பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு

peyciஎன் பால்ய வயதிலிருந்தே என் வீட்டில் முருகன்தான் பிரதான சாமியாக இருந்தார். அவர் பக்கத்தில் விநாயகர், ராமர், கருமாரிஅம்மன். பட்டணத்திற்கு குடிபெயர்ந்த பிறகுதான் பேச்சியம்மன் அறிமுகமானாள். கையில் குழந்தையுடன் இருந்தவளைப் பேச்சிய்யம்மன் என்றார்கள். இன்னொரு கோயிலில் மடியில் ஒரு பெண்ணைக் கிடத்தி வயிற்றைக் கிழித்த கோலத்தில் இருந்தது. அதுவும் பேச்சியம்மன் என்றார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்துத் தின்றுவிடும் சாமி என்ற அச்சம் என்னை அதன் அருகில் போகவிடாமல் தடுத்தது. கொஞ்சகாலத்திற்குப் பிறகு வேறொரு கோயிலில் கைநிறைய கண்ணாடி வளையல்களுடன் சாந்தமான கோலத்தில் பெண்மையின் அம்சமாய் நின்றிருந்ததும் பேச்சிதான்.

பேச்சியம்மன் அரக்க குணம் படைத்தவர்களை அழிக்கும்போது ராட்சசியாகவும், குழந்தைகளைக் காக்கும்போது காவல் தெய்வமாகவும் இருக்கும் என்றார் அண்ணி. ஒரு சமயத்தில் சாந்தமாகவும், இன்னொரு சமயத்தில் மூர்க்கமாகவும் இருக்கும் பேச்சியம்மன் மீது கொஞ்சம் ஈர்ப்பு வர ஆரம்பித்தது.

நவீனின் பேய்ச்சி நாவலும் அத்தகைய முரண் கொண்ட பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதைதான். தாய்மை ததும்பி வழியும் பெண்கள் தங்களுக்கோ தங்களைச் சார்ந்தவர்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது அழிக்கவும் துணிவார்கள் என்பது நாவலின் சாரம்.

தாய்மையும், தாய்மையின் நிமித்தம் நிகழும் மரணங்கள் வழியிலான அழிவும்தான் கதையின் கரு என்றாலும் இக்கதை காலத்தின் சுழற்சியையும் கையிலெடுத்துள்ளது. கால மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கும் மனிதர்களின் மனநிலையையும் எடுத்தியம்புகிறது. சுயநலம், அதிகாரப்போக்கு, போட்டி, பொறாமை, சோம்பல், பொய்யான பிம்பத்தைக் கொண்டு தங்கள் அவமான அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஏற்படும் வன்மம் ஆகிய கூறுகளை உள்ளடக்கிய மனிதர்களின் இயல்பான குணத்தையும் நிறுவிச்சென்ற நாவல் இது.

1981 மற்றும் 1999 என இரு காலகட்டத்தில் கதையின் பெரும்பகுதி நடக்கிறது என்றாலும் அதற்கும் முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த கொப்பேரன், காத்தாயி கதையைத் தவிர்த்துவிட்டு இக்கதைக்குள் நுழையமுடியாது. காரணம் இக்கதையின் முதல் அத்தியாயத்தில் வரும் கொப்பேரனும், காத்தாயியும், அவர்களினூடே பயணித்த பேய்ச்சியை கதையின் இறுதிவரையில் கொண்டு வருபவர்கள்.

இந்தியாவில் தள்ளுருகெவ எனும் மலைக்கிராமத்தில் பிறந்தவர் கொப்பேரன். அவர் குடும்பம் பரம்பரை பரம்பரையாகப் பேச்சி வழிபாடு செய்துவந்த குடும்பம். ஆடு வெட்டி, பேச்சிக்குப் படையல் வைத்து பூஜை செய்யும் கொப்பேரன் மருத்துவமும், மாந்திரீகமும் தெரிந்தவர் என்பதால் ஊர்மக்களின் மரியாதைக்கு உரியவராக இருக்கிறார்.

வழக்கம்போல் அவ்வருட பொங்கலுக்கும் கிடாய் வெட்டி பலி கொடுக்கிறார். 10 வருடமாகப் பலியிடும் சூட்சுமம் அறிந்தவருக்கு முதன்முதலாய் தடங்கல். ஆறாவது ஆட்டின் கழுத்தில் படும் அரிவாள் இரும்பில் அடித்ததுபோல் எகிறிவருகிறது. அந்தச் சஞ்சலத்தோடு வீடு திரும்பினால் அங்கே வீட்டுக்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் வயிற்றுவலியில் துவண்டு கிடக்கிறாள் காத்தாயி. பேச்சிக்குப் படையல் இடும் தினத்தில் வைத்தியம் பார்ப்பதில்லை என்ற கொள்கையை மீற அவளே காரணமாகிறாள்.

போக்கிடமோ, உறவுகளோ அற்ற காத்தாயியை தன் மனைவியாக்கிக்கொள்கிறார். முதல் குழந்தை பிறந்து பதினைந்து நாள் ஆகும்வரையில் எல்லாமே சுமூகமாகத்தான் இருந்தது. பதினாறாம் நாள் அக்குழந்தை விஷக்காய்ச்சலால் இறந்து போகிறது. இப்படியே அடுத்தடுத்து ஐந்து குழந்தைகளும் இறந்துபோகின்றன. ஆறாவது குழந்தை தங்கியவுடன், அவர் காத்தாயிக்குத் தெரியாமல் அவளின் பூர்வீக கிராமமான கழுகுமலைக்குப் போகிறார். அங்கு யாருக்குமே காத்தாயியைத் தெரிந்திருக்கவில்லை. அங்கிருக்கும் பேச்சியம்மன் மலையை ஏறி இறங்கியபின் முதியவரின் மூலம் தனக்கு வாய்த்திருப்பது பேச்சிதான் என அறிகிறார். குழந்தையைக் கடித்துத் தின்னும் கோலத்தில் இருந்த கழுகுமலை பேச்சியைக் காத்தாயியாக நினைத்துப் பார்க்கிறார். ஐந்து குழந்தைகளையும் அவள்தான் கொன்றிருப்பாள் என்ற ஐயத்தில் ஆறாவதாகப் பிறந்த ஆண்குழந்தையை காத்தாயிக்குத் தெரியாமல் தூக்கிக்கொண்டு ஊரைவிட்டுப் புறப்படுகிறார். எங்கெங்கோ அலைந்து, செட்டியாரிடம் வேலைக்குச் செல்பவர் அவர் மூலம் மலாயாவுக்கு வருகிறார். நெடுந்தூரம் வந்துவிட்டால் தன் மகனுக்குப் பாதுகாப்பு என்ற எண்ணம் வலுத்திருந்ததால் பின்னர் செட்டியார் ஊருக்குத் திரும்பிச் செல்லும் போது உடன் செல்ல மறுத்து ஒரு தோட்டத்திலேயே தங்கிக்கொள்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக வைத்தியத்தையும், பேச்சி வழிபாட்டையும் மீட்டெடுப்பவர் தம் மகன் ராமசாமிக்கும் அந்தக் கலையைச் சொல்லித் தருகிறார்.

