வெம்மை

1

karna-vs-arjuna-1280x720ரத்தம் வழியும் அவனது பெரிய உடலை குந்தி இறுக்கமாகப் பற்றி இருந்தாள். கர்ணன் இறப்பதற்கு இன்னும் நேரமிருந்தது. கைகளை விரித்து வான்நோக்கிக் கிடந்தான். மெல்லிய மழைத்துளிகள் அவன் முகத்தை நனைத்தன. கைகளை உயர்த்த முடியாததால் மழைத்துளிகள் விழும் போதெல்லாம் கண்களை சிமிட்டிக் கொண்டான். அவ்வப்போது தாகத்துக்காக நாக்கை நீட்டினான். அவன் மார்பில் ஒரு சிறிய நாய்க்குட்டியைப் போல குந்தி ஒடுங்கிக் கொண்டு சாய்ந்திருந்தாள். பார்ப்பதற்கு சூழ இருக்கும் ஆபத்துகளில் இருந்து அவ்வுடலில் அடைக்கலம் புகுந்து அவள் தப்பிக்க முயல்வது போலிருந்தது. ஆனால் அவள் எண்ணம் வேறாக இருந்தது. அந்த மாபெரும் உடலை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொள்ள முடிந்தால் இறப்பதில் இருந்து தன் மகனை காத்துவிட முடியும் என்று அவள் நம்பினாள்.

மார்பில் துளைத்த அம்புகள் ஏற்கனவே குந்தியால் பிடுங்கப்பட்டிருந்தன. அத்துளைகளில் இருந்து சூடான குருதி வெளியேறிக் கொண்டிருந்தது. அந்த ரத்தத்தின் வெம்மைதான் குந்தியின் நடுங்கும் உடலை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தது. அதை உணர்ந்ததும் அவள் உள்ளுக்குள் கூசினாள்.

அக்குருதியின் வெம்மை தன்னை அப்படியே எரித்துப் பொசுக்கி விடாதா என்றிருந்தது அவளுக்கு. அவள் சிறுமியாக இருந்தது முதலே இந்த வெம்மைக்காக ஏங்கி இருக்கிறாள். அவள் தந்தையோ வளர்ப்புத் தந்தையோ அவளைக் கொஞ்சியதில்லை. உடல் முழுவதும் குளிர்ந்த ரத்தம் ஓடும் பாண்டுவின் அன்பான அணைப்பு கூட அவளை உள்ளுக்குள் கசப்பு கொள்ளவே செய்தது.

துர்வாசரிடம் பெற்ற வரத்தினைக் கொண்டு அவள் சூரியனை வரவழைத்தது கூட அவன் வெம்மைக்காகத்தானோ என்று தோன்றியது. குந்தி ஆற்றலை விரும்பினாள். ஆற்றல் என்பது வெப்பம் என்று அவள் கண்டு கொண்டாள். குளிர் எப்போதும் துயரைத்தான் தருகிறது. துயரடையும் போது உடல் வெம்மையைத்தான் முதலில் இழக்கிறது. வெம்மையில்லாத உடல் பாதுகாப்பின்மையை நிச்சயமின்மையை அடைகிறது. குந்திபோஜரிடம் வந்தது முதல் அவள் அந்த பாதுகாப்பின்மையை உள்ளுக்குள் எந்நேரமும் உணர்ந்து கொண்டிருந்தாள். போஜர் அவளிடம் அன்புடன் இருந்தார். ஆனால் அவளைக் கைகளில் எடுத்துக் கொள்ளும்போது போஜரின் உடலில் வெம்மை படரவில்லை. குந்தி தன்னால் ஈனப்படாத மகள் என்ற உண்மையை அவர் அவள் மீதான கனிவால் அவளை கவனித்துக் கொள்வதில் பிறர் சுணங்கினால் வெளிப்படும் கோபத்தால் அவள் நோயுற்றால் காட்டும் அக்கறையால் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். ஆனால் மனித உடல் அவ்வளவு நாகரிகமானதல்ல. போஜர் பேண முயன்ற அன்பையும் கனிவையும் அவர் உடல் ஒவ்வொரு முறையும் உருவாக்கிக்கொண்டதே தவிர இயல்பாக வெளிப்படுத்தவில்லை. அவளிடம் அவர் உடல் அன்பின் வெம்மையை வெளிப்படுத்தவே இல்லை. அன்பின்மையால் குந்தி எப்போதும் அஞ்சிக் கொண்டிருந்தாள். அச்சத்தையே தன்னுடைய ஆற்றலாக மாற்றிக் கொண்டாள்.

