சிலந்தி

photo-1590440474345-735ec7a14190தாவங்கட்டையில் ஊறிய மொசுடை அழுத்தித் தேய்த்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தேன். நசுங்கிய மொசுடு பரப்பிய நெடி மூக்கில் ராவியது. இரவு முழுவதும் விழித்திருந்ததால் எரிந்த கண்களை இடுக்கிக் கொண்டு தோளுக்கு மிக அருகில் மினுங்கும் வெள்ளிக் கோடுகளைப் பார்த்தேன். இழுத்துக் கட்டிய வாழைநார் போன்ற அந்தக் கோடுகள் சூரிய ஒளிபட்டு வானவில்லின் நிறங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. கூர்ந்து கவனித்த போது சிலந்தி வலை தெரிந்தது. கண்களை விலக்கி சூழலைக் கவனித்தேன்.  மிதமான வெளிச்சத்தில் காடு வழக்கத்தை விட அடர்த்தியாகத் தெரிந்தது. இரவில் நீடித்த கடுங்குளிர் இப்போது இல்லை. சூரிய வெளிச்சம் கீற்றுகளாகக் கிளைகளுக்கிடையே ஊடுருவிக் கொண்டிருந்தது. பனி, புகைபோல் அந்தரத்தில் கலைந்துகொண்டிருந்தது. என் வலது கால்மூட்டுக் கடுமையாக வலித்தது. நேற்றுக் கீழே விழுந்த போது கல்லில் மோதி உண்டான காயம் பெரும் வேதனையாக நீடிக்கிறது. ஆனால் எங்கே விழுந்து எப்படி எழுந்தேன் என்பதை ஞாபகப்படுத்த முடியவில்லை.

மெங்கூடோங் மர மறைவில் இருந்து தவழ்ந்து நான் வெளியே வந்தேன். மரத்தண்டில் கை ஊன்றி நேராக நிற்க முயன்றேன். ஆனால் மூட்டுகள் தளர்ந்து கால்கள் சுயமாக மடங்கிக்கொண்டன. சரிந்து மீண்டும் மரத்தடியிலேயே விழுந்தேன். அந்த மரத்தின் பிரமாண்டமான வேர்கள்தான் மதில்போல் என்னை இரவில்  பாதுகாத்தன. இந்த கிரீக் காட்டில் என்னைப் போல அலை மோதும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு நெடுங்காலமாக இதுபோன்ற பருத்த மரங்கள் ஓர் அன்னையைப்போல் அரவணைப்புத் தருகின்றன. அழுங்குகளைப்போல அதில் நாங்கள் சுருண்டு கொள்வோம். அதன் பெருத்த வேர்களின் இடுக்குகள் எங்களுக்குத் தாயின் மடியைப் போல ஆசுவாசம் தருபவை. ஆனால் இப்போது இது அவ்வளவு பாதுகாப்பான இடமாக இல்லை. தோழர்கள் என்னைத் தேடி இங்கே எந்த நேரத்திலும் வந்துவிடக்கூடும். நான் தேடப்படுபவன். ஒரே தோட்டாவில் என் கதை முடிந்து விடலாம்.  கல் இடுக்குகளையும் மலை குன்றுகளையும் குடைந்து கொண்டு செல்லும் சுரங்கங்களில் ஒன்று அத்தி மரங்களுக்குப் பின்னால் முடிவது எனக்குத் தெரியும்.

காட்டின் பெருங்கூச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு அந்தச் சத்தம் கம்பத்து வீட்டில் தகரக் கூரையில் விழும் அடைமழையை ஞாபகப்படுத்தியது. இடையிடையே பூச்சியினங்களின் சீல்கை ஒலி கூர்மையாகக் கேட்டது. மரங்கொத்திப் பறவை ஏதோ ஒரு மரத்தின் பட்டையைப் பிளந்துகொண்டிருக்கும்  சத்தம் தச்சனின் சுத்தியல் ஓசைபோல் அடுக்கடுக்காக வந்துகொண்டிருந்தது. கிளைகளில் நிதானமாக  நகரும் கருங்குரங்கு ஒன்று தன் குட்டியோடு என்னைக் கவனித்துக் கொண்டிருந்தது. அதன் காவி நிற கண்கள் என் பதற்றத்தை அதிகரித்தது. காடு இன்று பெரும் அச்சத்தைக் கொடுக்கிறது. எல்லா கண்களும் உலவு கண்களாகத் தெரிந்தன.

இரண்டு வாரங்களுக்கு முன்புவரை என் நிலை வேறாக இருந்தது. அப்போது  தோழர் சகாதேவனின் நெருங்கிய நட்பாக நான் இருந்தேன். பிரிட்டிஷ் ராணுவத்தின் தேடப்படுவோர் பட்டியலில் என் பெயர் சேராதவரை நான் டேவன்பி தோட்டத்திலேயே வாழ்ந்தேன். தோட்டப் பாட்டாளியாகவும் இயக்க உறுப்பினனாகவும் மிக சாமர்தியமாக நான் இரண்டு உருவங்களில் நடமாடிக் கொண்டிருந்தேன்.   பெருமாள் வாத்தியார் தோட்ட துரைகளுக்கு மிரட்டலாக இருந்தவர். சிலம்ப வாத்தியாராகவும் மேடை நாடக ஆசானாகவும் இருந்த பெருமாள் வாத்தியார் இயக்கத்தில் வெகு சீக்கிரத்தில் முக்கிய ஆளாகத் தலையெடுத்தார். குறிபார்த்துச் சுடுவதில் அவர் மிகத்திறமையானவர்.  அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு நாங்கள் தனி படை அமைத்துக் கொண்டோம். ஆனால் பெருமாள் வாத்தியாரை ராணுவம் பட்டியலிட்டு தேடத்தொடங்கியதும் நானும் பாலனும் தோட்டத்தை விட்டுக் காட்டு முகாமுக்கு வந்து தங்கிவிட்டோம். பெருமாள் வாத்தியாரின் தலைக்குப் பெரிய தொகையை ராணுவம் அறிவித்திருந்தது.

