துளிர்க்கும் சிறகுகள்

09pic(விமர்சன போட்டியில் வென்ற கட்டுரை)

மனித வாழ்வின் பொழுதுபோக்கு தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே படைக்கப்படும் ஒரு கலைக்கு ஆயுள் குறைவு. அது ஒரு நுகர்பொருள் மட்டுமே. நுகர் பொருளாக இருப்பதாலேயே அது காலவோட்டத்தில் வணிகப்பொருளாகவும் மாறி விடுகிறது. அதே கலை மனித வாழ்வின் சமத்துவம் சார்ந்த தேவைகளைப் பேசும் குரலாக மாறும்போது அது மக்களுக்குரிய கலையாக தன்னை அடையாளப்படுத்துகிறது. அவ்வாறு வெளிபடும் கலை சமூகத்தின் சமநிலையைக் குழைக்கக் கூடியது. எனவே அது பல சமயங்களில் ஆயுதமாகின்றது.

‘ஊதா நிற தேவதைகள்’ கட்டுரைத் தொகுப்பில் சரவண தீர்த்தா எழுதி இருப்பதும் அப்படியான கலைகள் குறித்துதான். மக்களுக்காகப் படைக்கப்பட்ட திரைப்படங்களை மீண்டும் மக்களுக்காவே அவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்திருக்கும் திரைப்படங்கள் பெண்ணியம் சார்ந்த அரசியலைப் பேசுபவை. வெவ்வேறு நிலப்பரப்புகளில், வெவ்வேறு மதக்கட்டுப்பாடுகளுக்கிடையில், வெவ்வேறு நெறிகளின் அடிப்படையில்  வாழக்கூடிய பெண்கள் எதிர்நோக்கும் வெவ்வேறு நிலையிலான சிக்கல்களைக் காட்டுகின்ற திரைப்படங்களின் திரட்டு இந்தத் தொகுப்பு.

சமுதாய இரைச்சலுக்கு மத்தியில் தோய்ந்துபோன திரைப்படத்துக்குரிய கண்ணீரை, வலிகளை  ஆழமாகத் தெளிவுபடுத்தும் இந்தக் கட்டுரைகள் போற்றுதற்குரியது.

இந்தியா, ஈரான், பிரித்தன், துருக்கி, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சவுதி என உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில் மூழ்கிக்கிடக்கும் பெண்ணியத்தின் குரலை ஓர் எழுத்தாளனின் பார்வை கொண்டு இந்நூலின் வழி அறிய முடிந்தது. பரவலான நிலப்பரப்புகளில் வாழும் இந்து, இஸ்லாம், கிருஸ்த்துவமென மூன்று மதங்களின் அடிப்படையில் இத்தொகுப்பிலிருக்கும் கட்டுரைகளை வகைப்படுத்த முடிந்தது. ஆனால், சிக்கலுக்குரிய ஆதியாகவும் அந்தமாகவும் அவர்கள் நம்பும் மதத்தையும், வேதத்தையும் தவிர வேரெதையும் கொண்டு வகைப்படுத்த முடியவில்லை. இந்தத் தொகுப்பிலிருக்கக்கூடிய எல்லா கட்டுரைகளையும்  பிணைத்திருக்கும் ஒற்றுமை இது.

