பறவைகளின் வலசை

I48520.03.v1எழுத்தாளர் ஜெயமோகனின் ‘விசும்பு’ சிறுகதையை வாசித்தபோது பறவைகளின் வேடந்தாங்கல் குறித்த ஆச்சரியம் விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. மலேசியாவில் வேடந்தாங்கலுக்கான சரணாலயங்கள் பல உள்ளன. ஃபிரேசர் மலை அதில் ஒன்றாக இருப்பது பலரும் அறிந்த தகவல்தான். பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்திருக்கும் பிரேசர் மலை (Fraser’s Hill) 1950ஆம் ஆண்டு தொடங்கியே பறவைகள் சரணாலயமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

இன்று மலேசியாவில் ஒரு பிரதான பறவைகள் கண்காணிப்பு (prime birdwatching spot) தளமாக இவ்விடம் விளங்குகின்றது. வடக்கு அரைக்கோளத்திலிருந்து (Northern Hemisphere) இடப்பெயருகின்ற பறவைகளுக்கு ஒரு முக்கியமான இளைப்பாறும் இடமாக இவ்விடம் செயல்படுகின்றன. பொதுவாக மலைப்பிரதேசங்கள் கடல் மட்டத்திலிருந்து அதிகமான உயரத்திலேயே இருக்கும். ஆனால், பிரேசர் மலைப்பகுதி மட்டுமே கடல் மட்டத்திலிருந்து வெறும் 1,300 மீட்டர் உயரத்தில் உள்ளது. தீபகற்ப மலேசியாவில் உள்ள மற்ற மலைகளை விட இது குறைவான உயரத்தில் இருப்பதால் வலசை போகும் பறவைகளுக்கு எளிமையான வழிப்பாதையாக இருக்கின்றது. இப்பகுதியில் மட்டுமே சுமார் 64க்கு மேல் வலசைப் பறவை இனங்கள் காணப்படுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேசர் மலை மட்டுமல்லாமல் சமீபகாலமாக மலேசியாவிற்கு இடப்பெயரும் பறவைகளின் என்ணிக்கையும் குறைந்து வருவதாகக் கணிக்கப்படுள்ளது. மலேசியாவின் நகர்ப்புறங்களில் தீவிரமாக நிகழ்ந்துவரும் மேம்பாடுகளின் விளைவாகவே இந்நிலை ஏற்படுவதாக கருத்து நிலவி வருகிறது. தென்கிழக்கு ஆசிய கரையோரப் பறவைகள் தொடர்பாக ‘வெட்லேண்ட்ஸ் இன்டர்நேஷனல்’ (Wetlands International-WI) வெளியிட்ட அறிக்கையின்படி பேரா மாநிலத்தில் தரையிறங்கி இளைப்பாறும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

பிரேசர் போன்ற மலைகளை நம்பி வரும் பறவைகளைப் போலவே நீர்வளங்களை நம்பி வரும் பறவைகளும் அதிகம். மலேசியா மொத்த நிலப்பரப்பில் 15.65% நீர்நில வளங்களைக் கொண்டுள்ளது. இங்கு அதிகமான இடப்பெயர் பறவைகள் வருவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தற்போது பல காரணங்களால் நீர்நிலங்கள் மாசுப்பட்டும் பாதிக்கப்பட்டும் வருகின்றன. இதனால் நீர்நிலங்களைச் சார்ந்து இருக்கும் பறவைகளான புளுவியாலிஸ் அப்ரிகேரியா (Pluvialis apricaria), விசிறிவால் உள்ளான் (Gallinago gallinago), காலிட்ரிஸ் அல்பினா (Calidris alpina), கருவால் மூக்கன் (Limosa limosa) மற்றும் ஆள்காட்டி (Vanellus vanellus) ஆகியவை தங்களுடைய வாழ்விடங்களை இழக்கும் நிலை உண்டாகுகின்றது. கோலா முடா கடற்கரை மற்றும் கோலா சிலாங்கூர் கடற்கரைப்பகுதியில் நீர் மாசுப்பாடு மற்றும் அதிகப்படியான நெகிழி கழிவுகளால் இடப்பெயரும் பறவைகள் பாதிப்புக்குள்ளாவதாக கூறுகின்றனர்.

