சுருங்கிய வாசிப்பில் சுணங்கிய மனங்கள்

015வல்லினத்தில் நான் சேர்ந்து உணர்வோடு உலா வந்து வாழ்ந்து சரியான ஓர் ஆண்டு. 31.03.2019 இவ்வாண்டு சிறுகதை பரிசளிப்பு விழா, 12.05.2019  சுனில் கிருண்ஷன் அவர்களின் சந்திப்புக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை எனக்கு வேலை என்பதால் பகுதி நேர வேலையை முடித்து விட்டு, 1.30 மணிக்குள் விமானம் பிடித்து ஜொகூரில் இருந்து நிகழ்ச்சிக்குள் வந்தடையவேண்டிய சூழல். பதற்றத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிறகு வீடு சென்று அடையவேண்டும் என்பதே என் சிந்தனையில் இருக்கும்.  நவீனைத் தவிர நான் யாருடனும் பேசியதுக் கிடையாது.

டிசம்பர் மாதம் நவீன இலக்கியம் முகாமிற்காக நான் காத்திருந்தேன்.

டிசம்பர் மாதம் விஜயம் செய்த உடனே பள்ளி விடுமுறை சீக்கிரம் முடிந்துவிடுமோ என எப்பொழுதும் எனக்குத் தோன்றியதுண்டு. இம்முறை நாட்களை எண்ணிக்  கொண்டிருந்தேன். குறிப்பிட்ட நாளும் வந்தது. முதல் நாள் இரவு என்னால் உறங்க முடியவில்லை. காலையில் 4 மணிக்கெல்லாம் தயாராகி வி்ட்டேன்.   6:45க்கு நான் கோலாலம்பூரை அடைந்தும் விட்டேன். அங்குதான் எனக்கு விதி விருப்பத்தோடு விளையாடியது. நான் கிராப் வாகனத்தை பதிவு செய்ய எண்ணியபோது ஒரு பெண் தொழிலாளி என் முன் நின்று எனக்கு உதவுவதாகக் கூறினாள். அவள் சீருடை அணிந்து இருந்ததால் நானும்  இசைந்தேன் .

அப்பெண்மணி வெள்ளை நிற வாகனம் அல்மேரா வாகனம் இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடும் என்றார். மணி 7:00. விலை அதிகமாக இருந்தது இருப்பினும்  சரி என்றேன்.  என்னை விட தாமதமாக வந்தவர்கள் வானகத்தில் ஏறிகொண்டே இருந்தனர். என் வாகனம் இன்னும் வந்தபாடில்லை. இதோ வந்து விடும் என்றார். அதோ பார் வாகனத்திற்குப் பின்னால் வெள்ளை வாகனம் வருகிறது என்றார். மணி 7:49 நான் அவரிடம் “பதிவை ரத்துச் செய்; என்று நானே என் கையடக்கத்தொலைப்பேசியில் பதிவு செய்தேன்” இன்னும் 15 என்று காட்டியது. உடனே அப்பெண்மணி ஓடி வந்து வாகனம் வந்து விட்டது எனக் கூறினார். அப்பொழுது மணி 8:05 பேச்சின்றி அமர்ந்தேன். வாகனமோட்டியிடம் என்னை 9.00 மணிக்குள் பத்துமலையில் இறக்கவேண்டும். சற்றுக்கடினம் தான் ஆனால் முயற்சிக்கிறேன் என்றார். பதற்றம் பதறியடித்துக் கொண்டு என் இதயத்துடிப்பை அதிகப்படுத்தியது.

வெள்ளிக்கிழமை வழக்கம்போல் சாலை நெரிசல் அதிகம் இருக்கும் என்றார். என்னை  சீக்கிரமாக சேர்த்து விடுங்கள், நான் 9:00 மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என்று மறுபடியும் நினைவுப் படுத்திக் கொண்டிருந்தேன் .

