அனுபவ பாத்தியம்

senthil 01டாக்ஸி, மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளம்பி, பத்துகிலோ மீட்டர் தூரம் தஞ்சாவூர் ரோட்டில் போனதும், புகளூர் கோயில் கோபுரம் தெரிந்தது. அருண் ஆவலுடன் கண்ணாடியை இறக்கிவிட்டு எட்டிப் பார்த்தான். “நம்ம கோயில் கோபுரம்தானே?” என்று கேட்டான்.

முன்பக்கம் உட்கார்ந்திருந்த அருணின் தந்தை ராஜகோபால் “ஆமாம்” என்றார்.

இன்னும் ஐந்துகிலோ மீட்டர் ஓடி, இடதுபுறம் பாலத்தடியில் திரும்பி, புகளூருக்குள் கார் நுழைந்தது. சாலையின் இருபக்கமும் காலைப்பொழுதின் ஈரத்துடன் பச்சை வயல்கள் காற்றிலாடின. ஊருக்குள் நுழையும் காரை உற்றுப் பார்த்தனர் சாலையில் வந்தவர்கள். கண்ணாடி அணிந்து கையில் குச்சியுடன் நின்ற ஒரு பெரியவர், ராஜகோபாலை அடையாளம் கண்டு ஒதுங்கி நின்று கும்பிட்டார்.

“நமக்குக்குனு ஒதுக்குன வீட்ட மட்டுமாவது இங்கே நீங்க வைச்சிருந்துருக்கலாம் அப்பா,” என்றான் அருண்.

“இந்த ஊருல வீட்டை வச்சு, நீ வந்து இருக்கபோறியா?” என்று திரும்பிக் கேட்டார் ராஜகோபால்.

ஒன்றும் பேசாமல் வெளியே வேடிக்கை பார்த்தான் அருண். இரண்டு பெரியப்பாக்களும் இந்தப் பதினைந்து கிலோமீட்டரைத் தாண்டவில்லை. இவர் மட்டும், நிலத்தை நம்பி கொண்டிராமல் அந்தக் காலத்திலேயே நன்றாகப் படித்துச் சென்னைக்குச் சென்று வேலையில் சேர்ந்ததெல்லாம் சரி. ஆனால், ஒரு துண்டு இடம் மீதமில்லாமல் வயல், மனைகட்டு என்று தன் பெயரில் இருந்த எல்லாவற்றையும் விற்றதைத்தான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

டாக்ஸி தோட்டத்துக்குள் நுழைந்ததும் பங்களாவின் முகப்புத் தெரிந்தது. சென்ற முறை வந்தபோது இருந்ததை விட, இந்த முறை சுற்றிலும் நிறைய மாடிவீடுகள் எழும்பியிருந்ததை கவனித்தான் அருண்.  சின்ன பெரியப்பா லெட்சுமணசாமி முதலியார், கார் சத்தம் கேட்டு வெளியே வந்தார். தங்கவேலு ஓடிவந்து பெட்டிகளை எடுத்துச் சென்றான். அதிகாலையிலேயே வந்துவிட்டதால், சிறிதுநேரம் தூங்கி ஓய்வெடுக்க உள்ளே சென்றார்கள்.

பதினோரு மணியை நெருங்கும் போது ராமய்யா முதலியார் மன்னார்குடியிலிருந்து புறப்பட்டுப் புகளூர் வந்தடைந்தார். டாக்ஸியை விட்டு இறங்கியதும் தனது தம்பி லெட்சுமணசாமி பங்களா வாசலில் வந்து நிற்பதைப் பார்த்து, மனதுக்குள் திருப்தியடைந்தார். எப்போதும் அணியும் மஞ்சள் சில்க் ஜிப்பாவைத் தூக்கி, தாவங்கட்டையில் மடித்துக்கொண்டு, வேட்டியை இறுக்கிக்கட்டினார். வீட்டுக்குள் ஏறுவதற்கு முன், போர்டிகோவில் நின்று எதிரே இருந்த குளத்தைப் பார்த்தார். கையில் இருந்த தோள்பையை வாங்கிக்கொண்டான் தங்கவேலு.

“குளத்துலே தண்ணி குறைஞ்சிருக்கே,” என்றார். லெட்சுமணசாமி அதற்கு பதில் சொல்லாமல், “எப்போ, காலைலே கிளம்பினியா?” என்று திரும்பிக் கேட்டார். ம்…ம் என்று முனகிக்கொண்டே படியில் ஏறினார் ராமய்யா முதலியார்.

