மிஞ்சியிருப்பவர்களின் கதை

செல்வன் காசிலிங்கம் 01எழுத்தாளர் செல்வன் காசிலிங்கம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. அவர் எழுதிய படைப்புகள் எதையும் வாசித்ததில்லை. அவரின் புனைவில் முதன் முதலாய் படித்த எழுத்துப்படிமம் இந்த ‘மிச்சமிருப்பவர்கள்’ நாவல் மட்டுமே. என்னுடைய முதல் அனுமானம், இவ்வளவு சிறிய நாவல், கண்டிப்பாக அவ்வளவு சுவாரசியமாக இருக்காது என்பதுதான். ஆனால் இந்நாவல் இண்ட்ராப் (HINDRAF) பற்றியது என முகவுரையில் வாசித்ததும் வாசிக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஈராயிரத்து ஏழு. இன்னும் உப்சியில் படித்து கொண்டிருக்கிறேன். ரவாங் சுங்கை சோ-க்கு அடிக்கடி சென்று வருவேன். துர்கா அங்குதான் இன்னமும் இருக்கிறாள். அவள்  வீட்டை அடுத்து மூன்றாவது வீட்டில்தால் குமரனோ அல்லது குமாரோ (அப்படிதான் பெயர் வரும்) என்ற பையனை வெட்டுக்குத்துப் புகாரின் பேரில் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றார்களாம். மூன்றே நாளில் பையன் பிணமாகத்தான் வீடு வந்து சேர்ந்தானாம். இதைத் துர்காவின் அம்மா  சொன்னார். துர்காவின் வீட்டிலிருந்தபடியே நான் அந்த வீட்டு அம்மாவின் நடமாட்டத்தை நோட்டமிடுவேன். ஏனோ மனம் சில்லிட்டுப் பின்னர் அந்த வீட்டையே கண்கள் பரிதாபமாகப் பார்க்கும். இது நடந்தது அவ்வாண்டின் ஆரம்பத்தில். இந்த அவல நிலையின் வலி இதே பரிதாபத்தின் இயலாமை இந்த நாவலில் வரும் மகேஸ்வரனின் மரணத்தைப் படித்த போது தொற்றிக்கொண்டது. அதன் பிறகு தான் தொடர்ந்து  இந்த நாவலை படிக்க ஆரம்பித்தேன்.

மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாவலில் நாவலாசிரியர் முதல் பாகத்திலும் மூன்றாம் பாகத்திலும் நம்மை தூர நிறுத்தி திரைப்படம் போல கதையை ஓட்டுகிறார். மூன்று பாகங்களிலும் முதன்மை கதாபாத்திரமாக வரும் செல்வா, இரண்டாம் பாகத்தில் தானே கதை சொல்லியாகி நம்மைக் கதையோடு இணைக்கிறான். இது இதுவரை நான் எந்த நாவலிலும் காணாத ஒரு புதிய யுக்தி. நாவலாசிரியரின் பெயரிலும் செல்வா என்று இருப்பதால், நாவலின் கதாநாயகன் செல்வா என்பது தன்னைத்தானே குறிக்கிறாரோ என்று அவரை முன்னிறுத்தியே கதையைப் படித்தேன். பின்னர். நாவலைத் தொடர்ந்து படித்த போது செல்வாவுக்கும் எனக்குமான பல ஒற்றுமைகள், அதாவது ஆர்ப்பாட்டங்களிலும் சர்ச்சைகளிலும் நான் நேரடியாக ஈடுபடாமல் தூர நிற்பது என்ற அந்த ஒரு குணாதிசயம் என்னை அவன் விழி வழியே கதை களத்தைப் பார்க்க வைத்தது.

கதைக்களம் ரவாங், குவாங், செரெண்டா என சிலாங்கூர் மாநிலத்தைச் சுற்றி வருகிறது. கதைக்களத்தைக் கற்பனை செய்ய நினைவில் கொஞ்சமாகப் படிந்திருந்த சுங்கை சோ தோட்டம் என் கற்பனைக்கு அடித்தளமாக வித்திட்டது. அதோடு டப்ளின் தோட்ட மண்டபமும் சேர்ந்து கொண்டு எப்படியோ ஒரு திரைப்பட ‘செட்டை’ அமைத்துக் கொடுத்துவிட்டது. ஒரு வகையில் நானும் செல்வாவும் கிட்டத்தட்ட ஒரே மன நிலையில்தான் இருந்திருக்கிறோம். அவன் படித்தவன், போராட்டங்களின் ஆக்ரோஷங்களுக்கு உணர்ச்சிவயப் பட விருப்பமில்லாதவன். முடிந்தவரை தனக்குச் சம்பந்தமில்லாமல் எதிலும் ஈடுபடாதவன். எதையும் தனக்குத் தேவையா என ஒரு அடி பின்வைத்து யோசிக்கக் கூடியவன். வீண்சர்ச்சைகளில் தனது சக்தியை வீணாக்காதவன். நடப்பவை யாவையும் தள்ளி நின்று பார்ப்பவன். இதே மனநிலையில்தான் நானும் என்னைப்  பார்க்கிறேன். இப்படியாகத்தான் செல்வா எனக்குள் பிரசன்னமானான்.

