“இலக்கியத்திற்கும் கல்வியாளர்களுக்கும் தொடர்பில்லை” – ஶ்ரீதர்ரங்கராஜ்

srithar 05மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஶ்ரீதர்ரங்கராஜ். மலேசியப்பெண்ணைத் திருமணம் செய்து கடந்த 5 வருடங்களாக மலேசியாவில் கிள்ளான் எனும் நகரில் வாழ்ந்து வருகிறார். தமிழகத்தின் வலசை, கல்குதிரை போன்ற சிற்றிதழ்களில் இயங்கியுள்ளதோடு வல்லினம் இதழிலும் சுமார் ஓர் ஆண்டுகள் பொறுப்பாசிரியாகப் பங்காற்றியுள்ளார். பயணம் (கட்டுரை), ஹருகி முரகாமியின் சிறுகதைகளின் இரு மொழிப்பெயர்ப்புத் தொகுப்புகள் (கினோ, நீர்க்கோழி) போன்ற மொழிப்பெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர் கார்லோஸ் புயந்தஸின் ‘ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்’ மற்றும்மிலோராத் பாவிச்சின் ‘கசார்களின் அகராதி’ போன்ற நாவல்களை மொழிப்பெயர்த்து தமிழ் நவீன இலக்கியச் சூழலில் கவனம் பெறத்தொடங்கியுள்ளார். இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘கசார்களின் அகராதி’ அதிக விற்பனையான நூல்கள் பட்டியலில் இருந்ததும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களால் இம்முயற்சி சிலாகிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. எளிய முயற்சிகளை பெரும் ஆர்ப்பாட்டங்களோடு சமூக ஊடகங்களில் விளம்பரமாக்கும் இன்றையச் சூழலில் ஶ்ரீதர் தன்னை சந்தை பரபரப்பிலிருந்து ஒதுக்கியே வைத்துள்ளார். குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியுள்ள இவரது குரல் அடங்கி தொணியில் தீர்க்கமானதாகவும் செறிந்த கூர்மையுடனும் ஒலிப்பது. வல்லினம் இதழுக்காக அவரை நேர்காணல் செய்தோம்.

எதன் வழியாக, யார் வழியாக மொழிபெயர்ப்பு உலகில் நுழைந்தீர்கள்?

்ரீதர்ரங்கராஜ்: என்னுடைய ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் இலக்கியம் சார்ந்தவை அல்ல. 90-களின் பிற்பகுதியில் வேலை நிமித்தம் ஒசூரில் இருந்தபோது மார்க்சியக் கட்சி நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்காக சில பத்திகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அவைதான் நான் முதலில் செய்த மொழிபெயர்ப்புகள்.மேலும், ஆங்கிலத்தில் கவிதை, கட்டுரைகளை வாசிக்கும்போது புரிதலுக்காக ஒருசில வரிகளை மொழிபெயர்த்துப் பார்த்ததுண்டு. ஆனால் மொழிபெயர்ப்பில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அப்போது இருந்ததில்லை.இலக்கியம் சார்ந்த மொழிபெயர்ப்புகள் 2004-க்குப் பிறகு நான் மீண்டும் மதுரைக்கு வந்த பின்னரே தொடங்கியது. ஆனால் அவை சிறிய அளவிலான முயற்சிகள், எதையும் பிரசுரிக்கும் எண்ணம் இருந்ததில்லை, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டதில்லை.பெரும்பாலும் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளும் அளவிலேயே முடிந்துவிடும். 2006 என்று நினைவு அல்லது 2007 ஆகவும் இருக்கலாம், கவிஞர் ஸ்ரீஷங்கரின் அறிமுகம் கிடைத்தது, சிற்றிதழ் தொடங்கும் முயற்சியில் இருந்த அவருக்காகச் சில படைப்புகளை மொழிபெயர்த்தேன், ஆனால் அவை அச்சிற்குச் செல்லவில்லை, அந்த சிற்றிதழ் முயற்சி கைவிடப்பட்டு விட்டது. அதே காலகட்டத்தில் வலைப்பதிவுகள் மூலமாக அறிமுகம் கிடைத்த கவிஞர்  நேசமித்ரன் பின்னாளில் வலசை என்றொரு சிற்றிதழைத் துவக்கி அதற்காக ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்படி கூறினார். எனது மொழிபெயர்ப்பு முதன்முதலில் பிரசுரமானது வலசை இதழில்தான்.

தமிழகத்தின் சிற்றிதழ் சூழலில் இயங்கியவர் நீங்கள்.அப்போது எந்தக் குழுவில் இருந்தீர்கள்?எவ்வாறான இலக்கியம் படைக்கும் சூழலை அது உங்களுக்கு அளித்தது?

்ரீதர்ரங்கராஜ்: குழு அடையாளத்தை யார்தான் விரும்புவார்கள்? ஆனாலும் சூழல்,  எல்லோரும் குழுவாக இயங்குகிறபோது நீங்கள் ஏதாவது ஒரு இடத்தைச் சேர்ந்தவராக அடையாளப்பட்டு விடுகிறீர்கள். முதல் சில படைப்புகள் வெளியானது வலசை இதழில் என்பதால் துவக்கத்தில் வலசை என்ற அடையாளம் இருந்தது, வலசை இதழ் நின்றபின், எழுத்தாளர் கோணங்கியின் தொடர்பில் இருந்து கல்குதிரைக்கு ஒருசில மொழிபெயர்ப்புகள் செய்து கொடுத்ததால் ‘கோணங்கி க்ரூப்’ என்று அடையாளம் மாறியது. இன்னும் அந்த அடையாளம் நீடிக்கிறதா தெரியவில்லை. அல்லது இப்போது பதிப்பகம் சார்ந்து அடையாளப் படுத்தப்படுகிறேனோ என்னவோ?

உண்மையில் யாருடைய குழுவிலும் நான் இருந்ததில்லை, என்னால் ஒட்ட முடியாது, கூட்டொருமை எனக்கான விஷயமல்ல, தனியே விடப்படும்போதுதான் வசதியாக உணர்கிறேன். ஆனாலும் பாதிப்பு இருந்ததை மறுக்க முடியாது, வலசையும் கல்குதிரையும் வாசிப்பு மற்றும் சிந்தனையை நிச்சயம் பாதித்தன. ஒரு “குழுவில்” நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அதன் Ideology சார்ந்து வாசிப்பீர்கள், சிந்திப்பீர்கள். அது இயல்பு. ஆனால் இரண்டு சிற்றிதழ்களிலும் என்னுடைய மொழிபெயர்ப்புகள்தான் வெளியானதே தவிர சொந்தப் படைப்புகள் வெளிவந்ததில்லை. அந்தக் காலகட்டத்தில் கவிதைகள், சிறுகதைகள் எழுதும் முயற்சியில் இருந்தாலும் அவை எனக்குள்ளிருந்த விமர்சகனைத் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதால் அவற்றை நானே நிராகரித்துக் கொண்டிருந்தேன். சிறுபத்திரிக்கைச் சூழல் எது நல்ல படைப்பு? ஏன்? என்ற தெளிவை அளித்தது.சிறந்த படைப்புகளை அவை எனக்கு அடையாளம் காட்டின.

