒரு பகுதியாகவே கருதினர். வடமொழி கலப்பற்ற தனித்தமிழ் பற்றிய சிந்தனையின் விரிவாக்கம் வடவர் பண்பாடுகளைத் தமிழர் வாழ்வியலில் இருந்து முற்றாக விலக்குவதை உச்சநோக்கமாக கொண்டிருந்தது. 1930களில், தமிழ் இசை, தமிழ்த் திருமணம், தமிழ்மறை என்று பல புதிய நெறிகள் முன்வைக்கப்பட்டன அல்லது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன.  இதன் உச்சமாக தமிழர் சமயம் என்ற புதிய சமயக் கோட்பாடு வரையப்பட்டுள்ளது.

அச்சூழலிலேயே தமிழர் பண்டிகை என்ற தனித்துவத்துடன் பொங்கலை முன்னெடுக்க முனைந்துள்ளனர். பொங்கலுக்கு வாழ்த்து சொல்லும் வழக்கத்தை தன் நவசக்தி இதழின் வழி பிரபலப்படுத்தியவர் திரு.வி.க. பிறகு ஈ.வெ.ரா முதற்கொண்டு பலரும் தங்கள் இதழ்களில் பொங்கள் வாழ்த்துகளை எழுதியுள்ளனர். ஒப்பீட்டளவில்  அன்றைய தமிழறிஞர்கள் தற்போதைய தமிழ் உணர்வாளர்களைவிட பல மடங்கு உத்வேகத்துடன் தமிழ் சார்ந்த பல புதிய முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. இன்று நாம் தமிழ் குறித்து பெருமிதம் கொள்ள, அன்று அவர்கள் கொண்ட செயலூக்கம்தான் காரணம். ஆயினும், தமிழை அடிப்படையாக கொண்டு தமிழ்ச் சான்றோர்கள் முன்னெடுத்த திட்டங்களில் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக மாற்றும் திட்டம் இருந்ததா என்பதே வரலாற்றுக்கு அவசியமான கேள்வியாகும்.

மறைமலையடிகளும் முதல் பொய்யும்

maraimalai_periyarஇன்று தைப்பொங்கலே தமிழ்ப்புத்தாண்டு என்ற கருத்தை தமிழ் உணர்வாளர்கள் எல்லாருமே வழிமொழிகின்றனர். இக்கருத்தை முன்னிறுத்தும் தரப்புகள் பரவலாக மறைமலையடிகளின் செயல்பாடுகளை தங்களின் வரலாற்று சான்றாக வைப்பதைக் காணமுடிகிறது. ‘1921-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் ஐநூறு தமிழறிஞர்களுடன் விவாதித்து மறைமலையடிகள் பொங்கல் பண்டிகையைத் தமிழ்ப்புத்தாண்டு என்று முன்மொழிந்தார். பிறகு 1935-ஆண்டில் நடந்த மாநாட்டில் மறைமலையடிகள், திரு.வி.க போன்ற பெரும் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு என்னும் முடிவை நிலைநிறுத்தினர்.’ என்ற தகவல்கள் ஒவ்வோர் ஆண்டும் தை மாதமும் சித்திரை மாதமும் சமூக ஊடகங்களில் உலவுவதைக் காணலாம். ‘தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் உலகப் பரந்துரை’ (2001) மாநாட்டு மலரின் பல பக்கங்களில் இத்தகவல் ஒரு வரலாற்றுச் சான்று போல் எடுத்தாளப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை ஆய்வுக்குரியது. போதுமான ஆதாரங்கள் இல்லாமலும் கிடைக்கின்ற சில ஆதாராங்களை திரித்தும் இத்தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

1921ஆண்டு மறைமலையடிகள் தமிழ் ஆண்டு தொடர்பான மாநாடு ஒன்றை கூட்டினார் என்பது இன்றுவரை நிரூபணம் அற்ற செவிவழிச் செய்தியாகவே பரவிக்கொண்டுள்ளது. அக்கால கட்டத்தில் ஐநூறு அறிஞர்களை திரட்டுவதில் இருக்கக்கூடிய நடைமுறை சிக்கல்களை சிந்தித்தால் கூட இது ஒரு கற்பனையான தகவல் என்று புரிந்துகொள்ளலாம். மேலும், அப்படி ஒரு மாநாடு நடந்ததற்கான உறுதியான பதிவுகளோ தரவுகளோ இல்லை. மறைமலையடிகள் உட்பட குறிப்பிடப்படும் மாநாட்டில் கலந்துகொண்ட பிற அறிஞர்களோ, எங்குமே அப்படியான தகவலை எழுதி வைக்கவில்லை.  இணையத்தில் கிடைக்கின்ற ஒரு சில பதிவுகளும், நூல்களில் காணப்படும் குறிப்புகளும் மறைமலையடிகள் 1921-ஆம் ஆண்டில் வள்ளுவரை முன்னிறுத்தி தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கும் புதிய முயற்சியைத்தான் காட்டுகின்றன.