இன்று வெள்ளிக்கிழமை, ஆனால் உன் அதிர்ஷ்டம் சாலை நெரிசல் இல்லை” என்றார். கடிகாரம் 8:30 தாண்டியது. இரண்டு சாலை சாவடியில் நின்றார். எனக்கு 20 ரிங்கிட் தரமுடியுமா எனக் கேட்டார். பிறரின் அறியாமையும் அவசரமும், வியாபாரத்தந்திர யுத்தி எனத் தெரிந்திருந்தும் என்னால் வாதாட முடியவில்லை. என் நோக்கம் 9 மணிக்குள் போய் சேரவேண்டும். இருக்கும் கடைசித்தொகையை அப்போதே அவரிடம் செலுத்தினேன். பயணத்திற்குப் பொறுப்பேற்றிருந்த அரவிந்த் புலனத்தில் பேருந்தில் படத்தைப் போட்டவுடன், அவருக்கு நான் தொடர்புக் கொண்டு “நான் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன்” என்றேன். அப்பொழுது மணி 8:45. வாகனமோட்டி என்னிடம் கேள்விகேட்டார். அவை நினைவில் நிற்கவில்லை.

“அதோ பார்! பாறைகள் தெரிகிறது. நாம் பத்துமலையை அடையப்போகிறோம் என்றார். என்னையறியாமல் புன்னகை என் முகத்தில் படர்ந்தது. சரியாக 9.03 நான் பத்துமலையை அடைந்துவிட்டேன். சனிஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல வழியைக் கேட்டறிந்தேன். நான் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன் என்றேன். அவர் நீ உட்கார் நான் உன்னை பேருந்து இருக்கும்  இடத்திற்கு அழைத்துக்கொண்டுவிடுகிறேன் என்றார். நான் அவரிடம் உனக்கு எதேனும் தடைகள் இல்லையா என வினவினேன். அதற்கு அவர் “பத்துமலை ஒரு சுற்றுலா தளமும் கூட” எனக் கூறினார் .

வாகனமோட்டி என் பெட்டிகளை எடுக்க உதவினார். அப்போதுதான் வாகனமோட்டியின் முகத்தைப் பார்த்தேன். சிரித்துக்கொண்டே என்னை வழியனுப்பினார். விரைவாக நடந்து வந்துகொண்டிருக்கும்போது என் சக்கரப்பயணப்பெட்டி தரை கவிழ்ந்து விழுந்தது. ஓர் ஆமை எப்படித் தலைக்குப்புற விழுமோ அப்படிக் காட்சியளித்தது. தூக்கி நிறுத்தி மறுபடியும் நடந்தேன். நவீனைப் பார்த்து விட்டேன். மெல்ல நடக்க ஆரம்பித்தேன். கடையில் சென்று எதேனும் துணியை வாங்கி முகத்தை மூடி விடலாமா எனும் அளவிற்கு பயம். சற்று அவமானமாக இருந்தது. நவீன், “சீக்கிரமாக பேருந்தில் ஏறுங்கள்” எனக் கூறினார். நான் பேருந்தில் நுழைந்த உடனே சை.பீர்.முகம்மது அவர்களைப் பார்த்து நலம் விசாரித்தேன். கடைசி சீட்டில் அமர்ந்தவுடன் நாடித்துடிப்பு வேகமானது. கண்களை மூடி நன்றாகத் தூங்கினேன். ஆசிரமத்திற்கு 4:30 வந்தடைந்தோம். சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி எங்களை வரவேற்றார். தெய்வீக தேஜஷ், அவர் முகத்தில் மலர்ந்த நரைக்கூடிய தாடியை முந்திக்கொண்டு புன்னகையை மேலும் பொலிவுப்படுத்தியது. கலகலப்பாகப் பேசக்கூடியவர் என்பது அவரின் உபசரிப்பில் மிளிரியது.

ஆசிரமத்தின் பிரமாண்டம், அதன் நேர்த்தி ஆச்சரியப்படுத்தியது. எங்கும் தூய்மை. பார்ப்பவர்களுக்கு ஓர் இனம் புரியாத பேரின்ப நிலை நிச்சயம் ஏற்படும்.  மலர்கள் ஒரே அளவில் பூத்திருந்தன. இதில் ஓர் அதிசயம் என்னவென்றால் இரவிலும் பூக்கள் பிரகாசமாக தென்பட்டன. என் கண்ணுக்கு மட்டும் அப்படித் தெரிந்ததா எனத் தெரியவில்லை. .

