இரத்தம் விற்பவனின் சரித்திரம்

64367523_2279988425371221_8673461672863596544_nசீன எழுத்தாளர் யூ ஹூவா 1994ஆம் ஆண்டில் எழுதிய இந்த நாவல் ‘Chronicle of Blood Merchant’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகி  தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். நாவலின் பெயரைப் பார்த்தவுடன் போரைப் பற்றிய புனைவாக இருக்குமென்ற என் யூகத்தை இந்நாவல் முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது.

உலகிலேயே பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடாக இன்றளவும் சீனா இருப்பது பற்றியும் பட்டு வணிகத்திற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உலகின் பல நாடுகளை இணைத்து உருவான பட்டுப் பாதை பற்றியும் நாம் அறிவோம். இந்தப் பட்டு உற்பத்தியில்தான் நாவல் தொடங்குகிறது. கதை நாயகன் ஸூ ஸன்க்வான் பட்டு நூல் கம்பெனியில் நூல் நூற்பவர்களுக்குப் பட்டுப் புழுக்கூடுகளை வினியோகிக்கும் வேலையைச் செய்கிறான். மென்மையான பட்டோடு தினசரி புழங்கும் இவன் வாழ்நாளில் தனக்கு ஏற்படும் இக்கட்டான பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க இயலாமல் தனது இரத்தத்தை பத்து முறை விலைக்கு விற்கும் கதைதான்  ‘இரத்தம் விற்பவனின் சரித்திரம்’.

இன்றைய காலகட்டத்தில் இரத்த விற்பனைச் சட்டத்திற்குப் புறம்பான செயலாக இருந்தாலும் அன்றைய சீனாவில் இரத்தம் விற்பது அங்கீகரிக்கப்பட்டதாக இருந்துள்ளது. ஒருமுறை இரத்தம் விற்றால் ஆறு மாதம் வயல்களில் சம்பாதிப்பதைவிட பல மடங்கு அதிக தொகையான முப்பத்தைந்து யுவான்கள் கிடைக்கிறது. ஏழைகளுக்கு இதைவிட லாபகரமான தொழில் வேறில்லை என்பதால் ஆரோக்கியமாக உள்ள அனைவரும் ரத்தம் விற்கிறார்கள். இரத்தம் விற்காத ஆண்களுக்குத் திருமணத்திற்குப் பெண் கொடுக்க மறுக்கும் சூழல் ஒருபுறம் நிலவ மறுபுறம் ‘இரத்தம் என்பது முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாக கைமாறி வந்தது. அதை விற்பது என்பது முன்னோர்களை விற்பதற்குச் சமம்’ என இரத்த விற்பனையை ஓர் இழிவான செயலென கருதும் சூழலும் நிலவுகிறது.

ஸூ ஸன்க்வான் தனது இருபத்தைந்தாவது வயதில் இளமைக்கே உரிய துடிப்போடு முதன்முதலாக இரத்தம் விற்கிறான். கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஸூ யுலானைத் திருமணம் செய்து கொள்கிறான். யீலி (முதலாம் மகிழ்ச்சி), ஏள் (இரண்டாம் மகிழ்ச்சி), ஸான்லி (மூன்றாம் மகிழ்ச்சி) என மூன்று ஆண் பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். இந்த மூன்று மகிழ்ச்சிகளையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பட்டுத் தொழிற்சாலையில் தனது வியர்வையையும், அவ்வப்போது தனதுஇ ரத்தத்தையும் விற்கிறான்.

அதிக தண்ணீர் குடித்தால் அதிக ரத்தம் சுரக்கும் என்ற நம்பிக்கையில் இரத்தம் விற்கச் செல்கையில் மூத்திரப் பை வெடிக்கும் அளவுக்குத் தண்ணீர் குடித்து அவதிப்படுகிறான். இரத்தம் விற்க அதிகமானவர்கள் வருவதால் தனக்கு முன்னுரிமை வேண்டி இரத்தமெடுக்கும் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கிறான். இரத்தத்தை விற்ற பின் ஒரு கிண்ணம் பன்றி ஈரலும் இரண்டு குவளை மஞ்சள் அரிசியில் தயாரித்த ஒயினும் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்கிறான். இரத்த விற்பனையின் போது அறிமுகமாகி பின்பு நெருக்கமாகும் தனது இரு நண்பர்கள் தொடர்ந்து இரத்தம் விற்பதால் உடல்நலன் பாதிக்கப்பட்டு இறந்து போவதைப் பார்த்துக் கலங்குகிறான். முதுமையில் பன்றி ஈரலும் ஒயினும் சாப்பிட விரும்புபவன் பொருளாதார வசதியிருந்தும் இரத்தம் விற்றுச் சாப்பிட வேண்டுமென வேடிக்கையாக ஆசைப்பட்டு ‘அறுபது வயதில் இரத்தம் விற்க இயலாது’ என துரத்தப்பட்டு சாலையில் நின்று அழுகிறான். இறுதியில் இரத்தம் விற்காமல் மனைவி வாங்கித் தரும் பன்றி ஈரலையும் ஒயினையும் ‘என் வாழ்க்கையிலேயே மிகவும் நல்ல சாப்பாடு’ என்று கூறி அவன் சாப்பிடுவதோடு நாவல் நிறைவு பெறுகிறது.

