தமிழ் எங்கள் உயிர் (நிதி வழங்கியோர் விபரம்)

1.பினாங்குவாழ் மக்கள்

தமிழ் எங்கள் உயிர் பட்டியலில் பினாங்கு முதன்மை இடம் வகிப்பதாக 17.03.1955-இல் தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளியாகியது. இந்நிலை தொடர பினாங்கு மக்களும் பினாங்கு தொழில் நிலையங்களும் தங்கள் தமிழ் உணர்வை எடுத்துக் காட்டும் வகையில் பட்டியலில் பெயர் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். மேலும், சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ ஆகிய இடங்களிலுள்ள ‘சித்திரா பளையகாட்’ கம்பெனியின் உரிமையாளர் திரு. சுப்பராயன் 100 வெள்ளி கொடுத்து உதவியதோடு நிற்காமல், வசதியுடையவர்கள் பத்து வெள்ளியில் தங்கள் நிதியைச் சுருக்கக் கூடாது என்றும் மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த திரு. என். ஜெயராம் அவர்கள் தன் குடும்பத்திலுள்ள அனைவரின் பெயரையும் பட்டியலில் சேர்த்து ‘தமிழ் எங்கள் குடும்பத்தின் உயிர்’ என்ற எண்ணம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமையவல்லது என்று எழுதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்திருந்தது. அது மட்டுமில்லாமல், அன்று 553 வெள்ளி நிதி வழங்கிய 42 நபர்களின் பெயர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது (தமிழ் முரசு, மார்ச், 17, 1955, பக். 12). பிறகு, 18.03.1955 அன்று 52 தமிழ் நெஞ்சங்களிடமிருந்து மொத்தமாக 571 வெள்ளி தமிழ் எங்கள் உயிர் நிதியில் சேர்ந்துள்ளது (தமிழ் முரசு, மார்ச், 18, 1955, பக். 12).

 

2.சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

13.03.1955 இல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் இல்லத்தில் உப தலைவர் திரு. சே. மொ. அல்லாபிச்சை சாகிப் அவர்கள் தலைமையில் நடந்த மாதாந்திர நிர்வாக சபைக் கூட்டத்தில் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதி நிலைக்கவும் தமிழ் நூல்கள் இடம் பெறவும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குத் த. மு. லீக் சார்பில் 20 வெள்ளி கொடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது (தமிழ் முரசு, மார்ச், 21, 1955, பக். 06).

 

3.தமிழர் பிரதிநிதித்துவ சபை

அது மட்டுமின்றி, தமிழ் எங்கள் உயிர் நிதி பட்டியலுக்கு ஆதரவு அளிப்பதாகத் தமிழர் பிரதிநிதித்துவ சபை அதன் முக்கிய கூட்டத்தில் முடிவு செய்தது மட்டுமல்லாமல் தமிழர்களும் அவர்களுடைய ஸ்தாபனங்களும் நிதிக்கு உதவ முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்ட செய்தி 24.03.1955 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் வெளியாகியுள்ளது (தமிழ் முரசு, மார்ச், 24, 1955, பக். 12).

 

4.மீண்டும் குன்றக்குடி அடிகளார்

1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் திகதி கபாலீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்து வரவேற்புரையாற்றிய குன்றக் குடி அடிகளார் தமிழ் எங்கள் உயிர் நிதியைத் தொட்டும் பேசியுள்ளார். தமிழ் முரசு தொடங்கியிருக்கும் தமிழ் எங்கள் உயிர் நிதி அனைத்துத் தமிழரும் ஒன்றுப்பட்டுப் பெருமைப்பட கூடியது என்று குறிப்பிட்டதோடு இந்நிதியானது மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதி மற்றும் நூல்நிலையம் தொடங்கும் ஆக்கப் பணிக்காக என்று கூறியுள்ளார். மேலும், அவர் பேசுகையில் இதற்குத் தமிழ் நாட்டு மக்கள் தாராளமாகப் பணம் தந்து உதவ வேண்டும் என்றும் குன்றக் குடி அடிகளார் கூறியதாக 27.03.1955-ல் தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளியாயின (தமிழ் முரசு, மார்ச், 27, 1955, பக். 01).

 

5.கோலாலம்பூர்வாழ் மக்கள்

27.03.1955 அன்று வெளியிட்ட தமிழ் எங்கள் உயிர் பெயர் பட்டியலில் 350 வெள்ளியில் 244 வெள்ளியைப் கொடுத்திருப்பவர்கள் கோலாலம்பூரைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் மார்க்கெட் ஸ்திரீட் ‘வெம்பினி’ முடி திருத்தகத் தோழர்கள் ஒவ்வொருவரும் பத்து வெள்ளி வீதம் மொத்தம் 110 வெள்ளி கொடுத்துள்ளனர்.

 

6. பட்டறை (ஓர்க்ஷாப்) தொழிலாளர்கள்

பிறகு, கோலாலம்பூர் செந்தூலில் அமைந்திருக்கும் பட்டறை (ஓர்க்ஷாப்) உரிமையாளர் திரு. ஐயா பிள்ளையும் மற்றும் அப்பட்டறை தொழிலாளர்களும் சேர்ந்து தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக 82 வெள்ளி அனுப்பியுள்ளனர்.

 

7.கோலாலம்பூர் மாணவ மணிமன்ற கிளை

மேலும், கோலாலம்பூர் மாணவ மணிமன்ற கிளை அங்கத்தினர்கள் இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு இன்னும் நிறைய பெரியவர்கள் முன்வர வேண்டும் என்று கடிதம் ஒன்று எழுதி அதனோடு நிதிக்கு 52 வெள்ளியையும் அனுப்பி வைத்துள்ளனர். அவர்களோடு சேர்த்து நிதி வழங்கிய இன்னும் சிலருடைய பெயர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன (தமிழ் முரசு, மார்ச், 27, 1955, பக். 06).

 

8.காந்தி ஞாபகார்த்தப் பாட சாலை மாணவர்கள் கழகம்

காந்தி ஞாபகார்த்தப் பாட சாலை மாணவர்கள் கழக ஆரம்ப விழாவில் அதனுடைய பொறுப்பாசிரியர் திரு. எஸ். கே. பிள்ளை அவர்கள் தன்னுடைய உரையை முடிக்கும் முன் மலாயா பல்கலைக்கழகத்தின் மூலம் நம் தமிழ் மொழியை முழங்கச் செய்ய பாடுபடும் திரு. கோ. சாரங்கபாணியின் முயற்சிக்கு ஆதரவு கொடுத்து மக்களும் தங்களுடைய தொண்டைச் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டுள்ளார். பின், அதே நிகழ்வில் கலந்துக் கொண்ட ஆசிரியர் திரு. ஆர். சண்முகம் இந்த நற்செயலைப் பற்றி தமிழ் மாணவர்கள் தங்களுடைய பெற்றோருக்கும் பெரியவர்களுக்கும் எடுத்துரைத்துத் தங்களால் ஆன தொண்டைச் செய்ய வேண்டுமென கூறியுள்ளார் (தமிழ் முரசு, மார்ச், 28, 1955, பக். 06).

