குவர்னிகா: மலேசியாவின் மூன்று சிறுகதைகள் ஒரு பார்வை!

உலகில் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மொத்த குரலையும் ஒலிக்கச்செய்யும் இலக்கிய முயற்சி குவர்னிக்கா இலக்கியச் சந்திப்பின் வழி நீண்ட காலமாக செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தாண்டி இந்த இலக்கிய முயற்சி    41-வது முறையாக மீண்டும் யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு தன் சந்திப்பு தொடரை நிகழ்த்தியது. அச்சந்திப்பில் வெளியீடு கண்ட குவர்னிக்கா இலக்கிய தொகுப்பில் பன்னிரெண்டு நாடுகளிலிருந்து படைப்பாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன . இதுகாறும் குவர்னிக்கா இலக்கியச் சந்திப்புகளில் நம் நாட்டு பங்களிப்பு எதுவும் இல்லாதது ஒரு குறையாகவே இருந்தது. அக்குறையை எழுத்தாளர் ஷோபா சக்தியை பதிப்பாசிரியராக கொண்டு வெளியீடு கண்ட 41-வது குவர்னிகா இலக்கிய தொகுப்பு இல்லாமல் செய்துவிட்டது.

இப்பெரும் தொகுப்பில் மலேசிய படைப்பாளர்களின் நான்கு படைப்புகளும் டாக்டர் சண்முக சிவா அவர்களின் நேர்காணல் ஒன்றும் இடம் பெற்றிருக்கின்றன. ம. நவீன், கே. பாலமுருகன், மஹாத்மன் ஆகியோரின் சிறுகதைகள், யோகியின் கவிதைகள் மற்றும் எனது கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் உள்ளன.

இத்தொகுப்பில் இடம்பெற்று உள்ள மூன்று சிறுகதைகளும் ஆழமான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவது அவசியம். காரணம் இக்கதைகள் இந்நாட்டில் ஏதோ ஒரு வகையில் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களை முன்னிருத்துகிறன. சமுதாய கட்டமைப்பில் ஆதிக்க வர்கத்தினரும் மேட்டுக்குடியினரும் முதன்மை பெற்று முதல் தர குடிமக்களாக வாழும் போது, பொருளாதாரம், அரசியல், சாதிய சிந்தனை போன்ற பல்வேறு காரணங்களால் சமுதாய கட்டமைப்பில் ஒதுக்கப்படுவோரின் நிலை கேள்விக் குறியாகிறது. அவர்களின் குரல் நசுக்கப்பட்டு விளிம்புநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

குரலற்ற மக்களின் இன்னல்களையும் வாழ்க்கையையும் உரத்த குரலில் சொல்லக் கூடிய ஆற்றல் இலக்கியத்திற்கு உண்டு. புனைவாக இருந்தாலும் அவை பொது வரலாற்று ஏடுகள் எழுத மறந்த பல உண்மைகளை தன்னுள் அடக்கிக்  கொண்டுள்ளன. அவ்வகையில்  குவர்னிக்கா இலக்கிய தொகுப்பில் இடம் பெற்று உள்ள இந்நாட்டு எழுத்தாளர்களின் கதைகள் கூர்ந்து கவனிக்கத் தக்கவையே.

பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடுகே.பாலமுருகன்.

மலேசியாவில் தமிழர்களிடையே சாதீய சிந்தனை அறவே இல்லை என்று சாதிக்க நாட்டில் பலர் உள்ளனர். சதீய குறியீடுகளை பிற இன தலைவர்களோ தனிநபர்களோ முன்வைக்கும் போது கடும் எதிர்ப்புக் குரல் கொடுக்கும் மக்கள் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் சாதிசங்கங்களை கண்டுகொள்வது இல்லை. இத்தகைய போலி ஆவேஷத்திற்கு விடப்படும் சவாலாகவே இக்கதையின் தலைப்பு. அமைந்துள்ளது. மலேசியாவில் இன்றுவரை சாதிய சிந்தனை புது தத்துவங்களை தாங்கி செழிப்பாக இருப்பதே உண்மை. மலேசிய அரசு  கோட்பாடுகளில் சாதியத்திற்கு மதிப்பில்லை என்றாலும் அரசியலில், சமுதாய பாரம்பரிய நிலையில் தமிழர்களிடையே சாதி முக்கிய தகுதி பெறுகின்றது.