வீட்டுக்குள்ளிருந்து கூஜாவில் காப்பி கொண்டு வந்து அதை எவர்சில்வர் டம்ளரில் ஊற்றிக் கொடுத்தான் தங்கவேலு. அதை வாங்கிக் குடித்த ராமய்யா, “என்னப்பா தங்கவேலு, ஆளுங்க எல்லாம் இன்னைக்கு வந்துடுவாங்களா?” என்று கேட்டார்.

“பத்து நாள் முன்னாடியே சொல்லிட்டேன்ய்யா. இன்னைக்கு காலைலேயும் களத்துமேட்டுலேயே போய் சொல்லிட்டு வந்துட்டேன். வந்துடுவானுங்க. என்றான் தங்கவேலு.

ராமய்யா வந்த சத்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து ராஜகோபால் வெளியே வந்தார். அவர் கூடவே அருணும், ஜீன்ஸ் டிஷர்ட் சகிதம் வந்தமர்ந்தான்.

அருணைப் பார்த்த ராமய்யா, “நீயுமாடா வந்தே?”, என்றார். பதிலை எதிர்பார்க்காமல், “ட்ரெய்ன் கரெக்ட் டயத்துக்கு வந்துச்சா?” என்று ராஜகோபாலைப் பார்த்துக் கேட்டார். உண்மையில் எந்தக் கேள்விக்கும் அவருக்குப் பதில்கள் தேவையில்லை என்பதை உணர்ந்த அருண் வெறுமனே சிரித்தான். பிறகு “அக்கா எப்படி இருக்காங்க?” என்றான். “ம்ம்..இருக்கா”, என்றார் ராமய்யா.

காப்பி குடித்தப் பின் போடுவதற்கு எவர்சில்வர் தாம்பாளத்தில் கும்பகோணம் வெற்றிலை ஒரு கவுளி, முறுகலாக சீவல் கொட்டிக் கொண்டுவந்து வைத்தான் தங்கவேலு. தன்னுடைய தோள் பையில் இருந்து சுண்ணாம்பு டப்பாவை எடுத்தார் ராமய்யா. இரு பக்கமும் மூடிக்கொண்ட உருளையாக அது இருந்தது. ஒரு பக்கம் சுண்ணாம்பு ரோஸ் நிறத்தில் இருந்தது. மூன்று வெற்றிலையை எடுத்து, காம்பு கிள்ளி, தன்னுடைய தொடையிலேயே துடைத்தார். பிறகு, அதில் சுண்ணாம்பைத் தடவி, மீதியை மூடியின் கூர் விளிம்பில் தடவி மூடினார். உருளையின் மற்றொரு பக்கத்திலிருந்து, கரும் மஞ்சள் நிறத்திலிருந்த பன்னீர் புகையிலையை எடுத்தார். வெற்றிலையில் சீவலுடன் மடித்து வாயின் ஓரம் அடக்கிக்கொண்டார். லெட்சுமணசாமியும் இப்போது வெற்றிலையை எடுத்துக் காம்பு கிள்ளினார்.

“மாடு தழை திங்கிற மாதிரி வெத்தலையை குதக்கிட்டு, திண்ணைலே உட்கார்ந்து, கூஜா நிறைய காப்பி குடிக்கிறதுக்கு பேரு விவசாயம். கல்யாண வீடுகள்லே, குறுவை கண்டு முதல் காணலைன்னு அலுத்துகிட்டா மிராசுதார் தோரணை வந்துடும்லே” என்று தனது தந்தை, வீட்டில் அண்ணன்களை திட்டும் சித்திரம், அருணுக்கு நினைவில் வந்து புன்னகைத்தான்.

பெரியப்பா நல்ல உயரம். சிறு வயதில் டென்னிஸ் விளையாடுவார் என்று அப்பா சொல்லியிருக்கிறார். தூக்கி சீவிய முடி நன்கு வெளுத்திருந்தபோதும் கொஞ்சம் கூட கொட்டாமல் இருப்பதைப் பார்த்து, தனது முன் நெற்றியைத் தடவிக்கொண்டான் அருண். ராமய்யா முதலியார், எப்போதும் அணியும் அந்த ஜிப்பாவும், கோல்டு ப்ரெம் கண்ணாடியும் கம்பீரத்தைக் கொடுத்தது. வெள்ளை மேனியில் வாய் மட்டும் நன்கு சிவந்திருந்தது. சிறு வயதில் இன்னும் ஸ்டைலாக இருந்திருப்பார். நடிகை ரமாலெட்சுமி இவரிடம் விழுந்ததில் வியப்பில்லை. கொஞ்சநாள் தஞ்சாவூரில் அழைத்துவந்து குடித்தனமே செய்தார் என்று சொல்வார்கள்.

