மலாயாப் பல்கலைக்கழக நூலக ஏற்பாட்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல் சேகரிப்புத் திட்டம் 2013 (22 – 24 நவம்பர் 2013)

umtamillibraryadமலாயாப் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகம் தமிழ்மொழி சார்ந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வருகின்றது. குறிப்பாக இந்நூலகத்தில் மொழி, மொழியியல், கற்றல் கற்பித்தல், இலக்கணம், இலக்கியம், வரலாறு, அறிவியல், மருத்துவம், சோதிடம், சமயம், பண்பாடு, கலைகள், பல்துறைச் சார்ந்த மாநாட்டு ஆய்வடங்கல்கள், தொகுப்பு நூல்கள் என எண்ணிலடங்கா தலைப்புகளில் நூல்கள் உள்ளன.

இவற்றோடு மேலும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ‘தமிழ் மலேசியானா’ எனும் பிரிவில் இந்நூலகம் சேகரித்து பாதுகாத்து வருகின்றது. இந்நூலகத்தைப்போலவே ‘தமிழ் மலேசியானா’ பிரிவில் உள்ள நூல்களும் விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், இலங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்பு மாணவர்கள், எழுத்தாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்களின் முதன்மை தேர்வாக அமைகின்றது. மலேசியா மற்றும் மலேசிய மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறிப்பாக உள்நாட்டு இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள், மதம், இனம், பண்பாடு, சமயம், அரசியல், சமூகம், பொருளாதாரம், நம்பிக்கைகள் போன்றவைகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு தமிழ் மலேசியானா பிரிவில் உள்ள நூல்கள் பெருமளவில் பயனிளிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் மலேசியானா பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு இந்நூலகம் சில அடிப்படை கொள்கைகளை நியமித்துள்ளது. அவை பின்வருமாறு:-

  1. தமிழ்மொழியில் எழுதப்பட்டு மலேசியாவில் வெளியிடப்பட்ட நூல்கள்.
  2. மலேசியா தொடர்பான செய்திகளை உள்ளடக்கி வெளிநாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்கள்.
  3. வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல்கள்.

தமிழ் மலேசியானா பிரிவில் உள்ள நூல்கள் முழுக்க-முழுக்க பாதுகாக்கப்படவேண்டும் என்பதே இதன் உருவாக்கத்திற்கான முக்கிய நோக்கம். எனவே ஒவ்வொரு தலைப்பிலும் 2 பிரதிகள் வாங்கப்பட்டு ஒன்று நூலக பயனிட்டாளர்களின் பிரதான பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டு மற்றொன்று ‘தமிழ் மலேசியானா’ பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றது.

‘தமிழ் மலேசியானா’ பிரிவு நூல்கள் உட்பட இந்நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களும் AACR2 (Anglo-American Cataloguing Rules) எனும் இணைய அணுகல் அட்டவணை விதியை பின்பற்றி பட்டியலிடப்படுகின்றன. உலகின் எம்மூலையில் இருப்பவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த இணைய அணுகல் அட்டவணையில் உள்ள தகவல்கள் ‘Tamil Culture’ ஒலிபெயர்ப்பு முறையிலும் தமிழ் மொழியிலும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.

