வனத்தின் குரல்

GettyImages-498168463-3f77f75ஆதியிலிருந்து இன்றுவரை மனிதனுடைய வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் இயற்கையைக் கொண்டே வாழ கற்றுக் கொண்டுள்ளான். இயற்கையில் இருந்தே மனிதன் தன் அடிப்படைத் தேவைகளாகிய நிலம், காற்று, நீர், உணவு, உடை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான். இது மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும். இப்படியாக எல்லா இடங்களிலும் உயிர்கள் அனைத்தையும் இயற்கை ஒன்றிணைக்கிறது. இரத்தமும் சதையுமாக தன்னிடமிருந்தவைகளை எல்லாம் கொடுத்து இயற்கைதான் மனிதனை வழிநடத்துகிறது.

இயற்கை வளங்களின் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களும் மாற்றங்களும் மனிதகுலத்தையே பாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவை என்பதை மனிதர்கள் மறந்தவர்கள் அல்ல. இருப்பினும், உலகம் முழுவதும் தேச மேம்பாடு என்னும் பெயரில் அவ்வளங்களுக்கு எதிராக பல கொடுமைகள் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம். அவ்வகையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் படலத்தில் இன்று மேலோங்கி இருப்பது காடழிப்பாகும்.

விவசாயம், மேய்ச்சல், நகரமயம் மற்றும் வசிப்பிடங்களை அமைக்க நிலங்கள் தேவை என்பதனால் காடழிப்புகள் இன்று அதிகரித்துவிட்டன. மரக்கட்டைகள், எரிபொருள், கனிமவளங்கள் என இயற்கையின் கொடைகளுக்குக் குறிவைக்கும் செயல்பாடுகளாலும் இந்தக் காடழிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

உலக வங்கி கணக்கெடுப்பின்படி 20ஆம் நூற்றாண்டில் தொடக்கிய இவ்வன வேட்டையில் இதுவரை சுமார் 3.9 மில்லியன் சதுர மைல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் மட்டுமே சுமார் 502,000 சதுர மைல்கள் அதாவது தென்னாப்பிரிக்காவின் பரப்பளவைவிட பெரும்பகுதியைக் கொண்ட காடுகள் சூறையாடப்பட்டுவிட்டன. ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ கூற்றுப்படி, காடுகள் தற்போது உலக நிலப்பரப்பில் 30 விழுக்காட்டை மட்டுமே உள்ளடக்கியுள்ளன. ஓர் ஆண்டுக்கு பூமி 18.7 மில்லியன் ஏக்கர் காடுகளை இழக்கின்றது என்றும் இந்த அளவானது ஒவ்வொரு நிமிடமும் 27 கால்பந்து மைதானங்களின் பரப்பளளவிலான காடுகள் அழிந்தொழிவதற்குச் சமம் என்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (World Wide Fund for Nature) தெரிவித்துள்ளது. (Derouin, 2019, November, 06). தொடக்கத்தில், பூமியில் தோராயமாக 3.04 திரில்லியன் மரங்கள் இருந்திருக்ககூடும் என சர்வதேச ஆய்வாளர்கள் குழு அனுமானம் கூறுகிறது. செப்டம்பர் 2, 2015ஆம் ஆண்டு ‘நேச்சர்’ (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பூமியில் விவசாயம் நடைபெற தொடங்கியதிலிருந்து (சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு) இவ்வெண்ணிக்கை 46 விழுக்காடுவரை குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது (Imster, 2015, September, 12).

