வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’

73087195_2804370296242697_3245688411717107712_nஅக்காலத்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குலசேகரத் தம்புரான் என்ற சிற்றரசர் இருந்தார். அரசராக அவர் இருந்தபோதிலும் உண்மையான அதிகாரம் ஏழு நாயர் தரவாட்டு குடும்பங்களிடம் இருந்தது. இவர் ஒருமுறை சமஸ்தானத்தை விட்டு வெளியில் சென்றபோது ரேணுகா என்ற தெலுங்குப் பெண்ணிடம் காதல் கொண்டார். அவளை மணமுடித்து இங்கு அழைத்து வந்தார். தெலுங்கு பெண்ணென்பதால் அவளை வடுகச்சி என்றழைத்து ஏற்க மறுத்தன அந்நாயர் குடும்பங்கள்.தம்புரான் அவளை அரசியாக்க முயலக்கூடும் என்ற நிலை வந்தபோது அவளைக் கைவிடுமாறு மிரட்டினர். குலசேகர தம்புரான் மறுக்கவே அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்தனர். உடனே அவர் ரேணுகாவை அழைத்துக் கொண்டு நெல்லைக்கு அருகே உள்ள திருக்கணங்குடிக்குச் சென்று வாழ்ந்து வந்தார். அவள் கருவுற்றபோது குலதெய்வ பூசைக்காக அவளையும் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் வந்தார். இதை ஒற்றறிந்த நாயர் குடும்பத்தினர் சேர்ந்து அவரை வஞ்சகமாக கொன்றனர். நிறைமாத கர்ப்பிணி ஆனதால் அவளைக் கொல்லவில்லை. கணவனைக் கண்ணெதிரில் பறிகொடுத்ததால் அவள் வஞ்சம் உரைத்து அவருடன் சிதையில் எரிந்தாள்.

அவள் செண்பக யக்‌ஷியாகி ஏழு குடும்ப ஆண்கள் அனைவரையும் கொன்றாள். அக்குடும்பப் பெண்களின் கருவில் உள்ள கருக்களையும் அழித்தாள்.குடும்பங்களையே கருவறுத்ததால் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நம்பூதிரியை அழைத்து வந்து யக்‌ஷியை சாந்தி செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்.நம்பூதிரி பலியும், கொடையும் தந்து அவளை மேலாங்கோட்டில் செண்பக யக்ஷியாக ஆவாகித்தார்.அவள் இப்போது மேலாங்கோட்டில் அருள்பாலிக்கும் அம்மனாக இருக்கிறாள். அவ்வழிபாட்டிடத்தில் இப்போது குலசேகர தம்புரானும், நடுவில் வடுவுச்சி அம்மனும் மறுபுறத்தில் செண்பக யக்‌ஷியும் உள்ளனர். செண்பக யக்‌ஷி வாயில் குழந்தையைக் கடித்தபடி இருப்பாள்.

நவீனின் இந்நாவலில் வாயில் குழந்தையைக் கடித்தபடி இருக்கும் பேச்சி செண்பக யக்‌ஷியை நினைவுறுத்துகிறாள். இதுபோன்ற கதைகள் நிறையவே தமிழகத்தில் காணக் கிடைக்கின்றன. சாதாரண குலப்பெண்ணான வடுகச்சி எப்படி யக்ஷியாகிறாள்? பெண்ணிடம் உள்ள அடிப்படை உயிரியல் விசையே அழிவு சக்தியாகிறது. இரண்டு தெய்வ வடிவங்கள் அருகருகே உள்ளன. ஒன்று அன்னைவடிவமான வடுவுச்சி. இன்னொன்று பிள்ளைதின்னும் பேய்ச்சியான செண்பக யக்க்ஷி. இரண்டுமே ஒருவர்தான். இந்த இரட்டைநிலை என்பது பெண்ணின் ஆதார இயல்பு. ஒரே விசை இருவழிகளில் வெளிப்படுவது.