 

9.மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்கம்

தமிழ் எங்கள் உயிர் நிதிக்குச் சிங்கப்பூர் மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்கம் தங்களுடைய நிர்வாகிகளிடமும் அங்கத்தினர்களிடமும் பணம் வசூலித்து அதை இந்நிதிக்கு வழங்குவதெனச் செயற்குழு கூட்டத்தில் தீர்மனித்தனர். அச்சங்கச் செயலாளர் திரு. நா.மு. தம்புசாமி தன் உரையில் கூறுகையில் கழகம் மட்டும் நிதி கொடுத்தால் போதாது; தமிழர்கள் அத்தனை பேரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தைக் கண்டிப்பாகக் கொடுக்க முன்வர வேண்டும் என்றார் (தமிழ் முரசு, மார்ச், 30, 1955, பக். 08).

10.பேரா மருத்துவர் சங்க செயற்குழு

12.03.1955 மற்றும் 20.03.1955ல் ஆகிய தேதியில் நடந்த பேரா மருத்துவர் சங்க செயற்குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த சங்கத் தலைவர் திரு. பெ. வெங்கடாசலம் அவர்கள் அக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவு புரியுமாறு வலியுறுத்தினார். மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதிக்குத் தமிழேடுகள் வாங்கி வைப்பதற்குத் தமிழ் முரசு பத்திரிகை ஆரம்பித்திருக்கும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு ஈப்போ மருத்துவத் தோழர்கள் கொடுக்க விரும்பும் நிதியைச் சேர்த்து அனுப்பிவைப்பதாகவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 31, 1955, பக். 08).

 

11. மலாக்கா மருத்துவ சங்கம்

தமிழ் எங்கள் உயிர் பட்டியல் தொடங்கி ஐந்து வாரங்களில் எழாயிரம் வெள்ளி மட்டுமே சேர்ந்துள்ளது என்பதைத் தமிழ் முரசு அறிவித்திருந்தது. மலாக்கா மருத்துவ சங்கம் மட்டும் 18 பேரைப் பட்டியலில் சேர்த்து, தொடர்ந்து தங்களிடம் இருந்து நிதி அனுப்பி வைக்கப்படும் என்று நம்பிக்கை கடிதம் எழுதி அனுப்பப்பட்டிருந்தது.

 

12. எப்பிங்காம் தோட்ட மாணவர் மணிமன்றம்

சிங்கப்பூர் மணியம் சொற்பயிற்சி மன்றம், பத்து செப்னாஸ் தோட்ட மக்கள், திருவிதாங்கோடு முஸ்லிம் கூட்டுறவு சங்கம் எப்பிங்காம் தோட்டத்திலுள்ள மாணவர் மணிமன்ற அங்கத்தினர்கள் முப்பது வெள்ளியும், சிங்கப்பூர் மணியம் சொற்பயிற்சி மன்றத்தார்கள் 50 வெள்ளியும், பத்து செப்னாஸ் தோட்ட மக்கள் 80 வெள்ளியும், திருவிதாங்கோடு முஸ்லிம் கூட்டுறவு சங்கம் 15 வெள்ளியும், தெலுக்கான்சன் பகுதியில் அமைந்திருக்கும் முடிதிருத்தகங்கள் 70 வெள்ளியும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும், பணம் கொடுத்த நபர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு 01.04.1955 அன்று தமிழ் முரசில் இச்செய்தியுடன் வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, ஏப்ரல், 01, 1955, பக். 04).

 

13. டத்தோ இ. இ. ஸி. துரைசிங்கம்

மேலும், தமிழ் முரசு தொடங்கியிருக்கும் தமிழ் எங்கள் உயிர் நிதியைப் பெடரேஷன் முன்னாள் கல்வியமைச்சர் டத்தோ இ.இ.ஸி. துரைசிங்கம் வரவேற்றுப் பாராட்டியதோடு பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதிக்கு உத்வேகம் நல்கும் முயற்சி என்று கூறி தமிழ்ப் பகுதிக்கு ஆதரவளிக்க இந்திய, இலங்கை அரசினருக்கு வேண்டுகோள் விடுத்தார் (தமிழ் முரசு, ஏப்ரல், 01, 1955, பக். 05).

03.04.1955 அன்று தமிழ் முரசில் வெளியிட்ட தமிழ் எங்கள் உயிர் பெயர் பட்டியலில் நிதி கொடுத்தவர்களின் விவரங்கள் மட்டுமின்றி இருவர் எழுதி அனுப்பியிருந்த வரிகளும் சேர்த்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவை :

“எனக்கு 100 வெள்ளி தான் சம்பளம். மாதாமாதம் கடனும் ஏற்படும். எனினும் தமிழ் எங்கள் உயிர். எனவே 10 வெள்ளி அனுப்பியுள்ளேன்” – பி. குமராசாமி. “எங்களைப்போன்றே புது மணத் தம்பதிகள் நிதி தருவார்களாக” – அ. காத்தான் – மயிலி (தமிழ் முரசு, ஏப்ரல், 03, 1955, பக். 12).

 

14. அகில மலாயா திராவிடர் கழகம்

24.03.1955 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்குத் திரு.கா.ப.சாமி அவர்கள் தலைமையில் நடந்த அகில மலாயா திராவிடர் கழகம் கோலாலம்பூர் கிளையின் 9-வது செயற்குழுக் கூட்டத்தில் தமிழ் எங்கள் உயிர் நிதி திட்டத்தின் முயற்சியைப் பாராட்டியதோடு அந்நிதிக்குக் கோலாலம்பூர் கிளைக்கழகத்தின் சார்பாக நிதி திரட்டி அனுப்புவதாக அவர் கூறியிருந்தார். அதுபோல் மற்ற திராவிடர் கழகங்களும் அந்நிதிக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார் (தமிழ் முரசு, ஏப்ரல், 05, 1955, பக். 10).