மறைமலையடிகள் தமிழர் வாழ்வியல் வரலாறுகள் தொடர்பாக பல ஆய்வுகளைச் செய்தவர். அவர் தமிழர் வரலாற்றை நவீன முறையில் வகுத்து தெளிவான காலவரிசையில் சொல்ல இந்தியாவின் பாரம்பரிய ஆண்டு கணக்கிடல் முறை பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அவர் வரலாறுகளை நவீன ஆய்வுமுறையில் எழுதவும் ஆய்வுகள் செய்யவும் மேற்கு அறிவுலகம் பயன்படுத்தும் ஆய்வு முறைமைகளை அறிந்துள்ளார்.  அதே அணுகுமுறையில் தமிழ் தொடர்பான ஆய்வுகளையும் முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்திருக்கிறார். அவர் எழுதிய நாற்காட்டி குறிப்புகளில் தமது இருபத்தெட்டாம் வயதில் கரிகாற்சோழனின் காலத்தை துள்ளியமாக ஆய்ந்து கணக்கிட்ட தகவலைக் காணமுடிகின்றது. மகாபாரதப் போர் நடந்த காலத்தைக் கணக்கிட்டு ஆராய்ந்த தகவல் உள்ளது. ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூலையும் கால ஆய்வுகள் செய்து எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி 2 என்ற முடிவுக்கு வந்துள்ளார்.  ஆகவே, இது போன்ற ஆய்வுச்செயல்பாடுகளின் தொடர்ச்சியாக,  பல்வேறு ஆய்வுகளின் வழி திருவள்ளுவரின் பிறப்பு ஆண்டை அவர் கி.மு 31 என்று கணித்திருக்கிறார். அதாவது திருவள்ளுவரின் வயதை அறிய சமகால ஆங்கில ஆண்டுடன் 31-ஐச் சேர்க்கவேண்டும். இதையே அவர் திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிடுகிறார். 1921-ஆம் ஆண்டு மறைமலையடிகள் தமிழறிஞர்களுடன் கலந்துரையாடி அனைவருக்கும் விளக்கியது, வள்ளுவரின் பிறப்பு ஆண்டு குறித்த கணிப்பு மட்டும்தான். ஆனால் அது ஐநூறு பேர் கூடிய பொங்கல் புத்தாண்டு மாநாடு என்று பின்னர் திரிக்கப்பட்டது.

சுழல் முறையில் வருடங்களை அமைத்துக் கொள்வது பண்டைய அரசுகளின் வழக்கமாக இருந்துள்ளது.  இந்தியாவைப் போன்றே வேறு பல இன மக்களும் சுழல் முறையில் வருடங்களை அமைத்துக் கொண்டுள்ளனர். ஆசிய கண்ட, இந்து பெளத்த அரசுகள் பலவும் சுழல்முறை ஆண்டுகளைப் புலங்கியிருக்கின்றன. சீனர்கள் இன்றும் தங்களது பன்னிரெண்டு வருட சுழல் முறை ஆண்டைப் பண்பாட்டு அடையாளமாக கொண்டுள்ளனர். இந்திய துணைகண்டத்தின் பல்வேறு இனங்களும், மெசாபோத்தாமியா, சீனா போன்ற பழைமையான நாடுகளும் சுழல்முறை ஆண்டையே பின்பற்றின. அதிலும் அறுபது என்ற எண் முற்காலத்தில் கணிதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற எண் என்பது வரலாறு. அதன் எச்சமாக நாம் இன்றும் அறுபது விநாடிகளை ஒரு நிமிடமாகவும், அறுபது நிமிடங்களை ஒரு மணி நேரமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

