அபிராமி கணேசனின் கட்டுரைகளும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருதும்

abiவல்லினம் ஆசிரியர் ம.நவீன் என்னை சில மாதங்களுக்கு முன் அழைத்திருந்தார். இவ்வருடம் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது என்ற பெயரில் புதிய விருது  வழங்கும் திட்டத்தைப் பற்றி பேசினார்.   ஏற்கனவே வல்லினம் விருது என்ற பெயரில் தகுதியான மூத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அ.ரெங்கசாமி, சை.பீர்முகம்மது போன்ற இலக்கிய ஆளுமைகள் வல்லினம் விருதைப் பெற்றுள்ளனர். ஆனால் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது என்பது எழுத்துத்துறைக்குப் புதிதாக வரும் படைப்பாளிகளுக்குறியது. புனைவு, அ-புனைவு என வேறுபாடு இல்லாமல் பொதுவாக எந்த வகைமையிலாவது தொடர்ந்து தீவிரம் காட்டும் இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ரிம 2000 வெள்ளியுடன் இவ்விருந்து அமைகின்றது.   இந்த ஆண்டு இது தொடங்கப்படுகின்றது. ஆயினும் வல்லினம் விருது போன்றே வருடம் தோறும் கட்டாயமாக இவ்விருது வழங்கப்படாது. தகுதியாக எழுத்தாளர்களை வல்லினம் குழு அடையாளம் காணும்போது விருது வழங்கப்படும்.  அந்த வரிசையில்  இம்முறை அவ்விருது யாருக்காக இருக்கலாம் என ஆவல் தொற்றிக்கொண்டது. வல்லினமும் யாழ் பதிப்பகமும் இணைந்து நடத்திய சிறுகதை போட்டிக்குப் பின் வல்லினத்தில் இளம் மற்றும் புதிய எழுத்தாளர்களின் வரவும் அவர்களது தொடர் பங்களிப்பும் அதிகரித்திருப்பதால் விருதுக்கான தேர்வு சற்று கடுமையானதாக இருக்கலாம் என்றே தோன்றியது.

அபிராமி கணேசனுக்கு விருது வழங்கலாம் என்ற முடிவு இறுதியாக வல்லினம் குழு நடந்திய சந்திப்பில் ஏறக்குறைய முடிவானது. அது சரியான தேர்வு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் இன்னும் சில மாதங்கள் காத்திருந்து பார்க்கலாம்; எம்மாதிரியான தொடர் படைப்புகள் அபிராமியிடம் இருந்து வருகிறது என்று நவீன் கூறியபோதும், தேர்வு மாறப்போவதில்லை என்ற நம்பிக்கை எள்ளளவும் குறையவில்லை. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப அபிராமி இப்போது வரையிலும் நம்மை அவரது தொடர் கட்டுரைகளால் அசத்திக் கொண்டேயிருக்கிறார்.

அபிராமி கணேசனின் முதல் கட்டுரையானது கடந்தாண்டு (2019) ஜூலை மாத வல்லினத்தில் பதிவேற்றம் கண்டது. வல்லினம் இருமாத இதழாக மாறியது முதல் இந்த ஓராண்டு காலக்கட்டத்தில் அபிராமி ஏழு கட்டுரைகளை வல்லினத்திற்காக எழுதியுள்ளார். ஏழு கட்டுரைகளை எழுதிவிட்டதால் அபிராமிக்கு வல்லினம் இளம் எழுத்தாளர் விருது வழங்கப்படுகிறதா என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால் அத்தேர்வு குறித்து நீங்கள் தீவிரமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏழு கட்டுரைகளை எழுதியதையும் தாண்டி இன்னும் சில காரணங்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அபிராமி கணேசன் இன்னும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பயின்றுகொண்டிருக்கும் மாணவியாவார். பல்கலைக்கழக சூழலில் கல்வி சார்ந்து அவருக்கு இருக்கின்ற இடுபணிகளையும் கடந்து அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். வல்லினத்தில் பெரும்பாலோர் இலக்கியம் சார்ந்து படைப்புகளை இயற்றிக்கொண்டிருக்கும்போது அபிராமி, தான் மட்டும் இலக்கியம் சாராது சமூகம், அரசியல், சூழலியல் என அறிவார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தி கட்டுரைகளை படைத்துள்ளார்.