மொழிபெயர்ப்பு தொடங்கிய காலத்தில் அது உங்களுக்கான படைப்பிலக்கியத்தின் தனித்த அடையாளத்தை நீக்கிவிடும் என்ற எண்ணம் இருந்ததா?

்ரீதர்ரங்கராஜ்: அப்படி நினைத்ததில்லை. ஏனெனில் மொழிபெயர்ப்புகளோடு ஒருபக்கம்srithar 03 சொந்தப் படைப்பு முயற்சிகளும் இருந்தன. மேலும் அப்போது மொழிபெயர்ப்பும் படைப்புச் செயல்பாடு என்றுதான் நினைத்தேன், பிரித்துப் பார்க்கவில்லை. ஆனால் இப்போது மொழிபெயர்ப்புகளுக்கே பெரும்பகுதி நேரம் சென்று விடுகிறது, சிறிது இடைவெளி கிடைத்தாலும் மொழிபெயர்ப்பு நோக்கில் எதையேனும் வாசிப்பதற்குத்தான் அந்நேரத்தைப் பயன்படுத்துகிறேன், படைப்பு முயற்சிகள் அரிதாகிவிட்டன என்பதால் இப்போது சிலசமயம் அப்படித் தோன்றுகிறது. இரண்டு விஷயங்களைச் சொல்லி சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.சமகாலத்தில் என்னைவிடச் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள், எனவே நான் எழுதாமல் இருப்பதென்பது என்னுடைய தனிப்பட்ட இழப்பு மட்டுமே. இரண்டாவதாக, நல்ல படைப்புகளை மொழிபெயர்ப்பதன் மூலமாக இலக்கியத்திற்குப் பங்களித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

சிறுகதைகளும் எழுதியுள்ளீர்கள்.எது உங்கள் மனதுக்கு நெருக்கமான கலையாகிறது?

்ரீதர்ரங்கராஜ்: ஒரு சிறுகதையை வேறு மொழியில் வாசித்து அதை மொழிபெயர்க்கும்போது எனக்கிருக்கும் மனநிலை, சிறுகதையில் சொந்த வரிகளை எழுதும்போது இருக்கும் மனநிலை இரண்டும் ஏறக்குறைய ஒன்று போலவே இருப்பதைக் கவனித்திருக்கிறேன். இருந்தாலும் சொந்த அனுபவத்தின் வெளிப்பாடு, சுயசிந்தனை என்று வரும்போது எவ்விதக் கட்டுப்பாடுகளுக்கான தேவையுமின்றி வெளிப்படுகிறது என்பதால் அது மனதுக்குச் சற்று அதிக நெருக்கமானதாகிறது. இப்போது மொழிபெயர்ப்புப் பணிகளுக்கிடையே சிறுகதைகள் எழுதும் முயற்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.இருந்தாலும் எல்லோரிடமும் சொல்வதற்குச் சில கதைகள் இருக்கும். அவற்றை வேறு யாராலும் சொல்ல முடியாது. அந்தக் கதைகளை நிச்சயம் எழுதிவிடுவேன் என்று நம்புகிறேன்.

உங்கள் வாசிப்பு உலகம் பற்றி கூறுங்கள்.குறிப்பாக தமிழல்லாத பிற மொழி இலக்கிய வாசிப்பு.

்ரீதர்ரங்கராஜ்:மொழிபெயர்ப்புகளில் தேர்ந்தெடுத்துதான் வாசிக்கிறேன். நண்பர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள்.பிற இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்தவற்றை வாசிக்க விருப்பமுண்டு. நேரடியான ஆங்கில வாசிப்பில் க்ளாசிக்குகளை அதிகம் வாசிக்கிறேன். அதில் வாசிக்க வேண்டியது – மொழிபெயர்க்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது. அபுனைவுகளை ஆங்கிலத்தில்தான் வாசிக்கிறேன், மொழிபெயர்ப்பில் வாசிப்பது குறைவு. காரணம் இன்றைய தமிழிலக்கியச் சூழல் ஒற்றைக் கருத்துத் தளத்தில் சிக்கியிருக்கிறது என்ற எண்ணம் எனக்குண்டு. குறிப்பிட்ட அரசியலைக் கொண்டிருக்கும் அல்லது அக்கருத்தை வலுப்படுத்தும்படியான புத்தகங்களே  மொழிபெயர்க்கப் படுகின்றன. அதற்கான மாற்றுச் சிந்தனைகள் கிட்டத்தட்ட இல்லை எனுமளவு மிகக் குறைவானவை. புனைவுகளை வாசிப்பது பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நோக்கில்தான்.மேற்கைக் காட்டிலும் கிழக்கு எனக்கு விருப்பமானது, அணுக்கமானது. ஆனால் சமகாலத்தில் கிழக்கிலிருந்து மேற்கிற்குப் பெயர்ந்தவர்களின் படைப்புகள் அதிகம் வாசிக்கக் கிடைக்கின்றன.அது தனி வகைமை. அதில் அமெரிக்க வாழ் ஜப்பானியர்களை, சீனர்களை வாசிக்கிறேன்.லத்தீன் அமெரிக்கப் படைப்புகளும் பிடிக்கும். மீயதார்த்த, அறிவியல் புனைவுகள் எனக்கு விருப்பமானவை.அரசியல் சார்ந்த படைப்புகளில் விருப்பமுண்டு.பொதுவாக என்ன வாசிக்கிறேன் என்பது என் மொழிபெயர்ப்புகளைப் பார்த்தால் தெரியும். பிடித்த எழுத்தாளர்கள் சிலர்: Kawabata, Mishima,  Ishiguro, KenzaburōŌe, Ken liu, Yiyun li, Ha jin, Günter Grass,V.S. Naipaul, Nikos Kazantzakis, Orhan Pamuk, Milorad Pavić, García Márquez, Milan kundera, Calvino, Carlos Fuentes, Mario vargas llosa, Jorge Luis Borges, Julio Cortázar, José Saramago, Juan Rulfo, Jean genet, William S. Burroughs, Jack Kerouac, Roberto bolano &Carl Gustav Jung. இவர்களில் ஒருசிலரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

ஆச்சரியமாக மலேசியாவுக்கு வந்தபிறகு பெரிய மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்கள்.ஒரு நிலத்தின், சமூகத்தின், வாழ்வியலின் சூழல் படைப்புக்கான மனநிலை கூடிவர துணை நிற்கும் எனச் சொல்லப்படுவதுண்டு.மலேசியா உங்களுக்கு அவ்வாறான மனநிலையைக் கொடுத்ததா?அல்லது இது முழுக்க முழுக்க உள்ளார்ந்த ஆர்வத்தைச் சார்ந்ததா?