ஆயினும் நவீன வரலாற்றாசிரியர்கள் காலங்களை குறிக்க பொதுவான தொடர் ஆண்டுகளைப் பயன்படுத்துவது வழமை. ஆகவே ஆங்கிலத்திலும் இஸ்லாமிய முறையிலும் குறிக்கப்படும் தொடர் ஆண்டுகளின் சாதகங்களை மறைமலையடிகள் நன்கு உணர்ந்துள்ளார். கிருஸ்துவர்கள் ஏசுவின் பிறப்பை தொடக்கமாக கொண்டு தங்கள் ஆண்டை தொடங்குகின்றனர். அறிவுலகமும் அவ்வாறான காலவரிசையையே ஏற்றுக்கொண்டுள்ளது. வரலாற்று சம்பவங்களை கிருஸ்துவுக்கு முன்(B.C) கிருஸ்துவுக்குப்  பின் (A.D) என பகுத்துக் கூற இலகுவாக இருப்பதை நாம் உணரலாம். இஸ்லாமியர்கள் நபிகள் நாயகமும் அவர்தம் சீடர்களும் மெக்காவில் இருந்து யத்ரிப்புக்கு (மதினாவுக்கு) பெயர்ந்து சென்ற சம்பவத்தை தங்கள் ஆண்டுக்கான தொடக்கமாக கொண்டு கணக்கிடுகின்றனர். இஸ்லாமிய பெருமிதம் உலகலாவ பரவியதன் குறியீடாக இந்த ஹிஜ்ரா தொடர் ஆண்டு முறை அமைந்துள்ளது. இரண்டாம் இஸ்லாமிய பெருந்தலைவரான சைடினா உமார் அல்கத்தாப் ஹிஜ்ரா ஆண்டு முறையை உருவாக்கினார். ஹிஜ்ரா ஆண்டு முறையானது ஆங்கில ஆண்டுக்கு 622 ஆண்டுகள் பிந்தியதாக அமைந்துள்ளது. அதாவது ஆங்கில ஆண்டில் இருந்து 622-ஆண்டுகளைக் கழிக்க வேண்டும். ஏசு கிருஸ்து பிறந்த 622 ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரா சம்பவம் நடந்ததாக நாம் வரிசைப்படுத்தி புரிந்து கொள்ளலாம். எனவே தமிழிலும் இதுபோன்ற ஒரு தொடர் ஆண்டு இருக்கவேண்டும் என்று மறைமலை போன்ற மொழி அறிஞர் சிந்தித்திருப்பதில் சந்தேகம் இல்லை.  அதன் அடிப்படையில் பொதுவான ஆளுமையை மையமாக நிறுவி தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மறைமலையடிகள் ஈடுபட்டுள்ளார்.

திருவள்ளுவர் ஆண்டு என்ற முறையை அக்கால அறிஞர் பெருமக்களுடன் கலந்தாய்ந்து சில முடிவுகளுக்கும் வந்துள்ளார். அதன் படி ஏசு கிருஸ்துவுக்கு, முப்பத்தோரு ஆண்டுக்கு முன் வள்ளுவரின் பிறப்பை வகுத்து அதுவே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்ற புதிய முறையை வகுத்துள்ளார். இதன் வாயிலாக வரலாற்று சம்பவங்களை வள்ளுவருக்கு முன் (வ.மு) வள்ளுவருக்குப் பின் (வ.பி) என்ற ஆண்டு வரிசையில் அமைத்துக் கூற முடியும்.