பாலமுருகனின் இச்சிறுகதை அனுராதா, சாமிநாதன் ஆகிய இரண்டு சிறுவர்களை மையமாக கொண்டு வளர்கிறது. அச்சிறுவர்களுக்கும் கதைசொல்லிக்கும் இடையே நட்பு ஏற்பட்ட சந்தர்ப்பம் ஒரு கனவு போல காட்டப்படுகிறது. நிகழ்காலத்தில் கதைசொல்லி தன் கம்பத்தில் புகுந்த வெள்ளம் தன் வீட்டிலும் புகுந்து விடாமல் இருக்க போராடிக் கொண்டிருக்கும் போது, சட்டென சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு மழை நாளில் ஒரு குடும்பம் அவர்கள் வசித்த கம்பத்தின் கடைசி வீட்டுக்கு புதிதாக குடிவந்தது தொடர்பான நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன. அந்த குடும்பம் அங்குள்ள மக்களால் எதிர்கொள்ளப்பட்ட விதமும் பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட கதியும், அவர்கள் குடியிருந்த கடைசி வீடும், கதை சொல்லிக்கு பல்வேறு மன அதிர்வுகளை தந்ததன் விளைவாக அந்த சம்பவத்தின் நினைவே பயங்கர கனவு போல தோற்றம் தருகிறது.  சாமிநாதன் அனுராதா இருவரின் நினைவுக்கு பின் இருக்கும் கதைசொல்லியின் குற்ற உணர்வு அல்லது இயலாமையும் இதற்கு ஒரு காரணமாக இருகலாம்.

அதே கம்பத்தில் வசித்த அம்மாளு இயல்பாகவே பல்வேறு மனச்சிக்கல்களைக் கொண்டவள். கணவனோடு ஏற்படும் சண்டைகளால் ஊராரின் இளக்காரத்திற்கு உள்ளானவள். அவள் சாதியை காரணமாக்கி அந்த புதியவர்களைப் பல வழிகளில் கேவலப்படுத்துவதோடு பிறரையும் தூண்டி விடும் வேலையைச் செய்கிறாள். அவளது தூண்டுதலுக்கு ஊர்மக்கள் உடன் பட்டார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் கதை சொல்லியின் அம்மா போன்ற சிலர் ஏற்பு, மறுப்பு இரண்டில் எதை தேர்வு செய்வது என்று தெரியாமல் ‘சின்ன முனகலோடு’ மட்டும் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி விட்டு நகர்கின்றனர்..

கதை இறுதியில், அம்மாளு, மணியம் என்கிற நபரோடு ஏற்பட்ட சண்டையின் போது, அவன் அனுராதாவின் தாயுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளான் என்று குற்றம் சாட்டுகிறாள். “பறைச்சி கூட உறவு வச்சிகிட்டு எவன் வீட்டுல நீ தைரியமா கை நனைப்பெ..?” என்று தூற்றுகிறாள்.