ராமசாமி பெண் தன்மை கொண்டவராக இருந்ததால் பலரின் ஏளனத்திற்கு ஆளாகிறார். அவரை அப்படியே ஏற்றுக்கொண்டு ஊக்கம் கூட்டி பழகும் ஓலம்மா மீது அவருக்குத் தனி பாசம்.

ஓலம்மா இந்நாவலின் பிரதான பாத்திரம். பச்சை வயல் வரப்புகளில் ஓடி வரலாம் என்ற கனவோடு தாய் தந்தையோடு கப்பலேறி வந்தவள். நிமோனியா காய்ச்சலால் தந்தையைப் பறிகொடுக்கிறாள். பதினாறாவது வயதில் ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி தாயாகும் ஓலம்மாவை அரவணைத்து ஏற்றுக்கொண்ட ஆயேர் தோட்ட மக்கள் மீது அவளுக்கு அதீத அன்பு இருந்தது. மனவளர்ச்சி குன்றிய மகன் குமரனோடு இருக்கும் அவளை மணியம் விரும்பி மணமுடிக்கிறான். அவர்களுக்கு முனியம்மா என்ற பெண்குழந்தை பிறக்கிறது. சில வருடங்களில் குமரன் இறந்துபோகிறான்.

1981-ஆம் ஆண்டில் நடக்கும் அக்கதையில் ஒரு துர்சம்பவமும் நடக்கிறது. சாராயத்திற்கு அடிமையான மக்கள் அதை விற்கும் சீனப்பெண் சின்னியின் மீதும் மோகம் கொண்டு அலைகிறார்கள். அவள் வருவதற்கு முன் ஆசோ கடைக்குப் போகும் எல்லாரும் சின்னியின் கடைக்குப் போகத்தொடங்கியதில் அவன் வியாபாரம் நட்டமடைந்தது. அந்தப் பொறாமையால் சாராயத்தில் விஷத்தைக் கலந்துவைக்க அதைக் குடித்த பலரும் இறந்து போகிறார்கள்.

நிராதரவற்ற நிலையில் இருந்த தன்னை வளர்த்தெடுத்த பெண்களின் சோகம் ஓலம்மாவையும் தாக்குகிறது. அத்தனை உயிரும் இறக்க காரணமான சின்னியைப் பத்திரமாக அனுப்பிவைப்பதாகச் சொல்லி அவளோடு வன்புணர்வில் ஈடுபடும் கணவனின் இரட்டை துரோகத்தை ஓலம்மாவால் மன்னிக்கவே முடியவில்லை. ராமசாமியின் துணையுடன் விஷம் கொடுத்துக் கொல்கிறாள். சின்னியையும் தந்திரமாக அழைத்துப் போய் ராமசாமியைக் சாட்சியாக வைத்துத் தலையில் கல்லைப்போட்டுக் கொன்றுவிடுகிறாள்.

அச்சம்பவத்திற்குப்  பின்னர் அவள் தோட்டத்தைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படுகிறது. நடந்தவற்றை மறக்கவைக்கும் என்பதால் அவளும் அந்த மாறுதலுக்கு உடன்படுகிறாள். தோட்டத்தின் அருகிலுள்ள கம்பத்தில் தன் மகள் முனியம்மாளோடு வாழ்பவள் கோழிகளை வளர்த்து, முட்டைகளை விற்று, பால் அப்பம் வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்கிறாள். வீட்டைச் சுற்றிலும் செடி கொடிகள், பழமரங்கள், காய்கறிகள் என தனக்கான இடமாக அந்தக் கம்பத்தை மாற்றிக்கொள்கிறாள். அந்தப் பயிர்களையும், பிராணிகளையும் காக்கும் தாயாய் தன்னை வார்த்துக்கொள்கிறாள்.

முனியம்மாளின் மகன் அப்போயியை வளர்ப்பதன் மூலம் அவளது தாய்மை மீண்டும் உயிர்பெறுகிறது. கால ஓட்டத்தில் அதற்கும் பங்கம் விளைவிக்கும் வண்ணம் கம்பம் கைமாறி, அப்போயும் தன்னைவிட்டுப் பிரிய நேர்ந்ததும் ஓலம்மா என்ன முடிவு எடுத்தாள். உண்மையான பேய்ச்சி யார் என்பதே நாவலின் முடிவு.

சிறுகதையின்பால் இருந்த ஆர்வம் எனக்கு நாவல்களில் இருந்ததில்லை. அதற்குக் காரணம் ஜனரஞ்சகமான நாவல்களின் சுவையில் கட்டுண்ட மனம்தான். தீவிரமான நீண்ட அத்தியாயங்களைக் கொண்ட நாவல்களில் என்னால் லயிக்க முடிந்ததில்லை. அபூர்வமாய் ஓரிரு நாவல்களை வாசித்துள்ளேன். அவை குறைவான பக்கங்களைக் கொண்ட நாவல்கள்; நம் மலேசிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நாவல்கள். தோட்டப்பாட்டாளிகளின் வாழ்வியலைச் சொன்ன அப்படைப்புகள் அதனதன் போக்கில் சிறந்துதான் என்றாலும் ‘பேய்ச்சி’ என் வாசிப்பின் சுவையை மேலும் கூட்டி, எண்ணற்ற உணர்வுகளை ஏற்படுத்திய நாவல்.

நான் படித்த தோட்டப்புறம் சார்ந்த நாவல்களில் இடம்பெற்றிருந்த அதே அசௌகரியமான கப்பல் பயணம், தோட்டப்பாட்டாளிகளின் வாழ்க்கைப் போராட்டம், வெள்ளைக்கார துரை, அதிகார வர்க்கத்தினரின் அதிகாரம், சாதி ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் என பல சம்பவங்கள் இந்நாவலிலும் இருந்தன. என்றபோதிலும் சலிப்புத் தட்டாமல் இருந்த காரணம் எனக்குப் பிடித்தமான பாணியில்  கதையைச் சொல்லிச் சென்ற விதம். புறநகர் சார்ந்த கதைகளில் நகைச்சுவை என்பது ஊறுகாய் அளவிலும் சோகமும், துயரமும் பிரதானமானதாகவும் காட்டப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்நாவலில் துயரம், பிரிவு, மரணம் ஆகியவற்றின் ஊடே என் பால்யத்தை மீட்டு என்னைக் குதூகலப்படுத்திய காட்சிகளும் நிறைய இருந்ததால் கதையில் ஒரு பக்கம் கூட ஏன் ஒரு பத்தி கூட சலிப்பு தட்டவேயில்லை. பிரமிக்கத்தக்க பல அடுக்குகளைக் கொண்டுள்ள நாவல் இது. தானொரு நுட்பமான கதைசொல்லி என நிரூபித்திருக்கிறார் நவீன்.

