மிச்சமிருப்பவர்கள் : ஒடுக்கப்பட்டக் கூடுகளின் ஓங்கல்

மிச்சமிருப்பவர்கள்ஒரு சமுதாயம் குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் எதிர்க்கொண்ட நிகழ்வுகளின் விவரிப்பாகத்தான் பெரும்பான்மையான மலேசியத் தமிழ் நாவல்கள் எழுதப்படுகின்றன. சுதந்திரத்திற்குப்பின், வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு வெளிகளில் வெவ்வேறு சமூக அடுக்குகளில் உள்ள இந்தியர்களால் எதிர்கொள்ளப்பட்ட உயிர் உருக்கும் சம்பவங்களை ஒரு புறநகரின் பின்னணியில் தொகுத்து கிட்டத்தட்ட 50 கால அவல நிலையை மிகத்துல்லியமாய் காட்சிப்படுத்திச் செல்வதே மிச்சமிருப்பவர்கள் நாவலின் சிறப்பு. எழுத்தாளர் செல்வன் காசிலிங்கத்தின் சிறுகதைகளிலிருந்து சற்றே மாறுபட்ட தேர்ந்த மொழிநடையைக் கொண்ட இந்நூல் அவரின் முதல் நாவல்.

இந்நாவலை அவர் 3 அத்தியாயங்களாகப் பிரித்து எழுதியுள்ளார். முதல் அத்தியாயம் வயதில் மூத்த, அனுபவமிக்க, சாமர்த்தியவாத கோபக்காரராகவும், அந்தக் கோபத்தில் நியாயமுள்ளவராகவும், அறிவார்ந்த பாத்திரமாய் படைக்கப்படும் பொன்னுச்சாமியை முன்னிறுத்தி நகர்கின்றது. அவரது வாழ்க்கை பின்னணி, அதிருப்திகளை அவர் எதிர்கொள்ளும் விதம், இளைஞர்களை வசீகரிக்கும் சுபாவம், போலியற்ற குணாதிசியங்களால் எல்லா சம்பவங்களிலும் அவர் வகிக்கும் முக்கியத்துவம் என பொன்னுச்சாமி கதைகளினூடாக நமது மனதுள் இந்த அத்தியாத்திலேயே ஆழப் பதிந்துவிடுகிறார். இரண்டாம் அத்தியாயம் முழுக்க, செல்வாவின் பார்வையில் விரிகிறது. என்னதான் முதல் அத்தியாயத்திலேயே அவனது எண்ணப்பாடு கொஞ்சம் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த அத்தியாயத்தில்தான் அவன் சிந்திக்கும் விதம், வாழ்க்கைச் சூழல் போன்றவை விளக்கமாகத் தெரிய வருகின்றன. முறையான வழியில் பொறுமையாகப் போனால், நல்லது நடக்கும் என நம்பி வாழும் இளம் வயது செல்வாவும், இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற விரக்தியில் போராட எழும் வயது முதிர்ந்த பொன்னுச்சாமியும் இரு வெவ்வேறு குணங்களைக் கொண்டு ஒரே நேர்க்கொட்டில் நிற்பவர்களைப் போல காண்பிக்கப்படுகின்றனர். இதில் சுவாரசியம் என்னவென்றால், பொன்னுச்சாமி செல்வாவின் மாமா. மூன்றாம் அத்தியாயம், முந்தைய இரண்டு அத்தியாயங்களில் காண்பிக்கப்பட்ட மலேசிய இந்தியர்கள் மீது விழுந்த ஒடுக்குமுறைகளின் ஓலத்தில் எழுந்த ஓங்கலாக ஒரு போராட்டக் களத்தின் உச்சமாய் மலர்ந்து முடிகிறது.

