காசியில் நான்கு நாட்கள்

kaasi-aகாசிக்கு சென்னையில் இருந்து செல்வது என்றால் எப்படியும் 12 – 18 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் செலவழிந்துவிடும். விமான பயண நேரத்தை டிக்கெட் வாங்கும் சமயத்தில் கணக்கிலெடுத்து அதற்கேற்றவாரு அதிக நேரம் பயணத்தில் செலவாகதவாறு நேரத்தை இன்னும் மிச்சப்படுத்தலாம். சென்னையில் இருந்து நேரடி விமானம் என்றால் 4 மணி நேரத்திற்கும் குறைவாக காசியை அடைந்து விடலாம். நான் காலை 5 மணி விமானத்தில் ஏறி, காலை 9.30 மணிக்கு டில்லியில் இறங்கினேன். டில்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானம் மதியம் 1.30.

பாதுகாப்பு சோதனை, பயண பதிவு என்று 2 மணி நேரம் தேவைப்படுவதாலும் இந்தியாவில் மறியல், தற்காலிக சேவை நிறுத்தம், விமானம் புறப்பட அல்லது தரையிறங்க தாமதம் போன்றவைகள் சகஜமான ஒன்றென்பதாலும், அடுத்த இலக்குக்கான விமானத்தை ஒரு நான்கு மணிநேர இடைவெளியில் அமைத்துக்கொண்டால் அலைச்சலும் இருக்காது அதோடு எதிர்பாரா சம்பவங்களை சமாளிக்க நமக்கு போதிய நேர அவகாசம் இருக்கும். (ஒருவேளை நீங்களும் பயணிக்க விரும்பலாம், அதனால் ஒரு உபரி தகவல் உங்களுக்கு.)

எனது  இந்த நேர விரயத்தை தவிர்க்க ipad – கேம்ஸ் விளையாடவும், பல ஆங்கில மாத இதழ்களை படிக்கவும், சினிமா பார்ப்பதற்கும் உதவும் பட்சத்தில் ipod  பாட்டு கேட்பதற்குப் பயன்படும். இது போக ஒன்று அல்லது 2 புத்தகங்கள் அவ்வப்போது சிந்தனையை அசைப்போட. அப்படியும் அலுப்பும் அசதியும் ஏற்பட்டால் தூங்கி விடுவேன். இந்த முறையும் இவைகளை எல்லாம் அனுபவித்து காசிக்கு சென்று வந்தேன்.

காசிக்கு தற்போதைய பெயர் வாரணாஸி.  உலகின் பண்டைய நகரங்களின் ஒன்று காசி. ஏறக்குறைய 3500 வருடங்கள் பழமையான நகரம் என்கிறது wikipedia. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. இந்து மதம் என்றாலும் நாம் பார்த்திராத, படித்திராத, கேட்டிராத வழக்கங்களும் நம்பிக்கையும் கொண்டு, காசி இந்துக்கள் நம்மில் இருந்து விலகியே இருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் போது இதன் பெயர் Banaras / Banares. ‘பனாரஸ் பட்டு’ கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? அது இங்குதான் நெய்யப்படுகிறது.

காசிக்கு புறப்படும் முன்பு, சென்னை நண்பர் நரசிம்மனின் தாயார் கங்கையின் சிறப்புகள் என்று மூன்று விசயங்களை கூறினார். முதலாவது கங்கையில் எந்த மாடும் முட்டாது, அங்கு எரியும் பிணம் துர்நாற்றம் விசாது. மூன்றாவது, மறந்து விட்டேன்.

செப்டெம்பர் 25 2013 (புதன்)

செப்டெம்பர் 25ஆம் திகதி மதியம் 3 மணிக்கு வாரணாஸியில் தரையிறங்கினேன். ஹோட்டல் நபர் எனது பெயரை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு எங்கோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். பலருடைய பெயர் பலகைகளை நானே சரி பார்த்து பார்த்து இறுதியாக என்னுடையதை கண்டு பிடித்தேன். அவர்கள் அதை வெறுமனே பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது பயணிகள் பக்கம் இருக்கிறதா? தலைகீழாக இருக்கிறதா என்று எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இப்படியான அலட்சியத்தை இந்திய மக்களிடம் பெரும்பாலான விஷயங்களில் நாம் காணமுடியும்.

எங்குப் பயணித்தாலும் அங்கு எனக்கு தெரிந்த நபரை விமான நிலையத்தில் வந்து என்னை அழைத்துக்கொள்ள சொல்வதோ, அங்குள்ள ஹோட்டல்களில் எதாவது ஒன்றை முன்பதிவு செய்ய சொல்வதோ, நான் இதுவரையில் செய்யாதது. ஹோட்டல்களை முன்பதிவு செய்யவும், நாம் செல்லும் நகரத்தில் பார்க்க வேண்டிய இடங்களையும், இதர மற்ற விஷயங்களையும் TripAdvisor என்ற இணைய பக்கத்திலோ (http://www.tripadvisor.com) அல்லது அவர்களின் Mobile Apps-சிலோ பார்த்துக்கொள்ளலாம். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு இடத்தில் இருக்கும் ஹோட்டல்களை நாம் திரிபோட் அட்வைசரில் தேடும் பொழுது, நமது விருப்பத்திற்கேற்ப விலை, இதர வசதிகள், குறிப்பாக இணைய சேவை இருக்கிறதா என்பது, அல்லது சுற்றுலா இடங்களுக்கு நடந்து போகும் அளவு அருகாமையில் நமது ஹோட்டல் இருக்கிறதா என்பன போன்ற உங்கள் விருப்பத்திற்கு அந்த அந்த ஹோட்டல்களை சுலபமாக தெரிவு செய்து தேடுவதோடு, முன்பதிவும் செய்யலாம். இப்படிதான் காசியில் உள்ள Schindia Guest House என்ற ஹோட்டலை கண்டு பிடித்தேன்.

kaasi-b

அந்த ஹோட்டல் மணிகர்ணிக்கா காத் (Manikarnika Ghat) என்ற இடத்தின் மேட்டில் இருந்தது. காத் என்றால் குளக்கரை அல்லது நதிக்கரை என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு காத் -திலும் மக்கள் நீராடுகிறார்கள், வழிபாடுகள் செய்கிறார்கள். நான் இருந்த மணிகர்ணிக்கா காத்-தின் மற்றொரு முக்கியமான அம்சம் இங்குதான் பலரும் சவங்களை எரிக்கிறார்கள். கங்கையில் இறந்தால் அல்லது இறுதி சடங்கு செய்தால் இறந்தவருக்கு நிச்சயம் மோட்சம் உண்டு என்று காலம் காலமாக நம்புகிறார்கள். வேதங்களிலும் புராண இதிகாசங்களிலும் இதுபற்றி பல தகவல்கள் இருப்பதாக குறிப்பிடப் படுகிறது.

kaasi-c

இந்த மணிகர்ணிக்காவை Burning Ghat என்றும் அழைக்கிறார்கள். சவங்களை இங்கு எரிப்பதால் அப்படி ஒரு பெயர் இந்த இடத்திற்கு. பல சீனர்கள், வெள்ளையர்கள், ஜப்பானியர்கள் மற்றும் கொரியர்களின் முக்கியமான சுற்றுலா தளங்களில் மணிக்கர்ணிக்காவும் ஒன்று.