பேய்ச்சி நாவல் தாய்மையை முதன்மைப்படுத்திய நாவல் என்பதால் அதற்கு வெகு பொருத்தமான பேச்சியம்மனை மையப்படுத்தி நகர்கிறது. அவ்வகையில் பொருத்தமான தலைப்பு.

இந்நாவலில் வரும் பாத்திரப்படைப்புகள் மிகையின்றி இயல்பான குணத்தோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஓலம்மா, காத்தாயியைத் தவிர ஏனைய பிரதான பாத்திரங்களான கொப்பேரன், மணியம், ராமசாமி, சின்னி எல்லாருமே சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.

ஓலம்மா சிறுவயதிலேயே வாழ்க்கையை ரசித்து வாழும் போக்குக் கொண்டவளாகத்தான் காட்டப்படுகிறாள். அவ்வப்போது உக்கிரம் கொண்ட பாத்திரமாக இருந்தாலும் ஓலம்மா யாரையும் அடக்கியாளும் அதிகாரம் கொண்டவளல்ல. ராமசாமியை அவரது குறைகளோடே ஏற்றுக்கொள்ள முடிந்ததுபோல், குமரனின் குறையையும் அப்படியே ஏற்றுக்கொண்டவள் அவள். அப்போய் எல்லா படிப்பினையையும் அவனது அனுபவத்திலேயே பெறவேண்டும் என அவன் போக்கில் விட்டதிலும் இது புலப்படுகிறது. அவளது மூர்க்கத்தனத்திற்கு அவள் பார்த்த மரணங்கள் காரணமாய் அமைந்திருக்கலாம் என்பது என் யூகம்.

பெண்ணின் வாழ்க்கையில் அப்பா, கணவன், மகன் ஆகிய மூன்று ஆண்கள் மிக முக்கியமானவர்கள். ஓலம்மாவுக்கு அந்த மூன்று உறவுமே நிலைக்கவில்லை. அம்மூன்று மரணங்களுக்கும் அவளே சாட்சியாக வேறு இருக்கிறாள். கப்பலில் ஏறும்போதும், தந்தையின் உடலைக் கடலில் வீசியதும், தானும் குதிக்க முயற்சிக்கும்போதும் அவளின் மூர்க்கம் வெளிப்படுகிறது. தன்னைத் தாயென போற்றிய அப்பா மரணிக்கும்போது எதுவும் செய்யமுடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்த அவளால் பின்னர் மகன் குமரன் இறந்தபோதும் ஏதும் செய்ய இயலவில்லை. அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாத, எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும் துன்பம் அது என்பதை என் போன்று அனுபவித்தவர்களால்தான் உணரமுடியும். வெறுப்பின் காரணமாகக் குழந்தையைத் தந்திரமாகக் கொல்லும் மணியமும் துரோகத்தின் காரணமாக  அவளால் கொல்லப்படுகிறான்.

இத்தனை இழப்புகளுக்குப் பின்னரும் ஓலம்மாவுக்குள் ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கும் தாய்மையை அவள் வாரி வழங்குமிடம் அப்போய். ஆம்! இறந்துபோன மகனிடம் முழுமையடையாத அன்பை அவள் பூரணமாக்கிக்கொள்வது அப்போயிடம்.

அப்போயைப் போன்றே செடி, கொடிகளும், பிராணிகளும் அவள் அன்புக்கு வடிகால். பேரனின் மேல் அவள் வைத்திருந்த அதீத அன்பே அவளின் துயருக்குக் காரணம். என்னதான் தான் வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு வரமுடியாது என மனம் வீம்பு செய்தாலும் இன்னொரு பக்கம் மகள் அழைத்துப்போனால் பேரனின் அருகிலேயே வாழலாம் என்ற ஆசையும் உண்டு. அவையாவும் அழிந்தபின் இனி யாருக்காகத் தான் வாழவேண்டும் என்ற விரக்தி அவளை நிலையில்லாத மனதோடு அலைக்கழிக்கிறது.

“இடம் மாறுனா குணமும் மாறும்,” என்ற கொப்பேரனின் வரிகள் செடி கொடிகளுக்கு மட்டுமல்ல ரத்தமும், சதையும், உணர்ச்சியும் வடிவான மனிதர்களுக்கும்தான். தனக்குச் சொந்தமான இடம் இதுதான் என வாழ்ந்துகொண்டிருக்கும்போது வேறு இடத்தில் வாழவேண்டும் எனும்போது அவள் குணம் மாறுகிறது. அவள் சொன்னதுபோல் குழந்தைகளால் எங்கிருந்தாலும் தங்களுக்கான மகிழ்ச்சியான உலகை உருவாக்கிக்கொள்ளமுடியும். அவள் குழந்தையல்லவே?

நாவலில் ஆரம்ப அத்தியாயமொன்றில் அப்போய் காளியம்மனைப் பற்றி ஒரு கேள்வி கேட்கிறான்.அதற்குப் பதில் சொல்லும்போது உக்கிரம் என்ற வார்த்தையை ஓலம்மா பயன்படுத்த, “அம்மாவாட்டமா?” என்கிறான் அப்போய். அதற்கு ஓலம்மா, “இது கோவம் இல்லையா, உக்கிரம், உக்கிரத்துக்கு ஞாயம் தெரியாது, எல்லாத்தையும் அழிக்கும்” என்கிறாள். மணியமும், சின்னியும் தோட்டத்து மக்களுக்குப் பாவம் செய்தபோது அவர்களை அழிக்குமளவுக்கு ஓலம்மாவுக்கு வெறி வருவது அந்த உக்கிரத்தால்தான். கெட்டது செய்தவர்களை அழித்த உக்கிரம், அவள் உருவாக்கிய எல்லாவற்றையும் அழிக்கவைத்து, கடைசியில் தன்னைத்தானே அழிக்கவும் வகை செய்தது.

