விமர்சனம் ஏன் தேவையாகிறது: பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலை முன்வைத்து

imagesஒரு புனைவிலக்கியம் குறித்து விமர்சனம் எழுத பல காரணங்கள் உள்ளன. படைப்பின் நுண்தளத்தைச் சுட்டிக்காட்டி அதன் வழி அப்படைப்பைப் பொது வாசகர்கள் மேலும் தீவிரமாக அறியும் வழிகளை உருவாக்குவது; அதிகரித்து வரும் நூல் பிரசுரங்களுக்கு மத்தியில் மேம்பட்ட படைப்புகளை அடையாளம் காட்டுவது; தத்துவம், வரலாறு என ஒரு படைப்பில் தொய்ந்துள்ள பிற அறிவுசார் தகவல்களை உரையாடல்களாக மாற்றுவது; மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என கோட்பாட்டு ரீதியில் ஒரு படைப்பை அணுகிப் பார்ப்பது என அவற்றில் சிலவற்றைச் சொல்லலாம். இப்படி ஒரு பொருட்படுத்தத் தகுந்த படைப்பை வாசித்து அது குறித்த மனப்பதிவை எழுதும்போது அப்புனைவில் உள்ள எதிர்மறைகளையும் சுட்டுவது விமர்சனத்தின் இயல்புதான்.

இதில், விமர்சிக்கப்படக்கூடாத படைப்புகள் என சில உள்ளன. ஒரு படைப்பாளி தான் எழுதுவது ஜனரஞ்சகப் படைப்புதான்; அதன் வழி வாசகனை ஈர்ப்பது மட்டுமே தனது நோக்கம்; அதன் தேவை நூல் விற்பனை மட்டுமே எனும் கொள்கையில் இருக்கும் பட்சத்தில் அது குறித்து இலக்கிய விமர்சகன் பேச வேண்டிய அவசியம் இல்லை. கடைக்காரன் தான் விற்பது நொறுவை மட்டும்தான். அதன் நோக்கம் வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்துவதுதான். இதனால் தனக்கு ஆதாயம் கிடைக்கும் எனச் சொல்வானேயானால் உணவுப் பட்டியலில் அவனது நொறுவையை இணைத்து அதன் தரத்தை அளவிடுவது விமர்சகனின் மூடத்தனம். பொழுதுபோக மெல்லும் ஒரு பண்டத்தைப் பசி போக்கும் உணவோடு ஒப்பிடத்தேவையில்லை. அதுபோல வணிக இலக்கியங்களையும் நுகர்வுப் பண்டமாக அதன் இடத்தில் வைத்துவிடுதல் சிறந்தது. உலகில் எல்லாவகையான நுகர்வுப் பண்டங்களுக்கும் இடமிருப்பதுபோல ஜனரஞ்சக இலக்கியங்களுக்கும் அதற்கான வாசகர்கள் மத்தியில் இடமிருக்கும்.

ஆயினும் ஒரு புனைவை வாசித்த பிறகு அது குறித்த எதிர்மறை விமர்சனம்தான் மனதில் எழுகிறது என்றால் அதை எழுத்து வடிவில் முன்வைக்கும் முன் சில கேள்விகளை விமர்சகன் தனக்குத்தானே எழுப்பிக்கொள்ள வேண்டியதுள்ளது.

முதலாவது, அப்படைப்பு ஒரு மூத்த படைப்பாளியால் எழுதப்பட்டுள்ளதா? அவர் பெற்றிருக்கும் அங்கீகாரம் காரணமாக அப்படைப்பு வாசிக்கப்படாமலேயே இலக்கிய அந்தஸ்தைப் பெறக்கூடுமா? (எ.கா: ரெ.கார்த்திகேசு, கா.பெருமாள், எம்.ஏ.இளஞ்செல்வன்)

இரண்டாவது, ஏற்கனவே நல்ல படைப்புகளை எழுதிய ஒருவரால் எழுதப்பட்ட பலவீனமான படைப்பா? அவரது இலக்கிய செயல்பாட்டு ஆளுமையால் அப்படைப்புக்கு இயல்பாக இலக்கிய தகுதி வந்து சேர்கிறதா? (எ.கா: பெண் குதிரை, இராமனின் நிறங்கள்)

மூன்றாவது, புனைவுத்திறன் இல்லாமலேயே ஒரு படைப்பு எடுத்துக்கொள்ளப்பட்ட கருவின் அடிப்படையில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறதா? (சயாம் மரண இரயில், விடியல்)

இதுபோன்ற அடிப்படையில் உருவாகும் படைப்புகளை விமர்சனம் செய்வதும் இலக்கியத்துறையில் தீவிரமாக இயங்கும் ஒரு படைப்பாளியின் கடமைதான். காரணம், இந்தப் படைப்புகள் கல்விச் சூழலாலும் இயக்கங்களாலும் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு இலக்கிய வரலாற்றில் ஒரு தனியிடத்தைப் பெறுகின்றன. அந்த வரலாறு எவ்வித ஆய்வும் இன்றி தொடர்ந்து ஒப்புவிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகின்றன. இலக்கியம் என்பது ஒரு கலை வெளிப்பாடு என்பது குறித்த பிரக்ஞையற்று, புனைவில் பேசப்படும் கரு, எழுதியவர், உத்தி, வரலாற்று முக்கியத்துவம் எனும் அளவிலேயே அவை உள்வாங்கப்படுவதால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ‘மலேசியாவின் சிறந்த புனைவிலக்கியங்கள்’ என நாம் சேர்த்து வைத்துள்ள குப்பைகள் ஏராளம்.

மேற்கண்ட அம்சங்களைக் கடந்து ஒரு படைப்பைப் பொருட்படுத்தி விமர்சிக்க மற்றுமொரு காரணம் உண்டு.  எழுத்தாளனுக்கு ஏற்கனவே இருக்கின்ற பிற துறை சார்ந்த செல்வாக்கால், பிரபலங்களின் அறிமுகங்களால், வெகுசன ஊடக பலத்தால் ஓர் அசட்டுத்தனமான புனைவு முயற்சிக்கு இயல்பான வாசக கவனம் ஏற்படுத்தப்படும்போது அந்தப் புனைவின் தகுதி குறித்து விவாதிக்க விமர்சனம் தேவையாகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ எனும் சிறுகதைத் தொகுப்பு.

பொன்.கோகிலம் முன்னாள் வானொலி அறிவிப்பாளர். மலேசியாவின் முக்கிய மரபுக் கவிஞரான ‘தீப்பொறி’ பொன்னுசாமி அவர்களின் மகள். தற்போது ‘அகிலம் நீ’ எனும் பெண்களுக்கான அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க செயற்குழுவில் இடம்பெற்றுள்ளார். இவை அனைத்தும் இயல்பாகவே பொன்.கோகிலம் வெளியிட்ட ஒரு நூலுக்கு கவனத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளன. எனவே, இலக்கியச் சூழலில் இந்தத் தொகுப்புக்கு என்ன இடம் உண்டு என்பதைக் கறாரான முறையில் அணுக வேண்டியுள்ளது.

எந்த விமர்சனத்தின் நோக்கமும் அப்படைப்பை புனைந்த எழுத்தாளனுக்கு ஆலோசனை கூறுவதல்ல. அவனைச் சாடுவதும் அல்ல. தீர்ப்பு வழங்குவதும் அல்ல.

பொதுவாகவே இலக்கியம் அல்லாத ஒன்று அந்த அடையாளத்தைச் சூடிக்கொண்டு ஓர் இயக்க பலத்துடன் வெளியீடு காணும்போது இயல்பாகவே தனக்கான சந்தையை உருவாக்கிக்கொள்கிறது. அந்த கவனத்தைக்கொண்டு அடுத்தடுத்த முயற்சிகள் எழவே செய்யும். தொடர்ந்து ஜீவிக்க வெற்றுப் பாராட்டுகளும் மொண்ணையான மதிப்புரைகளும் போதுமானவை. எனவே விமர்சனங்கள் இலக்கிய அக்கறை இல்லாத ஒருவரை எவ்விதத்திலும் மாற்றாது. காரணம் மாற்றம் நிகழ கூடுதலான உழைப்பு தேவை. அந்த உழைப்பை வழங்காமல் எளிதாய் கிடைக்கும் இலக்கிய அந்தஸ்தை விட்டுவருவது சிரமம்தான். இத்தகைய சூழலில், விமர்சனம் வாசகர்கள் மத்தியில் அப்புனைவு குறித்த மற்றுமொரு அபிப்பிராயத்தை முன்வைக்கவே எழுதப்படுகிறது. அது பூசிக்கொண்டிருக்கும் எல்லா அரிதாரங்களையும் கலைத்து அதன் இடம் என்ன என்று சொல்லும் ஒரு தரப்பு இலக்கியச் சூழலில் தேவையாக உள்ளது.