“பேயவள் காண் எங்கள் அன்னை” என்று பாரதியின் ஒரு வரி உண்டு. அன்னை, பேய் என்ற இரண்டு சொற்களுமே ஒரே வரியில் வருகின்றன இந்த இரட்டைநிலையைத்தான் இந்திய மனம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.இதைத்தான் நவீனின் பேய்ச்சி நாவலின் மையம் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

இந்நாவலில் இயல்பாக எழுந்து வரும் மைய உருவகம் பேச்சியம்மன். பேச்சி இந்நாவலில் வரும் ஒவ்வொரு பெண்ணிலும் ஒவ்வொரு தருணத்தில் எழுகிறாள். தனித்த ஆளுமையுள்ள ஓலம்மாவில் அவள் துலங்கித் தெரிகிறாள். அவளில் இருந்து இந்நாவலில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் சற்றே வேறுபடுத்திப் புரிந்துகொள்ளலாம். ஒட்டுமொத்தமாக அத்தனை பெண்களையும் பேய்ச்சிகள் என்றும் வகுத்துக்கொள்ளலாம்

இந்நாவலின் அடிப்படையான களமென்பது தமிழகத்தில் மழை பொய்த்ததனால் ஏற்பட்ட பஞ்சத்தின்போது மலாயாவுக்குத் தோட்ட தொழிலாளர்களாகச் சென்ற நம் மக்கள் அங்குள்ள ‘ஆயேர்’ என்ற தோட்டத்தில் குடியேறி ஒரு சிறிய சமூகமாக வாழ்கிறார்கள். ரப்பர் பணப்பயிர் என்பதால் வருடம் முழுவதும் அவர்களுக்குப் பால் வெட்டும் வேலை கிடைக்கிறது. இப்படியான ஒரு குடியிருப்பில் 1980களில் விஷசாராயத்தினால் விளைந்த மரணங்கள்தான் நாவலின் தொடக்கக் களம்.

தோட்ட மக்களின் அடுத்தடுத்த மரணம் என்பது ஒன்றிரண்டு நாட்களின் அலைக்கழிப்புக்குப் பின் நாம் கடந்து போகக்கூடிய செய்தி. ஆனால் ஒரு கலைஞன் அதன் பின்னணியையும், அந்த மக்களையும் உண்மையாகப்பேசும்போது அது ஓர் அடையாளமாக, ஒரு குறியீடாக வளர்வதாக ஆகிறது.

அந்நிய நிலத்தில் வந்திறங்கும் ஆண்கள் ஏன் இப்படி தங்கள் மொத்த உழைப்பையும் செலுத்தி ஈட்டிய பணத்தை குடிக்குச் செலவு செய்து அழிகிறார்கள்?  அவர்களால் அங்கே நிலைகொள்ள முடியவில்லை. அங்கே வேரூன்றவே முடியவில்லை. அலைகளில் வேர்கள் தத்தளிக்க மிதக்கும் பாசிகள் போலிருக்கிறார்கள்.

ஆகவேதான் பெண்கள் ஆலமரம்போல வேரூன்றவேண்டியிருக்கிறது. அவர்கள் அந்த மண்ணில் நிலைகொண்டாகவேண்டும். தங்கள் தலைமுறைகளை வாழவைக்கவேண்டும். ஆகவே அவர்கள் தங்கள் முழு உயிராற்றலையும் அதற்குப் பயன்படுத்துகிறார்கள். அப்போதுதான் அவர்கள் பேய்ச்சியாக ஆகிறார்கள். அன்னையாகவும் பேயாகவும் ஒரே சமயம் திகழ்கிறார்கள்.

 பெண்களில் எழக்கூடிய உக்கிரமான ஆவேசம்,உண்மையில் குழந்தையை கடித்தபடி காட்சிதரும் பேய்ச்சியேதான்.  அதை விளக்கும் ஓர் அழகிய தருணமும் நாவலில் வருகிறது.