ராமய்யா சற்று நேரத்துக்கெல்லாம், எழுந்து புகையிலை சாற்றைத் துப்பிவிட்டு வந்தமர்ந்தார். அதே ஜோரில், அருணிடம் சொன்னார். “அதோ தெரியுது பாரு, குளத்துக்கரைக்கு அந்தப்பக்கம் புளியமரம். அங்கதான் பட்டறைலே நெல்லு திருடுறவனுங்களை கட்டிவைச்சுருப்பானுங்க. தாத்தா, காலைலே எழுந்து பூஜை முடிஞ்சப்புறம் போய் பார்ப்பாங்க. பெரும்பாலும் கிழக்குகரை ஆளுங்களாதான் இருக்கும். கார்வாரி கட்டிவச்சு அடிச்சி, சாயங்காலத்துக்கு மேல விரட்டிவிடுவாங்க.”

“பட்டறைன்னா ?”

“மொத்தம் இருநூறுவேலி நிலம்டா. இந்த கிராமத்துலே பெரும்பாலும் நம்ம குடும்ப நெலம் தான்.  தாத்தா நிலத்துபக்கமே போகமாட்டாங்க. காரியம் பாக்குற சின்ன காளிமுத்துதான் நிர்வாகம். என்ன செய்யணும் எப்போ செய்யணும்ன்னு தாத்தா இங்கே உட்கார்ந்துகிட்டே சொல்லிடுவாங்க. நெல் அறுத்தா, இப்போ மாதிரி உடனே விலைக்குப் போடுற பழக்கமில்லை. எல்லாத்தையும் கொண்டு வந்து வாழைகொல்லைலே கொட்டி, மேலே வைக்கோலை பரப்பி சாணி போட்டு மொழுகிடுவோம். அதுலே குறி போட்டு வச்சுட்டுதான் கணக்குபிள்ளை போவார். காவல் பூரா ராயபுரம் ஆளுங்கதான். அப்படியும் புகுந்து அதிலே நெல்லு திருடுறது உண்டு. எப்போ நெல் விலை ஏறுதோ, அப்போதான் தாத்தா போட சொல்லுவாங்க.

லேண்ட் சிலீங் சட்டம் வந்தப்போ, குடும்பத்துலே உள்ள கைக்குழந்தை உட்பட எல்லாரு பேருலேயும் தலா முப்பது ஏக்கர் எழுதிவைச்சாங்க. பாக்கியுள்ளதை தலையாரி, கணக்குபிள்ளை, நாட்டாமைன்னு எழுதுனாங்க. அந்த காலத்துலே நம்ம தாத்தா, குன்னியூர் அய்யர், கபிஸ்தலம் மூப்பனார் இப்படி இவங்களெல்லாம் இரண்டு போன் செஞ்சாங்கன்னா, ஒரு ஊர் கோயில் கும்பாபிசேகமே நடந்துடும்.”

அந்த நீண்ட ஹாலின் நடுவே, தேக்கு நிலைவாசல்படிக்கு மேல், மூன்றடி உயரத்துக்கு வைக்கப்பட்டிருந்த தனது தாத்தாவின் படத்தைப் பார்த்தான், அருண். பல கோவில்களில் தர்மகர்த்தாவாகப் பொறுப்பு வகித்தவர். ஒவ்வொரு தேர்தலிலும், அவர் சொல்லும் நபர்களுக்கு, வாக்களிக்க, கிராம மக்கள் தயாராக இருந்தனர் போன்ற விஷயங்களைத் தந்தை சொல்வதுண்டு. தனது மூதாதையர்கள் இசைபட வாழ்ந்த மண் இது என உள்ளுக்குள் நெகிழ்ந்தான்.

“தாத்தா கட்டுனதுதானே இந்த பங்களா? இங்க வெயிலே தெரியலை பெரியப்பா, சென்னைலே கொளுத்துது.”

“இப்போ குளம் வறண்டு போச்சு. முன்னாடியெல்லாம் மேற்படிக்கட்டு வரைக்கும் தண்ணி கிடக்கும்.  சாயங்காலம் மூணு மணி ஆச்சுன்னா, மேலே இரண்டாவது மாடி சம்மர் ஹவுஸ்லே வந்து அய்யா உட்கார்ந்துப்பாங்க. சிலுசிலுன்னு காத்தடிக்கும். ஆமா, அந்த சம்மர் ஹவுஸ் நல்லா இருக்குலே?” என்று லெட்சுமணசாமி பக்கம் திரும்பிக் கேட்டார்.