மறைமலையடிகள் திருவள்ளுவர் ஆண்டு என்ற புதிய தொடராண்டை அறிமுகம் செய்த போதும் தை மாதத்தை அதன் தொடக்கமாகவும் மார்கழியை அதன் இறுதியாகவும் நிறுத்தியதாக கூறப்படுவது ஆதாரமற்றது. திருவள்ளுவர் ஆண்டை ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகள் சேர்க்க வேண்டும் என்பது விதியாக உள்ளதால், அதை ஆங்கில ஆண்டு தொடக்கத்திலேயே செய்து கொள்ளலாம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அல்லது அக்கால கட்டத்தில் திருவள்ளுவர் பிறந்த தினமாக வழங்கப்பட்ட வைகாசி அனுட்டத்தில் இருந்து தொடங்குதல் ஏற்புடையதாக இருக்கும். அவ்வாறில்லாமல், தை முதல் நாளை திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாக வைத்தது மறைமலையடிகளுக்கு பின்வந்த சிலர் எடுத்த முடிவாக இருக்கலாம். முன்பே கூறியது போல் ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளை சேர்க்க வேண்டிய விதியின் படி ஆங்கில ஆண்டு தொடக்கமும் தைப்பொங்கல் தினமும் பதினாங்கு நாள் வேறுபாட்டில் இருப்பதால் இப்படியான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடும். ஆங்கில புத்தாண்டிலேயே தமிழ் தொடராண்டையும் தொடங்குவதை விட தமிழர்கள் நன்கு அறிந்த மரபான விழாவான பொங்களில் தொடங்குதல் எளிமையானதும் தனித்துவமிக்கதாகவும் அமைந்திருக்கும் என்னும் முடிவுக்கு அவர்கள் வந்திருக்கக்கூடும். எப்படியும், மறைமலையடிகள் முன்வைத்த திருவள்ளுவர் ஆண்டு என்பதை தை முதலாம் தேதி தொடங்கும் புத்தாண்டாக அவர் அமைக்கவில்லை என்பது தெளிவு.

திருவள்ளுவர் தினம் அல்லது வைகாசி அனுட்டம்  

கடந்த நூற்றாண்டில் வைகாசி அனுட்டம்தான் வள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டது. அதாவது வள்ளுவர் பிறந்த நாள் என்பது வைகாசி அனுட்டத்தில் வழங்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு வரை திருவள்ளுவர் பிறந்த நாள் அல்லது திருவள்ளுவர் தினம் என்பது வைகாசி அனுட்டமாகத்தான் இருந்துள்ளது. சி.என் அண்ணாதுரை தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த போது, வைகாசி அனுட்டத்திற்கு (திருவள்ளுவர் தினம்) பொதுவிடுமுறை கேட்டு கோரிக்கைகள் வைத்துள்ளார். வைகாசி அனுட்டம் என்பது ஆங்கில நாட்காட்டியில் மே அல்லது ஜூன் மாதங்களில் வரும் ஒரு தினமாகும். ஆகவே, மறைமலையடிகள் முன்வைத்த திருவள்ளுவர் ஆண்டு வைகாசி அனுட்டத்தில் இருந்து தொடங்குதல்தான் முறையானதாக இருந்திருக்கும் ஆனால் அப்படி செய்யப்படவில்லை. மு.கருணாநிதி ஆட்சியில் இருந்த காலத்தில் திருவள்ளுவர் தினம், வைகாசி அனுட்டத்தில் இருந்து தை இரண்டாம் நாளுக்கு மாற்றப்பட்டு தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டது.

1935-ஆண்டு ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ என்ற அமைப்பை நிறுவி சில தமிழ் அறிஞர்கள் மரபாக திருவள்ளுவர் பிறந்த தினமாக அனுசரிக்கப்பட வைகாசி அனுட்டத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து அதன்படி விழா எடுத்தனர். தொடர்ந்து சில ஆண்டுகள் நடைபெற்ற அவ்விழாவுக்கு மறைமலையடிகள் முதல்  ம.பொ.சி, ஈ.வெ.ரா, என அப்போதிருந்த பல தலைவர்களும்  ஆதரவு வழங்கியுள்ளனர். ஆனால் சில காலத்துக்குப் பிறகு அந்த விழா தொடரப்படாமல் இருந்தது. பிறகு 1952-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் கா. பொ. இரத்தினம் தன் சொந்த முயற்சியில் திருவள்ளுவர் தினத்தைக் உலகலாவிய தினமாக கொண்டாட முடிவு செய்து தமிழ்மறை கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கான திட்டங்களை வரைந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் இருந்த பல அறிஞர்கள், இதழாலாளர்கள் பலருக்கும் கடிதம் எழுதி வைகாசி அனுட்டத்தில் உலகலாவிய அளவில் திருவள்ளுவர் தினம் கொண்டாடும் திட்டம் பற்றி கருத்து கேட்டுள்ளார். அதற்கு குன்றக்குடி அடிகளார், ர.பி சேதுப்பிள்ளை, மு.வ, என பல அறிஞர்களும் கொடுத்திருக்கும் பதில் மிகத்தெளிவாக வள்ளுவர் தினம் என்பது வைகாசி அனுட்டம்தான் என்று குறிப்பிடுகிறது. மூன்று ஆண்டுகள் இவ்விழா உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரிலும் சிங்கையிலும் வைகாசி அனுட்டத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, கி.ஆ.பெ. விசுவநாதன், திருவள்ளுவர் தினத்தை வைகாசி அனுட்டத்தில் இருந்து மாற்றி தைத்திங்கள் இரண்டாம் நாளுக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். அவர் கூறிய அத்திட்டத்திற்கான காரணம் தெளிவாக அறியக் கிடைக்கவில்லை. ஆனால், அவரது கருத்துக்கு கா. பொ. இரத்தினமும் அவருடன் இருந்த பல தமிழ் அறிஞர்களும் கடுமையாக எதிர்வினையாற்றி மறுத்துள்ளனர். அதன் பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு 1971-ல் தமிழ் நாட்டு அரசால் அதிகாரப்பூர்வமாக தை இரண்டாம் நாளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மறைமலையடிகள் தனித்துவமான ஆண்டு வரிசை ஒன்றை அறிமுகப்படுத்த முனைந்ததும் அதை திருவள்ளுவரை மையமாக கொண்டு நிறுவியதும் தெளிவாகிறது என்றாலும், தைப்பொங்கலோடு அதை அவர் தொடர்புபடுத்தவில்லை. அவரின் நோக்கும் வரலாற்று ஆய்வுக்கு ஏற்ற ஒரு காலவரிசையைத் தமிழிய அடிப்படைகளுடன் அமைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்துள்ளது.