 

15. திரு கெ.ப. முகம்மது

பின், பத்துபாகாட்டைச் சேர்ந்த திரு.கெ.ப.முகம்மது அவர்களும் அவர்களுடைய நண்பர்களும் அவ்வூரில் உள்ள பலரிடம் நிதியைத் திரட்டி தமிழ் முரசு காரியாலயத்திற்கு நேரில் வந்து பெயர் பட்டியலைக் கொடுத்துள்ளனர். அப்பட்டியலில் 50 பேர் நிதிக் கொடுத்துள்ளதால் நிதியின் மொத்த தொகையில் 501 வெள்ளி அதிகரித்துள்ளது என்று 09.04.1955-ல் வெளியான தமிழ் முரசு பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது (தமிழ் முரசு, ஏப்ரல், 09, 1955, பக். 06). உடல் நலம் குன்றியவர்கள்கூட தங்களால் முடிந்த சிறுதொகையைக் கொடுத்து ஆதரவு அளித்துள்ளனர்.

 

16. குதிரைப்பந்தயத் திடல் ஊழியர்கள்; ரிக்‌ஷா ஓட்டுனர்கள்

குதிரைப்பந்தயத் திடலில் வேலைப் பார்க்கும் தொழிலாளிகள் 40.50 வெள்ளி அனுப்பியுள்ளனர். தைப்பிங் பத்திரிகை முகவர் திரு.எஸ்.எம்.நூர் முகம்மது பட்டியலில் பெயர் பொறித்தார். 20 ரிக்‌ஷா ஓட்டுனர்கள் மொத்தமாக 28 வெள்ளியைக் கொடுத்துள்ளனர்.

17. கோத்தாதிங்கி தோட்ட மக்கள்; கொசு ஒழிப்பு இலாகா

கோத்தாதிங்கி தோட்ட மக்கள் 81 வெள்ளியும், பாசிர் பஞ்சாங் பகுதி கொசு ஒழிப்பு இலாகா அன்பர்கள் 85 வெள்ளியும் கொடுத்துள்ளனர். அவர்களோடு சேர்த்து இன்னும் பலருடைய பெயர்கள் கொண்டு நிதிக்கு 288 வெள்ளி சேர்ந்துள்ள விவரம் 15.04.1955-இல் தமிழ் முரசில் வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, ஏப்ரல், 11, 1955, பக். 04).

 

18. ஈப்போ பாரி சொற்பயிற்சி மன்றம்

08.05.1955-இல் திரு. ஈ.பெ. இராமசாமி தலைமையில் நிகழ்ந்த ஈப்போ பாரி சொற்பயிற்சி மன்றக் கூட்டத்தில் தலைமை தாங்கியவரும் அதன் உறுப்பினர்களும் தமிழ் எங்கள் உயிர் திட்டத்தைப் பாராட்டியதோடு மேலும் தமிழர்கள் முன் வந்து நிதியை நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மலாயா வானொலியில் உள்ள தமிழ் பகுதியினர் இதன் முக்கியத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், தமிழ்ப் பத்திரிகைகள் படிக்காத படிக்க முடியாத தமிழர்களுக்கு நண்பர்களாக உள்ளவர்கள் தமிழ் எங்கள் உயிர் என்ன என்பதை எடுத்துக் கூறி நிதி வழங்க ஆதரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது (தமிழ் முரசு, ஏப்ரல், 15, 1955, பக். 08).

 

19. நயிணா முகம்மது கம்பெணி இயக்குனர்கள், சிப்பந்திகள்

17.04.1955-இல் வெளியிட்ட பெயர் பட்டியலில் நயிணா முகம்மது கம்பெணியின் இயக்குனர்களும் சிப்பந்திகளும் நிதி வழங்கியுள்ளனர்.

ஓய்வு பெறுவதற்காக சிங்கப்பூர் வந்த இந்தோசீனத் தமிழர் திரு.அஜிஸ் அவர் ஆயிரம் வெள்ளி அளித்துள்ளார். அன்றைய தேதி வரையில் மலாயாவில் தனிப்பட்டவர் அல்லது ஸ்தாபனங்கள் வழங்கிய நிதியை விட இதுவே பெரும் தொகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

20. ஏழைப் பாட்டாளிகள்

இவரைத் தொடர்ந்து வருமானம் குறைந்த பல ஏழை எளியோர்களும் நிதி வழங்க முன் வந்துள்ளனர். அவரில் ஒருவர் மராமத்திலாகா தொழிலாளி திரு.து. கணபதி தம்முடைய மூன்று நாள் சம்பளமான 12 வெள்ளியை நிதிக்குத் தந்துள்ளார்.

 

21. மலாக்கா ரீஜண்ட் தோட்ட மக்கள்

மலாக்கா ரீஜண்ட் தோட்ட மக்கள் 185 வெள்ளி கொடுத்ததோடு ஒரு கவிதையும் எழுதி அனுப்பி வைத்துள்ளனர் (தமிழ் முரசு, ஏப்ரல், 17, 1955, பக். 06). 21.04.1955 இல் வெளியிட்ட தமிழ் எங்கள் உயிர் பெயர் பட்டியலில் திரு. ஆரு. அ. நாச்சியப்பனும் அவருடைய நண்பர்களும் 120 வெள்ளி அனுப்பியுள்ளார்கள் என்றும் இன்றைய பட்டியலில் தொழிலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்களின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது (தமிழ் முரசு, ஏப்ரல், 21, 1955, பக். 06). 26.04.1955-இல் வெளிவந்த பட்டியலில் நிதி கொடுத்த 8 பேருடைய பெயரோடு அன்றுடைய வரவான 179 வெள்ளியோடு மொத்த வரவு 10,436 வெள்ளி ஆகிய விவரம் வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, ஏப்ரல், 26, 1955, பக். 11).

 

22. சைகோன்வாழ் தமிழர்கள்

இந்தோசீனாவில் குறிப்பாக சைகோனில் வாழ்கிற தமிழர்கள் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு உதவியுள்ளனர். சைகோன் பணத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 400 வெள்ளி தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக இந்தோசீனாத் தமிழர்கள் அனுப்பியுள்ளனர். இத்தொகையின் மலாயா நாட்டின் மதிப்பு 7781 வெள்ளி 99 காசு என்று சொல்லப்படுகிறது. தமிழ்ப் பகுதி அமைப்பது குறித்து இந்தோசீனா தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்றாலும் முன்வந்து எண்ணாயிரம் வெள்ளி கொடுத்ததைப் பாராடியுள்ளனர். தமிழுக்கு முதலிடம் தருவது மலாய்த் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருக்கும் பெருமை என்று சைக்கோன் தமிழர்கள் கூறியுள்ளனர்.