kaasi-dஇந்த மணிகர்ணிக்கா என்பது உண்மையில் அங்குள்ள குளத்தின் பெயர்.  விஷ்ணு இங்கு தவம் செய்து தனது சக்கரத்தால் இந்த குளத்தை உருவாக்கியதாக தகவல் அறிவுப்பு கல் சொன்னது. ஆனால் குளம் இப்பொழுது இல்லை. மணலைக் கொண்டு வந்து, கங்கையின் வெள்ளம் இந்த குளத்தை மூடி சென்றுள்ளது.  சிவன், இங்குள்ள தீர்த்தங்களிலிலேயே மணிகர்ணிக்காதான் மிகவும் புனிதம் வாய்ந்ததும் நிச்சயம் மோட்சம் தருவதுமாகும் என்று வரமளித்ததாகவும் தகவல் அதே கல்லில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து, ஒரு 45 நிமிடம் கடந்து காசி நகரை அடைந்தோம். அங்கிருந்து ஏறக்குறைய 10 – 15 நிமிடங்கள் கால்நடையாக செல்ல வேண்டும். வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய சாலை. ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் செல்கிறது. சந்து சந்தாக, இடது வலம், வலம் இடது என்று மாறி மாறி நடந்து ஹோட்டலை அடைந்தோம். ஒரு சின்ன மேட்டின் செங்குத்தான படியேறி ஹோட்டலில் நுழைந்ததும் மனேஜர் சில விஷயங்களை எனக்கு எச்சரித்தார். முதலாவது “மாடுகள் இங்கு அதிகம். முட்டிவிடும் ஜாக்கிரதை”.

kaasi-e

அறையில் உடமைகளை வைத்துவிட்டு முதல் வேலையாக நான் செய்ய நினைத்தது சாப்பிடுவது. விமான நிலையத்திலும் சாப்பிடவில்லை, விமானத்திலும் சாப்பிடவில்லை. அதனால் அதிக பசி. எனது கடப்பிதழ் தகவல்களை மேனேஜர் பதிவு செய்துக்கொண்டிருந்த பொழுது, அங்கு ஒட்டப்பட்டிருந்த அறிவுப்புக்களையும் தகவல்களையும் படித்தேன், அதில் ஒன்று, நடை சுற்றுலா வழிகாட்டி, இரண்டு மணிநேரத்திற்கு ரூபாய் 150 என்றிருந்தது.

ஒரு வழிகாட்டியை துணைக்கு அழைத்து கொண்டு சாப்பிட சென்றேன். காரணம் அதன் சந்து சந்தாக விரியும் பாதை சுலபமாக நாம் வந்த வழியை மறக்கடித்து விடும். இங்கும் அங்குமாக மாறி மாறி வளைந்து, தாண்டி குதித்து, மாடுகளை உரசி, வழி நெடுகிலும் இம்சைப்படுத்தும் மோட்டார் சைக்கிளோடிகளையும் அவர்களின் ஹார்ன் சத்த ஹிம்சைகளையும் தாண்டி Keshari Banyan என்னும் ஒரு வசதியான ரெஸ்ட்டாரனை அடைந்தோம். அருமையான தாளி (Thaali) செட் உணவு. எவ்வளவோ வற்புறுத்தியும் உடன் வந்தவர் எதுவும் சாப்பிட மறுத்துவிட்டார். 60 வயதான அவருக்கு 7 வயதிலும் 9 வயதிலும் இரு மகள்களும் மனைவியும் உண்டு எனவும் தான் வீட்டில் மட்டுமே இதுவரை சாப்பிட்டதாகவும் தவறிக்கூட வெளியில் எங்கும் சாப்பிட்டதில்லை என்றார். பிறகு “நான் கொஞ்ச நேரம் வெளியில் போன் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று சென்றவர், நான் சாப்பிட்ட பின்னும் வரவேயில்லை. நான் எப்பொழுதும் போல் அவசரமாக சாப்பிட்டு விடுவேன் என்பது நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கொஞ்ச நேரம் இங்கும் அங்கும் நடந்தும், நின்றும், பார்த்தேன், அவர் கண்ணில் படவேயில்லை. பிறகு நானே வந்த வழியை தேட ஆரம்பித்தேன். எங்கு, எந்த திசையில், எப்படி நடந்தாலும் ஏதாவது ஒரு வழியில் மீண்டும் மீண்டும் நகரத்தின் முக்கிய சாலையின் ஏதாவதொரு வாயிலை அடைந்தேனே தவிர ஹோட்டலை அடையவில்லை. அத்தனை குழப்பமாக இருந்தது. ஹோட்டல் நம்பரையும் எடுத்துவரவில்லை; இந்தியில் வழி கேட்கவும் தெரியவில்லை. 1 மணி நேர தேடலுக்குப் பிறகு எப்படியோ தேடியதை அடைந்தேன். என்னுடன் வந்த வழிக்காட்டி என்னைக் காணாமல் பதட்டத்தில் இங்கும் அங்கும் தேடி, அந்த மேட்டில் வேறு பல முறை ஏறி இறங்கி, மூச்சிறைக்க அமர்ந்திருந்தார்.  என்னை பார்த்ததும்தான் அவர் நிம்மதி பெரு மூச்சு விட ஆரம்பித்தார்.  பரிதாபத்தால், வழிகாட்டிக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தைவிட அதிகமாகக் கொடுத்துவிட்டு அறைக்கு சென்றேன்.

எனது அறை கங்கை கரையின் ஓரமாக, இரண்டாவது மாடியில் இருந்தது. எனது ஜன்னலின் வாயிலாக இரவின் கண்களில் கங்கையையும் அதன் சூழலையும் சில மணிநேரம் பார்த்துவிட்டு படுத்துவிட்டேன். ஜன்னலை திறந்து வைக்க வேண்டாம், குரங்குகள் நுழைந்துவிடும் என்பது மேனேஜரின் இன்னுமொரு எச்சரிக்கை.

செப்டெம்பர் 26 2013 (வியாழன்)

நேற்றிரவு சாப்பிட போகும் வழியில் காசி விஸ்வநாதன் கோவிலின் நுழைவாசலை தாண்டிதான் வந்தேன். அதோடு நேற்றிரவு நானே பாதையை கண்டு பிடித்துவிட்ட தைரியத்தால் இந்த முறை வழிகாட்டியே உடன் வருவதாகக் கேட்டும், நான் மறுத்துவிட்டேன். ஆனால் நேற்று சாப்பிட போகும் வழியில் சில நிமிடத்தில் கடந்து வந்த கோவில் வாசல் இப்பொழுது ஒன்றரை மணி நேரமாகியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நடந்து நடந்து காசி நகர வீதிக்கே வந்திருந்தேன். அதாவது பல கிலோ மீட்டருக்கும் அப்பால் வந்திருந்தேன். பிறகு ஒரு வழியாக ஒவ்வொருவரிடமும் விசாரித்து, அவர்களின் இந்தி சொற்களுக்கிடையில் மோப்பம் பிடித்து என் வழியை கண்டு கோவிலை அடைந்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது அந்த கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைத்தாலும் சென்றடைய கூடியதாக எளிதாகவே இருந்தது என்பது.

kaasi-f

மொபைல் போன், கேமரா என்று எதுவும் உள்ளே அனுமதியில்லை. அதுமட்டுமல்லாமல் கோவிலின் வெளியிலும் ஒவ்வொரு சாலையிலும், சந்திப்புக்களிலும் ஆயுத மேந்திய போலிசும் ராணுவமும் குவிந்திருந்தது. வெளியில் எங்கும் பாதுகாப்பில்லை ஆகையால் இரவு 11 மணிக்குள் வந்துவிடும்படியும், எங்கு சென்றாலும் எனது கடப்பிதழையும் எப்போதும் உடன் வைத்திருக்கும் படியும் முன்னமே மற்றுமொரு எச்சரிக்கையை விடுத்திருந்தார் மேனேஜர். காரணம் தற்பொழுது இந்து முஸ்லிம் கலவரம் நடந்து வருவதாகவும் ஏறக்குறைய 50 பேர் இதுவரை கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறினார். வருவதற்கு முன்பே டில்லியில் எனது நண்பர் இதுப்பற்றி எச்சரித்தும் நான் காசி வந்தேன் காரணம், தீவிரவாதம் மிகுந்த காஷ்மிர் நகர வீதியிலும் கூட போன வருடம் சுற்றி திரிந்த அசட்டு தைரியமும், ஒரு தீவிர முஸ்லிம் நண்பரின் வீட்டில் தங்கிய அனுபவமும்தான்.  அந்த அனுபவத்தை வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்.

