நாரின் மணம்: கடக்க முடியாத காலம்

04picம.நவீனின் பல்வேறு புனைவுகளை வாசித்துள்ளேன். அவ்வகையில் கவிதை மொழி வேறு விதமாகவும், சிறுகதை நடை மற்றொரு விதமாகவும் இருக்கும். இதில் பத்தி எழுத்து முற்றிலும் மாறுபட்டது என ‘நாரின் மணம்’ நூலின் வழி அறிந்தேன். மிக எளிமையான எழுத்து நடையில் இன்பம், துன்பம், நடிப்பு, நக்கல், அதிர்ச்சி, ஆச்சரியம் போன்ற பல்வேறு உணர்வுகளை கலந்து சுவாரசியமாகப் படைக்கப்பட்டுள்ளது இந்த நூல். இது அவரது இரண்டாவது பத்திகள் நூல். முதல் பத்திகள் தொகுப்பு 2014இல் கடக்க முடியாத காலம் எனும் தலைப்பிட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. அத்தொகுப்பில் இருந்த ஓரிரு பத்திகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பத்து பத்திகளையும் முன்னமே அது எழுதப்பட்ட காலக்கட்டங்களில் தனித்தனியாக வாசித்திருக்கிறேன். இம்முறை தொடர்ச்சியாக பத்து பத்திகளையும் அடுத்தடுத்து வாசித்து முடிக்கையில் சிறு வயது முதல் நவீனுடனே அவர் குடும்பத்தில் வாழ்ந்ததை போலவும், அவரோடு அதே பள்ளியில் நானும் பயின்றதை போலவும், நானும் ஓர் ஆசிரியர் போலவும் அவர் கதைகள் என்னது போலவும் ஓர் உணர்வு உண்டாகியது.

நவீனின் சிறுகதைகளை வாசித்தவரை காட்சிகளை வாசிப்பவரின் கண்களுக்கு எதிரில் நிறுத்துவதில் அவர் வல்லுநர் என்பது என் அவதானிப்பு. சிறந்த கதைசொல்லிக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கிய திறனாம்சம் அது. அவரது பத்திகளும் ஒரு கதை சொல்லல் முறையே என்பதன் அடிப்படையில் இவ்வாம்சம் இந்நூலிலும் இடம்பெற்றுள்ளது என்பதை உணர்த்தியுள்ளது. சின்ன சின்ன விடயங்களையும் வண்ண வண்ண தோரணைகளில் புட்டு புட்டு வைத்துள்ளார்.

தசாவதாரம் படம் போல பத்து வெவ்வேறு தலைப்புகள் இதில் இருந்தாலும் ஒவ்வொரு பத்தியிலும் கதாபாத்திரத்தை உள்நோக்கும்போதும் அதில் வெவ்வேறு பரிணாமங்கள் தலை காட்டுகிறது. நமக்கு அறிமுகமில்லாத ஒன்றை துள்ளியமாக அறிமுகப்படுத்த; நமக்கு அறிமுகமானதிலிருந்தே நவீனுடைய எழுத்து தொடங்கும். நம் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே அழைத்துப் பக்கத்து குடியிருப்பில் உள்ள பால்கனியில் அமர்ந்திருப்பதுபோலதான். இந்த உத்தி கவரும்படியே இப்பத்திகளில் கையாளப்பட்டுள்ளது.

தொகுப்பில் முதல் பத்தி ‘நானும் சில சாமியார்களும்’ நூல் நன்றாக விற்றுத் தீர வேண்டும் என்ற எண்ணத்தில் சாமி தலைப்பில் தொடங்கியுள்ளார் என நினைத்துவிட வேண்டாம். நவீனுக்கு மத, சடங்கு நம்பிக்கைகள் கிடையாது என்பதை ஒரு நண்பர் என்ற அடிப்படையில் அறிந்தவன் நான். இறையருள் பற்றிய அறியாமையினால்தான் அவருக்கு அவநம்பிக்கை என இப்பத்தியை வாசித்த நிமிடம் வரை நினைத்திருந்தேன். ஆனால் அவருக்கு சமயம், மதம், கடவுள் குறித்த வேறொரு புரிந்தல் உள்ளது இப்பத்தி விளக்கியது.