அவரது இரண்டாவது கட்டுரையை தவிர்த்து பிற அனைத்து கட்டுரைகளும் சமூகம் மற்றும் சூழலியல் வகைகளே. அதோடு அவை அனைத்தும் ஆய்வுக்கட்டுரைகள். அபிராமி தான் எழுதிய ஒவ்வொரு கட்டுரைக்கும் தேவையான தரவுகளையும் குறிப்புகளையும் கண்டறிந்து தெளிவான பார்வையோடு நீண்ட கட்டுரையாக எழுதியுள்ளார். ஆய்வுக்கட்டுரை என்பது அதிக உழைப்பை கோரும் என்பதை ஒரு கல்வியாளர் என்ற முறையில் நன்கறிவேன். வெறுமனே உள்ளத்து உணர்ச்சிகளையும் தெரிந்த தகவல்களையும் இணைத்து எழுதுவது அல்ல.

நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆய்வுக்கட்டுரைகள் குறித்து சில முறை வல்லினத்திலேயே பெரும் சர்ச்சை கிளம்பியது உண்டு. ஒரு மூத்த கட்டுரையாளர் தான் எழுதியதாக ஒரு கட்டுரையை தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்து பகிர்ந்திருந்தார். உண்மையில், அந்தக் கட்டுரை வல்லினத்தில் இடம்பெற்ற கட்டுரை. அதில் தன்னுடைய சொந்த வரிகள் சிலவற்றை இணைத்துக்கொண்டு முழுக்கட்டுரையும் அவருடையது என்பதுபோலவே பகிர்ந்திருந்தார். அதுகுறித்து கேள்விகளும் விவாதங்களும் எழுந்தபோது அந்த எழுத்தாளர் எந்தவொரு பதிலும் கூறாது அக்கட்டுரையை உடனடியாக அவரது வலைப்பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். அவரது இன்னபிற கட்டுரைகளை அலசியபோது பெரும்பாலான கட்டுரைகள் அதனுடைய மூலங்களுக்கான சான்றுகள் இன்றியே இருந்தன. பல கட்டுரைகள் அறிவுத்திருட்டாக இருந்தன.

இப்படிப்பட்ட கட்டுரைகள்தான் ஆபத்தானவையாக மாறிவிடுகின்றன. அவை அறிவுத்திருட்டு செய்யப்பட்டவை. கட்டுரையில் இடம்பெற்றுள்ள தரவுகளுக்கு எந்தவொரு சான்றுகளும் மேற்கோள்களும் குறிப்பிடப்படாததால் பொதுவாகவே இம்மாதிரியான கட்டுரைகளின் நம்பகத்தன்மையைக் குறித்து கேள்வியெழுப்ப வேண்டிய சூழல் உருவாகிறது. அப்படிப்பட்ட சூழலையே மேற்சொன்ன எழுத்தாளர் வல்லினத்திற்கு ஏற்படுத்தி தந்திருந்தார். வல்லினமும் எழுத்தாளர்களின் இத்தகைய செயல்களை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியது. அதோடு வல்லினத்தில் இடம்பெறும் கட்டுரைகள் எதுவாக இருப்பினும் அதற்கான மூலங்களையும் மேற்கோள்களையும் குறிப்பிடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இப்போது வரையிலும் வல்லினத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை கவனித்தால் இது விளங்கும்.

அபிராமி கணேசன் தான் எடுத்துகொண்ட ஒவ்வொரு கட்டுரைகளையும் வெறுமனே எழுதாமல் அதற்கென நீண்ட நூலக ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை கட்டுரையில் இடம்பெற்றுள்ள தரவுகளுக்கு எல்லாம் சான்றுகளாக இணைத்திருப்பது அவருடைய கட்டுரைகளின் மீதான நம்பகத் தன்மையை மேலோங்கச் செய்கிறது. ஆய்வுக்கட்டுரைக்கான தேவையும் அதுவாகவே இருக்கிறது. தொடக்க கட்டுரைகளைக் காட்டிலும் அதன் பிறகான கட்டுரைகளில் குறைந்தது பத்து முதல் இருபது வரையிலான மேற்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளன. அது ஒவ்வொரு கட்டுரைக்கும் அபிராமி கணேசன் எடுத்துக்கொண்ட சிரத்தையும் அதற்கான உழைப்பையும் காட்டுகிறது.  ஓர் ஆய்வுக்கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக அபிராமி கணேசனின் கட்டுரையை தயக்கமின்றி முன்வைக்கலாம். அதோடு இனி அவர் எழுதிய உள்ளடக்கம் சார்ந்து புதிய கட்டுரைகள் எழுதப்படுவதற்கு அவரது கட்டுரைகள் நிச்சயமாக மேற்கோள்களாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