எனக்கு பவித்திரா, பாரதி, சுந்தரி, புஷ்பா அனைவரும் ஒரே மணி நேரத்திலே நண்பர்களாயினர். தங்கும் வசதியும் மிகவும் செளகரியமாக இருந்தது. தூய்மையும் அங்கும் வியாபித்து இருந்தது.

முதல் நாள் இரவு ‘பேய்ச்சி’ நாவல் வெளியிடு கண்டது. நவீன் எழுதிய இரண்டாவது நாவல். (முதல் நாவல் பரிசு பெற்றதோடு நூலாக வெளிவரவில்லை) அருண்மொழி நங்கை நாவலை விமர்சனம் செய்தார். எனக்கு அவர் நம் மலேசியா நாட்டில் உள்ள சில ஊர்களை நமக்கே சுற்றிக் காட்டி விளக்கம் தரும் ஒரு சுற்றுப்பயண தூதராகத் தெரிந்தார். இது கதையில் விரிவாக விளக்கத்தில்  இருந்து வந்திருக்கலாம். அல்லது கதைக்குள்ளே அருண்மொழி அவர்கள் ஒன்றிணைந்து இருக்கலாம்.

016எனக்கு சனிக்கிழமையன்று முதல் அமர்வான தற்காலச் சிறுகதையைக் குறித்து சு.வேணுகோபால் பேசியது பற்றி ஒரு கட்டுரை எழுதப் பணிக்கப்பட்டது. சு.வேணுகோபால் வல்லினம் பரிசுக்கதைகள் தொகுப்பு நூலில் இடம்பெற்ற சிறுகதைகளை முன்வைத்துப் பேசினார். மலேசியாவின் 70 ஆண்டுகளின் சிறுகதை பயணமும் அதன் பங்களிப்பைப் பற்றியும்  சிறு கண்ணோட்டமிட்டார். சை.பீர்.முகம்மது மூன்று நூல்களாகத் தொகுத்த ‘வேரும் வாழ்வும்’ நூல்களில் 90 சிறுகதைகள்  வாசித்த அனுபவத்தைக் கூறினார். தமிழ் எழுத்தாளர்களில் ஜம்பவான்கள்  சிலரைக் குறிப்பிட்டுக் கூறினார். கு.அழகிரிசாமி, சுந்தர இராமசாமி, ஜானகி ராமன், ஜெயகாந்தன், புதுமைப் பித்தன், ஜெயமோகன் என சில முதன்மைப் படைப்பாளிகளைப் பட்டியலிட்டார். புதுமைப்பித்தன் எழுதிய 97 கதைகளில் 20 கதைகள் சிறந்த கதைகள் எனவும்  அதில் உள்ள கதைகள் வெவ்வெறு கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்றார். ஒவ்வொரு கதைக்கும் மற்றொரு கதையின் சாயல் இருக்காது என்றும் புதுமைப்பித்தன் புதுமையும் புரட்சியும் புத்தாக்கத்திறனோடு கதை எழுதுவதில் வல்லவர்; நோபல் பரிசுப்பெற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளக்கூடிய திறனைப் பெற்றவர் எனக் குறிப்பிட்டார்.