மலேசியாவும் பறவை பயணமும்

உலகில் வாழும் 10,000 பறவை இனங்களில் ஏறத்தாழ 1,800 பறவை வகைகள் நீண்ட தூரம் பயணம் செய்து வேறு இடத்திற்கு இடப்பெயரும் தன்மையைக் கொண்டுள்ளன. இவற்றில் மலேசியாவிற்கு இடப்பெயரும் பறவை இனங்களின் எண்ணிக்கையை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தீபகற்ப மலேசியாவில் காணப்படும் 711 பறவை இனங்களில் 285 பறவை இனங்கள் (40%) இடப்பெயர்ந்து வந்தவையாகும். அது போலவே, போர்னியோ மலேசியாவில் இருக்கும் 632 பறவை இனங்களில் 224 பறவை இனங்கள் (35%) மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்தவையே. பூர்விகமாக மலேசியாவிலேயே பிறந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் பறவைகளையும் இடப்பெயர்ந்து வரும் பறவைகளையும் மொத்தமாக சேர்த்து சுமார் 800க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் மலேசியாவில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பறவைகள் நாடு விட்டு நாடு செல்ல தங்களுக்கான வழித்தடங்களைக் கொண்டுள்ளன. கிழக்கு ஆசிய-ஆஸ்திரேலியன் வழித்தடத்தில் (East Asian-Australasian Flyway) அமைந்திருக்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவும் அடங்கும். இதனால் குளிர்காலங்களில் மில்லியன் கணக்கான பறவைகள் செர்பியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மலேசியாவைக் கடந்து சென்று இடம்பெயர்கின்றன. ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவில் இருந்து வேறு இடத்திற்குப் புலம்பெயரும் நீர்ப்பறவைகள் அவற்றின் இனப்பெருக்கம் நிகழும் இடங்களுக்குப் பறந்து செல்லும் பாதைதான் இந்த கிழக்கு ஆசிய-ஆஸ்ட்ராலேசியன் வழித்தடம். இது அலாஸ்கா (Alaska) மற்றும் சைபீரியாவில் (Siberia) உள்ள ஆர்க்டிக் வட்டத்தை (Arctic Circle) உள்ளடக்கியதாகும். இஃது ஆர்க்டிக் ரஷ்யா (Arctic Russia) மற்றும் வட அமெரிக்காவில் (North America) தொடங்கி நியூசிலாந்து (New Zealand) வரை நீண்டுள்ள வழித்தடமாகும் (Weebly). ரஷ்யா, அலாஸ்கா, மங்கோலியா, சீனா, கொரியா, ஜப்பான், பப்புவா நியூ கினி,  லாவோஸ், மலேசியா என மொத்தமாக 23 நாடுகள் இந்த கிழக்கு ஆசிய-ஆஸ்ட்ராலேசியன் வழித்தடத்தில் இருக்கின்றன.

இப்பாதை வழி பறந்து செல்லும் பெரும்பாலான பறவைகள் தங்களுடைய உணவுகளுக்கும் தங்குமிடத்திற்கும் கடலோரப் பகுதிகளையும் நீர்தடங்களையுமே சார்ந்து இருக்கின்றன. ஜூலை மாத இறுதியில் பெரும்பாலான பறவைகள் தங்களின் இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு மலேசியா வழியாக இடப்பெயர்வதாக சொல்லப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மலேசியா போலவே வேறு சில நாடுகள் வழியே புலம்பெயரும் பறவைகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது. நவம்பர் மாதம் அப்பறவைகள் தெற்கு நோக்கிய இலக்கை அடைகின்றன. பின்னர், இளவேனிற்காலத்தில் அல்லது வடக்கு இடப்பெயர்வின்போது, அப்பறவைகள் பிப்ரவரி மாத இறுதியில் மீண்டும் மலேசியாவிற்கு வந்து, பின்னர் மே மாதத்தின் இடையில் வடக்கு நோக்கி இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்குத் திரும்பி செல்கின்றன.

ஒவ்வொரு வருடமும் இளவேனிற்காலத்தின் போது இடப்பெயரும் பறவைகள் 60 அல்லது 70 நாட்கள் சுமார் 10,000 கி.மீ வரை பயணம் செய்து இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் குளிர்கால தளங்களை விட்டு சீனா, ஜப்பான், கொரியா, மங்கோலியா மற்றும் சைபீரியாவில் உள்ள இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்கு வடக்கே செல்கின்ற வழியில் மலேசியாவையும் வந்தடைந்து சிறுகாலம் இருந்துவிட்டு தங்களுடைய பயணத்தைத் தொடர்கின்றன.

உலகில் உள்ள 218 நாடுகளில் கிட்டத்தட்ட 12,000 பகுதிகள் பறவைகளுக்கான முக்கிய பகுதிகளாக (Important Bird Areas or IBA) கண்டறியப்பட்டுள்ளன. ஒரு பகுதி ஐ.பி.ஏ (IBA) தகுதியைப் பெற அப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் அங்குள்ள உயிரினங்களின் வகைகள் போன்ற சில வரையறைகள் உள்ளன. மலேசிய இயற்கை கழகம் (Malaysian Nature Society) மலேசியாவில் உள்ள 55 இடங்களைப் (5.1 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு) பறவைகளுக்கான முக்கிய பகுதிகளாக (Important Bird Areas or IBA) தேர்ந்தெடுத்துள்ளது. அவற்றில் 18 பகுதிகள் தீபகற்ப மலேசியாவில் அமைந்துள்ளது. இதில், 700க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உயிர்வாழ்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எண்ணிக்கையில் குறைந்து அருகிவரும் உயிரினங்களான ( Endangered species) சில்வரி புறாக்கள் (Silvery Pigeons), கிறிஸ்மஸ் கப்பற்பறவை (Christmas Frigatebirds), அலகு உள்ளான் (Spoon-billed Sandpipers), செந்தலைக்கழுகு (Red-headed Vultures) மற்றும் இருவாய்ச்சி (Helmeted Hornbills) ஆகியனவாகும்.