பொங்கல் பண்டிகையும் இரண்டாவது பொய்யும்

1935-ஆம் ஆண்டில் தமிழரிஞர்கள் ஒன்று கூடும் பல கருத்தரங்குகள் நடந்துள்ளதற்கான பதிவுகள் கிடைக்கின்றன. திருவள்ளுவர் தினம் தொடர்பான கூட்டங்களும் பொங்கல் விழா கூட்டங்களும் பல இடங்களில் நடந்துள்ளன. அவற்றில் திருச்சியில் நடந்த ‘அகில தமிழர் மாநாடு’ என்ற கூட்டமும் அடங்கும். இந்த அரங்கில் மறைமலையடிகள், திரு.வி.க போன்ற அறிஞர்களுடன் அப்போது சமூக மாற்றங்களை உரக்க பேசிக்கொண்டிருந்த ஈ.வெ.ராவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த மாநாட்டில் மறைந்த கவிஞர் கா.ப.சாமி தனது 19வது வயதில் கலந்து கொண்ட அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் விளக்கியிருக்கிறார். அதன்படி, அந்தக் கருத்தரங்கின் மைய நோக்கம் தைப்பொங்கல் சமயம் சார்ந்த பண்டிகையா? இல்லையா? என்பதை முடிவு செய்வதாக இருந்துள்ளது. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. அன்றைய தமிழர் பண்டிகைகள் அனைத்துமே இந்துப் பண்டிகைகளாகவே இருந்தன. பொதுவாக சமய மறுப்பையும், குறிப்பாக வைதீக மத எதிர்ப்பையும் முன்வைத்து இயங்கிய ஈ.வெ.ரா, தமிழர்கள் அக்காலத்தில் கொண்டாடிய எல்லா பண்டிகைகளையும் கடுமையாக விமர்சித்து மறுத்துவந்தார். தீபாவளி, கார்த்திகை என பல பண்டிகைகள் தமிழர்களுக்கு எதிரான அரசியலைக் கொண்டவை என்ற கருத்து வேகமாக பரவிக் கொண்டிருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகையை அப்படி ஒரேயடியாக மறுக்க முடியாத நிலை இருந்தது. தலைவர்களிடையே ஏற்பும் மறுப்பும் இருந்துள்ளது. பொங்கல் சமய சார்புகளுக்கு அப்பாற்பட்ட பண்டிகை என்னும் கருத்து தமிழறிஞர்களிடம் வலுவாக இருந்தது. அதே சமயம் தைப்பொங்கலை மகர சங்கராந்தி என்னும் வடநாட்டு விழாவோடு தொடர்புபடுத்தி வாதிட்டவர்களும் இருந்தனர். ஈ.வெ.ராவால் நிலையான முடிவுக்கு வரமுடியவில்லை.