அகிலம் நீ

‘அகிலம் நீ’ நூலில் எந்த இடத்திலும் அது சிறுகதைத் தொகுப்பு என அறிவிக்கப்படவிட்டாலும் பொன்.கோகிலத்தின் நேர்காணல்கள், நிகழ்ச்சி குறித்த  அறிவிப்புகள் போன்றவற்றில் சிறுகதை தொகுப்பென குறிப்பிடப்படுவதால் இந்நூலை ஒரு சிறுகதைத் தொகுப்பாகவே கருதி வாசிக்க வேண்டியிருந்தது. வாசித்து முடித்தபோது வேறெந்த கலைத்துறையிலாவது இத்தனை அபத்தம் நடக்குமா என்றே முதலில் தோன்றியது.

ஒரு நேர்க்கோட்டை வரைய திறனற்ற ஒருவர் ஓவியக் கண்காட்சி என தன் கிறுக்கல்களை வைத்தால் நாம் அதை அனுமதிப்போமா? குளியலறையில் தன் பாடல் நன்றாக ஒலிக்கிறது எனும் நம்பிக்கையில் பிரம்மாண்ட அரங்கில் இசைக்கச்சேரி செய்யும் தைரியம் யாருக்காவது வருமா? ஆனால் உலகில் எந்த மொழியில் உருவான இலக்கியங்களுக்கும் நிகரான படைப்பாளிகளைக்கொண்ட தமிழில், சிறுகதைக்கான எந்த அம்சமும் இல்லாமல் ஒரு தொகுப்பு வெளியீடு காணும்போது கொஞ்சம்கூட கூச்ச உணர்வற்று அதை அங்கீகரிப்பது அதன் குறைபாடுகளைச் சொல்லாமல் கள்ள மௌனம் கொள்வதும் எத்தனை இழிநிலை!

பொன்.கோகிலத்தின் இந்தத் தொகுப்பில் சிறுகதை என மொத்தம் பத்து தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. பத்துவிதமான பறவைகளின் பெயர்களை முன்வைத்து எழுதப்பட்டவை அக்கதைகள். ஒவ்வொரு பறவையின் தன்மையும் ஒரு குறியீடாக மாற்றப்பட்டு கதை சொல்லப்படுகிறது. காதலனால் ஏமாற்றப்படும் காதலி, கணவனின் அதீத அன்பால் கஷ்டப்படும் மனைவி, சொரியாசிஸால் திருமணம் செய்யாத பெண், கடைக்கார அண்ணனின் தவறான தொடுதலை அறியாத சிறுமி, தன் கணவனின் குற்றத்தை ஏற்கும் மனைவி என பெண்கள் படும் துன்பங்கள்தான் இக்கதைகளின் கரு.

சிக்கல் என்னவென்றால் இதுபோன்ற கருவைக் கண்டாலே இந்நாட்டு வாசகர்கள் கிரங்கி விடுவார்கள் என்பதுதான். சிறுகதை என்பது நல்லுபதேசம் செய்யும் வடிவம் என அவர்களாக முடிவெடுத்து வைத்துள்ளது ஒரு காரணம். அதை அழுத்தமாக வாதாடவும் செய்வர். ‘கத வழியா நாலு நல்ல கருத்துங்கள சொல்ல வேண்டியதுதானே’ எனக் கேட்பவர்களே இங்கு அதிகம். அதிலும் பெண்கள் நலன் பேசும் ‘அகிலம் நீ’ போன்ற நூலைப் பெண்ணியப் படைப்பாக முன்னிறுத்திப் பேசுவதும் வழக்கமாகிவிட்டது. ஒரு வணிக சினிமாவின் அத்தனை அபத்தங்களையும் சகித்துக்கொண்டு அது முன்வைக்கும் தேய்வழக்கு சமூக கருத்துகளுக்காக ‘நல்ல படம்’ என்று சான்றிதழ் கொடுக்கும் பாமர மனநிலையையே இலக்கியத்திலும் அளவீடாக்கிக்கொள்ளும் வாசகர்கள் இங்கு அதிகம். ஆனால், இவர்களிடம் பதேர் பாஞ்சாலி, சிட்டி ஆப் காட், செவன் சமுராய் போன்ற உலகின் தலை சிறந்த திரைப்படங்கள் என்ன நற்கருத்துகளைச் சொல்கின்றன என்று கேட்டால் கோபப்படுவார்கள். துண்டுதுண்டான காட்சிகளைச் சொல்வார்கள். ஒட்டுமொத்தமான படத்தின் ஆன்மாவை அவர்களால் அணுகவே முடியாது. அதற்குக்காரணம் பயிற்சி இன்மை, மலினமான சினிமாக்கள் வழியே ரசனையை உருவாக்கிக்கொண்ட மனநிலை, கல்லூரியில் கொடுக்கும் சுருக்கப்பட்ட வடிவ புனைவுகள் அன்றி வேறெதையும் வாசிக்காத சோம்பல்நிலை, ஜனரஞ்சக இலக்கியம் வழி மட்டுமே மொழியின் சாத்தியம் அறிந்த போதாமை எனச் சொல்லலாம்.

எந்தக் கலையும் கருத்தைச் சொல்ல உருவாவதில்லை. ஒரு சிறந்த கலைஞன் தான் பார்த்த சமூகத்தைப் புனைவுகளின் வழி மீள் உருவாக்கம் செய்பவனாக இருக்கிறானேயன்றி ஏற்கனவே சொல்லப்பட்ட அறநெறிகளை மீள் பரிந்துரை செய்து அதைச்சுற்றிக் கதையெழுத மாட்டான். அது கலைஞனின் பணியுமல்ல. இங்கு இலக்கியம் தேர்வுக்கானதாக மாறியதால் அவை கருத்துகளாகச் சுருக்கப்பட்டன. அவர்களே வாசகர்களாக நம்பப்பட்டு அவர்களை நோக்கியே இலக்கியம் புனையப்பட்டது. இறுதியில் எழுத்தாளன் தன் போதாமையை மறைக்க ‘இங்க உள்ளவங்களுக்கு தீவிர இலக்கியமெல்லாம் வெளங்காது’ என்ற அபத்தமான கூற்று கடந்த காலங்களில் மறுபடி மறுபடி முன்வைக்கப்பட்டது.

பள்ளிகளின் வழியாகவே கதைகளை வாசித்து, கல்லூரிகளில் கதைச் சுருக்கங்களை அறிந்து, கருத்துகளை மனனம் செய்து, ஐம்பது சொற்களுக்கு மிகாமல் புனைவின் சுருக்கத்தை எழுதிப் பழகி, கிளிப்பிள்ளைகளாக வளர்ந்துள்ள வாசகர்கள் மலிந்துள்ள சூழலில் ‘அகிலம் நீ’ போன்ற நூல்கள் சிறுகதை தொகுப்பாகக் குறிப்பிடப்படுவதெல்லாம் சாத்தியமான சூழல்தான். ஆனால் பல்வேறு தரப்புகளின் முயற்சியில் சிறுகதைகளின் கலைவடிவம் குறித்த அறிமுகம், விவாதங்களுக்கான முன்னெடுப்புகள் நடக்கும்போது வளர்ந்து வரும் தலைமுறையிடம் ‘இவை சிறுகதைகள் அல்ல, குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள்’ என மறுபடி மறுபடி சொல்லவேண்டியுள்ளது. இவை சிறுகதைகள் என்றால் ‘ஏமாற்ற நினைப்பவன் ஏமாறுவான்’ எனும் கருத்தைச் சொல்லும் காகமும் நரியும் கதை, ‘கிட்டாதாயின் வெட்டென மற’ எனும் கருத்தை வலியுறுத்தும் நரியும் திராட்சைப்பழமும் கதை போன்றவற்றையும் நாம் சிறுகதைகளாக அங்கீகரிக்கலாம் என எடுத்தியம்ப வேண்டியுள்ளது. அதன் மூலம் மட்டுமே தவறான சிறுகதை உதாரணங்களிடமிருந்து அவர்கள் புனைவு மனத்தைக் காப்பாற்ற முடியும்.