எது எப்படியோ நான் காசியின் சிவன் கோவிலை அடைந்து விட்டேன். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் அத்தனை சிறியது. ஒரு கிரிக்கெட் பந்து அளவுதான் என்று நினைக்கிறேன். ஆனால் லிங்கத்தின் மீது நாமே பால் ஊற்றி அபிஷேகம் பண்ணலாம், தொடலாம். வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது. நான் பார்த்தவரை வடநாட்டில் ஸ்பெசல் டிக்கெட் வாங்கி இறைவனை தரிசிக்க வேண்டாம். எல்லாரும் சமமாகவே நடத்தப்படுவர். நாமே ஆரத்தி எடுக்கலாம். மாலை சூட்டலாம், அபிசேகம் செய்யலாம். கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும்.

கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஓரளவு நெரிசல் இல்லை, ஜர்கண்டி இம்சையும் இல்லை. வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அந்தக் கோவில் உரிமையோடு ஒருவர் என் கையை பிடித்து அன்போடு அழைத்து கோவிலில் உள்ள மற்ற சில சந்நதிகளுக்கும் கூட்டி சென்று மந்திரம் சொல்லி, ஆசிர்வதித்து, திலகமிட்டு, எனது காசி யாத்திரை பூர்த்தியாகி விட்டது என்று கூறி 3000 ரூபாய் கேட்டார். அவர் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டி, மந்திரத்தைத் திருப்பி சொல்லி அவர் காட்டிய சில விக்ரஹங்களை எல்லாம் தொட்டு வணங்கி, உச்சி முகர்ந்துவிட்டு, இப்போது எப்படி பேரம் பேசுவது அல்லது மறுப்பது. அது என்னால் முடியாத காரியம். ஆக அவர் கேட்டத் தொகையை கொடுத்துவிட்டு வந்தேன். அதேபோல் பலபேர் பல சந்நிதிகளுக்கு அதன் பிறகு அழைத்தும், விழித்துக்கொண்டக் காரணத்தால் மேற்கொண்டு செலவழிக்காமல் அங்கிருந்து வெளியேறினேன். காசி விஸ்வநாதர் கோவிலை பற்றி மேலும் படிக்க http://en.wikipedia.org/wiki/Kashi_Vishwanath_Temple.

காசியில் வீடுகள் தோறும் கோவில்கள், இல்லை கோவில்கள்தான் அவர்கள் வீடுகள் என்றும் சொல்லலாம்.  எல்லா வீடுகளிலும் கோவிலும், தினமும் பூஜையும், பஜனையும் நடைபெறுகிறது.  அது மட்டுமின்றி வீதிகள் எங்கும் சிவ லிங்கங்கள். அந்த வீதிகள், ஒரேசமயம் பக்கம் பக்கமாக 2 மோட்டர் சைக்கிள்கள் மட்டுமே செல்லக் கூடிய சிறிய நடை வீதி. அது மனிதர்களும், சில மோட்டர் சைக்கிள்களும், சில மாடுகளும் உரசிப் போகும் சமத்துவ வீதி. இங்கு பெரும்பாலான கோவில்கள் சிவன் கோவில்களாகவே இருக்கின்றது.  அதற்கடுத்து பிரபலம் ஹனுமான் கோவில்கள். வீடுகளே கோவில்களாக இருப்பதைப் பற்றி விசாரித்தபோது, முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம்.  யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் ஆக்கிரமித்துள்ளார்கள். 

சில தமிழ் பெயர்பலகையோடு தென்னிந்திய கோயில்களும் இருந்தது. அதில் ஒன்று காசி விசாலாட்சி கோவில். காஞ்சி காமகோடி மடத்தின் கோவிலும் ஒன்று இருந்தது.  எல்லாவற்றையும் வெளியில் இருந்து நோட்டமிட்டுவிட்டு சென்றுவிட்டேன்.  கருவறையில் இருப்பவன் என் மனவறையிலும் இருக்கிறான் என்ற ஆணவத்தோடு. பைபிளில் ஒரு வாசகம் உண்டு ‘ வெளியில் இருக்கும் கடவுளைவிட உனக்குள்ளிருக்கும் கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவன்” என்று.

இந்த கோவில்களின் தேசத்தில், பலநூறு கோவில்களுக்கு நடுவில் ஒரு அழகான மசூதியும் இருந்தது. அது அக்பர் காலத்து மசூதியாம். இங்கு அசான் ஓதுவார்களா என்ற சந்தேகத்தை முன்னெடுத்தபோது, இங்கு இந்துக்கள் அதிகம் என்பதால் அசான் மறுக்கப்பட்டுள்ளது என்றார் படகோட்டி.

kaasi-g

மறுபடியும் நான் வந்த வழியை தேடியாக வேண்டும். திரும்பவும் வழி தெரியாது தடுமாறிக்கொண்டிருந்த போது தற்செயலாக Government Bhang Shop என்று ஒரு கடை கண்ணில் பட்டது. அதில் பச்சை வர்ணத்தில் சின்ன சின்ன உருண்டைகளை விற்று வந்தார் ஒருவர். பாங் என்பது மர்ஜுவானா என்ற போதை தரும் இலை. இதை சிவ பாணம் என்றும் சொல்லுகிறார்கள். சாதுக்கள் தியானம் செய்வதற்காகவும் யோக நிலை அடையவும் இதை உபயோகிக்கிறார்கள்.  காசியில் அரசாங்கமே அதை விற்கிறது, தமிழ்நாட்டில் டாஸ்க் மார்க் கடைகள் போல். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இங்கு கூட்டமே இல்லை. யாரும் வாங்குவதாககூட தெரியவில்லை. ஒருவேளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்குமோ?

நானும் ஒரு உருண்டை வாங்கினேன்.  சிவனையும் பார்த்தாச்சு, சிவ பானத்தையும் பார்த்தாச்சு, இப்பொழுது அடிப்படைப் பிரச்சனை, ஹோட்டலை அடையும் வழி. சிறிது தூரம் சென்ற பின் திரும்பி வந்து பாங் கடைக்காரரிடமே வழி கேட்டேன்.  அவர் சொன்ன விசயத்தை கேட்டு ஆச்சரியப்பட்டேன்.

kaasi-h

“நீ எங்கு வேணும்னாலும் போ ஆனா போகும் பாதையில் கவனத்தை வை.” எவ்வளவு அற்புதமானது!! இது எப்படி என் வழியை அடைய உதவும் என்கிறீர்களா?  அவன் பாதையில் கவனத்தை வைக்க சொன்னது தத்துவம் அல்ல நிதர்சனம். வெவ்வேறு இலக்குகளுக்கு வெவ்வேறு தரைக்கற்களால் பாதையை போட்டிருக்கிறார்கள். இடது வலது என்று எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் அந்தக் குறிப்பிட்ட தரைக்கற்கள் இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், நான் மணிகர்ணிக்காவை அடைந்துவிடலாம். அப்பொழுதுதான் எல்லா பாதைகளையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவைகள் வெறுமனே போடப்பட்ட கற்கள் அல்ல இலக்கை அடைய வழிக்காட்டும் கற்கள்.