ஆகவே திருச்சி மாநாட்டில் பொங்கல் பண்டிகையின் சமய நிலைபாடு குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதங்கள் நடந்துள்ளன. அதன் இறுதியில் மறைமலையடிகளும் திருவிகாவும் பொங்கல் பண்டிகை சமயம் சாராத பண்டிகை என்பதற்கான ஆதாரமாக, அதற்கு பிற பண்டிகைகள் போன்ற புராண கதைகளோ, புராணத்தில் இடமோ, சடங்குகளோ இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி தங்கள் தரப்பைத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஈ.வெ.ராவும் இக்கருத்தை ஏற்றுக் கொண்டு பொங்கல் சமய அடையாளங்கள் அற்ற தமிழர் பண்பாட்டு பண்டிகை என ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பிறகே திராவிட கழகம் பொங்கல்விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஆகவே 1935-ஆம் ஆண்டு கருத்தரங்கும் சித்திரைப் புத்தாண்டுக்கு மாற்றாக பொங்கலை நிறுத்தும் முயற்சிக்காக நடத்தப்பட்டது அல்ல. அப்படியான கருத்தே அங்கு முன்வைத்து பேசப்படவில்லை என்பதையே கா.ப.சாமியின் நேர்காணல் காட்டுகிறது. தைப்பொங்கல் சமய சார்பற்ற தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை என்பதை தமிழறிஞர்களும் திராவிட கருத்தியலாளர்களும் ஒருமுகமாக ஏற்கும் கருத்தரங்காகவே 1935-ஆம் ஆண்டு திருச்சி ஒன்றுகூடல் அமைந்துள்ளது.

மறைமலையடிகளின் நாட்குறிப்புகள்

maraimalaiadikal01

மறைமலையடிகள்

மறைமலையடிகள் தன் வாழ்நாளில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார். அவரின் மகன் வழி பேரன் பேரா.மறை.தி.தாயுமானவன் (மறை. திருநாவுக்கரசரின் மகன்) 2018-ல் மறைமலையடிகளின் நாட்குறிப்பின் உள்ளடக்கங்களைத் தொகுத்து ‘மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். ஆண்டுவாரியாக மறைமலையடிகளின் நாட்குறிப்பின் தேர்வுசெய்த உள்ளடக்கங்கள் அந்நூலில் உள்ளன. பல வரலாற்றுச் சம்பவங்களை அதில் இருந்து அறிய முடிகிறது.  ஆயினும் 1921ஆம் ஆண்டு கருத்தரங்கு பற்றிய தகவலோ, 1935-ஆம் ஆண்டு கருத்தரங்கு பற்றிய தகவலோ இடம்பெறாதது வியப்பாக உள்ளது. தமிழ் உணர்வாளர்கள் பலரும் சட்டென சுட்டும் மேற்கண்ட ஆண்டுகள் குறித்த தகவல்கள், அதிலும் மறைமலையடிகள் நேரடியாக பங்காற்றியுள்ளதாக கூறப்படும் கருத்தரங்குகள் பற்றிய தகவல்கள் நிச்சயம் அவரது நாட்குறிப்பில் விடுபட்டிருக்காது. ஆகவே அப்படியான மாநாடுகள் ஏதும் நடக்கவில்லை என்ற எளிய முடிவுக்கு நாம் வரலாம். அல்லது மாநாடுகள் நடைபெற்றிருந்தாலும், மறைமலையடிகளின் பேரன் தெரிந்தே இந்த தகவல் மறைப்பை செய்கிறார் என்றும் நாம் முடிவுசெய்யலாம். காரணம் குறிப்பிடப்படும் கருத்தரங்குகளில் பேசப்பட்டவை இன்று பகிரப்படும் தகவல்களில் இருந்து முற்றாக வேறானவையாக இருக்கக்கூடும்.  அல்லது திருவள்ளுவராண்டு குறித்த இன்றைய பொதுவான கண்ணோட்டத்திற்கும் புரிதலுக்கும் முரணான தகவல்களை மறைமலையடிகளின் நாட்குறிப்பு கொண்டிருக்கலாம். ஆகவே, அவரின் நாட்குறிப்பில் முக்கியத்துவம் பெறாத 1921, 1935ஆம் ஆண்டு மாநாடுகளை மீண்டும் மீண்டும் சொல்லி தமிழ்ப்புத்தாண்டை தைப்பொங்கலோடு பிணைப்பது வரலாற்று திரிபு என்பதில் சந்தேகம் இல்லை. (நான் இந்த விடுபடல்கள் தொடர்பான குழப்பங்கள் பற்றி நூல் பதிப்பகத்துக்கு மின்னஞ்சல் செய்து பல மாதங்கள் ஆகியும் பதில் வரவில்லை)