“எந்த காலத்துலே உள்ளதை கேட்குற? அதெல்லாம் விழுந்து எவ்வளோ நாள் ஆகுது!” என்றார். அப்போதுதான் பார்ப்பதுபோல் சுற்றிலும் பார்த்தார் ராமய்யா.

எழுபது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மெட்ராஸ் ஒட்டு பங்களா. ராமய்யாவின்senthil 03 தந்தை வைத்திலிங்க முதலியார் எட்டுக்கண்ணும் விட்டெரிந்த காலத்தில் கட்டியது. பங்களாவுக்கு நேரெதிரே பட்டா குளம். பங்களாவிலிருந்து இறங்கிச்செல்ல வசதியாகப் படிக்கட்டுகள் இருந்தன. ஆறு படிகள் இறங்கியதும் உட்கார வசதியாக சமதளம். அதில் சிவப்பு சிமெண்டில் தாமரை மலர்கள் வரையப்பட்டிருக்கும். இப்போது அவை சாயம் இழந்திருந்தன. குளத்தின் மையத்தில் மட்டும் கொஞ்சம் நீர் இருந்தது. குளக்கரையில் செண்பக மரங்கள் நின்றிருந்தன. அந்தக் காலத்தில், பங்களாவின் இரண்டாவது மாடியில் ஏறி நின்றால், பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ராஜகோபாலசாமி கோவில் கோபுரம் தெரியும். இப்போது முழுவதுமாக காரைப் பெயர்ந்து கொட்டியிருந்தது. மழை நீர் மேல் தளத்திலிருந்து ஒழுகி, வெள்ளை வெள்ளையாகப் பூத்திருந்தது. பங்களா கட்டிய காலத்தில் அடித்த பச்சை நிற வண்ணம், விட்டகுறை தொட்டகுறையாக ஒட்டி இருந்தது. வெளி வாரண்டாவின் ஒவ்வொரு இரும்பு விட்டத்திலும், தண்டவாளம் கொடுத்து முட்டுக்கொடுக்கப்பட்டிருந்தது. முகத்தில் வலி தெரிய, சத்தமாக உச்சுக் கொட்டினார் ராமய்யா. இது எதற்கும் சம்பந்தமில்லாததுபோல் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தார் ராஜகோபால்.

ராமய்யா ஏதோ சொல்ல முனையும்போது, பழுப்பு நிறத்தில் மாறிய வேட்டியும், வெளுத்துப்போன சட்டையுமாய் ஒரு பெரியவர், போர்டிக்கோவில் ஏறி வருவதைப் பார்த்துப் பேச்சை நிறுத்தினார். வந்தவரைக் கண்டதும் லெட்சுமணசாமி அண்ணனிடம் திரும்பி, “மாணிக்கம், வெத்தலைகுண்டு பங்கு நாலு மா” என்றார்.

“சொல்லு மாணிக்கம், தங்கவேலு வந்து சொன்னானா? கூப்பிட்டு அனுப்பிச்சாதான் வருவீங்க. இத்தனை வருசமா நாலு மா பங்கு உங்கிட்டே இருக்கு. குத்தகை நீயா வந்து குடுத்துருக்கியா?” என்றார் ராமய்யா.

வந்தவர், சற்றுத் தடுமாறினார். பிறகு கையில் வைத்திருந்த பழுப்பு நிறத் துண்டை எடுத்து இடுப்பில் கட்டினார். போர்ட்டிகோவிலேயே விழுந்து கும்பிட்டார். அருண் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“பண்ணைலே கூப்பிட்டு என்னைக்கும் நான் வராம இருந்ததில்லைங்க. பெரிய அய்யா காலத்துலே எனக்கு கொடுத்தீங்க. இன்னைக்கு நாங்க இருக்குறதே இந்த நெலத்தை நம்பிதான்.”

“அதெல்லாம் சரிப்பா, இந்த நெலமெல்லாம், எங்களுக்குள்ளே பிரிக்கப்படாமலே இருக்கு. இரண்டு வருசத்துக்கு ஒரு தடவை, நாலு வருசத்துக்கு ஒரு தடவைன்னு ஏதோ பேருக்கு ஆயிரம், ஐநூறு கொண்டுவந்து கொடுத்தீங்க. இனிமே, இப்படியே விடறதா இல்லை. குத்தகைகாரங்களுக்கே விலை வச்சு குடுத்துடலாம்ன்னு இருக்கோம். அதுக்குதான் தம்பியும் மெட்ராஸ்லே இருந்து வந்துருக்காங்க.”