அதைப்போல உலக சிறுகதைகள் வரிசையில் நிற்கக்கூடிய009 மலேசிய சிறுகதைகளையும் தன் வாசிப்பின் வழி பட்டியலிட்டுக் கூறினார். சை.பீர்.முகம்மது – வாள், சீ. முத்துசாமி – இரைகள், கருடன், ரெ. காத்திக்கேசு – ஒரு சுமாரானக் கணவன், ப.கு. சண்முகம் – ஐந்தடியில் ஓர் உலகம்,  மா. சண்முக சிவா – வைரத்தூசு,  கோ.புண்ணியவான் – ஈ, குப்பச்சியும் கோழியும் , அரு.சு ஜிவானந்தன் – புள்ளிகள்,  மா.இளாங்கண்ணன் – சுற்றிப் பார்க்கவந்தவர்கள்,  ஏ. தேவராஜன் – உள்ளொலி பெரு அழுகை, யுவராஜன் – கருப்பண்ணன், பாலமுருகன் – பேபிக்குட்டி,  நவீன் – மசாஜ் , வண்டி மற்றும் போயாக் எனப் பட்டியலிட்டார். இதைவிட சிறப்பானக் கதைகள் எழுதப்பட்டிருந்தால் அதை முன் வைத்து மலேசிய படைப்பாளிகள் விவாதிக்கலாம் என்றும் அது மலேசியா சிறுகதை வளர்ச்சிக்கு உதவும் என்று கோரிக்கை விடுத்தார்.

வேணுகோபால் விமர்சனம் ஒரு நிதிபதியின் தீர்ப்பைப் போல் இருக்கும். குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம், ஆனால்  நிரபராதி ஒரு போதும் தண்டிக்கப்படக்கூடாது என்பதுப் போல, ஒரு படைப்பாளியின் கதையினை வாசித்து துள்ளிதமாக தன் கருத்தினைக் கூறுவார்.   வல்லினம் பரிசளிப்பு சிறுகதைத் தொகுப்பில் திலீப் எழுதிய ‘ரபியாக் கயிறு’ கதை நவீன இலக்கியத்தை வருடிச் சென்றாலும் அது ஒற்றைக் கீற்றாக மெல்லிய ஒளியைத்தந்தாகவும்  அடர்ந்த ஒளியைத் தரவில்லை என்றும் கூறினார். இத்தொகுப்பின் ஆகச் சிறந்தப் படைப்பாக புதிதாய் ஒன்று மற்றும் சிறகு ஆகிய இரண்டு சிறுகதைகளைக் குறிப்பிட்டார். சற்றுமுன் மலேசிய கதைகளில் தலைச்சிறந்ததாக அவர் கொடுத்த பட்டியலில் இவை இரண்டையும் தாராளமாக இணைக்கலாம் என்றார்.

இரு கதைகளும் அரங்கில் வாசிக்கப்பட்டன.

‘புதியதாய் ஒன்று’ கதையில் சாரம் 70 வயது தாயாருக்கு மார்ப்பகப்புற்று நோய். அந்த மூதாட்டி எவ்வாறு அந்தக் கொடிய காலத்தைக் கடக்கிறார் என்றும் அவரின் மகள் விவரிக்கும் கதைக்களம்.

தன் அங்கத்தில் அழகு சேர்க்கும் தளராத மார்ப்பகத்தை ஒரு தாய் இழக்கும் தருணத்தை விவரிக்கும் முறை கவித்துவமாகவும், ஆபாசம் அற்றும் எழுதப்பட்டிருந்தது. நிலைக் கண்ணாடியில் நின்று கொண்டு தன் மார்பை தாய் இரசிக்கும் காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. இக்கதையின் மொழி நடை மிக எளிமையானது என்றாலும் நேர்நிலை உச்சத்தைத் தொட்டது என்றார் வேணுகோபால். தாய்ப்பால் ஊட்டிய அமுதசுரபியாக இருக்கும் மார்பகத்தையும் தாய்மையின் பாசத்தையும் கலந்து வக்கிரம் இல்லாத ஒரு படைப்பு எனப் பாராட்டினார். இவ்வசீகர அங்கத்தை மெருகேற்ற மூதாட்டியின் தங்கைமார்கள் இளமை காலத்தில் செய்த முறைகள் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தின என விவரித்தார். இக்கதையில் தன் தாய் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் எதிர்கொள்ளும் மனப்போராட்தைக் மெய்யுணர்ந்து எழுதியுள்ளார் எஸ். பி. பாமா என்று கூறினார். தன் தாய் மகளிடம் இனி தனக்குத்தேவைப்படாத 10 ஜோடி உள்ளாடைகளைக் கொடுக்கும் தருணம் மிகவும் உருக்கமாக சித்தரித்தார்.