“காளியாத்தா கெட்டவனுங்களெ கொண்ணுபோட்டு உக்கிரமா நடந்து வரா”

“அம்மாவாட்டமா”

“இல்ல கண்ணு, இது கோவம் இல்லய்யா. உக்கிரம், உக்கிரமுன்னாலும் உக்கிரம் மகா உக்கிரம். அதுக்கு ஞாயம் தெரியாது. எல்லாத்தையும் அழிக்கும். அப்படி எல்லாரையும் வதம் செய்யும்போது ஆத்தா உக்கிரத்தை யாராலயும் கொறக்க முடியல. நெருங்கினா செதச்சிற மாட்டாளா. அப்பதான் செவன் ஆத்தா வர வழியில படுத்து கிட்டாரு. புருசன் மேல காலுபட்டதும் ஆத்தா கோவம் அடங்குச்சி.”

இந்நாவல் கதாபாத்திரங்களின் நேரடிச் சித்தரிப்பாகவும், நினைவுகள் வழியாகவும் சுமார் 50- 60 வருடங்களைக் கடந்து செல்கிறது.

இரு கதைச்சரடுகளை சுட்டிக்காட்டலாம். வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து தாய் தந்தையுடன் பஞ்சம் பிழைக்க கப்பலில் சென்று கப்பலிலேயே தன் தந்தையைப் பறிகொடுத்த ஓலம்மாவின் நினைவுகள் வழியாக ஒரு கதை நீள்கிறது. கூலித்தொழிலாளர் வாழ்க்கையின் சித்திரம் இது. தள்ளுருகெவெ என்ற மலைகிராமத்திலிருந்து தன் குழந்தை ராமசாமியுடன் செட்டியின் வேலையாளாக வந்திறங்கும் கோப்பேரன், அவர் மகன் ராமசாமி வழியாகவும் இன்னொரு சரடு நிகழ்கிறது. மூன்றாவது ஓலம்மாவின் கணவன் மணியம் வழியாக சொல்லப்படும் ஒரு உப சரடு.அனைத்தும் பின்னி ஒரு பெரிய சித்திரமாகின்றன.

இந்த மையப்பின்னலில் இருந்து விரிந்து பரவும்பல இழைகள் ஒரு மொத்தச் சித்திரத்தை அளிப்பதனாலேயே இது ஒரு நாவல் வடிவை அடைகிறது. கடுமையாக உழைத்து சம்பாத்யத்தில் பாதிக்கு மேல் குடியில் விடும் தமிழ்த் தொழிலாளர்கள், உழைப்பையே இன்பமாக கருதும் சுறுசுறுப்பான சீனர்கள், பல குடும்பங்களாக ஒன்றிணைந்து சந்தோஷமாக கழிக்கும் மலாய் மக்கள், செம்பனைத் தொழிலுக்கு வந்துஅந்த உஷ்ணத்திலும் பணிபுரியும் இந்தோனேஷிய தொழிலாளர்கள். இந்த நுண்ணிய அவதானிப்பு நாவலுக்கு மேலதிக வண்ணத்தைக் கொடுக்கிறது.

நாவலின் இன்னொரு இழை மனிதனின் ஆதார குணமான சாகச உணர்வு. புதிய நிலங்களைத் தேடிச் செல்வதும், அதை வசப்படுத்துவதும், அங்கு வேர் விடுவதும் என விரிகிறது. தன் நிலத்தை விட்டு எந்த நம்பிக்கையில் அவன் கிளம்புகிறான்? புரியாத மொழி, புதிய நிலம், தட்ப வெப்ப நிலை, அந்நிய கலாச்சாரம், தெரியாத பயிர், பழக்கப்படாத வேலை இவ்வளவு இருந்தும் நம்பிக்கையை தன்னுள் தேக்கி புது நிலம் நோக்கி செல்கிறான். வணிகம் செய்யும் செட்டியார்களும் அங்குச் செல்கிறார்கள். வட்டிக்கு கொடுத்து, வணிகம் செய்து பொருளீட்டி அங்கேயே தோட்ட முதலாளிகளாகவும் ஆகிறார்கள். அவர்களில் செயல்படுவதும் புதிய சவால்களை முறியடிக்கும் சாகச உணர்வுதான்.