மலேசியாவில் பறவைகள் இளைப்பாற தரையிறங்கும் சில இடங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது போர்ட்டிக்சன் ப்ளூ லகூன் (Blue Lagoon) கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கும் மலாக்கா மாநிலத்தில் உள்ள தஞ்சோங் துவான் ‘கேப் ராச்சடோ’ (Tanjung Tuan ‘Cape Rachado’) வனப்பகுதியாகும். இது சுமத்ரா-தீபகற்ப மலேசியாவிற்கு இடையில் அமைந்திருக்கும் மலாக்கா நீரிணை பகுதியில் அமைந்துள்ளது. இடப்பெயர்வுக்கான வழிதிசையின் நேர்கோட்டில் அமைந்திருப்பதால்  இங்கு அதிகமான பறவைகள் தரையிரங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், தஞ்சோங் துவான் (Tanjung Tuan) வனப்பகுதி கடலையொட்டி அமைந்திருக்கும் மலைப்பாங்கான பகுதி என்பதால் இதுவும் பறவைகள் இளைபாறுவதற்கு ஏதுவான இடமாகத் திகழ்கின்றது. மலேசியாவில் உள்ள பறவைகளின் சரணாலய வரிசையில் வெகுவாக அனைவரின் கவனத்தை ஈர்க்கும் இடமாக இது விளங்குவதற்கு காரணம், இங்கு வந்தடையும் பறைவைகளில் பெரும்பாலனாவை ஊனுண்ணிப் பறவைகளே (raptors) ஆகும். மேலும், 2002ஆம் ஆண்டில், இவ்விடத்தை சுற்றுப்பயணிகளுக்கான ஒர் ஓய்வு விடுதியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வணிக ரீதியான அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் இவ்வனத்தின் அதிகாரிகள் நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த வனத்தின் உயிரியல் பல்வகைமையைப் (Biodiversity) பராமரிக்க வேண்டும் என்றே முனைப்பு காட்டியுள்ளனர். இவ்வனப்பகுதியில் குவியும் பறவைகளின் இயற்கை அழகினை மக்கள் கண்டு மகிழு வேண்டும் என ஆண்டுதோறும் ‘ராப்டார் வாட்ச்’ (Raptor Watch) என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சோங் துவான் (Tanjung Tuan) வனப்பகுதி ஊனுண்ணிப் பறவைகளுக்கான முக்கிய இடங்களில் ஒன்றாக  தேசிய புவியியல் கழகம் (National Geographic Society) மற்றும் பறவைகள் பாதுகாப்புக்கான சர்வதேச சபை (BirdLife International) ஆகியோர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியா ‘The East Asian – Australasian Flyway Partnership’ (EAAFP) என்ற கூட்டணியில் சேர ஒப்புக் கொண்டதன் விளைவாக, இங்கு பறவைகளின் இடப்பெயர்வு மற்றும் பறவைகளின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கும், இது தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்க வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டது. அதற்கு முன்பு இந்த வேடந்தாங்கல் பறவைகள் குறித்து கொஞ்சம் விரிவாக அறிய வேண்டியுள்ளது.

வலசை என்பது

பறவைகளின் வலசை என்பது உலகின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் சென்று, மீண்டும் எங்கிருந்து வந்ததோ அதே இடத்திற்கு திரும்புதல் என்று குறிப்பிடுகின்றனர். பறவைகள் தவிர ஆமைகளும் மீன்களும் கூட இவ்வாறு இடம்பெயர்ந்து பின்னர் தங்கள் இடம் திரும்புகின்றன. இடப்பெயர்வு என்பது இயற்கையாக உயிரினங்களிடத்தில் நிகழக்கூடிய இசைவாக்கத்தின் ஒரு வடிவமாகவே (Form Of Adaptation) கருதப்படுகின்றது. உலகில் ஏற்படுகின்ற இயற்கையான மாற்றங்களிலிருந்து பறவைகள் தங்களைத் தற்காத்து உயிர்வாழ இடப்பெயர்கின்றன.

பறவைகள் வலசை போதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நிகழ்கிறது. சில பறவைகள் எவ்வழியில் சென்று தங்களுடைய இலக்கை அடைகின்றதோ அதே வழியிலேயே மீண்டும் அதனுடைய இடங்களுக்கு தடம் மாறாமல் வந்து சேர்கின்றன. இச்செயல்பாட்டில் ஒரு வகையான ‘உள் உயிரியல் கடிகாரம்’ (Internal Biological Clock) இயற்கையான இச்செயல்பாட்டை ஒழுங்குபடுத்த வழிசெய்கிறது. பறவையியல் ஆய்வாளரான (Ornithologist) ஆர்தர் லேண்ட்ஸ்பரோ தாம்சன் (Arthur Landsborough Thomson) என்பவர் 1926-ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட ‘பறவை-இடப்பெயர்வு சிக்கல்கள்’ (Problems of Bird-migration) என்ற புத்தகத்தில் பறவைகள் இடப்பெயர்வு குறித்து விளக்கும்போது ‘தொடர்ச்சியாக நிகழும் சூழலியல் மாற்றங்களுக்கு உகந்த முறையில் பறவைகள் தனது வாழிட சுற்றுச்சூழல் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றது’ என்று கருத்துரைக்கின்றார்.

அனைத்து பறவைகளும் இடப்பெயரக்கூடியவை அல்ல, எனினும் அனைத்து வகையான பறவையினங்களும் மாறுபட்ட அளவிலான கால இயக்கங்களுக்கு உட்பட்டவை என்கின்றனர். புவிமையக் கோட்டுக்கு வடக்கேயுள்ள பகுதியில் (Northern Hemisphere) வாழும் பறவைகளுக்கு மிகப் பெரிய இடப்பெயர்வு சக்தி உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பருவ மாற்றங்களுக்கு ஏற்றவாறு பறவைகளுக்குத் தேவையான வளங்கள் சில இடங்களில் அதிகரிக்கவும் செய்கின்றன அதே வேளை குறையவும் செய்கின்றன. இந்நிலையில் பறவைகள் பூர்வீகமாக வாழும் இடத்தில் பருவநிலையினால் தங்களுக்கான வளங்கள் கிடைக்காமல் போகும் பட்சத்தில் அதனைத் தேடி சிறிதுகாலம் வேறு இடங்களுக்கு இடப்பெயர்கின்றன. இச்சூழலில் இடப்பெயரும் பறவைகளுக்கு உணவு வளங்களும் கூடுகட்டி வாழ இடங்களுமே அடிப்படை தேவையாக இருக்கிறது. புவிமையக் கோட்டுக்கு வடக்கேயுள்ள பகுதியில் கூடு கட்டி வாழும் பறவைகள் இளவேனிற்காலத்தில் வளங்களைத் தேடி வடக்கு நோக்கி செல்கின்றன. குளிர்காலம் நெருங்கும்போது, பூச்சிகள் மற்றும் பிற உணவு வளங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும்போது பறவைகள் மீண்டும் தெற்கு நோக்கி நகர்கின்றன.

