கடவுளின் மலம்

0005அப்பா வரும் நேரம் ஆயிற்று. அவர் வரும்போது படிப்பதுபோல பாவனை செய்தே ஆகவேண்டும். எனக்குத் தெரிந்த கலைகளில் முக்கியமானது படிப்பதுபோல பாவனை செய்வதுதான். ஈர வேட்டி சரசரவென தொடைகளில் உரச தோளில் துண்டும் இரு கைகளையும் மறைக்கும் விதமாக கை முழுக்க ஒற்றைச் செம்பருத்திப் பூக்களை முத்தாப்பிள்ளை தோட்டத்தில் பறித்துக்கொண்டு நடந்து வரும் நேரம் இது. நாள் தவறாது நடக்கும் செயல். தூரத்திலிருந்து பார்க்கையில் தீச்சட்டி ஏந்தி வரும் தோற்றத்தைத் தரும். அடுக்கு செம்பருத்திகளை விட ஒற்றைச் செம்பருத்திதான் அப்பாவுக்குப் பிடித்தமான நிறம். அதன் செந்நிற வாயில் இருந்து தீச்சுவாலை போல எழுந்து வரும். மகரந்த இழை ஒவ்வொன்றும் யானைத் தந்தம் போல ஒய்யாரமாக வளைந்திருக்கும். அடுக்குச் செம்பருத்திக்கு உறைந்த ரத்தத்தின் நிறம். ஒற்றைச் செம்பருத்திக்கு அப்போதுதான் உடலிலிருந்து வெளியேறிய ரத்தத்தின் நிறம். நான் கூட ஒற்றைச் செம்பருத்தியின் நிறத்தைக் கண்டு சற்று நேரம் மெய்மறந்து நிற்பதுண்டு.

எழுந்ததும் கத்தரி சிகரெட் ஒன்றைப் பத்திக்கொண்டு வாய்க்கால் சென்றுவிடுவார் அப்பா. வீட்டில் கழிவறை கிடையாது. உள்ளுக்கு ஒரு குளியலறை மட்டும் உண்டு. அதில் குளிப்பதில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. கடும் கோடைகாலத்தில் கூட வாய்க்காலில் சன்னமாக நீர் ஓடிக்கொண்டிருக்கும். காலைக்கடன் முடித்து முத்தாப்பிள்ளை வீட்டுக்காடு தொடங்கும் வரப்பில் நடப்பார். சில நேரங்களில் மோட்டார் ஓடிக்கொண்டிருக்கும் தொட்டி வழிந்து வாய்ப்புறமாக அருவி போல குதித்து கரும்புக்காட்டுக்கோ, நெல் வயலுக்கோ செல்லும். இல்லையென்றாலும் அப்பா தலை தெரிந்ததும் சிலோன் ஓடிப்போய் மோட்டாரை போட்டு விடுவார். குளித்துச் சென்றதும் மோட்டாரை நிறுத்தி செய்துகொண்டிருந்த வேலையை தொடர்வார். சிலோனுக்கு அவ்வப்போது புகையிலைப் போட சில்லறைக்காசு கொடுப்பதன் விசுவாசம் அது. போக அப்பாவுக்கு மின்வாரியத்தில் பணி என்பதால் முத்தாப்பிள்ளையே சிலோனிடம் “அய்யா வந்தார்னா மோட்டார போட்டு விடு” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

