கைதிகள் கண்ட கண்டம்

VB0001122பயண இலக்கியங்கள் என்பது பயணித்தவரின் பட்டறிவு பதிவுகள். பயண நகர்வுகளில் காட்சிவழி பெற்ற புற அனுபவங்களையும் அதனூடே அமைதியாக சில கணங்கள், ஆர்ப்பரிபோடு சில பொழுதுகள், அழுத்தமாகச் சில தருணங்கள் போன்ற மிக நுட்பமான அக வெளிபாடுகளையும் சேர்த்து சுவைப்படத் தருவதே பயண இலக்கியங்களின் இயல்பு. “பிறரது வாழ்க்கை அனுபவங்களை நாம் நம் வாழ்க்கைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் அனுபவம் என்பது ஓர் அருமையான பள்ளிக்கூடம்” என்று எம்.எஸ். உதயமூர்த்தி கூறுகிறார். பயண இலக்கியங்கள் வெறும் தகவல்களை மட்டும் வழங்காமல் பிற இடங்கள், பிற கலைகள், பிற வாழ்க்கைமுறை தம் உள்ளத்தை எப்படி தொட்டன என்பதைக் கூறுகின்றன.

“நுட்பமான பார்வை, ஆக்கத்திறனில் சரளம் இவருக்கும் இருக்கின்றது என்ற காரணத்தால், இவ்வாஸ்திரேலியப் பயணநூல், மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது” என்று சை.பீர். முகமதுவின் ‘கைதிகள் கண்ட கண்டம்’ என்ற பயண இலக்கிய நூலுக்கு இந்திரா பார்த்தசாரதியால் முன்னுரை வழங்கப்பட்டுள்ளது.

எந்த இலக்கியப் புனைவாக இருந்தாலும் எழுதும் முறையில் சொல்லிச் செல்லுதல் என்பது உயிரோட்டமற்று தட்டையான வாசிப்பு அனுபவத்தையே தரும். ஆனால் சை.பீர் முகம்மது இந்நூலில் ஆஸ்திரேலியா கண்டத்தையே நமக்குக் காட்டிச் செல்கிறார். காட்சிப் பதிவுகளையும் அக வெளிப்பாடுகளையும் காட்சிப்படுத்தும் பாங்கு எழுத்துகளின் ஊடே நம்மையும் அவருடன் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

சை.பீர்முகம்மது மேற்கொண்ட ஆஸ்திரேலியா பயணத்தின் கிளம்புதல் முதல் மீண்டும் மலேசியா வந்து சேரும் வரையில் தன் பட்டறிவைப் வாசகர் உணர்ந்துகொள்ளும்படி படைத்திருப்பது இப்பயண இலக்கியப் படைப்பின் முழுமையை உணர்த்துகிறது.

“அதிகாலை ஆறு மணிக்கு டெலிபோன் மணி குளிரில் சிணுங்கிய பொழுது, எனக்கு எரிச்சலா இருந்தது” என எரிச்சலில் தொடங்கிய இவரின் பயணம் “வழியனுப்ப ஜெயக்குமாரும் அவரின் பணிப்படையினரும் பஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். விடைபெற்ற பொழுது என் கண்கள் மட்டுமல்ல ஜெயக்குமாரின் கண்களும் பனித்தன” என்ற நெகிழ்ச்சியில் முடிவுற்றது. இந்த எரிச்சலுக்கும் நெகிழ்ச்சிக்கும் இடையில் அவரின் பயண அனுபவமானது அவரையே சுத்திகரித்துப் புதுமையைப் படைத்துத் தந்திருக்கும்.