பெண்களை அடக்கும் வழி காமம் என்ற புரிதல் கொண்ட மணியத்தின் பாத்திரம் சபலம் நிறைந்த பாத்திரம் என்பதை ஆரம்பத்தில் மாணிக்கம்பிள்ளையின் காதலி மேனகாவுடனான உறவில் அறிய முடிந்தது. அதனால் சின்னியின் மீது அவருக்கு ஏற்பட்ட காமக்கிளர்ச்சி எந்த அதிர்ச்சியையும் தரவில்லை. தனக்கு உறுத்தலாக இருக்கிறான் என்ற சுயநலத்தில் குமரனைக் கொன்றதும், அதற்கு ராமசாமி உடந்தையாக இருந்ததும்தான் அதிர்ச்சியளித்தன. எதைவிட்டு ஓட நினைக்கிறோமோ அது மீண்டும் மீண்டும் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும் என்ற நியதியை மணியம் பாத்திரம் எடுத்துரைத்தது.

பெண்ணுக்குள் ஆணுக்குரிய மூர்க்க குணம் இருக்கிறது என்பதன் முரணாக ஆணுக்குள் இருக்கும் பெண்மையை வெளிக்கொணர்ந்த பாத்திரம் ராமசாமியினுடையது. அவரின் பாத்திரம் வழியே வெளிப்படும் காடும், அதன் அழகும், பயனும் நாவலின் சுவையூட்டிய இடங்களில் ஒரு பகுதி.

முனியம்மாவிடம் வெளிப்படும் தாய்மை அவளது மகனுக்கானது மட்டும் என்ற சுயநலம் கலந்தது. மகனுக்கு எப்படிச் சாப்பிட பிடிக்கும் என்பதை அவளே முடிவு செய்பவளாக இருப்பதிலும், கணவனை மிரட்டுவதிலும் அவளின் அதிகார தோரணை வெளிப்படுகிறது.

வில்லி போன்ற தோரணையில் அறிமுகமாகும் சின்னியிடம் சுயநலத்தைத் தாண்டி நிற்பது அவளுடைய தாய்மை. இறக்கப்போகும் நேரத்திலும் தன் மகனிடம் பணத்தைச் சேர்க்கச் சொல்லிக் கெஞ்சுமிடத்தில் கொஞ்சம் நெகிழவைக்கிறாள்.

நாவலில் கொஞ்சநேரமே வந்துபோனாலும் குமரனின் பாத்திரம் நினைவில் நின்று கலங்கடிக்கும் பாத்திரம். அதிலும் மணியம் அடித்ததை ஓலம்மாவிடம் சொல்லாமல் மீண்டும் அப்பா என வந்துநிற்பான் என மணியம் ராமசாமியிடம் சொல்லும்போது அச்சிறுவனின் மீது கரிசனம் தோன்றுகிறது.

இந்நாவலில் என்னைப் பெரிதும் கவர்ந்த பாத்திரம் அப்போய். அப்போயின் பாத்திரப்படைப்பு அசலான குழந்தையின் வார்ப்பு. மிகைத்தனம் இல்லாத,  வெகு இயல்பான பாத்திரம். படைப்பாளிக்குள் ஒரு சிறுவன் நிரந்தரமாக இருக்கிறான். அவன் தான் இக்கதையின் குழந்தை பாத்திரம் இயல்பாய் அமைய காரணமாய் இருக்கிறான். பட்டணத்தில் வாழும் குழந்தைகளின் இயல்பு தோட்டத்திலோ கம்பத்திலோ வாழும் குழந்தைகளின் இயல்பிலிருந்து கொஞ்சம் வேறுபட்டுதான் இருக்கும். அதுவும் கைபேசி பிரதான பொருள் பட்டியலில் வந்துசேராத காலத்துக் குழந்தைகள் இயற்கையினூடே ரசனையான வாழ்வைவாழ்ந்தவர்கள். இதில் வரும் அப்போயும் அப்படிதான்.

எனக்குள் கொஞ்சகாலமாய் தூரமாய் போய்க்கொண்டிருந்த சிறுமியை அப்போய் மீண்டும் நெருக்கத்தில் கொண்டுவந்துவிட்டான். அப்போய் நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு வரும் வேளையில் எனக்குள்ளிருந்து இரட்டை சடையும், சீட்டித்துணி பாவாடை சட்டையும் அணிந்த சிறுமியொருத்தி குதித்து வெளியே ஓடத்தொடங்கினாள். அப்போய் சீனரின் கடையில் மாவில் பொரித்த நிலக்கடலையைத் தின்றபோது அவளும் அங்கு இருந்தாள் என சுகமான கற்பனை ஒன்று எழுந்தது. காரணம் நானும் சிறுவயதில் நிலக்கடலை பொதிந்த அந்த ரொட்டியை அப்படிதான் சாப்பிடுவேன்.

இந்நாவலின் பாத்திரங்கள் ராமசாமி, மணியம் இருவருக்கிடையில் நான் பார்த்த ஒற்றுமை. தங்களை வருத்திக்கொண்டிருக்கும் அவமானச் சின்னங்களிலிருந்து விடுபட்டுத் தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்ள முயன்றதுதான். வெட்டியானின் மகன் என்ற அடையாளம் தரும் அவமானத்தை மணியமும்,பெண்தன்மை கொண்டவர் என்ற அடையாளத்தை மாற்றிக்கொள்ள முயற்சித்த ராமசாமியும் இறுதிவரை முழு வெற்றியை அடையவேயில்லை. இருவரும் எதைவிட்டு ஓட நினைத்தார்களோ அது அவர்களை விடுவதாயில்லை.

சின்னியைப் பேய்ச்சியாக மாற்றிவிட நினைத்து ராமசாமி செய்யும் முயற்சிகளும் அப்படிதான். அவை வீணடைந்து ஒரு கட்டத்தில் பேச்சிக்குள்ளிருந்து சின்னி வெளிப்படவே செய்கிறாள்.