தொகுப்பின் முதல் கட்டுரையான ‘வாட்டர்’ திரைப்படம் என்னதான் என்னுடைய சமூகம் சார்ந்த அல்லது நான் ஏற்கனவே கேட்டறிந்த ஒரு தகவலைப் பதிவு செய்திருந்தாலும், அதில் சூயா என்ற சிறுமி தனது வண்ணமயமான குழந்தைப் பருவத்தை விதவைகள் வாழும் ஆசிரமத்தில் கழிக்கின்ற தருணங்களின் கொடுமை என்னுள் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தவே செய்தது. சிறுமியான அவளின் வருகை அந்த ஆசிரமத்தில் எப்படியான மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பதையும் சரவண தீர்த்தா வாசகர்களின் புரிதலுக்கு வைத்துள்ளார். வெள்ளைச் சேலைகளுக்குள் வண்ணக் கனவுகளை மூடி மறைக்க ஒரு சமுதாயத்தின் மதம் சார்ந்தக் கட்டுப்பாடு, பெண்களை எப்படி எல்லாம் அடிமைத்தனத்துக்குத் தயார்படுத்துகிறது என்ற புரிதலைத் தந்துள்ளது இந்தக் கட்டுரை. ஆனால், கட்டுப்பாடுகளை நிலைநாட்ட நினைக்கும் அதே சமூகம்தான் தன் சுயதேவைகளுக்காக  விதவை ஒருத்தியை அதே பண்பாடுகளைக் கடக்கவும் அனுமதிக்கிறது. இங்கு இவர்கள் மதக்கட்டுப்பாடுகளென்று சொல்லும் எதுவுமே அர்த்தமில்லாததாகக் காட்டப்பட்டுள்ளது.

அது நாள் வரை தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த மதக் கோட்பாடுகளை சகுந்தலை என்ற ஒரு விதவை உடைத்துக் கொண்டே வெளியே வருவதை சரவண தீர்த்தா சொல்லி இருக்கிறார். ஆனால், ஒரு வாசகியாக என்னால் அந்த தருணத்தை அவளுக்கான விடுதலையாகப் பார்க்க முடியவில்லை. அது அவளுக்கான புதிய சிறைக்கம்பிகள் என்ற சிந்தனையை மட்டுமே என்னுள் உந்துகிறது. காலம் கடந்த எதிர்ப்பார்ப்பென்ற உணர்தலுக்குப் பின் அவளது முக வாட்டம் அதை உணர்த்திச் செல்கிறது.

ஆனால் அவள் சூயாவை மீட்டெடுக்கும் தேவதையாகக் காட்டப்பட்டிருக்கிறாள். விதவைகள். காதலுக்கு அந்நியமானவர்கள் அல்ல என்ற ஒற்றை வரிதான்  ஒட்டுமொத்த திரைப்படத்திற்கான ஆன்மா என நான் நம்புகிறேன். காட்சிகளின் மீதான ஆழ்ந்த ஊடுருவலில் விளைந்த உரை அது. எங்கு, எப்படி யாரால், கட்டுப்படுத்தப்பட்டாலும் பெண்கள் எப்போது பெண்கள்தான் என்பதை உறுதிப்படுத்தும் வரிகள் அவை.

இந்தத் திரைப்படம் சூயாவை முதன்மை பாத்திரமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும், துணைப்பாத்திரமாக  வந்துபோகும் ஒவ்வொரு பெண்களுக்குரிய வலிகளையும் கட்டுரை முதன்மையாகவே அடையாளம் காட்டுகிறது. அது ஒரு வலிகளின்  மீதான ஒரு பார்வையாளளின் சிந்தனை ஊடுருவலைக் காட்டுகிறது. இந்திய சமூகத்தைப் போர்த்தி இருக்கும் பண்பாட்டுப் போர்வைக்குப் பின்னால் நடக்கும் அவலங்களையும் அதற்குண்டான காரணிகளையும் அடையாளம் காட்டும் இந்தக் கட்டுரைகளில் அரசியல் பொதிந்துள்ளது.

