வரலாறும் தனிமனிதனும்

akkiniஎதிலும் சந்தேகப்படு‘ – கார்ல் மார்க்ஸின் இந்த வாசகம்தான் அக்கினி வளையங்கள்’ நாவலின் பரப்பை ஒரு நிலைப்படுத்தும் சூத்திரமாக அமைக்கிறது. இந்நாவலை ஆசிரியர் சை.பீர்முகம்மது அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை மையமாக்கி அதனூடே மானுட கீழ்மைகளையும் ஊடாட விட்டுள்ளார்.

23.02.1950   புக்கிட் கெப்போங்கில் (ஜொகூர்)   போலிஸ்நிலையத்தில் கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய தாக்குதல் வழி அக்கினி வளையங்கள் உக்கிரமாக எரியத்  தொடங்கிஅப்படியே சிலாங்கூரில் உள்ள சையது காக்கா கடையில் பத்திரிகை செய்தியாகப் பேசப்படுகிறது. அவ்வாறே கதைத்தொடங்குகிறது. முத்து, சாமானிய பாட்டாளி மக்களில் ஒருவன்சண்முகப்பிள்ளை  என்ற நிலப்பிரபுவிடம்  காரோட்டியாகப்        பணிப்புரிகிறான். ஓர் அடிமைப்பணியாளன் போல வாழ்கிறான். முதலாளி வர்க்கம் பாட்டாளியின் உழைப்பை விலைக்கு வாங்கும்  சுயநலத்தை தேசிங்கு மூலம் அறிந்து கொஞ்சம் கொஞ்சமாகப் புதிய மனிதனாகப் பரிணமிக்கிறான். கம்யூனிஸம்  இயக்கத்தில் சேர்கின்றான்.

தேசிங்கு இந்நாவலில் முக்கியக் கதாப்பாத்திரம் எனலாம். காலனித்துவத்தையும்   முதாலாளித்துவத்தையும்  நொறுக்கும்   அவனின் சுதந்திர  வேட்கை, பாட்டாளியில் உரிமைக்கானக் குரல், சிதைந்த சமுதாயத்தில் ஏற்படும் வீழ்ச்சியைக் கண்டு  கொதித்தெழும் மனம், எதையும் கூர்மையாக உள்வாங்கும் ஆற்றல், ஆபத்தான தருணங்களைக்  கண்டறிந்து செயல்படும் வீரியம், ஒவ்வொருவரின்  சூழ்ச்சியையும் கண்டறிந்து மதிப்பிடும் திறமை, துல்லிதமாகத் தந்திரத்தை வீழ்த்தும் கவனத்திறன், திசைமாறிச்செல்லும் உரையாடலைக் கண்டு விழித்திருப்பது, வடிவேலு உளவாளியிடம்   சாதூரியமாகப்பேசி அவனைத் தாக்குவது, தனக்கு என்று வாழாமல், சமுதாயத்திற்காகப் போராடும் அர்ப்பணிப்பு என தேசிங்கு கம்பூனிஸத்தின்  முதன்மை போராளியாக எனக்குத் தோன்றுகிறார், தேசிங்கை  இந்நாவலின் பல இடங்களில் நான் தேடிக் கொண்டே இருந்தேன். பாதியிலே உதிர்ந்து போனது  எனக்கு ஓர் ஏமாற்றமே.