முன்னறிவிப்பில்லாது நிலங்கள் விற்கப்படுதலில் ஆரம்பிக்கும் நாவலின் போராட்ட நெடி, சிறைச்சாலைகளில் மர்மமான முறையில் நடந்தேறும் தொடர் மரணங்கள், தந்திரமிக்க கோயில் உடைப்புச் சம்பவங்கள், பொறுப்பற்ற இந்தியப் பிரதிநிதி அரசியல்வாதிகள், ஒற்றுமையுணர்வு மெலிந்து இனவெறிப்போக்கு மலிந்து வரும் மலேசியப் பல்லினச் சூழல், மலேசிய இந்தியனைத் தாழ்வாய்ப் பார்க்கும் பிற இனத்தோர், மேற்படிப்புக்கு நல்ல தேர்ச்சி இருந்தும் எண்ணிக்கை கோட்டா பொருத்து பல்கலைக்கழக அமர்த்தம் கிடைப்பது, காவலாளிகள் நியாயமற்ற முறையில் காழ்ப்பு கொண்டு சுட்டுக் கொல்வது போன்ற பல சொல்லொணாத் துயரச்சரித்திரங்களின் விவரிப்பு முழுக்க வீசிச் செல்கிறது. ஆயினும், சம்பவங்கள் நடந்தேறும் அந்நொடியில் செல்வா ஏதொரு பங்கும் வகிக்காது தனித்து நிற்கிறான். அந்தப் போராட்டங்கள் அவனை அவ்வளவாக அசைத்திரவில்லை. வலிகளை உணரும் அவன், பிறரைப்போன்று ஆரவாரமின்றி  கடந்து செல்கிறான்.

எல்லா சம்பவத்திற்கும் எதிர்வினையாற்றுவோருக்கு மத்தியில் எல்லாவற்றையும் பார்த்து உள்ளத்துள் சேர்த்துக் கொஞ்ச கொஞ்சமாய்க் கனன்று கொண்டிருக்கும் விரக்தி, ஒரு செறிவுப் புள்ளியைக் கடக்கும் வேளையில் எதிர்வினைக்குப் பாய்விரிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. அங்குதான், செல்வாவும் களத்துள் இறங்கிப் போராட ஆரம்பிக்கிறான். அந்தக் காட்சி தொட்டு அனைத்தையுமே நாம் கற்பனையில் கண்டு உணரவேண்டி சொல்லாமல் முடித்துவிட்டார் ஆசிரியர். இங்கே, நாவலைத் தாண்டியதொரு சிந்தனையும் புரிதலும் எழுகிறது

தவுக்கேவுக்கும் இந்தோனீசிய கிளார்க்-குக்கும் உள்ள உறவையும், இளையோர்கள் குண்டர் கும்பல்களில் ஈடுபட்டுத் தவறான வழியில் செல்வதையும் நேரடியாகச் சொல்லாமல், கருத்த உதடு, காதில் தோடு, மின்சாரக் கம்பங்களில் 04,36 போன்ற எண்களின் கிறுக்கல்கள் என, அவற்றின் தன்மைகள் குறித்த விவரிப்பின் வழி நமக்குப் புரிய வைத்துள்ளது. வாசிப்பில் நல்லதொரு திருப்தியைத் தருகிறது. ஆயினும், உய்த்துணர்ந்து ஒவ்வொரு காட்சியையும் கூர்ந்து உள்வாங்கும் வாசிப்பாளனுக்கு, நகைச்சுவையான உரையாடலைக் கொடுத்துவிட்டு, அதை அவன் அனுபவித்து அறிவதற்குள், அது நகைச்சுவை என்று ஆசிரியரே சொல்லிவிடுகிறார். கிண்டல், சோகம், போன்ற உரையாடல் வழி உணரவேண்டிய உணர்ச்சிப்பூர்வ விடயங்களையும் இவை இன்னதுதான் என இவரே தெளிவாக எழுதி சலிப்பூட்டுகிறார்.

