வளையங்களைத் தாண்டும் சுயநலம்

003தான் கடந்து வந்தவர்கள் யாவரும் சுயநலமிக்கவர்களே, தானும் அப்படி இருப்பதில் தவறில்லை என்று சொந்த தராசில் சண்முகம்பிள்ளை எனும் கதாபாத்திரம் தன்னை நிறுத்தி நியாயப்படுத்தும் வகையில் இந்நாவல் முடிகிறது, அவர் பார்வையில் எல்லாருமே அக்கினி வளையத்தில் சாகசம் செய்யும் சுயநலமிக்க புலிகளாக நினைத்துக்கொள்கிறார். தானும் புலிதான் என அவர் எண்ணிக்கொள்ளும் நிலையில் ஒரு வாசகனாக அவ்வரியைக் கடக்கும் போது ”டேய் நீ புலி இல்லடா எலி, காட்டி கொடுத்துட்டு புலினு என்ன சப்பைக்கட்டு கட்டுற’’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை, ஆனால் அடுத்து ‘…சாகசம் சலிக்கும் போது புலி எவரையும் கொல்லும் எனும் வரிகளைக் கடக்கும் போது நீண்ட இரைச்சல் இல்லாத மௌனம் மட்டுமே என்னுள் எஞ்சி நின்றது.

அந்த ஒரு வரி, மீண்டும் வாசிப்பில் கடந்து வந்த எல்லா கதாபாத்திரங்களையும் ஒரு நொடியில் மண்டைக்குள் கொண்டு வரச்செய்து சுய மதிப்பீடு ஓடிக்கொண்டே இருந்தது. இதுவே இந்நாவலின் பெரும் வெற்றியாகக் கருதுகிறேன் நான்.

நாவல், 1950-ஆம் ஆண்டு தொடங்கி 1956-ஆம் ஆண்டின் காலக்கட்டம் வரை பின்னப்பட்டிருந்தாலும், அதற்கு முந்தைய காலக்கட்டமான இரண்டாம் உலகப்போர், இந்திய போராட்டம், பிரிட்டிஷ்- ஜப்பானிய ஆட்சி காலம் என தேவைக்கேற்ப ஆங்காங்கே பேசப்பட்டுள்ளது. 1948-ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு மலாயா அவசரகாலம் பிரகடனப்படுத்தியது. ஜப்பானியர்களை எதிர்க்க கம்யூனிஸ்டுகள் பிரிட்டனோடு இணைந்தபோது, பிரிட்டனின் மூலம் இராணுவப்பயிற்சியும் ஆயுதங்களையும் பெற்றனர். இரண்டாம் உலகப்போர் முடிந்து மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி வந்ததும் கம்யூனிஸ்டுகள் அவர்களுக்கு எதிராகத் திரும்பினர். இக்காலக்கட்ட சூழலை மையமாகக் கொண்டே கதை நகர்த்தப்படுகிறது. ஆக, சமூகக் கருவாகவே (Sociological Concept) இந்நாவலை வகைப்படுத்தலாம்.

கதைக்களம் வெயில் காலத்தில் வறண்ட ரப்பர் தோட்டமாய் கரடு முரடாக இருப்பினும்  கதைப்பின்னலில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் வெயிலுக்குப் பின்னர் துளிர்க்கும் தளிர்களாகவே வலம் வருகின்றனர். சதாரணமக்களின் வாழ்வு குறித்த போராட்டங்களோடு காலனித்துவ ஆட்சிக்கும் கம்யூனிஸ்டு கொள்கைகளுக்கும் நடுவில் நிகழும் தீவீரமான சூழலைக் கொண்டு வந்து செறிவான கதைப்பின்னலாகவே (Organic Plot) நாவல் இருக்கிறது.