 

23. அப்துல் அஜீஸ் நிறுவனம்

பிறகு, திரு. அப்துல் அஜீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அன்பர்கள் 72 பேர் 2050 வெள்ளி நன்கொடை அளித்துள்ளார்கள். வணிகர்கள், செல்வர்கள் மட்டுமில்லாமல் கடைச் சிப்பந்திகள், சமயல்காரர்களுடைய பெயரும் பட்டியலில் 28.04.1955 அன்று வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, ஏப்ரல், 28, 1955, பக். 07).

பதினாங்கு பேர் 281.50 வெள்ளி நிதி கொடுத்ததாக 01.05.1955-லும்; பதினோரு பேர் 139.24 வெள்ளி நிதி வழங்கியதாக 06.05.1955-லும் தமிழ் முரசு பத்திரிகையில் நிதி பட்டியலின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன (தமிழ் முரசு, மே, 01, 1955, பக். 06)

 

24. பாரதிதாசரின் 65ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

இந்நாளில் நடந்த பாரதிதாசரின் 65-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய அக்கழக ஆசிரியர் திரு. முருகு சினிவாசகன் தன் உரையில் தமிழ் எங்கள் உயிர் நிதியைப் பற்றி பாராட்டி பேசியதோடு மக்கள் அனைவரும் முன் வந்து தங்கள் கடமையையாற்ற கேட்டுக் கொண்டார். வெறும் வாய் பேச்சாக மட்டும் விட்டுவிடாமல் அவ்விழாவில் குழுமியிருந்தவர்களிடமிருந்து தமிழ் எங்கள் உயிர் நிதிக்காகப் பணமும் வசூலித்து அனுப்பப்பட்டுள்ளது (தமிழ் முரசு, மே, 17, 1955, பக். 10).

 

25. குரோ, பந்திங் தோட்டத் தொழிலாளர்கள்

குரோ தோட்ட மக்கள், பந்திங் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பலர் சேர்ந்து கொடுத்த 845.10 வெள்ளி நிதியின் பெயர் பட்டியல் 26.05.1955 அன்று வெளியிடப்பட்டது. மேலும், இந்த நற்செயலுக்குப் பெண்களுக்கே பொறுப்பும் கடமையும் அதிகம் என்று கூறி நிதி நிரம்பும் வரை தனது பங்கை அனுப்புவதாக பெர்டாங் கினாஸ் தோட்டத்தைச் சேர்ந்த சின்னம்மாள் கூறியுள்ளார் (தமிழ் முரசு, மே, 26, 1955, பக். 04).

 

26. மருத்துவர்கள் மற்றும் மலாயா திராவிடர் கழகத்தின் கோலாலம்பூர் கிளை

பின், மருத்துவர்கள் 165 வெள்ளியும், மலாயா திராவிடர் கழகத்தின் கோலாலம்பூர் கிளை உறுப்பினர்கள் 200 வெள்ளியும் கொடுத்துள்ளனர். தமிழ் எங்கள் உயிர் நிதி தொடங்கி மூன்று மாதங்கள் ஆன நிலையில் 19000-க்கும் குறைவான தொகையே சேர்ந்திருப்பதாக 29.05.1955-இல் தமிழ் முரசு நாளிதழ் தகவல் தெரிவித்திருந்தது (தமிழ் முரசு, மே, 29, 1955, பக். 06).

 

27. தனிநாயகம் அடிகளார்

தனிநாயக அடிகள் சிங்கப்பூரில் நான்கு நாள் தங்கியிருந்து விட்டு சைகோன் செல்லும் வேளையில் தமிழ் எங்கள் உயிர் நிதி குறித்து அங்குள்ள மக்களிடம் சில வேண்டுகோள்களை விடுத்தார். இந்நிதிக்குத் தமிழர்கள் கைகொடுத்துத் தங்களுடையக் கடமையைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில் எதிர்வரும் காலத்தில் தென்கிழக்கு ஆசியாவில் மலாயா பல்கலைக்கழகம் தமிழ்ப் பண்பாட்டின் கோட்டையாகவும் களஞ்சியமாகவும் விளங்க வேண்டும். அதனால், தமிழ் மக்கள் தங்களால் இயன்ற உதவியை நிதிக்காக நல்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் (தமிழ் முரசு, ஜூன், 01, 1955, பக். 06).

 

28. ரிவர்சைடு தோட்டம், போண்டோக் தஞ்சம் மக்கள்

ரிவர்சைடு தோட்டத்தின் செம்பனைத் தோட்டத் தொழிலாளர்கள் 22.15 வெள்ளி நிதியை வழங்கியுள்ளனர். திரு. எம். வேலாயுதம் என்பவர் முன்பே நிதி வழங்கியிருந்தும் தமிழ் எங்கள் உயிர் நிதி அதிகமாகாமல் இருந்ததை எண்ணி கவலையுற்ற அவர் தன் சுயமுயற்சியில் பாட்டுக் கச்சேரி ஒன்று நடத்தி அதன் வழி கிடைத்த பணத்தொகையை நிதியில் சேர்த்துள்ளார். தொடர்ந்து, போண்டோக் தஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 30 வெள்ளியும் வழங்கியுள்ளனர்.

 

29. இலங்கையில் சுதந்திரன் இதழ்

இலங்கையில் இயங்கி வந்த ‘சுதந்திரன்’ வார இதழில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு உதவு வேண்டி தலையங்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் பின்னே, இலங்கை நாட்டில் இந்நிதிக்குப் பணம் திரட்ட ஒரு நிர்வாக சபையைக் கூட்டி நிதி சேர்க்க முயற்சித்து வரும் தகவலை சம்பந்தப்பட்டவர்கள் கடிதம் வழி தமிழ் முரசு பத்திரிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர் (தமிழ் முரசு, ஜூன், 16, 1955, பக். 04).

 

30. சிங்கப்பூர் வாசுகி தமிழ்ப்பாட சாலை மாணவர்கள்

சிங்கப்பூர் வாசுகி தமிழ்ப்பாட சாலையில் படிக்கும் மாணவ மணிகள் மீதப்படுத்தி பல வாரங்களாகச் சேர்த்து ஆளுக்கொரு வெள்ளியாக்கி 50.50 வெள்ளியுடன் அவர்கள் கடிதங்களையும் எழுதி அனுப்பியுள்ளனர். தமிழ் எங்கள் உயிர் நிதி தொடங்கி நான்கு மாதங்கள் நிறைந்த விட்ட போதிலும் இருபதாயிரம் வெள்ளியைக்கூட தொடவில்லை. (தமிழ் முரசு, ஜூன், 26, 1955, பக். 07).

31, சிகாமட் தோட்டத் திணாங்டிவிஷன் பாட்டாளிகள்

சிகாமட் தோட்டத் திணாங்டிவிஷன் பாட்டாளி மக்களும் மாணவர்களும் நிதிக்காக 52.50 வெள்ளி கொடுத்துள்ளனர்.