கதைக்குள் கதையை வைக்கும் யுக்தி என்னதான் ஒருங்கே பல இடங்களில் சிறப்பாய் அமைந்திருந்தாலும், கதையின் தொடர்ச்சியில் ஆங்காங்கே சில முறிவுகள் ஏற்பட்டு வாசிப்போருக்குக் குழப்பத்தைத் தருகிறது. நாவலின் நோக்குநிலையும் ஒரு சில இடங்களில் தவறாகப் பதிவாகியுள்ளது. முதல் அத்தியாயம் முழுக்க படர்க்கை நோக்குநிலையில் இருக்கும் பட்சத்தில் ஓரிரு வாக்கியங்கள் தன்மை நோக்கு நிலையில் அமையப்பெற்றிருக்கின்றன. நாவலை வாசித்து முடித்த மாத்திரத்தில், “ஒரு வேளை சம்பவங்களையெல்லாம் தனித் தனியாக எழுதி, அதற்குப்பின் இவர் அவற்றை ஒரு கதை வடிவினுள் கட்டமைக்க முயன்றிருக்கிறாரோ” என்றுதான் தோன்றியது. வாசகர் ஒருவரிடம் கொடுத்து இந்நூலைத் திருத்தச் சொல்லியிருந்தால் தவிர்த்திருக்கக்கூடிய கவனப்பிழைகள் இந்நாவலின் பல இடங்களில் காணப்படுகின்றன.

1.ஹிண்ட்ராஃப் போராட்டம் நடந்த காலக்கட்டத்தில், நூலகம் அமைத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது எனக் குறிப்பிடுவதால், நூலகம் அமைப்பது குறித்து பேசப்படும் முதல் அத்தியாயம் 2004-இல் நடந்தவற்றைப் பதிவு செய்திருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். 2004-இலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் என்றால் 1984.1984-இல் அவ்விடத்திற்கு குடி வந்த அண்ணாச்சியின் அப்பா பெருமாள், அதற்குப்பின் உருவாக்கிய டீ கடையில் 1979-லேயே நம்மை விட்டு மறைந்துபோன துன்.சம்பந்தனும், நடிகவேள் எம்.ஆர்.இராதாவும் படம் எடுத்துக்கொண்டது எப்படி?, அதோடன்றி, முனியான்டி அண்ணாச்சிக்கு 30 வயது என்பதுபோல காட்டிவிட்டு, அவர் திருமணம் செய்து 25 ஆண்டுகள் ஆகிறது எனக் குறிப்பிடுவது கதையின் நகர்வில் தெளிவின்மைக்கு வித்திடுகிறது.

2. மலேசியாவில் இந்தியர்கள் இறப்பினை எடுப்பது பெரும்பாலும் மதியத்தில்தான். ரகுவின் இறப்புக்குச் செல்லும் வழியில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்க, குளித்துவிட்டுப் பெண்ணொருத்தி சாமி கும்பிடுவது போல் வரும் காட்சி மதியத்தில் நடப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். மதியத்தில் சாமி கும்பிடும் பழக்கம் உண்டா என்ன? அல்லது தற்காலிகக் குடியிருப்பின் வாழ்க்கைச் சூழல் அந்தப்பெண்மணியை நேரங்காலம் தெரியாத அளவுக்குக் குழப்பி வைத்துள்ளதா?

3.இந்த நாவல் முழுக்க 5 பழனிகள் வருகிறார்கள். காளியண்ணன் கடையில் வேலை செய்யும் பழனி, காவலாளியாகப் பணிபுரியும் பழனியாண்டி தாத்தா, தோட்ட ம.இ.கா கிளைத் தலைவர் பழனிச்சாமி, மது அருந்தி திருவிழாவின்போது சூடத்தட்டின் மேல் விழுந்த பழனிச்சாமி, திருவிழாவில் கனகசபையோடு பேசிக்கொண்டிருக்கையில் எதிர்பட்ட செல்வாவின் நண்பன் பழனி. ஏற்கனவே, 104 பக்க நாவலில் பல கதைமாந்தர்கள் வந்து போகும் சிக்கலைச் சமாளித்துப் படித்துக்கொண்டிருக்கும் வாசிப்பாளனுக்கு இப்படியாக ஒரே பெயரை 5 நபர்களுக்குச் சூட்டிக் குழம்ப வைப்பதைத் தவிர்த்திருக்கலாம். கூடவே, நாவலின் தொடக்கத்தில் நாதன் என்ற ஒரு நபரும் உடன் வருவதாகச் சொல்லி, நீதிமன்றத்திற்குக் கிளம்புகிறார் அண்ணாச்சி. அந்த நாதனுக்கு இந்த நாவலில் ஒரு பங்கும் இல்லை. நாவல் முழுக்க அவர் யாரோடும் எந்த வகையிலும் எந்தச் சூழ்நிலையிலும் சம்பந்தப்படவில்லை. நாவலின் கதையோட்டத்தில் பங்கு வகிக்கக்கூடிய யாரையேனும் அவருக்குப் பதிலாகச்  சொல்லியிருக்கலாம். அதன்வழி, தேவையில்லாமல் ஒரு கதாபாத்திரச் சேர்ப்பையும் தவிர்த்திருக்கலாம்.