புதுநிலத்தில் ஒரு சமூகம் உருவாகி எழுந்து நிலை கொள்வதன் சித்திரம் என்று இந்நாவலை இன்னொரு கோணத்தில் சொல்லமுடியும். ஒரு புதியசமூகம் எப்படி உருவாகி நிலைகொள்கிறது என்பதைக்கொண்டு ஏற்கனவே இங்கே நிலைகொண்டிருக்கும் சமூகங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். புதிய சாதிகள் உருவாகின்றன. புதிய ஆசாரங்கள் உருவாகின்றன. ஒரு தலைமுறையின் வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கு வரலாறாக ஆகிவிடுகிறது.

மனிதர்கள் கலாச்சாரத்தை ஒரு கைப்பிடி விதையாக தங்கள் பூர்வநிலத்தில் இருந்துகொண்டுவருகிறார்கள். அதைப் புதிய மண்ணில் பயிரிட்டு வளர்க்கிறார்கள். செல்லும் இடமெல்லாம் தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்கள் உருவாகின்றன. தெய்வங்கள் நிலைகொள்கின்றன. மலேசியா சென்ற தமிழர்கள் வருடந்தோறும் மூன்று நாள்தைப்பூசத்தை பெருந்திருவிழாவாகக் கொண்டாடி உலகின் மிக பெரிய திருவிழாவில் ஒன்றாக்கி விட்டார்கள். நாவலில் பாலதண்டாயுதபாணிக்கு காவடி எடுப்பது, அலகு குத்துவது, மௌன விரதம் இருந்து பாத யாத்திரை செல்வது, பாலாபிஷேகம், வெள்ளித் தேர் என தமிழகமே அங்கே திரும்ப நிகழ்கிறது.

அதேசமயம் அங்குள்ள வாழ்க்கை மற்றொன்றுதான். அந்தத் தோட்டக்காட்டு யதார்த்தம் மிகப்புதியது. அதை நுட்பமாகக் காட்டுகிறது இந்நாவல். கம்பத்தின் வர்ணனை, செம்பனைத் தோட்டம், காடு, அருவிக்கு போகும் பாதை, காளியம்மன் கோவில், முனியாண்டி கோவில், லயங்கள், ஓடை, மலாய்க் குடியிருப்பு இவை அனைத்துமே துல்லிய நில விவரணைகளுடன், அடையாளங்களுடனும் அங்கு சென்று வாழும் உணர்வைத் தரும்படியும் [living in] வெளிப்படுகின்றன.

ஒரு நிலத்தை உண்மையாக படைத்துத் தருவது நாவலின் சவால்களில் ஒன்று. அது ஒரு கதையாக அல்லாமல் யதார்த்தமாகவே ஆவது அப்போதுதான். இந்நாவலில் நுட்பமான பலநூறு தகவல்கள் வழியாக நவீன் மலேசியாவின் நிலத்தை நமக்கு வாழ்வனுபவமாக ஆக்குகிறார்.  மூலிகைத் தாவரங்கள் பலவும் பெயருடனும், விலங்குகளில் ராஜ நாகம் தொடங்கி உடும்பு, காட்டுப் பன்றி, குரங்கு, செம்போத்து, வெண்ணாந்தை [barn owl], ஆங்சா, பெட்டைக் கோழி, சேவல், நாய் என   உயிர்ப்புடனான உலகத்தைக் காட்டிச் செல்கிறார்.

நவீனின் மொழிநடை கச்சிதமாகவும், அனாயசமாகவும் உள்ளது. உரையாடல்கள் கூர்மையாகவும்,நேர்த்தியாகவும், மெல்லிய அங்கதத்துடனும் உள்ளன. செட்டிநாட்டு மொழி, தென் மற்றும் வட தமிழக பேச்சு மொழி நுட்பமான வேறுபாடுகளுடன் உரையாடலில் விரவி வருகிறது.