பொதுவாக யாதவப் பெண்கள் பயிலாத குதிரையேற்றம், வாட்பயிற்சி, வேதக்கல்வி என்று அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஒரு கணம் மனம் விசை இழந்தாலும் அச்சம் ஒரு மலைநாகமாக தன்னை விழுங்க எழுவதை அவள் கண்டாள். அவள் தன் உடலின் வெம்மையை கூட்டிக் கொள்ளுந்தோறும் வளர்ந்தாள். அவளைப் பற்றிய செய்திகள் யாதவ நிலத்தைக் கடந்து கங்கைச் சமவெளி வரைப் பரவின. ஆனால் அவளை விழுங்க எழுந்த நாகம் வளராமல் அதே அளவில் நீடிப்பதை அவள் கண்டாள். அவள் மனம் ஆறுதல் கொண்டது. துர்வாசரின் வேள்விகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள்.

அவள் திறனிலும் தெளிவிலும் மகிழ்ந்த துர்வாசர் யாதவ நிலத்தை நீங்கும் சமயம் விரும்பும் விண் ஆற்றல்களை மகவாக ஈன்று கொள்ளும் வரத்தை அவளுக்கு அளித்தார். ஐந்து முறை அவளால் அந்த வரத்தினை பயன்படுத்த இயலும்.

குந்தி யோசிக்கவே இல்லை. எழுந்து கொண்டிருந்த ஆதவனை தன்னை நோக்கி இழுத்தாள். அவன் வெம்மையில் தன்னை முழுமையாக கரைத்துக் கொண்டாள். ஆனால் அவள் கருவுறவில்லை. கருவுற விரும்பவும் இல்லை. ஆனால் ஆதவன் அவளை நீங்கிய பின் உலகம் வெளிறிவிட்டதாக தோன்றியது. எங்குமே ஒளி இல்லாமல் போய்விட்டதாக அவள் உணர்ந்தாள். தனக்குள் ஏறியிருந்த வெம்மையை தன் சூழல் மெல்ல அழிப்பதை உணர்ந்தாள். அந்த வெம்மையை அவள் தன்னுள் இறுத்திக் கொள்ள விழைந்தாள். குந்தி மீண்டும் சூரியனை அழைத்தாள். அவன் உடலின் ஒவ்வொரு கணுவையும் முத்தமிட்டாள். அவள் இதழ்கள் வெம்மையில் நொந்தன. அவளுடைய வலுத்த மெல்லிய வெள்ளுடல் சற்றே நிறம் மாற்றிக் கொண்டது. கர்ணனை ஈனும் வரை குந்தி ஒவ்வொரு நாளும் கொதித்துக் கொண்டிருந்தாள்.

அவனை ஈன்றதும் தான் இறந்துவிட வேண்டும் என்று எண்ணினாள். ஊர் அறியாத ஒரு குடிலில் கர்ணனை குந்தி ஈன்றாள். கடும் மழை பெய்த நள்ளிரவில் கர்ணன் பிறந்தான்.  அவன் உடல் வெப்பமே ஒளியாக அந்த குடிசையைச் சூழ்ந்தது. மயக்கம் தெளிந்த குந்தி கர்ணனைத் தொட்டாள். தீக்குள் விரல் வைத்த இன்பம்! ஆனால் அவளால் அந்த வெம்மையை தாள இயலவில்லை. அவன் அசைவுகள் அவளை சுட்டன. அவன் புன்னகை சுட்டது. அவன் விழிகள் சுட்டன. ஆடையற்ற அவன் உடலை தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

மயங்கிக் கிடந்த குந்தியை அம்புத்துளையில் இருந்து வெளிக்கிளம்பிய குருதியின் வெம்மை மீண்டும் எழுப்பியது.