சிலோன் என்பவர் சிலோனிலிருந்து வந்தாரா அல்லது எங்கிருந்து வந்தார் என யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோருக்கும் அவர் பெயர் சிலோன்தான். வெயிலில் காய்ந்து சூம்பிய தர்பூசணி போல வடிவமற்ற முகம். தலைமுழுக்க நரைத்த மயிர். திசைக்கொன்றாக விரைத்து நிற்கும் தாடி மயிர். வாயில் எந்த நேரமும் கோலிசோடா அளவுக்கு பசு மார்க் புகையிலையை மென்று கொண்டிருப்பார். காட்டிலிருந்து ஊருக்குள் இருந்தது முத்தாப்பிள்ளை வீடு. சிலோனுக்கு மோட்டார் ரூமில்தான் படுக்கை. வெயில் தின்று கறுத்த உடல், வெளிரிய நெஞ்சு முடிகள். எப்போதும் அரையில் ஒரு காக்கி டவுசர். எப்போதாவது சட்டை அணிவதுண்டு. சிலோன் யாரிடமும் பேசியதில்லை. ஆனால் பேச்சுத்திறன் உண்டு. கொஞ்சம் செவிடு.

வீட்டின் சாமியறையில் சுவரே தெரியாத அளவுக்கு கடவுளின் படங்களை மாட்டியிருந்தார். சபரிமலைக்கு மாலை போட்டு இறங்கும்போதெல்லாம் ஒரு பிரம்மாண்ட கடவுளின் ப்ரேம் போட்ட சட்டகம் இடம்பிடித்துவிடும். ஒரு முறை மாலை போட்டிருக்கும்போதுதான் அப்பாவின் அப்பா இறந்துபோனார். அந்த முறை கடவுளின் படத்துக்குப் பதிலாக தாத்தாவின் போட்டோவையே அங்கு மாட்டிவிட்டார். கிட்டத்தட்ட எல்லா கடவுளரின் போட்டோக்களும் இருந்தன. ஆனால் சிவன் படம் மட்டும் இல்லை. சிவனை ஆலயத்தில்தான் வணங்க வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார்.  இத்தனை போட்டோக்கள் தொங்குவது வருடத்தின் ஒருநாளில் மட்டுமே எனக்கு சிக்கலைத் தந்தது. ஆயுத பூஜை அன்று எல்லா சட்டங்களையும் இறக்கி சுத்தமாக கழுவித் துடைத்து மாட்ட வேண்டும். எப்போதும்போலவே நான் சட்டங்களின் இடங்களை மாற்றித் தொங்கவிடுவேன். எவ்வளவு கவனமாக பார்த்து மாட்டினாலும் கூட தவறு நிகழ்ந்துவிடுவது ஒவ்வொரு வருட வாடிக்கை. நாள்பட்ட சுவற்றில் போட்டோ மாட்டியிருந்த இடம் மட்டும் வெளிறிக் காணப்படுவது எனக்கு உதவியாக இருந்தாலும் கூட சில கடவுளர்களின் சட்டங்கள் ஒரே அளவில் இருப்பதால் இடம் மாறிவிடுவதுண்டு. பிழையை மிக எளிதாக அப்பா கண்டுபிடித்துவிடுவார்.

ஒவ்வொன்றாக கழட்டி மாட்ட வேண்டும். பெரும் துயர சம்பவம் அது. நான் ஆயுத பூஜை என்ற பண்டிகையை வெறுக்க மிக முக்கியமான காரணம் இதுதான் என பின்னாளில் உணர்ந்துகொண்டேன்.

முத்தாப்பிள்ளை தோட்டத்தின் செம்பருத்தி மலர்கள் எல்லாம் போட்டோ மாட்ட வைக்கப்பட்ட வளையத்தில் ஒவ்வொன்றாக சொருகுவார். மீதமிருந்தால் காமாட்சி அம்மன் விளக்குக்கும் குத்து விளக்குக்கும் நடுவில் வரிசையாக வைத்துவிடுவார். உதடு முணுமுணுக்க பயபக்தியோடு சாமி கும்பிட்டு வெளியே வரும்போது ரேடியோவில் செய்தி வாசிக்கும் நேரம் சரியாக இருக்கும். வீட்டின் மிக இறுக்கமான நேரம் அதுதான். தாளிக்கும் ஓசையோ, பாத்திரம் உருளும் சத்தமோ, பேச்சுக்குரலோ அறவே இருக்கக்கூடாது. மீறினால் உக்கிரமான கோபம் வரும். இதுபோன்ற மிகச்சிறிய தவறுகளுக்கு அப்பா கடுமையாகக் கோபப்படுவார். கொலை போன்ற பெரிய குற்றங்களுக்கு எளிதில் மன்னிப்பை வழங்கிவிடுவார். ஒருமுறை அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டுபோய் முன் சக்கரத்தை பிழிந்த எலுமிச்சம்போன்ற வடிவத்தில் கொண்டுவந்தேன். இந்த உயிர் இன்று போய்விடும் என்று நினைத்திருக்கும்போது “பாத்து ஓட்டக்கூடாதா மடையா!” என்று சொல்லிச் சென்றுவிட்டார்