பிரேசில், இந்தோனேசியா, தாய்லாந்து, காங்கோ ஜனநாயக குடியரசு, ஆப்பிரிக்காவின் பிற பகுதிகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் 2016ஆம் ஆண்டு அதிகமான காடழிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட ஒத்துழைப்பு மையமான கிரிட்-அரேண்டல் (GRID-Arendal) அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வரிசையில் அதிக காடழிப்புக்குள்ளான நாடாக இந்தோனேசியா திகழ்கிறது (Derouin, 2019, November, 06). 2016க்கு பிறகு பல நாடுகளில் மேலும் அதிகமான காடழிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் விதிவிலக்காக இருப்பது நோர்வே (Norway) மட்டுமே. காடழிப்பை நிறுத்தும் பொருட்டு 2016ஆம் ஆண்டு தேசிய சட்டத்தின் ஒரு பகுதியாக காடழிப்பு தடை சட்டத்தைக் கொண்டுவந்த முதல் நாடாக நோர்வே திகழ்கிறது (Pohlman, 2016, June, 08).

காடுகளில் பலவகைகள் உள்ளன; அவற்றில் தனித்தன்மை வாய்ந்ததாக கூறப்படுவது மழைக்காடுகள். அதிலும் குறிப்பாக, வெப்பமண்டல மழைக்காடுகள் (Tropical rainforests) பூமியின் மிக அழகான வனப்பகுதிகளில் ஒன்றாகும். இது ‘பொழில்’ என்றே தமிழில் அழைக்கப்படுகிறது. மழை பொழிதல், பெய்தல் என்ற அடிப்படையில் மழைக்காடுகளுக்குப் பொழில் என்று பெயராயிற்று. பூமியை வெப்பப்படுத்தும் கரிவளியை (Carbon dioxide) தன்னுள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் முக்கியமான கடற்பாசியைக் கொண்டுள்ளதால் மழைக்காடுகள் பூமியில் வாழும் வனவிலங்குகளின் வளமிகு களஞ்சியமாக பார்க்கப்படுகின்றன. ஆனால், மழைக்காடுகள் ஓர் ஆண்டிற்கு 78 மில்லியன் ஏக்கர்கள், ஒரு நாளைக்கு 200,000 ஏக்கர்கள் ஒரு நிமிடத்திற்கு 150 ஏக்கர்கள் என அதிகமான அளவில் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன (Taylor, 2019).

தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கும் மழைக்காடுகள், முக்கியமாக மலேசியாவின் நிலப்பரப்பில் வீற்றிருக்கும் மழைக்காடுகள் உலகின் மிகப் பழமையானவை என்றும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட காடுகள் என்றும் கூறப்படுகிறது (Bove, 2019, February, 23). 1970கள் தொடங்கி மலேசிய வனப்பகுதிகளின் நிலப்பரப்பு அதிகமான அளவில் காணாமலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகில் உள்ள மற்ற வெப்பமண்டல நாடுகளைவிடவும் மலேசியாவில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வனப்பகுதிகளின் விகிதம் துரிதகதியில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் அமைந்திருக்கும் காடுகளில் 11.6 விழுக்காடு பழமை வாய்ந்தவை என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது. 1990 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 96,000 ஏக்கர் அல்லது 0.43 விழுக்காடு வனப்பகுதிகளை மலேசியா இழந்துள்ளது (The Geographical Association). வனப்பகுதிகள் குறைந்துவரும் நாடுகளின் வரிசையில் மலேசியா அதிகமான வன இழப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் மேரிலாந்து பல்கலைக்கழகமும் கூகிள் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட புதிய கணக்கெடுப்பின்வழி இது தெரிய வந்துள்ளது. பல வருடங்களாக நீடித்துவரும் இச்செயல்பாடு மரங்களை வெட்டி வீழ்த்துவது மட்டுமில்லாமல் பாரம்பரிய வனவியல் மற்றும் மேலாண்மையைப் பேணுவது தொடர்பில் மலேசியாவின் மீதிருந்த நம்பகத்தன்மையும் சர்வதேச அளவில் இழக்கச் செய்துள்ளது. சான்றாக, மலேசியாவின் பெரும்பகுதி காடுகள் செம்பனை மர பெருந்தோட்டங்களாக மாறியுள்ளதைக் கூறலாம் (The Geographical Association).