இடப்பெயர்வு வகைகள்

பருவகால இடப்பெயர்வு (Seasonal migration), அட்சரேகை இடப்பெயர்வு (latitudinal03-flock-of-birds-print-on-embroydered-fabric1 migration), தீர்க்கரேகை இடப்பெயர்வு (Longitudinal),  உயர்நிலை இடப்பெயர்வு (altitudinal migration), தடப்பாதை இடப்பெயர்வு (Loop migration)  எனப் பலவகையான பரிமாணங்களில் பறவைகளின் இடப்பெயர்வு நடைப்பெறுகின்றன.

பரவலாக அனைவராலும் அறியப்படும் பருவகால இடப்பெயர்வு பறவைகளின் இனம்பெருக்கம் நடைப்பெருகின்ற வரையறைக்குள் நிகழ்கின்றது என்ற அடிப்படையில் இது பருவகாலங்களின் மாற்றத்தால் ஏற்படுகின்றது என்பதை எளிதில் கணிக்க முடிகின்றது. இவ்விடம்பெயர்வு இளவேனிற்காலம் மற்றும் இலையுதிர் காலங்களில் மட்டுமில்லாமல் சில நிலப்பரப்புகளில் மழைக்காலம் மற்றும் வறண்ட பருவங்களுக்கிடையிலும் நடைப்பெறுகின்றது.

அட்சரேகை (latitudinal) இடப்பெயர்வு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வெவ்வேறு அட்சரேகைகளின் பகுதிகளுக்கு இடையில் நிகழ்கின்றது. பூமியின் வட துருவத்தில் உள்ள பகுதியான ஆர்க்டிக்கிலிருந்து (Arctic) வெப்பமண்டலத்திற்கு இடப்பெயர்வது பெரும்பாலான பறவைகளிடத்தில் பொதுவான ஒன்றாகும். இடப்பெயர்வுக்கான சரியான திசை பெரும்பாலும் மலைத்தொடர்கள், கடற்கரையோரங்கள் மற்றும் பறவைகளுக்கு உகந்த வாழ்விடங்கள் போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

அடுத்து, தீர்க்கரேகை (Longitudinal) இடப்பெயர்வு அட்சரேகைக்கு ஒத்த நிலையே ஆகும். ஆனால், இவ்வகை இயக்கம் கிழக்கிலிருந்து மேற்கு அல்லது மேற்கிலிருந்து கிழக்கே வெவ்வேறு தீர்க்கரேகைகளுக்கு இடையிலான மாற்றங்களுக்கு ஏற்றவாறு நடைபெறுகிறது. ஐரோப்பாவில் வாழும்  பல பறவைகளுக்கு இது ஒரு பொதுவான இடப்பெயர்வு முறையாகும். காரணம், ஐரோப்பாவின் புவியியல் அம்சங்கள் அட்சரேகைக்குப் பதிலாக நீளமான வழிப்பாதையான தீர்க்கரேகையில் பறவைகளைப் பயணம் செய்ய தூண்டுவதாக இருக்கிறது.

தொடர்ந்து, உயரமான மலைபிரதேசங்களில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் அனைத்தும் உயர்நிலை இடப்பெயர்வு (altitudinal migration) வழியைப் பயன்படுத்துகின்றன. கடுமையான வானிலை மற்றும் கனத்த பனிப்பொழியக்கூடிய குளிர்காலத்தில் உயர்நிலபரப்பில் கூடு கட்டி வாழ்வது சாத்தியமற்றதால் பறவைகள் அதைவிட சற்ற தாழ்வான மலைப்பகுதிகளுக்கு இடப்பெயர்வதையே உயர்நிலை இடப்பெயர்வாகும். உயர்நிலை இடப்பெயர்வு செய்யும் பறவைகள் பயணம் செய்யும் தூரம் அடிப்படையில் அது குறைந்த அளவாகவே இருக்கக்கூடும் என்றாலும் சில நூறு அடி உயர வித்தியாசத்தில் பறவைகளுக்குக் கிடைக்கக்கூடிய வளங்களும் வாழ்விடங்களும் அவைகளுக்கு ஒரு மாறுப்பட்ட சூழ்நிலையை உருவாக்கவல்லதாக இருக்கிறது.