முருகர் விநாயகரில் தொடங்கி, புத்தர், ஓஷோ, தன்முனைப்பு பயிற்சி, குருமார் போதனையென அத்தனையையிலும் நுழைந்து ஓரளவு அறிந்த பிறகும் அவரின் தேடலுக்குப் பதில் கிடைக்காததால் மனிதம் மட்டுமே ஆன்மிகம் எனும் முடிவுக்கு வந்துள்ளார். பத்தியின் இறுதியில் தனக்கென்று வெறுமனே இருந்துவிடாமல் பிறருக்காக (எவ்வித எதிர்பார்ப்புமின்றி) சேவைகளை புரியும் மனமே தெய்வீகமானது என சொல்லாமலே உணர்த்துகிறார். மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிற நோயாளிகளுக்காக சேவையாற்றும் தமிழ் இளைஞன் வழி நாமும் உணர முடிந்த உண்மையது. இந்தச் சம்பவமே பின்னர் அவரது கூலி எனும் சிறுகதை உருவாகக் காரணம் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

தொகுப்பில் இரண்டாம் பத்தி ‘அவதாரும் ஆத்தாவும்’. ‘அவதார்’ உலகத்தையே கவர்ந்த திரைப்படம் ஆயினும் இத்தொகுப்பில் அடியேனை வெகுவாக கவர்ந்தவர் ஆத்தாதான். நவீன் எனும் அற்புத படைப்பாளியை விதைத்தவர் இவரே என்பதை இத்தொகுப்பில் பல இடங்களில் உணர தோணுகிறது. அதனாலேயே தனது முதல் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’யை ஆத்தாவுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார் எனப் புரிந்துகொண்டேன்.

அவதார் திரைப்படத்தில் ‘இந்த வனம் தங்களுக்கும் சொந்தமானதுதான் என விலங்குகள் வந்து யுத்தம் செய்வதைப்போல… தாங்கள் வளர்த்த விலங்குகள் யாவும் பலவந்தமாக பிறரிடத்தில் விற்கப்பட்டும் நேரத்தில் ஏற்படும் மனநிலையோடு ஒப்பிட்டுக் காட்டியது பத்தியின் பலம். வாசித்து முடித்த பிறகு, ஆத்தா வளர்த்த பூனைகள், பறவைகள், கோழிகள், ஆடுகள், நாய்கள், ஆங்சா யாவும் எங்கள் வீட்டுக்குள் புகுந்து என்னை சுற்றி மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஆத்தா அமைதியான வனராணி அவதாரத்தில் அவைகளுக்கு மேய்ச்சல் காட்டிக்கொண்டிருந்தார்.

பூனைகள் குட்டிப் போட்டதும் மருந்தென்ற ஒரு குட்டியை சாப்பிட்டு விடுவதற்கும், சிறு வயதில் இறந்துபோன ஆத்தாவின் மூன்றாவது மகன் சுப்ரமணியத்திற்கும் முடிச்சி போட்டது வலிக்க வைக்கும் வலிமை எழுத்து.

42195067_2125640890782311_2337655256449548288_n

ம.நவீன்

‘நடை’ மிஷ்கினின் நந்தலாலா திரைப்படத்தில் வரும் கதை போல நவீனுடைய மாணவன் சரவணனுக்கும் ஒரு கதை இருக்கிறது. படத்தில் அம்மாவின் தேடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சரவணனுக்கு தனக்கென்ற ஒரே பந்தமான பாட்டியை நோக்கிய தேடல். 50 கிலோமீட்டர் தொலைவு பாட்டியை நாடி நடந்தே போன சரவணன் இப்பத்தியை வாசிப்பவர்களின் மனதை விட்டும் இனி அகழப்போவதில்லை. பாசம் அசாத்தியங்களை தோற்கடிக்கும். சரவணனின் தேர்வு முடிவுகள் அவ்வாறானதே.

அவனுக்கான உலகம் அவனின் பாட்டி என்ற ஒரே கண்ணாடி தரைதான். அது நொறுக்கப்படும்போது அவன் எப்படி தன்னைக் கட்டமைக்க முனையும் கல்விச்சூழலை உடைக்கிறான் என இதில் பதிவு செய்துள்ளார். சரவணனின் எதிர்காலம் எப்படியானதாய் இருந்திருக்குமோ? எனும் கவலையுடன்தான் இப்பத்தியை வாசித்து முடித்த பின் தோன்றியது.

தன் அனுபவம் மட்டுமல்லாமது தன்னைக் கவர்ந்த திரைப்படங்கள் குறித்து எழுதுவதும் நவீனுடைய வழக்கம். சாமிப்படங்களில் கடவுளை நம்பாதவர், நம்புபவருக்கு நடந்த கதைகளை கேட்டு, இறுதியில் அவர்களும் நம்பிவிடுவது என்ற பாணியில் தான் ‘Life of Pi ‘ திரைப்படத்தின் கதையம்சம் என்று குறிப்பிடும்போதே ‘இறுதி கையசைப்பு’ பத்தி வாசிப்பு ஆர்வமாகிறது.