்ரீதர்ரங்கராஜ்: பதிப்பக அறிமுகம் மலேசியா வந்த பிறகு கிடைத்தது. இந்தியாவில் இருந்தபோதே பெரிய மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். 2012 என்று ஞாபகம், நான் முதன் முதலில் மொழிபெயர்த்த நாவல் ப்ரிட்டிஷ் எழுத்தாளரான Mark Haddon எழுதிய The Curious Incident Of The Dog In The Night Time. சமகாலப் படைப்பு.வலசை பதிப்பகத்தில் வெளியிடும் நோக்கில் மொழிபெயர்க்கப்பட்டது.ஆனால் இன்றுவரை அது வெளியிடப்படவில்லை. அதற்குப் பிறகு, யார் வெளியிடுவார்கள் என்றெல்லாம் யோசிக்காமல்  கசார்களின் அகராதி யை (Dictionary Of Khazars) மொழிபெயர்க்கத் தொடங்கினேன். 40% மொழிபெயர்ப்பு வரை முடிந்த நிலையில் அதுசார்ந்து எனக்களிக்கப்பட்ட நெருக்கடியினால் அதுவும் நின்றுபோனது. பிறகு மலேசியா வந்தபிறகே கார்த்திகைப்பாண்டியன் மூலம் அனுஷின் அறிமுகம் கிடைத்து பயணம், கினோ, ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம், கசார்களின் அகராதி என்று எனது மொழிபெயர்ப்புகள் வரிசையாக வெளியிடப்பட்டன. அவ்வகையில் கா.பாவுக்கும் எதிர் பதிப்பக உரிமையாளரான அனுஷுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும்.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் மொழிபெயர்த்துள்ளீர்கள். கவிதைகளை மொழிபெயர்த்த அனுபவம் உண்டா?

srithar 02்ரீதர்ரங்கராஜ்: வலசை முதல் இதழுக்காக மொழிபெயர்த்தது நீள் கவிதைதான். Tony Harrison எழுதிய V. அதற்குப் பிறகும் வலசை உள்ளிட்ட சில இதழ்களுக்காகக் கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். ஆனால் கவிதையை மொழிபெயர்ப்பதில் எனக்குத் தயக்கம் உண்டு.Poetry is what gets lost in translation என்ற ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் வார்த்தைகள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவது. ஆனால் கவிஞர்கள் கவிதை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டால் இந்தச் சிக்கல் குறையும் என்பது என் நம்பிக்கை.நான் சொல்லிக்கொள்ளும்படியான கவிஞனல்ல, என் வாசிப்பிலும் கவிதைகளுக்குக் கடைசி இடம்தான். எனவே கவிதைகளை மொழிபெயர்க்க விரும்பமாட்டேன். நண்பர்கள் கேட்பதால் மறுக்க முடியாமல் சில கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலுமாக முயற்சி செய்திருக்கிறேன். கவிதையை மொழிபெயர்க்க முனைவது எனும்போது நிலவைச் சுட்டும் கை என்ற வரி நினைவுக்கு வருகிறது.

பிறமொழிப் புனைவுகள் சினிமாவாக இயக்கப்படுவதுண்டு.திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் உள்ள நீங்கள் ஒரு புனைவு சினிமா கலைவடிவமாவதை எவ்வாறு காண்கிறீர்கள்.அதன் பலம் பலவீனம் என்ன?குறிப்பிட்ட சில படைப்புகளை ஒட்டி கூற முடியுமா?

்ரீதர்ரங்கராஜ்: இன்றுள்ள 90% தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை தேவையில்லை, திரைக்கதை மட்டும் போதும். நீங்கள் யோசிக்க வேண்டியதெல்லாம் புதிய காட்சிகள் மற்றும் வசனங்கள் மட்டுமே.தமிழர்களுக்கு சினிமா வெறும் கேளிக்கை. எனவேதான் நாவல்களைப் படமாக்கும் முயற்சிகள் தமிழில் மிகமிகக் குறைவாக இருக்கிறது.மேலும், புனைவை திரைப்படமாக்குவது கடினமானது. ஏனென்றால் நாவலை வாசிக்கும்போது வாசகன் உருவாக்கிக் கொள்ளும் மனச்சித்திரம் ஒன்று உண்டு.அதைத் திரைக்காட்சிகள் மாற்றீடு செய்யவேண்டும் என்பது அந்நாவலைத் திரைப்படமாக்கும் இயக்குநரின் முன்னுள்ள சவால்.மோகமுள் என்னைத் திருப்திப்படுத்தவில்லை (அதேசமயம், மோகமுள் திரைப்படமாக்கப்பட்டது வரவேற்கத்தக்க முயற்சி). அந்நாவல் எனக்களித்த உணர்வில் கால்பங்கு கூட காட்சியாகப் பார்க்கும்போது எனக்குள் உருவாகவில்லை, அக்காட்சிகளால் எனக்குள்ளிருந்த சித்திரத்தை மாற்றீடு செய்ய முடியவில்லை. இது பாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்படும் நடிகர்கள், திரைக்கதை சார்ந்தது மட்டுமில்லை.அது படமாக்கப்பட்ட விதம், இசை என்று பலதும் தீர்மானிக்கிறது.உங்கள் மனச்சித்திரத்தைக் காட்டிலும் சிறந்த ஒன்றை திரையில் பார்க்க வேண்டியிருக்கிறது.

நபக்கோவின் ‘லோலிடா’ இரண்டுமுறை படமாக்கப்பட்டுள்ளது.மிகப்பெரிய இயக்குநராக இன்றளவும் மதிக்கப்படும் ஸ்டான்லி குப்ரிக் 1962-ல் முதலில் அதற்குத் திரைவடிவம் கொடுத்தார்.இரண்டாவதாக 1997-ல் ஏட்ரியன் லின்.இரண்டு வடிவமும் எனக்குப் பிடித்திருந்தது.ஏட்ரியன் லின் குப்ரிக்கின் திரைக்கதையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவில் அக்கதையைப் படமாக்கியிருந்தார் (திரைக்கதை-Stephen Schiff).இரண்டிலுமே நாவலின் ஆதார உணர்ச்சி வெளிப்பட்டிருந்தது.இது ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் எனக்கு குப்ரிக்கின் வடிவத்தைவிட ஏட்ரியன் லின்னுடைய வடிவம்தான் அணுக்கமாக இருந்தது.மோகமுள்ளில் அதுதான் சிக்கல்.நாவலின் ஆதார உணர்ச்சி அந்தப்படத்தில் வெளிப்படத் தவறிவிட்டது.