அபிராமி கணேசன் எழுதிய கட்டுரைகள் ஏழும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவை. ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு புதியதொன்றை அறிமுகம் செய்கின்றன.

அவ்வகையில் அபிராமி கணேசன் எழுதிய முதல் கட்டுரை “ஸுனார்: அங்கதத்தைக் கலையாக்கிய ஆளுமை” 2019, ஜூலை மாத வல்லினத்தில் இடம்பெற்றது. மலேசிய நாட்டு அரசியலில் நீண்ட காலமாக ஆட்சி செய்த தேசிய முன்னணியின் அரசாங்கத்தின் மீது தன் கேலிச்சித்திர கலையின் மூலமாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்த கலைஞர் ஸுனார் ஆவார். அரசியல் தலையீட்டால் பெரிதும் பாதிக்கப்பட்ட எந்தவொரு அரசியல்கட்சியும் சாராத ஆளுமை அவர். தமிழ்ச்சூழலில் ஸூனார் பற்றி விரிவாக பேசிய முதல் அறிமுக கட்டுரை இது மட்டுமே.

இரண்டாவது கட்டுரையாக, “கே.எஸ்.மணியம்: புனைவு-அரசியல்-அழகியல்” 2019, செப்டம்பர் மாத வல்லினத்தில் இடம்பெற்றது. மலேசிய தமிழ்ச்சுழலில் தமிழுக்கு அப்பால் பிறமொழிகளில் செயல்படக்கூடிய இந்திய எழுத்தாளர்களை அறிந்து அவர்களைப்பற்றி பேசுவதோ விவாதிப்பதோ மிகவும் அரிதான ஒன்று. அவ்வகையில் மலேசிய இலக்கியச் சூழலில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிய கே.எஸ்.மணியம் சர்வதேச நிலையில் நன்கு அறிமுகமான எழுத்தாளர். ஆனாலும் தமிழ்ச்சூழலில் அவரைப்பற்றி யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவும் தெரிந்திருக்கவும் இல்லை என்பது வருத்தமான விடயம். இன்னும் சிலர் அவர் நல்ல நடிகர் என சொல்லியபோது அவர்களுக்கு எழுத்தாளர் கே.எஸ்.மணியமும் நடிகர் எம்.எஸ் மணியமும் வேறு வேறு நபர்கள் என்பதையே அறியாதவர்களாக இருக்கின்றனர் என்று புரிந்தது. கே.எஸ். மணியம் சார்ந்த குறையை முதலில் தீர்த்து வைத்தது நூலகவியலாளர் விஜயலட்சுமி அவர்கள். கே.எஸ்.மணியம் எனும் மிகச் சிறந்த எழுத்தாளுமையை மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் விரிவான அறிமுகம் செய்து அவரது சிறுகதைகளை ‘கே.எஸ்.மணியம் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் வல்லினம் பதிப்பகம் சார்பாக நூலாக்கினார் விஜயலட்சுமி. அவரையடுத்து இலக்கியம் சார்ந்திராத ஒருவர் கே.எஸ்.மணியம் பற்றி கூடுதல் தகவல்களோடும் அவரது படைப்புகளை பற்றி இரசனை சார்ந்து விமர்சனம் செய்து எழுதப்பட்ட கட்டுரையாக அபிராமியின் கட்டுரை அமைந்தது. இந்த கட்டுரை மட்டுமே இலக்கிய வகைமைக்குள் அடங்கக்கூடிய கட்டுரையாக இருக்கின்றது.