இப்பொழுது எந்த சிரமமும் இன்றி 10 நிமிடத்துக்குள் ஹோட்டலை அடைந்தேன்.  நான் எப்படி பாதையை கண்டுபிடித்தேன் என்று அறிந்த மேனேஜர் அதிசயத்துப் போனார். “இது எனக்கு தெரிந்திருந்தும் நான் இதை ஒரு பொருட்டாக உணர்ந்ததே இல்லை” என்றார்.

அறையை அடைந்ததும் எனது அடுத்த பரீசார்த்த முயற்சி, பாங்கை உட்கொள்வது. தமிழில் சொல்வதென்றால் கஞ்சா உட்கொள்வது. பாங்க் என்று முன்னம் நான் சொன்னது கஞ்சாவைதான். பல வழிகளில் கஞ்சா உட்கொள்ளப் பட்டாலும் காசி அரசாங்கம் விற்பதற்கு அனுமதிக்கப்பட்ட தன்மை, அறைத்த இலை. துவையலைப் போல் உண்ணக்கூடிய தன்மை. மேனேஜர் ஏற்கனவே பட்டியலிட்ட எச்சரிக்கைகளில் இதுவும் ஒன்று.

“இங்கு காஞ்சா எடுக்காதீர்கள். எதுவும் அசல் கிடையாது. சிவராத்திரியின் போது மட்டும் அரசாங்க கடைகளில் விற்பதற்கும் வாங்குவதற்கும் அனுமதி உண்டு. அன்று பலரும் அதை உண்பார்கள், புகைப்பார்கள். இப்பொழுது யாராகிலும் விற்றால் நிச்சயம் அரசாங்க அனுமதியற்ற கள்ள கஞ்சாவாக இருக்கும். அதை உட்கொண்டால் உடலின் நீர் அளவு பெரிதாக குறைந்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்க நேரும்” என்றார்.

எனக்கு எப்பொழுதுமே ஒன்றில் விருப்பம் வந்துவிட்டால் அதை ரிஸ்க் எடுத்தாவது முயற்சித்து பார்த்துவிடுவது வழக்கம். அது மட்டுமின்றி அகால மரணம், விபத்து போன்றவைகளை கற்பனை பண்ணி பார்த்து அதன் வழி  பய உணர்வையும் எச்சரிக்கை உணர்வையும் எனக்குள் என்னால் உண்டு பண்ண முடியாது. ஆக முயற்சித்து விடுவோம் என்று துணிந்து ஒரு கால் பகுதியை உண்டேன். எந்த மாறுதலும் தெரியவில்லை. பிறகு அரை உருண்டையை சாப்பிட்டேன் கொஞ்ச நேரத்தில் ஒருவித மயக்க நிலை, அப்படியே படுத்துவிட்டேன்.

ஒரு 4 மணி நேரம் கழித்து எழுந்து குளித்துவிட்டு சங்கத் மோட்சன் என்ற ஹனுமான் கோவிலுக்கு சென்றேன். போதை இன்னும் புத்தியில் இருப்பது போலவே இருந்தது. ஒரு அமைதியும் நிசப்தமும் என்னை சூழ்ந்திருப்பதாக தோன்றியது.  இங்குள்ள பழமையான புகழ்பெற்ற கோவில்களில் சங்கத் மோட்சன் கோவிலும் ஒன்று.  2006இல் இஸ்லாமிய தீவிரவாத குண்டுவெடிப்பில் பலர் இங்கு உயிர் இழந்துள்ளனர். அதன் இடிபாடுகள், புது கட்டுமான பணிகளையும் ஆங்காங்கே காண முடிந்தது.  ஹோட்டல் திரும்பும் வழியில் ராமாயணத்தின் வேறொரு பதிப்பை எழுதிய துளசி தாஸ் நிறுவிய ராம மானஸ் கோவிலுக்கு சென்று வந்தேன். சுவர்கள் முழுவதும் துளசி தாஸின் ராமாயணக் காவியம் செதுக்கப்பட்டிருந்தது.  அதை நான் கைகளால் தடவிக்கொண்டே வந்தேன். எனக்கு முன்னே சென்றுக்கொண்டிருந்த ஒரு முதியவர் என்னை இரண்டு மூன்று முறை திரும்பி பார்த்து, பிறகு அந்த சுவற்றை சிறிது நேரம் பார்த்துவிட்டு, அவரும் தடவிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் பலரும். சிலர் தொட்டு கும்பிட ஆரம்பித்தனர். சில வழக்கங்கள் இப்படிதான் காலகாலமாக தொடர்கிறது போலும்.

பிறகு அங்கிருந்து துர்கா கோவிலுக்கு சென்றேன். அதன் பிறகு அகோரி கிண்ணா ராம் ஆஸ்ரமம் கண்ணில் பட்டது. “நான் கடவுள்” திரைப்படம் வந்திருந்தபோது அகோரிகள் பற்றித் தேடிப்படித்தபொழுது  காசியில் கிண்ணா ராம் ஆசிரமம் அகோரிகளின் முக்கிய ஆசிரமம் என்று எழுதப்பட்டிருந்தது. அதனால் அங்கும் செல்ல எண்ணமிட்டிருந்தேன். நுழைவாயிலே மனித மண்டை ஓடுகளால் வரவேற்றது. அந்த ஆசிரமம் முழுவதும் ஒருவகை இருளும் நிசப்தமும் நிரம்பி இருந்து. பல அகோரி குருக்களின் படங்களும் குறிப்புகள் இருந்தது. சிலர் அங்கு வந்து மனமுறுகி பிராத்தனை செய்வதையும் பார்த்தேன்.  சிலர் வெளியேரும் முன்பு அங்கிருந்தப் பதிவு புத்தகத்தில் அவர்கள் பெயரை எழுதி சென்றனர். ஒருவேளை தாங்கள் இறக்கும் போது அகோரிகள் தங்கள் உடலை உண்ணலாம் என்று, உடல் தானம் பதிவு செய்வதுபோல் பதிவு செய்கிறார்களோ என்று தோன்றியது. விளக்கம் கேட்டு அவர்கள் இந்தியில் சொன்ன பதில் புரியாமல் வந்துவிட்டேன்.  ஆனால் விஸ்வநாத கோவிலில் வேறு வழியில்லாமல் பணம் கொடுத்ததுபோல் இங்கு உடலை கொடுக்க சம்மதித்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