இந்நாவலில், உணர்வுகளை மீட்டெடுத்து சுய பரிசோதனைகளை செய்யும் விதமாகவே எல்லா கதாபாத்திரங்களும் அமைந்திருக்கின்றன. இக்கதையில் முக்கிய கதாபாத்திரமாகப் பயணிக்கும் முத்து மற்றும் சண்முகம்பிள்ளை மிக லாவகமாகவும் எதார்த்தமாகவும் நாவலினூடே பயணித்து அவர்களின் நியாயங்களை நம் முன் வைப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. மிக வலுவான கதாபாத்திரமாக இருப்பினும் எந்தவொரு சினிமா கதாநாயகத்தன்மையும் இல்லாத இயல்பான ஒரு ஆணின் பிம்பமாகவே முத்து வலம் வருகிறார். சாதாரணத் தோட்ட வாழ்க்கையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாகக் கம்யூனிஸ்டு சித்தாந்தங்களை தனக்குள் ஏற்றி அது சரியா? தவறா? என்னும் தடுமாற்றத்தோடும் தன்னை ஒரு வலுவான போராட்டவாதியாக மாற்றிக்கொள்ளும் உந்துதலோடும் அடுத்தடுத்த பரிணாமத்திற்கு இயல்பாகவே தன்னை தயாராக்கிக் கொள்கிறார்.

IMG-20191008-WA0037தோட்ட முதலாளியான சண்முகம்பிள்ளையின் கதாபாத்திரமோ நுனி புல் போல் அல்லாமல் மிக நுணுக்கமாக நுண்ணுணர்வுகளைக் கொண்டு தன்னைத்தானே பரிசீலித்துக்கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது. தன் நுண்ணிய உணர்வுகளைத் தேக்கி அதற்கு எதிரான பிம்பங்களை மற்றவர்களோடு பகிரும் அவர் சில இடங்களில் முதலாளித்துவ முகமூடியைக் கிழித்தெறிந்து தனக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தை மீட்டெடுக்கிறார். கம்யூனிஸ்டு போராட்டத்தில் தோட்ட முதலாளியான சண்முகம்பிள்ளையும் சாதாரண தோட்ட இளைஞனும் ஒரு புள்ளியில் இணைந்து பின் தங்களின் கொள்கைபடி வெவ்வேறு திசையை நோக்கி கடந்து செல்கின்றனர்.  இவர்களைச் சுற்றிப்பின்னப்பட்ட ஜெயா, தேசிங்கு, பாத்திமா, சுவாமிகள், சையது காக்கா, இராஜலெட்சுமி, நாகப்பன், ராஜசுந்தரம், சுலோச்சனா, பக்கிரிசாமி, முனியாண்டி, ஆ லாய் போன்ற கதாபாத்திரங்களும் மற்ற சிறு சிறு கதாபாத்திரங்களும் மிக உயிரோட்டமாகவே அமைந்துள்ளது. எழுத்தாளர் வடிவமைத்திருக்கும் கதாபாத்திரங்கள் யாவும் (ஒன்றிரண்டைத் தவிர) எல்லாமே வளர்ச்சிப் பெறும் பாத்திரமாகவே (Round character) அமைந்திருப்பது இக்கதையின் மற்றொரு பலம் எனலாம். அடுத்து என்ன? என்ற உந்துதலையும் வாசகனுக்கு அது அளிக்கிறது.

அடுத்து இந்நாவலில் வரும் உரையாடல்கள் மேலும் இக்கதைக்கு வலுசேர்க்கும் வண்ணம் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

“செருப்பை ஏன் வீட்டுக்கு வெளியே வைக்கிறோம் தெரியுமா? கால்லே போடுறத கக்கத்திலே வச்சிருக்கையே…” என்ற முகஞ்சுளிக்க வைக்கும் சாதிய வாடை தாங்கிய உரையாடலாக இருக்கட்டும்…

”பன்னிய வீட்டில அடைச்சு வைச்சாலும் அது வெளியே போய் மலந்தான் திங்கும்…சௌக்கிட்டுலே இருந்தவ குணம் மாறிடுமா? சனியன் தொலஞ்சது விடுங்க …” என்று சண்முகம்பிள்ளை கொந்தளிக்கும் போதாக இருக்கட்டும்