அதீத நாகரீக வளர்ச்சி அடைந்த நாடாகவும், மதம் பண்பாடு, கலாச்சாரம் என்ற அடிப்படையில் அதிகம் கட்டுப்படாத நாடுகளாகவும் இதுவரை நான் அறிந்து வைத்திருந்தது   மேற்கத்திய நாடுகளைதான். ஆனால் அங்கும் பெண்கள் அடக்கப்படுகிறார்கள், நிராகரிக்கப்படுகிறார்கள், அழுகிறார்கள் என்பதை எல்லாம் இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் அறியமுடிந்தது.  அந்த அநீதியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒவ்வொரு பெண்களும் கையாளும் உத்திகளும் அல்லது தன்னளவில் தேடிக்கொள்ளும் வடிகால் மிக மாறுபட்டது. அதில் சில நாம் நம்பக்கூடிய பண்பாட்டுக்கு முரணானதாகவும் இருக்கிறது. இயற்கையின் விதி மீறல் என்றும் சொல்லலாம். ஆனால், அடிமைத்தனத்தின் அடி ஆழத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள அவர்களுக்கு எட்டுகின்ற ஒரு சின்ன கயிறு அது மட்டும்தான் எனும்படியான புரிதலையும் தந்துள்ளார் சரவண தீர்த்தா. அந்த வகையில் நான் முதன்மைப்படுத்த முடிந்தது ‘ஆண்கள் அழ வேண்டாமென்ற’ கட்டுரையைதான். தன்னை ஆணாக ஏற்றுக் கொண்ட ஒரு இளம் பெண், தன்னை ஒரு ஆணாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழத்தொடங்குகிறாள். அவள் தன்னை முழு நிலையில் ஆணாகவே மாற்ற நினைத்ததன் உச்சநிலையை உறுதிப்படுத்துவதான் லான என்ற பெண்ணின் மீது ஏற்படும் காதல். இந்தத் திரைப்படம் ஒரு நிஜக்கதை என்பதை எழுத்தாளர் கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லி இருக்கிறார். அது வாசிப்பின் போது சில இடங்களில்  அதிர்ச்சியை ஏற்படுத்தவே செய்தது. ஒரு பெண் ஆணாக மாற நினைப்பதும், அந்த நினைப்பின் வெளிபாடும், அதன் விளைவுகளும் என்ற அடிப்படையில் செல்லும் இந்தக் கட்டுரை அவள் ஆணல்ல பெண்தான் என தெரிந்த பின்பும் அவளை விரும்பும் லானா என்ற பெண்ணின் மூலமாக எனக்குள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவளது ஷ்பரிசத்தை நோக்கி அவள் மீண்டும் செல்வது முற்றிலும் மாறுபட்ட சிந்தனை. ஆனால், அவள் அதை விரும்புவதற்குப் பின்னால் ஓர் ஆணிடம் ஒரு பெண்ணிற்குண்டான தேவை என்னவென்பதை அறியமுடிந்தது. அந்தத் தேவை ஒரு பெண்னிடமிருந்தே கிடைக்கும்போது லான என்ற பெண் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராகிறாள்.  தீனா பிராண்டனும் தன்னை ஆணாக மாற்றிக் கொள்வதற்கான அவசியத்தையும் இந்தக் கட்டுரையில் என்னால் அலசி அறிய முடிந்தது. அவளது சமுதாயம்தான் அவளை அவனாக மாற உந்தி இருக்கக்கூடுமென அனுமானிக்க முடிந்தது. ‘ஆண்கள் அழ’ வேண்டாம் என்ற இந்தத் தலைப்புக்குண்டான அர்த்தத்தில் மறைந்து கிடக்கிறது அதற்கான அவசியம். அப்படி ஒரு நீதியின்மையின் தாக்கம்தான் தீனா பிராண்டனின் தேடல் என்னவென்பதை எனக்கு இன்னும் ஆழமாக சொல்லியது.