பறவைகள் சுழற்சி முறையில் இடப்பெயர்வதை தடப்பாதை இடப்பெயர்வு (Loop) என்பார்கள். இந்த இடப்பெயர்வு இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்குச் செல்லும் இரண்டு வேறுபட்ட பாதைகளை உள்ளடக்கியது. ஒரு வருடத்தில் வெவ்வேறு குறிப்பிட்ட சில காலங்களில் கிடைக்கக்கூடிய பல மாறுபட்ட வளங்களைப் இவ்விடம்பெயர்வு வழி பறவைகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக, செம்பழுப்பு ஓசனிச்சிட்டு (Rufous hummingbird) இளவேனிற்காலத்தில் மெக்ஸிகோவிலிருந்து அலாஸ்கா செல்ல கரையோரப் பாதையைப் பயன்படுத்துகிறது. அதே பறவை இலையுதிர்காலத்தில் மீண்டு தன் இடத்திற்கு திரும்பும்போது உட்புறத்தில் காட்டுப்பூக்கள் அதிகம் காணப்படும் மலைகளைக் கொண்ட தென்பகுதி வழியைப் பயன்படுத்துகின்றன. இவ்வகை இடப்பெயர்வைப் பயன்படுத்தும் பறவைகள் ஒரு வழி பாதையைப் பின்பற்றுவது இல்லை. கடற்பறவைகள் மற்றும் கரையோரப் பறவைகளுக்குத் தடப்பாதை இடப்பெயர்வு வழக்கமான ஒன்று. இவ்வகை பறவைகள் பருவமாற்றங்களை ஊகித்து பயணம் செய்கின்றன. இவைகளைத் தவிர கணிக்க முடியாத, அல்லது ஒரே கட்டமைப்புக்குள் இயங்காத மற்றும் பல இடப்பெயர்வு முறைகள் உள்ளன. பல பறவைகள் அறிந்தோ அல்லது தற்செயலாகவோ ஒன்றுக்கு மேற்பட்ட வகை முறையில் இடப்பெயர்வுகளை மேற்கொள்கின்றதாகச் சொல்லப்படுகின்றது.

பறவைகளின் இடப்பெயர்வுக்கான காரணங்கள்

பறவைகள் இடப்பெயருவதற்கான காரணங்கள் அறிவியல் பூர்வமாகவும், கணிப்புகள் அடிப்படையிலும், நம்பிக்கைகளைச் சார்ந்தும் பலவாராக கூறப்பட்டு வருகின்றன. சில காரணங்கள் பல அறிவியல் கோட்பாடுகளைக் கொண்டு இதுவாகதான் இருக்ககூடும் என்று கருத்துக் கணிப்புகளை நிரூபிக்கும் முயற்சிகள் பலரால் முன்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது.

பறவைகளின் உள்ளுணர்வு மற்றும் ஹார்மோன் மாற்றங்களே இடப்பெயர்வுக்கான காரணங்களில் முதன்மையாகக் கூறப்படுவது. உள்ளுணர்வு என்பது இயல்பாக நிகழக்கூடிய ஒன்றாகவும் ஹார்மோன் மாற்றங்கள் இனப்பெருக்கம் நிகழ்வதற்கான ஒன்றாக கூறப்படுகிறது. பிற காரணிகளாக உணவு அல்லது வளங்களின் பற்றாக்குறை, பகல் நேரம் குறைதல் மற்றும் குளிர்கால அளவு அல்லது குளிர் அதிகரிப்பு ஆகியவை இடப்பெயர்வு நிகழ்வதற்கு தூண்டுவதாக நம்பப்படுகிறது. பறவைகளின் இடப்பெயர்வானது வழிக்காட்டல் மற்றும் தூண்டுதல் வழியே நடைபெறுவதாக கருதுகின்றனர். உணவின் பற்றாக்குறை மற்றும் பகல் பொழுதின் கால அளவு குறையும்பொழுது பறவைகளின் அகச்சுரப்பியலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இது பறவைகள் இடப்பெயரச் செய்ய தூண்டும் செயல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

அடுத்து, ஒளிக்காலப்பேறு (Photoperiodism) பறவைகளின் இடப்பெயர்வுக்கு மற்றுமொரு காரணமாக திகழ்கிறது. ஒளிக்காலப்பேறு (Photoperiodism) என்பது ஒளி மற்றும் இருள் ஆகியவற்றிற்கு ஏற்ப  உயிரினங்களிடத்தில் ஏற்படும் உடலியங்கியலின் எதிர்வினையாகும். இது தாவரங்கள் மற்றும் விலங்குகள் என இவ்விரண்டினிடமும் காணப்படுகின்றது. ஒளி மற்றும் இருளின் அளவிற்கேற்றவாறு தாவரங்களின் வளர்ச்சி நிலைகளில் உண்டாகும் மாற்றங்கள் எனவும் இது வரையறுக்கப்படுகின்றது. ஒரு சராசரி நாளின் நீளம் அதிகரிக்கும்போது அவை பறவைகளின் கபச் சுரப்பி (Pituitary gland) மற்றும் கூம்புச் சுரப்பி (pineal gland) இரண்டையும் பாதிக்கின்றது. இதனால் பறவைகளிடத்தில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனை இனபெருக்கம் செய்ய வேண்டிய பருவம் என்று பறவைகள் சுயமாக ஊகித்துக் கொண்டு அதற்கேற்ற இடத்தை நோக்கி இடப்பெயர்கின்றன.

1924ஆம் ஆண்டு வில்லியம் ரோவன் (William Rowan) என்ற  உயிரியலாளர் (biologist) பறவைகள் இடப்பெயர்வுக்கு ஒளிக்காலப்பேறு (Photoperiodism) எவ்வகையான பாதிப்புகளைக் கொடுக்கின்றது என்று ஆய்வொன்றை நடத்தியுள்ளார். காற்றழுத்தமானி (barometric pressure) மற்றும் வெப்பநிலையின் மாறுபாடுகளால் (variations in temperature) இடப்பெயர்வு தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற பொதுவான ஒரு கருத்தை முன்வைத்தே இவ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அவர் கருவிழி- ஜான்கோ (Dark-Eyed Juncos)  இனத்தைச் சேர்ந்த சில பறவைகளை ஒரு கூண்டினுள் அடைத்து, வெளிச்சத்தில் அதிக நேரம் வைத்து அவை பகல் ஒளியில் இருப்பது போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளார். இதனால் பறவைகளிடத்தில் இளவேனிற்காலத்தில் காணப்படும் தன்மைகளையும் குணாதியங்களைக் குளிர்பருவத்தின் இடைப்பட்ட காலத்திலேயே பார்க்க முடிவதைக் கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சியின் முடிவில் பறவைகளின் இடப்பெயர்வுக்கு ஒளி ஒரு முக்கிய அம்சமாக விளங்குவதாக சுட்டிக்காட்டினார்.