இங்கிருந்து அங்கே சென்றவர்களுக்கு அது புதிய நிலம். ஆனால் அங்கே பிறந்து வளரும் ஒரு குழந்தைக்கு அதுவே மூதாதையர் நிலம். அவர்களின் வாழ்க்கையின் நினைவுகள் நிறைந்தது. ஆகவே எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என அவன் அந்நிலத்தைப்பற்றித்தான் பாடுவான். ஓலம்மாவின் பேரனுக்கு மலேசியாதான் தாய்நாடு. ஏனென்றால் அது அவனுடைய பாட்டியாகிய ஓலம்மாவின் நாடு.

இந்நாவல் மலேசியாவை இந்த இரு முக்கியமான கோணங்களில் காட்டுகிறது என்று சொல்லலாம். ஒன்று இங்கிருந்து அங்கே சென்றவர்களின் பார்வையில் அந்நிலம். இன்னொன்று அங்கே பிறந்து வளர்ந்த குழந்தையின் பார்வையில் அந்நிலம். அங்கே சென்றவர்கள் அந்நிலத்தை அறிந்துகொண்டு வேரூன்றும்பொருட்டு போராடுகிறார்கள். அங்கே பிறந்து வளர்ந்தவன் அந்நிலத்தை தன் மரபாக இயல்பாக உள்வாங்கிக்கொள்கிறான்.

aruna ammaஓலம்மாவிற்கும், அவள் பேரனான அப்போய்க்கும் தமிழ் நாவல் வரலாற்றில் அழியாத இடமிருக்கும். பதினெட்டாம் அட்சகோட்டின் சந்திரசேகரன்,பதேர் பாஞ்சாலியின் அப்பு, நீலகண்ட பறவையைத் தேடியின் சோனா, தாஸ்தாயெவெஸ்கியின் கோல்யா, நடஷாவின் தம்பி பெட்யாபோல ஓரு துடிப்பான சிறுவன். கருப்பன் நாயோடு சேர்ந்து சுற்றுவதும், எல்லோரும் பயப்படும் பூனியான் கம்பத்திற்குள் போவதும், முதலில் தாத்தாபோல் வேட்டைக்காரனாக ஆசைப்படுவதும்,ஒரு பறவை எதேச்சையாக அவனால் அடிபட்டு இறந்தவுடன் ‘தெரியாம பண்ணிட்டேன் சாரி’ என்று அதை புதைத்த இடத்தில் கண்ணீருடன் அமர்ந்திருப்பதும், உடனே தாத்தா மாதிரி ஆக மாட்டேன், அவர் கெட்டவர் என்று அவனாகக் கனிவதும் கவித்துவமான தருணங்கள்.

நாய்குட்டியைப் பார்க்கப்போகும்போது அது தன் ஈர மூக்கை உரசியதும் உருகி கண்ணீர் மல்கி அதைத் தூக்கிகொண்டு ஓடிவருவது அவனைக் களங்கமின்மையை ஒளியுடன் காட்டும் மற்றொரு அழகிய தருணம். தண்ணீரில்லா கிணற்றை ஒவ்வொரு முறையும் எட்டிப் பார்க்கும், பாட்டி வைத்தியத்துக்கு கொடுத்த காசில்அவளுக்குத் தெரியாமல் தின்பண்டம் வாங்கி சாப்பிடும், செடிகளையும், விலங்குகளையும் ஆர்வத்துடன் அறிந்துகொள்ளும், தன் லஸ்ட்டிக் பிரயோகத்தை பாட்டியின் பிரியமான ஆங்சாக்களிடமே சோதித்தறியும், ஊசித்தட்டான், வண்ணத்துபூச்சியின் பின்னால் செல்லும் அப்போய் ஒரு அழியாத சித்திரமாகி விடுகிறான்.