முதலில் அண்ணாச்சியின் நிலம் பறிப்போகும் அந்த நிலையைப் பல முறை பலவிதமாகக் கேள்விப்பட்டும் படித்தும் இருந்ததால் எனக்கு நாவலில் படிக்க சலிப்பாக இருந்தது. அப்படிதான் செல்வாவுக்கும் இருந்திருக்க வேண்டும். இப்போதைய தலைமுறையினருக்குப் பாட்டன் முப்பாட்டன் பட்ட கஷ்டம் எல்லாம் நிலா சோறு போலதானே தெரியும். அதை அண்ணாச்சி கதாபாத்திரம் வலுவாகவே சொல்கிறது. வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து உடல் உழைப்பை முழுவதுமாக நில முன்னேற்றதுக்கு அளித்துப் பின்னர் நிலம் நமதல்ல என்று தெரியும்போது மனமும் வயிறும் பகீரெனுமே அந்த வலி, அண்ணாச்சி செல்வாவின் கைகளைப் பற்றிக் கொண்டு கூறும்போது எனக்கு மனதுக்குள் முள் தைத்தது போல இருந்தது. அந்தக் காட்சிக்குப் பின்னர் மீண்டும் நாவலை முதலிலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன்.

சாதாரணமாகவே உடல் உழைப்பாளிகள் அதுவும் இந்தியர்களுக்குச் சக மனிதர்களை உறவு பெயர் வைத்து அழைப்பது இயல்பானதுதான். நெருங்கி பழகிவிட்டால் உரிமை தானாகவே வந்துவிடும். சொந்தமே இல்லாமல், மாமா மச்சான், சித்தி பெரியப்பா சித்தப்பா என முறைவைத்து கூப்பிடும் பழக்கம் இந்தச் சமுதாயத்துக்கே உரித்தான ஒன்று. அண்ணாச்சிக்கும் அந்த நிலப்பரப்புக்கும் அப்படிப்பட்ட ஒரு உறவுதான். அவர் இந்த தோட்டத்துக்கு வந்து வளர்ந்து வாழ்ந்த காலம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. அவர் மட்டுமல்ல அவரின் அப்பாவைப் பற்றிச் சொல்லும் காட்சியிலும் அண்ணாச்சி வாழும் இந்தத் தோட்டத்தின் மீது ஏற்பட்ட அன்னியோன்யம் பற்றி வெகுவாக விவரிக்கிறார் நாவலாசிரியர். தான் வாழ்ந்த ஒரு இடத்தைத் தன்னால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையே என அண்ணாச்சியின் மனம் பதைபதைத்து விம்முகிறது. நான் டப்ளின் தோட்டத்தை விட்டு வரும்போது மனம் பாரமாகி கண்கலங்கியது இன்னும் கண்ணெதிரே நிற்கிறது. வெறும் பதினாறு வருடமே தோட்டத்தில் வாழ்ந்த எனக்கே அப்படி இருந்தது என்றால் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தோட்டத்திலேயே வாழ்ந்து அதன் வாசத்தை தினம் தினம் நாசியில் கொண்டிருந்த அண்ணாச்சி, பொன்னுசாமி போன்றோரின் மன நிலை எப்படி இருந்திருக்கும்?  அப்படிதான் காலங்காலமாக வியர்வை சிந்தி உழைத்த சனம் நிலம் தனதுதான் என எண்ணுவதில் உள்ள இயல்பை நாவலின் முதல் பாகத்தில் என்னால் காணமுடிகிறது.

தோட்டத்தில் பல காலமாய் இருந்து வாழ்வின் பெரும்பகுதியை அங்கேயே கழித்து விட்ட பெரியோர்கள் நிலம் பறிபோய் தங்களின் எதிர்காலத்துக்கு ஒரு உத்தரவாதம் இல்லை. தாங்கள் நடு தெருவுக்கு வந்து விடுவோம் என்ற நிதர்சன நிலைக்கு தள்ளப்பட்டபோது, அப்போதைய அரசியல்வாதிகளையும் அதிகாரத்திலும் அரசாங்க பதவிகளில் இருப்பவர்களையும் நாடுகின்றனர். ஆனால் அரசியல்வாதிகளின் பதவி செருக்காலும் ஊழல்களாலும் சுயநலத்தாலும் அலட்சியத்தாலும் கோரிய உதவிகள் வந்து சேராமல் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பதைப் பார்த்து வளரும் ராஜதுரைக்குள்  ஏற்படும் கொந்தளிப்பு எதிர்ப்பு குணமுள்ளவனாக மாற்றியிருக்க வேண்டும். அத்தியாவசியமான எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் ஒரு சமுதாயத்தில் வளரும் ஓர் இளைஞனுக்குப் போராட்ட குணம் எழுவது இல்லை. ஆனால் எதுவுமே கிடைக்காமல் அடிப்படை உரிமையும் இல்லாத ஒரு பட்சத்தில் வளரும் ஒருவனுக்குள் இத்தகைய குணம் இருப்பது ஆர்ச்சரியப்படுவதற்கில்லை. அவ்வாறான  போராட்ட குணத்தோடு இருக்கும் ராஜதுரையின் அந்த எதிர்ப்பு நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்ற பிரக்ஞையை நினைவு படுத்திப்போராட்டத்தை அடுத்த நிலைக்குக்  கொண்டு செல்கிறது.