எழுத்து, காட்சி இரண்டுக்கும் அவற்றுக்கே உரித்தான பலம், பலவீனம் உண்டு.எனக்குப் பிடித்த சில திரைப்படங்களான நாவல்கள், இவற்றை வாசிப்பதைக் காட்டிலும் திரையில் பார்ப்பது நல்ல அனுபவமாக இருந்தது. Great expectations, To Kill a Mockingbird, Tin drum, zorba the greek, The Kite runner, The remains of the day, Clockwork orange, The Unbearable Lightness of Being.

ஹருகியின் படைப்புகள் தரமானவை அல்ல என்று ஒரு தரப்பால் சொல்லப்படுவதுண்டு.உங்களின் முதல் மொழிபெயர்ப்பு நூலாக அது வெளியிடப்பட்டுள்ளது.ஒரு இலக்கிய வாசகராக உங்களுக்கு அவர் புனைவின்பால் உள்ள ஈடுபாடு என்ன?

்ரீதர்ரங்கராஜ்: ‘தீவிர இலக்கியவாதிகள்’ ஒப்புக் கொள்வதில்லைதான். நடுநிலை இதழ்களின் முன்வைப்புதான் முரகாமி என்பார்கள். நவீன, மேற்கத்திய வாழ்க்கை வாழ் நகர மனங்கள் கொள்ளும்  கட்டமைப்புகள் மீதான சலிப்பு, அதன் காரணமாக உருவாகும் மெல்லிய (மேம்போக்கான)  தத்துவச் சிலாகிப்பு முரகாமியின் களம். மேற்கத்திய வாழ்க்கையைப் பிரதியெடுக்கும் உலகின் சரிபாதி மனிதர்களுக்கு வாழ்க்கையின் சாரத்தை வசப்படுத்தி விட்டதான பிரமையைக் கொடுக்கும் எழுத்துகள் தேவையாக இருக்கின்றன. அதைத் தருவதற்கு மேற்கில் வாழ்கின்ற கீழைத்தேய மனம் மிகப்பொருத்தமானது. இருந்தாலும்,  முரகாமியின் கதை சொல்லல் முறை மற்றும் மொழி யாரையும் வசப்படுத்திவிடக் கூடியது என்பதையும் மறுக்க முடியாது. அது வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த உதவக்கூடிய மொழி.மேலும் முரகாமியின் கதைகளில் சில கொஞ்சம் கறாராக எடிட் செய்யப்பட்டால் இலக்கியம் பக்கம் வந்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் கொண்டவை.தமிழிலும் இதுபோல இடையே நிற்பவர்கள் உண்டு, சுஜாதா, பாலகுமாரன் ஆகியவர்களைச் சொல்லலாம். என் தலைமுறையில் அவர்கள்தான் தீவிர இலக்கியத்திற்குள் நுழைவதற்கான படிக்கட்டுகளாக இருந்தார்கள். நான் அவர்கள் வழியாகத்தான் தீவிர இலக்கியம் என்ற வகைமைக்குள் நுழைந்தேன். முரகாமியின் இடமும் அதுதான்.முரகாமி தீவிர இலக்கியத்திற்கும் வெகுஜன இலக்கியத்திற்கும் இடையே பாலமாக இருக்கிறார். சுஜாதாவின் நவீன வாழ்க்கை மீதான பற்றுதலோடு கூடிய சலிப்பும், அச்சலிப்பை, குற்றவுணர்ச்சியைச் சமன் செய்ய உதவும் பாலகுமாரனின் தொடக்கநிலைத் தத்துவமும் சேர்ந்த கலவை முரகாமி. அவரிடமிருந்து தீவிர வாசிப்புக்கு கணிசமானோர் நகரக்கூடும். அதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்பதால் தீவிர இலக்கியத்திற்கு இப்படியான இடைநிலை ஆட்கள் தேவை என்று கொள்ளலாம்.

கோணங்கியின் நட்பு வட்டத்தில் இயங்கியுள்ளீர்கள். பொதுவாகவே பெரும் படைப்பாளிகளிடம் உள்ள நெருக்கம் இளம் படைப்பாளிகளின் ஆளுமையில் நுழைவதுண்டு.கோணங்கியின் ஆளுமை உங்களை எவ்வாறு பாதித்தது?

்ரீதர்ரங்கராஜ்: கோணங்கியின் படைப்புகள் அவரைத் தனிப்பட்ட முறையில் தெரியாமல் வாசிப்பவர்களையும் பாதிக்கக் கூடியவை. கோணங்கியின் ஆளுமையும் அவ்வாறே.சொந்தப் படைப்பை உருவாக்குபவருக்கு அது வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் எனக்கு அவரது படைப்புகள் மற்றும் அருகாமை மூலம் கிடைத்தது நேரடியான சிந்தனைத் தாக்கம் அல்ல. அதேசமயம், அவரது மொழி என்னைப் பாதித்திருக்கிறது என்பதை ‘கசார்களின் அகராதி’யில் சில இடங்களில் உணர்கிறேன். கோணங்கி ஆங்கிலத்தில் வாசிக்கக் கூடியவர்களிடம் வெவ்வேறு மொழிகளில் சமகாலத்தில் எழுதுபவர்களின் படைப்புகளின் போக்கு என்னவாக இருக்கிறது என்பதை அறிய ஆர்வத்தோடு இருப்பவர், அவற்றில் மொழிபெயர்க்கப்பட வேண்டியவை எவை என்பது குறித்து உரையாடுவார். அவ்வகையிலேயே அவருடனான பல உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. அது நம்மை மேலும் வாசிக்க, தேடத் தூண்டுவதான உரையாடலாகவே இருக்கும்.

இரண்டு நாவல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்கள். இரண்டும் சமகால இலக்கியங்கள் அல்ல. இன்று பல்வேறு பதிப்பகங்கள் இவ்வாறான பழமையான இலக்கியங்களை மொழிபெயர்க்கக் காரணம் என்ன?