முத்து தேசிங்குக்கு  எதிர்மறையான குணமுள்ளவன்தெளிவில்லாமல் கம்பூனிஸம் அமைப்பில் சேர்க்கிறான். வெறும் புத்தகத்தின் மூலமாக தேசிங்கு நடத்தும் போதனை வழியே கம்யூனிஸத்தை அறிந்துகொள்கிறான். இவ்வமைப்பில் ஆத்மார்த்தமாக முடிவெடுக்க இயலாமல் பதற்ற நிலை அடைகிறான். அறக்கொள்கையும்  மார்க்ஸியத்தின்  சிந்தனைத்தளத்தையும்  தன்  தராசில் வைத்து பகுத்தாய்வு செய்கிறான். மனக்கொத்தளிப்புடன் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்குத் தன்னை நகர்த்திச் செல்கின்றான். தாசீக்  எனும்  இடத்திற்கு ஆ லாய் எனும் ஒரு போராளி முத்துவுடன் பயணிக்கும் காட்சி இக்கதையில் கவனிக்க வேண்டிய ஒர் இடமாகும். வழி நெடுக  ஒரு சீனப் போராளி முத்துவிடம் இயக்கத்தின்  எல்லா சூட்சமங்களையும்   அதில் உள்ள  நுட்பங்களையும் சொல்லிக்கொண்டே  வருவது  இந்நாவலை வலுவாக  நிறுத்தும்  காட்சி.

ஒவ்வொருமுறையும் முத்து அவரிடம் பேசும் போதும், கேள்வி கேட்கும் போதும் அவனை நம்பி  பொதுவுடைமை வீழ்ச்சியைத்  தயக்கமின்றிப் பகிர்கிறார். முத்துவிற்கு அது ஒரு தெளிவான அனுபவத்தை  அளிக்கிறது. அவனின் அறியாமை, அச்சம்எனும் வெற்றிடங்களை நம்பிக்கை நிரப்பிக்கொண்டே வருகிறது. ஆ லாய்  தன்னை நம்பி கூறும் பல இரகசியங்களைக் கேட்பதன் வழி  பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமனதாக ஏற்றுக் கொண்டதாக மன நிம்மதி அடைகிறான். சமாதானப்பேச்சுவார்த்தை இடம் பெறும்போது தலைவர்  சின்  பெங்  இருபது பேர் கொண்ட குழுவில் முத்துவையும் ஓர்  உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கிறார்  என்பது, அவனின் குறுகிய கால உழைப்பிற்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம். அந்த இடத்தை அடைய அவன் அடிப்படையாக மனிதனிடம் இருக்கும் அன்பையும் கனிவையும் நீங்கி கொள்கையை நோக்கி மட்டுமே ஓடும் கூட்டத்தில் ஒருவனாக  மாறியுள்ளான்.

‘ஜெயா தன்னைத் தேடி வந்த இரையா?’ என முத்துவின்  மனச்சாட்சி கேட்கும் போது மிக இயல்பாக அந்தக் குற்ற உணர்விலிருந்து அவனால் வெளிவர முடிகிறது. அவனைப் பொறுத்தவரை தான் கொண்டுள்ள கொள்கைக்காக யாரும் இரையாகக் கூடியவர்களே. தானும் ஓர் இரை என்பதை அறிந்தே அவன் பயணம் தொடங்குகிறது. அவ்வகையில் முத்துவின் கதாபாத்திரம் வலுவானது. ஓர் இயக்கத்தில் இணையும் முன் தனிமனித உணர்வுகளுக்கு இடம் கொடுத்து அதற்கொப்ப இயைந்து வாழ்பவன் இயக்கத்தில் பிடிப்பு அதிகரிக்க வேறொருவனாக மாறுகிறான். தனியே விட்டுச் செல்லும் தன் பெற்றோர் மீதோ, தனக்கு உதவ வந்த ஜெயா மீதோ, தன் சுற்றத்தார் மீதோ, தன் மீதோ அவனுக்கு எந்தப் பிடிப்பும் இல்லை. இந்தப் பெரும் காட்டாற்றில் மிதந்து செல்லும் தன் இருப்பின் இடம் என்ன என்ற கேள்வி கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து அழிகிறது. வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் தனி மனிதனிடம் அந்தக் கேள்வியை அழிப்பதில்தான் வெற்றியடைகின்றன எனத் தோன்றுகிறது.