“அய்யா, மவன் எங்களை கவனிக்கிறதில்லை. இந்த நிலத்திலே நானும் பொஞ்சாதியும் சேர்ந்து ஏதோ காய்கறி போடுறது, விதைநெல்லை தூவிவிடுறதுன்னு பாடுபட்டு கிடக்கோம். அதுவும் இந்த வருசம் மழை சுத்தமா இல்ல. இதிலே விலைக்கெல்லாம் எங்கேய்யா போவேன்?”

சலிப்புடன், உச்சுக் கொட்டித் திரும்பிக்கொண்டார் ராஜகோபால். எத்தனை முறை இதே கூத்துகள் என்று நினைத்துக்கொண்டார். இரண்டு அண்ணன்களும் பிரிபடாத பங்கான ஐம்பது ஏக்கர் நிலத்தை, ஒவ்வொருமுறையும் குத்தகைதாரர்களைக் கூப்பிட்டுப் பேசி பணம் வாங்கித் தருவதாகக் கூறுவதும், அதை நம்பி வந்து ஏமாந்து, குலதெய்வத்தை மட்டும் கும்பிட்டுவிட்டு ரயில் ஏறுவதுமாய் போய்விட்டது. இந்த நிலத்தின் மீது எந்த நம்பிக்கையுமில்லை. இந்த முறை பெரிய அண்ணன் மீண்டும் மீண்டும் கூறியதால் வரவேண்டியதாகிவிட்டது.

ராமய்யா தனது கடைசி தம்பி ராஜகோபாலைப் பார்த்தார். அவருடைய உடலசைவில் இருந்த அலுப்பு பயம் தந்தது. திரும்பவும் இவன் கோபித்துக்கொண்டு சென்றுவிடக்கூடும் என்பதை உள்ளூர உணர்ந்தார். அவசரமாகச் சொன்னார்.  “இதெல்லாம் மூணு மா, நாலு மா வைச்சுருக்குற ஆளுங்க. இவங்ககிட்டேருந்து ஒண்ணும் தேறாது. ஏம்பா தங்கவேலு, தாமரைக்குளம் பங்கு, ரெட்டைவாய்க்கா, சுடுகாட்டு பங்கு எல்லாம் பத்து மா, பதினைஞ்சு மா. அந்தாளுங்க யாரும் இன்னும் வரலையா?”

அருண் மெதுவாக எழுந்து, வெளியே வந்து பார்த்தான். நூறடிக்கு நீண்ட பெரிய பாதையைத் தாண்டியிருந்த வேலியோரம் வெள்ளை சட்டைகள் தெரிந்தன. கைலியும் துண்டுகளுமாய் சிலர் நின்றிருந்தனர். தங்கவேலு நடந்து சென்று அவர்களைக் கூப்பிட்டான். “வாங்கப்பா, உள்ளே வந்து பேசுங்க. அய்யா எல்லாம் மெனக்கெட்டு வந்து கிடக்குறாங்க,” என்றான்.

தங்கவேலு சொல்லிவிட்டுத் திரும்ப பங்களா நோக்கி நடக்க தொடங்கியதும் கைலி கட்டியிருந்த ஒரு இளைஞன், தங்கவேலுவைக் காட்டி, நாக்கைத் துருத்தி அடிப்பதுபோல் சைகை செய்தான். பின்பக்கம் நின்றிருந்த இரு மத்திய வயதுகாரர்கள் சிரித்தனர். தங்கவேலு சிரிப்பு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில் ஒன்றும் நடக்காதது போல் நடந்தான் அந்த இளைஞன். அருண் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தவுடன் முதலில் கொஞ்சம் கூச்சமடைந்து கண்களைத் தாழ்த்தினான். உடனடியாக அப்படி கூச்சமடைந்ததாலேயே உள்ளூர சீண்டப்பட்டுக் கண்களை உயர்த்தி, கால்களை அகட்டிவைத்து நடந்து வந்தான்.

“தாமரைக்குளம் பங்கு பதிமூணு மா வச்சுருக்குற காளிமுத்து பண்டாரம் மவன் பன்னீர் வந்துருக்கான்” என்றான் தங்கவேலு.

“வாப்பா, பன்னீரு,” என்றார் ராமய்யா.

சட்டென்று துண்டைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான் பன்னீர்.