்ரீதர்ரங்கராஜ்: தேவை உள்ளதுதான் காரணம். க்ளாசிக்குகள் தொடர்ந்து வாசிக்கப்படsrithar 01 வேண்டியவை. சமகாலச் சூழலின் செல்திசையை தீர்மானிக்க க்ளாசிக்குகள் உதவுகின்றன.நீங்கள் எழுதுவது அத்தனையுமே க்ளாசிக்குகளின் தொடர்ச்சிதான்.மற்ற மொழிகளில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது, எப்படியெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தால்தானே நம்மால் அதைத் தாண்டமுடியும்.அவ்வகையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய க்ளாசிக்குகள் பலநூறு இன்னமும் மிச்சமிருக்கிறது.புனைவு மற்றும் அபுனைவில் முக்கியமான புத்தகங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட வேண்டும், கூடவே சமகால ஆக்கங்களும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.தத்துவம், வரலாறு, உளவியல் என அனைத்து வகைமைகளிலும் வாசிக்கக் கிடைக்க வேண்டும்.அப்படியொரு முழுமையை உடனே எட்ட முடியாதென்றாலும் தொடர்ந்து அதைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.சர்வதேசத் தரத்தில் எழுத்துகளை தமிழில் எதிர்பார்க்கிறோம் என்றால் அதற்கான உள்ளீடு இருந்தால்தான் முடியும். ஆனால் தேவையானவை உடனே நடப்பதில்லை என்பதுதான் சிக்கல்.கசார்களின் அகராதியைப் பற்றி மூன்று தசாப்தங்களாகப் பேசிவந்திருக்கிறார்கள், இப்போதுதான் அதனுடைய முதல் மொழிபெயர்ப்பே வந்திருக்கிறது.இந்நேரம் குறைந்தது நான்கு மொழிபெயர்ப்புகளாவது வந்திருக்க வேண்டும். 1966-இல் ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த கொர்த்தசாரின் ‘ஹாப்ஸ்காட்ச்’ நாவலை எப்படி வாசிப்பது என்று 30 ஆண்டுகளுக்கு முன் தமிழில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதுவரை அந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை எனும்போது அந்தக் கட்டுரையின் மதிப்பு என்ன என்று யோசிக்க வேண்டியுள்ளது (இப்போது அந்நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கியுள்ளேன்).  இச்சூழல் விரைவில் மாறும் என்று நம்பலாம், ஏனெனில் புதிய இளைஞர்கள் மொழிபெயர்ப்புக்குள் வருகிறார்கள்.

மலேசியாவில் சில ஆண்டுகளாக வாழ்கிறீர்கள்.தமிழக சமகாலச் சிற்றிதழ் சூழலில் இயங்கியவராக இன்றைய அதன் சூழலை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

்ரீதர்ரங்கராஜ்: தமிழகச் சிற்றிதழ் சூழலில் ‘நடுநிலை இதழ்கள்’ முக்கியத்துவம் பெற்று வருகின்றன என்று நினைக்கிறேன். இந்நடுநிலை இதழ்கள் வெகுஜன எழுத்து மற்றும் தீவிர இலக்கியத்திற்கு இடையே புதிய பாதையை உருவாக்கியுள்ளன அல்லது இரண்டுக்குமான இடைவெளியைக் குறைத்துள்ளன. இதைக் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை, இது இளைஞர்கள் பலரை படைப்புலகிற்குள் கொண்டு வந்திருக்கிறது, பெரும்பாலான படைப்புகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, எளிதில் அணுகக் கூடிய படைப்புகளாக உள்ளன. இதன் விளைவு என்ன என்பதை இப்போது கணிக்கமுடியாது.ஆனாலும் தீவிர இலக்கியம் பேசக்கூடிய இதழ்களும் அதேயளவு இருக்கின்றன, ஒன்று போனால் இன்னொன்று புதிதாக வரும்.

மலேசியாவில் தற்போது ‘சிற்றிதழ் சூழல்’ அல்லது ‘தீவிர இலக்கியச் சூழல்’ இருப்பதாக நான் கருதவில்லை. வல்லினத்தைத் தாண்டி சில முயற்சிகள் உண்டென்றாலும் அவற்றில் நிலைத்தன்மை மற்றும் உறுதியான நோக்கம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  அமைப்புகள் இருக்கலாம் ஆனால் அவை வெவ்வேறான கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு உருவானவை அல்ல. அதாவது ஒரு அமைப்பு இருக்கிறது, அதன்  சித்தாந்தத்தில் உள்ள போதாமை காரணமாக அல்லது அதிலிருந்து முரண்பட்டு இன்னொன்று உருவாவதில்லை. சொந்தமாகக் கருத்தியலே இல்லாமல் இப்படி வெவ்வேறு பெயர்களில் ஆளுக்கொரு கூட்டத்தை உருவாக்குவதன் மூலம் எதைச் சாதிக்க முடியும்?அவரவர் தன்னகங்காரத்தை வேண்டுமெனில் திருப்தி செய்து கொள்ளலாம், பல்வேறு பெயர்களில் விருதுகள் வழங்கி மற்றவர்களின் தன்னகங்காரத்தையும் திருப்திப்படுத்தலாம்.இதுவே இலக்கியம் என்று தங்களுக்குள்ளாக முன்மொழிந்து, வழிமொழிந்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளலாம், அவ்வளவுதான் சாத்தியம்.அதைத் தாண்டி நகரமுடியாது.நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை என்றால் எங்கே போகவேண்டும் என்பது எப்படித் தெரியும்? இவ்வாறான அமைப்புகள் யாரை இலக்கியவாதி என்று கொண்டுவந்து நிறுத்துகிறார்கள் என்று பார்த்தால் ஒன்று புரிகிறது. உலகம் முழுக்க இலக்கியம் என்று எது முன்வைக்கப்பட்டு வருகிறது, எதனால் அது முன்வைக்கப்படுகிறது, அது எவ்வாறு பரிணமித்து வந்துள்ளது, வெவ்வேறு நிலங்களில், வெவ்வேறான காலகட்டங்களில் வேறுவேறான அரசியல் மற்றும் கருத்தியல்களை அது எதனால் முன்னெடுத்தது, அதன் காலத்தேவை என்ன என்பது பற்றிய புரிதலே அவர்களுக்கு இல்லை. எனவே, பல்வேறுபட்ட சிந்தனை மரபுகளில் இருந்து உருவாகி வரும் படைப்புகள், விவாதங்கள் இல்லாமல், நிகழும் ஒருசில போதாமையுள்ள முயற்சிகளைக் குறிக்க “சூழல்” என்ற சொல்லைப் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் தீவிர இலக்கியம் என்ற வகைமையில் எழுதுபவர்கள் இங்கே எத்தனை பேர்?