தொடர்ச்சியான காடழிப்புகள், காட்டுவளங்களைச் சட்டவிரோதமாகஓ கையகப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளால் மலேசியாவில் அமைந்துள்ள காடுகள் மீதான அச்சுறுத்தல்கள் நீடித்துக் கொண்டேயிருக்கின்றன. குறிப்பாக, போர்னியோவில் உள்ள 80 விழுக்காடு மழைக்காடுகள் அழிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் மலேசியா பெரிதும் பாதிக்கப்படைந்துள்ளது எனலாம். ‘ஓராங் ஊத்தான்’ (Orangutan), ‘படைச்சிறுத்தை’ (Clouded Leopards), மற்றும் ‘பிக்மி யானைகள்’ (Pygmy Elephants) போன்ற அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக போர்னியோ காடுகள் உள்ளது (World Wide Fund for Nature). ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டிருந்த போர்னியோ தற்போது பாதிக்கும் மேலாக அழிவுற்றுவிட்டது. ஒட்டுமொத்த காட்டின் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதி வெறும் மூன்றே தசாப்தங்களில் முற்றிலுமாய் அழிந்துவிட்டது. தற்போது நடப்பில் இருக்கும் காடழிப்பு விகிதம் ஆண்டுக்கு 1.3 மில்லியன் ஏக்கர் எனத் தொடர்ந்தால், ‘நிலக்கரி காடுகள்’ (Peat Forest) மற்றும் ‘மலைக் காடுகள்’ (Montane forest) மட்டுமே வரும் காலங்களில் எஞ்சி நிற்கும் எனச் சொல்லப்படுகிறது. தற்போதைய காடழிப்பு விகிதங்கள் தொடர்ந்தால், 2007 மற்றும் 2020-க்கு இடையில் 21.5 மில்லியன் ஏக்கர் காடுகள் இழக்கப்படும், மீதமுள்ள வனப்பகுதியும் 24 விழுக்காடாக குறையும் என 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சிக்கல் கவனிக்கப்படாமல் நீடித்தால் உலகின் மூன்றாவது பெரிய தீவாகத் தற்போது திகழும் போர்னியோவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் தாழ்நில மழைக்காடுகள் முற்றிலும் காணாமல் போகும் நிலை வரும் என்று கணிக்கப்படுகின்றது. (World Wide Fund for Nature).

இப்படியாக, வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமல்லாமல் மலேசியா போன்ற வளரும் நாடுகளில் காடழிப்பு நடவடிக்கைகள் அதிகம் நடைபெறுவதற்கு வேளாண்மை தேவையும் இதர மனித நடவடிக்கைகளும்தான் காரணம் என்ற பொதுவான கருத்துப்பதிவு உள்ளது. ஆனால், அடிப்படையில் இன்றைய உலக வர்த்தகத்தில் அதிக உற்பத்தியை கோரும் வேளாண்மை பொருள்களின் வரிசையில் மாட்டிறைச்சி, சோயாபீன்ஸ், செம்பனை எண்ணெய், மரத் தளவாடங்கள் ஆகியவை மட்டுமே முதன்மை வகிக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் பொருட்டுதான் அதிக அளவில் வெப்பமண்டல காடழிப்புகள் நிகழ்வதாக யூ.சி.எஸ்-வின் (Union of Concerned Scientists (UCS) பகுப்பாய்வில் சுட்டப்படுகிறது. புள்ளிவிபரங்களுடன் கூறுவதென்றால்,  2008 முதல் 2017ஆம் ஆண்டுவரை மலேசியாவின் ஆளுகைக்கு உட்பட்ட 514.61 ஏக்கர் நிலத்தில் 187 சட்டவிரோத காடழிப்புகள் மற்றும் 2,617 சட்டத்திற்கு புறம்பான வன குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை (State Assembly) தகவல் சுட்டுகிறது (Sun Daily, 2018, September, 04). உலக செம்பனை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மலேசியா இன்று உலக வரைபடத்தில் செம்பனைக் காடாக காட்சியளித்துக் கொண்டிருப்பது மேற்கூறிய அனைத்து தர்க்கங்களுக்குமான ஒன்றைச் சான்றாக முன்வைக்கலாம்.