நாவலின் கலை என்பது ஒரு தரிசனத்தை, அல்லது உணர்வை முற்றிலும் வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுத்துவது. வெவ்வேறு வகை கதாபாத்திரங்கள் அதற்கு உதவுகின்றன.  பூனைப் பாதங்களை பதிந்து நடந்து, புன்னகை சுமந்த உதடுகளுடன் கரிய சிற்ப செதுக்கு சித்திரம் போல் வரும் காத்தாயிக்கு நேர்மாறு ஓலம்மா. நிலம் அதிர நடக்கிறாள். அழுத்தமான தொனியில் பேசுகிறாள்.தோட்டத்து மக்கள் அனைவரையும் உறவென அரவணைக்கிறாள். சிறுமியாக வந்த ஓலம்மா தோட்டத்தில் உழைத்து சுற்றியுள்ள தொழிலாளர்கள் குடும்பங்களுடன் பழகி உறவினர் போல் ஆகிறாள்.

மணியத்தை மணந்து, மகள் முனியம்மாவுடன் வாழும் அவள் மணியம் இறந்தவுடன் சீன கம்பத்துக்கு மாறிச் செல்கிறாள். பூஜ்ஜியத்திலிருந்து உழைத்து மேலெழுகிறாள். பாலப்பம் சுட்டு விற்கிறாள். கோழிகள், ஆங்சா வளர்த்து முட்டை விற்கிறாள். காய்கறிகளை தன் கொல்லையில் பயிரிட்டு வளர்த்து விற்றுச் சம்பாதித்து அதையே சொந்த வீடாக சீனனிடமிருந்து வாங்கிக் கொள்கிறாள். அந்நிலத்தை சீனன் வேறொருவருக்கு விற்கும்போது தோட்டம் செம்பனைக்கு மாறுகிறது.

கடைசியில் அனைத்தையும் இழக்கிறாள். தன் வேரை இழந்து, தான் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டுமகளுடன் சென்று நகரத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது எல்லாவற்றையும் தன் கையாலேயே அழித்து, பேச்சியின் முன் தன் முடிவைத் தேடிக்கொள்கிறாள். அவள் நட்டு வளர்த்த அழிக்க முடியாத ரம்புத்தான் மரம் ஓலம்மாவை பேரனுக்கு நினைவுறுத்தும் அழகிய குறியீடு. மண்ணும் மனிதரும் நாகவேணி போல குடும்பம் சிதைகிறது. நஞ்சம்மா போல ஓலம்மாவும் தமிழ் நாவலின் அழியாத சித்திரம்.

ஓலம்மாவின் உற்ற நண்பனாக, மூலிகை மருத்துவராக வரும் ராமசாமி ஆயேர் தோட்டம் கைமாறும்போது அலைகழிக்கப்பட்டு தோக் குருவினை கண்டடைகிறார். நோயாளியின் வலியை வாங்கிக்கொள்பவனே சிறந்த மருத்துவன் எனும் குருவின் உபதேசப்படி வாழ்கிறார். மூலிகைகளைத் தானே பயிர் செய்து, அதைத் தடவிக் கொடுத்து, உரையாடி அதன் சம்மதம் கேட்டபின்பே அதைப் பறித்து வைத்தியம் செய்கிறார். செடிக்கு நோகாமல் விரலிடுக்கு வழியே தண்ணீர் விடும் ராமசாமி ஒரு ஜென் குருவை நினைவுறுத்துகிறார்.அவர் வெற்றிலை போடும் சித்திரம் ஒரு தியான அனுபவத்திற்கு நிகரானது. எத்தனை முயன்றும் அவரால் தனது 20 வருட குற்றவுணர்ச்சியை வெல்லவே முடியவில்லை. எது அவரை அருவியின் இருளாழத்தில் தள்ளுகிறது?

