பெருந்தேவி கவிதைகள்

சில நாட்கள் இது நடக்கும்peruntevi

அதிகாலையிலிருந்தே அந்த நாள்
உனக்கெதிராகச் சதி செய்வதாக
ஒவ்வொரு நிமிடமும்
உன்னை முறைத்துவிட்டு நகர்வதாக
ஒவ்வொரு பார்வையும்
உன் கழுத்தை நெரிக்கப்போவதாக
உன் கைகளும் கால்களுமே
உனக்கெதிரான சதியில் சேர்ந்துவிட்டதாக
உன் நகங்கள் திடீரெனப் பெரிதாகி
உன்னைக் கீறி
ரத்த விளாறாக்கிவிடும் போல
உன் கைகளை ஒன்றோடொன்று
இறுக்கமாகக் கோர்த்தபடி
உன் பாதங்களை உற்றுப் பார்த்தபடி
அமர்ந்திருப்பாய்
அப்போது உன் அலைபேசி
சட்டென ஒளிரும்
ஒரு செய்தி
எங்கோ தூரத்திலிருந்து ஒரு கை
எல்லாச் சதிகளையும்
கூட்டித் தள்ளிவிடும்
உன்னை ஏந்திக்கொள்ளும்
அதில் நீ ஏறி அமர்ந்து
சுற்றிமுற்றிப் பார்ப்பாய்
உன் சின்ன உலகம் தெரியும்
அதைத்
தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்

 

ஒரு நாளும் முட்டாள்களும்


முட்டாள்கள் காலைகளில் அழுகிறார்கள்
சில செம்பருத்திகள் தண்டுகளற்றுப்
பூக்க முயல்கின்றன
ஒரு கருவண்டு சூரியனைத் தொட்டுவிட்டதாகப்
பெருமை பீற்றிப் பறக்கிறது
முட்டாள்கள் மதியங்களில் அழுகிறார்கள்
கணக்கு வாத்தியார்கள்
மக்குப் பிள்ளைகளின் தலைகளில் அடிக்கிறார்கள்
வெயிலில் காற்று ஒதுங்கி நகர்கிறது
முட்டாள்கள் மாலைகளில் அழுகிறார்கள்
யார் யாரோ யார் யாருக்காகவோ
பொறுமையின்றிக் காத்திருக்கிறார்கள்
கடந்துசெல்லும் வாகனங்களின்
பின்பக்கங்களை வெறித்துப் பார்க்கிறார்கள்
முட்டாள்கள் இரவுகளில் அழுகிறார்கள்
சில கதவுகள் அறைந்து சார்த்தப்படுகின்றன
சில பெயர்கள் நாக்குநுனி வரைவந்து
விழுங்கப்படுகின்றன
முட்டாள்கள் நள்ளிரவுகளில்
கண்களைத் துடைத்துக்கொள்கிறார்கள்
தண்டுகளின்றி பூக்கப் போகும்
செம்பருத்திகளாகத்
தங்களை நினைத்துக்கொள்கிறார்கள்

 

 

இங்கே இரவாகும்போது அங்கே பகலாகிறது

 

குளியல்தொட்டியிலிருந்து
எழுந்து நின்ற அவள்
தன்னைப் பார்த்துக்கொண்டாள்
சில புதிய மச்சங்கள்
சிறிய பெரிய சிவப்புப்புள்ளிகள்
உடல் மாறிவிடவில்லை
வயது எங்கோ தூரத்தில்தான் குலைக்கிறது
கொன்றைகள் வாடிவிடவில்லை
உடையணியும்முன்
தன் தலையை இடப்பக்கம் சாய்த்து
ஒரு செல்ஃபி எடுத்தாள்
வேறொரு கண்டத்தில்
ஒரு கடலில் நத்தைகள்
மெதுவாகக் கடலேறின
ஒரு மல்லிகைப்பந்துக்கும்
இன்னொன்றுக்குமாக
அவள் கை அலைந்தது
குளியலறைக் கண்ணாடியில்
வழக்கம்போல்
தனியாகச்
சிதையில் இறங்கினாள்

 

அங்கே பகல் இங்கே இரவை
மாற்றிவிடப்போவதில்லை
எதுவும்
எதுவுமே

 

 

ஒன்றே போன்றவர்கள்


ஒன்றே போல் புன்னகைக்கிறார்கள்
ஒன்றே போல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள்
ஒன்றே போல் புறணி பேசுகிறார்கள்
ஒன்றே போல் பதற்றப்படுகிறார்கள்
அவர்களுக்கு
ஒன்றே போல் கிறுக்குப்பிடிக்கிறது
அல்லது அப்படி நடிக்கிறார்கள்
ஒன்றே போல் நம்புகிறார்கள்
தங்களால் நல்லதையும் கெட்டதையும்
பிரித்துப் பார்க்க முடியுமென
ஒன்றே போன்றவர்கள்
பஸ்ஸில் செல்வதில்லை
ரயிலில் கண் மூடாமல் சாட் செய்கிறார்கள்
விமானத்தில் இருக்கையின் கைப்பிடியை
உட்காரும்போதே ஆக்கிரமிக்கிறார்கள்
ஒன்றே போன்றவர்கள்
ஒன்றே போல் திட்டமிடுகிறார்கள்
கவனமாகப் படிப்படியாக
மேலேறிச் செல்கிறார்கள்
கைகோர்த்தபடி
ஒன்றே போன்றவர்களுடன்
ஒன்றே போல்
வெற்றியின் ஸ்கோர் அட்டையை
உற்றுப் பார்க்கிறார்கள்
ஒன்றே போல்
நூற்றுக்கு நூறு
ஒன்றே போல் புன்னகைக்கிறார்கள்
நூறாகச் சிதறடிக்கப்பட்டவர்களின்
கண்களுக்கு மட்டுமே தெரியும் புன்னகை
நாய்களின் கண்களுக்கே
பேய்கள் தெரிகின்றன

 

 

என்னைப் பார்த்து அவர்கள் கேட்பதுண்டு


நீங்கள் எழுதுவதில் கவித்துவம் இல்லையே
கவிதைக்கான சொற்கள் இல்லையே
கவிதை மாதிரியே இல்லையே
எளிமையாக இருக்கிறதே
எப்படி கவிதை என்கிறீர்கள்
ஒவ்வொரு முறையும்
இந்த சாம்பல் கேள்விகளை
என்னிடம் கேட்கும்போது
மூச்சை நன்றாக உள்ளிழுக்கிறேன்
கண்ணை மூடிக்கொள்கிறேன்
என் காதுகளுக்குள்
இறந்த கவிஞர்கள் சிலர்
சிரிக்கிறார்கள்
பிறகு மெதுவாகக் கண்ணைத்
திறந்து பார்க்கிறேன்
கேட்டவர்கள் மறையவில்லை
ஆனால் ஒவ்வொரு முறையும்
இதைச் செய்கிறேன்
அற்புதத்தை எதிர்பார்க்காதவர்கள்
இங்கே யார் இருக்கிறார்கள்?

 

 

1 comment for “பெருந்தேவி கவிதைகள்

  1. Kaliyaperumal Veerasamy
    March 20, 2022 at 8:45 pm

    அற்புதத்தை எதிர்பார்க்காதவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள் இந்த வரி ஒன்றே போதும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...