காடழிப்புகளால் காடுகளின் வளங்களும் காடுகளின் பரப்பளவுகளும் குறைகின்றன என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும்கூட காடழிப்பால் இவ்வுலகத்தில் வேறு விதமான பாதிப்புகளும் பல ஏற்படுகின்றன. அளவுக்கு அதிகமான மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்படும்போதும் அவற்றினுள் சேமிக்கப்பட்டு இருக்கும் கரிமம் காற்றில் கரியமில வளிமமாக வெளியேறுகிறது. இதன்வழியே காடழிப்பும் வன சீரழிவும் புவி வெப்பமடைதலுக்குப் பங்களிக்கின்றன. காடழிப்புகளின் மூலம் மனிதன் இயற்கைக்குக் கொடுக்கும் கொடுங்கொடை 10 விழுக்காட்டு அளவிலான புவியின் வெப்ப உமிழ்வு ஆகும். அது மட்டுமில்லாமல், உலகம் முழுதும் தீவிரமாக விவாதிக்கப்படும் பருவ நிலை மாற்றத்திற்கும் இது ஒரு காரணமாக விளங்குகிறது (Union of Concerned Scientists, 2012, December, 09).

மனித செயல்பாடுகளால் தீவிரமடைந்திருக்கும் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் தொடக்கப்புள்ளியாக தொழில்துறை புரட்சியைக் குறிப்பிட்டாக வேண்டும். தொழில்துறை புரட்சியினால் பூமி தோராயமாக 1°C கூடுதல் வெப்பமடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இது சிறிய எண்ணிக்கையாகத் தோன்றினாலும்கூட நெடுங்காலமாக தொடரும் இச்சிக்கலினால் தற்போது மனிதகுலமும் வனவிலங்குகளும் பேராபத்தின் முன் நிற்கும்நிலை உருவாகியுள்ளது. ஊடே, உலக வானிலையும் வழமைக்கு மாறான தீவிரத்தன்மையுடையதாகவும் எளிதில் கணிக்க இயலாததாகவும் மாறியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதிகமான மழை பொழிவு, பருவநிலை மாற்றம், பனிப்படல கரைவு, கடல்மட்டத்தின் அளவு அதிகரித்தல் போன்றவை நிகழ்கின்றன. உலகெங்கிலும் உள்ள காட்டுயிர்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகி வந்தாலும்கூட, குறிப்பிட்ட சில வகை வனவிலங்குகள் மற்றவற்றை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன. பனிப்படலம் சூழ்ந்திருக்கும் பகுதிகள் பனிவாழ் உயிரினங்களின் இயற்கை வாழ்விடங்களாக இருப்பதால் பனிப்படல கரைவு அவ்வுயிர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கின்றன. ஆர்க்டிக் பெருங்கடலில் ஒவ்வொரு தசாப்தத்திற்கும் 9 விழுக்காடு அளவில் பனி உருகும் நிலை உருவாகியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பனிக்கரடி, நீர்நாய், ஓராங் ஊத்தான் போன்ற குரங்கினங்கள், கடல் ஆமைகள் ஆகியவை இதனால் பல போராட்டங்களைச் சந்திக்க கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது (National Geographic Kids).