மூன்றாவது கட்டுரையாக, இதுவரை பலரும் அறிந்திராத புருனோ மன்சர் பற்றிய கட்டுரை 2020, ஜனவரி மாத வல்லினத்தில் இடம்பெற்றது. வாசகர்கள் அபிராமி கணேசனை கவனிக்க தொடங்கிய இடம் இக்கட்டுரையில் இருந்து ஆரம்பமானது. புருனோ மன்சர்: காட்டில் கரைந்த காந்தியம் எனும் தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரை ஜனவரி மாதத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட படைப்புகளில் ஒன்றாகவும் மாறியது. சரவாக் மாநிலத்தில் பெனான் எனும் பூர்வக்குடி மக்களுடன் காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த சுவிட்சார்லாந்தை சேர்ந்த புருனோ மன்சர் காட்டழிப்பை எதிர்த்து அதிகாரத்துவத்தையும் முதலாளித்துவத்தையும் அகிம்சை வழியில் போராடியவர். பாக்கூன் அணைத் திட்டத்தை மேற்கொள்ள அரசாங்கம் அதிக அளவில் சரவாக காடுகளை அழித்து பல சூழியல் பாதிப்புகளை ஏற்படுத்திருந்ததை அம்பலப்படுத்தியவர். தமிழ்ச்சுழலில் புருனோ மன்சர் பற்றி எழுதப்பட்ட முதல் கட்டுரையும் அதுவும் விரிவாக எழுதப்பட்டதும் இக்கட்டுரைதான். மலேசியத் தமிழ் சுழலில் இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட கலை, சமூக, அரசியல் சார்ந்த பல விடயங்கள் குறித்து அறிமுகம் இல்லாமலும் அதனைப்பற்றி பேசாமலும் விவாதிக்காமலும் கடந்துபோய் கொண்டிருந்த சூழலில் அபிராமியின் இக்கட்டுரை மிக முக்கியமானதொரு கட்டுரையாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே ‘மலேசியா கினி’ போன்ற செய்தித்தளங்கள் வல்லினத்தில் இடம்பெற்ற இக்கட்டுரையை வல்லினத்தின் அனுமதியைப் பெற்று தங்கள் தளத்தில் மறுபதிவேற்றம் செய்தது.

அடுத்து, அபிராமியின் கட்டுரை என்னவாக இருக்கும் என வாசகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க முந்தைய கட்டுரையின் நீட்சியாக ‘வனத்தின் குரல்’ எனும் தலைப்பில் மார்ச் மாத வல்லினத்தில் மற்றொரு புதிய விடயத்தை பேசும் கட்டுரை இடம்பெற்றது. காட்டழிப்பை பற்றி இக்கட்டுரை விரிவாக பேசியது. குறிப்பாக, காடு வகைகளும் அதைப்பற்றிய புள்ளிவிவரங்களையும் தாங்கி காடு அழிப்புகள் நிகழ்வதற்கான காரணங்களையும் அதனால் ஏற்பட்டிருக்கும் சூழியல் பாதிப்புகளையும் இக்கட்டுரை விரிவாக பேசியது.

மார்ச் மாத இடையில் கொரோனாவின் பாதிப்பால் அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தியிருந்த இரண்டு மாத காலத்தில் எல்லாம் முடங்கிப்போயிருந்த சூழலில் மே மாத வல்லின இதழ் முடங்காமல் பதிவேற்றம் கண்டது. அவ்விதழில், பருவநிலை மாற்றம் தொடர்பாக ‘குறைந்தபட்சம் பதற்றமாவது கொள்ளுங்கள் – கிரெட்டா’ எனும் தலைப்பில் கட்டுரையை எழுதியிருக்கிறார் அபிராமி. நம் அன்றாட வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் பருவநிலை மாற்றம் தொடர்பாக நாம் சிந்தித்ததுண்டா? உஷ்ணம் அதிகரித்த நாட்களில் உறங்க முடியாமல் தவிக்கும்போது மட்டும் ‘முன்ன மாதிரி இல்ல’ எனும் ஒற்றை வார்த்தையில் பருவநிலை மாற்றத்தை எளிதாக கடந்துவிடும் நமக்கு, ‘துன்பெர்க் கிரெட்டா’ எனும் 17வயது சிறுமியின் பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு புரட்சியைப் பற்றி நமக்கு விவரிக்கிறது இக்கட்டுரை. உலக அளவில் பல பெரும் தலைவர்களை ஈர்த்துள்ள கிரெட்டாவின் செயல்பாடுகள் நம்மை ஈர்க்காதது ஒன்றும் பெரிதில்லை. காரணம் முதலில் நமக்கு பருவநிலை மாற்றம் தொடர்பான தெளிவும் அக்கறையும் நம்மிடம் இல்லை. இதைத்தான் அபிராமியும் தனது கட்டுரையின் முடிவில் ஒரு கேள்வியாக முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு கட்டுரைகளும் உலகளாவிய விடயங்களை பேசியதையடுத்து, ஜூலை மாத இதழில் ‘மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்’ எனும் ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றது. அபிராமி எழுதிய கட்டுரைகளில் மிக நீண்ட கட்டுரையாகவும் இரண்டு பகுதிகளாக பதிவேற்றம் கண்ட கட்டுரையாகவும் இது அமைகிறது. இதற்கு முந்தைய கட்டுரைகள் அனைத்தும் நமக்கு புதிய விடயங்களை அறிமுகம் செய்தவை. ஆனால் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்த்துறை சார்ந்து நிறைய கட்டுரைகள் படைக்கப்பட்டு விட்டன. அதை சார்ந்து பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் அபிராமியின் ‘மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்’ எனும் தலைப்பிலான கட்டுரை எந்தவகையில் தனித்துவம் பெறுகிறது எனும் கேள்வி எழலாம். ஆம். இது தனித்துவமான கட்டுரைதான்.