வடக்கு மாநிலங்களைச் சுங்கை சீப்பூட்டில் இருந்து எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம்.  பெருமாள் வாத்தியாருக்குத் தேவையான உதவிகளைச் சின் பேங் தாராளமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். எங்கள் சந்திப்பு கிரீக் காட்டின் ரகசிய இடங்களில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்தது. ஆங்கிலேய அரசு நாட்டுக்குச் சுதந்திரம் அறிவிக்க முனைப்பாக இருந்த அதே நேரம் மலாயா அரசை முழுமையாக எங்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டிருந்தது. காட்டுக்குள் நாங்கள் மூசான் பூனைகளைப்போல பகலில் பதுங்கி, இரவில் நடமாடக் கற்றுக் கொண்டோம். எங்கள் தாக்குதல்களையும் அதிகாலை நேரத்தில் நிகழ்த்துவது எங்களுக்குப் பாதுகாப்பானதாக இருந்தது. ஆனால், எங்கள் தரப்பு சேதங்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தன.

நான் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். அந்நிய சலனங்கள் ஏதும் தென்படவில்லை.  காட்டு மாச்சாங் பழங்களைத் தின்ன வரும் பறவைகளின் சத்தத்தை வைத்து நேரத்தைக் ஊகித்துக் கொண்டேன். நீல வானம் திட்டுத் திட்டாகத் தெரிந்தது. மீண்டும் பெரும் முயற்சியோடு எழுந்து நின்றேன். இயல்பாகவே உடல் வளைந்து கொண்டது. புதர்களுக்குப் பின்னால் சலசலத்து ஓடும் ஓடை என்னை ஈர்த்தது. கீழே கிடந்த நீர்ப்புட்டியை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டேன். வலதுகால் அசைய சிரமப்பட்டது. மெல்ல கால்களை ஊன்றி தெத்தி நடந்தேன். கனமான என் காலணிகள் பட்டுச் சருகுகளும் சுள்ளிகளும் நொறுங்கின. புதரில் இருந்து திடுக்கிட்ட நீர் உடும்பு தடதடவென்று ஓடி ஓடையில் விழுந்து தலையை மட்டும் நீருக்கு மேலே காட்டிக் கொண்டு சென்றது.  எதிர்பக்கத்தில் தாழை இலைகள் போன்ற அகலமான இலைகள் கொண்ட செடி புதராக வளர்ந்திருந்தது. அதன் மையத்தில் நீண்ட தண்டில் ரத்தச்சிவப்பில் கொத்தாகப் பூத்திருந்தது. அந்தப் பூவை வெறித்துக் கொண்டு நின்றேன். அதன் நிறம் சில நொடிகள் எனக்குள் பெரும் கொந்தளிப்பைப் பாய்ச்சியது.

வலியைப் பொறுத்துக்கொண்டு ஓடையில் சிறுநீர் கழித்தேன். நுரைத்துக் கலக்கும் அதை நின்று வேடிக்கைப்பார்த்தேன். நான் விட்டுச்செல்லும் எதுவும் என்னைத் தேடிவர தடையமாகிவிடக்கூடாது. கால்கள் தல்லாடின. வெகு பிரயத்தனப்பட்டுக் குனிந்து முகத்தை ஓடைநீரில் கழுவிக்கொண்டேன். குளிர்ந்த நீர் உடல் முழுதும் சிலிர்ப்பைப் பாய்ச்சியது. கண்களில் எரிச்சல் திபுக்கென கூடி பின் தணிந்தது. நீரை அள்ளிப் பருகிய போது அடிவயிற்றில் இருந்து கர்ஜித்துக் கொண்டு ஏப்பம் வெளிப்பட்டது. வயிறு ஒருமுறை சுருண்டு நெளிந்தது. குளுமையும் எரிச்சலும் ஒன்றாகக் கிளம்பி நெஞ்சுவரை வளர்ந்தது. நீர்ப்புட்டியில் மரவேர்களிலிருந்து ஓடையில் வடியும் நீரைச் சேமித்துக் கொண்டேன்.

மரக்கிளையில் இருந்த கருங்குரங்குகள் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன.  அம்மாவின் பிடிக்கு அகப்படாமல் கிளையில் அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்த குரங்குக் குட்டி ஒன்றின் ‘இச் இச்’ சத்தம் எனக்குச் செல்லியின் சிணுங்களை ஞாபகப்படுத்தியது. தொட்டிலில் தூங்கும் போது அவள் திடீரென்று சிணுங்கும் சத்தம் அப்படித்தான் இருக்கும். தொட்டிலை ஆட்டிவிடச்சொல்லும்  செல்லக் கோரிக்கைபோல அது கேட்கும்.  இப்போது கைவீசி நடக்கக் கற்றிருப்பாள். செல்லி உடனே எனக்கு ருக்மணியை நினைவுபடுத்தினாள். மூன்று மாதத்திற்கும் மேலாகிவிட்டது வீட்டுக்குச் சென்று. நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய போது வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்ற சந்தேகத்தை அவள் என்னிடம் கேட்டாள் என்பதை இப்போது நினைத்துக் கொண்டேன். ருக்மணி இப்போது எங்கிருப்பாள் என்று யோசித்தேன். அவள் அம்மாவுடன் போயிருக்கக்கூடும் என்று மட்டுமே என்னால் யூகிக்க முடிந்தது. அது எப்போதும் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் வழக்கமான சமாதானங்களில் ஒன்று.