 

32. ‘டெலிகம்’ இலாகா ஊழியர்கள்; ஆசிரியர்கள்

ஜோகூர்பாரு ‘டெலிகம்’ இலாகா ஊழியர்கள் 40 வெள்ளியை நிதிக்கு அனுப்பியுள்ளனர். நூறு வெள்ளி சம்பளம் வாங்கும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் போதனா முறை வகுப்பில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவ ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஐம்பது வெள்ளி வழங்கியுள்ளனர் (தமிழ் முரசு, ஜூலை, 14, 1955, பக். 03).

 

33. பாலோ இந்தியர் சங்கத் தமிழ்ப் பாடசாலை; டெலிமோங் தோட்டத் தமிழர்கள்

பாலோ இந்தியர் சங்கத் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 12 பேர் 51 வெள்ளியும் டெலிமோங் தோட்டத் தமிழர்கள் 121 வெள்ளியும் நன்கொடை வழங்கியுள்ளனர் (தமிழ் முரசு, ஜூலை, 29, 1955, பக். 04). அம்டர் தேனங் தோட்டத் தொழிலாளர்கள் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 108 வெள்ளி கொடுத்து உதவியுள்ளனர் (தமிழ் முரசு, ஜூலை, 29, 1955, பக். 05).

 

34. சுங்கை பூலோ இந்தியர் சங்கம்; பேரா ஹைட்ரோ பவர் நிலையம்

டனடின் தோட்டத் தமிழர்கள் 41 வெள்ளி, கோலாலம்பூரைச் சேர்ந்த மக்கள் 36 வெள்ளி, சுங்கை பூலோ இந்தியர் சங்கத்தின் தமிழர்கள் 53 வெள்ளி, பேரா ஹைட்ரோ பவர் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் 21 வெள்ளி மற்றும் புக்கிட் தீமாரோடு ‘மீலாட்’ தொழிற்ச்சாலை கல்லாலையிளுள்ள தொழிலாளர்கள் 60 வெள்ளி நிதி வழங்கியுள்ளனர்.

 

35. தெலுக்கான்சன் மாவட்ட மருத்துவமனை

தெலுக்கான்சன் மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் திரட்டிய 25 வெள்ளி தொகையை அவர்களுடைய பிரதிநிதியாகத் திரு. கே. ஆர். தண்ணிமலை அவர்கள் தமிழ் எங்கள் உயிர் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார் (தமிழ் முரசு, செப்டம்பர், 02, 1955, பக். 05).

 

36. தமிழ்நாடு கும்பகோணம் தாலுக்கா பந்தநல்லூர் மக்கள்

தமிழ்நாடு கும்பகோணம் தாலுக்கா பந்தநல்லூர் மக்கள் திரு. து. வி. சாமி மூலம் 66 ரூபாய் அனுப்பி வைத்துள்ளனர். கோலக்கிள்ளான் துறைமுகத் தொழிலாளர்கள் 10 வெள்ளி, கேரித் தீவு மக்கள் 87 வெள்ளி, டென்னிஸ் டவுன் தோட்ட மக்கள் 33 வெள்ளி, துரோலோக் தொழிலாளர்கள் 190 வெள்ளி, பினாங்கு மருத்துவர் சங்கம் 157 வெள்ளி 70 காசு எனப் பலர் நன்கொடை வழங்கியுள்ளனர் (தமிழ் முரசு, அக்டோபர், 07, 1955, பக். 05).

எட்வர்டு தோட்ட மக்கள் 27 வெள்ளி 40 காசு, சுங்கரும்பை வாழ் தமிழர்கள் 166 வெள்ளி, பாலோ தோட்ட மக்கள் 54 வெள்ளி 55 காசு, கிளபாங் தோட்ட மக்கள் 64.70 வெள்ளி, தைப்பிங் மாணவர் மணிமன்ற அங்கத்தினர் 20 வெள்ளி, சுங்கைசிப்புட் மக்கள் 58 வெள்ளி என அனைவரும் கொடுத்த நிதி தொகையின் விவரங்கள் தமிழ் முரசு பத்திரிகையில் வெளியிடப்பட்டன (தமிழ் முரசு, அக்டோபர், 07, 1955, பக். 05).

 

37. சீர்காழித் தாலுக்கா தமிழர் முன்னேற்றக் கழகம்

22.01.1956-இல் மு. ஆறுமுகம் தலைமையில் நடைப்பெற்ற சீர்காழித் தாலுக்கா தமிழர் முன்னேற்றக் கழகத்தின்) இரண்டாவது செயற்குழுக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினரான மே. நடேசன் அவர்கள் அச்செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குத் தலா 3 வெள்ளி வீதம் அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்தார். அதனை சீர்காழித் தாலுக்கா தமிழர் முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஆதரித்தனர் (தமிழ் முரசு, பிப்ரவரி, 07, 1956, பக். 05).

 

38. பேராசிரியர் டாக்டர் சிதம்பரனார்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தமிழ் விழாவில் உரையாற்றிய பேராசிரியர் டாக்டர் சிதம்பரனார் மலாயாப் பல்கலைக்கழகத்தில் உருவாக இருக்கும் தமிழ்ப் பகுதிக்காகத் திரட்டப்படும் தமிழ் எங்கள் உயிர் நிதி திட்டத்தைக் குறித்துப் பேசியுள்ளார். அவ்வுரையில் இதுவரை இந்நிதியில் மலாயாவாழ் தமிழ் மக்கள் 28 ஆயிரம் வெள்ளி சேர்த்துள்ளதாகவும் மேலும் தேவைப்படும் 72 ஆயிரம் நிதி தொகையையும் விரைவில் சேகரித்து விடுவோம் என்ற உறுதியில் பாடுபடுகிறார்கள் என்றும் பாராட்டியுள்ளார். மேலும், அவர் தம் உரையில் தமிழுக்கு முதலிடம் கிடைப்பது என்பது பெருமைக்குரிய விடயம் என்றதோடு தமிழ் நாட்டிலும் மலாயாத் தமிழ் மக்களைப் போல் தாய்மொழி பற்றும் ஒற்றுமையும் மேலோங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் (தமிழ் முரசு, பிப்ரவரி, 14, 1956, பக். 10).