இந்த அவச்சொல்லை தாங்க முடியாமல் அந்த பெண்ணும் அவள் பிள்ளைகளும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இக்கதை இந்நாட்டில் மறைமுகமாக மேற்கொள்ளப்படும் சாதீய ஒடுக்கு முறைக்கு எதிர்ப்பான குரலாக இருந்தாலும் கதை போக்கில் சாதிய சிந்தனையின் கோரத்தை விட தனிமனித குணக்கேட்டின் கோரத்தையே அதிகம் வெளிப்படுத்தி இருக்கிறது. காரணம் சாதிய பிரிவினையை முதன்மை படுத்துபவளாக வரும் அம்மாளு தன்னளவில் பல்வேறு மனச்சிக்கல்களை கொண்டவளாவாள். அவளது மன அவசங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டே அவள் சாதீயம் பேசுபவளாக இருக்ககூடும். அதோடு,  கதையில் அம்மாளு தனி ஒருத்தியாக அக்குடும்பத்தை சாதீய தாக்குதலுக்கு உட்படுத்துவதும், கதை சொல்லியின் அம்மா, மணியம் போன்ற மற்றவர்கள் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும் இதை மேலும் உறுதி படுத்துகிறது. அம்மாளு தனது இழிவுகளை மறந்திருக்க (பிறரிடம் மரியாதை தேட) மற்றவர்களை தாழ்த்தி மதிப்பிடும் குணம் கொண்டிருக்கிறாள். அவளது நோக்கத்திற்கு மிக எளிதாக கிடைத்தது அந்த ஊருக்கு புதிதாக குடி வந்திருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த குடும்பத்தினர்தான்.

ஆகவே, தீவிர சாதியம் பேசும் பலரும் தங்களது அசிங்கங்களை மறைத்துக் கொள்ளும் ஒரு கேடையமாகவே சாதியை கையில் எடுத்துக் கொள்வதையே இப்புனைவு சித்தரிக்கின்றது. சமுதாயதில் கீழ் நிலை என்று ஒன்று இருந்தால் அங்கிருக்கும் மனிதன் அவனினும் கீழ்நிலை ஒன்று இருக்குமா என்று தேடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கே சாதிய கட்டமைப்பு உதவி செய்கிறது.

இழப்பு.நவீன்

மலேசிய இந்தியர்களின் அரசியல் சிந்தனையும் பொருளாதார விழிப்புணர்வும் ஒருங்கே கூர்மை பெற்ற காலகட்டமாக 60-ஆம் ஆண்டுகளைக் குறிப்பிடலாம். பல தோட்ட தொழிலாளர்களின் கனவுகளை கலைத்துப் போட்டு, ‘தோட்டம் நமக்கு சொந்தமில்லை’ என்கிற பிரங்ஞயை கன்னத்தில் அறைந்து உணர்த்தியது தோட்ட துண்டாடல் பிரச்சனை. அதன் விளைவாகவே மலேசிய இந்தியர்களின் சொத்துடமை குறித்த பேச்சு வலுபெற்றது, கூட்டுறவு தோட்டங்களும் அதன் ஊடாக வீட்டுடமை திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. பலர் நகர் புரத்தை நாடி அகதிகளாக புலம்பெயர்ந்த வரலாறும் அப்போது நிகழ்ந்தது.

அந்தக் கால கட்டத்தை கடந்து வந்த தோட்ட வாசிகள், மீண்டும் ஒரு முறை தங்கள் மூதாதையர் நிலம் என்று நம்பி இருந்த மண்ணை விட்டுக் கொடுக்க நேர்ந்த துயரம் 90-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது. நாட்டு மேம்பாடு என்னும் காரணத்தை முன்னிறுத்தி அரசாங்கம் பல்வேறு பிரமாண்ட திட்டங்களை செயல் படுத்த தொடங்கியதன் விளைவாக கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்திலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் பல தோட்டங்களை அரசு கையகப்படுத்தி நவீன நகரங்களை உருவாக்கியது. பல தனியார் நிறுவனங்களும் தங்கள் மேம்பாட்டு பணிகளை தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி வளர்ந்த தோட்ட மண்ணில் விதைத்தனர்.