பறவை ஊடுருவலில் வழிகாட்டும் வழிமுறைகள்

சில பறவைகளின் மரபணுவிலேயே இந்த இடப்பெயர்வுக்கான அறிவும் தன்மையும் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இதுபோன்ற நிலையில் இருக்கும் பறவைகள் தங்களுடைய உள்ளுணர்வுகளின் தூண்டலின்வழி எப்பொழுது, எந்த திசையை நோக்கி இடப்பெயர வேண்டும் என அறிந்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. மறுநிலையில், சில பறவைகள் அனுபவத்தின் அடிப்படையில் இடப்பெயர்வதாகவும் சில கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றது. அனுபவப்பட்ட பறவை மற்ற பறவைகளை வழிநடத்திச் செல்வதாக குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் அனுபவப்பட்ட பறவைகளால் தங்களுடைய இளைய தலைமுறையினருக்கு இடப்பெயர்வுக்கான அனைத்து வழியையும் முறையையும் கற்றுக் கொடுத்துவிட முடியும் என்கிறது இக்கோட்பாடு. வாத்துகள், அன்னங்கள், கொக்குகள் போன்ற கூட்டமாக இடப்பெயரும் சில பறவை இனங்களுக்கு இவ்வழிமுறை நன்கு பொறுந்தக்கூடும் என்கின்றனர். இதுபோன்ற பறவைகளின் இடப்பெயர்வு நிகழ்வு குறித்து இன்னும் பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

பறவைகளின் இந்த அற்புதமான ஊடுருவல் திறன்களின் ரகசியங்கள் முழுமையாக இதுவரை புரிந்து கொள்ளப்படவில்லை. காரணம், பறவைகள் இடப்பெயர விளையும்போது பல்வேறு வகையான புலனுணர்வுகளைக் (senses) கையாளுகின்றன. பறவைகள் சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் பூமியின் காந்தப்புலத்தை (magnetic field) உள்வாங்கி, உணர்ந்து திசைவழி தகவல்களை அறிந்துக் கொள்கின்றன. சூரியன் உதயமாகும் மறையும் வேளை, திசை மற்றும் பகல் நேரங்களில் காணப்படும் சில அடையாளங்களைக் கொண்டு தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெறுகின்றன. மேலும், புறா வகையைச் சேர்ந்த பறவைகள் நுகரும் உணர்வைக் கொண்டு தகவல்களைப் பெறும் என்றும் நிருபிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில வகை பறவை இனங்கள், குறிப்பாக ‘அன்செரிபார்மஸ்’ (waterfowl) மற்றும் கொக்கு (cranes) வகையைச் சார்ந்தவை குறிப்பிட்ட பாதையைத் திட்டமிடாமல் அச்சமயம் அவைகளுக்கு விருப்பமான திசைகளைத் தேர்ந்தெடுத்துச் செல்கின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பாதைகள் நிச்சயம் பறவைகளின் உயிர்வாழ்வுக்கு முக்கியமான உணவு வளங்கள் இருக்கும் நிறுத்துமிடங்களுடன் தொடர்புடையவையாக இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. சிறிய பறவைகள் நிலப்பரப்புகள் முழுவதுமாக பரந்து கிடக்கும் முனைகளில் இடப்பெயரக்கூடிய வல்லமைப் பெற்றது. சிறிய பறவைகள் அந்தந்த பருவங்களுக்கு தகுந்த வளங்களைப் பெற்றுக்கொள்ள இளவேனிற் காலத்திலும் இலையுதிர்காலத்திலும் வெவ்வேறு பாதைகளில் சென்று இடப்பெயர்வதாக கார்னெல் பல்கலைக்கழகத்தின் (Cornell University) பறவையியல் ஆய்வுக்கூடத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஈபேர்டு (eBird) திட்டத்தின்கீழ் நிகழ்ந்த சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் பறவைகளின் இடப்பெயர்வு குறித்து படிப்பதற்கும் கணிப்பதற்கும் பல நுட்பங்களைக் கையாளுகின்றன. பறவைக்கு வளையமிடல் (banding), செயற்கைக்கோள் கண்காணிப்பு (satellite tracking) என்று மட்டுமில்லாமல் இலகுரக சாதனங்களான ஒளி-அளவி இடங்காட்டிகளைக் (geolocators) கொண்டு புதிய முறையிலும் ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர். பறவைகள் இடப்பெயரும் பயணத்தில் இளைப்பாற நிற்கும் முக்கியமான பகுதிகளை அடையாளம் கண்டு பாதுகாப்புக்கு உட்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.

சில இடங்களில் இடப்பெயரும் பறவைகளின் சராசரி எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான பறவைகளை ஈர்க்க சில விடயங்கள் செயற்கையாக மாற்றி அமைக்கப்படுகின்றன. இதனை “Migrant Traps” என்று அழைப்பார்கள். பெரும்பாலும் இவ்விடங்கள் பறவை வளர்ப்பு இடம் அல்லது பறவைகள் சரணாலயம் (Bird Sanctuary) என்று அறியப்படுகின்றன.