தமிழகத்தையும் மலேசியாவையும் ஒப்பிடும்போது சில சிக்கல்களைக் கவனிக்க முடிகிறது. அங்கே வெகுஜன / வணிக எழுத்து மற்றும் இலக்கியத்திற்கான குழுக்களிடையே தொடர்பிருக்காது.இரண்டும் தனித்தனியாக சுயபலத்துடன் இயங்குபவை.அங்கே வணிக எழுத்தில் உச்சம் தொட்டவர்கள் பலர்.ஆண் எழுத்தாளர்களில் சுஜாதா, பாலகுமாரன், சுபா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்திரராஜன் போன்றவர்களைச் சொல்லலாம்.பெண் எழுத்தாளர்களில் லட்சுமி, ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன் போன்றவர்கள்.அதேபோல இலக்கியத்தில் புதுமைப்பித்தனில் இருந்து எஸ்.ரா ஜெயமோகன் வரை உள்ளவர்கள்.அவரவர்களுக்கான இடம் – வரையறை தெளிவாக இருந்தது, இருக்கிறது, அந்தந்த இடத்தில் அவர்களை யாரும் மறுப்பதில்லை.இதில் உயர்வு, தாழ்வு என்றெல்லாம் ஏதுமில்லை.இரண்டும் அதனதன் போக்கில் உள்ள, ஒன்றையொன்று குறுக்கிட்டுக்கொள்ளாத வெவ்வேறு பாதை, அவ்வளவுதான்.முதலில் இந்தப் புரிதலே இங்கே பெரும்பாலானோருக்கு இல்லை.பாலகுமாரன் தி.ஜாவைக் கொண்டாடியிருக்கிறார்.ஆனால் தன் படைப்புகளை ஒருபோதும் அவ்வரிசையில் வைக்க முனைந்ததில்லை, சுஜாதாவும் அப்படித்தான். இரண்டிற்குமான இடைவெளி எப்போதுமே தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது, அப்படித் தெளிவான வரையறை எதுவும் இங்கே இல்லை மற்றும் அவ்வாறான வரையறை முன்வைக்கப்பட்டால் தாங்களாக அதில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்வது முதல் அடிப்படைச் சிக்கல். வெகுஜன எழுத்தாளர் என்றால் அதில் அவமானப்பட ஏதுமில்லை, எனவே அதை நீங்கள் இலக்கியம் என்று நிறுவவேண்டிய அவசியமும் இல்லை. சொல்லப்போனால் அதிகம் பேரால் விரும்பி வாசிக்கப்படுவது வணிக எழுத்துதான். சுஜாதாவைத் தெரிந்த அளவுக்கு யாருக்கும் அசோகமித்திரனை, லா.ச.ராவைத் தெரியாது. எனவே அது அதனளவில் சிறந்தது, முக்கியமானது. ஆனால் வெகுஜன எழுத்தாக இருந்தாலும் அதற்கும் மதிப்பீடுகள் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

srithar 06இரண்டாவது, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் விதம்.முன்கூறியபடி, வணிக எழுத்தோ அல்லது இலக்கியமோ இரண்டிற்குமான தரம் உலகளாவியது.அதை ஒட்டியே மதிப்பீடுகள் வைக்கப்படுகின்றன.விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதும் மறுத்து வாதிடுவதும் எல்லா இடத்திலும் இருப்பதுதான்.தமிழில் விமர்சனத்தை அல்லது படைப்பை முன்வைத்து நீண்ட விவாதங்கள் நிகழ்வதுண்டு.எழுத்து சிற்றிதழில் நடைபெற்ற விவாதங்கள் அனைவருக்கும் தெரியும். அதேபோல, சமகாலத்தில் ஜெயமோகன், ரமேஷ், பிரேதன், பெருந்தேவி, இளங்கோ கிருஷ்ணன், கே.என்.செந்தில், வசுமித்ர, வெய்யில் போன்ற பலர் அவ்வகையான விவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள், நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் (இணையத்தில், இதழ்களில்). அவை முழுக்க முழுக்க கருத்தியல் சார்ந்தவை.அதிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள விஷயங்கள் கிடைக்கும் அல்லது குறைந்தபட்சம் தரப்புகளின் நிலைப்பாடேனும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அமையும்.ஆனால் விமர்சனம் செய்தவர் மீது தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்துவதை, வன்மம் கொள்வதை, காவல் நிலையத்திற்குச் செல்வதை  இங்கேதான் பார்க்கிறேன். இப்படியான தற்குறித்தனங்களுக்கு வாசிப்பு இல்லை என்பதுதான் காரணம். எவ்விதமான உழைப்பையும் தரத் தயாரில்லை ஆனால் கைதட்டல்கள், விருதுகள், பாராட்டுகள், பட்டங்கள்,  அடைமொழிகள் மேல் ஆசை மட்டும் இருக்கிறது.  அதன் விளைவு இது. தொடர்ந்து வாசித்து, விவாதித்துப் புரிந்து கொண்டால்தானே எதை இலக்கியம் என்கிறார்கள், ஏன் அதை மட்டும் இலக்கியம் என்கிறார்கள் என்று தெரியும்! இப்படியான முட்டாள்தனங்களைக் களைய முறையான வாசிப்பு மட்டும் போதாது, சிந்தனைப் பயிற்சியும் தேவை. வல்லினம் சிறுகதைகள், குறுநாவல், நாவல் என தொடர்ந்து பட்டறைகளை நடத்துகிறது, இருந்தாலும் முதலில் என்ன வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பதோடு எப்படிச் சிந்திக்க வேண்டும், தமிழில் எவ்வகையிலான சிந்தனை மரபுகள் உள்ளன என்ற பயிற்சியையும் வழங்க வேண்டும். சிந்தனை மாறினால்தான் எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது சிக்கல், தேங்கிக் கிடப்பது. மலேசியாவில் நான் கவனித்த பெரும்பாலோர் இன்னும் ஜெயகாந்தனைத் தாண்டவில்லை. சிலர் இன்னும் மோசம், மு.வ, நா.பா காலத்திலேயே தேங்கிக் கிடக்கிறார்கள். ஆடைகளில் சமகால நவீனம் வேண்டும் என்பவர்கள் சிந்தனையில் மட்டும் அரை நூற்றாண்டு பின் தங்கியிருக்கிறார்கள்.எது இலக்கியம் என்று இலக்கியவாதிகளிடம் கேட்காமல் கல்வியாளர்களிடம் கேட்பதுதான் இதற்கான காரணம்.இலக்கியத்திற்கும் கல்வியாளர்களுக்கும் தொடர்பில்லை. அவர்களுக்கு பாடத்திட்டத்தில் உள்ளதைத் தாண்டி தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால் பாடத்திட்டத்தில் உள்ளவர்களை முன்வைக்கிறார்கள், தமிழகத்திலும் கல்வியாளர்கள் யாரும் இலக்கியத்தின் பக்கம் வருவதில்லை (விதிவிலக்காக இலக்கியம் படைக்கும் கல்வியாளர்கள் ஓரிருவர் இருக்கலாம்). மு.வ போன்ற தமிழறிஞர்களும் கல்வியாளர்களும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர்கள்தான், அதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்கள் எல்லை எதுவோ அதுவரை மட்டுமே.அவர்களது துறை வேறு.ஓர் ஆய்வுக்கட்டுரை தரமானதா என்பதை கல்வியாளர்தான் முடிவு செய்ய முடியும், இலக்கியவாதியால் அதைச்செய்ய முடியாது, கூடாது.அதுபோல ஒரு நாவல் அல்லது சிறுகதை சிறந்ததா இல்லையா, அது இலக்கியமா இல்லையா என்பதை இலக்கியவாதிதான் முடிவு செய்ய வேண்டும்.இந்த அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் முன்னேற முடியாது.