நான் என் மறைவிடத்துக்கு வந்து சுமை மூட்டையில் கைவிட்டு ரொட்டியை அவசரமாகத் தேடியபோது என்னை யாரோ உற்றுப்பார்ப்பதுபோல பின் கழுத்துச் சிலிர்த்தது. உடலை நகர்த்தி தலைக்கு மேல் கூர்ந்து பார்க்க, அந்தச் சிலந்தி வலையின் முழுக் காட்சியும் தெரிந்தது.  மண்ணில் இருந்து ஐந்து அடி உயரத்தில் தாழங்குடை கம்பிகள் போல விரிந்துகிடக்கும் வலையின் மையத்தில் ஒரு காட்டுச்சிலந்தி அசைவற்று இருந்தது. வெட்டுக்கிளியின் அளவு இருந்த அதன் சாம்பல் நிற உடலில் சிவப்பும் பழுப்பும் கலந்த கோடுகள் கவனிக்கத்தூண்டின. பாத்தேக் பழங்குடிகளின் பேச்சில் இதை மரச்சிலந்தி என்று குறிப்பிடுவார்கள். இச்சிலந்திகள் பல வகைகளில் உள்ளன. பெயர்களும் பல. தூண்டில் நாருகளைப்போல வலுவான வலைகளைப் பின்னக் கூடியவை. சிவப்புக் கோடுகள் உள்ள சிலந்திகள் விஷத்தன்மை கூடுதலானவை. என் அசைவுகளை அது மிக கவனமாக உள்வாங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.  “உன் வலையில் நான் சிக்க மாட்டேன்” என்று மனதில் கூறிக் கொண்டேன்.

மூட்டைக்குள் கைவிட்டு மீண்டும் உணவைத் தேடினேன். நேற்று மிச்சம் வைத்த ரொட்டித் துண்டு காய்ந்து போய்க் கிடந்தது. சிற்றெறும்புகள் அதில் மொய்க்கத் துவங்கிவிட்டன. நான் ரொட்டியில் ஊர்ந்த எறும்புகளை அவசரமாகத் தட்டிவிட்டேன். காய்ந்த ரொட்டியைப் புட்டியில் இருந்த நீரில் நனைத்து ஈரமாக்கி வாயில் போட்டு மென்றேன். ரொட்டியில் சிக்கியிருந்த எறும்புகளும் தொண்டைக்குள் இறங்குவதை நினைத்துக் கொண்டேன். ரொட்டியின் சுவையை அவை கூட்டியதாகவோ குறைத்ததாகவோ தெரியவில்லை. தொண்டையில் அடைத்துக் கொண்டு இறங்கிய ரொட்டித்துண்டு என்னை வெறிகொள்ளச் செய்தது. இன்னொரு ரொட்டித்துண்டை அதே வேகத்தில் அதக்கி விழுங்கினேன். ரொட்டித்துண்டுகள் அப்படியே தொண்டையில் சிக்கி நான் இறந்து போனாலும் நல்லதுதான் என்று தோன்றியது. ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை.  பின்னர் நீரை மடக் மடக்கென்று குடித்தபோது லேசாக மயக்கம் வருவதுபோல் இருந்தது. வயிற்றுக்குள் கித்தா கொட்டைகள் வெடித்துச் சிதறுவது போல சத்தம் கேட்டது.

எனது மெல்லிய அயர்வு நிரந்தர உறக்கத்துக்குப்பாதை அமைக்கலாம். கண்களை உஷ்ணம் ஏற தேய்த்துக்கொண்டேன். அன்னாந்து அந்தச் சிலந்திவலையை நோட்டம் விட்டேன். சிலந்தியிடம் எந்தச் சலனமும் இல்லை. அதன் முதுகில் பச்சைக்குத்தியது போல பதிந்துகிடந்த சிவப்புப் பழுப்பு கோடுகள் மினுங்கின. நண்டு போல கால்களை அகட்டி நின்றது. அதன் பிசின் வலையில் எந்தப் பூச்சியும் வந்து ஒட்டிக் கொள்ளவில்லை. அது பொறுமையாகக் காத்திருந்தது. சிலந்தியின் பொறுமை ஆச்சரியம் அளிப்பது. நேற்று இரவு முழுவதும் அது என் தலைக்கு மேல் இருந்தபடி என்னை கண்காணித்துக் கொண்டிருந்திருக்கும். என்னைத் தாக்க அது முழு விழிப்பிலேயே இருந்திருக்கும். ஆனாலும் நான் அதன் வலையைத் தீண்டாதவரை அது தன் விஷத்தை என் மேல் கக்கப்போவதில்லை. சிலந்தியைப் போலவே காட்டில் என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் மனித கண்கள் எங்கேயும் மறைந்திருக்கக்கூடும் என்னும் உணர்வு வந்ததும் மனம் பதற்றம் ஆனது.

என் இடைவாரில் எப்போதும் இணைந்திருந்த என்ஃபில் நொ.2 இப்போது என்னுடன் இல்லை. அது என் துணைவனாகவே இத்தனை காலம் உடன் இருந்து தெம்பைக் கொடுத்தது. பெத்தோங் முகாமில் துப்பாக்கிப் பயிற்சி பெற்ற போது நான் பயன்படுத்திய துப்பாக்கியைப் போன்றதல்ல அது. மேலும் நவீனமானது. கனம் குறைவானது. எளிதில் கையாளக் கூடியது. இறுதியாக முகாமில் இருந்து வெளியேறிய குழப்பமான சூழலில் என்ஃபில் நொ.2 எங்கோ தவறிவிட்டது. இரவில் நான் கீழே விழுந்த இடத்தில் அதுவும் விழுந்திருக்கலாம்.