இந்நாவலில் காட்டப்படும் கால மாற்றம் நுணுக்கமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கால சுழற்சி காட்டப்பட்டிருப்பதும் இந்நாவலின் பலம். அதில் குறிப்பிடத்தக்க விசயம் ரப்பர் மரங்களுக்குப் பதில் செம்பனைகள் தலைதூக்கிய சம்பவம். அதன் வழியே வெளிப்பட்ட சீனர்களின் மனநிலை. ஓலம்மா சொல்வதுபோல் லாபம் இருந்தால் அவர்கள் எப்போதுமே மாற்றத்திற்குத் தயங்காதவர்கள். சீனர்களை மட்டும் சுயநலமானவர்கள் என சொல்லிவிடமுடியாது. அதிகார வர்க்கத்திற்குத் துணைபோகும் தண்டல் உள்ளிட்டோரும், தோட்ட  மக்களும் இதில் அடங்குவர். இந்நாவலில் வரும் மலாய்க்கார போமோ கலையை மதிப்பவராக இருக்கிறார். ராமசாமி தன்னிடமிருக்கும் பெண் தன்மையை ஓரளவுக்கேனும் மறைத்துக்கொள்ள தோக் குரு தான் காரணமாக இருக்கிறார். கலையை மதிக்கும் பண்புள்ளவராக அவர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மீதிருந்த ஆர்வம் ரஜினியின் மீது திரும்புவது, கருங்கற்களால் ஆன முனியாண்டி சாமிக்கு சிமெண்ட் கை பொருத்தப்பட்டிருப்பது, முனியாண்டி கோயிலில் சாராயத்திற்குப் பதில் பீர் வைக்கப்பட்டிருப்பது, அருவி சுற்றுலாத்தளமாக மாற்றப்பட்டிருப்பது, புதர் மண்டிக்கிடக்கும் மூலிகைத் தோட்டம், பூஜைக்கு வேண்டிய சேவலைச் சொந்தமாக வாங்கி வரவேண்டும் என்ற நிபந்தனை,தோட்டப்பாட்டாளிகளாய் குடியிருந்த இந்தோனேசியர்கள், மீண்டும் மீண்டும் கண்கள் வரையப்பட்டதில் பேச்சியின் கண்களில் தடிமனாகிப்போயிருக்கும் கரிய கோடுகள் என பல காட்சிகள் கால சுழற்சியைக் காட்டும் நுட்பமான சித்திரங்கள். இக்கதையில் சொல்லப்படுவதுபோல் அன்பு பற்றை உருவாக்கி, பற்று பேரழிவை உண்டாக்கினாலும்,பற்றற்று வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகும் எதார்த்த மனிதர்களும் அந்தக் கால சுழற்சியில் காட்டப்பட்டிருந்தார்கள்.

இந்நாவலின் பிரதான ஆண்களான மணியம், ராமசாமி, சங்கர் ஆகியோர் தங்களுக்கு நெருக்கமான பெண்களின் உக்கிரத்திற்குப் பயந்தவர்களாகவே இருக்கிறார்கள்.இறுதியில் அப்போய்க்கும் அதே அச்சம் தோன்றுகிறது.

இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தாய்மை ஏதாவதொரு ரூபத்தில் வந்துவிடுகிறது. கொப்பேரன் காய்ச்சல் கண்டு பினாத்தும்போது தாய்மையின் அரவணைப்பு அவருக்குத் தேவைப்படுகிறது. வழிப்போக்கர்களாய் ஒரேயொரு காட்சியில் வந்து போகும் சில பெண்களிடம் கூட தாய்மை வெளிப்படுகிறது. கொப்பேரன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்லுமிடங்களில் எதிர்ப்படும் பெண்கள் குழந்தையிடம் காட்டும் அக்கறை இதற்குச் சான்று. ராமசாமியிடம் வெளிப்படும் அன்பும் தாயன்புதான். குமரன் இறக்கும்போது ராமசாமி இருந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம், குமரன் அவரையும் அம்மாவாகத்தானே நினைத்தான் என்ற ஓலம்மாவின் புலம்பலில் வெடித்தெழுந்த தாய்மையின் பிரதிபலிப்பே அப்போயின் மீது அவர் காட்டிய பிரியத்திற்கு அடித்தளம். மணியத்திடம் வழியும் சின்னி குழந்தை முனியம்மாவைக் கொஞ்ச எண்ணுமிடம், வைத்தியத்துக்கு வந்திருந்த குடிகாரனிடம்,”பெண் குழந்தை தாயின் அம்சம்” என ராமசாமி சொல்லுமிடம் இப்படி நாவல் நெடுகிலும் தாய்மை.

நாவலில் ஆரம்பத்தில் காட்டப்பட்ட தலைமையாசிரியர் கண்ணன் இறக்கும்images தருணம் பரிதாபத்திற்குரியது. அச்சமயத்தில் வலி தாளமுடியாமல் உடலைக் குறுக்கிக்கொண்டு அமர்ந்ததைத் தாயின் கருவறைக்குள் இருக்கும் பாதுகாப்புக்கு ஒப்பிட்ட வர்ணனையும் தாய்மையின் அம்சம். அப்போய் இரவில் அடையில் இருக்கும் பெட்டைகளைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருப்பான். அப்போது ஒரு வரி வரும்.//ஓலம்மா வளர்க்கும் பெட்டைகளுக்கு குழந்தைகளைத் தெரியும் என்பதால் அவனைக் கொத்தியதில்லை.// பிராணிகளிடம் இருக்கும் தாய்மையை உணர்த்திய வரிகள் அவை. இன்னொரு காட்சியில் ஓலம்மா தன் கம்பத்து வீட்டுக்குப் பின்னால் காட்டு மரங்களிடையே நடந்து போய் முதலில் தென்பட்ட ரப்பர் மரத்தைத் தொடுகிறாள்.தை மாதம் என்பதால் புத்தம்புதிய இலைகளுடன் எல்லா மரங்களும் செழிப்பாக தெரிகின்றன. அப்போது நாவலாசிரியர்,//அப்போதுதான் குளித்துவிட்டு பால் கொடுக்க வந்த தாய் போல மெல்லிய காற்றில் தன் இலைகளை மட்டும் அசைத்துக்காட்டின// என்ற வரியில் வர்ணித்திருப்பார். இன்னும் நாவலின் பல இடங்களில் அடிக்கடி தாய்மை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

சிறுமியின் மனநிலையிலேயே இந்நாவலோடு பயணித்தேன். அதனால்தானோ என்னவோ நாவலை வாசித்து முடித்தபின் இக்கதையில் வந்து போன மரணங்கள், துயரங்களைத் தாண்டி ரசிக்கத்தக்க, நினைத்து நினைத்து பூரிப்படையவைக்கும் காட்சிகளைக் கொண்ட ரசனையான படைப்பாகவே என்னுள் பதிந்திருக்கிறது. தைப்பூசத்திருவிழா குறித்த காட்சிகள் சிறுவயதில் ரசித்த தோட்டத்து முருகன் கோயிலை நினைவில் நிழலாட வைத்தன.