மலேசிய உயர்க்கல்வி கூடங்களில் மலாயாப்பல்கலைக்கழகத்தில் மட்டுமே தமிழ் ஒரு பாடமாகவும் ஒரு துறையாகவும் இடம்பெற்றது. ஆனால் அது மிக இயல்பாக நடந்தேறியதொன்று அல்ல. மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இடம்பெறச் செய்ய முன்னெடுக்கப்பட்ட போராட்டமும் செயல்பாடுகளும் மிக முக்கியமானவை. குறிப்பாக, அதன் தொடக்க கால வரலாறு நமக்கு மிக முக்கியமானது. அது குறித்து “உமா விஸ்வநாதன் (2005/2006ஆம் ஆண்டில் மேற்கொண்ட இளங்கலை ஆய்வு). மிகச் சொற்பமான தகவல்களை முன்வைக்கும் இவ்வாய்வுக்குப்பின் வெளிவந்த பல ஆய்வுகள் ‘மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை’ என்பதாகப் பேசுமிடங்களில் உமா விஸ்வநாதன் ஆய்வைப் பிரதியெடுப்பதாகவே இருக்கின்றன. எம். இலியாஸ் (1997), தமிழவேள் சாரங்கபாணி எனும் நூலில் ‘பல்கலைக் கழகத்தில்’, ‘தமிழுக்கு நிதி’ எனும் தலைப்புகளில் இத்துறை தொடர்பான தமிழகம் சார்ந்த கண்ணோட்டங்களை முன்வைத்திருந்தார். அடுத்து, பாலபாஸ்கரன் 2016ஆம் ஆண்டு பதிப்பித்த நூலில் கூடுதல் வரலாற்றுத் தகவல்கள் இருப்பது சற்றே ஆறுதலானது” என அவற்றின் போதாமைகளை கட்டுரையின் துவக்கத்திலேயே முன்வைத்துவிட்டு தொடர்ந்து  “மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை நூலகம் எனும் இவ்விரு உயர்க்கல்வி அமைப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரலாற்று ஆய்வுகளும் இதர வகை ஆய்வுகளும் தொட்டுப்பார்க்காத அல்லது மிக மேலோட்டமாகக் கோடிட்டுக்காட்டிச் சென்ற ஒரு பகுதியை ஆழ, அகலத்துடன் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இதனை, குறிப்பாகத் தமிழ் முரசு நாளிதழில் தொடர்ச்சியாக வெளிவந்த செய்திகளினூடாக இக்கட்டுரை கவனப்படுத்த முயன்றுள்ளது” என்பதையும் தெளிவாக விளக்கிவிட்டு தன் நோக்கத்தை பூர்த்தி செய்ததன் வழி நமக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் கிடைக்க வழிச் செய்துள்ளது இக்கட்டுரை.