sawitயுவல் நோவா ஹராரியின் ‘மனித குலத்தின் சுருக்க வரலாறு’ (Sapiens: A Brief History of Humankind) எனும் புத்தகத்தில் விவசாய புரட்சி என்பது வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மோசடி என்று குறிப்பிடுகிறார். காடுகளையும் இயற்கையையும் அழித்து விவசாயம் செய்வது இயற்கைக்கு முரணானது என்கிறார். காடுகளை விவசாயத்திற்காக அழிக்கத் தொடங்கி இன்று வியாபாரம் எனும் பெயரில் பேராசையாய் வளர்ந்துள்ளது என்கிறார். சூழலியல் தொடர்பான ஆய்வறிக்கையொன்று உலகத்தில் ஏற்படுகின்ற காட்டுத்தீ உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான நாசவேலைகளுக்கு 90 விழுக்காடு மனிதர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறது (Benjamin, 2017, May). இயற்கைதான் மனிதன் சீரான ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. கடந்த நூற்றாண்டு தொடங்கி நிலாவிலும் வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் வாழ முடியுமா என்று பல கோடிகள் செலவு செய்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காண்கிறோம். இன்னமும் உலகத்திற்கு ஈடான சுற்றுச்சூழலையும் இயற்கை வளத்தையும் கொண்ட கிரகம் கண்டுபிடிக்கப்படவில்லை. எவ்வளவு கண்டுபிடிப்புகள் அறிவியல் ஆராய்ச்சிகள் நடந்தாலும் இயற்கை என்ற மாபெரும் சக்திக்கு முன் மனிதன் ஒரு சிறு புள்ளியே. மனிதனின் செயல்களுக்கு எதிராக இயற்கை எழுந்தால் மனிதனின் வாழ்வாதாரம் கேள்விக்குறியே.

 

மேற்கோள் பட்டியல்

Benjamin. (2017, May). What Causes Forest Fires?. Retrieved from https://www.worldatlas.com/articles/what-causes-forest-fires.html

Bove, J. (2019, February, 23). Malaysian Rainforests: The Threat of Human Encroachment. Retrieved from https://www.thoughtco.com/overview-of-malaysian-rainforests-1181966

Charlotte. (2019, September, 18). WHO IS GRETA THUNBERG? Retrieved from https://www.livekindly.co/climate-activist-greta-thunberg-biography/

Derouin, S. (2019, November, 06). Deforestation: Facts, Causes & Effects. Retrieved from https://www.livescience.com/27692-deforestation.html

Harari, Yuval N. (2015). Sapiens: A Brief History of Humankind. New York : Harper.

Imster, E. (2015, September, 12). Earth has 3 trillion trees, says study. Retrieved from https://earthsky.org/earth/earth-has-3-trillion-trees-says-study

National Geographic Kids. What Is Climate Change?. Retrieved from https://www.natgeokids.com/au/discover/geography/general-geography/what-is-climate-change/

Pohlman, K. (2016, June, 08). Norway Becomes World’s First Country to Ban Deforestation. Retrieved from https://www.ecowatch.com/norway-becomes-worlds-first-country-to-ban-deforestation-1891166989.html

Sun Daily. (2018, September, 04). 187 cases of illegal logging in Peninsula M’sia over 10 years. Retrieved from https://www.thesundaily.my/archive/187-cases-illegal-logging-peninsula-msia-over-10-years-IUARCH576128

Taylor, L. (2019). Rainforest Facts. Retrieved from https://www.livescience.com/27692-deforestation.html

The Geographical Association. BORNEO DEFORESTATION. Retrieved from https://wwf.panda.org/our_work/forests/deforestation_fronts2/deforestation_in_borneo_and_sumatra/

Union of Concerned Scientists. (2012, December, 09). Tropical Deforestation and Global Warming. Retrieved from https://www.ucsusa.org/resources/tropical-deforestation-and-global-warming

Woodward, A. (2020, January, 3). Greta Thunberg turns 17 today. Here’s how she started a global climate movement in just 18 months. Retrieved from https://www.businessinsider.my/greta-thunberg-bio-climate-change-activist-2019-9/?r=US&IR=T

World Rainforest Movement. (2019, May, 14). Sarawak: Save the Mulu Rainforest from oil palm plantations! Bulletin 243. Retrieved from https://wrm.org.uy/articles-from-the-wrm-bulletin/section2/sarawak-save-the-mulu-rainforest-from-oil-palm-plantations/

 

1 comment for “வனத்தின் குரல்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...