2

hqdefaultஇனி தன்னால் ஒருநாள் கூட உயிர் பிழைத்திருக்க இயலாது என்பதை குந்தி மகிழ்ச்சியுடன் உணர்ந்தாள். கர்ணனை ஈன்றதும் அவனை குந்திபோஜரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட வேண்டும் என்று மட்டுமே எண்ணியிருந்ததால் குந்தி எதிர்காலத்தை கற்பனை செய்திருக்கவில்லை. ஆனால் பிறந்த தன் மகன் போஜரிடம் செல்லுமளவு தகுதி குறைந்தவனல்ல என்று அவளுக்குத் தோன்றியது. அந்த எண்ணமே வலுக்கொள்ளவும் செய்தது. தன் மகனுக்கு இன்னும் பெரிய இலக்குகள் காத்திருப்பதாக குந்தி நம்பினாள். பிறப்புக் கழிவுகளை தூய்மை செய்துவிட்டு குடிலுக்கு தீ வைத்துவிட்டு கர்ணனை தூக்கிக் கொண்டு புறப்பட்டாள். யமுனைக்கரையை ஒட்டிய வண்டிப்பாதை வழியே நடந்து குந்திபோஜரின் அரண்மனையை அடையலாம். குந்திக்கு இணையாக யமுனை ஒழுகினாள். அவள் கையிலிருக்கும் மகனைப் பார்க்க யமுனையில் அலைவிழிகள் எழுந்தன. யமுனையின் கருநீர் ஒளிகொண்டது. யமுனை மலர்ந்தாள்.

“குந்தி குந்தி” என்று யமுனை அவளை அழைத்தாள்.

குந்தி நின்று “என்னடி” என்றாள்.

“உன் மைந்தனை எனக்கு கொடுத்துவிடேன்” என்றாள் யமுனை.

குந்தி அனிச்சையாக ஒரு கணம் கர்ணனை தன் உடலுடன் இறுக்கினாள். ஆனால் அவன் உடலின் வெம்மை உடனடியாக அவள் இறுக்கத்தை தளர்த்தச் செய்தது. யமுனை சிரித்தாள்.

“பார் ஈன்று ஒரு தினம் கூட ஆகாத குழந்தை இவன். இப்போதே இவன் வெம்மையை உன்னால் தாள முடியவில்லை. இவனை உன்னால் ஆயுளுக்கும் உன்னில் நிறுத்தி வைக்க இயலும் என்று நினைக்கிறாயா?”

குந்தி தன்னுள் வன்மம் ஏறுவதை உணர்ந்தாள். கர்ணனை உடலுடன் சேர்த்து இறுக்கினாள். அவள் கைகள் வெந்தன.

“இவனை குந்திபோஜரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிடவே நான் எண்ணியிருந்தேன். ஆனால் உன் ஆணவப் பேச்சு என்னை சீண்டுகிறது யமுனா. என் மகன் என்னை எரித்துக் கொல்லும்வரை நான் வாழ விரும்புகிறேன். அன்னையின் மீது அவனுக்கு கனிவிருந்தால் அவன் சற்று குளிரட்டும்”

யமுனை அலைகளை எழுப்பி சிரித்தாள்.

“வாழ்வு முழுவதும் வெம்மைக்காக ஏங்கியவள் மகனை குளிரச் சொல்கிறாள். என் கரை ஊர்களில் ஒன்றில் ஒரு கேலிச் சொல் உண்டு. பெண்கள் பிள்ளைகளை ஈன்றதும் கைகளால் நடக்கத் தொடங்கி விடுகின்றனர் என்று. உன் சொற்களின் வழியாக அக்கேலி ஒரு மெய்மை என்று எனக்கு இப்போது புரிகிறது குந்தி”

யமுனையில் மீண்டும் அலைகள் எழுந்தன.

“கற்றோரின் இழிவரலையும், மெய்மை தேடிச் செல்கிறவர்களின் சீற்றத்தையும், பெண் ஒறுப்பாளர்களின் வெறுப்பையும் குழந்தையை ஈன்றதாலேயே ஒரு பெண் வாழ்நாள் முழுக்க பொறுத்துத்தான் ஆகவேண்டும் என்பதை நன்கறிவேன் யமுனா. ஒவ்வொரு தாயும் தான் ஈன்ற குழந்தைகளின் நலன் வாழ்வில் தான் இழந்தவற்றுக்கு இணையானதுதானா என்ற அக பேரத்தில் கொண்டுதான் இருக்கிறாள். தாயாவது எனக்கு கொடுக்கும் இழிவையும் வீழ்ச்சியையும் நான் நன்கறிவேன் யமுனா. என்னை உன்னால் சீண்ட இயலாது. தாயாக மாறிய கணமே பெண் தன்னுடைய முனைப்பு ஆணவம் அனைத்தையும் இழந்து சமூகம் கொடுக்கும் போலி கௌரவங்களை சூடிக்கொண்டு இழிவு செய்யப்படுவதற்கு தயாராகி விடுகிறாள். என் தாய்மைக்காக முதன்முதலாக என்னை இழிவு செய்தது நீ என்பது எனக்கு மகிழ்வளிக்கிறது யமுனா. எத்தனை மகள்கள் தன் தாய்மைக்காக தாயாலேயே இழிவு செய்யப்படும் பேற்றினை அடைய இயலும்.”