ஒரு தேர்ந்த படைப்பாளியின் புனைவானது, வெறும் சம்பவங்களின் கூட்டாகக் கடந்துச் செல்லாமல், நெஞ்சத்தின் உணர்வுக்கு உரமிட்டு ஒரு வியத்தகு கண்டடைதலுக்கு வழிவிட்டுச் செல்ல வேண்டும். அதையே, அப்படைப்பில் தான் கண்ட தரிசனமாக ஒரு வாசிப்பாளன் கொண்டாடுவான். அவ்வாறு இந்நாவலில் ஏதேனும் உண்டா என்றால், மிச்சமிருப்பவர்கள் சற்றே ஏமாற்றத்தைத்தான் தருகிறது. இந்நாவலில் சொல்லப்பட்டுள்ள சில இரண்டு மூன்று வரிச் சம்பவ விவரிப்பின் வழி எழுத்தாளர் பல பரிணாமங்களைக் காண்பித்திருக்கிறார். முதல் நாவலிலேயே அது அவருக்கு இசைந்து வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. காட்டாக, பெரும்பாலும் எல்லா இயலாமைகளும் இப்படித்தான், இக்கட்டான சூழ்நிலைகளில் மனிதர்களை நிராயுதபாணியாக்கி விடுகின்றனவென்று நினைத்துக் கொண்டேன் , கற்பனைகளால் வார்த்தெடுக்கப்பட்ட பிம்பம் வெடித்துச் சிதறி உண்மை பளீரிட்டபடி வெளியே வரும்போது அது பெரும்பாலும் கண்களுக்கு உவப்பானதாக இருப்பதில்லை  போன்ற வரிகளின் வழியே வாழ்வியல் தத்துவங்களை அள்ளித்தெளித்து நம்மைப் பெரிதும் சிந்திக்க வைக்கிறார்.

காலை வெய்யிலின் சூடு மெதுவாய் மேலேறிக் கொண்டிருந்ததில், வெய்யிலில் காய்ந்து அனுபவமில்லாத கூடவே நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்களுக்கு வியர்த்துக்கொட்டி சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார்கள் ” , எவ்ள தரப்போரானுங்கபிச்சக் காசுடாஇப்பல்லாம் பத்திரிக்கையா நடத்துரானுங்ககட்சிக்கு ஒரு பேப்பரு. ஜாதிக்கு ஒரு பேப்பருன்னுல்ல வெச்சிருக்கானுங்க , இதுவரைக்கும் இருந்தவனுங்க நாக்காலியில ஒக்காந்து பின்னால சூடாக்குனது போதும்டா போன்ற எதார்த்த மனநெருடல்களைத் தானாகவோ அல்லது பாத்திரங்களில் ஏற்றியோ போகிற போக்கில் ஒரு விமர்சனமாக வைத்துக் கதையை நகர்த்துகிறார்.