புதிய அரசு நிர்வாக மையமாக உருவெடுத்த புத்ரா ஜெயா பெருந்திட்டமும் அதை ஒட்டி உருவாக்கப்பட்ட சைபர் ஜெயா போன்ற நகரங்களும் பெராங் பெசார், சிட்சிலி, செப்பாங் போன்ற பல தோட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டன. இந்த மாற்றங்களில் சிக்கிக் கொண்ட தோட்ட பாட்டாளிகளுக்கு மாற்று குடியிருப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன என்றாலும் அகண்ட நிலப்பரப்பில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கையை இழந்து விட்டு , குறுகலான வீடுகளில் இறுக்கமான மனநிலையோடு வாழும் வாழ்க்கைக்குள் தங்களை பிணைத்துக் கொள்ள அவர்கள் சிரமப்பட்டார்கள்.

தங்கள் மனதிற்கு இயந்த தோட்ட வாழ்கையை இழந்து விட்ட துயரத்தை பலரும் ஒரு காவிய சோக மனநிலையில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வகை இழப்பு ஒன்றை ஒரு சிறுவனின் மன ஓலமாக காட்டுவதே ‘இழப்பு’ சிறுகதையின் மையக் கருவாகும். ஒரு சிறுவன் – காற்பந்து விளையாட்டு துறையில் ‘மேஸி போன்று வர வேண்டும் என்று கனவு காண்பவன் – பல போராட்டங்களுக்கு பிறகு தந்தையிடமிருந்து தான் விரும்பும் பந்து ஒன்றை பெறுகின்றான்.

(அச்சிறுவனின் (கதை சொல்லியின்) வயதை யூகிப்பதில் மயக்கம் இருப்பதை குறிப்பிட வேண்டும். அவன் சில நேரங்களில் சிறுவனாகவும் சில நேரங்களில் பதின்ம வயது இளைஞனாகவும் தோற்றம் தருவதாக உணர்கிறேன். அதே போல அந்த பந்து அவனுக்கு மூன்று மாத கோரிக்கைக்கு பின் கிடைத்ததா மூன்று ஆண்டு கோரிக்கைக்கு பின் கிடைத்ததா என்பதிலும் குழப்பம் உள்ளது.)

அந்த பந்தை அவன் விருப்பம் போல உதைத்து விளையாட அவன் குடியிருக்கும் குறைந்த விலை மாடி வீடு இடம் தரவில்லை. அவன் அம்மா அந்த சிறிய வீட்டிற்குள் பந்து விளயாடுவதற்கு தடை விதிக்கிறாள். தோட்டத்தில் ஆடு மாடுகளை வளர்த்துக் கொண்டு அகண்ட தரை பகுதியில் இயற்கையை ரசித்தபடி வாழ்ந்த சுதந்திரம், நான்கு சுவர் மாடி வீட்டிற்குள் தொலைந்து போனதில் கதைச் சொல்லியின் தாய் மிகுந்த மன இறுக்கத்துடன் வாழ்கிறாள்.  அவள் சிறு பிரச்சனைக்கும் சட்டென கோபப்படக் கூடியவளாக மாறிப்போனதற்கு வாழ்விட மாற்றம் ஒரு காரணமாகிறது.

பந்து விளையாட வேண்டும் என்னும் தனது வேட்கையை தனித்துக் கொள்ள கதை சொல்லி பொருத்தமான இடத்தைத் தேடி அலைந்து புதிய குடியிருப்பில் பொருத்தமான இடம் கிடக்காமல் தனது பழைய தோட்டத்தையே நாடிச் செல்கிறான். மேம்பாட்டுக்கு உட்பட்ட அந்த தோட்டம் உரு தெரியாமல் மாறி விட்டிருக்கிறது. தோட்டபுறமாக இருந்த போது இருந்த அமைதியும் சாந்தமும் கலைந்து இன்று அவ்விடம் பரபரப்பு மிக்க முக்கிய அரசு கேந்திரமான புத்ரா ஜெயாவாக மாறி விட்டிருக்கிறது. அவன் பந்தை உதைக்க பொருத்தமான இடம் தேடுகிறான். ஒன்றும் இல்லை. வேறு வழி இல்லை. புதிதாக தோன்றி இருக்கும் ஏரியை நோக்கி பந்தை உதைக்கிறான். அப்போது ‘திடலை பறிகொடுத்தவர்களின் முயற்சியால் சில வருடங்களில் அது போல் பல பந்துகள் மிதக்கும். இறுதியில் குளம் பந்துகளால் ஆன திடலாகிவிடும்” என்று எண்ணுகிறான். இக்கதை நாட்டு மேம்பாட்டுக்கு தங்கள் வாழ்க்கை சுதந்திரத்தை தானம் தந்த குரலற்ற மனிதர்களின் வரலாறு பதிவு என்றே கூறவேண்டும்