அஞ்சலை அக்கா காலையிலேயே மஞ்சப்பையை சுருட்டி கையில் வைத்துக்கொண்டு அப்பாவுக்காக காத்திருந்தாள். அவர் வெளியில் வரும் வரை ஓயாது பேசிக்கொண்டிருப்பாள். தலை தெரிந்ததும் பேச்சை நிறுத்தி வந்திருந்த காரணத்தை சொல்ல ஆரம்பிப்பாள். பெரும்பாலும் காடுகரை, வீடுவாசல் வாங்குவது பற்றியதாக இருக்கும்.

அஞ்சலையின் வீட்டுக்காரன் கலியபெருமாள். சவுதியில் இருக்கிறார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் வரவில்லை. பணம் மட்டும் வந்துகொண்டிருந்தது. கலியபெருமாளின் அப்பா இறந்த பிறகு நடந்த சொத்து பிரித்ததில் தகராறு நடந்தது. தம்பியான கலியபெருமாளுக்கு நிலம் ஒன்றும் கிடைக்கவில்லை. வீட்டை சரிபாதியாக வகுந்து பங்கிட்டுக்கொண்டனர். ஆறடி அகல வீட்டில் இருவர் நடந்து சென்றாலே உரசும். இருந்து இருந்து பார்த்து சவுதி கிளம்பிவிட்டார். பணம் சம்பாதித்து பாதி ஊரை வாங்கிவிடுவதென்று சபதம். பாதி இல்லையென்றாலும் நான்கைந்து வீடுகள், பத்து ஏக்கர் ஏரி பக்கமாக வாங்கிப்போட்டுவிட்டார்.

இப்போது சொத்து சேர்ந்துவிட்டது. ஆண்டு அனுபவிக்க பிள்ளைதான் இல்லை. “நீங்க ஒரு வார்த்தை எழுதிப்போட்டிங்கன்னா வந்துடுவாருங்க, யாருக்கு வேண்டும் பணம் காசி, இருக்கற காசி பணம் போதும். வந்துரச்சொல்லி காயிதம் போடுங்க” அஞ்சலை எப்போதும் வைக்கும் கோரிக்கை. அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கலியபெருமாளுக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. சவுதி போக ஏஜண்டுக்கு காசு கொடுக்கணும் என்றபோது அப்பாவிடம் வந்து நின்றவர் கலியபெருமாள். லோன் போட்டு நாற்பதாயிரம் கொடுத்தார். திரும்பி வந்துவிட்டது என்றாலும் இந்த பத்து வருடத்தில் கலியபெருமாள் சம்பாதித்தது அதைவிட பத்திருபது மடங்கு இருக்கும். அப்பா இன்னமும் அதே நிலையில்தான் இருந்தார். அதைக்குறித்து எந்தப் புகாரும் அவருக்கு இருந்ததில்லை.