ஓலம்மாவின் கணவனாக வரும் மணியம் சிலம்பம் சுற்றும் துணிச்சல் மிக்க ஓர் ஆளுமையாக வருகிறார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். நாத்திகவாதியான அவர் பெரியார் முற்போக்குக் கழகம் என்ற அமைப்பை தோட்டத்தில் நிறுவி முதலாளியிடம் போராடி சில சலுகைகளை வாங்கித்தந்து தோட்டத்து இளைஞர்களிடையே ஓர் ஆதர்ச நாயகனாக வலம் வருகிறார். கடைசியில் பெண் சபலம் எனும் போதையில் தடுமாறி வீழ்கிறார்.அதைத் தவிர சாராயக் கடை நடத்தும் சின்னி, மளிகைக் கடை சீனன் ஆங்சோ, பூசாரி கட்டையா, தண்டல், பக்கிரி, தலைமை ஆசிரியர் கண்ணன், சம்பு என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனி வண்ணங்களில் காட்டப்படுகின்றனர்.

ஓலம்மா தன் முடிவைத் தானே எடுக்கும் கணத்தில் பேச்சியில் அவளுக்கு சின்னி வெளிப்படுவது நாவலை முற்றிலும் வேறொரு பரிமாணத்தை நோக்கித் திருப்புகிறது.கடைசி இருபது பக்கங்களுக்குள் வளர்ந்து ஓர் ஆளுமையாக வரும் மாலதியில் பேச்சி வெளிப்படும் தருணம் மிக நுட்பமானது. மூன்று தலைமுறைகாலமாக பெண்களில் அன்னையென்றும் பேயென்றும் வெளிப்படும் பேச்சியின் சித்திரம் அது.

அப்போய் தன் மனைவியுடன் தன் வேரை, தன் பாட்டியின் மண்ணை, பேச்சியைத் தேடி லுனாஸ் டவுன் எனும் சிறு நகரை ஒட்டியுள்ள கம்பத்திற்கு வருவதுடன் நாவல் முடிவடைகிறது. தென்னை மாறி ரப்பர் வந்து, பின் செம்பனைக்கு தோட்டம் மாறும் சித்திரங்கள் எப்படி அதை சார்ந்த தொழிலாளர் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது என்பதை இப்படைப்பு அழுத்தமாகக் காட்டுகிறது.

ஒரு ஒருங்கிணைந்த சமூகமாகத் திரண்ட இந்தச் சமூகம் செம்பனை வந்தபோது சிதறி எவ்வகையில் நகரங்களில் நிலைகொள்ளாமல் அலைந்து அல்லலுற்றிருக்கும் என்பதை நாம் பிரக்ஞையால் உணருமாறு குறிப்புணர்த்துகிறார் நவீன். கிளவுஸ் தொழிற்சாலைகளிலும், பினாங்கு பால வேலைக்கும் சென்று தங்கள் ஆத்மாவைக் கோராத ஒரு தொழிலில் ஈடுபட்டு குருவிக்கூடு போன்ற அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து சிதைந்திருப்பார்கள் என நாவலைத் தாண்டியும் நம்மை உணரவைக்கிறார்.

பொதுவாக நாவல் என்ற வடிவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து நமக்கு சில கருதுகோள்கள் உருவாகி வந்துள்ளன. நாவல் வாழ்க்கைப் பற்றிய அடிப்படையான, ஆதார வினாக்களை எழுப்புவதாகவோ, மானுடத்தின் நிரந்தர பிரச்சனைகளைப் பேசுவதாகவோ இருக்க வேண்டும். அதை கதாசிரியன் தன் கதை மாந்தர்கள் வழியாகவும், தன் தரிசனத்தின் வழியாகவும் வேறு, வேறு கோணங்களிலான பார்வைகளை மோதவிட்டு ஒரு சமநிலையைக் கண்டடைகிறான் [equilibrium]. அதுவே அந்நாவலின் சாரமாகத் திரண்டு வருகிறது. அதில் அவன் எடுத்துக்கொள்ளும் காலப் பின்னணி மிக நீண்டதாக இருக்கும்பட்சத்தில் நாவலின் விஸ்தீரணமும், ஆழமும் கூடுகிறது. நாவலில் ஊடாடும் தலைமுறைகள் வழியாக கடந்து வரும் ஞானமும், அனுபவங்களும் அவன் நாவலின் செழுமைக்கு உதவுகின்றன. அவனுக்கு அக்காலகட்டத்து வரலாற்று பிரக்ஞையும், போதமும் மிகவும் அவசியமாகிறது. மேற்குறிப்பிட்டவற்றை எல்லாவிதத்திலும் நிறைவு செய்யும் விதமாக நவீனின் இந்நாவல் வெளிவந்துள்ளது.