ஓடையின் ஓரத்தில் வளர்ந்திருந்த மூங்கில் புதருக்குள் இருந்து சன்னமாக ‘கொக் கொக்’ என்று சத்தம் வந்தது.  காட்டுப் பறவை ஒன்று எட்டிப்பார்த்தது. என்னைக் கண்டதும் அதிர்ச்சியில் தன் கழுத்தை நீட்டி உயர்த்தியது. அதன் சிவந்த கண்கள் வியப்பில் விரிந்தன. கம்பத்தில் அதைப் பச்சை காட்டுக் கோழி என்று சொல்வார்கள். கின்னிக்கோழி போன்ற உடல்வாகு கொண்டது. உலகில் உள்ள எல்லா நிறங்களையும் தன் உடலில் அள்ளிப் போட்டுக் கொண்டதுபோல் வண்ணக்கலவையாக இருக்கும் பறவையினம். ஆபத்துக் காலங்களில் பெருங் குரலில் கோரமாக இரைந்து கவனயீர்ப்பை ஏற்படுத்தும். ஆகவே நான் அசையாமல் அதை கவனித்துக் கொண்டிருந்தேன். சேவல் தன் இளஞ்சிவப்புக் கொண்டை அசைய மீண்டும் கெக்கரித்தது. பின்னால் வந்த பெட்டையும் குஞ்சுகளும் மூங்கில் புதருக்குள் சடக்கென்று பதுங்கிக்கொண்டன.  அந்தச் சேவல் மூங்கில் புதருக்குள் மீண்டும் நுழையும் வரை நான் அசையாமல் இருந்தேன்.

கால்களை நீட்டி உட்காரும்போது வலி கொஞ்சம் குறைவதுபோல் இருந்தது. வலது கால் முட்டி சவ்வு கிழிந்திருக்கலாம். அல்லது எலும்பு தெறித்திருக்ககூடும். கால்களை அசைக்கும் போது உடல் முழுதுமே வலிப்பதுபோல் இருந்தது. அப்படியே மரத்தில் சாய்ந்து கொண்டேன்.  ஆயினும் சீக்கிரமாக இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்ற பதற்றம் என்னை விரட்டிக் கொண்டிருந்தது. காதுகளைச் சுற்றி பறந்த கொசுக்களைக் கைகளால் ஓட்டிவிட்டு மெல்ல எழுந்து நிற்க முயன்றேன். இயலவில்லை. இன்னும் ஒரு மைல் தூரத்தில் இருக்கும் பாத்தெக் பூர்வகுடி கம்பத்துக்குள் நுழைந்துவிட்டால் போதுமானது. இந்த ஓடையைத் தொடர்ந்து தெற்காகச் சென்றால் பூர்வகுடி கம்பம் ஆற்றோரம் அமைந்திருக்கும்.  அது ராணுவ கண்காணிப்பு உள்ள இடம். உயிர் தப்பிவிடலாம்.  ஆனால் அங்குச் சென்று சேர்வதே எனக்குப் பெரும் சவாலாக இருந்தது. கால்கள் அசையமறுத்தன. மெங்கூடோங் மரத்தின் அடியிலேயே இந்தச் சிலந்தி சாட்சியாக நான் கொல்லப்படக் கூடிய வாய்ப்பு அதிகமாக இருந்தது.

ஆரவாரமாகப் போட்டியிட்டுக் கொண்டு வளர்ந்த மரங்களும் செடிகளும் சூழ்ந்தmoon_spider_web_Jolynn_Keutzer_Bales_7-2-2012-e1341246250332 கிரீக் காட்டுக்குள் தோழர்களுக்குத் தெரியாத பாதைகள் இல்லை. பாத்தே பூர்வகுடி மக்களின் உதவியில் நாங்கள் பல பாதைகளை அறிந்திருந்தோம். அவை தடம் அமைந்த பாதைகள் அல்ல. ஓடைகளையும் மரங்களையும் பாறைகளையும் அடையாளமாக வைத்துக் கொண்ட பாதைகள். அவை நாங்கள் காட்டுக்குள் ஊடுருவிச் செல்ல உதவின.  பாதுகாப்புப் படையின் காவலைக் கடந்து சுலபமாகச் சயாமுக்குள் புகுந்து வெளியேற எங்களுக்குத் தெரியும். பேராக் மாநில வட எல்லை எங்களுக்குப் பாதுகாப்பான நிலப்பரப்பு. அங்குத் தோழர்கள் அமைத்த சுரங்கப்பாதைகள் வழியும் ஆற்றுப் பாதைகள் வழியும் சயாமுக்குள் நுழைந்துவிட முடியும். தென் சயாமில் தோழர்களுக்கான தலைமை முகாம் அமைந்திருந்தது. மலாயாவில் ராணுவ தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க இயக்க தலைமை மெல்ல நகர்ந்து சயாமுக்குள் ஒரு நிரந்தர முகாமை அமைத்துக் கொண்டது.

நான் மீண்டும் சிலந்தியைப் பார்த்த போது அது தன் உடலை எனக்கு எதிராகத் திருப்பியிருப்பது தெரிந்தது. அதன் எட்டுக் கால்களும் குச்சிகள் போல் விரிந்து கிடந்தன. காற்றில் அந்த வலை மெல்ல அசைந்த போது அலையில் மிதக்கும் படகுபோல சிலந்தியும் மெல்ல அசைந்தது. கருங்குரங்குக் கூட்டம் மரங்களில் தாவி வேறு எங்கோ பயணப்பட துவங்கியிருந்தன. அவை தங்களுக்குள் காரசாரமாக உரையாடிக் கொள்ளும் சத்தம் எனக்கு இதமாக இருந்தது. அந்தக் குட்டிக் குரங்கு இப்போது தன் தாயின் மடியை இறுக்கப்பற்றிக் கொண்டு கவிழ்ந்திருந்தது. காடு ஓய்வே இல்லாமல் இயங்கும் பெரும் கடலாகத் தெரிந்தது. எல்லா திசைகளிலும் அதன் அலை எழுந்து விழுந்து கொண்டிருந்தது.

காட்டில் நான் காயம் பட்டுக் கிடப்பது புதிதல்ல என்றாலும் இப்படி தனியாளாகக் கிடப்பது முதல் முறை. இதுவே இறுதியாகவும் ஆகிவிடக்கூடும்.  தோழர்களுடன் வனத்தில் அலைந்த தினங்களை நினைத்துக்கொண்டேன். அது மிகுந்த உட்சாகமான நாட்கள். இந்த மண்ணை புரட்சியின் வழி வென்றெடுப்போம் என்ற நம்பிக்கை உச்சத்தில் இருந்த நாட்கள். எங்கள் நப்பிக்கைக்குக் குறுக்கே வரும் யாரும் எங்களுக்குப் பகைவர்தான். ஆனால் நிலைமை மெல்ல மாறியது. உள்ளூர் வாசிகளிடம் எங்களுக்குத் தொடக்கத்தில் கிடைத்த வரவேற்பு மெல்ல குறைந்து கொண்டே வந்தது.