இதுவரை தாங்கள் மொழிபெயர்த்த பிரதிகள் குறித்து எவ்வாறான எதிர்வினைகள் வந்துள்ளன? 

்ரீதர்ரங்கராஜ்: முகநூலில் அல்லது தனிப்பட்ட முறையில் வரும் பாராட்டுகள்தான். கார்லோஸ் ஃபுயந்தஸ்சின் ‘ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்’ நாவலைப் படித்துவிட்டு நல்ல மொழிபெயர்ப்பு என்று குமார் அம்பாயிரம் முகநூல் உள்பெட்டியில் பாராட்டினார். கசார்களின் அகராதிக்கும் முகநூலில் பாராட்டிப் பதிவு போட்டிருந்தார். கினோ மற்றும் நீர்க்கோழி பற்றி ஓரிருவர் முகநூலில் எழுதியிருந்தனர்.அவ்வளவுதான்.

பொதுவாக மொழிபெயர்ப்புகள் குறித்து யாரும் பெரிய அளவில் எதிர்வினைகளை முன்வைப்பதில்லை. ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுச் செய்யவேண்டிய வேலை என்பதால் அப்படி என்று நினைக்கிறேன். கவிதை, சிறுகதைகள் என்றால்கூடப் பரவாயில்லை, ஆனால் ஒரு நாவலை விமர்சிக்க விரும்பினால் அதற்காகச் சில மாதங்களைச் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, அந்த மொழிபெயர்ப்புப் படைப்பு தரும் உணர்வு மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட அப்பிரதியைக் கொண்டு சமகாலத்தில் அதை மொழிபெயர்ப்பதற்கான தேவை என்ன என்ற அளவில் தனிப்பட்ட உரையாடல்கள் சிலசமயம் அமையும். மொழிபெயர்ப்பாளரின்  மொழி விமர்சனத்துக்கு உள்ளாவதுண்டு, அதுவும்கூட அரிய நிகழ்வுதான். நான் மொழிபெயர்த்தவற்றைக் குறித்து விமர்சனம் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இதுவரை எழுதப்படவில்லை. அதை நான் எதிர்பார்ப்பதுமில்லை. ஏனெனில் சார்பற்ற விமர்சனம் தமிழிலக்கியச் சூழலில் மிகவும் குறைவு. சாதி, மதம், குழு, இவ்வளவு ஏன் பதிப்பகம் சார்ந்த விருப்பு – வெறுப்பு வரை வைத்திருக்கிறார்கள். இதில் யாருடைய விமர்சனத்தை எடுத்துக் கொள்வது? அவரவர் விருப்பு-வெறுப்பு சார்ந்து படைப்பைக் குறித்த கருத்தை முன்வைக்கிறார்கள், அவ்வளவுதான். எனவே எதிர்வினை எதுவுமில்லையே என்று கவலைப்படுவதை விட்டுவிட்டேன். சரியான விமர்சனமே கிடையாதா என்றால் நிச்சயமாக இருக்கிறது, அவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

உலக இலக்கியம் வாசிப்பவராக தமிழில் இன்று எழுதும் யாருடைய படைப்புகள் ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமென கருதுகிறீர்கள்?

்ரீதர்ரங்கராஜ்: இப்போது தமிழில் எழுதும் அனைவரையும் வாசித்திருந்தால் மட்டுமே இதற்குப் பதில் சொல்ல முடியும். இருந்தாலும் சமகாலம் என்றில்லாமல் 50களில் இருந்து என்று எடுத்துக் கொண்டால் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய மிகச்சிறந்த கவிதைகள், சிறுகதைகள் உண்டு. ஆனால் நான் வாசித்த வரையில் எந்த நாவலையும் இது ஆங்கிலத்திற்குச் செல்லவேண்டியது என்று நினைத்ததில்லை.

வல்லினம் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளீர்கள்.இதழியல் சூழலில் இயங்கிய அனுபவம் பற்றி சொல்லுங்கள்.தமிழ்நாட்டில் சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்ததுண்டா?

்ரீதர் ரங்கராஜ்: தமிழ்நாட்டில் இருந்தபோது நண்பர்களது பல்வேறு சிற்றிதழ்களில் என்னால் முடிந்த பங்களிப்புகளை வழங்கியிருக்கிறேன். படைப்புகளைக் கேட்டு வாங்குவது, தேர்வு செய்வது, மொழிபெயர்ப்புகளைச் சரிபார்ப்பது, படைப்புகளை Edit செய்வது, தட்டச்சிடுவது என அவர்கள் என்னிடம் ஒப்படைக்கும் பணிகளைச் செய்து தந்ததுண்டு. வல்லினம் இதழில் பணிசெய்ய அந்த அனுபவங்கள் நிச்சயமாக உதவின. இதழின் ஆசிரியராக இருப்பது அல்லது ஆசிரியர் குழுவில் ஒருவராக இருப்பதென்பது நிச்சயமாக வாசிப்பை, தேர்வுகளை, ரசனையை விரிவுபடுத்துகிறது என்பதை வல்லினத்தில் இருந்தபோது உணர்ந்தேன். நல்ல படைப்புகளை அடையாளம் காண்பதற்கான பயிற்சியாகவும் அதைக் கொள்ளலாம். நீங்கள் நம்புகின்ற அரசியலை முன்வைக்க நல்லதொரு வாய்ப்பு அது.

பிறமொழி நூல்கள் ஆண்டுதோறும் அதிகமாக தமிழில் மொழிபெயர்க்கப் படுகின்றன. பல பதிப்பகங்கள் அந்தப் பணிகளில் ஈடுபடுவதை புத்தகக் கண்காட்சிகளில் விற்பனைக்கு வைக்கப்படும் நூல்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது புரிகிறது. ஆனால் அதே அளவு தமிழ்நூல்கள் பிற மொழிகளுக்குச் செல்கின்றனவா?