இவைகள் யாவும் நடக்கும் தொலைவில் இல்லை, சைக்கிள் ரிக்க்ஷாவில்தான் செல்ல வேண்டும் 100 ரூபாயில் சென்று வந்துவிடலாம். இந்த முறை ஹோட்டல் திரும்பும் முன் காபி லஸ்ஸி (Coffee Lassi) சுவைத்துவிட்டு சென்றேன்.  கெட்டியான தயிரை எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கடைந்து அதில் தயிரின் ஆடையை மேல் பரப்பி அவர்கள் தயார் செய்யும் லஸ்ஸி இதுவரை நான் ருசிக்காத சுவை. நான் வந்த இரண்டாவது நாளிலிருந்து Siwon Lassi என்ற கடையில் மட்டுமே சாப்பிட்டு வந்தேன். அது மட்டுமே பார்க்க கொஞ்சம் தூய்மையாக இருந்தது. சில கொரிய பயணிகள் முன்பொரு சமயம் அந்தக் கடைக்கு வந்து லஸ்ஸி உண்டு அந்த இன்பத்திலும் திருப்தியிலும் அந்த கடையின் பெயரை கொரியா மொழியிலும், எல்லா வகையான லஸ்ஸிக்களையும் குறிப்பாக வாழைபழ லஸ்ஸி, காபி லஸ்ஸி, தேங்காய் லஸ்ஸி போன்றவைகளையும் கொரியா மொழியில் எழுதி கொடுத்திருக்கிறார்கள்.  அதை கடை முழுவதும் நம்மால் காண முடிந்தது. அதனால் அவர் கடையில் கொரியர்கள் அதிகம். Blue Lassi கடை வெள்ளையர்கள் மத்தியில் மிக பிரபலம்.  காரணம் வீதியெங்கும் அவர்களின் விளம்பரங்கள் இருக்கும்.  எனக்குப் பிடிக்கவில்லை. தூய்மை இல்லாதது போல் தோன்றியது.

kaasi-i

Siwon Lassi கடையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி மெதுவாக சாப்பிடுவதும் ஒரு இன்பம். இப்படி அங்கு அமர்ந்திருக்கும் போதெல்லாம் குறைந்தது 4 சவங்களாவது ஒரு சில விநாடி இடை வெளியில் சில கூட்டத்தால் சுமந்தபடி இந்த கடையின் வழியாக மணிகர்ணிக்கா நோக்கி கொண்டு செல்லப்படும். போகும் போது அவர்கள் ‘ராம் நாம் சத்திய ஹய்’ என்று கூவிக்கொண்டே செல்வார்கள். அதாவது ராம நாமமே உண்மையானது என்பதாகும்.

லஸ்ஸி முடிந்ததும், ஹோட்டலிளிருந்த வழிகாட்டியின் அறிவுரையின் படி ஒரு பனாரஸ் பட்டு கடைக்கு சென்றேன். ஒரிஜினல் பட்டு எப்படியிருக்கும் என்று பல செயல்முறை விளக்கங்களை அவர் கொடுத்தார். இரண்டு சாரிகள் வாங்கினேன். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு அவர், நான் இங்கிருக்கும் இந்த காலம் நமது முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் காலம் என்பதும் வருடத்தில் ஒரு முறைதான், அதுவும் 15 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்வுகள் நடைபெறும் என்றும் விளக்கினார். நான் சரியான நேரத்தில் வந்திருப்பதாகவும், நீங்களும் உங்கள் முன்னோர்களுக்கு இந்த சடங்கை செய்யலாம் என்று அறிவுறுத்தினார்.

செப்டெம்பர் 27 2013 (வெள்ளி)

kaasi-jகாலையில் எழுந்து குளித்து முதல் நாள் வாங்கிய வேட்டி துண்டை கட்டிக் கொண்டு பண்டிதரை தேடினேன். அங்குச் சடங்குகளை செய்யும் பிராமணரை பண்டித் என்றனர். ஒருவர் சிரித்த முகத்துடன் உடலையே மறைக்கும் பெரிய குடையின் கீழ் அமர்ந்திருந்தார்.  அவரை அணுகினேன். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதால் அவரது மகன் எனக்கு விளக்கங்கள் அளித்தார். கங்கையில் மூழ்கிவிட்டு சில பொருட்களை வாங்க சொன்னார். பட்டு வியாபாரி பண்டிதருக்கு ரூபாய் 100 அல்லது 200 போதுமானது என்று சொல்லியிருந்ததால், ரூபாய் 500 உம் சில பத்து ரூபாய் நோட்டுக்களையும் வேட்டியில் வைத்திருந்தேன்.  சில்லரை இல்லை என்பதால் 500 ரூபாய் எடுத்து வந்திருந்தேன், இல்லையென்றால 200 ரூபாய் மட்டுமே எடுத்து வந்திருப்பேன். கங்கையில் மூழ்கும் போது பணம் நனைந்துவிடும் என்பதால் முன் கூட்டி எடுத்து வந்த பணத்தை அவர்களிடம் கொடுத்து சடங்குக்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு மீதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். பிறகு கங்கையில் மூழ்கி எழுந்து வந்தவுடன் ஓம் கேசவாய நம, ஓம் மாதவாய நம என்று ஐந்து மந்திரங்கள் சொல்லி ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் அவர்கள் கொடுத்த குடத்தில் இருந்த கங்கை நீரை கொஞ்சம் பருக வேண்டும் என்றனர். நானும் அதன்படியே  5 முறைச் செய்தேன்.

kaasi-kஅடுத்து கொஞ்சம் மாவும் பல வகையான தாணியங்களும் கொடுத்து, 17 உருண்டைகள் பிடிக்க சொன்னார். செய்தேன். பிறகு அவரின் உப (துணை) பண்டிதர் வந்து மந்திரம் சொல்ல சொல்ல நானும் அவர் சொல்லுவதை ஒப்புவித்து ஒவ்வொரு உருண்டையிலும் சந்தன பொடி, குங்கும பொடி நீர் என்று கொஞ்சமாக தூவி, அதன் பிறகு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து இறந்த முன்னோர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக ஒவ்வொரு உருண்டை வீதம் சொல்லி இலையில் விட வேண்டும். கடைசி உருண்டையில் நாம் மறந்தவர்கள், தெரியாத உறவுகள் யாராவது இருப்பார்களாயின் அவர்களுக்கு இது என்று கூறி இலையில் விட வேண்டும். இந்த சடங்கின் நோக்கமே இறந்தவர்களின் ஆன்மா அமைதியும் சாந்தமும் நிம்மதியும் அடைய கோரும் பிராத்தனையாகும். நமக்கு பெயர் தெரியாத பெண் முன்னோர்கள் யாராவது இருப்பின் அவர்களை “கங்கா ஸ்ரூபினி” என்று சொல்ல வேண்டும். ஆண்களை – மறந்துவிட்டேன், ஆனால் ஏதோ ‘ரூபாயா” என்று வரும்.