அதோடின்றி, நவீன இலக்கியங்களில் விரவிக் கிடக்கும் படிமங்கள்/குறியீடுகள் வாசக இடைவெளிக்கு வழியமைத்துக்கொடுக்கிறது. அதுவுமே, இந்நாவலில் மிக நுணுக்கமாய்க் கையாளப்பட்டுள்ளது. ஆமாடாஒங்க தெய்வந்தான் இப்போ படிக்கப்போவுது.. பரீச்ச எளுதப்போவுதுஅதக்கட்டிகிட்டு அளுவுங்கடா  (மாமா கீழே குனிந்து, கையில் கிடைத்த கல்லொன்றை எடுத்து, குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த நாயை நோக்கி விட்டெறிந்தார். கல் நாயின்மேல் படாமல் சற்று தள்ளிப்போய் குப்பை மேட்டின் மேல் விழுந்தது. ஆனாலும், ஏதாவதொரு வஸ்து எங்கிருந்தோ தன்னை நோக்கி வந்து விழுந்ததை உணர்ந்ததுபோல நாய் திரும்பி மாமாவைப் பார்த்தது. மாமா திரும்பவும் இன்னொரு கல்லைப்பொறுக்கி நாயை நோக்கி வீசினார். அடிபட்ட நாய் ஊளையிட்டுக்கொண்டே லயனிலுள்ள வீடுகளை நோக்கி ஓடியது. கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் அதையே பார்த்துக்கொண்டு இருந்தார். முகத்தில் இறுக்கம் கூடுவதுபோல் இருந்தது.)  இந்தக் காட்சியில் இறைவனிடத்தில் முறையிடுவோரைக் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த நாய் என்ற குறியீட்டின் வழி சொல்லியிருப்பது கதையின் தரத்தை மேல்நோக்கி நிலைநிறுத்தியுள்ளது.

ஆனால், ஒட்டுமொத்தமாக நாவலின் மையக்கருவழி நாமே திறந்துகொள்ளவேண்டிய கதவுகளையெல்லாம் அவரே திறந்து நம்மை அதனுள் அழைத்தும் சென்றுவிட்டார். முழு நாவலையும் வாசித்துமுடித்து புத்தகத்தை மூடும் தருணத்தில், நாவலின் மையக்கரு குறித்து  நாம் யோசித்து அடைய வேண்டி ஏதுமிருப்பதாய்த் தெரியவில்லை. “அவன் இதுபோன்ற போராட்டங்களை விரும்புவதில்லை.”, “அவனுக்கு இம்மாதிரியான அராஜகம் அருவருப்பை மூட்டியது” – போன்ற கூற்றுகளின் வழியே செல்வாவின் மனநிலையை இவரே சொல்லி, ஓ.. அப்படியா என்ற புரிதலோடு கதையை தொடர வேண்டிய நிலை கதையோடு வாசகனுக்குள்ள இடைவெளியைப் பெரிதாக்குகிறது.

இருந்தாலுமே, 2007-இல் எழுந்த ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்கான காரணங்களை நமது எண்ணத்துள் மீட்டுணர ஒரு சிறந்த வாய்ப்பினை இந்நாவல் வாசிப்பனுபவம் தருகிறது. என்னதான் நாவலின் கடைசி 10 பக்கங்களில் மட்டுமே ஹிண்ட்ராஃப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், நாவலின் முதல் அத்தியாயத்தில் 25-ஆவது பக்கத்திலேயே வழக்கறிஞர் உதயகுமாரின் அறிமுகத்தின் வழி இந்நாவல் ஹிண்ட்ராஃப் போராட்டத்தை நோக்கி நகர்வது புலப்பட்டுவிடுகிறது. இன்றளவும் நீடிக்கும் இந்த அவலங்களின் பதிவுகள், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அன்றைய மிச்சமிருந்த/மிச்சமிருக்கும் மலேசிய இந்தியர்களின்  சரித்திரத்தில் அவர்கள் சிந்திய உதிரச் சிதறல்களின் வழியே ஒரு கதறலாக வாசிப்போர் மனதுள் கடந்து செல்லும்.  மேற்கோள்காட்டப்பட்டுள்ள சிற்சில பின்னடைவுகளையும் தாண்டி , மலேசிய இந்தியர்கள் மீதான அரசியல் பார்வையினை மாற்றிய ஒரு மிக முக்கியச் சரித்திரத்தை மிக எதார்த்தமாய்ப் பதிவு செய்துள்ள இந்நாவல் ஒரு மகத்தான பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு போராட்டத்திலும் ஆசிரியர் கையாண்டுள்ள சூழல் வர்ணனையும் பாத்திரப் பங்களிப்பும் எண்ணத்திரையில் இந்நாவலுக்கு உயிர்ப்பூட்டி வலுசேர்க்கிறது. அவ்வாறானதோர் உன்னத படைப்பைத் தந்த திரு.செல்வன் காசிலிங்கத்திற்கு நெஞ்சார்ந்த பாராட்டு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...