மலேசியாவின் வலசையும் பாதிப்புகளும்

ஐ.பி.ஏ (IBA) தகுதியைப் பெற்ற சில இடங்கள் மனித நடவடிக்கைகள் மற்றும் மேம்பாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகி வருவதை அண்மைய காலங்களாகப் பார்க்க முடிகின்றது. இதற்கு பிரதான உதாரணமாக கோலா குலா (Kuala Gula) கடற்கரைப்பகுதியைக் குறிப்பிடலாம். குளிர்காலத்தில் சைபீரியா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு தெற்கே இடப்பெயர்ந்து செல்லும் கரையோரப் பறவைகளுக்கான முக்கியமான இளைப்பாறும் இடங்களில் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு நிகழும் விவசாய நடவடிக்கைகள், மீன்வளர்ப்பு (aquaculture), மேம்பாட்டிற்காக நிலங்களை அழித்தல் (land clearing), மேற்பரப்பு நீரோட்டம் (surface runoff) ஆகியவை வேதியியல் மாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன. இதனால் கோலா குலா (Kuala Gula) கடற்கரைப்பகுதியின் ஆழ்நீர்வாழ்விகள் (benthic organisms) வெகுவாக பாதிப்புக்குள்ளாகி குறைந்து வருகின்றன. இதன் விளைவாக இங்கு இடப்பெயரும் பறவைகளுக்கான வளங்களின் தரமும் குறையத் தொடங்கியுள்ளது.

இவற்றைத் தவிர்த்து பினாங்கில் உள்ள தெலோக் ஆயிர் தாவார் (Teluk Air Tawar), சிலாங்கூரில் அமைந்துள்ள செகிஞ்சன் (Sekinchan), ஜெராம் (Jeram), காப்பார் (Kapar) மற்றும் சுங்கை புலோ (Sungai Buloh), ஜோகூரில் இருக்கும் பாரிட் ஜாவா (Parit Jawa), சுங்கை புலாய் (Sungai Pulai), குக்குப் தீவு (Pulau Kukup) மற்றும் தஞ்சோங் பியா (Tanjung Piai) ஆகிய இடங்களும் இடப்பெயரும் கரையோரப் பறவைகளுக்கான முக்கிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. இவையனைத்தும் பல வகைகளில் பாதிப்புகளை எதிர்நோக்குவதை கவனத்தில் கொண்டு, இடப்பெயர்வு பறவைகளுக்கான நிலங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இவ்வருடம் தொடங்கி உலக இடப்பெயர்வு பறவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

பறவைகள் இடப்பெயர்வு தொடர்பாக இயங்கிவரும் நெதர்லாந்தைச் சேர்ந்த அமைப்பொன்று கடலோரப் பகுதிகள் மற்றும் அவற்றின் வனவிலங்குகளின் உலகளாவிய கண்காணிப்பு நடவடிக்கையின்வழி சில பறவைகளுக்கான முக்கிய இடங்களில் பறவைகளின் இடப்பெயர்வு எண்ணிக்கை சரிந்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. பேரா மாநில கடற்கரை பகுதியில் 86%, ஜோகூர் மேற்கு கடற்கரையில் 40% மற்றும் சிலாங்கூர் கடற்கரையில் 26% என பறவைகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. மீன்வளர்ப்பு, வேளாண்மை, தொழிற்துறை, வீடமைப்புகள், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சதுப்புநில காடுகள் மற்றும் மண் சதுப்பு நிலங்களை மீட்பது மற்றும் அதனை மாற்றி அமைப்பது என்பதான செயல்கள் நீர்வள பறவைகளின் வாழ்விடத்திற்கு அச்சுறுத்தலாக சுட்டிக்காட்டப்படுகிறது. வெட்லேண்ட்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் நீர்பறவைகள் பாதுகாப்பு (Waterbird Conservation) அதிகாரி டேவிட் லி (David Li) இது தொடர்பாக பேசியபோது, உணவு, உறைவிட குறைபாடுகள் பெருகிவருவதனால் பறவைகள் இடப்பெயர்வு வழிதிசைகளை மாற்றியமைத்து அல்லது சுறுக்கிக் கொண்டு பயணிக்கின்றன. இதனால் ஏராளமான இளம்பறவைகள் உணவின்றி பட்டினிக்கு உள்ளாகும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் பறவைகளின் பிறப்பு எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறினார். இது மட்டுமில்லாமல், இந்நிலை ஏற்படுவதற்கு பருவநிலை மாற்றமும் சமபங்கு வகிப்பதாக பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியான பயணத்தால் சோர்வடையும் பல இளம் பறவைகள் தங்களுடைய இலக்கை அடைய முடியாமலேயே இறந்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. பருவநிலையின் திடீர் மாற்றத்தால் ஏற்படக்கூடிய புயல், சூறாவளி, காற்றின் வலுவான மின்னோட்டம், மூடுபனி ஆகியவையும் இடப்பெயரும் பறவைகளின் மரணத்திற்குக் காரணங்களாக விளங்குகின்றன. மேலும், உயர் கோபுரங்களும் கட்டடங்களும் அதில் இருந்து வெளிப்படும் ஒளிகளும் பறவைகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது. சில நேரங்களில் மனிதனால் சுற்றுல்லா தளமாக மாற்றி அமைக்கப்பட்ட இடங்கள் மற்றும் கலங்கரை விளக்கங்கள் புலம்பெயரும் பறவைகளின் மரணத்திற்கு காரணமாகின்றன. இடப்பெயரும் பறவைகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டும் கொல்லப்படுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ மனிதனின் வளர்ச்சி உயிரினங்கள் மேற்கொள்ள வேண்டிய இயல்பான நடவடிக்கைகளைச் சவாலுக்குரிய ஒன்றாக மாற்றிவிட்டது.