இப்பொழுதுதான் வேடிக்கை ஆரம்பமானது.  இந்த முறை என் கையில் நீரை ஊற்றி இலையில் விடும் முன்பு நான் இந்த சேவையை செய்து தரும் பண்டிதருக்கு எவ்வளவு தானம் தருகிறேன் என்று  உப பண்டிதர் கேட்டார். நான் ஏற்கனவே 500 ரூபாய் கொடுத்துவிட்டேன் என்றேன். பல்வேறு மூளை சலவைக்குப் பிறகு வேறு வழியில்லாமல் 5000 ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டேன். காரணம் சடங்கு பாதியில் தடைபட வேண்டாம் என்பதால். அந்த நிதியை அந்த பண்டிதருக்கு தருவதாக வாக்கு கொடுத்து நீரை இலையில் விட வேண்டும்.  இரண்டாவதாக உப தானம் செய்ய வேண்டும் என்றார். அது உப பண்டிதருக்கு. அதுவும் ஏற்கனவே பெரிய பண்டிதருக்கு கொடுத்ததைவிட 2 மடங்குக்கு மேல் கொடுக்கவேண்டும் என்றார்.  10,000 அல்லது 15,000 என்று அடுக்கினார். என்னிடம் பணம் இல்லை என்று எவ்வளவோ சொல்லியும் விடவில்லை. ஆனால் இந்த பரிவர்த்தனை எதுவும் காரசாரமாக நிகழவில்லை. சிரிப்பும் கேளிக்கையுமாகவே நகர்ந்தது. இந்த முறை அந்த பண்டிதரை விட நான் அறிவாளி என்பதைக்காட்ட அவர் சொன்ன எல்லா சுலோகத்தையும் சொல்லி, தொகை வரும் போது மட்டும் 500 ரூபாய் தருகிறேன் என்று ஆங்கிலத்தில் சொல்லி நீரை விட்டேன். என் சாமர்த்தியத்தைப் பார்த்து 2 பண்டிதர்களும் சிரித்துக்கொண்டு, உன் மனம் நிறைவடைந்தால் சரி. நாங்கள் வற்புறுத்த போவதில்லை என்று சொல்லி, இலையில் விட்ட அத்தனை உருண்டைகளையும் அந்த இலையோடு எடுத்துப்போய் கங்கையில் விட்டு முன்னோர்களை நினைத்து  5 முறை நீரை அள்ளி அதன் மீது விட வேண்டும் என்றார், செய்தேன்.என் மனமெல்லாம், என் அம்மாவிடம் இதை சொன்னால் நிச்சயம் சந்தோஷப்படுவார் என்பது மட்டுமே நிறைந்திருந்தது. காரணம் பலமுறை இப்படியொரு சடங்கை செய்யச் சொல்லி அவர் என்னை வற்புறுத்தியிருக்கிறார்.

இன்னொரு விஷயம் இந்த உருண்டைகளை கங்கையில் விட படியில் இறங்கிய போது சில பெண்கள் முழுதுமாக மேலாடைகளை (உள்ளாடைகள் அற்று) களைந்து துணி மாற்றியது கண்ணில் பட்டு அதிர்ச்சியானேன். அவர்கள் எந்த கூச்சமும் இல்லாமல் என்னை எதிர்கொண்டார்கள். மேலை நாட்டில் போதையில் கரையோரம் ஆடை களைகிறார்கள் கீழையில் மதத்தின் பெயரில் ஆடை களைகிறார்கள்.

பிறகு ஹோட்டல் வந்து நடந்ததை சொன்னபோது, மேனேஜர், அவ்வளவுதானே கொடுத்தீர்கள், வீடோ, நிலமோ, சொத்தில் சிறு பகுதியோ தரவில்லையே என்றார். நான் கிண்டலடிக்கிறார் என்று நினைத்தால், அவர் இல்லை இந்த பண்டிதர்கள் சண்டையிட்டும் சாபமிட்டும் பலரிடமிருந்து இப்படி எழுதி வாங்கியிருக்கிறார்கள் என்றார். நான் கொஞ்சம் அதிர்ச்சியானேன். முன்பு சொன்னதுபோல் அரசர்கள் யாத்திரை முடிந்ததும் அவர்கள் வீட்டையும் அதனுடன் இணைந்த கோவிலையும் விட்டுவிட்டு சென்றிருக்க மாட்டார்கள், சடங்கின் பெயரால் பண்டிதர்களால் பயமுறுத்தப்பட்டு கொடுத்துவிட்டு ஓடி போயிருப்பார்களோ என்று தோன்றியது.

சடங்குகளின் மந்திரங்கள் எல்லாம், (திருமண சடங்கு மந்திரம் உட்பட) நாமே சொல்லி காரியங்களையும், பிராத்தனைகளையும் வழிபாடுகளையும் செய்வதாக அமைந்திருக்கும். சில சடங்கு மந்திரங்களை நான் பயின்ற அனுபவத்தில் சொல்கிறேன். ஆனால் இதை நாம் கற்றுக்கொள்ளாவிடாமல், பிராமணர்களே அதை முன்னிருந்து நடத்தி வியாபாரம் செய்வதற்காக, பிராமணர் அல்லாதோர் மந்திரங்களை படிப்பதற்கு தடை விதித்திருப்பார்களோ என்று தோன்றியது.

அன்று மதியம் வீட்டிற்கு சில பொருட்கள் வாங்கிவிட்டு ஹாட்டல் திரும்பினேன். நான் இப்பொழுது காசியின் அனைத்து வீதிகளையும் தெரிந்துக் கொண்டு விட்டதுபோல் உணர்ந்தேன்.  25ஆம் திகதி முதல் கைபேசி இல்லை, இணையம் இல்லை, டிவி இல்லை, பஜனை தவிர எந்த இசையும் காதில் விழவில்லை. முகமும் சவரம் செய்யப்படவில்லை. தலைமுடி வாரவில்லை, எல்லா வெளியுலக தொடர்பையும் விட்டிருந்தேன். வேறு உலகத்தில் வேறு மனிதனாக வாழ்ந்த்தேன்.

kaasi-lஅன்று இரவு மீண்டும் ஒரு கஞ்சா உருண்டை வாங்கி வந்து, இந்த முறை முழுவதையும் தின்று விட்டேன். அது ஜீரணமாக நேரம் எடுத்ததால் கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலை சென்றேன். இதயம் மெதுவாக துடிப்பது போல் இருந்தது.  கை அசைவுகள், நடப்பது எல்லாம் slow motion இல் செயல்படுவது போல் இருந்தது. 1 நிமிடம் கூட 1 மணிநேரமாக கடந்து வருவது போல் தோன்றியது. கைகளை உயர்த்தும்  போது சாமி படங்களில் அம்மன் கையை தூக்கும் போது கிராப்பிக்கில் பல கைகளாக விரிந்து மீண்டும் ஒன்றாக தெரிவதுபோல் எனக்குத் தோன்றியது. திடீரென யாரோ கதவை தட்டுவதுபோல் சத்தம் கேட்டது. சில சமயம் ஹோட்டல் பணியாளர் வந்து நலம் விசாரிப்பது உண்டு. அவர்தான் என்று நினைத்தேன் ஆனால் திறக்க மனமில்லை. என் போதை நிலை அவருக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சில விநாடிகளுக்குள் அந்த ஓசை நினைவின் மிக தொலைவில் சென்றுவிட்டது போலவும் கதவு நகர்ந்து மிக தொலைவில் சென்று விட்டது போலவும் உணர்ந்தேன். இன்னும் ஒரு சில விநாடியில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததா அல்லது எனது கற்பனையா என்று சந்தேகம் வந்தது. ஒருவேளை நான் கதவை திறந்திருப்பேனோ என்ற சந்தேகத்தில் மெதுவாக கதவருகே சென்று சரிப்பார்த்தேன். கதவு தாளிட்டுதான் இருந்தது. மீண்டும் படுக்கை வர 10 விநாடிகள் கூட எடுக்காத தூரமே இருந்தாலும் நான் நடந்து வந்தது 1 மணிநேரத்திற்கும் மேற்பட்ட தூரம் போல இருந்தது.

இப்படி பல்வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று எனது iPod இல் பாட்டு கேட்கலாம் என்றால் எந்தப்பாடலும் பிடிக்கவில்லை. மிக மிக slow tempo வில் எதாவது இசை இருக்காதா என்று மனம் அலைந்தது. என்னிடம் இருந்த 2000 தமிழ், இந்தி, instrument,  கர்நாட்டிக், இந்துஸ்தானி, classical, சீனம், அரபு என்று எந்த இசையும் நான் எதிர்பார்க்கும் tempo வில் இல்லை.  ஆனால் தம்புரா இசை போல் ஓம் என்ற ஒரு நாதம் கேட்டுக்கொண்டே இருப்பதை உணர்ந்தேன். எங்கிருந்து வருகிறது என்று எனது அறையின் எல்லா இடங்களிலும் தேடி இறுதியாக அது விட்டத்தில் சுழலும் மின் விசிறியில் இருந்து வருவதை அறிந்தேன். இதுநாள் வரை இயல்பாக தெரிந்த மின் விசிரியின் சத்தம் இப்பொழுது பல்வேறு உப சத்தங்களால் நிறைந்திருப்பதை உணர முடிந்தது. ஆச்சரியமாக இருந்து.  அதிலும் என்னை கவர்ந்தது அந்த தம்புரா போன்ற இசை.