இக்கதை பரிசு பெற்ற தருணம் மிக அற்புதமானது. ‘வல்லினம்014 100′ களஞ்சியம் வெளியீட்டு விழாவில் எஸ்.பி.பாமா அவர்களும் கலந்துகொண்டார். அந்நூலில் அ.பாண்டியன் அவர்கள் கிட்டத்தட்ட எஸ்.பி.பாமாவின் முழு சிறுகதை உலகத்தையும் கடுமையாக விமர்சித்துப் புறக்கணித்திருந்தார். அந்த அரங்கில்தான் எஸ்.பி.பாமாவின் இக்கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. தகுதி இருந்தால் பாராட்டவும் தகுதி இல்லையென்றால் விமர்சிக்கவும் வல்லினம் எப்போதும் தயங்கியதில்லை என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.

கதையினை வாசிக்கும் போது கதையின் மையக்கருத்தையும் கதையில் வரும் உச்சக்கட்ட முடிவையும் எந்த வாசகனும் அனுமானிக்க முடியும். மிகவும் எளிய நடைதான். ஆனால் கதை சொன்ன விதம், எடுத்துக் கொண்ட கரு  நெஞ்சைக் நெகிழவைத்து. நம் குடும்பத்தில் ஒருவருக்கு நடந்தால் எப்படி இருக்கும் என யோசிக்க வைத்தது. புதியதாய் ஒன்று, தெரியாத ஒன்றல்ல. இக்கதையையொட்டிய கேள்விகள் எழுந்தன. உண்மைத்தன்மை சற்று சரிவுற்று இருந்ததாக ஒருவர் கேட்டார். தாய் பால் கொடுக்கும் பெண்ணுக்கு மார்பகப்புற்று நோய் வருமா என்றார். மருத்துவ அடிப்படையில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் வரும் சாத்தியங்கள் குறைவு என்றாலும் தாய்ப்பால் கொடுப்பதால் நூறு விழுக்காடு அவர்களுக்கு அந்நோய் வராது என்று உறுதிகூறவியலாது என்பதை சு.வேணுகோபால் தெளிவுப்படுத்தினார்.

முனைவர் முல்லை, எஸ்.பி.பாமா அவர் நினைத்ததை நிலைத்தடுமாறாமல் எழுதும் ஓர் எழுத்தாளர் எனக்கூறினார் .அவர் கருத்தை முன் வைப்பதில் தயங்கமாட்டார் என்றும் பெருமையாக பேசினார்.

அடுத்தக் கதை என் தோழி பவித்தாரா எழுதிய ‘சிறகு’. காதலுக்கும் காமத்திற்கும் இடையில் நடக்கும் மைய இழைப்போராட்டம் எனலாம். இக்கதையில் எழுத்துப்பாணி வாசகனைக் கூடுவிட்டுக் கூடுபாயும் மனவுணர்வைக் கொடுக்கும் என்றார் சு.வேணுகோபால்.  பவித்திராவே இக்கதையினை தன் மிக மென்மையாக குரலில் துளிக்கூட பயமோ பதற்றமோ இன்றி நிதானமாக வாசித்தார். முதல் காட்சியில் வரும் வர்ணனை மல்லிகைப்பூவை அவள் கழிவறையில் போட்டு நீர் அழுத்தியதும் எஞ்சிய மல்லிப்பூவின் இதழ் அப்படியே கழிவுத்தண்ணீரில் மிதக்கும் காட்சி சற்று மன நெருடலைத் தந்தது. இக்கதையினை நன்கு செவிமடுக்க வேண்டும். காரணம் இக்கதையில் இரண்டு ஆண் பாத்திரங்கள் பங்கேற்கும்.  ஒருவர் காதலன், மற்றொருவர் வருங்காலக் கணவன். பவித்திரா அப்பெண்ணின் உணர்வுகளை மனமொழியினை ஓர் அறையில் அடைபட்ட நிலையில் எப்படிச் சமாளிக்கிறாள் என்பது இக்கதையில் இன்னொரு சவால். இப்படி நடத்திருக்கும் என நாம் யூகிக்கும்போது இது அல்ல எனக்கதையின் ஓட்டம் நம்மை ஏமாற்றுகிறது. தங்கும் விடுதியில் மற்றோர் அறையில்  இன்னொரு ஜோடி இருக்கும். எதோ வினோத ஓசைக்கேட்கும் சல்லாப லீலையின் நாதம்  அவ்வொலி என்று வாசகன் நினைக்கும் போது அது ஒரு வண்ணத்துப்பூச்சியில் இறகின் வருடலின் சத்தம் என்று குறியீடாகக்கூறி கற்பனை சக்தியைக் கடிவாளமிட்டு வேறுத்திசைக்கு இழுப்பது  இக்கதையில் இன்னொரு ஜாலம்.