இந்நாவலில் வரும் காடு கதாபாத்திரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கின்றன. குழந்தைக்கு அது அற்புத, பிரமிப்பை ஊட்டுகிறது. ராமசாமிக்கும், கொப்பேரனுக்கும் அது உயிரை வாழவைக்கும் மருத்துவ மூலிகைகளுக்கானது. ஓலம்மாவுக்கு அவளின் உக்கிரத்தைத் தணித்துக்கொண்ட இடம்,பேரழிவின் சாட்சி. எளிய மக்களுக்கு அது போகத்தகாத பூனியான் கிராமத்தை உள்ளடக்கிய பயங்கரமான இடம். இப்படி இந்நாவல் நெடுகிலும் காடும் பயணித்து வருகிறது.

அதே மாதிரி இருளும் மழையும். சிலருக்குத் தப்பு செய்வதற்கு ஏற்ற நேரம். நாகப்பட்டணத்தில் கப்பலேறி வந்தவர்களுக்கு மழைபொழிந்த இருள் அவர்களை உற்சாகப்படுத்திய நேரமமாகவும் ஓலம்மாவுக்கும், ராமசாமிக்கும் அவர்கள் செய்த கொலையின் சாட்சியாகவும் உள்ளது. இப்படி இயற்கையோடு இணைந்து பயணிப்பதும் இந்நாவலின் தனித்துவம் எனலாம்.

இந்நாவலின் சிறப்பம்சம் தொய்வில்லாத அதன் மொழிநடை. எந்தவொரு பக்கமும், சொல்லப்போனால் எந்தவொரு பத்தியும் போரடிக்கவில்லை என்பதே நிஜம். வரலாற்றுப்பூர்வமான சில சம்பவங்களும், சிலவற்றை விளக்க பயன்படும் வர்ணனைகளும் கதையினூடே பாத்திரத்தின் குரலாக வடிக்கப்பட்டுள்ளதால் கட்டுரைத்தன்மை ஏதுமின்றி சலிப்புத் தட்டாமல் வாசிக்க முடிந்தது

இந்நாவல் வெவ்வேறு கதைகளை வெவ்வேறு காலகட்டத்தில் சொன்னாலும், பின்னர் அவை ஒன்றிணையும் இடம் பிரமிப்புத் தருகிறது. முதலில் கதையை ஒருவரின் கோணத்தில் சொல்லிவிட்டு, வேறு கதைக்குப் போனபின் மீண்டும் திரும்பிவந்து அதே காட்சியை எதிர்கோணத்தில் இருப்பவரின் பார்வையிலிருந்து கொண்டு செல்லும் உத்தி இக்கதையில் உண்டு. மணியம் சின்னியோடு இருக்கும்போது ஓலம்மா பார்த்துவிட்ட காட்சிகளின் வர்ணிப்பும், தலைமையாசிரியர் வீட்டருகே மணியம் சென்று வந்ததற்கான காட்சியையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இது நான் திரைப்படங்களில் பெரிதும் ரசிக்கும் உத்தி. ஒரு கதையை ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே அத்தியாயத்தில் சொல்லிவிடாமல் சில சம்பவங்களை விட்டுவிட்டு, பின்னர் வேறொரு அத்தியாயத்தில் விரிவாகக் காட்டும் உத்தியும் இந்நாவலில் நான் ரசித்த இடம்.

கதையின் ஆரம்பத்தில் தொடங்கிய அதே பேச்சியம்மன் முன் கதையின் முடிவும் நிகழ்வது எனக்குப் பிடித்திருந்தது. வெவ்வேறு காலகட்டம் என்றாலும் கடைசி அத்தியாயத்தின் தொடர்ச்சி அதன் முந்தைய அத்தியாயத்தின் இறுதியோடு ஒத்துள்ளதை ரசித்தேன். முதல் அத்தியாயத்தில் தள்ளுருவெ கிராமத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட பெண்களின் வம்சாவளியாய் கதையின் இறுதி அத்தியாயத்தில் வெள்ளி காப்பைக் காட்டும் பெண். இப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள வகையில் பின்னப்பட்ட கதையும், கிளைக்கதையும் நாவலாசிரியரின் கற்பனையின் உச்சத்தைப் பறைசாற்றுகிறது.

பேய்ச்சி நாவலாசிரியர் நவீனிடம் நேரில் பேசிப் பழகியபோதும், அவரது சிறுகதைகளின் வாயிலாகவும் அவரிடத்தில் எப்போதும் நகைச்சுவையுணர்வு நிரம்பியிருப்பதைக் கண்டிருக்கிறேன். அது ரசிக்கத்தக்க நையாண்டி பாணியிலான அதே சமயம் யாரையும் காயப்படுத்தாத அப்பாவித்தனமான நகைச்சுவை. அந்த நகைச்சுவையுணர்வை இந்நாவலின் பல இடங்களில் கண்டேன்.

நள்ளிரவு நேரத்தில் தனிமையில் இந்நாவலைப் படித்தபோது தேங்காய்ப்பால் குறித்த வர்ணனையைப் படித்ததும் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். இந்நாவலில் பல சிறப்புகள் இருந்தாலும் காலையில் எழுந்தவுடனேயே கணவரிடம் பகிர்ந்துகொண்டது தேங்காய்ப்பால் பற்றிய வர்ணனையைத்தான். இனி தேங்காய்ப்பால் அப்பத்தின் உப்பிய நடுப்பகுதியைப் பார்க்கும்போதெல்லாம் அதற்குள் எதுவோ இருக்கும் என எண்ணி ஏமாந்துபோன சீனர்கள் நினைவில் வரப்போவது திண்ணம். அதே மாதிரி சிரிப்பையூட்டிய மற்றொரு இடம் சேவல்கள் குறித்த காட்சிகள். யாரிடமோ பிடித்துக்கொடுக்கப்போகிறார்கள் என்ற அவற்றின் அதிர்ச்சி, மற்ற சேவல்களுக்கும் சொல்லி அவை உஷாராக இருப்பது, ஐந்து பெட்டைக்கு ஒரு சேவல் என கூண்டுக்குள் விடப்பட, எஞ்சிய சேவல்கள் ஏமாற்றமாகத் திரும்புவது என சேவல்கள் நகைச்சுவை பாத்திரமாக இருந்தன. கருப்பனின் சேட்டைகளையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அப்போய் வழிநெடுக மூத்திரம் பெய்துக்கொண்டே போக, கருப்பனும் அவ்வாறு செய்வது சிரிப்பை வரவைத்தது.

கனமான கருவைக் கொண்டிருக்கும் நாவலில் சில விசயங்களை நகைச்சுவையாகச் சொல்லியிருப்பது கதையோட்டத்தில் சுவையைக் கூட்டியது. தோட்டத்துப் பெண்கள் தங்களுக்குத் தெரிந்த மலாயில் தங்கள் கணவர்கள் குடித்துவிட்டு அடிப்பதை நாடகமாக நடித்துக்காட்டி, அது காவல் துறையினருக்கு நகைச்சுவையாக இருந்த காட்சி தோட்டப்புறத்துக் கதைகளில் இதுவரை படித்திராத காட்சி. அதை நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வந்தது.