நாவலின் கதைக்களம் நடைப்பெற்ற காலக்கட்டத்தில் பதவியில் இருந்த சில அரசியல்வாதிகளின் பெயர்களை மிகவும் தைரியமாகவும் நடந்த நிகழ்வுகளையும் தெளிவாக எதார்த்த முரண்பாடு இல்லாமல் புகுத்தி இருக்கிறார் நாவலாசிரியர். அதற்காக வெகுவாக நாவலாசிரியருக்கு ஒரு சபாஷ். அரசியல்வாதிகளின் அலட்சிய போக்குக் காரணமாக  எதிர்ப்புகள், வாக்கு வாதங்கள், கைக்கலப்புகள் என போலிசாருக்கும் தோட்ட மக்களுக்கும் நடுவில் கண்ணெதிரே நடந்தும் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல செல்வா அதை ஈடுபாடு இல்லாமல் சங்கடமாகத்தான் பார்க்கிறான். வாக்குவாதம் முற்றி அடிதடி என எல்லை மீறும் போது அங்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த பொன்னுச்சாமி உட்பட சில பெரியவர்களையும் ராஜதுரையையும் கூட கைது செய்கிறார்கள் போலிசார். தட்டுத் தடுமாறி போலிஸ் வண்டிக்குள் ஏற்றப்படும் பொன்னுச்சாமியைப் பார்த்த போதும் செல்வாவுக்குப் பெரியவர்களையும் லோக்காப்பில் வைத்து அடிப்பார்களா என்ற எண்ணம் அலைமோதுகிறது.

நாவலின் முதல் பாகமாக இருக்கும் இந்தப் பகுதியில் நிறைய கதைமாந்தர்கள் நடுநடுவில் வந்து செல்கிறார்கள். உதவி கிடைக்காத பட்சத்தில் தடுமாறும் பொன்னுசாமி, அண்ணாச்சி, மைக்கல் போன்ற பெரியோர்களும் ஒரு பக்கம். அடிதடியால் உரிமையைப் பெற்று விடலாம் என குரல் கொடுக்கும் ராஜதுரை, மாணிக்கவாசகம் போன்ற இளைஞர்கள் இன்னொரு பக்கம். அதனூடே ரப்பர் நடவுக்குப்பின் செம்பனை நடவுக்குத் தயாராகும் தோட்டம், அதற்குள்ளாக இருக்கும் நிர்வாக மாற்றம், பின்னர் முனியாண்டி சாமி வந்திறங்கி மூர்த்தி சொல்லும் அருள்வாக்கு என பக்கா தோட்ட வாழ்வு படம் பிடித்து காட்டப்படுகிறது. ஆனாலும் காலங்காலமாய் தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்தின் மீது வைத்திருக்கும்  நம்பிக்கை முழுக்க முழுக்க முட்டாள்தனம் என்பதும் என்றாவது ஒரு நாள் நாம் எல்லாம் வெளியேற்றப்படுவோம் என்பதும் இன்னும் வரப்போகும் காலத்தின் பொருளாதார மாற்றங்களால் ஏற்பட போகும் பாதிப்புகளைக் கணிக்காமல் விட்டதும்  இந்தியர்களின் இயலாமையை அப்பட்டமாகச்  சொல்கிறது.