‘ஆரஞ்சு மட்டுமே பழமல்ல’ என்ற படக்காட்சிகளுக்கான கட்டுரையும் பெண்களின் பல விதங்களை காட்டுகின்றது. அப்படியான பல விதங்களின் தேடலென்பது இன்று நாம் வரையறுத்துச் சொல்லும் ஒற்றைப் பண்பாட்டுச் சிந்தனைக்குள் அடைத்துவிட முடியாது என்பதைப் பகரும் கட்டுரை இது. நான் என்ற தன்னிலையிலிருந்து பார்த்தபோது அது உண்மையில்  எனக்குள் பண்பாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தவே செய்தது. ஓரின சேர்க்கை என்பதை இயற்கைக்கு புறம்பானது என்ற அறிதல் எனக்குள் கடவுள் தந்ததல்ல. அது என்னைப் போல ஒரு மனிதனால் அவனது கருத்துப் பரிமாற்றத்தின் போது என்னை வந்து சேர்ந்திருக்கக்கூடும். ஆனால், மனிதன் இயற்கை என்றால் அவனுக்குள் எழும் எல்லா இச்சைகளும் இயற்கைக்கு உட்பட்டதே என்ற எண்ணத்தை இந்தக் கட்டுரை என்னில் வலுவாக ஏற்படுத்துகிறது. சரி தவறென்ற விவாதத்திற்குள் இயற்கை எப்போதும் தன்னை நுழைய விடுவதில்லை. அது சரிகளையும் தவறுகளையும் கடந்து நம்மை ஆட்கொள்வது. அப்படியான ஒரு சிந்தனை மாற்றத்தை, இரசனை மாற்றத்தையுடைய ஒரு பெண் அவள் சமூகத்தில் ஒதுக்கப்படுவதற்கும் அவளதும் மதம் சார்ந்த நம்பிக்கைகளே காரணமாகிறது. இங்கும் ஒரு பெண்ணின் சுதந்திரங்களை அபகரித்துக் கொள்ளும் முதல் குற்றவாலியாகக் காட்டப்படுவது அவளது மதம் சார்ந்த நம்பிக்கைகளே.

மேற்கத்திய நாடுகள் சார்ந்த கட்டுரைகளில் உண்மையில் ஒரு வாசகியாக என்னைக் கவர்ந்தது ‘ஊதா நிற தேவதைகள்’ என்ற கட்டுரைதான். அதில் வரக்கூடிய சீலி என்ற கருப்பினப் பெண் தன் எல்லா பண்புகளாலும் எனக்குள் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாகிறாள். ஒரு தமிழ் பெண்ணுக்குரிய பண்புகளை என்னால் அவளிடம் பார்க்க முடிந்தது. தன்னோடு உடலுறவு வைத்துக் கொள்ளும் தந்தையையும் அவளால் அன்பின் பேரில் மன்னிக்க முடிகிறது. சிரிக்காதே அசிங்கமாக இருக்கிறது என்று சொல்லும் தன் தந்தையை அவளால் மேலும் அனுசரிக்க முடிகிறது. அந்த உடலுறவில் உருவான குழந்தைகளைப் பேரம் பேசும் போது சீலி அவனுக்கு குழந்தைகளைப் பெற்றுத் தரும் கருவியாவதை அறியமுடிந்தது. அதே அவள் அவன் உண்மையில் தன் தந்தை இல்லை என்பதை அறியும்போது அவள் பெற்றெடுத்த அந்தக் குழந்தைகள் தன் சகோதரர்கள் அல்ல என நம்பி ஆறுதலடைகிறாள். திருமணத்திற்குப் பின்னரான வாழ்க்கையும் அவளுக்கு ஊனமானதாகவே இருக்கிறது. அவள் தன் கணவனின் தினசரிகளை பூர்த்தி செய்யும் ஓர் அடிமை. அதைத் தவிற அந்த வீட்டில் அவளுக்கான இடமென்று எதுவுமில்லை. கணவனின் பிள்ளைகளுக்கு எல்லா வேலைகளையும் பொறுமையாகவே செய்யும் அவள், ஒரு மேற்கத்திய நாட்டுப் பெண்ணிற்கென எனக்குள் நான் ஏற்கனவே  உருவாக்கி வைத்திருந்த முந்தைய பிம்பங்களை முந்திக்கொண்டு  வேறொரு பிம்பத்தை நிரப்புகிறாள். அப்படி அவள் தன் பிம்பத்தை எனக்குள் உருவாக்கித் தர உந்தியது, காட்சிகளை எழுத்தாக்கிய கலையின் வெற்றியாகும்.  அவள் கடவுளுக்கு எழுதும் கடிதங்களில்தான் என்னை அதிகம் கவர்கிறாள். அந்தக் கடிதங்களுக்கான பதில் கடிதங்களாகவே என்னால் ஷகியையும், சோயியாவையும், நித்தியையும் பார்க்கமுடிகிறது. சீலியை அந்த அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்பதில் இந்த மூன்று பெண்களுக்கான பங்கு பெரியது. அவர்கள் தேவதைகளுக்கு ஈடானவர்களென சரவண தீர்த்தா அடையாளம் காட்டுகிறார். ”ஒரே உலகில் வெவ்வேறு காலங்கள் படிந்திருப்பதை உணரமுடிகிறது” என்ற வரியை  வாசிப்பில் சில கனங்களுக்குப் பிரிய மனமில்லை. இது வெவ்வேறு நிலையிலான பெண்களுக்குரிய வேறுபாட்டை மிக அழகாக சொல்லுகிறது.