ஓர் உள் உணர்வு பெற்றவன் போல் எழுந்து உட்கார்ந்து ஓம் என்று கண்களை மூடி தியானிக்க தொடங்கினேன், அத்தனை ஆனந்தம், நிம்மதி, நிறைவு. மனம் இயங்காமல் இருப்பதை உணர முடிந்தது. இதைதான் முனிவர்கள் கடவுளை கண்டதாகவும் பேரின்ப நிலைக்கு சென்றதாகவும் சொன்னார்களோ? சமாதி நிலை கடவுளால் அல்ல கஞ்சாவால் என்பதை மறைத்து வந்திருந்தார்களோ?

மலேசியா திரும்பியவுடன் இணையத்தில் மரிஜுவானா பற்றி படித்த போது அது பெரும்பாலும் உளவியல் தொடர்புள்ள பிரச்சனைக்கு மருந்தாக உபயோக்கிக்க பட்டு வருவதாகவும். அதன் முக்கிய செயல்பாடு உட்கொள்பவரை பெரும் ஆனந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்படுள்ளது.  அதே சமயம் வாய் வரண்டுப் போவது, கண் சிவப்பது போன்ற சில பின் விளைவுகள் ஒரு 12 மணி   நேரம் நமது உடலுக்கு உபாதைகள் கொடுத்தாலும். ஆனந்தம், நம்பிக்கை, நிறைவு என்று கஞ்சாவால் ஏற்படும் விளைவு அற்புதமானதாக தோன்றியது. Washington, Amsterdam போன்ற இடங்களில் கஞ்சா உட்கொள்வது சட்டபடி குற்றமல்ல என்று பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதை மதத்தோடும் சிவனோடும் எப்படி இணைத்தார்கள் இந்துக்கள்? என்ன ஞானம்.!!

இந்த போதை மறுநாள் மதியம் வரை இருந்தது. ஆனால் அளவு மிகவும் குறைவாக.  அதனுடனேயே காலை சிற்றுண்டி, வீதிகளிலும் கடைத்தெருக்களிலும் சுற்றித்திரிந்து மதியம் சாப்பாடு முடித்து, வீட்டிற்கு சிலப் பொருட்கள் வாங்கி, தொலைந்துப் போகாமல் என் அறைக்கு வந்தேன்.

செப்டெம்பர் 28 2013 (சனி)

எப்படியாவது சூரிய உதயத்தை பார்த்துவிட வேண்டும், அந்த காட்சியை படம் பிடிக்க வேண்டும் என்று தினமும் திட்டமிட்டாலும் தாமதமாகவே ஒவ்வொரு நாளும் எழுந்தேன். சூரிய உதயத்தை தவற விட்டது போலை, நான் தவறவிட்ட இன்னொரு விஷயம் சர்நாத் செல்வது. சர்நாத் என்ற இடம் நான் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்று தெரியவந்தது. இங்குதான் புத்தர் தனது முதல் போதனை சொன்னதாக கூறப்படுகிறது. பல சீனர்களும், ஜப்பானியர்களும் கொரியர்களும் காசிக்கு அதிகம் வர இதுவும் ஒரு காரணம். புத்தர்களின் புனித பூமி இது.

என்றும் போலவே இன்றும், எழுந்ததும் முதல் வேலையாக காபி லஸ்ஸி சாப்பிட சென்றுவிட்டேன். திரும்பியவுடன் எனது அறையில் இருந்தபடி கீழே குளிக்கும், வழிபாடு சடங்குகள் செய்யும், மந்திரங்கள் ஓதும் பிராமணர்களை பார்த்தபடி இருந்தபோது ஒரு அதிர்ச்சி, கங்கை ஆற்றில் ஒரு சவம் மிதந்து சென்றது. கொஞ்சம் அழுகி இருந்ததா அல்லது பாதி எரிந்து இருந்ததா என்று தெரியவில்லை.  ஆனால் இது சேதமடைந்து கால்களில் தோல்கள் இன்றி மிதந்து வருவது தெரிந்தது. அது குளிக்கும் மக்களிடம் மிதந்து வரும் போதெல்லாம் அவர்கள் பதறாமல், எழுந்து கரைக்கு ஓடாமல், தண்ணீரை தள்ளி தள்ளி அலைகளை உருவாக்கி அதை அவர்கள் பக்கம் வராமல் பார்த்துக்கொண்டார்கள். அந்த சவம் அவர்களை கடந்து சென்றவுடன் அவர்கள் சர்வ சாதாரணமாக மீண்டும் மூழ்கி எழுந்திருக்கிறார்கள், நீச்சல் அடிக்கிறார்கள். எனக்கு அது ஒரு கலாச்சார அதிர்வாகவே இருந்தது. சற்று நேரத்தில், நான் சடங்கு செய்யும் போது ஓம் கேசவாய நம, மாதவாய நம என்று 5 முறை அந்த நீரை குடித்ததை நினைத்து குமட்டியது. ஒருவாறு என்னை நானே தேற்றிக்கொண்டேன். இன்னும் திடகாத்திரமாகவே இருப்பதாகவும், என் உடல் அதிக ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டிருப்பதாகவும் மற்றும்  உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக இருக்கிறேன் என்றும் பலவாறு மனதையும் அறிவையும் நான் தாஜா செய்துகொண்டேன்.

kaasi-mபிறகு அதை மறப்பதற்காக நல்ல தூக்கம் போட்டு விட்டு, மாலை மணி 5க்கு கங்கையையும் காசியையும் படகில் சென்று பார்ப்பதும் அதோடு தினமும் மிகப்பெரிய அளவில் நடக்கும் கங்கா ஆராத்தியையும் பார்த்து விடலாம் என்று முடிவெடுத்து ஒரு படகை வாடகைக்கு எடுத்தேன். ஹோட்டலை விட்டு வெளியேறும் போது நான் காலையில் கங்கை நதியில் கண்ட சவ ஊர்வலத்தை பற்றி மேனேஜரிடம் கூறினேன்.

எப்போதும் பிணங்களை இப்படிதான் எரித்துவிட்டு கங்கையில் விடுவார்களா என்றேன். காரணம் நரசிம்மனின் தாயாரும் சவங்களை எரித்துவிட்டு பாதியிலேயே கங்கையில் மூழ்கடித்துவிடுவார்கள் என்று சொல்லியிருந்தார்.  ஆனால் மேனேஜரோ இல்லை இல்லை அப்படி செய்யமாட்டார்கள். பிரமணர்களோ அல்லது சாதுக்களோ இறந்தால் மட்டுமே சில சமயங்களில் கல்லை கட்டி கங்கையில் மூழ்க விடுவார்கள். சவங்களை எரிக்கும் போது கங்கையில் சாங்கியத்திற்காக நனைத்துவிட்டு பிறகு மீண்டும் எடுத்து எரித்து விடுவார்கள் என்றார். நான் பார்த்த காட்சியையும், கால்களும் வயிறும் இருந்த அந்த அறுவறுப்பான நிலையையும் சொல்லி ஒருவேளை நனைத்து விட்டு மீண்டும் எரிப்பதற்குள் கை நழுவி நீருக்குள் போயிருக்கலாம் என்றேன். இல்லை நிச்சயமாக அப்படி இருக்காது. ஒருவேளை கங்கையில் தற்கொலை செய்து கொண்டவரோட சவமாகவோ அல்லது வெள்ளத்தில் மூழ்கி உயிரழந்தவராகவோ இருக்கலாம் அல்லது கொலை செய்யப்பட்டு கங்கையில் வீசப்பட்டவராக இருக்கலாம் என்றார். அப்படி சில சமயங்கள் நடப்பது உண்டு என்றார் மீண்டும்.