படைப்பும் விமர்சனமும்

பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலைப்போல ஏராளமான தொகுப்புகள் மலேசியத் தமிழிலக்கியச் சூழலில் வெளிவரவே செய்கின்றன. அவற்றைப் போற்றிப்புகழ நவீன இலக்கிய வாசிப்பு நுண்ணுணர்வற்ற கல்வியாளர்களும் உள்ளனர். மொழி தெரிவதாலேயே இவர்கள் தங்களுக்கு இலக்கியமும் தெரிவதாக நம்பிவிடுகின்றனர். இலக்கியம் என்பதை அறிவுத்துறைபோல அணுகும் அவர்கள், புனைவைக் கருத்துகளின் தொகுப்பாகப் புரிந்துகொள்கின்றனர். பிரேத பரிசோதனைபோல படைப்புகளைப் பிரித்தும் தொகுத்தும் அவற்றைப் பாராட்டுகின்றனர்.

நான் சிலம்பக்கலையைத் தீவிரமாகப் பழகிக்கொண்டிருந்த காலம் ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அடிக்கும் முறைகளைச் செய்துகாட்டி வெளியிலிருந்து வந்திருக்கும் பயிற்சியாளர்கள் அங்கீகரித்த பின்னரே அடுத்த அடுக்குக்குச் செல்ல முடியும். எங்கள் ஊரில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதிகம். அதனால் சிலம்பாட்ட சோதனை நடக்கும்போது ஏராளமான பெரியவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பர். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் கம்பு சண்டைகளைக் கண்டு ரசித்தவர்கள் என்னைக் ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ என்று வெகுவாகப் பாராட்டியதுண்டு. ஆனால் அந்தப் பாராட்டு நான் அடுத்த படிநிலைக்குச் செல்ல துளியும் உதவாது என்பதை அறிவேன். அவர்கள் கண்களுக்குத் தெரிவது கம்பின் சுழற்சியும் என் உடலசைவுமே தவிர அதிலுள்ள நுணுக்கமல்ல.

அதுபோலவே கர்நாடக சங்கீதம், பரதம் அறிந்த நண்பர்கள் சிலர் உள்ளனர். ஒருமுறை கல்யாணி ராகத்தின் ஆரோஹணம், அவரோஹனம் பாடப்படுவதைக் கேட்ட நண்பர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். ஏனென்று கேட்டபோது அந்த ராகத்தைக் கேட்கும்போது தனது தொண்டையில் அதிர்வு உண்டாகும் என்றும் சங்கீதம் பழகிய எல்லோருக்கும் அது உள்ளதுதான் என்றும் சொன்னார். எனக்குத் தொண்டையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நான் கேட்கும் சங்கீதத்தை வெளிப்படுத்தும் பாடகர் தனது தொண்டையில் அதிர்வை உண்டாக்குகிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அதுபோல எனக்கு நடனம் என்பதே சுத்தமாக வராது. சில நடன பாவனைகளை அதில் பயிற்சியுள்ள நண்பர்கள் வியக்கும்போது ‘இதெல்லாம் கஷ்டமா?’ என அப்பாவியாகக் கேட்பேன். அந்த பாவனை ஏன் கஷ்டமென்றும் அந்த ஒரு பாவனையைச் செய்ய அவர்கள் வேறு என்னவெல்லாம் பயிற்சியைக் கடந்து வந்திருக்கக் கூடுமென்றும் விளக்குவர்.

ஒரு கலைத்துறையில் தேர்ந்தவரால் மட்டுமே அக்கலையை நுண்மையாக அணுகி, அதன் பின்னால் உள்ள பல அடுக்குகளைக் கவனிக்க முடிகிறது. கலை வெளிப்பாட்டின் அத்தனை பரிணாமத்தையும்  உள்வாங்கக் கூடியவனே அதன் தரம் குறித்து விவாதிப்பவனாகவும் இருக்கிறான். எளிய ரசிகனின் கண்களுக்குப் புலப்படாத பல மர்ம அடுக்குகள் அவன் கண்களுக்குத் தெரிகின்றன. இலக்கியம் எனும் கலையில் மட்டும் இத்தகைய நுண்ணுர்வும் திறன் கவனத்தில் கொள்ளப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இலக்கியம் என்பது மொழி சார்ந்ததாக இருப்பதால் பெரும்பாலும் கல்வியாளர்களும் மொழியியளார்களும் இலக்கியம் குறித்த கருத்தாக்கங்களை முன்வைப்பவர்களாக இருக்கிறார்கள்.  இலக்கியத்தை வெறுமனே மொழியியல் அடிப்படையில் அவர்கள் நோக்குவதால், கல்விப் புலத்தின் இலக்கியத் திறனாய்வுகளும் விமர்சனங்களும் கல்வியியல் அடிப்படையில் பட்டியலிடுவதாகவும் பாடுபொருள், உட்கருத்து, மெய்க்கருத்து என பிரித்து  புள்ளிகள் தருவதாகவும் உள்ளன. இலக்கியப் பாடங்களை இவர்களே படிப்பிக்கிறார்கள்.  அந்த ஒரு தகுதியைக்கொண்டே பெரும்பாலான பொது இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்றுவிடுகிறார்கள். இசை, நடனம் போன்ற கலைத்துறைகளில் இருப்பதைப்போல் அத்துறையிலேயே ஊறித் திளைத்த அனுபவசாலிகள், தமிழில் இலக்கிய ஆசான்களாக இருப்பது மிக மிக அரிது.

மேலும், நாளிதழ்களிலும் அமைப்புகளிலும் இலக்கியத்தின் செல்நெறிகள் குறித்த எவ்வித புரிதலும் இல்லாதவர்களே நிறைந்துள்ளனர். இலக்கியம் குறித்த மிகச்சரியான விமர்சனப் பார்வையை ஒரு படைப்பாளியால்தான் வைக்கமுடியும் என்பதில்லை. ஆனால் அதற்கு நிச்சயமாக மிக ஆழ்ந்த தொடர் வாசிப்பு அவசியம். நல்ல வாசிப்பு உள்ள ஒரு வாசகனால் ஒரு படைப்பின் ஆன்மாவை அடைந்து அதுகுறித்த தன் பார்வையை விமர்சனமாக வைக்க முடியும். ஆனால் இன்று விமர்சன மேடைகளை அலங்கரிக்கும் பலரின் வாசிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

‘ஐயா ஆகக்கடைசியாக நீங்க வாசித்த புனைவு நூல் எது?’ எனக்கேட்டால் அவர்கள் மாணவர்களாக இருந்தபோது வாசித்த நூலின் பெயரைக் குறிப்பிடுவர்.  அல்லது பு.பி, தி.ஜா என்று பொதுப்படையாக சில ஆளுமைகளின் பெயர்களை சொல்லிச் செல்பவர்களும் உண்டு. பலவீனமான எழுத்தாளர்களுக்கு இவர்களின் அருகாமையே சிறந்தது. பல வருடங்களுக்குப் பிறகு வெறும் சோற்றைப் பார்த்த ஒருவன் பசியுடன் அதை அள்ளித்தின்பதுபோல பல வருடங்களாக நல்ல புனைவை வாசிக்காத அவர்களுக்குக் கொடுக்கும் நூலெல்லாம் சிறந்ததாகவே இருக்கும்.

நான் கல்லூரியில் படிக்கும்போது சிலப்பதிகாரம் காட்டும் அறமென ‘அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம், உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும், ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்’ என்ற மூன்று கருத்துகளை மட்டுமே மனனம் செய்ய வைத்தனர். இந்த மூன்றும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் அறம் என அறியும் ஒருவனால் சிலப்பதிகாரத்தின் கலை நுட்பத்தை அறிய முடியுமா?

அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் எனும் கருத்து மொழிவழி கலையாக எப்படி உருவாகியுள்ளது என போதிக்கத்தான் இங்கு ஆள் இல்லை.

வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது

பாண்டியன் நீதி தவறாத மன்னன். அவன் செயலால் செங்கோலை வளைத்த வினையை இளங்கோவடிகள் ‘வல்வினை’ என்கிறார். ஆனால் அப்படி செங்கோலை வளைக்க விருந்த அத்தனை வலிமையான வினையை எதிர்கொண்டு தன் உயிரைத் தந்து செங்கோலை வளையாமல் நிமிர்த்துகிறான் பாண்டியன். சிலப்பதிகாரத்தில் இவ்விடத்தை உணரும் ஒருவன் அடையும் நிலையென்ன? வினை செயல்பட்ட வேகத்தைவிட மன்னனின் அறம் செயல்பட்ட வேகம் வாசகனுக்குக் கொடுப்பதென்ன? ஆம்! அதுதான் இலக்கியத்தின் இடம். அது அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் எனும் கருத்தைச் சொல்லவில்லை. நம்முன் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒவ்வொரு சொல்லையும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

சிலப்பதிகாரம் மட்டுமல்ல; நமது கல்வியும் இலக்கியத்தை அதன் நுண்மையான வடிவத்தில் அணுகிப் போதிக்காமல் கருத்துகளாகச் சுருக்கியே கொடுக்கின்றன. முறையான இலக்கிய வாசிப்புப் பயிற்சி இல்லாதவர்கள் மூச்சுத்திணறத் திணற மனனம் செய்த குறளையும் செய்யுளையும் ஒப்புவித்துத் தங்களின் இலக்கிய அறிவைப் பறைசாற்ற முயல்கின்றனர். தவறியும் இவர்கள் நவீன இலக்கியத்தின் பக்கம் வருவதில்லை. அவற்றை வாசித்து, புரிந்து, பொருளுணர, கடும் உழைப்புத் தேவையென அவர்கள் அறிவர். மரபிலக்கியங்களுக்கு ஏற்கனவே பொருள் எழுதப்பட்டுள்ளதால் அதை அப்படியே ஒப்புவிக்க எந்தச் சிரமமும் இல்லை. நவீன இலக்கியம் அவர்களுக்குச் சவாலாக உள்ளது. மரபிலக்கியம் போலவே அதை உள் சென்று அறிவதும் ஒரு பயிற்சியின் விளைவே என அறியாமல் அவற்றை விலக்கி வைக்கின்றனர். அல்லது தங்கள் முன்னறிவுக்கு ஏற்ப சுலபமாக மடித்துக்கொள்கின்றனர். பின்னர், மழுங்கிய மொழியில் கலைத்திறனற்ற ஒரு படைப்பு கையில் கிடைக்கும்போது அதை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடுகின்றனர். உண்மையில் அந்த உற்சாகம் தங்களுக்கும் இலக்கியம் புரிகிறது எனும் தாழ்வுணர்ச்சி அகலும் வெளிப்பாடுதான்.

மொழி புரிவதால் ஒருவருக்கு இலக்கியம் புரிகிறது என்று கொள்ளக்கூடாது. இலக்கியத்தில் உள்ள மொழிப் பயன்பாடு தனித்துவம் கொண்டது. இலக்கியம் மொழியைக் கருவியாகக் கொண்டே தன்னை நிகழ்த்திக்காட்டுகிறது. வண்ணம் ஓவியங்களில் நிகழ்வதுபோல, சத்தம் இசையில் நிகழ்வதுபோல, அசைவுகள் நடனத்தில் நிகழ்வதுபோல இலக்கியம் மொழியில் நிகழ்கிறது. இந்த அடிப்படையை அறியாதவர்கள் மட்டுமே ‘அத நேரடியா சொல்ல வேண்டியதுதானே’ என்றும் ‘எல்லாருக்கும் புரியுற மாதிரி சொல்லித்தொலைய வேண்டியதுதானே’ என்றும் கூறுவர்.

எல்லோருக்குமான இலக்கியம்

‘அகிலம் நீ’ தொகுப்பின் சாயல் கொண்ட கதைகள் எல்லோருக்கும் புரியும் விதமாக எளிமையாகச் சொல்லப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துகள் இன்னொரு வேடிக்கை.

‘எல்லோருக்கும் புரியற மாதிரி கதைகள்’ எனும் வாசகம் இலக்கியச்சூழலில் பிரபலம். எல்லோருக்கும் புரிந்த இலக்கியம் என எந்தக் காலத்தில் உருவாகியுள்ளது எனக்கேட்டால் பதில் வராது. சங்க கால இலக்கியமா? அறநெறி இலக்கியமா? பக்தி இலக்கியமா? எனக் கேட்கும்போது திருக்குறளின் பொருளைச் சொல்லும் கோமாளிகளைச் சந்தித்ததுண்டு. அல்லது பட்டிமன்றங்களுக்காக மனனம் செய்த செய்யுள்களை ஒப்புவிப்பவர்களைப் பரிதாபமாகக் கடக்கலாம்.

கொரோனா வந்தபோது ஆறு மாதங்களுக்கு கார் கடனைச் செலுத்த வேண்டாம் என ஓர் அறிக்கை வந்தது. அந்த அறிக்கை புரியாத பலரையும் நாம் சந்தித்திருப்போம். நன்கு கற்றவர்கள் தங்களுக்குப் புரியவில்லை என முகநூலில் புலம்பிக்கொண்டிருந்தனர். அறிக்கை என்பதே எல்லோருக்கும் புரியவேண்டும் எனத் தயாரிக்கப்படும் எளிய வடிவம். ஆனால் அதுகூட சிலருக்குப் புரியாமல் உள்ளது. இப்படியே நாளிதழ் செய்திகளை வாசித்து அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களும் ஜோசியக் குறிப்பை வாசித்துப் புரியாமைக்கு ஆட்படுபவர்களையும் சகஜமாக நம் வாழ்வில் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். இவை எல்லோருக்கும் புரிய வேண்டும் எனும் நோக்கத்தில் வெகுசன ஊடக மொழியில் உருவாகும் பனுவல்கள். அப்படியிருக்க இலக்கியம் எனும் தனித்த கலை வடிவம் மட்டும் எல்லோருக்கும் புரிய வேண்டும் எனும் கூப்பாடு ‘எனக்குப் புரியவில்லை’ எனும் பலவீனமான புலம்பலின் வேறொரு பிரதிபலிப்புதான்.

சமூகம் என்பது பன்மைத்தன்மையானது. அதற்கேற்ப பண்பாடுகளும் அறங்களும் வேறுபடுகின்றன. எனவே எல்லோரும் ஏற்கும், எல்லோருக்கும் புரியும் இலக்கியமென்பது எப்போதும் சாத்தியமாகாது.  ‘அகிலம் நீ’ தொகுப்பு தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கெல்லாம் புரியுமென்றால் அதில் கதையென ஒன்றுமே இல்லையென்பதே அடிப்படைக் காரணம். எளிய சிக்கல், அதைத் தாங்க எளிய சூழல், அதன் வழி ஒரு கருத்து இதுவே அக்கதைகளின் அடிப்படை.

கதைகளின் கட்டுமானம்

மலேசிய நாவல்கள் குறித்து விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருக்கும்போது பேராசிரியர் ஒருவர் கேட்டார். ‘இந்த நாவல்கள் அதனதன் வகைமையில் அடங்கவில்லை எனச் சொல்ல நீங்கள் எந்த ஆய்வுகளை வாசித்தீர்கள்? எந்த முந்தைய ஆய்வு முடிவின் அடிப்படையில் இதையெல்லாம் சொல்கிறீர்கள்?’

உண்மையில் நான் எந்த ஆய்வுகளையும் வாசிக்கவில்லை. விமர்சனம் செய்யும் பொருட்டு இனி வாசிக்கப்போவதுமில்லை. ரசனை விமர்சனத்துக்கு அது தேவையுமில்லை. உலகில் தலைசிறந்த நாவல்களாகச் சொல்லப்பட்டவைகளை வாசிப்பதும், அவை ஏன் சிறந்தவை என அறிய அவற்றைக் குறித்து எழுதுவதும், அவ்வெழுத்தின் வழி அதன் அடியாழம் செல்வதும், அவற்றின் நுண்மைகளைக் கண்டடைவதும் ரசனை விமர்சகனாக இருக்க அடிப்படை பயிற்சி. அவ்வழியைத் தமிழில் உருவாக்கித்தந்த கா.ந.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் வரையிலான பட்டியலை நான் அவரிடம் சொன்னபோது அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது என்றார்.