017கதையின் நாயகி தன் காதலன் தயக்கமோ வெட்கமோ இன்றி ஆடைகளைக்களையும்போது, அவன் செய்கையைக் கண்டு அவனின் காமத்தை எரிக்கும் அளவிற்கு “உனக்கு இது பழக்கம்தானே” என்று கூறி வெறியேறுவாள். இதே நிகழ்வு எதிர்வினையாக அப்பெண்ணின் வருங்கால கணவரின் முன் மாறுகிறது. ஆனால் இம்முறை சந்தேகிக்கப்படுபவள் பெண்ணாக இருக்கிறாள். வருக்கால கணவருக்காக காத்திருக்கும் தருணத்தில் தன்னை அலங்கரித்துக்கொள்கிறாள், அவன் அவளைப்பார்த்து பல கேள்விகளைக்கேட்டு அவளின் மோகத்தில் கொள்ளியிடுகிறான். முதலில் காதலை ஆழம்பார்க்கும் தருணத்தில் ஆண்களுக்கு வெட்கம் இருக்காதா? எனும் கேள்வியைப் படைப்பாளி முன் வைக்கிறார். இக்கதையின் இரு ஆடவரின் தேடலும் வெவ்வேறு  கோணங்களில் படருகிறது. சந்தேகப்புத்தி இருவருக்கும் பொது என்பதையும் அது தன் துணையை ஆழமாக காயப்படுத்தும் என்பதையும் இக்கதை பிரதிபளிக்கிறது.

“விடுதியில் ஓர் ஆடவரைக் சந்திப்பது உனக்கு சாதாரண விசயமா” என்று வருங்காலக் கணவர்  கேட்கும்போது, அவள் துண்டை இறுக்க கட்டினாள் என்று கதையினை முடித்திருப்பார். இக்கதை கதாசிரியரிடர் அந்தரத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு நடப்பதுப்போல சவால் நிறைந்தக் கதையாகத் தோன்றும் ஆனால், நவீன இலக்கியமென்பது நன்னெறியை நிலைநிறுத்த எழுதப்படுவதல்ல. நடக்கும் ஒரு சம்பவத்தைத் மிகவும் எதார்த்தமாகச் சித்தரித்து அதன் வழி ஓரு அனுபவத்தை உருவாக்கி அந்த அனுபவம் வழி வாசகன் சென்றடைய வைக்கும் உச்சமே நவீன புனைக்கதைக்கான முயற்சி. இக்கதையால் தனக்கு எதிர்வினைகள் வரும் என அறிந்தே  எழுத்தாளர் தன் கருத்துச் சுதந்தித்திற்கு எந்த ஒரு தடையும் வைக்காமல் புனைந்துள்ளார்.

இக்கதையினை ஒட்டிய பல கேள்விகள் கேட்கப்பட்டன. முனைவர் முல்லை, அழகுநிலா, கடார சோழன் என பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.  கடார சோழன் ‘ஒரு பெண் விடுதிக்குச் செல்வது ஒழுக்கமற்றச் செயல் அல்லவா? ஆணை காமத்திற்குத் தூண்டுதல்  அறமாகுமா? எனக்கேட்டார். வேறு பல கருத்துகளும் முனுமுனுக்கப்பட்டது பெரும்பாலோரின் மனம் அக்கதையில் வரும் பெண் ஒழுக்கங்கெட்டவள் என்றும் அப்படிப்பட்டவளைப் பற்றிய கதை எப்படி சிறந்த கதையாக இருக்க முடியும் என்பதிலும் மையமிட்டிருந்ததை உணர முடிந்தது.