 

39. ஜொகூர் இந்தியப் பாடசாலை ஆசிரியர் ஐக்கியச் சங்கம்

18.02.1955 அன்று இ. இ. சங்க மண்டபத்தில் நடைப்பெற்ற ஜொகூர் இந்தியப் பாடசாலை ஆசிரியர் ஐக்கியச் சங்க கிளையின் பொதுக்கூட்டத்தில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு யூனியன் சார்பாக 100 வெள்ளி அளிக்க முடிவு செய்தார்கள் (தமிழ் முரசு, பிப்ரவரி, 24, 1956, பக். 01).

 

40. சிங்கப்பூரில் தமிழர் திருநாள்

ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் நிகழ்ந்த தமிழர் திருநாள் கொண்டாட்டத்தில் தமிழ் எங்கள் உயிர் நிதியில் சேர்ந்திருந்த 27,500 வெள்ளி தொகையை மலாயா தமிழ் மக்கள் சார்பில் மலாயா பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் வழங்கப்பட்டது. (தமிழ் முரசு, ஏப்ரல், 03, 1956, பக். 05).

 

41. பிறை பவர் நிலையம், பினாங்கு இந்திய சுருட்டு நிலையம்

அதன் பிறகும், மக்கள் தொடர்ந்து நிதி வழங்கி வந்துள்ளனர். பிறை பவர் நிலையப் பணியாளர்கள் 86 வெள்ளியும், பினாங்கு இந்திய சுருட்டு நிலையத்தினர்கள் 315 வெள்ளியும் கொடுத்துள்ளனர்.

 

42. இலங்கை சுதந்திரன் இதழ், புருனை மக்கள்

மேலும், இலங்கையில் செயலாற்றியப் பிரபல ‘சுதந்திரன்’ வார இதழ் திரட்டி அனுப்பி வைத்த நிதி உதவிக்கும்; புருனையிலிருந்து சேகரித்து அனுப்பப்பட்டிருந்த நிதிக்கும் சேர்த்துத் தமிழ் முரசு பத்திரிகைத் தங்களுடைய நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்திருந்தது (தமிழ் முரசு, ஏப்ரல், 03, 1956, பக். 05).

 

43. கோலக்கிள்ளான் துறைமுகத் தொழிலாளர்கள், கூலிம் மருத்தவமனை

கோலக்கிள்ளான் துறைமுகத் தொழிலாளர்களின் நிதி மற்றும் கு. இராமையா, எஸ். அர்ஜூனன் அவர்களின் பொறுப்பின் கீழ் கூலிம் மருத்துவமனையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து திரட்டிய நிதி என மொத்தம் 118 வெள்ளி தொகை தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு வழங்கப்பட்டது.

 

44. சிங்கப்பூர் மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்கம் மற்றும் பொதுமக்கள்

சிங்கப்பூர் மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்கத்தில் திரு. ந. மு. தம்புசாமி 43 வெள்ளி நிதியை வசூலித்து அனுப்பி வைத்துள்ளார். சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங் வாழ் மக்கள் திரு. பா. ஓம்சுந்தரம் மூலம் 116 வெள்ளி நிதியும், ரவூட் மேசன் ரோடு, 7-ஆம் எண், ஸ்டால் தொழிலாளி திரு. எஸ். கே. சண்முகநாதன் மூலம் 119 வெள்ளி 5 காசும் வசூலிக்கப்பட்டுள்ளன.

 

45. ஶ்ரீ ஜெய காந்தன் புஷ்பகசாலை; போர்ட்டிக்சன் மக்கள்

தைப்பீங் ஈப்போவில் அமைந்திருக்கும் ஶ்ரீ ஜெய காந்தன் புஷ்பகசாலை உதவியுடன் அங்குள்ள மக்கள் 39 வெள்ளி 75 காசு நிதிக்காக வழங்கியுள்ளனர். ஆசிரியர் திரு. சி. பி. ஜேம்ஸ் அவர்கள் போர்ட்டிக்சன் மக்களிடம் இருந்து 87 வெள்ளி 50 காசு திரட்டி தமிழ் எங்கள் உயிர் நிதிக்காகக் கொடுத்துள்ளார் (தமிழ் முரசு, ஏப்ரல், 04, 1956, பக். 03).

 

46.பி.டபிள்.யூ.டி காரியாலயம்

திரு. எஸ். பெரியசாமி மூலம் பி.டபிள்.யூ.டி காரியாலயத்தைச் சேர்ந்தவர்கள் 420 வெள்ளி வழங்கியுள்ளனர். சிப்பாங் மாவட்ட கங்கைலீனா தோட்டத் திராவிடத் தோழர்கள் 23.50 வெள்ளி வழங்கியுள்ளனர்.

 

47. பினாங்கு பரமக்குடி நாடார் நலவுரிமைச் சங்கம்

பினாங்கு பரமக்குடி நாடார் நலவுரிமைச் சங்க நிர்வாகிகளான சங்கச் செயலாளர் திரு. சு. முத்துக்குமாரு, சங்கத் அங்கத்தினர் திரு. வே. சிற்றம்பலம், திரு. வீனம் ஆகியவர்கள் ஒன்று சேர்ந்து அங்கத்தினரிடமிருந்து தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 125 வெள்ளி 96 காசு நன்கொடை வசூலித்துள்ளனர்.

 

48. கிண்டாவேலி, செப்பராங் தோட்டத் தமிழர்கள்

கிண்டாவேலி தோட்டத் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தில் ‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்கு 30 வெள்ளி நிதி திரட்டி அனுப்பியுள்ளனர். செப்பராங் தோட்டத் தொழிலாளர்களும் கிராணிமார்களும் சேர்ந்து 90 வெள்ளியைத் திரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

 

49. கூர் லாயாங் லாயாங் ஓ. பி. எம். லிமிடெட், பேகடரி தொழிலாளர்கள்

ஜோகூர் லாயாங் லாயாங் ஓ. பி. எம். லிமிடெட், பேகடரி தொழிலாளர்கள் திரு. எஸ். சந்திரகாசன் மூலம் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 107 வெள்ளியும், பெக்கான் மக்களும் மாணவர்களும் 90 வெள்ளி நிதியும் வழங்கியுள்ளனர் (தமிழ் முரசு, ஏப்ரல், 05, 1956, பக். 04).