கல்வியாளர்களின் திறனாய்வு முறை ஒரு வாகனத்தின் அனைத்து உபரிப் பாகங்களும் உள்ளதா என தன் கையேட்டில் உள்ளதுபோல ஒப்பிட்டு பார்ப்பதைப் போன்றது. அது தொழில்நுட்ப வல்லுனரின் பணி. நான்கு சக்கரங்கள், இருக்கைகள், ஸ்டேரிங், எஞ்சின் எல்லாம் உண்டென்றால் அது காரேதான் என எளிதாக முடிவுக்கு வந்துவிடலாம். காரணம் அதன் அளவுகோள்கள் இலக்கணங்களாக வகுக்கப்பட்டவை. ரசனை விமர்சகனின் பணி அதுவல்ல; உலகின் சிறந்த கார்களை ஓட்டிப் பார்த்துவிட்டு தான் இயக்கிக்கொண்டிருப்பதின் தரம் என்ன என்றும் அதன் இலகுத்தன்மையையும் இயங்குத்தன்மையையும் அரூபமாக இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் சொற்களாக வகுக்க முயல்வான். இந்த ரசனை அடிப்படையிலான பரிந்துரையில் மாற்றுக் கருத்துகளுக்கு எப்போதும் இடமுண்டு. அக்கருத்தை வைப்பவனின் அதற்கு முந்தைய அனுபவமும் வெளிபாடும் என்ன என்பது முக்கியமானது. ஆனால் நான்கு சங்கரங்களைப் பொருத்தியிருப்பதால் மாட்டு வண்டியை ‘மஸ்டா’ கார் என ஒரு ரசனை விமர்சகன் ஒருபோதும் சொல்ல மாட்டான்.

விமர்சனத்தை முன்வைத்தபிறகு மலேசிய சூழலில் மட்டுமே நடக்கும் கோமாளித்தனம் ஒன்றுண்டு. படைப்புகளை எழுதியவர்கள், ‘நீங்களெல்லாம் வேறு முகாம், எங்கள் பாணி வேறு வகையானவை, எனவே அதை வேறு முறையில் அளவிட வேண்டும்’ என்று ஒரு காரணம் சொல்லி மழுப்பலாகச் சிரிப்பர். அவர்கள் சொல்லிக்கொள்ளும் அந்த ‘வேறு பாணி’ படைப்புகளின் முன்னோடிப் புனைவுகள் தமிழில் ஏதேனும் உண்டா? தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அதன் இடம் என்ன? இன்று அவ்வாறான படைப்புகள் குறித்து எவ்வகையான மதிப்பீடு உண்டு? எனும் கேள்விகளை தங்களுக்குள்ளாகவேணும் கேட்டுக்கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். தங்கள் எழுத்துக் குவியல்கள் விமர்சிக்கப்படாமல் இருக்க, அரண் அமைக்கும் இவர்களால் இளம் வாசகர்களின் வளர்ச்சியும் விமர்சன மனமும் தட்டையாகவே நிலைக்கின்றன. இந்தப் போலி கும்பலில் இருந்தும் அழுத்தங்களிலிருந்தும் ஓர் இளம் படைப்பாளி மேலெழுந்து வருவது சாமானியமானதாக இல்லை.

‘அகிலம் நீ’ தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்ததும், ஒரு சிறுகதைக்குரிய அடிப்படைகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாத, அது பற்றி அறிந்துகொள்ளும் மெனக்கெடலும் இல்லாத ஒருவரால் எழுதப்பட்ட கதைகள் என்று தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

‘கொத்தித்திரியுமந்த கோழி’ என்றொரு கதை. ஒரு பெண்ணுக்குக் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வருகிறது. அவள் பினாங்கில் விபத்து ஏற்படுத்தியதாகச் சொல்லி மிரட்டுகிறார்கள். இவள் பயந்து அழும்போது அவள் கணவன் வருகிறான். தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மீண்டும் காவல் நிலையத்தை அழைத்தால் அது ஒரு பணம் பறிக்கும் கும்பலின் அழைப்பு எனத் தெரிய வருகிறது. இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

இதைவிட சுவாரசியமாக நாளிதழ் செய்திகளில்கூட தகவல் கிடைக்கும். ஒரு பணமோசடியை முறியடித்த செய்தியைக் கூடுதல் சுவரஸ்ய தகவல்களுடன் அண்மையில்தான் புலனங்களிலும் பலரும் பரப்பிக்கொண்டிருந்தனர். பண மோசடி கும்பல் ஃபோனில் அழைத்து ஏமாந்தது என்பதெல்லாம் ஒரு கதையென சொல்ல எவ்வளவு தைரியம் வேண்டும். பொன்.கோகிலம் இந்த நூலில் சொல்லியுள்ள அனைத்துமே சம்பவங்கள்தான். சம்பவங்கள் என்றால் ஒருவள் இருந்தாள், அவள் இப்படியானாள் எனும் ஒற்றை வரி சம்பவம். பண நெருக்கடியில் உள்ள ஒரு பெண் ‘கம்பேனியன்’ எனும் தொழில் செய்கிறாள். பணக்காரர்களுடன் சந்திப்புகளில் உடன் இருக்க வேண்டும். அதன் வழி அவள் தன் கல்விச் செலவை ஈடுகட்டுகிறாள். ‘சொர்க்கப் பறவை’ எனும் இக்கதை அதிகபட்சம் நானூறு சொற்களைக் கொண்டது.

பொன்.கோகிலம் இந்தத் தொகுப்புக்காக அவசர அவசரமாகக் கதைகளை எழுதியிருக்க வேண்டும். பறவைகளின் பெயர்களைத் தலைப்பாக வைப்பதைப் புதுமையென நம்பி அவர் எழுதியுள்ள குட்டிக்கதைகளுக்குப் பொருந்தாத தலைப்புகளை வைத்துள்ளார். கதையின் தொடக்கத்திலேயே ‘இந்தப் பறவை எப்படிப்பட்டது’ என விளக்கம் கொடுத்துத் தொடங்குகிறார். அந்தத் தகவல்கள் சில சுவாரசியமாக உள்ளன. அதுபோல உள்பக்க வடிவமைப்பும் தாளின் தரமும் சிறப்பு. கதையைத் தவிர பிற அனைத்திலும் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார்.

எவ்வளவு முயன்றாலும் எந்த விமர்சகராலும் பொன்.கோகிலத்தின் படைப்புகள் நுழைந்து மேலும் அதிகமான கண்டடைவுகளைச் சொல்வது சாத்தியமே அல்ல. அவை சிகரெட்டில் இருந்து உதிர்ந்த சாம்பல் மட்டுமே. எவ்வளவு ஊதினாலும் அதில் தீப்பொறி கிளம்புவதில்லை. காற்றில் பறந்து கரைந்து காணாமல் போகக்கூடிய அபத்த முயற்சி அகிலம் நீ.

பொன்.கோகிலம் ‘அகிலம் நீ’ எனும் பெண்கள் அமைப்பின் மூலம் சமூகத்துக்குச் சேவையாற்றி வருகிறார். அது பாராட்டத்தக்கது. இன்றைய யுவதிகளின் வாழ்வு குறித்து அறிய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. இன்றைய பெற்றோர்கள் சொல்லத் தயங்கும் விடயங்கள் அவை. அந்தச் சிறுமிகளின் கலையறிவு வளர்ச்சியின் நன்மை கருதி ‘அகிலம் நீ’ தொகுப்பை வாங்குபவர்களிடம் இவை சிறுகதைகள் அல்ல; அறநெறி போதிக்கும் குட்டிக்கதைகள் எனத் தெளிவுபடுத்தினால் இலக்கிய உலகமும் அவருக்கு நன்றிக்கடனுடன் இருக்கும்.

12 comments for “விமர்சனம் ஏன் தேவையாகிறது: பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலை முன்வைத்து

  1. M. Prabhu
    July 1, 2020 at 8:05 am

    நம் எழுத்தாளர்கள் உபதேசக் கதைகளை எழுதுவதிலிருந்து மாற வேண்டும். நானும் அந்த மாற்றத்தை எழுத்தில் கொண்டு வர முயல்கின்றேன். ஆனால் என் எழுத்துக்கள் இன்னமும் சிறப்பாக அமையவில்லை.

    -எம். பிரபு, பெந்தோங்.

  2. Krishnan
    July 1, 2020 at 12:06 pm

    ஒருவர் பிரபலமாக இருக்கும் காரணத்தால் விமர்சிக்கப்பட வேண்டுமா என்ற மனநிலையில் வாசித்தேன். ஆனால் படைப்பல்லாமல் விமர்சனம் இல்லாத நிலையில் நடக்கும் அருவருப்பை உங்கள் கட்டுரை சுட்டிக்காட்டுவது இதன் தரத்தைப் பல மடங்கு கூட்டியுள்ளது. தொடருங்கள் நண்பரே.