இத்தகையதொரு பிரிவு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைத்தவர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் இராம சுப்பையா என்பவராவார். உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும் எனும் வேட்கையில் பேராசிரியர் டாக்டர் ராம சுப்பையா மலேசியாவில்  பதிக்கப்பட்ட நூல்கள், வார மாத இதழ்கள், ஆண்டறிக்கை மற்றும் இதர எழுத்துப் பிரதிகளை சேகரிக்கத் தொடங்கினார். அவரின் சேமிப்பில் இருந்த நூல்களின் விபரங்களைத் தொகுத்து ‘தமிழ் மலேசியானா’ எனும்  புத்தக விவரணத்தை (BIBLIOGRAPHY) 1969ஆம் ஆண்டு வெளியிட்டார். பின்னாளில் பேராசிரியர் டாக்டர் இராம சுப்பையா அவர்களின் சேமிப்பில் இருந்த அனைத்து நூல்களும் இந்நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இவ்வாறு உருவான இந்த தமிழ் மலேசியானா நூல் பிரிவில் தற்போது 1000க்கும் குறையாத நூல்கள் உள்ளன. இருப்பினும், பல உள்நாட்டு படைப்புகள் பெருமளவு கிடைக்கப்பெறாமல் விடுபட்டிருப்பது வருத்தமான செய்தியாகும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மலேசியத் தமிழ் படைப்பாளர்களின் நூல்களை சேகரிப்பது மிகுந்த சிக்கலாகவே அமைகிறது. நாளிதழ்களில் அவ்வப்போது பிரசுரிக்கப்படும் நூல் வெளியீட்டு விழா தொடர்பான தகவல்களை மட்டுமே பெருமளவில் நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

இப்படியாக விடுபட்டுப்போன நூல்களை சேகரிக்க தற்போது இந்நூலகம் முனைப்புக்காட்டி வருகின்றது. இந்நாட்டில் உருவெடுத்த எந்தவொரு படைப்பாளியின் நூலும் விடுபட்டு போய்விடக்கூடாது என்பதை மனதிற்கொண்டு ‘மலேசியாத் தமிழ் எழுத்தாளர்களின் நூல் சேகரிப்புத் திட்டம் 2013’ நாடு தழுவிய அளவில் நடத்த இந்நூலகம் முனைந்துள்ளது. மேலும், மலேசிய படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை இந்நூலகத்திற்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தையும் கடப்பாட்டையும் உணர்த்துவதும் இத்திட்டத்தின் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும். அதன் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 22, 23, 24 ஆகிய  நாட்களில் மலேசியா முழுவதும் 14 தமிழ்ப்பள்ளிகளில் இந்நூல் சேகரிப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. எழுத்தாளர்களின் வசதிக்கேற்ப 8 மாநிலங்களில் 14 நூல் சேகரிப்புச் சாவடிகள் இம்மூன்று நாட்களும் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை திறந்து வைக்கப்படும். படைப்பாளர்கள் தங்களின் நூல்களை இவ்விடங்களில் சென்று கொடுக்கலாம். நூல் சேகரிப்பு சாவடிகளின் விபரங்கள் பின்வருமாறு :-

மாநிலம் எண் நூல் சேகரிப்புச் சாவடிகள்
கெடா 1. SJK (T) Saraswathy, Sungai Petani
பினாங்கு 2.  SJK (T) Mak Mandin, Butterworth
பேராக் 3. SJK (T) St. Teresa’s Convent, Taiping
கோலாலம்பூர் 4. SJK (T) Sentul, Jalan Sentul
சிலாங்கூர் 5. SJK (T) Vivekananda, Petaling Jaya
6. SJK (T) Simpang Lima, Klang
7. SJK (T) Batu Caves, Batu Caves
8. SJK (T) Puchong Batu 14, Puchong
9. SJK (T) Vageesar, Kuala Selangor
மலாக்கா 10. SJK (T) Melaka (Kubu)
ஜொகூர் 11. SJK (T) Taman Tun Aminah, Skudai
12. SJK (T) Jalan Sialang, Tangkak
13. SJK (T) Jalan Haji Manan, Kluang
பகாங் 14. SJK (T) Bentong, Pahang

உள்நாட்டு படைப்பாளர்களின் நூல்கள் நூலகத்தில் தவறாமல் இடம்பெற வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க நூலின் தரத்திற்கும் இந்நூலகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. அதன் அடிப்படையில் படைப்பாளர் சில அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