இதுவரையில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிராத எனக்கு ஐயா சை.பீரின் பயண அனுபவங்கள் ஆஸ்திரேலியாவை என் அகவெளியில் படச்சுருளாக நகரச் செய்து சுற்றிவரச் செய்தது மட்டுமல்லாமல் அவரையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. அந்நகரின் புறத்தோற்றத்தைச் சொற்களைக் கொண்டு எழுப்புகிறார். அவை என் அகவெளியில் மேடுகட்டி நிலைக்கின்றன. ஓர் இடத்தில் “மெல்போர்ன் நகர வீதியெங்கும் நம்மோடு கைகுலுக்கும் மலர்ச் செடிகள், உலகத்து மலரையெல்லாம் இவர்கள் ஒன்றாக இங்கே கொண்டு வந்து குவித்து வைத்துள்ளார்கள்.” என்று மெல்போர்ன் நகரம் பற்றி எழுதுகையில் அப்பூங்கா நகரின் நறுமணத்தை என்னால் நுகர முடிந்தது.

இவ்வாறான புறத்தோற்ற வருணனைகளின் ஊடே சை.பீர் அவர்களின் அகவெளிப்பாடும் இணைந்து இப்பயண இலக்கிய நூலை வலுப்பெறச் செய்துள்ளது. மனதில் பலகாலமாக வெளியில் சொல்ல முடியாமல் இருந்த பல எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் விளம்பரம் கொடுத்து தன் இருத்தலை பல இடங்களில் நிறுவிச் செல்கின்றார். இவை, சை.பீர் அவர்கள் தன்னைச் சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கும் சமூகத்தில் நிலவுகின்ற ஒவ்வாமைகளை விமர்சிப்பதற்கும் ஒரு களமாக அமைந்துள்ளது.

“இந்த மண்ணில் எனக்கு தராத கௌரவத்தை ஆஸ்திரேலியா நாட்டில் பெறுவதை எண்ணி…” என்ற சை.பீரின் ஒப்புதல் அன்றைய மலேசியத் தமிழ் இலக்கியப் போக்குக் குறித்த விமர்சனம். அக்காலப்போக்கில் சை.பீர் போன்ற எழுத்தாளர்களின் நிலையையும் இலக்கியத் துறையில் நிலைபெற நேர்கொண்ட சவால்களையும் அறியவே முடிகிறது.

மேலும் சை.பீர் அவர்களின் இலக்கிய ஆளுமைக்கான பதிவுகள் இந்நூல் முழுவதும் விரவியிருக்க அவரின் சின்னச் சின்ன ஆசைகளையும் இந்நூலின்வழி அறிய முடிந்தது. ஒரு சிகரெட்டுக்காக மூன்று நான்கு கிலோமீட்டர்கள் நடந்து அதைப்பெற்று வாயில் வைத்து புகைத்த இன்பத்தையும் அதனால் அங்கு வந்த அசௌகரியத்தையும் ‘சிகரெட்டால் வந்த வேதனை’ என்ற கட்டுரையில் மிக அழகாகப் பதிவுசெய்துள்ளார்.

‘பித்தாவும் அத்தாவும்’ என்ற கட்டுரையில் சை.பீர் அவர்களின் பொதுநோக்கையும் தீவிரமில்லா சமயப் பற்றையும் காணமுடிகிறது. ‘பித்தா பிறை சூடி…’ எனும் பாடலில் சுந்தரமூர்த்தி நாயனார் ஓரிடத்தில் சிவபெருமானை ‘அத்தா’ என்று ஓரிடத்தில் அழைக்கிறார். அந்தத் தமிழ்ச் சொல்லைத்தான் முஸ்லிம்கள் தந்தையை அழைப்பதற்கு பயன்படுத்துவதாகக் கூறுகிறார்.