மலேசியாவில் தமிழ்ப்புத்தாண்டு

இரா.திருச்செல்வம்

மலேசிய தமிழியச் சிந்தனையாளர், இரா.திருச்செல்வம் ‘பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்’ என்ற நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில் திருவள்ளுவர் ஆண்டு பற்றிய வரலாற்று தகவல்கள் முழுமையாக இல்லை. திருவள்ளுவராண்டு உருவாக்கத்தில் மறைமலையடிகளின் பங்கு பற்றிய எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. மறைமலைகள் முன்வைத்த திருவள்ளுவர் ஆண்டோடு தைப்பொங்களை தொடர்புபடுத்துவதில் உள்ள முரணை உணர்ந்தவர் போல் அதுபற்றிய விளக்கங்களே இல்லாமல் நூல் எழுதியிருக்கிறார். தைப்பொங்கல், வானியல் அடிப்படையில் தமிழர் புத்தாண்டாக அமைய எவ்வகையில் ஏற்றது என்ற விளக்கங்களும் பொங்கலை புத்தாண்டாக ஏற்றுக் கொண்டாடும் வழிமுறைகள் பற்றிய சடங்கு முறைகளும் விரிவாக உள்ள நூலில் தமிழ்ப்புத்தாண்டு குறித்த அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை. பொங்கலை வானியல் அடிப்படையில் புத்தாண்டாக தகவமைக்கும் அதே வானியல் சான்றுகளை, சித்திரை புத்தாண்டுக்கும் வகுத்துக் கொள்ளமுடியும் என்பதால் நூலாசிரியர் இர. திருச்செல்வத்தின் நிலைபாடுகள் உணர்ச்சியின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட கருத்துகளாகவே உள்ளன.

2001 ஆண்டில் கோலாலம்பூரில் மலேசிய தமிழ்நெறிக் கழகம், மலேசிய திராவிடர் கழகம், மற்றும் மலேசிய பண்பாடு இயக்கம் ஆகிய அமைப்புகள் பிற அமைப்புகள் பலவற்றுடன் ஒன்று சேர்ந்து ‘தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் உலக பரந்துரை மாநாடு’ ஒன்றை கோலாலம்பூரில் நடத்தியுள்ளன. தைமுதல் நாளை தமிழர் புத்தாண்டாக உலக தமிழர்கள் அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும் என்பதை கோரும் அடிப்படை நோக்கத்தோடு நடத்தப்பட்ட மாநாட்டு மலரில், தைமுதல் நாளை புத்தாண்டாக முன்வைக்கூடிய வரலாற்று சான்றுகள் இடம்பெறவில்லை. புனைவுத்தன்மையோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் எழுதப்பட்டுள்ள பல பத்திகள், பதிவுகளினின் ஊடே ஈ.வெ.ராவின் கையெழுத்தில் எழுதப்பட்ட பொங்கல் வாழ்த்து மடலும் உள்ளது

1952ஆம் ஆண்டு ஈ.வெ.ரா எழுதிய பொங்கல் வாழ்த்து மடலில் பொங்கல் தமிழின ஒன்றுமைக்கான சிறந்த பண்டிகை என்ற விளக்கம் மட்டுமே உள்ளது மாறாக தைமுதல் நாளை  புத்தாண்டாக ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. க.பா.சாமி பொங்கல் சமயவிழா அல்ல என்பதை மட்டுமே தெளிவு படுத்துகிறார். ஆகவே மாநாட்டு நோக்கத்துக்கு கொஞ்சமும் வலுசேர்க்காத படைப்புகளுடன் இந்த மாநாட்டு மலர் படைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தைமுதல் நாளை மறைமலையடிகள் முதற்கொண்டு பல தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர் என்பது உண்மையானால், அதை வரலாற்றுச் சான்றுகளுடன் ஐயம்திரிபட விளக்கியிருக்க வேண்டிய களம் இந்த மாநாட்டு இதழ்தான். ஆனால் அப்படியான தெளிவுகளை இந்நூலில் காணமுடியாததால், மேற்கூறப்படும் ஆண்டுகளும் மாநாடுகளும் போலியான சோடனைகள் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