  3. Viji
    July 1, 2020 at 3:35 pm

    மாட்டு வண்டி – மஸ்டா கார். குளியலறை பாடகர்- கச்சேரிப் பாடகர். கிறுக்கள்களை தலைசிறந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கநினைப்பது. தமிழ் தெரிந்தால் எழுத்தாளர் இலக்கியவாதி ஆகிவிடலாம். போன்ற உதாரணங்களை மீண்டும் மீண்டும்.. இன்னும் இன்னும் எளிமையாகச் சொன்னாலும் கூட, மலேசிய இலக்கிய உலகம் என்று இருக்கின்ற ஒரு ஆதிக்கக் குழு குப்பைகளைத்தான் கொண்டாடும். அங்கே வாசிப்பிற்கு வழியில்லை. வல்லினத்தின் வருகைக்குப்பிறகு குப்பைகள் கொஞ்சமாகக் கொட்டுவது கூடுதல் ஆறுதல். காலப்போக்கில் இது இன்னும் குறைய வாய்ப்புண்டு.
    தமிழ் கூறும் நல்லுலகம் சொல்லுவனவற்றை ஒரு ஓரமாகத் தூக்கிப்போட்டுவிட்டு, இலக்கியத்தின் கலையினை உள்வாங்க முயல்வோம். அது முடியாதபோது, குறைந்தபட்சம் குப்பைகளைக் கொண்டாடாமல் இருப்போம். அதுவே இலக்கியத்திற்கு ஆற்றும் சிறந்த பணி. ஒன்றுமில்லாத படைப்பை தூக்கிப்பிடித்து தாறுமாறாக பாராட்டுகிறபோது அழுகை வருகிறது. 😭
    சிறப்பான அலசல் நவீன். வாழ்த்துகள்

    ஸ்ரீவிஜி.

  4. Bharathes Devi
    July 1, 2020 at 4:48 pm

    என் அறிவுக்கு எட்டிய வரையில், நீங்கள் எழுதிய விமர்சன கட்டுரையிலேயே இதுதான் சிறப்பான படிமம்… விமர்சன கூறுகளை வகைப்படுத்திய விதம், இலக்கியம் என்றால் என்ன, ரசனை விமர்சனம் என்றால் என்ன என்று சங்க கால இலக்கியம் வைத்தும் நம் நாட்டின் நாவல்களின் தரத்தையும் இலக்கியம் பங்கையும் வைத்தும் விளக்கமளித்தது சாலச் சிறந்தது…. யார் மனதையையும் புண்படுத்தாமலும், professional ethics- ஒடும் எழுதப்பட்ட விமர்சனம் மட்டுமில்லாமல், நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்கும் கட்டுரை… இக்கட்டுரையை வாசித்த பிறகாவது மலேசிய இலக்கியத் துறையில் மாறுதல் வரட்டும்… வரும் என நம்பிக்கை இக்கட்டுரை கொடுக்கிறது.
    ஏனென்றால் உங்கள் கட்டுரை
    தனிப்பட்ட நபரை தாக்கமால், இலக்கியக் கண்ணொத்தோடு புத்தகத்தின் சிறப்பையும் குறையையும் முன்வைக்கிறது…
    வாழ்த்துகள்…
    இதையும் குறை கூறினால் அவர்களின் பகுத்தறிவை கொண்டு , கட்டுரையின் மையக் கருத்தை புரிந்து கொள்ள தவறவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்…

  5. கயல்விழி
    July 1, 2020 at 4:53 pm

    மரியாதைக்குரிய ஐயா. என் கல்லூரியில் இலக்கியம் குறித்து நான் கற்றதைவிட உங்கள் கட்டுரையின் வழி அறிந்தேன். எங்களைப் போன்ற கல்லூரி மாணவர்கள் பல சமயங்கள் விரிவுரைஞர்களின் கட்டளைக்கு அடிபணிந்து இதுபோன்ற நூல்களை வாங்க வைத்துவிடுவர். இப்படி எங்கள் தலையில் கட்டப்பட்ட நூல்கள் ஏராளம். இதை தடுப்பது முயற்கொம்பு. பலர் மதில் மேல் பூனைகள் போல என்ன செய்வதென தெரியாமல் அல்லாடுவர். விரிவுரைஞர்களின் நட்பை தவறான முறையில் பயன்படுத்தி எங்களை போன்ற மாணவர்கள் தலையில் மிளகாய் அறைப்பவர்கள் இங்கு அதிகம். அது போன்ற படைப்புகள் என்ன லட்சணத்தில் உள்ளது என வெள்ளிடை மலையாக சொன்ன உங்களுக்கு நன்றி.

  6. July 1, 2020 at 11:09 pm

    வார்த்தைகளை கொட்டுவதும், பின்பழிவாங்களும், விமர்சனம் என்ற பெயரில் பதிவு செய்ய பட்டு, வல்லினம் தன் முதிற்சியின்மையை வெளி உலகத்திற்க்கு காட்டியிருக்கிறது.

    வல்லினம் அறிவீனமாக பதிவிட்டதை இப்பொழுது தான் படித்தேன். முதலில் வல்லினம் , அகிலம் நீ படைப்பாசிரியரின் தொடர்பு வட்டத்தை கண்டு பயபடுகிறதா என்ற கேள்வி எழுகிறது?

    ஆரம்பம் முதலே புத்தகத்தை குறை சொல்வது மட்டுமே வல்லினத்தின் நோக்கமாக இருப்பதை ஆரம்ப நிலை எழுத்தாளன் கூட எளிதில் உணர முடியும் .

    விமர்சனம் என்ற பெயரில் படைப்பாசரியரை சரி செய்வதாக கூறி , வல்லினம் தன் நற்பெயரையும், மலேசிய எழுத்துலகத்திற்கு புதிதாக யாரும் வந்து விட கூடாது என்பதிலேயே கவனமாக இருக்கிறது.

    விமர்சகரின் கருத்ததிகாரம் , படைப்பாளியின் தந்தையார் வரை சென்று , பழி கூற முடியாமல் திரும்பியிருக்கிறார். கூர்ந்து கவனித்தால் வல்லினம் நவீனின் வார்தைகள் அனைத்தும் இந்த புத்தகத்திற்க்கு அப்பாற்பட்டவை/ பொருத்தமற்றவை.

    முதலில் சக /புதிய எழுத்தாளரை அங்கீகரிக்கும் ஒரு பண்பட்ட போக்கு அந்த விமர்சனத்தில் இல்லை.

    நவீனின் விமர்சனம் பெரும்பாலும் அகிலம் நீ ஆசிரியரின் பரந்த தொடர்பு வட்டம், அவர் அப்பாவின் அடையாளம் இவற்றை தான் அவன் குறிப்பிடுகின்றார்.

    இந்த விமர்சனத்தை கவனித்தால், இது ஒரு அறமற்ற ,எழுத்து நெறியற்ற ஒரு மட்டமான விமர்சனம்.

    ஆதித்தன் மகாமுனி என்ற கல்லூரி இளைஞன் , இந்த புத்தகத்தை விமர்சனம் செய்த விதம் பாராட்டுக்குறியது. அந்த தரத்தை கூட பேண இயலாத வல்லினம், வருங்காலங்களில் தன் தரத்தை இழக்கும்.

    நன்றி

    முனைவர்.அனந்தராமகிருஷ்ணன்

  7. வாசுதேவன்
    July 2, 2020 at 12:18 pm

    இந்தக் கட்டுரை எங்கள் கல்லூரி குழுவில் பகிரப்பட்டது. எங்கள் இலக்கிய வாசிப்பை ஒருமுறை சரி பார்த்துகொள்ளவும்; எங்கள் இலக்கிய முயற்சியை மேம்படுத்திக்கொள்ளவும் இந்தக் கட்டுரை உதவும். தாங்கள் சொல்வதுபோல எல்லா கல்வியாளர்களும் அப்படியானவர்கள் அல்ல. இலக்கியத்தின் நுட்பங்களை நல்ல முறையில் போதிப்பவர்களும் உள்ளனர். ஆனால் ரசனை விமர்சன வகை பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மையானது. நிறைய படித்தால் மட்டுமே ஒரு படைப்பு பற்றி சொல்ல முடியும்.