சில வகை பறவைகளும் விலங்கினங்களும் ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு தங்களுக்கான வாழ்விடங்களையும் வளங்களையும் தேடி நம்பிக்கையின் அடிப்படையிலையே ஒவ்வொரு வருடமும் ஒரு இலக்கை நோக்கி பறக்க தொடங்குகின்றன. இந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் பொருட்டு அவைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் சீரான சுற்றுச்சூழலை தற்காத்து பொறுப்புணர்ச்சியோடு செயல்படுவது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

மேற்கோள் பட்டியல்

  • Andrew, S. (2018, March, 06). The greatest migration coming to Malaysia. Retrieved from https://www.thestar.com.my/lifestyle/living/2018/03/06/see-the-greatest-migration-in-malaysia.
  • Bamford, M. (2008). Migratory Shorebirds Of The East Asian – Australasian Flyway. Retrieved from https://www.environment.gov.au/system/files/resources/782ebed5-6bdd-4a41-9759-b60273b52021/files/shorebirds-east-asia.pdf
    Cornell University Lab. (2007, January, 1). The Basics Of Bird Migration: How, Why, And Where. Retrieved from https://www.allaboutbirds.org/news/the-basics-how-why-and-where-of-bird
  • migration/#:~:text=Birds%20migrate%20to%20move%20from,are%20food%20and%20nesting%20locations.&text=As%20winter%20approaches%20and%20the,the%20birds%20move%20south%20again.
    Fernandez, K. (2017, May, 9). 12 Destinations for Bird Watching in Malaysia. Retrieved from https://www.expatgo.com/my/2017/05/09/bird-watching-malaysia/
  • Koshy, E. (2020, May, 17). 12 Migrants in the skies : Celebrating World Migratory Bird Day. Retrieved from https://www.nst.com.my/lifestyle/sunday-vibes/2020/05/593213/migrants-skies-celebrating-world-migratory-bird-day#:~:text=Most%20birds%20migrate%20through%20Malaysia,peak%20around%20September%20to%20October.
  • text=The%20North%2DCentral%20Selangor%20Coast,are%20two%20such%20important%20sites.
  • Krishnamoorthy, M. (2007, Sep, 14). Fewer migratory birds stopping by in Malaysia. Retrieved from https://www.thestar.com.my/news/nation/2007/09/14/fewer-migratory-birds-stopping-by-in-malaysia
  • Lack, D. (1960). The Influence of Weather on Passerine Migration. A Review. The Auk, 77(2), 171-209. Retrieved from www.jstor.org/stable/4082349
  • Malaysian Naturalist. (2019, April, 11). Important Bird And Biodiversity Area (Iba) Focus. Retrieved from https://4naturelah.weebly.com/malaysian-naturalist/important-bird-and-biodiversity-area-iba-focus
  • Mayntz, M. (2019, July, 09). 12 Types of Bird Migration. Retrieved from https://www.thespruce.com/types-of-bird-migration-386055#:~:text=Latitudinal%3A%20This%20migration%20is%20between,the%20Arctic%20to%20the%20tropics.
    Tanika, M. Bird Migration: Definition, Types, Causes and Guiding Mechanisms. Retrieved from https://www.biologydiscussion.com/zoology/birds/bird-migration-definition-types-causes-and-guiding-mechanisms/41286
  • The Royal Society for the Protection of Birds (RSPB). A look at bird migrations. Retrieved from https://www.rspb.org.uk/birds-and-wildlife/natures-home-magazine/birds-and-wildlife articles/migration/?utm_source=adgoal_eu&utm_medium=affiliate&utm_campaign=rspb-uk-affiliate&mediacode=T15AFF0018
  • Weebly. The East Asian-Australasian Flyway. Retrieved from https://www.theoverwinteringproject.com/the-east-asian-australasian-flyway.html#:~:text=The%20twenty%2Dthree%20countries%20that,%3B%20Thailand%3B%20Cambodia%3B%20Myanmar%3B
  • wild Bird World. (2020). Best Bird Watching Locations in Malaysia 2020 Retrieved from https://wildbirdworld.com/best-bird-watching-locations-in-malaysia/
    Wolfson, A. (1942). Regulation of Spring Migration in Juncos. The Condor, 44(6), 237-263. Retrieved from www.jstor.org/stable/1364401
  • Jeyarajasingam, A., & Pearson, A. (2012). A Field Guide to the Birds of Peninsular Malaysia and Singapore. Oxford University Press. 484 pp.
  • Leong, C. (2005). Environmental Attitudes And Willingness To Pay For Highland Conservation: The Case Of Fraser’s Hill, Malaysia. Universiti Putra Malaysia. 105 pp.
    Rajpar, Muhammad & Zakaria, Mohamed. (2014). Birds of Wetlands in Peninsular Malaysia. Universiti Putra Malaysia. 186 pp.
  • Travel Industry Network Media. (2020, May, 12). MNS has called on the government to protect the habitat of migratory birds. Retrieved from https://www.tin.media/news/details/mns-has-called-on-the-government-to-protect-the-habitat-of-migratory-birds#:~:text=%22Our%20migratory%20birds%20ar
  • %2C%20unfortunately,Tawar%2DKuala%20Muda%20coast.%22

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...