ஒரே படகில் எந்த நொடியிலும் தன் உயிரை சூறையாடி விடக்கூடிய புலியுடன் பயணித்து அனுசரித்து அன்பளித்து இறுதியில் தப்பித்துவிடும் இடத்தில புலி அதன் இயல்பு நிலைக்கு திரும்பி காட்டுக்குள் ஓடுகிறது, மனிதனோ அன்பின் அடிப்படையில் தன்னிலையிலிருந்து பிரியும் புலியிடத்திலிருந்து ஓர் இறுதி கையசைப்பையாவது எதிர்பார்க்கிறான் என நவீன் தன் பார்வையில் இத்திரைப்படம் குறித்து எழுதியுள்ளார்.

புலி புலி தான்; மனிதன் மனிதன் தான் என்பதை அழகாக சொல்லியுள்ள காவியம் அது. இக்கதையில் புலியும் pi யும் ஒன்றாக பயணிக்கும் அந்த 227  நாட்கள் தான் கதையின் பலம். புலியிடம் அவன் பலியாகாமல் அதன் உயிரை இவன் காப்பாற்றும் நிலை அன்பின் பிணைப்பில் நிகழ்ந்ததா? அல்லது இறைவனின் அருளால் அமைந்ததா? என்ற வினாவுடன் தான் இப்பத்தியை எழுத முன்வந்துள்ளார் நவீன் என்பது புரிகிறது. ஆனால் இறுதியில் மனிதனுக்கு இருக்கும் அன்பு அவனது பலமா பலவீனமா எனும் கேள்வியுடன் முடிகிறது.

தொகுப்பின் ஐந்தாவது பத்தி ‘பேய் வீடு’. மிகவும் தமாசான பத்தி இது. பேய் என்பதே கேள்விக்குறியானது. அதைப்பற்றிய கேள்விகளே பேயைப் பலமாக்கி விடுகிறது எனலாம்.

‘மனிதன் வாழ்வை பேய்கள் சுவாரசியப்படுத்துகின்றன. தனது கற்பனைக்கு எட்டியவரை மனிதன் பேய்களின் உருவங்களை உருவாக்குகிறான். அவற்றிற்கு சக்தியைக் கொடுக்கிறான். பின்னர் அவனே அதற்கு பயப்படுகிறான்.’ என மிக எதார்த்தமாக சொல்லியுள்ளார் நவின்.

அவரால் மறக்க இயலாத அந்த இரண்டு பேய் கதைகளும் பேய்களே இல்லை என சொல்லிக்கொண்டு திரியும் யாவரும் அவர் எழுத்து நடையில் கட்டாயம் வாசித்து பயப்பட வேண்டிய முக்கிய கதைகள் என்பதால் இங்கு அது குறித்து பதிவு செய்ய வேண்டாம் என நினைக்கிறேன்.

‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ என்ற தலைப்பிலான பத்தி, சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் செய்யாத ஒரு குற்றத்திற்காக தூக்கு தண்டனையை சந்திக்கவிருக்கும் மன்சூர் என்பவரைப் பற்றியது. நவீனின் பேட்டியை மின்னல் பண்பலையில் செவிமடுத்து, தொடர்பு எண்களைக் குறிப்பெடுத்து தொடர்புக் கொண்டு, தான் கடந்த ஐந்தாண்டுகளில் ஆறு நாவலை எழுதி பிரசுரிக்காமல் வைத்திருப்பதாக சொல்கிறார் மன்சூர். அவரைச் சந்தித்து அந்நாவல்களைப் பெறுகிறார் நவீன்.

தமிழகத்தை சேர்ந்த மன்சூர் வியாபார ரீதியில் அடிக்கடி சிங்கப்பூருக்கு வந்து போகிறவர். பொருளாதார சிக்கலால் ஏதாவது வேலை தேடி செய்யலாம் என மலேசியாவுக்கு நுழையும்போது யாரோ ஒரு ஏமாற்றுக்காரர் கொடுத்த பையை நம்பிக்கையின் பேரின் உடன் கொண்டு வந்து, அதில் போதைப்பொருள்  இருந்ததால் நம் நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அது உண்மையென்ற பட்சத்தில் மன்சூரின் எழுத்து எப்படி வலி கொடுக்க கூடியவையாக இருக்குமோ என்ற எண்ணத்தில்தான் அந்நாவல்கள் நவீனால் வாசிக்கப்படுகிறது.