கலியபெருமாள் அப்பாவுக்கு ஒரு டேப் ரிகார்டர் அனுப்பி இருந்தார். பாடல் கேட்கலாம், ரேடியோ கேட்கலாம் மேலதிகமாக நாம் பேசுவதை பதிந்து கொள்ளலாம். கலியபெருமாளுக்கு எழுதப்படிக்கத் தெரியாது ஆகையால் அவர் பேசியது கேசட்டில்  பதிந்து அனுப்புவார். யாராவது ஊர் திரும்புபவர் கையில் கொடுத்த அனுப்ப ஓரிரு மாதங்கள் கழித்து நம் கையில் கிடைக்கும். ஊரில் அவர் விசாரித்த ஆட்கள் சில நேரம் இறந்தே போயிருப்பார்கள். கேசட்டை  மறுபக்கம் திருப்பிப் போட்டு கேட்கும் அளவுக்கு மிக நீளமாக பேசி அனுப்பி இருப்பார் கலியன். அஞ்சலை சந்தைக்குப் போகும்போது எங்கள் வீட்டின் வழியாகத்தான் செல்ல வேண்டும். மாட்டு வண்டியில் முன்னமே கிளம்பி எங்கள் வீட்டில் அமர்ந்து கேசட்டைப் போடச்சொல்லி கேட்டுப்போவாள். முன்னரே கேட்ட கேசட்டுகளாக இருந்தாலும் திரும்பத் திரும்ப அவள் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தாள். சில நேரங்களில் இரண்டு வருடங்களுக்கு முன்பே அனுப்பிய கேசட்டுகளைக் கூட கேட்டுக்கொண்டிருப்பாள். உற்சாகமாக ஆரம்பிக்கும் பேச்சு எல்லாவற்றையும் தொட்டு ஊரில் இறந்தவர்களுக்காக கொஞ்ச நேரம் அழுது, பிறகு வீடு, மனை, நிலம் வாங்குவது தொடர்பான பேச்சு என நீளும், பெரும்பாலும் அவள் தனியாகத்தான் கேட்டுக்கொண்டிருப்பாள். அந்த நேரத்தில் மின்சாரம் போகும்போது மின்சார வாரியத்தில் வேலை செய்பவர்களைத் திட்டுவாள். “எங்க வீட்டுக்காரரே அங்கதான் வேலை செய்றார்” என்று சிரித்தபடி சொல்லிச் செல்வாள் அம்மா. “அய்யா ஆபிசர் வேலதான பாக்கறாரு” நான் காக்கி சட்ட போட்டு வேலை செய்றவங்களதாம்மா சொல்றேன் என்பாள் அஞ்சலை. கலியன் பேசிய அனுப்பிய பழைய கேசட்டுகளில் நாங்கள் மறுபதிப்பாக சினிமா பாடல்களைக் பதிந்து அவர் குரலை அழித்திருந்தோம். அஞ்சலை குறிப்பாக எங்களால் அழிக்கப்பட்ட கேசட்டுகளைப் போடச்சொல்லி கேட்கும்போதெல்லாம் “ரொம்ப பழசாகி டேப்பெல்லாம் அழிஞ்சு போச்சு” என காரணம் சொல்லிவிடுவோம். அதுபோல பத்துக்கும் மேற்பட்ட கேசட்டுகளில் சினிமா பாடல்களை பதிந்து அப்பா இல்லாத நேரங்களில் கேட்பதை நான், அக்கா, அண்ணன் என எல்லோரும் வழக்கமாக வைத்திருந்தோம்.

கடைசியாக அனுப்பிய கேசட்டில் ஆறுமாதங்களில் ஊர் திரும்புவதாக சொல்லியிருந்தார் கலியன். அந்த கேசட்டைத்தான் அஞ்சலை திரும்பத் திரும்ப போடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.  சரியாக ஊர் திரும்புவதாக சொல்லும் இடத்தில் கரைந்து அழத்தொடங்கி விடுவாள். கலியன் பேசும் வசனங்கள் எங்களுக்கு மனப்பாடம் ஆனது. அவள் கிராமத்தில் கலியன் ஊர் திரும்பும் செய்தியைக் கிட்டத்தட்ட எல்லோருக்கும் சொல்லியிருந்தாள். பிறகு வந்த ஒரு கடிதத்தில் எந்தத் தேதியில் வருகிறோம் என்றும் எழுதி இருந்தார். பஸ்சு, கார்ல ஏறினா மயக்கம் வந்துடுதுங்க, மெட்ராஸ் வரைக்கும் என்னால போகமுடியாது என அப்பாவையே ஏர்போர்ட் போய் கூப்பிட்டு வருமாறு தயக்கத்துடன் கேட்டுக்கொண்டாள் அஞ்சலை.