மலாய்க் கம்பங்களிலும் சிற்றூர்களிலும் அமைக்கப்பட்ட ஊர்காவல் படைகள் பிரிட்டிஷ் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தன. பிரிட்டீஷ் படைக்கு ஊர்காவல் படை கண்களாகவும் காதுகளாகவும் இருந்து உதவியது.  அவர்கள் எங்களை இந்நாட்டின் அழிவுசக்தி என்றே உறுதியாக நம்பினார்கள். எங்கள் மீதான அவர்களின் கசப்புக்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம்.  அந்தக் கசப்புகளை நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமோ என்கிற குழப்பம் எனக்கு உள்ளூர எழுந்து கொண்டே இருந்தது. இப்போதுவரை அந்தக் குழப்பம் அகன்றபாடில்லை.

‘இந்த மண்ணை அன்னியர் ஆளக்கூடாது’ என்று இயக்கம் கூறிக் கொண்டிருந்தையேதான் அவர்களும் ஆவேசமாகக் கூறினார்கள். ஆனால் இதில் அந்நியர் யார் என்பதில்தான் சிக்கல் இருந்தது.

டோவன்பி செல்லும் காட்டுப்பாதையில் நடந்த தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கந்தான் சுண்ணாம்பு குகைக்குள் நாங்கள் சுற்றிவளைக்கப்பட்டோம். போலீஸ் எங்களை மடக்க ஊர்காவல் படை பெரிதும் துணையாக இருந்தது என்பதை அறிந்து கொண்டோம்.

நான் மரணத்தை நோக்கி நொடி நொடியாக ஊர்ந்த தருணமாக அது இருந்தது. துப்பாக்கி குண்டுகள் என் உடலை உரசிக் கொண்டு பாறைகளைச் சிதைத்தன. வெடிப்பும் தீப்பிழம்பும் மிக அருகில் கேட்டன.  என் கண் முன்னாலேயே பாலன் கீழே சாய்ந்தான். வயிற்றில் தோட்டா பாய்ந்து கீழே கிடந்தவனின் வாயில் துப்பாக்கியைச் செருகிய ஒரு காவல் வீரன், ‘துரோகியே ஒழிந்துபோ” என்று கத்திக் கொண்டே சுட்டான்.   மேலும் இரு தோழர்கள் எங்கோ அலறி சாயும் கூச்சல் இருட்டில் என் காதுகளுக்குக் கேட்டது. நான் மெல்ல தவழ்ந்து குகையின் ஈரமான பகுதியில் இரவு முழுதும் பதுங்கிக் கிடந்தேன். வெளவால்களின் எச்ச வாடை மூர்க்கமாக சுவாசத்தை அடைத்தது.  மறுநாள் ஒரு ரகசிய பாதையின் வழி வெளியேறி முகாமை அடைந்தேன்.

அந்த இரவில் எனக்குள் இருந்த கேள்விகளும் குழப்பங்களும் இந்தக் காட்டைப் போலவே அடர்த்தியாக இருந்தன. ஒன்றோடு ஒன்று பின்னி முறுகிக் கொண்டன. அந்த ஊர்காவல் வீரனின் வெறிக்குரல் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. யாருக்காக நாம் உயிரை பணையம் வைக்கிறோம்? இனி யாரை நோக்கி இந்தப் போராட்டம் இருக்கும்? இதற்கான முடிவு எப்படி இருக்கும்?  அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் குழம்பிக் கிடந்தேன்.   என் உயிர் எப்போது வேண்டுமானாலும் காட்டுக்குள் கரைந்து போகக்கூடிய சாத்தியங்கள் மிக அருகில் தெரிந்தன. நண்பன் பாலனின் அற்பமான சாவு போலத்தான் என் சாவும் நடந்து முடியும். ஏதோ ஒரு குகைக்குள் என் பிணத்தில் பெருச்சாலிகள் மொய்க்கக்கூடும். ஆயுத போராட்டத்தில் நான் வைத்திருந்த நம்பிக்கை எங்கோ சரிவில் வீழ்ந்து விட்டது போல் இருந்தது.

ஜப்பான்காரனுக்கு எதிராகவும் வெள்ளைக்காரனுக்கு எதிராகவும் இயக்கம் தொடங்கிய போராட்டம் இப்போது உள்நாட்டினருக்கு எதிராகவும் மாறிவிட்டிருந்தது. கம்பத்து மலாய்க்காரர்கள் எங்களை அழிக்க எல்லாவகையிலும் அரசுக்கு உதவினார்கள். எங்கள் நோக்கம் எங்கோ சிதைந்துவிட்டிருந்தது அல்லது திசைதிருப்பப்பட்டுவிட்டது என்பது என் அனுமானம். அல்லது இதுதான் உண்மையான இலக்கோ என்ற சந்தேகமும் மனதைக் குடைந்தது. மலாயா கம்யூனிஸ்ட் தோழர்களின் சித்தாந்த வேகத்தைவிட பொதுமக்களின் இனமான வேகம் படபடத்து எரிய எது காரணமாக இருக்கக்கூடும் என்ற கேள்விகளில் நான் ஆழ்ந்து போனேன்.