இஸ்லாமிய நாட்டுப் பெண்களின் துயருக்கான தேடலோடு கட்டுரைகளைப் புரட்டும்போது முற்றிலும் மாறுபட்ட அநீதிகளை அடையாளம் காணமுடிகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வாழ்வியல் கூறுகளுடனும், நெறிகளுடனும் வாழக்கூடிய இஸ்லாமிய நாட்டுப் பெண்களுக்கு கண்கள் சொந்தமில்லை. அது கண்ணீருக்காகவே படைக்கப்பட்ட ஓர் உறுப்பு. இப்படி என்னைக் கூற உந்தி இருப்பது சரவண தீர்த்தா அவர்கள் கட்டுரைகளில் என்னால் பார்க்க முடிந்த காட்சிகளே. வீடுகள் கடக்க முடியாத பெண்கள், கல்வி கற்க தடை, வீதிக்குச் செல்ல அனுமதி இல்லை, மருத்துவ சேவையில் தடை இப்படி பெண் எல்லா நிலைகளிலும் நிராகரிக்கப்படுவதை கட்டுரைகளில் அறியமுடிந்தது. சுறுங்கக் கூறுவதெனில் அங்கு அவள் என்பவள் வெறும் அவள்தான். அதைத் தாண்டி அவள் தன்னை முன்னெடுக்க முடியாத பல தடுப்புச் சுவர்களை அவள் நம்பும் மதம் கட்டி வைத்திருக்கிறது. இதற்கு உதாரணப்படுத்தக்கூடியதுதான் விளிம்பு நிலை சமுதாயத்தைக் காட்டும் பசியும் பசிக்காத கடவுளும் என்ற கட்டுரை.  இது ஒரு ஆப்கானியச் சினிமாவைப் பேசும் கட்டுரை. மதத்தின் பேரைச் சொல்லி சொல்லியே பெண்களைப் புறக்கணித்த ஒரு தலிபான் அரசாங்கத்தைச் சாடுகின்ற குரல் இந்தக் கட்டுரை. நாட்டை காக்க வேண்டிய  அரசாங்கம் பெண்களுக்கும் பசிக்கும் என்ற மிக அடிப்படையான ஒரு வாழ்வியல் கூறை அலட்சியப் படுத்துகிறது. அங்கு பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை. போரில் கணவனை இழந்து தனித்து வாழும் பெண்களுக்கான பசியைக் கட்டுரை ஒரு அடிமட்ட அநீதியின் குரலாக முன்வைக்கிறது. அந்தப் பசிப் பிணியிலிருந்து ஆண்களே இல்லாத தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு விதவைத் தாய் என்ன செய்கிறாள்? தன் 12 வயது மகளின் தோற்றத்தை ஆணாக மாற்றி வேலைக்கு அனுப்புகிறாள். தன்னைப் பெண்ணாக உணரக்கூடிய முதல் பருவத்துக்குண்டான அந்தத் தொடக்க வயதில் சட்டென ஆண் வேடத்துக்குத் தன்னை மாற்றிக் கொண்ட அந்தப் பெண்ணின் தொலைந்து போன  ஒரு சராசரி வாழ்க்கைக்கு அந்த அரசாங்கமும், அவள் நம்பும் கடவுளும் என்ன பதிலைச் சொல்லிவிட முடியும். இந்தக் கேள்விகள் அவளின் துயரை உணர்த்திய ஒவ்வொரு வரிகளும் என்னுள் எழுப்பின. இறுதியில் அவளை பெண் என்று அடையாளம் கண்டு கொண்ட ஒரு 80 வயது சமயவாதி அவளை தண்டனையிலிருந்து காப்பாற்றி தன் நான்காவது மனைவியாக்கி, அவளோடு உறவு கொள்ள தயாராகிறார். ஒரு சமயாவதியின் தர்மமென இது என அடையாளம் காணமுடிகிறது. வாட்டர் திரைப்படத்தில் சூயாவுக்குக் கிடைத்த சகுந்தலைப் போலவும், ஊதா நிர தேவதைகளில் சீலிக்குக் கிடைத்த மூன்று பெண்களைப் போலவும் இந்த 12 வயது சிறுமியை மீட்க யாரும் வரவில்லை. அப்படி வரமுடியாமல் தலிபான் அரசாங்கத்தின் மதச் சுவர்கள் தடுத்திருக்கலாமென அனுமானிக்கக் கட்டுரை வாய்ப்பளித்துள்ளது.

“நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் கடவுளும், உங்களால் வஞ்சிக்கப்படுவர்கள் நம்பும் கடவுளும் ஒன்றா” என்ற சரவண தீர்த்தா அவர்களின் இந்தக் கேள்வி மனதில் வலுவாக ஒட்டிக்கொண்ட ஒரு கேள்வி. தன் மதம் சார்ந்த பெண்ணை தண்டிப்பதையே உரிமை மீறலென அடையாளப்படுத்தும்போது தன் மதம் சாராத, தன் இனம் சாராத வேற்றின பெண்ணின் செயலை இவர்களின் மதம் சொல்லும் அறத்துக்குள் நிறுத்தி தண்டனைக் கொடுக்கும் உரிமைகளை இவர்களுக்கு யார் கொடுத்தது? மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிய ஒரு வெள்ளைக்காரப் பெண்னைக் கைது செய்து கல்லெறிந்து கொள்ளும் தண்டனை நிறைவேற்றப்பட்டபோது இந்தக் கேள்வி மனதில் இன்னும் வலிகளுடன் வலுத்தது.

கோட்பாடுகளும் கௌரவக் கொலைகளும் என்ற கட்டுரையில் மதம் மனித அறம் வளர்க்கிறது என்பதே பொய்த்துப் போனதை. கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த தன் மகளைத் தன் தங்கையைக் கொல்ல முடிவெடுக்க ஒரு தகப்பனாலும் அண்ணனாலும் முடியுமெனவும், அதற்கு உந்துவது மதக் கோட்பாடுகள்தான் எனும்போதும் சட்டவிரோதியாகிறது மதம். சாய்ர என்ற தன் மகள் காதலிப்பதை மகுற்றமாக பார்க்க முடிந்த அவர்களுக்கு கொலை என்பதை குற்றமென அறிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனை இயக்கிக் கொண்டிருப்பது அன்புதான் என்பதை ஆணித்தரமாக நான் நம்புகிறேன். அந்த அன்பை வெல்லக் கூடிய ஆயுதத்தை கோட்பாடுகளின் கைகளில் கொடுத்துவிட்டு நமக்கான வான்பரப்பை நாமே சுருக்கிக் கொண்டோம் என்ற வலிமிக்க உணர்தலை கட்டுரை தருகிறது. இந்தப் படம் பெண்ணியம் பற்றி பேசியருக்கலாம். ஆனால்  அதற்குள் மலிந்து கொண்டே இருக்கும் மனிதத்தையும் சேர்த்தே சரவண தீர்த்தா சொல்லி இருக்கிறார்.