விறுவிறுப்பாகச் செல்லும் கதையோட்டத்தில் மகேஸ்வரனின் மரணம் நிகழும் இடம் முக்கியமான பகுதி. தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவனின் மரணம் என்னை ரொம்பவும் பாதித்து விட்டது. நாவலில் உரையாடப்படும் இரண்டாவது கரு இந்திய இளைஞர்களுக்கு காரணமே இல்லாமல் நடக்கும் அகால மரணம். மகேஸ்வரன் குறைந்த கல்வியைக் கற்றவன். அவன் வயதையொத்த மற்ற இளைஞர்களைப் போலவே மகேஸ்வரனும் மது அருந்துகிறான்; புகைப்பிடிக்கிறான். அதிகமாகக் கோபம் வருகிறது. ஜாதி மீறி காதல் வயப்படுகிறான். காதலித்த ஈஸ்வரியைக் கரம் பற்றுகிறான். அவளை எல்லா விதத்திலேயும் திருப்தியாகவும் வைத்திருக்கிறான். ஏதோ தமிழ் திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது. வழக்கமான உச்சக்கட்டத்தில் அதிக கோபத்தில் வியாபார விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு  காவல்நிலையத்திற்குப் போனவன் பிணமாகத்தான் கிடைக்கப்பெறுகிறான். காரணம் இருந்து அல்லது தவறு செய்து  கொல்லப்பட்டு இருந்தால் பாவத்தின் சம்பளம் மரணம் என மனம் ஏற்கொள்கிறது. ஆனால் காரணமே தெரியாமல் இறப்பது அநியாயமாக அல்லவா தெரிகிறது. அதோடு ஆரம்பத்தில் நான் விவரித்த குமாரின் மரண செய்தி ஏற்கனவே தெரிந்திருந்ததால் இலகுவாக இக்காட்சி எனக்குள் ஒட்டிக்கொண்டது.  இருக்கிறதே கொஞ்சம் தான் நம் பயல்கள். ஆரோக்கியமாக இருக்கும் பயல்களை எதோ ஒரு கேஸில் மாட்டிவிட்டுப் பின்னர் பிணமாக வந்து சேர்ந்தால் யாருக்கு தான் பக்கென்றிருக்காது? நிஜமாகச் சொல்லப்போனால் இந்திய இளைஞர்கள் மிகவும் கட்டுமஸ்தான உடல்வாகு உடையவர்கள். அதனாலே பலர் அடிதடிகளுக்குப் போவதும் அடியாட்களாக இருப்பதுமாக இருந்தனர். சொற்பமானவர்களே படித்தவர்களாக இருந்தனர். மற்றவர்கள் அதிகப்பட்சம் எஸ்.ஆர்.பி முடித்தவர்களாகத்தான் இருந்தனர்.

நம் இளைஞர்கள் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையில் ஒடுங்கி இருக்கவும் புரட்சி போராட்டம் என வெளிவராமல் இருக்கவும் திட்டமிட்டு அதிகார மையங்களால் செய்யப்படும் கொலைகளாகவே நாவலில் வர்ணிக்கப்படுகிறது. கண்ணெதிரே கொலையென்று அப்பட்டமாகத் தெரிந்தும் வாதாட முடியாமல் இருக்கும் இயலாமை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. எதனால் மகேஸ்வரன் இறந்தான் என்பதற்கான  காரணம் அறிய அவனது உடலைப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்படும் காட்சியில் வரும் டாக்டரும் குறைந்த தகவல்களைத் தந்து தன்னளவில் தற்காத்துக் கொள்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக நிற்கும் ஈஸ்வரியும் மகேஸ்வரனின் அப்பாவும் அந்த இக்கட்டான நிலையில் என்ன செய்துவிட முடியும்? பணத்தட்டுப்பாடு இன்னொரு மூலையில் இருந்து அழுத்துகிறது. திரும்பவும் இயலாமை. இடையிடையே மலாய் மொழியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதும் பகடியாக்கப்படுகிறது. என்னவோ மலாய் தெரியாமல்தான் ஆங்கிலத்தில் பேசுகிறோம் என மலாய்க்கார்கள் நம்மை தரம் குறைப்பது சன்னமான பகடியே. இப்படி காட்சிகள் நகர்ந்து கொண்டே செல்கையில் காப்பி கடையில் உரையாடும் சொல் வீரர்களின் பல அங்கலாய்ப்புகளை நாவலாசிரியர் தவறாமல் படரவிட்டிருக்கிறார். நாம் பேசும் அதே மலாய் கலந்த சொல்லாடல்கள் மிக இயல்பாகவே கதை முழுவதும் பயணம் செய்கின்றன. படிக்கும் போது அதே தொனி ஏற்றம் இறக்கம் என மிக இயல்பாகவே ஒவ்வொரு வார்த்தையையும் நாவலாசிரியர் உச்சரிக்க வைக்கிறார். ஒரு அசலான மலேசிய நாவல் என உணரவைத்துள்ளதாலேயே நாவலாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நாவலின் முதல் பாகத்தின் இந்தப் பகுதி அடுத்து கோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்படுகிறது. மகேஸ்வரனின் கொலை வழக்கு நடந்து சில காலத்துக்குப் பின்னர் பொன்னுசாமி சம்பந்தப்பட்ட கலவர வழக்கு கோலாலம்பூருக்கு மாற்றப்படுகிறது.