இதுவரை அபிராமி எழுதிய கட்டுரைகளில் இக்கட்டுரையே அதிமான உழைப்பையும் மெனக்கெடலையும் கோரியிருக்கும் என்பதில் ஐயமில்லை. நீண்ட பாரம்பரியத்தை கொண்டிருக்கும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வரலாற்றையும் சிறப்பையும் அறிந்து தெளிய முன்னாள், இந்நாள், வருங்கால மாணவர்கள் என அனைவரும் இக்கட்டுரையை வாசிப்பது சிறப்பாக அமையும்.

இம்மாத வல்லினத்திலும் அபிராமியின் கட்டுரை தொடர்கிறது. “மலேசியாவில் செம்பனை பயிரிடலும் அதன் விளைவுகளும்” எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரையும் நம்மால் நிராகரிக்க முடியாத முக்கியக் கட்டுரை எனும் தொகுப்பில் தன்னையும் இணைத்துக்கொள்கிறது. இரப்பருக்கு அதிக அளவில் ஊழியம் செய்தவர்கள் நம்மவர்கள். ஒரு கட்டத்தில் இரப்பருக்கு மாற்றாக அறிமுகம் கண்டது செம்பனை. செம்பனையும் அதனை பயிரிடும் திட்டமும் அதனால் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விளைவுகளையும் விரிவாக அலசுகிறது இக்கட்டுரை. செம்பனைக்குள் பொதிந்திருக்கும் அரசியலையும் இக்கட்டுரை தெளிவாக விளக்குகின்றது. தெளிவாகச் சொல்லப்போனால் இதற்கு முந்தைய கட்டுரைகளில் பேசப்பட்ட காடழிப்பு, பருவநிலை மாற்றம், பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, சூழியல் மாற்றம் என அனைத்தையும் தொகுத்து பேசியிருக்கும் கட்டுரையாக இது திகழ்கிறது. அதாவது செம்பனையின் பயிரிடால் இது அத்தனையும் இந்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது என்பதை இக்கட்டுரை நமக்கு விளக்குகின்றது.

இதுவரை ஏழு கட்டுரைகளை தொட்டுவிட்ட அபிராமி கணேசனுக்கு மேலும் இதுபோன்ற ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதில் எந்தச் சிக்கலும் இருக்கப்போவதில்லை என்பது நிதர்சனம். அவரால் எந்தத் தலைப்பையும் கொண்டு நல்லதொரு கட்டுரையை வழங்க முடியும் என நம்பிக்கை கொள்கிறேன். இன்னும் மூன்று அல்லது ஐந்து கட்டுரை நிறைவு செய்யும் பட்சத்தில் வல்லினம் பதிப்பகம் சார்பாக இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகள் என அனைத்தும் ஒரு தொகுப்பாக தொகுக்கப்பட்டு நம் கையில் நூலாக கிடைக்கும் என ஆவல் கொள்கிறேன். இளம் தலைமுறையினருக்கு எழுதுவதற்கும் எப்படி எழுத வேண்டும் என்பதற்கும் அபிராமி கணேசனை ஒரு முன்மாதிரியாகவும் கொள்ளலாம். அதில் தவறேதுமில்லை.

எழுத்து என்பது ஒரு வரம் போல. அதில் இயங்கி இயங்கி தனக்கான தனி அடையாளத்தைக் கண்டடைவது எழுத்தாளனின் திறனைப் பொறுத்தது. எவ்வித உழைப்பையும் வழங்காமல் சமூக ஊடக அடையாளத்துக்காக இயங்கும் பலருக்கு மத்தியில் அபிராமி தனக்கான பாதையை கவனமாகவே வகுத்துள்ளார். அவருக்கான வழித்தடம் மிகச்சீக்கிரத்திலேயே உருவாகியுள்ளது.  அந்தப் பயணம் தொடர வேண்டும். வல்லினம் விருது அவருக்கு மட்டுமல்லாமல் அவரைப்போன்ற பல இளம் எழுத்தாளர்களுக்கும் ஊக்கம் தரும் நிகழ்வு. இவ்விருது இன்னும் அவர் எட்டக்கூடிய உயரங்களுக்கு முதல் படியாக அமையும். அவருக்கு வல்லினம் குழு சார்பாக, இவ்வாண்டுக்கான வல்லினம் இளம் எழுத்தாளர் விருது வழங்கப்படுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் அன்பும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...