குவர்னிகா: அ.பாண்டியனின் மலாய் இலக்கியம் கட்டுரையை முன்னிட்டு ஒரு பார்வை…

மலேசியாவில் மலாய் சிறுகதை இலக்கியத்திற்குச் செல்வதற்கு முன்பு ஆரம்பக்கால மலாய் இலக்கிய போக்கினைக் கண்ணுறுவது முக்கியமாகும். மலேசியாவின் சுதந்திரத்திற்கும் ஒரு வகையில் மலேசிய மலாய் இலக்கியம் பங்கையாற்றியிருக்கிறது எனில் மிகையில்லை. மலேசியாவில் தேசிய இலக்கியம் என்பதும் மலாய் இலக்கியம் என்பதும் ஒன்றுதான் என்ற நிலை இருந்துதான் வருகிறது. சீனமொழியும், தமிழ்மொழியும் மலேசியாவில் வழக்கத்தில் உள்ள மொழியாக இருந்தாலும் கூட இம்மொழியில் எழுதப்படும் எழுத்தாக்கங்கள் தேசிய இலக்கியமாகக் கருதப்படவில்லை என்பது வருத்தத்தைத் தர கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் சீனம், தமிழ் இலக்கியங்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் தேசிய இலக்கியங்களாக அங்கீகரிக்கப்படும் சாத்தியங்கள் தற்போது இருப்பதாகவே தோன்றுகிறது.

மலாய் இலக்கிய வளர்ச்சியில் டேவான் பஹாசா டான் புஷ்தாகா (Dewan Bahasa Dan Pustaka) பெரும் பங்கை ஆற்றி வருகிறது எனில் மிகையில்லை. இந்நிறுவனம் 12.6.1956-ஆம் ஆண்டில் ஜோகூர் பாருவில் தொடங்கப்பட்டு பின் 1957-ஆம் ஆண்டு கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது. டேவான் பஹாசா டான் புஷ்தாகா இலக்கிய சேவையை தொடர்ந்து நடத்துவதற்கு முன்பு, மலாய் இலக்கியப் பணியை முன்னெடுத்த பெருமை சுல்தான் இட்ரீஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையே சாரும்.

1920-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மலாயாவில் 400 மலாய்ப்பள்ளிகளும் அவற்றில் ஏறக்குறைய 20,000 மாணவர்கள் கல்வி கற்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன (கிருஷ்ணன் மணியம்,1993). மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் தேவைப்பட்டது. திறன்மிக்க ஆசிரியர்களை உருவாக்கவும் ஆசிரியர் பற்றாக்குறையை ஈடுகட்டவும்தான்  சுல்தான் இட்ரீஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி 1922 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. மலாயாவில் நல்ல வரவேற்பைப்பெற்ற  இவ்வாசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு மலாயாவிலிருந்து மட்டுமல்லாமல் சிங்கை, புருணை போன்ற நாடுகளிலிருந்தும் நல்ல வரவேற்புக் கிடைத்தன.பல இளைஞர்கள் ஆசிரியர் துறையில் தடம் பதித்தனர். இப்படி மாணவர்களாக சேர்ந்த சில குழுவினருக்கு அரசியல், சமுதாயம், பொருளாதாரம் போன்றவற்றின் மீது கூர்மையான விமர்சனங்கள் எழுந்தது.

1924-ஆம் ஆண்டு அவ்வாசிரியர் பயிற்சிக்கல்லூரியில் Pejabat Karang Mengarang எனும் எழுத்து அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் அன்றைய அக்கல்லூரி இயக்குநர் O.T Dussek மற்றும் Zaba (Zainal Abidin Bin Ahmad) ஆவர். இவ்வெழுத்து துறை அக்கல்லூரியில் ஒரு துறையாகவே விளங்கியது. மலாயாவில் உள்ள பள்ளிகளுக்குப் புத்தகங்களை விநியோகிப்பது, மலாய் சமூதாயத்தினருக்குத் தேவையான வாசிப்பு இதழ்களைக் கொண்டு சேர்ப்பது, நகரும் நூலகத்தை ஏற்பாடு செய்து நாட்டின் மூலை முடுக்குகளில் கொண்டு சேர்ப்பது என்பதனை நோக்கமாகக் கொண்டு இவ்வலுவலகம் செயல்பட்டது.

1955-ஆம் ஆண்டு இவ்வலுவலகம் கோலாலம்பூருக்கு மாற்றலாகி கல்வித்துறையின் பார்வையில் இயங்கியது. 1957-ஆம் ஆண்டு இவ்வலுவலகம் கலைக்கப்பட்டது. இதன் பிறகுதான் டேவான் பஹாசா டான் புஷ்தாகா  இவ்வலுவலகத்தின் பணிகளை ஏற்றுக்கொண்டு செவ்வனே செயல்படத் தொடங்கியது.