  8. Su.venugobal
    July 2, 2020 at 3:17 pm

    முக்கியமான தமிழ் எழுத்தாளன் வேலைமெனக்கெட்டு பொன்னான நேரத்தை விரயமாக்கிக் கொண்டு பொன். கோகிலத்தின் அகிலம் நீ போன்ற படைப்புகள் இலக்கியம் இல்லை என்று எழுதுவதின் அக்கறை குறித்து இளம்வாசகர்களாவது கருத்துச்சொல்லுங்கள். விவாதியுங்கள். மேலான படைப்பு குறித்து பேசுங்கள். இல்லை என்றால் மலேசிய சூழலில் நல்ல படைப்புகள் வர சாத்தியமில்லை. ஆனால் ஒன்று நவீன் போன்ற ஒரு சிலர் மலேசிய சூழலிருந்து விலகி தனித்த ஆர்வத்தால் இலக்கியத்தின் பேரெல்லை நோக்கி செல்வதை இந்த விவாதமற்ற சூழல் தடுத்துவிடாது. ஒரு படைப்பாளி விரும்புவது மலேசிய மண்ணில் புதிய இலக்கிய போக்கை உருவாக்கத்தான்.

    சு.வேணுகோபால்

  9. Jeya
    July 3, 2020 at 1:53 am

    Well said Mr Navin. So called the celebrated Tamil literary works here are mostly pretentious and we like to overvalue them. We over analyze the works to justify our majors or the seniors or the celebrity writers. Literary criticism helps to understand the context of the work. A good criticism helps us to see thing beyond the text and to interpret the text within the work. With your continuous process of constructive criticism, I am sure over a long period of time the best in terms of social value persevere irrespective of commercial success. If people like you failed to do this, then based on parameters like commercial success texts of relatively low value can shadow better ones.
    Jeya

  10. தமிழ்வாணன் @ வாணன்
    July 3, 2020 at 8:30 am

    முனைவர்.அனந்தராமகிருஷ்ணன் போன்ற அறிவிளிகள் உள்ள சமூகத்தில் இது போன்ற விமர்சனங்கள் அவசியமே. நானும் பொன் கோகிலத்தின் நூலை வாங்கினேன். (அவர் பெயர் பொன் கோகிலம் என இருக்க வேண்டும். புள்ளி வராது. மேலும் சில எழுத்துப்பிழைகள் உள்ளன கவனிக்கவும்) அது குப்பை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த நூலின் விலை 40 ரிங்கிட். என் நண்பன் வாசித்து என்னிடம் 20 ரிங்கிட்டு விற்றான்.

    இதே இதழில் இளம் படைப்பாளிக்கு விருது என அறிவிப்பு போட்டிருந்தும் அந்த அறிவிளி இளம் எழுத்தாளர் வருவதை வல்லினம் தடுக்கிறது என்கிறார். இது போன்றவர்களை நம்பிதான் இப்படியான நூல்கள் வருகின்றன. ஒரு படைப்பு பொதுவுக்கு வந்த பிறகு அதை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. நானே அதை 20 ரிங்கிட்டுக்கு இரண்டாம் கையாக வாங்கியதற்கே நொந்தேன்.

    நீங்கள் இந்த நூலை பற்றி பேசவில்லை. நூலின் அடிப்படையில் பொன் கோகிலம் போன்றவர் செய்யும் politics குறித்து பேசுகிறீர்கள் என்பதுகூட பலருக்கும் புரியவில்லை. இந்த பாலிடிக்ஸை நம்பி அது தரமான புத்தகம் தான் என வாசிக்காமலேயே நம்பும் பலரில் ஒருவன் என் நண்பன்.

    எங்களைப் போன்றவர்கள் ஏமாறாமல் இருக்கவாவது இதுபோன்ற விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

  11. July 3, 2020 at 3:04 pm

    நன்றி திரு.தமிழ் வாணன். பொதுவாக யாருடைய கருத்துக்களுக்கும் எதிர் கருத்தை நான் பதிவு செய்ய விரும்புவதில்லை. என்னுடைய கருத்துக்கு நானே பொறுப்பு.
    பண்பட்ட விமர்சனம் அவசியம் என்பதில் மாற்று கருத்தில்லை. புதிய எழுத்தாளர்களை நீங்கள் விமரசனம் என்ற பெயரில் துவம்சம் செய்கிறீர்கள். அவ்வளவே! நவினுடையதை போன்று இளம் பதிப்பகம் ஒன்று விருது அறிவித்தால் அது ஊக்கபடுத்துதல் என்று பொருள் படுகிறதா? ஏராளமான விருதுகள் தகுதியான புத்தகத்திற்க்காக முடங்கி கிடக்கின்றன தெரியுமா உங்களுக்கு?
    ஒரு பதிப்பாளன் விருது அறிவிப்பது, அவனின் நட்பு வட்டத்தை பெருக்க மட்டுமே! அது அரசின் புத்தக அங்கீகாரத்திற்க்கு இணையானதா? இது வரை நவினிடமிருந்து இளம் எழுத்தாளர்கள் விருதை பெற்றவர்களின் புத்தகங்கள் வேறேதேனும் பன்னாட்டு விருதினை பெற்றிருக்கிறதா? இல்லை என்றால் ஏன் என அலசுங்கள்.

    முழு நேர வாசிப்பாளன் நல்ல எழுத்தாளன் என்பெதெல்லாம் வடிவேலுவின் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற வசனத்தை போன்றது. நீங்கள் “முதலில் விமர்சனம் தான் ஒரு நூலை, புத்தகத்தை அளவிடும் கருவி என எதனடிப்படையில் கூறுகிறீர்.”

    மலேசிய எழுத்துலக அரசியல் எனக்கு தெரியாது, அதில் நான் உடன்பட விரும்ப வில்லை. ஆனால் விமர்சனம் என்னும் இடுக்கின் வாயிலாக, நவின் நூலாசிரியரின் நட்பு ,தொடர்பு வட்டத்தை சாடுவதை ஏற்கிறீர்களா ! நூலில் எழுத்து பிழை இயல்பு. அது அச்சு பிழையா அல்லது படைப்பாசிரியர் காரணமாக பதிவிட்டுள்ளாரா ? “ நீங்கள் ஏமாற்றமடைந்தை பதிவு செய்கிறீர்கள். உங்களை போன்றோரை மகிழ்வுற செய்ய புத்தகம் எழுதபடவில்லை. முதலில் அதை உணருங்கள். படைப்பின் நோக்கம், அசியத்தை அறிந்து , சரி, தவறுகளை சுட்டுங்கள். எழுத்துலகம் அல்லது தனிநபர் எதிர்பார்ப்பதை மட்டுமே ஒரு நூலாசிரியர் தர வேண்டுமென்ற கட்டாயமில்லையே திரு. தமிழ் வாணன் . நேர்மறையான விமர்சனத்தை வரவேற்ப்பார்கள் அனைவரும்.”

    தனிமனித வெறுப்பு, அதை தொடர்ந்த சாடல் இதையெல்லாம் நேரடியாக அல்லவா சரி செய்ய வேண்டும், படைப்பினூடாக அல்லவே. நீங்கள் ஏதேனும் புத்தகம் இதுவரையில் எழுதியுள்ளீர்களா? உங்களின் புத்தக மதிப்பீடு இருந்தால் பதிவிடுங்கள்.

    இறுதியாக அந்த படைப்பினை உங்கள் நாட்டின் பல்கலைகழக பேராசிரியர்களும், தமிழ் மாணாக்கர்களும் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். அதனை வாசியுங்கள் பிறகு பதிவிடுங்கள். “என்னுடைய முந்தைய கருத்தை படித்த நூலாசிரியர் பேசும் போது, விமர்சனம் என்பது தனிநபர் புரிதல் சார்ந்தது. அதனை ஏற்பதும் மறுப்பதும் வாசிப்பாளர்கள் முடிவு செய்வாரகள் என்றதோடு, என்னுடைய பதிவின் குறைகளையும் சுட்டி காட்டினார்.” பண்பட்ட மணிதனின் இயல்பு அது. நவினின் சுட்டலில் அது இல்லையே !

    “ஈழத்தில் நடந்த தமிழின படுகொலைகளை அது உள்நாட்டு பிரச்சனை என எளிதல் கடந்து சென்ற ஜெயமோகனை கொண்டாடுவோரிடமிருந்து என்ன தரத்தில் விமர்சனம் வரும் என்று அனைத்துலக எழுத்தாளர்கள் அறியாமலிருக்க மாட்டார்கள்” என மீண்டும் நவினுக்கு நினைவூட்டுகிறேன்.