அப்பா மட்டும் செல்வதாக ஏற்பாடு ஆனது. தனியாகச் செல்லவேண்டாம் என அண்ணன்0006 அப்பாவோடு செல்லட்டும் என அம்மா சொன்னதால் அண்ணனும் அப்பாவோடு மெட் ராசுக்கு செல்வதாக முடிவானது. அண்ணன் அப்போது விவரம் தெரியும் வயது. வழியில் காணாமல் போனால்கூட வீட்டுக்கு வந்துவிடும் சாமர்த்தியம் உண்டு என அப்பாவும் நம்பினார். எனக்கும் அவ்வயது பூர்த்தியாகியிருந்தால் விமானத்தை அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கக் கூடும்.

அன்றிரவு எனக்கு தட்டான் மேல் அமர்ந்து பறப்பதுபோல கனவு வந்தது. தட்டான் விமானம் போலவும் நான் பயணி போலவும் என் பின்னால் கலியன் அமர்ந்திருக்கிறார். நாங்கள் வானில் பறந்துகொண்டிருந்தோம். அதுவரை விமானத்தை தட்டாம்ப்பூச்சி அளவில் கண்டிருந்ததால் எனக்கு நிஜ விமானம் கனவில் வரவில்லை. அண்ணன் எழுப்பிய பிறகுதான் கனவு கலைந்தது.

என் பின்புறம் அமர்ந்திருந்த கலியன் எதிரே அமர்ந்திருந்தார். பழகிய நாய்க்குட்டியை நீண்ட நாள் பிரிந்து பிறகு சந்தித்தால் குழையுமே அதுபோல கணவனைக் கண்ட ஆனந்தத்தில் குழைந்துகொண்டிருந்தாள் அஞ்சலை. பார்க்கவே சிரிப்பாக இருந்தது. கலியன் தலையில் நிறைய நரைமுடி, கன்னம் உப்பி வயதான மனிதன் போலிருந்தார். சவுதி செல்லும்போது பார்த்த ஆள்போலவே இல்லை. எண்ணெய் விட்டு படிய வாரிய கிராமத்து ஆள் காணாமல் போய் வேறு ஒரு ஆளாக வந்திருந்தார். நிரந்தரமாக அவரைச்சுற்றி ஒரு வாசனை வந்துகொண்டிருந்தது. நான் நன்றாக மூச்சை இழுத்து உள்வாங்கிக்கொண்டேன்.

அம்மா கோழி அடித்து குழம்பு வைத்திருந்தாள். சாப்பிட்டு காலை போகலாம் என பேசி முடிவானது. இங்கிருந்து கிராமத்துக்குச் செல்ல பேருந்து கிடையாது. கார் பிடித்தால் போகலாம். ஆனால் ஊரார் பார்க்க பகலில் செல்வதுதான் கவுரதையாக இருக்கும் என அஞ்சலை மறுத்துவிட்டாள். கலியன் கொண்டு வந்த பெட்டிபோல அதற்கு முன் ஒரு பெட்டியைக் கண்டதில்லை. நானும், தம்பியும் சிரமமில்லாமல் அதன் உள்ளே மறைந்துகொள்ளலாம் என்பதுபோன்ற அளவுள்ள பெரிய பெட்டி. அதுனுள்ளே என்ன வைத்திருப்பார் என்பது அதைவிட பெரிய கேள்வியாக இருந்தது. மிகப்பெரிய பூட்டு ஒன்றைப் போட்டு பூட்டியிருந்தார். அதன் சாவி அவரிடம் இருக்கக்கூடும். நல்ல நாள் பார்த்துதான் பூட்டை திறக்கணும் என்று அஞ்சலை அடிக்கடி குறிப்பிட்டு சொல்லிக்கொண்டிருந்தாள். பூட்டு திறக்க எதற்கு நல்ல நாள் வரை காத்திருக்கவேண்டும் என அம்மாவிடம் கேட்டேன். பள்ளிக்கூடம் போகணும் போய் படு என்று சொல்லிவிட்டாள்.