முடிவு

கடந்த இருபது ஆண்டுகளாக திராவிட அமைப்புகளும் தமிழிய அமைப்புகளும் பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதே சமயம் சித்திரைப் புத்தாண்டு தமிழர்க்கு விரோதமானது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. திராவிட அமைப்புகள் தங்களின் வைதீக எதிர்ப்பின் அடையாளமாகவும் இறைநீக்க, இறை மறுப்புவாதங்களின் அடையாளமாகவும் தைமுதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று வலியுறுத்துகின்றன. தமிழிய அமைப்புகள் ஆரிய எதிர்ப்பு வடமொழி எதிர்ப்பு போன்ற பின்னணிகளில் பொங்கல் தினத்தைத் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட வழியுறுத்துகின்றன. மலேசியாவிலும் பல தனிநபர்களும் மொழிசார்ந்த அமைப்புகளும் தைப்புத்தாண்டைத் தொடர்ந்து  ஆதரிக்கின்றன. ஆயினும் மொழி உணர்வு சார்ந்து மட்டுமே செயலாற்றாமல் வரலாற்றுத் தெளிவுடனும் செயல்படுவதே விவேகமாகும். .

மரபான தமிழர் வாழ்வில் தைப்பொங்கலும் சித்திரைப் புத்தாண்டும் தனித்தனி பண்டிகைகளாக நிலைகொண்டுவிட்டவை. அவை  வெவ்வேறு சடங்குகள், வரலாறு, தாத்பரியம் கொண்டவை. முன்னோர் பொங்கலை கொண்டாடிய அதே மகிழ்ச்சியோடு சித்திரைப் புத்தாண்டையும் கொண்டாடியுள்ளனர். அவர்களுக்கு அதில் எந்தக் குழப்பமும் இல்லை. தன் எழுபத்தைந்து ஆண்டு கால வாழ்கையில்,  பலநூறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ள மறைமலையடிகள் பொங்கலை தமிழ்ப்புத்தாண்டு என்று விளக்கும் நூல்களோ கட்டுரைகளோ எழுதவில்லை. அவர் காலத்தவரும் அவரோடு பழகியவருமான திரு.வி.க பொங்கலின் பண்பாட்டு முக்கியத்துவத்தை விளக்கும் குறிப்புகளை தனது நவசக்தி இதழில் எழுதினார். ஆனாலும் அவை பொங்கலை தமிழர் புத்தாண்டு என்ற புது விளக்கங்களைக் கொடுக்கவில்லை.

பொங்கலை முன்னெடுத்த தமிழறிஞர்கள் அதை தமிழர்களின் மரபான பண்பாட்டு பண்டிகையாகத்தான் முன்னெடுத்தனர். சித்திரைப் புத்தாண்டுக்கு மாற்றாக அல்ல. மேலும் அவர்கள் காலத்தில் சித்திரை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடினார்களோ இல்லையோ நிச்சயமாக பொங்கல் விழாவைத் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடியதில்லை.

தமிழ்ச் சமூகத்தை இந்து மத கட்டுகளில் இருந்து விலக்குவதில் முனைப்போடு செயல்பட்ட திராவிட கட்சிகள் பொங்கல் பண்டிகையில் இயல்பாக குறைந்து காணப்பட்ட வைதீக தாக்கத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தினர். 50ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மதமேலாண்மைக்கு எதிரான திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது மிக தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதே. ஆகவே தமிழ் அறிஞர்கள் தமிழினத்தின் பண்பாட்டு விழாவாக முன்னிறுத்திய பொங்கல் விழாவை தமிழ்ப்புத்தாண்டாக மாற்றியவர்கள் திராவிட அரசியல்வாதிகள்தான்.

இன்று அரசியல் காரணமாகவும் இனவாதம் காரணமாகவும் தமிழ்ப்புத்தாண்டை பொங்கலோடு இணைப்பது, சமூகத்தின் கூட்டு மனத்தின் குரலை நசுக்க முனைவதையே காட்டுகிறது. மரபை  வலுக்கட்டாயமாக நிராகரிப்பதும் புதுமையைத் திணிக்க முயல்வதும் சமூகத்தின் மேல் அதிகாரத் தரப்பு செலுத்தும் வன்முறைகளாகவே அமையும்.

மேற்கோள்கள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...