இப்படியாக செல்வாவும் மாணிக்கவாசகமும் மற்றும் சிலரும் கோலாலம்பூருக்குமிச்சமிருப்பவர்கள் 03 வருகிறார்கள். கண்டிப்பாக இது அவர்களுக்கு முதல் முறையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தோட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் இயல்பாக நகரத்தின் புள்ளியில் கொண்டு வந்து இணைக்கப்படுகிறது. நாவலின் நிகழ்காலத்தில் பொன்னுசாமிதான் கலவரத்துக்குக் காரணம் என நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார். இந்தக் காட்சிக்குப் பின் மீண்டும் நாவலாசிரியர் நம்மைக் கடந்த காலத்துக்குள் பயணிக்க வைக்கிறார். அதில் பொன்னுசாமி என்ற திடகாத்திரமான கதாபாத்திரத்திரம் விரிவாக விவரிக்கப்படுகிறது. எதற்கும் அஞ்சாமல் இரசனையோடு பேசக்கூடியவராக இருக்கும் அவர் தன் மனைவி ஜானகி மீது வைத்திருந்த அதீத காதல் இயல்பாக இழையோடுகிறது. அதுவரை செல்வாவின் மாமாதான் பொன்னுசாமி என்ற பிரக்ஞை எனக்கு ஏற்படவே இல்லை. தொடர்ந்து கதை ஆபேக் லிம்மின் சமையல் கை பக்குவம், அதனோடு கூட சீனர்களுக்கும் இந்தியருக்குமான நட்பு, ஹலால் ஹராம் போன்ற முக்கியமான விஷயங்கள் மிகவும் மெலிதாக ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ளன.

அண்ணாச்சியின் மனம் நிறைய கடந்த கால நினைவுகள் நிரம்பி வழிகின்றன. அவருக்கும் பொன்னுசாமிக்கும் உடனான நட்பு, பின்னர் பொன்னுசாமியின் கடந்த காலம். அதிலும் ஜானகி அத்தையில் நினைவால் பொன்னுசாமி ஏங்கி தவிக்கும் போது சின்னதாக மனம் கனக்கிறது. நம் உறவுகளில் எத்தனைப் பேரை இப்படிப் பார்த்திருப்போம். இடையிடையே வரும் மாணிக்கவாசகம், தருமலிங்கம், மூர்த்தி, மரகதம், ஜானகி, பழனிசாமி, பெருமாள் போன்றவர்களின் பின்புலம் குறித்து அதிக விளக்கமில்லாமலேயே அவர்களை அறிமுகப்படுத்துகிறார். அண்ணாச்சியின் பெயர் கூட முனியாண்டி என்று நடுவில் தான் தெரிய வருகிறது. அண்ணாச்சி ஒரு துருப்புச் சீட்டுப் போல தான் கையாளப்படுகிறார். அதாவது கடந்த காலத்துக்கான வாயில் அவர். நாவலில் எந்தக்  கதாபாத்திரத்திரமும் வலிந்து திணிக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட போர்வீரர்கள் போல மாணிக்கவாசகமும் ராஜதுரையும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் மாணிக்கவாசகம் செல்வாவின் நண்பனாதலால் அவன் முழுக்க முழுக்க செல்வாவோடே பயணிக்கிறான். இப்படியாகச் செல்வா கதை சொல்ல ஆரம்பிக்கிறான். இங்கேதான் பங்களாதேஷிகளின் மனப்பாங்கு உரையாடல்கள் மூலம் வெளிவருகிறது. அவர்கள் எந்த அளவுக்குச் சீனர்களையும் இந்தியர்களையும் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் இந்தியர்களின் இயலாமையை எப்படியெல்லாம் கிண்டலடிக்கிறார்கள் என ஊசிப்போல சுருக்கென்று தைக்கவைக்கிறான். அதிலும் முழுக்க முழுக்க இயலாமையை நொந்தப்படிதான் செல்வா கதை சொல்கிறான். இப்போது நாம் இருக்கும் சூழ்நிலையும் அப்படிதான். எல்லாரும் சுயநலம் கருதிப் பாதுகாப்பாக இருக்கத்தானே பார்க்கிறோம். செல்வாவின் பார்வையில் சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்கள் அதிகம் வெளிக்கொணரப்படுகிறார்கள். வங்காளதேசிகள், ரொஹனியா, இந்திய திருடர்கள் என அவர்களின் சில வாழ்க்கை சிதறல்கள் துளியாகிப் போகின்றன.