கலியனுக்கு இலையில் கறிகளாக அடுக்கி வைத்தாள் அம்மா. அவரும் வேண்டாம் என்று சொல்லாமல் ஒரு பிடி பிடித்தார். இதுபோல கறிச்சாப்பாட்டை சாப்பிட்டு ரொம்ப வருசம் ஆச்சுங்கம்மா என்று அடிக்கடி சொல்லியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அஞ்சலை இனிமே பாத்துக்குவாள் கவலைய விடுங்க என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.

விருந்தாளிகள் தங்கவதற்கு என எவ்வித வசதிகளும் அற்ற சிறிய ஓட்டு விடு எங்களுடையது. தங்குவது என்று முடிவான பின்னர் எங்கு அவர்கள் உறங்குவது என்ற விவாதம் போய்க்கொண்டிருந்தது. நடையில் ஒருவர் கூட படுக்க முடியாது. நடையிலிருந்து உள்ளே பெரிய ஹால். ஹாலுக்குப் பின் இடப்புறம் சமையல் அறை, வலப்புறம் சாமியறை. சாமியறையில் தங்கவைக்கலாம என பேச்சு ஓடியது. நீண்ட விவாதத்திற்குப் பின் அப்பாவின் பழைய வேட்டியை சாமியறை போட்டோக்களுக்கு மறைப்பாக அம்மா கட்டிவிட்டாள். அப்பாவுக்கு அது முழு சம்மதமில்லை எனினும் வேறு வழியில்லை. அரிசிப்பானைகளையும், பாத்திர பண்டங்களையும் ஒதுக்கிவிட்டு இடத்தை ஒழித்துக் காணும்போது இரண்டு பேர் படுக்கலாம் என்ற அளவில் இடமிருந்தது. பெரிய பெட்டியை ஓரம் வைத்துவிட்டு இருவரும் உள்ளே படுத்துக்கொண்டனர்.

அப்பா புகைத்துக்கொண்டிருக்க அம்மா எதிரே நின்றபடி பயண விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்ல நாங்கள் உறங்கிப்போனோம்.

மறுநாள் காலை முதல் பேருந்தில் கலியனும் அஞ்சலையும் பேருந்தில் ஏறிபோனார்கள். வழக்கம்போலவே முத்தாப்பிள்ளை தோட்டத்தில் குளித்து வந்த அப்பா செம்பருத்திப்பூக்களைச் சூட ஆரம்பித்தார். அவ்வப்போது நாசியை இழுத்து இழுத்து பார்த்து எல்லா திசையிலும் பார்வையை ஓடவிட்டார். பூஜை முடித்து வந்த அப்பா முகச்சுளிப்புடன் ஏதோ நாத்தம் அடிக்குது வீட்டுக்குள்ள என்றார்.

அம்மாவும் நாசியை ஒன்றிரண்டு முறை இழுத்துப்பார்த்துவிட்டு இல்லையென்றார்.

அடுத்தநாளும் அப்படியே சொன்னதும் அம்மா தீவிரமாக மூலை முடுக்கெல்லாம் பார்த்தார். எங்காவது எலி செத்துக்கிடக்கலாம் என்பதுபோல சந்தேகத்துடன் வீடு முழுக்க தேடிப்பார்த்தோம். நாற்றம் அப்படியே இருந்தது ஆனால் எங்கிருந்து வருகிறது என அறிய முடியவில்லை.