்ரீதர்ரங்கராஜ்: அதேயளவு என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஆனால் தமிழிலிருந்து படைப்புகள் பிற இந்திய மொழிகளுக்கும் ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளுக்கும் செல்கின்றன,  அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும் எவை முன்வைக்கப்படுகின்றன என்பதிலும் சூழலில் அதிக கருத்து வேறுபாடுகள் உள்ளன.அது எப்போதும் இருக்கும்.

சாகித்ய அகடெமி தவிர்த்து வேறு அரசாங்க (சார்பு) அமைப்புகள் மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுகின்றனவா?

்ரீதர்ரங்கராஜ்: National book trust (NBT) இந்திய இலக்கியங்களை இந்திய மொழிகளுக்குள் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதோடு உலகச் சந்தைக்கும் புத்தகக் கண்காட்சிகள் வழி கொண்டு சேர்க்கிறது. புரிந்துகொள்ளக் கூடியதாக அங்கேயும் படைப்புகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் அதிகமாக மொழிபெயர்க்கப்படுகின்றன, மற்ற இந்திய மொழிகளுக்குச் செல்லும் தமிழ் படைப்புகளின் எண்ணிக்கை இவ்விரு மொழிகளோடு ஒப்பிட குறைவுதான். மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததே காரணம்.

சில மொழிபெயர்ப்புகள் வாசிக்கக் கடினமான  மொழியில் இருப்பதாகப் புகார்கள் உள்ளன. உங்கள் அனுபவத்தில் மொழிபெயர்ப்பின் தரத்தை எப்படி முடிவுசெய்வது?நல்ல மொழிபெயர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

்ரீதர்ரங்கராஜ்: மொழி மூலப்பிரதியைப் பொறுத்து மாறும். இருப்பினும் அது முனைந்து கடினப்படுத்தப்படாமல் இருக்கவேண்டும், அதாவது மூலப்பிரதியில் இல்லாத சிக்கல் மொழியை மொழிபெயர்ப்பில் தரக்கூடாது.கினோ இலகுவான மொழி, காரணம் முரகாமியின் மொழி அப்படி, பாவிச்சின் மொழி சற்று கடினமானது, எனவே அந்த இடத்தில் வேறு மொழியில் அதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதற்கெல்லாம் தனியாக எதுவும் செய்யவேண்டியதில்லை.ஆசிரியர் சொல்வதை அப்படியே சொன்னால் அப்பிரதிக்கான மொழி தானாக உருவாகிவிடும். மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் மொழி மூலப்பிரதியினால் முடிவு செய்யப்படுவது, மொழிபெயர்ப்பாளனால் அல்ல. ஆனால், கடினமான மொழியைப் பயன்படுத்துவதுதான் மேதாவித்தனம் என்று சூழலில் சிலர்  நம்பிக் கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள் வருகின்றன.

மொழிபெயர்ப்பின் தரத்தை அது மூலப் பிரதிக்கு எந்தளவுக்கு நேர்மையாக இருக்கிறது என்பதை வைத்தே முடிவு செய்யவேண்டும்.

என்னைப்பொறுத்தவரை, வாசகனுக்கு அணுக்கமான, புரிந்துகொள்ள ஏதுவான மொழியுடன் மூலத்திலிருந்து முரண்படாது செய்யப்படும் மொழிபெயர்ப்பே நல்ல மொழிபெயர்ப்பு.

மொழிபெயர்ப்பில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு பதிப்புரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு அவசியம்.உங்கள் அனுபவத்தில் பதிப்புரிமைச் சிக்கல்கள் வந்ததுண்டா?

்ரீதர்ரங்கராஜ்: நிச்சயம் அதுகுறித்த விழிப்புணர்வு இப்போது தேவையாக இருக்கிறது. அதில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு குறைவுதான், பதிப்பகங்களே உரிமையைப் பெறுகின்றன.இன்னமும் உரிமை பெறாமல் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடும் ஓரிருவர் இருக்கிறார்கள் என்றாலும் அதுகுறித்த பரவலான கவனம் இப்போது ஏற்பட்டுள்ளது. என் விஷயத்தில் பதிப்புரிமைச் சிக்கலே வந்ததில்லை. ஏனென்றால் எதிர் பதிப்பகத்தைப் பொறுத்தவரை உரிமை பெற்ற பின்னரே மொழிபெயர்ப்பைத் தொடங்கச் சொல்வார்கள்.

இலக்கியத்தில் எதிர்காலத் திட்டங்கள் உண்டா?

்ரீதர்ரங்கராஜ்: சில புத்தகங்களை அடுத்தடுத்து மொழிபெயர்க்க உத்தேசித்துள்ளேன், க்ளாசிக்குகள் மற்றும் சமகாலத்தவை. அவை தமிழுக்கு வந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதைச் செய்ய உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும்.சில சிறுகதைகள் எழுதவேண்டியுள்ளது. நாவல் எழுதவேண்டும் என்ற பேராசையும் உண்டு. எல்லாவற்றுக்கும் காலம் அனுமதிக்க வேண்டும்.

நேர்காணல்: ம.நவீன், அ.பாண்டியன்

புகைப்படங்கள் : ம.நவீன்

 

4 comments for ““இலக்கியத்திற்கும் கல்வியாளர்களுக்கும் தொடர்பில்லை” – ஶ்ரீதர்ரங்கராஜ்

  1. சேது மாதவன்
    July 1, 2019 at 2:35 pm

    தீர்க்கமான கேள்விகள், துல்லியமான மற்றும் ஆழமான பதில்கள். நேர்காணல் குழுவினருக்கும் புகைப்பட கலைஞருக்கும் பொறுமையாக பதில் வழங்கிய அண்ணன் ஸ்ரீதர் ரங்கராஜ் க்கும் நன்றிகள் / பாராட்டுக்கள்.

  2. Punithawathy
    July 3, 2019 at 9:56 am

    திரு. ரெங்கராஜ் அவர்களில் நிதானமான பதில்கள்.பரந்த வாசிப்பு ,மொழிப்பெயர்ப்பில் உள்ள உழைப்பு .மிகவும் சிறப்பு

  3. Mano
    July 8, 2019 at 2:55 pm

    இந்த நேர்காணலை நான் என சில நட்பு வட்டங்களுக்குப் பகிர்ந்தேன். அற்புதமான பதில்கள். குறிப்பாக இவ்வளவு பணி செய்து அதற்காக வந்த பதிவுகளைப் பற்றி சொல்லும்போது தமிழ் இலக்கிய உலகத்தின் சோம்பேறிதனம் அல்லது அதில் உள்ள அரசியல் புரிகிறது.

  4. மணிஜெகதீசன்
    July 17, 2019 at 11:11 am

    அருமையான நேர்காணல். நேர்மையான, தெளிவான பதில்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...