யமுனை முகம் மாறினாள். அவள் குரலில் கெஞ்சல் தென்பட்டது.

“குந்தி உனக்கோ உன் அரசுக்கோ இவன் எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை. இவன் மரணம் நீ தான். நீ இவனை குந்திபோஜரிடம் ஒப்படைத்து உன் மரணத்தை தேடிக் கொண்டால் போஜர் இவனை வளர்ப்பார் என்று எண்ணுகிறாயா? போஜர் உன்னை தத்தெடுத்தது உன் பேரெழிலுக்காகத்தான். கங்கைச் சமவெளி அரசுகளுடன் உன்னை மணமுடித்துக் கொடுத்து நல்லுறவை உருவாக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். இப்போது நீ இவனுடன் போய் நின்றால் போஜர் இவனை கொலை செய்யத்தான் ஆணையிடுவார். உன் மரணத்தை அவர் பொருட்படுத்தமாட்டார். ஆனால் பெண்களின் குறித்தூய்மையை பதற்றத்துடன் கண்காணித்துக் கொண்டே இருக்கும் மையநில அரசுகளின் மத்தியில் மணமாகும் முன் நீ ஒரு மகவினை ஈன்ற செய்தி பரவினால் உன் தந்தையின் மதிப்பினை அது சிறுத்துப் போகச் செய்யும். அவனை என்னிடம் கொடுத்துவிடு. மகவீன்றதால் இழிவடைந்த பெண்களால் வஞ்சம் கொண்டு தூற்றப்பட்டு குளிர்ந்திறுகி கிடக்கும் பிள்ளைகளற்ற ஒருத்தியை நான் என் கரையொன்றில் கண்டேன். அவள் என்னுள்ளே மூழ்கி எழும்போது என் உடல் நடுங்குகிறது. சுடலைத்தீ அவள் உடல் பட்டு அணைகிறது. அவளிடம் உன் மகனை ஒப்படைக்கிறேன்.”

குந்தி கர்ணனை குனிந்து நோக்கினாள். அவன் கண்கள் மூடியிருந்தன. அப்போதும் அம்முகத்தில் கனிவின் வெம்மை வழிந்தது. முகத்தில் கண்களே கனிவு. உதடு காமம். நெற்றி ஆற்றல். கன்னங்கள் செழிப்பு. ஆனால் முழு உடலே ஒருவனுக்கு கனிவென்றாக முடியுமா? மூடிய கைவிரல்கள், சற்றே நெளிந்த ஒளித்துளி போன்ற கால் விரல்கள், லேசாக வெளித்தெரிந்த உள்ளுதட்டுச் செம்மை, கருமை மின்னும் சிறுமேனி. மொத்தமும் கருணையாக வடிவம் கொள்ள முடியுமா? அக்கனிவினை அவள் உணர்ந்திருக்கிறாள். அடைக்கலம் ஏதுமின்றி கருப்பையில் இருந்து வெளிப்பட்டு அழுதபோது ஆதுரமாக தொட்ட கருணை அது. பிஞ்சுடலின் அச்சத்தை அணைத்துத் தேற்றிய அடிவயிற்றுச் சூடு. அடிபட்டு உடலில் ரத்தம் வழிந்த போது அள்ளித் தூக்கியது. முத்தமிட்டு ஆறுதல் கொள்ளச் செய்தது. பெருகிய ஆற்றலை ஆதவனாக வந்தணைத்து ஆற்றுப்படுத்தியது. அவை மொத்தத்தையும் அவள் கைகளில் ஏந்தி இருந்தாள். ஏதோவொரு சமயத்தில் மட்டும் மனிதரிடத்தில் துளித்துச் சொட்டுவது இக்கனிவு. அக்கணத்தை யாரும் முன்னறே வகுத்து விட முடியாது. ஈன்ற மகவினை துவேஷம் கொண்டு நோக்கும் தாயை குந்தி அறிவாள். குடிச்சண்டையில் நெஞ்சில் வேலினை பாய்ச்சிய மகன் முகத்தைக் கண்டு கனவுடன் சிரித்த தந்தையையும் அவள் அறிவாள். ஆனால் இந்த முகம்?