நான் பதிலுரைக்காது படகுக்கு சென்றேன். காசியை நடந்து அனுபவிப்பதும், கஞ்சா உண்டு அனுபவிப்பதும் போல் படகில் பயணித்து அனுபவிப்பதும் ஒரு வகை இன்பம், அதுவும் அந்தி சாயும் பொழுதில்.  ஏறக்குறைய 2 மணிநேர சவாரி. இறுதியாக கங்கா ஆராத்தி சடங்கை கண்டேன். கங்கையை வழிபடும், மரியாதை செலுத்தும் ஒரு நிகழ்வு இந்த கங்கை ஆராத்தி. ஒரு நடனம் போல், வேடிக்கை போல் 7 பேர் தூபம், தீபம் என்று ஒவ்வொரு ஆராத்தியாக மந்திரங்களுடனும் பஜனையுடனும் அதே சமயம் பெரும் விளக்குகளுடன் செய்யும் இந்த நிகழ்ச்சியை காண்பது அற்புதமான அனுபவம். அதிகமான வெள்ளைக்கார பெண்கள் இங்கு தனிமையை தேடி வருகிறார்கள். அவர்களையும் அந்தத் தனிமையின் இன்பத்தை அவர்கள் நுகரும் அழகையும் இந்த ஆராத்தியின் போது அதிகம் காண முடிந்தது.

kaasi-nஆராத்தி முடிந்து திரும்பும் போது, ஒரு சிகரெட்டை எடுத்து சுவாசித்துவிட்டு, இரண்டை படகோட்டிக்கு கொடுத்து விட்டு மீதத்தை கங்கையில் விட்டு 3 முறை நீரை அள்ளி சிகரெட் பாக்கெட்டின் மேலே விட்டு விட்டு திரும்பினேன். கடந்த ஒரு வருடமாக இந்த புகை பிடிக்கும் பழக்கம் என்னில் ஒட்டியிருந்தது. என் குழந்தைகளுக்கு நான் தான் வழிகாட்டியாக இருக்க முடியும், நான் தான் ஒரு ஹீரோவாக இருக்க முடியும் என்று தெரிந்தும், என்னை பிடித்துக்கொண்ட இந்த நண்பனை விட முடியாமல் மனதோடு பலமாக போராடி தோற்றுப் போயிருந்தேன். நரசிம்மனின் தயார், “காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை என்று வேண்டிக் கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம்” என்று சொல்லியிருந்தார். என்னால் இப்பொழுது விட முடியாமல் இருப்பது இந்த புகை பழக்கம் மட்டுமே. ஆக மன திடத்துடன் இந்தமுறை அதை கங்கையில் விட்டு வந்தேன். இன்றோடு 5 நாள் ஆகியும் இன்னும் தொடவில்லை.  அதுதான் இப்பொழுது கஞ்சாவை சுவைத்து விட்டேனே, புத்தி வேறு போதையைத் தேடலாம் என்று நமட்டு சிரிப்பு சிரிப்பவர்களுக்கு கால பைரவன் போல் ஒரு ஞான புன்னகையை இங்கு நான் விட்டு செல்ல விரும்புகிறேன் .

செப்டெம்பர் 29 2013 (ஞாயிறு)

kaasi-oகாசி, நிச்சயம் நம்மை புதுப்பிக்கிறது, நிறைவு தருகிறது. சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது.  காலையில் புறப்படும் போது இந்த ஹோட்டலை நான் எப்படி கண்டு பிடித்தேன் என்று மேனேஜரிடல் சொல்லிய போது, இப்பொழுது வியாபாரம் படு மோசமாக இருப்பதாகவும் ஐரோப்பா அமெரிக்க சந்தை வீழ்ச்சி சுற்றுலா துறையை வெகுவாக பாதித்திருப்பதாகவும் தினமும் மன நிம்மதியில்லாமல் ஒருவித உளைச்சலுடனே வாழ்க்கையை நகர்த்துவதாக புலம்பினார், ஹோட்டல் மேனேஜர்.

நாங்கள் எங்களின் இருப்பையும் நிம்மதியையும் தேடி காசி வருகிறோம், அதை கண்டடையவும் செய்கிறோம். இங்கிருப்பவர்களோ நிம்மதியை தொலைத்துவிட்டு, தங்களையும் தொலைத்துவிட்டு வேறெங்காவது அது கிடைக்காதா என்று புலம்புகிறார்களே என்றேன். அவர் மௌனமாகவே இருந்தார்.

மனமே வாழ்க்கை, அதுவே நிதர்சனம் என்பதை நான் திரும்பும் போது மறக்காமல் எனக்கு நினைவு படுத்தி வழி அனுப்பியது காசி.

மனமே சத்திய ஹய்.

படங்கள்: அகிலன் லெட்சுமணன்

7 comments for “காசியில் நான்கு நாட்கள்

  1. param
    October 21, 2013 at 12:49 pm

    இந்தக் கட்டுரையைப் படித்தபோது எனக்கும் காசிக்குச் செல்ல ஆர்வம் தூண்டியது. எளிய எழுத்தாக இருந்தாலும் ஆழமான அனுபவம். அகிலன் தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை வழங்க வேண்டும்.

    பரம்- இலங்கை

  2. வல்லினம்
    October 24, 2013 at 9:21 pm

    அகிலனுக்கு இசை குறித்து மட்டுமே தெரியும் என நினைத்தேன். ஆனால், அவருக்குள் இயல்பாக இருக்கும் ஓர் படைப்பாளிக்கான அனுபவத்தேடலும் உள்ளது இக்கட்டுரையின் வழி அறிய முடிந்தது

    மிதுனா

  3. vinithini
    October 27, 2013 at 7:04 pm

    sirapana kaddurai. putiya anubavatai kodutatu…

    vinothini palani

  4. Veni
    December 14, 2016 at 10:15 am

    காசிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தினால் கட்டுரையைப் படித்தேன் . பல விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவியது. நல்ல ஒரு வழிகாட்டுக் கட்டுரை.

  5. M Eswaran
    September 21, 2019 at 5:21 am

    காசிக்கு சென்று திரும்பியது போல உணர்வு எழுந்தது வாழ்த்துக்கள்

  6. Anitha Sabarinathan
    November 2, 2019 at 3:16 pm

    நான் முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு உங்கள் காசி பயண கட்டுரை படித்தேன். அதன் பின் இதுவரை பலமுறை இதே கட்டுரை படித்து விட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிதாக படிப்பது போலவும் நான் காசியில் இருப்பது போலவுமே தோன்றுகிறது. மனம் அமைதியை தேடும் போதெல்லாம் உங்கள் கட்டுரையே அதை எனக்கு கொடுத்திருக்கிறது. நன்றி

  7. SIVAGANESAN K
    December 28, 2020 at 3:02 pm

    உங்களின் அனுபவம் அருமை….

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...