இந்நாவலில் இன்னொரு முதன்மை கதாப்பாத்திரம்  சண்முகம்பிள்ளை.IMG-20191008-WA0037 இக்கதையின் ஊடே ஓடும் அழுத்தமான பாத்திரம் இவரது.  முத்துவின் எதிர்ப்பும்  அவரிடமிருந்து விலகிச்செல்லும் திடீர் மாற்றமும் சண்முகம்பிள்ளையின்  ஆணவத்தின் அஸ்திவாரம் சரியும்போதும் அவர் நிலைத்தடுமாறிச் செல்கிறார். தன் செல்வாக்கை தற்காலிகமாக ஓரங்கட்டிவிட்டு முத்துவை தன் தம்பியைப் போல உரிமைக்கொண்டாடி ஜெயாவின் உதவியையும் நாடி அவனை மீட்டெடுக்க முயற்சித்துத் தோல்வியடைகிறார்இதனை தன் வாழ்க்கையின் மிகப்பெரிய அவமானம் எனக் கருதுகிறார். உண்மையில் அவர் முத்துவிடமும் ஜெயாவிடமும் பணிந்துபோனதெல்லாம் ஆணவத்தின் வெவ்வேறு உருவங்களே. அது பாதிக்கப்படும்போது தன் சுயமுகத்தைக் காட்டாமல் பல இடங்களில் சண்முகம்பிள்ளை தன் இயல்பான குணத்தை மிக ரகசியமாக வெளிப்படுத்திக்கொண்டே வருகிறார். அதன் உச்சமாக ஜெயாவைப் பழிதீர்க்கிறார்.

இந்நாவலின் தொடக்கம் முதல் வந்துபோகும் ஜெயாவின் பாத்திரம் நாவலைத் தூக்கி நிறுத்த முக்கியமானது. ஆனால் பாலியல் விடுதியில் உள்ள அவளை உன்னதமாகக் காட்ட சை.பீர் அவர்கள் முயன்றது அவசியம் இல்லை எனத் தோன்றியது. அவள் பாலியல் தொழிலாளி ஆனாலும் மற்றவர்கள் போலில்லை என நாவலில் ஆங்காங்கு சொல்ல மெனக்கெட்டுள்ளார். அது அவசியம் இல்லை. மேலும் நல்ல ஆண்களை வாழ்வில் சந்திக்காத ஜெயாவுக்கு முத்துவின் கண்ணியமும் விசுவாசமும் ஜெயாவை வெகுவாக கவருவதெல்லாம் கொஞ்சம் சினிமாத்தனமானது. ஆனால் அவள் சண்முகம்பிள்ளையிடமிருந்து தப்பிக்க முத்துவைத் தம்பி எனக் கூறுவதும், பிறகு அவன் வீட்டிற்குச் செல்லும்போது முத்துவின் அம்மாவை மாமி என்று அழைப்பதும் மனிதன் தான் வாழ்வதற்காக எதையும் செய்வான் என்பதைக் கூறும் காட்சிகள். ஜெயா அப்படியானவள்தான். எல்லா மனிதர்களையும்போல அவளும் வாழ்வதற்கான இச்சையில் உள்ளவள். அதற்காக எதையும் செய்கிறாள். பாலியல் தொழில் செய்தவள் சண்முகம் பிள்ளையின் வசதியில் கவரப்பட்டு அவருடன் வாழ்கிறாள். முத்துவின் குடும்பம் கூடுதல் கௌரவம் கொடுக்கும் என எண்ணி அங்கே தஞ்சம் அடைகிறாள். ஆனால் தன் கடந்த வாழ்க்கையை விட்டு சுய தொழில் செய்வதுகம்யூனிஸ்டுகளுக்கு உடந்தையாக இருப்பது என அவள் பாத்திரத்தின் மேல் லட்சியவாதத்தைச் சுமத்தும்போது அப்பாத்திரம் அதைச் சுமக்க முடியாமல் தவிக்கிறது.