 

50. இலங்கை தமிழர்கள்

இலங்கை, கொழும்பைச் சேர்ந்த திரு. தம்பிராசா என்பவர் இலங்கைத் தமிழ் மக்களிடம் இருந்து 30 ரூபாய் வசூலித்து மலாயாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இலங்கையின் ‘சுதந்திரன்’ வார இதழில் வெளியிட்ட விளம்பரத்தைக் கண்ட பிறகே இவர் இம்முயற்சியைச் செய்ய முன் வந்ததாகத் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை தமிழர்கள் கொடுத்துள்ள 30 ரூபாய், மலாயாப் பண மதிப்புப்படி 190 வெள்ளி சிறுதொகை என்றாலும் இதை அன்புக் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கடிதம் எழுதியுள்ளார். பின், 11.25 வெள்ளி நிதி வழங்கிய மலாக்காவைச் சேர்ந்த ஹாஜி என். எம். பிச்சை, ஜே. பி. ஆகியவர்கள் எதிர்கால சந்ததியினர்களுக்காக கோ. சாரங்கபாணி போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் அவரோடு சேர்ந்து நாமும் தமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

 

51. போர்ட்டிக்‌ஷன் தனமேரா, பாடாங் ரெங்காஸ் கேப்பீஸ் தோட்டம்

போர்ட்டிக்‌ஷன் தனமேரா தோட்ட விலேஜ் டிவிஷனின் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆளுக்கென 1 வெள்ளி சேர்த்து மொத்தமாக 14 வெள்ளி நிதியை அனுப்பியுள்ளனர். சிங்கப்பூர் சாம்போ ஸ்திரீட், 28ஆம் எண் அறையிலிருக்கும் படகுத் தொழிலாளர்கள் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 56 வெள்ளி வழங்கியுள்ளனர். பாடாங் ரெங்காஸ் கேப்பீஸ் தோட்டம் 2-வது  டிவிஷன் பகுதியில் வசிக்கும் மக்கள் திரு. செ. சுப்ரமணியன் மூலம் 46.50 வெள்ளி அனுப்பியுள்ளனர்.

 

52. ரெம்பவ் செம்போங் தோட்டம்

ரெம்பவ் செம்போங் தோட்டத் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் தோட்ட மக்களும் நிதிக்கு 103 வெள்ளி திரட்டி அனுப்பியுள்ளனர். சிங்கப்பூர் 14, ஆர்க்கேட் திரு. ஆர். பி. நாராயணசாமி மூலம் 27 வெள்ளி 95 காசு வழங்கப்பட்டுள்ளது. நன்னிலம் தாலுகா தமிழர் கழகம் தன் கழக அங்கத்தினர்களிடம் 50 வெள்ளி திரட்டி வழங்கியுள்ளனர். காப்பார் ஆர்பண்டன் தோட்ட மக்கள் திரு. ராஜதுறை மூலம் 11 வெள்ளி நிதியை அனுப்பியுள்ளனர்.

 

53. ஈப்போ தமிழர்கள்

ஈப்போவில் நடைப்பெற்ற தமிழர் திருநாளின் மூன்றாவது நாள் கொண்டாட்டத்தின் போது மக்கள் தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக 43 வெள்ளி நன்கொடை அளித்துள்ளனர். லெங்கோக் கோத்தாலிமா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் திரு. அ. சுந்தரம் அவரிடம் பயின்ற ஒன்பது மாணவர்கள் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 19 வெள்ளி வழங்கியுள்ளனர்.

 

54. சுங்கைபூலோ மக்கள்

சுங்கைபூலோ ஓட்டுனர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து பத்து வெள்ளி அனுப்பி வைத்துள்ளனர். சிரம்பானைச் சேர்ந்த திரு. நா. ரா. நமசிவாயமும் அவர்தம் நண்பர்களும் 10 வெள்ளி நிதி வழங்கியுள்ளனர். கிள்ளான் பிரவுன் காமட் தோட்ட மக்களிடம் திரு. வெ. பழனியாண்டி அவர்கள் 50 வெள்ளி நிதி திரட்டியுள்ளார்.

 

55. சிங்கப்பூர் கைலிக் கடை பணியாளர்கள்

சிங்கப்பூர், 29 பசோரா ஸ்திரீட்டில் உள்ள வி. கோ. சன்ஸ் கைலிக் கடை பணியாளர்கள் 33 வெள்ளி நிதிக்காக வழங்கியுள்ளனர். புருனையில் வாழும் தமிழ் பற்றுக் கொண்ட மக்கள் 30 வெள்ளி நன்கொடை திரட்டி அனுப்பி வைத்துள்ளனர். (தமிழ் முரசு, ஏப்ரல், 06, 1956, பக். 04).

56. காரைக்குடி நகரசபையும் மேலும் பலரும்

தமிழ் திருநாள் கொண்டாட்டத்தின் போது லட்சியத் தொகையின் மீதி பகுதியை விரைவில் தருவதாகக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற தமிழ் முரசு நாளிதழ் தொடர்ந்து மக்கள் நிதி வழங்க ஊக்கமளித்து வந்துள்ளது. காரைக்குடி நகரசபைத் தலைவர் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 101 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளார் (தமிழ் முரசு, ஜூலை, 12, 1956, பக். 07). 22.07.1956-இல் தாப்பா அ. இ. சங்கத்தில் அகில மலாயா தமிழர் சங்கம் தாப்பா கிளை நிர்வாகக் குழு, இளைஞர் மணிமன்ற நிர்வாகக் குழு, தமிழர் திருநாள் விழாக் குழு ஆகிய மூன்று கூட்டங்களும் நடந்த நிகழ்வில் தாப்பா தமிழர் சங்கம் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குப் பணம் திரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது (தமிழ் முரசு, ஜூலை, 31, 1956, பக். 06).

29.06.1956இல் அலோர்ஸ்டாரில் நடைப்பெற்ற திருவள்ளுவர் பாரதிதாசன் விழாவில் 132.19 வெள்ளியைத் தமிழ் மக்கள் திரட்டி வழங்கியுள்ளனர். நாமக்கல் தாலுகா நலனபிவிருத்தி சங்கம், சிங்கபூர் கன்னிறக்குவோர் சங்கம், சீர்காழித் தாலுகா தமிழர் முன்னேற்றக் கழகம், பினாங்கு பாரதி சொற்பயிற்சி மன்றம், ஒரத்தநாடு தாலுகா தமிழர் கழகம் ஆகியவை தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு நல்ல ஆதரவு வழங்கியுள்ளதாகத் தமிழ் முரசு நாளேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தன. நாமக்கல் தாலுகா நலனபிவிருத்தி சங்கத்தினர்கள் 220.10 வெள்ளி வழங்கியுள்ளனர். மேலும் பெர்லிஸ் ஆரோவில் வாழ்கிற மக்கள் திருவள்ளுவர் பாரதிதாசன் கொண்டாட்டத்தின் போது தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக 45 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளனர். சீர்காழி தாலுகா தமிழர் முன்னேற்றக் கழக செயலாளர் வி.செல்வராசு மூலம் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 58 வெள்ளி திரட்டப்பட்டுள்ளது. தமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்புவதற்கு மற்றுமொரு முயற்சியாக இலங்கை, இந்தியா, மலாயாப் பத்திரிகைகள் இணைந்து பாராட்டிய நூலான அன்பு முத்து அவர்கள் எழுதிய வள்ளுவர் உள்ளம் என்ற நூல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நூல் திருக்குறளைப் பற்றிய அருமையான நூல் எனப் போற்றப்பட்டது. ஒரு நூலின் விலை 2.50 வெள்ளி என்று அறிவிக்கப்பட்டு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்விற்பனையின் வழி கிடைக்கப்பெறும் பணம் முழுதும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குச் சேரும் என்ற தகவலும் பத்திரிகைகளில் வெளியாயின (தமிழ் முரசு, செப்டம்பர், 11, 1956, பக். 03).