    இறுதியாக “அறிவிளி” என்று என்னை வாழ்த்திய தமிழ் வாணன் சகோதர்ருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

    முனைவர். அணந்தராமகிருஷ்னண்.

  12. July 3, 2020 at 11:56 pm

    மலேசிய, சிங்கை தமிழ் இலக்கியச் சூழலில் புனைவையும், அதையொட்டி அவ்வெழுத்தாளரின் அரசியலையும் பேசும்போதெல்லாம் தெருச்சண்டையாக்கிவிடுகிறார்கள். ஆரோக்கியமான உரையாடல்/விவாதம் வளராமல் வெறுப்பை உமிழ்ந்து தனிமனித தாக்குதலுக்கும் தயாராகிவிடுகிறார்கள். எதிர் விமர்சனமே வரக்கூடாதென்றால் எழுதியதை அலமாரியில் பூட்டி வைத்துக்கொள்ளலாமே. வேண்டும்போது எடுத்த, தொட்டு, தடவி தானாக கொண்டாடிக்கொள்ளலாம். எதற்குப் பதிப்பிக்க வேண்டும்? இது சிறுகதை இல்லை என்று விமர்சனம் முன்வைக்கப்படுமெனில் இது சிறுகதைதான் எனப் பேச சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் கூச்சலிடுபவர்களைப் பொருட்படுத்த அவசியமில்லை.

    அடுத்து, இச்சிறுகதை குறித்த விமர்சனத்திற்கு வருகிறேன். இந்நூலை வாசிக்கும் முன்பே மக்கள் ஓசை நாளிதழில் இதிலுள்ள சிறுகதைகள் சில குறித்து ஒரு எழுத்தாளர் எழுதியிருந்த விமர்சனத்தை வாசித்தேன் (எல்லா கதைகளையும் வாசித்து எழுத அவருக்கு நிதானமிருக்கவில்லை போல). எழுத்துநடை சுவாரசியம், கதைக்கரு என ஏகபோக புகழ்ச்சி மழை. அதையடுத்து, பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் இந்நூலை பாராட்டி மேடையில் பேசியதாக அறிந்தேன். புத்தகம் கிடைத்ததும் பின் அட்டையில் மற்றுமொரு எழுத்தாளர் புகழுரை கொடுத்திருந்தார். அடுத்து, எழுத்தாளர் இந்நூலை எழுத எடுத்துக்கொண்ட கால அவகாசத்தையும் மெனக்கெடலையும் உற்சாகமாய் கூறியிருந்தார். இத்தனை பீடிகைகளுக்குப் பின் வாசிக்கத் தொடங்கியவுடன் முதல் பத்தியிலேயே எனக்கெழுந்த கேள்வி ‘நான் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்பது மட்டும்தான். புத்தகத்தின் முன் அட்டை, verso page எங்கும் இது சிறுகதையென குறிப்பில்லை. நல்லவேளையாக இன்பா சுப்பிரமணியம் இது சிறுகதைதான் என பின் அட்டையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இல்லாவிட்டால் கடைசிவரை கட்டுரை சுருக்கம் வாசிப்பதாக நினைத்திருப்பேன் (ஆம் அது கட்டுரையாகவும் இல்லை). பெரிது பெரிதாய் இருந்த பக்க எண்கள், பறவைகளின் படங்கள், சில ஓவியங்கள், பெட்டி செய்திகளை நீக்கினால் ஒவ்வொரு சிறுகதை??யும் ஒன்றரை பக்கம் தேராது. சரி, குறுங்கதை வடிவிலாவது ஏதும் இருக்குமாவென முழுக்கப் படித்து பார்த்தேன். ஒன்றுமில்லை.

    சிறுகதை குறித்த வாசிப்பும் எழுதுவதற்குண்டான மெனக்கெடலும் அற்ற fake literatureக்கு ஒரு உதாரணமாக இப்பிரதியைக் கொடுக்கலாம். ஆனால் இப்படி சொல்லி அத்துடன் அதை முடித்துக் கொள்ள முடியாது. காரணம் இந்தப் படைப்பைக் காட்டிலும் மிக ஆபத்தும் அபத்துமானது இதனுள் கிளைவிட்டிருக்கும் அரசியல்.

    முதலில், இப்படியான எழுத்துகள் புதிதில்லைதான். எல்லா fake literature பற்றியும் நாம் பேசமுடியாது. ஆனால் அதை முன்னெடுப்பவரின் அரசியல் ஆபத்தானதெனில் அவசியம் அதுகுறித்து பேசவேண்டியுள்ளது. அதைதான் நவீன் செய்துள்ளார். நவீனுடைய விமர்சனம் பொன் கோகிலத்துக்கு மட்டுமானதல்ல.
    எல்லா காலங்களிலும் இந்நாட்டில் இலக்கியமல்லாதவைகள் சில கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மூலம் நல்ல இலக்கியமாக அடையாளம் காட்டப்படுவது நிகழ்ந்து வருகிறது. (இதற்கு நட்பு, வாசிப்பு குறைவு, தனக்கான லாபம், புண்படுத்தக்கூடாது என்ற எண்ணம் என பல காரணங்கள் இருக்கலாம்.) இந்தப் புத்தகமுமேகூட பதிப்பிக்கப்படும் முன் முன்னுரை எனும் பேரிலும், நாளிதழில் விமர்சனம் என்றும், விரிவுரையாளர் ஒருவரால் திறனாய்வு என்ற பேரிலும் மிக வேகமாக ஒரு பொது கவனத்தை பெற்றுவிட்டது. இதை விளம்பரமாக்கிதான் இப்படியான புத்தகங்கள் விற்கப்படுகின்றன. பின்னர் இவைகள்தான் மலேசிய இலக்கியமாக அடையாளப்படுத்தப் படுகின்றன. எழுதியவர்கள் பின்னர் சிறுகதை எழுதுவது எப்படி என்று வகுப்பு நடத்த புறப்பட்டு விடுகிறார்கள். மறுபக்கம் தரமான படைப்புகள் காணாமலாக்கப்படுகின்றன, தேர்ந்த எழுத்தாளன் இப்பெருங்கூச்சல்களுக்கு மத்தியில் அமிழ்த்தப்படுகிறான். சீ. முத்துசாமி உள்ளிட்ட எழுத்தாளர்களை வாய்மொழி வரலாறுக்காக வல்லினம் பதிவு செய்தபோது பெரும்பாலோர் மொன்னை எழுத்துகளால், இந்த அரசியலால் நசுக்கப்பட்ட கதைகளை மனதிலிருந்து பேசியது இன்னும்கூட நினைவிருக்கிறது. இது ஆபத்தானது. கல்வியாளர்கள், அரசியவாதிகள், ஊடகம், எழுத்தாளர்கள், செல்வந்தர்கள் என தன் நட்பு வட்டத்தை விஸ்தாரப்படுத்தி வைத்திருப்பவர்கள் மிக எளிதாக தங்களது இருப்பை இலக்கியச் சூழலில் நிருவுதல் கண்டிக்கத்தக்கது.

    விரிவுரையாளர்கள் இதுபோன்ற தரமற்ற ஒன்றை பாராட்டும்போது அது மாணவர்களிடம் தவறான ஓர் பிரதியைக் கொண்டு சேர்க்கிறது. 11 ஆண்டு கால நூலக அனுபவத்தில் சொல்கிறேன் தமிழ் மாணவர்கள் பாடதிட்டத்தைக் கடந்து ஒன்றைத் தேடி சுயமாக வாசிப்பதே குறைவு. பொது நூலக ஆய்வுகளும்கூட இதைதான் காட்டுகின்றன. இதுதான் சூழல் எனும்போது, இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக விரிவுரையாளர்கள், எழுத்தாளர்கள் பாராட்டும்/பரிந்துரைக்கும் புத்தகங்களும் மொன்னையானவையாக இருந்தால் எங்ஙனம் மாணவர்களும் வாசகர்களும் நல்ல இலக்கியங்களைப் போய் சேர்வது. ஊடகத்திற்கும்கூட இதில் கூடுதல் கடப்பாடு அவசியம்.

    அப்படியும் இங்கெல்லாம் தம்பிடித்து ஒரு மொன்னைப்படைப்பு மேடையேறுமெனில் அது குப்பை என்று சொல்ல நவீன்கள் வருவதை எவராலும் தடுக்க முடியாது.

    -விஜயலட்சுமி

Leave a Reply to கயல்விழி Cancel reply