தோட்டப்புறம், கம்பம் போன்ற இடத்தைப் பின்னணியாகக்கொண்டு எழுதப்பட்ட பெரும்பாலான நாவல்கள் நான் வாசித்தவரைக்கும் மனிதர்களின் அவலத்தைதான் முதன்மையாகக் காட்டி, மனதில் வலியைப், பிரதானமாக ஏற்றும். ஆனால் இந்நாவலில் செடி கொடிகள், பறவைகள், விலங்குகளின் கோணத்திலிருந்தும் அவை என்ன நினைத்திருக்கும் என்பதைச் சொன்னதால் தானொரு நுட்பமான கதைசொல்லி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நவீன்.

இந்நாவலில் ஒரு சில இடங்களின் வந்துபோகும் கெட்டவார்த்தைகள் மனதில் சலனத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. அவை கதாபாத்திரங்களின் குரலாக, அவர்களின் வலியை, இயலாமையை, இன்னொரு முகத்தை, சுயநலத்தை வெளிப்படுத்தி கதையினூடே இணைந்துதான் பயணிக்கின்றன. தோட்டப்புறத்தில் பிறந்து வளர்ந்த நான் அக்கம் பக்கத்தினரிடையே இத்தகைய கெட்ட வார்த்தைகளைக் கேட்டு பயணித்தவள்தான். ஒருபோதும் அவை என்னைத் தங்களுக்கு அடிமைப்படுத்தியதில்லை. இக்கதையில் காமமும் சில இடங்களில் வெளிப்படுகிறது. காமத்தை தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதற்காகப் பின்னர் அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையையும் கூர்ந்து கவனித்தால் அதில் உள்ள படிப்பினையை அறியமுடியும். ஆயினும் சின்னியுடனான கூடலில் காட்சி விவரிப்பைச் சற்று குறைத்திருக்கலாமோ என்ற சிறு நெருடல் தோன்றி மறைந்தது.

இந்நாவலில் மற்றொரு சிறப்பம்சம் தேய்வழக்குச் சொற்கள் இல்லாத காட்சி விவரிப்புகள்தான். பயன்படுத்தப்பட்ட உவமைகள் யாவும் புதிது. இந்நாவல் மற்ற நாவல்களிலிருந்து வேறுபட்டு நிற்க அந்த வர்ணனைகளே காரணம். ஏற்கனவே படித்து மனனமாகிப்போன வழக்கமான வர்ணனைகளாக இல்லாமல் புதிய சொல்லாடல்களைக் கையாண்டதில் நாவலாசிரியரின் சொல்வளம் வெளிப்பட்டது.

நாவலில் இதர கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதையை நீட்டித்துச்சொல்லாமல் சுருக்கமாக அதே சமயம் அழுத்தமாகச் சொன்னதும் நாவலில் தொய்வின்மைக்குக் காரணம். நாவலின் பாத்திரங்களுக்கிடையில் காணப்படும் சாதி பாகுபாட்டை அவர்களின் பெயர்களின் வழியே அறியவைத்திருக்கிறார். மனிதர்களிடம் பழகும் விதத்தில் மேலதிகாரிகளிடம் தோன்றும் அகங்காரம் அவர்களின் பெயரின் ஊடே சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் விஷ சாராயம் குடித்து இறக்கும் தருவாயில் கூட செல்லையா கவுண்டர் உபயோகிக்க நினைக்கும் அதிகாரம்.

இந்நாவலில் காத்தாயிக்கு நடக்கும் இழப்பு என் அம்மா வழி உறவிலும் நடந்துள்ளது. என் அம்மா சொன்ன கதை இது. அவரின் பெரியம்மா மகளுக்கு குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன. அதுவும் குழந்தை பிறந்து ஆரோக்கியமாகத்தான் வளரும். அடுத்த குழந்தை பிறந்ததும் ஏற்கனவே பிறந்த குழந்தை இறந்துவிடும். இப்படி சில குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில் அடுத்து ஓர் ஆண்குழந்தை பிறந்திருந்தது. இரண்டு மாடி கொண்ட பலகைவீடு அது. புதிதாய் பிறந்த ஆண் குழந்தையை மேல் மாடியில் வைத்துப் பால் கொடுத்துக்கொண்டிருந்த வேளையில் கீழ்த்தளத்தில் இறந்துவிட்டிருந்த குழந்தையை அவரின் கணவர் கையில் வைத்திருந்த காட்சி கொஞ்சம் மங்கலாக இன்னமும் நினைவில் இருப்பதாகச் சொன்னார் அம்மா.

அப்போது என் தாத்தா (அம்மாவின் அப்பா) காட்டுக்குள் சென்று ஏதோ ஓர் அம்மனை வணங்கி திருநீறு இட்டு வீட்டில் ஏதோ பூஜை செய்ததாகவும் அதன்பிறகே அந்த ஆண்குழந்தையும், அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகளும் இறக்காமல் இருந்ததாகச் சொன்ன அம்மா, காட்டுக்குள் தாத்தா கும்பிட்டது பேச்சியாகதான் இருக்கவேண்டும் என்றார். வீட்டில் தாத்தா அந்தச் சாமியைக் கும்பிட்டதில்லை என்றார். உயிர்தப்பிய முதல் வாரிசான ஐயாவு கடந்த ஆண்டுதான் நோயால் இறந்தார். அவரின் வாரிசுகளும், அடுத்தடுத்துப் பிறந்தவர்களும் தத்தம் வாரிசோடு பேராக் மாநிலத்தில் வசிக்கிறார்கள்.

கதையில் சொல்லப்பட்டதுபோன்ற பரம்பரை சாபமும் என் அப்பா வழி உறவில் உண்டு. என் அப்பாவுக்கே எத்தனையாவது தலைமுறையில் அந்தச் சாபம் தொடங்கியது என தெரியாது. அந்தக் குடும்பத்தில் யாரோ ஒரு பெண்ணுக்குப் பெரும் கொடுமை செய்துவிட்டார்களாம். பாதிக்கப்பட்ட பெண் சாபம் இட்டதாகவும். தொடர்ந்து எத்தனையோ தலைமுறைகளாக உடன்பிறப்புகளின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் திருமணமாகாமலேயே இருப்பதாகச் சொன்னார். அதுவும் நான் கண்கூடாகக் கண்ட உண்மை.