ஸூ ஸன்க்வான் என்ற ஏழை மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட அறுபது வருடங்கள் போராட வேண்டிய அவலத்தையும் இரத்தம் விற்கும் ஆபத்தான விளையாட்டைத் தொடர்ந்து விளையாடச் சொல்லி வற்புறுத்தும் இரக்கமற்ற அவனது வாழ்வையும் மிகை உணர்ச்சிகள் ஏதுமின்றி நாவல் இயல்பாகச் சொல்கிறது. 1950ஆம் ஆண்டிலிருந்து 1980ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள இந்நாவலில் சீனர்களின் வாழ்வியல், அவர்களது நம்பிக்கைகள், சடங்குகள், சமூகத்தில் பெண்களின் நிலை, அரசியல் மற்றும் சமூக மாற்றங்களால் சாமானியர்களது வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகள் போன்ற பல தகவல்களோடு மிக நேர்த்தியாக பதிவாகி உள்ளது.

பெண்ணின் கன்னிமையைச் சோதிக்க விரும்பும் கணவன் விளக்கு அணைக்காத முதலிரவை வேண்டுவதும் தந்தை மரணத் தறுவாயில் இருக்கையில் மகன் புகைபோக்கியில் ஏறி அமர்ந்து “தந்தையே போகாதீர்கள்! திரும்பி வாருங்கள்!” என்று உரக்க கத்தினால் தந்தை உயிர் பிழைத்துக் கொள்வாரென கருதுவதும் அவர்களிடையே நிலவிய நம்பிக்கைகளுக்கு உதாரணமாக இருக்கின்றன. மாதவிலக்கு சமயங்களில் வீட்டுப் பொறுப்புகளிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்பவளாகவும் கணவனுக்கு அடி பணியாதவளாகவும் ஸூ யுலான் இருந்தாலும் சமூகத்தில் பெண்களின் நிலை வரவேற்கத்தக்கதாக இல்லை. ஆண் குழந்தை பெற்றெடுக்காத பெண்களையும்  விதவைகளையும் கீழாகப் பார்க்கும் போக்கு இயல்பான ஒன்றாக இருந்துள்ளது.

கலாசாரப் புரட்சியின் விளைவாக உருவான கையில் சிவப்பு நாடா கட்டிய செம்படையினர் ஒரு பண்ணையார், ஒரு பணக்கார விவசாயி, ஒரு வலதுசாரி, ஓர் எதிர்ப்பாளன், ஒரு விபச்சாரி ஆகியோரைத் தங்களது அனைத்துப் போராட்டக் கூட்டங்களிலும் நிற்க வைக்கிறார்கள். விபச்சாரியாக ஸூ யுலானை நிற்கச் செய்கிறார்கள். ஸூ யுலானின் முதல் மகன் யீலியை தனது கணவனுக்குப் பெற்றெடுக்காமல் தனது காதலனுக்குப் பெற்றெடுத்ததுதான் அவளது வேசி பட்டத்திற்கான காரணமாகும். திருமணத்திற்கு முன்பு அறியாமல் அவள் செய்த பிழைக்காக இடது பக்க முடியை மழித்து அவளை அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் இதே பிழையைச் செய்யும் அதாவது வேறு ஒருவனின் மனைவியோடு தகாத உறவுகொள்ளும் ஸூ ஸன்க்வானோ தண்டனை எதுவுமின்றி தப்பித்துக்கொள்கிறான். கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில் கம்யூனிஸமும் விதிவிலக்கல்ல என்பதை ஓர் அங்கதத்தோடு இந்நாவல் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

மாவோ என்ற தலைவனின் ஆட்சியின் கீழ் சீன தேசம் எதிர்கொண்ட புரட்சிகரமான சிந்தனைகளும் பொருளியல் கொள்கைகளும் மக்களது நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுத்திய விளைவுகள் நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாகவும் பிரதிபலிக்கின்றன. ஸூ ஸன்க்வானிடம் தொடர்ந்து லஞ்சம் பெறும் இரத்த அதிகாரி ஒரு கட்டத்தில் “இப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இனிமேல் மக்களிடமிருந்து ஒரு ஊசியோ நூலோகூட வாங்கிக்கொள்ள இயலாது” என்று சொல்லுமிடத்தில் தலைமையின் இடதுசாரி சிந்தனை கீழ்த்தட்டு மக்கள் வரை பரவி இருந்ததை அறிய முடிகிறது.