செல்வாவுக்குக் கனகசபையின் முன்னேற்றம் மீது லேசான வைத்தெரிச்சல். இருக்கத்தானே செய்யும். நாம் கூட சொல்ல மாட்டோமா, ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம். அப்படித்தான். எங்கேயோ  இருந்து வந்த கனகசபை கடகடவென வளர்ந்ததைப் பார்த்து செல்வாவுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது. இந்தியர்களையும் சீனர்களையும் மலாய்க்காரர்கள் அப்படிக் கூட எண்ணியிருக்கலாம். செல்வாவின் வழி சீனர்கள் பணவிஷயத்தில் கறாராக இருப்பது போன்றவை காட்டப்படுகின்றன. தொடர்ந்து செல்வாவின் அப்பா பற்றிய ஒரு ஆண் இப்படித்தான் தன் மனைவியை பார்த்து கொள்ளவேண்டும் என்பது போலவும் தன் கணவனுக்காக ஒரு மனைவி என்னவெல்லாம் செய்கிறாள் என்பதையும் சொல்லிச்செல்கிறார். குறிப்பாக அந்த ஏலக்காய் போட்ட உழுத்தங்கஞ்சி செய்வதில் இப்படி ஒரு கதை இருப்பது வாசிப்பதற்கும் நினைப்பதற்கும் மனதுக்கு இதமாக இருந்தது. கொஞ்சம் நாடகத்தன்மையும் கலந்து இருந்தது. தன் கணவனின் கோபத்தை உள்ளுக்குள் ரசிப்பதும், அவர் செய்யும் சாகசங்களால் அவரைப்பற்றி பிறர் பேசுவதைக் கேட்டு புலங்காகிதம் அடைவதுமாக செல்வாவின் அம்மா காலத்தைக் கடக்கிறாள். இதையெல்லாம் கடந்து படித்துப் பொறுப்புள்ளவனாக இருக்கும் செல்வாவுக்கு, கனகசபையின் மீது ஏன் சின்ன வயிற்றெரிச்சல்? ஆனால் அந்த வயிற்றெரிச்சல் கொஞ்ச நேரம் தான்.  ஆனால் கதையில் இரண்டு கனகசபைகள் இருப்பது இரண்டாம் முறை படித்தப்போது தான் தெரிந்தது. முதல் கனகசபை எங்கிருந்தோ வந்து காளியண்ணனின் பட்டறையில் பணி செய்பவன். அவனைத் தொடர்ந்து இரண்டாவது கனகசபை அண்ணாச்சியின் மகன். நன்றாகப் படிக்கும் அவனுக்குண்டான கல்வி வாய்ப்புப் பறிபோவதைக் காட்டி நாவலாசிரியர் நமக்குக் கலக்கத்தை உண்டுபண்ணுகிறார். இது எப்படி இரண்டு பெயர்கள் ஒன்றாக வருகிறது என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது அதைப் பற்றி கேட்கவும் நாவலாசிரியர் இல்லை என்பது வருத்ததுக்குறிய ஒரு விஷயம்.

இப்படிக் கனகசபைபோல நன்றாகப் படித்துப் பல்கலைகழகம் கிடைக்காமல் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வாழ்க்கையை வாழ்பவர்கள் இன்னும் எத்தனை எத்தனைப்பேர்? அப்படிப் பல்கலைகழகம் கிடைத்தும் பிடித்த துறை கிடைக்காமல் கிடைத்த துறையில் படித்து வேலையும் கிடைக்காமல் போனவர்கள்தான் எத்தனை பேர்? இந்த நாட்டில் கல்வி பெறுவதற்குக் கூட கோட்டா இருப்பதை நினைக்கும் போது கடவுள் என்ன கோட்டா பார்த்தா மூளையை வைக்கிறான் என எண்ணத் தோன்றுகிறது. ஏன் அரசியல்வாதிகள் இந்தியர்களின் மேம்பாட்டை எப்படியெல்லாம் அடக்க முடியுமோ வேரறுக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்யத் திட்டம் தீட்டுகிறார்கள் என தான் எண்ண தோன்றுகிறது. இந்தப் பாழாய்போன அறிவு மட்டும் கடை நிலை மக்களிடையே தான் பிறந்து பணமில்லாத காரணத்தால் அப்படியே மழுங்கியும் போய்விடுகிறது. இது தான் நாவலின் மூன்றாம் கரு.

சரியான நேரத்தில் சரியான பண உதவியும் கேட்ட பல்கலைகழக வாய்ப்பும் கிடைக்காமல் போகும் பட்சத்தில் பெற்றவர்களின் கையிருப்புத் தொகையைக் கொண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும்போது இஷ்டமில்லாமல் போகும் தருணம் போதை பழக்கம் யாருடைய கெடுபிடியுமின்றி வந்து ஒட்டி கொள்கிறது. இதனால் கனகசபை சீரழிகிறான். செத்தும் போகிறான். வீட்டை விட்டு தூர போய் படிக்கும் பட்சத்தில் தான் படிக்க நினைத்தது கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அவன் ஆத்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது. அழுத்தம் தாளாமல் தான் கனகசபை பிரக்ஞை அற்ற நிலையை நாடுகிறான். அதற்கான வடிகால் போதை. போதைபித்தனாகிறான். தோட்டத்தின் முதல் பட்டதாரியாக அவன் ஆவான் என்று எண்ணிய எல்லா நம்பிக்கையும் தவிடுபொடியாகிறது. இங்கே கூலிமில் கூட அப்படி ஒரு கல்லூரி முடித்த அண்ணா புத்தி சுவாதீனமற்ற நிலையில் திரிந்து கொண்டிருந்ததைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