கடன்மஹாத்மன்

நான் மஹாத்மனின் புனைவுகளை மிகக் குறைவாகவே வாசித்து இருக்கிறேன். அந்த குறைந்த வாசிப்பின் வழியும் மிகத்தெளிவாக காணக்கூடியது அவர் கதைகளில் ஊடுபாவாக அமைதி பெற்றுள்ள மனித நேயமும் வாழ்க்கை நிலையாமையும் தான். இக்கூற்றை அவரது கடன் என்னும் சிறுகதை மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்துகிறது.

இக்கதையின் களம் பத்து ஆண்டுகளுக்கு முன் நாம் கண்ட புடு ராயா பேருந்து நிலையமாகும். முன்பு நள்ளிரவிலும் அதிகாலையிலும் அங்கு சென்று சேரும் போதெல்லாம், நாற்காலிகளிலும் மூலை முடுக்குகளிலும் உடலை குறுகிக் கொண்டு படுத்துக் கிடக்கும் மனித உடல்களைப் பார்க்கலாம். பயண குளறுபடியால் புடுராயாவிலேயே இரவை கழிக்க நேரும் பயணிகள் ஒரு பெருங்கூட்டம் இருந்தாலும் புடுராயாவையே தங்கள் வசிப்பிடமாக மாற்றி அமைத்துக் கொண்ட பெருநகர் பிரஜைகள் சிலரும் அதில் அடங்குவர். நான் முன்பு புடுராயாவில் இத்தகைய மனிதர்களை சந்திக்கும் போது எந்த வித உணர்வும் இன்றி கடந்து சென்றிருக்கிறேன். சில நேரங்களில் அவர்களை சமுதாய குப்பைகளாக நினைத்து ஒதுங்கிப் போயிருக்கிறேன். ஆனால் மஹாத்மன் தன் புனைவில் அந்த குப்பைகளைக் கொண்டே ஒரு கோபுரத்தை நிர்மாணித்து இருக்கிறார் என்று வியக்கிறேன்.

இப்புனைவில் கதைச்சொல்லி புடுராயாவில் தூங்கி, பொதுக் கழிவறையில் காலைக் கடனை முடித்து, வழிபாட்டுதளங்களில் வேளை அறிந்து உணவுக்கு சென்று சாப்பிட்டு வாழும் ஒரு பரதேசி. மான அவமானங்களைப் பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாத ஒரு பிறவி. அந்த மனிதனுக்கும் சில நண்பர்களும் சில எதிரிகளும் சில வாழ்க்கை போராட்டங்களும் கொண்ட சின்ன உலகம் ஒன்று உண்டு. அதனினும் மேலாக அந்த அற்ப மனிதனிடமும் தேங்கிக் கிடக்கும் மனிதம் நம்மை நாணச்செய்கிறது. இக்கதையில் சிறப்பு உத்திகளோ கடுமையான மொழி நடையோ இல்லை. ஆனாலும் இப்புனைவு வாசகனை சட்டென தன் வசமாக்கிக் கொள்ளக்கூடியது.