இக்கதையின் மையப்பாத்திரத்தின் இன்னொரு அசாத்திய அவதாரம் சையது காக்காவின் மனைவி பாத்திமா. முகத்தை மறைத்து தேநீர் போடும் பாத்திமா  மிக இரகசியமாகப் போராளிக்கு உணவு வழங்குகிறாள். ஒருவகையில் அவள் அன்னையின் பாத்திரம். அவ்வகையில் அன்பின் பாத்திரம். அவரது பின்புலம் கேரளா. கேரளாவில்  கம்யூனிஸம் கட்சி வேரூன்றி இருப்பதால் பாத்திமாவினால் துணிச்சலாகச் செயல்பட முடிகிறது. காவல் துறையிடம் பாத்திமா  பயமின்றி பேசியது அவரின் கணவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ஒரு வாசகியான எனக்கு  இந்த அவதாரம் பெண்ணியத்தின் ஒரு சாரல் எனலாம். பாத்திமா கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் உணவளிக்கவில்லை. பசித்தவர்களுக்கு அளிக்கிறாள். அதன் பொருட்டு தண்டனைகளை ஏற்கவும் தயாராக இருக்கிறாள்.

இலக்கியத்தின் பணி வாழ்க்கையையும் வரலாற்றையும்  சமூகத்தையும் பகுத்தாய்தலாகும். அக்கினி வளையங்கள் வரலாற்றை விட்டு சற்றுத்தள்ளி மானுடப் போராட்டைத்தைக் காட்டுயுள்ளது. இந்நாவலின் அகவயக்காட்சிகள் அதிகமாக மலர்ந்துகிடக்கின்றன. புறவயக்காட்சி (natural realism) மிக குறைவாகவே தென்படுகிறது. ஆ லாயும் முத்துவும் சக்காய் பழக்குடியினரைச் சந்திக்கும் போது டுரியான் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, ஆலாய் அப்பழங்களின் தோல்களை நாலத்திசைகளிலும் வீசுவார். அதுபோல லொடக் சீதாராம் பஸ், தூங்கு மூஞ்சு மரம் வாசகர் மனத்தில் நிலைத்து நிற்பவை.

ஆனால் காட்டின் தன்மை, கார் பயணங்களின் காட்சிகள், தோட்டப்புறங்கள், ஆஸ்த்திரேலியா ஆகாயப்படைத் தாக்குதல், என பலவற்றையும்   நாவலாசிரியர் கதைச்சொல்லியாக வாசகனுக்குக் காட்டத் தவறியுள்ளார். அப்படிச் செய்திருந்தால் இந்நாவலின் கலையுக்திக்கு மேலும் மெருகு கூடியிருக்கும். கதையோட்டம் நேர்கோட்டில் மட்டுமே பயணிக்கிறது. கிளைபிரிந்த பல சிடுக்குகளை இதில் காண இயலவில்லை. குறியீடுகள் மூலம் வாசகனுக்கு வாழ்க்கையும் அனுபவத்தை கொடுக்க முடியாமல் அக்கினி வளையங்கள் கதையை மட்டுமே சொல்லிச்செல்கிறது.

வரலாறு என்பது உண்மையில் பிரமாண்டமானது. கலைஞன் வரலாற்றில் எந்தப் பகுதியை எடுத்துப் புனைவாக்குகிறான் என்பது அவனது தேர்வு. சை.பீர்முகம்மது அவர்கள் மலேசிய கம்யூனிஸ வரலாற்றில் இந்தியர்களின் இடத்தைப் பதிவு செய்ய முயன்றுள்ளார். அவ்வகையில் இதில் அவர் வெற்றியும் அடைந்துள்ளார். சில தனிமனிதர்கள் வரலாற்றில் எவ்வாறு வந்துபோகிறார்கள் எனப் புனையப்பட்ட நாவல் என்றும் இதை வாசிக்க இடமுண்டு. அந்த அளவில் சண்முகம்பிள்ளையின் ஆதிக்கம் இந்நாவலில் அதிகம். சண்முகம் பிள்ளையைப் போலவே முத்து பாத்திரத்தின் தடுமாற்றமும் கம்யூனிஸத்தில் அவன் காணும் ஏமாற்றங்களும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மேலும் இந்நாவலின் சிறப்புக் கூடியிருக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...