நாவல்கள் நகர்ந்து வந்திருக்கும் பாதை முதலில் செவ்வியல் நாவல்கள், நவீனத்துவ நாவல்கள், பின் நவீனத்துவ நாவல்கள் வரிசையில் இப்போது எழுதப்படும் படைப்புகள் எப்படி இருக்க வேண்டும்? உலக மயமாதல் என்ற மாபெரும் வலைப்பின்னலில், ஊடகங்களின் பெருக்கமும் நம் பிராந்திய, கலாச்சார வேர்களை அழித்து நம்மை பொதுமைப்படுத்த முயல்கிறது. இப்போது நம் நாவலாசிரியர்கள் நம்மை நோக்கி பேசவேண்டிய தருணம். நம் பிரதேச அடையாளங்கள், தொன்மங்கள், ஐதீகங்கள், நம்பிக்கைகள், குறியீடுகள் பேணப்பட்டு நம் தனித்தன்மை தக்கவைக்கப்பட வேண்டும். அப்படியான படைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. நவீனின் பேய்ச்சி மலாயாவந்து குடியேறி நான்கு தலைமுறைகளாக வேர்விட்டு மண்ணின் மைந்தர்களாகும் தொழிலாளர் வாழ்வை ஒரு பருந்துப் பார்வையிலும் அருகில் அணுகியும் கூறுகிறது. புலம்பெயர் இலக்கியத்தில் இது ஒரு புதுமுயற்சி.

மேலை நாடுகளில் இப்போது புலம் பெயர்ந்து அங்கு மண்ணின் மைந்தர்களாகும் எழுத்தாளர்களின் தனித்தன்மை மிக்க அவர்களின் சொந்த நாட்டின் பிரதேச கலாசார கூறுகளே வரவேற்கப் படுவதாகவும் அதுவே இப்போதைய இலக்கிய வகைமை என்றும் கோவை நரேன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது நினைவில் எழுகிறது. இந்நாவலில் தமிழர்களை ஒரு சமூகமாகப் பிணைப்பது அவர்கள் நினைவுகளில் சுமந்து வந்த நாட்டார் தொன்மங்களும், ஐதீகங்களும், சிறு தெய்வங்களும்தான். காளியம்மா, குட்டைக்கார முனியாண்டி, பேச்சியம்மன் எல்லார் சிறு தெய்வங்கள் எனில் பெருந்தெய்வமாக அவர்களைப் பிணைப்பது தண்ணீர் மலையில் கோவில் கொண்டுள்ள பால தண்டாயுதபாணி.

இந்நாவல் மூன்று போராட்டங்களின் கதை. வேர்கொள்வதற்கான போராட்டம், வேர்பிடுங்கி அகற்றப்படும்போதுள்ள போராட்டம், மீண்டும் அந்த வேர்களைக் கண்டடைவதற்கான போராட்டம் என்னும் மூன்று அடுக்குகளில் அமைந்துள்ளது நவீனின் பேய்ச்சி. மலேசியச் சூழலில் மட்டுமல்ல நூறாண்டுகடந்த நவீனத்தமிழிலக்கிய வரலாற்றிலும் இது மிகமுக்கியமான ஓர் இலக்கியப்படைப்பு.

உரையின் காணொலி

2 comments for “வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’

  1. V ramakrishnanvaithilingam966@gmail.com
    January 14, 2020 at 5:01 am

    Very detailed analysis of the Novel Peichy.Best wishes for the writter Naveen and the critic madam

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...