17.10.1956 வரை திரட்டப்பட்ட தமிழ் எங்கள் உயிர் நிதியில் மொத்தமாக 87000 வெள்ளி தொகை சேர்ந்திருப்பதைத் தமிழ் முரசு பத்திரிகையில் தெரிவித்திருந்தது. கெடா, பெர்லிஸ் இந்திய ஆசிரியர்கள் சங்கம் அனைத்து ஆசிரியர்களும் தாம் வருங்கால வைப்பு நிதியில் மாதாமாதம் போடும் தொகை எதுவோ அதே தொகையைத் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதுவரை டப்ளிங் தோட்ட செரடாங் பகுதி ஆசிரியர்கள் வருங்கால வைப்பு நிதியில் போடும் பணத்தை விட அதிகமான தொகையான 107 வெள்ளி நிதியை அனுப்பி வைத்துள்ளனர். மற்ற ஆசிரியர்களும் விரைவில் பட்டியலையும் பணத்தையும் அனுப்பி வைக்க வேண்டும் என பொக்கிஷாதிபர் (பொருளாளர்) திரு. சு. சிதம்பரம் கேட்டுக் கொண்டார் (தமிழ் முரசு, செப்டம்பர், 11, 1956, பக். 03).

சிங்கப்பூர் திராவிடக் கழக நிர்வாகக் குழு உறுப்பினரான அ. தோ. வைத்தியலிங்கம் எனும் இளைஞர் உண்டியல் ஒன்று தயாரித்துத் தனக்குத் தெரிந்த வீடுகளுக்கெல்லாம் சென்று பணம் திரட்டி 105.07 வெள்ளியைச் சேர்த்துள்ளார். சாண்டோ சோமசுந்தரன் சொற்பொழிவுக் கூட்டத்தில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குத் தான் திரட்டிய தொகையை இந்நிதி பொருப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார் (தமிழ் முரசு, டிசம்பர், 03, 1956, பக். 03).

சிங்கப்பூர் ‘ரெமி’ பட்டறையில் பணிப்புரிபவர்கள் திரு. வீர். ஆறுமுகம் மூலம் 153 வெள்ளி திரட்டி அனுப்பியுள்ளனர். தென்கெடா, செர்டாங் ஜில்லாவிலுள்ள து சொங் மிங் தோட்ட மக்கள் செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடந்த மகா மாரியம்மன் உற்சவத்தில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 65 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளனர். சிங்கப்பூர் நேவல் பேஸ் எம். டி. ஓட்டுனர்கள் திரு. பி. ராமகிருஷணன் மூலம் 60 வெள்ளி அனுப்பியுள்ளனர். ஆலைத் தொழிலாளர்கள் 81 வெள்ளியும் சிங்கப்பூர் ‘கோல்டு ஸ்டோரேஜ்’ பினாங்கு நிலையத்தில் வேலை செய்பவர்களிடமிருந்தும் கோல்டு ஸ்டோரேஜ் ரொட்டி விற்பவர்களிடமிருந்தும் திரு. வீராசாமி 69 வெள்ளியும் வசூலித்து நன்கொடை வழங்கியுள்ளனர். கோலக்கிள்ளான் திராவிடர் கழகம் 140 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளனர். மேலும், பல பகுதிகளில் இருந்து சிறு சிறு தொகையாக மொத்தம் 337 வெள்ளி 82 காசு நிதி தமிழ் எங்கள் உயிர் நிதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

திரு. உ. துரைசாமி அவர்கள் 50 வெள்ளியும் திரு. மே. மு. அய்யாசாமி அவர்கள் 51 வெள்ளியும் தங்கள் சுயமுயற்சியால் திரட்டி நிதி வழங்கியுள்ளனர். அவர்களின் இந்த நற்பணி பத்திரிகையில் பாராட்டப்பட்டது. அலோர்ஸ்டார் தாஜூல்கா உணவக பணியாளர்கள் திரு. சீ. க. அமானுல்லா மூலம் 50 வெள்ளி 50 காசு அனுப்பியுள்ளனர். திரு. மு. வடிவேலும் அவரும் அவர்தம் நண்பர்களும் 38 வெள்ளி நிதி தந்துள்ளனர். சிங்கப்பூர் நகரசபை சுகாதாரப் பகுதி 6-வது பிரிவுத் தொழிலாளர்கள் திரு. சோ. மா. கிருஷ்ணன் மூலம் 22 வெள்ளி நிதி அளித்துள்ளனர். சிரம்பான் பி.டபிள்.யூ.டி. மக்கள் திரு. மா. கருப்பையா மூலம் 47 வெள்ளி நிதி கொடுத்துள்ளனர் (தமிழ் முரசு, டிசம்பர், 07, 1956, பக். 03).

29.09.1956 அன்று அலோர் ஸ்டாரில் நடைப்பெற்ற கதம்பக் கச்சேரி முடிவு விழாவில் தலைமை வகித்த திரு. சி. நாகப்பச் செட்டியார் தனது உரையில் பல்கலைக்கழகத்திலும் இப்பொழுது தமிழுக்கு இடம் கிடைத்திருப்பதால் ஆங்கிலம், மலாய் மொழிகளுடன் தமிழையும் பிள்ளைகள் கற்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதனோடு அந்நிகழ்வில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக நடந்த கதம்பக் கச்சேரி நிகழ்ச்சியாளருக்குப் பாராட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டது (தமிழ் முரசு, டிசம்பர், 07, 1956, பக். 03). 11.01.1959 அன்று பீடோங் தை எங் தோட்டத்தில் நடைப்பெற்ற தமிழர் திருநாளில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குப் பணம் திரட்டி அனுப்புவதாகத் தீர்மானிக்கப்பட்டது (தமிழ் முரசு, பிப்ரவரி, 17, 1959, பக். 05).

மீண்டும் கட்டுரைக்குச் செல்ல: ‘தமிழ் எங்கள் உயிர் 2’

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...