இவனால் யாரையேனும் வெறுக்க முடியுமா? யார் மீதேனும் துவேஷம் கொள்ள முடியுமா? யாரையாவது சினந்து பேச முடியுமா? நான் எப்படி இவனைக் கைவிடுவேன்?

குந்தியின் கரங்கள் மீண்டும் அவனை இருக்கின. யமுனை அதை உணர்ந்தாள்.

“குந்தி”

யமுனை இப்போது தன் கையில் ஒரு தொட்டிலுடன் நின்றிருந்தாள். அத்தொட்டிலுடன் அவள் பேசுவது உணவுக்காக இரைஞ்சுவது போலிருந்தது.

“குந்தி நீ அவனை என்னிடம் தரப்போவதில்லை. ஆனால் நான் அவனை சற்று நேரம் தாலாட்ட அனுமதி. ஒவ்வொரு நாளும் ஆதவனை நான் என் மடியில் ஏந்துகிறேன். அவன் ஒளி தொட்டு விழிக்கிறேன். ஆனால் அவன் வெம்மையை நான் உணர்ந்ததே இல்லை தங்கையே. எத்தனை யுகங்களாக நான் அவன் வெம்மைக்காக காத்திருந்தேன். நான் உதித்த போது என் அக்கையை போல நானும் தெளிந்த நீரோடுகிறவளாகவே இருந்தேன். ஆதவன் மீதான ஏக்கத்தால் அவனை எனக்குள் பூட்டிக்கொள்ள நினைத்தேன். என்னை ஒரு பாறையாக்கி எனக்குள் விழுந்த அவன் பிம்பத்தை நிரந்தரமாக பூட்டிக்கொள்ள முனைந்தேன். என் மனம் இறுகியது. மனம் இறுக இறுக உடலும் இறுகியது. என்னுள் இறங்கிய படகுகள் என் இறுக்கத்தில் முட்டி அசைவிழந்தன. என்னுள் ஆழ்நீச்சலுக்கென குதித்தவர்கள் பாறைகளில் முட்டி இறந்தனர். என்னுள் இறங்கிய மானுடரை நான் கொன்று கொண்டிருந்தேன். எத்தனை நாளுக்கு பெண்ணால் இறுக்கத்தை பேணிக்கொள்ள முடியும். பெண் நீர். எப்போதும் ஓடியே ஆகவேண்டும். தனக்குள் எக்கழிவு சேர்ந்தாலும் ஓடும்வரையே அவள் பெண். நான் மெல்ல இளகினேன். ஒவ்வொரு நாளும் சிறுசுவருக்கு பின்னிருந்து எட்டிப் பார்க்கும் சிறுவன் போல ஆதவன் என்னுள்ளிருந்தே என்னை பார்க்கிறான்.

‘இன்று இருளாது. இனி இருளாது நான் உன்னுள்ளேயே இருப்பேன்’ ன்று வாக்குறுதிகள் அளிக்கிறான் அச்சிறுகள்வன். ஆனால் மாலை நெருங்க நெருங்க அவன் முகம் கூம்புகிறது. இரவினை உலவுமிடகாகக் கொண்ட எண்ணற்ற உயிர்களை என்னுள் பிரதிபலிக்கச் செய்கிறான்.

‘எனக்குத் தெரியாது நீயே முடிவெடு’என்று என்னை இக்கட்டில் தள்ளுவான். வருடத்தின் சரிபாதி நாட்கள் இறுகுவேன். சரிபாதி நாட்கள் நெகிழ்வேன். இன்றுவரை எனக்குள் அவனை வைத்துக்கொள்ள இயலாமல் தத்தளிக்கிறேன். அவனுடைய இளங்கதிர் என்று வந்தவனை ஒரு நொடி என்னிடம் கொடு. என் மார்பில் அணைத்து அவனுக்கு என் அமுதளித்து திரும்பத் தருகிறேன்.

யமுனையின் அலைகள் வழியே அவள் நீட்டியிருந்த தொட்டில் மேலே வந்தது. குந்தி யமுனையின் சொல்லால் இயக்கப்பட்டவளென அத்தொட்டிலில் மைந்தனை வைத்தாள். அவன் தன் கையை விட்டுப் போனதும் குந்தி முதலில் உணர்ந்தது ஒரு பெரும் விடுதலையைத்தான். அவள் உடற்திசுக்கள் ஒவ்வொன்றும் முறுக்கவிழ்ந்தது போல நெகிழ்ந்தன. அவன் கைகளில் இருந்தவரை அன்னையாக இருந்தவள் அவனை யமுனை ஏந்திய கணமே விடுபட்டு நெகிழ்ந்தாள். அவள் உடலில் ஏதோவொரு ஆற்றல் குடிகொள்வதை உணர்ந்தாள். இத்தனை நாள் அளவில் பெருக்காமல் நின்றிருந்த நாகம் பெரிதாகிக் கொண்டே வந்தது. குந்தி அப்போதுதான் உணர்ந்தாள். அது சிறுத்துப் போகவில்லை. நின்றுவிட்டிருக்கிறது.