பவித்திரா வாசகர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதற்றமின்றி “கதையின் முடிவு வாசகர்கள் கையில் விட்டுவிட்டேன்” என்று கூறி தன் இறுக்கையில் மிடுக்குடன் அமர்ந்தார்.

அமர்வு முடிந்தும் அன்று இரவு சில கல்வியாளர்களும் முகாமில் கலந்துகொண்டவர்களும் சிறகு கதை குறித்து பவித்திராவிடம் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பவித்திராவும் முகம் சுளிக்காமல் பதில் கூறிக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தை அழிக்க வந்த துர்தேவதையைப்போல் ‘சிறகு’ கதையை மறைமுகமாகச் சாடினர். அப்படிப்பட்ட கதையை பவித்திரா எழுதி பெரும் பிழை இழைத்துவிட்டது போல் இருந்தது அவர்கள் பேச்சு. கல்வியாளர்களான இவர்கள் இனி தங்கள் மாணவர்களுக்கு சிறகு கதையைக் சுட்டிக்காட்டி ‘இப்படி எல்லாம் எழுதக்கூடாது” என்று வகுப்பெடுத்தாலும் வியப்பில்லை என்று நினைத்துக் கொண்டேன். இவர்கள் சு.வேணுகோபால் சிறந்த கதை பட்டியலில் குறிப்பிட்ட ம.நவீனின் மசாஜ், போயாக் ஆகியவற்றை வாசித்தால் என்ன ஆவார்களோ என நொந்துகொண்டேன். பிறகு. ஏன் இவர்கள் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதற்கான பதில் தேடி நெடுநேரம் எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். இவர்களுக்கு இலக்கியம் என்பதன் புரிதல் என்னவாக இருக்கும் என்று எங்களுக்குள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டோம். அதற்கான விடை மூன்று நாள் முகாம் முடிந்தவுடன் புரிந்தது.

முதலாவது, ஒருவேளை பவித்திரா இச்சிறுகதையை அரங்கில் வாசிக்காமல் இருந்திருந்தால் யாருமே இக்கதையை அறிந்திருக்கப் போவதில்லை. இக்கதை கடந்த ஒருவருடமாக வல்லினம் அகப்பக்கத்தில் உள்ளது என்றாலும் கேள்விகளைக் கேட்டவர்கள் அதைத் தேடிச்சென்று வாசிக்ககூடியவர்கள் அல்ல. அச்செடுத்து கையில் கொடுத்திருந்தால் கூட வாசிப்பார்களா என்பது சந்தேகமே. உண்மையில், இலக்கியப்படைப்புக்குள் புகுந்து இதுபோன்ற ஒழுக்கம் சார்ந்து கேள்வி எழுப்புபவர்கள் நவீன சிறுகதைகளையோ நாவல்களையோ வாசிப்பவர்களும் அல்ல. பெரும்பாலும் கல்லூரியோடு இலக்கியத்தை முடித்துக்கொண்டவர்கள்.  இலக்கிய வாசிப்பு குறைந்தவர்கள் பலரிடமும் காணப்படும் பொது குணம் இது.