  1. படைப்பாளர்கள் ஒவ்வொரு நூலிலும் 2 பிரதிகளைக் கொடுக்க வேண்டும்.
  2. படைப்புகள் முந்தய ஆண்டுகளில் வெளியிடப்பட்டிருந்தாலும் தாராளமாக கொடுக்கலாம்.
  3. படைப்பாளர்களின் கையெழுத்துப் பிரதிகள், துண்டு பிரசுரங்கள், சினிமா புத்தகங்கள் ஏற்றுகொள்ளப்பட மாட்டாது.
  4. பள்ளிகள், சங்கங்கள், கழகங்கள், இந்திய நிறுவனங்கள், கோயில்கள் ஆகியவற்றின் சரித்திர குறிப்புகள் அடங்கிய வெளியீடுகள்; மாநாட்டு ஆய்வடங்கல்கள், தொகுப்பு நூல்கள் தரமான உள்ளீடு இருப்பதை உறுதி செய்தபின் ஏற்றுக்கொள்ளப்படும்.
  5. பல்துறை சார்ந்த பிரபலங்களின் இரங்கல் நூல்கள், நாட்குறிப்புகள் (diary), பயண கட்டுரைகள் தரமான உள்ளீடு இருப்பதை உறுதி செய்தபின் ஏற்றுக்கொள்ளப்படும்.

நூல்களைப்  புத்தகச் சேகரிப்பு சாவடிக்கு கொண்டுவரும் படைப்பாளர்கள் தங்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை பிரதி எடுத்துக்கொண்டு வரவும்; அல்லது வங்கியிருப்பு தகவல் அறிக்கை (Bank Statement)  நகல் ஒன்றை கண்டிப்பாக எடுத்துவரவேண்டும். இதன் மூலமே படைப்பாளர்களிடமிருந்து சேகரிக்கப்படும் நூலுக்கான கட்டணம் நேரடியாக வங்கியில் அல்லது காசோலை வாயிலாக படைப்பாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். படைப்பாளர்கள் தங்களின் விவரங்களை முழுமையாக கொடுப்பதன் மூலம் நூலுக்கான கட்டணத்தொகை மிக விரைவில் செலுத்தப்படும்.

படைப்பாளர்களிடமிருந்து பெறப்படும் இரண்டு நூல்களில் ஒன்று இந்நூலகத்தின் பிரதான பயன்பாட்டு பிரிவிலும், மற்றொன்று ‘தமிழ் மலேசியானா’ நூல் பாதுகாப்பு பிரிவில் பத்திரப்படுத்தியும் வைக்கப்படும்.

மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும். அம்மொழியில் உருவாக்கப்பட்ட செவ்விய இலக்கியங்கள் அதனுடைய வரலாற்றை பறைசாற்றும். நம்முடைய இலக்கிய படைப்புகளை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். எனவே படைபாளர்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்பை மலாயா பல்கலைகழக தமிழ்த்துறை நூலகம் பெரிதும் வரவேற்கிறது.

மேல் விபரங்களுக்கு இந்நூலக பிரிவினருக்கு அழைக்கவும். 03-7967 3817 (விஜயலட்சுமி), 03-7967 3807 (வாணிஸ்ரீ)

3 comments for “மலாயாப் பல்கலைக்கழக நூலக ஏற்பாட்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல் சேகரிப்புத் திட்டம் 2013 (22 – 24 நவம்பர் 2013)

  1. November 4, 2013 at 11:02 pm

    வாழ்த்துகள்..!

  2. vijayalatchumy maruthaveeran
    November 6, 2013 at 9:04 am

    நன்றி.

  3. November 29, 2013 at 4:33 pm

    மலாயா பல்கலைகழகத்தில் இயங்கும் தமிழ்துறைக்கு , போதிய மாணவர்கள் பதியவில்லை என்றும், விரைவில் தமிழ்த்துறையை மூடிட வாய்ப்பு உள்ளதாக பரவாலாகப் பேசப்படுகிறது. உண்மையா ? அறிய விரும்புகின்றேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...