கர்ணனை யமுனை எடுத்துக்கொண்ட அதே கணத்தில் அது குந்தியை நோக்கி விரையத் தொடங்கியது. குந்தி யமுனையில் குதித்தாள். தான் எதற்காக யமுனையில் குதித்தோம் என்று குந்தி தன்னையே கேட்டுக் கொண்டாள். நாகத்திடமிருந்து தப்ப விழைந்தா அல்லது மைந்தனை யமுனையிடமிருந்து திரும்பப் பெறவா என்று அவளால் இப்போதும் முடிவு செய்ய இயலவில்லை.

கர்ணனின் இருமலில் வாய் வழியே தெறித்த ரத்தம் அவன் மார்பில் ஒழுகி குந்தியின் முகத்தைத் தொட்டு வழிந்தது.

arvin

3

நாகம் குந்தியை கரையில் தூக்கி வீசியது. அவள் உடல் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. உடல் நடுக்கத்தை குறைக்க குந்தி கால்களை கைகளில் கோர்த்து அமர்ந்திருந்தாள். நாகம் அவளெதிரே உடல் சுருட்டி பத்தி விரித்து அமர்ந்திருந்தது. குளிரில் குந்தியின் தொண்டைமுழை ஏறி இறங்கியது. நாகம் தன்னில் எந்த அசைவை கவனிக்கும் என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்டு குந்தி நாகத்தைப் பார்த்தாள்.

“ஆம் என் குரல்வளையைக் கடித்து என்னை கொன்று விடு”

நாகம் இப்போதும் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

“பதில் சொல் நான் இந்தப் புவி உள்ளவரை பெயர் நிலைக்கப்போகும் ஒரு பேரரசனை ஈன்றவள். ஏன் என்னை யமுனையில் இருந்து எடுத்து வீசினாய்?”

“யமுனா உன்னைக் கொன்றிருப்பாள்” நாகத்தின் முகத்தில் தெரிந்த இச்சையின் நுனி கூட அதன் குரலில் இல்லை.

“கொன்றால் என்ன?”குந்தியின் குரலில் ஏளனம் ஏறியது. நாகத்தின் முகத்தில் மெல்லிய செம்மை படர்வது அந்தியின் மென்னொளியில் கூட நன்றாகவே தெரிந்தது. குந்தி தனக்குள் விளக்க இயலாத ஒரு மகிழ்ச்சி ஊறுவதை உணர்ந்தாள். அந்த மகிழ்ச்சி அவள் எச்சிலை சுவை உடையதாக மாற்றியது.

“என் உடல் இன்னும் மூன்று முறை உண்ணப்பட்டால்தான் மாமுனிவரின் சொல்லுக்கு மதிப்பு இல்லையா?”

நாகத்தின் திடமான பத்தி இப்போது சினத்தில் நடுங்கியது.

“குந்தி நீ உன் வெம்மையை இழந்துவிட்டாய்”

நாகம் நினைத்தது போலவே குந்தி நிலைகுலைந்தாள். நாகத்தின் மீதான வன்ம நெருக்கம் அகத்துக்கு அளித்த உத்வேகத்தை அதன் சொற்கள் அழித்தன. குந்தி தளர்ந்து போனாள். குளிரில் அவளுக்கு வலிப்பு வந்தது.

“உன்னை நான் எடுத்துக் கொள்ள அனுமதி. உன் மைந்தனிடம் நீ உணர்ந்தது தந்தையின் வெம்மை. ஆனால் என்னிடமிருப்பது தாய்மையின் இனிய வெம்மை. என்னை ஏற்றுக்கொள்” என்றது நாகம்.

சரிந்து கிடந்த குந்தி வெட்டி இழுத்த கைகளை நாகத்தை நோக்கி நீட்டினாள். நாகம் குந்தியை விழுங்கியது.