சில தினங்களுக்குப் பிறகுதான் அந்தச் செய்தி எனக்குத் தெரியவந்தது. மலாயா அரசு நிபந்தனை அற்ற மன்னிப்பின் வழி எங்களைச் சரணடைய அழைப்பு விடுப்பதாக அறிந்து கொண்டேன். காடுகளை ஒட்டிய கம்பங்களிலும் தோட்டங்களில் ராணுவம் விநியோகித்த துண்டு அறிக்கைகளைத் தோழர்கள் காட்டினார்கள். பழுப்பு நிற காகிதங்களில் பல மொழிகளில் அச்சடிக்கப்பட்டிருந்தது. மன்னிப்புடன் சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

சலுகைகளில் ஈர்க்கப்பட்ட சிலர் சத்தமில்லாமல் அரசாங்கத்திடம் சரண் அடைந்து எங்கள் எதிரணிக்குச் சென்றுவிட்டிருந்தனர். இயக்கம் பற்றிய ரகசியங்களை அவர்கள் அரசாங்கத்துக்கு ஒப்புவித்தனர்.

நான் சகாதேவனிடம் பொது மன்னிப்புப் பற்றி பேசினேன்.

“நீ இந்த ஏமாற்று வேலைகளை நம்புகிறாயா?” என்று அவர் கேட்டார்.

“நீங்கள் இந்த போராட்டத்தை நம்புகிறீர்களா?”என்று நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன்.

அவர் திடுக்கிட்டு என்னைப் பார்த்தார்.

“நம்புகிறேன். ஆயுதமும் புரட்சியும் இல்லாமல் உலகில் எங்கும் மறுமலர்ச்சி தோன்றிவிடவில்லை.”

“ஆனால் இது மலாயாவின் மண் உரிமை பிரச்சனையாக ஆகிவிட்டதே. கம்பத்து மக்களை நமக்கு எதிராக திரட்டி விட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா?”

“நீ மரணத்துக்கு அஞ்சுகிறாய்… உன் மூளை குழம்பியிருக்கிறது. வெற்றி நமக்கு மிக அருகில் இருக்கிறது. நமது வெற்றி கம்பத்து மக்களை நம் பக்கம் கொண்டுவந்துவிடும். ”

என் மனதுக்குள் பல சொற்கள் எழுந்து வந்தன. கட்டுப்படுத்திக் கொண்டேன். “வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகப்போகிறான்… இனி நாம் யாருடன் போர் செய்யப்போகிறோம்?” என்றேன்.

“நமது போராட்டம் வெள்ளைக்காரனுடன் என்பது தவறு. நாம் போராடுவது முதலாளிகளுடன். வெள்ளைக்காரன்தான் நாட்டைவிட்டுப் போகிறான்.  முதலாளித்துவம் போகாது. அவன் தனக்கேற்ற புதிய முதலாளிகளிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறான். நாம் எளிய மக்களுக்காகப் போராடுகிறோம்”

“ஆனால், எளியவர்கள் நம் பக்கம் இல்லையே”

“அதுதான் நான் சொன்னேன்… அதிகாரம் நம் கைக்கு வரும் வரைதான் இந்த நிலை…”

“அதுவரை நாம் சாதாரண மக்களைக் கொல்வோம்…இல்லையா?”

“நமது லட்சியம் நிறைவேறும் வரை போராடித்தான் தீரவேண்டும். வர்க பேதம் ஓயும் வரை நாம் ஓயக்கூடாது.”

“எனக்கு ஆயுத போராட்டத்தில் நம்பிக்கை போய்விட்டது தோழரே… நம்மை நாமே எமாற்றிக் கொள்கிறோம்…”

சகாதேவன் என் அருகில் வந்து அமர்ந்தார். ஒரு சிகரட்டைப் பற்றவைத்துக் கொண்டார். எனக்கும் ஒன்றைக் கொடுத்தார். மிக தாழ்ந்த குரலில் சொன்னார். ”நீ குழப்பத்தில் இருக்கிறாய். நமது கொள்கைகளுக்கு விரோதமாகப் பேசுகிறாய்… ஆயுதம் ஏந்துவது நமது விருப்பம் அல்ல. அது நம் கைகளில் திணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான்காரனை விரட்ட மட்டும் நம்மைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது உனக்கும் தெரியும். ஆங்கில அரசு நம்மை வஞ்சித்து விட்டது. இயக்கத்தின் மீது நம்பிக்கை இழக்காதே.  உன் பேச்சு மேலிடத்துக்குத் தெரிந்தால் ஆபத்தாக முடியலாம்… அமைதியாக சிந்தித்துப் பார்” என்றார்

orb-spider-gettyநான் சற்று நேரம் வெறுமையை உணர்ந்தேன். சிகரட்டை ஆழமாக இழுத்து ஊதினேன். அந்த இடத்தில் நான் தனியாக இருப்பதாகத் தோன்றியது.  என் மூன்றாண்டு கால ரகசிய வாழ்க்கையும் ஆயுத போராட்டங்களும் நினைவுக்கு வந்தன. நாங்கள் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட சிறு குழுக்களாகத் தோட்டங்களில் முதலாளிகளுக்கு எதிராகச் செய்த அழிவுகளை நினைத்துப் பார்த்தேன். அசாப் கொட்டாய்களைக் கொழுத்தியுள்ளோம். காட்டிக் கொடுப்பவர் என்ற சந்தேகத்தில் பலரைக் கடத்தி மிரட்டியிருக்கிறோம். சிலரைச் சுட்டுக் கொன்றிருக்கிறோம்.  ரயில் தண்டவாளங்களின் கட்டைகளைப் பெயர்த்து பார வண்டிகளைக் கவிழ்த்திருக்கிறோம்.  முதலாளிகளுக்குக் கொடுக்கும் இடையூறு என்பது ஆங்கில அரசுக்குக் கொடுக்கும் மிரட்டல் என்பதால் நாங்கள் எங்கள் சாகசங்களைக் குதூகலமாகச் செய்தோம். ஆசிய நாடுகள் எங்கும் வெடித்த விடுதலை குரல்களில் நாங்களும் இணைந்து கொண்டோம்.  ஆனால், இனி நிலைமை அப்படி இருக்காது. மக்கள் விடுதலையை நோக்கி உட்சாகமாக நகர்ந்துவிட்டனர். இயக்கத்தின் போராட்டம் உள்ளூர் மக்களுக்கு எதிரானதாக மாறப்போகிறது என்பதை நான் உணரத் தொடங்கினேன்.