கனகசபை இறப்பது செல்வாவுக்கு மிகுந்த அழுத்ததை அளிக்கிறது. இயலாமையைத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டி உன்னால் உதவியிருக்கக் கூடுமே என வலிக்கச் செய்கிறது. இதைத் தொடர்ந்துதான் நான்காம் கரு நாவலுக்குள் வருகிறது. விளிம்பு நிலை மக்களாய் அடையாள அட்டையும் பிறப்புச் சான்றிதலும் இல்லாமல் இருக்க இடமில்லாமல் கல்வியும் கற்க முடியாமல் பிறந்த மண்ணிலேயே அந்நியப்பட்டு நிற்கும் தருணத்தில் பணத்துக்காக அடிதடியில் இறங்கி கொல்லப்படும் அவலம். அதோடு கஷ்டப்பட்டுப் பள்ளியில் சேர்ந்தும் வகுப்புக்கு மட்டம் போட்டு ஒழுங்கு பிரச்சனையில் சிக்கி மீண்டும் விலகிப் போன சாக்கடைக்கே வந்து விழும் கதி. கஷ்டப்பட்டு படித்தாலும் கனகசபையின் நிலை. படிக்காவிட்டால் ரகுவின் நிலை. எப்படிப் போனாலும் சாவு நிச்சயமடா உனக்கு. இது கடவுள் சொல்லவில்லை. நீங்கள் தஞ்சம் புகுந்திருக்கும் இந்நாட்டில் உங்களுக்கு எழுதப்படாத சாபம் என நாவல் சொல்லிச்செல்கிறது. ரகுவுக்கு இளைஞர்களிடையே அடிதடி கும்பலுக்குள்ளே அபாங் என அழைக்கக்கூடிய அளவுக்குச் செல்வாக்கு மிகுந்துள்ளது. இவன் செய்த தொழில் சான்றோர் காட்டிய தொழில் இல்லை. ஆனால் அதுதான் அடுத்த தலைமுறை தொடர்ந்து இந்நாட்டில் உரிமையை வலிந்து தற்காத்துக் கொள்ள ஒரு வழிப்போல இருக்கிறது.

தொடர்ந்து நிகழும் ரகுவின் சாவு  நாவலின் நான்காம் கருவாக உரையாடப்படுகிறது. ஊடே, ரூமா பாஞ்சாங் காட்சிகளும் அங்கு வாழும் மக்களின் அவல நிலையும் மெதுவாக நம் கவனத்திற்கு வருகின்றன. அவ்வப்போது தோட்டத்தில் இருக்கும் போதும் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையிலான ஒரு நூலிழை புரிந்துணர்வு தோட்டத்தை விட்டுப் போன பிறகும் தொடர்வதையும் நாவலாசிரியர் தவறவிடவில்லை. நாவலில் சந்துரு மூலமாக அறிமுகமாகும் ரூமா பாஞ்சாங் ‘ரூமா பாஞ்சாங்’ என்பது அரசாங்க நிலத்தில் (புறம்போக்கு நிலங்கள்) மிக நீண்ட நாட்கள் வாழ்ந்த மக்களை மேம்பாட்டுக்காக அரசாங்கம் அப்புறப்படுத்தும்போது அரசாங்கமே அமைத்துக் கொடுக்கும் தற்காலிக குடியிருப்பு. மிக குறைந்த வசதிகளைக் கொண்ட தொடராக அமைந்த குடிசைகள் அவை.  ரூமா பாஞ்சாங் மக்களுக்கான நிரந்தர குடியிருப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்றுப் பின்னர் ரூமா மூரா(மலிவு விலை) வகை வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. அல்லது குறிப்பிட்ட பணத்தை கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்படும். இந்த நடைமுறை சிலாங்கூர் மாநிலத்திலும் கோலாலம்பூர் சுற்றுவட்டாரத்திலும் மட்டுமே உள்ளது. ‘ரூமா பாஞ்சாங்’ என்பது ஒரு அடையாளப் பெயர் மட்டுமே. இதற்கும் சபா சராவாக்கில் உள்ள பூர்வகுடி மக்களின் ரூமா பாஞ்சாங்கிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

தோட்டத்தில் சுதந்திரமாக இருந்தவர்கள் பிள்ளைகள் அதிகம் உள்ளவர்கள் அந்தச் சின்னஞ்சிறிய வீட்டுக்குள் அடங்கி வாழ வேண்டிய சூழ்நிலை. பெரும்பாலும் நான் வாசித்த மலேசிய நாவல்களில் ரூமா பாஞ்சாங் அல்லது மூரா பற்றிய விவரணைகள் வருவதில்லை. இந்த வாழ்க்கை கிட்டத்தட்ட சேரி வாழ்க்கை போன்றது தான். அரசாங்கத்தால் அதிகம் கவனம் செலுத்தாமல் போன வீடமைப்புப்  பகுதிகள் இவை.