மூன்றாவது நாள் அண்ணன் தான் அதைக் கண்டுபிடித்தார். பூஜையறையின் உள்ளே சுவற்றை ஒட்டியிருந்த பானைக்குள பிளாஸ்டிக் காகிதத்தில் புழு நெளிந்தபடி மலம் இருந்தது. எல்லோருமே கிட்டத்தட்ட அதிர்ச்சி அடைந்துவிட்டோம். முதலில் என்னைத்தான் சந்தேகப்பட்டனர். நான் சேட்டை செய்பவன் தான் என்றாலும் இது என் சிந்தனையிலேயே இல்லாதது. மேலும் அவ்வளவு மலம் கழிக்க மூன்று நாள் சேர்க்க வேண்டும். சிறுகச் சிறுக செய்திருந்தாலும் யார் கண்ணிலும் படாமல் அதை செய்திருக்க முடியாது. அம்மாவும் அப்பாவும் செய்திருக்க வாய்ப்பில்லை. மீதமிருப்பது அண்ணன், நான், தம்பி. தம்பி மிகச்சிறியவன். முடிவில் அண்ணனும் நானும்தான் சந்தேக வளையத்தில் இருந்தோம். ஆனால் என்மீதுதான் எல்லோருக்கும் சந்தேகம் இருந்தது.

பினாயில் ஊற்றி இரண்டுமுறை கழுவி விட்டாள் அம்மா. இருந்தும் எங்கோ நாற்றம் கசிந்துகொண்டிருப்பதான சந்தேகம் இருந்தது.

“இதை செஞ்சது யாரா இருந்தாலும் சரி. ஒருநாள் உண்மை தெரியும். அப்போ பேசிக்கறேன்” என்றார் அப்பா.

அம்மாவுக்கு கலியன் மேல்தான் சந்தேகம். அப்பாவிடம் சொன்னால் திட்டக்கூடும் என்பதால் சொல்லவில்லை. ரகசியமாக எங்களுக்குள் நீதான் என்று சொல்லிக்கொண்டோம் என்றாலும் கடைசிகட்டத்தில் பழி என்னிடம்தான் வந்து சேர்ந்தது. உள்ளூர நான் உடைந்து சங்கடப்பட்டுக்கொண்டிருந்தேன். சாப்பிடாமல் தர்ணா செய்து என் பழியைத் துடைக்க ஆரம்பித்தபோது அப்பாவின் காதுக்கு எங்கள் சண்டை சென்றது.

நான் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து அப்பா எல்லோரையும் அழைத்தார். அது “கடவுளின் மலம்” எனவே யாரும் அதைப்பற்றி பேசக்கூடாது என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

அதைப்பற்றி பிறகு யாரும் என்னைக் கிண்டல் செய்வதில்லை. எல்லோரும் மறந்தே விட்டார்கள். ஆனாலும் பல வருடங்கள் அந்த அவப்பெயர் என்னைவிட்டு நீங்கவில்லை. கடவுள் ப்ளாஸ்டிக் காகிதத்தில் மலம் கழிக்க மாட்டார் என உறுதியாக நம்பினேன்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு வயோதிகத்தில் அம்மா இறந்தபோதுதான் அக்கேள்விக்கு விடைகிடைத்தது. சாவிற்கு கலியன் வந்திருந்தார்.

“அன்னலெட்சுமி மாதிரி சோறுபோட்ட உன் நடுவீட்ல நரகல போட்டுட்டு போனேனே என்ன மன்னிச்சிடும்மா” என்று கதறி அழும்போதுதான் உறுதியாக என் அவப்பெயரிலிருந்து விடுபட முடிந்தது.