4

c4cece95ec385446688180ce68216383நாகத்தின் வழியே குந்தி கண்ட உலகம் விழித்திருக்கும்போது தெளிவற்றதாகவும் அச்சமூட்டக்கூடியதாகவும் இருந்தது. உறக்கத்திலோ உலகம் மேலும் மேலும் துலக்கம் கொண்டது. விழிப்பு நிலையில் நேரடியான புன்னகையையோ முக வெறுப்பையோ கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கனவில் அவள் மகத்தான மனித உணர்வுகளின் உட்பகுதியில் வீசும் துர்நாற்றத்தை மிகத்தெளிவாகக் கண்டாள். பிறழ்காமத்திலும் கொலைகளிலும் வெளிப்படும் அன்பின் மகத்துவத்தை உணர்ந்தாள். பாண்டுவை அவள் விழிப்பு நிலையில் தேர்வு செய்தாள். ஆனால் அவனை மணந்து கொள்வதில் இருக்கும் சௌகரியங்களை அவள் கனவுகளில் உணர்ந்தாள். அவள் கனவில் விதுரனின் முகம் துலக்கம் பெற்றபோது தருமனை ஈன்றாள். திருதராஷ்டிரன் துலங்கிய போது பீமனையும் பீஷ்மர் துலங்கியபோது அர்ஜுனனையும் ஈன்றாள். மாத்ரியின் மீது குந்தி கொண்ட இழிவான கனிவால் நகுல சகாதேவர்கள் பிறந்தனர். அவர்களை குந்தியின் பார்வை தீண்டிய போதெல்லாம் மாத்ரி உள்ளுக்குள் துடித்தாள். அத்துடிப்பு வெறுப்பென பாண்டுவில் இறங்கியது. பாண்டு இயலாமையைக் கடக்க முனைந்து இறந்தான். குந்தியால் தனக்குள் ஊறும் வன்மத்தை தீர்த்துக் கொள்ள நாதியற்றவளான மாத்ரியும் அவனுடன் சிதையேறினாள்.

குந்தி எதையுமே உணரவில்லை. அன்னையின் கதகதப்பை எப்போதுமே உணர்ந்திராத மைந்தர்கள் தங்கள் தனிமையை போக்கிக்கொள்ள ஒவ்வொன்றை கண்டு கொண்டனர். அதிலேயே ஆழ இறங்கினர். மாறாக அன்னையரால் புரக்கப்பட்ட கௌரவர்கள் ஆழ்ந்த நிறைவுடன் வளர்ந்தனர். பாண்டவர்களின் அன்னையின் காதலுக்கான ஏக்கம் அவர்களை வெல்ல முடியாதவர்கள் ஆக்கியது. வெற்றியுடன் திரும்பும் போது அன்னையின் கண்களில் ஒளி கூடுவதை மைந்தர் உணர்ந்தனர். அனைத்து நெறிகளையும் கடந்து வென்று கொண்டே இருந்தனர். அவர்கள் நெறியின்மை எல்லை கடந்தபோது அஸ்தினபுரி அவர்களை எரித்துக்கொல்ல முடிவு செய்தது. வாழும்போது அன்னையின் அன்பு கிடைக்காதவர்கள் என்பதால் குந்தியையும் அவர்களுடன் எரிக்க அஸ்தினபுரி முடிவு செய்தது. அரச குடும்பத்தினர் என்பதால் அவர்களுக்கென வாரணவதத்தில் ஒரு அரக்கு மாளிகை கட்டி அங்கு வைத்து பாண்டவர்கள் எரிக்கப்படவிருந்தனர். குந்தியை சூழ்ந்திருந்த நாகம் இப்போது அவளையும் அவள் மைந்தர்களையும் சுருக்கி எடுத்துக் கொண்டு அரக்கு மாளிகையைவிட்டு வெளியேறியது. ஆனால் தீ வைக்கப்பட்டத்தில் அதன் உடல் பாதி வெந்து போனது. குந்தியின் நனவுநிலைகள் முன்பைவிட துலக்கம் பெற்றன. கனவுகள் குழம்பின. எட்டாண்டுகள் காட்டில் அலைந்தபோது திரௌபதியின் எழில் குறித்த கதைகள் குந்தியை அடைந்தன. அக்கதைகள் அனைத்திலும் அவளுடன் குந்தி இயல்பாக ஒப்பிடப்பட்டாள். வெண்மையை கருமை வென்றது என்பதே அனைத்தின் பொருளாகவும் இருந்தது. குந்தி திரௌபதியின் சுயம்வரத்துக்கு மைந்தருடன் சென்றாள். திரௌபதியிடம் தன்னை ஆண்ட நாகத்தின் சாயை இருப்பதை குந்தி உணர்ந்தாள். ஒரேநேரத்தில் அவள் மீது அன்பும் வஞ்சமும் இணைந்து எழுவதை உணர்ந்தாள்.