“நாங்களெல்லாம் இங்கயும் சமையலுக்குதான் இல்லையா?” என்று ராஜலெட்சுமி கேட்பதாக இருக்கட்டும் …

ஏதோ ஓர் அதிர்வை நமக்குள் அது நிகழ்த்திக்கொண்டே செல்வதை உணர முடிகிறது. அதுமட்டுமல்லால் ‘எதிலும் சந்தேகப்படு’ எனும் வாசகத்தை இந்நாவலில் கையாண்டுள்ள விதம் நம்மையும் அவ்வரிகளைப் பற்றி படர வைக்கிறது. கம்யூனிஸ்டு போராட்டவாதிகளின் குணமாகவே அவ்வாசகம் சித்தரிக்கப்பட்டாலும் சண்முகம்பிள்ளை எனும் கதாபாத்திரம் அவ்வரியை கொண்டு நகரும் உரையாடல்கள் அருமை. நாவலில் கையாண்டுள்ள மொழியும் தோட்டவாசனையை நமக்குள் மீட்டெடுக்க வைக்கிறது.

பத்து தோட்டத்தை மட்டும் அல்லாது, சிலாங்கூரில் பல பகுதிகளுக்கும் சுவாரஸ்யமாகவே எழுத்தாளர் அழைத்து செல்கிறார். சிவப்பு விளக்கு பகுதிக்குச் சென்று கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு,  ரஜூலா கப்பல் ஏறி பின் அடர்ந்த காடுகளில் ஓயாது பயணப்பட்ட அனுபவத்துடந்தான் இந்நாவலை நாம் கடக்க முடியும்

கதையோடு நகரும்போது புக்கிட் கெப்போங் போராட்டம் தொடங்கி, பாலிங் ஒப்பந்தம் வரை வரலாற்றுப் புத்தகத்தில் படித்த பல தகவல்களையும், தமிழ் கம்யூனிஸ்டு போராட்டவாதிகளையும் தாக்குதல், கொலை, போராட்டம், துரோகம் என எல்லாவற்றையும் உள்ளடக்கி அக்காலக்கட்டத்திற்கே நம்மை இட்டுச் சென்று கவலை, கோபம், ஏமாற்றம், வருத்தம், உத்வேகம், ஆர்வம், வன்மம் என எல்லா உணர்வுகளையும் நமக்கு அளித்து விடுகிறது இந்நாவல்.

காலனித்துவம், முதலாளித்துவம், அடிமைத்தனம், பெண்ணியம், சாதியம், கம்யூனீஸ்டு சித்தாந்தம், ஆன்மீகம் என சகலத்தையும் நாம் மறுபரிசீலனை செய்ய இந்நாவல் ஒருதுளியேனும் தூண்டும் எனில் மிகையில்லை.

இருப்பினும் அன்றைய சூழலில் கம்யூனிஸ்டுகளால் மக்களின் நிலை, அவர்களின் மனநிலை, அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்தனரா? இல்லையா? சாமானிய மக்களை காவல் அதிகாரிகள் எதிர்கொண்ட விதம், மற்ற இன மக்களிடையே இருந்த போராட்ட நிலை ஆகியவை ஆழமாகக் காட்சிப்படுத்தாமல் விட்டது பலவீனமாகவே தெரிகிறது. பெரும் போராட்ட நெருக்கடியில் துன்பங்களைத் தாண்டிய துரோகங்களையும் எழுத்தாளர் கடந்து சென்று விட்டார் போலும். முத்து போராட்டவாதியாகப் பரிணமிக்கும் காரணங்களையும் இன்னும் வலுவானதாக்கி இருந்திருந்தால் கதையோட்டம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

1 கருத்து for “வளையங்களைத் தாண்டும் சுயநலம்

  1. Sunthari Mahalingam
    May 25, 2020 at 5:51 pm

    Sirappana oru tedal kathayil alasi araayappatullathu. Vaalthukkal.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...