சை.பீர். முகம்மதுவின் இப்பயண இலக்கிய நூல் சமுதாயக் கல்விக்குத் துணைநிற்கிறது. ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் பல்வேறு இனக்குழுகளின் அடைப்படைத் தகவல்கள் வாசகர்களின் சமுதாயக் கல்வியை மேம்படுத்துகிறது. ஆஸ்திரேலியா நாட்டிற்குக் கைதிகளாக வந்த பிரிட்டிஷ் அடிமைகள் தொடங்கி அங்கு வாழும் பூர்வக் குடியினர், இலங்கைத் தமிழர்கள் போன்ற இனக்குழுக்களின் வாழ்க்கைமுறை குறித்த பதிவுகள் பயனுள்ளவைகளாக அமைகின்றன. அங்கு கைதிகளாகக் குடியேற்றப்பட்ட பிரிட்டிஷ்காரர்களின் வளர்ச்சி பிரமிக்கதக்க நிலையில் உள்ளதை பதிவு செய்த சை.பீர் அதே மண்ணின் பூர்வக் குடிகளின் முன்னேற்றமில்லா நிலையையும் ஒப்பிடுகின்றார். ஆஸ்திரெலியா நாட்டின் பொருள்முதல்வாத அரசியல் போக்கில் நிலவுகின்ற சமநிலையற்ற சமூக வளர்ச்சியை சாடுவதாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது. அக்கட்டுரையின் தொடர்ச்சியாகவே அங்கு சந்தித்த ஆஸ்திரேலிய தமிழரின் வாயிலாக மலேசிய மண்ணின் மலாய்ச் சமூகத்தின் பிதாமகன் மகாதீர் இனப்பற்றை மெச்சும் நிலையைக் காணமுடிகிறது. அவ்வேளையில் வாசிப்பவரின் மனவோட்டத்தில் மலேசியாவில் பிற சமூகத்தின் (இந்தியர்கள்) வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு? என்ற வினா நம்முள் கடந்து செல்கிறது.

மேலும் ஒரு சமூகம் சார்ந்த கலை பண்பாடு குறித்த குறிப்புகளை மிக நுட்பமாகப் பதிவு செய்து பயணித்துள்ளார்.  ஆஸ்திரேலிய பூர்வக் குடியினரின் பாரம்பரிய ஆயுதமாகக் கருதப்பட்ட ‘பூமராங்கின்’ பிறப்பிடம் தமிழகம்தான் என்றச் செய்தி வியப்பூட்டுகின்றது. இந்த ஆயுதத்தைச் சிவகங்கைச் சீமையை ஆண்ட மன்னர்கள் மருது பாண்டியர்கள் ‘வளரி’ என்ற பெயரில் அற்புதமாகக் கையாண்டிருக்கின்றனர். இதுபோன்றே பல கட்டுரைகளில் ஆஸ்திரேலிய நாட்டில் வாழுகின்ற சமூகத்தின் பதிவுகள் மிகச் சுருக்கமாகவும் தேவைகேற்பவும் பதிவு செய்துள்ளார் சை.பீர்.

பயண இலக்கியங்கள் வாசிப்பு என்பது மிகச் சவால்களுக்குரியது. நெருக்கமாக அடுக்கப்படுகின்ற தொடர்ந்த பயண விவரணைகள் வாசிப்பில் மிகச் சீக்கிரத்திலே சோர்வை ஏற்படுத்திவிடுவது இயல்புதான். ஓர் எழுத்தாளன் இவற்றைக் கருத்தில் கொண்டே தன் புனைவுகளை படைக்கவேண்டும். வாசகனின் சோர்வுக்கு இடந்தாராமல் கட்டுரையை நேர்த்தியாகத் திட்டமிட்டு எழுதவேண்டியுள்ளது. அவ்வகையில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சை.பீரின் இக்கட்டுரைகள் வாசகனுக்குத் தொய்வையும் சோர்வையும் ஏற்படுத்தவில்லை. ‘உலகப் பிச்சைக்காரர்கள் மாநாடு’ என்ற கட்டுரையில் சிட்னி நகரின் புறக்காட்சிகளை மையப்படுத்துதலே முதன்மையாக இருந்தாலும் அக்கட்டுரையில் சிட்னி நகரின் நவீன பிச்சைக்காரர்களின் பதிவுகள் வாசிப்பிற்கு மேலும் சுவையூட்டுகின்றன.