“பன்னீரு, உங்கப்பா இருக்குற வரைக்கும் கரெக்டா மாவுக்கு இரண்டு மூட்டை குத்தகை அளந்துட்டுருந்தான். உங்கப்பா போனப்புறம் நீயும் ஒழுங்கா குத்தகை கொடுக்கலை. உங்கண்ணனும் கொடுக்கலை. இனிமே குத்தகை வாங்குறதா இல்லை. பேசாம நீயே எடுத்துக்க. மார்க்கெட் ரேட்லே பாதியை கொடுத்துடுங்க. உங்கண்ணன்தான் துபாய் போய் சம்பாதிக்கிறானே,” என்றார் ராமய்யா

“இல்லைய்யா, அண்ணனைக் கேட்டுதான் சொல்லணும்.”

“அண்ணன், எப்போ வாராரு?”

“அது வர இரண்டு வருசம் செல்லும்.”

“இரண்டு வருசம் எப்படி நாங்க பொறுத்துட்டு இருக்குறது? அதெல்லாம் சரி வராது. சீக்கிரம் முடிவெடுங்க. இல்லைன்னா இந்த பசலிக்கு நாங்களே பாத்துக்குறோம்.”

மெலிதாய் சிரித்தான் பன்னீர். “அது எப்படிய்யா… இத்தனை வருசம் வைச்சுட்டு இருந்துட்டு சட்டுன்னு தூக்கி கொடுக்கமுடியும்? இந்த பசலிலே குத்தகை தர பாக்குறேன்.”

“இல்லைப்பா, இனி குத்தகை வாங்குறதா இல்லை” என்றார் ராமய்யா

“மத்த குத்தகைதாரங்க எல்லோரும் என்ன செய்றாங்களோ அதை நானும் ஒத்துக்குறேங்க” என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று நடந்து வேலியோரம் சென்று மொபலை அழுத்தி செய்தி படித்தான்.

லெட்சுமணசாமி, “என்ன திமிரு பாரு? இவனுகளை எல்லாம் கோர்ட்லே போட்டு நிலத்தை பிடிக்கணும். அப்போதான் அலறிகிட்டு வருவாங்க,” என்றார்.

senthil 02“எங்க? ரெவின்யூ கோர்ட் நடக்குறதே இல்லைங்குறாரு வக்கீல். இதெல்லாம் கோர்ட்லே போட்டு இன்னைக்கு நடக்குற காரியமில்லை. அந்த காலத்துலே கர்ணம், மணியார் எல்லாரையும் அய்யா கைக்குள்ளே வச்சிருப்பாங்க. எப்போ அவங்களை எடுத்துபுட்டு கவர்மெண்ட்லே வி.ஏ.ஓ போட்டாங்களோ, அதுக்கப்புறம் நில கணக்கு எல்லாம் என்ன பெயருலே இருக்குன்னே தெரியலை. ஒருத்தனுக்கு கிரயம் செஞ்சு கொடுத்தா, எல்லாரும் வந்துடுவாங்க. எப்படியாச்சும் ஒருத்தன் ஒத்துகிட்டு வாங்கிட்டான்னா வேலை முடிஞ்சுடும். பிரியாவுக்கு கல்யாண தேதி வச்சாச்சு. பணம் புரட்ட முடியலைப்பா. உன்னை திரும்ப திரும்ப கூப்பிட்டது அதுக்குதான் கோபாலு. வித்ததெல்லாம் போக, இப்போ என்கிட்டே நேரா இருக்குற நெலத்துலே, சாகுபடி செய்றது, சாப்பாட்டுக்குதான் சரியா இருக்கு. என்னமோ நேரம், எப்படியோ நடந்து இருக்கவேண்டியது. புகளூர் சம்பந்தம்ன்னு, சம்பந்தி வீட்டுலே ரொம்ப எதிர்பார்க்குறாங்க. இங்க உள்ள நெலம நமக்குதான் தெரியும்.  எப்படியோ மாரியம்மன்தான் நடத்தி வைக்கணும்” என்றார் ராமய்யா.

“உங்களுக்கு காரியம் நடக்கணுமுன்னு என்னைய வரசொல்றீங்க. நான் எத்தன தடவ இதுக்கு முன்னாடி கூப்பிட்டு பேசி என் பங்க வாங்கிகொடுங்கன்னு சொன்னேன்? என்னைக்காச்சும் கேட்டுருப்பீங்களா?” என்று எரிச்சலுடன் கேட்டார் ராஜகோபால்.

“இல்லைப்பா, உன்னை அலைய வைக்கணும்ன்னு நாங்க நெனைக்கலை. நானும், இவனும் இரண்டு தடவை இதுக்கு முன்னாடி கூப்பிட்டு பேசினோம். தம்பி மெட்ராஸ்லே இருக்காருலே, அவருக்கும் பங்கு உண்டு, அவர் கையெழுத்துபோட வரமாட்டார்ன்னு ஊருக்குள்ளே கிளப்பிவிட்டுட்டாங்க. அதுனாலயே ஒருத்தனும் பேசகூட வரலை. இப்போ நீயும் வந்துருக்கேன்னு தெரிஞ்சு,பேசவாது வராணுங்க. ஒத்துமையா இருந்தா தானே பலம்” என்றார்.