தோட்டத்தில் வேலை செய்தவரைத் தோட்டப்பாட்டாளிகள் வீட்டில் ஒட்டலோ அடிசலோ இருந்தால் நிர்வாகமே சரி செய்து தரும். ஆனால் தோட்டதை விட்டு வெளியேறியப்பின்னர் யாரை எதிர்பார்க்க முடியும்? வேலை வாய்ப்பும் உத்தரவாதம் இல்லை. அப்படியென்றால் அதன் சுகாதார நிலை கவனிப்பாரற்றுக் கடைநிலையில்தானே இருக்கும். வேலையில்லாத அல்லது வேலைக்காகத் தூரமாகச் சென்று வரும்  பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் சரியான கல்வி தரப்படாமல் இருக்கலாம். அதற்கான ஆதாரங்கள் இப்போதைய நகரப்புறத்தில் வாழும் பிள்ளைகளைப்பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஆக,  பிரச்சனை மிக்க ஒரு  சமூகத்தில் இருக்கும் இளையோர் மிக விரைவில் நெறிக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவார்கள். அப்படியாகத்தான் ரகுவின் பின்புலமும் உள்ளது.

ரகு கொல்லப்பட்டாலும் அவனைத் தொடர்ந்து அவனைபோல இன்னும் எத்தனைப் பேர் உருவாவார்கள்? வெட்டுக் குத்து போதை பொருள் என இன்னும் எவ்வளவு நாள் இந்தியர்கள் அடிமை பட்டு கொண்டு இருப்பார்கள். இயலாமையின் இரும்புப் பற்களின் இடையே எவ்வளவு நாள் சிக்கிக் கொண்டிருப்போம்? ஒவ்வொரு நாளும் எங்கோ சில இந்திய இளைஞர்கள் சீரழிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்படாத காரணங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ரகு கடந்த காலம். அவனோடு தொடர்புடைய சந்துரு நிகழ்காலம். கவனிக்கப்படாமல் இருக்கும் சரவணன் நாவலின் சொல்லப்படாத எதிர்க்காலமாக இருக்கலாம். மிச்சமிருப்பவர்கள் இன்னும் எத்தனைக் காலம் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள்? நீருக்கும் வெப்பம் அதிகமானால் சுடு நீராவியாக மாறுவதில்லையா? இது மிச்சமிருப்பவர்களின் போராட்டம். அப்படித்தான் இண்ட்ராப் (HINDRAF) போராட்டம் விழித்தெழுகிறது. இங்கே செல்வா போராட்டத்தின் கரு அறியாமல் தன் வாழ்வில் பார்த்த இயலாமையின் அனுபவங்களின் வழி மீதமிருப்பவர்களின் குரலாக கூட்டத்தோடு கூட்டமாய் சேர்கிறான் என்பதுதான் முழு நாவல்.

அந்தச் செல்வாவாக 2007 ஆண்டு நாட்டின் எதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு பத்திரிகையின் வழி படித்து ஆதங்கத்தை அங்கேயும் இங்கேயும் புலம்பி வெளிப்படுத்திக்கொண்டு இருந்தவர்களில் நானும் ஒருத்தி தான். முழுக்க முழுக்க இண்ட்ராப் (HINDRAF)  பல காலமாக இந்தியர்களின் மீது காட்டப்பட்ட அலட்சியத்தின் பூதாகர வெடிப்பு. ஆனால் அந்தப் போராட்டத்தில் இருந்த கலந்து கொண்ட எல்லாருக்கும் இண்ட்ராப் (HINDRAF)  முன்னெடுத்த விஷயங்களின் விவரங்களை அறிய வாய்ப்பில்லை. யார் தலைமையில் போராட்டம் நடக்கிறது என்று கூட அறியாமல் பலர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்திருக்கலாம். செல்வாவுக்கு எது தூண்டுகோலாக இருந்தது? அவனுக்கு நேரடி அனுபவம் இல்லை. ஆனால் அவனுக்குத் தெரிந்த நெருக்கமான சிலரின் உயிரழப்புகள் அவனின் இயலாமையைச் சுட்டிக்காட்டி இது நாளைக்கு உனக்கும் நடக்கலாம். உனக்கு நடக்காமல் போனால் உன் சந்ததிக்கு நடக்கலாம். இதுதான் அவனை உறுத்தி தன்னிச்சையாகப் போராட்டத்தில் இணைய செய்கிறது. மலேசியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் தன் மேல் செலுத்தப்பட்ட ஒடுக்க நிலையை உலகறிய செய்வதற்கான ஒரு முயற்சிதான் அது.

இயலாமை என்னும் ஒரு சொல் ஒரு முழு இந்திய சமுதாயத்தில் இன்னும் மிச்சமிருப்பவர்களின் வாழ்வை எப்படியெல்லாம் உலுக்கி எடுக்கிறது என்பதை மிக சாதாரணமாக மிக சரியாக மிக எளிமையாக நாவலாசிரியர் கூறியுள்ளார். எந்த ஒரு பின்புலமுமில்லாமல் ஒரு விளிம்பு நிலை வாசகியாக இந்த நாவலை படித்தபோது நானும் அந்த இயலாமையில்தான் மூழ்கி இருக்கிறேன் என்பதை ஆழமாக உணர்கிறேன் மிச்சமிருப்பவர்களில் ஒருத்தியாக.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...