“எனக்கு ஆயுத போராட்டத்தில் நம்பிக்கை போய்விட்டது” என்று மீண்டும் நான் முணுமுணுப்பது போல் சொன்னேன்.

குழைவான குரலில் “நீ மேலிடங்களைப் பகைத்துக் கொள்கிறாய்… அது ஆபத்தானது” என்றார் சகாதேவன்.

நான் அவரின் கண்களை நேராகப் பார்த்தேன்.  “மேலிடம் என்பது என்ன?  அவர்கள் நம் முதலாளிகளா?”

சகாதேவன் எழுந்து கொண்டார். அவர் அமைதி குழைந்திருந்தது. சிகரெட் துண்டைக் கீழே வீசிவிட்டு அங்கிருந்து சென்றார். அவர் என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தார். எங்கள் உரையாடல் அத்துடன் நின்று போனது.

எதிர்பாராவிதமாக மறுநாள் பெருமாள் வாத்தியாரிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ரகசிய இடத்தில் நாங்கள் அவரைச் சந்திக்கச் சென்றோம்.

அது மிக முக்கியமான சந்திப்பாக மாறும் என்று என் உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. இல்லை என்றாலும் என் எண்ணத்தை நேரடியாக அவரிடம் சொல்ல அச்சந்திப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்திருந்தேன்.

குரங்குகள் திடீர் என்று பெரும் கூச்சல் இட்டுக் கொண்டு தாவின. ஒரு ஆண் குரங்கு இன்னொரு குரங்கை தாக்கியதில் அது கிளையில் தலைகீழாகத் தொங்கி வாலால் கர்ணம் பாய்ந்தது. கிளைகளில் மறைந்திருந்த பறவைகள் பதற்றத்துடன் பறந்தன. எனக்குள் பரபரப்பு அதிகரித்தது.  நான் உடலை மெல்ல முன்னே நகர்த்தி  எல்லா திசைகளையும் கவனித்தேன். பெத்தாய் மரத்துக்குக் கீழ் வளர்ந்திருந்த எறும்பு புற்றில் பெரிய தலை கட்டெரும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து கொண்டிருந்தன. அவை என் கால்களுக்கு வெகு அருகில் கிடிகிடியென சன்னமாக ஒலியெழுப்பியபடி மரப்பட்டைகளில் ஊர்ந்துகொண்டிருந்தன.

நான் மீண்டும் சிலந்தி வலையைக் கவனித்தேன். பழுப்பு நிற வண்டு ஒன்று வலையில் சிக்கியிருந்தது. சிலந்தி மிக வேகமாக நகர்ந்து அந்த வண்டை நோக்கிச் சென்றது. தன் வயிற்றில் இருந்து வெளிவந்த பசையால் வண்டை பொட்டலம் போல சுற்றத் தொடங்கியது. அதன் நான்கு கால்கள் மிக வேகமாக இயங்கிக்கொண்டிருந்தன.  நான் அந்த வண்டின் போராட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். வண்டு சிலந்தியின் கால்களுக்கிடையே பந்துபோல் சுழன்று கொண்டிருந்தது.  பருத்தித்துணி போன்ற பசையால் முழுமையாக மூடப்பட்ட வண்டு கூட்டுப்புழு போல அசைவற்று வலையில் ஒட்டிக் கொண்டது. சிலந்தி இன்னும் சில நிமிடங்களில் வண்டை தின்னக்கூடும். இந்தக் காட்டின் மீது வைத்த நம்பிக்கையில் சுற்றிப்பறந்து கொண்டிருந்த வண்டு இப்போது நிராதரவாகக் கிடப்பதைப் பார்த்தபோது, நேற்று மாலை பெருமாள் வாத்தியாரைச் சந்தித்தது சட்டென நினைவுக்கு வந்தது.

நான் நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் பெருமாள் வாத்தியாரைச் சந்தித்தேன். உடன் சில தோழர்களும் இருந்தனர். மூங்கிலில் செய்யப்பட்ட முக்காலியில் அவர் அமர்ந்திருந்தார். இரவில் பயன்பட்ட தீப்பந்தம் கரிகட்டைபோல பக்கதில் கிடந்தது.  சட்டை போடாத அவர் உடல் வலிமை குன்றாமல் இருந்தது.  அவர் கையில் ஒரு கடித உறை இருந்தது.  என்னோடு சகாதேவனும் இருந்தார்.  கட்டையன், கிருஷ்ணன் போன்ற தோழர்களும் அங்கிருந்தனர். பத்துக்கும் குறையாத தோழர்கள் அங்கே கூடியிருந்தோம். மாலை நேரத்தின் குளிர்ச்சியும் நீர்வீழ்ச்சியில் இருந்து காற்றில் படர்ந்துவரும் நீர்த்திவலைகளின் குளுமையும் புது உற்சாகத்தைத் தந்தது.

சகாதேவன்தான் முதலில் கேட்டார்.

“நாங்க கேள்விப்பட்டது உண்மையா தலைவரே?”

எனக்குச் சகாதேவன் எதைக் குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை.

பெருமாள் வாத்தியார் தலையை அசைத்தார். சகாதேவனின் முகம் சட்டென மாறுவதை நான் பார்த்தேன். ஏதோ பேச வந்தவர் எதுவும் பேசாமல் பெருமாள் வாத்தியார் கையில் இருக்கும் கடிதத்தைக் கவனித்துக் கொண்டு விரைப்பாக நின்றார்.