“ஆமா, ஒத்துமையா இருந்து கண்டதெல்லாம் போதும்” என்று அலுத்துக்கொண்டார் ராஜகோபால்.

“சுடுகாட்டு பங்கு, கோவிந்தராஜ் சேதுராயர் வந்துருக்காரு,” என்றான் தங்கவேலு.

பெரிய மீசையுடன், கதர் வேட்டி சட்டை அணிந்து பச்சைத் துண்டு தோளில் புரள, உள்ளே வந்தார் கோவிந்தராஜ். சராசரி உயரத்துடன் கனத்த உடலுமாய் இருந்தார். முழுவதும் நிலத்தில் நின்று பாடுபடுபவர் என்பது தோற்றத்தில் தெரிந்தது. அருண், அவர் அமரட்டும் என்று எழுந்து வாசல் பக்கம் நின்றான்.

லெட்சுமணசாமி முதலியார் நாற்காலியைக் காட்டி, “சும்மா உட்காருங்க” என்றார்.

“இருக்கட்டுங்க” என்ற கோவிந்தராஜ் அமராமல் நின்றார்.

ராமய்யா ஏறிட்டுப் பார்த்தார். எழுந்து கூஜாவை எடுத்துக்கொண்டு போர்டிகோவின் இடதுபுறம் இருந்த நந்தியாவட்டை மரம் அருகே சென்று வாய் கொப்பளித்தார். மீண்டும் வந்து நாற்காலியில் வந்தமர்ந்து, சொன்னார். “குத்தகை நெலத்துலேயே அருமையான இடம் சுடுகாட்டு பங்குதான். முப்பதடிலே தண்ணி உள்ள எடம். பன்னிரண்டு மா நெலம். போர்வெலு போட்டு சாகுபடி செய்றீங்க. பத்து வருசமா உங்ககிட்டே தானே இருக்கு? பண்ணைக்கு கொடுக்கவேண்டிய குத்தகை கொடுக்குறது இல்லையாப்பா?”

“நான் வெங்கிடாசலத்துகிட்டே பணம் கொடுத்து பைசல் பண்ண எடம்ங்க. அதெப்படி குத்தகை கட்ட முடியும்?”

“பண்ணை நெலத்தை, வெங்கிடாசலம் எப்படி பைசல் செய்யமுடியும்? வெங்கிடாசலம் பண்ணைலே கார்வாரியா இருந்தப்ப, குத்தகைக்கு கொடுத்த இடம் அது. அவன்கிட்டே எப்படி நீங்க பைசல் செய்யமுடியும்?” கோபத்தில் குரல் நடுங்கியது லெட்சுமணசாமி முதலியாருக்கு.

“அதெல்லாம் கிராமத்துலே வழக்கம்தாங்க. நீங்க இங்கேயேதான் இருக்கீங்க. பத்து வருசம் முன்னாடி நான் பைசல் செஞ்சது உங்களுக்கு தெரியாதா? இப்போ வந்து குத்தகை கேட்டா எப்படி?”

“இதெல்லாம் தப்புப்பா. வீடு முழுக்க முட்டுக்கொடுத்துட்டு தம்பி இங்கே கிடக்கான். தண்ணிக்குள்ளே மோட்டார் காயில் தீஞ்சு பயிர் காயுது. காயில் சுத்த பணமில்லாம, கல்யாணத்தை வச்சுட்டு நான் அலையுறேன். நீங்க என்னாடான்னா பண்ணை நிலத்தை உங்களுக்குள்ளே கை மாத்திகிட்டு, இங்கே நியாயம் பேசுறீங்க?” என்றார் ராமய்யா முதலியார்.

கோவிந்தராஜ் பேசாமல் வெளியே பார்த்தபடி நின்றார். அவர் நின்ற தோரணை, அருணுக்கு எரிச்சலைத் தந்தது. நடுநாயகமாக மாட்டியிருந்த தனது தாத்தாவின் படத்தைத் திரும்பவும் பார்த்தான். வேட்டியணிந்து, சட்டையில்லாமல், மேல் துண்டு கழுத்துச் சுற்றி ப வடிவில் கிடக்க, உத்திராட்ச மாலைகளுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். சட்டென்று எரிச்சல் மேலிட, “பெரிப்பா, நீங்க இப்படி இவங்ககிட்டே எல்லாம் கேட்டு பிரயோஜனம் கிடையாது. நம்ம நிலத்தை விக்க யாருக்கும் உரிமை கிடையாது. பேசாம நோட்டீஸ் கொடுங்க. நம்ம சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம்” என்றான்.