ஆனால் மன்சூரின் படைப்புகள் வல்லினத்தால் பிரசுரிக்கப்படும் தன்மையின்றி இருப்பதை உணர்ந்து ஏமாற்றம் அடைகிறார். நாவல் பிரசுரம் குறித்து மன்சூர் அழைத்தால் அழைப்பை மறுக்கிறார். மரணத்தின் வாயிலில் உள்ளவரிடம் தனது விமர்சனம் அவசியமா என நினைத்தவர் அந்த அழைப்பை இனி எப்போதும் எடுக்கப்போவதில்லையோ என நினைக்கையில் அவருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்ததாக முடிக்குமிடத்தில் நம்மையும் மன்சூருக்காக அழச் செய்துவிடுகிறார்.

கெட்ட வார்த்தையைத்தான் ‘கச்சடாப் பேச்சு’ என நவீனின் ஊர் பாஷையில் ஒரு பத்திக்குத் தலைப்பு வைத்துள்ளார். தோட்டத்திலிருந்து வந்த நண்பர்களின் வாயிலாகத்தான் நவீன் முதல் கச்சடாப் பேச்சுகளை காதில் கேட்டுள்ளார். அதே நண்பர்களே பிறர் அவைகளை பயன்படுத்தினால் காட்டியும் கொடுக்கும் வல்லுநர்கள் எனவும் சொல்லும்போது சின்ன வயது நண்பர்கள் சிலர் நினைவுக்கு வருகின்றனர்.

‘காதல்’ என்ற சொல்லே பெரிய கெட்ட வார்த்தை என்ற நெருக்குதலுக்கு ஆளாகியிருந்த அதே நவீன் பிரிதொரு நாளில் புதிய கெட்ட வார்த்தைகளை கண்டுபிடிக்கும் அளவிற்கு கச்சடாப் பேச்சில் நிபுணத்துவம் பெற்றுள்ளார் என்பதும்; புழக்கத்திலிருக்கும் கெட்ட வார்த்தைகளின் மூலச் சொற்கள் யாதென்ற கண்டுபிடிப்பில் இறங்கியிருந்ததும் வியப்படையச் செய்கிறது.

‘லி’ என்ற சொல் விளையாட்டோடு வந்த நண்பரைப் போல பலர் நவீன் வாழ்வில் கச்சடாப் பேச்சு பயிற்சியாளர்களாய் வளம் வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

பத்தியின் இறுதியில் ‘ஆதிக்க சாதியினர் இன்னொரு சமூகக் குழுவை பகடி செய்யவே கெட்ட வார்த்தைகள் உபயோகிக்க படுகின்றன’ என்ற கருத்தை முன்வைத்திருப்பது சிந்திக்கச் செய்கிறது. அது குறித்து ஆராய வேண்டும் என்றும் தோன்றுகிறது.

‘களவெனும் கலை’ திருடர்கள் சார்ந்த பத்தி. சிறு வயதில் திருடர்களை எண்ணி அஞ்சிய அனுபவங்களை மிக நகைச்சுவை தன்மையுடன் எழுதியுள்ளார். திருடன் வீட்டில் புகுந்துவிட்டால் எங்கு சென்று ஒளிந்துகொள்ளலாம் என்ற இரகசிய இடத்தை பார்த்து வைத்திருந்தது, மற்றும் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாய்களும் ஆங்சாகளும் சண்டையிட்டுக்கொள்வதில் வீட்டை காவல் காப்பதை மறைந்திருக்கும் என குறிப்பிட்டது போன்றவை குபீரென சிரிக்க வைத்த இடங்கள்.

பி.ராம்லியின் அலிபாபா படத்தைப் பார்த்த பிறகு திருடர்களையும் திருட்டு கலையையும் இரசிக்க தொடங்கியதாக சொல்லியிருப்பது எதிர்பாராதது. திருடு பற்றி வெளிவந்த அக்காலத்துப் படங்களிலும் கதைகளிலும் இடம்பெற்ற பகடிகளும் நுணுக்கங்களும் திருடர்கள் மீதான அச்சத்தை தகர்த்து திறன்பட திருடும் சம்பவங்களை ரசிக்கும்படி செய்துள்ளது.

‘திருடுவது என்பது அவன் தொழிலின் சவால். அதற்கு முன்பான நுண்ணிய ஆயுதங்களும், சுவடு தெரியாமல் ஒரு வீட்டில் நுழைவதும் மீள்வதும் தான் அவன் தொழிலுக்கான கௌரவம். முற்றிலும் கலை உணர்ச்சி இல்லாத திருடர்கள் மட்டுமே பிற மனிதர்களை காயம் செய்து பயமுறுத்துகிறார்கள்’

‘எல்லா கலைத்துறையையும் போலவே அசலான, நுட்பமான கலைஞர்கள் திருட்டுத்தொழிலும் அருகி வருவதை உணராத தேசம் ஆபத்தானது தெரிகிறது’

ஆகிய பகுதிகளை வாசிக்கையில் முறையான திருட்டுகள் மீது ஏதோவொரு மரியாதை ஏற்படுகிறது.