பெருமாள் வாத்தியார் கடிதத்தை காட்டிச் சொன்னார்

“மலாயா அரசாங்கம் நம்மை சரணடைய சொல்லி கடிதம் அனுப்பியிருக்காங்க. பொதுமன்னிப்புக் கொடுத்து நம் தோழர்களுக்குச் சில சலுகைகளும் கொடுக்க முடியும்னு அறிவிச்சிருக்காங்க.. இந்த கடிதத்தை சம்பந்தன் எழுதி அனுப்பியிருக்கிறார்”

“தலைவர் என்ன நினைக்கிறீங்க”  நான் சத்தமாகவே கேட்டேன்.

சகாதேவன் சட்டென குறுக்கிட்டார்” இது சரணடையக் கூடிய போராட்டமில்ல. சரணடையச் சொல்வதே எதிரிகளோட சதிதான். இத்தனை காலமா நம்ம உழைப்பும் உயிர விட்ட தோழர்களோட தியாகமும் வீணாகிடக் கூடாது”

“சகாதேவன், போராட்டத்தோட போக்கு இப்ப மாறிடுச்சி… சொந்த நாட்டுல சொந்த மக்களோட போராட்டமா இது தொடரக்கூடாது”

“தலைவரே, வெள்ளைக்காரன் இப்ப நாட்டவிட்டு வெளியேரக் காரணமே இயக்கத்தோட போராட்டம்தான். இந்த நல்ல சந்தர்ப்பத்துல நாம ஏன் பின்வாங்கனும்? தொடர்ந்து போராடுனா இங்க இயக்கம் அதிகாரத்துக்கு வரும்.”

“விடுதலைக்கு பின்னால நாம மக்களுக்கு என்ன செய்ய முடியும்னு யோசிக்கிறதுதான் புத்திசாலித்தனம். நாம ஆயுதத்த கைவிடுவதே நல்லது” பெருமாள் வாத்தியார் தெளிவாகச் சொன்னார்.

கட்டையன் சகாதேவனின் அருகில் நகர்வதை நான் கவனித்தேன்.

“மன்னிக்கனும் தோழரே. உங்க முடிவு மேலிடத்துக்கு விருப்பமானதா இல்ல. அது இயக்கத்துக்கே பெரும் பாதிப்பை கொண்டுவரும்.  நேரில் ஒருமுறை உங்க கிட்ட பேச நினைத்தோம். உங்க முடிவ தெரிஞ்சிக்க மேலிடம் உத்தரவிட்டது. இங்க வந்தோம்.  எனக்கு அதற்கான உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கு.”  சகாதேவன் பேசி முடித்த அதே நேரம் கட்டையன் தன் கைத்துப்பாக்கியால் பெருமாள் வாத்தியாரை இரண்டு முறை சுட்டான். சட்டை அணியாத அவரின் மார்பிலும் கழுத்திலும் துளைத்துக் கொண்டு தோட்டாக்கள் பாய்ந்தன. அவர் கையில் இருந்த கடிதம் ரத்தத்துளிகளில் விழுந்தது.

சகாதேவன் பெருமாள் வாத்தியாருக்கு அருகில் நின்ற தோழனையும் சுட்டார். எதிர்ப்பாரா தாக்குதலில் அவன் கூடாரத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டான்.

நான் அதிர்ந்து போனேன்.  என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.  ஆனால் சகாதேவன் இவ்வளவு தூரம் போவார் என்று நான் நினைக்கவில்லை.  என்னால், மேலே யோசிக்க முடியவில்லை. யாரோ என்னை இருட்டுக்குள் தள்ளி கதவுகளை அடைப்பது போல ஒரு தவிப்புக் கொப்பளித்து வெடித்தது.

நான் சகாதேவனையும் கட்டையனையும் என் துப்பாக்கியால் பலமுறை சுட்டேன்.  அடுத்த நொடி காட்டுக்குள் குதித்து ஓடினேன். எனக்குப் பின்னால் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. காட்டுக்குள் பதுங்குவதும் ஓடுவதுமாக நேற்றைய இரவு முடிந்திருந்தது.

ஓடையில் சலசலப்புக் கேட்டது. புதரில் மறைந்திருந்த பறவைகள் குபுக்கென பறந்தன. காட்டுக்கோழி கொடூர குரலில் அலறியது. உச்சிக் கிளையில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று எச்சரிக்கை குரல் கொடுத்தபடி வேறு கிளைக்குத் தாவிச்சென்றது. மிக அருகில் மனிதர்கள் இருப்பதை உணரமுடிந்தது. நான் மெல்ல எழுந்து மரத்தில் சாய்ந்து நின்றேன். மிக அருகில் சிலந்திவலை இருந்தது. சிலந்தி, பூச்சியை உண்டுவிட்டு மீண்டும் வலையின் மையத்தில் கால் பரப்பி நின்று கொண்டிருந்தது. அதன் முகம் நேராக என்னை நோக்கி இருந்தது. கண்கள் மின்னின. நான் என் வலது கையைச் சிலந்தி வலையில் வைத்து மெல்ல அசைத்தேன்.

 

2 comments for “சிலந்தி

  1. Manoharan
    September 1, 2020 at 7:15 pm

    எனக்கு சிறுகதை சரியாக புரியவில்லை ஐயா. ஆனால் விவரிப்பு என்னை காட்டுக்குள் அழைத்துச்சென்றது.

  2. ராஜேந்திரன்@ராஜன்
    September 3, 2020 at 8:50 am

    பாண்டியன், முக்கியமான அரசியலைத் தொட்டு பேசியுள்ளீர்கள். புனைகதைகளில் இந்த அரசியல் இல்லாமல்தான் வெறுண்ட பாலைவனமாக உள்ளது. சொற்களில் சாகசம் செய்கிறார்கள். நண்பர் ஒருவர் அனுப்பி வைத்ததால் உங்கள் கதை வாசிக்கக் கிடைத்தது. எங்கள் குழுவில் பகிர்ந்துள்ளேன். எந்தப் போராட்ட இயக்கமும் மக்களுக்கு எதிராக திரும்பும்போது அது அழிவு சக்திதான். விடுதலை புலிக்கும் இதே நிலைதான்.

Leave a Reply to Manoharan Cancel reply