புடுராயாவில் சந்திக்கும் சிங்கள தம்பதிகளின் மேல் கதைச்சொல்லி இன ரீதியில் காட்டும் வெறுப்பு மனிதாபிமானத்தின் முன் அடிபட்டு போகிறது. அனாதரவாக நிற்கும் எல்லா மனிதருக்கும் தானே ஓடிச் சென்று உதவக் கூடிய கதைச் சொல்லி சிங்கள தம்பதிகளுக்கு உதவாமல் இருக்க வேண்டும் என்றே முதலில் முடிவெடுக்கிறான். “போயும் போயும் இவர்களுக்கா நான் உதவி செய்ய வேண்டும். இதற்கு பதில் ஒரு தெரு நாய்க்கும் இலக்கு தெரியாமல் திரியும் பூனைக்கும் உணவிட்டுப் போகலாம். வந்து விட்டார்கள் வேறு வேலை இல்லாமல்… தமிழன் என்ன இளிச்சவாயனா? “ என்று ஒரு சராசரி மனிதனாகவே அவனது மனவோட்டம் செல்கிறது. ஆனால் ஒரு அதிகாலையில் தன் பெட்டிகளை களவு கொடுத்து விட்டு உதவி கேட்டு நிற்கும் அந்த சிங்களவர்களுக்கு சற்றும் யோசிக்காமல் ஒரு சினிமா கதாநாயகன் போல் சாகசங்கள் செய்து பெட்டியை மீட்டுக் கொடுகிறான். தனக்கு கிடக்கும் அன்னதானத்தை அவர்களுக்கும் கிடைக்க செய்கிறான்.  தன் நண்பர்களால் ‘இன துரோகி’ என்ற அவச்சொல்லை வாங்கிக் கொண்டு சண்டையும் போடுகிறான். சிலோன் தம்பதிகளை நல்லபடியாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்னும் உந்துதலில் ‘நான்’ என்பதை கடந்து செயல்படுகிறான்.

கடைசியாக அத்தம்பதியரின் பயணத்திற்கு பணம் இன்றி போகவே அல் புக்காரி மசூதிக்குச் சென்று அங்கு தொழுகையில் ஈடுபட்டுள்ள இமாமிடம் பணத்தை கடன் கேட்டு பெற்றுக் கொள்கிறான். (இமாம் அவனுக்கு உதவ சிறப்பு காரணம் ஏதும் சொல்லப்படவில்லை….. அல்லாஹ் உனக்குக் கொடுக்கிறார். நீ அவருக்கு இதன் மூலம் கடன்பட்டிருக்கிறாய்… என்பது மட்டுமே காரணம்) முன்னதாக அவசர அவசரமாக அந்த பள்ளிவாசலுக்கு கதைசொல்லி ஓடும் போது யாரோ ஒரு நபர் அநாதரவாய் நிற்பதை பார்த்ததும் கதைசொல்லியின் மனம் இப்படி சிந்திக்கிறது “ எல்லாம் முடிந்த பிறகு அவர் அங்கு இருந்தால் ஏதாவது உதவி வேண்டுமா என விசாரிக்க வேண்டும். வேலைகள் அதிகம்தான் உள்ளது”. அதே போன்று கதையின் முடிவில் சிங்கள தம்பதிகள் சிங்கப்பூருக்கு ரயில் ஏறிய பிறகு கதை சொல்லி ….”ஐயோ! மறந்தே போனோமே…. அவர்களின் பெயர்கள் என்னவாக இருக்கும்? என்று திகைக்கிறான். இந்த இரண்டு வாக்கியங்களில் காணப்படும் அப்பழுக்கு அற்ற பொதுநலம் இக்கதையை மனிதாபிமானத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பது உண்மை.

ஒரு நல்ல புனைவின் அடையாளம் அது வாசகனை தொடர்ந்து தொந்தரவு செய்ய வேண்டும். புதிய சில திறப்புகளை அது அவனுக்குள் கொடுக்க வேண்டும். குவர்னிக்கா தொகுப்பில் இடம் பிடித்துள்ள இந்த மூன்று சிறுகதைகளும் அவ்வகை அதிர்வுகளையும் சலனங்களையும் வாசனுக்கு நிச்சயம் தருகின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...