இக்கதையில் வரும் ஓலம்மாவை என் சின்னப்பாட்டியின் உருவாகப் பார்க்கிறேன். என் பாட்டி கோப்பேங் நகரில் வசிக்கிறார். பாட்டியின் குடியிருப்புப் பகுதிக்குச் சற்றுத் தள்ளி புறம்போக்கு நிலம் இருந்தது. அந்த நிலத்தில் பாட்டி நட்டுவைத்த பூமரங்கள், காய்கறிகள் யாவும் செழித்து வளர்ந்தன. அங்கு இயற்கையாக உருவான ஒரு புற்றைப் பாட்டி நாகம்மாவாக எண்ணி, தினமும் பூஜை செய்துவருகிறார். அது சொந்த வீடுதான் என்றாலும் அக்கம் பக்கம் யாரும் வசிக்கவில்லை. தாத்தா இறந்த பின், கடைசி மாமாவும் திருமணம் செய்து, தலைநகருக்கு வந்துவிட்ட பிறகு கடந்த 6 ஆண்டுகளாய் என் பாட்டி தனியாக அவ்வீட்டில் வசிக்கிறார். பிள்ளைகள் அழைத்தும் அந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன் என்கிறார். தான் வளர்த்த புற்றுக்கோயிலை விட்டுவிட்டு வருவது நியாயமில்லை என மறுத்துத் தன்னந்தனியாக அவ்வீட்டில் செடி கொடிகளோடும்,தொலைக்காட்சியோடும் உறவாடிக்கொண்டிருக்கிறார்.

இந்நாவலில் சொல்லப்படும் பரம்பரை சாபம் உள்ளிட்ட சில விசயங்கள் எனக்கு நெருக்கமானதாக இருப்பதால் இந்நாவலோடு இன்னும் நெருக்கமாகப் பயணிக்க என்னால் முடிந்தது. கதையை வாசிக்கத் தொடங்கியபோது அதன் நம்பகத்தன்மை குறித்து ஆராய தோன்றாமல் அதன் போக்கிலேயே நான் பயணிக்க என் பெற்றோர் சொன்ன சம்பவங்கள் காரணமாய் இருக்கின்றன.

நாவலின் முதல் அத்தியாயத்தை வாசிக்கும்போது தொடங்கி பேய்ச்சிதான் பெண்ணாகப் பிறந்து வந்துள்ளாள் என்பதை நாமே நம்பிவிடும் வகையில் கதாசிரியர் கையாண்டுள்ள வர்ணனைகள், சொல்லாடல் நம்மை ஏமாற்றிவிடும். அவரின் எழுத்தின் சிறப்பு அது.

ஆனால் இந்நாவலை வாசித்து முடித்த பிறகு எனக்குத் தோன்றிய படிமம் வேறு. இக்கதையின் எந்த நாயகியும் பேச்சியம்மனின் மறுபிறவியோ அவதாரமோ அல்லர். அது மனிதர்களின் கற்பனை. அவர்களின் ஆழ்மனதில் புதைந்து போயிருக்கும் பயம், நம்பிக்கையின் காரணமாக அப்பெண்கள் பேச்சியின் அவதாரமாகப் பதிவாகியிருக்கிறார்கள்.

பரம்பரை பரம்பரையாகப் பேச்சி வழிபாடு செய்துவந்த குடும்பம் என்பதால் பூஜையில் ஏற்பட்ட சிறு தடங்களால், பேச்சி கோபம் அடைந்திருக்குமோ என்ற மன சஞ்சலம். தொடர்ந்து குழந்தைகள் இறக்கவும்,முதியவரின் யூகமும் கொப்பேரனிடத்தில் பேச்சியைப் பெண்ணாக உயிர்த்தெழ வைத்தது.

சின்னியைக் கொன்றதாலும், தன் மகனிடம் சேர்க்கும்படி மன்றாடிய பணத்தை மகனிடம் சேர்க்காமல் விட்டதாலும் மனதை உறுத்திக்கொண்டிருந்த குற்றவுணர்ச்சியால் ராமசாமிக்குள் சின்னி பேச்சியாக உருக்கொண்டிருந்தாள். தாயாய் ஏற்றுக்கொண்டால் அவள் மன்னித்துவிடுவாள் என்ற எதிர்பார்ப்பும்,”எது பயமுறுத்துகிறதோ அதன் மீது அன்பைக் காட்டு” என்ற தோக் குருவின் வார்த்தையும் அவர் சின்னியைப் பேச்சியாக வழிபட காரணம்.

ஓலம்மா, முனியம்மா இருவரும் இயல்பிலேயே உக்கிர குணமும் கொண்ட சராசரி பெண்கள்தாம். நாவலாசிரியர் தன் எழுத்து வன்மையால் அவர்களையும் பேய்ச்சியின் அம்சமாக எண்ண வைத்துள்ளார்.

கதையின் முடிவில் மாலதியிடம் இருக்கும் வெள்ளிக்காப்பு அவளது பாட்டியால் திருமணத்திற்கு முன் கொடுக்கப்பட்டது என்ற விபரம் கதையை மீண்டும் கொப்பேரன்,காத்தாயி காலத்து சாபம் கொண்ட பெண்களின் தலைமுறைக்கு இழுத்துச் செல்கிறது.சேவலை அறுக்கும்போது அவளுக்குள் எழுந்த வேகம், தாய்மையடைய முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் எழுந்ததுதான். ஆயினும் இனி அடுத்த பேச்சியாக அவள் அப்போயிக்குள் உயிர்த்திருப்பாள்.

இந்நாவலின் முதல் அத்தியாயத்தை மட்டும் வாசித்திருந்த கணவர் கொப்பேரன் பலிகொடுத்ததில் ஐந்து ஆடுகள் இறந்துவிட்டன, ஆறாம் ஆடு தப்பித்துக்கொண்டது. அதேமாதிரி அவருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் இறந்தபின் ஆறாவது குழந்தை மட்டும் தப்பித்துக்கொண்டது. இதில் ஏதும் சூட்சுமம் இருக்குமோ? என்றார்.

இப்படி இந்நாவல் நிச்சயம் படிப்பவர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு படிமங்களைக் கொடுக்கும்.

முடிவில் ‘பேய்ச்சி’ பெண்களைக் கொண்டாடும், பெண்கள் கொண்டாடும் நாவலாகப் பலரின் மனதில் நிறைந்திருப்பாள்.

2 comments for “பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு

  1. A.Punitha
    May 1, 2020 at 3:57 am

    பல விமர்சனங்களைப் படிக்கும் போது இன்றும் ஊற்றுப்போல புத்தம் புதிய தகவல்களைக்கொண்டு வருகிறது . பேய்ச்சி . வாழ்த்துக்கள் உதயகுமாரி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...