“அடர்ந்து கிடக்கும் காடுகளைப் போல் மனிதனின் மனங்களுக்குள் அடர்ந்து கிடக்கும் ஆசைகளும் கனவுகளும் மதக்கோடுகளால், எல்லைப்படுத்தப்படும்போது அதனால் எழும்பும் எதிர்வினைகள் மதக் குற்றங்களாக விசாரணைக்குள் கைதாகிறது” இந்தத் தொகுப்பில் என்னை மிகக் கவர்ந்த வரிகள் இவை. ‘தி சர்க்கில்’ என்ற ஈரானிய சினிமாவைப் பேசும் கட்டுரைக்குரிய வரிகள் இது. இது எனக்குள்ளும் அடிக்கடி வந்து போகும் சிந்தனைதான். ஆனால் ஒரு சின்ன மாற்றம். மதக் கோட்பாடுகள் என்பது ஒரு சேலையாகவோ ஒரு பர்தாவாகவோ அவலங்களை மூடி மறைக்கும் முக மூடியாகவே மையப்படுத்தப்படுகிறது.  அவலங்களும் அசிங்கங்களும் அதற்குள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. அப்போதும் சரி இப்போதும் சரி பண்பாட்டு முரண்களைக் கட்டுப்படுத்த உதவாத மதம்  பெண்களை மட்டும் குற்றவாளியாக்குவதில் தீவிரம் காட்டுகிறது. இங்கு விசாரனையின்றியே  கைதாவது மதம்தானே. எனவே, மதம் சில சமயம் நம்மைக் கட்டுப்படுத்த அவசியம்தான் என்றாலும், அது தன் எல்லைகளைக் கடந்து தனி மனித உரிமைக்குள்ளும் அதன் கனவுகளுக்குள்ளும் கல்லெறிய நினைக்கும்போதுதான் எதிர்வினைகள் தீவிரமாகின்றன.

இந்தத் தொகுப்பு ஒரு கழுகின் பார்வைக் கொண்டு எழுதப்பட்ட தொகுப்பு. வான் உச்சத்தில் நின்றுகொண்டு வீட்டுக் கூரைகளுக்குள் தன் பார்வையை ஊடுருவி வீட்டு பெண்களை அவர்களின் கண்ணீரோடு அறிமுகப்படுத்திய இந்த முயற்சி பெண்ணியம் சார்ந்த வரலாற்றுப் பதிவு என்றும் வகைப்படுத்தலாம்.

சமையலறைக்குள் கைதான பல பண்டிகை காலங்களின் போதும், அண்ணனைப் போலவும், தம்பியைப் போலவும் தோழிகளோடும் வெளியே செல்ல அனுமதி கிடைக்காத  பல நீராகரிப்புகளின் போது நான் பெண்மையைக் கடிந்ததுண்டு. எனக்கான அந்த நிராகரிப்புகளைத் தூர தூக்கி எரிந்துவிட்டு கண்ணீரோடு நடந்து போகின்றனர் இந்தத் திரைப்படங்களுக்கான பெண்கள் ஒவ்வொருவரும். 21-ஆம் நூற்றாண்டுக்குரிய சமுதாயம் பெண்ணுக்கு அவசியப்படும் அளவுக்குச் சுதந்திரத்தைத் தந்துள்ளதை இந்தக் கட்டுரைகள் எனக்கு உணர்த்துகிறது. முறிக்கப்பட்ட சிறகுகள் மீண்டும் துளிர்ப்பதற்குண்டான அறிகுறியாய் அது நிலைக்கிறது.

1 கருத்து for “துளிர்க்கும் சிறகுகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...