‘ஒரு புதிய பார்வை’ என்ற கட்டுரையில் ஆஸ்திரேலியாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அதுவும் இலங்கைத் தமிழர்களின் எதிர்நோக்கும் சாதிய வேற்றுமை சிக்கலையும் பெண்ணடிமைத்தனத்தையும் சுட்டுகின்றார். இக்கட்டுரையின் சிறப்பு என்னவென்றால் புஷ்பராணி தங்கராஜா எழுதிய ‘கல்யாணம் செய்யாதே!’  என்ற கவிதை பதிவுதான். அங்குள்ள சில குடும்பங்களின் வாழ்க்கை முறைகளை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் ஆழ்ந்து சித்திக்க நல்ல பல கருத்துகள் இதில் அடங்கியுள்ளதை அறியமுடின்றது.

‘கைதிகள் கண்ட கண்டம்’, ‘அத்தாவும் பித்தாவும்’, ‘உலகப் பிச்சைக்காரர்கள் மாநாடு’, ‘செம்மறிகளும் நோபல் பரிசும்’, ‘160 வாரத் தொடரின் நாயகன்’ போன்ற கட்டுரைத் தலைப்புகளே இப்பயணநூல் வாசிப்புக்கான சுவையூட்டிகள். மாறுப்பட்ட அனுபவத்தையும், புதுமைத் தேடலையும் தூண்டுகின்றன இத்தலைப்புகள்.

மேலும் பயண இலக்கிய நூலின் கூறுகள், பயணக் கருத்துகள், பயண அறிவுரைகள், பயண அனுபவங்கள் போன்ற கூறுகளைக் காணமுடிகிறது. ஊர்களுக்குச் செல்லும் முறை, எவ்வாறு சென்றார்கள், என்னவெல்லாம் கண்டு களித்தார்கள், பயணம் செய்யும்பொழுது ஏற்பட்ட இடையூறுகள், அந்நாட்டு மக்களிடம் கண்ட புதுமைகள், அன்றாட வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், பழைய பயண அனுபவங்கள், நகைச்சுவையான பயண நிகழ்ச்சிகள், மக்களின் பண்பாடு, பண்பாட்டு மாற்றங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய கருத்துகள், இடங்களுக்குச் செல்லும் பாதைகள், பயணத் தொடர்பான அறிவுரைகள், பிற நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான அடிப்படைகள், இந்தப் பயண நூலில் இடம்பெற்றுள்ளன.

சை.பீர்முகம்மது அவர்களின் இந்தப் பயண இலக்கியக் நூலை நவீன் எனக்குக் கொடுத்து நூலாய்வு செய்யச் சொன்னபோது கைதியான மனநிலையோடுதான் பெற்றுக் கொண்டேன். பயண நூலா? அறுத்து எடுத்து விடுவாரே? ஒரே இட விவரணைகளே மலிந்து கிடக்குமே? என்ற சலிப்புடனேதான் பெற்றுக் கொண்டேன். வாசிப்பைத் தொடங்குவற்கே சில காலம் எடுத்துக் கொண்டேன். இத்தனை சலிப்புகளுக்குமிடையே இந்த நூல் கண்ணில் தட்டுப்படும்போதெல்லாம் ‘கைதிகள் கண்ட கண்டம்’ என்ற தலைப்பு மட்டும் என்னை உறுத்தியே வந்தது. அந்த உறுத்தல் மேலோங்கத்தான் கைதிகள் கண்ட கண்டத்திற்குப் பயணமானேன். கைதிகள் கண்ட கண்டத்தில் சில காலம் கைதியாகி சிக்குண்டு கிடந்த எனக்கு விடுதலை என்பது தண்டனைதான் என்பது வாசித்து முடித்தபோதுதான் உணர்தேன்.

1 comment for “கைதிகள் கண்ட கண்டம்

  1. Packiam Letchumanan
    November 9, 2019 at 8:23 am

    அருமையான ஆய்வு. அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை விவரித்து இருப்பது , ஆசிரியரின் சமூக நோக்கத்தைக் காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...