‘காக்க காக்க கனகவேல் காக்க’ தொகுப்பில் சுவாரசியமான தலைப்பு. தனது ஏழாவது வயதிலேயே கந்த சஷ்டி கவசத்தையும் சிவபுராணத்தையும் மனனம் செய்வதென்பது எளிதல்ல. நவீனுக்கு அது திக்காமலும் வந்திருந்தது என்பது பாராட்டுக்குரியதே.

இருந்தாலும் முதலாம் வகுப்பு ஆசிரியை ருக்குமணியைப் பார்த்து அவ்வளவு பயந்திருக்க தேவையில்லை. அதுவும் மாதக்கணக்கில் என பத்தியைப் படித்து முடித்த பிறகு சிரித்தபடி எண்ணிக்கொண்டேன். இறுதியில் சித்தி சொல்லித்தந்த “கியா கியா கோழிக்குஞ்சு” பாடலையும் கந்த சஷ்டி கவசத்தையும் பாடி அந்த ஆசிரியையை நெகிழ்ச்சி செய்த இடம் சிறப்பு.

‘அம்மா சொன்னது போலவே கந்த சஷ்டிக் கவசம் என்னைக் காத்ததில் நானும் அவ்வமயம் முருக பக்தனாகியிருந்தேன்’ என்ற முடிவு இப்பதிக்கான தலைப்பை அலங்கரித்தது.

தொகுப்பில் இடம்பெற்ற இறுதிப் பத்தி ‘தோலிருக்க சொளை முழுங்கி’. இப்பதியில் மீண்டும் ஆத்தா அவதரிக்கிறார் இன்னும் உக்கிரமாக. உலகமே ஈசாப் கதைகளையே அதிகமாக அறிந்திருந்த காலக்கட்டத்தில் ஆத்தா தனக்கு தோட்டத்து பெருசுகள் வாய்வழியாக சொன்ன கதைகளால் நவீனின் இரவுகளை அர்த்தமாக்கியுள்ளார்.

ஆத்தாவைப் போல கதைகளை சொல்லும்போது கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தன் குரலை மாற்றிக்கொண்டும் தக்க முகபாவனையுடனும் கதை சொல்லும் பாட்டிகளெல்லாம் இப்போது இல்லை. புதிய கதை சொல்லிகளின் பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணம் போல.

ஆத்தாவுக்கு தெரிந்த மூன்று நான்கு கதைகளில் ‘தோலிருக்க சோலை முழுங்கி’ என்னையும் இரசிக்கச் செய்தது.

வீடு இடமாற்றம் கண்ட பிறகு ஆத்தா கதைகள் சொல்வதை நிறுத்திவிட்டதையும் ஈசாப் தனது இறுதிக் காலத்தை சிறையில் கழித்ததையும் கோர்த்து, ஆத்தாவுக்கும் நவீனக் குடியிருப்பு சிறையாகவே தெரிந்திருக்கலாம் என குறிப்பிட்டிருப்பது ஆழம்.

நாம் 70ஆம் – 80ஆம் ஆண்டு கால பிள்ளைகளாக இருந்தால் நமது கடந்த கால வாழ்க்கையில்

கலை சேகர்

கலை சேகர்

அனுபவித்த சூழல்களின் மீதான ஏக்கங்களை ‘நாரின் மணம்’ நிச்சயமாக தணிக்கும். பின்னோக்கி சென்று சில மணித்துளிகள் வாழ்ந்து வந்த அனுபவத்தை இது நிச்சயம் கொடுக்கும். அதற்கடுத்த தலைமுறையினர் வாசிக்கையில் தாங்கள் தங்கள் வாழ்நாளில் காண இயலாத அரிய விடயங்களை இந்தத் தொகுப்பின் வழி அனுபவித்து மகிழலாம்.

அந்த அனுபவமே இன்றைய வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளவும் உள்ளுணர்ந்து வாழவும் வழிவகுக்கலாம்.

1 comment for “நாரின் மணம்: கடக்க முடியாத காலம்

  1. கலைசேகர்
    September 1, 2019 at 1:26 pm

    வாய்ப்புக்கு நன்றி வல்லினம். விமர்சனம் தொட்டு பிறரின் கருத்துகளையும் ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கிறேன். நனறி

Leave a Reply to கலைசேகர் Cancel reply