தொழில்மயமாக்கலையும் பொது மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மையையும் துரிதப்படுத்வதுன் வழியாக நில உடைமை சமூகத்தை பொதுவுடைமைச் சமூகமாக மாற்ற விரும்பிய மாவோ 1958ஆம் ஆண்டு அறிவித்த ‘Great Leap Forward’ பிரசாரத்தால் அனைவரும் எஃகு உருக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். எல்லா நிலங்களும் அரசுக்குச் சொந்தமாகின்றன. இதனால் பட்டுத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த கதை நாயகன் ஸூ ஸன்க்வான் உருக்கு பணியாளனாக மாறுகிறான். இப்பிரசாரத்தின் விளைவாகவும் தொடர் இயற்கை சீற்றங்களாலும் சீனா 1959 முதல் 1961 வரை கிட்டத்தட்ட நாற்பத்தைந்து மில்லியன் மக்களைக் காவு வாங்கிய வரலாற்றின் மிகப் பெரிய பஞ்சத்தைச் சந்திக்கிறது. தொடர்ந்து ஐம்பத்தேழு நாட்கள் தினமும் இரு வேளை சிறிதளவு சோளக்கஞ்சி மட்டும் குடித்தும் அசையாமல் பேசாமல் படுத்துக்கிடப்பதன் வழியாகப் பசியைக் குறைத்தும் இரத்தம் விற்றும் பஞ்சத்தை எதிர்கொள்கிறான் ஸூ ஸன்க்வான்.

முதலாளித்துவ மற்றும் மரபார்ந்த எச்சங்களை நீக்கி சமூகத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கிலும் மாவோயிசத்தை வலுவாக நிலைநாட்டும் நோக்கிலும் 1966 முதல் 1976 வரை மாவோவால் அறிமுகப்படுத்தப்பட்ட கலாசார புரட்சியால் ஸூ ஸன்க்வான் இரத்தம் விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மிகவும் கீழ்நிலையிலுள்ள விவசாயிகளுக்கு புனர் கல்வி அளிப்பதற்காக கல்வி பெற்ற மாணவர்களை கிராமங்களுக்கு அனுப்ப வேண்டுமென தியான்மென் சதுக்கத்தில் மாவோ அறிவிக்க ஸூ ஸன்க்வானின் மூத்த மகன் யீலி கிராமத்திற்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. கிராமத்துச் சூழலும் கடின உழைப்பும் யீலியின உடல்நலனைச் சீர்குலைக்க தனது மகனை நோயிலிருந்து மீட்டெடுக்க ஸூ ஸன்க்வான் பலமுறை இரத்தம் விற்கிறான். இப்படியாக மாவோ சீனாவில் உருவான அனைத்து அரசியல் சமூக  மாற்றங்களும் சாதாரண மனிதனான ஸூ ஸன்க்வானின் வாழ்வில் நிகழ்த்திய கொடுமைகளை நாவல் விரிவாகப் பேசுகிறது.

மூத்த மகன் யீலி தனக்குப் பிறக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தாலும் அவன் மீது அளவற்ற பாசம் வைத்து வளர்க்கிறான் ஸூ ஸன்க்வான். தனது மூன்று மகன்களில் அவனுக்காகத்தான் அதிக முறை இரத்தத்தை விற்கிறான். ‘யீலியின் அப்பா ஸூ ஸன்க்வான் இல்லை’ என்று பழிக்கும் ஊர் மக்களுக்கு முன்பாக தனது கன்னத்தைக் கீறி அதிலிருந்து வழியும் இரத்தத்தைக் கையில் எடுத்து அதன் சாட்சியாக ‘இனிமேல் யீலி என் மகன் அல்ல என்று யாரும் எப்போதும் சொல்லக்கூடாது’ என அறிவிக்கிறான். இரத்த சம்பந்தமே இல்லாத யீலிக்கும் ஸூ ஸன்க்வானுக்கும் இடையேயான உறவு இரத்தத்தைவிட அன்பும் நேசமும் அதி அற்புதமானவை என்பதை வேறோரு கோணத்தில் புரியவைக்கிறது.

நாவலில் மனதை நெகிழச் செய்யும் ஓரிடம் உள்ளது. அது பெரும் பஞ்ச காலம். தனது பிறந்தநாளை ஒட்டி மூன்று மகன்களுக்கும் விருந்து தர விரும்புகிறான் ஸூ ஸன்க்வான். “நான் என் வாயால் உணவைச் சமைத்து தருகிறேன். அதை உங்கள் வாயால் தின்ன முடியாது. ஏனென்றால் தின்பதற்கு எதுவுமில்லை. அதை நீங்கள் உங்கள் காதுகளால் சாப்பிடலாம். அதனால் கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்” எனச் சொல்லி ஒவ்வொரு மகனுக்கும் அவர்கள் விரும்பும் உணவைத் தனது வாயால் தயாரித்துத் தருகிறான்.

மக்கள் இலக்கியமாகத் திகழும் இந்த ‘இரத்தம் விற்பவனின் சரித்திரம்’ நாவலும் எளிய மக்களின் வறுமையையும் அவர்களது வாழ்க்கைப்பாட்டையும் எழுத்தின் வழியாக சமைத்துத் தருகிறது. இச்சமையலை கண்களால் உண்ணாமல் மனதால் உண்டால் சீன தேசத்தில் ஒரு பெரும் வாழ்வை வாழ்ந்த சுவையும் நிறைவும் நமக்கு கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...