சுல்தான் இட்ரீஸ் ஆசிரியப் பயிற்சிக்கல்லூரிதான் மலாய் எழுத்துலகத்தின் பல ஆளுமைகளை அடையாளப்படுத்தியது எனில் மிகையில்லை. தரமாக எழுதும் எழுத்தாளர்கள் இக்காலக்கட்டத்தில்தான் தொடங்கினர். அதுமட்டுமல்லாது தீவிரமான இலக்கிய விவாதங்களும் இலக்கிய சிந்தனையும் இங்குதான் தொடங்கியது. பல ஆசிரியர்கள் பல மலாய் இலக்கியப் படைப்புகளைப் படைக்கத் தொடங்கினர், இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள்: Harun Muhammad Amin (Harun Amirnurrashid), Abdullah Sidek, Ahmad Bakthiar (Ahmad Abdullah), Ahmad Kotot, Muhammad Yassin Maamup (Pungguk), Abdul Samad Ahmad, Muhammad Simin Taib, Kasmani Haji Arif, Muhammad Yusuf Arshad மற்றும் Ahmad Murad Nasruddin ஆவர்.

1920-ஆம் ஆண்டுகளுக்குப்பின் அச்சு இயந்திர தொழிற்நுட்பந்தொடங்கியப் பிறகுதான் நவீன மலாய் இலக்கியம் தலைத்தூக்கத் தொடங்கியது எனலாம். இதில் பெரிதும் வரவேற்புப் பெற்றது சிறுகதை இலக்கியமே.

நவீன மலாய் சிறுகதை இலக்கிய தோற்றம்

முன்ஷி அப்துல்லாவின் (1796-1854) சிறுகதைப்படைப்பிலிருந்துதான் நவீன இலக்கியம் தோற்றம் பெற்றது. அவரின் இலக்கியப்படைப்பு (Kisah Pelayaran Abdullah)1837-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கடல் பயண அனுபவங்களும், பகாங், திரங்கானு ,கிளந்தான் மாநிலங்களுக்குத் தான் சென்ற அனுபவங்களையும் முற்போக்குச் சிந்தனையோடு இவர் எழுதினார், இவரே மலாய் நவீனச் சிறுகதை முன்னோடியாகத் திகழ்கிறார் எனில் மிகையில்லை. அரசர்கள், மன்னர்கள் என்று மேட்டுக்குடி மக்களையே மையமாகக் கொண்டு எழுதி வந்த இலக்கிய போக்கின் சிந்தனையை அடியோடு மாற்றி சாதாரண மக்களின் கதாபாத்திரங்களை முன்வைத்து மக்கள் படும் துயரங்களையும் அவலங்களையும் தன் கதைகளில் கொண்டு வந்தார். கூரிய சமுதாய விமர்சனங்கள் அவரின் கதைகளில் இடம்பெற்றுள்ளது. மேற்கத்திய கதைபோக்கை மலாய் சிறுகதை படைப்புகளில் அறிமுகப்படுத்திய ஆளுமை இவரே என கிரீஸ் மாஸ் (Keris Mas) எனும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். இவர் தமிழ் முஸ்லீமாக இருந்தாலும் கூட மலாய் இலக்கியங்களில் இவர் தமிழர் என்று குறிக்கப்படுவதில்லை. மலாக்கா மாநில வரலாற்றில் எவ்வாறு பரமேஸ்வராவின் பெயர் துடைத்தொழிக்கப்பட்டதோ அவ்வாறே இவரின் வரலாறும் அழிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் பின்னரும்

அன்றைய மலாயாவில் ஏற்பட்ட  அரசியல், ஆட்சி மாற்றங்கள் மலாய் சிறுகதை இலக்கியத்தை மேலும் மலரச் செய்தன. அச்சு இயந்திரங்கள், Roman எழுத்து அறிமுகம் முதலிய காரணங்களும் மலாய் சிறுகதை வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளது. கவிதை / காவியம் என்ற அமைப்பையே கொண்டிருந்த மலாய் இலக்கியம் மேல்நாட்டுத் தாக்கத்தினால் மெல்ல மெல்ல உரைநடை இலக்கியத்தை ஏற்றுக் கொண்டது. Kecelakaan Pemalas எனும் சிறுகதையே மலாய் இலக்கியத்தின் முதல் சிறுகதையாகக் கருதப்படுகிறது. நோர் பின் இப்பிராஷிம் எழுதிய இச்சிறுகதை Pengasuh எனும் இதழில் வெளியிடப்பட்டது.

முதலாம் உலக போருக்கு முன்னர் நவீன உத்திகள் மலாய் சிறுகதை இலக்கியங்களில் குறைவாகவே இருந்தன.அக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளின் கதைகருவும் படிப்பினைகளும் பழைமைச் சார்ந்ததாகவே அமந்துள்ளன. சிறுகதைகளின் முடிவில் அக்கதைகளில் இடம் பெற்றுள்ள நன்னெறிக் கூறுகளை எண் வாரியாக குறிப்பிட்ட பல சிறுகதைகள் உண்டு. எதார்த்தவியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், பெண்ணியம் என்று பல தளங்களில் மலாய் சிறுகதைகள் படைக்கப்பட்டுள்ளன, மலாய் சிறுகதை இலக்கியங்களில் தலித்தியல் இலக்கியம் இல்லை எனினும் மசாப் பிரிவினைகளைத்தொட்டு கதைகள் இருந்த வண்ணமே உள்ளன. அது மட்டுமல்லாது, ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வுகளை வைத்து பல சிறுகதைகள் உருவாகியுள்ளன.

(தொடரும்)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...