கோவிந்தராஜ், அப்போதுதான் அருணைப் பார்த்தார். சின்னதாய் சிரித்து, “தம்பி தாராளமா நடவடிக்கை எடுங்க. நாங்களும் அங்கேயே பார்த்துக்குறோம்” என்றார்.

ராமய்யா முதலியார். “சரி விடுப்பா, அவன் சின்ன பையன் ஏதோ சொல்றான். நீ கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, நிலத்தை எடுத்துக்கப்பா. வெங்கிடாசலம் உன்கிட்டே கொடுத்தது அனுபவ பாத்தியம் மட்டும் தான். எந்த பேப்பரும் இல்லாம, நீ அதை விற்கவோ வாங்கவோ முடியாது. நாங்க உன் பெயருக்கு கிரயமே செஞ்சு தர்றோம்” என்றார்.

“அய்யா, கிராமத்துலே மண்ணை வச்சு சாகுபடி செய்ற குடியானவன், என்னைக்கும் நெலத்தை விக்க மாட்டான். அப்படி இருக்கச்ச, அதை விக்குற உரிமையை வாங்கி நான் என்ன செய்யபோறேன்? இது எங்களுக்குள்ளே முடிச்சிக்கிட்ட எடம் அய்யா. ஏதோ இவ்வளோ தூரம் வந்து கூப்பிட்டீங்க. வந்து சொல்லிப்புட்டு போறதுதான் மரியாதைன்னு வந்தேன். வெள்ளன போய் தண்ணி வைக்கணும். அடிக்கடி கரெண்டை கட் செஞ்சுபுடுறானுங்க. அப்போ வர்றேங்க” கும்பிட்டார் கோவிந்தராஜ்.

ராமய்யா முதலியார் திடீரென்று எழுந்தார். “கோவிந்தராசு, இவ்வளோ தூரம் வந்துட்டோம். பாப்பா கல்யாணம் தேதி வச்சுட்டேன்ப்பா. தயவு செஞ்சு, ஏதாவது பணம் கொடுத்து உதவி செய்ப்பா. உனக்கு புண்ணியமா போவும்” கண்கள் கலங்கியிருக்க, கையெடுத்து கோவிந்தராஜைக் கும்பிட்டார்.

அருண், “இனி, இந்த ஊருக்கு ஒருபோதும் வரக்கூடாது”, என்று நினைத்துக்கொண்டான்.

3 comments for “அனுபவ பாத்தியம்

  1. R.Vijaya ragavan.
    July 1, 2020 at 9:43 pm

    இக்கதை ஒரு யுகசந்தியை விவரிக்கிறது.
    வழமையாக நிலஉடமையாளர்களை எதிர்மறையாக காட்டும் முறைமையிலிருந்து மாறுபட்டு அவர்களது துயரத்தையும் அதேசமயம் குத்தகைக்காரர்களின் பாடுகளையும் அவர்களின் தலையெடுப்பையும் பறவைப்பார்வையில் காட்டிப்போகிறது.

    நிலஉடமை சமூகம் உலைந்து பிற்பட்ட மற்ற சமூக குழுக்கள் வாழ்வியலில் எழுந்து வரும் சித்திரத்தை காட்சிப்படுத்துகிறது.

    வேடனின் வேட்டை வேட்கையையும் வேட்டை மிருகத்தின் உயிராசையையும் ஒரு சேர காட்டுகிறது. ஆனால் இருவரும் இடம்மாறும் நிலையை நுட்பப்படுத்தியதுதான் சிறப்பு.

  2. ஸ்ரீபாலா
    July 1, 2020 at 10:25 pm

    அருமையான சிறுகதை. நுண்மையான மனச்சித்தரிப்பு. ஒவ்வொருவர் வந்து செல்லும்போதும் அவர்கள் வைத்திருக்கும் நிலத்தைப் பொறுத்து மாறும் உடையவரின் சங்கடமும் பணிவும் இதற்கு இன்னொரு வாசிப்பு முறையை கொடுக்கிறது.

  3. Viji
    July 6, 2020 at 5:23 pm

    இதிலும், சொல்லப்படாத சம்பவத்தில் மனம் அலைபாய்ந்தது. அருமையான சிறுகதை

    ஸ்ரீவிஜி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...