2 comments for “கடவுளின் மலம்

  1. Ilampuranan
    November 14, 2019 at 6:34 pm

    வணக்கம். ‘கடவுளின் மலம்’ என்ற தலைப்பில் ஏற்கனவே நவீனின் நவீனக் கவிதை ஒன்றைப் படித்திருக்கிறேன். கடவுள் என்ற பிம்பத்திற்கான எதிர்வினையாகவும் , கடவுள் என்ற கருத்தியலுக்குச் சாடல் கவிதையாகவும் கவித்துவத்துடன் படைக்கப்பட்டிருந்தது. அதே தலைப்பை இந்தப் பதிவில் சிறுகதை ஒன்றனைப் பார்த்தவுடன் வாசிக்கத்தூண்டியது. வாசித்தேன்.

    இது கதையா ? அல்லது வெறும் வாழ்க்கைச் சம்பவமா? அல்லது வேண்டுமென்றே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எண்ணத்தில் கிறுக்கித் தள்ளியதா ? என்று எண்ணால் ஒரு முடிவுக்கே வர இயலவில்லை. வீட்டின் சாமி அறையில் மலம் கழித்து மறைத்து வைத்து கதாசிரியர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.

    வாழ்க்கையின் சம்பவமாக எடுத்துக் கொண்டாலும் மிகை யதார்த்த சம்பவமாகவும் ஏற்புடைமையற்றதாகவும்தான் விளங்குகிறது. நவீனக் கதைகள் எதையும் ஏற்கும் தன்மையுடையதுதான் அதற்காக கண்டதையும் எழுதி கதையென்று வாசகவெளிக்கு அளித்துவிடலாமா?

    மேலும் கதையின் தொடக்கத்திலிருந்தே சம்பவங்கள் அழுத்தமில்லாமலும் தொடர்பில்லாமலும் ஒன்றை ஒன்று பின்னியிருப்பதாக உணர்ந்தேன். கதை எங்கெங்கோ சென்று பின்பு மலத்தில் முடிகிறது.

    இக்கதையை ஒட்டிய என் பார்வை ஒருதலை பட்சமானதாகக்கூட இருக்கலாம். அது என் நவீன கதை வாசிப்பில் அறிவு போதாமையாகக்கூட இருக்கலாம், ஆகவே இந்தக் கதையின் ஆசிரியர் கதையொட்டிய விளக்கம் கொடுத்தால் அது என் அறிவுப் போதாமையைப் போக்கக் கூடியதாக இருக்கும். நன்றி

    • November 27, 2019 at 12:32 pm

      இளம்பூரணன், உங்கள் கருத்துகளுக்கு நன்றி. வாழ்க்கைச் சம்பவங்கள்தானே கதைகளாக உருவாகி வருகின்றன. எனில் இது கதைதான். கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றோ, கிறுக்கித் தள்ள வேண்டும் என்றோ எழுதப்பட்டதல்ல, மேலும் அதிர்ச்சி முடிவை அளிக்கும் விதமாக எழுதியதும் அல்ல. சிறுகதைக்கு விளக்கம் சொல்லும் அளவுக்கு போதாமையுடன் இக்கதை எழுதப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

      வெளிநாட்டிலிருந்து செல்வத்துடன் வந்திருக்கும் கலியனிடம் அந்த அப்பா கதாபாத்திரம் பொருளாதார உதவி கேட்டுவிடக்கூடும் என்ற தன்னுணர்வில் கலியன் அக்காரியத்தைச் செய்வதாக எழுதியிருந்தேன். மனிதர்கள் எவ்வித கீழ்மையையும் செய்யக்கூடியவர்கள்தான் என்பதுதான் அதன் பொருள். இந்த முடிவு வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப்பட்டதல்ல. முடிவை முன்பே உறுதியாக திட்டமிட்டுதான் எழுதவே ஆரம்பித்தேன். அது சரியாக வெளிப்படவில்லையா, அல்லது புரிந்துகொள்ளப்படவில்லையா என்பது எனது சந்தேகம். பொதுவாக அக்காலகட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தன்னிடம் உதவி கேட்டு உறவினர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக கிறுக்குத்தனமாக எதாவது செய்வார்கள்.

Leave a Reply to Ilampuranan Cancel reply