விஜிப்ரியா கவிதைகள்

அப்பாவின் வீடுindex

கல்யாணத்திற்கு பிறகான
அப்பா என்ன செய்வார்?
வீட்டிற்கு வரும்போது வாஞ்சையுடன் பைகளை வாங்கி கொள்வாரா?
எனக்கு பிடிக்குமென பக்குவமாக சமையல் செய்வாரா?
வயிற்று பிள்ளைகாரியான
என் கால்களை முன்புபோல பிடித்து விடுவாரா?
பிள்ளையின் உச்சி முகர்ந்து முத்தம் வைத்திருப்பாரா?
வலியால் முனகும் போது, தலைமேல் கை வைத்துவிடுவாரா?
எனக்காய் படுக்கையை தட்டி தயார் செய்வாரா?
ஊருக்கு போகும்நாளில்
ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனி ஆவாரா.

___________________________________________

பிரியத்தை, வலியை
துயரத்தை,ஏமாற்றத்தை,  துரோக்கத்தை,பிரிவை
பரிமாற
பாலினம் கடந்து தழுவி கொள்வோம்.
அதில் நான்
பிரக்ஞை தொலைந்த
காற்றாய் மாறி
மீண்டும் காத்திருப்பேன்
_____________________________________________

பிரியமான முத்தங்களை
கைபிடித்து  வந்த கணங்களை,உரசல்களை,
காமத்தின் நினைவுகளை
என பேசிகொண்டே இருப்போம்.
முடியும் நாள்வரை ஒன்றாய்
பின் ஒரு நாளில் முத்தங்களோடு
கைபிடித்து செல்வோம்
அதுவரை  பிரிவை பேசாதிருப்போம்.

_____________________________________________

மெல்லிசையின் பிரவாகமாய்
நிலவின் வெண்சுடராய்
கரும் பச்சையென புல்விரிப்பாய்
மககோனி இலையின் ஊடாய் மின்னும் நட்சத்திரமாய்
நீலவான வயிற்றின் விமான வரியாய்
பொங்கும் நுரையைனெ
என்னுள்
நுரைத்து தளம்பினாய்.

______________________________________________

 

 

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...