இரண்டாவது, இதுபோன்ற முகாம்கள் மறுபடி மறுபடி அடிப்படையான விடயங்களைப் பேசுவதில்லை. எது நவீன இலக்கியம், நவீன சிறுகதைகள் எதை நோக்கிச் செல்கின்றன என்பன போன்ற கூறுகளை அறிந்தவர்களே இம்முகாமில் கலந்துகொண்டால் பலன் பெற முடியும். இல்லாவிட்டால் வாசிக்கப்படும் ஒரு கதையின், ஒரு கதாபாத்திரத்தின் குணங்களை ஆராய்ந்து அதற்குள்ளேயே முடங்கி கிடப்பர். சிறகு கதையின் நாயகியை வைத்து ஒழுக்கவாதம் பேசுவது மிக எளிய காரியம். அதற்கு பெரிய சிந்தனையோ இலக்கிய தெளிவோ தேவையில்லை. காரணம் பெண்களின் ஒழுக்கத்தை சமூகத்தின் அடையாளமாக வைத்து பேசிப் பேசி பழகிய சமூகம் இது. ஆகவே, பன்னெடுங்காலம் பலராலும் பேசப்பட்ட அதே கருத்தை மீண்டும் சபையில் பேசும் போது தங்களை எளிதில் இவர்களால் அடையாளப்படுத்திக் கொள்ள முடிகின்றது. அதன்வழி தாங்களும் இலக்கியம் அறிந்தவர்களே என்று பாவனை காட்ட முடிகின்றது.

மூன்றாவது, இதுபோல ஒரு கதையில் ஆழமாக பேசப்படும் மனிதனின் முரணான குணங்களையும் அபத்த தருணங்களையும் சிக்கலான உள நிலைகளையும் அறியாதவர்களை எண்ணி எழுத்தாளன் வருத்தமடையக் கூடாது. காரணம் அவர்களால் அவற்றை காணவே முடியாது. அன்றாட செய்தித் துணுக்குகளையும் வாட்சப் செய்திகளையும் வாசித்து எளிய இலக்கிய முயற்சிகளோடு தங்கள் அன்றாடங்களை நகர்த்துபவர்கள். இவர்கள் கல்வியாளர்களாக, கற்றவர்களாக இருக்கலாம். ஆனால் ஓர் இலக்கியப் படைப்பை இவர்களால் உணர முடியாது. கதையில் பின்னப்படும் அழகியலையும் கலையம்சத்தையும் உணர்ச்சிக் கொதிப்புகளையும் உணரமுடியாதது அந்த வாசகர்களின் குறை என்பதில் சந்தேகம் இல்லை. இலக்கியப்படைப்பு என்பது எழுத்தாளனின் அந்தரங்கமான உரிமை. அதில் வாசகன் ஏற்றுக் கொள்ளும் விழுமியங்களே இருக்கவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தமுடியாது. சமூகம் வகுத்து வைத்த பாதையிலேயே செல்வது பொதுபுத்தி சமூகத்துக்கான விதி. புதிய உயரங்களைத் தேடிச் செல்வதே நவீன எழுத்தாளனுக்கான பழக்கம்.

நான்காவது, மொழி தெரிந்துவிட்டதால் மட்டுமே இவர்களால் புனைவுகளில் இதுபோல கேள்வி எழுப்ப முடிகிறது. உலக சினிமாவில், உலக இலக்கியத்தில் என பல்வேறு தளங்களில் பேசப்படும் மானுட மனச்சிக்கல், தனக்குத் தானே முரண்படும் நிலை, பாலியல் சிக்கல்கள், அபத்த தருணங்கள் என எது குறித்தும் இவர்களால் பேச முடியாது. அவற்றை அறியவும் முடியாது. காரணம் இவர்கள் தங்கள் வெகுசிறிய உலகத்திலிருந்து சன்னலைத் திறந்து தலையை மட்டும் எட்டிப்பார்ப்பவர்கள்.

சிறகு கதை வாசித்தப்பிறகு உண்டான சிறிய சலசலப்பு எனக்கும் சில புதிய திறப்புகளைக் கொடுத்தது. அதோடு என்னையும் நான் வாசிப்பின் அடிப்படையில் மீள்பார்வை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. என் இலக்கியப் புரிதலையும் ரசனையையும் வாசிப்பின் வழி மட்டுமே வளர்க்க முடியும். நானும் இதுபோல சிந்தனையிலும் ரசனையிலும் சுருங்கி கொள்ளாமல் இருக்க அகலமான வாசிப்பு மட்டுமே அவசியம் எனத் தோன்றியது. அதை தொடர்ந்து வல்லினம் வளர்த்தால் நன்று.

சு.வேணுகோபால் உரையைக் காண

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...