திரௌபதியை மைந்தர் ஐவரும் இணைந்து மணமுடிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். கர்ணனும் கௌரவர்களும் வியக்கும்படி அவள் திரௌபதியை அலங்கரித்தாள். கௌரவர்களின் கோபத்தை அவளுள் பாதி மயங்கிக் கிடந்த நாகம் ரசித்தது. அது திரௌபதியை சீண்டியது. துரியோதனனை அவமதித்தது. திரௌபதியை துரியோதனனைக் கொண்டு அவமதிக்கச் செய்தது. பாண்டவர்களை வனவாசம் போகச் செய்தது. இறுதியில் குருக்ஷேத்திர யுத்தத்திற்கு காரணமானது. குந்தி கிருஷ்ணனின் வழியே போருக்கு சில நாட்களுக்கு முன்புதான் கர்ணன் தன் மகனென அறிந்து கொண்டாள். முதிர்ந்த நாகம் எஞ்சிய தன் ஆற்றலைத் திரட்டிக்கொண்டு குந்தியுடன் கர்ணனைப் பார்க்கச் சென்றது. கர்ணனனை நோக்கிய குந்தியின் ஒவ்வொரு அடியும் நாகத்தை கோபமும் சீற்றமும் கொள்ள வைத்தது. முதிர்ந்த அதன் உடல் குந்தியை அவள் விரைவுடன் தொடர முடியாமல் தள்ளாடியது. கற்களிலும் முட்களிலும் சிக்கி நாகத்தின் உடலில் ரத்தம் வழிந்தது. கர்ணனின் கங்கைக்கரை குடிலின் வாயிலைத் தொடும் கணத்தில் குந்தி முதிர்ந்த நாகத்தின் ரத்த மணத்தை உணர்ந்தாள். இளமைந்தன் உறக்கத்தில் வெளியேற்றிய விந்தின் மணம் கொண்டிருந்தது அதன் ரத்தம். குந்தியை கர்ணனை நோக்கி இழுத்து வந்த விசை தளர்ந்தது. பாண்டவர்களைக் கொன்று அரியணையை எடுத்துக்கொள் என்று அவனிடம் சொல்ல வந்தவள் அர்ஜுனனை மட்டுமே கொல்ல வேண்டும் அதற்கு ஒருமுறை மட்டுமே முயல வேண்டும் என்று குழப்பமானதொரு வரத்தினை அவனிடமிருந்து பெற்றாள்.

5

அந்தியை இரவு ஆவேசமாக அணைத்துப் போர்த்தத் தொடங்கியது. கர்ணனின் உடலில் இருந்து வெம்மை மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது. கர்ணன் “அம்மா” என முனகினான்.

குந்தியை முதன்முறையாக அம்மாவென்று அப்போதுதான் அழைத்திருந்தான். அவன் குரல் அவன் நெஞ்சில் தலை வைத்திருந்த குந்தியை சிலிர்க்க வைத்தது.

“மற்றொருமுறை” என்றாள். ஆனால் அவன் மீண்டும் அப்படி அழைக்கவில்லை. குந்தி அவனால் அழைக்க இயலாது என்றும் உணர்ந்திருந்தாள். கர்ணனின் ரத்தம் திட்டுகளாக உறையத் தொடங்கியது. குந்தி கர்ணனை சுற்றியிருந்த தன் கைகளை விடுவித்துக் கொண்டு மீண்டும் தன் குடிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். முதிர்ந்த அவள் நாகம் அவள் உடைகளின் ஒலியைப் பின்பற்றி தட்டுத்தடுமாறி அவளைத் தொடர்ந்து சென்றது. அதன் பத்தியில் கர்ணனின் ஒரு துளி குருதி இருந்தது.

முற்றும்

 

1 comment for “வெம்மை

  1. March 1, 2020 at 10:39 am

    இவனால் யாரையேனும் வெறுக்க முடியுமா? யார் மீதேனும் துவேஷம் கொள்ள முடியுமா? யாரையாவது சினந்து பேச முடியுமா? நான் எப்படி இவனைக் கைவிடுவேன்?

    // 🖤🖤

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...